ஜோதிடம் விஞ்ஞானமா?


நம் நாட்டின் எந்த ஊடகமாக இருந்தாலும் சரி அதில் நிச்சயம் சினிமா அதை விட்டால் ஜோதிடம் தான் பெரும்பாலும் நிரம்பியிருக்கும். ஜோதிடத்தால் நன்மையோ இல்லையோ கெடுதல் நிச்சயம் என்று தெரிந்தும் பெரும்பாலான படித்த மக்கள் கூட நம்புகிறார்கள். காரணம் ஜோதிடத்தை பக்தியோடு பின்னியதால் அதன் நம்பகத்தன்மையை கேள்வி கேட்கும் துணிவு பலருக்கும் இல்லை. இரண்டாவது எதிர்காலத்தை அறியும் மனித விருப்பமும் காரணம். ஜோதிடத்தை பற்றிய ஒரு் பாமரனின் பேட்டி இது. படித்தவர்களுக்கு பயன்படும்.

ஜோதிடம் எப்போது தோன்றியது?
அது ஆச்சுங்க .ரொம்ப காலமா இஸ்டரியெல்லாம் உண்டாவறதுக்கு முந்தியே சோசியம் இருக்குங்க. பெரும்பாலான மக்களுக்கு சுயமாய் யோசிக்கிற பழக்கம் கிடையாதுண்ணு எப்போ கொஞ்ச பேருக்கு தெரிஞ்சு போச்சோ அப்பவே சோசியத்தை உண்டாக்கிட்டானுங்க.

ஜோதிடம் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளது?
பெரிய பெரிய மன்னருங்க அறிவாளிங்க கூட சோசியத்த நம்பியிருந்திருக்காங்க. ஏன் இப்ப கூட பெரியஅரசியல் வாதிகள் முதக்கொண்டு அன்னாடம் சோத்துக்கே வழியில்லாதவனும் சோசியத்த தானே நம்புறான் ? எலெக்சனில நிக்கிற பத்து பேரும் சோசியக்காரண்ட கேட்டுபுட்டு தான் டெப்பாசிட் கட்டுறான் . ஆனா ஒருத்தன் தான் செயிக்கிறான்.ஆனா சோசியக்காரன் மட்டும் எப்பவும் டெபாசிட் இழக்கிறதில்லை.

காலைல காப்பி குடிக்கிறதுக்கு முன்னே காலண்டரை பார்த்து அது பேதியாகுமா? வாந்தியாகுமான்னு? பலன் தெரிஞ்சுகிட்டுதான் குடிக்கிறான். எந்த பேப்பரை பிரிச்சாலும் எல்லா பக்கமும் சோசியமும் மூலையிலே துக்குனூண்டு செய்தியும் தான் இருக்குது. டிவியத் திறந்தா கடக ராசிக்காரர்களே இன்னைக்கு நீ காலி. தண்ணி லாரியிலே கண்டம் இருக்குண்ணு பீதிய கிளப்புராங்க.என்னென்னமோ கல் எல்லாம் விக்கிறாங்க வீடு கட்டுற செங்கல்ல விட சீப்பாத்தான் இருக்கு. பெரிசா கல் வச்ச மோதிரம் அரசியல் வாதிகளுக்கு நல்லதாம். எப்படியோ தலையில அம்மிக்கல்லை வச்சு மொளகாய் அரைக்காம இருந்ததா சரி.

ஒரு ரகசியம் சொல்றேன் .யாருகிட்டேயும் சொல்லாதீங்க.சோசியத்தை நம்பாதவனும் சோசியகாரனும் கொஞ்சூண்டுதான்.சோசியத்த கண்ண மூடி நம்புறவனும் அப்படி நம்புறவனை எப்படியெல்லாம் ஏமாத்தி காசு சம்பாதிகலாம்னு கணக்கு போடறவங்கதான் இந்த உலகத்தில மெஜாரிட்டி ஆளுங்க. ஆமா நீங்க எந்த கட்சி?

பல வகையான ஜோதிடம் இருக்கிறதே எது சரியானது?
ஒருத்தனை பத்தி இன்னொரு சோசியக்காரன் கிட்ட கேட்டா இவனது தான் சரி மற்றது பொய்யின்னுவான் மொத்தத்தில எல்லா சோசியக்காரங்க கிட்ட கேட்டு ஒரு முடிவுக்கு வந்தால் எல்லாம் பித்தலாட்டம்னு தெரியும்.

ஜோதிடம் விஞ்ஞானப் பூர்வமானது என்கிறார்களே?
அக்காங். .அப்படித்தான் இருந்துச்சு பண்டைய விஞ்ஞானிகள் தூர தர்சினி வச்சு வானத்தையும் கிரகங்களையும் ஆராய்ஞ்சு பருவ காலங்களை கணிச்சாங்க. விவசாயிகள் கூட மேகத்தயும் காத்தையும் வச்சு மழை வருமாண்னு யூகிச்சாங்க. வால் நட்சத்திர வரவு, கிரகணங்கள் எல்லாத்தையும் கணிச்சதுக்கு பேர் அறிவியல். அது தான் இன்னிக்கு வானதுக்குள்ளேயே போய் தேடும் வான சாஸ்திர இயலா வாளர்ந்து நிக்குது. விஞ்ஞானங்கிறதை கரெக்டா கட்டம் கட்டிப்புடலாம். எப்ப வேணாலும் யாரும் அதை நிரூபிச்சு இது இது இப்படிதான் ரிசல்ட் வருமின்னு துல்லியமா சொல்லிப்புடலாம்.
எப்போ சோசியக்காரங்க தூர தர்சினியை தூக்கி தூரப் போட்டு பூதக்கண்ணாடியை கையில் எடுத்து பிரிய தர்சினி பிரியமா இருப்பாளா? என சொல்லத்தொடங்கினானோ அப்பவே எல்லாரையும் ஏமாத்தத் துணிஞ்சிட்டான். ஆனா அதை ஒரு அறிவியல் மாதிரி பெயின்ட் அடிச்சு வச்சிருக்காய்ங்க. இந்த சோசியருங்க ஜாதகக்கட்டை தூக்கிட்டு போய் அகில உலக அறிவியல் மாநாடுகளில் போய் பிரிச்சு வைக்க வேண்டியது தானே. கட்டங்களை பிரிச்சு மேஞ்சு தீவிரவாதிங்க எங்கெல்லாம் பதுங்கி இருக்காங்க எங்கே எப்ப தாக்குவாங்கன்னு கண்டு பிடிச்சு கொடுத்தா எவ்வளவு உசுருகளைக் காப்பாத்தலாம்.
சுனாமி வந்த போதும் நிலநடுக்கம் வருவதையும் சொல்லாதேன்னு எந்த கிரகம் வந்து வாயைப் பொத்திச்சு. ஏதோ நாலு பேர் படிக்கிற துக்கடா சோசியப்புத்தகத்தில பத்து எழுதி ஒன்னுநடந்திச்சுன்னா ஆஹா ஒஹோ நா அப்பவே சொன்னேனில்லையா என சவுண்ட் விடுவார்கள். சொன்னது நடக்கமால் போனால் எவன் அந்த கேள்விய எடுத்துகிட்டு போறது. அப்படியே போனாலும் ஜோசியம் பிழைச்சதுக்கு ஆயிரம் காரணங்கள் வச்சிருப்பாங்க.

யாராவது ஒரு சோசியன் தன்னால் நிச்சயமாக எதிர்காலத்தை 100% சரியாக கணிக்க முடியுமின்னு நெனச்சா கீழே உள்ள முகவரியை தொடர்பு கொண்டு
10,00,000 US டாலர்கள் பரிசு பெறலாம் என ஓப்பனா கேட்டுகிட்டிருக்காங்க. முகவரி இதோ http:/www.randi.org. emai:jref@randi.org.
இன்னிய தேதிக்கு அந்த பணத்தை டச் பண்ண ஒலகத்தில ஒரு சோசியக்கரனுக்கும் தில் இல்லே.
விஞ்ஞானத்தில வெளஞ்ச கம்ப்யூட்டரையே ஜோசிய பதிவெழுதவும் அதில் கட்டம் போட்டு ஜோசியம் பாக்கவும் உபயோகிக்கிறதால ஜோசியத்தில் அறிவியல் இல்லாட்டியும் இன்னிக்கு ஜோசியர்கள் அறிவியலை யூஸ் பண்ணித்தான் அறியாமையை பரப்புறாங்க. பலன்களை எதுக்கும் ஒருமுறை கூகிளை கேட்டுட்டுதான் சொல்கிறார்கள். தொலைஞ்சு போன சைக்கிளை கூட மை போட்டு தேடுறவுங்களும் வெற்றிலையாக கூகிள் எர்த் தான் யூஸ் பண்றாங்களாம்.

சில ஜோதிடர்கள் செய்யும் தவறால் சோதிடம் பொய்யென்று அர்த்தமில்லை. சோதிடத்தை முறையாக கற்றவர்களால் எதையும் துல்லியமாக கணிக்க முடியுமாமே?

சோசியக்க்கரன விட தங்க மணிங்க தான் நம்ப மனசுல இருக்கிறத நேக்கா தெரிஞ்சுக்கிறாங்க. அது தான் எப்புடீன்னு புரியல!
எதிர்காலத்த துல்லியமாக கணிக்க ஒருத்தருக்கு முடிஞ்சா அவர்தான் இன்னிக்கு ஒலகத்தில பவர் புல்லு . சரித்திரம் பூரா விஞ்ஞானிகளும், மாவீரர்களும் , மகான்களும் , மாமேதகளும் சர்வாதிகாரிகளும் தான் இருந்திருக்காங்க. சோசியக்காரன் ஒருத்தன் இருந்திருக்கானா?

இன்னிக்கு வரைக்கும் மழை வருமா வராதாண்ணு தெரிஞ்சுக்க டீவி பொட்டியத்தான் பார்க்கிறோம். அட்லீஸ்ட் வானிலை அறிவிப்பளரான யாராவது சோசியக்காரன் இருக்கானா?. அஞ்சுக்கும் பத்துக்கும் கைநீட்டிகொண்டும், நம்மகிட்ட ஜோசியம் பார்க்க வர்ரவன் பணம் தருவனா மாட்டானா?
என்ற சந்தேகத்திலேயே பலன் சொல்லி மனசை குடைசலில் விட்டிற்றாங்க இல்லையா?

ஜோசியக்காரங்களும் ஆஸ்பத்திரிக்கு போறாங்க, ஹார்ட் அட்டாக்கில போறாங்க, கடங்காரங்கிட்டே மாட்டிக்கிறாங்க. எல்லா சோசியரும் என்ன தான் மஹான் மாதிரி பில்டப் கொடுத்தாலும் எல்லாம் செட்டப் தான். சாதாரண மனுசப்பயபுள்ள வாழ்க்கைதான் வாழ்ந்து அல்லாடுறாங்க.

ஜோதிடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்?
யாரு சோசியக்காரனை தேடிப் போவான் ?தன்னம்பிக்க இழந்து வாழ்க்கையில் நொந்து நூடுல்ஸ் ஆகி போனவன் தான் போவான். தன் கஷ்டத்துக்கெல்லாம் காரணம் யாருன்னு ஜோசியனைக் கேட்பான். அவனுக்கென்ன தெரியும்? வேண்டாதவங்க தகடு வச்சதா சொல்வான். அரண்டவன் கண்ணுக்கு கண்டவனெல்லாம் பகை. ஏற்கனவே காப்பிப்பொடி கடன் தராததால பக்கத்து வீட்டுல கடுப்பு. இது வேற சேந்துச்சா அவன்தான் தகடு வச்ச எதிரின்னு தீர்மானம் பண்ணிக்குவான். இவனுக்கு தன்னம்பிக்கை குறைஞ்ச நிலையில் யார் எதை சொன்னாலும் கேள்வி கேட்காமல் நம்பி விடுவார்கள். இவங்கிட்ட ” எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு” என்று சொன்னால் ஜோசியன் பிழைப்பு நல்லாவா இருக்கும்? பக்கத்து வீட்டுக்காரன் மேலயோ சனி யின் மேலோ பாரத்தை போட்டு அதற்கு பரிகாரம் செய்ய சொல்வார்கள். இந்த பரிகாரத்தில் தான் சூட்சுமமாய் பணம் கறந்துடறாங்க. இதுக்கு தெய்வத்தை துணைக்கு கூப்பிட்டு பக்கத்தில வச்சிக்கிடுவாங்க. ஏன்னா ஒருவேளை வந்தவங்க கஷ்டம் தானாவே தீர்ந்திட்டா பரிகாரத்தால் தோஷம் நீங்கியது. இல்லாவிட்டால் பரிகாரத்தை சாமி ஏத்துக்கலைன்னு கூலா கடவுள் பெயரில் பழியை போட்டு விட்டு ஜோசியர் சமர்த்தாக தப்பிக்கலாம்.

ஜோசியம் ஆன்மீகமல்ல. ஏன்னா கடவுளே விதி்யை அமைச்சு அதை மீறுகிற சக்தியை மனிதனுக்கு கொடுக்க முட்டாளா? பரிகாரம் செய்வதால் தான் கடவுள் மனமிரங்கி விதியை மாற்றித்தருகிறான்னு சொன்னா அப்ப்டி இந்த மனுசப்பயபுள்ள ஜோசியம் பார்த்து பரிகாரம் தேடிக்கொள்வான் என முன்பே தெரிந்து பொய்யா ஏன் அப்படி ஒரு முட்டாள் தனமான விதியை கடவுள் அமைக்கிறான். இறைவனால் பரிகாரம் கிடைக்கும் என ஏன் சோசியன் முதல்லையே கண்டுபிடிக்கலே. எப்படியானாலும் ஜோதிடம் இறைவனை கொச்சைப் படுத்தத்தான் செய்யுது. சின்னப்புள்ள தனமால்ல இருக்கு

சில வேளை ஜோதிடத்தில் சரியாக பலன் சொல்லப்படுகிறதே?
சிலவேளை என்ன பல வேளையும் பலன்கள் சரியாகத்தான் இருக்கும். ஆனா அது எப்போதும் செயிச்சா தான் விஞ்ஞானம்.
பொதுவா ஜோசியப் பலன்கள் எலாஸ்டிக் ஜட்டி போல கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி யாருக்கும் போட்டுக்கலாம்.
எல்லாருகிட்டயும் கலகலப்பா பழகும் சுபாவம் அப்படீன்னு ஒரு இடத்தில இருந்தா பிரெண்சுங்க கம்மி தான் வேறோரு இடத்தில இருக்கும் . நமக்கு தேவைப்பட்டதை எடுத்துகொள்ள வசதியாக இருக்கும் படி நேரெதிர் பலன்களை சாமர்த்தியமாக வாக்கியத்தில் பொதிஞ்சு வைத்திருப்பங்க.
ஒரு கருத்து சரியாக இருந்தால் ஆகா ஜாதகத்தில் அப்படியே இருக்கிறதே!என்ற ஆச்சரியம் அதன் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அதனால் அடுத்துள்ள கருத்து தவறாப்போச்சுன்னா அது தமக்கானது இல்லை என்று அதிகம் அலட்டிக்கொள்ளாமல் விட்டு விடுவோம்.
சோசியக்காரங்களுக்கு கொஞ்சம் சைக்காலஜியும் தெரியும் வர்ரவங்க முக பாவத்தை பார்த்தே,போட்டிருக்கிற சட்டை வந்திறங்குகின்ற வாகனம் எல்லாத்தையும் கணக்கிட்டு தான் பலன்களை அடுக்குவாங்க. பிடிச்ச விஷயத்தை பெரிசு படுத்தறதும், அதிகமாக நினைவில் வச்சுக்கிறதும் , சிலாகிப்பதும் தான் மனுச புத்தி. (பார்க்க : Forer effect)
உதாரணமாக என் ஜாதகத்தில் “பேரும் புகழும் பெறுவீர்கள் பெண்களால் அதிகம் விரும்பபடுவீர்கள் “என்று இருந்தது . எனக்கு திருப்தியாத்தான் இருந்துச்சு. என் தங்கமணி அதை படிக்கும் வரை அதில் எந்த பிரச்சனையும் எனக்கு முதலில் தெரியல. அப்புறம் வில்லங்கமாயிற்று. என் நிம்மதி போச்சு.
அப்புறம் எனக்கு கணிதத்துறையில் நாட்டமதிகமாம் .பலன் சொல்றான் .ஆனால் கணக்குன்னாலே எனக்கு அலர்ஜி.ஆனால் எனக்கு பிடித்த கணினியை தான் அது சொல்றதுன்னு தேத்திக்கிட்டேன்.
ஆனா பாட்டி ஜாதகத்துக்கு கல்யாண பலன் வந்த போது ப்பூ..பொழப்பு சிரிக்கிறது

கிரகங்கள் என்ன செய்யும்?


கிரகங்கள் நம்மை பாதிக்கிறது உண்மைதான் .பூமி சுத்தறதால தான் இரவு பகல், பருவ காலம்,நில நடுக்கம் சுனாமி எல்லாம் .சூரியனாலதான் உலகத்துக்கு எல்லா சக்தியும் கிடைக்குது.ஆனா பில் கேட்ஸ் ஆறதுக்கு அம்பானியாறதுக்கும் கிரகம் தான் காரணம்னு சொன்னா எப்படி? தனிப்பட்ட ஒரு மனிதன் வாழ்வில்கிரகங்கள் உண்டாக்கும் மாற்றம் பற்றிய அடிப்படையில்லாத பழைய ஜோதிடக் கருத்துகளும், பிழைப்புக்காக அதை விடாப்பிடியாக பரப்பி ஒரு கூட்டம் மக்களை இருட்டில தள்ளுறது தான் வருத்தமான விஷயம்.

வானத்துல கிரகங்களும் நட்சத்திரங்களும் தனியாக அது பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருப்பது போல தெரிந்தாலும் ஒரு கடிகாரத்தின் பற்சக்கரங்கள் போல கண்ணுக்குத் தெரியாத ஈர்ப்பு சக்தியால் கை கோர்த்துக்கொண்டு தான் சுற்றுகின்றன. துணைக்கோள்கள் கோள்களை சுற்றுகின்றன.கோள்கள் சூரியனை சுற்றுகின்றன. எல்லாம் சேர்ந்தது தான் சூரிய மண்டலம். சூரிய மண்டலத்தின் சக்தி ஆதாரமே சூரியன் எனும் நட்சத்திரம் தான். கிரகங்களுக்கு சுய சக்தி கிடையாது.

இது போல் சூரியனுடன் சேர்த்து கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஒரு பெரிய சக்தி மையத்தை சுத்தி வருது. இதை பால் வெளி(milky way) ங்கிற கேலக்ஸி என்கிறோம். இது போல பல்லாயிரம் கேலக்ஸிகள் பிரபஞ்ச மையத்தை சுத்துது. இது நா சொல்லலே NASA சொல்லுது.

வானத்தை அண்ணாந்து பாத்தா தெரியற நட்சத்திர கூட்டங்களை இந்த ஜோதிடர்கள் பன்னிரெண்டு ராசியா பிரிச்சு அடுக்கிட்டாங்க. இந்த ராசிங்க எந்த ஷேப்ல அன்னிக்குள்ள ஆளுங்களுக்கு தெரிஞ்சுதோ அதுக்கேத்த மாதிரி ஆடு மாடுன்னு எல்லாம் பேர வச்சுகிட்டாங்க. அதுக்கப்புறம் ஒவ்வொரு நட்சத்திரங்களை கூட இது ஆம்பளை நட்சத்திரம் இது பொம்பள நட்சத்திரம் இது அலி ன்னு நுணுக்கமா பாத்து கண்டு பிடிச்சிட்டாங்க. விட்டாங்களா? அதுக்கு ஜாதி வேண்டாமா? குரு சுக்கிரன் பிராமணராகவும், சூரியன், செவ்வாய் சத்திரியனாகவும், சந்திரன், புதன், வைசியனாகவும், சனி சூத்திரனாகவும், இவைகளுக்கு தனித்தனி மொழிகளையும் தந்திரமா வகுத்து வச்சிட்டாங்க. அதோட ஒருத்தன் பொறந்த ராசி எதுவோ அதுங்கணக்கா குணமும் இருக்குமாம். மாட்டு ராசின்னா மாட்டு குணம். எப்பூடி?தராசு போல இருக்கிற துலாம் காரங்க நீதிபதியாக சான்ஸ். டாக்ட்ருக்கு சிரிஞ்ச் ராசி இருக்காண்ணு கேட்காதீங்க.

ஒரே ராசியில இருக்கிற நட்சத்திரமெல்லாம் ஒரு இடத்திலா இருக்கு? இல்லை ஒன்னுகொண்ணு பல்லாயிரம் ஒளிவருச தூர வித்தியாசம் இருக்கு.தூரத்தில வர்ர ஆளையும் ரொம்ப ரொம்ப தூ……ரத்துல வர்ர ஆளையும் ஒரே திசையில பார்த்தா அப்பாவும் புள்ளையின்னா சொல்ல முடியும். ஆனா ஒரே ராசியா சொல்றாங்களே.

பூமத்திய ரேகையிலிருந்து பார்க்கும் போது நட்சத்திரங்கள் நேராக நகரும் பூமியின் அச்சான துருவங்கள்ள இருந்து பார்த்தா அது சுத்துவது போலிருக்கும். அதாவது நமக்கு சூரியன் சுள்ளென்று நடுமண்டைய தடவிக்கிட்டு கிழக்கே இருந்து மேக்கால போகும். ஆனா துருவத்துல நாய்குட்டி மாதிரி தொடு வானத்துல சுத்தி சுத்தி வரும். இதனால நிலநடுக்கோட்டுக்கு வடக்கே அலாஸ்க்கா, நார்வே, பின்லாந்து, கிறீன்லாந்து போன்ற நாடுகளில் சோசியம் வேலை செய்யாது. காரணம் பகல் இரவுகள் பல கிழமைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது. இதனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அடிவானத்தில் 2 மணிநேரம் ஒரு இராசி என எழும் இராசி மண்டலங்களையும் கோள்களையும் பார்க்க முடியாது. இதனால் சோதிடத்தின் அடித்தளமே ஆடிப்போய் விடுகிறது.

ஜோதிடர்கள் நம் வானத்த பார்த்து தான் தான் கிரக அமைப்பை கணிக்கிறார்கள். அதனால் மற்ற கிரகங்க்ளோடு பூமியும் சூரியனை மையமாக சுற்றுகிற உண்மையை மறந்து விடுகிறர்கள். உதாரணமாக ஜன்னல் வழியே வெளியே பார்க்கும் போது எந்த வாகனம் எந்த திசையில் நம்ம்மைக் கடந்து செல்கிறது என்று குறிப்பெடுத்து கொள்கிறோம். ஆனால் நாம் இருப்பது ஒடிக் கொண்டிருக்கும் ஒரு வாகனமாக இருந்தால் அந்த குறிப்பில் என்ன பயன்? இப்போது சொல்லுங்கள் நம் ஜோதிடக் கணக்கு எந்த அளவு உண்மையாக இருக்குமென்று.

நல்லதோ கெட்டதோ நேரடியாக நம்மை அதிகம் பாதிப்பது சூரிய சக்தி அதாவது நம்ம ஸ்டேட் கவர்ண்மென்ட் மாதிரி (ஸ்.. கண்டிப்பாக பாலிடிக்ஸ் இல்லை) அப்புறம் மில்கி வே செண்ட்ரல் கவர்ன்மென்ட் மாதிரி. மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் பக்கத்து ஸ்டேட் மாதிரி. முல்லை பெரியாறு , காவிரி போன்ற பெரிய பிரச்சனை யெல்லாம் கிளப்பாது. கிளப்பினாலும் ஜோசியத்துக்கு உதவாது காரணம் நமக்கு பக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஒளியே நம்மை அடைய 50 ஒளி வருசம் ஆகும் அதாவது நாம் பொறக்கிறப்ப உள்ள நட்சத்திர பலன் ரிடையர்ட ஆகும் போது தான் வரும். ஓர் ஒளி ஆண்டு தூரம் கிட்டத்தட்ட 9.5 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரமாகும். கணக்கு போட்டு பாருங்க நம்ம வாழ்கைய பாழாக்கிறதுக்கு இவ்வளவு தூரத்திருந்து ட்ராவல் பண்ணி ஆள் வரணுமா?நாமளே போதாது? டீடெய்லா வேணும்னா இங்கே பாருங்க.

கோளகள் ஒவ்வொரு ராசி மண்டலங்களா சும்மா போய ரெஸ்ட் எடுத்திகிட்டு சுத்திகிட்டு இருக்காம். நட்சத்திரங்கள் இருக்கிறது பல நூறு அல்லது ஆயிரக்கணக்கான ஒளி வருசங்களுக்கு அப்பால இதில சந்திரன் பூமித்தாய் முந்தானைய பிடிச்சுட்டு சுத்துது மத்த கிரகங்கள் தேமேன்னு அது பாடுக்கு சூரியனை சுத்துது . இது எப்போ விருந்துக்கு போச்சு. அதெல்லாம்இல்ல இந்த கிரகங்கள் அந்த ராசிகள்ள இருந்து வர்ற சக்திய ரிப்ளெக்ட் பண்ணுதாம் அதை தான் இப்படி சொல்றாங்களாம். இருக்கட்டும் இருக்கட்டும். அப்போ பக்கத்தில சூரியன் இருந்துகிட்டு நடு மண்டைய பொளக்கிறதே இதும் சக்தியும் எங்கியோ இருந்து வரும் துக்கினியூண்டு நட்சத்திர சக்தியும் ஒண்ணா?

ஜோதிடத்தில் எல்லா கோள்களையும் கணக்கில் எடுப்பதில்லை ஆனால் சூரியனை சந்திரனை மட்டுமல்ல ராகு கேது இல்லாத கிரகத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.நிஜ கிரகத்துக்கும் இதுக்கு சம்பந்தமில்லை கண்ணுக்கு தெரியாத சக்தி மண்டலங்களைத்தான் கணக்கில் கொள்கிறோம்னு சொன்னாலும், அதை கணக்கில் எடுக்காத அறிவில தரும் வானியல் தகவலகளக் கொண்டு தான் பஞ்சாங்கள் திருத்தி வெளியிடுகிறர்கள்.

ஒரு வாதத்துக்கு இதையெலாம் சரின்னு வச்சாலும் எல்லா மக்களையும் ஒண்னா தானே கிரகம் புடிக்கணும்?.ஏன் ஒவ்வொருத்தனையும் ஒவ்வொரு மாதிரி போட்டு தாக்குது?அது அவிங்க அவிங்க பொறந்த நேரமாம். அந்த நேரத்து கிரகங்க பொஸிசன் எப்படி இருக்கிறத கட்டங்களா வரைஞ்சு வச்சு அது தான் ஜாதகம் . ஆனா இந்த கவுண்ட் டவுன் ஏன் குழந்தை பிறந்ததும் ஸ்டார்ட் ஆகுது ? எப்படி அது தனிப்பட்ட் வாழ்வில் பாதிக்கிறது என்பது யாருக்கு தெரியும்.

நியாயப்படி குழந்தை பிறக்கிறதுக்கு ஒன்பது மாசத்துமுன்னே தனி உயிராக தோன்றி விடுகிறது. முதல் செல் தனக்கே உரிய குரோம்சோம்கள் ஜீன் அமைப்புகளோடு உருவாகும் போது அது தனி உயிர் ஆகி விடுகிறது. வயித்தில இருக்கிற குழந்தை இந்த உலகத்தில் இல்லையா? கிரகங்கள் பாதிக்காதா?
நண்பன் சொல்றான் கல்யாண டேட்டை வச்சு கணிச்சாதான் சரியா வருமாம். ஏன்னா அதுக்கப்புறம் கிரக பாதிப்பு கடுமையா இருக்காம்.

பிற கிரகங்களின் ஈர்ப்பு விசை ஒன்றுமே இல்லை எனும் அளவு பூமியின் ஈர்ப்பு விசை தான் அதிகம் பாதிக்கிறது. ஆனா காலடியில இருக்கிற பெரிய பூமிக்கிரகம் பத்தி ஜோதிடம் கண்டுகொள்ளவில்லை. ஏன்? ஹையித்தி மக்களை அந்த கிரகம் விழுங்கப் போறதை ஏன் அறிய முடியல? நட்சத்திரங்களின் ரேடியேசன் பாதிக்கிறது என்றால் அதை விட மிக மிக அதிகமான ரேடீயசனை சூரியன் சுள்ளென்று தருகிறது .

சோதிட முறைகளிலெயே பல வகை இருக்கிறது.அதுவே ஒன்றை யொன்று பொய்யாக்கிடுது. பலன் சொல்றதுக்கு இதுல நெறய கணக்குகள் சிஸ்ட்மெல்லாம் இருக்கு மெனக்கெட்டு எல்லாம் எல்லாம் படிச்சா எப்படி வேணும்னாலும் பலன் சொல்லலாங்கிற அளவு தெளிவாய் குழப்பியிருப்பாங்க.

மொத்தத்தில ஜோதிடத்தை பற்றி ஒரே வரியில் சொன்னால்
பில்டிங் ஸ்டாங்காத்தான் இருக்கு பேஸ்மென்டு வீக்கு.