தமிழன் என்று சொல்வது வெட்டிப் பெருமை: ஆதவன் தீட்சண்யா


நேர்காணல்: மினர்வா & நந்தன்

ஒரு படைப்பாளி தனது படைப்பில் என்ன சொல்கிறாரோ, அதற்கு நேர்மையாக வாழ முடிகிறதா? அதற்கான சூழல் இங்கு இருக்கிறதா?

எதை எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்தது அது. ஒருவரது மனக்கிளர்ச்சிகள், அனுபவங்கள் தான் எழுத்தாகிறது. இந்த அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக கிடைப்பதற்கு காரணமாக இந்தியச் சமூகத்தில் சாதியும் பாலினமுமே இருக்கிறது. எனவே எழுதும்போது அவர் தனக்கான அடையாளங்களை நிராகரித்துவிட்டு எழுதுகிறாரா அல்லது புது அடையாளங்களை உருவாக்கிக் கொண்டு எழுதுகிறாரா, பிறப்பின் அடிப்படையில் தன்மீது சுமத்தப்பட்டிருக்கிற அடையாளங்கள் பற்றி அவருக்கு என்ன மதிப்பீடு இருக்கிறது என்பதெல்லாம் படைப்புக்குள் வந்துவிடுகிறது. அதை அவரால் மறைக்க முடியாது. அதனால் ‘தான்’ என்று எழுதும்போது, அவர் தன்னை மட்டும் குறிப்பிடுகிறாரா, அல்லது தான் சார்ந்த சமூகப் பிரிவையும் குறிக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவை முன்னிறுத்தி ‘தான்’ என்று எழுதுகிற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். சாகும்வரை தனிநபராகிய தன்னை மட்டுமே முன்னிறுத்தி எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். சொந்த அடையாளங்களைக் கொண்டாடுவது அல்லது மறைப்பது/துறப்பது என்ற எதிரெதிர் நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாழ்வதற்கு விதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் கலை இலக்கியவாதி மட்டும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

இரண்டு விஷயங்களை இந்த இடத்தில் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். சமீபத்திய தீராநதி இதழில் நாகார்ஜூனனின் நேர்காணல் வெளியாகியிருந்தது. அதில் அவர் ‘என் அம்மா ஜெயகாந்தன் எழுத்தை விரும்பி படிப்பவர், என் தாத்தா வள்ளலாரை கரைத்துக் குடித்தவர், என் மாமா இன்னின்னாரோடு தொடர்புடையவர்’ என்பதாகவெல்லாம் குறிப்பிட்டிருந்தார். அவரது வாசிப்பு, சிந்தனை, எழுத்து முயற்சிகளுக்கு ஒரு பாரம்பரிய வேர் இருப்பதை நிறுவியிருந்தார். ஒருவகையில் கருவிலே திருவுடையோனாக காட்டிக்கொள்ளும் முயற்சியும் இயல்பாக வந்துவிடுகிறது. அதாவது நாகார்ஜூனன் தன் அம்மா, தாத்தா, மாமாவின் தோள் மீது ஏறி நின்று பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் இப்பேர்ப்பட்ட பரம்பரையாக்கும் என்கிற கித்தாப்பு அவரையறியாமலே வெளிப்படுகிறது.

அதே இதழில், ஜீவசுந்தரி எழுதி பரிசல் வெளியீடாக வந்திருக்கும் மூவலூர் ராமாமிர்தத்தின் வாழ்க்கை வரலாறு நூலுக்கான விமர்சனமும் வெளியாகியிருக்கிறது. தன் காலத்தின் கலகக்காரராக வாழ்ந்த அவரது வாழ்க்கை இன்றைக்கும் பெரும் படிப்பினைகளைத் தரும் விதத்தில் ஜீவசுந்தரி எழுதியிருக்கிறார். ஆனால், ‘தமது முன்னோர்கள் தேவதாசிகளாக இருந்தனர், தங்களது குலப்பெருமை கொண்டாடத்தக்கதாக இல்லை’ என்பதால், வெளியான புத்தகப்பிரதிகள் மொத்தத்தையும் ராமாமிர்தம் அம்மையாரின் தற்போதைய வம்சாவளியினர் வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இப்போ விற்பனைக்கு கிடைப்பது அவர்களால் திருத்தித் தரப்பட்ட பதிப்புதான். அவலமான தங்களது முன்னோரின் வாழ்க்கை இந்த சமூகத்தோடு பகிர்ந்து கொள்ளத்தக்கதல்ல என்கிற ஒரு அவமானவுணர்வு அவர்களை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

இதில் அவர்களின் தனிப்பட்ட அவமானம் எதுவுமில்லை. இந்த சமூகம் அவமானப்பட வேண்டிய விஷயம் அது. புத்தகத்தை மொத்தமாக விலைகொடுத்து வாங்கியதன் மூலம் இந்தத் தலைமுறை தன்னுடைய வேர்களை மறைத்துக் கொள்ள விரும்புகிறது. அதேசமயம் நாகார்ஜுனன் தன்னுடைய வேர்களின் பிரபல்யத்தை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அதை அகங்காரமாக அல்ல, வெகு இயல்பாக சொல்கிறார். அவர் பேசுவதிலிருந்து நாங்கள் கல்வி கற்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார். அவர் சொல்லாமல் விட்ட விஷயம், என் அம்மாவும், தாத்தாவும் கல்வி கற்ற அதேநேரத்தில் யாரெல்லாம் கல்வி கற்கவில்லை என்பதைத் தான். இவர்களுக்கு கல்வி கிடைக்கக் காரணமாயிருந்த அதே சாதிதான் மற்றவர்களுக்கு கல்வி கிடைக்காமல் போவதற்கும் காரணமாய் இருந்திருக்கிறது. மூவலூர் ராமாமிருதத்தின் வாழ்க்கை உள்ளது உள்ளபடியே புத்தகமாக வெளிவருவதை அவரது இன்றைய தலைமுறை அவமானமாக கருதுவதற்கும், அவர்களுடைய முன்னோர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் சாதிதான் காரணமாக இருந்திருக்கிறது.

நாகார்ஜுனன் உலக அரசியல் விஷயங்கள் குறித்துப் பேசினாலும் அவர் சாதியின் தோள்மீது நின்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் ‘தான்’ என்றும், தன் அனுபவம் என்றும் பேசியது தன்னுடைய சாதி கொடுத்த அறிவைத்தான். நாகார்ஜூனன் தான் எழுதியதற்கு நேர்மையாக இருக்கிறார் என்றால் இந்த இடத்தில் எது நேர்மை என்ற கேள்வி வருகிறது. அதேபோல் ராமாமிருதம் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு வெளிவருவதைக் கூட மறைக்க விரும்புவதால் அவரது சந்ததியினரின் செயல் நேர்மையற்றதாகி விடாது.

பொதுவாகவே தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் வலியும் வேதனையும் கழிவிரக்கமுமே நிரம்பியிருப்பதாக சொல்லப்படுவதுண்டு. இதிலிருந்து மாறுபட்டு மிகுந்த கோபத்தோடு தனித்து ஒலிக்கிற குரல் உங்களுடையது. மற்றவர்கள் வலியை மட்டுமே கூறும்போது, வலிப்பதற்கான காரணத்தைக் கூறுவது உங்களது எழுத்து. பிற தலித் எழுத்தாளர்களில் இருந்து நீங்கள் வேறுபட ஆரம்பித்தது எப்போது?

தலித் இலக்கியம் என்று ஒன்று தனியாக தோன்றுவதற்குக் காரணமே, ‘இதுவரை நீ எழுதிய எந்த இலக்கியத்திலும் என்னைப் பற்றி எதுவும் எழுதவில்லை’ என்பதுதானே. இதில் அனைவருமே கோபத்தோடு தான் எதிர்ப்புக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். ‘என்னுடைய சேரிக்கு நீ வந்தது கிடையாது, உன் தெருவுக்குள் என்னை நுழையவிட்டதில்லை. நான் உன் தொழுவத்தில், உன் பண்ணையில் வேலை செய்த நேரம் போக என்னுடைய வாழ்க்கை என்ன, என்னுடைய கஷ்டங்கள் என்ன, என்னுடைய கொண்டாட்டங்கள், நம்பிக்கைகள் என்னென்ன என்று எதுவும் உனக்குத் தெரியாது. அப்படியிருக்கும்போது என்னைப் பற்றி நீ எழுதுவதாகச் சொல்வது வெறும் பம்மாத்து. அதில் எந்த நேர்மையும் கிடையாது. உனக்குத் தெரிந்ததை நீ எழுதிக்கொள். என் வாழ்க்கையை நான் எழுதிக் கொள்கிறேன்’ என்ற மீறலில் தான் தலித் இலக்கியமே வருகிறது.

தலித் எழுத்துக்கள் எல்லாமே இப்படியிப்படித்தான் இருக்கும் என்று பொத்தாம்பொதுவாக வகைப்படுத்திவிட முடியாது. நிலவும் சமூக அமைப்பு எல்லா மட்டத்திலும் ஏற்றத்தாழ்வை கடைபிடிக்கிறது. சகமனிதனை ஒருபோதும் சமமாய் பார்க்க அனுமதிக்காத அதன் அடிப்படை சாதியத்திற்குள் புதைந்து கிடக்கிறது. சமத்துவமின்மையை நியாயப்படுத்துவதாக சாதியடுக்கு அமைந்திருக்கிறது. இதை அம்பேத்கர் பன்மப் படிநிலை அடுக்கு என்கிறார்.

இந்த அடுக்கு குலையாமல் நீடிக்க ஒடுக்குமுறை கையாளப்படுகிறது. ஒரு தளத்திலோ ஒரு முனையிலோ இல்லாமல் ஒடுக்குமுறைங்கறது அரசியல், பண்பாடு, பொருளாதாரம், கலை, இலக்கியம்னு வாழ்க்கையோட எல்லா மட்டத்திலும் நிலவுது. நுட்பமாகவும் வெளிப்படையாகவும் பல்வேறு வடிவங்களில் நிலவுகிற சாதியடுக்குமுறையைப் புரிந்துகொள்வது, அதிலிருந்து விடுபடுறதுக்கு எத்தனிப்பது, அதை கலைஇலக்கியப் படைப்பாக மாற்றி சமூகத்தின் மனசாட்சியோடு உரையாட வைப்பது- இதுதான் இப்ப தலித் படைப்பாளிகளோட முன்னுரிமைக் களம். இதுபற்றி ஒருவருக்கு என்ன புரிதல் இருக்கிறதோ அதைப் பொறுத்து அவரோட படைப்புகள் வரும். அதுவுமில்லாம, ஒருத்தர் என்னவாக இருக்கிறாரோ அதுவாகத்தானே வெளிப்பட முடியும்?

போன தலைமுறைவரைக்கும் இந்த வாழ்க்கையை சகித்துக் கொண்டுதானே வாழ்ந்தது? தங்களைத் துன்புறுத்தவும் அவமதிக்கவும் அவனுக்கு சலுகை இருக்கிறது என்றுதானே நினைத்திருந்தது? ஆனால் எல்லாக் கொடுமைகளையும் ஏத்துக்கிட்டதா அதுக்கு அர்த்தமில்ல. தனக்கு வலிப்பதை வெளியே சொல்வதற்கே இன்னொருத்தர்கிட்ட அனுமதி வாங்க வேண்டியிருந்த ஒரு சூழ்நிலையில் தன்னோட வலியை வெளியே சொல்வதே ஒரு மீறல்தானே? என்னை யார் அடித்தது, அதற்கு யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது, என்னை அடித்தால் நானும் திருப்பி அடிப்பேன் என்பதெல்லாம் அதற்கு அடுத்த குரல்தான்.

‘யார் என் முகத்தின் மீது சிறுநீர் கழித்தது, யார் நான் வாழ்வதற்கான நிலத்தைப் பறித்தது, யார் நான் இறந்த பின்னரும் என் சுடுகாட்டை மறித்தது, யார் என் வீட்டுப் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியது’ என எல்லாமே தெரிந்திருக்கும் தான். ஆனால் அதை எழுதுவதற்கு அக எழுச்சி மட்டும் போதாது, புறச்சூழ்நிலையும் சாதகமாக இருக்க வேண்டும். அதற்கு என் அகச்சூழலை புறச்சூழலோடு பொருத்திக் கொள்ள வேண்டும் அல்லது என் புறச்சூழலை அக எழுச்சியோடு இணைத்துக் கொள்ள வேண்டும். இடையறாத ஒரு processல் தான் இது நடைபெறும்.

உதாரணத்துக்கு திண்ணியம் கொடுமை. ‘எப்பேர்ப்பட்ட மாண்பும் நாகரீகமும் நிறைந்த சமூகமாயிருக்கிறது இது’ங்கிறதை வெட்டவெளிச்சமாய் அம்பலப்படுத்திய கொடுமை அது. இப்படிப்பட்ட கொடுமைகளை நிகழ்த்துறது மூலமா தன்னோட கீழ்மைகளை இந்த சமூகம் வெளிப்படுத்திக்கிட்டே இருக்கு. எனவே ‘எனக்கு இந்தக் கொடுமைகள் நடைபெறுகிறது’ என்பதை வெளியே சொல்வதும் புலம்புவதும் எனக்கு அவமானம் கிடையாது. அது இந்த சமூகத்திற்கான அவமானம்.

‘மலத்தைத் தின்கிற நாயும் பன்றியும்கூட ஒருநாளும் தன்னோட மலத்தைத் தின்னாது. ஆனால் திண்ணியத்தில் ஒரு தலித் வாயில் மலத்தை திணிச்சிட்டீங்களே’ என்று புலம்பி ஒருத்தர் கதையோ கவிதையோ எழுதினால் அது வெறும் புலம்பல் அல்ல. இந்த சமூகத்தின் மீது வாசிக்கப்படும் குற்றப்பத்திரிகை. இதனால் இந்த வகைமை எழுத்துக்களும் தேவைதான்.

அதேநேரத்தில் இப்ப திண்ணியம் வழக்கில் தீர்ப்பு வந்திருக்கு. ஆயிரத்தெட்டு வியாக்கியானங்கள் சொல்லப்பட்டாலும் தீர்ப்போட சாரம் சாதிவெறியர்களுக்கு சாதகமானதுதான். அப்ப, இனிமேல் யார் வேண்டுமானாலும் எவன் வாயிலும் எதை வேண்டுமானாலும் திணிக்கலாமா? அப்போதும் கோர்ட் இதேமாதிரி தீர்ப்பு வழங்குமா? ஒருத்தன் வாயில மலத்தைத் திணிச்சதை உங்களால சகஜமா எடுத்துக்க முடியும்னா, ஊறுகாய் மாதிரி கொஞ்சூண்டு மலத்தையும் உங்க சாப்பாட்டுத் தட்டுல வச்சிக்குவீங்களா? என்று கேட்கிற எழுத்தும் தேவை.

அப்படி எழுதுவதற்கு உங்களுக்கு இந்த சமூகத்தின்மீது எந்த பிரமைகளும் இருக்கக்கூடாது. ‘நான் தலைமுறை தலைமுறையாக அடிவாங்கிக் கொண்டிருக்கிறேன். இதற்கு பார்ப்பனீய ஆதிக்கமும், சாதீய அடுக்குமுறையும் தான் காரணம்’ என்பது போன்ற வரலாற்று, அரசியல் காரணங்களைப் பயிலும்போது பிரமைகளை உதிர்த்துவிட்டு வாழ்வின் மூர்க்கத்தை எதிர்கொள்கிற – அதை அப்படியே எழுத்தில் முன்வைக்கிற ஒருவராக எவரொருவரும் வெளிப்படக்கூடும்.

இடதுசாரி இயக்கத்தோடு எனக்குக் கிடைத்த தொடர்புகள், போராட்ட அனுபவம் ஆகியவற்றிலிருந்து உருவான விமர்சனப்பார்வையும் புரிதலும் எனது எழுத்துக்களை வேறொரு வகைமையாக மாற்றியிருக்கலாம். எப்படியாயினும் எனக்கு முன்பு சாதியடுக்குமுறைக்கு எதிராக இயங்கிய – எழுதிய எல்லோரது தோள்மீதும் ஏறி நிற்பதால். நான் ஒருவேளை உங்களுக்கு உயரமாகத் தெரியலாம்.

பார்ப்பன எதிர்ப்பை உங்கள் படைப்புகளில் உக்கிரமாக வெளிப்படுத்தி வருகிறீர்கள். நீங்கள் சார்ந்துள்ள இயக்கங்களில், சக எழுத்தாளர்கள் வட்டாரத்தில் நீங்கள் எப்படி பார்க்கப்படுகிறீர்கள்?

இங்கு உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் எல்லோருமே பார்ப்பனரல்லாதார்தான். (அதையும் வடிகட்டிப் பார்த்தால் தலித்கள்தான்.) தலைமுறை தலைமுறையாக இயற்கையோடு இயைந்தும் மல்லுக்கட்டியும் பெற்ற பாரம்பர்ய அறிவைக் கொண்டு நிகழ்த்தப்படுகிற அவர்களது உழைப்பினாலேதான் சமூகத்தின் தேவைகள் முழுவதும் நிறைவேற்றப்படுகிறது. உடலுக்கு வெளியே மூளையை வைத்தால் எவ்வளவு விகாரமா இருக்குமோ அந்தளவுக்கு விகாரமானதுதான் உடலுழைப்பையும் மூளையுழைப்பையும் பிரிக்கிறதும்கூட. பார்ப்பனர்கள் மொத்த சமூகத்தையும் இப்படி விகாரப்படுத்திவிட்டார்கள்.

உடலுழைப்பை அறிவிலிருந்து பிரித்ததோடு உடலுழைப்பு அனைத்தையும் தீட்டுக்குரியதாகவும் அறிவித்தார்கள். விவசாயம் செய்த பார்ப்பன அண்ணன் தம்பி இருவரும் கொடுத்த காணிக்கையை- சாஸ்திரவிரோதமாய் சம்பாதித்தப் பணம் என்று கூறி கும்பகோணம் சங்கர மடத்துக்காரர் (சிருங்கேரி மடத்தோட கிளை. கும்கோணத்தைத் தவிர அதற்கு தமிழ்நாட்டில் வேறெங்கும் கிளைகள் கிடையாது. காஞ்சி மடம் லிஸ்டிலியே கிடையாது) ஏற்க மறுத்த விவகாரத்தை காந்தியே அம்பலப்படுத்தி கண்டித்தது உங்களுக்குத் தெரியும்.

விளைகிற தானியம் தவசமெல்லாம் புனிதம், அதை விளைவிக்கிற விவசாயமும் விவசாயியும் தீட்டுன்னா அதை எப்படி ஏத்துக்க முடியும்? அப்பதான், புனிதம்னு நீ கொண்டாடுகிற உன் அறிவும் உன் தொழிலும் உன் வயிற்றை மட்டுமே வளர்க்கிறதுக்கு உதவுற குப்பை… எங்ககிட்ட இருக்கிற அறிவுதான் இந்த உலகத்தையே வாழவைக்கிறதுன்னு பிரகடனம் செய்ய வேண்டியிருக்கு. அவங்களோட மந்திரத்துல மாங்காய்கூட வராதுங்கிறது எல்லாருக்கும் தெரிந்த உண்மை.

பார்ப்பனர்களோட பிழைப்புக்கூடமாய் இருக்கிற கோயிலைக் கட்டினதும், அதுக்குள் இருக்கிற சாமி சிலைகளை செதுக்கினதும், பூசைக்கான தேங்காய் பழங்களை விளைவிக்கிறதும், அவர்கள் கையிலே பிடித்தாட்டுகிற மணியை செய்வதும்கூட பார்ப்பரல்லாதார்தான். இந்த சமூகத்தோட அடிப்படைச் செயல்பாடாய் இருக்கிற உழவும் தொழிலும் இவர்களால்தான் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. கரத்தாலும் கருத்தாலும் உழைப்பவர்கள் இவர்கள்தான். எனவே உழைக்கும் மக்களோட இயக்கம்கிறது இவங்களுக்கானது தான்.

நான் கல்வி கற்க ஆசைப்படும்போது, ‘நீ படிக்கப் போய்விட்டால் எனக்கு அடிமை வேலை செய்வது யார், என் பிணத்தை யார் தூக்குவது, என் துணியை யார் துவைப்பது, என் கழிவறையை யார் சுத்தம் செய்வது’ என்று அவர்கள் கேட்கிறார்கள். இதையெல்லாம் நான் ஏன் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டால் அவர்கள் சாதி என்கிற விஷயத்தை தான் மறுபடியும் பேசுகிறார்கள். இந்தக் கேள்வியின் ஆதாரமூலமாக பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களை எதிர்த்துப் பேச வேண்டிய சூழலையும் அவர்கள் தான் உருவாக்குகிறார்கள்.

என்னைப் பார்த்து ஒருவன் உனக்கு அறிவில்லை என்று சொன்னால் அதற்கு உடனடியாக நான் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நான் யோசித்துக்கொண்டிருக்க முடியாது. நான் ஒடுக்கப்படுகிறேன் என்று கருதும்போது என்னை ஒடுக்குபவனைப் பார்த்து நான் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. அந்தக் கேள்வி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிரான கேள்வியாக இருப்பதற்கு நான் எந்தவிதத்திலும் பொறுப்பாளியல்ல. நான் கேள்வி எழுப்புவதை சகித்துக்கொள்ள முடியாமலும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாததாலும் என்மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது என்ற வகையில் இடதுசாரி இயக்கம் என் பாடுகளுக்கு செவிமடுக்கும், எனக்காகப் போராடும், போராட வேண்டும் என்று கருதுகிறேன்.

தமிழ்நாட்டில், இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள்தான் ஒடுக்கப்பட்டவர்களைப் பார்த்து நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று முதலில் புரியவைத்தன. தலித் அமைப்புகள் என்று தனியாக உருவாவதற்கு முன்பிருந்தே இடதுசாரி இயக்கங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றி வருகின்றன. அடிப்படை பாட்டாளி வர்க்கமாக இருக்கிற தலித்துகளுக்காக போராடுவதைத் தவிர அவற்றுக்கு வேறு வழியுமில்லை.

நிலவும் அசமத்துவமான சமூக அமைப்பை மாற்றியமைக்கப் போராடுவதுதான் இடதுசாரி மனோபாவம் என்றால் மற்றெவரைக் காட்டிலும் இந்த சமூகத்தை உடனடியாய் மாற்றியமைக்க வேண்டிய தேவை தலித்துகளுக்குத்தான் இருக்கிறது. அதனால்தான் அம்பேத்கரை இந்தியாவின் மிகச்சிறந்த இடதுசாரித் தலைவராக நான் கருதுகிறேன். அவர் உருவாக்கித் தந்திருக்கும் சாதி ஒழிப்பிற்கான பாதையில் இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே மக்களைத் திரட்ட முடியும் என்று நம்புகிறேன்.

இப்படி இருக்கும்போது பார்ப்பனர்களுக்கு எதிராக நான் எழுதுவதை இயக்கம் எப்படி தவறாக எடுத்துக்கொள்ளும்? இதைத்தான் எழுத வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் யாரும் என்னிடம் கூறுவது கிடையாது. படைப்பு என்பது தனிநபர் செயல்பாடு. இடதுசாரித் தோழர் ஒருவர் ஓட்டல் வைத்திருந்தால், அவர் தினமும் ‘சாம்பார் நல்லா இருக்குதா’ என்று கட்சி அலுவலகத்தில் போய்க் கேட்டுவிட்டு தொழில் நடத்துவதில்லை. அதேபோல் நானும் என்னுடைய கவிதையை யாரிடமும் கொண்டு போய் கருத்துக் கேட்டுவிட்டு வெளியிடுவதில்லை.

இயக்கத்தைப் பற்றி தெரியாதவர்களும் அதற்குள்ளிருந்து இயங்காதவர்களும் அவர்களாகவே அனுமானத்தில் எதையாவது சொல்வது இங்கொன்றும் புதுசல்ல. கட்சி அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு எழுத்தாளனையும் ஒரு கமிஸார் கண்காணித்துக் கொண்டிருப்பதாய் குற்றம்சாட்டுவதெல்லாம் ரசமான கற்பனைதான். எழுத்து என்பது தனியொருவனின் அனுபவம், அவன் மீதான வன்முறைகள், அவனுக்குக் கிடைக்கிற சுதந்திரம் சார்ந்த விஷயம். இதில் எந்த இயக்கமும் தலையிடுவதில்லை. இந்த சுதந்திரமும், இயக்கம் மானசீகமாய்த் தருகிற தைரியமும்தான் என் எழுத்தின் காத்திரத்திற்குக் காரணமாக இருக்கிறது.

ஆரியத்துக்கு மாற்றாக திராவிட இயக்கங்கள் தமிழக வரலாற்றை உயர்வாக முன்வைக்கின்றன. ஆனால் தமிழ் மன்னர்களின் வாழ்க்கையை, தமிழ் வரலாற்றை உங்களது படைப்புகள் பகடி செய்கின்றன. ஆரிய வரலாற்றுக்கு மாற்றாக தமிழக வரலாறு முன்னிறுத்தப்படுவதை நீங்கள் ஆதரிக்கவில்லையா?

ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று ஆயிரம் சான்றுகளை நிறுவிய பிறகும், சங் பரிவாரத்தினர் ‘இல்லையில்லை, ஆரியர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். என்.எஸ்.ராஜாராம் போன்ற போலி ஆய்வாளர்களோட சப்பைக்கட்டும் இதற்கு உண்டு. அவர் மித் ஆஃப் ஆரியன் இன்வேஷன் என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இன்னும் இவரைப்போலவே பல டகால்டிகளும் உண்டு. எனவே ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று சொல்வதற்கு உங்களுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு தேவைப்படுகிறது. அதாவது உண்மையான வரலாற்றை தேடி அயறிவது என்பதுதான் அது.

ஐதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிற ஒரு ஆய்வமைப்பு, இந்திய உயர்சாதி ஆண்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் டி.என்.ஏ மூலக்கூறுகளில் ஒற்றுமை இருக்கிறதாக அறிவிச்சிருக்கு. ஆனால் இப்படியான ஒற்றுமை பெரும்பாலான உயர்சாதிப் பெண்களுக்கில்லை. புதுதில்லி அறிவியல் இயக்கத் தலைவர் பிரபிர் புர்கயஸ்தா இதுபற்றி மார்க்சிஸ்ட் கட்சியோட பத்திரிகையான பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆரியர்கள் குறைந்த அளவிலான பெண்களுடன்தான் இங்கு வந்தார்கள், அவர்கள் இந்தியப் பரப்பிலிருந்த பூர்வக்குடிப் பெண்களை பலவந்தமாய் சிறைபிடித்துக் கொண்டார்கள் என்றும் அதனாலேயே பிற்காலத்தில் ஆரியர்கள் தங்கள் வீட்டுப் பெண்கள் உட்பட எல்லாப் பெண்களையும் தீட்டுக்குரியவர்களாகவே அறிவித்தார்கள் என்றும் ஏற்கனவே வெளியான ஆய்வுகளுக்கு வலு சேர்ப்பதாய் இருக்கிறது இந்த டிஎன்ஏ ஆய்வு.

திராவிடர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றுதான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வந்த காலம்தான் வேறுபடுகிறது. இவர்கள் ஆரியர்களுக்கு முன்பே வந்தவர்கள். திராவிடர்களை தமிழர்களின் மூதாதைகளாகக் கொள்ள முடியமா என்கிற ரீதியில் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. அம்பேத்கரும் இந்த மண்ணின் பூர்வகுடிகளாக நாகர்களைத் தான் குறிப்பிடுகிறார்.

உலகம் முழுவதுமே சமூகக் காரணங்களால் மக்கள் இடம்பெயர்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆரியர்களும் அப்படித்தான் ஒரு நெடும்பயணத்தின் வழியாக இங்கு வருகிறார்கள். இங்கிருக்கிற பூர்வகுடிகளை அவர்களது தோற்றத்தைக் கொண்டு கருப்பர்கள், சப்பை மூக்கர்கள், ஆண்குறி வழிபாட்டாளர்கள்னு இழித்தொதுக்குகிற வேலை அப்போதே தொடங்கிருச்சு. பூர்வ குடிகளிடமிருந்து தங்களை தனித்துக் காட்டிக்கொள்ளவும் தங்களது இனத்தூய்மையைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஆர்யவர்த்தம் மாதிரியான தனித்த குடியிருப்புகளை உருவாக்குறாங்க. பூர்வகுடிகளோடு புழங்குவது தீட்டுக்குரியதா அறிவிக்கப்படுது. முதன்முதலில் இந்தியாவை ஒரு மூடுண்ட சமூகமாக மாற்றியவர்கள் ஆரியர்கள்தான் என்ற முத்துமோகனின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மை.

‘ஒதுக்குவதும் ஒதுங்குவதும்’ என்கிற பார்ப்பனியத்தின் ஆணிவேர் ஆரியத்திற்குள் பதுங்கி இருக்கிறது. ஆனாலும் இனக்கலப்பு தவிர்க்க முடியாததாகிறது. வருணம் வருகிறது. இப்போது வருணத்தூய்மை என்கிற ஒரு புதுவகை மூடாக்கு அறிமுகமாகிறது. வருணக்கலப்பையும் தடுக்க முடியாதபோது சாதி வருகிறது. சாதிக்கலப்பைத் தடுக்க தீண்டாமை வருகிறது. இப்படி தொடர்ந்து சமூகத்தை இணக்கம் காண முடியாத கூறுகளாக பிளக்கிற ஏற்பாடுகளுக்குப் பின்னே ஆரிய மனநிலைதான் இயங்குது.

இந்த வருணத்தையும் சாதியையும் தமிழ் மண்ணுக்கு கூட்டி வந்து கட்டிக் காப்பாற்றும் வேலையில் தமிழ் மன்னர்களும் ஈடுபட்டிருந்தார்கள் என்ற உண்மையை நாம் எப்படி நிராகரிக்க முடியும்? வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்ன மன்னர்கள் யாரையாவது தமிழ் மரபிலிருந்து நீங்கள் காட்ட முடியுமா? வருண அமைப்பை ஒப்புக்கொண்டவர்களை என்னுடைய மன்னன் என்று நான் ஏன் கொண்டாட வேண்டும்? வடக்கேயிருந்து பார்ப்பனர்களை அழைத்துவந்து வளமான பகுதிகளில் குடியமர்த்தி வைத்தவர்கள் தமிழ்மன்னர்கள்தானே? அந்த பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுத்தானே தலித்துகளை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தார்கள்? சாதியைத் தாங்கிப் பிடிக்கிற, பெண்களை இரண்டாம்பட்சமாக போகப்பொருளாக நடத்துகிற ஒரு மன்னனை அவன் தமிழன் என்பதாலேயே நான் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்?

தமிழன் என்ற பொது அடையாளத்தோடு ஒன்றுபடுவது, பேசுவதற்கு உவப்பானதாக இருக்கலாம். தமிழன் என்ற பொது அடையாளத்தை வைத்துக்கொண்டு சாலையில் ஒரு தலித் சுதந்திரமாக நடந்துவிடவோ, மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடவோ, மற்ற சாதிகளில் திருமணம் செய்து கொள்ளவோ முடியுமா? ஹரியானாவில் கொல்கிறார்கள். ஆந்திராவில் சுண்டூரில் கொல்கிறார்கள். பீகாரில் தலித்துகளைக் கொல்ல தனிப்படையே இருக்குது. கயர்லாஞ்சியில் நடந்த கொடுமை நாடறியும். இதிலிருந்து தமிழ்நாடு எந்தவிதத்தில் மாறுபட்டிருக்கு? தமிழன் எந்தளவிற்கு சாதி வித்தியாசம் பாராமல் தீண்டாமையை கைக்கொள்ளாமல் சமத்துவம் பாராட்டுகிறவனாய் இருக்கிறான்? இந்த நாட்டில் எங்கேயிருந்தாலும் எங்கள் உயிரும் உடைமையும் மசுருக்கு சமானமாகக்கூட மதிக்கப்படலேன்னா தமிழன் அல்லது இந்தியன் என்கிற வெட்டிப் பெருமையை நானெதெற்கு சுமந்து திரியவேண்டும்?

தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்கள்ல தீண்டாமை கடைபிடிக்கப்படுது. ஒரு அரசியல் விருப்புறுதியோட அரசாங்கம் செயல்பட்டா இதையெல்லாம் முடிவுக்கு கொண்டுவர முடியும். ஒரு தலித்தைக் கூட்டிப் போய் உன் வீட்டில் விருந்து வை அல்லது ஒரு தலித் வீட்டுக்குப் போய் நீ சாப்பிடுன்னு ஒரு அரசாங்கம் உத்தரவு போட வேண்டியதில்லை. ஆனால் பொது இடத்தில் நடமாடவும், சைக்கிளேறிப் போகவும், செருப்பு போட்டுக் கொள்ளவும், தோள்ல துண்டு போட்டுக் கொள்ளவும்கூட ஒரு தலித்தை அனுமதிக்கமாட்டேன்னு அட்டூழியம் பண்ணுகிற சாதி வெறியன்களை சுளுக்கெடுக்கிறது அரசாங்கத்தோட வேலைதானே? ஆனால், அரசு நிர்வாகத்துல இருக்கிற அதிகாரிகள், காவல்துறையினர், நீதிபதிகள் என்று இவங்களெல்லாம் சாதியைக்கூட தாண்டாதவங்களா இருக்கிறப்ப ஒரு தலித்தின் உயிர் எந்த நேரத்திலும் பறிபோகக் கூடியதாயிருக்கிறது.

நடப்பிலிருக்கிற வன்கொடுமைத் தடுப்புச்சட்டங்களை அமல்படுத்துகிற பொறுப்பு சாதிவெறியர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்த சட்டங்களைக் குற்றுயிராக்கி குடலறுத்து கிடத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திராவிலோ, பீகாரிலோ எங்கே பிறந்திருந்தாலும் தலித்தாக இருப்பதால்தான் கொடுமைக்கும் அவமானத்துக்கும் ஆளாகிறேன் எனும்போது, மொழியினால் எனக்கு என்ன நன்மை கிடைக்கிறது? குறிப்பிட்ட பூகோள எல்லைக்குள் பிறப்பதால் என்னை சுதந்திரமான மனிதனாக இந்த சமூகம் ஒப்புக்கொள்ளுமா? நான் குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவன், குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவன், குறிப்பிட்ட மொழியைப் பேசக்கூடியவன் என்பதால் எனக்கு எந்த சமூக அந்தஸ்தும் கிடைப்பதில்லையே.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மொழி, உணவு, உடை, மதம், நம்பிக்கைகள் என எல்லாமே வேறுபடுகிறது. எனக்கு கீழே இன்னொரு சாதி என்ற உணர்வு மட்டும்தான் எல்லோரையும் ஒன்றுபடுத்துகிறது. இந்த வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியா என்றால், இந்தியன் என்கிற தேசியக் கோட்பாட்டையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழன் என்கிற பொது அடையாளத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழன் என்கிற பொது அடையாளத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? தமிழன் என்கிற பொது அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி மற்ற அடையாளங்களைத் துறப்பதில் எனக்கு எந்த மனத்தடையும் கிடையாது. ஏனெனில் எனக்கு ‘தீண்டத்தகாத சாதி’ என்ற அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதைத் துறப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. ‘நீங்களும் அதே மாதிரி துறக்கத் தயாராக இருக்கிறீர்களா’ என்பதுதான் எனது கேள்வி. உங்களுக்கு ‘தமிழன்’ என்ற அடையாளத்தைத் தவிர தொடத்தக்க ஜாதி, ஆண் போன்ற மீதி அடையாளங்கள் தான் முக்கியமாக இருக்கின்றன. அதிகாரமிக்க உனது அடையாளங்களை நீ துறக்கத் தயாராக இருந்தால், தமிழன் என்கிற பொதுக்குடையின் கீழ் ஒன்றுபடுவதற்கு எனக்கு எந்த மனத்தடையும் இல்லை.

சாதி உணர்வோடு இருந்ததால் தமிழ் மன்னர்களின் வரலாற்றை நிராகரிப்பதாகக் கூறுகிறீர்கள். நால்வருணத்தை முன்னிறுத்துவது தான் கம்பராமாயணம். பெரியார் அதை எரித்தபோது, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா ஊர்தோறும் அதை எடுத்துச் சென்று அதற்கு ஆதரவாகப் பேசினார். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

60 வகையான ராமாயணம் இருக்கிறது. வால்மீகி ராமாயணம்தான் ஆதி. வால்மீகியும்கூட அப்பகுதி மக்களிடம் வாய்மொழியாக புழக்கத்திலிருந்த ஒரு கதையை தன் மொழியில் எழுதியிருக்கக்கூடும். பத்தாயிரம் பாடல்களைக் கொண்ட வால்மீகி ராமாயணம் பின் வந்தவர்களின் இடைச்செருகல்களால் உப்பி வீங்கி இன்று 24 ஆயிரம் பாடல்களைக் கொண்டதாக இருக்கிறது. கம்பரும் தன் பங்குக்கு கொஞ்சம் அரைத்து ஊற்றியிருக்கிறார்.

இவர்களெல்லாம் சேர்ந்துதான் வடக்கே அயோத்தியைச் சுற்றி நடந்ததாகக் கூறப்படும் ஒரு கதையை நகர்த்தியும் புஷ்பக விமானத்தில் ஏற்றியும் தென்னாட்டுக்குக் கூட்டிவந்தார்கள். போதாக்குறைக்கு கடலிலும் நீந்தவிட்டு கரையேறத் தோதாக பாலமும் கட்ட வைத்தார்கள். வேலைவெட்டி இல்லாத பண்டிதர்களும் புலவர்களும் கம்பராமாயணத்தின் எல்லாக் கதாபாத்திரங்களையும் தெருத்தெருவாய் இழுத்துவந்து பட்டிமன்றங்கள் நடத்தி நாறடித்து ராமாயணம் ஏதோ நம்மூர் கதை என்பதைப் போலவே மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

இன்னொரு பக்கம் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் சொல்வதைப்போல, ராமன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று வாதாடப் புகுந்தவர்கள் ராவணனை திராவிடன் என்றும் ஆரியத்தை எதிர்த்த உண்மையான மாவீரன் என்றும் கொண்டாடத் தொடங்கிய அபத்தமும் இங்கு நிகழ்ந்தது. ராமன் கற்பனை என்றால் ராவணனும் கற்பனைதான் என்கிற குறைந்தபட்சப் புரிதலையும் கைவிட்டிருந்தனர்.

இன்னும், கம்பராமாயண வரிகளைப் பிழிந்து, சோறு – குழம்பு – சொர்க்கம் – நரகம் – சோசலிசம் – சூயஸ் கால்வாய் எல்லாவற்றையும் கொண்டு வருகிறதொரு ஏற்பாட்டில், பூதக்கண்ணாடி வைத்தலையும் கூட்டமொன்றும் இருக்கிறது. ராமாயணம் முன்வைக்கிற சமூகவியல் கருத்துக்களை உள்வாங்காமல் கம்பனின் மொழி ஆளுமைக்காகவும், கற்பனைக்காகவும் ராமாயணத்துக்குள் புகுந்த ஜீவா கடைசியில் கம்பனை விட்டுவிட்டு ராமனைப் பற்றிக் கொண்டாரென்ற குற்றச்சாட்டு உண்டு. 13வது ஆழ்வார் என்ற கேலிக்கும்கூட ஆளாகினார். ராமாயணத்தை எரித்ததற்காக பெரியாரோடு ஜீவாவுக்கு எந்தளவுக்கு முரண்பாடு இருந்ததோ அந்தளவுக்கு இவ்விசயத்தில் ஜீவா மீது எனக்கிருக்கிறது.

எழுத்தாளர்கள் சாதிய மனோபாவத்தோடு இயங்குவதாக குட்டி ரேவதி சமீபத்தில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். நீங்கள் இந்த கருத்தோடு எந்தளவிற்கு உடன்படுகிறீர்கள்?

நமக்கு சாதியைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. ஆனால் நாம் அதை மறைக்கப் பார்க்கிறோம். பெரிய பெரிய விசயங்களாகப் பேசி நமக்குள் இருக்கும் சின்னத்தனங்களை மறைத்துக்கொண்டு தப்பியோடும் எத்தனிப்பிலேயே முனைப்பு காட்டுகிறோம். குட்டிரேவதி அதை வெளிப்படையாக எழுதியிருந்தார். ‘தமிழன்’ என்கிற பொது அடையாளத்தோடு எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்லப்படுவதைப் போல், பெண் விடுதலை குறித்துப் பேசும்போது, அனைத்துப் பெண்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்து கூறப்படுகிறது.

எல்லாப் பெண்களும் ஒரே பிரச்சனைகளைத் தான் சந்திக்கிறார்களா, ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கு உள்ள பிரச்சனைகளும், தலித் பெண்ணுக்கு உள்ள பிரச்சனைகளும் ஒன்றா என்ற கேள்வி இந்த இடத்தில் வருகிறது. சில பொதுத்தன்மைகள் இருக்கலாம். மற்றபடி ஒப்பிட முடியாத வித்தியாசங்கள் நிறைய உண்டு.

கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், நகரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள் இருப்பதில்லை. கிராமத்தில் ஒரு பெண்ணை அவளது கணவன் அடிப்பானானால் அவளால் திருப்பி அடிக்க முடிகிற அளவுக்கு மனரீதியாக காத்திரமாகத்தான் இருக்கிறாள். அப்படி திருப்பியடிக்க முடியாவிட்டால் அவனை நிலைகுலைய வைக்கிற அளவுக்கு அவளால் கடுமையாக ஏச முடிகிறது. கிராமப்புற வாழ்க்கையில் ஆணின் உழைப்பையும் அவனது வருமானத்தையும் மட்டுமே சார்ந்திராமல் பெண் அடிப்படையிலேயே தன் சுயஉழைப்பில் வாழ்கிறவளாகவும் இருக்கிறாள். இன்னும் சொல்வதானால் அவளது உழைப்பை நம்பியே முழு குடும்பமும் வாழ்கிற நிலைமையும்கூட உண்டு. எனவே அவள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் உடையவளாயிருப்பதும் இயல்பானதுதான்.

படித்த நடுத்தர வர்க்கத்து ஆண் இன்று தன்னை வெகு நாகரீகமாக காட்டிக் கொள்வதற்கு அதிகம் மெனக்கெடுகிறான். ஒரு கண்ணியவான் போன்ற தோற்றத்தில் தனது கொடுக்குகளையும் கோரைப்பற்களையும் மறைத்துக்கொள்ள விரும்புகிறான். அதனால் அவனால் பெண்ணை அடிக்கவோ, நேரடியாக ஆதிக்கம் செலுத்தவோ முடியவில்லை. என்ன சார் படிச்சவங்களா இருக்கீங்க, இப்படி இன்டீசன்ட்டா நடந்துக்கிறீங்களேன்னு தன்னை யாரும் சொல்லிவிடக் கூடாதுங்கறதுல கவனமா இருக்கிறான்.

ஆனால் அதுக்காக ஆண் என்கிற அகங்காரத்தையோ பெண் தனக்குக் கீழ் என்கிற இளக்காரத்தையோ கைவிடவும் அவன் தயாராயில்லை. எனவே பெண்ணை அடிமைப்படுத்தவும், தான் அவளை விட மேல் என்று உணர்த்துவதற்கும் மொழியின் துணையோடு பல நுட்பமான வழிமுறைகளைக் கையாள்கிறான். அந்த நுட்பங்களை புரிந்துகொண்டு அதை மொழிரீதியாகவே பெண்கள் எதிர்கொள்கிறார்கள். ஊமைக்குத்து விட்டு உள்காயம் ஏற்படுத்துகிற ஒரு தாக்குதல் முறையை பெண்கள் மொழிக்குள்ளிருந்து கண்டெடுத்திருக்கிறார்கள். ஆண்களின் நுட்பமான பின்னல்களுக்குள் சென்று பெண்கள் பேசுகிறார்கள் என்றுதான் கருதுகிறேன். ஆனாலும் இவர்கள் எழுதும் பிரச்சனை உலகம் முழுக்க உள்ள பெண்களின் பிரச்சனை அல்ல என்று சொல்லத் தோன்றுகிறது.

யோனி என்கிற வார்த்தையை எழுதிவிட்டால் அது ஏதோ பெரிய புரட்சி என்று இங்கு மதிப்பிடப்படுகிறது. இது நகரம் சார்ந்த நடுத்தரவர்க்க மனோநிலை. அவளுடைய படிப்பும், நாசூக்கும் யோனி என்கிற வார்த்தையை தன் சகமனிதர்களுடனான உரையாடலில் பேசுவதற்கு அவளுக்கு பெரிய மனத்தடையை உருவாக்கியுள்ளது. அதனால் அந்த ஒரு வார்த்தை ஒரு பெரிய கலகக்குரலாக நமக்குத் தெரிகிறது. ஆனால் கிராமத்திலோ நகரத்திலோ ஒரு அடித்தட்டு பெண் ஒரு நாளைக்கு நூறுமுறை அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறாள். இதற்காக ‘நானும் கலகக்காரி’ என்று அவள் தோள் தட்டிக் கொள்வதில்லை. ‘இதையெல்லாம் சாராம்சப்படுத்தித்தான், பெண் விடுதலை, பாலின சமத்துவம் என்பவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று குட்டி ரேவதி சொல்வதாக நான் புரிந்து கொள்கிறேன். பெண் விடுதலை என்ற குடையின் கீழ் ஒரு பார்ப்பனப் பெண்ணை ஒரு தலித் பெண் உரசிக் கொண்டு நிற்க முடியமா என்ற அவரது கேள்வி இன்னும் யாராலும் எதிர்கொள்ளப்படாமல்தான் இருக்கிறது.

பெண்ணடிமைத்தனம், சாதி அடக்குமுறைகளைத் தக்க வைப்பதில் நமது சமூக, குடும்ப அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

நம் சமூக அமைப்பில் நாம் என்னவாக வளர்க்கப்படுகிறோம்? ‘இந்தியன் என்ற உணர்வோடு’ என்றால் அது மிகவும் செயற்கையானது. வேறு ஏதாவது நாட்டுக்குச் சென்றால் ஒருவேளை இந்தியன் என்ற உணர்வு நமக்கு வரலாம். அதுவும் தங்கியுள்ள அந்த நாட்டை சேர்ந்தவர் அல்ல என்பதால் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது தேவையை ஒட்டி உருவானது.

ஆனால் பிறப்பிலிருந்தே குறிப்பிட்ட சாதியின் நம்பிக்கைகளுக்கும், வளமைக்கும் ஏற்றவாறு தான் வளர்க்கப்படுகிறோம். இதிலும் பெண் கூடுதல் கவனத்தோடு வளர்க்கப்படுகிறாள். ஒவ்வொரு கணமும் சாதியாக வளர்க்கப்பட்டு சாதியாகத் தான் வாழ்கிறோம். முதலில் நான் இந்தியன் பிறகு தமிழன் என்பதெல்லாம் மிகமிக அயோக்கியத்தனமான வார்த்தைகள்.

நான் சைவம், நான் அசைவம் என்று உணவில் வேறுபடுவதில் தொடங்கி உடை, உணர்வுகள் அனைத்தையும் சாதிதான் தீர்மானிக்கிறது. நல்ல குடும்பம் என்கிற நம் வரையறையே அப்படித்தானே இருக்கிறது. ‘அப்பா, அம்மாவிற்கு பிடித்த பையனாக, அல்லது அவர்கள் சொல்கிறவனை திருமணம் செய்துகொண்டு குனிந்த தலை நிமிராத பெண்கள் இருந்தால் அது நல்ல குடும்பம். ஆச்சாரம் கெடாத குடும்பம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.’ அதாவது பல்கலைக்கழகம் எப்படி ஒரு மோசமான தயாரிப்பை வெளியே அனுப்புகிறதோ அப்படித்தான் குடும்பமும் அனுப்புகிறது.

சாதியை வலுவாக, மிக நுட்பமாக பாதுகாக்கக்கூடிய இடம்தான் குடும்பம். என் பையன் அமெரிக்கா போனாலும் இங்க வந்து நான் பார்க்கிற பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவான் என்று உறுதியாக சொல்ல முடிவது சாதியால் தானே? உண்பது, வாழ்வது, உணர்வது தொடங்கி நான் இன்று உண்டதை நாளை ஒருவன் அள்ளுவான் என்பது வரைக்கும் சாதிதானே தீர்மானிக்கிறது? ‘இறந்தபிறகு எரிப்பதா, புதைப்பதா? எந்த சாதிக்காரன் குழிவெட்டுவது?’ என்பதையும் அதே சாதிதான் தீர்மானிக்கிறது.

‘நான் ஒடுக்குகிற சாதியில் பிறந்திருக்கிறேன், நான் பெண்ணை ஒடுக்குகிற ஆணாக இருக்கிறேன். இதுகுறித்து நான் குற்றவுணர்ச்சி கொள்கிறேன்’ என்பது மாதிரியான எந்த எழுத்தும் இதுவரை வரவில்லை. சுஜாதா ‘சிவாஜி’ திரைப்படத்தில், ‘அங்கவை, சங்கவை இருவரும் கறுப்பு’ என்று எழுதுகிறார். அவர் பார்த்த பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள். எனவே கறுப்பாக இருப்பவர்களை அவரால் எளிதாக அவமானப்படுத்த முடிகிறது.

இதைச் சொல்கிற அதிகாரத்தை சுஜாதாவிற்கு அவரது ஜாதிதானே தந்தது? எங்கள் ஜாதிப்பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள் என்று அவர் சொன்னால் அதுவும் ஜாதித்திமிர் தானே? அவர் பார்வையில் பெண்கள் வெறும் தோல் சம்பந்தப்பட்டவர்கள் என்றுதானே அர்த்தம்? இந்த பார்ப்பனக் கிழடின் வக்கிரத்தை, துவேஷத்தை எதிர்த்துப் பேச எந்த வெள்ளைத்தோலிகளும்/தோழிகளும் முன்வராமல் இருப்பதற்கும் சாதிதானே காரணமாயிருக்கிறது? அவர்களுக்கும் சாதியைவிட்டால் வேறு எதுவும் தெரியாது.

திப்புசுல்தான் மலபார் கவர்னருக்கு எழுதிய கடிதம் ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். “உங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் மேலாடை அணியாமல் இருக்கிறார்கள் என்று படித்தேன். அதற்குக் காரணம் வறுமையா, வேறு ஏதாவதா? வறுமை எனில் அதைக் களைய வேண்டியது உங்கள் பொறுப்பு. மத நம்பிக்கை தான் காரணம் எனில் அந்த நம்பிக்கையின் வேர் பாதிக்காமல் பக்குவமாக எடுத்துச் சொல்லி ஆடை அணிய வைக்க வேண்டும்.”

மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது நாடார், பறையர் போன்ற தாழ்த்தப்பட்ட பெண்களுக்குத் தான். ஒருவேளை தங்கள் மதப்பெண்களைப் போல இவர்களும் குப்பாயம் அணிய வேண்டும் என்றுகூட திப்புசுல்தான் விரும்பியிருக்கலாம். அது எல்லாமே இரண்டாம்பட்சம். ஆனால் இங்குள்ளவர்கள் வேறு ஒருவன் சுட்டிக்காட்டியும் திருந்தாதவர்களாய்த் தானே இருந்திருக்கிறார்கள் என்பதே முக்கியம்.

நூறு வருடங்களுக்கு முன்பு நாடார் பெண்ணுக்கு மேலாடை அணியும் உரிமை தேவைப்பட்டது. இன்றைக்கு அவளுக்கு வேறு உரிமைகள் தேவைப்படுகின்றன. கேரளாவில் ஈ.கே.நாயனார் முதல்வராயிருந்தபோது, நிதியை கிராமங்களுக்கு ஒதுக்கி அந்தந்த கிராம மக்களே தங்கள் தேவைகளை முடிவுசெய்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. மாநில அளவிலான இந்த திட்டத்துக்கு வழிகாட்டியவர் தோழர் இ.எம்.எஸ். ஒரு கிராமத்தில் ஆண்கள் அனைவரும் கூடிப்பேசி தெருவிளக்குகள் அமைத்தார்கள். அன்றிரவே அந்தக் கிராமத்து பெண்கள் அந்த விளக்குகளை உடைத்தெறிந்தார்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரவில் வெளிச்சம் அதிகம் இருந்தால் பெண்களால் தங்களின் இயற்கைத் தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாதென்பதால்தான் தெருவிளக்குகளை உடைத்துவிட்டதாக தெரிவித்தார்கள். இதைத் தெரிந்து கொண்ட இ.எம்.எஸ். அந்தக் கிராம சபைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘உங்கள் கிராமத்தில் முதலில் கட்டப்பட வேண்டியது கழிப்பிடம்தான். சபையில் ஆண்கள் மட்டுமே எல்லா முடிவுகளையும் எடுப்பதால் நம்மால் பெண்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் ஆண்களின் சபையாக சமூகத்தை வைத்திருக்கிறோம். எனவே அடுத்தக் கூட்டத்தில் இருந்து பெண்களையும் கலந்து பேசுங்கள். அவளால் தான் அவளது தேவைகளைப் பேச முடியும்’ என்று எழுதினார்.

குடும்பத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் கணவன் தான் முடிவெடுக்கிறான். பெண்ணுக்குப் பங்கில்லாத அந்த முடிவை குடும்பத்தின் முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தப் பெண்களின் நிலையைப்போல் தான் தலித்துகளின் நிலையும். இந்தியச் சமூகத்தில் இதுவரை முடிவெடுக்கும் இடத்தில் தலித்துகள் இருந்ததில்லை. அதிகாரத்திலும் அவர்கள் இல்லை. அப்படியானால் ஆதிக்க சக்திகள் எடுக்கும் முடிவுகள் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதாகத் தானே இருக்கும்? நம் சமூகம் சாதியால் மட்டுமே பின்னப்பட்டிருக்கிறது என்பதைத் தான் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

தோள்சீலைப் போராட்டம் பற்றிப் பேசுவதால் இந்தக் கேள்வி. அந்த மாதிரி ஒடுக்கப்பட்ட ஒரு பெண்ணை சிறுமைப்படுத்தி சுந்தரராமசாமி எழுதிய ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்த சிறுகதைக்கு எதிராக நீங்கள் கடுமையான எதிர்வினை ஆற்றினீர்கள். ஆனால் இப்போதும் அந்த சிறுகதையை நியாயப்படுத்தும் வேலைகளை அவர்கள் செய்து வருகிறார்களே?

அவர்கள் மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பது ஒரு மூடநம்பிக்கைதான். அவர்களைத் தொடர்ந்து எதிர்ப்பதற்கு நமக்கு நேரமில்லாததாலும், வேறு வேலைகள் இருப்பதாலும் நாம் போய்விட்டோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்தக் கதையை நியாயப்படுத்தும் வேலையை செய்துகொண்டே இருக்கிறார்கள். கதையை ஆதரித்து வந்த கடிதங்கள், கட்டுரைகளைத் தொகுத்து சமீபத்தில் ஒரு புத்தகமாகப் போட்டிருக்கிறார்களாம். ஏ.பி.வள்ளிநாயகம் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்து கொடிக்கால் ஷேக் அப்துல்லா காலச்சுவடு பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், ‘பிள்ளை கெடுத்தாள் விளை மிகச்சரியான கதை’ என்று வள்ளிநாயகத்திற்கு ஒரு கருத்து இருந்ததாக ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார்.

செத்துப்போன ஒருவரின் படைப்பை செத்துப்போன ஒருத்தர் ஆதரித்ததாக உயிருடன் இருக்கிற ஒருவரை வைத்து எழுத வைத்துள்ளார்கள். ‘சுந்தரராமசாமி மிக நல்லவர், எந்த ஒரு காலத்திலும் சொற்குற்றமோ, பொருட்குற்றமோ செய்யாதவர்’ என்று நிறுவ வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கிறது. ‘சுந்தரராமசாமியின் எழுத்துக்கள் தேவ வார்த்தைகள். அதை குறை காணும் தகுதி மனிதப்பிறவிகளுக்கு கிடையாது. நம் புலன்களுக்கு அது எட்டாது. இது உடன் இருந்தவர்களுக்குத் தெரியும், அவரை உற்றுப் பார்த்தவர்களுக்குப் புரியும். ஆதவன் போன்றவர்களுக்கு அது தெரியாது’ என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அந்த முயற்சிகளின் மூலம் தான் அவர் தவறு செய்தார் என்பதை நாம் மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

படித்தவர்களிடம் சாதிய உணர்வு இருக்கிறதா, அதை அவர்கள் எப்படி வெளிப்படுத்துகிறார்கள்?

இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் ‘இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா’ என்றும், பெண்விடுதலை குறித்து பேச்சு வரும்போது, இப்பல்லாம் எந்தப் பொம்பிளை கஷ்டப்படறா ஆம்பிளைங்க தான் கஷ்டப்படறாங்க என்றும் சொல்லும் ஒரு மேம்போக்கான போக்கு தென்படுகிறது. வெகுஜனப் பத்திரிகைகள் இந்தக் கேவலத்தை தொடர்ந்து செய்துவருகின்றன.

‘நானெல்லாம் ரொம்ப சோஷியல் சார், சாதியெல்லாம் பார்க்கிறதில்லை’ என்று சொல்பவர்களுக்கும் சாதியைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் அவனால் எந்த இடத்திலும் சாதியை கைவிடமுடியவில்லை. பொது இடங்களில் அதை வெளிப்படையாக கொண்டாட முடியவில்லை அவ்வளவுதான். ‘நான் உயர்ந்தவன். நீ என் அருகில் உட்காரவோ, என் எதிரே நிற்கவோ கூடாது’ என்று பேச வைத்தது தான் தீண்டாமை. அந்தத் தீண்டாமையை வெளிப்படையாக கடைப்பிடிக்க முடியவில்லையே தவிர சாதியை எந்த இடத்திலும் யாரும் கைவிடவில்லை.

‘சாதி என்பது ஒருவன் திருமணம் செய்து கொள்வதற்கான எல்லை’ என்று முத்துமோகன் குறிப்பிடுவார். தன் அல்லது தன் குடும்பத்தாரின் திருமணத்தை இந்த சாதிய எல்லையைக் கடந்து செய்யாதவரைக்கும் அவன் சாதியைக் கடந்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. சொந்த சாதிக்குள்ளேயே மறுபடியும் மறுபடியும் திருமணம் செய்து கொள்வதால் சொந்த சாதியைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். அதில் ஒரு செங்கல் கூட விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

சாதியைக் கைவிடாமலேயே நாள் முழுவதும் வெளியே சமதர்மவாதியாக உலவுவதற்கான எல்லா வாய்ப்புகளும் நமக்கு இப்போது இருக்கிறது. பள்ளியில் எல்லா சாதி மாணவர்களும் அருகருகே அமர்ந்திருப்பதாலேயே சாதியை இழந்துவிட்டதாக சொல்ல முடியாது. ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பதாலோ, ஒரே மேசையில் சாப்பிடுவதாலோ ஒருவர் சாதியைக் கைவிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. தீண்டாமையை வெளிப்படையாக கடைப்பிடிக்கப்பட முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு தான் இதுவும் நடக்கிறது.

சொந்த சாதி ஆளாகவே வீட்டிலிருந்து கிளம்பி, சொந்த சாதி ஆளாகவே வேலைசெய்து, சொந்த சாதி ஆளாகவே கொண்டு சென்ற உணவை உண்டு, கையில் இருக்கும் பாட்டிலில் தண்ணீர் குடித்து சொந்த சாதி ஆளாகவே மாலையில் வீடு திரும்பி விடலாம். கண்டம் விட்டு கண்டம் சென்றவன் மட்டுமல்ல, கோள் விட்டு கோள் செல்பவனும் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, அதே சாதியைச் சேர்ந்த, படித்த, அழகான, சிவந்த நிறமும், நீண்ட கூந்தலும் உடைய பெண்ணைத் தானே திருமணம் செய்து கொள்கிறான்?

தீண்டாமையைப் பழைய வடிவங்களில் பார்க்க முடியவில்லையே தவிர அதை முழுமையாக அவன் கைவிட்டுவிடவில்லை. ‘உயிரே போனாலும் நான் கடையில் சாப்பிடுவதில்லை’ என்பார்கள் சிலர். ‘கடையில் சாப்பிடுவேன் ஆனா நான்-வெஜ் சாப்பிடுறதில்லை’ என்பார்கள் சிலர். இதெல்லாம் என்ன? ஆட்டுகறி கேட்டால் மாட்டுக்கறியைக் கொடுத்து தன்னுடைய சாதிப் புனிதத்தை கெடுத்து விடுவார்கள் என்ற பயம்தானே? இப்படி மிக நுட்பமாக பல உத்திகளை வகுத்து தன்னுடைய சாதிப்புனிதத்தை காப்பாற்றும் பணி தொடரத்தான் செய்கிறது.

வெண்டைக்காயில் எத்தனை விதையிருக்கிறது என்றோ, எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால் என்றோ ஆய்வு செய்து ஆய்வாளர் பட்டம் பெறுகிற படிப்பாளிகளும் அறிவாளிகளும் இன்றும் அம்பேத்கர் குறித்து ஆய்வு செய்ய முன்வருவதில்லை. அவர் ஒரு பொருளாதார ஆய்வறிஞர். அவரது முதல் ஆய்வே பொருளாதாரம் பற்றியதுதான். பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்துவதற்காக சமஸ்கிருதத்தைப் பயின்று பல மூலநுல்களை வாசித்தவர். இந்தியாவிலிருக்கும் எல்லா மதங்களின் கோட்பாடுகளையும் நுணுகிக் கற்றவர். பௌத்தத்தில் கரை கண்டவர். பத்திரிகையாளர். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி.

அவரது கட்டுரைகளில் ஒரு பத்தியில் குறிப்பிடும் மேற்கோள்களையும் அடிக்குறிப்புகளையும் புரிந்துகொள்ள நீங்கள் இன்னும் பத்து நூல்களைப் படிக்க வேண்யிருக்கும். ஆனாலும் அவரது பன்முகப்படட ஆளுமையையும் மேதமையையும் அறிவுலகத்திற்கு வழங்கிய கொடைகளையும் தொட்டுப்பார்க்கவும் அருவருப்பு கொண்டுள்ளனர். அவரது ஆய்வுமுறைமைகளைத் தொடர்ந்து சென்று ஒரு புதிய சிந்தனைப்பள்ளியை வளர்த்தெடுக்காமல் போனதற்குக் காரணம் இந்திய படிப்பாளிகளும் ஆய்வாளர்களும் கடைபிடிக்கிற தீண்டாமை தானே? இதேகதி தான் புலேவுக்கும் அயோத்திதாசருக்கும் நேர்ந்திருக்கிறது. அவர்களை முன்வைத்து நடந்த ஆய்வுகளெல்லாம் தலித்கள் மேற்கொண்டதுதானேயன்றி தலித்தல்லாதவர்களால் அல்ல.

நீங்கள் தொடர்ந்து பெரியாரை முன்னிறுத்தி எழுதுகிறீர்கள். சாதி ஒழிப்பில் அவரின் பங்களிப்பு மிக முக்கியம் என்பது தான் காரணமா அல்லது அவர் கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கியமான ஆளுமை என்று நீங்கள் கருதுகிறீர்களா?

இட ஒதுக்கீடு, நாத்திகம் போன்றவற்றுக்காக பெரியாரைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள், அவரை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். பெரியார் கடவுளை மறுத்ததால் மட்டும் தான் ஆதிக்க சாதிக்காரர்கள் அவரை விமர்சிக்கிறார்களா என்றால் இல்லை. அவர்களிலும் கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ‘இந்திய சமூகம் சமத்துவமின்மையின் மீது கட்டப்பட்டிருக்கிறது’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். அதே அலைவரிசையில் தான் பெரியாரும் செயல்பட்டார். அதுதான் ஆதிக்க சாதியினரின் விமர்சனத்திற்குக் காரணம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள், இயக்கங்கள் எல்லாமே ஒடுக்கப்பட்டவர்களிடம் மட்டும்தான் பேசின. ஆனால் ஒடுக்குகிறவர்களிடமே தாக்குதல் நடத்தியவர் பெரியார் ஒருவர்தான். கஷ்டப்படுபவனை பார்த்து நீ கஷ்டப்படுகிறாய் என்பதும், அதை அவன் ஏற்றுக்கொள்வதும் மிக இயல்பானது. ஆனால் ஒடுக்குகிறவனைப் பார்த்து, ‘நீ அவனை ஒடுக்குகிறாய்’ என்று சொல்லும் தைரியம் பெரியாருக்கு மட்டும்தான் இருந்தது.

ஒடுக்குமுறைகளின் அடிப்படைகளைக் கண்டறிந்து அதை நீக்குவது தான் மார்க்சிய தத்துவம். இந்தியாவில் ஒடுக்குமுறையின் அடிப்படையாக சாதியம் இருக்கிறது. அந்த அடிப்படைகளின் மீது கைவைக்கிற நிகழ்வாக பெரியாரின் பேச்சும் செயல்பாடும் இருந்தது. சாதி ஒழிப்பு என்பதிலும், வருணாசிரம எதிர்ப்பு என்பதிலும் பெரியார் அம்பேத்கரோடு ஒன்றுபட்டார். இந்த விஷயங்கள் தான் அவர்களுக்குள் தொடர்பு ஏற்படக் காரணமாக இருந்தது.

பெரியாரை ஆதரிப்பதற்கும், அவரை முன்னோடியாக நிறுத்துவதற்கும் பல்வேறு காரணங்களை சொல்லலாம். அதில் சிலவற்றையாவது வாசிப்பின் வழியாகத் தெரிந்து கொண்டதால் அவரை முழுவதுமாக ஆதரித்துப் பேசுகிறேன். அதனால் அவரை நான் என் முன்னோடியாகவும் கருதுகிறேன். பெரியார் மீது சில இடங்களில் இடதுசாரிகளுக்கு விமர்சனம் உண்டு. அதற்காக அவர்கள் பெரியாரை எந்த இடத்திலும் நிராகரிக்கவேயில்லை.

வகுப்புவாதப் பிரச்சனைகள் தலைதூக்கும்போது நாம் போராட்டங்களை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கட்டம் வரைக்கும் பெரியார் நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியைத்தான் நாம் மேற்கொண்டாக வேண்டும். கேரளாவில் நாராயணகுருவை உள்வாங்கிக் கொண்டு இடதுசாரிகள் செயல்படுவதுபோல் தமிழ்நாட்டிலும் பெரியாரை உள்வாங்கிக் கொண்டு செயல்படலாம்.

பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றும், பெரியார் ஒரு பிள்ளையார் சிலையை உடைக்கப்போய் தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் வந்துவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்களே, உண்மையா?

பிள்ளையார் சிலையை பெரியார் உடைத்ததை அந்தக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, சிலையை பெரியார் உடைத்ததற்கான சமூகக் காரணத்தைத்தான் விளக்கவேண்டுமே தவிர பெரியாரை அல்ல. மூடநம்பிக்கை கரைபுரண்டோடி, மொத்த சமூகத்தையும் அடித்துப் புரட்டுகிறபோது, அதைத் தடுத்த நிறுத்த, கைக்கு கிடைத்ததையெல்லாம் பயன்படுத்துகிற பதற்றம் பெரியாருக்கிருந்தது.

மக்களிடம் மூடநம்பிக்கை எந்த மட்டத்தில் இருக்கிறதோ அந்த மட்டத்தில் போய் பெரியார் அதை மறுத்துக் காட்டினார். ‘கடவுளுக்கு எல்லாவற்றையும் காப்பாற்றும் சக்தி இருக்கிறதென்றால், நான் கடவுளை உடைக்கிறேன், முடிந்தால் அவர் அவரையாவது காப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று சொல்லும் விதமாகத் தான் பிள்ளையார் சிலையை உடைத்தார். ‘என்னை கடவுள் படைத்தார், அவர் தான் என் தலையெழுத்தை எழுதி என்னைக் காப்பாற்றுகிறார்’ என்ற மக்களின் நம்பிக்கையை உடைப்பதற்காகத் தான் அவர் அதைச் செய்தார்.

எந்த ஒரு தத்துவமும் மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் கடவுள் என்கிற தத்துவம் மட்டும் மக்களை பயமுறுத்தி மூடனாக மாற்றுகிறது. எனவே அதிலிருந்து மக்களை மீட்பதற்கு தன்னாலான வழிகளை அவர் செய்தார். அதை வறட்டு நாத்திகவாதம் என்று ஒதுக்கிவிட முடியாது. தெருவுக்குத்தெரு பிள்ளையார் வைத்தவர்கள் யார்? ஏற்கனவே பிள்ளையாரை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள்தானே? பெரியார் செயல்பாட்டில் கடுப்பாகிப் போய் எந்த நாத்திகனும் ஆத்திகனாகிவிடவில்லையே? பெரியாரே சொல்வதுபோல், வேறெவரும் இந்தக் காரியங்களை செய்வதற்கு முன்வராததால்தானே அவர் செய்ய வேண்டியதாயிருந்தது?

பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றே வைத்துக்கொள்வோம். அதை நிராகரித்துவிட்டு விஞ்ஞானப்பூர்வமான நாத்திகத்தை மக்களிடம் பரப்புவதை யார் தடுத்தார்கள்? ஒவ்வொரு அரசாங்க அலுவலகமும் இந்துமதத்தினருக்கு மட்டுமேயானது மாதிரி பூசை, புனஸ்காரங்கள் அங்கே நடக்கிறது. இந்துக்கடவுள்களின் விக்கிரகங்களும் சிலைகளும் இல்லாத அலுவலகமே கிடையாது. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நடக்கிறது. அங்கிருக்கிற தொழிற்சங்கங்கள் உணர்வுமட்டம் தாழ்ந்துபோய் இதிலெல்லாம் பங்கெடுப்பதாய் மாறிவரும் கொடுமை நடக்கிறது. மத உணர்வுகள் பாதிக்கப்படும்னு சொல்லி எந்த இடத்திலும் நாம் நாத்திகம் பேசுவதில்லை, பகுத்தறிவு பற்றியும் பேசுவதில்லை, விஞ்ஞானக் கண்ணோட்டத்தை வலியுறுத்துவதில்லை. இப்போது யோசித்துப் பாருங்கள், பெரியார் செய்தளவுக்கு நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்று?

சமூக நீதிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளை நீங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். நீதித்துறையின் இந்தப் போக்கிற்கு என்ன காரணம்?

நம்முடைய நீதித்துறை என்பது மக்களுக்கு நீதி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. ஆங்கிலேயர்கள் இங்கு வியாபாரம் செய்யும்போது அதை எதிர்ப்பவர்களை அடக்குவதற்காகத்தான் இந்திய நீதித்துறை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு நீதிமன்றங்கள் வேறுமாதிரியாக செயல்பட ஆரம்பித்தன. மக்கள் இந்த ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இழக்கும்போது நீதிமன்றம் திடீரென்று சுறுசுறுப்படைந்து மக்களுக்காக பேசுவதுபோல் செயல்படும். மக்கள் செயலற்றுப் போய் அரசு அவர்களை அடக்கும்போது நீதிமன்றம் அரசோடு தன்னை இணைத்துக் கொள்ளும்.

அரசு சார்பில் வேலைக்கு ஆட்களை எடுப்பதில்லை. கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை கொடுக்கப்படுவது இல்லை. அரசு வேலைக்கு சமூக பாதுகாப்பு இல்லை. ஆனால் அதற்கு ஆதரவாக நீதிமன்றம் செயல்படுகிறது. அரசு ஊழியர்கள் இறந்துபோனால் அவர்களது வாரிசுக்கு வேலை தரவேண்டியதில்லை என்று ஒரு வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. பலமுறை எச்சரித்தும் மனைவியின் நடத்தையில் மாற்றமில்லை என்பதற்காக அவளைக் கொன்றுவிட்ட கணவனை நிரபராதி என்று தீர்ப்பளிக்கிறது ஒரு நீதிமன்றம்.

நீதிமன்றங்கள் குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கவில்லை. தனிநபரைச் சார்ந்து தான் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. நீதி வழங்கும் இடத்தில் இருப்பவர் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராகவோ, ஆணாகவோ பெண்ணாகவோ, ஒரு மதத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கிறார். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் ஏதோ ஒரு பிரிவில் வருகிறார். உலக விஷயங்களில் அவருக்குத் தனித்த கருத்து இருக்கிறது. அந்த கருத்துக்களுக்கு ஆதரவாக சட்டப்புத்தகத்தில் இருப்பவற்றை சொல்வதற்குத்தான் அவர் முயற்சி செய்கிறார்.

நம்முடைய சமத்துவமற்ற சமூகத்தை கட்டிக்காப்பாற்றும் வேலையைத் தான் எல்லா அரசு அலுவலகங்களும் செய்து வருகின்றன. அதே வேலையைத்தான் சட்டப்புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு நீதிபதிகளும் செய்கிறார்கள். வளமான நிலங்களை ஆக்கிரமித்து பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுவது பற்றியோ, விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனைகள் பற்றியோ அவர்கள் வாயே திறப்பதில்லை. எய்ட்ஸ் சாவுகள் பற்றியும் ஹெல்மட் பற்றியும் குதிக்கிறவர்கள் தினமும் பட்டினியால் சாகிறவர்களைப் பற்றியோ சாதி வெறியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டு இறக்கிற தலித் பெண்களைப் பற்றியோ சுண்டுவிரலைக்கூட அசைப்பதில்லை.

நெய்வேலி லிக்னைட் நிறுவனம் ஆரம்பித்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னமும் நஷ்ட ஈடு கிடைக்கவில்லை. பத்திரிகைச் செய்தியைப் பார்த்து அதையே ஆதாரமாகக் கொண்டு பல வழக்குகளை தானே முன்வந்து நடத்துகிற நீதிமன்றங்கள் இம்மாதிரியான பிரச்னைகளில் வழக்கு தொடுத்தாலும் தீர்ப்புகளை வேறுமாதிரியாகத் தருகின்றன. உலகமயமாக்கல் நடவடிக்கை முழுவதையும் கொள்கைப் பிரச்னை என்று சொல்லி தலையிட மறுக்கிறது நீதித்துறை. ஆனால் இடஒதுக்கீடு, ஆதம் பாலம் மாதிரியான விவகாரங்கள் வந்துவிட்டால் தேவையில்லாமல் நீளநீளமாக பேசத் தொடங்குகிறது.

இதற்கெல்லாம் நீதிமன்றத்தின் ஒற்றைச்சாதி அமைப்பு முறை தான் காரணம். அந்த ஒற்றைச்சாதி அமைப்பும் அவர்களின் வளர்ப்பு முறையும் அதன் வழியாக அவர்கள் உலகைப் பார்ப்பதற்கு கிடைக்கும் கண்ணோட்டமும் தான் இதற்கெல்லாம் காரணம். இது நம் சமூகத்தின் சமத்துவமற்ற நிலையைப் பாதுகாக்கத் தான் பயன்படுகிறது. சட்டத்துக்கு எல்லோரும் கட்டுப்பட்டவர்கள் என்று சொல்கிறோம். அந்த சட்டம் நீதிபதிக்கு கட்டுப்பட்டது. நீதிபதி அவரது சாதிக்கும், வளர்ப்பு முறைக்கும் கட்டுப்பட்டவராயிருக்கிறார்.

சாதியொழிப்பு, உலகமயமாக்க எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைக்களுக்கான போராட்ட வடிவங்களில் காணப்படும் போதாமையை நீங்கள் உங்கள் படைப்புகளில் சுட்டிக்காட்டி வருகிறீர்கள். போராட்ட வடிவங்களில் என்ன மாறுதல்களை எதிர்பார்க்கிறீர்கள்?

மறியல், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற எல்லாப் போராட்டங்களுமே அடிமைப்பட்டிருந்த நாட்டில் சுதந்திரத்தை மீட்டெடுக்க கண்டறியப்பட்ட வழிகள். சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகளாகியும் அந்த போராட்ட வடிவங்களை நாம் இன்னமும் மாற்றிகொள்ளவில்லை. புதிய சூழலை உள்வாங்கிக் கொண்டு ஏட்டளவில் இருக்கக்கூடிய சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு புதிய போராட்டங்களை நடத்தவேண்டும். நம்மிடையே போர்க்குணம் இல்லாததால்தான் போராட்ட வடிவங்கள் மழுங்கியிருப்பதாகக் கூட கொள்ளலாம்.

சுதந்திரத்திற்கு முன்பு நான்குபேர் ஒரு இடத்தில் நோக்கமின்றி கூடுவதும்கூட தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தடையை எதிர்த்து பொதுமக்கள் ஒரு இடத்தில் கூடுவது புரட்சி என்று கருதப்பட்டது. இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் அனைத்திற்கும் காவல்துறை அனுமதி அளிக்கிறது. அவர்களின் அனுமதியோடு நடத்தப்படுவது எந்தவகை போராட்டம்?

அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சேவை செய்யும் அரசு அலுவலகத்தை மறியல் செய்தோம். இன்று நம் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு அலுவலகத்தை மறிக்கிறோம். மறியல் தொடங்கியவுடனேயே காவல்துறை மறியல் செய்பவர்களைக் கைது செய்து பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கிறது. மறியல் என்பது காவல்துறைக்கும் மறியல் நடத்துபவர்களுக்குமான பிரச்சனையாக மாறிவிடுகிறது.

அன்றைக்கு உண்ணாவிரதம் என்று தன்னைத்தானே வருத்திக்கொண்ட போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டபோது பிரிட்டிஷ்காரர்களே பயந்தார்கள். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. ஒரு லட்சம் விவசாயிகள் பட்டினியால் தற்கொலை செய்து கொண்டதாக ‘சாய்நாத் அறிக்கை’ சொல்கிறது. ஒரு லட்சம் விவசாயிகளின் மரணத்தைப் பார்த்தும் மனமிரங்காத அரசும், அதிகாரிகளுமா, ஒருவேளை பட்டினிப் போராட்டத்தைப் பார்த்து மனமிரங்கப் போகிறார்கள்? அந்தளவிற்கு நேர்மையானவர்களையும் இரக்கவான்களையுமா நாம் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறோம்? இன்றைக்கு இருக்கிற ஆட்சியாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிற போராட்ட வடிவங்களை நாம் கண்டெடுக்க வேண்டும்.

மேலும் நம் போராட்டங்கள் முழுவதும் ஆண்களை முன்னிறுத்தியே இருக்கின்றது. பெண்களைப் பற்றி யோசிக்காமலேயே எல்லா முடிவுகளையும் எடுத்து வருகிறோம். காந்தி ஏற்றுக்கொண்ட அரை நிர்வாண முடிவை ஏன் கஸ்தூரிபாயால் எடுக்க முடியவில்லை? காந்திக்குள் இருக்கிற ஆண்தான் அந்த முடிவை நோக்கி அவரை நகர்த்தியிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். இயக்கங்களில் இருக்கிற பெண்களை கலந்தாலோசிக்க வேண்டும்.

பொது வேலை நிறுத்தம் என்று சொல்கிறோம். ஆனால் இதில் விவசாயிகள் எப்படி இதில் கலந்து கொள்ள முடியும்? அந்தந்த வேலைகளுக்கு ஏற்ப போராட்ட வடிவங்களும் நம்மிடம் இல்லை. எல்லாவற்றையும் மாற்ற வேண்டிய நேரமிது. சில நூதன வடிவங்கள் உடனடி கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் அதன் செயல்பாட்டெல்லை குறுகியது. தேசிய பிரச்னைகளில் குறுக்கிடக்கூடிய வெகுமக்களை ஈர்த்துக்கொள்ளக்கூடிய வடிவங்களை கண்டடைய வேண்டும்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக ரகளை பண்ணுகிறவனும் சமத்துவம்கிறான். நேற்று கட்சி ஆரம்பித்த சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயர் வைத்திருக்கிறார். வரவேற்கனும். ஆனால் சமத்துவம் என்றால் யாருக்கும் யாருக்கும் சமத்துவம்? அந்த சமத்துவத்தைக் கொண்டு வர உங்களிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது? இல்லையென்றால் எதுக்கு இந்த வார்த்தை ஜாலம் என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

போராட்ட முடிவுகளைக் கூட ஆண்களே எடுப்பதாகப் பேசினீர்கள். சமூகம் சார்ந்த விஷயங்களில் பெண்களின் பங்கு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

அவர்கள் படிப்பு, வேலை என்று வெளியில் வரத் தொடங்கிவிட்டார்கள். சமூக நிகழ்வுகளில் அவர்கள் அதிகம் பங்கு பெறுவது இன்னும் நடைபெறவில்லை. 123 ஒப்பந்தம் மாதிரியான பிரச்சினை தொடர்பான கருத்தரங்குகளில் ஆண்கள் அதிகம் கலந்து கொள்கிறார்கள். அந்த ஆண் வீட்டுக்குப் போகும்போது இந்த ஒப்பந்தம் குறித்து என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே தெரியும் என்ற அகங்காரத்தில் செல்கிறான். அதனால் அவன் தன் மனைவியை இரண்டாம் பட்சமாகக் கருதுகிறான்.

ஆண்களின் தகவல் அறிவை நாம் அதிகரிப்பது அவனுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்து விடுகிறது. ஆண்களின் சபையாக சமூகத்தை மாற்றிக் கொண்டிருப்பதை அனுமதிக்கக் கூடாது. தலித்துகளுக்கு என்று கட்சி உருவாக்கப்பட்டு எங்களது ஓட்டுகளை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்ற நிலை வந்தபோது, மற்ற கட்சியினர் தலித் பிரச்சினைகளைப் பேச முன்வந்தார்கள். அதுபோல பெண்களுக்கென்று தனிக்கட்சி வரும்போது பிற கட்சிகளும் பெண்களின் பிரச்சனைகள் குறித்து பேச முன்வருவார்கள்.

ஒரு நாவலுக்கான விஷயத்தை ஒரு கவிதையாக எழுதுகிறீர்கள். மற்றவர்கள் கட்டுரையாக எழுதிக் கொண்டிருக்கும் உலகமயமாக்கல், சதாம் கொலை போன்ற சமகாலப் பிரச்சினைகளை, செய்திகளை நீங்கள் சிறுகதையாக எழுதுகிறீர்கள். ஒன்றை எழுத ஆரம்பிக்கும்போது, இது கதைக்கானது, இது கவிதைக்கானது என்பதை எப்படி தீர்மானிக்கிறீர்கள்?

இப்படித்தான் எழுதவேண்டும் என்று எதையும் திட்டமிட்டு எழுதுவதில்லை. நாம் பார்க்கிற, நமக்குள் தோன்றுகிற விஷயங்கள் ஒரு கட்டத்தில் எழுத்தாக வெளிவருகிறது. அது எந்த வடிவத்தில் வரவேண்டும் என்பதை அதுதான் தீர்மானிப்பதாக நான் நினைக்கிறேன். நான் எந்த மாதிரியான எழுத்தாளன், என்னுடைய பாடுபொருள் என்ன, கதைமாந்தர்கள் யார் என்று ஏற்கனவே ஒரு தீர்மானம் இருக்கிறது. அந்த நோக்கத்திற்கு இசைவாகத்தான் நமது மனம் இயங்கிக் கொண்டிருக்கும். முடிவற்ற அந்த இயக்கத்தின் ஒரு கட்டமாகத்தான் எழுதத் தொடங்குகிறோம்.

சமகால பிரச்சனைகளை கதைக்குள் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டீர்கள். சங்க இலக்கியத்தை வைத்துக்கொண்டு அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறைகள், இயற்கை, அரசு அமைப்பு, ஆண் பெண் உறவு என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். அவற்றைப் படிக்கும்போது, ‘இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 2007ம் வருடத்தை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவார்களே, இதை நாம் பதிவு செய்திருக்கிறோமா’ என்ற கேள்வி எனக்குள் வருகிறது.

வாழும் காலத்தை என்னவாக எதிர்கொண்டோம் என்ற கேள்வி மிக முக்கியமானது. சதாம் உசேன் கொல்லப்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதிலை நான் நம் சந்ததியினருக்கு சொல்லிச் செல்ல வேண்டியிருக்கிறது. சதாம் உசேன் கொலை குறித்து இங்கு என்ன பதிவு இருக்கிறது? அஞ்சலிக் கவிதை, ‘வருந்துகிறோம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போன்றவற்றை எழுதுவதில் எனக்கிருந்த அலுப்புதான் என்னை சதாம் உசேன் குறித்து சிறுகதை எழுதத் தூண்டியது.

அதேபோல் தான் உலகமயமாக்கலும். உலகமயமாக்கல் ஏதோ நேற்று தோன்றிய ஒரு விஷயமல்ல. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதே உலகமயமாக்கல்தானே. தமிழ்நாட்டில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்படுவது முந்தைய உலகமயமாக்கலின் அடையாளம் தானே. உலகம் தனக்குள் பரிவர்த்தனைகளை நிகழ்த்திக் கொண்டு ஒரு சமூகமாய் இணங்கி வாழ கடந்த காலத்தில் செய்த இப்படியான முயற்சிகளுக்கு மாறானது இப்போது நாம் பேசுகிற உலகமயம்.

நான் வாழும் காலத்தில் இந்த உலகமயமாக்கலின் ஒரு புதிய வடிவத்தைப் பார்க்கிறேன். இரண்டாவது பத்தாண்டு சீர்த்திருத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது சீர்திருத்தமா, சீரழிவா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அது சீர்திருத்தம் கிடையாது என்று எனக்குத் தெரிகிறது. மூன்றாம் உலகநாடுகளின் வளங்களை கொள்ளையடிக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்களையே உறிஞ்சுகுழல்களாகப் பயன்படுத்தும் இந்த ஏற்பாடு வெறும் அணா பைசா விசயம் அல்ல என்பது புரிகிறது. ஆனால் இந்தக் கொடுமையை தனிநபராக எதிர்க்கும் வல்லமை எனக்குக் கிடையாது. எனவே எனக்குத் தெரிந்த எழுத்தின் வழியாக என்னுடைய எதிர்ப்பை நான் பதிவு செய்யகிறேன்.

எழுத்தைத்தவிர இடதுசாரி இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், மேடைப்பேச்சு என்று பல தளங்களில் இயங்கி வருகிறீர்கள். சாதியத்துக்கு எதிரான உங்களது செயல்பாட்டுக்கு எழுத்து மட்டுமே போதாது என்று கருதுகிறீர்களா?

தனது துயரங்களைப் புரிந்துகொள்கிற ஒரு சமூகச்சூழலை உருவாக்குவதும் ஒடுக்கப்பட்டவர் சார்பாக எழுதுகிறவர்களின் வேலையாகிறது. எனவே எழுதிக் கிழித்ததோடு என் வேலை முடிந்துவிட்டது என்று நான் தூங்கப் போய்விட முடியாது. என் எழுத்துக்களோடு மக்கள் சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளோடு ஊடாட்டம் கொள்ள வேண்டியிருக்கிறது. எழுத்து எப்படி தனிநபர் செயல்பாடோ அதைப்போன்றது தான் பேச்சும். பேச்சு என்பது அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டியிருக்கிறது. எனவே சொற்பொழிவாக அல்லாமல் உரையாடலாகத் தான் அமைத்துக்கொள்கிறேன். சமூகத்தை மொன்னையாகப் பார்ப்பதிலிருந்து விலகுகிற, அதன்மீது கேள்விகளை எழுப்புகிற, பிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என்ற விமர்சனப்பார்வையை உருவாக்குவது தான் இந்த உரையாடலின் நோக்கம்.

ஆரம்பத்தில் கவியரங்க மேடைகளில் கவிதை வாசித்திருக்கிறீர்கள். கவியரங்கக் கவிதைகள் மிகவும் எளிமையானவை. தற்போதைய உங்களது கவிதைகள் சற்று சிக்கலான மொழிநடையில் அமைந்திருக்கின்றன. அடுத்தகட்டமாக இசைப்பாடல்களும் எழுதுகிறீர்கள். அவை மிக எளிய நடையில் இருக்கின்றன. மூன்றையும் எப்படி பார்க்கிறீர்கள்?

கவியரங்கத்தில் வாசிப்பது தான் கவிதை என்ற காலகட்டத்தில் நானும் கவியரங்கக் கவிதைகள் வாசித்திருக்கிறேன். பின்னர் அதில் நிறைய கேள்விகள் வந்தது. உலகின் மிகப்பெரிய தத்துவங்கள் கூட ஒருமுறை தான் சொல்லப்படுகின்றன. கவியரங்கக் கவிதைகள் அதையும் மீறியதா, எதற்காக இரண்டிரண்டு தடவை வாசிக்கவேண்டும் என்ற கேள்வி வந்தது. பார்வையாளர்களின் கைத்தட்டலுக்காக கவிதையை நிறுத்தி நிறுத்திப் படிப்பது, குரலில் ஏற்றஇறக்க மாற்றங்களைக் காண்பிப்பது போன்றவை சலிப்பைத் தந்தது.

ஒரு கவியரங்கக் கவிதையை பத்துநாட்களுக்குப் பின்னர் படித்தால் அதன் தேவையை அது இழந்திருக்கும். ஒரு பத்திரிகை செய்தி அளவுக்குத்தான் அதன் ஆயுளும் இருக்கும். எதிரில் அமர்ந்திருப்பவர்கள் வாசகர்களோ, இலக்கியவாதிகளோ அல்ல. கேட்பதற்காக வந்திருப்பார்கள். அவர்களுக்காகப் படிக்கும்போது அர்த்தமற்ற வார்த்தைகளின் தொகுப்பாகக்கூட கவிதைகள் அமைந்திருக்கும்.

பாடல் என்று வரும்போது அதைக் கேட்பவர்கள் இலக்கியவாதிகள் அல்ல, வெகுஜன மக்கள். அவர்களுக்கு என்னுடைய கருத்தை சொல்வதற்காக என்னுடைய மொழி நடையை தளர்த்திக் கொள்கிறேனே தவிர கருத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. பாடல் என்பது ஒரு கருத்தை சொல்வதற்கான திட்டமிட்ட வேலை. கவிதை என்பது அப்படியல்ல. வேறுவேறு அனுபவங்களை எழுத வரும்போது முன்னில் இருந்து இறுக்கமான செறிவான மொழி கிடைத்தது. தொடர்ந்த வாசிப்பும் எழுத்துப்பயிற்சியும் உள்ளவர்களுக்கு இது வாய்க்கக்கூடியதுதான்.

எழுத்தாளர்களில் சிலர் எழுதுவதையே பெரிய புரட்சி என்றும், ‘நான் உங்களுக்காக எழுதுகிறேன், உங்களுக்காக நான் என்னையே தியாகம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் என்னைப்பற்றி இந்த சமூகத்திற்கு எந்த அக்கறையும் இல்லை. குடிப்பதற்குக் கூட காசில்லை. வேறுநாட்டில் எழுத்தாளர்களை எப்படியெல்லாம் மதிக்கிறார்கள். தமிழ்நாட்டில் தான் இந்த நிலைமை’ என்றும் தொடர்ந்து புலம்பி வருகிறார்களே?

புலம்புபவர்கள் தங்கள் எழுத்தையே இலக்கியச் சேவையாக கருதினால் நான் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சமூகத்தில் எந்த ஒரு விஷயம் என்னை சுலபமாக கடந்து செல்ல அனுமதிக்கவில்லையோ அதைத்தான் அந்த இடத்தில் நின்று எதிர்கொண்டு ஒரு எழுத்தாளனாக நான் எழுதுகிறேன்.

தெருவில் ஒரு சண்டை நடக்கிறது. அந்தப் பக்கமாக செல்லும் ஒருவர் அதை விலக்கி விட்டு விட்டு செல்கிறார். அதை அவர் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதில்லை. அதே வேலையை ஒரு எழுத்தாளன் செய்தால் அதை அவன் எழுத வேறு செய்கிறான். அதற்காக எழுத்தாளனை கொண்டாட வேண்டும் என்றும் அவன் நினைத்தால் அது அவனுடைய தவறு தான். தங்களுக்கு ஏற்படும் மனக்கிளர்ச்சியை, அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காகத் தான் எல்லோரும் எழுதுகிறார்கள். அப்படி எழுதுவதை எழுத்தாளன் தியாகம் என்று நினைத்தால், அதைப் படிக்கிற நானும் தியாகி தான் என்று வாசகர்களும் சொல்லலாமே. எழுதுவது என்பது தியாகம் சம்பந்தப்பட்ட விஷயமே கிடையாது.

சமூகத்தோடு தொடர்ந்து இணைவதும், முரண்படுவதுமாகத் தான் நாம் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதை நாம் எழுத்து வழியாகத் தெரிவிக்கிறோம். மற்றவர்கள் ஏதோ ஒரு மீடியம் வழியாகத் தெரிவிக்கிறார்கள். தன்னைப் பற்றிய பெருமையிலோ, கழிவிரக்கத்திலோ தம்பட்டம் அடிக்கும் செயல்தான் இது.

ஒரு புத்தகத்தையோ, நாடகத்தையோ படிக்கும் அல்லது பார்க்கும் வாசகனோ, நேயரோ அதனால் பாதிப்பு அடைந்தால் அவனது மனதில் சிறு கீறலோ, அசைவோ ஏற்பட்டால் அவன் வேண்டுமானால் எழுதியவனைப் பாராட்டலாம். அதை விடுத்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதற்காக, ஷீல்டு வாங்கி ஜோல்னாப் பையில் வைத்துக்கொண்டு அலைவது தேவையற்ற விஷயம். சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டுத்தான் உலகம் விடிகிறது என்று சொல்வதோ, தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அபத்தமான காரியம்.

வேதம் படிப்பதற்கு குறிப்பிட்ட சாதியில் பிறக்கவேண்டும் என்பதைப் போலவே இலக்கியம் படைப்பதற்கு தனி ஆளுமை வேண்டும், அறிவு வேண்டும், தேஜஸ் வேண்டும், இன்னும் என்னென்னமோ வேண்டும் என்று கூறுகிறார்கள். இதன்மூலம் எழுத்தாளர்களைப் புனிதப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதனால் எழுத்தாளனை இந்த சமூகம் கொண்டாடுவதற்குப் பதிலாக தன் எழுத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டு எழுத்தாளன் தன்னைத் தானே கொண்டாடிக் கொண்டிருக்கிறான்.

கலைஞனைக் கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று சொன்னால் உழவனையோ, தொழிலாளியையோ கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டு விடுமா? நீ எழுதும் கவிதைகளைத் தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கும் எந்த அவசியமும் இந்த சமூகத்துக்குக் கிடையாது. இந்த சமூகத்தைப் பதிவு செய்கிறவனாக, உன் கருத்தைத் தெரிவிப்பவனாக இருக்கும் பட்சத்தில் உனக்கான அளவில் இந்த சமூகம் உன்னை கொண்டாடத் தான் செய்கிறது. உனக்கு குடிப்பதற்குக் காசில்லை என்பதெல்லாம் இந்த சமூகத்தின் பிரச்சனையும் கிடையாது.

இவர்களைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

எழுத்தாளர்கள் அரசியலுக்கு வரும்போது, இலக்கியவாதியாக யாரையெல்லாம் விமர்சித்தார்களோ, அவர்களையெல்லாம் அரசியல்வாதியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களே?

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதுபற்றி எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் பார்வையற்றவர்களின் விழியாக, குரலற்றவனின் குரலாக என்னுடைய எழுத்து ஒலிக்கும் என்று இலக்கியவாதியாக இருக்கும்போது இவர்கள் தங்கள் படைப்புக்கு பல பீடிகைகளை வைத்திருந்தார்கள். அதற்கு இசைவான அரசியலை தேர்ந்தெடுக்கிறார்களா என்பதுதான் எனது கேள்வி. பதவி, அதிகாரம் என்ற இரண்டு வழிகளில் பொருளாதார ஆதாயத்தை தேடிக் கொள்கிறார்கள். இதைத்தான் எல்லா அரசியல்வாதிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை அடைவதற்கு கூடுதல் தகுதியாக எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளையும் கட்டுரைகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இலக்கியவாதியாக இருப்பது என்பது ஒரு எதிர்க்குரல் தான். ஆனால் அதன் மூலம் வாசகனுக்கு அறிவுரைகள் கூறிவிட்டு எழுத்தாளன் மட்டும் மறுபடியும் ஆதாயத்தையும், பணத்தையும், சொகுசு வாழ்க்கையையும் தேடிப் போகிறார்கள். இதே எழுத்தாளர்கள் இடதுசாரி அமைப்பிலுள்ள எழுத்தாளர்களை கேவலமாகப் பேசிய காலங்கள் உண்டு. அவர்களால் இடதுசாரி இயக்கங்களில் செயல்படுவது தான் சிரமமான வேலையாக இருக்குமே தவிர கழிசடை அரசியல் செய்வதில் வெட்கம் எதுவுமில்லை. இதை யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதால் தான் நவீன இலக்கியம் குறித்தும் அடிக்கடி கருத்து தெரிவிக்கிறார்கள்.

சிற்றிதழ்கள் விசிட்டிங் கார்டு போல் பயன்படுத்தப்படுவதாக சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் கூறியிருந்தார். இந்த விமர்சனத்தை சிற்றிதழ் ஆசிரியரான நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

இலக்கிய பீடம் என்று ஒருவரை முடிவு செய்வது, அவர்கள் சொல்வதுதான் சிற்றிதழ், அவர்கள் சொல்பவர்கள் தான் படைப்பாளி என்று முடிவு செய்வது இதெல்லாமே அபத்தமான விஷயங்கள். இந்தியாடுடேயின் சிற்றிதழ் குறித்த பேட்டியில் மனுஷ்யபுத்திரன், சிற்றிதழ்களை விசிட்டிங் கார்டு போல் பயன்படுத்துவதாக குறிப்பிட்டிருந்ததை நானும் படித்தேன். சிற்றிதழை விசிட்டிங் கார்டு போல் பயன்படுத்தும் வேலையை அவர்தான் சரியாகச் செய்தார்.

நக்சல்பாரி பத்திரிகைகளின் மூலமாக மனுஷ்யபுத்திரன் அறிமுகமானார். காலச்சுவடு தீவிரமான சிற்றிதழாக இயங்கிக் கொண்டிருந்தபோது அங்கு சென்றார். அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு செந்திலோடு உயிர்மைக்குப் போனார். அந்த சிற்றிதழைத் தவிர அவருக்கு வேறு என்ன அடையாளம் இருக்கிறது? உயிர்மை என்கிற விசிட்டிங் கார்டை சரியான நபர்களிடம் காட்டி அதன்மூலம் ஆதாயம் பெற்று அதை தக்கவைத்துக் கொண்டது ஒரு தனிவகை சாமர்த்தியம்தான்.

வரக்கூடிய பத்திரிகைகள் தரமாக இல்லை என்று வருத்தப்பட்டால் அது வேறு விஷயம். அதை எப்படி சரியாக வெளியிட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லித்தரலாம். முன்னோடி என்பவர் செய்யவேண்டிய வேலை அதுதானே. அதைவிட்டு விட்டு எல்லோரும் பத்திரிகை ஆரம்பித்து விட்டார்கள் என்று சொல்லி வருத்தப்படுவது, ‘எல்லோரும் படிக்க வந்துட்டாங்க, வேலைக்கு வந்துட்டாங்க’ என்று பதறக்கூடிய ஆதிக்கசாதி மனநிலைதானே. அந்த மனோபாவம் மனுஷ்யபுத்திரனுக்கு எதற்கு?

தங்களின் படைப்புகளை தாங்களே பாராட்டிக் கொள்வது, அதை ஆதரித்துப் பேசுவதற்காகவே ஒரு குழுவை ஏற்படுத்திக் கொள்வது, தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வது – இவையெல்லாம் தமிழ்ச்சூழலில் அதிகரித்து வருகிறதே?

படைப்பு மனோபாவம், சொல்லாட்சி என்று விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கவிதை எழுதிவிட்டு அதை யாரும் பாராட்டாத பட்சத்தில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதற்காக கூடுகின்ற கூட்டம்தான் இது. ஒரு இலக்கிய முகாம் நடந்து முடிந்தவுடன் அங்கு நடந்த அடிதடியைப் பற்றி கிசுகிசு வருவது தவறாமல் நடக்கிறது. இந்த விவாதங்களுக்கு மையப்புள்ளியே தங்களைத் தாண்டி வெளியே ஒரு உலகம் இருக்கிறது என்பதை அறியாமல் இருப்பதுதான்.

ஆனால் இடதுசாரி படைப்பாளிகளுக்கோ, பெண்ணிய படைப்பாளிகளுக்கோ, தலித் படைப்பாளிகளுக்கோ எழுதியதைப் பற்றியே பேசுவது, அதையே சிலாகிப்பது மட்டுமே வேலை அல்ல. எந்த சமத்துவத்தை கனவு காண்கிறார்களோ அதற்கான மக்கள் இயக்கங்களில் பங்கெடுப்பது, அந்தப் பாதையில் செல்வது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். களத்திற்கு போக வேண்டியிருப்பவர்களால் தன் கவிதையை உட்கார்ந்து சிலாகித்துக் கொண்டிருக்க முடியாது.

எழுதுவதைத் தவிர எனக்கு வேறு வேலையில்லை என்பதும் எழுத்தின் மூலமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதும் முட்டாள்தனம். அதையாவது பொறுத்துக் கொள்ளலாம். தான் எழுதுவதைத் தவிர வேறு வேலை செய்யாமல் இருப்பதற்காக போலியான தத்துவங்களை அவர்கள் உருவாக்க முயல்வதைத் தான் சகிக்க முடியவில்லை.

படைப்புகளைப் பற்றி தொடர்ந்து நடைபெறும் விவாதங்களில் வாசகனுக்கு இடம் உண்டா? ஒரு புத்தகம் 1200 பிரதிகள் அச்சிடப்பட்டால் அதைப் பற்றி 1200 பேர் பேசலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் ஏழு கோடி மக்களை கொண்டது. இந்த இலக்கியம் குறித்து தெரியாமலே பெரும்பகுதி சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களோடு எப்படிப் பொருந்துவது என்று தான் யோசிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு நான் மேதாவி, அறிவுஜீவி என்று தனியாக உட்கார்ந்து விட்டால் எந்த மாற்றமும் நடக்காது.

தலித் இலக்கியத்தை தலித்கள் தான் எழுத வேண்டும் என்ற கருத்தும், அதற்கு எதிராக ‘அவர்கள் மேல் அக்கறை கொண்ட யார் வேண்டுமானாலும் எழுதலாம்’ என்ற கருத்தும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதில் உங்களது நிலைப்பாடு என்ன?

தீண்டாமையின் கொடுமையை அனுபவிக்காதவர்களால் தீண்டாமை குறித்து எழுத முடியாது. ஒரு பெண்ணின் துயரங்களை எப்படி ஆணால் உணர முடியாதோ, அதேபோல் ஒரு தீண்டத்தகாதவனின் பிரச்சனைகளை தீண்டத்தக்க சாதியை சேர்ந்தவனால் ஒருபோதும் உணர முடியாது. சமீபத்தில் ஒரு பத்திரிகையில் கோபிச்செட்டிபாளையத்தின் முன்னாள் நகராட்சித் தலைவர் லட்சுமண ஐயரின் பேட்டி வெளியானது. இந்தியாவில் கையால் மலம் அள்ளும் முறையை முதன்முதலில் கோபி நகராட்சியில் ஒழித்தவர் இவர்தான்.

அந்த முறையை ஒழித்ததற்கான காரணம் குறித்து கேட்டபோது, சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றபோது அங்கே நாங்கள் கையால் மலம் அள்ள வேண்டியிருந்தது. அந்த ஒன்று போதாதா இதை ஒழிப்பதற்கு என்று குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் உன்னை அள்ள வைத்தால் தான், இந்த வேலை எவ்வளவு துயரமானது, அவமானகரமானது என்று புரிகிறது. அந்த அவமானங்களை சந்திக்காத ஒருவனால் அது குறித்து எப்படி எழுத முடியும். மற்றவர்கள் எழுதுவதை சாதி ஒழிப்பு எழுத்து, தலித் ஆதரவு எழுத்து என்றுதான் பார்க்க முடியும்.

வேடிக்கை பார்த்து எழுதுவது என்பது வேறு. அனுபவித்து எழுதுவது என்பது வேறு. அதாவது பாவனைக்கும் உண்மைக்குமான இடைவெளி அதில் இருக்கும்.

(ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் அடுத்தடுத்த விவாதத்திற்கு இட்டுச் செல்வதாய் இருந்ததால், நேர்காணலை எங்கே முடிப்பது என்ற கேள்விக்கான பதில் சற்று எட்டியே இருந்தது. மேலும் சில கேள்விகளுடன் வேறொரு பொழுதில் நேர்காணலைத் தொடரலாம் என்ற எண்ணத்துடன் இத்துடன் நிறுத்திக் கொண்டோம்)

எங்கும் பரவும் மநுவிரோதிகள்


1927 டிசம்பர் 25 அன்று மநுஸ்மிருதியை அம்பேத்கர் எரித்தபோது வர்ணாசிரமத்தின் வாரீசுகள் அவரை பீமாசுரன் என்றும் மநுவிரோதன் என்றும் வசைபாடினர். தனது கருத்தியல் எதிராளிகளின் மனநிலையை சமன்குலைத்து சிதறடித்த அந்த இணையற்ற கலகக்காரனோடு ஒருமை கொள்ளும் முகமாகவே நான் ஒரு மநுவிரோதன் என்று என்னை பெருமிதம் பொங்க அறிவித்துக் கொண்டேன். சாதி மறுப்பாளர் என்று தன்னை மனப்பூர்வமாய் நம்பிக் கொள்கிற ஒவ்வொருவரும் இப்படி தம்மைத்தாமே அறிவித்துக்கொள்ள முன்வர வேண்டும் என்ற விழைவும் இதில் அடங்கியிருக்கிறது.

பெரிய பெரிய தலைவர்களெல்லாம் சும்மா இருக்கும்போது இவனென்ன பெரிய இவனாட்டம் ‘நான் ஒரு மநுவிரோதன்’ என்று பிரகடனம் செய்துகொள்கிறான் என்று தலைப்பைப் பார்த்ததுமே முனகத் தொடங்கியவர்களிடம் மெத்தப் பணிவோடு ஒன்றை கேட்க வேண்டியிருக்கிறது- பெரிய பெரிய தலைவர்களெல்லாம் ஏன் சும்மா இருக்கிறார்கள்? அல்லது சும்மா இருப்பதால் பெரிய பெரிய தலைவர்களாய் இருக்கிறார்களா என்பதே அது. தவிரவும் அவர்களெல்லாம் தம்மை அவ்வாறு முழுமனதோடு அறிவித்துக் கொண்டால் இந்த சமூகம் என்னவாய் உருமாற்றம் கொள்ளும் என்று இத்துனூண்டு கற்பனை செய்துதான் பாருங்களேன்…

மநுஸ்மிருதியால் இன்றளவும் ஆதாயம் அடைந்துகொண்டிருக்கிற சாதியினரைத் தவிர மற்றெல்லோரும் அதை எதிர்ப்பதற்குரிய எல்லா நியாயங்களையும் கொண்டிருக்கின்றனர். பார்ப்பனச் சாதியில் பிறந்திருந்தாலும்கூட தம்மைத்தாமே சிந்தனை மற்றும் செயல்ரீதியாக சாதிநீக்கம் செய்து கொண்டவர்களுக்கும்கூட இந்த நியாயம் இருப்பதாகவே நம்புகிறேன். எனவே தம்மை மநுவிரோதி என்று அறிவித்துக் கொள்ளாதவர்களை மநுவின் சினேகிதர் என்றோ மநுவுக்கே…… (சரி, வேண்டாம் விடுங்கள்….ஆதவன் கடாமுடான்னு பேசறார் என்ற குற்றச்சாட்டில் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும்?) என்றோ குறுக்கிப் பார்க்கும் நோக்கம் எதுவும் நமக்கில்லையாயினும், அவ்வாறு தம்மை மநுவிரோதி என்று அறிக்கையிட்டுக் கொள்வதில் ஒருவருக்குள்ள தடைதான் என்ன என்று கேட்க விரும்புகிறேன்.

மநுவை எதிர்ப்பதென்பது, இங்கு நிலவும் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு ஒடுக்குமுறை அமைப்பை எதிர்ப்பதற்கும் புரட்சிகரமாய் மாற்றியமைக்கவுமான ஒரு நெடியப் போராட்டத்தின் தொடக்கமே. உஞ்சவிருத்தி செய்து வயிற்றைக் கழுவும் நிலைக்கு தனது பொருளாதார நிலை- வர்க்கநிலை- தாழ்ந்து கிடக்கும் போதும் தனது சமூக அந்தஸ்தில் பின்னம் ஏதும் ஏற்படாமல் பாதுகாத்த மநுவைக் கொண்டாட ஒரு பார்ப்பனருக்கு நியாயம் இருக்கிறது. எனில், பெரும் கல்வியாளராகவும் செல்வந்தராகவும் சொத்துடமையாளராகவுமாகி தனது வர்க்கநிலையை பார்ப்பனரல்லாத ஒருவர் உயர்த்திக் கொண்டுவிட்டப் பின்னும்கூட, அவரது பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுவிட்ட சாதியிழிவைத் சுமந்து திரிந்தாக வேண்டிய அவலத்தை உருவாக்கிய மநுவை அவர் எதிர்ப்பதுதானே சுயமரியாதையின் அடையாளம்?

பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், சுயமரியாதை போன்ற சொற்களைக் கண்ட மாத்திரத்தில் தி.க. வாடை வீசுகிறது என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்கிறவர்கள், வசக்கி தொழுவத்தில் கட்ட முடியாத ஒரு முரட்டுப்பிராணியைக் குறித்த கவலையை வெளிப்படுத்தும் பாவனையோடு ‘ஆதவனிடம் நிறைய டீவியேஷன் இருக்கிறது’ என்று அபிப்ராயம் தெரிவிக்க கிளம்பியுள்ளனர். ஒட்டுமொத்த மனிதகுலமும் சுயமரியாதையோடு வாழும் உன்னத சமூகத்தை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் சகலத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்ற மார்க்சீயத்தின் வழிகாட்டுதலே, ஒருவர் தம்மை மநுவிரோதி என்றோ மநுவின் பரம/ஜென்ம விரோதி என்றோ அறிவித்துக் கொள்ளத் தூண்டுகிறது.

எனது ஆண்குறியை வெட்டிக் கொண்டாலும் வெட்டிக் கொள்வேனே தவிர எனது பூணூலை அறுத்துக் கொள்ளமாட்டேன் என்று ஒரு மௌனியால் பகிரங்கமாக தனது சாதியகங்காரத்தை வெளிப்படுத்த முடியுமென்றால், உயிர்நிலையான ஆண்குறியை விடவும் பெரிதென கொண்டாடுகிற அந்த பூணூலை அவருக்கு வழங்கிய மநுவை எதிர்ப்பதைத் தவிர பார்ப்பனரல்லாத பிறசாதியாருக்கு வேறு என்னதான் மார்க்கமிருக்கிறது? எனவே இப்போது, மெல்ல உதடு பிரித்து ஒருமுறை உங்களுக்கு நீங்களே ரகசியமாகவேனும் ‘நான் ஒரு மநுவிரோதி’ என்று சொல்லிப் பாருங்கள். அவ்வாறு உச்சரிக்கும்போது நாக்கு அழுகி விழுந்துவிடும் என்று அஞ்சுகிறவர்கள் சற்றே ஓரமாக உட்கார்ந்து தமக்குத்தாமே வாக்கரிசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2.

நேர்காணல் மீதான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. விமர்சனம் என்ற பொதுத்தலைப்பின் கீழ் வகைப்படுத்த முடியாத வசவுகளும் குமைச்சல்களும்கூட இதில் அடக்கம்தான். வாழ்வின் பல்வேறு தளங்களை ஊடறுத்துச் செல்வதாய் கேள்விகளும், அக்கேள்விகள் குறித்த எனது புரிந்துணர்வின் வழிகாட்டுதலில் அமைந்த பதில்களுமாய் நேர்காணல் அமைந்திருக்க, அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் ஒரு மநுவிரோதன் என்ற தலைப்பினாலேயே தொந்தரவுக்குள்ளாகி, முதல் பக்கத்திற்குள் கூட புக முடியாமல் அட்டையையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை மநு எப்போதோ வாழ்ந்து மடிந்த யாரோ அல்ல, இன்றளவும் மனிதகுலத்தின் ஆகச்சிறந்த அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே வாரி வழங்கிக் கொண்டிருக்கிற வள்ளல். எனவே மநுவின் விரோதிகளை தமது சொந்த எதிரிகளாய் வரித்துக்கொண்டு பகைமூட்டம் கொள்ளும் குணம் இயல்பாகவே வந்துவிடுகிறது. ஆனாலும் மநுவை ஆதரித்து வெளிப்படையாய் பேசமுடியாத கடும் மன அழுத்தத்தால், தமது கைகால் நகங்களை ரத்தம் பீறுமளவுக்கு கடித்துக் கொண்டிருக்கிற- கண்டதும் காய்தல் அல்லது கடுப்பாங்காய்ச்சல்- என்ற இந்த புதுவகை வியாதிக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பரிதாபம்தான்.

நேர்காணலின் பேசுபொருள்கள் பலவும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தபோதும் சாதி வர்க்கம் குறித்த எனது கருத்துக்கள் மட்டுமே விவாதத்திற்குரியதாய் மேலெழுந்துள்ளன. சாதியத்தை ஏன் எதிர்க்க வேண்டும் அல்லது கைவிட வேண்டும் என்பது குறித்த வரலாற்றுப்பூர்வமான தெளிவை எட்டியவர்கள் எனது கருத்துக்களை ஏற்கவும் உடன்நின்று விவாதிக்கவும் தலைப்பட்டுள்ளனர். பிறப்பால் எந்த சாதியினராக இருந்தபோதிலும் தனது உள்ளுணர்வு நிலையில் தங்கியிருக்கும் சாதியக்கூறுகளைக்கூட எதிர்த்து தமக்குள்ளே போராடிக் கொண்டிருக்கிற- அதுகுறித்து வெளிப்படையாய் விவாதிக்கிற பலரை நானறிவேன். சாதியப் பெருமிதத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கோடு தமக்கு கற்றுத் தரப்பட்ட நடையுடை பாவனைகள், உணவுப் பழக்கவழக்கம், வழிபாடு, நம்பிக்கை, தெய்வங்கள், திருவிழாக்கள், வாழ்க்கைவட்டச் சடங்குகள் எல்லாவற்றையும் சொந்தவாழ்வில் கைவிடுவதற்காக தமக்குள் போராடிக் கொண்டிருக்கின்ற அவர்கள் எனது கருத்தை மேலும் செழுமைப்படுத்த ஆர்வம் கொண்டுள்ளனர். சாதி கடந்ததொரு சமூகத்திற்கான விருப்பத்தை அவர்களோடு பகிர்ந்துகொள்வதில் நமக்கு எவ்வித மனத்தடையும் ஏற்படவில்லை.

ஆனால் தமது சொந்தவாழ்வில் எந்தக் கட்டத்திலும் சாதியை கைவிடாமலே, ஆனால் கைவிட்டதான பாவனையை வெளிக்காட்டிக் கொண்டிருப்பவர்கள், தமது குட்டு வெளிப்பட்டுவிட்ட அவமானத்தில் பெரிதும் மனத் தொந்தரவுக்காளாகியுள்ளனர். தாங்கள் சாதியைக் கைவிட்டு வெகுகாலமாகிவிட்டப் பின்பும் தங்களது அந்தரங்கத்தையும் நேர்மையையும் ஆதவன் சந்தேகிப்பது சரியா என்று புகார் தெரிவிக்கிறார்கள். ‘சொந்த சாதியிலேயே கல்யாணம் செய்துகொண்ட ஒரே காரணத்திற்காக எனக்கு சாதியுணர்வு இருப்பதாக எப்படி சொல்லமுடியும்?’, ‘ஆதிதிராவிடர் அல்லது அருந்ததியர் காலனியில் நான் வசிக்கப்போகவில்லை என்பதற்காக நான் தீண்டாமை பார்க்கிறேன் என்று கூறமுடியுமா?’, ‘அசைவ உணவு சாப்பிடாதது ஒரு குற்றமா?’, ‘மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டவுடனே ஒருவர் சாதிமறுப்பாளர் ஆகிவிட முடியுமா?’, ‘பழக்கமில்லாத ஒரு பண்டத்தை சாப்பிட்டாக வேண்டும் என்று வற்புறுத்துவது அராஜகமில்லையா?… மனதுக்கு ஒப்பாததை உண்ணுமாறு வற்புறுத்துவதில் பாசிசத்தின் கூறு பல்லிளிக்கிறது…’ – என்றெல்லாம் இவர்கள் எழுப்பும் பலவாறான வாதங்களின் வழியே தாங்கள் இன்னும் சாதியின் பிடிக்குள் சிக்கியிருப்பதைத்தான் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உணவைப் பற்றி பேசும்போது பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு சென்றுவிடுகின்றனர். வளர்ப்புமுறை, குடும்பச் சூழல், பழக்கவழக்கம், அதுஇதுவென்று முன்வைக்கும் சால்ஜாப்புகள் ஏராளம். தர்மம்- அதர்மம், நீதி-அநீதி என்பதில் ‘அ’ ஒட்டுடன் வருபவை எல்லாமே கீழானவை என்று அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் சைவம்- அசைவம் என்பது என்னவாக உள்வாங்கப்படுகிறது என்று பிரகதீஸ்வரன் மேடைகளில் எழுப்பும் கேள்வியின் நியாயத்தை எப்போது உணரப் போகிறோம்? ஒருவரது உணவு சைவமா அசைவமா என்பதை சாதியைத் தவிர வேறெது தீர்மானிக்கிறது? (ஜீரணக்கோளாறு போன்ற உடல் உபாதைகளை முன்னிட்டு தாவரவுணவுக்கு மாறியவர்கள் இந்த ஆட்டத்தில் சேர்த்தியில்லை).

வெவ்வேறு வகையான உணவுப் பழக்கவழக்கங்கள் இருப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் ஒருசாரார் மற்றொரு சாராரின் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து என்ன மதிப்பீடு கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியம். இன்னொருவரை இழிவாக- தீட்டாக- அசூயையாக பார்க்குமாறு வலியுறுத்தும் சாதியம் அடுத்தவரது உணவையும் அவ்வாறே பார்க்குமாறு வலியுறுத்துகிறது என்பதுதானே உண்மை? கறி தின்கிறவர் பருப்புசாம்பாரின் நாற்றம் தாங்காமல் தனக்கு குமட்டிக் கொண்டு வருவதாகச் சொன்னால் அது இயல்பானதுதானே என்று ஒத்துக்கொள்ள முடியாதவர்கள், கறி தின்னும் பழக்கம் இல்லாத ஒருவர் கறியைப் பார்த்ததும் குமட்டிக்கொண்டு எடுப்பது வாந்தியா சாதியா என்று ஏன் சந்தேகிப்பதில்லை?

‘மதியம் மாட்டுக்கறி விருந்து’ என்று மாநாட்டு அழைப்பிதழில் அச்சடித்து தனது தொண்டர்களைத் திரட்டியது தென்சென்னை தமுஎச. மற்ற அமைப்புகளுக்கெல்லாம் என்னவானது? கறி என்றதும் ஆடு, கோழி, மீன் மட்டுமே நினைவுக்கு வருவதும் மாட்டுக்கறி என்பதே நினைவுக்கு வராத செலக்டீவ் அம்னீசியாவால் பீடிக்கப்படுவதையும் எதன் பேரால் நியாயப்படுத்த முடியும்? இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களாகிய தலித்துகளின் உணவை- கறியை இழிவானதென்று பொதுஇடங்களிலும் தனிவாழ்விலும் ஒதுக்கிவைக்குமாறு சாதியம் கற்றுக் கொடுத்ததை மண்டை நிறைய நிரப்பிக்கொண்டு- அதை நியாயப்படுத்த ‘ஆதவன் எல்லாவற்றையும் க்ரூடாக பார்க்கிறான்’ என்று பழிபோடுவது எப்படி சரியாகும்? ‘இப்படி நுணுகி நுணுகி ஒவ்வொன்றிலும் சாதி பார்த்தால் என்னத்துக்கு ஆகும்?’ என்று அலுத்துக்கொள்ளும் கேள்விகள் ஆபத்தானவை. ஏற்கனவே எல்லாம் சாதியாகத்தான் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் நேர்மையின்றி, நாம் க்ரூடாய் பார்ப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். க்ரூடாய் இருக்கலாம், குருடாய் இருப்பதுதான் சிக்கல் என்று சொற்சிலம்பம் ஆட இது பொருத்தமான தருணமல்ல.

எந்தவொரு கறிக்கடையில் நுழைந்தாலும் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழிக்கறி, பன்றிக்கறி, மீன் -என எல்லாமே அடுத்தடுத்து நேர்த்தியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் மக்கள் எவ்வித அசூயை உணர்வுமின்றி எல்லாவற்றையுமே உண்பதையும் லண்டனில் கண்டபோது எனக்கு நம்மூர் கறி அரசியல்தான் நினைவுக்கு வந்து அலைக்கழித்தது. அங்கே மாட்டுக்கறி தான் விலை அதிகம். ஒரு கிலோ 6 பவுண்ட். மற்றவையெல்லாம் அதைவிட கீழ்தான். விருந்தாளியை மகிழ்விக்கும் பிரியத்தில் தோழர்கள் அழைத்துப்போன பெரிய உணவுவிடுதிகளில் பிரமிப்பூட்டும் வண்ணங்களிலும் வடிவங்களிலும் தொங்கவிடப் பட்டிருந்த மாட்டுக்கறியை ஆவல் பொங்க பார்த்துக்கொண்டேயிருந்தேன். இங்காவது நல்ல மதிப்போடு இருக்கிறாயே… ரொம்ப சந்தோஷம் என்று அங்கே தொங்கிக் கொண்டிருந்த கறிக்கொத்துகளைப் பார்த்து மனசார வாழ்த்தினேன். அங்கே உயர்வாக மதிக்கப்படக்கூடிய ஒன்று இங்கே கீழ்மைப்பட்டிருப்பதற்கு காரணம் சாதியும், அதை நியாயப்படுத்தும் இந்துமதப் புரட்டுக்கதைகளும்தான். பழக்கவழக்கத்தின் பெயரால் சாதியையும் இந்துமதத்தையும் காப்பாற்றுகிறவராக இருக்கிற ஒருவர் எப்படி சாதியைத் துறந்தவராக- மதச் சார்பற்றவராக- பொது மனிதாயப் பண்புகளை போற்றுகிறவராக தன்னை அறிவித்துக் கொள்ள முடியும்? ஆகவே மறுபடி சொல்கிறோம்- சாதியைக் கைவிடுவதென்பது முறி எழுதி கைச்சாத்து வைத்ததும் முடிந்துபோகிற விசயம் இல்லை.

எப்போதோ எழுதப்பட்ட மநுஸ்மிருதியை தூசுதட்டி இப்போது எதற்காக எதிர்க்க வேண்டும் என்கிறவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். மநுஸ்மிருதி உருவான காலம் அதன் சூழல் ஆகியவற்றுக்குள் இருத்திப் பார்த்தால் அத்தகைய கோட்பாடுகள் உருவானதற்கான நியாயத்தை உணரமுடியும் என்றும்கூட இவர்கள் வாதிடுவதுண்டு. இன்னும் ஒருபடி மேலே போய், அன்றைய தேவையை முன்னிட்டு உருவான மநுஸ்மிருதி, இன்றைக்கும் பொருந்தும் என்று சொல்வது முட்டாள்தனம் என்று மிகவும் முற்போக்கு போல வாய்வேஷமும்கூட கட்டுவார்கள். இன்றைக்கு பொருந்தாது என்ற வாதத்திற்குள் ஒளிந்துகொண்டு, அன்றைக்கு பொருத்தமாயிருந்தது என்ற நிறுவ முயற்சிக்கிற இவர்கள் உண்மையில் மநுவைவிடவும் ஆபத்தானவர்கள். மநுஸ்மிருதி எந்தகாலத்திற்கும் தேவையற்றது- நிராகரிக்கப்பட வேண்டியது என்பதை தெரிந்துகொள்ள இவர்கள் வேறெவரின் தத்துவ விளக்க நூல்களை படிக்காவிட்டாலும்கூட, திருலோக சீதாராராம் அல்லது இராமாநுஜாசாரியார் மொழிபெயர்ப்பிலான மநுதரும சாஸ்திரத்தையாவது படித்துத் தொலைக்கட்டும் என்று இவ்விடத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. அதன்பிறகாவது, மநுஸ்மிருதி செத்தப்பாம்பல்ல, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கொத்தி சமூகத்தையே நீலம்பாரிக்கச் செய்துகொண்டிருக்கிற நச்சுப்பாம்பு என்ற தெளிவு கிட்டும்.

தவிரவும் மநுவை தூசுதட்டி எடுக்கவேண்டிய அவசியம் ஒன்றும் நமக்கு ஏற்படவில்லை. ஏனென்றால் அது இன்றளவும் தன் கொடியபலத்தோடு இந்திய சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க நடைமுறையில் நூறுநூறு உதாரணங்களைக் காட்ட முடியும். மநுவுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலைவைத்தவர்களைப் பார்த்தோ, மநுஸ்மிருதியை தன் உயிரினும் மேலாய் மதிப்பதாகச் சொன்ன காஞ்சி சங்கரர்களைப் பார்த்தோ ‘ஏனிப்படி தூசு தட்டி எடுக்கிறீர்கள்’ என்று கேட்காதவர்கள் நம்மைப் பார்த்து இப்படி குற்றம்சாட்ட என்ன நியாயமிருக்கிறது? ஒருவேளை அவர்களெல்லாம் அவாள்-ளாய் இருப்பதனால் குற்றம்சாட்ட அஞ்சுகிறீர்களோ என்று நாம் கேட்டால், பார்ப்பனீய எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பாய் குறுகிவிட்டது பார்த்தீர்களா என்று சொற்சிலம்பம் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள்.

இந்த ஆதவன் என்ன சொல்லிவிட்டிருக்கப் போகிறான் என்று முன்முடிவான இளக்காரத்தோடு புத்தகத்தைப் படித்தவர்களையும் நானறிவேன். ‘நீங்கல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு, இங்க வந்து ஏன் கழுத்தறுக்கிறீங்க’ என்று பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்களைப் பற்றி ஒரு ஆசிரியருக்குள்ள அதே இளக்காரத்தின் மறுபதிப்புதான் இவர்களிடமும் இருக்கிறது. இது ஒருவகையான கெட்டித் தட்டிப்போன சாதியப் பார்வைதான். இவர்களைப் பொறுத்தவரை படிப்பது, இலக்கியத்தில் ஆர்வம் கொள்வது, பேட்டி கொடுப்பதெல்லாம் தலித்துகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம். திறந்த மனதோடு நேர்காணலை அணுக இவர்களது முன்முடிவுகள் அனுமதிக்காததால் எனது வார்த்தைகளுக்கு அவர்கள் விரும்பும் பொருளை வருவிக்க பெருமுயற்சி செய்துகொண்டிருக்கின்றனர்.

ஒரு தலித், தன் சொந்தத்துயரை, தன் சமூகத்தின் பாடுகளை சொல்லத் தொடங்கியதுமே அதை சாதியக்குரலாக அடையாளம் காட்டி, தனிமைப்படுத்தத் துணியும் அமைப்புகள்- தலைவர்கள்- தத்துவார்த்த ஆசான்கள், பார்ப்பனர் என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்தாமல் கவனமாக பிராமணர் என்று தங்களது அமைப்புகளை சொல்லப் பழகியிருப்பதன் பின்னே சாதியம் ஒளிந்திருக்கவிவ்லையா என்ற கேள்வியை எப்போதுதான் எழுப்பப் போகிறோம்? ஒரு தலித் தன் அவலத்தை எவ்வளவு உரக்கச் சொல்லலாம் என்பதைக்கூட நாங்கள்தான் வரையறுத்து இறுதிப்படுத்துவோம் என்று தலித்தல்லாதவர்கள் கூறுவார்களேயானால் அதையும் மேற்சாதி திமிர்த்தனம் என்று குற்றம் சாட்டுவதில் என்ன தவறிருக்க முடியும்? ஒரு தலித்தின் ஓலத்தைக் கேட்டால் கிழிந்து போய்விடுமளவுக்கு மென்மையான காதுச்சவ்வு கொண்டவர்கள் எங்காவது ஓரமாக உட்கார்ந்து ‘குழலூதும் கண்ணனுக்கு…’ என்று எதையாவது கேட்டுத் தொலைக்குமாறு வேண்டப்படுகிறார்கள். எல்லாம் கரெக்ட்தானப்பா, இருந்தாலும் கொஞ்சம் அடக்கி வாசி என்ற குரலுக்குள்ளும் இதே வஞ்சகம்தான் மறைந்திருக்கிறது.

3.

சாதியழிப்புப் போராட்டத்தை வர்க்கப் போராட்டத்திற்கு கீழ்ப்படுத்துவதாயும், சாதியழிப்புப் போராட்டத்திற்கு கூடுதல் அழுத்தம் தந்து வர்க்கப்போராட்டத்தின் கூர்முனையை மழுங்கச் செய்வதாயும் ‘ஒருபொருட் குறித்த இருவித குற்றச்சாட்டுகள்’ வந்துகொண்டிருக்கின்றன. அதாவது, இரண்டும் வெவ்வேறானவை என்ற பிசகான முடிவிலிருந்து இந்த கருத்துகள் வெளிப்படுகின்றன. இந்திய சமூக மாற்றத்திற்கான புரட்சியின் உள்ளடக்கம் வர்ண, வர்க்க ஒடுக்குமுறைகளை எதிர்த்தே நடைபெறும் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள இவர்களுக்குள்ள மனத்தடையே இவ்வித குற்றச்சாட்டுகளின் அடிப்படை.

நீ எங்கள் பக்கம் இல்லையென்றால், பின்லேடன் பக்கம்தான் என்கிற ஜார்ஜ் புஷ்சைப் போல இங்கும் சிலர் கேலிக்கூத்தான ஒரு வகைப்பிரிப்பை செய்து கொண்டுள்ளனர். ஒருவர் பெரியாரிஸ்டாகவோ அம்பேத்கரிஸ்டாகவோ மார்க்சிஸ்டாகவோ தான் இருக்கமுடியுமே தவிர மூவரது சிந்தனைகளையும் உள்வாங்கிச் செயல்படுகிறவராக இருக்கவே முடியாது என்றும் அவ்வாறு செயல்படத் துணிகிறவர்கள் ‘அதிலொரு கால் இதிலொரு கால் வைத்திருக்கும் ரெண்டாங்கெட்டான்கள்’ என்றும் இவர்கள் அறிவிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே இம்மூவரது சிந்தனைகளுக்குள்ளும் இருக்கும் பொதுமைப்பண்புகளை உள்வாங்கிச் செயல்படுவது தத்தமது தனித்தன்மையை இழக்கச்செய்துவிடும் என்ற பதற்றத்திலிருந்து அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும் எதிரெதிராய் களமிறக்கும் இந்த வித்தைக்காரர்கள் மைதானம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். ஆட்டத்தை இனிமேல்தான் நாம் கவனமாய் தொடர வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்ககாலம் தொட்டே மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்பதை கண்டடைவதற்கான தேடல் தொடங்கிவிட்டதை பல்வேறு ஆவணங்கள் வழியே உறுதிப்படுத்த முடியும். திட்டவட்டமானச் சூழலில் திட்டவட்டமான பிரயோகம் என்ற உட்செரிப்பும் இளக்கமும் விரிந்து கொடுக்கும் வலுவும் கொண்ட மார்க்சீயம் என்ற அறிவியலை, திடீர் ரசப்பொடிக்கான செயல்முறைக் குறிப்புபோல புரிந்துகொண்டுள்ளக்கூடாது என்ற தவிப்பிலிருந்து தொடங்கிய இத்தேடலை பின்நவீனத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புபோல சிலர் கொண்டாடுவதும், ஆகவே பின்நவீனத்துவ எதிர்ப்புப்போராளிகள் சிலர் எதிர் நடவடிக்கைகளில் இறங்கி மார்க்சீயத்தின் தூயவடிவத்தை பாதுகாப்பதான பெரும் பொறுப்பு தன்தோளில் சுமத்தப்பட்டிருப்பதான கற்பிதத்தில் அபத்தமாய் கட்டுரை எழுதுவதுமாகிய கேலிக்கூத்துகள் ஓய்ந்தபாடில்லை. மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்பதை மார்க்சீயத்தை குறைத்து மதிப்பிடுவதாய்- வீரியத்தைக் குறைப்பதாய்- திரிபாய்- பார்க்கிற மனவியாதியிலிருந்துதான் சாதியடுக்குமுறை பற்றிய விவாதங்களை வர்க்கப் போராட்டத்திற்கு எதிரானவைகளாக கண்டு பதறி ‘தத்துவப் போராட்டத்திற்கு’ களமிறங்குகின்றனர் சிலர். இதன் மறுதலையாக, மார்க்சீயம் போதாமைகளோடு இருப்பதாக கற்பிதம் செய்துகொண்டு, அந்த போதாமையை இட்டுநிரப்பும் இடைப்பொருட்களாக தலித்தியம், பெண்ணியம், சூழலியம் ஆகியவற்றை பரிந்துரைக்கும் போக்கும் நீடிக்கிறது.

ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலையைப் பற்றி பேசுவது, ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலையைப் பற்றியதாகாது என்ற ‘தனி’ தலித்திய குரலுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் விடுதலை பற்றி பேசுவது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலைக்கு குந்தகமானது என்ற ‘வறண்ட’ பாட்டாளி வர்க்கக் குரலுக்கும் இடையேயான இடைவெளியை, அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும் ஊன்றிப் பயில்வதின் மூலம் கடக்கமுடியும் என்றே நம்புகிறேன். ஊன்றிப் பயில்வது என்பதை அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறேன். அவ்வாறு பயில்வதன் மூலம், தலித் அணிதிரட்சியை வெறும் சாதிய அடையாளமாகவும், மார்க்சீய இயக்கங்களை பொருளாதாரவாதத்திற்குள் சிக்கிக்கொண்டு தத்தளிப்பவையாகவும் குறுக்கிப் பார்ப்பதிலிருந்து விடுபட முடியும். சாதியத்தை எதிர்த்துப் போராடுவதானது, உழைக்கும் மக்கள் ஒரு வர்க்கமாக அணிசேர்வதை மறிக்கிற ஒரு பெருந்தடையை தகர்த்தெறியும் போராட்டம்தான் என்று புரிந்துகொள்கிறபோதுதான் அம்பேத்கரையும் பெரியாரையும் வெற்று சீர்திருத்தவாதிகளாக தகுதியிறக்கம் செய்கிற அல்லது மார்க்சியம் போதாமையுடன் உள்ளது என்று தீர்ப்பளிக்கிற அதிமேதாவிகள் நிஜமேதாவிகளாகி தரையிறங்க முடியும் என்று ஆசீர்வதிக்கிறோம். (ஆமாய்யா, இப்படி சொல்றது அகங்காரம் தான். இப்ப என்னான்ற…?)

மார்க்சியம் அம்பேத்கரியம் பெரியாரியம் ஆகியவற்றை உள்வாங்கிக் கொள்வது என்பதை, எல்லாம் கலந்து நூறு கிராம் மிக்சர் வாங்கும் ஜனகராஜ் காமெடியாக குறுக்கியும் குதர்க்கமாயும் புரிந்துகொள்ளத் தேவையில்லை. உழைக்கும் அடித்தட்டு மக்கள் மீதான சகல சுரண்டல்களையும் எதிர்ப்பதிலும் முடிவுக்கு கொண்டு வருவதிலும் அக்கறை கொண்ட தத்துவங்கள் என்ற அடிப்படையில் அவற்றுக்கிடையேயுள்ள பொதுப்பண்புகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது புரிதலேயன்றி, மூன்றும் ஒன்றுதான் என்பதல்ல. அவற்றுக்குள் இருக்கும் வேறுபாடுகள் பகைமுரண்கள் அல்ல என்றும் இவ்விடத்தில் சொல்ல வேண்டியுள்ளது.

4.

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் இரண்டாவது தலித் மாநாட்டில் பங்கேற்க நான் இலண்டன் சென்றிருந்தததையட்டி இந்நூலின் வெளியீட்டு விழா அங்கே நடந்தது. மாநாட்டிலும் விழாவிலும் பங்கேற்றவர்களில் அநேகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளைப் புகலிடமாகக் கொண்டவர்கள். இலங்கைச் சமூகத்திலிருந்து வெளியேறி அந்தந்த நாடுகளில் குடியுரிமையும்கூட பெற்றிருக்கிறார்கள். உற்றார் உறவினர் ஆஸ்திபாஸ்தி அத்தனையையும் விட்டுவிட்டு வர முடிந்த இலங்கைத் தமிழர்களால் தத்தமது சாதியை விட்டுத் தொலைக்க முடியவில்லை என்ற துயரத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். புகலிடத்திற்கேற்றாற்போல சாதிய புறக்கணிப்புகளும் தீண்டாமையும் ஒடுக்குமுறையும் புதுவடிவம் பெற்று நீடித்திருப்பதை அவர்கள் அம்பலப்படுத்தினர். இலங்கையின் சமூக அமைப்பிலிருந்து முற்றாக வேறுபட்டு முதலாளித்துவ அமைப்பின் உச்சத்தை எட்டியிருக்கிற ஐரோப்பிய சமூகத்தில் சாதியம் நீடிப்பதற்கான தேவை என்ன வந்தது? அதேநேரத்தில் இந்திய வம்சாவளியினராய் இருந்தபோதிலும் இந்தியச் சமூகத்துடனான உறவுகளை முறித்துக் கொண்ட பிஜியர்களிடம் சாதி முனைப்பாக இல்லையென்றும் அவர்களிடம் சாதிப்பெயர் குடும்பப்பெயராக மட்டுமே தங்கியுள்ளதென்றும் ஆய்வாளர்கள் சொல்வதையும் இவ்விடத்தில் சேர்த்தே பரிசீலிக்க வேண்டியுள்ளது. பிஜியின் நிலவுறவுகளில் பேரளவிலான மாற்றங்கள் எதுவும் ரகசியமாக நடந்துவிடாத நிலையில் அங்கு சாதி எப்படி மங்கியது என்ற படிப்பினை நமக்குத் தேவையாகிறது.

அடிக்கட்டுமானமா மேல்கட்டுமானமா என்று பிரித்துணர முடியாதபடி சவ்வூடிக் கிடக்கிற சாதியமைப்பை, மேல்கட்டுமானம்தான் என்று திட்டவட்டமாக வரையறுத்துக்கொண்டு, ஆகவே அடிக்கட்டுமானம் மாறிவிட்டால் மேல்கட்டுமானம் தானேயழிந்துவிடும் என்று குடுகுடுப்பையடிக்கிற யாந்திரீக கோடாங்கிகள், வெண்டைக்காயைத் தூக்கி விளக்கெண்ணெய்யில் போட்டு வதக்கியதைப்போல ஏதேனுமொரு வியாக்கியானத்தை இதற்கும் தரக்கூடும். நமது அக்கறை அதுபற்றியதல்ல. அடிக்கட்டுமானம் மாறியதுமே, முந்தைய சமூக அமைப்பின் மேற்கட்டுமானம் தகர்ந்துவிடாது நீடிக்கவே செய்யும் என்றும் அதை எதிர்த்தப் போராட்டத்தையும் தொடர வேண்டியிருக்கும் என்றும் மார்க்சீய மூலவர்கள் சொன்னதை நாம் மறந்துவிடக் கூடாது என்பதே. சொடக்கென்று சுவிட்ச் போட்டு, அதை மாற்றினால் இதுவும் மாறிவிடும் என்று சமூக மாற்றத்தை எளிமைப்படுத்திப் பார்க்கும் போக்குகளை நிராகரிப்பதில்தான் புரட்சிகர இயக்கத்தின் இயங்காற்றல் தங்கியிருக்கிறது என்ற உண்மையைத்தான் நாம் பின்தொடர வேண்டியிருக்கிறது.

சாதியானது அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா என்று துல்லியமாக பிரித்தறிவதில் நீடிக்கும் தத்துவார்த்தக் குழப்பத்தால்தான் புரட்சியை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதைப் போலவும், அதை சரியாக பிரித்தறிந்துவிட்டால் மறுகணமே புரட்சியை நடத்தி முடித்துவிடலாம் என்பது போலவுமான பாவனைகளின் பேரில் இங்கு சிலர் விவாதித்துக் கொண்டுள்ளனர். இவர்களது விவாத அறைக்கு வெளியே முடிவைத் தெரிந்து கொள்வதற்காக சாதியடுக்குமுறையாளர்களும், உழைப்பைச் சுரண்டுகிறவர்களும் விடுமுறை எடுத்துக்கொண்டு பொறுமையோடு காத்திருப்பதைப் போன்ற கற்பிதத்திற்குள் மூழ்கி ‘நாங்கள் முடிவெடுக்கும் வரை எதுவும் நடக்காது என்பது போன்ற இறுமாப்பில் விவாதித்துக் கிடக்கின்றனர். ஐயா அறிவுசால் பெரியவர்களே, உமது அறிவின் ஆழ நீள அகலங்களை அளந்து காட்டும் வித்தைகளை கைவிட்டு எதார்த்தத்துக்கு திரும்புங்கள். நடப்பில், தினசரி வாழ்வில், ஒவ்வொரு கணத்தையும் தீண்டாமை புறக்கணிப்பு ஒடுக்குமுறை அவமானத்தால் குன்றிக் கொண்டிருக்கும் தலித்துகளின் துயரம் கண்டு வெடிக்கிற இதயமும் அந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற வைராக்கியமும் போர்க்குணமும் கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கம், மரணத்தின் வாதையில் எழுகிற ஓலம் எத்தனை டெசிபல் கொண்டது என்று சாவதானமாக விவாதிக்கிற – எதற்கும் பதற்றமடையாத உங்களைப் போன்ற ஆய்வாளப் பெருந்தகைகள் முன்வைக்கும் எல்லா வறட்டுச் சூத்திரங்களையும் நிராகரிக்கிறது.

தலித்துகள் பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அங்கெல்லாம் அவர்களது நிலைமை என்ன? முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பொறுப்புகளுக்கு தலித்துகளால் வர முடிகிறதா? அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் கோருகிற போது, இடஒதுக்கீட்டுக்காக போராடுகிற கட்சிகள்கூட கட்சிக்குள் இடஒதுக்கீடா என்று கலக்கமடைவதைப் பார்க்கமுடிகிறது. தலித்துகளை கவனக்கமுடிகிறது. தலித்துகளை கவனமாய் தவிர்த்துவிட்டு பிறசாதிகள் மட்டும் தலைமைப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்வது இடஒதுக்கீடுதானே என்று கேட்டால் அப்போது தலைமைப் பண்புகள் பற்றியும் தலைவர்களாக வளர்ந்தெழுவது பற்றியும் இயக்கத்திற்கான உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் பற்றியும் வாதிடப்படுகிறது. தானே தக்கிமுக்கி தன்னை வளர்த்துக் கொள்கிற யாரும் தலைமைப் பொறுப்புக்கு உயரலாம் என்று வியாக்கியானம் சொல்வார்கள். ஒபாமாவைப் பார்… ஒரு கறுப்பனாய் பிறந்து அமெரிக்க அதிபராகவில்லையா என்பார்கள். செருப்பு தைக்கும் தொழிலாளியின் பிள்ளையான ஸ்டாலின் ரஷ்யாவை ஆளவில்லையா என்பார்கள். இந்தியாவை செருப்பு வேண்டுமானால் ஆளமுடியுமே தவிர செருப்பு தைக்கிறவன் ஆளமுடியாதபடி சாதி தடுக்கிறது என்பதை மறைக்கிறார்கள். இது நெடுங்காலமாய் கேட்டு புளித்துப்போன தகுதி- திறமை என்கிற கட்டுக்கதையின் இன்னொரு வடிவம்தான்.

தவிரவும் இந்த உழைப்பு அர்ப்பணிப்பு தியாகம் என்பதற்கான அர்த்தங்கள் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. மக்களுக்காகப் போராடுவதோ அதற்காக சிறைசெல்வதோ அரசின் அல்லது ஆதிக்கசக்திகளின் அடக்குமுறைகளை தாங்கிக்கொள்வதோ இந்த முதலாளித்துவ கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. எனவே இவற்றுக்கு தலைவர்கள் தேவையில்லை. கட்சியை நடத்துகிற நிர்வாகிகள் அல்லது மேலாளர்கள் போதும். ஏதேனும் மாநாடு பொதுக்கூட்டம் போட்டு அடுத்தத் தேர்தல்வரை கட்சியின் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் போதுமானது. இந்த மாநாடு அல்லது கூட்டத்தில் பங்கேற்பதுதான் தலைமையின் பணி என்றால் அதை தலித்துகளும் செவ்வனே நிறைவேற்றுவார்கள்தானே? ரயிலில் முன்பதிவு கிடைக்காமல் பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்ததும், பயணத்தில் சரியாக தூங்க முடியாததும்கூட தலைவர்களின் தியாகமாக கற்பிதம் செய்யப்படுமானால் அந்த தியாகத்தை தலித்துகளாலும் செய்யமுடியும்தானே?. பிரச்னைகளுக்கு தீர்வை எட்டும் நோக்கத்தை கொண்டிராமல் வெறுமனே எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு போராட்டத்தில் கலந்துகொள்வதுதான் உழைப்பு அர்ப்பணிப்பு என்றால் அதை தலித்துகளும் செய்வதில் தடையென்ன இருக்கிறது? அப்படியிருந்தும் இந்தக் கட்சிகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளில் தவிர தலித்துகளுக்கு வேறெங்கும் பொறுப்புகள் தரப்படாததில் சாதி ஒளிந்திருக்கிறதா அல்லது ஏன் தரப்படவில்லை என்று கேள்வியெழுப்புவதில் சாதி வெளிப்படுகிறதா?

தரையிலே நீச்சலடித்துப் பழகச் சொல்லி தண்ணிக்குள் கடைசிவரை இறக்கிவிடாத – அல்லது இறக்கிவிட்டாலும் மூச்சுத்திணறி சாக வைக்கிற முதலாளித்துவ கட்சிகளின் தந்திரத்தைப் புரிந்துகொள்கிற தலித்துகள் இடதுசாரி இயக்கங்களில் அணிதிரளத் தொடங்குகின்றனர். உழைக்கும் மக்களை அணிதிரட்டி வர்க்க போதமூட்டி நிலவும் சுரண்டல் அமைப்பை என்றென்றைக்கும் இல்லாததாய் ஒழித்துக்கட்டி புரட்சிகரமாய் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட மார்க்சீய இயக்கங்கள் மற்றெவரைக் காட்டிலும் தலித்துகளுக்கே மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. எனவேதான் தலித்துகளுக்கென்று தலித்துகளாலேயே நடத்தப்படும் இயக்கங்களில் இருப்பதை விடவும் இடதுசாரி இயக்கங்களில் தலித்துகள் கணிசமாக அணிதிரள்கின்றனர். தலித்துகள் கணிசமாக அணிதிரண்டிருக்கிறார்கள் என்பதற்காக அல்லாது, பன்முகச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒரு சமூகத்திரள் சுயமரியாதையோடு வாழ்வதற்கான முன்தேவைகளை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் இடதுசாரி இயக்கங்களின் உடனடி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களிலும் செயல்பாட்டிலும் சாதியழிப்பு முன்னுரிமைப் பெற்று வருகிறது. இடதுசாரி இயக்கங்களை வெறும் பொருளாதாரவாதத்திற்குள் அமிழ்த்திவைத்து திணறடிக்க விரும்புகிறவர்கள், ‘நூறுசத புரட்சிக்கு’ குறைவான எல்லா நடவடிக்கைகளையும் திரிபாக தப்பர்த்தம் கொண்டு தலித்துகளுக்கான இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களால் அமைதியற்றுப் போயுள்ளனர். அவர்கள் மேலும் அமைதியிழந்து நிம்மதி கெட்டு சீரழிவதை கைவிட்டு, இடதுசாரி இயக்கங்களின் தத்துவம் மற்றும் செயல்பாடுகளை பின்தொடந்து வரும் நல்லறிவை வழங்குமாறு எல்லாம் வல்ல மார்க்சிடம் பிரார்த்திப்போமாக.

சென்னை வெளியீட்டுவிழாவில் பகத்சிங் குறித்து புனிதபாண்டியன் தெரிவித்தக் கருத்துக்கு பதில் சொல்லாதது, பாரதியார் குறித்து இறுதித் தீர்ப்பை வாசிக்காதது ஆகிய மகாகுற்றங்களுக்காக தங்களது குடோனிலிருக்கும் ‘ஒரிஜினல் புரட்சியாளர்’ சான்றிதழை மார்க்சிஸ்டுகளுக்கு வழங்கமுடியாது என்று அறிவித்துள்ள கெட்டிச்சிவப்பர்களுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. தோழர் புனிதபாண்டியன் ஒப்பிட்டுத்தான் பேசினாரேயன்றி பகத்சிங்கை இழிவுபடுத்துவது அவரது நோக்கமாக இருக்குமென்று நான் கருதவில்லை. அவர் பொறுப்பில் வெளியாகும் தலித்முரசின் 2008 மார்ச் இதழ் பகத்சிங்கின் நினைவுநாளை உரியமுறையில் கவனப்படுத்தியிருப்பது இதற்கொரு சான்று.

பாப்லோ நெரூடா என்கிற மகத்தான கவிஞனின் படைப்பாளுமை, ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு, சோசலிசத்திற்கு ஆதரவான அரசியல் விருப்புறுதி ஆகியவற்றை புறந்தள்ளி, அவரே தன் கைப்பட எழுதிய நினைவுக்குறிப்புகளிலிருந்து சிலவரிகளை உருவியெடுத்து அவரை காமாந்தகனாக சித்தரித்து கட்டுரை எழுதுவதில் ஒழுக்கவாதிகள் சிலர் முனைப்பு கொண்டுள்ளனர். பெரியாரின் பன்முகப் பங்களிப்புகளை நிராகரித்து- அவரே பகிரங்கமாக வெளிப்படுத்திய தகவல்களிலிருந்து சில வரிகளை உருவியெடுத்து காவிரிக்கரை மைனராக சிறுமைப்படுத்துவதில் சில பத்திரிகைகள் ஆர்வம் கொண்டுள்ளன. வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த ஆளுமைகளும் அவர்களது சிந்தனைகளும் சமூகத்திலிருந்து முற்றிலுமாக வெறுத்தொதுக்கப்பட வேண்டியவை என்கிற ரீதியில் முன்வைக்கப்படும் இம்மதிப்பீடுகள் உள்நோக்கம் கொண்டவைதான். ஆகவே அவ்வாளுமைகளின் செயல்பாட்டின் மீதான விமர்சனத்தையும், தனிமனிதச் சாடலையும் பிரித்தறிய வேண்டிய நிர்ப்பந்தம் நம்முன் நிற்கிறது. இப்புரிதலோடுதான் பாரதியையும் நான் அணுகுகிறேன்.

பாரதியின் கவிதைகள்மீது எனக்கு மயக்கமெதுவும் இல்லையென்றாலும் கூரிய விமர்சனமும் இல்லாமல்தான் இருந்தேன். திரும்பிய பக்கமெல்லாம் தேசியகவி, மகாகவி என்றெல்லாம் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் எனக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியிருக்கக்கூடும். காலனிய ஆட்சி, இந்திய தேசியம், விடுதலைப் போராட்டம் ஆகியவை குறித்து அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் முன்வைத்த மாற்று வரலாற்றினூடே பார்க்கிறபோது, இந்துத்துவத்தின் மூலவர்களில் ஒருவரான திலகருடன் பாரதி நட்பு கொண்டிருந்ததும், பசுவதை போன்றவற்றில் அவர் வெளிப்படுத்திய பார்ப்பனீய புனிதக்கோட்பாட்டையும், இன்னும் அகவயமான பார்ப்பனீய சார்பு மனநிலையையும் இயல்பானதாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இதையே ஞானத்தின் உச்சமென்று அறிவித்துக் கொள்வதால் ஆகப்போவது எதுவுமில்லை என்பதால் அடுத்த வேலைக்கு நகர்கிறேன்.

5.

-இப்படி நான் ஒரு மநுவிரோதியை முன்வைத்து விவாதிப்பதற்கான தளங்கள் விரிந்து கொண்டேயிருக்கிற நிலையில் இரண்டாவது பதிப்பு வெளியாகிறது. ஓர் ஒற்றைச்சொல்லில் ஏன் ஒரேயொரு எழுத்தில்கூட தன்னை வெளிப்படுத்தும் சாதுர்யம் கொண்டதே அதிகாரம். மொழியை கவனமாக கையாள வேண்டும் என்ற பிரக்ஞை நிலையில்தான் நம்முடைய அரசியல் நிலைபாட்டில் வழுவாது நிற்க முடிகிறது. ஆனால் பிரக்ஞைநிலையில் அல்லாமல் தன்னியல்பாக உள்ளுணர்வு நிலையிலேயே சுயஅதிகாரத்தை மறுப்பதற்கான தொடர்போராட்டத்தை எனக்குள் நடத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் ஒரு மநுவிரோதன் என்ற தலைப்பில் உள்ள ஆண் என்கிற பால்நிலை அதிகாரத்தை நான் மிக தாமதமாகவே உணர்ந்தேன். எனவே இனி நான் ஒரு மநுவிரோதி என்றே இந்நூல் அறியப்படட்டும்.

தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பின்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துக்கள் எதன் மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன். இப்போது உங்கள் முறை.

அன்புடன்,
ஆதவன் தீட்சண்யா
13.08.08

இலண்டனில் வெளியீட்டு விழாவை நடத்திட்ட ராகவன், தேசம்நெட் ஜெயபாலன், ரங்கன், சேனன், ஷோபா சக்தி, வேலு, நிர்மலா, காண்டீபன், சபேசன், ராஜேஸ்வரி பாலா, சபாபதி, சபா நாவலன் உள்ளிட்ட தோழர்களை இந்த இரண்டாம் பதிப்பு வெளியாகும் தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் பங்கேற்று தோழர்கள் பிரளயன், பி.சம்பத், வ.கீதா, புனிதபாண்டியன், கொளத்தூர் மணி, ச.தமிழ்ச்செல்வன், மரு.ஜெயராமன், மினர்வா ஆகியோர் தெரிவித்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் எழுதவும் இயங்குவுமான ஆற்றலைத் தருமென நம்புகிறேன். புதுக்கோட்டை, புதுச்சேரி, சேலம், தஞ்சையில் நடைபெற்ற விமர்சன அரங்குகளிலும் இந்நூல் குறித்து மதிப்புமிக்க விமர்சனங்களை பலரும் முன்வைத்துள்ளனர். நான் பெரிதும் மதிக்கும் தோழர் எஸ்.வி.ஆர், பேரா.ஆ.சிவசுப்பிரமணியம், ந.முத்துமோகன் போன்ற தோழர்கள் பலரும் தனிப்பட்ட முறையில் நூல் குறித்த தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவற்றின் வெளிச்சத்தில் எனது போதாமைகளை உணர்ந்து கொள்ள முடிந்தது. திறப்படுத்திக் கொள்ளும் முயற்சி தொடர்கிறது.

விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்ட விடுதலை, தீக்கதிர், மார்க்சிஸ்ட், புத்தகம் பேசுது இதழ்களுக்கும், இந்நூல் குறித்து இணையதளங்களில் விவாதித்து வரும் நண்பர்களுக்கும் நன்றி. பல்வேறு மட்டங்களிலும் இந்நூல் வாசிக்கப்படுவதற்கான தூண்டுதலாய் இருந்த தோழர். என்.குணசேகரனின் முயற்சி இங்கே தனித்து நினைவுகூரப்படுகிறது. இரண்டாம் பதிப்புக்கு செல்ல வேண்டும் என்று என்னையும் பூபாளம் புத்தகப் பண்ணையினரையும் உந்தித் தள்ளிய தோழர்.சிராஜ், மோகனசுந்தரம், கீற்று.காம் ரமேஷ் ஆகியோரின் கரங்களை மெதுவே பற்றிக் கொள்கிறேன்.

எனக்கு எல்லாவகையிலும் திறப்பாயிருந்த தோழர்.து.சண்முகம் அவர்கள் இந்த புத்தகம் அச்சாகி வந்த அதேநாளில் மறைந்துவிட்ட பெருந்துயரம் என் எழுத்தெங்கும் கசிந்து நிற்கும்

இந்தா பிடியுங்கள் இந்தியா டுடே (கழிப்பறையில் தண்ணீரை மிச்சம் பிடிக்க)


அஞ்சலி என்ற பெயரில் ‘இந்தியா டுடே’ கீழ்க்கண்ட கட்டுரையைப் பிரசுரித்திருக்கிறது

அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008

மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.

அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.

அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதிபூண்டது ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைதான்; வெகுஜனங்களை மயக்குவதற்கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்சென்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.

அவர் பதவியிலிருந்த 11 மாதங்களில் அவருடைய திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். எனினும் மண்டல் கமிஷன் இந்திய அரசியலின் கட்டமைப்பையே மாற்றி அமைத்தது. ஜாதி செயல் திட்டத்துடன் பல அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பிறந்து வந்தார்கள். அரசியல்வாதியாக வி.பி.சிங் கொள்கைகளின்படி வாழ்ந்தார். அந்தக் கொள்கைகளின் பின்னணியாக என்ன இருந்தது என்பது என்பது வேறு கதை.

அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அவரின் இறுதிக்காலத்தில் மதசார்பின்மையின் இஷ்டதெய்வமாகவும் கண்ணுக்கு தெரியாத ஆலோசகராகவும் அவர் இருந்தார். சமூகநீதி அரசியல் என்ற பெயரில் இந்தியாவை உலுக்கிய மனிதர் இறுதியில் நிஜ அரசியலுடன் தொடர்பில்லாமல், கவிதை, ஓவியங்களால் ஆறுதல்பட்டவராக இருந்தார்.

-எஸ். பி

இந்தியா டுடே இதழின் உள்ளடக்கத்திற்கு எதிர்வினையாக அதைக் கிழித்து மலம் துடைத்து அதன் பொறுப்பாசிரியருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா? நல்லமாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனுசனுக்கு ஒரு சொல். ஆனால் இந்தியா டுடே மாடுமல்ல மனுசனுமல்ல திருந்துவதற்கு. எனவே அது முன்னிலும் திசைகெட்டு துடைக்கவும் அருகதையற்றதாய் வந்துகொண்டிருக்கிறது.

இவ்விதழின் கட்டுரையாளர்கள் காலையில் டீ காபிக்குப் பதிலாக புஷ்ஷின் மூத்திரத்தைக் குடித்துவிட்டு எழுத உட்காருவார்கள் போலும், இந்தியாவில் நடக்கும் எதுவுமே அவர்களுக்கு உவப்பாயிருப்பதில்லை. எனவே எப்போதும் அமெரிக்காவப் பாரு, அவுத்துப்போட்டு ஆடு என்கிற ரீதியில் எதையாச்சும் எழுதிக்குமிப்பார்கள். முதலாளித்துவ லாபவெறிக்குத் தடையாக இருக்கிற சட்டதிட்டங்களை உடைத்து நொறுக்கவேண்டும், அரசியல் பொருளாதாரத் தளங்களில் நிலவும் கட்டுப்பெட்டித் தனங்களை மீறிப் பாயவேண்டும் என்பார்கள். அதற்கிசைவான நுகர்வுவெறியை உருவாக்க பக்கம்பக்கமாக எழுதுவார்கள். அதேநேரத்தில் பண்பாட்டுத்தளத்தில் நிலவும் கட்டுப்பாடுகளாலும் பழமைவாதத்தாலும் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் சமூகத்தை விடுவிக்கும் முயற்சிகள் ஏதேனும் நடப்பதுபோல் தெரிந்தால் இந்தியாவின் மரபுக்கும் பாரம்பரியத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதாக அலறிக் கொதிப்பார்கள். ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மனங்களைத் தகவமைக்கவும் சாதியத்தின் பிடியிலேயே சமூகம் தொடர்ந்து கட்டுப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் தேவையான தலைப்புகளில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகளை நடத்தி தமது கைச்சரக்குகளை அவிழ்த்துவிடுவார்கள்.

பத்திரிகைச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு வெளியாகும் இந்தியா டுடேயின் எழுத்துக்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்குவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்துத்துவ வெறியர்கள் நிகழ்த்தும் கருத்தியல் வன்முறையின் கெடுவிளைவுகளை இவ்விதழின் எந்தவொரு வரியிலிருந்தும் நம்மால் உணரமுடியும். இங்குள்ள சிறுபான்மையினர் அனைவரையும் தேசவிரோதிகளாக- தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்துத்துவ நிலைபாட்டை தன் மொழிநடையில் வெளியிட்டு இந்தியா டுடே, இந்துத்துவ டுடேவாக மாறுவது தற்செயலானதல்ல.

என்னதான் ஒருவர் தேசம், மக்கள் ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி, கட்டற்ற சுதந்திரம் என்ற பொதுப்பதங்களில் பதுங்கித் திரிந்தாலும் இடஒதுக்கீடு குறித்துப் பேசும்போது அவரது எல்லா வேஷங்களும் கலைந்து அப்பட்டமான பார்ப்பனராக மாறிவிடுகிறார் என்பது இந்தியா டுடே பத்திரிகைக்கும் பொருந்தும். இடஒதுக்கீடு பற்றி எழுதும் போதெல்லாம் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிடுவதற்கும் இவங்கப்பன் வூட்டு சொத்தில் பங்கு கேட்க வந்ததைப்போல பதறுவதற்கும் இது துளிகூட வெட்கப்பட்டதில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் தமது விஷமத்தனமான கருத்துகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எவ்வளவு அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்களும் பயனாளிகளும் முன்வரமாட்டார்கள் என்ற தைரியத்திலேயே இந்தியா டுடே இவ்வாறு எழுதுகிறது.

( இந்துத்துவ/ பார்ப்பன சங்கத்தின் செய்திமடல்போல வெளியாகும் இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகள் அதன் நேரடிப் பயனாளிகளான குறிப்பிட்ட அந்த சாதியினருக்குள் மட்டுமே புழங்கித் தொலைப்பதில்லை. தமக்கு எதிரான துவேஷங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தினாலும் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் இவற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு கூருணர்வற்று மொன்னையாகக் கிடக்கிறார்கள் என்ற பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டே கடைவிரிக்கப் படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தையும் கொழுப்புச் சுதந்திரத்தையும் ஒன்றெனக் குழப்பி நடத்துகிற இந்த செய்தி வியாபாரத்தில் கைவைக்கிற முடிவை தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் மேற்கொள்வதும்கூட இந்தியா டுடே போன்றவற்றின் கொட்டத்தை அடக்கும் வழிகளில் ஒன்றென வலியுறுத்த வேண்டியுள்ளது. எவ்வளவுதான் எதிர்ப்புக் கருத்தை வெளியிட்டாலும் ஒரு பத்திரிகையைப் புறக்கணிப்பது எப்படி சரியாகும் என்று குழப்பமடைகிற பெருந்தன்மைக்காரர்கள், குறைந்தபட்சம் அவற்றில் வரும் விஷமங்களுக்கு எதிர்வினை புரியவும் முன்வருவதில்லை. )

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் அறிக்கையை அமல்படுத்தியதற்காக மறைந்த பிரதமர் வி.பி.சிங் மீது பார்ப்பனக்கூட்டம் இன்றளவும் பகையுணர்வு கொண்டிருக்கிறது என்பதைத்தான் அவருக்கான அஞ்சலிக்குறிப்பில் இந்தியா டுடே வெளிப்படுத்தியுள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தை சீரழித்தவர் என்றும் சமூக அடுக்குமுறையைக் குலைத்தவர் என்றும் அது வி.பி.சிங்கை வசைபாடியிருக்கிறது. இடஒதுக்கீட்டால் எதுவும் நடக்கவில்லை என்று சிலர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு திரிந்தாலும், இந்தியா டுடேவுக்குத் தெரிந்திருக்கிறது- தமது எந்த நரம்பை அறுத்தெடுத்திருக்கிறது இடஒதுக்கீடு என்று.

மும்பை ஓட்டல்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நாடு திணறிக்கொண்டிருந்தபோது வி.பி.சிங் மரணமடைந்ததால், அவரது மரணத்தை ஊடகங்களால் பொருட்படுத்தவியலாமல் போய்விட்டதாக ஒரு அங்கலாய்ப்பு இருக்கிறது. தப்பு நண்பர்களே தப்பு. யாதொரு பிரச்னையும் இல்லாத காலத்தில் வி.பி.சிங் இறந்திருந்தாலும்கூட இதேயளவில்தான் ஊடகங்கள் பேசியிருக்கும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஊடகங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒற்றைச்சாதியின் மனநிலையில் வி.பி.சிங் திட்டவட்டமான எதிரியாகவே பதித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். எனவே நடுநிலை என்கிற ஜிகினாப்பூச்சுகளை உதிர்த்துவிட்டு அப்பட்டமாக விரோத குரோதங்களை வெளியிட்டு வி.பி.சிங்கின் மரணத்தை அவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. தலித்துகளைத் திரட்டி பார்ப்பன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடிய அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளுக்கும், தனக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களை மேலெடுக்கத் துணிந்த வி.பி.சிங்கின் நினைவுநாளுக்கும் உரிய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ள உதவியமைக்காக இந்த ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு ரகசியமாய் நன்றி சொல்லவும்கூடும்.

எனவே, வி.பி.சிங்கின் மரணம்கூட இந்தியா டுடே போன்ற பத்திரிகைக்கு நிம்மதியைத் தராமல் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால்தான் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் தன்னைத்தானே கொளுத்திக்கொண்ட ராஜீவ் கோஸ்வாமி என்கிற சாதிக் கொழுப்பேறியவனின் உடலில் படர்ந்த தீயின் எச்சமே, 2008 நவம்பர் 29 அன்று கங்கைக்கரையில் வி.பி.சிங்கின் சிதையை எரித்ததாக எழுதி ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறது அது. வி.பி.சிங்குக்கு கொள்ளிவைத்தான் என்றால், ராஜீவ் கோஸ்வாமி அவருக்குப் பிறந்தவனா என்றெல்லாம் கேட்டு கொச்சைப்படுத்த நாம் விரும்பவிலை. ஆனால் எவ்வளவு ஆங்காரமிருந்தால் இப்படி எழுதுவதற்கு இ.டு துணியும் என்பதுதான் இங்கு கண்டனத்துக்குரியது.

ராஜீவ் கோஸ்வாமி எதற்காக தன்னைத்தானே கொளுத்திக்கொண்டான்? அவனும் அவன் பரம்பரையும் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்ட அவமானம் தாங்காமலா? அல்லது அதிகாலையில் எழுந்து ஊரான் பேண்டதையும் மோண்டதையும் அள்ளிச் சுமக்க வேண்டியிருக்கிறதே என்ற அருவருப்பினாலா? அழுக்குத் துணியை வெளுக்கணுமே அல்லது அக்குளிலும் அடியிலும் சவரம் செய்து தொலைக்கணுமே என்ற உளைச்சலிலா? காலத்துக்கும் இப்படி சேற்றில் உழன்று மாய வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பிலா…? அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் யாருடைய பிறப்புறுப்பிலாவது தீப்பந்தம் சொருகப்பட்டிருக்கிறதா? இத்தனை வகையான கொடுமைகளுக்கும் ஆளாகிற நாங்களே சகித்துக் கொண்டு உயிரோடிருக்கும்போது, தீவைத்துக்கொண்டு சாகுமளவுக்கு உனக்கென்னடாப்பா குறை வச்சோம்…. இந்த நாட்டோட நிலம் நீச்சு, ஆஸ்தி பாஸ்தி, கோயில் குளம் எல்லாத்தையும் கொடுத்தோம். எங்க ஊரு ராஜாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ராணியை கன்னி கழிக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தோம். நாலு குதிரையோடும் நாலு வேதசுலோகத்தோடும் வந்த உங்களுக்கு இவ்வளவையும் கொடுத்தப்புறமும் உனக்கு என்னடாப்பா மனக்குறை… ஒருவேளை உங்க தாயாதிகளும் பாட்டன்மார்களும் சொல்கிற அகண்ட பாரதம் உருவாக லேட்டாகும் போல என்று அவசரப்பட்டு கொளுத்திக்கிட்டாயா என்று கேட்பதற்கு அவன் உயிரோடு இல்லை இப்போது.

எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு என்ற மோசடி வாசகத்தை ஊரெல்லாம் ஸ்டிக்கர் போட்டு ஒட்டிவைத்துவிட்டு விதி, வினைப்பயன், யாகம், பூசை, புனஸ்காரம் என்பதன் பெயரால் தன் சாதி மட்டுமே சுகித்துவந்த இந்த நாட்டின் வளங்களிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்டு தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் வருகிறார்கள் என்றதுமே பதறிப்போய் கொளுத்திக் கொண்ட அவன், இந்தியா டுடேவுக்கு வேண்டுமானால் தியாகியாகத் தெரியலாம். ஆனால் அந்த ராஜீவ் கோஸ்வாமியை மசுருக்கு சமானமாகக்கூட நாங்கள் கருதமுடியாது. ஒரு சூத்திரனோ அவர்ணனோ சுவாசித்து வெளியேற்றியக் காற்றை சுவாசிக்க விரும்பாது மூக்கைப் பிடித்துக்கொண்டு செத்துப் போகிறவனை எப்படி தியாகியாகக் கருதமுடியும்?

மண்டல் அறிக்கை அமலாக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களிடம் தங்களது இடங்களை இழக்கவேண்டி வருமே என்ற பயத்தில் எப்பாடு பட்டேனும் அதைத் தடுத்து நிறுத்த ஆதிக்கசாதியினர் இறக்கிய துருப்புச்சீட்டுகளில் ஒன்றுதான் ராஜீவ் கோஸ்வாமி. பார்ப்பன மேலாதிக்க கருத்தியலை உள்வாங்கி வளர்ந்த அவனது சாவு பொதுநலன் பொருட்டானதல்ல. அவன் தானாக நெருப்பிட்டுக் கொள்ளவில்லை என்றும், கொளுத்தப்பட்டானென்றும் உலவுகிற கதைகூட உண்மையாக இருக்கலாம். தமது சுயநலத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொளுத்துகிற நெடிய வரலாறு இந்நாட்டின் பார்ப்பனர்களுக்கு உண்டு. அதோடு அதற்கான பழியை பிறர்மீது சுமத்திவிடுகிற சாமர்த்தியமும் அவர்களுக்கு எப்போதுமுண்டு.

இந்தியா டுடே சொல்வதுபோல வி.பி.சிங்கை எரித்த நெருப்பு ராஜீவ் கோஸ்வாமியுடையதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மண்ணின் வேளாண்குடிகளது கால்நடைகளை, நந்தனை, வள்ளலாரை, விதவைகளை, கலைஇலக்கியங்களை யாகமென்றும் ஜோதியென்றும் சதியென்றும் அனல்வாதமென்றும் எரித்துப் பொசுக்கினீர்களே அந்த நெருப்பிலும் கருகாது கனன்று கனன்று காலம்தாவி வந்த எங்கள் கோபம்தான் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் மனநெருக்கடிக்குள் ராஜீவ் கோஸ்வாமியை நெட்டித் தள்ளியிருக்கும் என்ற உண்மையை உணர்வதற்கு இந்தியா டுடேவுக்கு திறந்த மனமும் சாதிப்புரையேறாத கண்ணும் தேவை.

ஹோமத்தில் உடைத்துப்போடும் மாங்குச்சியைப்போல முகூர்த்த நேரம் முடிந்ததும் அணைந்துவிடும் என்ற நினைப்பில் இந்துத்வம் கொளுத்திப்போட்டு விசிறி விட்ட நெருப்பு இந்த நாட்டின் நாலாதிசைகளிலும் எமது மகவுகளை பொசுக்கித் தின்றுவிட்டு ரத்தக் கவுச்சியோடு அலைந்து கொண்டிருக்கும்போது ராஜீவ் கோஸ்வாமியின் தற்கொலை மட்டும் இந்தியா டுடேவுக்கு இழப்பாகத் தெரிவதில் நியாயமென்று ஒரு வெங்காயமும் இல்லை- சாதிப்புத்தியைத் தவிர.

மண்டலுக்கு எதிராக மாணவர் போராட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலிருந்து சில ஆதிக்க சாதியினரும் நடத்திக் கொண்டிருந்த அட்டூழியங்களை கல்விநிலையங்களுக்கும் வெளியே பரப்பும் நோக்கத்தோடு ரதயாத்திரை கிளம்பினார் அத்வானி- ராமனையும் கூட்டிக்கொண்டு. நாடு முழுவதும் கலவரங்கள்…. கொலைகள்… கொள்ளைகள்… பாலியல் வன்கொடுமைகள்…. காமிக்ஸ் கதைகளில் வருகிற அ.கொ.தீ.கவிடம் மாட்டிக் கொள்கிற ஒரு சிறுமியைப் போல இந்த சமூகம் இந்துத்வாவினால் அடைந்த இழப்புகள் சொல்லி மாளாதவை. பார்ப்பன மேலாதிக்கத்தை இந்த மண்ணில் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவ கும்பல் நிகழ்த்திய இத்தனை அட்டூழியங்களுக்கும் வி.பி.சிங்கை பொறுப்பாளியாக்க தனது அஞ்சலிக்குறிப்பை பயன்படுத்தப் பார்க்கிறது இந்தியா டுடே. எனவே அது ‘மண்டல் நாயகரான இவர் இந்திய அரசியலில் மாபெரும் சமூகச் சீரழிவைக் கொண்டுவந்தவர்’ என்ற தலைப்பின் கீழ் அஞ்சலி செலுத்துவதாய் கூறிக்கொண்டு அவதூறு செய்திருக்கிறது.

மண்டல் அறிக்கையின் வழியாக ஜாதியை முன்வைத்து தகுதியைப் பின்னுக்குத் தள்ளி சமூக அடுக்குமுறையை சீர்குலைத்தவர் என்று இந்தியா டுடே வி.பி.சிங் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் ஒளிவுமறைவு எதுவுமில்லை. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த சாதியமைப்பு பார்ப்பனர்களுக்குத் தேவையாயிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அது வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை போட்டியிட வாய்ப்புப்பெறாத சாதியினர், இடஒதுக்கீட்டினால் தங்களைப் பின்னுக்குத்தள்ளி முன்னேறிவிடக்கூடும் என்ற கையாலாகாத்தனத்திலிருந்து அது இவ்வாறு பிதற்றுகிறது. திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திக்கொண்டு வருகிறவனை திருடன் என்று சொல்லி திசைதிருப்பும் மோசடியைப்போல, தகுதியையும் திறமையையும் நிரூபித்துக் காட்டாமலே சாதியின் பெயரால் எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்ட கூட்டம், சாதிரீதியான இடஒதுக்கீடு தகுதி திறமையை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று கதைவிடுகிறது.

இடஒதுக்கீடு கூடாது, தகுதியும் திறமையும் உள்ளவர்கள் போட்டியில் வெற்றிபெற்று வரட்டும் என்கிற வாதத்தில் பெரிய நியாயம் இருப்பதுபோல தோன்றும். அப்படியொரு புண்ணாக்கும் இல்லை. போட்டியிட வருவதற்கே இடஒதுக்கீடு தேவையாயிருக்கிறது. அவ்வளவு மறிப்புகள், தடைகள். சரி, தகுதியும் திறமையும் தங்களிடம் உச்சி முதல் பொ… வரை நிரம்பிக்கிடப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களே போட்டியிலாவது நேர்மையாக பங்கேற்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. போட்டித்தேர்வுகளில் பங்கேற்று முன்னேறிய சாதியினரை விடவும் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகிற ஓபிசி, தலித் மாணவர்களை பொதுப் பட்டியலுக்குள் கொண்டுவராமல் அவரவர் சாதிக்கான ஒதுக்கீட்டு இடத்தில் (கோட்டாவுக்குள்) தள்ளி நிரப்பிவிட்டு, பொதுப்பட்டியலுக்கான 50.5 சதவீதத்தையும் முன்னேறிய சாதிக்கான தனிஒதுக்கீடாக அபகரித்துக் கொள்கிற இந்தியா டுடேயின் சொந்தக்காரர்கள் மானவெட்கமற்று தகுதி திறமை பற்றிப் பேசுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற்ற 474 பேரில், அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற முத்தியால் ராஜூ ரேவு என்ற ஓபிசியை கோட்டாவுக்கு தள்ளியதன் மூலம், பட்டியலில் 474வது இடத்தில் இருந்த பார்ப்பனர் ஒருவரை மெரீட்வாலாவாக மாற்றி பொதுப்பட்டியலுக்குள் இழுத்துக்கொண்ட மோசடி இன்று நீதிமன்றத்தில் இழுபட்டு நாறிக்கொண்டிருக்கிறது.

Mandal vs Kamandal என்ற இந்துத்துவாவின் உத்தி கடைசியில் வி.பி.சிங் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டது. ஆட்சியை இழந்தாலும் தமது வாழ்வில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் அனைவரின் மனதிலும் என்றென்றைக்கும் தன்னிகரற்ற இடத்தைப் பெற்றிருப்பவர் வி.பி.சிங். ஆகவே, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சமூக அடுக்குமுறையை குலைத்தவர் என்ற இந்தியா டுடேயின் குற்றம்சாட்டுக்கு முழுப்பொருத்தம் பெற்றவர் அவர். பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதும் பென்ஷனை வாங்கிக்கொண்டு பேரப்பிள்ளைகளோடு பினாத்திக் கொண்டிருக்காமல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் குறுக்கிட்டு கருத்து சொல்கிறவராகவும் களத்தில் நிற்பவராகவும் அவர் கடைசிவரை இருந்தார் என்பதும்கூட இந்தியாடுடேவுக்கு எரிச்சலூட்டும் விசயம்தான். எனவேதான் மதச்சார்பின்மையின் இஷ்டதெய்வமாக இருந்தார் என்று கிண்டலடிக்கிறது. நடக்கமுடியாமல் நகர்கிற வயதிலும் மதவெறி கொண்டலைகிற வாஜ்பாய் போன்றவர்கள் இருக்கும் நாட்டில், மதச்சார்பின்மை என்ற உயரிய கோட்பாட்டிற்காக தனது மரணம் வரையிலும் ஒருவர் வாழ்ந்தார் என்பது பெருமைக்குரிய செய்திதானே.

இடிக்கப்பட்டது சுவர் மட்டுமா…


சர்ச்சைக்குரிய சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருசாரார், தங்கள் குடும்ப அட்டைகளை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்தனர்….. , சர்ச்சைக்குரிய சுவற்றை இடித்து தங்கள் சமூகத்தை அரசு அவமதித்துவிட்டதைக் கண்டித்து ஒருசாரார் ஊரைவிட்டு வெளியேறி மலையடிவாரத்தில் வெட்டவெளியில் குடியேறினர்… ஊரைக் காலி செய்து மலையடிவாரத்தில் தங்கியிருந்தவர்கள் கொட்டும் மழையிலும் வெட்டவெளியிலேயே இருந்ததால் இன்னின்னாருக்கு சளி, இருமல். இத்தனைபேருக்கு காய்ச்சல்…. அரசாங்கம் தருவதற்கு முன்வந்த மருத்துவ சிகிச்சைகளை ஏற்க மறுப்பு… – இப்படியாக உத்தப்புரம் சுவர் இடிப்பை எதிர்ப்பவர்கள் மீது அனுதாபம் சுரக்குமளவுக்கு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பதற்றத்தோடு வெளியாகும் செய்திகளின் பின்னுள்ள உண்மைதான் என்ன? அந்த சுவர் யாரால் எதற்காக எப்போது ஏன் கட்டப்பட்டது, இப்போது ஏன் எதற்காக யாரால் இடிக்கப்பட்டது? சர்ச்சை என்ற வார்த்தை இங்கே எதைக் குறிக்கிறது என்பவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களை இந்த ஊடகங்கள் மக்களுக்குத் தெரிவிக்கின்றனவா?

மேற்கு மகாராஷ்ட்ராவில் கொய்னா அணைக்கட்டின் காரணமாக இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட தலித்துகளும் மராத்தாக்களும் வேறொரு இடத்தில் குடியமர்த்தப்பட்டனர். தலித்துகள் வாழும் பகுதி பீம் நகர். மராத்தாக்கள் வாழும் பகுதி டேர். இரு சமூகத்தவருக்கும் பொதுவான சமுதாயக்கூடத்தை தலித்துகள் பயன்படுத்த முடியாத வண்ணம் மராத்தாக்கள் மதில்சுவர் எழுப்பி தடுத்துவிட்டனர். சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நீதிமன்றம் மூலமாக சுவற்றுக்கு ஒரு சட்டப்பூர்வ ஒப்புதலையும் பெற்றுவிட்டார்கள். சுவற்றை இடிக்காவிட்டால் 14.04.2008 அம்பேத்கர் பிறந்த நாளன்று தாங்கள் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தலித்துகள் அறிவிக்க வேண்டியிருந்தது. (பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு விசயத்தில் கண்மூடித்தனமான உயர்சாதி மனேபாவத்தோடு செயல்பட்டாலும்) மிகவும் உள்ளொடுங்கிய கிராமமொன்றில் நடந்த அந்த தீண்டாமைக் கொடுமையை வெளிப்படுத்தி தலித்துகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் சுவற்றை இடிக்க வைத்ததில் ஆங்கில ஊடகங்களின் பங்கு பாராட்டுதலுக்குரியது. வலுவான மக்கள் இயக்கங்கள் இல்லாத இடங்களில் ஊடகங்கள் மக்களின் கண்ணிய வாழ்வுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் ஊடகங்களும் துணைநிற்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்று.

உத்தப்புரம் விசயத்தில் ஊடகங்கள் அப்படி ஒருபால் கோடாமையோடு நடுநிலையாக- அதாவது நியாயத்தின் பக்கம் நிற்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. செய்திகளின் நம்பகத்தன்மை, ஊடகத்துறையில் சாதி வகிக்கும் பாத்திரத்தை முன்வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் உத்தப்புரம் பிரச்னை அணுகப்படுகிறது.. சுவர் எழுப்பப்பட்டதன் பின்னணியில் உள்ள சாதிப் பாகுபாட்டையோ, அதனால் தலித்துகள் அடைந்துள்ள அவமானவுணர்வையோ, அது இடிக்கப்படுவதில் உள்ள நியாயத்தையோ மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு பதிலாக சுவர் விரும்பிகளின் செய்திகளுக்கே கூடுதல் அழுத்தம் கொடுக்கின்றனர். வட்டார நிருபர்கள் தங்களது சாதிச் சாய்மானத்தை – தலித் எதிர்ப்பு நிலையை கைவிட்டுவிட்டு பிரச்னையை அணுக முன்வருவார்களேயானால் உத்தப்புரம் சுவரைப் போன்ற நூற்றுக்கணக்கான தீண்டாமைக் கொடுமைகளை வெளிக் கொணர முடியும்.

2.

பெரும்பாலான கிராமங்களில் ஊர்க்கூட்டம் என்ற பெயரால் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்துகள் ஆதிக்கசாதியினரின் தேவைகளை நிறைவேற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. சுயேச்சையான அரசியல் பொருளாதார பலமற்று தமது வாழ்வாதாரங்களுக்கு ஆதிக்கசாதியினரை அண்டி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தலித்துகள் ஊர்க்கூட்டத்தின் பெயரால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கீழ்ப்படிந்தேயாக வேண்டிய நிலையுள்ளது. எனவே, மதுரை மாவட்டம் பேரையூர் ஒன்றியத்திலுள்ள உத்தப்புரம் கிராமத்தில் 1990ல் தலித்துகளும் தலித்தல்லாதவர்களும் கூடிப் பேசி ஒருமனதாக எழுப்பிக் கொண்டதே அச்சுவர் என்று புதிதாக கிளப்பிவிடப்பட்டுள்ள தலபுராணமானது அப்பட்டமான பொய். தலித்தல்லாதவர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்துகொண்டு நெருக்குகிறபோது அதற்கு உடன்படுவதைத் தவிர தலித்துகளுக்கு வேறு வழியிருந்திருக்கவில்லை என்பதே உண்மை.

ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானதைப் போல அந்த சுவர் 600 மீட்டர் நீளமுள்ளது அல்ல என்றும் வெறும் 149 மீட்டர் நீளமேயுடையதென்றும் அதன் நீள அகலங்களின் துல்லியம் குறித்த சர்ச்சையும் கிளப்பிவிடப்பட்டுள்ளது. ஊரின் எந்த மூலையிலும் தலித்துகள் நுழைந்துவிடாதவாறு வளைத்து வளைத்து சுவர் கட்டப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியை திசைதிருப்பவே இந்த நீள அகல ஆராய்ச்சி பயன்படுத்தப்படுகிறது. ஒரு வாதத்திற்காக 149 மீட்டர் மட்டுமே சுவர் கட்டப்பட்டிருப்பதாக வைத்துக் கொண்டாலும், தலித்துகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுப்பது குற்றம்தானே? இதுபற்றி எந்த நடுநிலை நாளேடும் வாய் திறக்காதது என்?

இரவுநேரங்களில் மின்சாரம் பாய்ச்சப்படுவதாக சொல்லப்படுவதும் பொய்தான் என்கின்றனர் சுவர் விரும்பிகள். அப்படியானால் 17.04.08 அன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியான புகைப்படம் எதை உணர்த்துகிறது? அன்றைய தினமே சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் தோழர் நன்மாறன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியபோது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர், மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் மின் கம்பிகளை அகற்றிவிட்டதாகவும் தெரிவித்தது பொய்யா?

தனிப்பட்டவர்கள் தமது சொந்த பட்டா நிலத்தில் தத்தமது பாதுகாப்புக்காக வீட்டின் பின்புறம் கட்டிக்கொண்ட மதிற்சுவர்களின் இணைப்புதானேயன்றி அது திட்டமிட்டு கட்டப்பட்டதல்ல என்றும் வாதிடப்படுகிறது. அவரவர் தம் விருப்பத்திற்கு வீட்டுக்குப் பின்னால் கட்டிக் கொண்டார்களென்றால், ஊர்க்கூட்டம் போடப்பட்டதும் சுவர் கட்டுவது குறித்து முடிவெடுத்ததும் அதில் தலித்துகளை மிரட்டி கையொப்பம் பெறப்பட்டதும் எதற்காக? அவரவர் நிலத்தில் கட்டிக்கொள்ளப்பட்டது என்றால் ஊர் புறம்போக்கில் பொதுப்பயன்பாட்டிற்கென அமைந்திருந்த பாதையை மறித்துக் கட்டியது யார்? அரசாங்க நிலத்தை ஆக்ரமித்து சட்டவிரோதமாய் சுவரெழுப்பிய அந்த குற்றவாளி தனிநபரா அல்லது உத்தப்புரம் பிள்ளைமார் அனைவருமா?

தவிரவும் இங்கு ‘பாதுகாப்புக்காக’ என்ற வார்த்தைப் பயன்பாட்டை கவனிக்க வேண்டியுள்ளது. நாடு முழுவதும் ஆதிக்கசாதியினரால் தலித்துகள் நாளும் நொடியும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், உத்தப்புரத்தில் மட்டும் விதிவிலக்காக தலித்துகளால் ஆதிக்கசாதியினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அளந்துவிடும் கதைகளை யார்தான் நம்புவது? திருடுவது, பெண்களிடம் வம்பாடுவது போன்ற குற்றங்களைச் செய்கிற சிலர் பிள்ளைமார் உட்பட எல்லாச் சாதியிலும் இருக்கிறார்கள். அப்படியிருக்க, உத்தப்புரம் தலித்துகள் அனைவரையும் திருடர்களாகவும் பெண்களை சீண்டுகிறவர்களாகவும் குற்றம் சாட்டி அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே சுவர் கட்டினோம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. ஒட்டுமொத்தமாக ஒரு சாதியையே குற்றவாளிகளாக சிறுமைப்படுத்தி குணச்சிதைவைப் பூசுவதும் தீண்டாமை வன்கொடுமையின் இன்னொரு வடிவமேயாகும்.

– இப்படி சுவர் கட்டிய குற்றத்தை மறைக்க அடுத்தடுத்து பல பொய்களை சுவர் விரும்பிகள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்க, இவ்விசயத்தில் பல கட்சிகள் பெரிய பெரிய பிளாஸ்திரிகளை ஒட்டிக்கொண்டு வாய் திறக்காமல் கிடந்தன. இதில் ஆளுங்கட்சி – ஆளாத கட்சி, தலித் கட்சி – தலித்தல்லாதவர் கட்சி என்று எந்த பேதமும் இல்லை. உத்தப்புரத்தின் பிள்ளைமார் சாதிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்குமான தனிப்பட்ட பிரச்னையாக இதை மாற்றிவிடப் பார்த்தன. அதேநேரத்தில், ஆதிக்கசாதியினரின் குற்றங்களை கண்டிக்கும் திராணியற்ற தமது அரசியல் கோழைத்தனத்தை மறைக்க, அரசியல் ஆதாயத்துக்காக தலித்துகளை தூண்டிவிடுவதாக மார்க்சிஸ்ட் கட்சி மீது புகார் கூறவும் அவை தயங்கவில்லை.. சுவற்றை இடிக்கச் சொல்வது அரசியல் ஆதாயத்துக்காக என்றால் அதுபற்றி கருத்து தெரிவிக்காமல் இருப்பதும் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் என்ற குறைந்தபட்ச தர்க்கத்தைக் கூடவா மக்களால் புரிந்து கொள்ளமுடியாது?

சுவற்றை இடி அல்லது இடிப்போம் என்ற முழக்கத்தோடு மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் 2008 ஏப் 29 அன்று இரண்டாயிரம் பேருடன் ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும்கூட கட்சிகளிடம் எந்த அசைவும் இல்லை. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பகுதியாக கலந்துகொண்ட உத்தப்புரம் தலித்துகளின் உணர்வுகளை, அவர்களின் ஏகோபித்த தலைவராய் அன்றுவரை இருந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமியால்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. உத்தப்புரம் கிராமத்தோடு தனக்கு கடந்த பத்தாண்டுகளாக தொடர்பிருப்பதாகவும், ஆறேழுதடவை அங்கு போய் வந்திருப்பதாகவும், தன்னிடம் இந்த சுவர் பற்றி யாருமே புகார் சொல்லவில்லை என்றும் கூறியதோடு, சுவற்றைக் கட்டியுள்ள பிள்ளைமார் சாதியினர் ஆதிக்கசாதியினரிலேயே மிகவும் மிதமானவர்கள் என்றும் நற்சான்று வழங்கினார் கிருஷ்ணசாமி.

அத்தோடு அவர் நிற்கவில்லை. தன்பாட்டுக்கு நின்று கிடக்கும் சுவரை இடிப்போம் தகர்ப்போம் என்று அரசியல் ஆதாயத்துக்காக சில கட்சிகள் தலித்துகளை தூண்டிவிடுகின்றன. அவர்கள் பின்னால் சென்றுவிடாதீர்கள் என்று தலித்துகளை எச்சரிக்கவும் செய்தார் கிருஷ்ணசாமி. சாதிய மோதல்கள் முடிவுக்கு வந்து இணங்கி வாழும் இந்த நேரத்தில் சுவர் பிரச்னையை எழுப்பினால் பிற சாதியினர் ஒன்று சேர்ந்துகொண்டு தலித்துகளை தனிமைப்படுத்திவிடுவார்கள் என்பதே அவர் தினத்தந்தியிலும் டெக்கான் கிரானிக்களிலும் கொடுத்த பேட்டியின் சாரம்.

கிருஷ்ணசாமியின் இந்த எச்சரிக்கை நமக்கொன்றும் புதிதல்ல. ஒடுக்குமுறையை ஒடுக்குமுறை என்று உணர்ந்து எதிர்க்காதவரை, இணங்கி வாழ்வதாக தோற்றம் காட்டுவதில் சிக்கலொன்றும் இல்லைதானே? சாதியொடுக்குமுறை இருப்பதாக கேள்வியெழுப்பும் போதெல்லாம் ‘எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை, தாயாப்புள்ளையா கூடிக்குலாவி வாழ்கிறோம்’ என்பதான வசனங்களை எவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்?

எதிர்த்தால் தலித்துகளை தனிமைப்படுத்திவிடுவார்கள் என்ற கிருஷ்ணசாமியின் அச்சம் நியாயமானதுதான். ஆனால் பயந்தே கிடந்தால் எப்போதுதான் எதிர்ப்பது? எதிர்த்துப் பேச அஞ்சியிருந்தால் இமானுவல் சேகரன் என்ற தியாகி கிடைத்திருப்பாரா? தலித்துகளின் பெருமைக்குரிய முன்னோர்களில் ஒருவரான வீரன் சுந்தரலிங்கம் கையில் பளபளக்கும் வாளை வெறும் அட்டைக் கத்தியாக குறுக்கும் அதிகாரம் தனக்கில்லை என்பதை கிருஷ்ணசாமி உணர வேண்டும். அடித்தால் திருப்பி அடி என்ற ஆவேச முழக்கமெல்லாம் சுவற்றில் எழுதப்படும் வெற்று வாசகங்களாக தேய்ந்துபோனால் தலித்துகள் எப்போதுதான் சுயமரியாதையோடு வாழத் தொடங்குவது என்பது பற்றி, மீசையை முறுக்கி போஸ் கொடுப்பதிலேயே பொழுதைக் கழிக்கும் பிற தலித் தலைவர்களும் சற்றே யோசிக்க வேண்டியுள்ளது.

கட்சிகள் தான் இப்படியென்றால் வாழும் சமத்துவப் பெரியாரின் ஆட்சி சுவர் பிரச்னையை எவ்வாறு அணுகியது என்று பார்ப்போம். தமிழக மக்களின் பிரச்னை என்றால் பிரதமருக்கு ஆறஅமர கடிதம் எழுதுவதும், தமது குடும்ப விசயமென்றால் பதறியடித்து ஃபேக்ஸ் அனுப்பிவிட்டு நேரடியாய் ஆளம்புகளையும் ஏவிவிடுகிற ராஜதந்திரியை முதல்வராகப் பெற்றிருக்கிற இம்மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை சுவர் பிரச்னையை மேலும் மேலும் சிக்கலாக்கியது. களஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் 2008 பிப்ரவரி 22 அன்றே இப்பிரச்னையை மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டன. அரசின் தரப்பில் அசைவில்லை.

மார்ச் 25 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு தரப்பட்டது. நடவடிக்கை இல்லை. ஏப்ரல் 17ம் தேதி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது. மின் இணைப்புதான் துண்டிக்கப்பட்டதேயன்றி சுவர் விசயத்தில் நடவடிக்கை இல்லை. சுவரை இடிக்குமாறு சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தும், மாநிலக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியும் கூட பலனில்லை. ஏப்ரல் 29ம் தேதி ஆர்ப்பாட்டத்துக்கும் அசரவில்லை. ஆறப்போட்டு ஊறப்போட்டு, ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்று இழுத்தடிப்பின் மூலம் தீவிரத்தை நீர்த்துப்போக வைக்கமுடியுமா என்ற ரீதியிலேயே பிரச்னை அணுகப்பட்டது. கோடநாடு எஸ்டேட் விசயத்தில் காட்டுகிற வேகத்திலும் விவேகத்திலும் இத்துனூண்டு காட்டியிருந்தால்கூட ஒரு தீர்வை எட்டியிருக்க முடியும்.

தீண்டாமையைக் குற்றமாக அறிவிக்கும் சட்டம் அமலில் உள்ள இந்த நாட்டில் இவ்வளவு வெளிப்படையாக தீண்டாமையை அறிவிக்கும் வகையில் சுவரெழுப்பிய பிள்ளைமார்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்திருக்க வேண்டும், சுவற்றையும் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். சாதிகளைக் கடந்து ஒரு சமூகமாக இணங்கி வாழ்வதை உத்திரவாதப்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் முடியாதபோது இந்த நாட்டின் அரசியல் சட்டம் முன்மொழிகிற சமத்துவத்தை மதிக்காத குற்றத்திற்காக அவர்களது குடியுரிமையை ரத்து செய்து அவர்களிடமிருந்து குடும்ப அட்டைகளை அரசாங்கம் பறிமுதல் செய்திருக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். நாட்டின் இயற்கை மற்றும் பொதுவளங்களையும் நிதியாதாரங்களையும் பயன்படுத்துவதிலிருந்து அவர்கள் முற்றாக விலக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டும். மொத்தத்தில் தீண்டாமையை கடைபிடிக்கிற அவர்கள் இச்சமூகத்தின் எல்லா முனைகளிலும் தளங்களிலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது சாதிவெறி என்னும் மரபுரீதியான மனநோயால் பீடிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் மனநல மருத்துவமனையிலாவது சிகிச்சைக்கு சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இதில் எதுவொன்றையும் செய்கிற சொரணையும் அரசியல் உறுதிப்பாடும் ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இல்லாது போய்விட்டது.

சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரால் தங்களை தாஜா செய்யவே நிர்வாகம் முயற்சிக்கிறது என்பதை புரிந்துகொண்ட பிள்ளைமார்கள் மிகுந்த இளக்காரத்தோடும் செருக்கோடும்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். தீண்டாமையை கடைபிடிப்பதை தங்களது பிறவி உரிமைகளில் ஒன்றாகக் கோருகிற அவர்களுக்கெதிராக கடுமை காட்டாததன் விளைவு, சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் தமது குடும்ப அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் துணிவைக் கொடுத்துள்ளது.

நாட்டின் அவமானச் சின்னங்களில் ஒன்றாக இருக்கும் அந்த தீண்டாமைச் சுவரை பார்வையிட்டு காறியுமிழ மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் 07.05.2008 அன்று உத்தப்புரத்திற்கு வருவதாய் அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவரை மந்தகதியில் இருந்த நிர்வாகம் சற்றே பதற்றமடைந்து களமிறங்கியது. 05.05.08 அன்றிரவு பெரும் எண்ணிக்கையிலான போலிசாரை கிராமத்திற்குள் இறக்கி 06.05.08 காலையில் இருபதடி சுவற்றை இடித்து பொதுப்பயன்பாட்டுக்கான ஒரு பாதையை நிறுவியுள்ளது.

3.

‘இடிக்கப்பட்டது உத்தப்புரம் சுவர். தலித்துகள் புழங்குவதற்கான பொதுப்பாதை நிறுவப்பட்டுவிட்டது…’ என்ற செய்தியைக் கேட்டதும் புதுதில்லியிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கப்பட்டதாய் கேள்விப்பட்டேன். ஊர் முழுவதையும் வளைத்து வளைத்து எழுப்பியுள்ள சுவற்றில் வெறும் இருபது அடியை இடித்ததற்கா இவ்வளவு கொண்டாட்டம் என்று தோன்றியது. ஆனால் சுவற்றைக் கட்டிவைத்திருந்த சாதிவெறியர்கள் இந்த இருபதடி இடிப்புக்குக் காட்டிய எதிர்வினையைக் கண்ட பிறகுதான், அந்த சுவற்றிலிருந்து ஒரேயொரு ஒற்றைச் செங்கல்லை உருவியிருந்தாலும்கூட அது கொண்டாடப்பட வேண்டிய வெற்றியே என்பது உறைத்தது.

ஏற்கனவே அறிவித்திருந்தபடி தோழர் பிரகாஷ் காரத் 07.05.08 காலை உத்தப்புரம் வந்து சுவர் இடிக்கப்பட்ட பகுதியில் பொதுப்பயன்பாட்டுக்காக போடப்பட்டிருந்த புதிய பாதையையும் இன்னும் எஞ்சியிருக்கிற சுவற்றையும் பார்வையிட்ட பிறகு ஊர் மந்தையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தலித்துகளிடையே உரை நிகழ்த்தினார். தங்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த புதியபாதையில் நடப்பதில் ஏற்படும் சுதந்திரவுணர்ச்சியை அனுபவிக்கும் பேரார்வம் கண்ணில் பொங்க காத்திருந்த அந்த உத்தப்புரம் தலித்துகளோடு சேர்ந்திருந்த அந்தப் பொழுதை வாழ்வின் உணர்ச்சிமயமானதொரு திருப்பமாகவே உணர்கிறேன்.

இந்த பூமியில் ஒவ்வொரு அடியை எடுத்து வைப்பதற்கும் ஒரு தலித் போராட வேண்டியிருக்கிறது என்ற உண்மையை உணர்த்துகிறவர்களாக அவர்கள் வெயிலிலே தகதகத்துக் கொண்டிருந்தார்கள். (கூட்டத்திடலுக்கு அருகேயிருந்த ஒரு சுவற்றில் ‘சமத்துவப்போராளி’ என்ற பட்டத்துடன் மருத்துவர் கிருஷ்ணசாமியின் படம் போட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டதைக் கண்டதும் எனக்கு தாளமுடியாத சிரிப்பு. அன்று காலையில் மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய சரத்குமாரைப் பார்த்து அவரது தொண்டர்கள் ‘சமத்துவ நாயகன்’ என்று கோஷம் எழுப்பியபோதும் எனக்கு இதேமாதிரியான சிரிப்பு வந்து தொலைத்தது).

இதுவரை பபுள்கம் மென்றுகொண்டிருந்த அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் சுவர் இடிப்புக்குப் பிறகு வாய் திறந்தன. அரசியல் ஆதாயத்திற்காக மார்க்சிஸ்ட்டுகள் சுவர் பிரச்னையை எடுத்திருப்பதாகப் பொருமினார்கள். அடப்பாவமே, கட்சி என்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான் இயங்குகிறது என்ற புரிதலில்லாமல் இருக்கிறார்களே… ஒருவேளை பொருளாதார ஆதாயத்திற்கென்று இருப்பதுதான் கட்சி என்று இவர்கள் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ?

கம்யூனிஸ்ட்கள் தலித்துகள் பிரச்னையை முன்வைத்துப் போராடுவதில்லை என்று குற்றம் சாட்டுவதும், தலித்துகள் பிரச்னையை முன்வைத்து கம்யூனிஸ்ட்டுகள் போராடும்போது மிகுந்த மனத் தொந்தரவுக்குள்ளாகி, தமக்குப் பாத்தியப்பட்ட ராஜ்ஜியத்துக்குள் அந்நியர் நுழைந்துவிட்டதைப் போன்ற அசூயை உணர்வுக்கும் அச்சவுணர்வுக்கும் ஆட்பட்டு குதர்க்கமான சந்தேகங்களை எழுப்புவதுமாகிய பலவீனத்திலிருந்து தலித் முரசு போன்ற பத்திரிகைகளும் விடுபட வேண்டியிருக்கிறது. இம்மாத தலையங்கத்தில், சுவர் பிரச்னையை மார்க்சிஸ்ட் கட்சிதான் கையிலெடுத்துப் போராடுகிறது என்று சொல்வதற்குக்கூட அதற்கு மனம் வரவில்லை. சிலர் என்றே குறிப்பிடுகிறது. எல்லாவற்றுக்கும் மதமாற்றமே தீர்வு என அது இந்த தலையங்கத்திலும் குறிப்பிடுகிறது.

தலித்துகள் எந்த மதத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டாலும் அவர்களை தலித்துகளாகவே பிறர் பார்க்கின்றனர் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள அது தயாராயில்லை. சரி, தலித்துகள் பௌத்தத்தை தழுவிவிட்டதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது சுவற்றைக் கட்டியவர்களே அதை இடித்துவிடுவார்களா? கிருஷ்ணசாமிக்கு ஆரோக்கியமான மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. உத்தப்புரம் சுவர் போன்ற பல தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தலித் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும் என்று பரந்த ஒற்றுமைக்கு அறைகூவல் கொடுத்திருக்கிறார். அந்த சுவற்றை இடிக்க இடதுசாரிகள் நடத்தியப் போராட்டத்தை தான் ஏன் ஆதரிக்கவில்லை என்பது பற்றி அவர் எப்போதாவது சொல்வார் என்று நம்புவோமாக. சுவர் பற்றிய எல்லா உண்மைகளும் வெளியாகிவிட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போதுதான் ‘உண்மையறியும்’ குழுவை நியமித்திருக்கிறது. இனிமேல் அது கண்டறியப் போகும் புதிய உண்மைகளை வரவேற்க நேரமிருப்பவர்கள் காத்திருக்கவும்.

சுவர் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலித்தல்லாதவர்கள் ஊரை காலிசெய்துவிட்டு மலையடிவாரத்திற்கு சென்று காற்றிலும் மழையிலும் வெயிலிலும் குளிரிலும் வெட்டவெளியிலேயே குழந்தைக் குட்டிகளோடு தங்கியிருப்பதாக ஊடகங்கள் புலம்பத் தொடங்கின.

1989 சாதிக் கலவரங்களையொட்டி தலைமறைவாகி திருப்பூருக்கு ஓடிப்போய் கொஞ்சம் பசையுள்ளவர்களாக வளர்ந்திருக்கும் உத்தப்புரம் பிள்ளைமார் திருப்பூரிலிருந்து திரட்டிக்கொண்டு வந்திருக்கும் ஆட்களின் துணையோடு தலித்துகளின் தோப்புகளை ஆக்கிரமித்து அங்குதான் பிள்ளைமார் அனைவரும் தங்கியிருக்கிறார்கள் என்ற உண்மையைச் சொல்ல எந்த ஊடகமும் தயாரில்லை.

தாக்குதலுக்கான முன்தயாரிப்போடு கத்தி கபடா அருவாக்கம்பு போன்ற ஆயுதங்களை திரட்டிக் கொண்டு வந்துள்ள அவர்களைத் தடுத்தால் பிரச்னை வேறுவகையாக திசைதிரும்பிவிடும் என்ற நன்னோக்கில் தலித்துகள் அமைதி காத்து வருகின்றனர் என்பதையும், தங்களது தோப்புகளை மீட்டுத் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்திருக்கிறார்கள் என்பதையும்கூட தெரிவிக்க ஊடகங்கள் முன்வரவில்லை. தலித்துகளின் மூச்சுக்காற்று பட்டால்கூட தீட்டு பாய்ந்துவிடும் என்று அலட்டிக்கொள்கிறவர்களுக்கு, தலித்துகளின் தோப்புகள் இப்போது புனிதச்சோலையாய் தெரிகிறது போலும்.

07.05.08 நாங்கள் சென்றிருந்தபோது உத்தப்புரத்தில் தலித்தல்லாதவர்கள் வீடு அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. தன் பிதிரும் பிள்ளைகளும் வனவாசம் போயிருக்கிற விசயம் தெரியாமல் ஒரேயொரு மூதாட்டி மட்டும் எல்லோரும் தன்னை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டார்களென புலம்பிக் கொண்டிருந்ததது. ஊரை விட்டுப் போனாலும் போவோமே தவிர தீண்டாமையைக் கைவிட முடியாது என்கிற சாதியாணவத்தில் திளைத்திருக்கிற பிள்ளைமார்கள், கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து தங்களைக் காப்பாற்ற ‘மகாத்மாவே எழுந்து வாரீர்’ என்று சுவரொட்டி வெளியிட்டிருந்த கேவலத்தையும் கண்டோம். காந்தி இருந்திருந்தால் இவர்கள் மீது காறித் துப்பியிருப்பார்.

வனவாசத்தில் இருக்கும் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க 09.05.2008 அன்றுதான் பாரதீய ஜனதா கட்சியினர் நுழைந்துள்ளனர். இன்னும் சில தினங்களுக்குப் பின், இந்த சுவர் யாராலும் கட்டப்பட்டதல்ல, அது 5 லட்சத்து 13 ஆயிரத்து 743 வருடங்களுக்கு முன்பு தனக்குத்தானே சுயம்புவாக உருவானது என்ற புதிய கதை ஒன்று கிளம்புவதற்கான வாய்ப்புமுள்ளது. ஏனென்றால் நாட்டில் எந்த கட்டுமானம் எப்படி உருவானது, அதை இடிக்கலாமா கூடாதா என்பதற்கான நாள் தேதி நட்சத்திரம் பற்றிய சகல தஸ்தாவேஜூகளும் தங்களிடம் இருப்பதாக கப்சா விடுவதில் அவர்களுக்கு இணையாக இங்கு யார் இருக்கிறார்கள்?

உத்தப்புரம் சுவர் பிரச்னையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாதிருக்கும் முக்குலத்தோரை எப்படியாவது இழுத்துவிட்டு தலித்துகளையும் முக்குலத்தோரையும் மோதவிட வேண்டும் என்று ஒரு கோஷ்டி களமிறங்கியுள்ளது. உத்தப்புரம் அருகேயுள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியிலுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அவமரியாதை செய்து பழியை தலித்துகள் மீது சுமத்திவிட்டால் அவர்கள் எதிர்பார்க்கிற மோதல்கள் தொடங்கிவிடும் என்று காய் நகர்த்துகிறார்கள். சிலைகளை முன்வைத்து மனிதர்களை பலிகேட்கும் சாதிவெறியை கட்டுக்குள் நிறுத்த, சிலையை அவமதித்த உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்ய தமிழக அரசு முனைப்புடன் இயங்க வேண்டும்.

உத்தப்புரத்தில் அடைந்திருக்கும் விடுதலையுணர்ச்சி ஒவ்வொரு கிராமத்துக்கும் பரவுமானால், ஒடுக்குமுறை சாதியாதிக்கத்தை தலித்துகள் தகர்த்துவிடுவார்கள் என்ற அச்சத்தை முன்வைத்து இடைநிலைச்சாதிகளை தலித்துகளுக்கு எதிராக அணிதிரட்டும் வேலையும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தோப்புக்குள் தங்கியிருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மூவேந்தர் முன்னேற்றக் கழக பொறுப்பாளிகள் வந்து போயிருக்கின்றனர். தோப்புக்குள்ளிருப்பவர்களை சமாதானப்படுத்தி ஊருக்குள் அழைத்துவரும் முயற்சியில் ஆளுங்கட்சியினரும் ஈடுபட்டிருக்கிறது. தோப்புக்கு உணவுப் பொருட்களை அனுப்பி பிள்ளைமார்களின் சாதிவெறியுடன் ஒருமைப்பாடு தெரிவிப்பதில் அக்கம்பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த சில இடைநிலைச் சாதிகளும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.

தலித்துகளின் தன்மான உணர்வையும் கல்வி பொருளாதார பண்பாட்டு வளர்ச்சியையும் காணச் சகியாத பல்வேறு குமைச்சல்களையும் பொருமல்களையும் உத்தப்புரத்தை மையமாக வைத்து ஒருங்கிணைக்கவும் தலித்துகளை தனிமைப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளிலிருந்தும் தம்மைப் பாதுகாக்கும் நிலைக்கு தலித்துகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இருபதடி சுவற்றை இடித்ததற்கே இவர்களுக்கு இவ்வளவு கோபம் வருமென்றால், சிறைக்குள் அடைக்கப்பட்டதுபோல திரும்பிய பக்கமெல்லாம் தென்படும் மதில்சுவற்றுக்குள் பதினெட்டு ஆண்டு காலமாக முடக்கப்பட்டிருந்த தலித்துகள் மனதில் எவ்வளவு கொந்தளிப்பு இருக்கும் என்ற நியாயத்தைப் பேச இன்று மார்க்சிஸ்ட்டுகளைத் தவிர வேறு யார்தான் இருக்கிறார்கள் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும்…..

இடி அல்லது இடிப்போம்…


நாய் பன்னி
ஆடு மாடு எருமை கழுதை
கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள்
எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று
என்னிடம் புகாரேதும் இல்லை
இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.

நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?

ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.

ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.

செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.

ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.

பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.

1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற – பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.

2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை

3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)

4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.

5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.

இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.

தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.

இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.

சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.

ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.

மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).

18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.

சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?

இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.

சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்…’

ஆனா அந்த மடம், ஆகாவிட்டா சந்தை மடம்


இந்திய சமூகம் சாதிரீதியான தனித்தனி தொகுப்புகளாக பிரிக்கப்பட்டும் அதேநேரத்தில் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுமுள்ளது. எந்தச் சூழலிலும் இச்சாதிகள் தம்மை சமமாகக் கருதி இணங்கி வாழ முடியாதவாறு கடும் விதிகளால் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பன்மப் படிநிலை பாகுபாட்டை உருவாக்கி நிலைநிறுத்தத் தேவையான தத்துவபலத்தை கிறித்தவமோ இஸ்லாமோ வழங்கவில்லை. கி.மு.1500களில் இந்தியப் பரப்புக்குள் நுழைந்த ஆரியர்களின் ஒதுக்குவதும் ஒதுங்குவதிலுமிருந்து தொடங்குகிறது இந்தப் பாகுபாடும் புறக்கணிப்பும்.

சடங்குகள், யாகங்கள், பரிகாரங்களால் உருக்கொண்டது ஆரியர்களின் வேதமதம். அது சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்தது. வேதத்தின் முதன்மையை ஏற்காதவர்களை அவர்ணர்களாக்கி ஒதுக்கிவைத்தது. இந்துமதத்தின் தொடக்கம் இதுவென்றால், சமத்துவமின்மையின் மீதே அது கட்டப்பட்டது என்ற முடிவுக்கும் வரமுடியும். அதன் கொடுமைகளுக்கு எதிரான புத்தரின் போதனைகள் செல்வாக்கு பெற்று ஒரு மதமாகப் பரவிய காலத்தில் சமூகத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்தனர் வேதமதத்தினர். பௌத்தத்தை அரசமதமாக ஏற்று ஆண்டு வந்த பிருகத்ரதனைக் கொன்ற புஷ்யமித்ர சுங்கனால் கி.மு.185வாக்கில் வேதமதம் உயிர்ப்பிக்கப்பட்டது. இன்றைய இந்துமதத்தின் தொடக்கமாக இதைக் கொள்வோமானால், அது அன்பிலும் அகிம்சையிலும் அல்லாமல்- பௌத்தர்களின் ரத்தங்குடித்து கொலைக்களத்தில் உருவானது என்ற முடிவுக்கு வரலாம்.

ஓதுதலும் ஓதுவித்தலுமாகிய தனது வர்ணக்கடமையிலிருந்து வழுவி, புஷ்யமித்திரன் ஆயுதமேந்தி அரசதிகாரத்தைக் கைப்பற்றியதை நியாயப்படுத்தியும், பௌத்தம் கோலோச்சிய காலத்தில் தளர்ந்துபோன வர்ணப்பாகுபாட்டை மீண்டும் இறுகப்படுத்தவும் சுமதி பார்கவா புதிய மனுஸ்மிருதியை எழுதினார். வர்ணத்தூய்மையின் சிதைவை சாதியாக உருவாக்கியதும், தொடத்தக்க- தொடத்தகாத சாதிகள் என்று இருகூறாகப் பிரித்ததும், ஒவ்வொரு சாதியையும் என்றென்றைக்கும் இணையமுடியாத அநேக உட்சாதிகளாகப் பிரித்ததுமாகிய இந்த புதிய மனுஸ்மிருதியிலிருந்து இந்துமதம் தொடங்கியதெனில் அதன் காலம் கி.மு.163 க்கு பின்பானது என்றாகிறது.

இப்படி வரலாற்றின் எந்தக் கட்டத்திற்குள் நுழைந்தாலும் இந்துமதத்தின் தொடக்கம் ஆரியர் நுழைவுக்கு அப்பாற்பட்டதல்ல. இந்த குறுகியகால வரலாற்றை ஒப்புக்கொள்வதில் உள்ள சங்கடங்களைத் தவிர்க்கவே இந்துமதம் ஆதியந்தமற்றது – சனாதனமானது என்ற புனைவுகளால் அலங்கரிக்கப்படுகிறது. சிந்து நதிக்கு அப்பாலுள்ள மக்களைக் குறிக்க பெர்ஷியர்களால் சூட்டப்பட்டப் பெயரே இந்து என்பது. ‘சிந்து என்ற நதிப் பெயரிலிருந்து தோன்றிய ஹிந்து என்ற சொல்…’ என்கிறார் ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ்ட்ரீய சர்வநாச சங்கத்தின் தலைவர்களில் ஒருவராயிருந்த எம்.எஸ்.கோல்வால்கரும் (ஞானகங்கை, பாகம்-1,பக்-143).

முகலாயர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் அல்லாதாரை இந்துக்கள் என்று குறிப்பது பரவலானது. ஆன்மீக மொழியில் சிக்கலாக்கி சொல்வதாயின் ‘அதுவாக இல்லாததால் இது’. கடவுள், புனிதநூல், வழிபாட்டுத்தலம் என்று எதுவுமே பொதுவாயின்றி வெவ்வெறு வழிபாட்டு முறைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்த மக்கள் அனைவரையும் இந்து என்ற பொதுச்சொல்லால் விளித்தமையால் வந்த வினைதான் இந்துமதம். பின்னாளில் அது, நடப்பிலிருந்த எல்லா வழிபாட்டு முறைகளிலிருந்தும் சாதியமைப்புக்கு இசைவான கருத்துக்களை உட்செரித்துக் கலவையானது. ஆகவே ஒரு மதத்திற்குரிய தனித்த வரையறைகள் எதையும் கொண்டதல்ல இந்துமதம். சுயமும் உள்ளீடுமற்ற இந்த மொக்கைத்தனம்தான் இந்துமதத்தின் தனித்தன்மை- எல்லாவற்றையும் உள்ளடக்கும் நெகிழ்வுத்தன்மை என இந்துத்வாவினரால் கொண்டாடப்படுகிறது.

2.
இந்தப் பின்புலத்தோடு, அர்ஜூன் சம்பத்தின் ‘சேரவாரும் ஜெகத்தீரே..’ என்ற கட்டுரையை (தினமணி, 25.03.08) வாசித்தால் ‘உலகின் மூத்ததும் முழுமையானதுமான இந்து சமயம்’ என்கிற அவரது வாதத்திலுள்ள மோசடிகளை உணரமுடியும். தனது மதத்தின் மதிக்கத்தக்க நெறிகள் என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லாததால் ‘வையும், வள்ளுவரும், வள்ளலாரும், விவேகானந்தரும் போற்றிய சமயம் இந்து சமயம்’ என்று புளுகுகிறார். வையும் வள்ளுவரும் வாழ்ந்த காலத்தில் உருவாகியேயிராத ஒரு மதத்தை அவ்விருவரும் போற்றினராம். தாய் தகப்பனுக்கு முன்பே பிள்ளை பிறந்துவிட்டது என்கிற அபத்தத்திற்கு நிகரானது இது. வரலாறு நெடுக படுகொலைகளை நிகழ்த்தியவர்களின் இன்றைய வாரீசான இந்துமதத்தை, வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் நெஞ்சம் என்று ஜீவாபிமானத்தால் கசிந்துருகும் வள்ளலார் எப்படி போற்றியிருக்க முடியும்?

இந்துசமயத்தில் மரியாதையில்லை, அரவணைப்பு இல்லை என்று பிற மதம் தழுவிய தலித்துகள் அங்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கும் சாதி இழிவுகளுக்கும் ஆளாகி வருவது குறித்து கவலைப்படுவதாக கூறிக்கொள்ளும் அவர், தலித்துகளை தாய்மதமான இந்துமதத்திற்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். எங்கள் மதத்திற்கு திரும்பி வந்தால் சமமாகவும் கண்ணியமாகவும் நடத்தப்படுவீர்கள் என்றழைக்க அவரது மதத்தின் யோக்கியதை ஒத்துழைக்கவில்லை. எனவே, அங்கே போய் அவமானப்பட்டு கிடப்பதற்கு பதில், இங்கே வந்து அவமானப்படுங்களேன் என்கிறார். இந்த அறைகூவலுக்குள் மறைந்திருக்கும் மோசடிகள் எவையென்றால், தலித்துகளின் தாய்மதமெனவும் தமிழ்ச்சமயம் எனவும் இந்து மதத்தை முன்னிறுத்துவதுதான். ( தமிழ், தமிழன் பெருமை பேசி தாம்தூம் தையத்தக்கா என்று ஆட்டம் போடும் தமிழினத் தலைவர்கள் யாரும் இந்துத்வவாதிகளின் இத்தகைய மோசடிகள் குறித்து இன்னும் ஏன் எண்பதடி உயரத்துக்கு எகிறி குதிக்கவில்லை என்ற கேள்வி இவ்விடத்தில் எழுகிறதா உங்களுக்கு?)

வர்ணமுறைக்கு வெளியே நிறுத்தப்பட்ட தலித்துகள் அதனாலேயே இந்துமதத்திற்குள் ஒருபோதும் இருந்ததில்லை. அவர்களுக்கு தாய்மதம் என்று ஒன்று இருக்குமானால் அது பௌத்தமே. சாக்கியர் என்பதே சக்கிலியர் என்று மருவியதாக அருந்தியர்களும் தம்மை பௌத்தத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். 1911ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், வேதத்தின் முதன்மையையும், பார்ப்பனப் புரோகிதத்தையும் ஏற்க மறுக்கும் பத்துவகையான வாழ்வியல் கூறுகளுடையோரை தலித், பழங்குடிகளென வகைப்படுத்தியதை இங்கு இணைத்துப் பார்க்க வேண்டும். தனித்துவமான வாழ்வியல் பண்புகளையுடைய தலித்துகளை இந்துக்கள் என்ற நெல்லிக்காய் மூட்டையில் சேர்த்துக்கட்டிய வரலாற்று மோசடிகளுக்கு எதிராகத்தான் அயோத்திதாசர் தன்னை ‘பூர்வபௌத்தன்’ என்று அறிவித்துக்கொண்டார். ‘தீண்டப்படாத இந்துவாய்ப் பிறந்தது என் அவலம், ஆனால் இந்துவாய் இறக்கமாட்டேன்’ என்று 1935 டிசம்பர் 13ம் நாள் அம்பேத்கர் பிரகடனம் செய்ததும் இதன்பொருட்டே.

தனது தந்தையும் முன்னோர்களும் பக்தியில் சிறந்த இந்துக்களாய் இருந்தும், கல்வியறிவு பெறுவதையும் ஆயுதம் ஏந்துவதையும் சொத்து சேர்ப்பதையும் இந்து மதத்தின் கட்டுப்பாடுகளே தடுத்தன என்பதை சுட்டிக் காட்டிய அம்பேத்கர் இதே அனுபவங்கள் ஒவ்வொரு தலித்துக்கும் நேர்ந்திருப்பதை அம்பலப்படுத்தினார். முனிவர்களைப்போல பேசிக்கொண்டே கசாப்புக்காரர்களைப்போல செயல்படுகிற, எறும்புகளுக்கு ஒருபக்கம் சர்க்கரை போட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் சகமனிதனின் தாகத்துக்கு தண்ணீர்தர மறுக்கிற இந்துக்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாமென அவர் தலித்துகளை எச்சரித்தார்.

அதேநேரத்தில் ‘கிறித்தவமோ, இஸ்லாமோ, சீக்கியமோ அன்றிப் பிற எந்த மதத்திற்கோ நாம் மாறினாலும் நமது நலன்களைப் பெற நாம் தொடர்ந்து போராடியே தீரவேண்டும் என்ற உண்மையை நன்கறிவோம். இஸ்லாத்தில் சேருவதன் மூலம் நவாபுகளாகவோ, கிருத்துவத்தில் சேருவதன் மூலம் நாமனைவரும் போப்பாண்டவராகவோ ஆகிவிட முடியுமென்று கனவு காண்பது அறிவீனம்’ ( அ.தொ.நூ.37, பக் 136) என்ற தெளிவோடுதான் அம்பேத்கர் மதமாற்றத்தை முன்வைத்தார். சாதியத்தால் குறுக்கீடு செய்யப்பட்ட இந்திய மனம் எங்கும் எந்தநிலையிலும் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிராகவே இயங்கும் என்பதால், இங்கு கிறித்தவமும், இஸ்லாமும்கூட சாதியத்தின் செல்வாக்கிற்குள் முழுகிவிட்டதை உணர்ந்தே அவர் இவ்விரண்டு மதங்களையும் நிராகரித்து பின்னாளில் பௌத்தத்தை முன்வைத்தார்.

இந்து மதத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று தமது கூட்டு மனநிலையில் தகித்தெழும் கலகவுணர்வின் வெளிப்பாட்டு வடிவமாகவே மதமாற்றத்தை தலித்துகள் இன்றளவும் கைக்கொள்கின்றனரேயன்றி வேறொரு வெங்காய மயக்கமும் அவர்களிடம் இல்லை. ‘ஆனா அந்த மடம், ஆகாவிட்டா சந்(ஆ)த மடம்’ என்ற சொலவடை மதம் குறித்த தலித்துகளின் பார்வையோடு நடைமுறைப் பொருத்தம் கொண்டதாகும்.

3.
தொடக்ககால கிறித்தவ மறைப்பணியாளர்கள், இந்துத் துறவிகளைப் பார்த்து அவர்களைப் போலவே காவியுடுத்தி உத்திராட்சமும் கட்டைச் செருப்பும் அணிந்தனர். பெயருக்குப் பின்னால் ஐயர் என்று சேர்த்துக்கொண்டனர். ஆதிக்கசாதியினரை கிறித்தவராக்கிவிட்டால் மற்ற சாதியினரையும் இழுத்துவிடலாம் என்ற நப்பாசையில் அப்படியான முயற்சிகளில் இறங்கினர். கிறித்தவத்திற்கு மாறிய ஆதிக்கசாதியினர் அந்த மதத்தையும் மாசுபடுத்தியதன் விளைவுதான் இன்று அர்ஜூன் சம்பத்தின் அங்கலாய்ப்பில் காணப்படும் பாரபட்சங்களும் தீண்டாமைகளும். ஆக இந்துமதமும் அதன் சாதியும்தான் இங்குள்ள எல்லா மதங்களும் பாழ்பட மூலக்காரணம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளாமல் இவர் பிறமதங்கள் மீது பழிபோடுவதும்கூட மோசடியில் ஒரு வகையே. கிறித்துவத்தஆயும் இஸ்லாத்தையும் பார்த்துத்தான் சாதியொடுக்குமுறை என்ற ஒன்று இருப்பதையே அறிய நேர்ந்த அப்பாவியைப் போன்று வாய்ச்சாமர்த்தியம் காட்டுகிறார்.

தன்னை பிடித்துவைத்திருக்கும் இந்து மதத்திலிருந்து வெளியேற நூறுநூறானக் காரணங்கள் ஒரு தலித்துக்கு இருக்கும்போது, அயல் மதத்தாரது படையெடுப்பினால் வாள்முனையிலும், ஏழ்மையில் உழல்கிறவர்களுக்கு பொருளாதார ஆதாயங்களைக் காட்டியுமே இங்கு மதமாற்றங்கள் நிகழ்ந்தது நிகழ்கிறது என்பதே இந்துத்வாவின் ஜோடனைக் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இஸ்லாமிய, கிறித்தவ ஆட்சிகளுக்கு முன்பாகவே இவ்விரண்டு மதங்களும் இந்தியப் பகுதியோடு தொடர்பு கொண்டிருந்தாலும் இன்றளவும் அவை சிறுபான்மையாகவே உள்ளன. பின்பு, அதிகாரத்தையும் நாட்டின் கருவூலத்தையும் கைப்பற்றிய இஸ்லாமிய மன்னர்களும், கிறிஸ்தவ பிரிட்டிஷாரும் ஒட்டுமொத்த இந்தியரையும் மதம் மாற்ற அவர்கள் ஆட்சியிலிருந்த காலஅளவு போதுமானதுதான். தத்தமது மதங்களை பெரும்பான்மையாக்கி இருக்கமுடியும். ஆனால் அவர்களின் நோக்கம் மதப்பிரச்சாரமோ மதமாற்றமோ அல்ல, நாட்டைக் கைப்பற்றி கொள்ளையடிப்பதுதான்.

பெரும்பாலும் அவர்கள் சாதிமுறைக்குள்ளோ இந்து மதத்திற்குள்ளோ தலையிடவில்லை. மட்டுமல்ல, தமது மதங்களின் தனித்தப் பண்புகளை இந்துமதம் அரித்துக் கொண்டிருப்பதை தடுக்காதவர்களாகவும் இருந்தனர். ‘பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுத்துண்டம் எனக்கு’ என்பதுபோல இந்த நாட்டுக்கு வந்த எல்லாமதங்களும் இங்குள்ள சாதிமுறைமையோடு இணக்கம் கொண்டிருப்பதை நிறுவிக் காட்ட இங்கு உதாரணங்களுக்குப் பஞ்சமில்லை.

ஒருவேளை அர்ஜூன் சம்பத்தின் அழைப்பை ஏற்று ஏழெட்டுத் தலைமுறைகளுக்கு முன்னால் மதம் மாறிய ஒருவர் வந்தால் அவரை வெறும் இந்து என்று ஏற்றுக்கொள்கிற ஏற்பாடு இந்து மதத்திற்குள் இருக்கிறதா? மதம் மாறி பல தலைமுறைகள் கடந்ததில் பூர்வஜாதி மறைந்து இப்போது வெறும் மத அடையாளத்தோடு நிற்கும் ஒருவரை எந்த சாதிக்குள் அடைப்பது என்ற சிக்கல் இந்துமதத்திற்குள் இருப்பதால்தான், அது ஒரு பிரச்சார மதமாக இல்லாமலிருக்கிறது. எனவேதான் இந்துமதத்தை தழுவுமாறு யாரும் வற்புறுத்தப்படுவதில்லை. சேரவாரும் ஜெகத்தீரே என்று அழைப்பதிருக்கட்டும், பிறமதத்திலிருந்து வருவோரை சேர்த்துக்கொள்வீரா அகத்தீரே… என்று தன் சொந்த மதத்தாரை கேட்க வேண்டும் அர்ஜூன் சம்பத்.

இருக்கட்டும். இந்துமதத்துக்கு திரும்புங்கள் என்று தலித்துகளை அழைப்பதன் பின்னுள்ள தந்திரங்கள்தான் என்ன? ஒருவேளை அவர்கள் திரும்பினால்- அவர்களது சாதி ஏற்கனவே தெரியுமென்பதால்- இங்கேயும் தலித்துகளாகவே நீடிக்கவிடுவதில் சிக்கலொன்றும் இல்லை என்பதுதான். மதம் மாறிய தலித்துகள் தம்மை மதஅடையாளத்துக்குள் மட்டுமே பொருத்திக் கொள்ள விரும்பினாலும் மற்றவர்கள் அவர்களை சாதியாகவே பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதனால்தான் தாய்மதத்திற்கு வருமாறு தலித்துகளுக்கு மட்டுமே அறைகூவல் விடுக்கப்படுகிறது. தாய்மதத்திற்கு திரும்புமாறு ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் விடுத்த அறைகூவல்களும்கூட இப்படி வெத்துவேட்டு ஆரவாரம்தானேயன்றி அந்தரங்கசுத்தியானதல்ல.

பிறமதத்தார் தலித்துகளுக்கு கொடுமையிழைப்பதாக அரற்றும் அர்ஜூன் சம்பத், இந்துமதத்தார் நிகழ்த்தும் வன்கொடுமைகள் குறித்து எப்போதாவது வாய்திறந்திருக்கிறாரா? எதிர்த்துப் பேசக்கூடாதென்று தலித்துகள் வாயில் மலத்தைத் திணித்தபோது, அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது அரைடவுசர் கூட்டாளிகளின் வாய்கள் காலியாகத்தானே இருந்தன… பின் ஏன் எதுவோ திணிக்கப்பட்டதைப்போல இறுக மூடிக்கொண்டிருந்தார்கள் வாயை?

இல்லாத பொல்லாதக் காரணங்களை இட்டுக்கட்டி பாபர் மசூதியை இடிக்க கடப்பாரை தூக்கிய இவர்கள், இதோ இவர்களது மூக்குக்குக் கீழே மதுரை பேரையூர் உத்தாபுரத்தில் தலித்துகள் ஊருக்குள் வரக்கூடாதென்று எழுப்பப்பட்டிருக்கும் மதில்சுவரை இடிக்க ஏன் கிளம்பவில்லை? இந்துமதத்திற்குள் ஏற்றத்தாழ்வு கிடையாது- எல்லோரும் வாருங்கள் மலமள்ளப் போகலாம் என்று எப்போதாவது அறைகூவல் கொடுத்திருக்கிறாரா? இல்லையே. பிறகென்ன வாய்ப்பந்தல்? என்ன இழிவுகள் நேர்ந்தாலும் தாங்கிக்கொண்டு எங்கள் மதத்திற்குள்ளேயே இருக்கவேண்டும் என்று வற்புறுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லை.

தலித்துகளும் பிற்பட்ட மக்களும் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல், தமிழில் அர்ச்சனை- பாடுதல் போன்ற உரிமைகளை ஏதோ இந்துமதத்தின் நற்பண்பில் விளைந்தவைபோல காட்டுவதற்கும் அவர் துணிந்திருக்கிறார். இந்துமதத்தில் இருக்கிறவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாமென்பது, இங்கே வந்தால் இடஒதுக்கீடு கிடைக்கும் என்று பிறமதத்திலிருப்பவரிடம் ஆசைவார்த்தை கூறும் மலிவான உத்திகள் நிரம்பிய இந்தக் கட்டுரை இந்துத்வாவினர் சமகால நிகழ்வுகளையும்கூட திரிப்பதில் வல்லவர்கள் என்பதையே அம்பலப்படுத்துகிறது.

4.
எந்தப்பக்கமும் சாராதிருப்பதில் உள்ள சௌகர்யங்களை முன்னிட்டு நடுநிலைவாதியாக காட்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்க மனோபாவத்தின் பிரதிநிதியாக ‘ நடுநிலை நாளேடு’ என்று வந்து கொண்டிருந்தது தினமணி. சுதந்திரப்போராட்ட காலத்தில் தொடங்கப்பட்டது, தேசிய உணர்வு மிக்கது, அவசரநிலைக் காலத்தில் தணிக்கைக்கு உள்ளானது, கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடுவது என்பது போன்ற பழைய பெருங்காய டப்பா வாசனையும் பாவனையும் அதற்குண்டு. தினமணியின் செய்திகள் நம்பகமானவை (?) என்ற நடுத்தர வர்க்கத்தின் பொதுப்புத்தியை திரையாகப் பிடித்துக்கொண்டு தினமணி, இந்துத்வாவின் ஊதுகுழலாக வெளிப்படையாக செயல்படுகிறது. எனவே அதற்கு உண்மைகளை விடவும் பொய்யும் புனைவும் விருப்பமானவையாக உள்ளன. அதற்கான ஒப்புதல் வாக்குமூலம், இந்த கட்டுரையை வெளியிட்ட நோக்கத்தில் மறைந்திருக்கிறது.

(தினமணிக்கு எழுதப்பட்ட இந்த மறுப்பு இந்த தேதிவரையிலும் பிரசுரிக்கப்படவில்லை. மாற்றுக் கருத்தை மதிக்கும் அதன் மாண்பு வாழ்க வாழ்க…)

கோட்டான்களின் குதர்க்கங்கள்…


கோட்டாவால் நூறுசதம் பயனடைந்தவர்களை இனி கோட்டான்கள் என்றே கூப்பிடலாம். ஆனால் ஒரு பறவை இனத்தை அவமதிக்க வேண்டுமா என்பதை யோசியுங்கள்.

மனுநீதியால் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது மட்டும்தான் இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது. இந்த இடஒதுக்கீட்டிலிருந்து போராடிப் போராடி மற்றவர்கள் பெற்றதற்கு பெயர் மறு ஒதுக்கீடு. எங்கே எல்லோரும் ஒருமுறை உரக்கச் சொல்லுங்கள்…‘ பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது இடஒதுக்கீடு. மற்றவர்கள் கேட்பது மறுஒதுக்கீடு..’

மறுஒதுக்கீட்டுக்கு எதிராக கோட்டா சாதி மாணவர்கள் காவாலித்தனத்தில் இறங்கிய கணத்திலிருந்தே அவர்களை இந்தநாட்டின் விடுதலைப் போராளிகளைப் போல காட்டிக்கொண்டிருக்கின்றன ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள். நவீன தொழில்நுட்பத்தை கையில் வைத்துக்கொண்டு என்னதான் முற்போக்கான வேடத்தோடு நுனிநாக்கு ஆங்கிலம் பேசினாலும் இந்த நடுநிலைச் செய்தியாளர்களால் தங்களது ஆதிக்கசாதிக் கொழுப்பை மறைத்துக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொருவரின் உடம்பிலும் நரம்பே பூணூலாய் புடைத்துக்கொண்டு அவர்களை கிளப்பிவிட்டுள்ளது தெருவுக்கு.

ஒவ்வொரு பெருநகரத்திலும் மறுஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துடைய கோட்டான்களை பெரும்பான்மையாகவும் ஆதரவு கருத்துள்ளவர்களை சிறுபான்மையாகவும் கூட்டிவைத்து விவாத அரங்குகளை நடத்துகின்றன ஆங்கில தொலைக்காட்சிகளான என்டிடிவியும் சிஎன்என்-ஐபின்னும். இந்த விவாதங்களில் மறுஒதுக்கீட்டிற்கு எதிராக பேசுகிறவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கிவிட்டு ஆதரவு கருத்துக்களை கூறுவோருக்கு அவகாசம் தராத பாரபட்சத்தை வெளிப்படையாய் அவை கையாள்கின்றன. வசதிபடைத்த மேட்டுக்குடி ஆதிக்கசாதியினரின் எஸ்எம்எஸ், ஈமெயில் பிரச்சாரத்தினால் இந்த நாடு முழுவதும் மறுஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பதைப்போன்ற மாயையை உருவாக்குவதற்கும் இத்தொலைக்காட்சிகள் தவறவில்லை.

எவ்வளவு பெரிய தலைவர்களாயிருந்தாலும் அவர்களை தங்களது ஸ்டுடியோவுக்கு அழைத்துவந்து எடக்குமடக்கான கேள்விகளைக் கேட்டு திணறடிக்கும் சாதுர்யமிக்க இந்த செய்தியாளர்கள், யூத் •பார் ஈக்வாலிட்டி என்று பெயர் வைத்திருப்பவர்களைப் பார்த்து, இதுவரை சமூகத்தில் நிலவும் எந்தெந்த ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துக் போராடி சமத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறீர்கள் என்று தவறியும் கேட்கவேயில்லை. ‘ரிசர்வேஷன் என்பது ரயிலுக்காவது இருக்கலாமா அல்லது தகுதியும் திறமையும் உடல்பலமும் இருப்பவர்கள் ஏறிக்கொள்ளட்டும், மற்றவர்கள் அங்கங்கே- அவா அவா ஆத்துக்குள்ளேயே கிடந்து சாகட்டுமா’ என்றாவது குறைந்தபட்சம் கேட்டிருக்கலாம். இப்போதிருக்கும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும்… இனியும் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறவர்களையோ அல்லது நடப்பிலிருக்கும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது என்று சொல்கிற அத்வானியையோ அழைத்து ‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கிவைத்த உங்களுக்கு அறுபதாண்டுகள் என்பது சகித்துக் கொள்ள முடியாத நெடுங்காலமாக தோன்றுகிறதா?’ என்றாவது கேட்டார்களா என்றால் அதுவுமில்லை.

கோட்டா என்ற வார்த்தையைக் கேட்டதும் கொந்தளிக்கிற இந்த கோட்டான்கள் என்.ஆர்.ஐ கோட்டா பற்றி மட்டும் ஏன் வாய் திறப்பதில்லை? பதில் தெளிவானது. அதாவது அவர்கள் எல்லோரும் ஒண்ணுக்குள் ஒண்ணு. மத்தவங்க வாயில மண்ணு. இந்த நாட்டு மக்களின் உழைப்பிலும் வரிப்பணத்திலும் இயங்குகிற உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கிற இந்த கோட்டான்கள் படித்துமுடித்ததும் •பாரினுக்கு ஓடிவிடுவார்கள். அங்கே தங்களது தகுதி திறமையை நிரூபித்து அங்கேயே படித்து முடிக்க கையாலாகாத தங்களது பிள்ளைகளை மீண்டும் இங்கே இளிச்சவாயர் தேசமான இந்தியாவுக்கு அனுப்பி படிக்க வைத்துக் கொள்ள இந்த என்.ஆர்.ஐ கோட்டா தேவைப்படுகிறது. அதனால் அந்த விசயத்தில் இந்த கோட்டான்களுக்கு செலக்டிவ் அம்னீசியா வந்துவிடுகிறது.

மனிதவுரிமை மீறல்களைப் பற்றியும், அவமதிப்புகளைப் பற்றியும் ரகசிய கேமராக்கள் மூலம் அம்பலப்படுத்துவதாக அலட்டிக் கொள்ளும் இத்தொலைக்காட்சிகள், ‘கோட்டா வந்துவிட்டால் உயர்வாதி மாணவர்களாகிய நாங்களெல்லாம் இந்த வேலைகளைத் தான் செய்ய வேண்டியிருக்கும்’ என்று ஷ ¨ பாலிஷ் போடுவதையும் தெருக்கூட்டுவதையும் செருப்புதைப்பதையும் சவரம் செய்வதையும் படம்பிடித்து காட்டுகின்றனர். அதாவது கேவலமான இந்தத் தொழில்களையெல்லாம் இனி நாங்கள் செய்ய வேண்டிவரும் என்று சித்தரிக்கின்றனராம். இந்த செயல், காலங்காலமாக இத்தூய்மைப்பணிகளை செய்து வருவோரை அவமதிக்கிற அப்பட்டமான வன்கொடுமைச் செயலாகும். இத்தனைக்காலமும் நாங்கள் செய்தோம், இனி கொஞ்சகாலத்திற்கு இந்த வேலைகளை நீங்கள் செய்யுங்கடா என்று நாம் சொல்லத் தயங்குவதால்தான் அவர்கள் இவ்வளவு கொழுப்பெடுத்து அலைகின்றனர் என்பதை சமூகநீதி அக்கறையாளர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் அப்படி எதுவும் எந்த ஊடகத்திலும் பதிவாகவேயில்லை.

இந்தநாட்டில் எவ்வளவு நியாயமான கோரிக்கைகளுக்காக யார் போராடினாலும் அதனால் ஏற்படுகிற பொருளாதார இழப்புகள், உயிரிழப்புகள், சமூகத்திற்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைக்கும் இவ்வூடகங்கள் கோட்டாசாதியினரின் இந்த வெறியாட்டத்தின் பாதிப்புகளைப் பற்றி தவறியும் வாய் திறக்கவில்லை. போண்டாவில் உப்பில்லை என்றாலும் புண்ணாக்கில் சத்தில்லை என்றாலும் பொதுநல வழக்கு தொடுக்கும் சமூக அக்கறையாளர்கள் யாரும் இந்த காலித்தனத்திற்கு எதிராக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.

பிரச்னையை ஊதிஉதி பெரிதாக்கிய பிறகு இப்போது மிகவும் நடுநிலையார்களைப் போல ‘கோட்டா பிரச்னையில் ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதா?’ என்று விவாதம் நடத்துகிறது சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி(29.05.06). இதில் இந்திய மக்கள் எல்லோரும் எஸ்எம்எஸ் வாக்கெடுப்பில் கலந்து கொண்டதைப்போல ‘மீடியாக்கள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளவில்லை’ என்று பெரும்பான்மையோர் வாக்களித்திருப்பதாக தன்னைத்தானே பாராட்டிக் கொண்டது இந்த டிவி. இதில் அவர்களாலும் மறைக்கமுடியாமல் வெளிப்பட்டது என்னவென்றால், கோட்டான்களின் இந்த சாதிவெறியாட்டத்திற்கு பல தனியார் நிறுவனங்கள் நிதியுதவி செய்கின்றன என்கிற விசயம். அடுத்து, மறுஒதுக்கீட்டுக்கு ஆதரவான போராட்டங்களைப் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்துவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, அப்படி ஏதேனும் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் இருக்கும் பட்சத்தில் அதை தங்களுக்கு அனுப்பிவைக்குமாறும், அதை வெளியிடுவதாகவும் அறிவித்தனர். இங்கே கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், எதிர்க்கிறவர்கள் இருமுவதையும் செருமுவதையும் கூட இந்த சேனல்கள் பதிவு செய்து ஆவணப்படுத்தி தயாராக வைத்துள்ளன என்பதும், மாற்றுக்கருத்துக்களை பதிவு செய்வதற்கு அவை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் தான். அதனால் அப்படி ஏதேனும் இருந்தால் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றன. இது பெருந்தன்மை இல்லை. அப்பட்டமான பாரபட்சம்.

ஒரு நகரத்தில் மருத்துவர்கள், கோட்டான்களின் எண்ணிக்கை மிகமிக சொற்பமாகத்தான் இருக்கும். ஆனால் எந்த தைரியத்தில் டெல்லி பந்த்துக்கு அவர்களால் அழைப்பு விட முடிகிறது? டெல்லி முழுவதும் அவர்களது அழைப்பை ஏற்று முழுஅடைப்பு நடந்துவிடுமா? இல்லை. அவர்களது பலம் அந்தளவிற்கு கிடையாது. அப்படியானால், முழுஅடைப்பு என்கிற அவர்களது அறிவிப்பை ஏற்று செயல்படுத்த பணபலமும் ஆள்பலமும் கொண்ட வேறு சமூகவிரோத சக்திகள் அவர்களுக்கு பின்னிருந்து இயக்குகின்றனர் என்பதும் கூட தெளிவாகிறது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் பந்த் அறைகூவல் விடுத்த போதெல்லாம் வெகுவாக அலட்டிக்கொண்டு முந்திரிக்கொட்டைகளாக அபிப்ராயம் சொல்லும் நீதியின் காவலர்கள் இப்போது மௌனம் காப்பது எதனால்?

துப்பாக்கிச்சூட்டிலும் தடியடியிலும் இதுவரை தொழிலாளி வர்க்கம் எத்தனையோ இழப்புகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஒரு விசாரணைக்குழுவை நியமித்து ஊத்தி மூடுகிற நமது ஆட்சியாளர்கள், இந்த கோட்டான்களின் வெறியாட்டத்தை ஏன் இன்னும் சகித்துக் கொண்டு மென்மையான அணுகுமுறையை கையாள்கின்றனர்? மக்களின் உயிரைக் காக்கும் தங்களது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்ட மக்கள் விரோதிகளான இந்த குற்றவாளிகள் என்னவொரு அகம்பாவத்தோடு இந்தநாட்டின் குடியரசுத்தலைவரையே சந்திக்கின்றனர்? அவர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் இருக்காது என்று தாஜா பண்ணுகிற அளவுக்கு அரசாங்கம் கீழிறங்கிப் போவதற்கு காரணம் என்ன? இப்படி எழுகிற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை ஒன்றுதான்: ஆதிக்கசாதிக்காரன் கலவரத்தில் ஈடுபடும்போது இந்த நாட்டின் சட்டம் ஆட்சி அதிகாரம் ஊடகம் எல்லாவற்றிலும் ஊடுருவி இருக்கும் மனுநீதிக்காரர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதைப் போல சமூகநீதி செயல்பாட்டாளர்கள் செயலாற்றவில்லை என்பதுதான்.

உழைப்பாளி மக்களின் எந்தப் பிரிவு போராடினாலும் பாய்ந்து பிடுங்கும் அத்தியாவசிய பணி பராமரிப்புச்சட்டம், தேசிய பாதுகாப்புச்சட்டம் என்பதெல்லாம் இப்போது மட்டும் ஏன் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றன? மக்களது உயிரை பணயம் வைத்து ஆதிக்கசாதியினர் நடத்தும் இந்த வெறியாட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவித்து இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களும் பிற்பட்டோரும் களமிறங்கினால் தான் இதற்கு தீர்வு வருமென்றால் அதற்கான வேலையைச் செய்வதுதான் இப்போது சமூகநீதி ஆர்வலர்களின் உடனடி கடமையாக இருக்கமுடியும்.

அறுபது வருசம் இழந்தவனுக்கு இத்தனை ஆத்திரம் வருகிறதென்றால் ஆயிரமாயிரம் வருசங்களாக அடக்கப்பட்டவனுக்கு எவ்வளவு ஆவேசம் வரும் என்பதைக் காட்ட வேண்டிய தருணம் இதுதான். மனுநீதிக்கும் சமூகநீதிக்கும் இடையே நடக்கிற போராட்டத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் ஏதேனும் ஒரு பக்கம்தான் நிற்கமுடியும். இருதரப்புக்கும் பஞ்சாயத்து பண்ணுகிற கமிஷன் மண்டி புரோக்கர் வேலைகளை மறுஒதுக்கீடு பிரச்னையில் யாரும் கையாளக்கூடாது என்ற தெளிவோடு உழைக்கும் மக்களாகிய தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் ஓரணியாய் திரளவில்லையானால் துரோணனின் பிணம் எழுந்து வந்து கேட்கும் எஞ்சியிருக்கும் நமது இன்னொரு கட்டைவிரலையும்.

இடஒதுக்கீடு: யாசகமல்ல, உரிமை


(தனியாரி கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த வேளையில் எழுதப்பட்ட கட்டுரை இது. இக்கட்டுரை விவாதிக்கும் பல கருத்துக்கள், உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்று ஆதிக்க சாதியினர் போராடி வரும் இன்றைய சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கு வெளியிடப்படுகிறது)

“உலகிலுள்ள அனைத்துமே பார்ப்பனர்களின் உடமையாகும். பார்ப்பனனது மிக உயர்ந்த பிறப்பின் காரணமாக உண்மையில் அவனே எல்லாவற்றுக்கும் உரியவனாகிறான்….”

– மனுஸ்மிருதியின் இந்த வாசகம் சமூகத்தின் எல்லா வளங்களையும் வசதிகளையும் பார்ப்பனனுக்கு மட்டுமே தாரை வார்த்தது. மற்றவர்களை வெறுங்கையர்களாய் தாழ்த்தியது. உடலுழைப்பில் ஈடுபடாமலும் தகுதி திறமை எதையும் நிரூபிக்காமலும் பார்ப்பனனனாய் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு தேவையான எல்லாமும் கிடைத்தன.

வாழ்க்கைத் தேவைகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான விவசாயம் தொழில் சார்ந்த அறிவைக் கொண்டிருந்த உழைப்பாளி மக்களை கீழ்மைப்படுத்த, வேதங்களை கற்பதும் ஓதுவதுமே ஆகச்சிறந்த அறிவென உயர்த்தினர் பார்ப்பனர்கள். வேதத்தின் முப்பதாயிரம் வரிகளை 2496 நாட்களில் படிக்கின்றன பார்ப்பனக் குழந்தைகள். அதாவது நாளொன்றுக்கு 12 வரிகள் படிப்பதைத்தான் தங்கள் சாதியால் மட்டுமே முடியுமென்று வேலி கட்டிக் கிடந்தனர்.

ஆட்சியில் நீடிக்க வேண்டுமென்றால் வேத பாராயணங்களோடு வேள்விகள் நடத்த வேண்டுமென்று அரசர்களின் பதவிவெறியை கிளப்பிவிட்டு ஆதாயம் அடைந்தனர் பார்ப்பனர்கள். யாகங்களின் மூலம் எடைக்கு எடை தங்கம் (துலா புருஷ தானம்), தங்கத்திலான பசு (ஹிரண்ய கரபா) என்று பரிகாரப் பொருட்கள் கிடைத்தன. கடவுளோடு ஹாட்லைன் தொடர்பில் இருப்பதாய் கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களை தாஜா செய்து கொள்ள விரும்பிய ராஜாக்கள் அவர்களுக்கு பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம், அக்ரஹாரம் போன்ற பெயர்களில் ஏராளமான விளைநிலங்களையும் குடிநிலங்களையும் ஒதுக்கினர். தங்கத்தையும் நிலத்தையும் மட்டுமல்லாது அரசனுக்கு வேண்டியவர்கள் என்ற அந்தஸ்தையும் அதிகாரத்தையும் பெற்றுத் தருகிற வேதத்தை மற்றவர்கள் கற்பார்களேயானால் அவர்கள் தமக்கு போட்டியாளர்களாக வரக்கூடும் என்று அஞ்சினர் பார்ப்பனர்கள்.

வேதங்களை கற்பதே கல்வி என்றால் அதை நாங்களும் கற்போம் என்று துணிந்த சம்பூகன் தலையை ராமனே வெட்டிக் கொன்றதாய் வால்மீகி ராமாயணம் கூறுகிறது. பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் வேதம் கற்பிக்க முயற்சித்தவன் நாக்கை துண்டாக்கியும், வேதம் ஓதுவதை கேட்பவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியும் தங்களுக்கு போட்டியாளர்கள் யாரும் உருவாகிவிடாமல் பார்த்துக் கொண்டனர் பார்ப்பனர்கள். இதன் காரணமாக (வேதக்)கல்வியிலும், அது சார்ந்த அரண்மனை வேலைவாய்ப்பிலும் நூறு சதவீத இட ஒதுக்கீடு பார்ப்பனர்களுக்கு மட்டுமே இருந்தது. பார்ப்பனர்கள் ஆக்ரமித்து அனுபவித்து வந்த நூறு சதத்தில் பங்கு கேட்டு பார்ப்பனரல்லாதார் காலங்காலமாக நடத்தியப் போராட்டமே இடஒதுக்கீட்டின் வரலாறாகும்.

பார்ப்பனர்களையே ராஜகுருக்களாகவும் ஆலோசகர்களாகவும் கொண்டு ஐம்பத்தாறு தேசங்களாகவும் பேரரசுகளாகவும் அறுநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாகவும் பிளவுண்டு கிடந்த இந்த துணைக்கண்டமே பிற்காலத்தில் பிரிட்டிஷாரால் இந்தியாவாக்கப்பட்டது. தமது கொள்ளையை செவ்வனே நடத்தவும், அதற்கெதிராய் எழும் கிளர்ச்சிகளை அடக்கவும் தேவையான நிர்வாக ஊழியர்களையும் படையையும் தன் சொந்த நாட்டிலிருந்தே அழைத்து வருகின்ற கடும் செலவினத்தை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு. மனித ஆற்றல் மலிந்து கிடக்கும் இந்தியாவிலிருந்தே தனக்கான ஊழியர்களையும் படையினரையும் திரட்டும்போது அவ்வாறு திரள்பவர்களை இயல்பிலேயே தமக்கு விசுவாசமானவர்களாக மாற்றக்கூடிய வகையிலான மெகாலே கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சி.

வேதசுலோகங்களை மனனம் செய்வதில் பரம்பரை பயிற்சியுடைய பார்ப்பனர்கள் மனப்பாட அடிப்படையிலான ஆங்கிலேயரின் கல்விமுறைக்குள் மிக எளிதாக தம்மை பொருத்திக் கொண்டனர். வேதம் ஓதுதலைத் தவிர வேறொரு காரியத்தில் ஈடுபடுவதையும் தமது சாதியத் தருமத்திற்கு விரோதமானது என்று அதுவரை அலட்டிக் கொண்டிருந்தவர்கள் எவ்வித உறுத்தலுமின்றி படிக்கப் போயினர். கூடவே மற்றவர்கள் படிப்பதையும் முடிந்த மட்டிலும் தடுத்தனர். இதனால் ஆரம்ப காலத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும் கூட பார்ப்பனர்களால் நிறைக்கப்பட்ட அக்ரஹாரங்களாகவே செயல்பட்டன. 1914 ம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட 650 பட்டதாரிகளில் 452 பேர் பார்ப்பனர்களாகவே இருந்தனர். 1915ல் படித்தவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 7-8 சதமே. அதில் 75 சதவீதம் பார்ப்பனர்களாகவே இருந்தனர்.

இப்படி மிலேச்சனின் கல்வியை கற்றுத் தயாரான பார்ப்பன மற்றும் மேட்டுக்குடி இளைஞர்களுக்கு பொருத்தமான வாய்ப்பினை கேட்கத்தான் காங்கிரஸ் போன்ற இயக்கங்கள் தொடங்கப்பட்டன. கலெக்டர், ஜட்ஜ் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கெடுக்க இந்தியர்களுக்கும் வாய்ப்பு கோரியது காங்கிரஸ். அவ்வாறு நடக்குமானால் பார்ப்பனர்களும் மேட்டுக்குடியினரும் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவது அவர்களது சாதியாதிக்கத்தை வலுப்படுத்தவே உதவும் என்றும் அரசை எச்சரிக்கும் வகையில் 1893 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ந்தேதி 3412 பேர் கையொப்பமிட்ட 112 அடி நீளமுள்ள மனு ஒன்று சென்னையிலிருந்து பறையர் மகாஜன சபையால் அனுப்பப்பட்டது. ஆனாலும் என்ன பார்ப்பனர் ஆதிக்கம் தடுத்த நிறுத்த முடியாத ஒன்றாய் மூர்க்கம் கொண்டிருந்தது. அந்த மனுவில் வெளிப்பட்ட அச்சம் உண்மையே என்பது நிரூபணமானது. 1892 முதல் 1904 வரை மாகாண சிவில் சர்வீசுக்கு நடத்திய போட்டித் தேர்வில் தேறிய 16 பேரில் 15 பேர் பார்ப்பனர்களாகவே இருந்ததை சுட்டிக்காட்டிய சென்னை நிர்வாக சபை உறுப்பினர் சர்.அலெக்சாண்டர் கார்ட்யூ, சிவில் சர்வீஸ் முழுவதும் ‘கடும் வகுப்புணர்ச்சி’ கொண்ட பார்ப்பனர்கள் கைக்குள் இருப்பது குறித்து எச்சரித்தார்

தனது சொந்தத் தேவையிலிருந்து கல்வியை ஜனநாயகப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சி. ஆனாலும்
பார்ப்பனரல்லாதார் தங்களது பாரம்பரிய அல்லது குலவயப்பட்ட தொழில்களை கைவிட்டு வெளியேற முடியாதபடியான சமூகத் தடைகள் நீடித்தன. இம்மக்களை தங்களது அடிமைகளாகவும் சேவகர்களாகவும் கொண்டிருந்த பார்ப்பனர்களும் மேட்டுக்குடியினரும் அவர்களது கற்கும் உரிமையை மறுத்தனர். கல்வியில் பங்கெடுக்கும் உரிமை கோரி ஜோதிராவ் பூலே, அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் போன்றோர் தாழ்த்தப்பட்ட மக்களையும் பெண்களையும் அணிதிரட்டியதோடு சாத்தியப்பட்ட இடங்களில் கல்விச் சாலைகளை தொடங்கவும் செய்தனர். ஆனாலும் என்ன, மிலேச்சனின் கல்வியையும் அதிலிருந்து வருமானம் ஈட்டித் தரும் வேலைகளையும் பார்ப்பனர்களே கைப்பற்ற முடிந்தது. ஆட்சியாளர்களோடு சேர்ந்து சமூகத்தின்மீது அதிகாரம் செலுத்துபவர்களாக பிரிட்டிஷ் ஆட்சியிலும் அவர்களால் தொடர முடிந்தது. 1881ல் மக்கள் தொகையில் 3.6 சதம் மட்டுமே இருந்த அவர்கள் பத்து ரூபாய்க்கு மேல் (அன்றைய நிலவரத்தில் அதிக சம்பளம்) மாதச்சம்பளம் கிடைக்கும் வேலைகளில் 42.2 சதவீதத்தை ஆக்ரமித்திருந்தனர்.

கல்வி பொதுமைப்படுத்தப்பட்டதன் விளைவாக தடைகளையும் மீறி பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முகமதியர்கள் மத்தியிலிருந்து படித்த ஒரு பகுதியினர் உருவாகி வந்தனர். காலங்காலமாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்ட அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்து வலுவடைந்து வந்தது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நிலவும் பார்ப்பன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் இயக்கங்கள் தோன்றின. அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (பார்ப்பனரல்லாதாருக்கு?) இடஒதுக்கீடு வழங்கும் முறையை 1870ல் மைசூர் சமஸ்தானம் அறிமுகப்படுத்தியதாகத் தெரிகிறது. அனைத்து நிர்வாகப் பதவிகளையும் சில குடும்பங்களே ஆக்ரமித்திருக்கும் நிலையை மாற்றிடும் வகையில் மாவட்ட கலைக்டர்கள் தங்கள் கீழுள்ள பதவிகளை எல்லா சாதியாருக்கும் பிரித்து வழங்குமாறு 1884ல் ஆங்கிலேய அரசு ஆணையிட்டது. சென்னை வருவாய்த்துறை அலுவலக ஆணை எண் 128(2) என்று வெளியான ஆணையையே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பதன் தோற்றுவாயாகக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முனிசிபாலிட்டி நிர்வாகத்திலும் பங்கு கேட்கும் விண்ணப்பம் ஒன்றை அயோத்திதாசரும் ரெட்டைமலை சீனிவாசனும் திராவிட சபையோர் சார்பாக 1891 ம் ஆண்டிலேயே காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பியிருந்தனர். ஆனாலும் நிலைமையில் பெருத்த மாற்றமில்லை. நான்காம் பிரிவிலான கீழ்நிலைப் பணிகளே பார்ப்பனரல்லாதாருக்கு கிடைத்தன.

பொதுப்பணித்துறையில் 74%, வருவாய்த்துறையில் 50%, நிதித்துறையில் 66%, கல்வித்துறையில் 79% பதவிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே இருந்தனர் என்று 27.1.1919ல் வெளியான அரசாங்க பதிவேடு கூறுகிறது.

இதே காலகட்டத்தில்தான் பார்ப்பனரல்லாத சாதியார் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயரில் அமைப்புரீதியாய் திரண்டு கல்வி, வேலை, நிர்வாகச் சபைகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்து 1920ல் ஆட்சிக்கு வருகின்றனர். (இவ்வமைப்பு ஆங்கிலத்தில் நடத்திய ஜஸ்டிஸ் பத்திரிகையின் பெயரால் இவர்கள் ஜஸ்டிஸ்- நீதிக்கட்சியினர் என்றழைக்கப்பட்டனர்). தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியின்போது 1922ல் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம் அரசுப்பணிகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செயல்முறைக்கு வந்தது.

இதுவரை பெரும்பான்மையான அல்லது முழுமையாக பணியிடங்களை கைப்பற்றி வந்த பார்ப்பனர்கள் கட்டுக்குள் நிறுத்தப்பட்டனர். இந்த ஆணையின்படி, நியமிக்கப்படும் 12 பேரில் 2 பேர் மட்டுமே பார்ப்பனர்கள் என்றும் மற்ற இடங்கள் பார்ப்பனரல்லாதார்- 5, முஸ்லிம்- 2, ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்துவர்- 2, ஒடுக்கப்பட்டவர்கள்- 1 என்று பிரித்தளிக்கப்பட்டது. மக்கள்தொகைக்கு ஏற்றாற்போன்ற பிரதிநிதித்துவம் என்று இது அழைக்கப்பட்டாலும் மக்கள் தொகையின் கால்பங்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு இடம் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. ஆனாலும் பார்ப்பனர்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது என்ற வகையில் இவ்வாணை மிக முக்கியமானது.

தங்களது ஏகபோகத்தில் இருந்த கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் போட்டியாளர்கள் வந்துவிட்டதைக் கண்டு பதைத்த பார்ப்பனர்கள் தகுதி திறமை தரம் என்று கிளப்பிய கூப்பாடு இன்றுவரை ஓயவேயில்லை. (படிப்புக்கும் பார்க்கிற வேலைக்கும் எந்தத் தொடர்புமில்லாத நிலையில் அதில் என்ன தகுதியையும் திறமையையும் இவர்கள் கண்டார்கள் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்). இத்தனைக் காலமும் ஒட்டுமொத்த சமூகத்தின் வளங்களையும் உறிஞ்சி கொழுத்தது குறித்து எந்த குற்றவுணர்ச்சியும் மறுசிந்தனையும் அவர்களுக்கு ஏற்படவேயில்லை. அப்பட்டமான சாதிவெறியும் துவேஷமுமே பார்ப்பனர்களை இயக்கியது. அவர்கள் படித்த எந்த கல்வியிலிருந்தும் சமூகநீதி என்கிற பாடத்தை கற்கவேயில்லை. இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதில்தான் தங்களது நலன் அடங்கியிருக்கிறது என்பதில் அவர்களுக்குள் சாதிரீதியான ஒரு கருத்தொற்றுமை நிலவியது.

நிர்வாகத்திலும் நீதித்துறையிலும் பத்திரிகைகளிலும் பரவியுள்ள அவர்களது செல்வாக்கைப் பயன்படுத்தி கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிடாமல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். சுதந்திரத்திற்கு பிறகு இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. State of Madras Vs Champakam Dorairajan, April 1951 என்ற இவ்வழக்கு உச்சநீதி மன்றத்திற்கும் சென்றது. அரசியல் சட்டத்திற்கு முரணாக இருப்பதாக கூறி உச்சநீதிமன்றம் இவ்வாணையை ரத்து செய்தது. தந்தை பெரியார் தலைமையில் நடந்த போராட்டத்தின் விளைவாக அரசியல் சட்டத்தில் முதன்முறையாக திருத்தம் கொண்டுவரப்பட்டு பார்ப்பனரல்லாதாருக்கான ஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது.

தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பது அவர்களது வாடிக்கையாயிருந்தது. பாலாஜி எதிர் மைசூர் மாநில அரசு- 1962 சித்ரலேகா எதிர் மைசூர் மாநில அரசு-1964, ஜெயஸ்ரீ எதிர் கேரள அரசு – 1976, கேரள அரசு எதிர் என்.ஹெச். தாமஸ் – 1976, ரங்காச்சாரி வழக்கு- 1962, தேவதாசன் வழக்கு- 1964 போன்ற வழக்குகளின் விசாரணைகள் தீர்ப்புகளுக்கு ஏற்ப அவ்வப்போது இடஒதுக்கீடு குறித்த வாதப் பிரதிவாதங்கள் எழும்பியடங்கின.

‘சமூகத்திலுள்ள அனைத்து சாதியினரையும் சமமாக கொண்டுவர வேண்டும் என்று உறுதிபூண்டால், சமத்துவம் என்ற கொள்கையையே எப்போதும் முழங்கிக் கொண்டிராமல், சமூகத்தில் பிற்பட்டவர்களுக்கு கூடுதல் வசதிகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். உயர் வர்க்கத்தவர்களுடைய வசதி வாய்ப்புகளை குறைத்து விடவேண்டும். எதிர்காலத்தில் சமத்துவம் ஏற்பட நிகழ்காலத்தில் இவ்வாறு சமத்துவமின்மை கொள்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்று 1927ம் ஆண்டு சட்டமன்ற மேலவையில் பட்ஜெட் விவாதத்தின் போது அண்ணல் அம்பத்கர் தெரிவித்த கருத்தில் கடைசிவரை உறுதியோடு இருந்தார். அரசியல் சட்டம் இயற்றுவதில் அம்பேத்கர் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு கிட்டியது. பரிவின் அடிப்படையிலல்லாமல் சாதியப் படிநிலையின் பேரால் சமூகம் இழைத்தக் கொடுமைக்கு பரிகாரம் தேடிக்கொள்ளும் வகையாக, இதுவரை மறுக்கப்பட்ட உரிமைகளுக்கு ஈடாகத்தான் இடஒதுக்கீடு என்ற கருத்தை உருவாக்குவதில் அம்பேத்கர் நடத்திய போராட்டம் ஒப்பிடற்கரியது.

பிற்படுத்தப்பட்டோர் நிலையை ஆய்ந்திட மத்திய அரசால் காகா கலேல்கர் தலைமையில் 1953 ஜனவரி 29ல் முதல் பிற்பட்டோர் கமிஷன் அமைக்கப்பட்டது. 2399 சாதிகளை பிற்படுத்தப்பட்டவை என்று பட்டியலிட்ட கமிஷன் அவற்றில் 837 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டவை என்றது. 1.1961 மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக கணக்கிட வேண்டும் 2. இந்து சமூகத்தின் சாதியப்படிநிலையில் ஒரு சாதி எந்தளவிற்கு கீழாக இருக்கிறதோ அந்தளவிற்கு அது பிற்பட்ட வகுப்பாக கருதப்பட வேண்டும் 3.பெண்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்டவர்களாக கருதப்பட வேண்டும் – என்று கமிஷன் பரிந்துரைத்தது. அனைத்து பொறியியல் மற்றும் தொழிற்கல்வியில் 70 சதம் இடங்களை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றதோடு, அரசுப்பணிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் பின்வரும் அளவில் ஒதுக்கீட்டை பரிந்துரைத்தது: முதல்நிலை- 25 சதம், இரண்டாம்நிலை- 33 1/3, மூன்று மற்றும் நான்காம் பிரிவுகளில் 40 சதம்.

பரிந்துரையை அரசுக்கு அனுப்பிய காகா கலேல்கர் அதன்பின் குடியரசுத் தலைவருக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தில், கமிஷனின் பெரும்பான்மைக்கு கட்டப்பட்டு தான் அவ்வாறு பரிந்துரைத்ததாகவும், உண்மையில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் தெரிவித்திருந்தார். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஏற்காத நேருவின் விருப்பத்திற்கு ஏற்பவே இக்கடிதத்தை அவர் எழுதியதாக மறைந்த சோசலிஸ்ட் தலைவர் மதுலிமாயி குற்றம் சாட்டினார் (தி இந்து 19.09.1990). இறுதியில் அக்கமிஷனின் பரிந்துரைகளை அரசு நிராகரித்தது. பிற்படுத்தப்பட்டடோருக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு ஒதுங்கிக் கொண்டது.

மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்த அவசரநிலையை முறியடித்து 1977ல் அமைந்த ஜனதா அரசு பிற்படுத்தப்பட்டோர் நிலையை ஆய்ந்திட B.P. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிஷனை அமைத்தது. 1.1.79 ல் அமைக்கப்பட்ட இக்கமிஷன் சமூக அந்தஸ்திலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மக்கள் பிற்படுத்தப்பட்டமைக்கான பல்வேறு காரணிகளை ஆழ்ந்து பரிசீலித்து 31.12.1980ல் தனது பரிந்துரையை அரசுக்கு கொடுத்தது. மக்கள் தொகையில் 52 சதமாயிருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசுப்பணிகளில் 27 சதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற அதன் பரிந்துரையை பத்தாண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டனர். 1990ல் வி.பி.சிங் அரசு தான் செயல்முறைக்கு கொண்டு வந்தது. உயர்சாதி மேலாதிக்கத்தை தனது ஆதாரக் கொள்கையாக கொண்டியங்கும் பாரதீய ஜனதா கட்சி இதன் காரணமாகவே அரசை கவிழ்த்தது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தங்களது ஆதிக்கம் மேலும் மேலும் சுருங்குவதைக் கண்டு பதற்றம் கொண்டவர்கள் மண்டல் பரிந்துரைக்கு எதிராக கலகங்களை நடத்தினர். நந்தனை எரித்த நெருப்பின் மிச்சத்தில் யாரை கொளுத்துவது என்று அலைந்தவர்கள் தங்கள் சொந்த மாணவர்களையே எரித்தனர். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா சவானி வழக்கு தொடுத்தார்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஒருபுறமிருக்க, பல்வேறு மாநில அரசுகளும் வெவ்வெறு அளவீடுகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50%. (இந்த வரலாறு தெரியாமல் இடஒதுக்கீடு என்றாலே அது ஏதோ தலித்களுக்கு மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டு தலித்களை கவர்மெண்ட் மாப்பிள்ளைகள் என்றும் கவர்மெண்ட் பார்ப்பனர்கள் என்றும் கேலிபேசும் வழக்கம் பிற்படுத்தப்பட்டவர்களிடமும் உள்ளது).

இந்திரா சவானி வழக்கில், எல்லாவகையான இடஒதுக்கீடுகளும் 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்று 16.11.1992 ல் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாட்டில் 69 சதம் நீடிக்கத் தேவையான சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சமூகநீதி காத்த வீராங்கனைகள், வீராங்கன்கள் போன்ற பட்டங்களை ஆட்சியாளர்களுக்கு பெற்றுத் தந்த இச்சட்டத்திருத்தம் உள்ளிட்ட இடஒதுக்கீடு சட்டங்கள் எல்லாமே வெறும் ஏட்டளவு எண்ணிக்கையாக மாறிக் கொண்டிருப்பதும், அந்த ஏட்டளவு இடஒதுக்கீட்டையும் இல்லாமல் ஆக்குவதுமாகிய நிலைமையுமே இப்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஆகும்.

மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பணிநியமனம் நடைபெறுகிற போதே ஏட்டில் இருக்கும் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். ஆனால் பணியாளர் தேர்வு வாரியங்கள் அனைத்தும் தொடர்ந்து ஆளெடுத்து வந்த காலத்திலேயே சட்டப்பூர்வமான இடஒதுக்கீடு பூர்த்தி செய்யப்படவில்லை. பல்வேறு குளறுபடிகளை உருவாக்கி நடைமுறையில் இடஒதுக்கீட்டின் பலன் உரிய மக்களுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்வதில் உயர்சாதி மனோபாவம் தனது வன்மத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இடஒதுக்கீட்டின்படியான வேலைவாய்ப்பை மறுப்பதன் மூலம், தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் கையில் ஊதியமாகவும் சலுகைகளாகவும் புழங்கவேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை முடக்கி அவர்களை சமூகரீதியிலும் பொருளாதாரத்திலும் மேலெழ முடியாதவர்களாக ஒடுக்கும் புதிய தந்திரம் மிக நுட்பமாக கையாளப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடிகளுக்குமான இடஒதுக்கீடு செயல்முறைக்கு வந்த கடந்த 55 ஆண்டுகாலத்தில் ஒருபோதும் அதன் முழு அளவை எட்டியதேயில்லை. நான்காம் பிரிவு ஊழியர்களில் மட்டுமே அவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் நிரப்பப்பட்டுள்ளனர். உயர்பதவிகள் பெரும்பகுதியிலும் மக்கள் தொகையில் மூன்றுசதவீதமே இருக்கும் பார்ப்பனர்கள்தான் நிரம்பியுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இவ்விசயத்தை தலித் தகவல் ஒருங்கிணைப்பு சார்பில் 2000ல் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை காத்திரமாக அம்பலப்படுத்துகிறது. செடியை நட்டு அதை கடிக்கிற ஆட்டையும் அதிலேயே கட்டிவைத்த மாதிரி தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் உள்ள உயர்மட்ட ‘ஏ’ பிரிவு அதிகாரிகள் அவ்வளவு பேருமே தலித் அல்லாதவர்களாக நியமிக்கப்பட்டிருந்ததையும் இடஒதுக்கீடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருந்ததையும் இவ்வறிக்கை வெளிச்சமிட்டுள்ளது. ஐஐடி போன்றவற்றில் இடஒதுக்கீடு இன்றளவும் கொள்கையளவிலும்கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் இந்தியாவை இருபத்தோராம் நூற்றாண்டுக்கு இட்டுச்செல்லும் ராக்கெட்டுகளாய் கண்மூடித்தனமான நவீனமயம் திணிக்கப்பட்டது. சிக்கலான பணிகளை லகுவாக்கவும் மனிதர்களால் செய்யமுடியாதப் பணிகளில் ஈடுபடுத்தவுமே நவீனமயம் என்கிற கருத்தாக்கம் தவிடுபொடியானது. மனித ஆற்றல் மலிந்து கிடக்கும் இந்நாட்டில் நவீனமயம் ஆட்குறைப்புக்கே வழிவகுத்தது. அதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கைகளினால் நாடு முன்னேறவேயில்லை என்று சொல்லிக்கொண்டு 1991ல் புதிய பொருளாதாரக் கொள்கை, புதிய தொழிற்கொள்கை என்று எல்லாமே புதிய என்னும் அடைமொழியோடு வந்தன. உற்பத்தி செலவை குறைப்பது, நிர்வாகச் செலவினங்களை குறைப்பது, ஜீரோ பட்ஜெட், Down Sizing, Right Sizing, VRS என்றெல்லாம் நூற்றியெட்டு சொற்களில் பேசப்பட்டாலும் அவையெல்லாமே ஆட்குறைப்பையும், ஆளெடுப்பதை தடுப்பதையுமே நோக்கமாய் கொண்டிருந்தன. இந்திரா காந்தி கொண்டுவந்த ஆளெடுப்புத் தடைச்சட்டம் இன்றுவரை அமலில் இருக்கிறது. (Job or Jail என்று போராடிய இளைஞர் அமைப்புகளுக்கு ஜெயில் தான் கிடைத்தது. பிரச்னையை ஜெயிலா பெயிலா என்று திசைதிருப்பிய இந்திரா காந்திக்கு பிறகு எத்தனையோ பிரதமர்கள் ஆட்சிகள் வந்துவிட்டாலும் நிலைமையில் முன்னேற்றமில்லை.)

வளர்ந்தநாடுகளின் நவகாலனியாதிக்க ஏற்பாடான உலகமயமாக்கலுக்கு தோதாக நாட்டை தகவமைப்பதில் புதிய பொருளாதாரக் கொள்கை அடைந்த வெற்றியானது நாட்டு மக்களின் வாழ்வில் பலத்த அரிமானங்களை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு சேமநல அரசு என்கிற பொறுப்பிலிருந்து விலகி வெறுமனே சட்டம் ஒழுங்கை பராமரிக்கக்கூடிய அரசாக தன்னை சுருக்கிக் கொண்டுள்ளது. இவ்வளவு காலமும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்கி இந்திய உடமை வர்க்கத்தாரின் சுரண்டல் தடையின்றி நடப்பதற்கான சட்டம் ஒழுங்கையும் சமூக அமைதியையும் நிலைநிறுத்திய மத்திய மாநில அரசுகள், ஹீரோ ஹோண்டா தொழிலாளர் போராட்டத்தின் போது அன்னிய முதலாளிக்காக சொந்தநாட்டு மக்களின் மண்டையைப் பிளக்கும் அடியாள்படையாக வெளிப்படுத்திக் கொண்டன. நாட்டின் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வை போக்குவதில் ஒரு அரசுக்குரிய சட்டப்பூர்வமான கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து அது வெகுவாக விலகிவிட்டது. விதை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, சாலை என்று எதையும் மக்களுக்கு இலவசமாகவோ மானியத்துடனோ வழங்குவதில்லை என்ற அரசின் முடிவிலிருந்தே தனியார்மயம் ஊக்கம் கொண்டுள்ளது.

அரசுத்துறைகள் இருக்கும், ஆளெடுப்பு இருக்காது என்கிற நிலை மாறி அரசுத்துறைகளே இல்லாது போகும் நிலை உருவாகிவிட்டது. லாபமீட்டும் அரசுத்துறைகள் தனியார் மயமாகின்றன. நஷ்டத்தில் உள்ளவை மூடப்படுகின்றன. அரசுத்துறைகள் இயங்கும் பணிகளிலும் சேவைத்தளங்களிலும் தனியார் நிறுவனங்கள் போட்டியாக அனுமதிக்கப்படுகின்றன. இப்படியான கொள்கைகளின் நீட்சியாகத்தான் சுயநிதிக் கல்லூரிகள் உருவாகின. தமிழ்நாட்டில் உலகமய, தனியார்மய நடவடிக்கைகளின் தீவிரத்திற்கேற்ப சுயநிதிக் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

வசதியுள்ளவர்களால் வாங்கப்படும் சரக்காக உயர்கல்வி இப்போது மாற்றப்பட்டாகி விட்டது. பல லட்சங்களில் நடக்கிறது இந்த பரிவர்த்தனை. உலகமயக் கொள்கைகளின் காரணமாக உள்நாட்டுத் தொழில்கள் நலிவடைவதும் புதிய வேலைவாய்ப்புகள் அருகிப்போவதுமான புதிய சூழல் உருவாகியுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பு என்பதால் ஏற்பட்டுள்ள கடும்போட்டியில் தமது பிள்ளைகள் பின்தங்கிவிடக்கூடாது என்கிற பதற்றத்தில் நடுத்தர குடும்பங்களும் கூட தமது வருமானத்தின் பெரும்பகுதியை பணயம் வைத்து இந்த சூதாட்டத்தில் பங்கெடுக்கின்றன. படிக்கிற எல்லோருக்கும் வேலை என்ற சிந்தனையோ கேள்வியோ எழுவதில்லை. ஒரே ஒரு இடத்திற்குத்தான் ஆளெடுப்பு நடக்கிறதென்றால் அதை தட்டிப் பறிப்பவர் தன் பிள்ளையாக இருக்கவேண்டும் என்கிற அளவுக்கு இவர்களது சிந்தனை குறுகிவருகிறது. அல்லது உள்நாட்டில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி படித்துவிட்டு வெளிநாட்டுக்கு பறக்க வைப்பது. தங்கள் குடும்பத்திலிருந்து ஒருவர் வெளிநாட்டுக்கு போய்விட்டால் போதும், வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆகிவிடலாம் என்கிற இவர்களது ஏக்கத்தை நிறைவேற்றுவதாய் தோற்றம் காட்டுகின்றன சுயநிதிக் கல்லூரிகள்.

அங்கே பயிற்றுவிக்கப்படும் கல்வியின் தரம் எப்படியானது என்பதைவிடவும் அங்கே எப்படியான மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும். ராணுவத்துக்கும் கைதிகளுக்குமான கட்டுப்பாடுகளையும் ஒழுக்கங்களையும் கலந்து ஒருவகையான புதிய ஒழுங்குள்ள மாணவர்களை இக்கல்லூரிகள் உருவாக்குகின்றன. இந்த ஒழுங்கை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை பல கல்லூரிகளில் பெரும் வருமானமாக இருக்கிறது. ஒரு மாணவன் சகமாணவியோடு பேசுவதும்கூட கடும் குற்றங்களாக பாவிக்கப்படுகிறது. நூதனமான பல தண்டனை முறைகளும் கூட உண்டு. இப்படியான கட்டுப்பாடுகள்(?) நிறைந்த சூழ்நிலையில் படித்தால்தான் தன்பிள்ளை பணயத் தொகையை மீட்கும் குதிரையாக முடியும் என்று பெற்றோர் மத்தியில் ஒப்புதல் இருக்கிறது. இக்கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் கூட தினந்தோறும் தமது கற்பிக்கும் திறனை நிரூபிப்பதன் மூலமே மறுநாள் வேலையில் நீடிக்க முடியும் என்ற நிலையிலிருப்பதால் மாணவர்கள் மேலும் மேலும் இயந்திரகதிக்கு ஆட்படுத்தப்படுகின்றனர்.

உண்மையில் இப்படிப்பட்ட மாணவர்கள்தான் இன்றைய முதலாளிகளுக்குத் தேவை. அதனால்தான் பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் இச்சுயநிதிக் கல்லூரிகளிலேயே கேம்பஸ் இன்டர்வியூக்களை நடத்துகின்றன. தொழிலாளியின் ஊதியம் சலுகைகள் உரிமைகள் போன்றவற்றை தீர்மானிக்கும் தொழிற்சங்கம், கூட்டுபேர சக்தி, தொழிலாளர்நலச் சட்டங்கள் போன்றவற்றுக்கு இடமளிக்காமலே புதுவகையானதொரு தொழிலாளிப் பட்டாளத்தை முதலாளிகள் உருவாக்கி வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் சம்பந்தப்பட்ட ஊழியரோடு தனிப்பட்ட முறையில் பேசி முடிக்கப்படுகிறது. தன்னையொரு சமூக மனிதனாக உணராமல் தனித்தொதுங்கும் மனநிலை கொண்ட, வெளியுலக நடப்புகளை ஏறெடுத்தும் பார்க்காத, தானுண்டு தன் வேலையுண்டு என்று மிகுந்த கீழ்ப்படிதலுள்ள மாணவர்கள் தொழிலாளிகும்போது தமது சுரண்டலுக்கு எந்த ஆபத்தும் தடங்கலும் ஏற்படாது என்ற முதலாளிகளின் நம்பிக்கையை நிறைவு செய்கின்றன சுயநிதிக் கல்லூரிகள். அதாவது பிற முதலாளிகளுக்குத் தேவையான சைபர்கூலிகளை அவர்கள் விரும்பக்கூடிய வகையில் தயாரிக்கின்றனர் கல்வி முதலாளிகள். முதலாளிகள் தமக்குள் வகுத்துக் கொண்ட வேலைப் பிரிவினைதான் இது. எனவே சுயநிதி கல்லூரிகள் நடத்தப்படும் விதம் குறித்தோ அதில் உருவாக்கப்படும் மாணவர்கள் குறித்தோ அரசோ பிற சமூக அமைப்புகளோ மாணவர் சங்கங்களோ கேள்வியெழுப்ப முடியாத காட்டாட்சி சுதந்திரம் வேண்டும் என்பது கல்வியாலை முதலாளிகளின் கிடக்கையாக இருக்கிறது.

சமூகத்தின் மேலே தம்மை இருத்திக்கொண்டு அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் தமது மேலாதிக்கத்தை நிறுவிக்கொண்ட பார்ப்பனர்களும், மேல்தட்டு சொத்துடமையாளர்களும், குறுகிய சிந்தனை கொண்ட நடுத்தர வர்க்கத்தினரும் மட்டுமே இச்சுயநிதிக் கல்லூரிகளில் இடம் பிடிக்கும் வசதி பெற்றுள்ளனர். சாதியப் படிநிலையில் கீழ்ப்படுத்தப்பட்டதால் பொருளாதாரத்திலும் நலிந்து கிடக்கும் மற்றவர்கள் நுழைய வேண்டுமானால் அரசாங்கத்தின் தலையீடும் துணையும் தேவை. சுயநிதிக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் அரசானது தனக்கொரு பங்கை எடுத்துக்கொள்வதன் மூலமே தலித்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் அங்கே நுழைவதற்கான வாய்ப்பு உருவாகும். ஆனால் உச்சநீதிமன்றமோ சுயநிதிக் கல்லூரிகளின் விவகாரங்களில் தலையிட அரசுக்கு உரிமையில்லை என்றும், கட்டணம் உள்ளிட்டவற்றை நிர்வாகங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும், அங்கே இடஒதுக்கீட்டை அமல்படுத்தத் தேவையில்லை என்றும் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. சொந்தநாட்டு மக்களுக்கு இடஒதுக்கீட்டை மறுத்த அதே தீர்ப்பில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு 15 சதம் ஒதுக்கீடு தேவை என்று கூறியதில் என்ன நீதி இருக்கிறது? வெளிநாட்டுவாழ் இந்தியர்களை சுரண்டிக் கொழுக்க தமக்கு கிடைத்த சட்டரீதியான அனுமதி என்று கல்வியாலை முதலாளிகள் இத்தீர்ப்பை வரவேற்று கொண்டாடியதில் ஆச்சர்யமேதுமில்லை.

சுயநிதிக் கல்லூரிகள் அந்தரத்திலிருந்து வந்தவையல்ல. சுயநிதி கல்லூரி முதலாளிகள் தம்முடைய கைக்காசை கொட்டியாவது இந்த சமூகத்திற்கு கல்வி புகட்டியேத் தீர்வது என்கிற லட்சியவாதிகளுமல்ல. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு நேர்காணலில் சொன்னதுபோல கல்விச்சாலையை நடத்துவதைவிட சாணியுருண்டை விற்பதுதான் லாபம் என்ற சூழ்நிலை உருவாகுமானால் இவர்களெல்லாம் மாடுமேய்க்கும் தொழிலுக்குப் போய்விடக்கூடியவர்களே. இந்த சமூகத்தின் பல்வேறு வளங்களையும் பயன்படுத்தியே கல்லூரி தொடங்குவதற்கான மூலதனத்தை திரட்டியுள்ளனர். ஏற்கனவே அரசு உருவாக்கியிருக்கும் கட்டமைப்பை பயன்படுத்துகின்றனர். அரசின் பல்வேறு கல்விச்சாலைகளில் உருவான அறிவாளிக்கூட்டத்தை தமது கூலியடிமைகளாகப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் இம்முதலாளிகளின் கல்விக்கொள்ளை தொடருவதில் ஏதேனும் பிரச்னைகள் எழுமானால் சட்டம் காவல் நீதி நிர்வாகம் என எல்லா முனைகளிலிருந்தும் அரசின் உதவியை பெறுகின்றனர். ஆகவே சமூகத்தின் பொதுவளங்களை, அரசின் உதவிகளை மிகுதியாக பயன்படுத்தி நடக்கும் ஒரு துறையில்அல்லது தொழிலில் அரசின் தலையீடும் அரசுக்கான பங்கும் தேவையாயிருக்கிறது. ஒருவேளை சுயநிதிக் கல்லூரி நடத்துவதை கொள்ளைத்தொழிலாக அறிவித்துவிடும் பட்சத்தில் அத்தகைய குற்றத்தில் பங்கு கேட்பது ஒரு அரசின் தார்மீகநெறிகளுக்கு புறம்பானது என்று வேண்டுமானால் ஒதுங்கிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.

இந்த அம்சங்களையெல்லாம் கணக்கில் கொண்டே சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாடெங்குமுள்ள சமூகநீதி ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். நாடாளுமன்றமும் கூட மக்களின் உணர்வுநிலையோடு ஒத்திசைந்து தீர்ப்பின் மீது அதிருப்தி தெரிவித்தது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியையே கவிழ்த்த பாரதிய ஜனதா கட்சி கூட அடக்கி வாசித்தது. சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டுக்கு வழிகோலும் வகையிலான சட்டத்திருத்தம் கொண்டு வரப்போவதாக மத்திய அரசு அறிவித்தபோது உச்சநீதிமன்ற நீதிபதி தன்னுடைய ஸ்தானத்திலிருந்து வெகுவாக விலகி ஒரு கல்லூரி முதலாளியைப்போல சீறியது கண்டு நாடு மீண்டும் அதிர்ச்சியடைந்தது.

புதிய தொழிற்கொள்கை தொடங்கி இன்றைய உலகமயமாக்கல் வரையான இக்காலகட்டம் என்பது இந்நாட்டில் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் மறுத்து முதலாளிகள் கொழுக்கும் காலமாகவே இருக்கிறது. நிரந்தர வேலை, வேலைநேரம், பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் என்ற பலன்களை எய்திய அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து பலமிழக்கச் செய்வது, காஷூவல், காண்டிராக்ட் தொழிலாளர்களை ‘அமர்த்து- துரத்து’ (Hire and Fire) அடிப்படையில் பணியமர்த்துவது, பணி உத்தரவாதமற்ற நிலையில் தொழிலாளர்களை இருத்துவதின் மூலம் தொழிற்சங்க இயக்கத்தில் அணிதிரள முடியாதபடி அச்சத்தில் ஆழ்த்துவது, அவுட் சோர்சிங் என்கிற வகைகளில் உழைப்புச் சுரண்டல் தீவிரமடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இச்சுரண்டல் கடுமையாக உள்ளது. எனவேதான் இத்துறையில் தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும், கூட்டுபேர சக்தியை பயன்படுத்தும் வகையில் தொழிற்சங்க உரிமை வேண்டும் என்று இப்போது இடதுசாரி அமைப்புகள் சொன்னதுமே மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி பதற்றமடைந்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் தொழிற்சங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் (தி இந்து 28.10.2005). ஆனால் அசோசெம், பிக்கி, சிஐஐ, நாஸ்காம் என்று முதலாளிகள் சங்கம் வைத்துக் கொள்வார்களாம். தங்களது கட்டற்ற சுரண்டலுக்கு தடையாக எதிர்ப்போ போராட்டமோ எழக்கூடாது என்று இந்திய ஆளும் வர்க்கமும் அவர்களது அன்னியக் கூட்டாளிகளும் விரும்புகின்றனர். அதற்கு ஒத்திசைவான பல தீர்ப்புகளையும் கருத்துக்களையும் வெளியிடும் இடமாக நீதிமன்றங்கள் மாறிக்கொண்டுள்ளன. அரசுத்துறை, வேலைவாய்ப்பு முற்றாக முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள் தனியார்துறையிலும் இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை எழுப்புகின்றனர். இதுகுறித்து விவாதிப்பதற்காக மத்திய சமூகநலத்துறை அமைச்சர் சில ஆலோசனைக்கூட்டங்களை நடத்தியதற்கே முதலாளிகள் சங்கத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதையும், சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளிப்பதற்கும் இடையேயுள்ள கருத்தியல் ஒற்றுமை தற்செயலானதல்ல.

நாட்டின் திட்டமிடுதலிலும் செயல்படுத்துவதிலும் மேலோங்கியிருக்கும் ஒற்றைச்சாதியின் சிந்தனைமுறையும் குறுகிய சுயசாதி அபிமானமுமே எல்லா வளங்களும் நிறைந்த இந்தநாடு ஒவ்வொன்றுக்கும் அன்னியரைச் சார்ந்தியங்க வேண்டிய அவலநிலைக்குள் வீழ்வதற்கு காரணம். கொள்கை முடிவெடுக்கும் அதிகார மையங்கள் முழுவதிலும் வதிந்து கிடக்கும் பார்ப்பனர்களது தகுதியும் திறமையும் இந்தநாட்டை விடுதலை பெற்ற அரைநூற்றாண்டு காலத்திற்குள் மீண்டும் ஒருமுறை அடிமைப்படுத்தும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. முடியரசாயிருந்தாலும் குடியரசாயிருந்தாலும் தங்களது இருப்புக்கும் ஆதிக்கத்திற்கும் எந்த பாதிப்பும் வராத நிலையை காப்பாற்றிக் கொள்வதிலேயே கவனம் குவித்திருக்கும் அவர்களால் இந்தநாட்டுக்கு ஆக்கப்பூர்வமான எந்த பங்களிப்பையும் தரவியலாது.

சமூகத்தின் பன்முகப்பட்ட ஆற்றல்களையும் அனுபவங்களையும் சிந்தனை மரபுகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் உள்வாங்கி வளரவேண்டிய நாடு, பெரும்பான்மை மக்களை விலக்கிவைத்து எப்படி உயரமுடியும் என்கிற சிந்தனையே அவர்களுக்கு கிடையாது. எனவேதான் சமூகவளர்ச்சியில் எல்லோரும் பங்கெடுக்கவும், சமூகத்தின் பொதுவளங்களை பகிர்ந்து வாழவும் வகைசெய்யும் இடஒதுக்கீடு என்ற கோட்பாடு உருவான காலத்திலிருந்து இன்றுவரை அதை ஒழித்துக்கட்ட நானாவித ரூபங்களிலும் வெறிகொண்டு அலைகின்றனர். நாடாளுமன்றமா நீதிமன்றமா கழிப்பறையா காபிக்கடையா என்றெல்லாம் அவர்களுக்கு எந்த பேதமும் இல்லை. எல்லா இடங்களிலும் ஊடுருவி இடஒதுக்கீட்டுக்கு எதிரான தங்களது கருத்தை வெளிப்படுத்துகின்றனர். பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும் அதை வீழ்த்துவதற்கும் இடையேயான போராட்டம் சமூகநீதி என்ற புள்ளியில் மையம் கொண்டிருக்கிறபோது இந்த நாட்டின் உயரிய நீதிபரிபாலன அமைப்பான உச்சநீதிமன்றத்திலிருந்து வெளிப்படும் குரலின் சார்புநிலை குறித்து யாரும் ஆச்சர்யம் கொள்ளத் தேவையில்லை. ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கு மண்டலத்தைத் தாண்டி ஒரு சமூகத்தின் எந்த அமைப்பாலும் சிந்திக்க முடியாது என்பது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது. அவ்வளவே.

ஆனால் சுயநிதிக்கல்லூரிகளில் இடஒதுக்கீடு கூடாது என்கிற உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அத்தோடு முடிந்துவிடக் கூடியதல்ல. பெண்களுக்கான இடஒதுக்கீடு, தனியார்துறையில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கைகளில் பொதிந்துள்ள ஜனநாயகப் பரவலையும் அதிகாப் பங்கீட்டையும் கூட மறுக்கும் அராஜகமாக அதை விரித்து அர்த்தம் கொள்ளமுடியும். சமூகநீதியில் அக்கறையுள்ளவர்கள் எதிர்கொள்ள வேண்டிய மிகச் சவாலான சூழலை உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளது. சமத்துவத்தின் சாரத்தையும் கனவையும் தமது பாடுபொருளாகக் கொண்ட கலை இலக்கியவாதிகளும் கூட சமூகநீதிக்கான இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு காலம் வேண்டி நிற்கிறது.

கனம் கோர்ட்டார் அவர்களே…


நீதிதேவதையின் கண்கள் இங்கே கட்டப்பட்டிருப்பது நியாயத்தை ஒருபோதும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவா?. பாரபட்சமின்றி சார்புத்தன்மையற்று ஒருபால் கோடாமையோடு செயல்படும் ஆன்மத்துணிவு கொண்டதென நம்பப்பட்ட நீதித்தறையின் மீது சந்தேகம் பாரிக்கிறது விஷமாக. எவ்விதத் தலையீடுமற்ற சுதந்திரமான நீதித்துறை என்னும் கனவை அரிக்கும் கரையான்கள் அதனுள்ளேயே ஊறித் திமிர்க்கின்றன. இப்போது தேவை சுதந்திரமா கண்காணிப்பா? எவரின் கேள்வியையும் எதிர்கொள்ளாது வளர்ந்த பிரிட்டிஷ்பாணி மூளையும் வேலையும், மக்களின் கேள்வியெழுப்பும் உரிமையை மதிக்கும் ஜனநாயக மாண்பை உள்ளேற்குமா? சமீபத்திய நிகழ்வுப்போக்குகள் அதன் உள் வளரும் அழிவை முன்னறிவிக்கின்றனவா…

1

எல்லோரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். சரி, சட்டம் யாருக்கு கட்டுப்பட்டது… சமூகத்திற்கா, நீதிமன்றங்களுக்கா…? நீதிமன்றங்கள் சமூகத்திற்கு உட்பட்டவையா அல்லது அதற்கும் மேலானவையா…? கேள்விகள் எழுகின்றன அனந்தமாய். பதில் தேடும் முயற்சி நீதிமன்ற அவமதிப்பாகி கடுந்தண்டனைத் தாக்குமோ… அச்சம் மேலோங்கி அடக்கிவிடுகிறது. இருப்பினும் ஒரு சாமானியக் குடிமகன் தனது எளிய ஐயங்களை வெளிப்படுத்த இந்நாட்டின் நீதிமன்றங்கள் அனுமதிக்கும் என்று நம்பியே தொடங்க வேண்டியுள்ளது முயற்சியை.

பொதுவாகவே, சட்டம் யாவற்றுக்கும் முன்பாகத் தோன்றி இன்னின்னது இப்படியிப்படி இருக்குமாறு உத்தரவிட்டதன் பேரிலேயே சமூகத்தில் சகலமும் உருவானதான புனிதத்தோற்றம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அனாதிக்காலந்தொட்டு சட்டப்படியே சமூகம் இயங்குவதாயும் அதன்முன்னே அனைவரும் சமம் என்றும் நம்புகிற மூடப்பழக்கம் நீடிக்கிறது நெடுங்காலமாய்.

சமூக வளர்ச்சிநிலையின் ஒவ்வொரு கட்டத்திலும் அப்போதைக்கு அரசியல், பொருளாதார, பண்பாட்டு அரங்கில் செல்வாக்குள்ள பிரிவினர் தமது நலன்களை தற்காத்துக் கொள்ள செய்திடும் ஏற்பாடாகவே சட்டங்கள் எப்போதும் இருந்திருக்கின்றன, இருக்கவும் போகின்றன. இவர்கள் ஒழுங்கு, கடமை, உரிமை, பொறுப்பு ஆகிய கற்பிதங்களை சட்டம் என்று தமக்கேற்றாற்போல் வரையறுத்து அதை பரிபாலனம் செய்வதே நீதி என்கின்றனர். அதாவது அவர்களின் மேலாண்மைக்கு எதிர்ப்பு வராமலும் வருமானால் அடக்கி நிலைநிற்கவுமான ஏற்பாடுகளைத்தான் அரசியல் பதம் கொண்டு சட்டம், நீதி என்கின்றனர். இயல்பாகவே இச்சட்டங்கள் இன்னொரு சாராருக்கு எதிரானதாக இருப்பதில்தான் அவற்றை உருவாக்கியவர்களின் நலனும் வெற்றியும் பொதிந்திருக்கிறது. இதை மறைக்கவே சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்ற ஆரவாரப் பிரகடனத்தின் முழக்கம். எதுவுமே பொதுவின்றி எதிரெதிர் நலன்கள் பொருதும் களமாக பிரிந்திருக்கும் சமூகத்தில் சட்டம் மட்டும் பொதுவானதாயிருக்கும் என்று நம்புவது கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்று சொல்லிக்கொண்டே கோயிலிருக்கும் தெருவில் நடமாடக்கூட ஒரு சாராரை அனுமதிக்காத போலிமைக்கு ஒப்பானதாகும்.

செல்வாக்கு பெற்றவர்களின் சட்டத்தால் பாதிக்கப்படுவோர், அதிலிருந்து மீள மேற்கொள்ளும் எத்தனிப்புகளை சட்டவிரோதம் என்று அறிவித்து குற்றவாளிகளாக்கி தண்டிக்கும் நோக்கோடும் அதிகாரத்தோடும் நிறுவப்பட்டவையே அரசு இயந்திரத்தின் நிறுவனங்கள் அனைத்தும். எனில், நீதிமன்றங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மேற்சொல்வதெனில், இவ்வேற்பாட்டில் மட்டற்ற அதிகாரம் பூண்டவையாய் முன்னிற்பவை நீதிமன்றங்களே. மட்டுமன்றி, லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ( அதிகாரம் என்பதே துஷ்பிரயோகம் தான் என்பது தனி விசயம்), சமன் செய்யவியலாத பாகுபாடுகளால், நிலவும் சமூக அமைப்பின்மீதும் அதனை வெளிப்படையாக கட்டிக்காக்கும் அரசாங்கத்தின் மீதும் அவநம்பிக்கை கொள்ளும் மக்களை, சாதுர்யமான சில தீர்ப்புகளின் வழியாக தணியச்செய்யும் அரசியல் நடவடிக்கையிலும் இவை ஈடுபடத் தயங்குவதில்லை. பொறுப்புவாய்ந்த ஒரு அரசாங்கத்தின் ஸ்தானத்தில் நீதிமன்றங்கள் தம்மை அவ்வப்போது இருத்திக் கொள்வதானது மக்களைக் காப்பதற்காக அல்ல. மாறாக இங்கிருக்கும் சட்டத்தையும் அதன் வழியாக பேணப்படுகிற சமூக அமைப்பையுமே பாதுகாக்கத் துடிக்கின்றன.

இன்றைய நீதிமன்றங்களும் சட்டங்களும் இந்திய சமூகத்தின் தேவையிலிருந்து உருவானவையல்ல. காலகாலத்துக்கும் இந்தியாவைச் சுரண்டிக் கொழுக்கும் தனது சாம்ராஜ்யக் கனவைத் தூர்த்த சுதந்திரப் போராளிகளை அடக்கியொடுக்க பிரிட்ஷாரால் நிறுவப்பட்டவை. எத்தனை உயிர்கள் சட்டத்தின் பேரால் பறிக்கப்பட்டிருக்கின்றன…? குடித்த ரத்தம் கொஞ்சமா..? தேசமே திறந்தவெளி சிறைச்சாலையாக சிறுமைப்பட்டு கிடந்ததே… நாகரீக சிந்தையுள்ள யாரும் வெட்கிக்கூசும் அடக்குமுறைகள் அனைத்தும் சட்டத்தைக் காப்பதற்காக நீதிமன்றங்களால் செயல்படுத்தப்பட்டவை தானே…? இந்தியர் அனைவரையுமே எதிரியாய் கருதி உருவாக்கப்பட்ட அக்கொடிய சட்டங்களில் எதையெல்லாம் நீக்கியிருக்கிறோம் சுதந்திரத்திற்கு பிறகு…? அடித்த செருப்பையே கிரீடமாக சூடிக்கொள்ள அடிமை கூட ஒப்பமாட்டான். ஆனால் நாமோ, இயல்பிலேயே இந்தியர்களுக்கு மேலானதாகவும் எதிராகவும் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் சட்டங்களை அப்படியே வைத்திருக்கிறோம். நீதிமன்ற நடைமுறைகளைக்கூட மாற்றிக்கொள்ளவில்லை. மக்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கவும் பத்திரிகைகளின் கழுத்தை நெரிக்கவும் பிரிட்டிஷ் சட்டங்கள் தான் மிகவும் தோதானதாக இருக்கும் என்று ஆதிக்கசக்திகளும் ஆட்சியாளர்களும் கருதியதால் விடுதலையடைந்த ஒரு நாட்டின் பிரத்யேகத் தேவைகளை முன்வைத்து சுயேச்சையான நீதியமைப்பை கண்டடைய வேண்டிய அவசியத்தை உணரவேயில்லை.

2

அழுக்கண்டாத ஒளிவட்டம் சூடி, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு, தன்னைத்தானே வழிநடத்திக் கொள்ளும் அமானுஷ்யத்தன்மை கொண்ட காவிநிறக் கட்டிடம் என்பதான மாயபிம்பத்தை நீதிமன்றமென இன்றைய மக்கள் தொடர்புச்சாதனங்கள் உருவாக்கியுள்ளன. சைலன்ஸ் என்று டவாலி சத்தம் எழுப்பிய மாத்திரத்தில் உலகமே மயான அமைதியோடு நீதிமன்றத்தை கவனிக்கவேண்டியுள்ளது. கதாநாயகனும் வில்லனும் மோதும் பரவசக்களமாக கோர்ட்சீன்களை சினிமாவில் கண்டிருந்தவர்கள் வாதி, பிரதிவாதிகளாய் காத்திருக்கின்றனர், கோர்ட்டே சொல்லிருச்சு என்ற சமாதானத்தில் மூழ்குவதற்காக. தாம் காத்திருப்பது நீதிக்காகத்தானா என்ற சந்தேகம் உருக்குகிறது அவர்களை.

நீதிமன்றம் என்பதும் சராசரி மனிதர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது என்பதை நம்ப மறுக்கிறது மந்தை மனம். சாதி, மதம், இனம், மொழி, பிரதேசம், சுயநலம், ஏற்றத்தாழ்வு, கட்சியரசியல், ஆணாதிக்கம், சொத்துடமை உணர்வுகளால் பீடிக்கப்பட்டதொரு சமூகத்தின் கூட்டுச்சிந்தனைகளால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படும் ஒருவரே நீதிபதியாக பொறுப்பு வகிக்கிறார் என்பதையும் காணத்தவறுகிறோம். காலம் உதறியெறிந்த கருத்துக்களை சுமக்கும் பிற்போக்குத் தன்மையை கடந்தவரா, நிகழ்காலச் சமூகத்தின் இயங்குவிதிகளை அறிந்து செயலாற்றும் அக்கறைகள் அவருக்கு உண்டா, எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளை கையளிக்கும் வகையில் முன்னோக்கிப் பார்க்கும் திறனுண்டா என்பதற்கெல்லாம் நிரூபணமேதும் தராத ஒருவரே நமக்கு நீதிபதியாகிறார். சராசரி உணர்வு நிலையிலிருந்தும் குறுகிய நம்பிக்கைகளிலிருந்தும் விடுபட்டு யாவரையும் ஒன்றென பாவிக்கும் தகுதிநிலை கொண்டவரா என்று சோதித்தறிய அளவுகோல் ஏதுமற்ற நிலையில் நீதியை நிர்வகிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் போன்றே ஒரு தொழிற்கல்வியாக சட்டத்தைப் பயின்று அதன்ரீதியில் சம்பாதிப்பது என்று தேர்ந்து கொண்டதைத் தவிர நீதியை நிலைநாட்டுவதில் அவருக்கு தனித்த விருப்புறுதி எதுவும் கிடையாது. சட்டம் வேறு, நீதி வேறு.

நீதிபதியானவர், ஏற்கனவே வரையறுத்து இறுகிய சட்டகத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொள்வதோடு தன் பணி நிறைவடைந்ததாக கருதுவதுதில்லை. மாறாக, அதற்குள்ளிருந்து தனது நோக்கங்களோடே செயல்படுகிறார். சமூகம் குறித்த அவரது புரிதலின்படி அமைந்தப் பார்வையே சட்டப் புத்தகங்களிலிருக்கும் வார்த்தைகளை போர்த்திக்கொண்டு தீர்ப்பாக வெளிவருகிறது. சமூகத்தில் எந்தப் பிரிவின்மீது அவரது அக்கறைகள் சார்ந்துள்ளனவோ அவற்றுக்கு அனுசரணையாக சட்டத்தின் இண்டுஇடுக்குகளில் புகுந்து துழாவியெடுத்து தீர்ப்பாக முன்வைக்கிறார். இதன்மூலம் ஒருசாராருக்கு சாதகமாகவும் அதன் காரணமாகவே மறுசாராருக்கு பாதகமாகவும் அவர் தன்னியல்பாகவே முடிவெடுப்பவராகிறார். கூடவே, தன் வார்த்தையே இப்போதைக்கு இறுதியானது என்கிற அதிகார மயக்கமும் சேர்ந்துவிட அவர் ஒரு எதேச்சதிகாரியாகவும் செயல்படுகிறார். விசாரணைகளின் போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எவ்வித சட்டப்பூர்வ அந்தஸ்தும் இல்லாததை அறிந்தேயிருப்பினும் வரம்பற்ற முறையில் பலவிதமான விமர்சனங்களை வெளிப்படுத்துகின்றனர். இப்படியான கருத்துக்களின் பரபரப்பில் மக்கள் திளைத்துக் கிடக்கையில் அதற்கு நேரெதிரான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. அப்படியானால் தன்னை திருப்பி விமர்சிக்க முடியாத பலஹீனராக குற்றஞ்சாட்டப்பட்டவர் இருக்கிறார் என்கிற மனநிலையின் முறுக்கில் தான் நீதிபதியானவர் பேசுகிறாரோ?

தீர்ப்பை கண்டிக்கவோ விமர்சிக்கவோ முடியாது. மேல்முறையீடு தான் செய்யமுடியும். இந்த சட்டப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் பத்திரமாக இருந்துகொண்டு தான் நீதிபதியானவர் தீர்ப்பிடுகிறார். மேல்முறையீடு ஏற்பாடே நீதிபதிகள் தவறு செய்வதற்கான சாத்தியத்தை ஒப்புக்கொள்வதுதானே… தவறிழைப்பதற்கான மனநிலையைத் தாண்டியவரென்ற புனிதமுத்திரை யாருக்குமில்லை.

ஒரு வழக்கை இந்த தேதிக்கு முன்பாக விசாரிக்கக்கூடாது அல்லது விசாரித்தேயாக வேண்டும், இவர்தான் விசாரிக்கவேண்டும் அல்லது விசாரிக்கக்கூடாது, இந்த மாநிலத்தில் விசாரிக்கக்கூடாது அல்லது விசாரிக்கவேண்டும் என்றெல்லாம் சமீபகாலங்களில் தொடரப்படும் வழக்குகளும் தீர்ப்புகளும் நீதித்துறையின் நம்பகத்தன்மை மாயையானது என்பதை நீதிமன்றங்களே தம்மையறியாமல் அம்பலப்படுத்திவிடுகின்றன. இவர் விசாரித்தால் இன்னாருக்கு பாதகமாக அல்லது சாதகமாகத்தான் தீர்ப்பிருக்கும் என்ற அனுமானத்தில் அவருக்கு பதிலாக வேறொருவர் தான் விசாரிக்க வேண்டும் என்பதே புதிதாக விசாரிக்கப் போகிறவர் எவ்வாறு விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்ற மறைமுக உத்தரவும் நிர்ப்பந்தமும் தானே…

கீழமை நீதிபதிகள் சட்டத்திற்குட்பட்டே தீர்ப்பளிப்பதாக தெரிவித்துக் கொண்டாலும் மேல்முறையீட்டில் அத்தீர்ப்புகள் மாற்றப்படும் பட்சத்தில் கடும் கண்டனத்திற்கும் உள்ளாகிறது. அப்படியானால் சட்டத்தின் படி எது சரியான தீர்ப்பு… ? ஒரு தீர்ப்பு மட்டுமே சரியெனில் தவறான தீர்ப்பளித்த நீதிபதியை வழிநடத்தியது எது? எந்தவொரு தவறுக்கும் ஏதாவதொரு சட்டப்பிரிவைக் காட்டி தண்டனை வழங்குவதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்துவதுமாகிய ஏற்பாடுகள் இருக்கும்போது தவறான தீர்ப்பளித்த எத்தனை நீதிபதிகள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் எல்லாமே மக்களுக்கு பதில்சொல்லும் பொறுப்பில் இருக்கும்போது நீதித்துறை மட்டும் மக்களுக்கு மேலானதாக, மேலிருந்து பார்த்து கீழுக்கு நீதி இறைப்பதாக, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக இருப்பது மக்களாட்சி முறைக்கு ஏற்புடையதா? வெளிப்படைத்தன்மையற்ற இந்நிலைமையே நீதிபதியின் தன்னிச்சைப் போக்குகளுக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கிறது.

3

பெரும் தொழிற்சாலைகளின் பெருக்கம், அகண்ட தார்ச்சாலைகள், வான் தொடும் கட்டிடங்கள், பேரணைகள் ஆகியவையே நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி என்ற கருத்துடைய நீதிபதியால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தீர்ப்பைத் தரமுடியாது.தலித் சமூகத்தைச் சார்ந்த நீதிபதி உட்கார்ந்த இருக்கையை கங்கை நீர் கொண்டு கழுவி தீட்டு போக்குமளவுக்கு சாதிப்பித்தும் துவேஷமும் உச்சத்திலேறியவரிடம் தீண்டாமை குறித்த வழக்கொன்று வருமானால் அவர் தமது சொந்த நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு சட்டத்தின் வழிகாட்டுதலை மட்டுமே ஏற்று செயல்பட வாய்ப்பில்லை. உல்லாசமான பாலியல் தொடர்புகளில் நாட்டம் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் துயரத்தையும் அவமானத்தையும் உணரமுடியாது. நெறியற்ற வகையில் சொத்துசேர்ப்பது தவறில்லை என்று லஞ்சம் வாங்கும் ஒருவர் நீதிபதியானால் பொதுச்சொத்தை சூறையாடுவோருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கமாட்டார். நாற்பதாயிரம் ரூபாய் லஞ்சத்திற்கு நாட்டின் ஜனாதிபதிக்கே பிடிவாரண்டு பிறப்பிக்கும் நீதிபதி இருக்கும் மாநிலத்தில், மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் அங்கு தங்களுக்கு நீதிகிடைக்காது என்று அஞ்சுவதில் தவறென்ன?

நீதிபதியின் வார்த்தைகள் ஒரு வழக்கின் தீர்ப்பாகவும் அதுவே நீதிமன்றத்தையே அறிந்திராதவரையும்கூட கட்டுப்படுத்தும் சட்டமாகவும் மாறிவிடுகிறது. எனவே சமூகத்தில் தாங்கள் வகிக்கும் பாத்திரத்திற்குரிய பொறுப்புணர்வையும் நடுநிலைத்தன்மையையும் உணர்ந்து செயல்பட வேண்டியவராகிறார். இந்தியச் சமூகத்தின் பொதுவாழ்வைச் சீரழிக்கும் பிறழ்நெறிகள் அனைத்தையும் கடந்தவர்கள் நீதிபதிகள் என்று நம்பியே சாமானிய மக்கள் இன்னும்கூட நீதிமன்றங்களை நாடிவருகின்றனர். ஆனால் எல்லா வகையிலும் புரையோடியும் அடக்குமுறைக் கருவி என்பதற்கான முழு அர்த்தத்திலும் ஆளும்வர்க்கத்தின் கருத்தியல் செல்வாக்கை வெகுமக்கள் மீது திணிப்பவையாக அரசு இயந்திரம் முழுவதுமே கட்டமைக்கப்பட்டிருக்கும் சூழலில் நீதித்துறை மட்டும் களங்கமற்று மக்களின் நலன் காப்பதாய் இருக்கமுடியாது.

கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, பாலியல் கொடுமை போன்ற வழக்குகளில் வெளியாகும் தீர்ப்பானது எவ்வகையாய் இருப்பினும் அவற்றில் நேரடியான பாதிப்பு அல்லது பலன் தனிநபர் அல்லது தனிக்குடும்பம் என்ற அளவிலானது. அதற்கு ஏற்கனவே உள்ள குற்றவியல் சட்டங்களைப் பற்றிய குறைந்தபட்ச தெளிவே போதுமானதாய் இருக்கக்கூடும். ஆனால் சமூகவியல் பிரச்னைகளை உள்ளடக்கமாகக் கொண்ட வழக்குகளில், நாட்டின் அரசியல் பொருளாதார பண்பாட்டுச் சூழலையும் இணைத்து பரிசீலிக்க வேண்டியுள்ளது. தீர்ப்பினால் பலனடையக் கூடியவர்கள் சமூகத்தின் எப்பிரிவினர் என்கிற பார்வை மிக அவசியமானதாய் இருக்கிறது. ஆனால் அதிகாரத்தின் வலிய தடுப்பரண்களால் வெகுமக்களின் வாழ்க்கையிலிருந்து அன்னியப்பட்டு, மேட்டிமை மனோபாவத்தோடு ஒதுங்கிக் கிடக்கிற நீதிபதிகளுக்கு சமூக அக்கறையுடன் கூடிய பார்வை கூடிவருவது எளிதல்ல. இந்தப் பின்னணியோடுதான் சுயநிதிக் கல்லூரிகள் குறித்த வழக்கை பரிசீலிக்க வேண்டியுள்ளது.

சுயநிதி கல்லூரி முதலாளிகள் அந்தரத்திலிருந்து வந்தவர்களல்ல. தம்முடைய கைக்காசை கொட்டியாவது இந்த சமூகத்திற்கு கல்வி புகட்டியேத் தீர்வது என்கிற லட்சியவாதிகளுமல்ல. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு நேர்காணலில் சொன்னதுபோல, கல்விச்சாலையை நடத்துவதைவிட சாணியுருண்டை விற்பதுதான் லாபம் என்ற சூழ்நிலை உருவாகுமானால் இவர்களெல்லாம் மாடுமேய்க்கும் தொழிலுக்குப் போய்விடக்கூடியவர்களே. இந்த சமூகத்தின் பல்வேறு வளங்களையும் பயன்படுத்தியே கல்லூரி தொடங்குவதற்கான மூலதனத்தை திரட்டியுள்ளனர். ஏற்கனவே அரசு உருவாக்கியிருக்கும் கட்டமைப்பை பயன்படுத்கின்றனர். அரசின் பல்வேறு கல்விச்சாலைகளில் உருவான அறிவாளிக் கூட்டத்தை தமது கூலியடிமைகளாகப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் இம்முதலாளிகளின் கல்விக்கொள்ளை தொடருவதில் ஏதேனும் பிரச்னைகள் எழுமானால் சட்டம் காவல் நீதி நிர்வாகம் என எல்லா முனைகளிலிருந்தும் அரசின் உதவியைப் பெறுகின்றனர். ஆகவே சமூகத்தின் பொதுவளங்களை, அரசின் உதவிகளை மிகுதியாக பயன்படுத்தி நடக்கும் ஒரு துறையில் அல்லது தொழிலில் அரசின் தலையீடும் அரசுக்கான பங்கும் தேவையாயிருக்கிறது. ஒருவேளை சுயநிதிக் கல்லூரி நடத்துவதை கொள்ளைத் தொழிலாக அறிவித்துவிடும் பட்சத்தில் அத்தகைய குற்றத்தில் பங்கு கேட்பது ஒரு அரசின் தார்மீக நெறிகளுக்கு புறம்பானது என்று வேண்டுமானால் ஒதுங்கிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.

கல்வியை ஒரு தொழிலாகவும் வியாபாரமாகவும் சீரழித்திருக்கும் சுயநிதி கல்லூரிகள் விசயத்தில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. வெளிநாட்டிலிருந்து படிக்க வருபவர்களுக்கு இடவொதுக்கீடு வேண்டும் என்று அக்கறை கொள்ளும் நீதிமன்றம் உள்நாட்டிலிருப்பவர்களுக்கு மறுப்பதற்கு என்ன நியாயத்தை கைக்கொண்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது மக்களிடையே. ஒருவேளை நியாயம் எதுவென்பதை நீதிமன்றம் அறிந்தேயிருந்தாலும் சட்ட நுணுக்கங்கள் அடிப்படையில் வேறுவழியின்றி கல்லூரி முதலாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதோ என்றும் கூட அப்பாவித்தனமாய் நம்பியிருந்தனர். எனவேதான் இடஒதுக்கிட்டை உறுதிசெய்யும் வகையில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று அரசை வலியுறுத்தும் நிலை உருவானது. ஆனால் அரசாங்கத்தின் அம்முயற்சியை உச்சநீதிமன்றம் எதிர்கொண்ட முறை தேசத்தை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூகத்தின் பொதுவளங்களை பயன்படுத்தி இயங்கும் ஒரு நிறுவனம் சமூகத்திற்கான பங்களிப்பை முறையாக திருப்பிச் செலுத்தவேண்டும் என்ற இயற்கை நீதியின் அடிப்படையில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு என்று வலுப்பெற்றுவரும் கோரிக்கைக்கு சுயநிதி கல்லூரிகளில் இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு பெரும் பின்னடவை உருவாக்கும். இடஒதுக்கீட்டுக்கு எதிரான உயர்சாதி மனோபாவம் ஒரு நாட்டின் உயரிய நீதி பரிபாலன அமைப்பிலிருந்தும் வெளிப்படுமானால் அது தனியார்த்துறையில் இடஒதுக்கீட்டை மறுப்பவர்களுக்கு வலுவூட்டுவதாக அமையும். இப்பிரச்னையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றிருப்பது நம்பிக்கையளிக்கிறது. நீதிபதிகளையும் கண்காணிக்கும் அமைப்பொன்றை உருவாக்கும் மத்திய அரசின் அறிவிப்பானது நீதித்துறையை ஜனநாயகப்படுத்துகிற- சமூகத்திற்கு கட்டுப்பட்ட ஒரு அமைப்பாக அதை நெறிப்படுத்தக் கூடிய முயற்சி என்ற அளவில் வரவேற்க வேண்டியுள்ளது.

சட்டப்புத்தகங்களுக்குள் புதைந்திருக்கும் கண்களைப் பெயர்த்தெடுத்து சமூக நிலவரங்களை பார்ப்பதற்கும் அதில் நீடிக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் அநீதிகளையும் களைவதற்கு தனது சட்டஅறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் சிந்திக்கிற மனவலிமை தமக்கு உண்டு என்பதை நிரூபித்த நீதிபதிகளை கடந்த காலத்தில் இந்நாடு கண்டிருக்கிறது. நீதித்துறையை சக்திமிக்க வகையில் சமரசமின்றி பயன்படுத்தி சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் ஒடுக்குண்ட மக்கள் கையூன்றி எழவும், நாகரீகச் சமுதாயமாய் நாடு பரிணமிப்பதைத் தடுக்கும் அதிகார அத்துமீறல்களை தடுக்கவும் தமது சட்ட மேதமையையும் அயராத உழப்பையும் நல்கிய கண்ணியம்மிக்க அந்நீதிபதிகளை நாடு பெருமிதத்தோடு நினைவுகொள்கிறது. விதிவிலக்குகள் எப்போதும் விதிவிலக்குகளே. விதிவிலக்குகள் பெரும்பான்மையாக மாறுவதற்கான முயற்சி என்பது எளிய மக்களுக்கு நீதியை கொண்டு செல்வதற்கான நெடிய அரசியல் போராட்டத்தினுடன் இணைந்தே இருக்கிறது.

சாத்தான் மட்டுமே வேதம் ஓதும்


கூரையில் வைக்கப்பட்ட தீ
திகுதிகுவெனப் பரவி எரித்துக்கொண்டிருக்கிறது
என்வீட்டை

தசை கருகும் நெடியில் வெளி திணறுகிறது
தணலில் வெந்து கொண்டிருப்பது
படுக்கையாய்க் கிடந்த என்தாயாகவோ
நிறைசூலியான எனது மனைவியாகவோ இருக்கலாம்

நாங்கள் சேமித்துவைத்திருந்த விதைதானியங்கள்
வெடித்துத் தெறிக்கின்றன சோளப்பொரியைப்போல

என் அண்டைவீட்டார்
நீரையிறைத்துக் கொண்டிருக்கின்றனர்
முன்ஜாக்கிரதையோடு
தத்தமது கூரைமீது

எவர்மீதும் சேதாரத்தை விசிறாமல்
தனக்குத்தானே குமைந்திறங்குகிறது சாம்பலாய் என்வீடு

யார்மனதும் தொந்தரவுக்காளாகாத வண்ணம்
இதுகுறித்த புகாரினை வெளிப்படுத்துவது எங்ஙனமென
ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருக்கிறான்