வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?


வன்னியர்கள் ஆண்ட பரம்பரை.. வீர பரம்ரை’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் முன் வந்து மீசை முறுக்குகிறார்கள் வன்னிய அறிவாளிகள்.

‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை இல்லை’ என்றோ, அவர்களை இழிவானவர்கள் என்றோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் மறுப்பதில்லை. வன்னியர்களிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார்கள். வன்னியர்களுடன் திருமணம் செய்து கொள்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக கருதுவதுமில்லை.

ஆனால்; நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகள், வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ என்று இழிவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்புபடுத்தி ‘இவன் தொடற பறையன்’ என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கிராமபுறங்களில் தலித்தல்லாத வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகளிடம் இந்த வழக்கு இருக்கிறது.

சக்கிலியர், பறையர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண், வன்னியப் பெண்ணை திருமணம் முடித்தால் எகிறி குதிக்கிற வன்னியர்களைப்போலவே,

வன்னியர் ஆண்; பார்ப்பனர், நாயுடு, முதலி. பிள்ளை வீட்டு பெண்ணை திருமணம் முடித்தால், அதை இழிவாகவும் தன் ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாகவும் கருதுகிறார்கள் தலித்தல்லாத கூட்டணியில் உள்ள வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகள்.

தன் வீட்டுப் பெண்ணை தலித் இளைஞன் திருமணம் முடித்தால், தன் ‘ஆண்ட பரம்பரை ஜாதி’க்கு ஏற்பட்ட இழிவாக கருதி, தலித் மக்களுக்கு எதிராக கொதித்தெழுகிற வன்னிய ஜாதி உணர்வாளர்கள்,

வன்னிய ஜாதி பெண்ணை பார்ப்பனரோ, செட்டியோ, பிள்ளையோ, முதலியோ காதல் திருமணம் முடித்தால், அதை காதல் நாடகம் என்றோ அல்லது தன் ஆண்ட பரம்பரை ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, அந்த ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக கிளர்தெழாமல் சுமூகமாக இருக்க வைப்பது எது?

இப்படியாக தன்னை இழிவாக கருதுகிற ஆதிக்க ஜாதிகளிடம் அடக்கி வாசிப்பதும், தன்னை உயர்வாக மதிக்கிற தாழ்த்தப்பட்ட மக்களிடம் மீசை முறுக்குவதுதான் வீரமா?

வன்னியர் ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

குறிப்பு: இந்தக் கேள்வி கள்ளர் ஜாதி உணர்வாளர்களுக்கும் பொருந்தும்.

தலித் உட்ஜாதிகளுக்குள் பறையரையும், சக்கிலியரையும் தங்களை விட கீழானவராக கருதுகிற பள்ளர் ஜாதி உணர்வாளருக்கும், சக்கிலியரை தன்னைவிட கீழானவராக கருதுகிற பறையர் ஜாதி உணர்வாளருக்கும் பொருந்தும்.

நாய் நக்கித்தான் குடிக்கும்…


உங்கள் புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். உங்களுக்கு குறிப்பிட்ட சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி அதிகம். ஆத்து நிறைய தண்ணி ஓடுனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்கிறார்களே அது உங்களைப் பொறுத்தவரை சரிதான்.

-பெயர் குறிப்பிடவில்லை.

ஆத்து நிறைய தண்ணி ஓடுனாலும் நாய் மட்டும்தான் நக்கி குடிக்கும்; சிங்கம் என்ன ‘சொம்புல‘ மொண்டா குடிக்கும்? அதுவும் நக்கித்தான் குடிக்கும்.

இதுபோன்ற பழமொழிகள் – தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கவே பயன்படுகிறது. ஆதிகாரத்திற்கு வந்த யாரோ ஒரு சிலர் செய்கிற தவறுகளை ஒட்டுமொத்தமாக அந்த சமூகத்தின் மீதே சுமத்தி, அவர்களை இழிவாக சுட்டிக் காட்ட ஆதிக்க ஜாதிக்காரர்களால் காழ்ப்புணர்ச்சியோடு பயன்படுத்தப்படுகிறது.

அதே தவறை ஆதிக்க ஜாதிக்காரர்கள் செய்யும்போது, அதை அவர்கள் சார்ந்த ஜாதியோடு தொடர்பு படுத்தி பார்ப்பதில்லை. இது தான்ஆதிக்க ஜாதி மனோபாவம்.

அதுமட்டுமல்லாமல், தனக்கு பயப்படுகிற விலங்குகளை மட்டமாகவும், தான் பயப்படுக்கிற விலங்குகளை வீரமாகவும் மதிப்பிடுகிற மனோபாவமும் இத்துடன் சேர்ந்து கொள்கிறது.

சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றை வீரத்திற்கு அடையாளமாக காட்டுகிறார்கள். ஆனால், அவைகள் வீரமான மிருகங்கள் அல்ல. சிங்கம், புலி, சிறுத்தை தன்னைவிட பலவீனமான ஆடு, மாடு, மான் போன்றவற்றை வேட்டையாடி தின்கிறது. இது எப்படி வீரமாகும்?

அவைகளை ஆதிக்கத்திற்கான குறியீடாக வேண்டுமானால் பயன்படுத்தலாம். எளிய ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள ராணுவத்தையும், அப்பாவி ஈராக் மக்கள் மீது படையெடுத்து அவர்களை கொன்ற அமெரிக்க ராணுவத்தையும் குறிப்பிடுவதற்கு சிங்கம், புலி, சிறுத்தை குறியீட்டை பயன்படுத்தலாம்.

தன்னைவிட பலமான கழுகோடு சண்டையிட்டு அதை விரட்டியடித்து, தன் குஞ்சுகளை காக்கிறதே கோழி, அதுதான் வீரம். அமெரிக்கா என்கிற ஆதிக்கக் கழுகை விரட்டியடித்து, வெற்றிக் கண்டு தன் நாட்டை பாதுகாத்த எளிய வியட்நாம் மக்களைப் போல்.

‘என்னங்க இது..? நம்ம கொழம்புல கொதிக்குது கோழி.. அதபோய் வீரம்னு சொல்றீங்க..!’ -என்று அலுத்துக்காதீங்க. நீங்க அலுத்துக்க மாட்டிங்க… நீங்கதான் சைவமாச்சே.

வே.மதிமாறன்

பாரத் மாத்தாக்கி ஜே…


* காந்தியை சுட்டுக் கொன்றான் ஒரு பார்ப்பன இந்து மதவெறியன். இப்படியாக துவங்கியது சுதந்திர இந்தியாவின் சாதனை.

* ஜகத்குரு ஜெயேந்திரர் என்கிற துறவி, சங்கரராமன் என்பவரை கூலி படை வைத்து கொலை செய்தார்.

* குஜராத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றில் குத்தி கருவில் இருந்த குழந்தையையும் கொன்றார்கள் மோடி தாசர்கள்.

* செத்த பசுமாட்டின் தோலை உரித்ததற்காக, மூன்று தாழ்த்தப்பட்டவர்களை கொன்று, அவர்களின் தோலை உரித்தார்கள் ஜாதி இந்துக்கள்.

* கடன் தொல்லையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

* வறுமையின் காரணத்தினால் நெசவாளர்கள் தங்கள் சிறுநீரகத்தை விற்றார்கள்.

* அதே காரணத்திற்காக பெண்கள், வாடகை தாய்களாக மாற்றப்பட்டு உடல் மற்றும் உளவியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள்.

* காவல் துறையினர் சிறுமியை பாலியல் வன்கொடுமைச் செய்து விபச்சார விடுதியில் விற்றனர்.

* தாய்நாட்டுக்காக தன் உயிரையே தியாகம் செய்வதாக சொல்லப்படுகிற, நம்பப்படுகிற ராணுவத்தினர் – தொடர்ந்து பெண்களை தூக்கி வந்து வன்புணர்ச்சி செய்து கொலை செய்வதை கண்டித்து, அஸ்ஸாம் மாநிலத்தில் ராணுவ அலுவலகம் முன்பு நிர்வாணமாக நின்று தங்கள் எதிரிப்பை தெரிவித்தனர் அந்த வீரமிக்க பெண்கள். அந்த அவமானம் கொஞ்சமும் உரைக்காமல் மிடுக்கோடு தேசத்திற்காக ‘பாடுபடுட்டு’க் கொண்டுதான் இருக்கிறார்கள், தாய்நாட்டின் மானம் காப்பாவர்கள்.

* கட்டடம் மற்றும் வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு, தங்குவதற்கு வீடு இல்லாததால், சாலையோரத்தில் தங்கி ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவில் லாறி ஏறி சாகிறார்கள்.

* தனது பதவி காலம் முடிந்த பிறகும் அரசு வீடுகளை காலி செய்ய மறுத்தனர் முக்கியஸ்தர்கள். செய்வதறியாது விழிப்பது போல் நடிக்கிறது – அரசும், நீதி மன்றமும்.

* சாலை விரிவாக்கத்திற்காக குடிசைகள் பிய்த்தெரியப்பட்டதால், திக்கு தெரியாமால் விழிக்கிறார்கள் வீடு அற்றவர்கள்.

* “சுதந்திர இந்தியா பெருமளவில் உயர்ந்திருக்கிறது.” குடியரசுத் தலைவரும் – பிரதமரும் பெருமை பொங்க உரையாற்றுகிறார்கள்.

* ரிலைன்ஸ் அம்பானியின் தவப்புதல்வர்கள் குட்டி முதலாளிகளாக இருந்து பெரும் முதலாளிகளாக உயர்ந்திருக்கிறார்கள்.

* வறுமையிருந்தாலும், நாட்டில் பணப்புழக்கம் அதிகமாகி இருக்கிறது என்கிறார் நிதியமைச்சர்.

* நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் கட்டு கட்டாக பணம் கை மாறியது.

* அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்திற்காக என்ன வேண்டுமானலும் செய்ய தயாராக இருந்த இந்திய ஆளும் கும்பலின் தேசப்பற்று மிக்க சுதந்திர தின உரையைப் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்டிருப்பார் ஜார்ஜ் புஷ்.

60 ஆண்டுகாலமாக சுதந்திர இந்தியாவின் சாதனை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்க அதன் தொண்டு.

மகாத்மா காந்தியின் சொந்த ஊரான குஜராத்தை தனக்கும் சொந்த ஊராக கொண்ட, காந்தியவாதியைப் போல் எளிமையாக உடை உடுத்தும் நடிகை நமீதா எதோ ஒரு தொலைக்காட்சியில் சுதந்திரதின வாழ்த்துகளை சொல்லிக் கொண்டிருந்தார்….

பாரத் மாத்தாக்கி ஜே… ஜெய்ஹிந்த்.

இந்து என்றால் ஜாதி வெறியனா?


ஒருவன் இந்து மதத்தில் பிறப்பதினால் ஜாதி வெறியனாக இருக்க முடியாது. ஆனால் ‘இந்துக் குடும்பத்தில் பிறக்கிற ஒருவனுக்கு பிறக்கும்போதே ஜாதி இருக்கிறது’ எனறு தான் இந்து மதம் சொல்கிறது. ‘பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தால், அவன் உயர்ந்த ஜாதி. தாழ்த்தப்பட்டவர் குடும்பத்தில் பிறந்தால் அவர் தாழ்ந்த ஜாதி’ என்று இந்து மதம் பிறப்பில் ஜாதி பார்க்கிறது.

அதுபோல் ஒருவர் விருப்பப்பட்ட ஜாதிக்கு மாறிக் கொள்ள முடியாது என்றும் அது சொல்கிறது.
ஆக ஒருவர் பிறக்கும் போது ஜாதி வெறியராக பிறக்க முடியாது. இந்த அமைப்பை ஒத்துக் கொண்டு வளர்வதினால்தான் ஒருவர் ஜாதி வெறியராக உருவாகிறார்.

யார் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, கடைப்பிடிக்கிறார்களோ அவர்களை எதிர்த்து இயங்குவதும், கண்டிப்பதும்தான் நாம் ஜாதி வெறியர்களாக இல்லை என்பதை நீருபிக்க முடியும். அது நம் குடும்பம் சார்ந்திருக்கிற ஜாதியாக இருந்தாலும் தயங்காமல் அம்பலப்படுத்தவேண்டும்.

மற்றபடி, பிறப்பால் நான் சங்கராச்சரியார்களுக்குக் கூட ஜாதி பார்ப்பதில்லை. ஆனால், சங்கராச்சாரியார் ஆக வேண்டும் என்றால் பிறப்பால் பார்ப்பானாக இருக்க வேண்டும் என்று ஜாதி வெறியர்கள் சொல்கிறார்கள்.
அப்படி பார்ப்பதுதான் பார்ப்பனியம், இந்து மதம்.

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு…


காலச்சுவடு – ஒட்டு மொத்த சமூகத்தையும் இலக்கிய வடிவமாகவே பார்க்கிறது. எல்லா மனிதர்களும் அவர்களுக்கு கதாபாத்திரங்கள் அல்லது தீவிர வாசகர்கள், வாசகர் அல்லாதவர்கள். காலச்சுவட்டின் பார்வையில் சமூகத்தில் இரண்டு விஷயங்களே:

தரம் x திறமை – தரமின்மை x திறமையின்மை

இவைகளுக்குள் நடக்கும் யுத்தம். மனிதர்களின் ஜீவாதாரமான விஷயம் இலக்கியம். அதிலும் உயர்தரமான இலக்கியம். உயர்தரமென்றால் அரசியல் அற்ற(?) பிரச்சாரமற்ற இலக்கியம். மக்கள் பிரச்சினையை மையமாக வைத்து தீவிரமாக எழுதுகிற நிலைக்கு எதிர்நிலை.

எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், பிரச்சாரம் இருக்கக் கூடாதா(?). நீ ‘பீ’யைப் பற்றி வேண்டுமானாலும் எழுது. ஆனால் அழகாக எழுது.

இந்த அழகியல் ஆராதனையில், ஜாதி வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் (முற்போக்கு). ஆனால், பார்ப்பனத் தரமில்லாமல் இருக்கிற இலக்கியங்களைக் கடுமையாக விமர்சிக்க வேண்டும். (தீவிர இடதுசாரி சிந்தனை எழுத்துகளை, தலைவர்களை) இதில் பார்ப்பனரல்லாதவருக்கே முன்னுரிமை.

அப்படி விமர்சிப்பவர் கூடுதல் தரம், திறமை உள்ளவராக அங்கீகரிக்கப்படுவார். சுருங்கச் சொன்னால், இந்த வகையான இட ஒதுக்கீட்டை அங்கீகரிக்கிற மநுதர்மம். (வேதம் தெரிந்தவன்-அறிவாளி, உயர்ந்தவன். தெரியாதவன்-முட்டாள், தாழ்ந்தவன்)

பார்ப்பனரல்லாத இந்த வகை அழகியல் அறிவாளிகள் நிறையப் பேர் ‘காலச்சுவடு’ முழுக்க விரவிக் கிடைக்கிறார்கள். (தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்டவர்களின் ஒற்றுமை) அதில் முக்கியமாக இரண்டு விசுவாசிகள் பிரபஞ்சன், ரவிக்குமார்.

இவர்கள் காலச்சுவட்டிலும் அதைத் தாண்டி வெளியிலும் நிரம்ப விசுவாசத்தோடு இருப்பவர்கள். இவர்களின் சிந்தனையில் ஒரு தொடர்ச்சி இந்த விசுவாசத்தில் மட்டுமே.

காலச்சுவடு வைத்திருக்கிற அழகியல் அளவுகோலில் அளந்துப் பார்த்தால், உருப்படியாக ஒரு சிறுகதையைக் கூட எழுதாத பிரபஞ்சன் சொல்கிறார்:

‘திராவிட இயக்கம் இலக்கியத்தில் ஒன்றும் செய்யவில்லை’ என்று. இதனாலேயே இவர் அழகியல் அறிஞர். (இவரின் ஞானகுருவை ஜெயகாந்தனிலிருந்து சுந்தர ராமசாமிக்கு மாற்றி விட்டார்)

ரவிக்குமார் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இவரை விடவும் இவருடைய அவதூறுகள் புகழ்பெற்றவை. ‘காலச்சுவட்டி’ன் சகவாசத்திற்குப் பிறகுதான் இவர் பெரியார் குறித்த அவதூறுகளில் தீவிரமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பெரியார் குறித்தோ, திராவிட இயக்கங்கள் குறித்தோ சுந்தர ராமசாமியோ, அவருக்குப் பிறகு மறைமுகமாக மணிமுடி சூட்டிக் கொண்ட அவருடைய மகன் கண்ணனோ தீவிரமாக எழுதுவதில்லை. சொல்லப் போனால், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரை அப்பாவும், மகனும் ‘கலைஞர்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். கருணாநிதி என்று மொட்டையாக எழுதுவதில்லை.

ஒரு போராட்டக்காரனாய், உலகத்தில் புனிதம், புனிதன் என்று எதுவுமில்லை என்று இந்து மதத்தின் எதிரியாய், ஜாதியின் விரோதியாய் வாழ்ந்த தலைவர் பெரியாரை, ஒரு சாதாரணக் கவிஞன் சுப்பிரமணிய பாரதிக்கு இணையாக நிறுத்திப் போற்றுகிற(?) ஞானிகூட ’காலச்சுவடு’ பேட்டியில், கருணாநிதியின் இன்னொரு புறத்தையும், முரசொலிமாறனின் மறுபுறத்தையும் பெருமையோடே குறிப்பிடுகிறார்.

இது எப்படி இருக்கு?

***

தலிபான்களின் பெண் அடிமைத்தனத்தை, பெண்களுக்கு எதிரான செயலைக் கண்டிக்கிற ‘காலச்சுவடு’ (கண்ணன்), ஒட்டு மொத்தமான தமிழ் மக்களை வெறும் ஆண்குறிகளாக, பெண் குறிகளாக மட்டுமே பார்க்கிற, தமிழ் ஆபாசத்தின் குறியீடான குமுதத்தை, பெண்களுக்கு எதிரான அதன் சிந்தனையைக் கண்டித்து, ஒரு வார்த்தை கூட எழுதாத இந்த இலக்கிய இதழ், திடீரென்று தன் தலையங்கத்திலேயே பாய்ந்து புடுங்கிறது.

‘குமுதம் தொடரும் அராஜகம்’

‘‘குமுதத்திலும், குமுதம் டாட் காமிலும் காலச்சுவடுக்கு எதிரான திட்டமிட்ட அவதூறு, இருட்டடிப்பு ஆகியவை தொடர்ந்து ஓராண்டு காலமாக நடைபெற்று வருகின்றன. (இது பற்றி ‘காலச்சுவடு’ இதழ் 37லும் எழுதியிருந்தோம்)

காலச்சுவடு கடந்த எட்டு ஆண்டுகளில் வெகுஜன கலாச்சாரம் பற்றி தொடர்ந்து விவாதங்களை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், குமுதத்தை எப்போதும் வம்புக்கு இழுத்ததே இல்லை. அது மட்டுமல்ல, குமுதம் வெளியிட்டு வரும் தீபாவளி சிறப்பு இலக்கிய இதழ்களை வரவேற்று எழுதிய ஒரே இதழ் ‘காலச்சுவடு’தான்.’’ (‘காலச்சுவடு’ தலையங்கம் நவம்பர்-டிசம்பர்2001)

காலச்சுவட்டின் சமூகப் பொறுப்பிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றால், பற்றி எரிகிற பிரச்சனைகள் வரும்போது, காலச்சுவட்டிற்கு பீரிட்டுக் கிளம்புகிறது சமூகப் பொறுப்பு. அமெரிக்காவில் உலக வர்த்தக மையக் கட்டிடம் தகர்க்கப்பட்டதை (அது அமெரிக்காவின் ஆண்குறியாம்) பற்றி எழுதுகிற கண்ணன் – அமெரிக்காவிற்கும், தலிபான்களுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும், சில இடதுசாரி அறிவு ஜீவிகளுக்கும் கண்டனங்களையும், அறிவுரைகளையும் சொல்லிவிட்டு பெரிய தீர்வையும் – தீர்ப்பையும் சொல்லி விட்டதாக அவரே பெருமைபட்டுக் கொள்கிறார்.

கொசுறாக, இந்தத் தீர்ப்பின் இன்னொரு நீதிபதி சேரன், டொரன்டோவிலிருந்து எழுதுகிறார்: ‘இந்த சம்பவத்திற்குப் பிறகு எங்கள் சுக வாழ்விற்குத் தீங்கு வந்துவிட்டது. சொந்த நாட்டு மக்களையே நொறுக்குகிறது அமெரிக்க அரசு. அமெரிக்காவால் ஆப்கானிஸ்தான் மக்கள் என்ன சிரமப் படுகிறார்களோ, அதே சிரமம்தான் அமெரிக்க மக்களுக்கும்’ என்பது போல் அவரும் ஒரு தீர்ப்பை எழுதுகிறார். இவை எல்லாவற்றையும் விட, கண்ணன் எழுதிய கட்டுரைக்கு என்ன தலைப்பு தெரியுமா?

‘அமெரிக்க – இஸ்லாமிய பயங்கரவாதம்: இறுதித் தீர்ப்பும் இறுதித் தீர்வும்’. அதாவது, அமெரிக்காவிற்கு எதிராக இஸ்லாம்.

அமெரிக்க – அல்கொய்தா பயங்கரவாதம் அல்லது அமெரிக்க – தலிபான் பயங்கரவாதம்’ இப்படிக் கூட தலைப்பு வைத்திருக்கலாம்.

ஏன் இல்லை? எல்லாம் மனுஷ்யபுத்திரன் இருக்கிற தைரியம்.

இது மகனோட பாணி சமூக அக்கறை. அவுங்க அப்பாவோட சமூக அக்கறை இதையே தூக்கி சாப்பிடுவது.

‘இந்தியாவில் இந்து – முஸ்லிம் உறவு எப்படி இருக்கிறது?’ இந்தக் கேள்விக்கு சுந்தர ராமசாமி பதில் சொல்கிறார்:

‘‘மிகவும் சீர்கெட்டுப் போயிருக்கிறது. இஸ்லாமிய அரசர்கள் இந்தியாவை நீண்டகாலம் ஆட்சி செய்ததும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பாகிஸ்தானைப் பிரித்துத் தர முஸ்லிம்கள் வற்புறுத்தியதும், இந்து – முஸ்லிம் உறவை மேம்படுத்த காந்தி எடுத்த முயற்சிகளை அவர்கள் போதிய அளவுக்கு அங்கீகரிக்காததும், வரலாற்று ரீதியாகவே இந்துக்களுக்கு இஸ்லாமியர் பற்றி குறையும் வருத்தமும் உருவாக்கியிருக்கின்றன’’

(காலச்சுவடு’ சனவரி – பிப்ரவரி 2002)

இதை ஒட்டு மொத்த இந்துக்களின் இயல்பான உணர்வு போல ஆண்டியக்கிறார் சுந்தர ராமசாமி. எந்த இந்துக்கு குறையும் வருத்தமும் உருவாகியிருக்கிறது?

ஜாதி அடையாளத்தைத் தவிர, இந்து என்ற அடையாளத்தோடு, உணர்வோடு எவன் இருக்கிறான்? இந்து என்கிற உணர்வே இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிட்டு உண்டாக்கிய ஒன்றுதானே. (பார்ப்பனிய – ஜாதி ஆதிக்கத்தை மறைத்துக் கொள்ளவும்) அப்படியிருக்க வரலாற்று ரீதியாகவே இஸ்லாமியர் மீது இந்துக்களுக்கு எப்படி குறையும், வருத்தமும் இருக்க முடியும்?

இஸ்லாமிய மன்னர்களுக்கு எதிராக – பாகிஸ்தானுக்கு எதிராக – காந்திக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் தங்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தவில்லை என்றால், அந்த அங்கீகாரத்தை வெளிப்படுத்தும் முறை என்ன? எப்படி வெளிப்படுத்தினால் நீங்கள் அவர்களை அங்கீகரிப்பீர்கள்?

இந்த பதிலைப் பின் தொடருகிறவரிகளில், இந்து மத தீவிர அமைப்புகளுக்குப் பாடம் கற்பிக்கிறார். பெரியாரையே பின் தள்ளும் அளவுக்கு சகல மதங்களையும் சவுக்கால் அடிக்கிறார். இஸ்லாமியருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்துக்களின் தலைவர்போல் அறிவுரையெல்லாம் சொல்லி முடிக்கிறார். அத்வானியின் மத நல்லிணக்கம் போல்.

***

‘பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின், இஸ்லாமியர்களின் விரோதி’ என்று ஆதாரப்பூர்வமாக பொய் சொல்கிற ரவிக்குமார், இஸ்லாமியர்களின் தீவிர ஆதரவாளரும், இந்தியாவின் ஆயுதம் தாங்கி இயங்குகிற புரட்சிகர இயக்கத்தின் தலைவரும், சே குவேராவிற்கே கொரில்லா யுத்த முறையை பயிற்சி அளித்தவரும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் உயிரையே அர்ப்பணித்தவரும், சங்கராச்சாரி, ஜீயர்களின் ஜென்ம விரோதியும் ராம. கோபாலனின் கெட்டக் கனவும் ஆன சுந்தர ராமசாமியை எப்படி கொஞ்சுகிறார் பாருங்கள்.

நா. பிச்சமூர்த்தியின் கவிதைகளைப் பற்றி சுந்தர ராமசாமி ஒரு நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலைப் பற்றி ரவிக்குமார் எழுதுகிறார். ‘கவிதை குறித்து ரவிக்குமாருக்கு இவ்வளவு விஷயங்கள் தெரியுமா?’ என்று சுந்தர ராமசாமியே ஆச்சரியப்பட்டிருப்பார். அந்த அளவுக்கு கவிதைகளைத் தனித் தனியாகக் கழட்டி மாட்டுகிறார்.

கட்டுரையின் ஓர் இடத்தில், ‘சு.ராவின் (சுந்தர ராமசாமியைத்தான் செல்லமாக சொல்கிறார்) இந்த நூலைப் படிக்கும் போதும், பிறகு பிச்சமூர்த்தியின் கவிதைகளைப் படித்த போதும் எனக்கு தோன்றிய இன்னொரு விஷயம், பிச்சமூர்த்தியின் கவிதைகளை விடவும், சுந்தர ராமசாமியின் உரைநடை கவித்துவத்தோடு இருக்கிறது என்பதுதான்’.

இந்த வரிக்காகவே, சு.ரா. (நாமும் செல்லமாக சொல்லுவோம்) ரவிக்குமாரின் கவிதை அறிவை நினைத்து ஆச்சரியப் பட்டிருப்பார். பிறகு இன்னொரு இடத்தில் பயங்கரமான பிரகடனம் ஒன்றை அறிவிக்கிறார் ரவிக்குமார்:

‘‘உரைநடை எழுத முடியாத கவிஞன் கவிதை எழுத முடியாது’ என்ற சு.ரா.வின் முடிவு, இன்றைய நவீன கவிகள் பலரை நடுநடுங்க வைத்துவிடும்’’ நவீன கவிஞன் நடுநடுங்குகிறானோ இல்லையோ, இந்த வரியைப் படிச்சு சு.ரா.நடுநடுங்கிப் போயிருப்பாரு.

கடைசியாக கட்டுரையை முடிக்கும் போது, ‘‘ஆக சு.ரா. சொல்லியிருப்பதை உரைநடைக்கும் கவிதைக்குமான எதிர்நிலைகளாக கொள்ளாமல், உரை நடையை கவிதைக்கு அருகில் கொண்டு செல்லவேண்டுமென்று குறிப்பாகவே நான் கொள்ளுகிறேன். அப்படி கொண்டு செல்லும்போது, விமர்சனம் படைப்பிலக்கியத்தின் ஆற்றலைப் பெறுகிறது. இதற்கான சரியான உதாரணம் மாரி ப்ளான்ஷொவின் எழுத்துகள். தமிழில் உதாரணம் காட்ட எவருமில்லையா என்று நீங்கள் கேட்கலாம்.’’

இதற்குப் பின் ஒரு பெயர்ப்பட்டியலைத் தருகிறார் ரவிக்குமார். எல்லாம் ‘பச்சைத் தலித்’துகளின் பட்டியல்:

‘‘ப்ளான்ஷொவை பதிலீடு செய்யாவிட்டாலும் கூட பாரதி, புதுமைப்பித்தன், ஜீ.நாகராஜன், சு.ரா. சுஜாதா எனப் பலரிடமிருந்தும் இதற்கான சான்றுகளை நிச்சயமாக நாம் எடுத்துக் காட்டமுடியும்.’’ (காலச்சுவடு மார்ச் ஏபரல்2002)

இப்படி உள்ளன்போடு கவிதைகளைக் குறித்து மட்டும் நேசிப்போடு பார்ப்பனர் திறமையைப் பாராட்டி பட்டியல் இடுகிற ரவிக்குமார், தலித் எழுத்தாளர்களை, குறிப்பாக, ‘தாய் மண்’ணிலும், ‘தலித் முரசி’லும் எழுதுகிற இளைஞர்களை அல்லது தாய் மண்’ குறித்தும், ‘தலித் முரசு’ குறித்தும் இப்படி எழுதுவாரா?

‘மாட்டார்’ என்றால் என்ன காரணம் சொல்வார்? அவர்களுக்கு அந்தத் தகுதியோ, திறமையோ கிடையாது என்பாரோ?

சுப்பிரமணிய பாரதிக்கு ஒரு கனகலிங்கம். சுந்தரராமசாமிக்கு ஒரு ரவிக்குமார்.

***

சமூகத்தை சீர்த்திருத்துவதற்கு முன்னால், சாகித்ய அகாதமியை சீர்திருத்தணும்ங்கற வேகத்தோடவும், கோபத்தோடவும் அறிஞர்கள் சில பரிந்துரைகளை சொல்றாங்க.

. . .

பிரபஞ்சன்: முதலில் சு.ரா., பிறகு இன்னும் சிலருக்கு. ராஜ் கவுதமன்: முதலில் சு.ரா., பிறகு இன்னும் சிலருக்கு. பாவண்ணன்: முதலில் சு.ரா., பிறகு இன்னும் சிலருக்கு. ராஜமார்த்தாண்டன்: சு.ரா., பிறகு இன்னும் சிலருக்கு. நாஞ்சில் நாடன்: இவரும் அவ்வண்ணமே.

சுந்தர ராமசாமி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள், அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறது தப்பில்லை. ரசிகர்களின் மன உணர்வைப் புரிஞ்சுக்க முடியுது. இப்படி எல்லோரும் போற்றும் உலகத் தரத்துக்கு எழுதுற ஒரே தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி, யாரையெல்லாம் பரிந்துரைக்கிறார் என்ற ஆர்வத்தில் காலச்சுவட்டைப் புரட்டி, புரட்டிப் பார்த்தா, அய்யங்கார் பாணி வடகலை நாமத்தைக் குழைச்சிப் பெரிசா போட்டாரு.

***

காலச்சுவட்டின் கவிதைகளைக் குறித்து குறிப்பாகச் சொல்ல வேண்டும். இதில் வருகிற ஒவ்வொரு கவிதையும், தனக்கென்று சுயநடையோடு, சுயமொழியோடும், சுய உணர்வோடும் இல்லாமல் எல்லா கவிதைகளும், ஒரே மாதிரியாகத்தான் இருக்கு. எழுதியவர்களின் பெயர் மட்டும்தான் வித்தியாசமா இருக்கு. பாரதிதாசன் குறித்து காய்மொழி சொன்ன கனிமொழியின் கவிதையும் அதே லட்சணம்தான்.

எல்லோருடைய கவிதையும், கவிதை படிச்சி, கவிதை படிச்சி – அது மாதிரி ஒரு ஒரு கவிதை எழுதுன கதையாகத்தான் இருக்கு. பல கவிதைகள் suicide point இல் நின்று கொண்டு கடைசி நேரத்தில் எழுதுன மாதிரி அவ்வளவு நம்பிக்கையா இருக்கு. சுருக்கமாகச் சொன்னால், ‘கவிதைகள் பிணமுக லட்சணம்’.

இன்னும் நிறைய இருக்கு எழுதுறதுக்கு. ஆனா, எழுதுனவங்க மட்டுமே படிக்கிற காலச்சுவட்டைப் பற்றி இவ்வளவு எழுதுனதே அதிகம்னு தோணவே, இத்தோட முடிச்சிக்கிறேன்.

வர்க்க புத்தி..

‘சீரியஸ் எழுத்தாளர்கள் கதைகளை சீரியஸாக படிக்கிறார் ஒரு ஆட்டோ டிரைவர்’ என்று சீரியஸ் எழுத்தாளர்கள் சில நாட்களுக்கு முன்பு ஆச்சரியப்பட்டுப் போனார்கள். ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி (தொழிலாளர்கள்) இவர்களுக்கு உள்ள மட்டமான அபிப்ராயமே கதை எழுதுகிற ஆட்டோக்காரரை குறித்து பெருமையாக பேச வைத்தது.

தன் கதைகளில் பொருளாதர ரீதியாக ஜாதி ரீதியாக உயர்ந்தவனை கிரிமினல் ஆக இருந்தாலும், ‘அவர் இவர் என்று எழுதுவதும் – ரிக்ஷாக்காரர், மீன் விற்கும் பெண், கீரை விற்பவர், கூலித் தொழிலாளர்கள் இவர்கள் வயது முதிர்ந்தவர்களாக நேர்மையானவர்களாக இருந்தாலும் அவர்களை `அவன் – அவள்’ என்று விளிப்பதுதான் இவர்களது அழகியல்.

ஆம், எழுத்தாளனாக இருப்பவன் வங்கியில், தொலைபேசி துறையில், ரயில்வேயில் வேலை செய்ய வேண்டும்; அல்லது துணிக்கடை வைத்திருக்க வேண்டும். இல்லையேல் எந்த வேலையும் செய்யாமல் ஊதாரியாக ஊர் திரிய வேண்டும். உழைப்பாளர்கள் கதை எழுதுகிறார்கள் என்பது, இவர்களுக்கு அதிசயம் மட்டுமல்ல. அவமானமும் கூட.

பெருவாரியான உழைப்பாளர்கள் இவர்களைப் போல் இலக்கியவாதிகளாக மாறிவிட்டால், இவர்கள் வேறு துறைக்கு மாறிக் கொள்வார்கள் என்பதே உண்மை. இது உயர் நடுத்தர வர்க்க புத்தி.

மார்க்ஸ் நாவல்கள் எழுதியிருந்தால்…

ராசேந்திர சோழன் இவர் ஒன்பதாவது படிக்கும் போதே ஞானம் பெற்றவர். (அகிலன், மு.வ, கல்கி, ஜெகசிற்பியன் இவர்களெல்லாம் வாழ்க்கையை சித்தரிக்கவில்லை, போலியாக எழுதுகிறார்கள் என்பதை அப்போதே கண்டுபிடித்திருக்கிறார்.) ஞானசம்மந்தனுக்கு வந்தது போல் பார்ப்பனர்களுக்குத் தான் பிறவியிலேயே ஞானம் வருமா என்ன? காலச்சுவட்டில் இவரின் பதிமூணு பக்க பேட்டியின் சாரம் இதுதான், ‘படைப்புகள் (எழுத்தாளன் என்ன பிரம்மனா?) இசங்கள் சார்ந்து இருக்கக் கூடாது. முற்போக்கு சண்டித்தனம் பண்ணக் கூடாது’ என்பதே.

தி.ஜானகிராமன், ராஜேஷ் குமார், சுபா, சுஜாதா, லா.ச.ரா., பால குமாரன் இவர்கள் மாதிரி கதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார் போலும்.

கார்ல்மார்க்சையும் சிறந்த எழுத்தாளராகத்தான் பார்க்கிறார். மார்க்ஸ் மூலதனம் எழுதியதற்கு பதில் மூன்று நாவல்கள் எழுதியிருந்தால் அவரால் தி.ஜானகிராமனுக்கு இணையாக எழுதியிருக்கமுடியும்னு இன்னும் கொஞ்ச நாளில் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தலித் முரசு இதழுக்காக 2002ல் எழுதியது

மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?


சமீப காலமாக ஆபாச எழுத்துக்களை கலக இலக்கியங்கள் என்றும், பெண்களால் எழுதப்படுகிற அவைகள் ஆணாதிக்கத்திற்கு எதிரானவைகள் என்றும் பிரகடனபடுத்துகிறார்கள் ஆண்கள். அப்படியானால், அதுபோலவே அல்லது அதைவிட மோசமாக ஆண்களால் எழுதப்படுபவைகளை என்னவென்று சொல்வார்கள்?

ஜாதிய உயர்வு தாழ்வுகளை நியாயப்படுத்தியும், பெண்களை இழிவானவர்களாக குறிப்பிட்டாலும், ‘மனு ஸ்மிருதி மிக சிறந்த தத்துவம், அரசியல் சட்டம்’ என்று பாராட்டுகிற பார்ப்பன இந்து வெறியைனைபோல்,

ஆண்-பெண் உறவு குறித்து எவ்வளவு இழிவாக எழுதினாலும் அதையும் இலக்கியம் என்று சொல்கிற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி ஒரு கூட்டம் இதுபோன்ற கழிசடை எழுத்துக்களை ஆதரிப்பதுகூட பிரச்சினை இல்லை. ஆனால், இவைகளை முற்போக்கானவையாக சித்தரிப்பது மோசடியானது.

அதையும் மார்க்கிசியத்தின் பேரில் செய்வது மகா மோசடியானது.

அ. மார்க்ஸ் போன்றவர்கள் சில பெண்களுககு ஆதரவாக ஒரு கோஷ்டியாகவும், சூரியதீபன் போன்றவர்கள் அதுபோலவே சில பெண்களுக்கு ஆதரவாக இன்னொரு கோஷ்டியாகவும் பிரிந்து மார்க்சியத்தின் பேரில் ஆதரிப்பது மகா மாக மோசடியானது. ஆபத்தானது.

அ. மார்க்ஸ், சூரியதீபன் போன்றவர்கள் தங்களை பழைய எம்.எல் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த பழைய எம்.எல்களுக்கு இந்த ஆபாசத்தை ஆதரிப்பது மோசடியானது என்பதை தலைவர் லெனின் சொல்கிறார்.

ஜெர்மானிய கம்யூனிஸ்டான கிளாரா ஜெட்கினுடன் நடந்த உரையாடலில் இதுபோன்ற கழிசடைகளை கண்டிக்கிறார் தலைவர் லெனின்.

2003 பிப்பரவரி மாதம் தலித்முரசு இதழுக்காக ஒரு முன்னுரையுடன் தலைவர் லெனின் இந்தப் பேச்சை எழுதி தந்தேன். அதே முன்னுரையுடன் இங்கே ஏற்கனவே பிரசுரிததிருக்கிறேன்.

இன்று (22-4-2010) தலைவர் லெனின் பிறந்தநாள் என்பதாலும் இன்றைய சூழலில் தலைவர் லெனினின் இந்த சாட்டை மீண்டும் தேவையானது என்பதாலும் என்னுடைய அதே முன்னுரையோடு மீண்டும் பிரசுரிக்கிறேன்.

கட்டுடைக்கிறார்கள் கடவுள்கள்

‘பாலியல் உறவுகள் பற்றி பகிரங்கமாக எழுதி கலகக் குரலை (முக்கல்-முனகலோ) ஏற்படுத்திக் கட்டுடைப்பது; ஆண்-பெண் பிறப்பு உறுப்புகளைப் போற்ற வேண்டும். உடலைக் குறித்து உயர் மதிப்பீடு வேண்டும். அப்போதுதான் சமூக அக்கறை கூடுதல் வலுப்பெறும்.’

‘ஓரினச் சேர்க்கை என்பது ஆணாதிக்கத்தைத் தகர்ப்பது. அது பெண்ணுரிமை அல்லது ஆணின் உரிமை’ இப்படி ‘மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேதான் இருக்கிறது’ என்பது மாதிரியான போக்கு – இன்றைய இலக்கிய, தத்துவ(?) சூழலில் நவீனத்துவத்திற்கும், பிந்தைய நவீனத்துவமாக இன்னும் வெவ்வேறு பெயர்களில் விளக்கப்படுகிறது.

இந்த உறுப்புகளின் உறவு குறித்தும், உறுப்புகளின் நலன் விசாரிப்புக் குறித்தும் தீவிரமாக எழுதுகிற இந்த ‘டிகிரி’ எழுத்தாளர்கள் – சரோஜாதேவியின் பிழைப்பைக் கெடுத்து, ‘பருவ காலம்’, ‘விருந்து’ இதழ்களின் விற்பனையை பாதித்திருக்கிறார்கள்.

ஆம், சரோஜாதேவி, ‘பருவகாலம்’, ‘விருந்து’ இவைகளின் இலக்கிய வடிவமே இந்த டிகிரி எழுத்தாளர்கள். சரோஜாதேவியும், ‘விருந்து‘ம் தடை செய்யப்பட்ட தலைமறைவு இயக்கப் பத்திரிகைகள்; எழுத்தாளர்கள் (UG Movement)

பிந்தைய நவீனத்துவ டிகிரி எழுத்தாளர்கள், பத்திரிகைகள், வெகுஜன இயக்கப் பிரச்சார பீரங்கிகள்!

சரி, இப்படி கட்டுடைத்துக் கலகம் செய்யும் எழுத்தை, தத்துவத்தை (?) மதங்கள் எப்படிப் பார்க்கின்றன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம். (தத்துவத்திற்கு முன்னால் கேள்விக்குறி போட்டிருப்பது, ‘தத்துவங்களை எல்லாம் கேள்விக்குட்படுத்த வேண்டும்’என்ற பின் நவீனத்துவ பாணியில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக!)

இஸ்லாம்: இந்த பிந்தைய நவீனத்துவத்தை அல்லது வேறு, வேறு பெயர்களில் அழைக்கப்படுகிற இந்த ஆபாசத் தத்துவத்தை(?) தனது இடது காலால் எட்டி உதைக்கிறது.

கிறித்துவம்: கட்டுடைத்தலிடம் பழைய ஏற்பாடு கொஞ்சம் பாசம் காட்டினாலும், புதிய ஏற்பாடு ‘தூரப்போ சாத்தானே’ என்று விரட்டி அடிக்கிறது.

இந்து மதம்: கை கொட்டி சிரிக்கிறது. ‘அடப்பாவிகளா, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எங்க வேதத்திலேயும், புராணத்திலேயும், இதிகாசத்திலேயும் நாங்க கட்டுடைச்சதல பாதிகூட நீங்க உடைக்கல, அதுக்குள்ளே ரொம்ப பீத்திக்கிறீங்களே?’

‘எங்க பாஞ்சாலி அய்ந்து கணவர்களோட ஒரே வீட்டில் வாழ்ந்தாள்; எங்க பிரம்மா மானோட உறவு கொண்டார், மகளோடு உறவு கொண்டார்; மாமனும் மச்சானுமான சிவனும் – திருமாலும் செய்யாத ஓரினச் சேர்க்கையா நீங்க செஞ்சிடப் போறீங்க? அவுங்க ‘ஓமோ செக்ஸ்’ல ஈடுபட்டு ‘அய்யப்பன்’னு ஒரு சக்தி மிக்க புள்ளையையே பெத்தவங்க.

சிவனும் – பார்வதியும் ஆண் – பெண் குறிகளாக மாறி இன்னும் சிவலிங்கமாக இருந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறாங்க. எந்த மதத்திலாவது ஆண்-பெண் குறிகளை கும்புடுற, போற்றுகிற, கொண்டாடுகிற, மனம் உருகி வழிபடுகிற பழக்கம் உண்டா? குறிகளுக்கு முக்கியத்துவம் தந்த ஒரே மதம் இந்து மதம்தான்.

பெரிய புராணத்தில் வர எங்க இயற்பகை நாயனாரை, ஊரே கூடி உதைக்க வந்த போதும் அஞ்சாமல், தன் பொண்டாட்டிய சிவனடியாருக்கு கூட்டிக் கொடுத்தாரு. பொண்டாட்டிய கூட்டிக் கொடுக்கறதயும் மாமா வேலை பார்ப்பதையும் நியாயப்படுத்தி விளிம்புநிலையில் இருக்கிற மாமக்களுக்கும் சமூகத்தில் மரியாதை தந்த ஒரே மதம் இந்து மதம்தான்.

கொழந்தையிலேயே கொய்யாப் பழமான திருஞான சம்பந்தரு, ‘கடவுள் இல்லைன்னு சொல்றவன் பொண்டாட்டிக் கூட நான் படுக்கனும்னு’ அற்புதமான தமிழால், ரொம்ப நாகரீகமாக பாட்டெழுதினாறு.

இன்னும் கோயில் சிற்பங்களில் உடல் உறவுக் காட்சிகளை தத்ரூபமாக சித்தரிச்சி, எங்க புனிதத்தை நாங்களை உடைச்சிருக்கோம். உலகத்தில வேறு எந்த மதக் கோயிலாவது இதை பார்க்க முடியுமா?

நீங்கள் என்ன பெரிய மஞ்சள் கலர் எழுத்தாளர்? எங்க ஆண்டாளு, ‘என் உடல் முழுதும் திருமாலுக்கே’ என பச்சைக் ‘கலர்ல’ பாட்டெழுதி இருக்காங்க.

இப்பவும் நவீனத்துவத்தோடு இருக்கிற மிகப் பழமை வாய்ந்த கலை, இலக்கியத்துக்கு வாரிசா இருக்கிற எங்கள இருட்டடிப்புப் பண்ணிட்டு, எங்கோ இருக்கிற வெள்ளை கிறிஸ்தவனுங்களோட பேரை எல்லாம் சொல்லி, ரொம்ப புதுசு மாதிரி பிந்தைய நவீனத்துவம்னு பொய் சொல்லி இந்து மதப் பெருமைகளை இருட்டடிப்பு செய்றீங்களே, நியாயமா இது?’’ என்ற உரிமையோடு கோபப்படுகிறது இந்து மதம்.

ஆம். வேதத்தின், பார்ப்பனியத்தின் இந்த ஆபாசக் குவியலையும், ஒழுக்கக் கேட்டையும் கண்டித்து, புத்தர் ஒழுக்கத்தையும், நன்னடத்தையும் உயர்த்திப் பிடித்தார். அவர் வழி வந்த டாக்டர் அம்பேத்கரும் தலித் மக்களுக்கு கட்டளைகளாக ஒழுக்கத்தையும் – தூய்மையையும் வலியுறுத்தினார்.

கிராமங்களில் ஜாதி இந்துக்களின் முன்னால் வெள்ளையும் சொள்ளையுமாக தலித் மக்கள் போவதே, ஜாதி இந்துக்களின் ஜாதி திமிர்த்தனத்தை உடைப்பதாக இருக்கிறது. தேநீர்க் கடையில்தான் இரட்டை டம்ளர் முறை இருக்கிறது. சாராயக் கடையில் சகஜ நிலைதான். கல்யாணத்திற்குதான் ஜாதி பார்க்கிறார்கள். கள்ளக் காதலுக்கு ஜாதி பார்ப்பதில்லை.

சமூகம் எதையெல்லாம் கவுரவம் என்று கருதுகிறதோ, அங்கெல்லாம் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சமூகம் எதையெல்லாம் அகவுரவம் என்று கருதுகிறதோ அங்கெல்லாம் தலித் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது.

சாக்கடையை சுத்தப்படுத்துதல் போன்ற ‘அரச உத்தியோகத்திற்கு’ தலித் மக்களைத் தவிர வேறு யாரும் விண்ணப்பிப்பது கூட இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இந்த சமூகக் கட்டுகளை உடைத்துக் கொண்டு, தலித் மக்கள் உரிமைகளோடு எழும்போதே – ‘தன் கை மீறிப் போகிறார்கள்’ என்கிற பொறாமையே, வெறுப்பே, இயலாமையாக மாறி கோபமாக ஜாதி இந்துக்களிடம் வெளிப்படுகிறது.

இவற்றோடு, டாக்டர் அம்பேத்கர் சொன்ன ‘தூய்மை’ என்கிற சொல்லப் பொருத்திப் பார்த்தால், அது எவ்வளவு அர்த்தமுள்ள வலுவான சொல்லென்று விளங்கும்.

‘தூய்மை’ என்பதையே பாசிசம் என்கிறார்கள் கட்டுடைப்பவர்கள். ‘தூய்மை’ என்பது பாசிசம் அல்ல. ‘புனிதம்’ என்பதுதான் பாசிசம். ஒரு தலித் எவ்வளவு தூய்மையானவராக இருந்தாலும், புனிதராக (சங்கராச்சாரியாக) முடியாது. ஒரு பார்ப்பனர் எவ்வளவு அசுத்தமானவராக இருந்தாலும் அவரின் புனித்தத் தன்மை கெட்டுப்போகாது. அவர் மீது தீண்டாமையை திணிக்க முடியாது. இதுதான் இந்து பார்ப்பன மதம்.

தந்தை பெரியாரும், பக்திக்கு எதிரான நிலையில் ஒழுக்கத்தை நிறுத்தி, ‘ஒரு மனிதனுக்கு பக்தி முக்கியமா? ஒழுக்கம் முக்கியமா? என்பதோடு பக்தி, தனிமனித, சமூக ஒழுக்கத்திற்கு எதிரானது என்று நிறுவினார்.

முற்போக்கு போர்வையில், சில நேரங்களில் மார்க்சியத்தின் பேரிலும் நடக்கிற இந்த ஆபாசக் கூத்தை, தலைவர் லெனின் கடுமையாகக் கண்டிக்கிறார், கிளாரா ஜெட்கினுடன் நடந்த உரையாடலில்:

‘‘ஆண் – பெண் உறவுகள் பற்றி வியன்னாவிலுள்ள ஒரு கம்யூனிஸ்ட் நூலாசிரியை எழுதியுள்ள புத்தகம், இங்கு மிகவும் பிரபலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் புத்தகம் எத்தகைய குப்பைக் கூளம்!

இந்த நூலில், ப்ராய்டின் சித்தாந்தம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது அறிவியல் மணம் இருப்பதைக் காட்டி ஏமாற்றவேயாகும், இந்த நூல் ஒரு கேவலமான குப்பையாகவே இருக்கிறது. ப்ராய்டின் சித்தாந்தம், இப்பொழுது ஒரு புது மோகம் போல இருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் சாணிக்குவியலிலிருந்து இத்தனை செழிப்பாக முளைத்தெழுந்துள்ள – இங்கே குறிப்பிட்ட நூலிலும், இதைப் போன்ற நூல்கள், கட்டுரைகள், அறிவியல் பத்திரிகைகள் இவற்றில் வெளியிடப்பட்டுள்ள ஆண் – பெண் உறவு பற்றிய கொள்கைகள் பற்றியும் எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்தியப் பக்கிரி ஒருவன் தனது தொப்புளைப் பற்றியே தன் சுயநலத்தை நினைத்து கொண்டிருப்பது போல, எப்பொழுது பார்த்தாலும் ஆண் – பெண் உறவு பற்றிய பிரச்சினைகளில் இடைவிடாமல் மூழ்கிக் கிடப்பவர்களையும் நான் நம்பவில்லை. இவ்வாறு ஆண் – பெண் உறவிலேயே அளவுக்கு மீறி அபரிதமாகக் காணும் சித்தாந்தங்கள், பெரும்பாலும் உத்தேசங்கள் மட்டுமே. பெரும்பாலும் எதேச்சதிகாரமான போக்குகளே. இவை எல்லாம் சொந்தத் தேவையிலிருந்து எழுபவையேயாகும். முதலாளித்துவ ஒழுக்க முறையின் முன்னால், தனது அசாதாரணமான அளவு மீறிய ஆண் – பெண் உறவு வாழ்க்கையை நியாயப்படுத்துவதற்கும், தன்னோடு பிறர் சகிப்புத் தன்மை காட்ட வேண்டும் என்று கோரியுமே இவற்றை எழுப்புகின்றனர்.

ஆண் – பெண் உறவுகள் பற்றிய பிரச்சனைகளில் ஆழ முழுகிக்கிடப்பது எத்தனை வெறுக்கத்தக்கதாக இருக்கிறதோ, அதே போல முதலாளித்துவ ஒழுக்க முறைக்குத் திரைகட்டி மதிப்புக் கொடுக்க முயல்வதும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது.

‘இந்த முயற்சி கலகமயமானது; புரட்சிகரமானது’ என்று வெளித்தோற்றத்தில் மிகையாகக் காணப்பட்டாலும், இறுதியாக இது முற்றிலும் முதலாளித்துவப் போக்கில் செல்வதாகவே அமையும். இந்தப் பொழுது போக்கு வேலையை சிறப்பாக அறிவு ஜீவிகளும் அவர்களது வர்க்கத்தோடு ஒட்டிய உறவுகள் வட்டத்தில் உள்ளவர்களுமே மிகவும் விரும்புகிறார்கள்.

பிரதானமான சமூகப் பிரச்சினையில் ஒரு பகுதியான ஆண் – பெண் உறவு, விவாகம் முதலிய பிரச்சினைகள் என்று மீண்டும் எடுத்துக் கொள்ள முடியாத ஒரு நிலைமையில்தான் இது கொண்டு போய்விடும். இதற்கு மாறாக, மிகப் பெரிய சமூகப் பிரச்சினை ஆண் – பெண் உறவுப் பிரச்சினையின் ஒரு பகுதியாகி அதன் அனுபந்தமாகக் கருதப்படும் நிலை ஏற்பட ஏதுவாகும். பிரதானமான பிரச்சனை பின்னணிக்குத் தள்ளப்பட்டு, இரண்டாந்தரப் பிரச்சினையாகிறது. இதனால் இந்தப் பிரச்சினையில் தெளிவு ஏற்படாமல் தவிப்பது மட்டுமல்ல, பொதுவாக சிந்தனையையே மூட்டமிட்டு மறைப்பதுடன் தொழிலாளி மற்றும் பெண்களின் வர்க்க பேதத்தையும் ஒளித்து மறைக்கும் நிலை நேருகிறது.

மேலும், ஒரு கருத்தை இங்கே குறிப்பிடுவது மிகையாக இருக்காது. ஒவ்வொன்றுக்கும் உரிய காலமுண்டு என்று அறிவாளியான சாலமன் நமக்குக் கூறியிருக்கிறார். தொழிலாளி மாதக் கணக்கில் ஒரேடியாக காதல் செய்வது எப்படி? காதலிக்கப்படுவது எப்படி? மணக்கக் கேட்பது எப்படி? என்ற விஷயங்களில் மும்முரமாக இறங்கச் செய்வதற்கு இதுதான் நேரமா?

முதலாளித்துவ சாயம் பூசிய முட்டைகளிலிருந்து வெளிவரும் மஞ்சள் மூக்கு குஞ்சுகள் மெத்தக் கெட்டிக்காரர்கள்தான். நமது வழிகளைத் திருத்திக் கொள்ளாமல் இந்த நிலைமையை ஏற்க வேண்டியது அவசியமே. ஆண் – பெண் உறவு பற்றிய நவீன விளக்கத்தின் விளைவாகவும், அதில் அளவு மீறிய அக்கறை காட்டியதாலும் இளைஞரியக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களிடம் துறவியின் புலனடக்கம் பற்றியும், குப்பைத் தனமான முதலாளித்துவ ஒழுக்க முறையின் புனிதத் தன்மையைப் பற்றியும் போதனை செய்வதை விடப் பொய்யான வேலை வேறு எதுவும் இல்லை. என்றாலும், இந்த நாட்களில் ஆண் – பெண் உறவுப் பிரச்சினைகள் இயற்கையான காரணங்களால் வலுக்கட்டாயமாக முன்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது இளைஞர் மனநிலையின் நடு அம்சமாக ஆகி வருகின்றன. இது நல்லதுதான் என்று ஒருவர் கூறுவது அரிது. இதன் விளைவுகள் சில நேரங்களில் படுநாசகரமானவையாக முடியும்.

ஆண் – பெண் வாழ்க்கை உறவு பற்றிய பிரச்சினைகளில் இளைஞர்களின் மாறுபட்ட போக்குகள், கொள்கையின் பேரிலுள்ள கோட்பாடு விஷயத்தை அடிப்படையாக்கியே எழுந்துள்ளன. பலர் தாம் எடுத்துக் கொண்டுள்ள நிலைமை ‘புரட்சிகரமானவை’ கம்யூனிஸ் நிலைமை’ என்று கூறுகிறார்கள். இது அப்படித்தான் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள்.

நான் ஒரு கிழவன். இதை என் மனது ஏற்கவில்லை. நான் எக்காரணம் கொண்டும் ஒரு துக்கம் நிறைந்த துறவியாக இல்லை. என்றாலும், இளைஞர்களின் இந்தப் ‘புதிய ஆண் – பெண் வாழ்க்கை’ என்று அடிக்கடி அழைக்கப்படும் இந்த விஷயத்தை, வயது வந்தோரும் அடிக்கடி சுட்டிக்காட்டுவது முற்றிலுமாக முதலாளித்துவப் போக்குள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் புரிந்து கொண்டுள்ள வகையில் சுதந்திரமான காதலின் சிறு சுவடு கூட இதில் இல்லை. கம்யூனிஸ்ட் சமூகத்தில் ஒருவர் தமது ஆண் – பெண் உறவு இன்பத்தை அனுபவிப்பதும், காதலுக்காக ஏங்குவதும், எல்லாம் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிப்பது போல சாதாரணமானது. சில்லறை வேலை என்று பெயர் போன கொள்கை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். நமது இளைஞர்கள் இந்த ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கை பற்றியப் பித்தேறி – முழு பித்தேறி அலைகிறார்கள்.

இது, பல இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அழிவைத் தந்திருக்கிறது. இதனை வலியுறுத்துகிறவர்கள், இதுவும் மார்க்சிய சித்தாந்தம் என்று கூறுகின்றனர். சமூகத்திலுள்ள சித்தாந்த ரீதியான சகல போக்குகளையும் மாறுதல்களையும் நேரடியாக தவறவிடாமல், ஒரே ஒரு அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் இருப்பதாகக் கூறும் அத்தகைய மார்க்சியத்திற்கு நல்லது நடக்கட்டும். இது அத்தனை எளிதான விஷயமல்ல. இந்த உண்மையை, வரலாற்று இயல் பொருள் முதல் வாதம் தொடர்பான உண்மையை, நீண்ட நாட்களுக்கு முன்னால் பிரடரிக் ஏங்கெல்ஸ் நிரூபித்திருக்கிறார்.

பெயர்போனதான ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கையை நான் மார்க்சிஸ்ட் கொள்கை என்று கருதவில்லை. மாறாக, அது சமூக விரோதமானது என்று நினைக்கிறேன்.

ஆண் – பெண் வாழ்க்கையில் முக்கியமானது, இயற்கை உதவியுள்ள விஷயங்கள் மட்டுமல்ல, மேல் மட்டத்திலாயினும் சரி கீழ் மட்டத்திலாயினும் சரி, கலாச்சாரத்திலிருந்து வந்த கலவைப் பண்புகளும் முக்கியமானதாகின்றன. ஏங்கெல்ஸ் தனது ‘குடும்பத்தின் தொடக்கம்’ என்ற நூலில், சாதாரணமான ஆண் – பெண் காதலாக வளர்ச்சியடைந்து, உயர்ந்த தரத்தை எய்தியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆண் – பெண் இரு சாராரிடையே உள்ள உறவுகள், வெறும் சமூகப் பொருளாதாரத்திற்கும் உடலின் தேவைக்கும் இடையே உள்ள விளையாட்டு மட்டுமல்ல. இந்த உறவுகளில் ஏற்படும் மாறுதல்களை, தத்துவத்துடன் உள்ள தொடர்பிலிருந்து தனிமைப்படுத்தி சமூகத்தின் பொருளாதார அடிப்படையுடன் மட்டும் பொருத்துவது மார்க்சியமாகாது. அது பகுத்தறிவு வாதமாகும். தாகத்தை தணிக்க வேண்டியதுதான். ஆனால், எளிய மனிதன் சாதாரணமாக உள்ள நிலையில் சாக்கடைக்குள் படுத்து – ஒரு சேற்றுமடைத் தண்ணீரைக் குடிப்பானா? பல எச்சிற்படுத்திக் குடித்த கிளாசிலிருந்து குடிக்க விரும்புவானா?

சமூக அம்சம்தான் இதில் மிக மிக முக்கியமானது. தண்ணீர் குடிப்பது என்பது தனி ஒருவரின் விஷயம். ஆனால், காதல் செய்வதில் இரண்டு பேர் பங்கு கொள்கின்றனர். மூன்றாவது புது உயிர் பிறக்கிறது. இங்குதான் சமூக நல உரிமை கூட்டான அமைப்போடு உள்ள கடமை இவை எல்லாம் எழுகின்றன.

‘விடுதலை பெற்ற காதல்’ என்ற ஆழமான முத்திரையுடன் காணப்பட்ட பொழுதும் ‘ஒரு கிளாஸ் தண்ணீர்’ கொள்கையை ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் நான் விரும்பவில்லை. மேலும் இது புதிதுமல்ல, கம்யூனிசம் அடிப்படையானதுமல்ல.’’

***

கிளாராஜெட்கினின் ‘லெனின் நினைவுக்குறிப்புகள்’ என்ற நூலிலிருந்து.

பெண்களுக்கான இடஒதுக்கீடு தெய்வக் குத்தம் …


கனவில் அவள் வந்தாள்
கனவிலும்
தூங்கிக் கொண்டிருந்த
என்னைத் தட்டியெழுப்பி
எனக்கொரு
பிரச்சினை என்றாள்.
.
நான்கு கைகளோடு நின்ற
அவளைக் கண்டு மிரண்டு,
யார் நீங்கள்? என்றேன்.
என் பெயர் காமாட்சி
ஊர் காஞ்சிபுரம் என்றாள்.
.
அய்யோ கடவுளா!
கடவுளுக்கே பிரச்சினையா?
ஆச்சரியத்தோடு
கணவனாலா என்றேன்.

கணவனால்
பிரச்சினை இல்லை
பிரச்சினைகளைப்
புரிந்து கொள்ளாமல்
கல்போல் நிற்பவன்
கணவனா என்றாள்.
.

புரியவில்லையே என்றேன்.

தினம் தினம்
நான் அவமானத்தால்
செத்துப் பிழைக்கிறேன்
என் பெண்மை
கேவலப்படுத்தப்படுகிறது
என்று உடைந்தாள்.

நான் பதட்டமாகிப் போனேன்
அய்யோ உங்களையா?
யார் அவன்? என்றேன்.

கோயில் குருக்கள் என்றாள்.

குருக்களா!
என்ன செய்தார் அவர்?
அதிர்ச்சியாகக் கேட்டேன்.
.
தினம் தினம்
கருவறையின் கதவுகளை
உட்பக்கமாக சாத்திக்கொண்டு
என்னை நிர்வாணப்படுத்தி அபிஷேகம்…
என்று சொல்லிக்
கொண்டிருக்கும்போதே
அவமானத்தால் கதறி விட்டாள்.
.
பின் நிதானித்து
குருக்கள் வாயில்
மந்திரம் இருக்கலாம்
மரியாதை இருக்கலாம்
ஆனால்
இதை
பெண்ணின் மனநிலையில்
புரிந்து கொள்
அவமானம் புரியும் என்றாள்.
.
சரிதான், ஆனால்
இதற்கு என்ன செய்ய முடியும்
என்றேன்-மிகுந்த வருத்தத்தோடு.

ச்சீ… இப்படிக் கேட்க
உனக்கு வெட்கமாக இல்லை?

உக்கிரமாகிப் போனாள் காமாட்சி

கோபத்தோட தொடர்ந்தாள்
எல்லாத் துறைகளிலும்
பெண்களுக்கு உரிமையும்
ஒதுக்கீடும் வேண்டும் என்று
கேட்கிறீர்களே
கோயில் கருவறைக்குள்
குருக்களாக
அர்ச்சகர்களாக
பெண்களை அனுமதித்தால்
உங்கள் புனிதம் என்ன
நாறி விடுமோ? என்று
காறித் துப்புவது போல் கேட்டு
நிலம் நடுங்க
சலங்கை உடைய
தீயைப் போல் போனாள்
காஞ்சி காமாட்சி

***

‘கர்ப்பக் கிரகத்திற்குள் பெண்கள் நுழைந்து விட்டார்கள்’ என்பதை ஏதோ சிலைத் திருடன் நுழைந்து விட்டான் என்பதை விடவும், கேவலமாக விவாதிக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டார்கள், பெண்கள்.

(பெரியார் இதற்காகத்தான் சாமியை செருப்பாலடித்தார்)

நாடாளுமன்றத்தில் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு 33% இட ஒதுக்கீடும் கிடைக்க இருக்கிறது. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் கூட உள் ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கையைத்தான் பெயரளவிலாவது முன் வைக்கிறார்கள்.

உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் `இதுல ஜாதியெல்லாம் பார்க்கக் கூடாது. முதலில் அமலாகட்டும்` என பெண்களுக்குள் ஜாதி வேறுபாடு இல்லாதது போல் பேசுகிறார்கள்.

ஒரு பெண் பிரதமராக முடிகிறது. அர்ச்சகராக முடிவதில்லை.உள் ஒதுக்கீடு கூட வேண்டாம். அர்ச்சகராவதற்கு முழுக்க முழுக்க அய்யர், அய்யங்கார் பெண்களை மட்டுமாவது அனுமதிப்பார்களா? நாடாள முடிகின்ற பெண்ணால்- கேவலம் அர்ச்சகராக முடியாதா?

சட்டம் சந்து பொந்துகளில் நுழைகிறது. சிலர் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து விடுகிறார்கள். ஆனால் கர்ப்பக் கிரகம் என்ற சந்துக்குள் எந்தச் சட்டம் நுழைய முடிகிறது?

பரந்து விரிந்த அந்த நாடாளுமன்றம் சின்ன கர்ப்பக் கிரகத்திற்கு முன் மண்டியிடுவது, பக்தியினால் அல்ல.

சுதந்திர இந்தியாவின் நவீன சட்டங்கள், மனுவின் சட்டங்களுக்கு முன் மண்டியிடுவதைப் போல.

நாடாளுமன்ற உறுப்பினர் என்பது அதிகாரம்.

கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைவது சுயமரியாதை.

அதிகாரத்தை விடவும், சுயமரியாதை முக்கியம் அல்லவா!

`தீட்டு` என்று காரணம் சொல்லி பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர்.

தந்தை பெரியார் கேட்டார்:

“மலம் கழித்துவிட்டு கோயிலுக்குள் வரலாம்.

மலத்தை விடவா, மாதவிலக்கு தீட்டு”

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்…


தாயும் மகளும் ஒரே ஆணுடன் உறவு. (அவள் ஒரு தொடர்கதை)

தந்தையும் மகனும் பார்வையற்ற ஒரு பெண்ணுடன் உறவு (எங்க ஊர் கண்ணகி)

தன் மகனின் காதல், கல்யாணத்தில் முடியாமல் தடுப்பதற்காக, மகன் காதலித்த பெண்ணின் அம்மாவை தான் மணம் முடித்து, மகனின் காதலியையே அவனுக்குச் சகோதரியாக மாற்றிய தந்தை. (வானமே எல்லை)

அவுங்க அம்மாவை, இவரு பையன் காதலிப்பான்; இவனோட அப்பாவை அந்த அம்மாவோட பொண்ணு காதலிக்கும் (அபூர்வ ராகங்கள்)

இப்படிப் புரட்சிகர குணாம்சங்களோடு கதாபாத்திரங்களை உருவாக்கி, திரைப்படம் எடுத்த அந்த பின் நவீனத்துவ ‘பிதாமகன்’ யார் தெரியுமா?

‘பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை, வக்கிரங்களைக் கண்டித்து, தன் பணத்தை எல்லாம் செலவு செய்யும் ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பாளருடைய அப்பாவான, இயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் போற்றப்படும் இயக்குநர் வக்கிரம் கே.பாலச்சந்தர்தான்.

இவர் தனது படங்களில் பெண்களுக்கான குரலை மிக சத்தமாகக் கொடுப்பவர். ஆனால், தகாத கணவனை தள்ளி வைத்து விட்டு மறுமணம் செய்து கொள்ளத் தயாராகிற பெண்ணை, தன் முதல் கணவன் கதாபாத்திரமாக வந்து, எப்படியாவது அந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவார். (அவர்கள், மனதில் உறுதி வேண்டும்)

*தனது ‘அரங்கேற்றம்’ படத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுகிற பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி, திருமணம் நடப்பதற்கு முன் அந்தப் பெண்ணை பைத்தியமாக்கி அலைய விடுவார். இது மட்டுமல்ல, திரைப்பட வரலாற்றிலேயே பல புதுமைகளை செய்தவரும் இவரே.

‘ஏக்துஜே கேலியே’ படத்தில் உலகிலேயே முதல் முறையாக கதாநாயகியின் வயிற்றில் பம்பரம் விட்டுக் கட்டியதோடு, அந்தப் பெண்ணின் தொப்புளில் மண்ணையும் கொட்டி மூடியவரும் இவரே.

‘மரோசரித்திரா’ தெலுங்குப் படத்தில் உலக சினிமா வரலாற்றிலேயே யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு புதுமையைக் கையாண்டிருப்பார்.

கமலும் – சரிதாவும், காதல் தோல்வியால் கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டு பிணமாகக் கரை ஒதுங்குவார்கள். கமல் குப்புறப்படுத்து செத்துக் கிடப்பார். சரிதா மல்லாக்கப் படுத்து செத்துக் கிடப்பார்.

ஆம், பெண்ணின் பிணத்தைக் கூட கவர்ச்சியாகக் காட்டிய ஒரே உலக மகா இயக்குநர் கே. பாலசந்தர்தான்.

. . .

‘கதையல்ல நிஜம்’ இந்த நிகழ்ச்சியால் ஒன்று சேர்ந்த குடும்பங்கள் என்று இரண்டு குடும்பங்களை, தொடர்ந்து தன் விளம்பரங்களில் காட்டிக் கொண்டு வருகிறார்கள். உண்மைதான்.

இந்த இரண்டு குடும்பங்களைத் தவிர, இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த மீதி குடும்பங்கள், இனி ஜென்மத்துக்கும் ஒன்று சேர முடியாத அளவிற்கு ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் வேலை பார்த்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.

11 வயது சிறுவன் சொல்கிறான், ‘‘நான் வீட்டை விட்டு ஓடிப் போய் பிச்சை எடுத்தேன், திருடினேன், பொம்பளைங்கள கூட்டிக் கொடுத்தேன்’’ என்று.

‘‘அய்யோ’’ என்று பரிதாபத்துடன் ஆச்சரியப்பட்டு துக்கம் தாங்காமல் ‘‘ஒரு விளம்பர இடைவெளிக்குப் பிறகு..’’ என்று அறிவிக்கிறார் நடிகை லட்சுமி.

இனி அந்தச் சிறுவனின் அக்கம்பக்கம் அவனை எப்படி எதிர்கொள்ளும்? அவனைக் குறித்த இந்தக் காட்சிப் பதிவு அவன் எதிர்காலத்தை எந்த நிலையில் வரவேற்கும், என்கிற எந்த சமூகப் பொறுப்பும் அற்று ‘அவலம் தோய்ந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி’ என்கிற தொனியில் அவன் துயரத்தை பணம் பண்னும் இவர்களுக்கும், அந்தச் சிறுவனை திருடனாக்கி விபச்சாரத் தரகனாக்கி, பணம் சம்பாதித்த அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

கண்ணீரும், கம்பலையுமாக ஒரு பெண் அழுது கொண்டிருக்கிறார். அதே கண்ணீரோடு குறுக்கிட்டு, ‘ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, நாம் மீண்டும் அழலாம்’ என்பது மாதிரி அறிவித்து விட்டு, குதூகலமான விளம்பரங்களைப் போட்டு, மிகச் சாதுர்யமாக அடுத்தவர் கண்ணீரில் காசு சம்பாதித்துக் கொடுக்கும் பாரதி கண்ட புதுமைப் பெண் நடிகை லட்சுமிக்கு ஒரு வேண்டுகோள்:

பொதுவாக இந்தியப் பெண்கள் ஆணுக்கான நுகர்பொருளாகவும், அது போக மீதி நேரங்களில், கலாச்சாரக் காப்பாளர்களாகவும் இருக்க வேண்டும். (மதம் உட்பட கலாச்சாரம் என்று சொல்கிற எல்லாவற்றையும் பெண்தான் காப்பாற்ற வேண்டும்)

இந்த இந்தியச் சூழலில் சினிமா, தமிழ் சினிமா ஆணாதிக்க பொறுக்கித் தனத்தின் உச்சக்கட்டம் என்று கூட சொல்லலாம்.

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என்று ஆண்களால் சுற்றி வளைக்கப்பட்டு இருக்கும் தமிழ் சினிமா, நடிகையாக வரும் பெண்ணை எப்படி வரவேற்கிறது என்றும், அந்தப் பெண்கள் சந்தித்த துயரங்கள் என்ன என்றும், அவர்களை நேரில் வரவழைத்து அவர்களின் துயரங்களை பகிர்ந்து கொள்வீர்களா?

குறிப்பாக, பாலச்சந்தர் படங்களின் வக்கிரங்களைக் கண்டிப்பதோடு, அவர் தன் படங்களில் நடித்த பெண்களை எந்த அளவுக்கு கண்ணியமாக நடத்தினார்? இல்லை, அடித்து உதைத்து, திட்டினாரா? என்பதையும் அந்தப் பெண்களிடம் பேட்டி கண்டு ஒளிபரப்புங்கள். அதை முதலில் உங்களில் இருந்தே தொடங்குங்கள்.

நீங்கள் அவர் இயக்கத்தில் நடித்திருக்கிறீர்கள். அவர் தயாரிப்பில் இயக்குநராகவும் இருந்திருக்கிறீர்கள். (மழலைப் பட்டாளம்)

இதற்கு உங்களைவிட சரியான, துணிவான நபர் வேறு யார்?

சொல்லுங்கள் உங்கள் துயரங்களை.

அடுத்தவர் துயர்களுக்காகக் கண்ணீர் சிந்திய உங்களுக்கு பிரதி உபகாரமாக, கண்ணீர் சிந்தக் காத்திருக்கிறோம், அதே விளம்பர இடைவெளியோடு.

வாய்ப்புத் தருவீர்களா?

பெட்டிச் செய்தி

ஒரு பெண் சொல்கிறார்; என் மேலே சந்தேகப்பட்டு என்னைத் துன்புறுத்துறாரு, வீட்டுக்குள்ளே பூட்டி வெச்சிட்டு வெளியே போயிடறாரு’’

நடிகை லட்சுமி; ‘‘ஏன் இந்த மாதிரி பண்றீங்க? உங்க மனைவிதானே, சரி நடந்தது நடந்துப் போச்சு, ரெண்டு பேரும் குழந்தை மாதிரிதான் இருக்கீங்க, ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு அதிகமா இருக்கிறதுனாலே..’’

வீட்டுக்குள்ள பொண்டாட்டிய பூட்டி வெச்சிட்டுப் போறவன் குழந்தையாம்?! அவனுக்கு அன்பு வேறு அதிகமாம்!

உடனே ‘சரி கைய புடிங்க, கட்டிப் புடிங்க’ என்று கவுன்சிலிங் வேற.

தங்கள் நிகழ்ச்சியின் மூலமாக ஒன்று சேர்ந்தவங்க எண்ணிக்கையை உயர்த்திட்டோம் அப்படிங்கற ‘விளம்பர’ பெருமைக்காக ரொம்பவே அல்லாடுகிறார் லட்சுமி, அசிங்கமாக.

இதை அவராகவே செய்கிறாரா? இல்லை, மகா ‘ஞாநி’ களின் ஆலோசனையும் ஆசியும் பெற்று செய்கிறாரா?

***

‘மொட்டைத் தலையில் மயிர் முளைப்பது எப்படின்னு?’ ஒரு தீவிரமான ஆலோசனையை நடிகர் ‘சோ’ சொன்னார்னா, எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அது மாதிரிதான் இருக்கு, ‘கணவன் – மனைவி ஒற்றுமையா இருக்கணும்; என்ன பிரச்சினை வந்தாலும் பிரியக்கூடாதுன்னு நடிகை லட்சுமி சொல்கிற அறிவுரையும்.

***

2003 ல் தலித் முரசில் எழுதியது. இது நடிகை லட்சுமியையும் கதையல்ல நிஜம் குழுவினரையும் நிரம்ப கடுப்பேற்றியதாக கேள்வி. இந்த மோசடிகளின் ஆலோசனைக் குழுவில் ஞாநியும் இருந்தார்.

குறிப்பு:

தலித் முரசில் எழுதும்போது *‘தனது அரங்கேற்றம் படத்தில் பாலியல் தொழிலாளியாக இருக்கிற’ என்று குறிப்பிட்டு இருந்தேன். அதை இப்போது மாற்றி, *‘தனது அரங்கேற்றம் படத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுகிற பெண்ணுக்கு’ என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.

தேச துரோகி யார்?


பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பை மிகத் தெளிவாக, தீவிரமாக 1917லேயே பேசியிருக்கிறார் நாயர். சுயஜாதி நிலையிலிருந்து அல்லாமல், ஜாதி ஒழிப்பு நிலையிலிருந்தே பார்ப்பன எதிர்ப்பை கடைப்பிடித்திருக்கிறார்.

பார்ப்பன மோகியாய், இந்துமத வெறியனாய், கைதேர்ந்த சந்தர்ப்பவாதியாய் இருந்தாலும் ‘தன் ஜாதிக்காரர்’ என்ற பெருமையோடு ‘பிரபலமானவரை’ விமர்சிக்காமல், அவரோடு உறவாடுகிற, அவரின் அந்தஸ்தை நினைத்து பெருமைப் படுகிற, அவர் மூலமாக தனிப்பட்ட முறையில் காரியம் சாதிக்கிற, முற்போக்காளர்களிடம் சவடாலாக பேசிவிட்டு தன்னுடைய மத அடையாளத்தை கிறித்துவ அல்லது இஸ்லாமிய மதவாதிகளிடம் அடையளாப்படுத்திக்கொண்டு மதவாதிகளின் மூலமாக ‘பிழைக்கிற’ இன்றைய ‘முற்போகாளர்களை’விட நேர்மையானவராக இருந்திருக்கிறார் டி.எம். நாயர். அதற்கு அவரின் இந்த பேச்சு ஒரு உதாரணம்:

“உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற சர் சங்கரன் நாயர், ஒரு சமயம் கேரளாவிலுள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, ஒரு நம்பூதிப் பார்ப்பான், சர் சங்கரன் நாயர் வீட்டு வாசலிலேயே வந்து நின்றபடி, “எடா! சங்கரா! நீ உயர்நீதிமன்ற நீதிபதியாமேடா” என்று கேட்டானாம். “ஆமாம் சாமி எல்லாம் உங்கள் கடாட்சந்தான்!” எனறு கூறியவாறே, வெளியே ஓடோடியும் வந்து, நம்பூதிரிப் பார்ப்பானின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக், கைட்டி வாய் பொத்தி நின்றாராம், அவர்.

கேரளாவில் மரியாதைகளும், அவமரியாதைகளும் எப்படிப் படாத பாடுபடுகின்றன. பார்த்தீர்களா? (வெட்கம்! வெட்கம்! என்ற பெருத்த ஆரவாரம்).”

இப்படி போர்க்குணத்தோடு இயங்கிய, பேசிய நாயரின் கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் அன்னிபெசன்டின் ஹோம்ரூல் இயக்கத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களும், பார்ப்பன கை கூலிகளும் நாயர் பேசிக் கொண்டிருக்கும் போதே, உள்ளே புகுந்து சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்பது, நீதிக்கட்சியை விமர்சித்து அவர்கள் கூட்டத்திலேயே துண்டுபிரசுரம் வினியோகிப்பது, போன்ற காரியங்களைச் செய்தனர்.

‘இதை செய்வதே தனது தலையாயப் பணியாக’ தன் மேல் போட்டுக் கொண்டு செய்வதவர்தான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார். அப்படி ஒரு முறை சென்னை டவுன் ஹாலில் நாயர் பேசிய கூட்டத்தில், புகுந்து நாயர் பேசிக்கொண்டிருக்கும்போது கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு நாயர் உரிய பதிலையும் தந்திருக்கிறார்.

இது குறித்து திரு.வி.க.வே தன் வாழ்க்கை குறிப்பு நூலில் குறிப்பிட்டிருக்கிறார்:
‘ஒரு நாள் சென்னை டவுன்ஹாலில் ஜஸ்டிஸ் கட்சிக் சார்பில் ஒரு பொதுக்கூட்டங் கூடியது. அதில் டாக்டர் நாயர் பேசினர். அவர்க்குச் சில கேள்விகள் விடுத்தேன். கேள்வி பதில்களின் கருத்தை நினைவிலுள்ளபடி இங்கே திரட்டித் தருகிறேன்.

கேள்வி (திரு.வி.க.) : “நீங்கள் ஏன் காங்கிரசை விடுத்து வகுப்பு வாதக் கட்சியில் சேர்ந்தீர்கள்? வகுப்பு வாதத்தால் நாடு சுயராஜ்யம் பெறுமா? அப்படி யாண்டாயினும் நிகழ்ந்திருக்கிறதா? சரித்திரச் சான்று உண்டா?”

பதில் (நாயர்) : “யான் காங்கிரஸில் தொண்டு செய்தவனே, அது பார்ப்பனர் உடைமையாகியதை யான் உணர்ந்தேன்.

காங்கிரசால் தென்னாட்டுப் பெருமக்களுக்குத் தீமைவிளைதல் கண்டு, அதை விடுத்து, நண்பர் தியாகராயருடன் கலந்து ஜஸ்டிஸ் கட்சியை அமைக்கலானேன். வகுப்பு வாதத்தால் சுயராஜ்யம் வரும் என்று எவருங் கூறார்.

வகுப்பு வேற்றுமை உணர்வு தடிதது நிற்கும்வரை சுயராஜ்ம் என்பது வெறுங்கனவே யாகும். வகுப்பு வேற்றுமையுணர்வின் தடிப்பை வகுப்பு வாதத்தால் போக்கிய பின்னரே சுயராஜ்யத் தொண்டில் இறங்க வேண்டுமென்பது எனது கருத்து. காலத்துக் கேற்ற தொண்டு செய்வது நல்லது. வகுபபு வேற்றுமை இல்லாத நாடுகளைப் பற்றிய சரித்திரங்களை இங்கே ஏன் வலித்தல் வேண்டும்? இந்தியா ஒரு விபரீத நாடு. பிறப்பால் உயர்வு தாழ்வு கருதும் நாடு.”

இப் பதிலைக் கேட்டதும் யான் வகுப்புவாதக்கட்சி வகுப்புகளின் நினைவையன்றோ உண்டுபண்ணும்? அதனால் வகுப்பு வேற்றுமை வளருமா? தேயுமா? உங்கள் கட்சி பிராமணர்க்குள் ஒற்றுமையையும் பிராமணரல்லாதாருக்குள் வேற்றுமையையும் வளர்ப்பதாகும்’ என்று மொழிந்துகொண்டிருந்தபோது, நானா பக்கமும் கூக்குரல் கிளம்பியது. கூட்டங்கலைந்து, டாக்டர் நாயர், நாளை ஜஸ்டிஸில் விளக்கமான பதில் வரும்’ என்று சொல்லிச் சென்றார். அடுத்த நாள் திராவிடன் என்னை வசையால் வாழ்த்தினான். ஜஸ்டிஸில் டாக்டர் நாயர் கூட்டத்தில் கூறிய பதிலே விரிந்த முறையில் வந்தது.

ஜஸ்டிஸ் கூட்டங்கட்கு நேரே போய்க் கேள்வி கேட்பதை நிறுத்திக்கொண்டேன், துண்டு அறிக்கைகளை எழுதி விடுக்கலானேன்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார் திரு.வி.க. (நயாரின் பதில்களில் உள்ள சில வரிகளுக்கு கீழ் கோடிட்டது திரு.வி.க அல்ல. யான். அந்த வரிகளுக்கு அழுத்தம் தருவதற்காகவே யான் அவ்வாறு செய்தோம்-மதிமாறன்)

அதுமட்டுமல்லாமல், தொழிற்சங்கங்களில் செல்வாக்கு பெற்ற திரு.வி.க தொழிற்சங்களை நீதிக்கட்சிக்கு எதிராகவும் திருப்பியிருக்கிறார்.

திருவிகவைபோல் பாரதியாரும் நீதிக்கட்சியை பார்ப்பன பத்திரிகைகளில், பிராமண சங்க கூட்டங்களில் தாக்கியிருக்கிறார். திரு.வி.க, பாரதியார் போன்ற போலி தேசப்பக்தர்கள், நாயரை, தியாகராயரை தொடர்ந்து கேவலப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.

ஆனால், தன் வாழ்க்கையையே சுதந்திர போராட்ட நடவடிக்கைகளுக்காக அர்பணித்த வ.உ.சி போன்ற உண்மையான தேசபக்தர்கள், நீதிக்கட்சி தலைவர்களை தேச துரோகிகள் என்று சொல்லவில்லை. மாறாக அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். காரணம், காங்கிரசுக்குள் இருந்த பார்ப்பன கும்பலின் சதியை, துரோகத்தை நேரடியாக அனுபவித்தவர் வ.உ.சி. அதுமட்டுமல்ல, காங்கிரஸ் பார்ப்பனர்களின் தேசவிரோத செய்கையையும் நன்கு அறிந்தவர். அன்னிபெசன்ட் போன்ற அன்னிய நாட்டுக்காரர்கள் இந்திய சுந்திர போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்பது வ.உ.சியின் முடிவு.

ஆகையால், அன்னிபெசன்டோடு இணைந்து திரு.வி.க தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கடுமையாக கண்டித்தார். அவரை ஆதரிப்பது தாய்நாட்டுக்கு செய்கிற பச்சைத் துரோகம் என்று திரு.வி.கவை எச்சரித்தார் வ.உ.சி.

“மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” என்று தொழிலாளர்களிடம் பேசினார் வ.உ.சி. அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும், தனது நண்பர் திரு.வி.க. வையும் கண்டித்தார் வ.உ.சி.

சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி, வெள்ளைக்காரனுக்கு எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதத்திற்கு உண்மையாக நடந்தகொண்ட பாரதி, நீதிக்கட்சியை சபிப்பதற்காகவே தேசப் பற்றாளனைபோல் நடித்தார்.அப்போதுகூட மறந்தும் வெள்ளைக்காரனை விமர்சிக்கவில்லை.

நீதிக்கட்சியின் பார்ப்பன எதிர்ப்பை, சுதந்திரபோராட்ட நிலையில் இருந்தல்ல, ஒரு பார்ப்பானி்ன் நிலையில் இருந்தே கண்டித்தார். அதற்கு அவரின் இந்த வரிகளே சாட்சி.

“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்வும் வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!”

“சென்னைப் பட்டணத்தில் நாயர்கக்ஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான கொள்கைகளில் அபிப்பிராய பேதமிருந்தால், இதை ஜாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப்போட்டு அடிபிடிவரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் ஹிந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள்”

பிராமண சங்க கூட்டங்களில் கலந்து கொண்டு நீதிகட்சியின் கொள்கைகளை நீர் துளி ஆக்கினார் என்று அன்றைய விஜயா பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறது.

வ.உ.சியும் பாரதியும் சுதந்திர போராட்ட காலங்களில் குறிப்பாக வ.உ.சி சிறைக்கு போவதற்கு முன், கருத்து வேறுபாடுகள் அற்ற, நெருங்கிய நண்பர்களாக விளங்கினர். பின் நாட்களிலும் நண்பர்களாக இருந்தாலும் பல கருத்துக்களில் முரண்பாடு கொண்டார்கள்.
‘தமிழில் எழுத்துக்குறை’ என்ற தலைப்பில் ‘சமஸ்கிருத்தைப்போல் தமிழில் உச்சரிப்பு இல்லை. தமிழை சீர் திருத்தவேண்டும். புதியதாக பல புது சொற்களை சேர்க்க வேண்டும்’ என்று ஞானபானு பத்திரிகையில் பாரதி எழுதியதை கண்டித்து வ.உ.சியும் அதே ஞானபானுவில் ‘சில அறிவாளிகள் தமிழை சீர்திருத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் இலக்கணத்தில் முறையான அறிவும் இல்லை. ழ என்ற சொல் தமிழில் மட்டும்தான் இருக்கிறது. அதற்கேற்றார்போல், சமஸ்கிருதத்தை சீர் திருத்துவார்களா?’ என்ற பொருள் படும்படி எழுதினார்.

பாரதி சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் இருந்து விலகி, பிராமண சங்கத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டு பிராமண சங்க மேடைகளில் பேசினார் .

வ.உ.சி. சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டே, நீதிக்கட்சியோடு, பார்பபனரல்லாத இயக்கங்களோடு தொடர்பு வைத்துக் கொண்டார். அவர்களின் மேடைகளில் பேசினார்.

டி.எம்.நாயரின் வீச்சு, தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகளான வ.உ.சியிடமும்., பாரதியிடமும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

1917 லேயே நாயர் இவ்வளவு கறாராக பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு குறித்து பேசியிருக்கிறார். அதே காலகட்டத்தில் வாழ்ந்த பாரதி பார்ப்பன, இந்து மனநிலையோடு வாழ்ந்திருக்கிறார். இத்தனைக்கும் 1919 ல் நாயர் இறந்துவிட்டார். பாரதி 1921 ல் மரணமடைந்தார்.

நமது பாரதி அபிமானிகள், கொஞ்சமும் வெட்கமில்லாமல் இன்னமும் ‘பாரதியின் காலகட்டம் அப்படி’ என்று நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

***

1919 ஆம் ஆண்டு லண்டனில் பார்லிமெண்ட் கூட்டுக் கமிட்டியிடும் சாட்சியங்கள் கூறி தங்கள் கட்சிகளுக்கு ஆதரவு பெற காங்கிரஸ் சார்பில் பாலகங்காதர திலகர் சென்றார். வைசிராய் கவுன்சில் அங்கத்தினராக இருந்த வி.ஜே. பட்டேல், சென்னை சட்டசபை அங்கத்தினர் யாகூப்ஹாசன், ரங்கசாமி அய்யங்கார் மற்றும் பத்திரிகையாளர்களும் சென்றனர். ‘இந்து’ பத்திரிகையின் ஆசிரியர் கஸ்தூரிரங்க அய்யங்கார் என பலர் அங்கு சென்று பேசியும் எழுதியும் வந்தனர்.

நாயர் ஒருவர்தான் பார்ப்பனரல்லாத கட்சிக்காக லண்டனில் சென்று வேலை பார்த்தார். சர்க்கரை வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாயர் படுத்த படுக்கையாகிவிடுகிறார். கூட்டுக் கமிட்டியிடம் சாட்சியம் அளிப்பதற்கு முன் நீதிக்கட்சியின் சில தலைவர்கள் லண்டன் போய் சேர்ந்தார்கள்.

ஆனால், கூட்டுக் கமிட்டியிடம் சாட்சியம் அளிப்பதற்கு ஒருநாள் முன்பு (17-7-1919) நோய்வாய்பட்டு லண்டனிலேயே இறந்துவிட்டார் நாயர். இறுதி ஊர்வலம் லண்டன் நகரில் கோல்டன் கிரீன் என்ற இடத்தில் நடந்தது. இங்கிலாந்து மற்றும் பிரான்சில் இருந்து வந்திருந்த நாயருடைய வெள்ளைக்கார நண்பர்களும் நீதிக்கட்சி தலைவர்களும் சில காங்கிரஸ் பிரமுகர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். நாயரின் நெருங்கிய நண்பரான ‘இந்து’ கஸ்தூரிரங்க அய்யாங்கார் லண்டனில் இருந்தும் கலந்து கொள்ளவில்லை என்பது எல்லோராலும் வருத்ததோடு பகிர்ந்துகொள்ளப்பட்டது.

லண்டனில் நாயர் நோய்வாய்பட்டிருந்தபோது, சென்னையில் ‘நாயர் இறந்து விடவேண்டும்’ என்று சிறப்பு யாகங்களை பார்ப்பனர்கள் நடந்தி இருக்கிறார்கள்.

பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு அரசியலின் சரியான, துல்லியமான, வீரியமிக்க வடிவம் நாயரிடம் இருந்துதான் தொடங்குகிறது. நாயரை புறக்கணித்து இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு அரசியலை பேச முடியாது. தமிழர்களின் வரலாற்றை எழுதவும் முடியாது.

‘ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா….


ஒவ்வொரு முறையும் சாமியார்கள் பெரியார் தொண்டர்களின் வேலையை குறைக்கிறார்கள் அல்லது பெரியார் தொண்டர்களின் பேச்சுகளுக்கு ஆதராமாக விளங்குகிறார்கள்.

பத்து மாநாடுகள், 1000 தெருக் கூட்டங்கள் நடத்தி அம்பலப்படுத்த வேண்டிய செய்தியை, தங்களின் கட்டுப்படுத்த முடியாத அல்லது கட்டுக் கடங்காத லீலைகளின் மூலம் அவர்களே அம்பலமாகிறார்கள்.

குமுதம் என்கிற பலனா பத்திரிகையில் ‘கதவை திற காற்று வரட்டும்’ என்று ஆன்மீக தொடர் எழுதி ஆத்மாவை தொட்டு எழுப்பிய நித்தியானந்தம் சுவாமிகள், குமுதம் போலவே அந்தரங்கத்தையும் தட்டி எழுப்புகிற ஒரு வயகார சாமியார்தான் என்று மலையாள பிட்டு பட போஸ்டர் பாணியில் நடிகையுடன் ‘ஆழ்ந்த தியானத்தில்’ இருக்கும் படங்களை வெளியிட்டு இருக்கிறது தினகரன் நாளிதழ்.

நடிகையின் நற்பெயருக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்காக அவர் பெயரையும், படத்தையும் மறைந்து வெளியிட்டிருக்கிறது தினகரன். (யோவ், போயா…. அந்த நடிகை டி.வி. தொடரில் கற்பை வலியுறுத்தி குடும்ப பாங்கான கேரக்டரில் நடிக்கிற நடிகையா இருந்து, அதன் மூலம் அந்த தொடருக்கான ரேட்டிங் எறங்கி போச்சுன்னா… நீயா பதில் சொல்லுவே?)

‘அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பத்தெட்டு அருவா’ என்கிற பாணியில் ஜெயெந்திரன் போன்ற கிழடுகளே, ‘நேத்து… ராத்திரி…. யம்மா…’ பாணியில் ஏகப்பட்ட பெண்களோடு உல்லாசமாக ‘இருக்கும்’ போது, இளமை ஊஞ்சலாடும் நித்தியானந்தம் போன்றவர்கள் என்ன இளிச்சவாயர்களா? ‘இளமை இதோ… இதோ…’ என்று ‘இருக்க’ மாட்டார்களா? அதான் ‘இருந்து’ ட்டாரு.

அதுக்காக பக்தர்கள், ‘இனி சாமியாரே வேண்டாம், சாமியே போதும்’ என்று ஒதுங்கிவிடுவார்களா? அப்படியிருந்தால், பிரேமானந்தாவிற்கு பிறகு சாமியார்களே தமிழகத்தில் உருவாகி இருக்க முடியாது.

ஆனாலும், இப்போதெல்லாம் முன்பைவிட அதிகமாக, வசதியாக, நவீனமாக மல்டிநேஷ்னல் கம்பெனிகளின் ‘ஆசிர்வாதம்’ பெற்ற பணக்கார சாமியார்கள் உருவாகிறார்கள். அமெரிக்காவில் ஆசிரமம் வைத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளைபோல் ‘தனககுப் பிறகு தன் மகன்’ என்று பக்தி தொழில் நடத்தி, என்ஜினியரிங் கல்லூரி நடத்தி சம்பாதிக்கிறார்கள்.

‘தர்மம் பண்ண புண்ணியம்’ என்கிற நம்பிகையையும் உடைத்து, பக்தர்களிடம் இருக்கும் பத்து ரூபாவைக்கூட தங்களின் நன்கொடை, செல்போன் டோக்கன், புத்தக விற்பனை என்று புடுங்கிக் கொண்டு, உள்ளே எளிய மக்களான பிச்சைக்காரர்களை கூட அனுமதிக்காமல், தங்கக் கோயில் கட்டி ‘ரிசார்ட்’ டைப்போல் கோயில்களை, மடங்களை நிர்வகிக்கிறார்கள்.

இப்படி வெள்ளைக்காரனையே ஏமாற்றி சம்பாதித்த சாமியார்களும் இருக்கிறார்கள். இதில் பார்ப்பான் பார்ப்பனரல்லாதவன் என்ற பேதமில்லாமல் ஒற்றுமையாய் கொள்ளை அடிக்கிறார்கள்.

அப்படி கொள்ளையடித்து மாட்டியிருக்கிறான் ‘கல்கி பகவான்’ என்ற ஒரு ஹைடெக் சாமியார்.

எது எப்படியோ? தொடர்ந்து இந்து மதத்தை அம்பலப்படுத்தும் பிரேமானந்தா, ஜெயெந்திரன், தேவநாத குருக்கள், நிந்தியானந்தம், கல்கி போன்றவர்களுக்கு, பெரியார் தொண்டன் என்கிற முறையில், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘மாட்றவரைக்கும் சாமியார், மாட்டிக்கிட்ட போலிச் சாமியார்’ என்கிற முறையில் தங்களின் பக்தியை சாமியார்களின காலடியில் தேடிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்காக…… என்ன சொல்றது?

நீங்க நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கிற சாமியாரின் லீலைகள், மோசடிகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். ஏன் என்றால், மோசடிகளும், லீலைகளும் செய்யாத சாமியார் எவனும் கிடையாது.