இந்து மதத்தை ஒழிப்பதுதான் ஒரே வழி: புனிதபாண்டியன்


நேர்காணல்: பூங்குழலி, நந்தன் மற்றும் மினர்வா

உங்களுடைய குடும்பப் பின்னணி குறித்து…?

சாதாரண நடுத்தரக் குடும்பம் என்னுடையது. என்னுடைய அப்பாவுக்கு என்னை கலெக்டராக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. எனக்கும் கலெக்டர் ஆக விருப்பம்தான். ஆனால் பிளஸ்டூ தேர்வில் தோல்வி அடைந்ததால் கனவு தகர்ந்தது.

பிளஸ்டூ தோல்வியால் ஒரு வருடம் வீட்டில் இருக்கும் போது அதிகநேரம் நூலகத்தில் செலவிட வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்று பத்திரிக்கைகள், புத்தகங்கள் படிப்பது மூலம் சமூகம் சார்ந்த பார்வை வளர்ந்தது. அடிப்படையாகவே எனக்கு கல்வி முறை மீது ஒரு கோபம் இருந்தது. ஒரு வருட காலத்தில் படித்த படிப்பை வெறும் மூன்று மணிநேரம் எழுதும் தேர்வை வைத்து நிர்ணயிப்பது, வருடம் முழுவதும் படிக்காமல் கூட அந்த மூன்று மணிநேரம் மட்டும் நன்றாக எழுதிவிட்டால் தேர்வில் வெற்றி, முதல் மதிப்பெண் பெறுவது – ஆகியவை எல்லாம் எனக்கு பெரிய முரண்பாடுகளாகத் தோன்றியது.

பள்ளி படிப்பை முடித்ததும் வேலூர் ஊரிசுக் கல்லூரியில் ஆங்கிலம் இலக்கியம் சேர்ந்தேன். அங்கு சேர்ந்தபின் பேராசிரியர் இளங்கோவன் எடுத்த முதல் வகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது. என் சிந்தனையில் என்ன இருக்கிறதோ, அதை அவர் கேள்வியாக கேட்டார். சமூகம் சார்ந்து பல கருத்துகளை முன் வைத்தார். எங்கோ நான் தேடிக்கொண்டிருக்கின்ற விஷயம் அவர் மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடைத்தது. அவருடன் அதிக நேரம் உரையாடுவேன். சமூகம், வாழ்க்கை என்பது என்ன? சமூகத்திற்கு பயன்படும் வகையில் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நிறைய சொல்வார்.

இளநிலை படிப்பு முடிந்ததும் முதுநிலை படிப்பை கத்தோலிக்க கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு படித்தது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. கல்லூரியில் மத வேறுபாடு, மொழி வேறுபாடு காட்டியது எனக்குள் பல கேள்விகளை எழுப்பின. அந்த சமயத்தில் கூடன்குளம் அணுமின்நிலையம் எதிர்ப்பு போராட்டம், ஈழப்பிரச்சினைக்கு ஆதரவாக துண்டறிக்கை வெளியிடுதல் போன்ற மாற்று விசயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

என் படிப்பு சார்ந்த துறையில் நல்ல வேலைவாய்ப்புகள் இருந்தாலும் அதைநோக்கி என் மனம் நாட்டம் கொள்ளவில்லை. பொதுவிசயங்கள் மீதே அதிக ஆர்வம் இருந்தது. செயல்முறை (project) தேர்வின் போது கூட, மற்ற மாணவர்கள் போல் இல்லாமல் இடஒதுக்கீடு பிரச்சனையைத் தேர்வு செய்தேன். இதற்கு என் கல்லூரி பேராசிரியர்களே எதிர்ப்பு தெரிவித்தார்கள். பொதுவிசயங்கள் போராட்டங்கள் போன்றவற்றிக்கு பேராசிரியர்களும், வீட்டில் உள்ளவர்களும் எதிர் கருத்துக்களையே தெரிவித்தார்கள். இவையெல்லாம் எனக்குப் பல கேள்விகளை எழுப்பியது. நாம் இந்த மாதிரி வட்டத்திற்குள் சிக்காமல் இருக்கவே என் சிந்தனை சென்றது. அதனால்தான் எந்த வேலைக்கும் போக நான் முயற்சி எடுக்கவில்லை. மனித உரிமை, சாதி ஒழிப்பு இவற்றிலேயே ஆர்வம் செலுத்தினேன்.

சாதிய வேறுபாட்டை உங்கள் வாழ்க்கையில் எப்போது உணந்தீர்கள்?

8, 9ம் வகுப்பு படிக்கும் போது சாதிய வேறுபாடுகளை நான் உணர ஆரம்பித்தேன். அதுவரை எனக்குத் தெரியவில்லை. சக மாணவர்கள் அனைவரும் எங்களை ‘சேரிப்பசங்க’ என்று தான் அழைப்பார்கள். எங்கள் ஊரில் கங்கை அம்மன் விழாதான் தலித்களுக்கு திருவிழா. கஸ்பா-விலிருந்து(சேரி) மிகப்பெரிய தேர் பறை மோளத்துடன் ஊர் சுற்றி வரும். பறைச்சத்தம் கேட்டாலே சாதி இந்துக்களுக்கு முகத்தில் வெந்நீர் ஊற்றியதுபோல் உணர்வார்கள். இத்தேர் ஊர் முழுவதும் சுற்றி வரும். ஆனால் ஒரு போதும் சாதிஇந்துக்கள் சாமியோ தேரோ எங்கள் சேரிக்கு வரவே வராது. இது ஒரு கட்டத்தில் எனக்கு புரிய ஆரம்பித்தது.

அடுத்து பள்ளியில் உதவித்தொகை(scholarship) தலித்மாணவர்களுக்கு கொடுக்கப்படும்போது வகுப்பறையில் வந்து பேர் வாசித்து கை தூக்கச் சொல்வார்கள். கைதூக்கவே அவமானமாக இருக்கும். அப்போது மற்ற மாணவர்கள் ஒருவித ஏளனப் பேச்சுடன் தலித்மாணவர்களை பார்ப்பார்கள். அது ஆயிரம் வன்கொடுமைக்குச் சமம். அதை நானே உணர்ந்து இருக்கிறேன். கஸ்பா மாணவர்களை ஏதாவது ஒரு வகையில் வார்த்தைகளால் வேறுபடுத்தியே இழிவாகப் பேசுவார்கள். ஆரம்பத்தில் இருந்தே இப்படி இருந்தாலும் ஒரு வயதிற்கு மேல்தான் இதை என்னால் உணரமுடிந்தது.

கல்லூரியில் பயிலும் சமயத்தில் நீங்கள் ஈழப்பிரச்சினை சார்பாக செயல்பட்டீர்கள். ஈழப்பிரச்சினை தாக்கம் மாணவர்களிடையே எப்படி இருந்தது?

பொதுவாக சீனா போன்ற நாடுகளில் மாணவர்கள் அநியாயத்தை எதிர்த்துப் போராடியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நான் மாணவராக இருந்ததில் இருந்து, இதுவரை அப்படி எந்த மாணவர் குழுக்களும் சமூக மாற்றத்திற்காக இங்கே போராடி வெகுண்டெழுந்ததாக நான் பார்த்ததில்லை. வகுப்பை மட்டம் போடுவதற்கான ஒரு வாய்ப்பாகவே மாணவர்கள் இங்கே போராட்டங்களைப் பார்த்தார்கள். இதே நிலைமைதான் அப்பொழுதும் ஈழப்போராட்டத்திற்கும் இருந்தது. என் கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியர் மட்டும் தான் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தார். திராவிடர் கழகம் போன்ற சில அமைப்புகள் பிரச்சினைகளை முன்வைப்பார்கள். அதிலுள்ள மாணவர்கள் எங்கள் கல்லூரிக்கு வந்து ஆதரவு கேட்பார்கள். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்கமாட்டார்கள்.

எந்த கட்டத்தில் பத்திரிக்கை ஆரம்பிப்பது பற்றி யோசித்தீர்கள்? அதற்குக் காரணம் என்ன?

ஈழப்போராட்டம்தான் அதற்குக் காரணம். வேலூர் கல்லூரியில் படிக்கும்போதே ஈழம் சம்பந்தமான விசயங்களை சேகரிப்பதில் ஆர்வமாக இருந்தேன். அவர்கள் வெளியிடக்கூடிய பத்திரிக்கைகள், துண்டறிக்கைகள், இனப்படுகொலை புகைப்படங்கள் ஆகியவற்றை சேகரித்து வைத்து இருந்தேன். அந்த விசயத்தில் ஆர்வமாக இருந்ததால் அங்கு இருக்கிற திராவிட கழகத் தோழர்கள், ஈழம் தொடர்பாக எது நடந்தாலும் என்னிடம் தெரிவிப்பார்கள். துண்டறிக்கைகள் பத்திரிக்கைகள் கொடுப்பார்கள். அந்த பத்திரிக்கைகள் பார்த்தவுடன் கவரக்கூடியதாக, அப்பிரச்சினைகளைப் பற்றி தெளிவாக சொல்லக்கூடியதாக இருந்தன. பத்திரிக்கை ஆரம்பிப்பதற்கு அதுதான் எனக்கு மிகப் பெரிய உந்துதலாக இருந்தது.

கல்லூரி முடிந்ததும் சென்னை வந்தபின் அம்னஸ்டி அமைப்பினருடன் என்னை இணைத்துக் கொண்டேன். அவர்களுடன் சேர்ந்து மொழிபெயர்ப்பது, துண்டறிக்கை வெளியிடுவது என இருந்தேன். இடஒதுக்கீடு பற்றி தெரிந்து கொள்வதற்காக பெரியார் திடல் சென்று அங்குள்ள நூல்களை வாசித்தேன். அதேசமயம் தலித் மக்களின் பிரச்சினை மனத்துக்குள் இருந்துகொண்டே இருந்தது. அதுபற்றி தெரிந்துகொள்ள பெரியார், அம்பேத்கரைப் படித்தேன். தலித் மக்களின் பிரச்சினை தொடர்பாக ஏதேனும் பத்திரிக்கை வருகிறதா எனப் பார்க்கும் போது தலித் வாய்ஸ் இதழ் மட்டும் வந்து கொண்டிருந்தது. ஏன் மற்ற பத்திரிக்கைகள் தலித் பிரச்சினை பற்றி பேசுவதில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்தது. மனித உரிமை, சுற்றுச்சூழல், தலித் பிரச்சினை என எல்லாப் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும் எனத் தோன்றியது. அப்படி ஆரம்பித்ததுதான் தலித் முரசு.

பொதுவாகவே தலித்துகளின் பிரச்சனையை வெகுஜன பத்திரிகைகள் கண்டுகொள்வதில்லை. அப்படியே எழுதினாலும் உத்திரப்பிரதேசத்தின் பிரச்சினையை தமிழகப் பத்திரிகைகள் கண்டுகொள்வதில்லை. தமிழகத்திலேயே ஒவ்வொரு பத்திரிகைக்கும் நான்கைந்து பதிப்புகள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டப் பிரச்சனை சென்னைப் பதிப்பிலோ, புதுவை பதிப்பிலோ வருவதில்லை.

அதனால் தான் பத்திரிகை நடத்துவதை ஒரு இயக்கமாகவே நான் பார்க்கிறேன். தலித் மக்களுக்கு என்று இயக்கங்கள், தலைவர்கள், தன்னார்வ நிறுவனங்கள் என எல்லாம் இருந்தும் இந்த மக்களுக்கு என ஒரு பத்திரிகை கூட கிடையாது என்பது உண்மையாகத்தானே இருந்தது?

உங்கள் பத்திரிகை தலித் மக்களுக்கானதா அல்லது தலித் மக்களைப் பற்றிய செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்கானதா? தலித் மக்களுக்கு என்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இல்லை. அப்படியே பெற்றவர்களும் தலித் முரசு போன்ற பத்திரிகைகளைப் படிப்பவர்களாக இல்லை. இந்த நிலைமையில் நீங்கள் யாருக்காக பத்திரிகை நடத்துகிறீர்கள்?

ஒடுக்கப்பட்ட மக்கள் எடுத்த எடுப்பிலேயே தலித் முரசு மாதிரியான பத்திரிக்கைகளைப் படிப்பார்கள் என்று கருதி இதை நான் ஆரம்பிக்கவில்லை. அவர்களை அவ்வாறு படிக்கும்படியான சூழலில் வணிக ஊடகங்கள் வைத்திருக்கவில்லை. நான் அந்த ஊடகங்களுக்குப் போட்டியாகத்தான் பத்திரிக்கையைத் தொடங்கினேன். ஆனால் 12 வருடங்களாக இந்தப் பத்திரிகை பத்தாயிரம் பிரதிகள் விற்கிறதென்றால் அதற்கு மக்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம். அவர்களை நம்பித்தான் இந்தப் பத்திரிக்கை இப்போது வெளிவருகிறது.

பதினோரு வருடங்களாக நடத்தப்படும் தலித் முரசு பத்திரிக்கை, தலித் மக்களின் சமூக முன்னேற்றத்தில் எத்தகைய பங்கு வகித்திருக்கிறது?

இதற்கு நேரடியாக பதில் கூறமுடியும் என்று தோன்றவில்லை. பெரியார் 95 வருடங்களாக இந்த சமூக மாற்றத்திற்காகப் போராடினார், அதனால் சமூகம் எந்த அளவுக்கு மாறிவிட்டது என்று கேட்டால் பெரிதாக பதில் எதுவும் கூறிவிட முடியாது. அதற்காக மாற்றம் இல்லையென்றும் கூறிவிட முடியாது.

நம் தமிழ்நாட்டில் இன்று தெருவுக்குத் தெரு பத்து கோயில்கள் இருக்கின்றன. பெரியார் 75 வருடங்களாகப் போராடினார், கடவுள் இல்லையென்று தொடர்ந்து பேசிவந்தார், அவர் வாழ்ந்த மண்ணில் இன்று இத்தனை கோயில்கள் இருக்கின்றனவே என்று கேட்டால் அது பெரியாருக்குக் கிடைத்த தோல்வியாகி விடாது. மீண்டும் மீண்டும் பெரியார் தேவைப்படுகிறார் என்றுதான் அர்த்தம்.

அப்படித்தான் தலித் முரசு என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று கேட்டால் நேரடியாக பதில் சொல்வது கடினம். ஆறரை கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் ஒரு கோடி மக்கள் தலித்துகளாக இருப்பார்கள். அதில் பத்தாயிரம் பிரதிகள் விற்கிற தலித்முரசு அத்தனை பேரையும் சென்றடைய முடியாது. ஆனால் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்றும் சொல்ல முடியாது.

‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்று நாங்கள் நடத்திய பிரச்சாரப் பயணத்திற்கு அமோக வரவேற்பு இருந்தது. பல்லாவரத்தில் ஒரு தெருமுனைக் கூட்டத்தில் பேசும்போது தலித் முரசு என்றவுடன் கைதட்டுகிறார்கள். இதெல்லாம் தான் எனக்குக் கிடைத்திருக்கிற அல்லது இந்த பத்திரிகைக்குக் கிடைத்திருக்கிற வெற்றி.

சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடியவர்கள் கட்சியில் சேர்ந்தோ, தனித்தோ, அமைப்பு ரீதியாகவோ அல்லது அம்பேத்கர் படத்தை வைத்துக் கொண்டு தனியாகவோ இயங்குகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் ஒரு பெரிய ஆதாரமாக இருக்கிறோம்.

அம்பேத்கர் வெறும் படமாக இருந்த நம் சமூகத்தில் அம்பேத்கரின் ‘மதமாற்றம் தான் சரியான வழி’ என்கிற முக்கியமான அஜெண்டாவை இங்கு பதிய வைத்தது தலித் முரசு தான். பத்து வருடங்களுக்கு முன்பு இங்கு பவுத்தம் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை. ஆனால் இன்றைக்கு அது பெரிய விவாதமாகியிருக்கிறது. இதற்கு தலித் முரசு மட்டும் காரணம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் தலித் முரசும் ஒரு முக்கிய காரணம்.

அறிவுத்தளத்தில் இயங்குபவர்களிடம் மட்டும் தானே சென்றிருக்கிறீர்கள்…

அறிவுத்தளம் தானே முக்கியம்.

அறிவுத்தளம் தான் முக்கியம் என்கிறீர்கள். ஆனால் செயல்தளம் தானே மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது.

கருத்தியல் தான் சமூகத்தை உந்தித்தள்ளுகிறது. செயல் மட்டுமே எதையும் செய்து விட முடியாது.

இன்றைய தலித் அரசியல் சரியான பாதையில் போய்க்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா? அரசியல் ரீதியாக செயல்படாத தலித் அமைப்புகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தியலை மையமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். இவர்களது பாதை குறித்து?

தேர்தலுக்கான அரசியல் கட்சிகளைத் தவிர வேறெதையும் அரசியல் என்று எப்படி சொல்கிறீர்கள்? தேர்தலில் நிற்பது, அரசை ஒட்டி இயங்குவது இதுதான் அரசியலாக இருக்க முடியும். தீண்டாமைக்கெதிரான போராட்டத்தை ஒரு அமைப்பு நடத்தினால் அது தீண்டாமைக்கெதிரான அரசியல் என்று எப்படி கூற முடியும்? அது தீண்டாமைக்கெதிரான ஒரு போராட்டம் அவ்வளவு தான். அதையேன் தலித் அரசியல் என்று சொல்கிறீர்கள்? அதற்கும் தலித் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அப்படியானால் தலித் அரசியல் என்பது என்ன?

திருமாவளவன் ஒரு கட்சி நடத்துகிறார், தேர்தலில் நிற்கிறார், எம்.எல்.ஏ.சீட் வாங்குகிறார். சட்டமன்றத்தில் தலித் பிரச்சனை குறித்துப் பேசுகிறார். தலித் பிரச்சனை அரசியல் ஆக்கப்படுகிறது. அதுதான் தலித் அரசியல். எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராடுகிறார்கள். அது இட ஒதுக்கீடு போராட்டம் அவ்வளவுதான். ஆனால் நீங்கள் அதை இடஒதுக்கீடு அரசியல் என்று கூறுகிறீர்கள்.

சாதி ஒழிப்பு தான் நம் லட்சியம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு என்னுடைய சாதியை நான் ஒழித்து விட்டேன் என்றால், இதில் அரசியல் எங்கிருந்து வருகிறது?

இப்போது தீண்டாமை ஒழிப்பு போராட்டம் நடக்கிறது. அதில் ஒரு சட்டத்தை செயல்படுத்தக் கோரி அரசிடம் கேட்கிறீர்கள். அந்தப் போராட்டத்திற்கு அரசின் காவல்துறை வருகிறது. அது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீண்டாமை ஒழிப்பு சட்டப்பிரிவு இருக்கிறது. இப்படி அரசுடன் தொடர்புடைய விஷயங்களை அரசியல் என்று சொல்வதில் என்ன தவறு?

பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டம், வைக்கம் போராட்டம், சட்ட எரிப்புப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதற்காக பெரியாரை அரசியல்வாதி என்று கூறுவீர்களா? தேர்தலில் கலந்து கொள்ளாத எல்லாப் போராட்டங்களையும் அரசியல் என்கிறீர்கள். எல்லாப் போராட்டங்களையும் நடத்திய பெரியாரை அரசியல்வாதி இல்லையென்றும் கூறுகிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?

தலித்களின் பிரச்சனை ஒன்றாக இருக்க, அரசியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியே பிரச்சனையை திசைதிருப்பி விட்டார்கள். தலித் விடுதலைக்காகப் போராடக் கூடிய அனைவருமே இதை அரசியல் கட்சியை நோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். தலித்களுக்கான அரசியல் கட்சியை ஏற்படுத்தி அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் திருமாவளவன் தான். அவருக்கு முன்னரே இந்திய குடியரசுக் கட்சி, இளைய பெருமாள் தலைமையிலான கட்சிகள் இருந்தும் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியும் திருமாவளவன் தலித் விடுதலைக்காக என்ன செய்தார்? இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை அவரது கட்சி வைத்துக் கொண்டிருக்கிறது அவ்வளவுதான். அடுத்த தேர்தலில் அவர் ஆட்சியையே பிடித்தாலும் கூட அதனால் தலித்களின் பிரச்சனை தீர்ந்து விடுமா?

தலித் மக்கள் என்று அரசியல் சக்தியாக மாறுகிறார்களோ, அன்று அவர்களது பிரச்சனை தீர்ந்து விடும் என்று தொடர்ச்சியாக திருமாவளவன் பேசி வருகிறார். இன்றைக்கு தலித்துகள் அரசியல் சக்தி தானே. ஏன் அவர்களது பிரச்சனை தீரவில்லை. மாயாவதி எல்லாவற்றையும் தீர்மானிக்கும் முதல்வர் பதவியில் அமர்ந்தும் கூட தலித் பிரச்சனை என்பது இன்னமும் தீரவில்லையே!

தமிழக சட்டப்பேரவையில் தற்போது 42 தலித் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதன்பிறகும், ‘தலித்துகள் அரசியல் சக்தியாக மாறும்போது தான் அவர்களது பிரச்சனை தீர்க்கப்படும்’ என்று திருமாவளவன் கூறுகிறார். தலித்துகள் முக்கியமான அமைச்சர் பொறுப்புகளை வகித்தாலும் திருமாவளவன் இதையே தான் கூறுவார். அப்படியானால் அவர் முதல்வராக ஆக வேண்டும். அவர் முதல்வராக ஆக முடியுமா? அப்படியே ஆனாலும் தலித் பிரச்சனை தீர்ந்து விடுமா என்று யோசிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் பதில் இல்லாதபோது, தலித் அரசியல் என்பதில் போய் ஏன் விழவேண்டும்? சில போராட்டங்களில் இந்த கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதனால் தலித் பிரச்சனை தீரப் போவதில்லை.

இதற்கு நீங்கள் என்னதான் தீர்வு சொல்கிறீர்கள்?

தலித் பிரச்சனை என்பது சரியாக புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பது தான் நான் கூற வருவது. இதுகுறித்து அம்பேத்கர் மிகத் தெளிவாக கூறியிருக்கிறார். ‘தலித்களின் பிரச்சனை என்பது இந்த சமூகத்தோடு சேர்ந்து வாழ்வதில் தான் இருக்கிறது.’ அரசோடு பிரச்சனை இல்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தலித்துகளாக சேரிகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் தனிநாடு கேட்டோ, பொருளாதார வளங்களை அபகரிக்கவோ போராடவில்லை. சமூகத்தில் எல்லாத் தரப்பு மக்களோடும் இணைந்து வாழ்வதற்கே அவர்கள் போராடுகிறார்கள். இந்த சமூகத்தில் ஒரு மனிதனாக எங்களையும் மதிக்கக்கூடாதா என்று தான் அவர்கள் கேட்கிறார்கள். ஏன் அவர்கள் அப்படி வாழ்கிறார்கள் என்ற கேள்வி வந்தால் உடனடியாக நமக்கு சொல்லப்படும் எளிதான பதில் அரசியல் தான்.

என் கருத்துப்படி அரசியலை விட சமூகம் தான் இந்த இடத்தில் முதன்மையானது. சமூக, பண்பாட்டு ரீதியாக தலித் மக்கள் கீழானவர்களாக நடத்தப்படுவதால் தான் அவர்களுக்கு எந்த அரசியல் உரிமையும் வழங்கப்படவில்லை. இந்த நாட்டின் பண்பாடு, மதத்தின் அடிப்படையில் இருக்கிறது. அந்த பண்பாடு தான் அவர்களை கீழானவர்களாகப் பார்க்க வைக்கிறது.

பண்பாட்டு ரீதியாக மேலே வருவதற்கு இந்து மதம் அனுமதிப்பதில்லை. எனவே அரசியல் ரீதியாகவாவது நாங்கள் மேலே வருகிறோம் என்று தலித் அமைப்புகள் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

அரசியல் ரீதியாக வந்தாலும் நாங்கள் யாராக அடையாளப்படுத்தப்படுகிறோம்? திருமாவளவன் அரசியல் ரீதியாக வெற்றி பெற்றாலும் அவர் அவரது சாதியின் பெயரால் தானே அடையாளப்படுத்தப்படுகிறார்?

நான் என்ன சாதியாக இருந்தாலும், நான் அதிகாரத்தில் இருக்கும்போது சாதியைச் சொல்லி என்னை யாரும் அவமானப்படுத்த முடியாது என்று தானே அவர்கள் சொல்கிறார்கள்?

இப்படித் தான் எல்லா தலித் இயக்கங்களும் நம்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தன்னை இந்து அல்ல என்று ஒவ்வொரு தலித்தும் காட்டிக் கொள்ளாதவரை அவன் மேல் உள்ள இழிவை அவனால் போக்கிக் கொள்ள முடியாது.

இந்து மதத்தில் இருந்து வெளியே வந்து விட்டாலும் அவர்கள் மதம் மாறிய தலித்துகள் என்று தானே சொல்லப்படுகிறார்கள்?

சீக்கியர்கள் முந்நூறு வருடங்களுக்கு முன்பு இந்துக்களாகத் தான் இருந்தார்கள். இன்று அவர்கள் சீக்கியர்களாக தங்களது அரசியல் உரிமையைப் பெறுகிறார்கள். அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான்.

சீக்கிய மதத்திற்குள்ளும் சாதிகள் இருக்கத்தானே செய்கிறது?

சீக்கிய மதத்தில் இன்னும் இருநூறு, முந்நூறு ஆண்டுகளில் சாதிகள் நிச்சயம் மறைந்து விடும்.

மதம் மாறினாலும் தங்களது சலுகைகளைப் பெறுவதற்கு தலித்தாகத் தானே அடையாளப்படுத்த வேண்டியுள்ளது?

இந்து மதத்தில் இருந்து வெளியேறி கிறிஸ்தவனாகவோ, இஸ்லாமியனாகவோ, சீக்கியனாகவோ இருந்து சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் இந்துவாக இருந்து சந்திக்கும் பிரச்சனைகளை விட குறைவாக இருக்கிறது. மதம் மாறாமல் இந்துவாகவே இருக்கக்கூடிய தலித்துகள் தான் இன்று மிகக் கொடூரமான வன்முறைகளை எதிர்கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

அம்பேத்கர் முன்வைத்த பவுத்தமும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே தான் அங்கீகரிக்கப்படுகிறது?

இதில் நாம் சட்டப்படி மாற்றங்களை செய்ய வேண்டியது தான் அவசியமாகிறதே தவிர, மதமாற்றம் தவறு என்று சொல்லிவிட முடியாது.

கயர்லாஞ்சியில் கொடுமை நடைபெற்றது ஒரு பவுத்தக் குடும்பத்திற்கு தான். அவர்கள் மதம் மாறிய பின்பும் அவர்கள் பவுத்தர்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை அல்லது எந்த மதத்திற்கு மாறினாலும் நீ தாழ்த்தப்பட்டவன் என்று ஆதிக்க சாதிகள் கூறுவதாகத் தானே அர்த்தம்?

தலித்துகள் முன்னேறுவதற்கு அவர்களுக்கு நிலம் அவசியம் என்பதால் தான் நிலப்பங்கீட்டை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். கயர்லாஞ்சியில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட குடும்பத்திற்கு நிலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நில உடைமையாளர்களாக இருந்திருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் நிலப்பங்கீடு தவறு என்று சொல்லிவிட முடியாது.

தலித் கிறிஸ்தவன் தலித் இந்துவை விட மிகமிகக் குறைந்த அளவிலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறான். வன்கொடுமையில் இருந்து தப்பிப்பது முதல் வழி. அதன்பிறகு இழிவை நீக்குவது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம்.

பொருளாதாரமோ, படிப்போ, பதவியோ பிறவி இழிவை நீக்கப்போவதில்லை. இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் அதிகம் படித்தவர், நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவி வகித்தவர், முப்படைகளுக்கும் தலைவர். ஆனாலும் நூறு வருடம் கழித்து அவர் ஒரு தலித் என்று தானே வரலாறு சொல்லும். ஏனெனில் அவர் இந்துவாகப் பிறந்து, இந்துவாக வாழ்ந்து, இந்துவாக மறைந்தார்.

கிறிஸ்தவனாக மாறினால், நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு கண்டிப்பாக சாதி மறைவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. இந்துவாகவே இருந்தால் கே.ஆர்.நாராயணன் போல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு தலித்தாகத் தான் அறியப்படுவீர்கள்.

கருணாநிதி ஐந்துமுறை தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தவர். ஆனாலும் சூத்திரர் தானே. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட்டால் சூத்திரத் தன்மை போய்விடுமா? இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் அத்தனை முதல்வர்களும் பார்ப்பனர் அல்லாதவர் தான். தலித் பிரச்சனை அரசியல் பிரச்சனையாக இருக்குமானால், அவர்கள் ஏன் ஒரு சட்டத்தைப் போட்டு தன்னுடைய சூத்திரத் தன்மையை போக்கிக் கொள்ளக்கூடாது? கருணாநிதி சூத்திரனாகத்தான் சாவார். இதுதானே பிறவி இழிவு? இந்த பிறவி இழிவை நீக்குவதற்கு நீங்கள் சொல்லக்கூடிய எந்தத் திட்டத்திலும் இடமில்லையே.

மதமாற்றத்தை தீவிரமாக ஆதரித்த பெரியார் ஒரு காலகட்டத்தில் இஸ்லாம் மதத்தை ஆதரித்தார். இஸ்லாம் மதத்திற்கு மாறியதன் மூலம் ஒரு நொடியில் சாதியை ஒழித்து விட்டேன் என்று தலித் முரசு இதழில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா கூறியிருந்தார். ஆனால் மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு இஸ்லாத்தில் போதிய சுதந்திரம் இல்லை. அங்கு செல்வதன் மூலம் பெண்களின் நிலை இந்து மதத்தில் இருந்ததை விட மோசமாகி விடாதா?

ஒன்றை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை என இந்து மதம் போல வேறு எந்த மதமும் பெண்களை அடக்கி ஒடுக்கியதில்லை. இந்து மதத்தை எந்த மதத்தோடும் ஒப்பிடவே முடியாது. இந்து மதம் ஒரு மதமே அல்ல என்று கூறியிருக்கிறார் அம்பேத்கர். வேறு எந்த மதத்திலும் தேவையான சீர்திருத்தங்களை செய்து கொள்ள முடியும். இந்து மதத்தில் அது முடியாது. மற்ற மதங்களில் ஒரு ஜனநாயகத்தன்மை இருக்கிறது. இந்து மதத்தில் அது கிடையாது.

பெண்ணாக இருப்பதாலேயே இழிவாக நடத்தக்கூடிய நம் சமூகத்தில் அந்தப் பெண் தலித்தாகவும் பிறந்து விட்டால் கூடுதல் துன்பங்களை சந்திக்கிறாள். நீங்கள் சாதியை ஒழித்து, பிறவி இழிவை நீக்கி விட்டதாக வைத்துக் கொள்வோம். இங்கு பெண்களுக்கான இடம் என்ன?

இந்து மதம் பெண்களை இழிவாக வைத்துக்கொள்ளச் சொல்கிறது. அதனால் தான் பெண்களின் நிலை இன்றும் இழிவாக இருக்கிறது. இந்து மதத்தில் இருந்து விடுதலை பெறுவதன் மூலம் பெண்களின் இழிவும் போக்கப்படுகிறது. புத்தர், “எல்லாப் பெண்களுக்கும் சம உரிமை கொடுத்து அவர்களை சமமாக நடத்த வேண்டும்” என்று கூறினார்.

அதுதான் சரியான பண்பாடு. பவுத்தத்திற்கு மாறுவதன் மூலம் பண்பாட்டை சீர்ப்படுத்தினால் அது பெண்களுக்கும் சேர்ந்த தீர்வு தானே? பெரியாரும் இதைத்தான் சொன்னார். “இந்த மதம் தான் பெண்களை இழிவாக வைத்திருக்கிறது. பெண்கள் தங்கள் இழிவை போக்கிக் கொள்ள மதத்திற்கு எதிராக போராட வேண்டும்”.

பிறவி இழிவைப் பற்றி நாங்கள் பேசுவது பெண்களுக்கும் சேர்த்து தானே. இந்து மதத்தில் உள்ள ஆண்களை மட்டும் நாங்கள் வெளியேறச் சொல்லவில்லையே? தலித் விடுதலை என்பது தலித்துகள் விடுதலை பெறுவது மட்டுமல்ல; எல்லா அடிமைத்தனங்களுக்கும் எதிராகக் கேள்வி கேட்பது தான். என்னை அடிமையாக வைத்திருப்பதற்கு உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று கேட்பது தலித் விடுதலை.

என் வீட்டில் குழந்தைத் தொழிலாளரை நான் வைத்திருந்தால் அது எனக்குத்தான் அவமானம். அந்தக் குழந்தை தொழிலாளருக்கு அதனால் எந்த அவமானமும் இல்லையே?

தன்னையும் விடுதலை செய்து கொண்டு சமூகத்தையும் விடுதலை செய்வது தான் உண்மையான விடுதலை. இந்து மதத்தை ஒழிக்காமல் தமிழ்த்தேசியம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை, ஊழல் என எதையும் நாம் பேசிவிட முடியாது. ஊழலுக்கும் இந்து மதத்திற்கும் தான் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

தலித் கலைகள், தலித் பண்பாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பறை இசை சிறப்பு வாய்ந்த இசையாக பேசப்படுகிறது. சிறு தெய்வ வழிபாடு கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

90க்குப் பிறகு அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி தலித் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பண்பாடு என்பதை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்பதாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

பறை இசையே அல்ல என்று இசை மேதைகள் கூறுவதால், பறைதான் சிறந்த இசை எனவும், நீ ராமனை வழிபட வேண்டும் என்று சொன்னால் இல்லை நாங்கள் சிறு தெய்வங்களைத் தான் வழிபடுவோம் என்றும் சொல்கிறார்கள். இதை தலித் பண்பாட்டு விழா என கொண்டாடவும் செய்கிறார்கள்.

தலித் பண்பாடு என்பது பறையடிப்பது, சிறுதெய்வ வழிபாடு என்பதாக சுருங்கி விட்டது. தலித் என்பதற்கான விளக்கமே இங்கு சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. அதனால் தான் தலித் என்பதும் ஒரு சாதிப் பெயராக இன்று மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய தோல்வியாகத் தான் எனக்குப் படுகிறது.

அம்பேத்கர் யார் என்று கேட்டால் அவர் ஒரு தலித் தலைவர் அவ்வளவுதான். இது ஒரு திட்டமிட்ட சதி என்று அம்பேத்கரே குறிப்பிடுகிறார். ஒரு பார்ப்பனர் டாக்டராக இருந்தால் இந்த சமூகம் அவரை ஒரு மிகப்பெரிய டாக்டர் என்று குறிப்பிடுகிறது. ஒரு கவிஞர் பார்ப்பனராக இருந்தால் அவரை தேசியக் கவி என்று கொண்டாடுகிறது.

பாரதிதாசன் பார்ப்பனர் அல்லாத காரணத்தினால் அவர் ஒரு தேசியக் கவி கிடையாது. பாரதியார் ஒரு மாநிலத்தில் பிறந்து ஒரே ஒரு மொழியில் மட்டுமே எழுதினாலும் அவர் தேசியக் கவியாக கொண்டாடப்படுகிறார். இதனால் தான் மகாத்மா காந்தி தேசப்பிதாவாக ஆகி, அம்பேத்கர் தலித் தலைவராக சுருங்கி விட்டார். இப்படி தலித் விஷயங்கள் தலித்துகளாலேயே சுருக்கப்பட்டு விட்டது.

மற்ற சாதிகள் தலித்துகள் மீது நடத்திய தொடர் வன்முறை காரணமாக தலித்துகளுக்கு மற்றவர்கள் மீது ஒரு அச்சம் ஏற்பட்டு விட்டது. அதனால் தான் நாம் மட்டும் தான் தலித்துகள் என்ற பெயரை பயன்படுத்த வேண்டும், நம்முடைய எழுத்தை நாம் தான் எழுத வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தலித் என்ற வார்த்தைக்கான அர்த்தமும் சுருக்கப்பட்டு அது ஒரு சாதிக்குரியதாக மாற்றப்பட்டு விட்டது.

தலித் என்றால் இந்த சமூகத்தை அடியோடு மாற்றக்கூடியவன், சாதியை ஒழிக்கக்கூடியவன், சமத்துவத்தை வலியுறுத்தக்கூடியவன் என்ற விளக்கம் கொடுக்கப்படவில்லை. இந்த விளக்கங்கள் கொடுக்கப்படாததால் தான் பறையடிப்பது தலித் பண்பாடாகி விட்டது. தலித் பண்பாடு என்பது சாதியை வேரோடு களைந்து புதிய சமத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய பண்பாடு. இந்துப் பண்பாட்டை கேள்விக்குள்ளாக்கக்கூடியது தான் தலித் பண்பாடு.

இந்துப் பண்பாடு பறையடிப்பதை இழிவாகச் சொல்கிறது. அதற்கு மாற்றாகத்தானே தலித்துகள் பறையடிப்பதை உயர்த்திப் பிடிக்கிறார்கள். இது ஒரு சரியான எதிர்வினை தானே?

இந்துப் பண்பாடு என்ன சொல்கிறது? நீ பறையடிச்சாலும் பறையன், பறையடிக்கலைன்னாலும் நீ பறையன். புதிரை வண்ணார்களின் கேள்வியே இதுதான்.

“நாங்கதான் வண்ணார் தொழில் செய்யலையே, எங்களை ஏன் புதிரை வண்ணார்னு சொல்றீங்க” என்று கேட்டால், “நீ வண்ணார் தொழில் செய்தாலும், செய்யலைன்னாலும் நாங்க அப்படித்தான் உன்னைப் பார்ப்போம்” என்று ஆதிக்க சாதி திமிரோடு பேசுகிறார்கள். இட ஒதுக்கிட்டுக்காக சாதிச்சான்றிதழ் கேட்கப் போனால் அங்கு, ‘நீ தான் தங்கச் சங்கிலி போட்டுருக்கியே, உன் வீட்டுல தான் கழுதை இல்லியே, அப்புறம் எப்படி நீ புதிரை வண்ணாரா இருக்க முடியும்?’ என்று கேட்கிறார்கள்.

பவுத்தம் என்பது தொடர்ச்சியாக இந்து மதத்தை மறுதலித்து வருகிறது. இந்து மதத்தின் எல்லா விஷயங்களையும் எதிர்க்கிறது. ஆனாலும் ஒரு சட்டத்தின் மூலம் ஆட்சியாளர்கள் பவுத்தத்தையும் இந்து மதம் ஆக்கிவிட்டார்கள். இதை மாற்றுவதற்குத் தான் அம்பேத்கர் போராடினார். கடைசியாக அவர் சொல்கிறார், “நான் ஒரு உதிரியாக பயன்படுத்தப்பட்டேன்.”

இந்து மதம் தொடர்ச்சியாக இப்படித்தான் செயல்படுகிறது. நீ கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும் நீ இந்துதான். அந்த வகையில் பெரியாரும் ஓர் இந்துதான். அதனால் தான் மதமாற்றம் மட்டுமே ஒரே தீர்வு என்றார் அம்பேத்கர். அவருடைய தேர்வு பவுத்தம். பவுத்தமும் அரசியல் சட்டப்படி இந்து மதம் தான் என்றால் கிறிஸ்தவத்திற்கோ, இஸ்லாத்திற்கோ மதம் மாறிவிடலாம். அதிலும் ஒரு தடை போட்டுள்ளார்கள். மதம் மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது என்று. எனவே தலித் பண்பாடு என்ற பெயரில் சிறு தெய்வ வழிபாட்டை ஊக்குவித்தால், பவுத்தமும் இந்து மதத்தின் ஒரு பிரிவு என்று சொன்னவன் சிறுதெய்வ வழிபாடும் இந்துப் பண்பாடு தான் என்று சொல்லப் போகிறான்.

சிறுதெய்வ ஸ்பெஷலிஸ்டுகள் ஒண்டிவீரன் முதல் மேலவளவு முருகேசன் வரை அனைவரையும் சிறுதெய்வமாக வழிபடலாம் என்று சொல்கிறார்கள். இப்படி வணங்குதலே பவுத்தத்திற்கு நேர் எதிரானது. எனவே தலித் பண்பாட்டை இப்படி சுருக்கி விடாமல் பெரும் போராட்டத்திற்கு முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

குழந்தை பிறந்ததில் இருந்து என்னென்ன சடங்குகள் செய்வது, என்ன பெயர் வைப்பது, என்ன உணவு உண்பது, எந்தத் திசையில் வீடு கட்டுவது, எந்த நாளில் உடலுறவு வைத்துக் கொள்வது, எந்த நாளில் திருமணம் செய்வது என எல்லாவற்றையும் இந்த பண்பாடு தான் தீர்மானிக்கிறது.

எனவே வெறும் ஆட்டத்தை விட்டுவிட்டு எல்லாவற்றையும் தான் நாம் கேள்வி கேட்க வேண்டும். பொட்டு வைப்பது தான் இந்துப்பண்பாடு எனில் பொட்டு வைப்பதை மறுக்க வேண்டும். அவன் கடவுளைக் கும்பிட்டால் நான் கும்பிட மறுக்க வேண்டும். அவன் வெள்ளைப்புடவை கட்டக்கூடாது என்று சொன்னால் நான் கட்ட வேண்டும். அவன் கறுப்பு அமங்கலம் என்று சொன்னால் நான் கறுப்பைத்தான் என்னுடைய பண்பாடாக முன்னிறுத்த வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு பறையடிப்பது மட்டும் சரியாக இருக்க முடியாது.

நம்முடைய பண்பாடு என்பது புத்தர் சொல்வது போல், சமத்துவத்தைப் போதித்து இந்த சமூகத்தை ஜனநாயகப்படுத்துவது. இந்துப்பண்பாட்டிற்கு எதிராக ஒரு சமத்துவப் பண்பாட்டை முன்னிறுத்த வேண்டும்.

பறையடிப்பதோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. இங்கு சாதி அமைப்பு பிரமிடு வடிவில் உள்ளது. அதில் தலித்துகள் கடைசி செங்கல்லாக உள்ளார்கள். அந்த கடைசி செங்கல்லை மட்டும் பெயர்த்து எடுத்து விடுதலையாகி விட முடியும் என்பது நடக்காது. பிற்படுத்தப்பட்டவர் ஒரு செங்கல்லை எடுத்து வெளியேறி விடவும் முடியாது. இதைத்தான் அம்பேத்கர், “இந்த ஒட்டுமொத்த வடிவத்தையும் வெடிவைத்து தகர்க்க வேண்டும்” என்கிறார்.

தலித் விடுதலைக்காக பாடுபடுபவர்களில் ஒரு பிரிவினர், ‘பார்ப்பனர்கள் நம்முடைய எதிரிகள் அல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள் தான் நம்முடைய எதிரிகள், ஒவ்வொரு முறையும் நாம் அவர்களோடு தான் நேரடியாக மோத வேண்டியிருக்கிறது’ என்று கூறுகிறார்களே?

பிரமிடு என்கிற அமைப்பை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த சாதி அமைப்பு தான் ஒட்டுமொத்த சீரழிவிற்கும் காரணம். இந்த அமைப்பை விட்டு தனிநபர்கள் வெளியே சென்று விடலாம். அதனால் இந்த அமைப்பு எந்தவிதத்திலும் பாதிப்படையாது. ஆனால் சமூகம் அப்படிப் போக முடியாது.

தலித்துகள் தனக்கு மேலே இருக்கிறவனை எதிர்த்தால் விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். முடியாது. அவனுக்கும் மேலே ஒருவன் இருக்கிறான். அப்படியானால் இந்த அமைப்பை எப்படி உடைப்பது? இந்த பிரமிடு வடிவ அமைப்பை விட்டு ஒட்டுமொத்த சமூகமும் வெளியேற வேண்டும் அதுதான் மதமாற்றம். இந்த பிரமிடு அமைப்பிற்குள் இருந்து கொண்டு எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. இதற்குள் இருக்கிறவரை கீழே இருக்கிறவனை எட்டி உதைத்துக் கொண்டு மேலே இருக்கிறவனுக்கு சலாம் அடிக்கும் ஒரு சமூகமாகத் தான் இருக்க முடியும்.

இந்துப் பண்பாட்டால் கட்டப்பட்ட இந்த அமைப்பை உடைக்க வேண்டும். அது மிகவும் வலிமையாக கட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் Physical structure அல்ல. அது சிந்தனைகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் நாம் கருத்தியல் தளத்திற்குள் தான் செல்ல வேண்டியிருக்கிறது.

அதனால் தான் அம்பேத்கர் கூறுகிறார், “இந்து மதத்தை புனரமைப்பதோ, சீர்திருத்துவதோ உங்கள் வேலை கிடையாது. அதை உன்னால் செய்யவும் முடியாது. அதை விட்டு வெளியேறுவது தான் சரியாக இருக்கமுடியும். இந்த சாதிப் பிரமிடு அமைப்பிற்குள் இருக்கிறவரை எனக்குக் கீழே ஒருவன் இருக்கிறான், எனக்கு மேலேயும் ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும். இது ஒருவித மனநோய்” என்கிறார் அம்பேத்கர்.

மேலே இருப்பவன் தன்னை அடிப்பதாக கீழே இருப்பவன் புலம்புவதும், இந்த அமைப்பிற்குள் அப்படி அடித்துக்கொள்வது தான் சரி என்று மேலே இருப்பவன் நினைத்துக் கொண்டிருப்பதும் தொடரத்தான் செய்யும்.

தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சொல்கிறீர்களா?

பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பது அரசு உருவாக்கிய வார்த்தை. பஞ்சமர்கள், சூத்திரர்கள் என்பது மநுதர்மம் உருவாக்கிய சொல்லாடல்கள். தலித்துகள், தலித் அல்லாதவர் என்பது நவீன தலித் இயக்கங்கள் ஏற்படுத்தியிருக்கக்கூடிய வார்த்தை.

முதலில் அனைவரும் இந்த சமூகம் ஒரு சமத்துவமற்ற சமூகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமூகத்தின் முன்னோடிகளை நாம் படிக்க வேண்டும். நம்முடைய கல்விமுறை இதை போதிப்பதில்லை. நான் சமூகவியலில் முதுநிலைப்பட்டம் வாங்கியவன். எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பாடத்திட்டம் போலியானது. இந்தச் சமூகத்தின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள அது உதவவில்லை.

ஒரு கட்டிடம் கட்ட வரும் பொறியாளர் செங்கல் வைச்சா கட்டிடம் வந்துடப்போகுது. எதுக்காக ஆழமாத் தோண்டறீங்க, கடைக்கால் எல்லாம் போடறீங்கன்னு கேட்டா எவ்வளவு முட்டாள்தனமா இருக்குமோ அவ்வளவு முட்டாள்தனமானது நம் சமூகம். இப்பல்லாம் யாரும் சாதி பார்க்கிறதில்லை, அப்படியே ஆரம்பிச்சு இயங்க வேண்டியது தான் என்ற முட்டாள்தனமான புரிதலோடு தான் இன்றைக்கு சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சமூகம் நம் ஒவ்வொருவரையும் தொந்தரவு செய்ய வேண்டும். நாம் நடக்கும் சாலையில் ஏன் ஒருவர் மட்டும் செப்டிங் டேங்க் கழுவ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். மலத்தை வாயில் திணிப்பது தவறில்லை என்று நீதிபதி தீர்ப்பு கூறுகிறார். ஏன் சமூகம் இப்படி இருக்கிறது? என்பது மாதிரியான கேள்விகள் தலித்துகளுக்கு மட்டுமோ, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமோ எழ வேண்டிய அவசியமில்லை. சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட அனைவருக்கும் எழ வேண்டும்.

இந்த சமூகத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நம் முன்னோடிகளான அம்பேத்கர், புலே, பெரியார் போன்றவர்களையெல்லாம் படிக்க வேண்டும். அவர்களின் தத்துவ வழிகாட்டுதலின்படிதான் இந்த சமூகத்தை சீர்திருத்த முனைய வேண்டும். இந்த சீர்திருத்தத்திலும் இட ஒதுக்கீடு கேட்டுக்கொண்டு, நீ தலித்துக்காக போராடிக்கொள், நான் பிற்படுத்தப்பட்டோருக்காக போராடிக் கொள்கிறேன், என் போராட்ட எல்லை இதுவரை தான், உன் போராட்ட எல்லை அதுவரை என்று பேசுவது அயோக்கியத்தனம்.

இந்த சாதியாலான சமூகத்தை சமத்துவமிக்க ஜனநாயகப்பூர்வமான பண்பாடுள்ள சமூகமாக (அது பவுத்தமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் எதார்த்தத்தில் அது பவுத்தமாகத் தான் இருக்கிறது) மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

பவுத்தத்தில் பார்ப்பனரையும் இணைத்துக் கொண்டீர்களே என்ற கேள்விக்கு புத்தர், பவுத்தத்தில் வந்த பிறகு பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர் என்ற பிரிவே கிடையாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் நமக்கு அதிலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. பார்ப்பனர்கள் அங்கு போய் பவுத்தத்தையும் சீர்குலைத்து விட்டனர். எனவே அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற பாடம் கிடைத்திருக்கிறது.

எனவே பார்ப்பனர் அல்லாத அனைவரையும் இணைத்துக் கொள்ளலாம். இந்தியாவில் பார்ப்பனர் அல்லாத ஆறாயிரம் சாதியினர் வசிக்கின்றனர். இவர்களால் தான் இந்த பிரமிடு அமைப்பு வலுவாக உள்ளது. அதை விட்டு வெளியேறுவதன் மூலம் தான் இந்த அமைப்பை தகர்க்க முடியும்.

மதமாற்றத்திற்கு தலித்துகள் ஒத்துக்கொண்டாலும் பிற்படுத்தப்பட்டவர்கள் அதற்கு ஒத்துக்கொள்வார்களா? தனக்குக்கீழே ஒருவன் இருக்கிறான் என்ற சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் தானே?

பெரியார் தான் இதை சரியாகச் சொன்னார். பஞ்சமர் பட்டம் பறையனை விட்டுப் போகாதவரை சூத்திரர் பட்டம் உன்னை விட்டுப்போகாது என்றார். பார்ப்பான் தலையில் பிறந்தான், அவன் காலில் பிறந்தான்னு மநுதர்மம் பிரிக்கிறது. பெரியார் சொன்னார், ‘பறையனும் பள்ளனும் தான் சரியாக அம்மா, அப்பாவுக்கு பொறக்க வேண்டிய இடத்தில் பொறந்திருக்கான். சூத்திரன் எல்லாம் விபச்சாரிக்கு பொறந்திருக்கான்’ என்று தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தியும், ஆதிக்க சாதிகளைப் பார்த்து ‘நீ இந்த சாதியில் பிறந்ததற்காய் வெட்கப்பட வேண்டும்’ என்றும் சொல்கிறார். பெரியார் தன் வாழ்நாள் எல்லாம் சூத்திரர் என்று சொல்வதற்கு அர்த்தம் இதுதான். ‘உன் சாதியைச் சொல்லி பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை, நீ விபச்சாரிக்குப் பிறந்தவன்’ என்று சொல்கிறார்.

பெரியார் ஒருபோதும் தலித் மக்களை திட்டினவர் கிடையாது. ஆதாரமே இல்லாமல் சிலர் அவரை தலித் விரோதியாக காட்டுவதற்கு முயற்சி செய்கின்றனர். அவர் மீண்டும் மீண்டும், ‘இந்துவாக இருக்காதே, இழிவைத் தேடிக் கொள்ளாதே!’ என்றுதான் சொன்னார். அதை நிர்வாணத் தன்மையோடு ‘சூத்திரர்களே’ என்று சொன்னார். அதை இவர்கள் ‘கௌரவம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியார் ‘சுதந்திரமே வேண்டாம், வெள்ளைக்காரனே ஆட்சியில் இருக்கட்டும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் நம் நாட்டிற்கு இந்துநாடு என்று பெயர் வைப்பதற்கான சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. பேசாமல் வெள்ளைக்காரனே இருந்துவிட்டுப் போகட்டும்’ என்றார். இந்த பிறவி இழிவைப் போக்குவதற்கு வெள்ளைக்காரன் காலைக்கூட நக்குவதற்கு தயாராக இருப்பதாகக் கூறினார்.

‘இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விடும், தொழில் தொடங்குவார்கள், பணம் கிடைக்கும் எல்லாம் சரி என்னுடைய சூத்திரத் தன்மை எப்போது நீங்கும்?’ என்ற கேள்வியைத் தான் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் பெரியார் மீண்டும் மீண்டும் கேட்கிறார்.

நான் படித்து விட்டேன், உயர்ஜாதியினர் என்று சொல்லக்கூடியவர்கள் வகிக்கும் எல்லா பதவிகளிலும் நானும் வந்துவிட்டேன். இந்தியாவின் முதல் குடிமகனாகவும் பதவி கிடைத்து விட்டது. அதனால் என்னை பிராமணனாக நீங்கள் ஒத்துக்கொண்டீர்களா?

‘தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமை உள்ளிட்ட வன்கொடுமைகளை எதிர்த்தால் போதும், மதத்தைத் தொடவேண்டியதில்லை’ என்ற கருத்தின் அடிப்படையில் சில முற்போக்கு இயக்கங்கள் போராட்டங்கள் நடத்துகின்றனவே?

ஒரு விஷயத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஏழையாகப் பிறந்ததால் நான் கீழ்சாதி இல்லை. என்னுடைய உரிமைகள் மறுக்கப்பட்டதால் நான் கீழ்ச்சாதி ஆக்கப்படவில்லை. நான் கீழ்ச்சாதியில் பிறந்ததால் தான் என்னுடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

‘இந்த இரட்டை டம்ளர் ஒற்றை டம்ளராகி விடுகிறது. கோவிலில் நுழையும் உரிமை கிடைத்து விட்டது’ என்றே வைத்துக் கொள்வோம். இதனால் எப்படி சாதி ஒழிந்து விட முடியும்? கோவிலில் நுழையும் உரிமை ஏற்கனவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருக்கிறது. அதனால் அவர்களது சூத்திரத்தன்மை போய்விட்டதா?

உரிமைகளைக் கொடுத்து விட்டால் தலித்துகள் மேல்சாதி ஆகிவிடுவார்கள் என்றுதான் எல்லா இயக்கவாதிகளும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கே.ஆர்.நாராயணனுக்கு எல்லா உரிமைகளும் இருந்தது. இப்போதும் அவரை பறையன் என்றுதானே சொல்கிறார்கள்? இதற்கு என்ன பதில் என்றுதான் நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.

இன்றைக்கு பார்ப்பனர்களை விட பிற்படுத்தப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். அதனால் அவர்களது சூத்திரத்தன்மை போய்விட்டதா? அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரன். அவன் ஒரு முதலாளி என்று சொல்லிக்கொண்டு கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறார்கள். அவன் எவ்வளவு பெரிய முதலாளியாக இருந்தாலும் அவன் ஒரு சூத்திரனாகத் தான் சாகப்போகிறான், அதில் ஒரு பெருமையும் இல்லை என்கிறேன் நான். இதுதான் கம்யூனிஸ்டுகளுக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும் உள்ள வேறுபாடு.

‘சாதி ஒழிப்பு என்பது இமயமலையில் தலையில் கல்லை வைத்துக் கொண்டு தலைகீழாக ஏறுவது’ என்று பெரியார் குறிப்பிடுவார். அந்தப் பிரச்சனை குறித்துப் பேசுவதற்கு இங்கு இயக்கவாதிகள் தயாராக இல்லை.

இந்தப் பிரச்சனையை விட்டுவிட்டு பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்று பேசித் திரிகிறார்கள். அம்பேத்கர் அதைத்தான் கேட்டார், “பாட்டாளிகள் எந்த அடிப்படையில் ஒன்று சேர்வார்கள்? கூப்பிட்டவுடன் இணைந்து வந்துவிடுவார்களா?” என்று. எல்லாருமே சாதி ரீதியாக பிரிந்து கிடக்கும்போது புரட்சிக்கு மட்டும் எப்படி ஒன்று சேர்ந்து விடுவார்கள்?

இந்துப் பண்பாட்டை கேள்விக்குள்ளாக்குவதை தவிர வேறு வழியே இல்லை. அதை இவர்கள் யாரும் செய்யவே இல்லை. ‘நான் இந்துவாகவும் இருப்பேன், கோவிலுக்கும் போவேன், பார்ப்பானை வைத்து எல்லா பூஜை, புனஸ்காரங்களையும் செய்து கொள்வேன். நீ என்னை பிற்படுத்தப்பட்டவன் என்றோ, தலித் என்றோ சொல்லக்கூடாது’ என்பது அப்பட்டமான முரண்பாடு.

இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் இருந்தால் ஆறு லட்சம் சேரிகளும் இருக்கின்றன. தலித்துகளின் உடல் உழைப்பு தொடர்ந்து தேவைப்படுவதால் அவனை அறியாமையிலேயே வைத்திருக்கிறார்கள். அவன் விழிப்புணர்வு பெற்று விட்டால் பிள்ளையாரை யார் தூக்குவது? அதனால் நீயும் இந்து தான் என்று கூறிக் கொள்கிறார்கள்.

பெரியார் இந்து மதத்தைக் கேள்வி கேட்டார். அதே நேரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்று கடைசிவரை போராடினார். இது முரண்பாடாக இல்லையா?

கடவுள் இல்லை என்பது பெரியாரின் கொள்கை. அதை ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கலாம், மறுப்பவர்களும் இருக்கலாம். அதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கான உரிமை வேண்டும் என்பது தான் பெரியார் கேட்டது.

பெரியார் திராவிடர் கழகத்தினர் கடவுள், இந்துமதம் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டே கோவில் நுழையும் உரிமையை கேட்கிறார்கள். ஆனால் மார்க்சிஸ்டுகள் இந்து மதத்தையோ, கடவுளையோ, சாதியையோ கேள்வி கேட்பதில்லை. கோவில் நுழைவுப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை மட்டும் நடத்துகிறார்கள். அது எந்தக் காலத்திலும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது.

இந்து மதம், இந்துப் பண்பாடு இவற்றிற்கு எதிராகப் போராடுவதும், இவற்றை ஒழிப்பதுவுமே அனைத்து மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் வழியாகும்.

தமிழன் என்று சொல்வது வெட்டிப் பெருமை: ஆதவன் தீட்சண்யா


நேர்காணல்: மினர்வா & நந்தன்

ஒரு படைப்பாளி தனது படைப்பில் என்ன சொல்கிறாரோ, அதற்கு நேர்மையாக வாழ முடிகிறதா? அதற்கான சூழல் இங்கு இருக்கிறதா?

எதை எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்தது அது. ஒருவரது மனக்கிளர்ச்சிகள், அனுபவங்கள் தான் எழுத்தாகிறது. இந்த அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக கிடைப்பதற்கு காரணமாக இந்தியச் சமூகத்தில் சாதியும் பாலினமுமே இருக்கிறது. எனவே எழுதும்போது அவர் தனக்கான அடையாளங்களை நிராகரித்துவிட்டு எழுதுகிறாரா அல்லது புது அடையாளங்களை உருவாக்கிக் கொண்டு எழுதுகிறாரா, பிறப்பின் அடிப்படையில் தன்மீது சுமத்தப்பட்டிருக்கிற அடையாளங்கள் பற்றி அவருக்கு என்ன மதிப்பீடு இருக்கிறது என்பதெல்லாம் படைப்புக்குள் வந்துவிடுகிறது. அதை அவரால் மறைக்க முடியாது. அதனால் ‘தான்’ என்று எழுதும்போது, அவர் தன்னை மட்டும் குறிப்பிடுகிறாரா, அல்லது தான் சார்ந்த சமூகப் பிரிவையும் குறிக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவை முன்னிறுத்தி ‘தான்’ என்று எழுதுகிற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். சாகும்வரை தனிநபராகிய தன்னை மட்டுமே முன்னிறுத்தி எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். சொந்த அடையாளங்களைக் கொண்டாடுவது அல்லது மறைப்பது/துறப்பது என்ற எதிரெதிர் நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாழ்வதற்கு விதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் கலை இலக்கியவாதி மட்டும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

இரண்டு விஷயங்களை இந்த இடத்தில் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். சமீபத்திய தீராநதி இதழில் நாகார்ஜூனனின் நேர்காணல் வெளியாகியிருந்தது. அதில் அவர் ‘என் அம்மா ஜெயகாந்தன் எழுத்தை விரும்பி படிப்பவர், என் தாத்தா வள்ளலாரை கரைத்துக் குடித்தவர், என் மாமா இன்னின்னாரோடு தொடர்புடையவர்’ என்பதாகவெல்லாம் குறிப்பிட்டிருந்தார். அவரது வாசிப்பு, சிந்தனை, எழுத்து முயற்சிகளுக்கு ஒரு பாரம்பரிய வேர் இருப்பதை நிறுவியிருந்தார். ஒருவகையில் கருவிலே திருவுடையோனாக காட்டிக்கொள்ளும் முயற்சியும் இயல்பாக வந்துவிடுகிறது. அதாவது நாகார்ஜூனன் தன் அம்மா, தாத்தா, மாமாவின் தோள் மீது ஏறி நின்று பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் இப்பேர்ப்பட்ட பரம்பரையாக்கும் என்கிற கித்தாப்பு அவரையறியாமலே வெளிப்படுகிறது.

அதே இதழில், ஜீவசுந்தரி எழுதி பரிசல் வெளியீடாக வந்திருக்கும் மூவலூர் ராமாமிர்தத்தின் வாழ்க்கை வரலாறு நூலுக்கான விமர்சனமும் வெளியாகியிருக்கிறது. தன் காலத்தின் கலகக்காரராக வாழ்ந்த அவரது வாழ்க்கை இன்றைக்கும் பெரும் படிப்பினைகளைத் தரும் விதத்தில் ஜீவசுந்தரி எழுதியிருக்கிறார். ஆனால், ‘தமது முன்னோர்கள் தேவதாசிகளாக இருந்தனர், தங்களது குலப்பெருமை கொண்டாடத்தக்கதாக இல்லை’ என்பதால், வெளியான புத்தகப்பிரதிகள் மொத்தத்தையும் ராமாமிர்தம் அம்மையாரின் தற்போதைய வம்சாவளியினர் வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இப்போ விற்பனைக்கு கிடைப்பது அவர்களால் திருத்தித் தரப்பட்ட பதிப்புதான். அவலமான தங்களது முன்னோரின் வாழ்க்கை இந்த சமூகத்தோடு பகிர்ந்து கொள்ளத்தக்கதல்ல என்கிற ஒரு அவமானவுணர்வு அவர்களை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

இதில் அவர்களின் தனிப்பட்ட அவமானம் எதுவுமில்லை. இந்த சமூகம் அவமானப்பட வேண்டிய விஷயம் அது. புத்தகத்தை மொத்தமாக விலைகொடுத்து வாங்கியதன் மூலம் இந்தத் தலைமுறை தன்னுடைய வேர்களை மறைத்துக் கொள்ள விரும்புகிறது. அதேசமயம் நாகார்ஜுனன் தன்னுடைய வேர்களின் பிரபல்யத்தை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அதை அகங்காரமாக அல்ல, வெகு இயல்பாக சொல்கிறார். அவர் பேசுவதிலிருந்து நாங்கள் கல்வி கற்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார். அவர் சொல்லாமல் விட்ட விஷயம், என் அம்மாவும், தாத்தாவும் கல்வி கற்ற அதேநேரத்தில் யாரெல்லாம் கல்வி கற்கவில்லை என்பதைத் தான். இவர்களுக்கு கல்வி கிடைக்கக் காரணமாயிருந்த அதே சாதிதான் மற்றவர்களுக்கு கல்வி கிடைக்காமல் போவதற்கும் காரணமாய் இருந்திருக்கிறது. மூவலூர் ராமாமிருதத்தின் வாழ்க்கை உள்ளது உள்ளபடியே புத்தகமாக வெளிவருவதை அவரது இன்றைய தலைமுறை அவமானமாக கருதுவதற்கும், அவர்களுடைய முன்னோர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் சாதிதான் காரணமாக இருந்திருக்கிறது.

நாகார்ஜுனன் உலக அரசியல் விஷயங்கள் குறித்துப் பேசினாலும் அவர் சாதியின் தோள்மீது நின்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் ‘தான்’ என்றும், தன் அனுபவம் என்றும் பேசியது தன்னுடைய சாதி கொடுத்த அறிவைத்தான். நாகார்ஜூனன் தான் எழுதியதற்கு நேர்மையாக இருக்கிறார் என்றால் இந்த இடத்தில் எது நேர்மை என்ற கேள்வி வருகிறது. அதேபோல் ராமாமிருதம் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு வெளிவருவதைக் கூட மறைக்க விரும்புவதால் அவரது சந்ததியினரின் செயல் நேர்மையற்றதாகி விடாது.

பொதுவாகவே தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் வலியும் வேதனையும் கழிவிரக்கமுமே நிரம்பியிருப்பதாக சொல்லப்படுவதுண்டு. இதிலிருந்து மாறுபட்டு மிகுந்த கோபத்தோடு தனித்து ஒலிக்கிற குரல் உங்களுடையது. மற்றவர்கள் வலியை மட்டுமே கூறும்போது, வலிப்பதற்கான காரணத்தைக் கூறுவது உங்களது எழுத்து. பிற தலித் எழுத்தாளர்களில் இருந்து நீங்கள் வேறுபட ஆரம்பித்தது எப்போது?

தலித் இலக்கியம் என்று ஒன்று தனியாக தோன்றுவதற்குக் காரணமே, ‘இதுவரை நீ எழுதிய எந்த இலக்கியத்திலும் என்னைப் பற்றி எதுவும் எழுதவில்லை’ என்பதுதானே. இதில் அனைவருமே கோபத்தோடு தான் எதிர்ப்புக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். ‘என்னுடைய சேரிக்கு நீ வந்தது கிடையாது, உன் தெருவுக்குள் என்னை நுழையவிட்டதில்லை. நான் உன் தொழுவத்தில், உன் பண்ணையில் வேலை செய்த நேரம் போக என்னுடைய வாழ்க்கை என்ன, என்னுடைய கஷ்டங்கள் என்ன, என்னுடைய கொண்டாட்டங்கள், நம்பிக்கைகள் என்னென்ன என்று எதுவும் உனக்குத் தெரியாது. அப்படியிருக்கும்போது என்னைப் பற்றி நீ எழுதுவதாகச் சொல்வது வெறும் பம்மாத்து. அதில் எந்த நேர்மையும் கிடையாது. உனக்குத் தெரிந்ததை நீ எழுதிக்கொள். என் வாழ்க்கையை நான் எழுதிக் கொள்கிறேன்’ என்ற மீறலில் தான் தலித் இலக்கியமே வருகிறது.

தலித் எழுத்துக்கள் எல்லாமே இப்படியிப்படித்தான் இருக்கும் என்று பொத்தாம்பொதுவாக வகைப்படுத்திவிட முடியாது. நிலவும் சமூக அமைப்பு எல்லா மட்டத்திலும் ஏற்றத்தாழ்வை கடைபிடிக்கிறது. சகமனிதனை ஒருபோதும் சமமாய் பார்க்க அனுமதிக்காத அதன் அடிப்படை சாதியத்திற்குள் புதைந்து கிடக்கிறது. சமத்துவமின்மையை நியாயப்படுத்துவதாக சாதியடுக்கு அமைந்திருக்கிறது. இதை அம்பேத்கர் பன்மப் படிநிலை அடுக்கு என்கிறார்.

இந்த அடுக்கு குலையாமல் நீடிக்க ஒடுக்குமுறை கையாளப்படுகிறது. ஒரு தளத்திலோ ஒரு முனையிலோ இல்லாமல் ஒடுக்குமுறைங்கறது அரசியல், பண்பாடு, பொருளாதாரம், கலை, இலக்கியம்னு வாழ்க்கையோட எல்லா மட்டத்திலும் நிலவுது. நுட்பமாகவும் வெளிப்படையாகவும் பல்வேறு வடிவங்களில் நிலவுகிற சாதியடுக்குமுறையைப் புரிந்துகொள்வது, அதிலிருந்து விடுபடுறதுக்கு எத்தனிப்பது, அதை கலைஇலக்கியப் படைப்பாக மாற்றி சமூகத்தின் மனசாட்சியோடு உரையாட வைப்பது- இதுதான் இப்ப தலித் படைப்பாளிகளோட முன்னுரிமைக் களம். இதுபற்றி ஒருவருக்கு என்ன புரிதல் இருக்கிறதோ அதைப் பொறுத்து அவரோட படைப்புகள் வரும். அதுவுமில்லாம, ஒருத்தர் என்னவாக இருக்கிறாரோ அதுவாகத்தானே வெளிப்பட முடியும்?

போன தலைமுறைவரைக்கும் இந்த வாழ்க்கையை சகித்துக் கொண்டுதானே வாழ்ந்தது? தங்களைத் துன்புறுத்தவும் அவமதிக்கவும் அவனுக்கு சலுகை இருக்கிறது என்றுதானே நினைத்திருந்தது? ஆனால் எல்லாக் கொடுமைகளையும் ஏத்துக்கிட்டதா அதுக்கு அர்த்தமில்ல. தனக்கு வலிப்பதை வெளியே சொல்வதற்கே இன்னொருத்தர்கிட்ட அனுமதி வாங்க வேண்டியிருந்த ஒரு சூழ்நிலையில் தன்னோட வலியை வெளியே சொல்வதே ஒரு மீறல்தானே? என்னை யார் அடித்தது, அதற்கு யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது, என்னை அடித்தால் நானும் திருப்பி அடிப்பேன் என்பதெல்லாம் அதற்கு அடுத்த குரல்தான்.

‘யார் என் முகத்தின் மீது சிறுநீர் கழித்தது, யார் நான் வாழ்வதற்கான நிலத்தைப் பறித்தது, யார் நான் இறந்த பின்னரும் என் சுடுகாட்டை மறித்தது, யார் என் வீட்டுப் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியது’ என எல்லாமே தெரிந்திருக்கும் தான். ஆனால் அதை எழுதுவதற்கு அக எழுச்சி மட்டும் போதாது, புறச்சூழ்நிலையும் சாதகமாக இருக்க வேண்டும். அதற்கு என் அகச்சூழலை புறச்சூழலோடு பொருத்திக் கொள்ள வேண்டும் அல்லது என் புறச்சூழலை அக எழுச்சியோடு இணைத்துக் கொள்ள வேண்டும். இடையறாத ஒரு processல் தான் இது நடைபெறும்.

உதாரணத்துக்கு திண்ணியம் கொடுமை. ‘எப்பேர்ப்பட்ட மாண்பும் நாகரீகமும் நிறைந்த சமூகமாயிருக்கிறது இது’ங்கிறதை வெட்டவெளிச்சமாய் அம்பலப்படுத்திய கொடுமை அது. இப்படிப்பட்ட கொடுமைகளை நிகழ்த்துறது மூலமா தன்னோட கீழ்மைகளை இந்த சமூகம் வெளிப்படுத்திக்கிட்டே இருக்கு. எனவே ‘எனக்கு இந்தக் கொடுமைகள் நடைபெறுகிறது’ என்பதை வெளியே சொல்வதும் புலம்புவதும் எனக்கு அவமானம் கிடையாது. அது இந்த சமூகத்திற்கான அவமானம்.

‘மலத்தைத் தின்கிற நாயும் பன்றியும்கூட ஒருநாளும் தன்னோட மலத்தைத் தின்னாது. ஆனால் திண்ணியத்தில் ஒரு தலித் வாயில் மலத்தை திணிச்சிட்டீங்களே’ என்று புலம்பி ஒருத்தர் கதையோ கவிதையோ எழுதினால் அது வெறும் புலம்பல் அல்ல. இந்த சமூகத்தின் மீது வாசிக்கப்படும் குற்றப்பத்திரிகை. இதனால் இந்த வகைமை எழுத்துக்களும் தேவைதான்.

அதேநேரத்தில் இப்ப திண்ணியம் வழக்கில் தீர்ப்பு வந்திருக்கு. ஆயிரத்தெட்டு வியாக்கியானங்கள் சொல்லப்பட்டாலும் தீர்ப்போட சாரம் சாதிவெறியர்களுக்கு சாதகமானதுதான். அப்ப, இனிமேல் யார் வேண்டுமானாலும் எவன் வாயிலும் எதை வேண்டுமானாலும் திணிக்கலாமா? அப்போதும் கோர்ட் இதேமாதிரி தீர்ப்பு வழங்குமா? ஒருத்தன் வாயில மலத்தைத் திணிச்சதை உங்களால சகஜமா எடுத்துக்க முடியும்னா, ஊறுகாய் மாதிரி கொஞ்சூண்டு மலத்தையும் உங்க சாப்பாட்டுத் தட்டுல வச்சிக்குவீங்களா? என்று கேட்கிற எழுத்தும் தேவை.

அப்படி எழுதுவதற்கு உங்களுக்கு இந்த சமூகத்தின்மீது எந்த பிரமைகளும் இருக்கக்கூடாது. ‘நான் தலைமுறை தலைமுறையாக அடிவாங்கிக் கொண்டிருக்கிறேன். இதற்கு பார்ப்பனீய ஆதிக்கமும், சாதீய அடுக்குமுறையும் தான் காரணம்’ என்பது போன்ற வரலாற்று, அரசியல் காரணங்களைப் பயிலும்போது பிரமைகளை உதிர்த்துவிட்டு வாழ்வின் மூர்க்கத்தை எதிர்கொள்கிற – அதை அப்படியே எழுத்தில் முன்வைக்கிற ஒருவராக எவரொருவரும் வெளிப்படக்கூடும்.

இடதுசாரி இயக்கத்தோடு எனக்குக் கிடைத்த தொடர்புகள், போராட்ட அனுபவம் ஆகியவற்றிலிருந்து உருவான விமர்சனப்பார்வையும் புரிதலும் எனது எழுத்துக்களை வேறொரு வகைமையாக மாற்றியிருக்கலாம். எப்படியாயினும் எனக்கு முன்பு சாதியடுக்குமுறைக்கு எதிராக இயங்கிய – எழுதிய எல்லோரது தோள்மீதும் ஏறி நிற்பதால். நான் ஒருவேளை உங்களுக்கு உயரமாகத் தெரியலாம்.

பார்ப்பன எதிர்ப்பை உங்கள் படைப்புகளில் உக்கிரமாக வெளிப்படுத்தி வருகிறீர்கள். நீங்கள் சார்ந்துள்ள இயக்கங்களில், சக எழுத்தாளர்கள் வட்டாரத்தில் நீங்கள் எப்படி பார்க்கப்படுகிறீர்கள்?

இங்கு உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் எல்லோருமே பார்ப்பனரல்லாதார்தான். (அதையும் வடிகட்டிப் பார்த்தால் தலித்கள்தான்.) தலைமுறை தலைமுறையாக இயற்கையோடு இயைந்தும் மல்லுக்கட்டியும் பெற்ற பாரம்பர்ய அறிவைக் கொண்டு நிகழ்த்தப்படுகிற அவர்களது உழைப்பினாலேதான் சமூகத்தின் தேவைகள் முழுவதும் நிறைவேற்றப்படுகிறது. உடலுக்கு வெளியே மூளையை வைத்தால் எவ்வளவு விகாரமா இருக்குமோ அந்தளவுக்கு விகாரமானதுதான் உடலுழைப்பையும் மூளையுழைப்பையும் பிரிக்கிறதும்கூட. பார்ப்பனர்கள் மொத்த சமூகத்தையும் இப்படி விகாரப்படுத்திவிட்டார்கள்.

உடலுழைப்பை அறிவிலிருந்து பிரித்ததோடு உடலுழைப்பு அனைத்தையும் தீட்டுக்குரியதாகவும் அறிவித்தார்கள். விவசாயம் செய்த பார்ப்பன அண்ணன் தம்பி இருவரும் கொடுத்த காணிக்கையை- சாஸ்திரவிரோதமாய் சம்பாதித்தப் பணம் என்று கூறி கும்பகோணம் சங்கர மடத்துக்காரர் (சிருங்கேரி மடத்தோட கிளை. கும்கோணத்தைத் தவிர அதற்கு தமிழ்நாட்டில் வேறெங்கும் கிளைகள் கிடையாது. காஞ்சி மடம் லிஸ்டிலியே கிடையாது) ஏற்க மறுத்த விவகாரத்தை காந்தியே அம்பலப்படுத்தி கண்டித்தது உங்களுக்குத் தெரியும்.

விளைகிற தானியம் தவசமெல்லாம் புனிதம், அதை விளைவிக்கிற விவசாயமும் விவசாயியும் தீட்டுன்னா அதை எப்படி ஏத்துக்க முடியும்? அப்பதான், புனிதம்னு நீ கொண்டாடுகிற உன் அறிவும் உன் தொழிலும் உன் வயிற்றை மட்டுமே வளர்க்கிறதுக்கு உதவுற குப்பை… எங்ககிட்ட இருக்கிற அறிவுதான் இந்த உலகத்தையே வாழவைக்கிறதுன்னு பிரகடனம் செய்ய வேண்டியிருக்கு. அவங்களோட மந்திரத்துல மாங்காய்கூட வராதுங்கிறது எல்லாருக்கும் தெரிந்த உண்மை.

பார்ப்பனர்களோட பிழைப்புக்கூடமாய் இருக்கிற கோயிலைக் கட்டினதும், அதுக்குள் இருக்கிற சாமி சிலைகளை செதுக்கினதும், பூசைக்கான தேங்காய் பழங்களை விளைவிக்கிறதும், அவர்கள் கையிலே பிடித்தாட்டுகிற மணியை செய்வதும்கூட பார்ப்பரல்லாதார்தான். இந்த சமூகத்தோட அடிப்படைச் செயல்பாடாய் இருக்கிற உழவும் தொழிலும் இவர்களால்தான் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. கரத்தாலும் கருத்தாலும் உழைப்பவர்கள் இவர்கள்தான். எனவே உழைக்கும் மக்களோட இயக்கம்கிறது இவங்களுக்கானது தான்.

நான் கல்வி கற்க ஆசைப்படும்போது, ‘நீ படிக்கப் போய்விட்டால் எனக்கு அடிமை வேலை செய்வது யார், என் பிணத்தை யார் தூக்குவது, என் துணியை யார் துவைப்பது, என் கழிவறையை யார் சுத்தம் செய்வது’ என்று அவர்கள் கேட்கிறார்கள். இதையெல்லாம் நான் ஏன் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டால் அவர்கள் சாதி என்கிற விஷயத்தை தான் மறுபடியும் பேசுகிறார்கள். இந்தக் கேள்வியின் ஆதாரமூலமாக பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களை எதிர்த்துப் பேச வேண்டிய சூழலையும் அவர்கள் தான் உருவாக்குகிறார்கள்.

என்னைப் பார்த்து ஒருவன் உனக்கு அறிவில்லை என்று சொன்னால் அதற்கு உடனடியாக நான் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நான் யோசித்துக்கொண்டிருக்க முடியாது. நான் ஒடுக்கப்படுகிறேன் என்று கருதும்போது என்னை ஒடுக்குபவனைப் பார்த்து நான் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. அந்தக் கேள்வி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிரான கேள்வியாக இருப்பதற்கு நான் எந்தவிதத்திலும் பொறுப்பாளியல்ல. நான் கேள்வி எழுப்புவதை சகித்துக்கொள்ள முடியாமலும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாததாலும் என்மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது என்ற வகையில் இடதுசாரி இயக்கம் என் பாடுகளுக்கு செவிமடுக்கும், எனக்காகப் போராடும், போராட வேண்டும் என்று கருதுகிறேன்.

தமிழ்நாட்டில், இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள்தான் ஒடுக்கப்பட்டவர்களைப் பார்த்து நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று முதலில் புரியவைத்தன. தலித் அமைப்புகள் என்று தனியாக உருவாவதற்கு முன்பிருந்தே இடதுசாரி இயக்கங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றி வருகின்றன. அடிப்படை பாட்டாளி வர்க்கமாக இருக்கிற தலித்துகளுக்காக போராடுவதைத் தவிர அவற்றுக்கு வேறு வழியுமில்லை.

நிலவும் அசமத்துவமான சமூக அமைப்பை மாற்றியமைக்கப் போராடுவதுதான் இடதுசாரி மனோபாவம் என்றால் மற்றெவரைக் காட்டிலும் இந்த சமூகத்தை உடனடியாய் மாற்றியமைக்க வேண்டிய தேவை தலித்துகளுக்குத்தான் இருக்கிறது. அதனால்தான் அம்பேத்கரை இந்தியாவின் மிகச்சிறந்த இடதுசாரித் தலைவராக நான் கருதுகிறேன். அவர் உருவாக்கித் தந்திருக்கும் சாதி ஒழிப்பிற்கான பாதையில் இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே மக்களைத் திரட்ட முடியும் என்று நம்புகிறேன்.

இப்படி இருக்கும்போது பார்ப்பனர்களுக்கு எதிராக நான் எழுதுவதை இயக்கம் எப்படி தவறாக எடுத்துக்கொள்ளும்? இதைத்தான் எழுத வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் யாரும் என்னிடம் கூறுவது கிடையாது. படைப்பு என்பது தனிநபர் செயல்பாடு. இடதுசாரித் தோழர் ஒருவர் ஓட்டல் வைத்திருந்தால், அவர் தினமும் ‘சாம்பார் நல்லா இருக்குதா’ என்று கட்சி அலுவலகத்தில் போய்க் கேட்டுவிட்டு தொழில் நடத்துவதில்லை. அதேபோல் நானும் என்னுடைய கவிதையை யாரிடமும் கொண்டு போய் கருத்துக் கேட்டுவிட்டு வெளியிடுவதில்லை.

இயக்கத்தைப் பற்றி தெரியாதவர்களும் அதற்குள்ளிருந்து இயங்காதவர்களும் அவர்களாகவே அனுமானத்தில் எதையாவது சொல்வது இங்கொன்றும் புதுசல்ல. கட்சி அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு எழுத்தாளனையும் ஒரு கமிஸார் கண்காணித்துக் கொண்டிருப்பதாய் குற்றம்சாட்டுவதெல்லாம் ரசமான கற்பனைதான். எழுத்து என்பது தனியொருவனின் அனுபவம், அவன் மீதான வன்முறைகள், அவனுக்குக் கிடைக்கிற சுதந்திரம் சார்ந்த விஷயம். இதில் எந்த இயக்கமும் தலையிடுவதில்லை. இந்த சுதந்திரமும், இயக்கம் மானசீகமாய்த் தருகிற தைரியமும்தான் என் எழுத்தின் காத்திரத்திற்குக் காரணமாக இருக்கிறது.

ஆரியத்துக்கு மாற்றாக திராவிட இயக்கங்கள் தமிழக வரலாற்றை உயர்வாக முன்வைக்கின்றன. ஆனால் தமிழ் மன்னர்களின் வாழ்க்கையை, தமிழ் வரலாற்றை உங்களது படைப்புகள் பகடி செய்கின்றன. ஆரிய வரலாற்றுக்கு மாற்றாக தமிழக வரலாறு முன்னிறுத்தப்படுவதை நீங்கள் ஆதரிக்கவில்லையா?

ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று ஆயிரம் சான்றுகளை நிறுவிய பிறகும், சங் பரிவாரத்தினர் ‘இல்லையில்லை, ஆரியர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். என்.எஸ்.ராஜாராம் போன்ற போலி ஆய்வாளர்களோட சப்பைக்கட்டும் இதற்கு உண்டு. அவர் மித் ஆஃப் ஆரியன் இன்வேஷன் என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இன்னும் இவரைப்போலவே பல டகால்டிகளும் உண்டு. எனவே ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று சொல்வதற்கு உங்களுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு தேவைப்படுகிறது. அதாவது உண்மையான வரலாற்றை தேடி அயறிவது என்பதுதான் அது.

ஐதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிற ஒரு ஆய்வமைப்பு, இந்திய உயர்சாதி ஆண்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் டி.என்.ஏ மூலக்கூறுகளில் ஒற்றுமை இருக்கிறதாக அறிவிச்சிருக்கு. ஆனால் இப்படியான ஒற்றுமை பெரும்பாலான உயர்சாதிப் பெண்களுக்கில்லை. புதுதில்லி அறிவியல் இயக்கத் தலைவர் பிரபிர் புர்கயஸ்தா இதுபற்றி மார்க்சிஸ்ட் கட்சியோட பத்திரிகையான பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆரியர்கள் குறைந்த அளவிலான பெண்களுடன்தான் இங்கு வந்தார்கள், அவர்கள் இந்தியப் பரப்பிலிருந்த பூர்வக்குடிப் பெண்களை பலவந்தமாய் சிறைபிடித்துக் கொண்டார்கள் என்றும் அதனாலேயே பிற்காலத்தில் ஆரியர்கள் தங்கள் வீட்டுப் பெண்கள் உட்பட எல்லாப் பெண்களையும் தீட்டுக்குரியவர்களாகவே அறிவித்தார்கள் என்றும் ஏற்கனவே வெளியான ஆய்வுகளுக்கு வலு சேர்ப்பதாய் இருக்கிறது இந்த டிஎன்ஏ ஆய்வு.

திராவிடர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றுதான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வந்த காலம்தான் வேறுபடுகிறது. இவர்கள் ஆரியர்களுக்கு முன்பே வந்தவர்கள். திராவிடர்களை தமிழர்களின் மூதாதைகளாகக் கொள்ள முடியமா என்கிற ரீதியில் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. அம்பேத்கரும் இந்த மண்ணின் பூர்வகுடிகளாக நாகர்களைத் தான் குறிப்பிடுகிறார்.

உலகம் முழுவதுமே சமூகக் காரணங்களால் மக்கள் இடம்பெயர்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆரியர்களும் அப்படித்தான் ஒரு நெடும்பயணத்தின் வழியாக இங்கு வருகிறார்கள். இங்கிருக்கிற பூர்வகுடிகளை அவர்களது தோற்றத்தைக் கொண்டு கருப்பர்கள், சப்பை மூக்கர்கள், ஆண்குறி வழிபாட்டாளர்கள்னு இழித்தொதுக்குகிற வேலை அப்போதே தொடங்கிருச்சு. பூர்வ குடிகளிடமிருந்து தங்களை தனித்துக் காட்டிக்கொள்ளவும் தங்களது இனத்தூய்மையைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஆர்யவர்த்தம் மாதிரியான தனித்த குடியிருப்புகளை உருவாக்குறாங்க. பூர்வகுடிகளோடு புழங்குவது தீட்டுக்குரியதா அறிவிக்கப்படுது. முதன்முதலில் இந்தியாவை ஒரு மூடுண்ட சமூகமாக மாற்றியவர்கள் ஆரியர்கள்தான் என்ற முத்துமோகனின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மை.

‘ஒதுக்குவதும் ஒதுங்குவதும்’ என்கிற பார்ப்பனியத்தின் ஆணிவேர் ஆரியத்திற்குள் பதுங்கி இருக்கிறது. ஆனாலும் இனக்கலப்பு தவிர்க்க முடியாததாகிறது. வருணம் வருகிறது. இப்போது வருணத்தூய்மை என்கிற ஒரு புதுவகை மூடாக்கு அறிமுகமாகிறது. வருணக்கலப்பையும் தடுக்க முடியாதபோது சாதி வருகிறது. சாதிக்கலப்பைத் தடுக்க தீண்டாமை வருகிறது. இப்படி தொடர்ந்து சமூகத்தை இணக்கம் காண முடியாத கூறுகளாக பிளக்கிற ஏற்பாடுகளுக்குப் பின்னே ஆரிய மனநிலைதான் இயங்குது.

இந்த வருணத்தையும் சாதியையும் தமிழ் மண்ணுக்கு கூட்டி வந்து கட்டிக் காப்பாற்றும் வேலையில் தமிழ் மன்னர்களும் ஈடுபட்டிருந்தார்கள் என்ற உண்மையை நாம் எப்படி நிராகரிக்க முடியும்? வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்ன மன்னர்கள் யாரையாவது தமிழ் மரபிலிருந்து நீங்கள் காட்ட முடியுமா? வருண அமைப்பை ஒப்புக்கொண்டவர்களை என்னுடைய மன்னன் என்று நான் ஏன் கொண்டாட வேண்டும்? வடக்கேயிருந்து பார்ப்பனர்களை அழைத்துவந்து வளமான பகுதிகளில் குடியமர்த்தி வைத்தவர்கள் தமிழ்மன்னர்கள்தானே? அந்த பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுத்தானே தலித்துகளை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தார்கள்? சாதியைத் தாங்கிப் பிடிக்கிற, பெண்களை இரண்டாம்பட்சமாக போகப்பொருளாக நடத்துகிற ஒரு மன்னனை அவன் தமிழன் என்பதாலேயே நான் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்?

தமிழன் என்ற பொது அடையாளத்தோடு ஒன்றுபடுவது, பேசுவதற்கு உவப்பானதாக இருக்கலாம். தமிழன் என்ற பொது அடையாளத்தை வைத்துக்கொண்டு சாலையில் ஒரு தலித் சுதந்திரமாக நடந்துவிடவோ, மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடவோ, மற்ற சாதிகளில் திருமணம் செய்து கொள்ளவோ முடியுமா? ஹரியானாவில் கொல்கிறார்கள். ஆந்திராவில் சுண்டூரில் கொல்கிறார்கள். பீகாரில் தலித்துகளைக் கொல்ல தனிப்படையே இருக்குது. கயர்லாஞ்சியில் நடந்த கொடுமை நாடறியும். இதிலிருந்து தமிழ்நாடு எந்தவிதத்தில் மாறுபட்டிருக்கு? தமிழன் எந்தளவிற்கு சாதி வித்தியாசம் பாராமல் தீண்டாமையை கைக்கொள்ளாமல் சமத்துவம் பாராட்டுகிறவனாய் இருக்கிறான்? இந்த நாட்டில் எங்கேயிருந்தாலும் எங்கள் உயிரும் உடைமையும் மசுருக்கு சமானமாகக்கூட மதிக்கப்படலேன்னா தமிழன் அல்லது இந்தியன் என்கிற வெட்டிப் பெருமையை நானெதெற்கு சுமந்து திரியவேண்டும்?

தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்கள்ல தீண்டாமை கடைபிடிக்கப்படுது. ஒரு அரசியல் விருப்புறுதியோட அரசாங்கம் செயல்பட்டா இதையெல்லாம் முடிவுக்கு கொண்டுவர முடியும். ஒரு தலித்தைக் கூட்டிப் போய் உன் வீட்டில் விருந்து வை அல்லது ஒரு தலித் வீட்டுக்குப் போய் நீ சாப்பிடுன்னு ஒரு அரசாங்கம் உத்தரவு போட வேண்டியதில்லை. ஆனால் பொது இடத்தில் நடமாடவும், சைக்கிளேறிப் போகவும், செருப்பு போட்டுக் கொள்ளவும், தோள்ல துண்டு போட்டுக் கொள்ளவும்கூட ஒரு தலித்தை அனுமதிக்கமாட்டேன்னு அட்டூழியம் பண்ணுகிற சாதி வெறியன்களை சுளுக்கெடுக்கிறது அரசாங்கத்தோட வேலைதானே? ஆனால், அரசு நிர்வாகத்துல இருக்கிற அதிகாரிகள், காவல்துறையினர், நீதிபதிகள் என்று இவங்களெல்லாம் சாதியைக்கூட தாண்டாதவங்களா இருக்கிறப்ப ஒரு தலித்தின் உயிர் எந்த நேரத்திலும் பறிபோகக் கூடியதாயிருக்கிறது.

நடப்பிலிருக்கிற வன்கொடுமைத் தடுப்புச்சட்டங்களை அமல்படுத்துகிற பொறுப்பு சாதிவெறியர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்த சட்டங்களைக் குற்றுயிராக்கி குடலறுத்து கிடத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திராவிலோ, பீகாரிலோ எங்கே பிறந்திருந்தாலும் தலித்தாக இருப்பதால்தான் கொடுமைக்கும் அவமானத்துக்கும் ஆளாகிறேன் எனும்போது, மொழியினால் எனக்கு என்ன நன்மை கிடைக்கிறது? குறிப்பிட்ட பூகோள எல்லைக்குள் பிறப்பதால் என்னை சுதந்திரமான மனிதனாக இந்த சமூகம் ஒப்புக்கொள்ளுமா? நான் குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவன், குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவன், குறிப்பிட்ட மொழியைப் பேசக்கூடியவன் என்பதால் எனக்கு எந்த சமூக அந்தஸ்தும் கிடைப்பதில்லையே.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மொழி, உணவு, உடை, மதம், நம்பிக்கைகள் என எல்லாமே வேறுபடுகிறது. எனக்கு கீழே இன்னொரு சாதி என்ற உணர்வு மட்டும்தான் எல்லோரையும் ஒன்றுபடுத்துகிறது. இந்த வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியா என்றால், இந்தியன் என்கிற தேசியக் கோட்பாட்டையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழன் என்கிற பொது அடையாளத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழன் என்கிற பொது அடையாளத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? தமிழன் என்கிற பொது அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி மற்ற அடையாளங்களைத் துறப்பதில் எனக்கு எந்த மனத்தடையும் கிடையாது. ஏனெனில் எனக்கு ‘தீண்டத்தகாத சாதி’ என்ற அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதைத் துறப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. ‘நீங்களும் அதே மாதிரி துறக்கத் தயாராக இருக்கிறீர்களா’ என்பதுதான் எனது கேள்வி. உங்களுக்கு ‘தமிழன்’ என்ற அடையாளத்தைத் தவிர தொடத்தக்க ஜாதி, ஆண் போன்ற மீதி அடையாளங்கள் தான் முக்கியமாக இருக்கின்றன. அதிகாரமிக்க உனது அடையாளங்களை நீ துறக்கத் தயாராக இருந்தால், தமிழன் என்கிற பொதுக்குடையின் கீழ் ஒன்றுபடுவதற்கு எனக்கு எந்த மனத்தடையும் இல்லை.

சாதி உணர்வோடு இருந்ததால் தமிழ் மன்னர்களின் வரலாற்றை நிராகரிப்பதாகக் கூறுகிறீர்கள். நால்வருணத்தை முன்னிறுத்துவது தான் கம்பராமாயணம். பெரியார் அதை எரித்தபோது, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா ஊர்தோறும் அதை எடுத்துச் சென்று அதற்கு ஆதரவாகப் பேசினார். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

60 வகையான ராமாயணம் இருக்கிறது. வால்மீகி ராமாயணம்தான் ஆதி. வால்மீகியும்கூட அப்பகுதி மக்களிடம் வாய்மொழியாக புழக்கத்திலிருந்த ஒரு கதையை தன் மொழியில் எழுதியிருக்கக்கூடும். பத்தாயிரம் பாடல்களைக் கொண்ட வால்மீகி ராமாயணம் பின் வந்தவர்களின் இடைச்செருகல்களால் உப்பி வீங்கி இன்று 24 ஆயிரம் பாடல்களைக் கொண்டதாக இருக்கிறது. கம்பரும் தன் பங்குக்கு கொஞ்சம் அரைத்து ஊற்றியிருக்கிறார்.

இவர்களெல்லாம் சேர்ந்துதான் வடக்கே அயோத்தியைச் சுற்றி நடந்ததாகக் கூறப்படும் ஒரு கதையை நகர்த்தியும் புஷ்பக விமானத்தில் ஏற்றியும் தென்னாட்டுக்குக் கூட்டிவந்தார்கள். போதாக்குறைக்கு கடலிலும் நீந்தவிட்டு கரையேறத் தோதாக பாலமும் கட்ட வைத்தார்கள். வேலைவெட்டி இல்லாத பண்டிதர்களும் புலவர்களும் கம்பராமாயணத்தின் எல்லாக் கதாபாத்திரங்களையும் தெருத்தெருவாய் இழுத்துவந்து பட்டிமன்றங்கள் நடத்தி நாறடித்து ராமாயணம் ஏதோ நம்மூர் கதை என்பதைப் போலவே மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

இன்னொரு பக்கம் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் சொல்வதைப்போல, ராமன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று வாதாடப் புகுந்தவர்கள் ராவணனை திராவிடன் என்றும் ஆரியத்தை எதிர்த்த உண்மையான மாவீரன் என்றும் கொண்டாடத் தொடங்கிய அபத்தமும் இங்கு நிகழ்ந்தது. ராமன் கற்பனை என்றால் ராவணனும் கற்பனைதான் என்கிற குறைந்தபட்சப் புரிதலையும் கைவிட்டிருந்தனர்.

இன்னும், கம்பராமாயண வரிகளைப் பிழிந்து, சோறு – குழம்பு – சொர்க்கம் – நரகம் – சோசலிசம் – சூயஸ் கால்வாய் எல்லாவற்றையும் கொண்டு வருகிறதொரு ஏற்பாட்டில், பூதக்கண்ணாடி வைத்தலையும் கூட்டமொன்றும் இருக்கிறது. ராமாயணம் முன்வைக்கிற சமூகவியல் கருத்துக்களை உள்வாங்காமல் கம்பனின் மொழி ஆளுமைக்காகவும், கற்பனைக்காகவும் ராமாயணத்துக்குள் புகுந்த ஜீவா கடைசியில் கம்பனை விட்டுவிட்டு ராமனைப் பற்றிக் கொண்டாரென்ற குற்றச்சாட்டு உண்டு. 13வது ஆழ்வார் என்ற கேலிக்கும்கூட ஆளாகினார். ராமாயணத்தை எரித்ததற்காக பெரியாரோடு ஜீவாவுக்கு எந்தளவுக்கு முரண்பாடு இருந்ததோ அந்தளவுக்கு இவ்விசயத்தில் ஜீவா மீது எனக்கிருக்கிறது.

எழுத்தாளர்கள் சாதிய மனோபாவத்தோடு இயங்குவதாக குட்டி ரேவதி சமீபத்தில் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். நீங்கள் இந்த கருத்தோடு எந்தளவிற்கு உடன்படுகிறீர்கள்?

நமக்கு சாதியைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. ஆனால் நாம் அதை மறைக்கப் பார்க்கிறோம். பெரிய பெரிய விசயங்களாகப் பேசி நமக்குள் இருக்கும் சின்னத்தனங்களை மறைத்துக்கொண்டு தப்பியோடும் எத்தனிப்பிலேயே முனைப்பு காட்டுகிறோம். குட்டிரேவதி அதை வெளிப்படையாக எழுதியிருந்தார். ‘தமிழன்’ என்கிற பொது அடையாளத்தோடு எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்லப்படுவதைப் போல், பெண் விடுதலை குறித்துப் பேசும்போது, அனைத்துப் பெண்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்து கூறப்படுகிறது.

எல்லாப் பெண்களும் ஒரே பிரச்சனைகளைத் தான் சந்திக்கிறார்களா, ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கு உள்ள பிரச்சனைகளும், தலித் பெண்ணுக்கு உள்ள பிரச்சனைகளும் ஒன்றா என்ற கேள்வி இந்த இடத்தில் வருகிறது. சில பொதுத்தன்மைகள் இருக்கலாம். மற்றபடி ஒப்பிட முடியாத வித்தியாசங்கள் நிறைய உண்டு.

கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், நகரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள் இருப்பதில்லை. கிராமத்தில் ஒரு பெண்ணை அவளது கணவன் அடிப்பானானால் அவளால் திருப்பி அடிக்க முடிகிற அளவுக்கு மனரீதியாக காத்திரமாகத்தான் இருக்கிறாள். அப்படி திருப்பியடிக்க முடியாவிட்டால் அவனை நிலைகுலைய வைக்கிற அளவுக்கு அவளால் கடுமையாக ஏச முடிகிறது. கிராமப்புற வாழ்க்கையில் ஆணின் உழைப்பையும் அவனது வருமானத்தையும் மட்டுமே சார்ந்திராமல் பெண் அடிப்படையிலேயே தன் சுயஉழைப்பில் வாழ்கிறவளாகவும் இருக்கிறாள். இன்னும் சொல்வதானால் அவளது உழைப்பை நம்பியே முழு குடும்பமும் வாழ்கிற நிலைமையும்கூட உண்டு. எனவே அவள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் உடையவளாயிருப்பதும் இயல்பானதுதான்.

படித்த நடுத்தர வர்க்கத்து ஆண் இன்று தன்னை வெகு நாகரீகமாக காட்டிக் கொள்வதற்கு அதிகம் மெனக்கெடுகிறான். ஒரு கண்ணியவான் போன்ற தோற்றத்தில் தனது கொடுக்குகளையும் கோரைப்பற்களையும் மறைத்துக்கொள்ள விரும்புகிறான். அதனால் அவனால் பெண்ணை அடிக்கவோ, நேரடியாக ஆதிக்கம் செலுத்தவோ முடியவில்லை. என்ன சார் படிச்சவங்களா இருக்கீங்க, இப்படி இன்டீசன்ட்டா நடந்துக்கிறீங்களேன்னு தன்னை யாரும் சொல்லிவிடக் கூடாதுங்கறதுல கவனமா இருக்கிறான்.

ஆனால் அதுக்காக ஆண் என்கிற அகங்காரத்தையோ பெண் தனக்குக் கீழ் என்கிற இளக்காரத்தையோ கைவிடவும் அவன் தயாராயில்லை. எனவே பெண்ணை அடிமைப்படுத்தவும், தான் அவளை விட மேல் என்று உணர்த்துவதற்கும் மொழியின் துணையோடு பல நுட்பமான வழிமுறைகளைக் கையாள்கிறான். அந்த நுட்பங்களை புரிந்துகொண்டு அதை மொழிரீதியாகவே பெண்கள் எதிர்கொள்கிறார்கள். ஊமைக்குத்து விட்டு உள்காயம் ஏற்படுத்துகிற ஒரு தாக்குதல் முறையை பெண்கள் மொழிக்குள்ளிருந்து கண்டெடுத்திருக்கிறார்கள். ஆண்களின் நுட்பமான பின்னல்களுக்குள் சென்று பெண்கள் பேசுகிறார்கள் என்றுதான் கருதுகிறேன். ஆனாலும் இவர்கள் எழுதும் பிரச்சனை உலகம் முழுக்க உள்ள பெண்களின் பிரச்சனை அல்ல என்று சொல்லத் தோன்றுகிறது.

யோனி என்கிற வார்த்தையை எழுதிவிட்டால் அது ஏதோ பெரிய புரட்சி என்று இங்கு மதிப்பிடப்படுகிறது. இது நகரம் சார்ந்த நடுத்தரவர்க்க மனோநிலை. அவளுடைய படிப்பும், நாசூக்கும் யோனி என்கிற வார்த்தையை தன் சகமனிதர்களுடனான உரையாடலில் பேசுவதற்கு அவளுக்கு பெரிய மனத்தடையை உருவாக்கியுள்ளது. அதனால் அந்த ஒரு வார்த்தை ஒரு பெரிய கலகக்குரலாக நமக்குத் தெரிகிறது. ஆனால் கிராமத்திலோ நகரத்திலோ ஒரு அடித்தட்டு பெண் ஒரு நாளைக்கு நூறுமுறை அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறாள். இதற்காக ‘நானும் கலகக்காரி’ என்று அவள் தோள் தட்டிக் கொள்வதில்லை. ‘இதையெல்லாம் சாராம்சப்படுத்தித்தான், பெண் விடுதலை, பாலின சமத்துவம் என்பவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று குட்டி ரேவதி சொல்வதாக நான் புரிந்து கொள்கிறேன். பெண் விடுதலை என்ற குடையின் கீழ் ஒரு பார்ப்பனப் பெண்ணை ஒரு தலித் பெண் உரசிக் கொண்டு நிற்க முடியமா என்ற அவரது கேள்வி இன்னும் யாராலும் எதிர்கொள்ளப்படாமல்தான் இருக்கிறது.

பெண்ணடிமைத்தனம், சாதி அடக்குமுறைகளைத் தக்க வைப்பதில் நமது சமூக, குடும்ப அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

நம் சமூக அமைப்பில் நாம் என்னவாக வளர்க்கப்படுகிறோம்? ‘இந்தியன் என்ற உணர்வோடு’ என்றால் அது மிகவும் செயற்கையானது. வேறு ஏதாவது நாட்டுக்குச் சென்றால் ஒருவேளை இந்தியன் என்ற உணர்வு நமக்கு வரலாம். அதுவும் தங்கியுள்ள அந்த நாட்டை சேர்ந்தவர் அல்ல என்பதால் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது தேவையை ஒட்டி உருவானது.

ஆனால் பிறப்பிலிருந்தே குறிப்பிட்ட சாதியின் நம்பிக்கைகளுக்கும், வளமைக்கும் ஏற்றவாறு தான் வளர்க்கப்படுகிறோம். இதிலும் பெண் கூடுதல் கவனத்தோடு வளர்க்கப்படுகிறாள். ஒவ்வொரு கணமும் சாதியாக வளர்க்கப்பட்டு சாதியாகத் தான் வாழ்கிறோம். முதலில் நான் இந்தியன் பிறகு தமிழன் என்பதெல்லாம் மிகமிக அயோக்கியத்தனமான வார்த்தைகள்.

நான் சைவம், நான் அசைவம் என்று உணவில் வேறுபடுவதில் தொடங்கி உடை, உணர்வுகள் அனைத்தையும் சாதிதான் தீர்மானிக்கிறது. நல்ல குடும்பம் என்கிற நம் வரையறையே அப்படித்தானே இருக்கிறது. ‘அப்பா, அம்மாவிற்கு பிடித்த பையனாக, அல்லது அவர்கள் சொல்கிறவனை திருமணம் செய்துகொண்டு குனிந்த தலை நிமிராத பெண்கள் இருந்தால் அது நல்ல குடும்பம். ஆச்சாரம் கெடாத குடும்பம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.’ அதாவது பல்கலைக்கழகம் எப்படி ஒரு மோசமான தயாரிப்பை வெளியே அனுப்புகிறதோ அப்படித்தான் குடும்பமும் அனுப்புகிறது.

சாதியை வலுவாக, மிக நுட்பமாக பாதுகாக்கக்கூடிய இடம்தான் குடும்பம். என் பையன் அமெரிக்கா போனாலும் இங்க வந்து நான் பார்க்கிற பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவான் என்று உறுதியாக சொல்ல முடிவது சாதியால் தானே? உண்பது, வாழ்வது, உணர்வது தொடங்கி நான் இன்று உண்டதை நாளை ஒருவன் அள்ளுவான் என்பது வரைக்கும் சாதிதானே தீர்மானிக்கிறது? ‘இறந்தபிறகு எரிப்பதா, புதைப்பதா? எந்த சாதிக்காரன் குழிவெட்டுவது?’ என்பதையும் அதே சாதிதான் தீர்மானிக்கிறது.

‘நான் ஒடுக்குகிற சாதியில் பிறந்திருக்கிறேன், நான் பெண்ணை ஒடுக்குகிற ஆணாக இருக்கிறேன். இதுகுறித்து நான் குற்றவுணர்ச்சி கொள்கிறேன்’ என்பது மாதிரியான எந்த எழுத்தும் இதுவரை வரவில்லை. சுஜாதா ‘சிவாஜி’ திரைப்படத்தில், ‘அங்கவை, சங்கவை இருவரும் கறுப்பு’ என்று எழுதுகிறார். அவர் பார்த்த பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள். எனவே கறுப்பாக இருப்பவர்களை அவரால் எளிதாக அவமானப்படுத்த முடிகிறது.

இதைச் சொல்கிற அதிகாரத்தை சுஜாதாவிற்கு அவரது ஜாதிதானே தந்தது? எங்கள் ஜாதிப்பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள் என்று அவர் சொன்னால் அதுவும் ஜாதித்திமிர் தானே? அவர் பார்வையில் பெண்கள் வெறும் தோல் சம்பந்தப்பட்டவர்கள் என்றுதானே அர்த்தம்? இந்த பார்ப்பனக் கிழடின் வக்கிரத்தை, துவேஷத்தை எதிர்த்துப் பேச எந்த வெள்ளைத்தோலிகளும்/தோழிகளும் முன்வராமல் இருப்பதற்கும் சாதிதானே காரணமாயிருக்கிறது? அவர்களுக்கும் சாதியைவிட்டால் வேறு எதுவும் தெரியாது.

திப்புசுல்தான் மலபார் கவர்னருக்கு எழுதிய கடிதம் ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். “உங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் மேலாடை அணியாமல் இருக்கிறார்கள் என்று படித்தேன். அதற்குக் காரணம் வறுமையா, வேறு ஏதாவதா? வறுமை எனில் அதைக் களைய வேண்டியது உங்கள் பொறுப்பு. மத நம்பிக்கை தான் காரணம் எனில் அந்த நம்பிக்கையின் வேர் பாதிக்காமல் பக்குவமாக எடுத்துச் சொல்லி ஆடை அணிய வைக்க வேண்டும்.”

மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது நாடார், பறையர் போன்ற தாழ்த்தப்பட்ட பெண்களுக்குத் தான். ஒருவேளை தங்கள் மதப்பெண்களைப் போல இவர்களும் குப்பாயம் அணிய வேண்டும் என்றுகூட திப்புசுல்தான் விரும்பியிருக்கலாம். அது எல்லாமே இரண்டாம்பட்சம். ஆனால் இங்குள்ளவர்கள் வேறு ஒருவன் சுட்டிக்காட்டியும் திருந்தாதவர்களாய்த் தானே இருந்திருக்கிறார்கள் என்பதே முக்கியம்.

நூறு வருடங்களுக்கு முன்பு நாடார் பெண்ணுக்கு மேலாடை அணியும் உரிமை தேவைப்பட்டது. இன்றைக்கு அவளுக்கு வேறு உரிமைகள் தேவைப்படுகின்றன. கேரளாவில் ஈ.கே.நாயனார் முதல்வராயிருந்தபோது, நிதியை கிராமங்களுக்கு ஒதுக்கி அந்தந்த கிராம மக்களே தங்கள் தேவைகளை முடிவுசெய்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. மாநில அளவிலான இந்த திட்டத்துக்கு வழிகாட்டியவர் தோழர் இ.எம்.எஸ். ஒரு கிராமத்தில் ஆண்கள் அனைவரும் கூடிப்பேசி தெருவிளக்குகள் அமைத்தார்கள். அன்றிரவே அந்தக் கிராமத்து பெண்கள் அந்த விளக்குகளை உடைத்தெறிந்தார்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரவில் வெளிச்சம் அதிகம் இருந்தால் பெண்களால் தங்களின் இயற்கைத் தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாதென்பதால்தான் தெருவிளக்குகளை உடைத்துவிட்டதாக தெரிவித்தார்கள். இதைத் தெரிந்து கொண்ட இ.எம்.எஸ். அந்தக் கிராம சபைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘உங்கள் கிராமத்தில் முதலில் கட்டப்பட வேண்டியது கழிப்பிடம்தான். சபையில் ஆண்கள் மட்டுமே எல்லா முடிவுகளையும் எடுப்பதால் நம்மால் பெண்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் ஆண்களின் சபையாக சமூகத்தை வைத்திருக்கிறோம். எனவே அடுத்தக் கூட்டத்தில் இருந்து பெண்களையும் கலந்து பேசுங்கள். அவளால் தான் அவளது தேவைகளைப் பேச முடியும்’ என்று எழுதினார்.

குடும்பத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் கணவன் தான் முடிவெடுக்கிறான். பெண்ணுக்குப் பங்கில்லாத அந்த முடிவை குடும்பத்தின் முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தப் பெண்களின் நிலையைப்போல் தான் தலித்துகளின் நிலையும். இந்தியச் சமூகத்தில் இதுவரை முடிவெடுக்கும் இடத்தில் தலித்துகள் இருந்ததில்லை. அதிகாரத்திலும் அவர்கள் இல்லை. அப்படியானால் ஆதிக்க சக்திகள் எடுக்கும் முடிவுகள் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதாகத் தானே இருக்கும்? நம் சமூகம் சாதியால் மட்டுமே பின்னப்பட்டிருக்கிறது என்பதைத் தான் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

தோள்சீலைப் போராட்டம் பற்றிப் பேசுவதால் இந்தக் கேள்வி. அந்த மாதிரி ஒடுக்கப்பட்ட ஒரு பெண்ணை சிறுமைப்படுத்தி சுந்தரராமசாமி எழுதிய ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்த சிறுகதைக்கு எதிராக நீங்கள் கடுமையான எதிர்வினை ஆற்றினீர்கள். ஆனால் இப்போதும் அந்த சிறுகதையை நியாயப்படுத்தும் வேலைகளை அவர்கள் செய்து வருகிறார்களே?

அவர்கள் மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பது ஒரு மூடநம்பிக்கைதான். அவர்களைத் தொடர்ந்து எதிர்ப்பதற்கு நமக்கு நேரமில்லாததாலும், வேறு வேலைகள் இருப்பதாலும் நாம் போய்விட்டோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்தக் கதையை நியாயப்படுத்தும் வேலையை செய்துகொண்டே இருக்கிறார்கள். கதையை ஆதரித்து வந்த கடிதங்கள், கட்டுரைகளைத் தொகுத்து சமீபத்தில் ஒரு புத்தகமாகப் போட்டிருக்கிறார்களாம். ஏ.பி.வள்ளிநாயகம் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்து கொடிக்கால் ஷேக் அப்துல்லா காலச்சுவடு பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், ‘பிள்ளை கெடுத்தாள் விளை மிகச்சரியான கதை’ என்று வள்ளிநாயகத்திற்கு ஒரு கருத்து இருந்ததாக ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார்.

செத்துப்போன ஒருவரின் படைப்பை செத்துப்போன ஒருத்தர் ஆதரித்ததாக உயிருடன் இருக்கிற ஒருவரை வைத்து எழுத வைத்துள்ளார்கள். ‘சுந்தரராமசாமி மிக நல்லவர், எந்த ஒரு காலத்திலும் சொற்குற்றமோ, பொருட்குற்றமோ செய்யாதவர்’ என்று நிறுவ வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கிறது. ‘சுந்தரராமசாமியின் எழுத்துக்கள் தேவ வார்த்தைகள். அதை குறை காணும் தகுதி மனிதப்பிறவிகளுக்கு கிடையாது. நம் புலன்களுக்கு அது எட்டாது. இது உடன் இருந்தவர்களுக்குத் தெரியும், அவரை உற்றுப் பார்த்தவர்களுக்குப் புரியும். ஆதவன் போன்றவர்களுக்கு அது தெரியாது’ என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அந்த முயற்சிகளின் மூலம் தான் அவர் தவறு செய்தார் என்பதை நாம் மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

படித்தவர்களிடம் சாதிய உணர்வு இருக்கிறதா, அதை அவர்கள் எப்படி வெளிப்படுத்துகிறார்கள்?

இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் ‘இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா’ என்றும், பெண்விடுதலை குறித்து பேச்சு வரும்போது, இப்பல்லாம் எந்தப் பொம்பிளை கஷ்டப்படறா ஆம்பிளைங்க தான் கஷ்டப்படறாங்க என்றும் சொல்லும் ஒரு மேம்போக்கான போக்கு தென்படுகிறது. வெகுஜனப் பத்திரிகைகள் இந்தக் கேவலத்தை தொடர்ந்து செய்துவருகின்றன.

‘நானெல்லாம் ரொம்ப சோஷியல் சார், சாதியெல்லாம் பார்க்கிறதில்லை’ என்று சொல்பவர்களுக்கும் சாதியைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் அவனால் எந்த இடத்திலும் சாதியை கைவிடமுடியவில்லை. பொது இடங்களில் அதை வெளிப்படையாக கொண்டாட முடியவில்லை அவ்வளவுதான். ‘நான் உயர்ந்தவன். நீ என் அருகில் உட்காரவோ, என் எதிரே நிற்கவோ கூடாது’ என்று பேச வைத்தது தான் தீண்டாமை. அந்தத் தீண்டாமையை வெளிப்படையாக கடைப்பிடிக்க முடியவில்லையே தவிர சாதியை எந்த இடத்திலும் யாரும் கைவிடவில்லை.

‘சாதி என்பது ஒருவன் திருமணம் செய்து கொள்வதற்கான எல்லை’ என்று முத்துமோகன் குறிப்பிடுவார். தன் அல்லது தன் குடும்பத்தாரின் திருமணத்தை இந்த சாதிய எல்லையைக் கடந்து செய்யாதவரைக்கும் அவன் சாதியைக் கடந்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. சொந்த சாதிக்குள்ளேயே மறுபடியும் மறுபடியும் திருமணம் செய்து கொள்வதால் சொந்த சாதியைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். அதில் ஒரு செங்கல் கூட விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

சாதியைக் கைவிடாமலேயே நாள் முழுவதும் வெளியே சமதர்மவாதியாக உலவுவதற்கான எல்லா வாய்ப்புகளும் நமக்கு இப்போது இருக்கிறது. பள்ளியில் எல்லா சாதி மாணவர்களும் அருகருகே அமர்ந்திருப்பதாலேயே சாதியை இழந்துவிட்டதாக சொல்ல முடியாது. ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பதாலோ, ஒரே மேசையில் சாப்பிடுவதாலோ ஒருவர் சாதியைக் கைவிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. தீண்டாமையை வெளிப்படையாக கடைப்பிடிக்கப்பட முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு தான் இதுவும் நடக்கிறது.

சொந்த சாதி ஆளாகவே வீட்டிலிருந்து கிளம்பி, சொந்த சாதி ஆளாகவே வேலைசெய்து, சொந்த சாதி ஆளாகவே கொண்டு சென்ற உணவை உண்டு, கையில் இருக்கும் பாட்டிலில் தண்ணீர் குடித்து சொந்த சாதி ஆளாகவே மாலையில் வீடு திரும்பி விடலாம். கண்டம் விட்டு கண்டம் சென்றவன் மட்டுமல்ல, கோள் விட்டு கோள் செல்பவனும் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து, அதே சாதியைச் சேர்ந்த, படித்த, அழகான, சிவந்த நிறமும், நீண்ட கூந்தலும் உடைய பெண்ணைத் தானே திருமணம் செய்து கொள்கிறான்?

தீண்டாமையைப் பழைய வடிவங்களில் பார்க்க முடியவில்லையே தவிர அதை முழுமையாக அவன் கைவிட்டுவிடவில்லை. ‘உயிரே போனாலும் நான் கடையில் சாப்பிடுவதில்லை’ என்பார்கள் சிலர். ‘கடையில் சாப்பிடுவேன் ஆனா நான்-வெஜ் சாப்பிடுறதில்லை’ என்பார்கள் சிலர். இதெல்லாம் என்ன? ஆட்டுகறி கேட்டால் மாட்டுக்கறியைக் கொடுத்து தன்னுடைய சாதிப் புனிதத்தை கெடுத்து விடுவார்கள் என்ற பயம்தானே? இப்படி மிக நுட்பமாக பல உத்திகளை வகுத்து தன்னுடைய சாதிப்புனிதத்தை காப்பாற்றும் பணி தொடரத்தான் செய்கிறது.

வெண்டைக்காயில் எத்தனை விதையிருக்கிறது என்றோ, எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால் என்றோ ஆய்வு செய்து ஆய்வாளர் பட்டம் பெறுகிற படிப்பாளிகளும் அறிவாளிகளும் இன்றும் அம்பேத்கர் குறித்து ஆய்வு செய்ய முன்வருவதில்லை. அவர் ஒரு பொருளாதார ஆய்வறிஞர். அவரது முதல் ஆய்வே பொருளாதாரம் பற்றியதுதான். பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்துவதற்காக சமஸ்கிருதத்தைப் பயின்று பல மூலநுல்களை வாசித்தவர். இந்தியாவிலிருக்கும் எல்லா மதங்களின் கோட்பாடுகளையும் நுணுகிக் கற்றவர். பௌத்தத்தில் கரை கண்டவர். பத்திரிகையாளர். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி.

அவரது கட்டுரைகளில் ஒரு பத்தியில் குறிப்பிடும் மேற்கோள்களையும் அடிக்குறிப்புகளையும் புரிந்துகொள்ள நீங்கள் இன்னும் பத்து நூல்களைப் படிக்க வேண்யிருக்கும். ஆனாலும் அவரது பன்முகப்படட ஆளுமையையும் மேதமையையும் அறிவுலகத்திற்கு வழங்கிய கொடைகளையும் தொட்டுப்பார்க்கவும் அருவருப்பு கொண்டுள்ளனர். அவரது ஆய்வுமுறைமைகளைத் தொடர்ந்து சென்று ஒரு புதிய சிந்தனைப்பள்ளியை வளர்த்தெடுக்காமல் போனதற்குக் காரணம் இந்திய படிப்பாளிகளும் ஆய்வாளர்களும் கடைபிடிக்கிற தீண்டாமை தானே? இதேகதி தான் புலேவுக்கும் அயோத்திதாசருக்கும் நேர்ந்திருக்கிறது. அவர்களை முன்வைத்து நடந்த ஆய்வுகளெல்லாம் தலித்கள் மேற்கொண்டதுதானேயன்றி தலித்தல்லாதவர்களால் அல்ல.

நீங்கள் தொடர்ந்து பெரியாரை முன்னிறுத்தி எழுதுகிறீர்கள். சாதி ஒழிப்பில் அவரின் பங்களிப்பு மிக முக்கியம் என்பது தான் காரணமா அல்லது அவர் கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கியமான ஆளுமை என்று நீங்கள் கருதுகிறீர்களா?

இட ஒதுக்கீடு, நாத்திகம் போன்றவற்றுக்காக பெரியாரைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள், அவரை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். பெரியார் கடவுளை மறுத்ததால் மட்டும் தான் ஆதிக்க சாதிக்காரர்கள் அவரை விமர்சிக்கிறார்களா என்றால் இல்லை. அவர்களிலும் கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள். ‘இந்திய சமூகம் சமத்துவமின்மையின் மீது கட்டப்பட்டிருக்கிறது’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். அதே அலைவரிசையில் தான் பெரியாரும் செயல்பட்டார். அதுதான் ஆதிக்க சாதியினரின் விமர்சனத்திற்குக் காரணம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள், இயக்கங்கள் எல்லாமே ஒடுக்கப்பட்டவர்களிடம் மட்டும்தான் பேசின. ஆனால் ஒடுக்குகிறவர்களிடமே தாக்குதல் நடத்தியவர் பெரியார் ஒருவர்தான். கஷ்டப்படுபவனை பார்த்து நீ கஷ்டப்படுகிறாய் என்பதும், அதை அவன் ஏற்றுக்கொள்வதும் மிக இயல்பானது. ஆனால் ஒடுக்குகிறவனைப் பார்த்து, ‘நீ அவனை ஒடுக்குகிறாய்’ என்று சொல்லும் தைரியம் பெரியாருக்கு மட்டும்தான் இருந்தது.

ஒடுக்குமுறைகளின் அடிப்படைகளைக் கண்டறிந்து அதை நீக்குவது தான் மார்க்சிய தத்துவம். இந்தியாவில் ஒடுக்குமுறையின் அடிப்படையாக சாதியம் இருக்கிறது. அந்த அடிப்படைகளின் மீது கைவைக்கிற நிகழ்வாக பெரியாரின் பேச்சும் செயல்பாடும் இருந்தது. சாதி ஒழிப்பு என்பதிலும், வருணாசிரம எதிர்ப்பு என்பதிலும் பெரியார் அம்பேத்கரோடு ஒன்றுபட்டார். இந்த விஷயங்கள் தான் அவர்களுக்குள் தொடர்பு ஏற்படக் காரணமாக இருந்தது.

பெரியாரை ஆதரிப்பதற்கும், அவரை முன்னோடியாக நிறுத்துவதற்கும் பல்வேறு காரணங்களை சொல்லலாம். அதில் சிலவற்றையாவது வாசிப்பின் வழியாகத் தெரிந்து கொண்டதால் அவரை முழுவதுமாக ஆதரித்துப் பேசுகிறேன். அதனால் அவரை நான் என் முன்னோடியாகவும் கருதுகிறேன். பெரியார் மீது சில இடங்களில் இடதுசாரிகளுக்கு விமர்சனம் உண்டு. அதற்காக அவர்கள் பெரியாரை எந்த இடத்திலும் நிராகரிக்கவேயில்லை.

வகுப்புவாதப் பிரச்சனைகள் தலைதூக்கும்போது நாம் போராட்டங்களை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கட்டம் வரைக்கும் பெரியார் நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியைத்தான் நாம் மேற்கொண்டாக வேண்டும். கேரளாவில் நாராயணகுருவை உள்வாங்கிக் கொண்டு இடதுசாரிகள் செயல்படுவதுபோல் தமிழ்நாட்டிலும் பெரியாரை உள்வாங்கிக் கொண்டு செயல்படலாம்.

பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றும், பெரியார் ஒரு பிள்ளையார் சிலையை உடைக்கப்போய் தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் வந்துவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்களே, உண்மையா?

பிள்ளையார் சிலையை பெரியார் உடைத்ததை அந்தக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, சிலையை பெரியார் உடைத்ததற்கான சமூகக் காரணத்தைத்தான் விளக்கவேண்டுமே தவிர பெரியாரை அல்ல. மூடநம்பிக்கை கரைபுரண்டோடி, மொத்த சமூகத்தையும் அடித்துப் புரட்டுகிறபோது, அதைத் தடுத்த நிறுத்த, கைக்கு கிடைத்ததையெல்லாம் பயன்படுத்துகிற பதற்றம் பெரியாருக்கிருந்தது.

மக்களிடம் மூடநம்பிக்கை எந்த மட்டத்தில் இருக்கிறதோ அந்த மட்டத்தில் போய் பெரியார் அதை மறுத்துக் காட்டினார். ‘கடவுளுக்கு எல்லாவற்றையும் காப்பாற்றும் சக்தி இருக்கிறதென்றால், நான் கடவுளை உடைக்கிறேன், முடிந்தால் அவர் அவரையாவது காப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று சொல்லும் விதமாகத் தான் பிள்ளையார் சிலையை உடைத்தார். ‘என்னை கடவுள் படைத்தார், அவர் தான் என் தலையெழுத்தை எழுதி என்னைக் காப்பாற்றுகிறார்’ என்ற மக்களின் நம்பிக்கையை உடைப்பதற்காகத் தான் அவர் அதைச் செய்தார்.

எந்த ஒரு தத்துவமும் மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் கடவுள் என்கிற தத்துவம் மட்டும் மக்களை பயமுறுத்தி மூடனாக மாற்றுகிறது. எனவே அதிலிருந்து மக்களை மீட்பதற்கு தன்னாலான வழிகளை அவர் செய்தார். அதை வறட்டு நாத்திகவாதம் என்று ஒதுக்கிவிட முடியாது. தெருவுக்குத்தெரு பிள்ளையார் வைத்தவர்கள் யார்? ஏற்கனவே பிள்ளையாரை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள்தானே? பெரியார் செயல்பாட்டில் கடுப்பாகிப் போய் எந்த நாத்திகனும் ஆத்திகனாகிவிடவில்லையே? பெரியாரே சொல்வதுபோல், வேறெவரும் இந்தக் காரியங்களை செய்வதற்கு முன்வராததால்தானே அவர் செய்ய வேண்டியதாயிருந்தது?

பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றே வைத்துக்கொள்வோம். அதை நிராகரித்துவிட்டு விஞ்ஞானப்பூர்வமான நாத்திகத்தை மக்களிடம் பரப்புவதை யார் தடுத்தார்கள்? ஒவ்வொரு அரசாங்க அலுவலகமும் இந்துமதத்தினருக்கு மட்டுமேயானது மாதிரி பூசை, புனஸ்காரங்கள் அங்கே நடக்கிறது. இந்துக்கடவுள்களின் விக்கிரகங்களும் சிலைகளும் இல்லாத அலுவலகமே கிடையாது. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நடக்கிறது. அங்கிருக்கிற தொழிற்சங்கங்கள் உணர்வுமட்டம் தாழ்ந்துபோய் இதிலெல்லாம் பங்கெடுப்பதாய் மாறிவரும் கொடுமை நடக்கிறது. மத உணர்வுகள் பாதிக்கப்படும்னு சொல்லி எந்த இடத்திலும் நாம் நாத்திகம் பேசுவதில்லை, பகுத்தறிவு பற்றியும் பேசுவதில்லை, விஞ்ஞானக் கண்ணோட்டத்தை வலியுறுத்துவதில்லை. இப்போது யோசித்துப் பாருங்கள், பெரியார் செய்தளவுக்கு நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்று?

சமூக நீதிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளை நீங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். நீதித்துறையின் இந்தப் போக்கிற்கு என்ன காரணம்?

நம்முடைய நீதித்துறை என்பது மக்களுக்கு நீதி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. ஆங்கிலேயர்கள் இங்கு வியாபாரம் செய்யும்போது அதை எதிர்ப்பவர்களை அடக்குவதற்காகத்தான் இந்திய நீதித்துறை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு நீதிமன்றங்கள் வேறுமாதிரியாக செயல்பட ஆரம்பித்தன. மக்கள் இந்த ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இழக்கும்போது நீதிமன்றம் திடீரென்று சுறுசுறுப்படைந்து மக்களுக்காக பேசுவதுபோல் செயல்படும். மக்கள் செயலற்றுப் போய் அரசு அவர்களை அடக்கும்போது நீதிமன்றம் அரசோடு தன்னை இணைத்துக் கொள்ளும்.

அரசு சார்பில் வேலைக்கு ஆட்களை எடுப்பதில்லை. கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை கொடுக்கப்படுவது இல்லை. அரசு வேலைக்கு சமூக பாதுகாப்பு இல்லை. ஆனால் அதற்கு ஆதரவாக நீதிமன்றம் செயல்படுகிறது. அரசு ஊழியர்கள் இறந்துபோனால் அவர்களது வாரிசுக்கு வேலை தரவேண்டியதில்லை என்று ஒரு வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. பலமுறை எச்சரித்தும் மனைவியின் நடத்தையில் மாற்றமில்லை என்பதற்காக அவளைக் கொன்றுவிட்ட கணவனை நிரபராதி என்று தீர்ப்பளிக்கிறது ஒரு நீதிமன்றம்.

நீதிமன்றங்கள் குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கவில்லை. தனிநபரைச் சார்ந்து தான் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. நீதி வழங்கும் இடத்தில் இருப்பவர் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராகவோ, ஆணாகவோ பெண்ணாகவோ, ஒரு மதத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கிறார். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் ஏதோ ஒரு பிரிவில் வருகிறார். உலக விஷயங்களில் அவருக்குத் தனித்த கருத்து இருக்கிறது. அந்த கருத்துக்களுக்கு ஆதரவாக சட்டப்புத்தகத்தில் இருப்பவற்றை சொல்வதற்குத்தான் அவர் முயற்சி செய்கிறார்.

நம்முடைய சமத்துவமற்ற சமூகத்தை கட்டிக்காப்பாற்றும் வேலையைத் தான் எல்லா அரசு அலுவலகங்களும் செய்து வருகின்றன. அதே வேலையைத்தான் சட்டப்புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு நீதிபதிகளும் செய்கிறார்கள். வளமான நிலங்களை ஆக்கிரமித்து பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுவது பற்றியோ, விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனைகள் பற்றியோ அவர்கள் வாயே திறப்பதில்லை. எய்ட்ஸ் சாவுகள் பற்றியும் ஹெல்மட் பற்றியும் குதிக்கிறவர்கள் தினமும் பட்டினியால் சாகிறவர்களைப் பற்றியோ சாதி வெறியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டு இறக்கிற தலித் பெண்களைப் பற்றியோ சுண்டுவிரலைக்கூட அசைப்பதில்லை.

நெய்வேலி லிக்னைட் நிறுவனம் ஆரம்பித்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னமும் நஷ்ட ஈடு கிடைக்கவில்லை. பத்திரிகைச் செய்தியைப் பார்த்து அதையே ஆதாரமாகக் கொண்டு பல வழக்குகளை தானே முன்வந்து நடத்துகிற நீதிமன்றங்கள் இம்மாதிரியான பிரச்னைகளில் வழக்கு தொடுத்தாலும் தீர்ப்புகளை வேறுமாதிரியாகத் தருகின்றன. உலகமயமாக்கல் நடவடிக்கை முழுவதையும் கொள்கைப் பிரச்னை என்று சொல்லி தலையிட மறுக்கிறது நீதித்துறை. ஆனால் இடஒதுக்கீடு, ஆதம் பாலம் மாதிரியான விவகாரங்கள் வந்துவிட்டால் தேவையில்லாமல் நீளநீளமாக பேசத் தொடங்குகிறது.

இதற்கெல்லாம் நீதிமன்றத்தின் ஒற்றைச்சாதி அமைப்பு முறை தான் காரணம். அந்த ஒற்றைச்சாதி அமைப்பும் அவர்களின் வளர்ப்பு முறையும் அதன் வழியாக அவர்கள் உலகைப் பார்ப்பதற்கு கிடைக்கும் கண்ணோட்டமும் தான் இதற்கெல்லாம் காரணம். இது நம் சமூகத்தின் சமத்துவமற்ற நிலையைப் பாதுகாக்கத் தான் பயன்படுகிறது. சட்டத்துக்கு எல்லோரும் கட்டுப்பட்டவர்கள் என்று சொல்கிறோம். அந்த சட்டம் நீதிபதிக்கு கட்டுப்பட்டது. நீதிபதி அவரது சாதிக்கும், வளர்ப்பு முறைக்கும் கட்டுப்பட்டவராயிருக்கிறார்.

சாதியொழிப்பு, உலகமயமாக்க எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைக்களுக்கான போராட்ட வடிவங்களில் காணப்படும் போதாமையை நீங்கள் உங்கள் படைப்புகளில் சுட்டிக்காட்டி வருகிறீர்கள். போராட்ட வடிவங்களில் என்ன மாறுதல்களை எதிர்பார்க்கிறீர்கள்?

மறியல், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற எல்லாப் போராட்டங்களுமே அடிமைப்பட்டிருந்த நாட்டில் சுதந்திரத்தை மீட்டெடுக்க கண்டறியப்பட்ட வழிகள். சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகளாகியும் அந்த போராட்ட வடிவங்களை நாம் இன்னமும் மாற்றிகொள்ளவில்லை. புதிய சூழலை உள்வாங்கிக் கொண்டு ஏட்டளவில் இருக்கக்கூடிய சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு புதிய போராட்டங்களை நடத்தவேண்டும். நம்மிடையே போர்க்குணம் இல்லாததால்தான் போராட்ட வடிவங்கள் மழுங்கியிருப்பதாகக் கூட கொள்ளலாம்.

சுதந்திரத்திற்கு முன்பு நான்குபேர் ஒரு இடத்தில் நோக்கமின்றி கூடுவதும்கூட தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தடையை எதிர்த்து பொதுமக்கள் ஒரு இடத்தில் கூடுவது புரட்சி என்று கருதப்பட்டது. இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் அனைத்திற்கும் காவல்துறை அனுமதி அளிக்கிறது. அவர்களின் அனுமதியோடு நடத்தப்படுவது எந்தவகை போராட்டம்?

அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சேவை செய்யும் அரசு அலுவலகத்தை மறியல் செய்தோம். இன்று நம் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு அலுவலகத்தை மறிக்கிறோம். மறியல் தொடங்கியவுடனேயே காவல்துறை மறியல் செய்பவர்களைக் கைது செய்து பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கிறது. மறியல் என்பது காவல்துறைக்கும் மறியல் நடத்துபவர்களுக்குமான பிரச்சனையாக மாறிவிடுகிறது.

அன்றைக்கு உண்ணாவிரதம் என்று தன்னைத்தானே வருத்திக்கொண்ட போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டபோது பிரிட்டிஷ்காரர்களே பயந்தார்கள். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. ஒரு லட்சம் விவசாயிகள் பட்டினியால் தற்கொலை செய்து கொண்டதாக ‘சாய்நாத் அறிக்கை’ சொல்கிறது. ஒரு லட்சம் விவசாயிகளின் மரணத்தைப் பார்த்தும் மனமிரங்காத அரசும், அதிகாரிகளுமா, ஒருவேளை பட்டினிப் போராட்டத்தைப் பார்த்து மனமிரங்கப் போகிறார்கள்? அந்தளவிற்கு நேர்மையானவர்களையும் இரக்கவான்களையுமா நாம் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறோம்? இன்றைக்கு இருக்கிற ஆட்சியாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிற போராட்ட வடிவங்களை நாம் கண்டெடுக்க வேண்டும்.

மேலும் நம் போராட்டங்கள் முழுவதும் ஆண்களை முன்னிறுத்தியே இருக்கின்றது. பெண்களைப் பற்றி யோசிக்காமலேயே எல்லா முடிவுகளையும் எடுத்து வருகிறோம். காந்தி ஏற்றுக்கொண்ட அரை நிர்வாண முடிவை ஏன் கஸ்தூரிபாயால் எடுக்க முடியவில்லை? காந்திக்குள் இருக்கிற ஆண்தான் அந்த முடிவை நோக்கி அவரை நகர்த்தியிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். இயக்கங்களில் இருக்கிற பெண்களை கலந்தாலோசிக்க வேண்டும்.

பொது வேலை நிறுத்தம் என்று சொல்கிறோம். ஆனால் இதில் விவசாயிகள் எப்படி இதில் கலந்து கொள்ள முடியும்? அந்தந்த வேலைகளுக்கு ஏற்ப போராட்ட வடிவங்களும் நம்மிடம் இல்லை. எல்லாவற்றையும் மாற்ற வேண்டிய நேரமிது. சில நூதன வடிவங்கள் உடனடி கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் அதன் செயல்பாட்டெல்லை குறுகியது. தேசிய பிரச்னைகளில் குறுக்கிடக்கூடிய வெகுமக்களை ஈர்த்துக்கொள்ளக்கூடிய வடிவங்களை கண்டடைய வேண்டும்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக ரகளை பண்ணுகிறவனும் சமத்துவம்கிறான். நேற்று கட்சி ஆரம்பித்த சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயர் வைத்திருக்கிறார். வரவேற்கனும். ஆனால் சமத்துவம் என்றால் யாருக்கும் யாருக்கும் சமத்துவம்? அந்த சமத்துவத்தைக் கொண்டு வர உங்களிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது? இல்லையென்றால் எதுக்கு இந்த வார்த்தை ஜாலம் என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

போராட்ட முடிவுகளைக் கூட ஆண்களே எடுப்பதாகப் பேசினீர்கள். சமூகம் சார்ந்த விஷயங்களில் பெண்களின் பங்கு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

அவர்கள் படிப்பு, வேலை என்று வெளியில் வரத் தொடங்கிவிட்டார்கள். சமூக நிகழ்வுகளில் அவர்கள் அதிகம் பங்கு பெறுவது இன்னும் நடைபெறவில்லை. 123 ஒப்பந்தம் மாதிரியான பிரச்சினை தொடர்பான கருத்தரங்குகளில் ஆண்கள் அதிகம் கலந்து கொள்கிறார்கள். அந்த ஆண் வீட்டுக்குப் போகும்போது இந்த ஒப்பந்தம் குறித்து என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே தெரியும் என்ற அகங்காரத்தில் செல்கிறான். அதனால் அவன் தன் மனைவியை இரண்டாம் பட்சமாகக் கருதுகிறான்.

ஆண்களின் தகவல் அறிவை நாம் அதிகரிப்பது அவனுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்து விடுகிறது. ஆண்களின் சபையாக சமூகத்தை மாற்றிக் கொண்டிருப்பதை அனுமதிக்கக் கூடாது. தலித்துகளுக்கு என்று கட்சி உருவாக்கப்பட்டு எங்களது ஓட்டுகளை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்ற நிலை வந்தபோது, மற்ற கட்சியினர் தலித் பிரச்சினைகளைப் பேச முன்வந்தார்கள். அதுபோல பெண்களுக்கென்று தனிக்கட்சி வரும்போது பிற கட்சிகளும் பெண்களின் பிரச்சனைகள் குறித்து பேச முன்வருவார்கள்.

ஒரு நாவலுக்கான விஷயத்தை ஒரு கவிதையாக எழுதுகிறீர்கள். மற்றவர்கள் கட்டுரையாக எழுதிக் கொண்டிருக்கும் உலகமயமாக்கல், சதாம் கொலை போன்ற சமகாலப் பிரச்சினைகளை, செய்திகளை நீங்கள் சிறுகதையாக எழுதுகிறீர்கள். ஒன்றை எழுத ஆரம்பிக்கும்போது, இது கதைக்கானது, இது கவிதைக்கானது என்பதை எப்படி தீர்மானிக்கிறீர்கள்?

இப்படித்தான் எழுதவேண்டும் என்று எதையும் திட்டமிட்டு எழுதுவதில்லை. நாம் பார்க்கிற, நமக்குள் தோன்றுகிற விஷயங்கள் ஒரு கட்டத்தில் எழுத்தாக வெளிவருகிறது. அது எந்த வடிவத்தில் வரவேண்டும் என்பதை அதுதான் தீர்மானிப்பதாக நான் நினைக்கிறேன். நான் எந்த மாதிரியான எழுத்தாளன், என்னுடைய பாடுபொருள் என்ன, கதைமாந்தர்கள் யார் என்று ஏற்கனவே ஒரு தீர்மானம் இருக்கிறது. அந்த நோக்கத்திற்கு இசைவாகத்தான் நமது மனம் இயங்கிக் கொண்டிருக்கும். முடிவற்ற அந்த இயக்கத்தின் ஒரு கட்டமாகத்தான் எழுதத் தொடங்குகிறோம்.

சமகால பிரச்சனைகளை கதைக்குள் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டீர்கள். சங்க இலக்கியத்தை வைத்துக்கொண்டு அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறைகள், இயற்கை, அரசு அமைப்பு, ஆண் பெண் உறவு என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். அவற்றைப் படிக்கும்போது, ‘இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 2007ம் வருடத்தை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவார்களே, இதை நாம் பதிவு செய்திருக்கிறோமா’ என்ற கேள்வி எனக்குள் வருகிறது.

வாழும் காலத்தை என்னவாக எதிர்கொண்டோம் என்ற கேள்வி மிக முக்கியமானது. சதாம் உசேன் கொல்லப்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதிலை நான் நம் சந்ததியினருக்கு சொல்லிச் செல்ல வேண்டியிருக்கிறது. சதாம் உசேன் கொலை குறித்து இங்கு என்ன பதிவு இருக்கிறது? அஞ்சலிக் கவிதை, ‘வருந்துகிறோம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போன்றவற்றை எழுதுவதில் எனக்கிருந்த அலுப்புதான் என்னை சதாம் உசேன் குறித்து சிறுகதை எழுதத் தூண்டியது.

அதேபோல் தான் உலகமயமாக்கலும். உலகமயமாக்கல் ஏதோ நேற்று தோன்றிய ஒரு விஷயமல்ல. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதே உலகமயமாக்கல்தானே. தமிழ்நாட்டில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்படுவது முந்தைய உலகமயமாக்கலின் அடையாளம் தானே. உலகம் தனக்குள் பரிவர்த்தனைகளை நிகழ்த்திக் கொண்டு ஒரு சமூகமாய் இணங்கி வாழ கடந்த காலத்தில் செய்த இப்படியான முயற்சிகளுக்கு மாறானது இப்போது நாம் பேசுகிற உலகமயம்.

நான் வாழும் காலத்தில் இந்த உலகமயமாக்கலின் ஒரு புதிய வடிவத்தைப் பார்க்கிறேன். இரண்டாவது பத்தாண்டு சீர்த்திருத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது சீர்திருத்தமா, சீரழிவா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அது சீர்திருத்தம் கிடையாது என்று எனக்குத் தெரிகிறது. மூன்றாம் உலகநாடுகளின் வளங்களை கொள்ளையடிக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்களையே உறிஞ்சுகுழல்களாகப் பயன்படுத்தும் இந்த ஏற்பாடு வெறும் அணா பைசா விசயம் அல்ல என்பது புரிகிறது. ஆனால் இந்தக் கொடுமையை தனிநபராக எதிர்க்கும் வல்லமை எனக்குக் கிடையாது. எனவே எனக்குத் தெரிந்த எழுத்தின் வழியாக என்னுடைய எதிர்ப்பை நான் பதிவு செய்யகிறேன்.

எழுத்தைத்தவிர இடதுசாரி இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், மேடைப்பேச்சு என்று பல தளங்களில் இயங்கி வருகிறீர்கள். சாதியத்துக்கு எதிரான உங்களது செயல்பாட்டுக்கு எழுத்து மட்டுமே போதாது என்று கருதுகிறீர்களா?

தனது துயரங்களைப் புரிந்துகொள்கிற ஒரு சமூகச்சூழலை உருவாக்குவதும் ஒடுக்கப்பட்டவர் சார்பாக எழுதுகிறவர்களின் வேலையாகிறது. எனவே எழுதிக் கிழித்ததோடு என் வேலை முடிந்துவிட்டது என்று நான் தூங்கப் போய்விட முடியாது. என் எழுத்துக்களோடு மக்கள் சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளோடு ஊடாட்டம் கொள்ள வேண்டியிருக்கிறது. எழுத்து எப்படி தனிநபர் செயல்பாடோ அதைப்போன்றது தான் பேச்சும். பேச்சு என்பது அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டியிருக்கிறது. எனவே சொற்பொழிவாக அல்லாமல் உரையாடலாகத் தான் அமைத்துக்கொள்கிறேன். சமூகத்தை மொன்னையாகப் பார்ப்பதிலிருந்து விலகுகிற, அதன்மீது கேள்விகளை எழுப்புகிற, பிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என்ற விமர்சனப்பார்வையை உருவாக்குவது தான் இந்த உரையாடலின் நோக்கம்.

ஆரம்பத்தில் கவியரங்க மேடைகளில் கவிதை வாசித்திருக்கிறீர்கள். கவியரங்கக் கவிதைகள் மிகவும் எளிமையானவை. தற்போதைய உங்களது கவிதைகள் சற்று சிக்கலான மொழிநடையில் அமைந்திருக்கின்றன. அடுத்தகட்டமாக இசைப்பாடல்களும் எழுதுகிறீர்கள். அவை மிக எளிய நடையில் இருக்கின்றன. மூன்றையும் எப்படி பார்க்கிறீர்கள்?

கவியரங்கத்தில் வாசிப்பது தான் கவிதை என்ற காலகட்டத்தில் நானும் கவியரங்கக் கவிதைகள் வாசித்திருக்கிறேன். பின்னர் அதில் நிறைய கேள்விகள் வந்தது. உலகின் மிகப்பெரிய தத்துவங்கள் கூட ஒருமுறை தான் சொல்லப்படுகின்றன. கவியரங்கக் கவிதைகள் அதையும் மீறியதா, எதற்காக இரண்டிரண்டு தடவை வாசிக்கவேண்டும் என்ற கேள்வி வந்தது. பார்வையாளர்களின் கைத்தட்டலுக்காக கவிதையை நிறுத்தி நிறுத்திப் படிப்பது, குரலில் ஏற்றஇறக்க மாற்றங்களைக் காண்பிப்பது போன்றவை சலிப்பைத் தந்தது.

ஒரு கவியரங்கக் கவிதையை பத்துநாட்களுக்குப் பின்னர் படித்தால் அதன் தேவையை அது இழந்திருக்கும். ஒரு பத்திரிகை செய்தி அளவுக்குத்தான் அதன் ஆயுளும் இருக்கும். எதிரில் அமர்ந்திருப்பவர்கள் வாசகர்களோ, இலக்கியவாதிகளோ அல்ல. கேட்பதற்காக வந்திருப்பார்கள். அவர்களுக்காகப் படிக்கும்போது அர்த்தமற்ற வார்த்தைகளின் தொகுப்பாகக்கூட கவிதைகள் அமைந்திருக்கும்.

பாடல் என்று வரும்போது அதைக் கேட்பவர்கள் இலக்கியவாதிகள் அல்ல, வெகுஜன மக்கள். அவர்களுக்கு என்னுடைய கருத்தை சொல்வதற்காக என்னுடைய மொழி நடையை தளர்த்திக் கொள்கிறேனே தவிர கருத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. பாடல் என்பது ஒரு கருத்தை சொல்வதற்கான திட்டமிட்ட வேலை. கவிதை என்பது அப்படியல்ல. வேறுவேறு அனுபவங்களை எழுத வரும்போது முன்னில் இருந்து இறுக்கமான செறிவான மொழி கிடைத்தது. தொடர்ந்த வாசிப்பும் எழுத்துப்பயிற்சியும் உள்ளவர்களுக்கு இது வாய்க்கக்கூடியதுதான்.

எழுத்தாளர்களில் சிலர் எழுதுவதையே பெரிய புரட்சி என்றும், ‘நான் உங்களுக்காக எழுதுகிறேன், உங்களுக்காக நான் என்னையே தியாகம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் என்னைப்பற்றி இந்த சமூகத்திற்கு எந்த அக்கறையும் இல்லை. குடிப்பதற்குக் கூட காசில்லை. வேறுநாட்டில் எழுத்தாளர்களை எப்படியெல்லாம் மதிக்கிறார்கள். தமிழ்நாட்டில் தான் இந்த நிலைமை’ என்றும் தொடர்ந்து புலம்பி வருகிறார்களே?

புலம்புபவர்கள் தங்கள் எழுத்தையே இலக்கியச் சேவையாக கருதினால் நான் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சமூகத்தில் எந்த ஒரு விஷயம் என்னை சுலபமாக கடந்து செல்ல அனுமதிக்கவில்லையோ அதைத்தான் அந்த இடத்தில் நின்று எதிர்கொண்டு ஒரு எழுத்தாளனாக நான் எழுதுகிறேன்.

தெருவில் ஒரு சண்டை நடக்கிறது. அந்தப் பக்கமாக செல்லும் ஒருவர் அதை விலக்கி விட்டு விட்டு செல்கிறார். அதை அவர் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதில்லை. அதே வேலையை ஒரு எழுத்தாளன் செய்தால் அதை அவன் எழுத வேறு செய்கிறான். அதற்காக எழுத்தாளனை கொண்டாட வேண்டும் என்றும் அவன் நினைத்தால் அது அவனுடைய தவறு தான். தங்களுக்கு ஏற்படும் மனக்கிளர்ச்சியை, அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காகத் தான் எல்லோரும் எழுதுகிறார்கள். அப்படி எழுதுவதை எழுத்தாளன் தியாகம் என்று நினைத்தால், அதைப் படிக்கிற நானும் தியாகி தான் என்று வாசகர்களும் சொல்லலாமே. எழுதுவது என்பது தியாகம் சம்பந்தப்பட்ட விஷயமே கிடையாது.

சமூகத்தோடு தொடர்ந்து இணைவதும், முரண்படுவதுமாகத் தான் நாம் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதை நாம் எழுத்து வழியாகத் தெரிவிக்கிறோம். மற்றவர்கள் ஏதோ ஒரு மீடியம் வழியாகத் தெரிவிக்கிறார்கள். தன்னைப் பற்றிய பெருமையிலோ, கழிவிரக்கத்திலோ தம்பட்டம் அடிக்கும் செயல்தான் இது.

ஒரு புத்தகத்தையோ, நாடகத்தையோ படிக்கும் அல்லது பார்க்கும் வாசகனோ, நேயரோ அதனால் பாதிப்பு அடைந்தால் அவனது மனதில் சிறு கீறலோ, அசைவோ ஏற்பட்டால் அவன் வேண்டுமானால் எழுதியவனைப் பாராட்டலாம். அதை விடுத்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதற்காக, ஷீல்டு வாங்கி ஜோல்னாப் பையில் வைத்துக்கொண்டு அலைவது தேவையற்ற விஷயம். சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டுத்தான் உலகம் விடிகிறது என்று சொல்வதோ, தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அபத்தமான காரியம்.

வேதம் படிப்பதற்கு குறிப்பிட்ட சாதியில் பிறக்கவேண்டும் என்பதைப் போலவே இலக்கியம் படைப்பதற்கு தனி ஆளுமை வேண்டும், அறிவு வேண்டும், தேஜஸ் வேண்டும், இன்னும் என்னென்னமோ வேண்டும் என்று கூறுகிறார்கள். இதன்மூலம் எழுத்தாளர்களைப் புனிதப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதனால் எழுத்தாளனை இந்த சமூகம் கொண்டாடுவதற்குப் பதிலாக தன் எழுத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டு எழுத்தாளன் தன்னைத் தானே கொண்டாடிக் கொண்டிருக்கிறான்.

கலைஞனைக் கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று சொன்னால் உழவனையோ, தொழிலாளியையோ கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டு விடுமா? நீ எழுதும் கவிதைகளைத் தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கும் எந்த அவசியமும் இந்த சமூகத்துக்குக் கிடையாது. இந்த சமூகத்தைப் பதிவு செய்கிறவனாக, உன் கருத்தைத் தெரிவிப்பவனாக இருக்கும் பட்சத்தில் உனக்கான அளவில் இந்த சமூகம் உன்னை கொண்டாடத் தான் செய்கிறது. உனக்கு குடிப்பதற்குக் காசில்லை என்பதெல்லாம் இந்த சமூகத்தின் பிரச்சனையும் கிடையாது.

இவர்களைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

எழுத்தாளர்கள் அரசியலுக்கு வரும்போது, இலக்கியவாதியாக யாரையெல்லாம் விமர்சித்தார்களோ, அவர்களையெல்லாம் அரசியல்வாதியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களே?

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதுபற்றி எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் பார்வையற்றவர்களின் விழியாக, குரலற்றவனின் குரலாக என்னுடைய எழுத்து ஒலிக்கும் என்று இலக்கியவாதியாக இருக்கும்போது இவர்கள் தங்கள் படைப்புக்கு பல பீடிகைகளை வைத்திருந்தார்கள். அதற்கு இசைவான அரசியலை தேர்ந்தெடுக்கிறார்களா என்பதுதான் எனது கேள்வி. பதவி, அதிகாரம் என்ற இரண்டு வழிகளில் பொருளாதார ஆதாயத்தை தேடிக் கொள்கிறார்கள். இதைத்தான் எல்லா அரசியல்வாதிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை அடைவதற்கு கூடுதல் தகுதியாக எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளையும் கட்டுரைகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இலக்கியவாதியாக இருப்பது என்பது ஒரு எதிர்க்குரல் தான். ஆனால் அதன் மூலம் வாசகனுக்கு அறிவுரைகள் கூறிவிட்டு எழுத்தாளன் மட்டும் மறுபடியும் ஆதாயத்தையும், பணத்தையும், சொகுசு வாழ்க்கையையும் தேடிப் போகிறார்கள். இதே எழுத்தாளர்கள் இடதுசாரி அமைப்பிலுள்ள எழுத்தாளர்களை கேவலமாகப் பேசிய காலங்கள் உண்டு. அவர்களால் இடதுசாரி இயக்கங்களில் செயல்படுவது தான் சிரமமான வேலையாக இருக்குமே தவிர கழிசடை அரசியல் செய்வதில் வெட்கம் எதுவுமில்லை. இதை யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதால் தான் நவீன இலக்கியம் குறித்தும் அடிக்கடி கருத்து தெரிவிக்கிறார்கள்.

சிற்றிதழ்கள் விசிட்டிங் கார்டு போல் பயன்படுத்தப்படுவதாக சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் கூறியிருந்தார். இந்த விமர்சனத்தை சிற்றிதழ் ஆசிரியரான நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

இலக்கிய பீடம் என்று ஒருவரை முடிவு செய்வது, அவர்கள் சொல்வதுதான் சிற்றிதழ், அவர்கள் சொல்பவர்கள் தான் படைப்பாளி என்று முடிவு செய்வது இதெல்லாமே அபத்தமான விஷயங்கள். இந்தியாடுடேயின் சிற்றிதழ் குறித்த பேட்டியில் மனுஷ்யபுத்திரன், சிற்றிதழ்களை விசிட்டிங் கார்டு போல் பயன்படுத்துவதாக குறிப்பிட்டிருந்ததை நானும் படித்தேன். சிற்றிதழை விசிட்டிங் கார்டு போல் பயன்படுத்தும் வேலையை அவர்தான் சரியாகச் செய்தார்.

நக்சல்பாரி பத்திரிகைகளின் மூலமாக மனுஷ்யபுத்திரன் அறிமுகமானார். காலச்சுவடு தீவிரமான சிற்றிதழாக இயங்கிக் கொண்டிருந்தபோது அங்கு சென்றார். அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு செந்திலோடு உயிர்மைக்குப் போனார். அந்த சிற்றிதழைத் தவிர அவருக்கு வேறு என்ன அடையாளம் இருக்கிறது? உயிர்மை என்கிற விசிட்டிங் கார்டை சரியான நபர்களிடம் காட்டி அதன்மூலம் ஆதாயம் பெற்று அதை தக்கவைத்துக் கொண்டது ஒரு தனிவகை சாமர்த்தியம்தான்.

வரக்கூடிய பத்திரிகைகள் தரமாக இல்லை என்று வருத்தப்பட்டால் அது வேறு விஷயம். அதை எப்படி சரியாக வெளியிட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லித்தரலாம். முன்னோடி என்பவர் செய்யவேண்டிய வேலை அதுதானே. அதைவிட்டு விட்டு எல்லோரும் பத்திரிகை ஆரம்பித்து விட்டார்கள் என்று சொல்லி வருத்தப்படுவது, ‘எல்லோரும் படிக்க வந்துட்டாங்க, வேலைக்கு வந்துட்டாங்க’ என்று பதறக்கூடிய ஆதிக்கசாதி மனநிலைதானே. அந்த மனோபாவம் மனுஷ்யபுத்திரனுக்கு எதற்கு?

தங்களின் படைப்புகளை தாங்களே பாராட்டிக் கொள்வது, அதை ஆதரித்துப் பேசுவதற்காகவே ஒரு குழுவை ஏற்படுத்திக் கொள்வது, தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வது – இவையெல்லாம் தமிழ்ச்சூழலில் அதிகரித்து வருகிறதே?

படைப்பு மனோபாவம், சொல்லாட்சி என்று விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கவிதை எழுதிவிட்டு அதை யாரும் பாராட்டாத பட்சத்தில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதற்காக கூடுகின்ற கூட்டம்தான் இது. ஒரு இலக்கிய முகாம் நடந்து முடிந்தவுடன் அங்கு நடந்த அடிதடியைப் பற்றி கிசுகிசு வருவது தவறாமல் நடக்கிறது. இந்த விவாதங்களுக்கு மையப்புள்ளியே தங்களைத் தாண்டி வெளியே ஒரு உலகம் இருக்கிறது என்பதை அறியாமல் இருப்பதுதான்.

ஆனால் இடதுசாரி படைப்பாளிகளுக்கோ, பெண்ணிய படைப்பாளிகளுக்கோ, தலித் படைப்பாளிகளுக்கோ எழுதியதைப் பற்றியே பேசுவது, அதையே சிலாகிப்பது மட்டுமே வேலை அல்ல. எந்த சமத்துவத்தை கனவு காண்கிறார்களோ அதற்கான மக்கள் இயக்கங்களில் பங்கெடுப்பது, அந்தப் பாதையில் செல்வது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். களத்திற்கு போக வேண்டியிருப்பவர்களால் தன் கவிதையை உட்கார்ந்து சிலாகித்துக் கொண்டிருக்க முடியாது.

எழுதுவதைத் தவிர எனக்கு வேறு வேலையில்லை என்பதும் எழுத்தின் மூலமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதும் முட்டாள்தனம். அதையாவது பொறுத்துக் கொள்ளலாம். தான் எழுதுவதைத் தவிர வேறு வேலை செய்யாமல் இருப்பதற்காக போலியான தத்துவங்களை அவர்கள் உருவாக்க முயல்வதைத் தான் சகிக்க முடியவில்லை.

படைப்புகளைப் பற்றி தொடர்ந்து நடைபெறும் விவாதங்களில் வாசகனுக்கு இடம் உண்டா? ஒரு புத்தகம் 1200 பிரதிகள் அச்சிடப்பட்டால் அதைப் பற்றி 1200 பேர் பேசலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் ஏழு கோடி மக்களை கொண்டது. இந்த இலக்கியம் குறித்து தெரியாமலே பெரும்பகுதி சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களோடு எப்படிப் பொருந்துவது என்று தான் யோசிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு நான் மேதாவி, அறிவுஜீவி என்று தனியாக உட்கார்ந்து விட்டால் எந்த மாற்றமும் நடக்காது.

தலித் இலக்கியத்தை தலித்கள் தான் எழுத வேண்டும் என்ற கருத்தும், அதற்கு எதிராக ‘அவர்கள் மேல் அக்கறை கொண்ட யார் வேண்டுமானாலும் எழுதலாம்’ என்ற கருத்தும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதில் உங்களது நிலைப்பாடு என்ன?

தீண்டாமையின் கொடுமையை அனுபவிக்காதவர்களால் தீண்டாமை குறித்து எழுத முடியாது. ஒரு பெண்ணின் துயரங்களை எப்படி ஆணால் உணர முடியாதோ, அதேபோல் ஒரு தீண்டத்தகாதவனின் பிரச்சனைகளை தீண்டத்தக்க சாதியை சேர்ந்தவனால் ஒருபோதும் உணர முடியாது. சமீபத்தில் ஒரு பத்திரிகையில் கோபிச்செட்டிபாளையத்தின் முன்னாள் நகராட்சித் தலைவர் லட்சுமண ஐயரின் பேட்டி வெளியானது. இந்தியாவில் கையால் மலம் அள்ளும் முறையை முதன்முதலில் கோபி நகராட்சியில் ஒழித்தவர் இவர்தான்.

அந்த முறையை ஒழித்ததற்கான காரணம் குறித்து கேட்டபோது, சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றபோது அங்கே நாங்கள் கையால் மலம் அள்ள வேண்டியிருந்தது. அந்த ஒன்று போதாதா இதை ஒழிப்பதற்கு என்று குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் உன்னை அள்ள வைத்தால் தான், இந்த வேலை எவ்வளவு துயரமானது, அவமானகரமானது என்று புரிகிறது. அந்த அவமானங்களை சந்திக்காத ஒருவனால் அது குறித்து எப்படி எழுத முடியும். மற்றவர்கள் எழுதுவதை சாதி ஒழிப்பு எழுத்து, தலித் ஆதரவு எழுத்து என்றுதான் பார்க்க முடியும்.

வேடிக்கை பார்த்து எழுதுவது என்பது வேறு. அனுபவித்து எழுதுவது என்பது வேறு. அதாவது பாவனைக்கும் உண்மைக்குமான இடைவெளி அதில் இருக்கும்.

(ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் அடுத்தடுத்த விவாதத்திற்கு இட்டுச் செல்வதாய் இருந்ததால், நேர்காணலை எங்கே முடிப்பது என்ற கேள்விக்கான பதில் சற்று எட்டியே இருந்தது. மேலும் சில கேள்விகளுடன் வேறொரு பொழுதில் நேர்காணலைத் தொடரலாம் என்ற எண்ணத்துடன் இத்துடன் நிறுத்திக் கொண்டோம்)

சினிமாவை மக்களுக்கான ஊடகமா மாத்தணும்: சீமான்


நேர்காணல்: மினர்வா & நந்தன்

நீங்கள் பிறந்த ஊர், உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி?

நான் பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் பக்கத்தில் உள்ள அரணையூர் கிராமம். விவசாயம் தான் தொழில். ரொம்பவும் வறண்ட, வறுமையான பகுதி அது. வசதியானவங்கன்னு யாரும் அதிகமாக கிடையாது. படிச்சவங்க ரொம்ப கம்மி. எங்க பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம். அவர்கள் தான் எங்க ஊரில் பள்ளிக்கூடங்கள் கட்டினாங்க. ஐந்தாம் வகுப்பு வரை எங்க ஊரிலேயே படித்தேன். மேல்நிலைப்பள்ளி பக்கத்துலே உள்ள புதூரில் படிச்சேன். நான் பள்ளிப்படிப்பு முடித்த நேரத்தில் இளையான்குடியில் ஜாஹீர் உசேன் கல்லூரி வந்தது. அதனால் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே விளையாட்டில் அதிக ஆர்வமாக இருப்பேன். ஊரில் நடக்கிற தெருக்கூத்து, நாடகம் எல்லாத்தையும் உள்வாங்கிட்டு அதே மாதிரி பாடிக் காட்டுவேன். வீட்டில சொந்தக்காரங்க வந்தா என்னைப் பாடிக்காட்ட சொல்வாங்க. உற்சாகப்படுத்துவாங்க.

பள்ளிக்கூடத்தில நடக்கிற பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டிகள்ல கலந்துக்குவேன். நானா பாட்டெழுதி, நானே மெட்டமைச்சு பாடுவேன். இதையெல்லாம் நண்பர்கள் ரொம்ப ஆர்வமா கேட்பாங்க.

நான் கல்லூரியில் படிக்கும்போது சினிமாவில் பாக்கியராஜ், டி,ராஜேந்தர் பிரபலமா இருந்த நேரம். என்னோட கலை ஆர்வத்தைப் பார்த்துட்டு நண்பர்களும், பேராசிரியர்களும், நீ சினிமாவுக்குப் போனா நல்லா வருவேன்னு சொல்வாங்க. அப்படித்தான் சென்னை வந்தேன்.

சென்னையில் உங்களோட ஆரம்ப காலகட்ட வாழ்க்கை எப்படி இருந்தது?

சென்னை வரும்போது எனக்கு வயசு 19. ஊரில் இருக்கிற வரைக்கும் பரமக்குடி, இளையான்குடி தாண்டி எதுவும் தெரியாது. கல்லூரி படிக்கும்போதுதான் மதுரை, ராமேஸ்வரத்துக்கு நண்பர்களோட போனேன், அதுவும் சினிமாப் பார்ப்பதற்குத்தான். அதனால் சென்னை வந்தபோது அந்த பிரம்மாண்டம் எனக்கு ரொம்ப பிரமிப்பாயிருந்தது.

எங்க ஏரியாவுலே இருந்து யாராவது வந்து சினிமாவுலே சாதிச்சிருந்தா அவங்ககிட்டே உதவியாளரா சேர்ந்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அதனால நானே போராட வேண்டிய கட்டாயம்.

அப்போ ‘என்றும் அன்புடன்’ பட இயக்குனர் பாக்கியநாதன் அறிமுகம் கிடைச்சது. இரண்டு பேரும் அறைத் தோழர்களானோம். அவரோட உதவியாலே சென்னையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடிஞ்சது. இப்படி நண்பர்கள் உதவியாலத் தான் எட்டு, பத்து வருஷம் சென்னையில் இருந்தேன். அதன்பிறகு இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். ‘ராசாமகன்’ என்கிற என்னோட கதையை படமா எடுத்தார். அது பெருசா போகலை. தொடர்ந்து ‘அமைதிப்படை’, ‘தோழர் பாண்டியன்’ படங்களில் இணை இயக்குநராக வேலை பார்த்தேன்.

அதன்பிறகு என்னோட ‘பசும்பொன்’ கதையை நானே படமாக்கலாம்னு முடிவு செய்தப்போ, ‘ரொம்பவும் சின்னப் பையனா இருக்கானே’ன்னு எல்லோரும் தயங்கினாங்க. அப்புறம் அந்தக் கதையை நானே இயக்குறேன்னு இயக்குனர் பாரதிராஜா முன்வந்தார். அப்புறம் அவரோட சில படங்களுக்கு வேலை செய்தேன். நடிகர் பிரபுவோட அறிமுகம் கிடைச்சது. அவர் என்மேல் நம்பிக்கை வைத்து பாஞ்சாலங்குறிச்சி படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தார்.

திரைப்படத்துறையில் இருக்கும் பெரியாரியவாதிகளில் நீங்களும் ஒருவர். நீங்கள் எப்படி பெரியார் பாதைக்கு வந்தீங்க?

பெரியார் பாதையில திட்டமிட்டு நான் வரவில்லை. நான் ஒரு ஒத்தையடிப்பாதையில நடந்துக்கிட்டு இருந்தேன். அந்த ஒத்தையடிப் பாதை வந்து சேர்ந்த இடம் பெரியாரோட பாதையா இருந்துச்சி.

சின்னப்பையனா இருக்கும்போதே நான் ரொம்ப முற்போக்கான ஆளாத்தான் இருந்தேன். விளையாட்டு, பாட்டு, பேச்சு, கராத்தே, சிலம்பம்னு தனித்துவமான் ஆளாத்தான் இருப்பேன். எங்க ஊரிலேயே அப்ப கராத்தே கத்துக்கிட்ட ஆளு நான் ஒருத்தன் தான். அதனால் முரடன் மாதிரி தெரிவேன். ஆனா அப்பவும் நேசமான ஒரு மனுசனாத்தான் இருந்தேன். மரக்கன்றுகள் நடுவேன். பொதுக்கிணறை தனியாளா நின்னு தூர்வாருவேன்.

பேய், பிசாசு பயம் கிராமங்கள்ல அதிகமா இருக்கும். ஆனா நான் பெரும்பாலான நேரங்கள் சுடுகாட்டில தான் இருப்பேன். வெட்டியானோட பேசிக்கிட்டு இருப்பேன். நிறைய படிப்பேன்.

எங்க பகுதி வறுமையானது என்பதால், கொலை, கொள்ளை அதிகமாக இருக்கும். எங்க ஊர்ல குலதெய்வக் கோவில் ஒண்ணு இருக்குது. அதுக்கு தினமும் வீட்டுக்கு ஒரு ஆளா கத்தி, கம்போட காவலுக்கு போவோம். காரணம் பக்கத்து ஊர்லே இருந்து யாராவது வந்து கோயிலைக் கொள்ளை அடிச்சிருவாங்க என்ற பயம். அப்ப எனக்குள்ளே கேள்வி. எல்லாரையும் காப்பாத்தற சாமிக்கே நாம காவல் இருக்க வேண்டியிருக்கு. திருடங்க கிட்டயிருந்து தன்னைத்தானே காப்பாத்திக்காத சாமி நம்மளை எப்படிக் காப்பாத்தும். இதை பெரியவங்ககிட்ட கேட்டப்போ திட்டு தான் கிடைச்சுது.

அப்பவே கோவிலுக்கு போற பழக்கம் எல்லாம் கிடையாதா?

எனக்கு இயல்பாவே கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. கோவில் திருவிழா நேரங்கள்ல ஊர்ல இருக்கிறவங்களுக்கு சாமி வரும். அப்பவும் நான் அவங்கக்கிட்ட கேள்வி கேட்பேன். கோவிலுக்கு வெளிய இருக்கிற நீங்கள்ளாம் சாமி வந்து ஆடுறீங்களே, கோவிலுக்கு உள்ள இருக்கிற அய்யருங்க ஒருபோதும் சாமி வந்து ஆடுனதில்லையேன்னு. அந்தக் கேள்வியே அவங்களுக்குப் புரியாது.

நான் கபடி விளையாடும்போது கீழே விழுந்து கை பிசகிறும். மருமகனுக்கு அடிபட்டிருச்சேன்னு என்னோட அத்தை சாமியாடும். எனக்கு யாரோ செய்வினை வைச்சுட்டான்னு சொல்லி மண் எடுத்துப் பூசும். யாரும் செய்வினை வைக்கலை, கீழே விழுந்துட்டேன், கை பிசகிடுச்சின்னு சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க. சாமி வந்து ஆடும். ஆடி முடிச்சிட்டு கொஞ்ச நேரத்திற்கு பிறகு சாமி களைவெட்டி எடுத்துட்டு காட்டுக்கு களை பறிக்கப் போகும். இதைப் பார்க்க எனக்கு வேடிக்கையா இருக்கும்.

இந்த மாதிரி விஷயங்களை கூர்ந்து கவனிக்கும்போது ஊர்ல இருக்கிற சாதிப் பிரிவுகளும் தெரிஞ்சுது. எங்க ஊர்ல ஆற்றுப்பாசனமோ, அருவிப்பாசனமோ கிடையாது. வானம் பார்த்த பூமியா இருக்கிறதால கண்மாய்ப்பாசனம் தான். கண்மாய்க்கரைகள்ல தான் கிராமங்களோட வீடுகள் இருக்கும். கண்மாய்ல தேங்கியிருக்கிற தண்ணியை, கரையிலே கல்லு கட்டி, பிரிச்சு வைச்சிருப்பாங்க. ஒவ்வொரு பிரிவுத் தண்ணியிலயும் ஒவ்வொரு சாதிக்காரங்க குளிக்கணும். எங்க குளிச்சாலும் எப்படி பிரிச்சாலும் எல்லாரோட அழுக்கும் வியர்வையும் மொத்தத் தண்ணியிலயும் தான் கலந்திருக்கும். ஆனா இடம் மாறி குளிச்சிட்டா வெட்டுக் குத்து கொலையே நடக்கும். இதெல்லாம் எனக்கு பெரிய பைத்தியக்காரத்தனமா தெரிஞ்சுது.

பள்ளியில் படிக்கும்போது நிறையக் குழப்பங்கள் ஏற்பட்டது. பரமசிவன் தலையில் இருந்து கங்கை வருதுன்னு தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுத்தது. கங்கை ஆறு இமயமலையில் உற்பத்தியாகிறதுன்னு புவியியல் பாடம் சொன்னது. ‘கங்கை எங்க உற்பத்தியாகுது பரமசிவன் தலையிலயா, மலையிலயா, ஒரே வகுப்பில இந்தக் குழப்பம் வந்தா என்னால படிக்க முடியாது, எங்க உற்பத்தியாகுதுன்னு முடிவு பண்ணிட்டு பாடம் நடத்துங்க’ன்னு ஆசிரியர்கள்கிட்ட சொல்லியிருக்கேன்.

வகுப்புலே நான் எல்லாச் சாதி மாணவர்களுடனும் பழகியிருக்கேன், சினிமாவுக்கு போயிருக்கேன், விளையாடியிருக்கேன். ஆனா ஊருக்குள்ள போகும்போது அவன் வீட்டுக்கு இவன் போகக்கூடாது, இவன் தெருவில அவன் நடக்கக்கூடாதுன்னு இருந்தப் பிரிவுகளை என்னால் தாங்கிக்க முடியலை. இதுமாதிரி எனக்குள்ள ஏற்படற கோபங்கள் தேடலா மாறிச்சு.

அப்புறம் பள்ளிக்கூடம் முடிச்சு கல்லூரியில் பொருளாதாரம் சேர்ந்தேன். அங்க எனக்கு காரல் மார்க்ஸ் அறிமுகமானார். தொடர்ந்து நூலகத்தில் நிறைய படிக்க ஆரம்பிச்சேன். அங்க தான் பெரியார் பத்தி தெரிஞ்சுது. அந்தக் கிழவரைப் படிக்கும்போது, அவர் நமக்காக ஒரு பெரிய தார்ச்சாலையே போட்டு வைச்சிருந்தது. தெரிய வந்தது. அதுவரை ஒரு ஒத்தையடிப்பாதையில நடந்து வந்த நான் அந்த தார்ச்சாலையில் சேர்ந்துக்கிட்டேன்.

அப்புறமா நிறைய படிக்க ஆரம்பிச்சேன். படிக்கப் படிக்க உலகத்தை விரிவா ஆழமா புரிஞ்சிக்க முடிஞ்சது. அப்பதான் நம் சமூகத்தில என்னென்ன பிழைகள் இருக்குது, என்னென்ன தவறுகள் இருக்குதுன்னு புரிஞ்சுது.

சுத்துற பூமியில எது கிழக்கு, மேற்கு? எனக்கு பகல்னா இன்னொரு நாட்டில நள்ளிரவு. இதுல எது நல்ல நேரம் எது கெட்டநேரம்? ஒருத்தன் கெட்டநேரம்னு நினைக்கிற நேரத்தில இன்னொருத்தன் நல்ல காரியம் தொடங்குறான். இந்தப் பைத்தியக்காரத்தனமெல்லாம் தெரிய வருது. நாம் அறிவியலின் பிள்ளைகள்கிறதை இந்தச் சமூகம் மறுக்குதுன்னு புரிஞ்சிக்கிட்டேன். இதைப் புரிய வைக்கிற வேலையை நாம செய்யணும்னு தோணிச்சு. அதன்படி நடந்துட்டு வர்றேன்.

அறிவியல்படி நடக்கணும்னு சொல்றீங்க. ஆனால், நீங்க இருக்கிற திரைப்பட உலகம் பூஜை, ராசி, செண்டிமென்ட்னு நிறைய மூடப்பழக்கங்களோடு இருக்கிற இடம். இதை நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?

என்னோட கொள்கைகள் காரணமா என்னை நிராகரிக்கிற சூழலும் இருக்கத்தான் செய்யுது. ஆனால் நான் தெளிவா இருக்கேன். அதனால எதுவும் என்னை பாதிக்கிறதில்லை. எங்கிட்ட நிறைய பேர் சொல்லியிருக்காங்க. ‘நானும் சின்ன வயசிலே நாத்திகம் பேசியிருக்கேன். உனக்கு இப்ப இள ரத்தம். ரத்தம் சுண்டிப்போனா எல்லாம் சரியாயிரும்’னு. நான் உடனே கேட்பேன், ‘அப்ப உங்களுக்கு சுண்டிப்போச்சா?’

நான் சின்ன வயசில் நீச்சல் கத்துக்கிட்டேன், இப்ப மறந்துப்போச்சுன்னு எப்படிச் சொல்ல முடியும்? ஒரு விஷயம் கத்துக்கிட்டா சாகுறவரைக்கும் மறக்காது. அதுமாதிரித்தான் அறிவுத் தெளிவும். நான் தெளிவாத்தான் இருக்கேன்.

தேங்காய் உடைக்கிறது மாதிரி விஷயங்களை நான் முதல் படத்தில இருந்தே தவிர்த்தேன். பூஜை பண்றதை நீங்க பண்ணிக்கலாம், நான் தடுக்கலே, ஆனா என்னைக் கூப்பிடாதீங்கன்னு சொன்னேன். சாமி கும்பிடறது, சாமிப் படத்தைக் காட்டறது போன்ற காட்சிகள் என் படத்தில் இருக்காது. என் படம் வெற்றியடைஞ்சுதுன்னா நான் சொல்றதை எல்லாரும் கேட்க ஆரம்பிப்பாங்க. வெற்றி பெறுகிற வரைக்கும் சிக்கல் தான். இப்ப நான் எல்லாராலயும் அறியப்படற ஒரு ஆளா இருக்கிறதால அவரு அப்படித்தான்னு விட்டுருவாங்க.

தொடர்ந்து படம் வெற்றியடைஞ்சா இதுமாதிரி விஷயங்கள் சாதாரணமாயிடும். ஒரு படம் தோல்வியடைஞ்சா மறுபடியும் பிரச்சனைகள் தொடங்கும். மறுபடியும் போராடி எழுகிறவரைக்கும் அவங்க சொல்றதையெல்லாம் தாங்கித்தான் ஆகணும்.

எனக்கு முன்னாடியே இங்க இயக்குனர் ஷங்கர், மணிரத்னம், கமல்ஹாசன் எல்லாருமே கடவுள் நம்பிக்கை இல்லாத, மூடப்பழக்கங்களை நம்பாத முற்போக்குவாதிகள் தான். ஆனா அவங்க யாருமே என்னளவுக்கு தரையில் இறங்கி போராட வரவில்லை. ஷங்கரும், மணிரத்னமும் இதுபத்தி பேச ஆரம்பிச்சா, ஒருத்தன் இறைநம்பிக்கை இல்லாம மனித உழைப்பை நம்பி இவ்வளவு உயரத்தைத் தொட முடியுமாங்கிறதுக்கு முன்னுதாரணமா இருப்பாங்க. ஒரு மனிதன் வாழ்வதற்கு சாதியோ, மதமோ, கடவுளோ அவசியமில்லை. காற்று, நீர், மொழி மட்டும் தான் அவசியங்கிறது தெரியவரும்.

திரைப்படம் என்பது காட்சி ஊடகம். ஆனால் தமிழ் சினிமா வசனங்களால் நிரம்பியிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

உலகத் திரைப்படங்களோடு நம் படங்களை ஒப்பிடவே கூடாது. நம் வாழ்க்கை முறையே இங்கு வேறு. ஒரு மரணக் காட்சியை கதறி அழாம காட்சிப்படுத்தவே முடியாது. என்னோட பாட்டி எண்பது வயசில இறந்து போனாங்க. என் உறவுக்காரங்க கிராமத்தில பேருந்து நிறுத்தத்தில் இருந்து உருண்டு புரண்டு அழுதுட்டு வந்ததை நான் பார்த்திருக்கிறேன். என்னை என்னோட பாட்டிதான் வளர்த்தார்கள். அவங்க இறந்தபோது அவங்களைப் பத்தின முழு நினைவும் எனக்குள்ள ஓடுது. என்னால எப்படி கதறி அழாம இருக்க முடியும்?

என்னோட தாத்தா இறந்து போகும் போது அவருக்கு 95 வயசு. அவரை சுடுகாட்டுக்கு கொண்டு போற வரைக்கும் எங்கப்பா அழலை. சுடுகாட்டில புதைக்கும்போது அவர் கதறியழுததைப் பார்த்து மயானமே அரண்டது. இதுமாதிரி சூழல் தான் நம்மளோடது. என்னோட சின்னம்மா சின்ன வயசிலேயே விதவையாயிட்டாங்க. அதுக்கு என்னோட அம்மாச்சி அழுகுறா ‘நான் பெத்த மகளுக்கு மிஞ்சி கழட்டி வைக்க மிகுந்த வயசாச்சோ, தாலி கழட்டி வைக்க தளர்ந்த வயசாச்சோ’. இந்த ஒப்பு இல்லைன்னா அந்த சோகம் தைக்காது. என் அப்பா அழுதது நிஜம். அந்த நிஜத்தை நான் எப்படி மௌனமா காமிக்க முடியும்?

மரணத்தை மௌனமா எதிர்கொள்றது சினிமாவில் தான் நடக்கும். எதார்த்தத்தில் கதறியழாமல் மரணத்தை கடந்து போகவே முடியாது. வெடிக்காமல் மரணத்தை ஜீரணிக்கவே முடியாது. மரணம் எல்லாருக்கும் நிகழும், அதை தாண்டித்தான் ஆகணும்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா நீங்க எவ்வளவு பெரிய திடமான ஆளாக இருந்தாலும் மரணம் உங்களை அசைக்கும். அதுதான் எதார்த்தம். அதை ஆங்கிலப் படத்தில் வருவது போல் மௌனமாக காண்பிக்க முடியாது.

நாம் வாழ்க்கையில் கதை கேட்டு பழகிய ஆட்கள். பகவத்கீதையும், பைபிளும் பத்துக் கட்டளையோட நிற்கவில்லை. அதைப் புரிய வைப்பதற்கு நிறையக் கதைகளை சொல்கிறது. அதுமாதிரி நம்ம வாழ்க்கை முறைக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்கணும்னா பேசித்தான் ஆகணும். அது நாம் எடுத்துக் கொள்கிற கதைகளைப் பொறுத்தது. சிலக் காட்சிகளை பேசாமல் விட்டு விடலாம். நானே என்னோட படங்களில் 600 அடி வரைக்கும் பேசாமலே விட்டுருக்கேன்.

பாலுமகேந்திரா படங்கள்ல உரையாடல்கள் சுருக்கமா இருக்கும். அண்ணாவும், கலைஞரும் எழுதகிற காலத்திலேயே வசனங்களை சுருக்கமாக எழுதியிருக்கிறார்கள். நான் நிறைய ரசிச்சிருக்கேன். அதை அந்தக் காட்சியும், கதையின் தன்மையும் தான் தீர்மானிக்க முடியும். காட்சி ஊடகத்திலயும் நாம என்ன சொல்ல வருகிறோம் என்பதை பார்வையாளனுக்கு உணர்த்த உரையாடல்கள் அவசியப்படுகிற்து. நீயாப் புரிஞ்சிக்கோன்னு விட்டுட்டா சில காட்சிகள் போயே சேராது.

தம்பி மாதிரியான படத்தை முழுக்க காட்சிகளால் நகர்த்த முடியாது. அந்தப் படத்தில் ஒரு காட்சி.. கொலை செய்கிற கொலையாளியை காவல் நிலையத்துக்கு அழைத்துப் போவது தான் இதுவரைக்கும் வந்த சினிமா. அதுதான் ஹீரோயிசம்னு பேசப்படுது. அதைச் செய்யாமல் கொலையாளி யாரைக் கொலை செய்தானோ அவன் வீட்டின் முன்னாடி கொலையாளியை நிறுத்தி யோசிக்க வைப்பான் கதாநாயகன். ஒரு நிமிட கோபத்திற்கு, ஒரு நிமிட அவசரத்திற்குப் பின்னால் எத்தனை பேரின் கண்ணீர் இருக்கிறதுங்கிறதை உணர்த்துற காட்சி. அதை மௌனமா விட்டாலே புரியும். அதைத்தாண்டி கொலையாளிக்கிட்ட, ‘பூவையும் பொட்டையும் இழந்துட்டு பிள்ளைகளை எப்படிக் காப்பாத்தப் போறோம்னு ஒரு பொண்ணு அழறாளே அது உன் காதுல கேட்குதா, பிள்ளையைப் பறி கொடுத்துட்டு ஒரு தாய் அழறாளே அது கேட்குதா, நாளைக்கு நீ ஜெயிலுக்கு போன பிறகு உன் குடும்பத்திற்கு இதுதானே கதி’ன்னு கேட்கிற இடத்தில தான் சொல்ல வந்த விஷயம் மனதிலே அதிகமா தைக்குது.

காட்சியும், கதையும் தான் உரையாடல்களைத் தீர்மானிக்கணுமே ஒழிய நாம திட்டமிட்டு எதையும் செய்ய முடியாது. புரட்சியை மௌனமா எப்படி செய்ய முடியும்? தம்பி படத்தில் ஒரு இடத்தில், ‘வெளிநாட்டில் இருந்து பறந்து வரும் பறவைகளுக்காக தீபாவளி கொண்டாடாம இருக்கிற என்னோட தேசத்தில் எவன்டா குண்டு வைக்கிறது’ன்னு ஒரு கேள்வி வரும். அதைப் பேசாம எப்படி புரிய வைக்க முடியும்? ‘வன்முறைன்னா நான் வன்முறையா? அடிக்க ஓங்குகிற கைக்கும் தடுக்க நீட்டுகிற கைக்கும் வித்தியாசம் இல்லையா? இதயம் பழுதுபட்டா அறுவைசிகிச்சை செய்வது வன்முறையா?’ இதயத்தை இரண்டா பிளக்குறது மருத்துவங்கிறதை நான் எப்படி சொல்றது? இதை மௌனம் சொல்லாது. உரையாடல்கள் மூலம் தான் நான் உரக்கச் சொல்ல முடியும்.

பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள் நாம். அதனால் இங்குக் காட்சியை புரிந்து கொண்டு உள்வாங்குகிறவர்கள் மிகக் குறைவு. திருக்குறளோட அர்த்தம் உங்களுக்குத் தெரியும். ஆனால் திருக்குறளை படிச்சுக் காண்பிச்சு, அதுக்கு அர்த்தமும் சொல்ற நிலையில் தான் இங்க வெகுவான மக்கள் இருக்கிறாங்க. இதுக்கெல்லாம் போய் என்ன விளக்கம் சொல்றது, தானாப் புரிஞ்சுக்க வேண்டியது தானேன்னு நீங்கக் கேட்க முடியாது. விளக்கம் சொல்லித்தான் ஆகணும்.

இந்த மாதிரி வாழ்க்கை முறையில் இருந்துட்டு இங்கிலீஸ் படம் மாதிரி எடுக்கப்போறேன்னு சொல்லி, எங்க ஊர் பரமக்குடியில் ஒருத்தனை அப்படியே நடக்க விட்டு படம் எடுத்தா அது வயலும் வாழ்வும் மாதிரித் தான் இருக்கும். இரண்டாவது காட்சியிலயே படத்தைப் போடுடான்னு நம்மாளு கத்துவான்.

அடுத்தவன் மரணம், கண்ணீர், கற்பழிப்பு, கொடூரம் எல்லாத்தையும் நாம ரசிக்கக் கத்துக் கொடுத்திருக்கோம். ஒருத்தனைக் கொலை செய்தா கைத்தட்டுறாங்க. ஏன்னா கொலை செய்யப்பட்டவன் கெட்டவன்னு நாம சொல்றோம். கெட்டவன் மரணமும் சிலரை பாதிக்குதுன்னு நாம சொல்லித் தரலை. ஆட்டோ சங்கர் சமூக குற்றவாளின்னு தூக்கில் போட்டாங்க. அவன் பிணத்தை கட்டிப் பிடித்து அழவும் நாலு பேர் இருந்ததை மறந்து விட்டோம். வீரப்பன் மரணத்திற்கு நான் அழுதேன். அவனுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் அழுதுது. அப்பக் கெட்டவன்னு எதை வைச்சித் தீர்மானிப்பீங்க? இதையெல்லாம் வசனம் இல்லாம எப்படி சொல்ல முடியும்?

தமிழ்த் திரைப்படங்கள் ஏன் ஒரே மாதிரி கதைக்களங்களையே தேர்வு செய்கிறது. கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காதல், சண்டை, பாடல் இதுதான் ஒரு திரைப்படம். வித்தியாசமான கதைக்கருக்களுடன் ஏன் படங்கள் வருவதில்லை?

இங்கு சினிமா ஒரு பெரிய வணிக முதலீடு. இதில் வேறு மாதிரியான கதைக்களத்தை தேர்வு செய்யவே முடியாது. நம் மக்கள் காலங்காலமாக கதாநாயகனை வழிபடுகிறார்கள். நம்மளோட புராணக் கதைகள், வரலாறு எல்லாவற்றிலும் நமக்கு ஒரு கதாநாயகன் வேண்டும். அலெக்ஸாண்டரை மாவீரன்னு சொல்றோம். ஆனால் என்னோட பார்வை வேறு. ஒலிம்பிக்கில் ஓடி தங்கம் வாங்குகிறவன் தான் மாவீரன். யானைப்படை, குதிரைப்படையோட வந்து அப்பாவி மக்களை கொன்றுக் குவிக்கிறவன் பேரு மாவீரனா?

ஒரு புராணக் கதையில் கதாநாயகனா வந்த ராமனை கடவுளா கும்பிடுற ஆளுங்க நாம. மகாபாரதத்தில் வரும் அத்தனை பேரும் நமக்கு ஹீரோஸ். அன்னிக்கு ஆரம்பிச்ச இந்தப் பழக்கம் இன்னிக்கு சினிமாவிலயும் தொடருது. கதாநாயகர்களை வழிபட்டுக் கொண்டிருக்கிறான். அதனால தான் கட் அவுட்டுக்கு பால் ஊத்தறான், கற்பூரம் ஏத்தறான், மன்றம் வைக்கிறான். இவன் ஒரு உச்ச வணிகத்தில் இருக்கிறான். இந்த நிலையில் ‘Children of the heaven’ மாதிரி படம் எடுத்தா பார்க்க வரமாட்டான்.

தம்பி படத்திலேயே எந்த நடிகரும் நடிக்க முன் வரலை. மாதவன் தான் ஒத்துக்கிட்டார். பிதாமகன் படத்தையே பாலாவைத் தவிர வேறு யாராவது இயக்கியிருந்தா விக்ரம் நடிச்சிருப்பாரா? ஒரு தளத்திற்கு போன பிறகு, தன்னை நிலைநிறுத்திய பிறகு வேறு மாதிரியான படங்கள் பத்தி யோசிக்கலாம். பாலுமகேந்திராவோட மூன்றாம் பிறை தெரிந்த அளவுக்கு வீடு, சந்தியாராகம் எத்தனை பேருக்கு தெரியும்? வணிக நோக்கில்லாமல் மிகத் தரமாக தயாரிக்கப்பட்ட படங்கள் அவை. இங்கு இருக்கிற வணிக அழுத்தத்தில் நல்ல படங்கள் எடுப்பது மிகவும் சிரமமான வேலை.

ஏன் நல்ல படம் வரலைன்னு கேள்வி கேக்குற கேள்வியாளனே படைப்பாளியா மாறும்போதுதான் நல்ல திரைப்படங்கள் இங்கு சாத்தியம். குட்டின்னு ஒரு படம் வந்தது. நல்ல படம் எடுக்கணுங்கிற நோக்கில் தன்னோட திருப்திக்காக ரசிகர்களைப் பத்திக் கவலைப்படாம சொந்த முதலீட்டுல எடுத்த படம். எத்தனை பேர் அதைப் பார்த்தாங்க?

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் இப்படி எல்லாராலயும் இயக்கப்படற ஆள்தான் இங்கு இயக்குனர். எனக்கெல்லாம் கோடிக்கணக்கில கனவிருக்கு. படைக்கத் தளம் எங்க இருக்கு?

இங்கு எல்லாத் திரைப்படங்களும் கதாநாயகனை சுற்றியே இருக்கிறது. அதற்கும் மேலேபோய் கதாநாயகனுக்காகவே கதை எழுதி படம் பண்ணுகிற சூழ்நிலையும் இருக்கிறது. இது ஆரோக்கியமற்ற சூழ்நிலை மாறுமா?

இதை மாற்றித்தான் ஆக வேண்டும். அதற்கு முதலில் மக்களோட ரசனை மேம்படணும். தற்போதைய சூழ்நிலையில் இலக்கிய வட்டம் விரிந்திருக்கிறது. மாணவர்கள் visual communication படிக்கிறாங்க. அவனுக்கு உலகப்படம் அறிமுகப்படுத்தப்படுது. அதுமாதிரி படத்தை ஏன் நாம இயக்கக்கூடாதுன்னு அவனுக்குத் தோணுது. அப்ப நல்ல படங்கள் வெளிவரும்.

பாசிலும், கே.விஸ்வநாத்தும் ஆரம்பத்தில் ஒலிப் பொறியாளர்கள் தான். இங்க இருக்கிற படங்களை பார்த்து நொந்து போய் இயக்குனராயிட்டாங்க. கே.விஸ்வநாத் ஆரம்பத்தில் வணிகப்படங்களாத் தான் எடுத்தார். அதற்குப் பிறகு தான் சங்கராபரணம் எடுத்தார். அந்தப் படம் ஓடினதால அவரும் நல்ல படங்கள் எடுக்க ஆரம்பிச்சார். ராமநாராயணன் ஆரம்பத்தில பட்டம் பறக்கட்டும், சிவப்பு மல்லின்னு அற்புதமான படங்கள் எடுத்த இயக்குனர். அந்தப் படங்கள் ஓடாததால அவரு நாய், குரங்குகளை வைச்சு ஆடிவெள்ளி, அமாவாசைன்னு பண்ண ஆரம்பிச்சார். எல்லாம் பிச்சுக்கிட்டு ஓடிச்சி. நம்ம மக்களோட ரசனை படைப்பாளியையே புரட்டி போட்டுடிச்சி.

தற்போது இந்த ரசனை மாறிக்கொண்டு வருகிறது. ஒரு வீடியோ கேமரா இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் நல்லக் கதைகளை குறும்படமா பண்ணலாங்கிற நிலைமை வந்திருக்கிறது. நல்ல ரசனையோடு படைப்பாளிகளும், பார்வையாளர்களும் உருவாகும்போது இங்கும் வேறு மாதிரியான கதைத்தளங்களும், படங்களும் உருவாகி வணிகப்படங்களை தோற்கடிக்கும். ஆனால் இப்போது இருக்கிற சூழ்நிலையில் நான் நல்லத் தரத்தோடு வேறு ஒரு கதையை யோசித்தால் அது பைத்தியக்காரத்தனம். நான் போராடிக்கொண்டே இருப்பேன். பின்னால் வருபவர்கள் என்னைத் தாண்டி வெற்றி பெற்று எங்கேயோ போய்விடுவார்கள்.

கண் சிவந்தால் மண் சிவக்கும் படம் எடுத்தவனோ, அவள் அப்படித்தான் எடுத்தவனோ இங்கே இல்லை. இங்க இருக்கிற வியாபாரத்தில நீங்க வெல்லலைன்னா சமூகம் உங்களுக்கு எந்த மன்னிப்பும் தராது. தரமான படைப்புகளோடு வணிக வெற்றியையும் வைச்சிக்கிறது இங்க கட்டாயமாயிடுது. அந்தப் போராட்டத்தில தான் பாலா, சேரன், தங்கர், நான் எல்லாரும் மல்லுக்கட்டறோம்.

பத்துப் பெரிய படங்களுக்கு மத்தியில ஒரு நல்ல தரமான படத்தைக் கொண்டு வந்தா இங்கு திரையரங்கே கிடைக்காது. மதங்கொண்ட யானைகளுக்கு மத்தியில் மாட்டுன குழந்தை மாதிரி சின்னாபின்னமாகிடுவோம். தரமான படங்களுக்கு இங்க என்ன மரியாதை இருக்குது? அழகி படமெல்லாம், குடுக்கிற காசைக் குடுத்துட்டு எடுத்துட்டுப் போங்கன்னு கூவிக்கூவி வித்தப்படம் தானே. சேது படப்பெட்டியை நானும் பாலாவும் தோளில் வைச்சி விக்காத குறைதான். எப்பவுமே இங்க தரமான படைப்புகளுக்கு பெரிய முட்டுக்கட்டையும், போராட்டமும் இருந்துட்டுத் தான் இருக்கு.

அதேநேரத்தில் ஆபாசம், வன்முறையைக் குறைச்சு சமூக அக்கறையோட நல்ல படங்கள் எடுக்கணும்னு வருகிற படைப்பாளிகளோட எண்ணிக்கை இப்ப அதிகரிச்சிருக்கு. அந்த மாதிரியான படைப்பாளிகளை இங்க இருக்கிற ஹீரோக்கள் ஆதரிக்கறதில்லை. அவங்க மனசுக்குள்ள ஒரு கதை வைச்சிருக்காங்க. அதைத்தான் அவங்களை அணுகுற இயக்குனர்கள் சொல்லணும்னு எதிர்பார்க்கிறாங்க. அப்புறம் படம் எப்படி வெளங்கும்?

படம் எடுக்க வருகிற எல்லாருமே தான் ஒரு உயர்ந்த இடத்துக்கு போகணும்னு ஆசையோடத்தான் வருவாங்க. அந்த இடத்தில வணிக ரீதியாக படம் எடுக்கிறவன் மட்டும்தான் நிக்க முடியுது. அவனுக்கு மூணுகோடி ரூபாய் சம்பளம், தரமான இயக்குனர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சம்பளம்னா நல்ல படம் எடுக்கிறவன் பதறிட மாட்டானா? அவருக்கு விக்கிற அதே விலையில் தான் எனக்கும் பால் விக்கிறாங்க. நல்லப் படம் எடுத்திருக்கார்னு எனக்கு இரண்டு ரூபாய்க்கா தர்றாங்க? வாழ்க்கைப் போராட்டத்தில் தடம் புரண்டு பொருளீட்டல் முக்கியமாயிடுது. நான் சொல்றது அந்தப் போராட்டத்திலயும் கொஞ்சமாவது தரத்தையும் நேர்மையையும் காப்பாத்தணும்னுதான்.

நல்ல படம் எடுக்கணும்னு வர்றவங்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலை ஒரு பக்கம் இருக்க, வியாபாரப் படங்கள் எடுக்கணும்னு வர்ற நிறைய பேர் உதவி இயக்குனர்களாவே திரும்பிப் போயிடுறாங்க. பாதி பேர் கூட இயக்குனர்களாகிறதில்லை. இதுக்கு என்ன காரணம்?

நிறைய பேருக்கு ஆர்வம் மட்டும் தான் இருக்கு. சினிமாவை உள்வாங்கிக்கிற தன்மை இல்லை. படத்தைப் பார்த்துட்டு விமர்சிக்கிறது வேற, படைப்பாளியா மாறுறது வேற. ஒரு படத்தைப் பார்த்துட்டு இது சரியில்லைன்னு சொல்றவனாலே சினிமா எடுக்க முடியாது. இந்தக் காட்சி சரியில்லை, இதை இப்படி பண்ணியிருக்கலாம்னு சொல்றவன் தான் படைப்பாளி. அவன்தான் ஜெயிப்பான். எதுவும் சரியில்லைன்னு சொல்லிட்டு சலிச்சுப்போய் படுக்கிற கூட்டம் தான் இங்க அதிகமா இருக்கு. எது சரின்னு சிந்திச்சவன் தான் படைப்பாளியாய் மாறி வெற்றி பெற்றிருக்கான்.

இங்கு தயாரிப்பாளர்கள் குறைவு, நடிகர்கள் பத்து பேர் தான். ஒரு உதவி இயக்குனர் தயாரிப்பாளரை அணுகினாலே, குறிப்பிட்ட நடிகரோட தேதி வாங்கிட்டு வாப்பா பண்ணலாம்னு தான் சொல்றாங்க. என்னை நம்பி மாதவன் படம் நடிக்கலைன்னா இன்னும் கூட இரண்டு வருஷம் நான் சும்மாத் தானே இருந்திருக்கணும். இதுதான் எதார்த்தமான சூழல். பாலாவைப் பாருங்க. சேதுன்னு விக்னேஷை வைச்சு படம் பண்ணி சரியா வராம, விக்ரம்னு அறியப்படாம இருந்த ஒருத்தரை கூட்டிட்டு வந்து அவருக்குள்ள முழுத் திரைக்கதையையும் செலுத்தி அவரை சிற்பி மாதிரி செதுக்கி எவ்வளவு கஷ்டம். படத்தோட பிரத்யேகக் காட்சியை பார்க்கிறவங்க நல்லா இருக்குன்னு சொல்றாங்க. ஆனா வாங்கி விநியோகிக்க யாரும் முன்வரலை. அதையெல்லாம் வென்று இன்னிக்கு பாலா நிக்கிறார்னா ஏகப்பட்ட காயங்கள் இருக்குது. அப்படி எல்லாராலயும் வெடிச்சு வந்திர முடியறதில்லை. இதைத்தவிர வறுமை, குடும்ப சூழல் காரணமாவும், சரியா வாய்ப்பு கிடைக்காமலும் நாலு வருஷம் திரைப்படத்துறையில் இருந்துட்டு திரும்பிப் போயிடறதும் நடக்குது.

கறுப்புப்பணம், பாலியல் ஒழுங்கினங்கள், சீரற்ற சம்பளம்னு தவறுகள் அதிகம் இருக்கிற இடம். ஒரு கொள்கைவாதியா நீங்க இதை எப்படி பார்க்கறீங்க?

களையப்பட வேண்டிய விஷயங்கள் சினிமாவில் நிறையவே இருக்குது. சினிமாக்காரன்னாலே இப்படித்தான்னு வெளியே ஒரு கணிப்பு இருக்குது. மிக நேர்மையா ஒழுக்கமா இருக்கணும்னு நினைக்கிற என்னை மாதிரி ஆளும் இதனால பாதிக்கப்படறாங்க. எனக்கு ஒரு வீடு வாடகைக்குத் தர ஆளில்லை. கல்யாணத்துக்குப் பொண்ணு குடுக்குறதுக்கு யோசிக்கறான். சிலர் பண்ணுகிற தப்புகளை பத்திரிகைகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதாலே மொத்த ஊடகமும் கொச்சையானதுங்கிற எண்ணம் வந்துடுச்சி.

தமிழ் சினிமாவில் பெண்ணடிமைத்தனம் அதிகமா இருப்பது உண்மைதான். பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாக, பாடலுக்கு மட்டும் பயன்படுத்தறாங்க. அவங்களுக்கு ஒரு கதாபாத்திரம் வைக்கிறதே இல்லை. கதாநாயகனும், கதாநாயகியும் தெருவில் நின்னு, தெருவில் சந்திச்சு, தெருவிலேயே காதலிப்பாங்க. கதாநாயகிக்கு வீடு, குடும்பம் ஒண்ணும் இருக்காது. திரைப்பட விளம்பரங்களில் நடிகை படத்தைப் போடாம நடிகர் படத்தை மட்டும் வைக்கிறாங்க. இந்த பெண்ணடிமைத் தனத்தை முதலில் ஒழிக்கணும்.

சினிமா ஒரு சாக்கடைன்னு சொல்லி பெரிய ஆட்கள் எல்லாம் படைப்பாளிகளா மாறாம இதை நிராகரிச்சதால சாக்கடையில் நெளியிற புழுக்களும், பன்றிகளும் ஆட்சியாளர்களா மாறிட்டாங்க. ஈரான், பிரான்ஸ் போன்ற உலக நாடுகள் அனைத்தும் திரைப்படங்கிற வலிமை மிகுந்த ஊடகத்தை போர்க்கருவியா பயன்படுத்தி சமூக அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுறாங்க. நாம மட்டும் தான் அதை கண்ணு வழியே போதையேத்துற விபச்சார விடுதி, சாராயக்கடை மாதிரிப் பார்க்கறோம். காரணம் கேட்டால், ஒரே வார்த்தையில் அது பொழுதுபோக்குன்னு சொல்லிடறான். இந்தியா மாதிரி நாட்டுக்கு என்ன பொழுதுபோக்கு வேண்டிக்கிடக்கு? பொழுதை ஏன் போக்கணும், பேசாம இருந்தா அதுபாட்டுக்கு போயிடாதா? அந்தப் பொழுதை மிக நல்லப் பொழுதாக எப்படி மாத்துறதுங்கிறதை பத்தித்தான் நாம யோசிக்கணும். யோசிக்காதபோது தான் பிரச்சனை வருது.

எழுத்தாளர்கள் சினிவாவுக்கு வர்றதில்லைங்கிற ஒரு புறமிருக்க, நல்ல எழுத்தாளர்களின் படைப்புகளை சினிமா ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை?

சரித்திரப் படங்கள் சமூகப் படங்களாக மாறியபோது எழுத்தாளர்களுக்கு திரைப்படத்துறையில் அவசியம் இருந்தது. ஆனால் இன்னிக்கு இருக்கிற தமிழ்ச் சினிமாவுக்கு தகுதியும் திறமையும் தேவையில்லை. இங்க இருக்கிற சினிமா ஒரு சூத்திரம். அதை இயக்குறதுக்கு பெரிய பயிற்சி தேவையில்லை. யார் வேணும்னாலும் செய்யலாம். இங்க இருக்கிற எழுத்தாளர்கள் நல்ல படைப்புகளை கொண்டு வருகிறார்கள். ஆனால் இங்கிருக்கிற கதாநாயகனுக்கு அந்தளவுக்கு நல்ல இலக்கியத் தரமுள்ள கதைகள் தேவைப்படவில்லை.

நாஞ்சில் நாடனோட ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதைன்னு படமாப் பண்ணினார். அதில சேரனைத் தவிர யார் நடிக்க முன்வந்தாங்க? யதார்த்த கதைகளுக்கு இருக்கிற மரியாதை அவ்வளவுதான். வணிக ரீதியான படங்களோடு மோதமுடியாமல் நல்ல இலக்கியங்கள் சிதைந்து விடுகிறது. பக்கத்தில இருக்கிற கேரளா, மேற்கு வங்கத்தில் எழுத்தாளர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். மலையாளத்தில் வாசுதேவன் நாயருக்கோ, டி.தாமோதரனுக்கோ இருபது லட்சம் குடுக்கிறதுக்கு ஆட்கள் இருக்காங்க. இங்க மிகப் பெரிய எழுத்தாளர் வசனம் எழுதினாலே ஐம்பது ஆயிரம் குடுக்க யோசிக்கிறாங்க. மார்க்சிஸ்டுகள் மண்ணில் தான் இலக்கியம் கவுரவிக்கப்படுகிறது.

பசும்பொன் படத்திற்குப் பிறகு எனக்கெல்லாம் நல்ல ஊதியம் கொடுத்து எழுதச் சொன்னா நான் ஏன் இயக்குறதுக்கு வர்றேன்? பாசமலர் பட காலத்தில் எல்லாம் எழுத்தாளர்கள் படத்தை எழுதிக் கொடுத்தாங்க. இயக்குனர்கள் இயக்கிட்டு இருந்தாங்க. அதனால நிறையப் படங்கள் வெளிவந்தது. இப்ப எழுத்தாளனுக்கு இங்கு மரியாதையே இல்லை. எல்லாருக்கும் பின்னாடி கடைசியா பேர் போடுவாங்க. எழுத்தாளன் என்று கவுரவிக்கப்படுகிறானோ அன்றுதான் இந்த மண்ணில் இருந்து மிகச்சிறந்த படைப்புகள் வெளிவரும்.

காக்கிச்சட்டை படத்தோட மிக மோசமான பதிப்பு தான் பாண்டியன் திரைப்படம். அதன் அப்பட்டமான மறுபதிப்பு தான் தெலுங்கில் வந்த போக்கிரி படம். அதோட தெலுங்கு உரிமையை ஒரு கோடி ரூபாய் கொடுத்து விஜய் வாங்கி தமிழில் பண்றார். அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்தா பிரமாதமான கதையை எழுத இங்க ஆட்கள் இருக்காங்க. அவங்களை யார் பயன்படுத்தறாங்க? முதல் மரியாதை, மண்வாசனைன்னு அற்புதமான படங்களோட கதை வசனகர்த்தா ஆர்.செல்வராஜை இந்த மண் எங்க வாழ வைச்சுது?

உலகமயமாக்கலின் இன்னொரு பக்கமாக, உலக நிறுவனங்கள் பெரிய முதலீட்டோடு தமிழ் சினிமாவில் நுழையப் போவதாக செய்திகள் வருகின்றன. இது எந்தமாதிரியான விளைவுகளை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தும்?

இங்க படம் எடுக்கிறதுக்கு தயாரிப்பாளர்கள் வீட்டை அடகு வைச்சு படம் எடுத்து, திரையரங்குக்காக அலைஞ்சிட்டு இருக்காங்க. படம் ஓடலைன்னா தற்கொலை பண்றாங்க. பெரிய நிறுவனங்கள் வந்தால் இந்த நிலைமை மாறும். பெரிய நிறுவனங்கள் பணத்தைக் கையில் கொடுத்து படம் எடுக்கச் சொல்வாங்க. அத அவங்களோட திரையரங்குகளில் அவங்களே வெளியிடுவாங்க. எல்லோருக்கும் காசு கிடைக்கு. அதே நேரத்தில் விநிநோகஸ்தர்கள், இடைத்தரகர்கள்னு திரைப்படத்தை நம்பியிருக்கிற பல குடும்பங்கள் பாதிக்கப்படும்.

அது ஒரு புறமிருக்க, இந்த மண்ணோட மைந்தனா இதை நான் எதிர்கிறேன். ஏற்கனவே இங்கு இந்த மண்சார்ந்த படைப்புகள் கிடையாது. இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் வேறு வந்தால் அவங்களுக்கான படைப்புகள் எடுக்க நாம நிர்ப்பந்திக்கப்படுவோம். விதையைக் கொடுத்து விளைய வைச்சி எடுத்துட்டுப் போறமாதிரி தான் இது. வியாபாரத்திற்காக அவன் இந்த ஊடகத்தை பயன்படுத்துவான். நான் இங்க அடிமை ஆயிடுவோம். விவசாயக் கூலி மாதிரி திரைப்படக் கூலி.

சிறப்பு பொருளாதார மண்டலம், ரிலையன்ஸ் இதையெல்லாம் உள்ள விட்டதுல என்ன ஆச்சு? என் நிலத்தை என்கிட்டயிருந்து வாங்கி அதில என்னையே விவசாயக் கூலி ஆக்கிட்டாங்க. இந்தியா மாதிரி நாட்டோட பெரிய சாபக்கேடே தன் நிலத்தில் விளைஞ்ச பொருளுக்கு விவசாயி விலையைத் தீர்மானிக்க முடியாததுதான். இப்ப அதனோட விலையை அம்பானி தீர்மானிப்பான். இந்தியா முழுக்க ஒரே விலையை அவன் தீர்மானிக்க முடியும். என் தோட்டத்து தக்காளியை கிலோ நூறு ரூபாய்னு எனக்கே விப்பான். அதாவது மறுபடியும் பண்ணை அடிமை முறை. அன்னிக்கு ஜமீன்தார்கள் சாரட்டிலயும் குதிரையிலயும் வந்தாங்க. இவன் விலையுயர்ந்த கார்களில் லாப்டாப்போட வந்து அதே மாதிரி மறுபடியும் அடிமையாக்குறான். அவன் குறுநில மன்னன் ஆயிடுவான். இதே தான் திரைப்படத் துறையிலும் நடக்கும். உலகமயமாக்கலோட முக்கியப் பிரச்சனையே உங்க நாடு உங்களுக்கு இல்லைங்கிறது தான்.

முன்னாடி விளையாட்டாக் கேட்போம். இது உங்க அப்பன் வீட்டு ரோடான்னு. இனி அம்பானி பிள்ளைங்க ஆமா இது எங்க அப்பன் வீட்டு ரோடுதான்னு பதில் சொல்லுவாங்க. ஏன்னா நூறு கிலோமீட்டருக்கு ஒருத்தன் இந்த மண்ணை வாங்கி வைச்சிருக்கான். நாம நடக்கிறதுக்கு அவனுக்கு காசு தரணும். எரிபொருள், அரிசி பருப்பு காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், சாலை, விளைநிலம் எல்லாத்தையும் வாங்கிட்டான். வெகு சீக்கிரம் தனி ஒரு மனிதனுக்கு இந்த நாடு சொந்தமாயிடும். உங்களைச் சுத்தி உங்களுக்கு தெரியாமலேயே பின்னி வைச்சிருக்கிற கண்ணியில நீங்க மாட்டிட்டு இருக்கீங்க. ஒருநாள் அது தெரியவந்து நீங்க திமிற நினைக்கும்போது அது உங்களை இறுக்கிடும்.

தமிழ் சினிமா சாதியை எப்படி கையாளுது. சாதியை எதிர்த்து வந்த படங்கள் கூட அதைத் தீவிரமா செய்யலை. சாதியை எதிர்த்து ‘வேதம் புதிது’ன்னு பாரதிராஜா ஒரு படம் எடுத்தார். அதிலயும் கடைசியில் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்து போறமாதிரி தான் எடுத்திருப்பார்…

மார்க்சிஸ்டுகள், பெரியாரிஸ்டுகளைத் தவிர வேறு யாருக்கும் சாதியைக் கடந்து மக்களை மீட்கணுங்கிற நோக்கம் கிடையாது. இங்க சாதி, மதம்னு எல்லாம் எதுவும் கிடையாது. அது ஒரு உணர்வு அவ்வளவுதான். கடவுள், கற்பு இதெல்லாம் எப்படிக் கற்பிதமோ சாதியும் அப்படி ஒரு கற்பிதம். ஒரு உருவகம். வேதங்கள் சொல்லுது, தர்மங்கள் சொல்லுதுன்னா அதையே நாமக் கொளுத்தணும். ஆனா சாதியை அடிச்சு நொறுக்கணுங்கிற நோக்கத்தில இங்க யாரும் எதையும் படைக்கலை. அந்த உணர்ச்சிகளையும் வைச்சு காசு சம்பாதிக்கணுங்கிற நோக்கத்தில் தான் திரைப்படங்கள் படைக்கப்படுது.

நீங்க சாதியைப் பத்திப் பேசறதால இங்க ஒரு கேள்வி கேட்க விரும்புறோம். முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது.?

கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கைரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.

தமிழ் சினிமாவில் வில்லன்களா காட்டப்படறவங்க பெரும்பாலும் இஸ்லாமியர்களாவோ, கிறிஸ்தவர்களாவோத் தான் இருக்காங்க. அதேமாதிரி தலித் மக்களை கொச்சைப்படுத்தி வசனங்கள் எழுதறதும் தொடர்ந்து நடைபெறுகிறது. பெரியாரிஸ்டா இதை நீங்க எப்படிப் பார்க்கறீங்க?

கொச்சைப்படுத்தப்படுறவங்க எல்லாருமே சிறுபான்மையினரா இருக்கிறதால எதிர்த்து கேள்வி கேட்க மாட்டாங்கங்கிற ஆதிக்கத் திமிர்தான் காரணம். அமெரிக்காவில ரெண்டு கோபுரத்தை இடிக்கப்பட்டப்போ, இதுமாதிரி ஒரு வன்முறையே நடக்கலைன்னு அமெரிக்கா சொல்லிச்சு. ஏன்னா கோபுரம் உயரமா இருந்துதில்லை. அதுக்காக ஈராக், ஆப்கானிஸ்தான்னு இரண்டு நாடுகளையே அமெரிக்கா காலி பண்ணிடுச்சி. யாரும் கேட்கலையே ஏன்னா அத ஒரு பெரியவன் செய்யிறான்.

நம்மளை மாதிரி ஆளுங்கதான் அமெரிக்காவை நாயை விடக் கேவமலான இடத்தில் வைச்சிருக்கிறோம். ஆனால் மத்த எல்லாரும் அமெரிக்கா அமெரிக்கான்னு தானே பறக்கறாங்க. என் தேசத்தில இருக்கிற எல்லா இளைஞனுக்கும் அமெரிக்கக் கனவு தானே இருக்குது? அமெரிக்காவில் இருக்கிற யாருக்காவது இந்தத் தேசத்துக் கனவு இருக்கா?

ஈராக்கில் இருக்கிற அமெரிக்கப் படைகள் வெளியேறணும்னு தாலிபான்கள் நான்கு பேரை பயணக் கைதியா பிடிச்சு வைச்சா நம்ம ஊடகங்கள் அதை எத்தனை தடவை ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’னு ஒளிபரப்புது. ஈராக் மக்களை அமெரிக்கா படுத்துறக் கொடுமையை ஒரு தடவை காட்டத் தயாரா இருக்குதா நம் ஊடகங்கள்?

இதே தான் உலகம் பூரா நடக்குது. உலகம் முழுக்க மக்களோட உளவியல் ஒண்ணாத்தான் இருக்குது. இஸ்லாமியன் குண்டு வைக்கிறான்னு திருப்பித் திருப்பிக் காட்டுறாங்க. சரி இஸ்லாமியன் ஏன் குண்டு வைக்கிறான்? அப்சலுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றணும்னு குதிக்கறாங்களே, நாடாளுமன்றத்தை தாக்க வந்தவனுக்கே தூக்குத் தண்டனைன்னா, பாபர் மசூதியை இடிச்சவனுக்கு என்ன தண்டனை? ஒரு தண்டனையும் இல்லையே. இந்தக் கீழ்த்தரமான போக்கை திட்டமிட்டுச் செய்யிறாங்க. சில படைப்பாளிகள் ஏன் செய்யிறோம், எதுக்கு செய்யிறோம்னு தெரியாமலே செய்யிறாங்க.

இந்த மாதிரி சமூகப் பிரச்சனைகள் சார்ந்த அறிவு இயக்குனர்கள்கிட்ட எந்த அளவுக்கு இருக்ககிறது?

இங்க இருக்கிற சில படைப்பாளிகள் தான் சமூகப் பிரச்சனைகளில் ஆர்வம் காட்டறாங்க. நிறையப் பேர் சினிமாவை வணிகமாத் தான் பார்க்கிறாங்க. ஆங்கிலக் கலப்பினால் தமிழ் அழியறதைப் பார்த்து தாங்க முடியாம குறைந்தபட்சம் தமிழிலயாவது தலைப்பு வைங்கன்னு தான் கேட்டோம். திரைப்படத் துறையில் அதுக்கு என்னை எவ்வளவு அவமானப்படுத்தினாங்க. இன்னிக்கு தமிழில் பெயர் வைச்சா வரிவிலக்குன்னு அறிவிச்சவுடனே விழுந்து விழுந்து பெயரை மாத்துறாங்க. நாளைக்கே இந்தியில் பெயர் வைச்சா மூணு மடங்கு வரிவிலக்குன்னு மத்திய அரசு அறிவிச்சா இந்தியில பெயர் வைப்பாங்களா, மாட்டாங்களா? அப்ப இவங்களுக்கு எங்க தமிழ்ப்பற்று இருக்குது?

வரிவிலக்கும் லஞ்சம் தான். வரிவிலக்கு கொடுத்தாவது தமிழ்ப்பெயர் வைக்கட்டுமேங்கிற ஆர்வத்துல தான் முதல்வர் அதைச் செய்தார். பெயரை தமிழில் வைச்சிட்டு கீழே ஆங்கிலத்துல எதுக்கு அதுக்கு ஒரு விளக்கம். இங்க இருக்கிற யாருக்கும் தமிழில் சொன்னால் புரியாதுன்னு நினைக்கிறானா? படத் தலைப்புக்கு மேலே production, presents, creations இதெல்லாம் எதுக்கு? வழங்கும், தயாரிப்புக் கூடம்னு போட்டா என்ன? உண்மையிலேயே மொழிப்பற்று இருந்தா இதையெல்லாம் செய்வாங்களா? சொந்த மொழி புரியாத கூட்டத்தை மீட்டெடுக்கணும்னு பேசற எங்களை கிண்டலடிக்கிற கூட்டத்தை என்ன பண்றது?

தொப்புள், தொடை காமிக்காம ஒரு காட்சியை அமைக்க முடியாதா? சாணக்யா படத்தில ஒரு காட்சி.. நமீதா தொப்புள்ல தேங்கியிருக்கிற தண்ணியை சரத்குமார் வாயில எடுத்து பீய்ச்சியடிப்பார். இவரு ராஜ்யசபா எம்.பி. அரசியலை இவருதான் மாத்தப் போறாராம். விஜயகாந்தும் அப்படித்தானே? இவங்களுக்கு என்ன சமூகப் பொறுப்பு இருக்கு.

ஷெர்வானி, பைஜாமா போட்டுட்டு நாம படம் எடுக்கிறோமே, வேட்டி கட்டிட்டு இந்தியில எவனாவது படம் எடுக்கிறானா? இந்தத் தேசம் இவனை அங்கீகரிக்கணுமாம், உன்னை இந்த தேசம் மயிரளவு கூட மதிக்கலையே? ஆறரைக் கோடி மக்களுக்கு என்ன தேசியக் கீதம், வங்காளம் தானே? ஒரு தொன்ம மொழியோட சொந்தக்காரனுக்கு தேசிய மொழி இந்திதானே? தேசிய இனத்தோட மொழி அங்கீகாரமே இல்லாம அலையுதே! தமிழைப் பேச அவமானப்படற அளவுக்கு உன் மூளையைச் சலவை செய்து விட்டுட்டானே.

நம்மப் பேரு தமிழர்கள். நம்ம நாக்கில என்ன மொழி இருக்குது ஆங்கிலம். இந்த ஊர்ல எங்கயாவது தெரு இருக்கா? Street இருக்கு. நிழற்சாலை, பிரிவு, கிடையாது. Avenue, Sector தான் இருக்குது. இந்தத் தெருக்களில் எத்தனை வெள்ளைக்காரன் நடந்து போயிட்டு இருக்கான்? பிறகு எல்லாப் பெயர்களும் ஆங்கிலத்துலே? ஏன் பண்றோம்னு தெரியாமலேயே செய்யிறது, ரொம்ப மேம்போக்கா இருக்கிறது, எனக்கென்னங்கிற கீழ்த்தரமான எண்ணம் இவையெல்லாம்தான் இதுக்குக் காரணம்.

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிச்சு நாங்க போராடினப்ப எவ்வளவு எதிர்ப்பு வந்தது. இவங்க யாரு கேட்கிறதுக்குன்னு கேட்டாங்க. நாங்க கேட்காம பிரிட்டிஷ் இளவரசரா வந்துக் கேட்பார், ‘தமிழ்ல பெயர் வைங்க’ன்னு?

எவ்வளவு கொச்சையான உரையாடல்களை தமிழ் சினிமா பேசிட்டு இருக்கு. உலக நாடுகள்ல தவமாய் தவமிருந்து படத்தைப் பார்த்தா தமிழ்ப்படம்னு தெரியும். 7ஜி ரெயின்போ காலனி, நியூ படத்தைப் பார்த்தா தமிழ்ப்படம்னு சொல்ல முடியுமா? அதில் ஏதாவது நம்மளோட வாழ்க்கை இருக்கா? உரையாடல்கள் இருக்கா? ஆனா படம் எடுக்கிறது, வெற்றி பெறுவது எல்லாம் தமிழனோட காசுலே! இது என்ன நியாயம்? சேரன் படத்திலயோ, பாலா படத்திலயோ நடிகையோட தொப்புளும், தொடையும் தெரியற மாதிரி காட்சியமைப்பு இருக்குதா? சிம்ரனை இடுப்பைக் காட்டாம நடிக்க வைச்ச ஒரே இயக்குனர் பாலாதான். ஏன்னா அவருக்கு சமூக அக்கறை இருக்குது.

‘இல்லை நான் இஷ்டத்துக்குத்தான் இப்படித்தான் எடுப்பேன்’னு திமிரா எடுப்பேன்னு சொல்றவங்களை என்ன செய்ய முடியும், ஆத்திரம் தாங்காம கொலைதான் செய்யலாம்.

இதுலே, ‘ஆபாசத்தைத் தான் மக்கள் விரும்பறாங்க’ன்னு சொல்றதைத் தான் என்னாலே தாங்க முடியலை. என் மக்களை குறைத்து மதிப்பிட நீ யார்? எவனை கீழ்த்தட்டுன்னு கை காட்டுறியோ அங்கேயிருந்து தான் நீ வந்தேன்னு ஏன் மறந்து போயிட்ட? தமிழ்த் திரைப்படத்தில சில ஏரியாக்களை ‘சி’ சென்டர்னு சொல்லுவாங்க. அந்த ‘சி’ சென்டர் ஆட்களுக்கு ரசனை கிடையாதுன்னும் சொல்வாங்க. தமிழகத்தின் மிகச் சிறந்த படைப்பாளிகள் அனைவரும் இவங்க ‘ச்சீ’ன்னு சொல்ற ‘சி’ சென்டரில் இருந்து வந்தவங்கதான். நீ ரசனைக் குறைவுன்னு சொல்ற இடத்தில் இருந்து தானே பெரிய ரசனை மேம்பாட்டோடு படம் எடுத்தவனும் வந்திருக்கான். அவனை எப்படி நீ குறைச்சு மதிப்பிட முடியும்?

இயக்குனர் என்பதைத் தாண்டி நீங்கள் ஒரு மிகச் சிறந்த மேடைப்பேச்சாளர். உங்களோட பேச்சு எல்லோராலும் விரும்பிக் கேட்கப்படுறதுக்கு என்ன காரணம்?

நான் அடிப்படையில் மிகவும் வெளிப்படையானவன். ஒருவனது பேச்சு என்பது எண்ணத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. பாதிக்கு மேல எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்கள் இருக்கிற இடத்தில் எழுத்தின் மூலம் மாற்றத்தை கொண்டு வந்து விட முடியாது. அதனால தான் நான் பேச்சை நம்பினேன். அதுக்காக என்னை பெருசா தயார்படுத்திக்கலை. மனசுக்குள்ள நிறைய விஷயங்களும், கோபங்களும் இருந்தது. திடீர்னு ஒரு மேடையில பேசச் சொன்னப்போ கொட்டித் தீர்த்தேன். அதுக்கு ரொம்ப வரவேற்பு இருந்தது. காரணம் நான் உண்மையாக மக்களின் மீது அக்கறையோடு பேசினேன். அவங்க மேல உள்ள பிரியத்துலே, இப்படி இருக்கீங்களேன்னு கோபத்துல ரொம்ப மோசமா அவங்களைத் திட்டினேன். அவங்க வீட்டுப் பையன் பேசற மாதிரி என்னை அனுமதிச்சாங்க. என்னை ஆதரிச்சாங்க.

மேடையிலே ஏறும்போது கோர்வையாப் பேசணும், எதுகை மோனையோடு பேசணும்னு போகக்கூடாது. மக்களுக்கு முன்னாடி நிர்வாணமா நிக்கணும். நான் நின்னேன். நான் படிக்கிற, சிந்திக்கிற, சந்திக்கிறவர்களிடம் உள்வாங்குகிற விஷயங்களை பிரியத்தோடு என் மக்களுக்கு சொன்னேன். அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவ்வளவுதான்.

என்னைப் பேசக் கூப்பிடுகிற தம்பிகள் என்மேலே வைச்சிருக்கிற நம்பிக்கை ஒரு முக்கிய காரணம். ‘அண்ணன், கூப்பிட்டா வருவார்; தூங்கச் சொல்ற இடத்துலே தூங்குவார்; கொடுத்ததை சாப்பிடுவார்; நல்லாப் பேசுவார்’னு என்மேலே நம்பிக்கை வைச்சிருக்காங்க இல்லையா, அவங்களுக்காக பேசுகிறேன்.

காங்கிரஸ், அ.தி.மு.க. தவிர அனைத்து இயக்க மேடைகளிலும் பகுத்தறிவு, நாத்திகம், இலக்கியம் எல்லாம் குறித்தும் பேசியிருக்கிறேன். இஸ்லாமிய, கிறித்தவக் கல்லூரியிலும் நாத்திகம் பேசியிருக்கேன். ஒரு கிறித்தவக் கல்லூரியில் பேசும்போது அங்கிருக்கிற மாணவிகள், ஜெபமாலை எடுத்து எனக்காக உருட்டுறாங்க. ஜெபமாலை உருட்டுறதை நிறுத்திட்டு நான் பேசறதை கொஞ்சம் கேளுங்கன்னு சொன்னேன். நிக்காம உருட்டுறாங்க. ஒரு சைத்தானை மேடையில் ஏத்திட்டாங்களேன்னு புலம்பிட்டே உருட்டுறாங்க. நீங்க எனக்காக ஜெபிக்கறீங்க, நான் உங்களுக்காக பேசறேன். இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்னு சொல்லிட்டு பேசிட்டுத் தான் வந்தேன்.

அய்யா பெரியார் சொன்னமாதிரி இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னாடி எவனோ சொன்னதை நம்பறீங்க, நான் உங்க கண்முன்னாடி நிகழ்காலத்தில நடக்கிற நிஜத்தைச் சொன்னா நம்ப மாட்டேங்கறீங்களேன்னு தான் கேட்க வேண்டியிருக்குது. பூமி தட்டைன்னு எழுதிட்டான் பழைய ஏற்பாட்டில். அதன்படி பூமியைப் பாயாய் சுருட்டி கடல்ல போட்டான்னு இங்க ஒருத்தன் ஒரு கதை எழுதிட்டான். பூமி உருண்டைன்னு அறிவியல் நிரூபிச்ச பின்னாடி அவங்களால தாங்கிக்க முடியலை. சொன்னவனை கல்லாலே அடிச்சுக் கொன்னாங்க. இறந்துபோன போப் இரண்டாம் ஜான்பால்தான் தானே கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி இதுக்காக உலகத்துகிட்ட மன்னிப்பு கேட்டார். ‘கலிலியோவை கல்லால் அடிச்சுக் கொன்ன ஒரு மாபெரும் தவறை இந்த மதம் செய்து விட்டது. அதற்காக நான் உலகத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’. எத்தனை ஆண்டுகள் கழித்து மன்னிப்புக் கேட்டார்.

அந்த மதத்தை எப்படி என்னால மன்னிக்க முடியும்? இந்தச் சமூகம், மதம் குறித்து நமக்குப் பல கேள்விகள் இருக்கு. பாவங்கள் மன்னிக்கப்படுதுன்னு சொல்றதே இந்த உலகத்தின் மிகப்பெரிய குற்றம். பாவங்கள் எப்படி மன்னிக்கப்படலாம்? பாவங்கள் செய்யக்கூடாது, தவறுகள் செய்யக்கூடாதுன்னு தானே நீங்க சொல்லணும். அது மன்னிக்கப்படுதுன்னு சொன்னா எவன் தவறு செய்யாம இருப்பான்? உலக கத்தோலிக்க திருச்சபை உட்பட அனைவரிடம் நான் பகிரங்கமா ஒருக் கேள்வியை வைக்கிறேன். ஒரு தடவை வருந்தி பாவமன்னிப்பு கேட்கிற, பாவங்களை ஒப்புக்கொடுக்கிற எந்தக் கத்தோலிக்க கிருஸ்த்தவனாவது அதன்பிறகு பாவங்களே செய்யலைன்னு சொல்ல முடியுமா? அடுத்த வாரம் வைக்கிற ஜெபவழிபாட்டிலும் அவன் பாவத்தை ஒப்புக்கொடுக்க வரத்தானே செய்யிறான். ஏன்னா இங்கு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஜார்ஷ் புஷ் ஈராக் மேல குண்டுவீசி அழிச்சுட்டு, பாவமன்னிப்பு கேட்டுட்டு போயிட்டே இருக்காரே? யார் போய்க் கேட்கிறது அவரை?

கர்த்தர் மன்னிப்பார் அவனை, ரட்சிப்பார் இவனை. என்னத்தைக் கிழிப்பார்னு கேட்கிறேன் நான். பிறக்கிற ஒவ்வொரு மனிதனின் தலையிலயும் கடவுள் இவன் இத்தனை வருஷம் உயிரோட இருப்பார்னு எழுதியிருக்காராம். அப்ப இடையில கொல்ல நாம யாரு? நம் வாழ்நாளில் செய்யிற நியாய, அநியாயங்களுக்கேற்ப நாம சொர்க்க, நரகத்துக்கு போவோம், இறைவன் அங்கு இறுதித் தீர்ப்பை எழுதுவான்னு தான் எல்லா மதங்களும் சொல்லுது. அதை ஆழமா நம்புறாங்க. மதம் என்கிற கட்டிடமே இதை வைத்துத்தான் கட்டப்பட்டுள்ளது.

கெட்டவன் தான் இறுதிநாளில் நரகத்துக்கு போவானில்ல, அப்புறம் எதுக்கு நாட்டில இத்தனை போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு வைச்சி நீங்க தண்டிக்கறீங்க? விட்டுடுங்க. எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்கட்டும். சதாம் உசேன் கெட்டவனா, இருக்கட்டும். அவன் நரகத்துக்கு போய் தண்டனை அனுபவிக்கட்டும். அல்லா அவனை பார்த்துக்கட்டும். இடையில் நீ எதுக்கு தூக்கில போடறே? அப்ப நீ மதத்தை நம்பலை. கடவுளையோ, சொர்க்கம் நகரம் இருக்கிறதையோ நீ நம்பலை. அதுதானே உண்மை.

என் அருமை மக்களே! எது ஒன்றையும் போராடித்தானே பெற வேண்டியிருக்கிறது. ரேஷன்ல அரிசி போடலையா, தண்ணீர் வரலையா, பஸ் கட்டண உயர்வா, சாலை சரியா இல்லையா எல்லாத்தையும் போராடித்தானே வாங்க வேண்டியிருக்குது. அப்புறம் எதுக்கு பூஜை, புனஸ்காரம், கடவுள், கோவில்?

நீங்க தீவிரமா மதங்களை மறுக்கிறவங்களா இருக்கீங்க. இதனால்தான், இந்துத்துவா கொள்கைகளைக் கடைப்பிடிக்கிற அதிமுகவுக்கு எதிரா கடந்த சட்டமன்றத் தேர்தல்லே பிரச்சாரம் பண்ணீங்களா?

ஜெயலலிதா ஆட்சிக்கு வரக்கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். அவங்களோட தமிழீழ எதிர்ப்பு ஒரு முக்கிய காரணம். இன்னொரு காரணம் ‘ஆட்டின் மூளைகூட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சிந்திக்கும். ஆரியமூளை ஒருபோதும் சிந்திக்காது’ங்கிறதுல நான் ரொம்ப உறுதியா இருப்பது. போன ஆட்சியில் நம் கொள்கைகளுக்கு ஒத்துவராத சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அதில் ஒன்று மதமாற்ற தடைச்சட்டம். மதம் மாறுவதை எதுக்குத் தடை செய்யணும்? எனக்கு மதத்திலயோ, சாதியிலயோ நம்பிக்கை இல்லைன்னாலும் ஒருவன் மதம் மாறுவதைத் தடுக்க நீ யார்னு கேட்கறேன்.

இங்க இருக்கிற கிறிஸ்தவனும், இஸ்லாமியனும் யாருன்னு இந்த ஜெயலலிதாவுக்கோ, பாரதீய ஜனதாவுக்கோ தெரியுமா? அப்துல்கலாம் என்ன பாபரோட பேரனா? ராமநாதபுரத்தில இருக்கிற இப்ராஹிமும், இஸ்மாயிலும் அக்பருக்கும், ஹூமாயினுக்கும் சொந்தக்காரனா? என் சொந்த அண்ணனும் தம்பியும்தானே அவங்க. அவன் ஏன் இஸ்லாமியன் ஆனான்? நீங்க சாதியக் கொடுமை பண்ணினீங்க. அவன் வெளியப் போனான். இஸ்லாத்துக்கு போனான், அவன் சுன்னத்தை பண்ணி இஸ்லாமியனா ஏத்துக்கிட்டான். ஆனா இங்க இருந்த வரைக்கும் நீங்க எங்களை கொடுமை தானே பண்ணிணீங்க. நீயும் இந்து, நானும் இந்து. ஆனா நீ ஐயர், நான் பறையன். இது ஏன்? இந்தக் கேள்விக்கு உங்கிட்ட என்ன பதில் இருக்குது?

நாங்க எழுதிய ராமாயணமும், மகாபாரதமும் உனக்கு வேணும். நாங்க எழுதின கதையில் வரும் கற்பனை கதாபாத்திரமான ராமுனும், கிருஷ்ணனும் உங்களுக்கு வேணும். நாங்க மட்டும் வேணாம். நாங்க உள்ள வந்து மந்திரம் சொன்னா உங்க கடவுளுக்கு புரியாது, தீட்டுன்னா எங்களுக்குக் கோவம் வராதா? அனைத்தும் தெரிந்த கடவுளுக்கு தமிழ் மட்டும் தெரியாதா? ‘நான் உள்ளே வரக்கூடாது, நான் அர்ச்சகர் ஆகக்கூடாதுன்னா உங்க கடவுளே எனக்கு வேணாம்’ன்னு தான் அவங்க எல்லாம் வேறு மதத்துக்குப் போனாங்க.

எந்த பார்ப்பான் ஐந்து ஏக்கர் நிலம் வைச்சு விவசாயம் பார்க்கறான்? உனக்கு சோறு எவன் போடறான்? இளையான்குடியில் வேலை பார்க்கிற எங்க அப்பனும் ஆத்தாளும் உனக்கு அனுப்பறான் அரிசியும், சோறும், வெங்காயமும், கத்தரிக்காயும். அதைத் தின்னுட்டு நீ மணியையே ஆட்டிட்டு இருந்தா என்ன அர்த்தம்? நான் கேட்கிறேன், கடவுளை வணங்குவது ஒரு தொழிலா? ஒரு மணிநேரம் வணங்கிட்டு வந்து வயக்காட்டுலே உழைடா. நீ மணியையே ஆட்டிட்டு இருந்தா உங்களுக்கு யாரு சோறு போடறது? வந்து வேலை செய். குறைஞ்சபட்சம் சுத்தியிருக்கிற செடிகளுக்காவது தண்ணியை ஊத்து. உழைக்காம சாப்பிடணும், எல்லாராலயும் மதிக்கப்படணுங்கிறதுக்காக வேஷத்தை போட்டுட்டு நீங்க எங்களை ஏமாத்தறீங்க. இன்னும் எத்தனை காலத்துக்குப் பொறுத்திட்டிருக்கிறது இந்த ஏமாத்து வேலையை?

மதங்கிறது ஒருத்தனோட உரிமை. அவனுக்குப் பிடிச்ச மதத்தில் போய் இருக்கிறது அவனோட உரிமை. வறுமை, சாதியக் கொடுமை இதனால தான் ஒருத்தன் மதம் மாறுறான். பிடிச்சு எவனும் கர்த்தரை கும்பிடலை. எவன் பார்த்தான் கர்த்தர் வந்து இரட்சிச்சதை? ஆனால் அந்த மதத்தைச் சேர்ந்தவங்கதான் இவன் கஷ்டப்படும்போது ஓடிவந்தாங்க. கருமாத்தூர்ல அருளானந்தம் கல்லூரி கட்டினார். அதனால தான் ஐந்துகோவிலான் எம்.ஏ.படிச்சான். அமுல்ராஜ் வாத்தியார் ஆனான்.

நீங்க என்ன பண்ணினீங்க? எங்களை பள்ளிக்கூடமே போகக்கூடாதுன்னு பயமுறுத்து வைச்சீங்க. படிச்சா நாயாப் போயிருவே, பேயாப் பிறந்துருவேன்னு பயமுறுத்தி வைச்சீங்க. கிறிஸ்துவப் பாதிரிகள் இவன் குஷ்டரோகியா இருந்தாலும் தொட்டுத் தூக்கினான், படிக்க வைச்சான். பால்பவுடர் கொடுத்தான். கர்த்தரை கும்பிடுன்னான். கும்பிட்டான். மதம் மாறினான். இதுல என்ன தவறு இருக்குது? மதத்தை சட்டம் போட்டுத்தான் காப்பாத்தணும்னா என்ன மயித்துக்கு அந்த மதம்? மதம் என்பது விரும்பி இருப்பது.

இந்து மதம்னா என்ன, அது இங்க இருந்ததா, அது வெள்ளைக்காரன் எழுதினது. வெள்ளைக்காரன் நிர்வகிக்கும்போது இங்க இருக்கிற குறுநிலங்களை எல்லாம் ஒருங்கிணைச்சு அவன் தான் இந்தியான்னு பேர் வைக்கிறான். இந்தியாவில் உள்ள கிறித்தவன், இஸ்லாமியன், பார்சி போக மீதியுள்ளவன் இந்துன்னு அவன் தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில எழுதினான். அதுக்கு முன்னாடி இந்தியாவுலே மதம் இருந்தது. புத்தமதத்தை புத்தர் தோற்றுவிச்சார். அந்த மாபெரும் மேதையை அடிச்சு விரட்டுன ஒரு பாவத்துக்காவது இந்த இந்து மதம் அழிஞ்சு போகட்டுங்கிறேன் நான்.

என் மண்ணில் தோன்றிய ஒரு மாபெரும் ஞானியை நீங்க துரத்திட்டீங்க. இன்னிக்கு இலங்கையிலயும், சிங்கப்பூர்லயும் புத்தர் இருக்கிறார். ஒலிம்பிக்கில் தங்கத்தை வாங்கிக் குவிக்கறான் அவன். அவனோட ஓடமுடியுமா உங்களால. ஏன்னா புத்த மதம் ஒழுக்கத்தை போதிக்குது, தியானம் சொல்லித் தருது, உடற்பயிற்சி கலைகளை, வீரக்கலைகளையும் பிறப்பில் இருந்து கத்துக்கச் சொல்லுது. அப்பேர்ப்பட்ட மதத்தைத் தோற்றுவித்த மகானை நாட்டை விட்டே துரத்திட்டு, பெத்லகேம்ல ஆசாரி வேலை பார்த்துட்டிருந்த இயேசுநாதரையும், அரபு நாட்டில பேரீச்சம்பழக் காட்டில ஒட்டகம் மேய்ச்சிட்டிருந்த நபிகளையும் கோவில் கட்டி கும்பிடறாங்க. என் மண்ணில் தோன்றிய புத்தமதம் உலகம் பூராவும் இருக்கு, என் மண்ணில் இல்லையே ஏன்? இவர்கள் (பார்ப்பனர்கள்) செய்த சதி. அவன் கடவுள் இல்லைன்னு போதிச்சான், அறிவே கடவுள்னு சொன்னான். அய்யய்யோ நம்ம பொழைப்புக்கு வேட்டு வைக்கிறான்னேன்னு பயந்துட்டு அவன் மதத்தை இந்தியாவிலே இருந்தே துரத்திட்டாங்க.

சும்மா இந்து, இந்துன்னு குதிக்கக்கூடாது. சரி இருக்கட்டும். மதம் மாறின எல்லாரையும் மறுபடியும் இந்து மதத்துக்கே கூட்டிட்டு வருவோம். நீ எந்தச் சாதியில சேர்த்துப்ப? அப்பவும் தலித்தாத்தானே இருப்பான். அந்த மயித்துக்கு அவன் அங்கேயே இருந்துட்டுப் போகட்டுமே. உனக்கு இதில என்னப் பிரச்சனை? ஓட்டுப் போயிடும். அதுதானே காரணம்.

இந்த மாதிரியான இந்துத்துவா கொள்கைகளோட இருக்கிற அதிமுகவை எப்படி மறுபடியும் ஆட்சியிலே உட்கார வைக்க முடியும்? அதனால்தான் நானும், அண்ணன்களும் அதுக்கு எதிரா பிரச்சாரம் பண்ணினோம்.

கடந்த ஆட்சியின்போது தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்துலே தீவிரமாக இயங்கினீர்களே, அதைப் பற்றி சொல்ல முடியுமா?

என் மொழியை மீட்டெடுக்கணும். மொழியை மீட்டுட்டா இன உணர்வு, மான உணர்வு எல்லாம் வரும். அறிவார்ந்த ஒரு சமூகமா இந்த சமூகத்தை மாற்றியாகணும். அறியாமை இருளில் இருந்து இந்த மக்களை மீட்டெடுக்கணும். எங்க கையில் தந்தை பெரியார் கொடுத்த அறிவுச்சுடர் இருக்குது. அவருக்குப் பிறகு அண்ணா, கலைஞர், எனக்கு முன்னாடி வீரமணி போன்ற அண்ணன்கள், எனக்கு சமகாலத்தோழர்கள் எல்லார் கையிலயும் அந்த அறிவுச்சுடர் இருக்குது. அதோட ஓடிட்டிருக்கோம். நான் சோர்வுறும்போது அதை என் தம்பிகள் கையிலயோ, தோழர்கள் கையிலயோ கொடுத்துடுவேன். அவங்க அடுத்து ஓடுவாங்க. இது ஒரு நெடுந்தூர ஓட்டம். இதன் லட்சியமே தேசம் முழுக்க இந்த அறிவுச்சுடரை பரவவிடுவது தான்.

தமிழ் ஈழம் எங்களோட பிரதான இலக்கு. அதுக்காக போராட தலைவர் அங்க இருக்காரு. அந்தப் போராட்டத்தோட நியாயத்தை, தனிநாடு கேட்பதற்கான காரணத்தை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்றது தான் இங்கே இருக்கிற என்னை மாதிரியான ஆட்களோட வேலை. சாதாரணமா கேட்கிறான், ‘என்னப்பா பஞ்சம் பிழைக்கப் போன இடத்துலே தனிநாடு கேட்கிறீங்க’. அவனுக்கே மூணு மணி நேரம் பாடம் நடத்த வேண்டியிருக்கு. அவ்வளவுதான் இவன் அறிவு.

தன் இன வரலாறு, தான் யாரென்றே தெரியாத நிலையில் தான் இந்த இனம் இருக்குது. சினிமாப் பாட்டை மனப்பாடம் செய்த நேரத்தில திருக்குறளை படிச்சிருந்தா இந்த இனம் என்னைக்கோ முன்னேறியிருக்கும். இன்னிக்கு ஒரு அரசியல் இயக்கம் இதைக் கையில் எடுக்குதுன்னா அது பா.ம.க.தான். இந்த மண்மேலயும், மக்கள் மேலயும், மொழியின் மீதும் அக்கறை இருக்கிற ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் தான்.

தமிழில் பேசுங்கன்னு அவர் சொல்றதும் இங்க எவ்வளவு கிண்டலுக்குரிய செய்தியா இருக்குது. மகிழ்ச்சின்னு ஒரு தமிழ்ச் சொல் இருக்குது சந்தோஷம்னு தான் சொல்றோம். காரியத்தை விசேஷம், சோறை சாதம், கோயிலை ஆலயம்னு சொல்றோம். இப்படி எல்லாத்திலயும் சமஸ்கிருதம் கலந்திருக்குது. இந்தக் கலப்பு பத்தாதுன்னு இங்கிலீஷ் கலப்பு வேற.

பிரிட்டிஷ் மக்கள்கிட்டப் போய் தமிழில் பேசுங்கன்னு சொன்னா அது அயோக்கியத்தனம், கர்நாடகாவில் போய் தமிழ்ப் பெயர் வைங்கன்னு சொன்னா நான் இனவெறியன். என் சொந்த மக்கள்கிட்ட மம்மிக்கு பதிலா அம்மான்னு சொல்லுங்கடான்னு சொல்றது தப்புன்னா, இந்தக் கொடுமையை எங்க போய் சொல்றது?

உலக மொழியெல்லாம் படி, வேண்டாம்னு சொல்லலை. கூடவே தமிழையும் படின்னு தான் சொல்றோம். வீட்டுக்குப் பல வாசல்கள், ஜன்னல்கள் இருக்கலாம். தலைவாசலா தமிழ் இருக்கட்டுங்கிறது தான் எங்களோட வேண்டுகோள்.

சென்னை விமான நிலையம் தொடங்கி கன்னியாகுமரி வரை எத்தனை கடைகளோட பெயர் தமிழில் இருக்கு? தமிழ் எழுத்தை ஆங்கில உச்சரிப்பில் தான் எழுதறாங்க எத்தனை காலமா கெஞ்சறோம், கதறுறோம். யார்க்கிட்டே? சொந்த அண்ணன் தம்பிகிட்ட. கேட்க மாட்டேங்கிறானே? தமிழில் பெயர் வைக்காத கடைகளோட உரிமம் ரத்துன்னு சொன்னா ஒரே நாள்ல எல்லாமே மாறிடுமா, இல்லையா? இந்த இடத்தில நாம சர்வாதிகாரமாத் தான் இருக்கணும்.

எவனுக்கும் அக்கறை இல்லை. தமிழ்லே பெயர் வைங்கன்னு சொன்னப்போ, எவ்வளவு கேவலமா பார்த்தாங்க? இதே விஷயத்தை என்னைத் தவிர வேற யாராவது சினிமாவுலே பேசியிருந்தா காலியே பண்ணியிருப்பாங்க. என்கிட்டே இவங்களுக்கு பயம் இருக்கு. ‘அவன் பெரிய முரடன். எது இருந்தாலும் வீடு புகுந்து அடிப்பான். எப்பவும் அவனைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கு’ன்னு பயப்படுறான். இல்லைன்னா எப்பவோ காலி பண்ணியிருப்பான்.

எங்களோட கோரிக்கையிலே நியாயம் இருக்குதா, இல்லையா? நாம நினைச்சா ஒவ்வொரு வார்த்தையா மீட்டெடுப்பதன் மூலம் இன்னும் பதினைந்தே வருடங்களில் மொழியை மீட்டெடுக்க முடியும். ஆங்கிலம் படிக்காதேன்னு சொல்லலை. ஆங்கிலத்தில் மட்டுமே படிக்காதேன்னு தான் சொல்றோம். எங்க ஊர்ல கத்தரிக்காய் எப்படி பயிர் பண்ணனுங்கிறதை எதுக்கு ஆங்கிலத்துலே படிக்கணும்? நாம என்ன ஆஸ்திரேலியாவிலேயா போய் விவசாயம் பண்ணப் போறோம்? நான் எல்லாம் ஆட்சிக்கு வந்தா தமிழ் பேசாத ஒரு பத்துபேரை பொதுவிடத்தில் நிறுத்தி சுட்டுக் கொன்னுடுவேன். அதுக்குப் பிறகு எல்லாரும் தமிழ் பேசுவாங்க இல்லே? ஏன்னா இங்க உயிருக்கு மட்டும்தான் பயப்படுவான். இல்லைன்னா பணம் குடுங்க. இந்த இரண்டும் தான் வேலைக்காகும்.

நீங்க திராவிட, மார்க்சிய, தமிழ்த்தேசிய இயக்கங்களோட மேடைகளில் பேசறீங்க. ஒரு பெரியாரிஸ்டா இவர்களின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அய்யா அளவுக்கு நாம எதுவும் செய்திடலை. அவர் ஒரு தனிமனிதா செய்ததை இத்தனை இயக்கங்கள் சேர்ந்தும் செய்யலைன்னு தான் சொல்லுவேன். ஆனா இந்த இயக்கங்களும் இல்லைன்னா முள்மண்டிய ஒரு சுடுகாடா, மூடப்பழக்கங்களில் சிக்கின ஒரு நாடாத்தான் நம் நாடு இருக்கும். தமுஎச, DYFI, பெரியார் திராவிடர் கழகம் மாதிரியான இயக்கங்களில் இளைஞர்கள் சேரும்போது அவன் தறிகெட்டு போகாம நெறிப்படறதுக்கான வாய்ப்புகள் அதிகரிக்குது. அங்க மனித நேயம் போதிக்கப்படுது. என்ன சாதின்னு கேட்காம இணைச்சிக்குறாங்க. இருந்தாலும் இயக்கங்களோட இந்த வேகம் போதாது.

மார்க்சிஸ்டுகளுக்கு இருக்கிற முக்கியப் பிரச்சனை வாக்கு அரசியல். அதனால தீவிரமான பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு போனா நிராகரிக்கப்படலாம்னு பயந்துட்டு மிக மெதுவா நகர்றாங்க. அதனால தான் அவ்வளவு பெரிய மார்க்சிய தத்துவம் இந்த மண்ணில் பின்தங்குது. எட்டு சீட்டுக்காக கையேந்த வேண்டிய நிலை இருக்குது. ஆனால் இந்த அரசியலும் இல்லைன்னா கூலி உயர்வு கேட்டுப் போராடற சிறு குழுக்களாத் தானே இருக்க முடியும்?

என்னோட அடுத்த படத்துலே (வாழ்த்துக்கள்) ஒரு காட்சி வருது. ஒரு முதலாளி வீட்டுலே லெனின் படம் இருக்கும். முதலாளிகிட்டே ஒருத்தர் கேட்பார், ‘என்ன இவர் படமெல்லாம் இருக்கு?’. அதற்கு அவர் பதில் சொல்லுவார், ‘ஏன்டா எல்லா நாளும் நாங்க தொழிலாளியாவே இருக்கணுமா? நாங்க முன்னேறக் கூடாதா?’.

தொழிலாளி முதலாளி ஆகும்போது தான் நினைக்கிற சமத்துவத்தைக் கொண்டு வந்துட முடியும். அதுக்கு அதிகாரம் தேவைப்படுது. அதிகாரம் கிடைக்கும்போது தான் நினைத்ததை அடைய முடியும். அதற்கு அரசியல் அவசியப்படுது. இல்லாம வெறும் போராட்ட அளவிலேயே நின்னுக்கிட்டுருந்தா மக்களுக்கு சோர்வு வந்துடும்.

அதனாலே அரசியலுக்கு வந்தது பிழையில்லை. அரசியலுக்கு வந்த பின்னாடி அவங்க யாரும் கறைப்படவில்லையே. நல்லக்கண்ணு மாதிரி, மோகன் மாதிரியான இயக்க முன்னோடிகளுடைய எளிமை, இங்கே வேற யாருகிட்டே இருக்கு? ஆனாலும் அவங்களோட தீவிரம் பத்தாதுன்னுதான் எனக்குத் தோணுது.

மார்க்சிய மேடையிலேயே கடவுள் இல்லைன்னு பேசின ஆளு நான் தான். தோழர்கள் அதிர்ச்சியாகி ‘என்ன இப்படி திடீர்னு பேசறீங்க, கொஞ்சம் கொஞ்சமாத் தான் சொல்லணும்’னாங்க. ‘எப்ப நான் செத்த பிறகா’ன்னு கேட்டேன். இத்தனை வருடம் இவர்கள் நாத்திகம் பேசாததே தவறு. மார்க்சிய மேடைகளில் கடவுள் இல்லைன்னு பகிரங்கமா சொல்லணும். அப்பதான் ‘கடவுள் இல்லைன்னா வேற என்ன இருக்கு’ன்னு யோசிப்பான். மனித இனம் எப்படித் தோன்றியது, இங்கிருக்கிற பொருட்கள் எப்போது தோன்றியது போன்ற மார்க்சின் சமூக விஞ்ஞானத்தை போதிக்காம எப்படி மார்சியத்தை வளர்க்க முடியும்?

இன்னிக்கு சேகுவேராவும், பகத்சிங்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டியா இருந்திருக்க வேண்டாமா? ஆனால் இங்கே விஜய்யும், அஜீத்தும் தானே இளைஞர்களுக்கு வழிகாட்டி. காரணம் கம்யூனிஸ்ட்களோட நிதானப் போக்கு.

இயக்கங்கள் தங்கள் செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து விரைவுபடுத்த வேண்டிய நேரமிது. ஒரு காட்டை அழிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா ஒரேயடியா அழிச்சுடணும். ஒவ்வொரு மரமா வெட்டலாம்னு நினைச்சா ஒரு மரத்தை வெட்டி முடிக்கிறதுக்குள்ள அடுத்த மரம் துளிர்த்து விடும். அதுக்காக அவங்களோட பணியைக் குறைச்சு மதிப்பிடக் கூடாது. எவ்வளவோ பெரியத் தத்துவங்களை எல்லாம் கையில வைச்சிட்டு நாம மெதுவா பரிமாறுறோமோன்னு தோணுது. இன்னும் அதிகமா வேலை செய்தா சாதி, மதமில்லாத ஒரு சோஷலிச பூமியை சீக்கிரமா மீட்டுவிடலாம்.

இவ்வளவு பெரிய கோபத்தோடும், கொள்கைகளோடும் இருக்கிற உங்களோட லட்சியம் கடைசிவரை சினிமாவா இருக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு தோணுது. சினிமாவுக்கு அடுத்து என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பெண்ணை நேசிச்சேன். எனக்குத் தெரியும் அவங்களோட வாழ முடியாதுன்னு. ஆனா இன்னும் அவங்களை என்னால மறக்க முடியலை. அதுமாதிரிதான் விவரம் தெரியாத வயசிலேயே சினிமா மேல ஒரு ஆசை வந்திடுச்சி. நான் இந்த சினிமாவுக்கு பொருத்தமான ஆள் இல்லைன்னு இப்போது எனக்குத் தெரியுது. மானம், ரோஷம், சுயமரியாதை இருக்கிற எவனும் இந்தத் தொழிலுக்கு பொருத்தமானவன் கிடையாது.

நான் எடுக்கிறது தான் சினிமா, அதை வாங்கி விக்கிறதுக்கு ஒரு குழு, அதைப் பார்க்கிறதுக்கு என் மக்கள் இப்படி ஒரு நிலை வந்தால் சினிமா ஒரு சுகமான தளமாக இருக்கும். அது இல்லாதபோதும் இதை விட்டுட்டுப் போக முடியலை. விட்டுட்டுப் போனா தோத்துட்டு போறான்னு சொல்லுவாங்க. அதனாலே இங்க இருந்துட்டே, இந்த ஊடகத்தை எப்படி என் மண்ணுக்கேத்த, மக்களுக்கேத்த ஊடகமா மாத்த முடியும்னு தான் யோசிக்கறேன். நானும் இங்க இல்லைன்னா ஒரு கலகக்காரன், கிளர்ச்சியாளன் இங்க இல்லை. என்னை மாதிரி நூறு பேராவது உருவாகிட்டா எனக்கு இங்கே வேலை இல்லை.

தம்பி படத்தோட தணிக்கையில் ஒரு அதிகாரி, ‘அய்யய்யோ என்ன நீங்க ஏன் இவ்வளவு இடதுசாரி இருக்கீங்க? சே ஒரு தீவிரவாதி, அவரோட இயக்கங்களை உலக நாடுகள் தடை பண்ணியிருக்கு. அவரைப் போய் படத்தில காட்டியிருக்கீங்களே’ அப்படின்னார். ‘சே தீவிரவாதியாவே இருக்கட்டும். அவரை நெஞ்சிலத் தாங்கின என்னோட கதாநாயகன் யாரையுமே கொலை பண்ணலையே. இதில என்ன தப்பு’ன்னு கேட்டேன்.

படத்துல ஒரு இடத்தில மயிருன்னு ஒரு வார்த்தை வரும். ‘ஒரு பெண் அதிகாரி இந்த மாதிரி வார்த்தையெல்லாம் பயன்படுத்தக்கூடாது, அதை எடுத்துடணும்’னு வாதம் பண்ணினாங்க. அவங்ககிட்ட கேட்டேன். ‘மயிரு என்ன அவ்வளவு கெட்ட வார்த்தையா’?

‘ஆமா அநியாயத்துக்கு கெட்ட வார்த்தை’ன்னாங்க. ‘அப்புறம் எதுக்காக அதை அவ்வளவு நீளமா வளர்த்து கோவில்ல போய் காணிக்கையா குடுக்கறீங்க. மோசமான விஷயத்தை தான் கடவுளுக்கு தருவீங்களா, அப்படின்னா உங்க கடவுளை நீங்க அவ்வளவு கேவலமானவராத்தான் மதிக்கிறீங்களா’ன்னு கேட்டேன். அந்தம்மா பதிலே சொல்லலை. இந்த மாதிரி பல நெருக்கடிகளைத் தாண்டித்தான் ஒரு நல்ல படம் குடுக்க முடியுது. என்னை மாதிரி ஆட்களாலத் தான் இவங்களோட எல்லாம் போராட முடியுது.

படத்தோட தயாரிப்பாளருக்கோ, நடிச்சவருக்கோ சே, மாவோ பத்தியெல்லாம் தெரியாது. தெரிஞ்சா படத்தை இயக்கியிருக்கவே முடியாது. இங்க ஒரு விஷயத்தை சொல்றதுக்குள்ள நம்மளை எவ்வளவு தளர்ச்சியடைய வைக்க முடியுமோ அவ்வளவு தளர்ச்சியடைய வைச்சி, வீரியமில்லாத ஆளா மாத்திடுவாங்க. தமிழ் வார்த்தைகளில் உரையாடல்கள் எழுதினாலே பார்க்கிறவன் சிரிச்சிடுவான் வேண்டாம்னு தடுத்துடுவாங்க. என் சொந்த மண்ணில், சொந்த மொழியில் படம் எடுக்கிறதுக்கே அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குது.

இதையெல்லாம் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு இப்ப சொற்ப பொருளாதாரத் தேவை இருக்கிறது. ஊரில் அம்மாவுக்கு ஒரு வீடு, என்னை சார்ந்திருக்கிற என் தோழர்கள், தம்பிகளுக்கான தேவைகள். எப்ப சீமான்கிட்ட போனாலும் வயிறார சாப்பிடலாம், காசுக் கேட்டா கடன் வாங்கியாவது தருவாங்கிற நம்பிக்கையில் என்கிட்ட வருகிறவர்களுக்கு உதவணும். இதுக்கெல்லாம் கொஞ்சம் பொருளாதாரம் தேவை. அதுக்காக இந்தத் தொழிலை செய்ய வேண்டியிருக்குது. இதிலும் என் கொள்கைக்கு விரோதமாக நடக்க வேண்டியிருந்தால் இதை விட்டுட்டு போய் பெட்டிக்கடை வைச்சிடுவேன். விவசாயம் செய்வேன், எதுவும் சரிவரலைன்னா சாராயம் கூட காய்ச்சுவேன். எப்படியும் பிழைச்சுக்கலாம். ஆனால் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.

இதைத்தவிர சினிமாவில் இருந்துட்டே மாற்று வேலைகள் செய்யும் எண்ணமும் இருக்கு. நல்லப் படங்கள் எடுக்கிற ஒரு தயாரிப்பாளரா மாறலாம். அதுக்கு முதலில் பணம் தேவை, சீமானை நம்பி யாரும் பணம் தரலாங்கிற நம்பிக்கையை உருவாக்கணும். இதைத்தவிர நான் செய்ய வேண்டிய சமூகப்பணிகள் நிறைய இருக்கிறது. பேச்சுதான் எனக்கு ஆயுதம். பேசிப் பேசியே இவங்களை மாத்தணும். யாரோ ஒருத்தரோட பேச்சு தான் என்னை மாத்தியிருக்கு. என் பேச்சும் நிச்சயம் சிலரையாவது மாத்துங்கிற நம்பிக்கையில் தான் என் பயணம் தொடர்கிறது

ஹரிசனன் ந்னு பேரு வைக்க யாரடா நாயே!!


பெரியார் சாதித்தது என்ன?


வே.மதிமாறன் புத்தகங்கள்…


காதலாகி கடுப்பாகி

-வே.மதிமாறன்

“மதம்-ஜாதி எப்படி உண்மையில்லையோ, உண்மையில்லாத செய்திகளை உள்ளடக்கிய மனிதர்களை உயர்ந்தவர்கள்-தாழ்ந்தவர்கள் என்று பிரிப்பது எந்த அளவுக்கு மோசடியானதோ, அதற்குக் கொஞ்சமும் குறையாதது, அறிவாளி-முட்டாள்பேதம்.

அறிவாளிக்கான இலக்கணம் என்ன?

அறிவென்பது என்ன?

நிறையப் படிப்பதா?

பங்கு மார்க்கெட், ஹவாலா இன்னும் தனியார், அரசு நிறுவனங்களில் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை பரவிக் கிடக்கும் ஊழல்களுக்கு யார் பொறுப்பு?

புள்ளிவிவரங்களைத் தெரிந்துவைத்திருப்பதா?

அப்படியானால் இயந்திரங்களே மனிதனை விட மகத்தான அறிவு படைத்ததா?

புதிய பொருள்களைக் கண்டுபிடிப்பதா?

அப்படியானால் ஒரு நெல்லை நூறு நெல்லாக மாற்றியவன் யார்?

விஞ்ஞானம் என்பது என்ன?

குடுவைகளோடு மட்டும் குடித்தனம் நடத்துவதா?

அவர் மட்டும்தான் அறிவாளி என்றால், கால் செருப்புகளைக் கண்டுபிடித்தவன் விஞ்ஞானி அல்லாமல் வேறுயார்?

துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும், அணு உலைகளையும், அணுகுண்டுகளையும் கண்டுபிடித்து அழிவுக்கு வழிவகுத்தவர்களை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவனில்லையா நூறு நெல்லாக மாற்றுபவனும், காலணிகளைத் தைப்பவனும்.”

***

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி

-வே.மதிமாறன்

“பாரதியின் வார்த்தைகள்-இல.கணேசனின் குரல்வளையாக, ராம.கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

ஆம், அந்தப் புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது.”

“காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்கிறார்.

இதை காவுக்கு கா போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பார்க்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழங்கவும் முடியாது. தேசிய கவிஞனாக மட்டும் இருந்தால்,

‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்

கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’

என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.

சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன, உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரத்துக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?

“வேற ஒண்ணுமில்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’லாம், மார்க்சிய அடிப்படையில் புரட்சிகர திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜெகத்குருக்களிடம் தெரிவித்தால் – ‘ஜகத்குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு’ சொன்னாலும் சொல்வார்கள்-மார்க்சிய பாரதியவாதிகள்.”

***

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி நூலுக்கு எதிராக வந்த நூல்கள்

பாரதி கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய ஒரு மதிப்பீடு

-கி.பார்த்திபராஜா

தம்பி நான் ஏது செய்வேணடா?

பாரதி பற்றி பாரதிபுத்திரன்

இந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம்

-ந.இரவீந்திரன்

***

பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்

-மருதையன்

-வே.மதிமாறன்

பாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றியான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம்.

“பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லை” என்று பாரதி கூறிய அதே காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசுக்குள் நுழைகிறார். நகராட்சித்தலைவர் பதவியைத்துறக்கிறார். நீதி மன்றத்தையும் அவர் புறக்கணித்தன் காரணமாக, வியாபாரத்தில் வரவேண்டிய ரூ.50,000 தொகையையும் இழக்கிறார்.

“வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக் கொடும்; நான் இனாமாகவே வாதாடி வசூலித்துத் தருகிறேன்” என்று சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற வக்கீல் சொன்னபோது, “அது நெறியற்ற செயல்” என்று நிராகரிக்கவும் செய்தார்.

“பாரதியின் நிலைபாடு முதிர்ச்சியடையவில்லை” என்று வருத்தப்படுகிறார் சிவதம்பி. அவனோ பார்ப்பன தேசியத்தின தீர்க்கத்தரிசியாகத் தன்னை நிரூபித்துக் கொள்கிறான். அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் 80 ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு இப்போது அவசர அவசரமாகச சேரிகளுக்கு விஜயம் செய்யும் சங்கராச்சாரிதான், பாரதியுடன் ஒப்பிடும்போது தொலைநோக்கற்ற முண்டமாகத் தெரிகிறார்.

-மருதையன்

மேம்போக்காகப் பார்த்தால் சங்கராசச்£ரிகூட முற்போக்காகத்தான் தெரிவார். பிரச்சனைகளோடு வைத்து நெருக்கிப் பார்த்தால்தான், முற்போக்குப பேசுகிற பல பேர் உள்ளேயும் சங்கராச்சாரி ஒளிஞ்சிக்கிடு இருக்கிறது தெரிய வரும்.

அப்படி-மதமாற்றம், பார்ப்பனரல்லாததார் இயக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு எனறு பாரதியை நெருக்கிப் பிடித்தபோது. அவர் தொகாடியா, கிரிராஜ் கிஷோர் போல் பார்ப்பனரல்லாதா மக்களுக்குச் சூலம் கொடுக்கப் புறப்பட்டு விடுகிறார்.

நம் பேராசரியப் பெருமக்கள் ‘பாரதி சூலம் கொடுக்கவில்லை. கோயிலுக்கு சுண்ணாம்பு அடிக்கிறான்’ என்று அவரைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்களின் இந்து உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாரதி சூலம் கொடுத்தால், இவர்கள் ராமன் கோயில் கட்ட செங்கல் கொடுக்கிறார்கள்.

-வே.மதிமாறன்

***

வே. மதிமாறன் பதில்கள்

…..அதற்கு விழிப்புணர்வு ஆசிரியர், காமராஜ், “கேள்வி பதில் பக்கத்தை ஆரம்பிக்கலாம். அதை நீங்களே எழுதுங்கள்” என்றார்.

“நான் எழுதுவதை விட, மிக பிரபலமான எழுத்தாளர்கள் யாரையாவது எழுத வையுங்கள். அது பத்திரிகைக்கு விளம்பரமாகும்” என்றேன். ஆனால் அவர் என்னையே எழுதும்படிக் கட்டாயப்படுத்தினார்.

‘சோ, சுஜாதா, மதன், சுந்தர ராமசாமி, ஞாநி’ இவர்களாலேயே கேள்விகளுக்குப் பதில்கள் எழுதமுடியும்போது, என்னால் முடியாதா என்ன?’ என்று துணிந்து ஒத்துக் கொண்டேன். ‘விழிப்புணர்’வில் ஆரம்பித்து ‘சமூக விழிப்புணர்வு’ வரை மொத்தம் ஆறு இதழ்களில் பதில்கள் எழுதினேன்.

என் பதில்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

மாரக்ஸ், பெரியார், அம்பேத்கர் பற்றியும் கலை, இலக்கியம் குறித்தும் ஆழ்ந்த ஞானம் உடையவர்களில் இருந்து இவைகள் பற்றி எதுவும் தெரியாத நபர்கள் வரை பதில்கள் பலரின் கவனத்தைக் கவர்ந்தது.

அந்த கவனம் – பாராட்டுதலாக, கோபமாக, எரிச்சலாக, பொறாமையாக பல்வேறு வடிவங்களில் `அவதாரம்` எடுத்தது.

நமது பதில்களின் தாக்கத்தால், ‘பத்தவைச்சிட்டியே பரட்ட’ என்கிற பாணியில் புதிதாக சில பத்திரிகைகளிளும் ‘கேள்வி பதில்’ பகுதியைத் துவங்கின.

சில எழுத்தாளர்களும் ஆர்வ மிகுதியால் நமது பாணியை பின்பற்றி, கேள்விக்கு பதில்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். வாழ்த்துகள். இப்படி ஒரு அலையை உருவாக்கியதற்காகக் தோழர் கு. காமராஜுக்கு நன்றி சொல்லவேண்டும்.

முன்னுரையில் வே. மதிமாறன்…

பக்கங்கள் 88. விலை ரூ. 35.

அங்குசம் வெளியீடு

*****

நான் யாருக்கும் அடிமையில்லை

எனக்கடிமை யாருமில்லை

-வே. மதிமாறன்

விலை ரூ. 45

டாக்டர் அம்பேத்கரின் இந்துமத, பார்ப்பனிய எதிர்ப்பு வீச்சின் விஸ்வரூபம்.

நூலிலிருந்து…..

ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் போராடிய போராளியைப் புரிந்துகொள்ளுங்கள் தலித் அல்லாதவர்களே.

******

பெரியாரின் பூ மாலையும் போர்வாளும்

-வே. மதிமாறன்

விலை ரூ. 15

பெரியார் கொள்கைகளில், எம்.ஆர். ராதா-என்.எஸ்.கே வின் பங்களிப்பு.

எம்.ஆர். ராதாவையும், கே.பி. சுந்தராம்பாளையும் ஒன்றாக கருதுகிற தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு கண்டனம்

நூலிலிருந்து…..

பொதுவாக பார்ப்பன ஜாதிவெறி, தமிழர்களுக்கு தீமையையே செய்திருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பார்ப்பனியம் தமிழர்களுக்கு நன்மையை செய்தது.

ஆம். அது தந்தை பெரியார் என்கிற மகத்தான தலைவனை தமிழர்களுக்குத் தந்தது.

தொடர்புக்கு;

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

பாரதி புத்தகலாயத்தின் 100 புத்தகங்கள் – ஒரு பருந்துப் பார்வை


ச.தமிழ்ச்செல்வன்

எங்கிருந்து தொடங்குவது? யார் தொடங்குவது? என்று நெடுங்காலம் புகைந்து கொண்டிருந்த தயக்கங்களை எல்லாம் உடைத்து வெள்ளம் போலப் பாய்ந்து வந்துள்ள பாரதியின் 100 புத்தகங்கள் தமிழகக் கலாச்சார வரலாற்றில் ஒரு புதிய திறப்பு. நூலக இயக்கத்தில் வாசிப்பு இயக்கத்தில் ஒரு புத்தம் புதிய பக்கம். இவ்வளவு அதீதமான வார்த்தைகளுடன் இவ்வரிகளைத் துவக்குவதற்கான காரணம் இப்புத்தகங்கள் யாருக்காக எழுதப்பட்டுள்ளன? யாரால் எழுதப்பட்டுள்ளன? எப்படி யாரால் எடுத்துச் செல்லப்படுகின்றன? என்கிற கேள்விகளுக்கான பதில்களில் அடங்கியுள்ளது.

தமிழகத்தின் ஏழை எளிய உழைப்பாளி மக்களுக்காக துடிப்பு மிக்க இளைஞர்களுக்காக சமூக அக்கறை மிக்க மாணவர்களுக்காக புகை மூட்டத்திலிருந்து வெளியேறிச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தவிக்கும் பெண்களுக்காக இப்புத்தகங்கள் படைக்கப்பட்டுள்ளன. காட்சி இன்பம் தந்து மனங்களை வசீகரிக்கும் வண்ணமயமான அட்டைப்படங்களுடன் ஐந்து ரூபாய் விலையில் (பக்கம் அதிகமான ஒரு சில புத்தகங்கள் மட்டும் பத்து ரூபாய்) இது எல்லாமே நமக்கே நமக்கா என்கிற பிரமிப்பை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளன.

பாரதி புத்தகாலயத்தின் மாவட்டக் கிளைகள் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள ஜனநாயக இயக்க வீரர்கள், தொழிற்சங்கத் தொண்டர்கள், தொண்டுள்ளம் கொண்ட வாலிப சேனை, மாணவர்கள், பிரமுகர்கள், தலைவர்கள், எழுத்தாளர்கள், இடதுசாரிகள் என உள்ளூர் சமூகத்தின் உயிர்த்துடிப்பு மிக்க மக்கள் பகுதியினர் இப்புத்தகங்களை வீதி வீதியாக தங்கள் தோள்களில் சுமந்து செல்கிறார்கள். காணக்கிடைக்காத காட்சி. பல ஊர்களில் பெரியவர்கள் பேசிக்கொள்வது நம் செவிகளில் விழுகிறது. ‘‘ரொம்ப காலம் கழிச்சு நம்ம தோழர்கள் எல்லோர் கையிலேயும் புத்தகங்களை இப்பதான் பாக்கறோம் இல்லீங்க..” உலக புத்தக தினம் கடந்து போய்விட்டது. கண்காட்சிக்கென அறிவிக்கப்பட்ட தேதிகளெல்லாம் முடிந்து போய்விட்டன. ஆனால் துவக்கப்பட்ட புத்தகப் பயணம் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் இன்னும் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. அதை இனி யாரும் நிறுத்த முடியாது.

இப்புத்தகங்களை எழுதியவர்களில் சிலர் ஏற்கனவே அறிமுகமான எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தலைவர்கள். ஆனால் கணிசமான புத்தகங்களை புதிய கைகள் எழுதியிருக்கின்றன. பாரதி புத்தகாலயத்தின் (காலத்தின்) அறைகூவலை ஏற்று உழைப்பாளி மக்களுக்காக நீங்கள் எழுதாவிட்டால் பிறகு யார்தான் எழுத முடியும் என்கிற அன்புக் கட்டளையை மனதார ஏற்று குறுகிய காலத்துக்குள் வாசகர்களின் மீது கொண்ட தீராத அன்பிலும் அக்கறையிலும் பேனாவைத் தொட்டு எழுதி முடித்த புத்தகங்கள் இவை. நடைபெற்று வரும் கலாச்சாரப் போரின் புதிய படை வீரர்களான இப்புதிய படைப்பாளிகளின் கரங்களை இறுகப்பற்றி முத்தமிட்டு வரவேற்கிறோம். இன்னும் நூறு நூறு படைப்பாளிகள் பேனாவை எடுத்தாக வேண்டும். நூறு நூறு புத்தகங்கள் வந்தாக வேண்டும். ஆயிரமாயிரம் தோள்கள் அவற்றை நம் மக்களிடம் எடுத்துச் சென்றாக வேண்டும். அதற்கான உந்துதலை பாரதி 100 நிச்சயமாகத் தருகிறது.
இனி இப்புத்தகங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றி….

ஏமாளியும் திருடனும்
(நாட்டுப்புறக் கதைகள்)
கதைத் தேர்வும் விவாதக் குறிப்பும்: பேராசிரியர் ச.மாடசாமி
(32 பக்கம் ரூ 5.)

எட்டுக் கதைகளின் தொகுப்பு இது. தமிழ்நாட்டில் அறிவொளிக் காலத்தில் தொகுக்கப்பட்ட கதைகளும் சில வெளிநாட்டுக் கதைகளும் விவாதக் குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன. எவரும் வாசித்து விடக்கூடிய எளிய நடையில் கதைகள் சொல்லப்பட்டு எவரிடம் சென்று இக்கதைகள் வாசிக்கப்பட வேண்டும் என்கிற சுவாரஸ்யமான சிபாரிசுகளுடன் வந்துள்ள புத்தகம். உதாரணத்துக்கு ஒரு கதை. மறைந்த அறிஞர் ஏ.கே.ராமானுஜம் அடிக்கடி எடுத்துக்காட்டிப் பேசும் கதை. ஒரு ஊரில் ஒரு விதவைத் தாய். அவளுக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் கல்யாணம் ஆனதும் கிழவ¤க்கு மரியாதை குறைகிறது. மகன்களும் மதிப்பதில்லை. ஆகவே மருமகள்களும் மதிப்பதில்லை. நாலு பேரும் திட்டத் திட்ட தாயின் மனப்பாரம் பெருகி உடலும் பருத்து விடுகிறது. முடிவில் அவள் ஊரின் கடைசியில் நிற்கும் சத்திரத்தின் குட்டிசுவருடன் பேசத் துவங்குகிறாள். மூத்த மகன் ப்ச்சின் கொடுமையைச் சொல்லி அழவும் ஒரு சுவர் இடிந்து விழுகிறது. அவளுடைய பாரம் கொஞ்சம் குறைகிறது. இப்படியே நாலுபேர் கொடுமையும் சொல்லி முடிக்க நாலு குட்டிச்சுவர்களும் இடிந்து வீழ அவள் உடலும் மெலிந்து போகிறாள். இப்போது அவளைப் பார்க்கும் மக்கள் இரக்கப்படுகிறார்கள். இது கதை. இக்கதையை பேச்சுப் புறக்கணிக்கப்பட்ட குடும்பங்களிலும், வகுப்பறைகளிலும், அலுவலகங்களிலும் வாசிக்க வேண்டுமென தொகுப்பாளர் குறிப்பு முடிகிறது.

ஹோமியோபதி மருத்துவம்
ஓர் அறிமுகம்
டாக்டர் எஸ்.வெங்கடாசலம்
(40 பக்கம், ரூ.10)

அலோபதியின் பக்க விளைவுகளையும் பின் விளைவுகளையும் கண்டு விரக்தியடைந்த ஜெர்மானிய டாக்டர் சாமுவேல் ஹானிமன் M.D அவர்களின் கண்டுபிடிப்பான ஹோமியோபதி மருத்துவம் மற்றும் வீட்டிலேயே வைத்து அவசரத்துக்குப் பயன்படுத்தத் தக்க ஹோமியோ மருந்துகளின் பட்டியலும் அவை பற்றிய குறிப்புகளுமென ஒரு சரியான அறிமுகத்தை நமக்குத் தரும் புத்தகம் இது. பிற வைத்திய முறைகளில் மருந்து உட்கொண்டு இரைப்பைக்குச் சென்ற பிறகுதான் வேலை செய்ய ஆரம்பிக்கிறது. ஆனால் ஹோமியோபதியில் மருந்தின் மூலப்பொருள் நாவின் மிக நுட்பமான நரம்புத் தொகுதிகளின் வழியாக ஊடுறுவிச் சென்று துரிதமாகச் செயல்படத் துவங்குகிறது. ஹோமியோபதியிலே போனா ரொம்ப லேட்டாகுமே என்கிற மூடநம்பிக்கையை உடைத்துத் தகர்க்கும் பல அவசியமான தகவல்களை இப்புத்தகம் நமக்குத் தருகிறது. ஹோமியோபதியில் நோய்க்கு மருந்து தருவதில்லை. மாறாக நோயாளிக்கு அதாவது நோயாளியின் உடல் நல சரித்திரம், அவரது மரபுக்கூறு, பழக்க வழக்கங்கள், அவரது பசி, தூக்கம், கழிவு, விருப்பு வெறுப்பு, ஆசைகள், கோபப்படும் விதம், குடும்பச்சூழல் எனப் பலவற்றையும் முழுமையாகக் கணக்கில் கொண்டு நோயாளிக்கு மருந்து தரப்படுகிறது. வேறு மருத்துவத்துக்கே போகாதீர்கள் என்கிற அடிப்படைவாதம் இப்புத்தகத்தில் இல்லை. தேவைப்படும்போது சிறப்பு நிபுணர்களையும் பார்த்துக்கொண்டு அச்சிகிச்சையுடன் ஹோமியோ மருந்தையும் இணைத்துக் கொண்டால் விரைவில் நலம் பெறலாம் என்கிறது புத்தகம். தவிரவும் லண்டனைச் சேர்ந்த டாக்டர் எட்வர்டு பேட்ச் அவர்களின் மலர் மருத்துவம் பற்றியும் லேசான அறிமுகத்தை இந்நூல் செய்கிறது. மிக முக்கியமாக ஒரு மருத்துவரின் பார்வையிலிருந்து பேசாமல் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சாதாரண ஏழை மக்களின் மருத்துவத் தேவைகளைக் கணக்கில் கொண்டு இப்புத்தகம் பேசுகிறது

கடவுள் உண்டா இல்லையா?
ஏ.பாலசுப்பிரமணியன்
(16 பக்கம் ரூ.5)

மதத்தின் பெயரால் பயங்கர யுத்தங்கள் நடந்துள்ளன. படுகொலைகள் இன்றும் நடக்கின்றன. ஆனால், நாத்திகர்கள் ஆத்திகர்களைக் கொலை செய்ததாகவோ தங்கள் கருத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்பதற்காக யுத்தம் நடத்தியதாகவோ வரலாறு இல்லை என்கிற வரிகளோடு துவங்கும் இப்புத்தகம் ஒரு ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் இடையில் நடக்கும் உரையாடலின் மூலம் கடவுள் இருக்கிறது என்கிற நம்பிக்கையின் ஆணி வேரை அசைக்கிறது. பித்தப்பை எனப்படும் Gall Bladder என்னென்ன செய்கிறது என்பதுகூட நமக்கு முழுசாகத் தெரியாது. உடற்கூறு விஞ்ஞானத்தின் அறியாமை காரணமாக நம் உடல் பற்றியே பல தவறான கருத்துக்கள், மூட நம்பிக்கைகளை நாம் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது பிரபஞ்சம் முழுவதும் பற்றிய ஞானத்தில் நிச்சயமாகக் குறைபாடுகள் இருக்கும். ஆனால் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்தார் என்று கூறுவது எப்படி சரியாகும் என்கிற மாதிரி சின்னச் சின்னக் கேள்விகள், பின் அவற்றுக்கான விடைகள், பின் அதைத் தொடரும் அடுத்த கேள்வி என்கிற பாணியில் நகர்ந்து செல்லும் இப்புத்தகம் நாத்திகத்தை முரட்டடியாக அல்லாமல் அறிவியல் அடிப்படையில் ஆத்திகரும் ஒப்புக்கொள்ளும் வண்ணம் எடுத்துச் சொல்கிறது. இப்பிரபஞ்சத்தில் என்றென்றும் பொருள் இருந்தே வந்திருக்கிறது. படைப்பு என்பதே இல்லை. ஆகவே படைத்தவனும் இல்லை என்று கச்சிதமாக உரையாடல் நிறைவுபெற புத்தகம் முடிகிறது. வெறும் 16 பக்கங்களில் இவ்வளவு விஷயங்களை இவ்வளவு எளிமையாகச் சொல்லி இருப்பது நூலாசிரியரின் மேதமையன்றி வேறென்ன?

தமிழர் திருமணம்
அன்று முதல்.. இன்று வரை
பேராசிரியர் ச.மாடசாமி
(32 பக்கம் ரூ.5)

“ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு” என்று ஐ.நா.சபை குடும்பத்துக்கு விளக்கம் தருகிறது. ஆனால் குடும்பம் அந்தக் கூரையோடு மட்டுமில்லை. மறித்து எழுப்பப்பட்ட சுவர்களோடும், எல்லைகளைக் குறுக்கும் வேலிகளோடும்தான் இருக்கிறது என்கிற வரிகளில் வேகம் பிடித்து நகர்கிற இப்புத்தகம் மிகவும் இயல்பான ஆனால் அடர்த்தியான அதே சமயம் கூர்மையான வரிகளில் குடும்பம் பற்றியும் தமிழர் வரலாற்றில் திருமணங்கள் அடைந்து வந்துள்ள மாற்றங்கள் பற்றியும் அம்மாற்றங்களுக்கான சமூகப் பின்புலங்கள் பற்றியும் பேசுகிறது. ஆழமான ஆய்வுதான் என்றாலும் அலுக்காமல் படிக்கவைக்கும் அனுபவ வார்த்தைகளால் புத்தகம் மிளிர்கிறது. தலை நரைச்ச கிழவனுக்குத் தாலி நான் கட்ட மாட்டேன் என்று பெண் அடம் பிடித்து விடாமலிருக்க கல்யாணத்தின் போது மணமகளைக் கண்ணைப் பொத்தி மேடைக்கு அழைத்து வரும் ஒரு சாதிப் பழக்கத்திலிருந்து பீட்சாவுக்கும் பர்கருக்கும் பழகிவிட்ட இந்திய இளைஞர்கள் கல்யாணம் என்று வந்துவிட்டால் மட்டும் தங்கள் நவீன மனதை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஜாதி, ஜாதகம் என்று பாய்ந்து விடும் வீழ்ச்சி வரையிலும் திருமணங்கள் எப்படிப் பெண்ணுக்குப் பாரபட்சமாக காலந்தோறும் இருந்து வருகின்றன என்பதை தகுந்த ஆதாரங்களோடும் வாசக மனதில் உறைக்கும் விதமாகவும் இப்புத்தகம் பேசுகின்றது. தமிழ் அடையாளங்கள் என்று எதுவும் தமிழர் திருமணங்களில் இல்லை. மனிதநேய அடையாளங்களாவது மிஞ்ச வேண்டுமே என்கிற நியாயமான கவலையோடு புத்தகம் முடிகிறது.

நாமும் நமது கலைகளும்
முகில்
(32 பக்கம் ரூ.5)

கேரளத்தின் கதகளியைப் போல, கன்னடத்தின் யக்க்ஷகானத்தைப் போல, ஆந்திராவின் வீதி நாடகத்தைப் போல, மகாராஷ்டிரத்தின் தமாஷாவைப் போல, உத்திரப்பிரதேசத்தின் நெடங்கியைப் போல, வங்காளத்தின் ஜாத்ராவைப் போல, அஸ்ஸாமின் ஆங்கிய நாட்டைப் போல, தமிழ்நாட்டின் மண்ணோடும் சேறோடும் புரண்டுகொண்டிருக்கும் கலை தெருக்கூத்தல்லவா என்கிற உணர்ச்சிகரமான வரிகளோடு துவங்குகிறது புத்தகம். 400 வயது கடந்துவிட்ட தெருக்கூத்து இன்றும் இளமையோடு மக்களின் மனங்கவர்ந்து நிற்பதற்கான உள்ளார்ந்த கூறுகளை ஆய்வு செய்யும் இந்நூல் தெருக்கூத்தில் கட்டியங்காரனின் பங்கு பற்றி விரிவாகப் பேசுகிறது. கூத்தின் கதையோடு அன்றாட நாட்டு நடப்புகளை இணைக்கும் பிரதான பணியைச் செய்யும் கட்டியங்காரன் பார்வையாளர்களின் பிரதிநிதியாகத்தான் மேடையில் நிற்கிறான். உலக நாடக இயக்கத்துக்கு தமிழகத்தின் கொடை என்றே கட்டியங்காரனைக் குறிப்பிட முடியும். இத்தோடு தமிழகத்து ஆட்டக்கலைகள் பற்றிய அறிமுகத்தையும் இப்புத்தகம் நமக்குத் தருகிறது. கரகாட்டம், காவடியாட்டம், கரடியாட்டம், புலியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், ஒயிலாட்டம். கும்மியாட்டம், பேயாட்டம், பொய்க்கல் குதிரையாட்டம், மகுடாட்டம், தேவராட்டம், ஹெக்கலிக்கட்டை ஆட்டம், பாம்பாட்டம், தப்பாட்டம் என ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு சிறிய அறிமுகம் வாசகருக்குக் கிடைக்கிறது. இக்கலைகளைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பது தொடர்பாக சில முன் வைப்புகளோடு புத்தகம் நிறைவு பெறுகிறது.

பன்முகப் பண்பாட்டுச் சூழலில் சைவ, வைணவ சமயங்கள்
(இந்துத்துவத்துக்கு ஒரு மறுப்பு)
என்.குணசேகரன்
(16 பக்கம் ரூ.5)

ஏடறியாக் காலத்திலிருந்தே இந்தியா ஒரு இந்து தேசியச் சமூகமாகவே இருந்து வருகிறது என்கிற வரலாற்றுக்கும் அறிவியலுக்கும் விரோதமான பச்சைப் பொய்யை நாகூசாமல் பரப்பி வரும் சங் பரிவாரங்களை உள்ளிருந்தே தாக்கும் முயற்சியாக சமய வரலாறுகளின் ஊடாகப் பயணிக்கிறது இப்புத்தகம். தமிழகத்தில் சைவமும் வைணவமும் வளரக் காரணமாக இருந்த பக்தி இயக்கத்தின் தோற்றம், அதன் வரலாற்று சமூகப் பின்புலம் போன்றவற்றைச் சுருக்கமாக ஆய்வு செய்யும் இந்நூல் வேதமரபுச் சிந்தனைகள், பௌத்த மற்றும் சமண நீரோட்டங்களோடு மாற்றம் பெற்று பக்தி இயக்கமாகப் பரிணமித்த கதையை நமக்குக் கூறுகிறது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் நடத்திய சமயச் சொற்போர்கள், ஆதிசங்கரருக்கு மறுப்பாக அன்றே மத்வாச்சாரியார் மக்களிடம் பரப்பிய துவைதக் கருத்துக்கள், வடகலை தென்கலைப் போராட்டங்கள் என தொடர்ந்து மக்கள் தம் வாழ்க்கைப் போராட்டங்களின் ஊடாக கொண்டும் நிராகரித்தும் வந்த தத்துவங்கள் பற்றியெல்லாம் எளிய தமிழில் எவரும் உள்வாங்கும் விதமாகச் சொல்லிச் செல்கிறது இப்புத்தகம். சைவமும் வைணவமும் அன்று சங்கரரின் கொள்கைகளுக்கு எதிராகவே நின்றிருந்தபோதும் அடிப்படையில் எல்லாத்துக்கும் காரணம் கடவுள்தான் என்று சொல்வதில் இரண்டும் ஒத்துப்போயின. அதன் மூலம் சமூக வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளை மறைத்து அன்றைய ஆளும் வர்க்கத்துக்கு அடிபணியும் மனநிலையை மக்களிடம் உருவாக்கும் வேலையில் அனைத்துத் தத்துவ நோக்குகளும் ஒற்றுமையாகச் செயல்பட்டதை வெட்ட வெளிச்சமாக்குகிறது இந்நூல். எல்லோரும் ஓர் நிறை. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கிற பாரதியின் பிரகடனமே நாம் அடையவேண்டிய இலக்கு என்பதைச் சுட்டி நிறைவடைகிறது புத்தகம்.

நாடகம் என்ன செய்யும்?
சி.அண்ணாமலை
(16 பக்கம் ரூ.5)

மனிதன் கூடிவாழத் தொடங்கிய நாள்முதலாக அவனோடு கூட வரும் கலைவடிவம் நாடகம். தமிழகத்தில் இந்நாடக வடிவத்தின் தோற்றம் பற்றிய விவாதங்களில் துவங்கி கூத்தின் மரபுகளை உள்வாங்கிய சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடக பாணி மற்றும் மேற்கத்திய வடமொழி மரபுகளை உள்வாங்கிய பம்மல் சம்பந்த முதலியாரின் சபா நாடக பாணி என இரு பெரும் போக்குகளாக நாடகம் தமிழில் நிலை பெற்றது பற்றிப் பேசுகிறது நூல். சபா நாடகப்போக்கு சென்னையின் மத்திய வர்க்கத்து மனிதர்களைக் குறிவைத்த கடி ஜோக்ஸ் கதம்பங்களாகத் தேய்ந்து போனதைக் குறிப்பிடும் ஆசிரியர் அப்பாணியிலேயே சாதனைகள் படைத்த கோமல் சுவாமிநாதன், எஸ்.வி.சகஸ்ரநாமம் போன்றோர் பற்றியும் மறவாமல் குறிப்பிடுகிறார். சுவாமிகள் துவக்கி வைத்த இசை நாடக வடிவம் இன்றளவும் தென் பகுதிகளில் ஸ்பெஷல் நாடகம் என்ற பெயருடன் புராண இதிகாசக் கதைகளையும் சில சமூகக் கதைகளையும் கொண்டு சினிமாவின் பாதிப்புகளோடு கிராமங்களில் நடத்தப்பட்டு வருவதைக் குறிப்பிடுகிறார். சுதந்திரப் போராட்ட காலத¢திலும் திராவிட இயக்கத்தின் ஆரம்ப நாட்களிலும் நாடகங்கள் ஆற்றிய பங்கு பற்றியும் இந்நூல் பேசுகிறது. இவ்விரு போக்குகளையும் தாண்டி 70களுக்குப் பின் தமிழகத்தில் அறிமுகமான நிஜ நாடகங்கள் அப்புறம் வீதி நாடகங்கள் போன்றவை எரியும் சமூகப் பிரச்னைகளைக் கையிலெடுத்து வளர்ந்த விதம் பற்றிப் பேசுகிறது. இன்று தொலைக்காட்சி, சினிமாக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட சூழலிலும் கல்வியில் நாடகம் ஆற்றும் பங்கு, சுனாமி போன்ற பேரழிவுக்குள்ளான மக்களிடம் நாடகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அறிவொளி இயக்கத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய நாடகங்கள் எனத் தொடரும் பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடும் புத்தகம் இக்கலை வளர நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய முன்வைப்புகளோடு முடிகிறது.

நூலகங்களுக்குள் ஒரு பயணம்
கமலாலயன்
(24 பக்கம் ரூ.5)

உலகின் முதல் நூலகம் எங்கிருந்தது? இந்தியாவின் முதல் நூலகம்? தமிழகத்தில்? என்கிற வரலாற்றுக் கேள்விகளுடன் தன் பயணத்தைத் துவங்கும் இப்புத்தகம் மிகப்பெரிய நூலகங்களான நாகார்ச்சுன வித்தியாபீடம் மற்றும் நாளந்தா பல்கலைக்கழக நூலகம் பற்றி விரித்துப் பேசுகிறது. நூலக இயக்கத்தின் துவக்க காலம் மத அமைப்புகளின் கையிலிருந்ததைக் குறிப்பிடும் நூல், ஞான பண்டாரங்கள் என்ற பெயரில் சமண சமயம் நிறுவிய நூலகங்கள், செழுங்கலை நியமம் என்ற பெயரில் பௌத்தம் நிறுவிய நூலகங்கள் சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரில் சைவம் அமைத்த நூலகங்கள் மற்றும் வைணவ நெறியின் ஞான பிரதிஷ்டை பற்றிய விவரங்களோடு விரிகிறது. மொகலாயர் காலத்திலும் தொடர்ந்த நூலகத்தின் பயணம் பற்றியும் பாபர் நாமா என்னும் புகழ் பெற்ற நூலை பாபர் அவர் அமைத்த நூலகத்தில் வைத்தே எழுதினார் என்பது போன்ற சுவையான தகவல்களையும் தருகிறது. நூலகத்துறை என ஒன்றைத் முதலில் நிறுவியது பரோடா சமஸ்தானம். நூலகத்துறை பற்றி இந்தியாவில் வந்த முதல் இதழ் ‘லைப்ரரி மிசலேனி’ யையும் பரோடா சமஸ்தான நூலகத்துறையே வெளியிட்டது. இன்றைய நவீன நூலக இயக்கத்தின் முன்னோடிகளான ஆந்திரத்தின் அய்யங்கி வெங்கட்டரமணய்யா பற்றியும் தமிழகத்தின் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன் (S.R.ரெங்கனாதன்) பற்றியும் குறிப்பிடும் புத்தகம் உலக நூலக இயக்கத்துக்கே பயன்படும் கோலன் பகுப்பு முறையை உருவாக்கிய ரங்கநாதனின் பணிகளை விரிவாகப் பேசுகிறது. நூல்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி பற்றிக் கவலை கொண்ட அவர் கிராம நூலகம், நடமாடும் நூலகம் போன்ற கருத்துக்களை, கனவுகளை தன் வாழ்நாளிலேயே நடைமுறைப்படுத்திப் பார்த்தார்.

நூலக இயக்கத்தின் மூன்று தூண்களாக எழுத்தாளர், பதிப்பாளர், நூலக நிர்வாகி ஆகியோரைக் குறிப்பிடும் ஆசிரியர் பயிற்சியும் பட்டறிவும் நூல்கள் குறித்த உள்ளார்ந்த உத்வேகமும் உடையோரே நூலகராகப் பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறுகிறார்.

தாமஸ் ஆல்வா எடிசன்
வெ. சாமிநாத சர்மா
(32 பக்கம் ரூ.5)

கி.பி.1492இல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டான். அதன் பிறகு ஐரோப்பா அங்கு போனது. லட்சக்கணக்கான சுதேசிகளைக் கொன்று அவர்களுடைய எலும்புக்கூடுகளின் மீதுதான் ஐரோப்பிய ஆதிக்கம் என்கிற கட்டடம் சமைக்கப்பட்டது. அப்படி அங்கு குடிபோன ஒரு குடும்பத்தின் வாரிசுதான் தாமஸ் ஆல்வா எடிசன் என்று துவங்கும் இப்புத்தகம் எடிசனின் வாழ்க்கை வரலாற்றை 1949லேயே தமிழர்களுக்குச் சொல்லுவதற்காக எழுதப்பட்டதாகும்.

டைனமோ, பேட்டரி, லவுட் ஸ்பீக்கர், ஸ்டென்சில் உருட்டும் எந்திரம், சினிமாவுக்கு முன்னோடியான கினிட்டோகிராப் போல 1328 அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைக் கண்டுபிடித்து வடிவமைத்த எடிசன் முறையாகப் படித்த ஒரு கல்வியாளரோ விஞ்ஞானியோ அல்லர். ஓடும் ரயில் வண்டியில் தினசரி பேப்பர் போடும் பையனாக வாழ்வைத் துவங்கிய ஒரு குழந்தை உழைப்பாளி. அதில் கிடைத்த காசில் வீட்டுக்குக் கொடுத்தது போக தன் அறிவியல் ஆர்வத்துக்காக வீட்டிலேயே சிறிய பரிசோதனைக்கூடம் ஒன்றை அமைத்தவர். 1860 இல் உள்நாட்டுப்போரை ஒட்டி அமோகமாக நடந்த பத்திரிகை விற்பனையில் முதலிடம் பிடித்த எடிசன் ஓடும் ரயிலில் பத்திரிகைகள் ஸ்டாக் வைக்க என்று தனக்கென ஒரு தனி கம்பார்ட்மெண்டைப் பெற்றுக்கொண்டு அதிலேயே தன் பரிசோதனைச் சாலையை நிறுவிக்கொண்டு ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அதன் பிறகு தந்தி குமாஸ்தாவாக சொந்த பத்திரிகை நடத்துபவராக வேலை இல்லாமல் அலைகிறவராக எனப் பலவிதமாக வாழ நேர்ந்தது. பின்னர் நியூயார்க்கில் சொந்தத் தொழில் துவங்கி அதில் வெற்றியும் பெற்று வணிகரீதியாகப் பயன்படும் ஏராளமான கருவிகளைச் செய்து பெரும் பொருள் ஈட்டினார். 1931ஆம் ஆண்டு உயிர் நீத்த எடிசன் தன் 75ஆவது வயதிலும்கூட நாள் ஒன்றுக்கு 18 மணி நேரத்துக்கு மேல் உழைத்த கதையை அக்கறையுடன் சொல்கிறது இப்புத்தகம். குழந்தைகளுக்கும் அவசியம் வாங்கித் தர வேண்டிய புத்தகம்.

வெளிச்சம் தருமா
புதிய மின்சாரச் சட்டம்?
வெ.மன்னார்
(24 பக்கம் ரூ.5)

அண்ணல் அம்பேத்கரும் பண்டித ஜவகர்லால் நேருவும் பெரும் கனவுகளுடன் இயற்றிய இந்திய மின் வழங்கல் சட்டம் 1948 பற்றிய சரித்திரக் குறிப்புகளோடு புத்தகம் தொடங்குகிறது. அனைவருக்கும் மின்சாரம் வழங்குதல், நீர்ப்பாசனம், ஆலைகள், தகவல் தொடர்பு, ரயில், போக்குவரத்துக்கு மின்சாரத்தைக் கூடுதலாகப் பயன்படுத்துதல். கிராமப்புறங்களுக்கு மின் வசதியை உத்தரவாதப் படுத்துதல், சட்டமன்ற நாடாளுமன்றப் பரிசீலனைக்கு மின்துறையை உட்படுத்துதல் போன்றவை அவ்விரு தலைவர்களின் கனவுகளாக இருந்தன. அது பெருமளவு நனவாகியும் உள்ளது. 1947இல் வெறும் 1700 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி தற்பொழுது 1,14,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

அதிக முதலீட்டைக் கோரிய மின்துறையில் முதலீடு செய்ய அன்று இந்திய முதலாளிகள் தயாராக இல்லை. மிகப்பெரிய கட்டுமானம் நிலைபெற்று விட்ட இப்போது அதைத் தனியார் மயமாக்க முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள். அதற்குக் கதவைத் திறந்து வைக்கும் முயற்சியாக 1998இல் பா.ஜ.க அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக மின்சாரச் சட்டம் 2003ஐ பாஜகவும் காங்கிரசும் இரட்டைக்குழல் துப்பாகியாகச் செயல்பட்டு இடதுசாரிகளின் எதிர்ப்பை முறியடித்து நிறைவேற்றி விட்டன. மின் துறையில் தனியார் முதலீட்டை அனுமதிக்கும் இச்சட்டம் முதலாளிகள் 15 முதல் 16 சதம் லாபம் ஈட்ட அனுமதிக்கிறது. ஏழை இந்தியாவுக்கு மின்சார மறுப்பு பணக்கார இந்தியாவுக்கு ஜொலிக்கும் மின் சப்ளை என்கிற நிலையை நோக்கி நாட்டை இழுத்துச்செல்லும் இச்சட்டத்தின் முழுமையான அம்சங்களை மிகமிக எளிய தமிழில் மக்களை இச்சட்டத்துக்கு எதிராகக் கோபம் கொள்ளச் செய்யும் வரிகளோடு புத்தகம் வந்துள்ளது.

மீடியா அரசியல்
பிரபாத் பட்நாயக்
தமிழில் : சாமி
(20 பக்கம் ரூ.5)

ஜனநாயகத்தின் கண்களென மீடியாவைக் குறிப்பிடுவார்கள். நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிப் போக்குகளை மக்களிடம் எடுத்துச்செல்லும் விதத்தால் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். மக்களின் கருத்து உருவாக்கப்படும். போபோர்ஸ் பீரங்கி ஊழல் பற்றிப் பத்திரிகைகள் மக்களுக்கு எடுத்துச் சென்ற விதம் ஒரு அரசாங்கத்தையே கவிழ்த்தது. ஆனால் இன்று ஊடகங்களுக்கு அத்தகைய ஆற்றல் இருக்கிறதா? என்கிற கேள்வியுடன் புத்தகம் பேசத் துவங்குகிறது. குஜராத்தில் நடந்த மனிதப் படுகொலைகளுக்குப் பின்னால் மாநில அரசின் கை இருக்கிறது என்பதை பத்திரிகைகள் (குறைந்த பட்சம் ஆங்கில மொழி ஏடுகள் அனைத்தும்) ஒரே குரலில் மக்களுக்கு எடுத்துச் சென்றன. எனினும் குஜராத் அரசோ மோடியோ பதவியிறக்கம் செய்யப்படவில்லை. சாகசங்கள் புரிந்து பாதுகாப்புத் துறையில் நடந்த பேரங்களை டெகல்கா டாட் காம் வெளிக்கொண்டு வந்தது. எனினும் எந்தப் பெரிய மாற்றமும் நடைபெறவ¤ல்லை. பாதுகாப்பு அமைச்சர் அலுங்காமல் பதவியில் நீடித்தார். இவை காட்டும் உண்மை என்ன? ஊடகங்களின் ஆற்றல் குறைந்து போயுள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? இரண்டு வகையான காரணங்களை புத்தகம் அடையாளம் காட்டுகிறது. ஒன்று ஊடகங்கள் குறிப்பிட்ட ஊழல்களைச் சுற்றியே செய்திகளைப் பரிமாறி ஒரிசாவின் பழங்குடி மக்கள் உண்ண உணவின்றி வதைபட்டதைப் போன்ற ‘சாதாரண’ விஷயங்கள் பற்றிக் கண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம் தம் நம்பகத்தன்மையை இழக்கின்றன. இன்னொன்று தார்மீக நெறிமுறைகள் பற்றிய மக்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாசிசக் கருத்துக்கள் செல்வாக்கடையும் போது பாசிசக் கருத்துக்கள் ஆட்சியில் இருக்கும் போது, இவை நடைபெறுகின்றன.

வளர்ச்சிக்கு உதவாத ஊக வணிகத்துக்கும் இத்தகைய கருத்துநிலை வீழ்சிக்குமான உறவைப் பற்றியும் விரித்துப் பேசும் புத்தகம் அரசியல்வாதிகள் மீது அவநம்பிக்கை கொண்டுள்ள மக்கள் பத்திரிகைகள் மீது ஓரளவு நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த தார்மீக மூலதனத்தைப் பயன்படுத்தி ஊடகங்கள் சரியான திசை வழியில் செல்லமுடியும் என வலியுறுத்தி முடிகிறது.

மனிதர்கள் நாடுகள் உலகங்கள்
(உலகமயமாக்கல் சில உண்மைகள்)
ஜா.மாதவராஜ் & சு.வெங்கடேசன்
(48 பக்கம் ரூ.10)

‘உலகமயமாக்கல்’ என்கிற ஒற்றை வார்த்தை பிரபலமாகியிருக்கிறது. ஆனால் வரலாற்று நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியில் வைத்து இதன் முழுப்பரிமாணத்தையும் பார்க்க வேண்டும். இந்த ஆதங்கத்துடன் துவங்குகிற இப்புத்தகம் கவித்துவமிக்க மொழியில் ஏராளமான பயனுள்ள பக்கக் குறிப்புகளோடும் படங்களோடும் பொருத்தமான ஆழமிக்க கவிதை வரிகளோடும் உலகமயமாக்கல் என்பதன் சதிகள் நிறைந்த வரலாற்றை, அது ஏழை எளிய நாடுகளுக்கு அர்த்தமாகும் விதத்தை மூலதனத்துக்குச் சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக அது நடத்திட்ட போர்களை விரிவாக நமக்குச் சொல்கிறது. நேரடி யுத்தங்கள், பொருளாதாரத் தடைகள், காப்புரிமை மோசடிகள், கலாச்சாரத் தாக்குதல்கள் என உலகமயம் நாட்டுக்கு நாடு காலத்துக்குக் காலம் புதுப் புது வடிவங்கள் எடுத்து பன்னாட்டு நிதி மூலதனங்கள் நடந்து செல்ல பட்டுக்கம்பளம் விரிக்கிறது.
சூரியன் உதிப்பதும் மறைவதும் கூடத் தெரியாத தொடர் ஒளிபரப்பில் மனிதர்கள் வேறு திசையில் சிந்திப்பதற்கான அவகாசமே தரப்படுவதில்லை. நம் மீது திணிக்கப்படும் அவர்கள் மொழி, அவர்கள் உணவு, அவர்கள் கலாச்சாரம், அவர்கள் உலகம் எல்லாம் எதற்காக அவர்களின் சந்தை – அவர்களின் பொருட்கள் அதற்காக.

ஆனால் அவர்கள் நினைப்பது போல் மக்கள் ஒன்றும் அப்படியே மதிமயங்கிப் போய்விடவுமில்லை. போராட்டங்கள் வெடிக்கின்றன. உலகமயமாக்கலுக்கு எதிரான ஆவேசமான போராட்டங்களைப் பற்றிய உணர்ச்சிகரமான செய்திகளை இந்நூல் பதிவு செய்கிறது. இந்தியாவின் பல பாகங்களிலும் ஏன் தமிழகத்தில் படமாத்தூர் போன்ற இடங்களில் நடைபெற்ற, நடைபெறும் போராட்டங்களும் பதிவாகியுள்ளன. இதுபோன்றதொரு விஷயம் பற்றிக்கூட இவ்வளவு சுவையாகவும் உணர்ச்சிகரமாகவும் அழகாகவும் ஒரு புத்தகம் கொண்டுவர முடியும் என்பதை நிரூபித்து வாசகரை வியப்பிலாழ்த்தும் புத்தகம்.

செப்டம்பர்
நினைவுகள்
அருந்ததிராய்
தமிழாக்கம் : விஜயன்
(32 பக்கம் ரூ.5.)

2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் உலக வர்த்தக நிறுவனத்தின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. செப்டம்பர் 11 என்றாலே அந்த நிகழ்வு மட்டும்தானா? இல்லை. இதே போன்றதொரு செப்.11 இல் 1973ஆம் ஆண்டில் சிலி நாட்டில் ஜெனரல் பினோசெ அமெரிக்க சி.ஐ.ஏ.வின் ஆதரவுடனான ராணுவ சூழ்ச்சி மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சல்வடார் அலெண்டேயின் அரசாங்கம் தூக்கியெறியப்பட்டது. அலெண்டே கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் ‘காணாமல் போயினர்’. தேசத்தையே ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து சி.ஐ.ஏ வின் ஆதரவுடன் அந்நாட்டை ஆண்ட பினோச்செவுக்கு “நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு அமெரிக்காவில் இருக்கும் எங்களின் ஆதரவு உள்ளது. உங்கள் அரசாங்கம் வெற்றி பெற வாழ்த்துகிறோம். சிலி நாட்டின் மக்கள் பொறுப்பற்றவர்கள் என்பதற்காக அந்நாடு மார்க்சியப் பாதையில் செல்ல அனுமதிக்க முடியாது” என்று வாழ்த்துச் செய்தி அனுப்பினார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்றைய அமெரிக்க அரசின் செயலாளர் ஹென்றி கிஸிஞ்சர். இதுபோல அமெரிக்கா தாங்கிப்பிடித்த லத்தீன் அமெரிக்க நாடுகளின் உதவாக்கரை சர்வாதிகாரிகள், எதேச்சதிகாரிகள், போதை மருந்து வியாபாரிகள், ஆயுத வியாபாரிகள் போன்ற 60000க்கும் மேற்பட்டோர் அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் ஸ்கூல் ஆப் அமெரிக்காஸ் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள்.

செப்டம்பர் 11 மேற்காசியப் பகுதியில் சோக நினைவுகளைத் தூண்டும் தேதி. 1922 செப்.11இல் தான் பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனப் பகுதிக்குள் யூதர்களின் நாடு ஒன்றினை உருவாக்க ஆணை பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக பாலஸ்தீனத்தில் 76 சதவீத நிலப்பரப்பை அபகரித்து இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப் பட்டது. அப்பிரகடனம் வெளியான சில நிமிடங்களுக்குள்ளாகவே அமெரிக்கா அந்நாட்டை அங்கீகரித்தது. இன்றுவரை பாலஸ்தீனியர்கள் நாடற்ற மக்களாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். 1922 செப்.11 முதல் 2001 செப்.11 வரை 80 ஆண்டுகளாக நடக்கும் இப்போர்களை பின்னிருந்து நடத்தி வருவது யார்? ஆதரவளிப்பது யார்? என்பது போன்ற கேள்விகளோடு ஏராளமான வரலாற்றுத் தகவல்களை அடர்த்திமிக்க இலக்கிய மொழியில் நமக்குத் தரும் புத்தகம் இது.

நமக்கான குடும்பம்
ச.தமிழ்ச்செல்வன்
(16 பக்கம் ரூ.5)

ஒரு ஆண் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறான்? ஒரு பெண் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறாள்? ஒரு ஆண் எப்படி வளர்க்கப்படுகிறான்? ஒரு பெண் எப்படி வளர்க்கப்படுகிறாள்? மதம் ஆணை எப்படிப் பார்க்கிறது? மதம் பெண்ணை எப்படிப் பார்க்கிறது? நமக்கான குடும்பத்தில் ஒரு ஆண் என்ன செய்ய வேண்டும்? ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்? என்கிற எளிமையான கேள்விகளை முன் வைத்து அவற்றுக்கு விடை தேடும் முயற்சியில் நம் குடும்ப வாழ்வின் அடிப்படைகளை அசைக்கிற நடவடிக்கைகளை நோக்கி வாசகரை நெட்டித்தள்ளுகிறது இப்புத்தகம். ஒரு கேள்விக்கான பதிலின் முடிவில் அடுத்த கேள்வி பிறக்கிற பாணியில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பெண் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள் அல்லது கட்டமைக்கப் படுகிறாள். அக்கட்டமைக்கும் போக்கில் மதங்கள் ஆற்றும் பங்கு ‘மகத்தானது’. பெண் அவளது சகல பரிமாணங்களையும் இழந்து ஒரு உடம்பாக மட்டுமே தன்னை உணரும்படியாக ஆக்கப் படுகிறாள். தாய்மை, பெண்மை போன்ற போலி அடையாளங்கள் அவள் மீது திணிக்கப்படுகின்றன. அறிவியலுக்குப் புறம்பாக சில குணாதிசயங்களும் கூட மென்மையானவள், அச்சம் – மடம் – நாணம் மிக்கவள், அவள் மீது ஏற்றப்படுகின்றன. இப்படிப் பல்லாயிரம் ஆண்டுகாலமாக அவள் மீது படிந்து கிடக்கும் புழுதியை ஊதித்தள்ளுகிறது இப்புத்தகம். பாய்ச்சல் வேகத்தில் காலங்களைக் கடந்து நேரடியாக இன்றைய வாசகரை நோக்கி விரல் நீட்டிக் கேள்விகளை முன் வைக்கிறது. படித்து ரசிப்பதற்காக அல்ல. செயல்பாட்டுக்கான உந்துதலை வாசக நெஞ்சில் எற்படுத்தும் புத்தகம்.

சார்லஸ் டார்வின்
வெ.சாமிநாத சர்மா
(24 பக்கம் ரூ.5)

மனிதன் கடவுளின் சிருஷ்டி என்பர் பலர். ஆனால் பல அறிஞர்கள் இயற்கைச் சக்திகளின் வளர்ச்சிதான் மனித உருவம் என்றும் இதில் கடவுளின் கைவேலை ஒன்றும் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் சார்லஸ் ராபர்ட் டார்வின் என்பார்தான் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன் வைத்து இப்பரப்பில் நிலவி வந்த யூகங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார்.

பாதிரியாருக்குப் படித்து தேவ ஊழியம் செய்யப் போயிருக்க வேண்டிய டார்வின் பூச்சியினங்களின் ஆராய்ச்சிக்காக பீகிள் என்ற கப்பலேறி ஐந்தாண்டுகள் பயணம் செய்து தென் அமெரிக்காவின் பல பாகங்களுக்கும் சென்று பரிணாம வளர்ச்சி விதிகளோடு திரும்பினார். டார்வின் பிறந்து வளர்ந்து உருவான கதையை தமிழ் வாசகர்களுக்குச் சொல்லும் முயற்சியாக இந்நூல் வந்துள்ளது. 1809ஆம் ஆண்டு பிறந்து 1882ஆம் ஆண்டு மறைந்த அவருடைய பால்ய காலம், திருமண வாழ்க்கை எனப் பலவற்றையும் இந்நூல் சொன்னாலும் “டார்வினை அவருடைய அறிவுக்காகவோ பொறுமைக்காகவோ விடாமுயற்சிக்காகவோ உலகம் போற்றவில்லை. மனித எண்ண்த்திலே ஒரு புரட்சியை உண்டு பண்னி விட்டார். அதனாலேயே உலகத்தாரின் மனதில் சாசுவதமான இடத்தைப் பெற்று விட்டார்” என்று பொருத்தமான வரிகளுடன் புத்தகம் முடிகிறது. குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய புத்தகம்.

நலம் நலமறிய ஆவல்
எஸ்.வி.வேணுகோபாலன்
(32 பக்கம் ரூ.5)

மத்திய தர வர்க்கத்தை எப்போதும் சில பூதங்கள் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும். அல்சர், கொலஸ்ட்ரால், பிரஷ்ஷர், டயபடீஸ், அனீமிக், ஸ்பாண்டிலிடீஸ்-மூட்டு வலி, யூரினல் பிரங்னை, கிட்னியில் ஸ்டோன் ஆகிய இந்த இங்கிலீஷ் பேர் கொண்ட பூதங்களால் அலைக்கழிக்கப்படாத நடுத்தர வர்க்கத்து நடுத்தர வயது மனிதனோ மனுஷியோ இருக்க முடியாது. இந்த பூதங்களுக்கெல்லாம் வேப்பிலையடித்து விரட்டுவதற்கான எளிய உபாயங்களை நமக்குச் சொல்கிறது இப்புத்தகம். கொழுப்பு பற்றிய மூட நம்பிக்கைகள் பல நம்மிடம் உண்டு. நமது உணவில் 15 விழுக்காடு வரை கொழுப்பு இருப்பது அவசியம் தான். தாவர எண்ணெய் எதிலும் கொலஸ்ட்ரால் இல்லை. சில விளம்பரங்கள் தேவையற்ற பயத்தை ஏற்படுத்தி நிம்மதியாக நம்மை சாப்பிட விடாமல் தடுக்கின்றன. அப்புறம் சின்னதாக உடல் உபாதை ஒன்று வந்து விட்டால் பதறியடித்து உடனே மருத்துவரிடம் ஓடோடிச் சென்று தேவையற்ற டெஸ்ட்டுகள் செய்து அளவுக்கு அதிகமான மாத்திரைகள் ஊசிகள் அறுவை சிகிச்சை என உடம்பையும் மனசையும் இம்சிக்கிறோம். மாற்று மருத்துவ முறைகளில் துன்பமில்லாமல் நிவாரணம் இருக்கையில் நாம் அறிவியல்பூர்வமானது என்கிற நம்பிக்கையில் அலோபதியிலேயே விழுந்து கிடக்கிறோம். இப்படியாக நமக்கு அன்றாடம் பயன்படக்கூடிய மருத்துவக் குறிப்புகளுடன் சரியான உணவுப் பழக்கத்துக்கான சிபாரிசுகளுடன் வந்துள்ள புத்தகம். நல்ல நகைச்சுவையுணர்வு மிக்க நடையில் நம் கைகளில் தவழும் இப்புத்தகம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம். படித்துக் குடும்பத்தோடு தெளிவு பெற உதவக்கூடிய புத்தகம்.

ஸர். ஐசக் ந்யூட்டன்
வெ.சாமிநாத சர்மா
(24 பக்கம் ரூ.5.)

1642 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி பிறந்து 1727 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி மறைந்த சர். ஐசக் நியூட்டனின் வாழ்க்கைக் கதையின் சில பக்கங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் புத்தகம். நியூட்டன் என்பது இங்கிலாந்து நாட்டிலே லங்காஷையர் மாகாணத்திலே உள்ள ஒரு சிற்றூரின் பெயர்.

குறைப்பிரசவத்தில் பிறந்த ஐசக் நியூட்டன் பிறப்பதற்குச் சில மாதங்கள் முன்பாகவே தந்தையை இழந்தார். தாயும் வேறு திருமணம் செய்து கொண்டு போய்விட பாட்டியிடம் வளர்ந்த நியூட்டன் பள்ளிப் பருவத்திலேயே எதையும் உற்று நோக்கும் குணத்துடன் இருந்தார். எனினும் தொடர்ச்சியாகப் படிக்க முடியாத வறுமை வீட்டிலிருந்தது. படிப்பை நிறுத்திவிட்டு உழைக்கப் போனார். பின்னர் இவருடைய கற்கும் ஆர்வத்தைக் கண்டு பாதிரியார் அவருடைய படிப்புத் தொடர ஏற்பாடு செய்கிறார். 1665இல் அவர் கேம்ப்ரிட்ஜில் படித்துக்கொண்டிருந்தபோது பிளேக் நோய் பரவியது. அதனால் கல்லூரியை மூடிவிட்டார்கள். ஆகவே தன் அம்மாவுடன் இருக்க உல்ஸ்தோர்ப் கிராமத்துக்கு வந்திருந்த போதுதான் ஆப்பிள் விழுவதைப் பார்த்து பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதைக் கண்டு பிடித்தார். ஆகாய மண்டலத்தில் தோன்றி மறையும் வால் நட்சத்திரங்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்து அவைகளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய கருவிகளையும் கண்டுபிடித்தார். 1705ஆம் அண்டு பிரிட்டிஷ் மகாராணியார் தனது பரிவாரங்களுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்துக்கு விஜயம் செய்து நியூட்டனுக்கு சர் பட்டம் கொடுத்துச் சென்றார். இவை போன்ற சுவையான செய்திகளை உள்ளடக்கிய இப்புத்தகம் இளம் வாசகர் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லப் படவேண்டிய ஒன்று.

தமிழில் தலித் இலக்கியம்
முகில்
(32 பக்கம் ரூ.5)

தலித் என்பவர் யார்? ஒரு சாதியைக் குறிக்கிற ஒன்றாக தலித் என்ற சொல்லைக் குறுக்கி விடக்கூடாது. தலித் என்பது வேதனையின் குறியீடாக இருக்கட்டும். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அடையாளப்படுத்துகிற ஒரு சொல்லாக அதை எடுத்துக் கொள்வோம் என்கிற புரிதலோடு இப்புத்தகம் பேசுகிறது. தலித் இலக்கியம் மராட்டியத்தில் பிறந்திடக் காரணமாய் அமைந்த மகாத்மா பூலேயின் பணிகள் சிந்தனைகள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் பன்முகப்பட்ட செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிடும் இந்நூல், அம்பேத்கர் துவக்கிய சித்தார்த்தா கல்லூரியிலிருந்து படித்து வெளியேறிய இளைஞர்களால் துவக்கப்பட்ட சித்தார்த்தா இலக்கிய சங்கமே பின்னாளில் மராட்டிய மாநில தலித் இலக்கிய சங்கம் உருவாகக் காரணமாக அமைந்ததைக் குறிப்பிடுகிறது.

மராட்டிய தலித் இலக்கியத்தில் தலித் படைப்பாளிகளின் தன் வரலாற்று நூல்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றிச் சரியாகக் குறிப்பிடும் போது தமிழில் தலித் இலக்கியமெனெப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்தாளர் பாமாவின் ‘கருக்கு’ ஒரு தன் வரலாற்று நூலே என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழ் நாட்டில் தலித் இலக்கியச் சொல்லாடல்களை உலவச் செய்த முன்னோடிகளென ராஜ்கௌதமன், ரவிக்குமார், அ.மார்க்ஸ் போன்றோரைக் குறிப்பிடும் ஆசிரியர் அவர்களோடு முரண்படும் இடங்களையும் நட்புணர்வோடு பேசுகிறார். கொச்சை மொழியே தலித் இலக்கிய மொழியாக இருக்க முடியும் என ஒரு கட்டத்தில் பெரும் விவாதம் தமிழில் நடந்து கொண்டிருந்தது. ஆதிக்க இலக்கியத்தின் மொழி ஒடுக்கப்பட்ட மக்களின் மொழியைக் கொச்சையெனப் புறக்கணிக்கும்போது கொச்சை மொழியை உயர்த்திப் பிடிக்கும் எதிர் மனநிலையின் நியாயத்தை அங்கீகரிக்கும் ஆசிரியர், தலித் இலக்கியம் கறுப்பர் இலக்கியத்திலிருந்தும் பெண்ணிய இலக்கியத்திலிருந்தும் தன்னுடைய அழகியலை வளர்த்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையைப் பதிவு செய்கிறார். வர்க்கப்போராட்டத்துக்கும் சாதி ஒழிப்பு/தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்துக்கும் சம அழுத்தம் தரும் இயக்கங்களின் தேவையைச் சொல்லி நூல் நிறைவு பெறுகிறது.

காரல் மார்க்ஸ்
புது யுகத்தின் வழிகாட்டி
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
தமிழில்:பி.ஆர்.பரமேஸ்வரன்
(32 பக்கம்.ரூ.5.)

பெரும்பான்மையினரான சாதாரண மக்களால் தெளிவாக வெளிப்படுத்த முடியாத அவர்களின் சொந்த உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் வடிவம் அளிக்க மார்க்ஸினால் முடிந்தது. ரிஷிகளையும் தேவதூதர்களையும் பற்றிக் கூறுவது போல ஏதோ ஒரு அசாதாரண ஆற்றலின் மூலம்தான் மார்க்ஸ் புதிய தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் உருவாக்கினார் என்று சொல்வது மார்க்சுக்குச் செய்யும் மிகப் பெரிய அநீதியாகும். மார்க்சியம் என்று பரவலாக அறியப்படும் கருத்துப் பெட்டகம். டாக்டர் காரல் மார்க்ஸ் என்ற அறிஞர் அ முதல் ஃ வரை தனது மூளையிலிருந்து உருவாக்கிய தத்துவம் அல்ல. மாறாக அவர் பிறந்த காலத்துக்கு முன்னாலேயே வளர்ந்து நிற்கும் புரட்சிகர சித்தாந்தங்களைக் கற்று உள்வாங்கிப் பின் அவற்றோடு முரண்பட்டு அவற்றின் குறைபாடுகளை அடையாளம் கண்டு புதிய தத்துவத்தை கட்டி எழுப்பினார்.
ஹெகலிடமிருந்து இயக்கவியலையும் ஃபாயர்பாக் போன்றவர்களிடமிருந்து பொருள்முதல்வாதத்தையும் உள்வாங்கி அவற்றின் குறைகளை நீக்கியே இயக்கவியல் பொருள்முதல் வாதத்துக்கு மார்க்ஸ் வந்து சேர்ந்தார் என்கிற வரலாற்றை இப்புத்தகம் தயக்கமும் சந்தேகமுமற்ற தெளிவான குரலில் பேசுகிறது. ஆரம்ப ஆண்டுகளில் தத்துவ ஞானப் பிரச்னைகளில் அதிகக் கவனம் செலுத்திய மார்க்ஸ் தன் வாழ்வின் கடைசி முப்பது ஆண்டுகளை நவீன முதலாளித்துவத்தின் செயல்பாட்டை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யவும் அதனைக் கட்டுப்படுத்துகிற பொது விதிகளைக் கண்டறியவுமே செலவிட்டார்.

அந்த நாட்களில் முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றிருந்த இங்கிலாந்திலேயே பல ஆண்டுகள் தங்கியிருந்து தன்னுடைய ஆராய்ச்சியை நடத்தினார். அதன் விலைவாகவே தொழிலாளி வர்க்கத்தின் பைபிள் என்றுப் பிறர் சொல்லும் மூலதனம் என்னும் நூல் நமக்குக் கிடைத்தது. தத்துவ ஞானத்துறையில் ஜெர்மனியும் பொருளாதாரத் துறையில் இங்கிலாந்தும் என்பது போல சோசலிச சிந்தனைத் துறையிலும் புரட்சிகரப் போர்த்தந்திரங்களின் துறையிலும் அன்று முன்னேறியிருந்தது பிரான்ஸ். இம்மூன்று நிலப்பரப்புகளிலுமாகத் தன் ஆய்வுகளை விரித்த காரல் மார்க்ஸின் சிந்தனையின் வரலாறாகவே இந்நூல் அமைந்து மார்க்சைப் புரிந்து கொள்ள வாசகருக்கு நல்ல வழிகாட்டியாக விளங்குகிறது.

1947
ச.தமிழ்ச்செல்வன்
(32 பக்கம் ரூ.5)

விடுதலையின் ஆண்டாக நம் மனங்களில் படிந்து போயிருக்கும் 1947இன் மறு பக்கத்தை நமக்குத் திறந்து காட்டும் புத்தகம். இந்தியா இரண்டு நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான் என ஆன கதையை மனம் அதிரும் ஆதாரங்களுடன் பேட்டிகளுடன் உண்மைச் சம்பவங்களுடன் விளக்கிச் சொல்லும் புத்தகம். பிரிவினையின் போது லட்சோப லட்சம் மக்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக இடம்பெயர்ந்தனர். மனித குல வரலாற்றில் மிக அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தது 1947இல் இந்தியாவில்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள். அகதிகளானது மட்டுமல்ல துயரம், மதப் பகைமை மூட்டி வளர்க்கப்பட்டதன் விளைவாக இருபக்கமும் படுகொலைகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதன் காரணமாக கருவுற்றனர்.

கருச்சிதைவு செய்து கொள்வதற்காக மருத்துவமனை வளாகங்களில் வரிசையில் நின்ற பெண்கள் ஆயிரமாயிரம். பத்து மாதம் சுமந்து அக்குழந்தைகளைப் பெற்று அவர்களை அரசாங்க அனாதை ஆசிரமங்களில் விட்டுச் சென்ற பெண்கள் இன்னும் பல ஆயிரம். அக்குழந்தைகள் சிலர் இரக்கமுள்ள மனிதர்களால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டனர். பலர் அனாதைகளாக பிச்சைக்காரர்களாக பிக்பாக்கட் திருடர்களாக இந்திய மற்றும் பாகிஸ்தான் தெருக்களில் அலைய விதிக்கப்பட்டது. வழியில் தொலைந்து போன பெற்றோர்களைத் தேடும் பிள்ளைகளும் பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோரும் இரு நாட்டு எல்லைகளிலும் நின்று மகளே என்றும், மகனே என்றும், அம்மா என்றும், அப்பா என்றும் கதறும் ஒலிகள் காலங்கள் தாண்டியும் வந்து கொண்டிருக்கும் அவலத்தைப் பதிவு செய்துள்ள உணர்ச்சிகரமான புத்தகம். பிரிவினையை அறியாத இன்றைய தமிழ் வாசகர்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகம்.

உடல் உறுப்புகள்
பேராசிரியர் எஸ்.மோகனா
(64 பக்கம் ரூ.10)

எந்தப் பீடிகையும் இல்லாமல் நம் உடலின் முக்கிய உறுப்புகளின் பணிகள், அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றி நேரடியாகப் பேசத்துவங்குகிறது புத்தகம். 13 தலைப்புகளில் ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. உடலுக்கு என்ன தேவையோ அதையே நாக்கு தேடுகிறது. கால்சியம் சத்துக் குறைவான பிள்ளைகள் பலப்பம், சாக்பீஸ், சுண்ணாம்பைத் தேடுகின்றன. தாது உப்புக் குறைவாயுள்ள பிள்ளைகள் மண்ணைத் தின்கின்றன. ஒரு பொருள் பதார்த்தம் நீர்ம நிலையில் இருந்தால்தான் அதன் சுவையை சுவை அரும்புகள் உணர்ந்து தகவலை மூளைக்கு அனுப்ப முடியும். பல்லைச் சுத்தம் செய்வது போலவே தினமும் நாக்கையும் மென்மையாகச் சுத்தம் செய்வது அவசியம்.

உங்களின் சிரிப்பு, அழுகை, கோபம், பயம் என்று நவரச உனர்ச்சிகளை வெளிப்படுத்துபவை முகத்திலுள்ள 40 தசைகளே! சின்னச் சிரிப்புக்கு 11 தசைகளும் அழுகைக்கு 17 தசைகளும் செயல்பட வேண்டும். உடலில் அதிகம் உழைப்பவை கண்களின் தசைகளே. ஒரு நாளைக்கு 10 லட்சம் தடவைக்கு மேல் மூடி மூடித் திறக்கின்றன. தசைகளைக் காக்க புரதச் சத்தும் நல்ல ஓய்வும் தொடர்ந்த உடற்பயிற்சியும் தேவை. இப்படியான உபயோகமான தகவல்களை வெகு சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்லும் இப்புத்தகம் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.

வ.உ.சியின் சுதேசிக்கப்பலும்
தொழிற்சங்க இயக்கமும்
ச.தமிழ்ச்செல்வன்
(24 பக்கம் ரூ5.)

பன்னாட்டு மூலதனக் கம்பெனிகள் நம் தேசத்தில் நுழைந்து நம் செல்வங்களையெல்லாம் கொள்ளை கொண்டு போகத் தலைப்பட்டுள்ள இந்த நாளில் வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியைத் துவக்கி எதிர்ப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் அதை நடத்திய வ.உ.சியின் கதை தொழிலாளி வர்க்கத்துக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. பாரடா தோழா இதுதான் உன் பாரம்பரியம் என்கிற தொனியில் 1908 இல் தூத்துக்குடியில் வ.உ.சி துவக்கிய கோரல் ஆலைத் தொழிலாளர் சங்கம் நடத்திய முதல் வேலை நிறுத்தம் பற்றியும் அதற்கு ஆதரவாகத் தூத்துக்குடி நகர மக்களை வ.உ.சி திரட்டி மக்களுக்கும் தொழிற்சங்கத்துக்கும் வலுவான பிணைப்பை ஏற்படுத்திய வரலாறு பற்றியும் சொல்லப்படுகிறது.

ஆத்திரமடைந்த வெள்ளை நிர்வாகம் வேறு காரணம் சொல்லி வ.உ.சியைக் கைது செய்கிறது. உடனடியாக கோரல் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து தெருவில் இறங்கினர். இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் இதுதான் என்பதை ஆதாரத்துடன் புத்தகம் சொல்கிறது. வ.உ.சி கைதை ஒட்டி நெல்லை நகரம் கொதித்து எழுகிறது. பொதுமக்களும் மாணவர்களும் தொழிலாளிகளும் பங்கேற்கும் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடக்கிறது. ஒரு முஸ்லீம், ஒரு பறையர், ஒரு பூசாரி, ஒரு ரொட்டிக்கடைத் தொழிலாளி என நான்கு பேர் களப்பலி ஆகின்றனர். தூத்துக்குடியில் வெள்ளையருக்கு ஆதரவாகப் பேசும் அதிகாரிகளுக்கு சவரம் செய்ய நாவிதர்கள் மறுக்கிறார்கள். துணி துவைக்க சலவைத் தொழிலாளிகள் மறுக்கிறார்கள். துப்புரவுப் பணியாளர்களின் மறுப்பு காரணமாக வெள்ளையர் வீடுகள் நாறுகின்றன. தொழிற்சங்கமும் பொதுமக்களும் இரண்டறக் கலந்து நின்ற வரலாறு உணர்ச்சிகரமாக நம் கண்முன்னே விரிகிறது.

ஆயிஷா
இரா.நடராசன்
(24 பக்கம் ரூ.5)

ஒரு சிறுகதை. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் கல்வி வட்டாரங்களில் பணிபுரியும் எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் சிறுகதை. இன்று பாரதியின் மூலம் எல்லோருக்குமான வாசிப்புக்கு வந்துள்ளது. பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் ஆயிஷா என்கிற மாணவிக்கும் இடையில் கல்வி தொடர்பான கேள்விகள் முலம் மலரும் உறவு கதையின் அடிச்சரடாக ஓடுகிறது. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான நட்பு, அப்பா, மகன் உறவு – அம்மா, மகள் உறவு பற்றியெல்லாம் கூடக் கதைகள் சில வந்ததுண்டு. பாடத்திட்டத்தோடு கூடிய கேள்விகள் அக்கேள்விகள் வழியே அக்குழந்தையின் மேதமையை சட்டெனெ அடையாளம் கண்டுவிடும் ஆசிரியை. ஆனால் அவளை சரியாக அடையாளம் காண முடியாத செக்குமாட்டு வாழ்க்கையில் சிக்கிக் கொண்ட பிற சக ஆசிரியர்கள் அவளை நடத்தும் விதம் அவள் மீது பிரயோகிக்கும் வன்முறை, இதையும் மீறி இந்த ஆசிரியையுடன் அவள் கொள்ளும் சினேகம், நேசம், புரிந்து கொண்ட ஒருவராவது பள்ளியில் இருக்கிறாரே என்கிற பெருமிதம், கேள்விகளால் தொடரும் இந்த நட்பு, ஆனால் இறுகிப் போன கல்விமுறை ஆயிஷாவை என்ன செய்து விட்டது? கதையை வாங்கிப் படித்துத்தான் ஆக வேண்டும்.

காந்தி புன்னகைக்கிறார்
ஜா. மாதவராஜ்
(32 பக்கம் ரூ.10)

அவனது பரிணாமம் என்பது இருளில் நடந்தது. அவனது பயணத்தின் தடயங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. சாத்தானின் பிரவேசம் என்பது இப்படித்தன் இருக்கும் போலும். அவன் பெயர் நாதுராம் கோட்சே! அவரது வாழ்வு என்பது ஒளி நிறைந்தது. அவரிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் உலகமே அறிந்திருந்தது. அவர்தான் தேசப்பிதா காந்தி மகான். ஒரு திரைப்படத்தின் இணைக் காட்சி (parallel shot) பாணியில் விறுவிறுப்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லப்படும் வரலாறு இப்பக்கங்களில் விரிகிறது. காந்தியும் கோட்சேயும் தனி நபர்கள் அல்லர். வெவ்வேறான எதிரெதிரான இரு கருத்துக்களின் தத்துவங்களின் பிரதிநிதிகள். கோட்சேயைக் கொலைகாரனாக மாற்றிய இந்துத்துவ தத்துவம் இந்திய வரலாற்றில் இயங்கிய வரலாறும், கோட்சே அதன் பிடியில் சிக்கி வளர்ந்த கதையும் ஆதாரங்களுடன் சொல்லப்படுகிறது. மதச் சார்பற்ற அரசியலுக்கு வித்திட்ட மகாத்மா இந்துத்துவத்தை எதிர்கொண்ட தருணங்களும் விதமும் கூர்மையாக விளக்கப்பட்டுள்ள புத்தகம். காந்தி கொலையுண்ட நிகழ்வும் அதற்கு முன்னர் அவரைக் கொலை செய்ய நடந்த முயற்சிகளும் ஒரு மௌனப்படம் போல நம் முன்னே காட்சிபூர்வமாக நகர்கின்றன. காந்தி கொலைக்குப் பிறகு நாட்டில் நடந்த நிகழ்வுகளும் சமீப காலங்களில் வெறி கொண்டு எழுந்து நிற்கும் இந்துத்வா சக்திகள் கோட்சேயைத் தியாகியாகக் காட்ட எடுக்கும் முயற்சிகளும் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றன. காந்தி பிறந்த குஜராத் மண்ணில் ரத்த ஆறு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் 1947 ஆகஸ்ட் 15 அன்று காந்தி நின்ற இடமான கல்கத்தா அமைதிப்பூங்காவாக மணக்கிறது ஹூக்ளி நதி அமைதியாப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதில் பொதிந்துள்ள உண்மையை அடையாளம் கண்டு காந்தி நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார்.

பெரியாரும்
சுயமரியாதை இயக்கமும்
விஜயன்
(16 பக்கம் ரூ.5)

திராவிடக் கட்சி மேடைகளின் பின்புலத்திலும் கட்சிப்பாடல் வரிகளிலும் பழைய புகைப்படங்களிலும் தவறாமல் இடம் பெறும் பெரியார் இவர்களின் கொள்கைகளில் காணாமல் போயிருப்பது வரலாற்றுச் சருகலா? அரசியல் சந்தர்ப்பவாதமா? இரண்டும் இல்லை. இங்கு நடப்பது விலகல் என்று சூடாகத் துவங்குகிறது புத்தகம்.

ஆரம்ப நாட்களில் காந்தியின் தேசியத்தினால் கவரப்பட்டு பின் உயர்சாதி விருப்பு வெறுப்புகளையும் பிற்போக்கான கருத்துக்களையும் நடைமுறைகளையும் விட்டொழிக்க மனமில்லாத “தேசியவாதிகளை” வெறுத்து விலகிப் பின் மதவாத உணர்வுகளைச் சவுக்காலடிக்கப் புறப்பட்டுப் பின் சோசலிசத்தின் சிறப்பை உணர்ந்து இடது பக்கம் சிறிது தூரம் சென்று பின் பிராமண எதிர்ப்பு நிலை எடுத்து மீண்டும் சீர்திருத்தப் பணிக்கே திரும்பி சுதந்திரம் என்ற பேரால் பிராமண ஆட்சி வருவதை விட வெள்ளைக்காரனே மேல் என்று பிரிட்டிஷ் ஆதரவு நிலை எடுத்து – என பெரியார் என்னும் கட்டுக்கடங்காத சக்தியின் தனிமனித சரிதையும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இந்த வரலாற்றின் பக்கங்களின் முக்கிய வரிகளை சுருக்கமாக மறுவாசிப்புச் செய்கிறது இப்புத்தகம்.

அம்மறுவாசிப்பின் மூலம் பெரியார் ஒவ்வொரு கட்டத்திலும் முந்தைய நிலைபாட்டிலிருந்து விலகிய புள்ளிகளை நமக்கு அடையாளம் காட்டி வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவி செய்கிறது. பொப்பிலி அரசரை ஆதரித்துக்கொண்டே ஜமீந்தார் அல்லாதார் மாநாட்டை நடத்தினார். நாட்டுக்கோட்டை செட்டியார்களை வைத்துக்கொண்டே லேவாட்ர்ஹேவிக்காரர்கள் இல்லாதார் மாநாட்டை நடத்தினார். தரகு வணிகர்களும் நிலப்பிரபுக்களும் அமர்ந்த மேடையில் ஏகமனதாக சமதர்மத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் மீது விமர்சனங்கள் உண்டு என்றாலும் தமிழ் மண்ணில் ஒரு மாற்றம் வரவேண்டும் என விரும்பும் எவரும் பெரியாரை மறந்து விட்டு அல்லது அவரைக் கற்காமல் ஓரடியும் எடுத்து வைக்க முடியாது எனத் தெளிவான குரலில் சிக்கனமான வார்த்தைகளில் வலுவான வாதங்களை முன் வைக்கும் புத்தகம்.

என்றென்றும் மார்க்ஸ்
ஜா.மாதவராஜ்
(32 பக்கம் ரூ.10)

தன் நேயர்களிடம் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் உலகின் மிகச் சிறந்த சிந்தனையாளர் யார் என்று லண்டன் பி.பி.சி. நிறுவனம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. உலக முதலாளிகளும், நடத்திய பி.பி.சி.யும் அதிர்ச்சியடையும் வண்ணம் மக்கள் காரல் மார்க்ஸ் என்று விடையளித்தனர். முதலாளித்துவம் என்னும் விருட்சத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் சபிக்கப்பட்ட காலம் என்னும் வேதாளத்தை விடுதலை செய்து தன் தோள்களில் தூக்கிச் செல்லும் காரல் மார்க்ஸிடம் கேள்விகளைக் கேட்டபடி வருகிறது வேதாளம். விக்கிரமாதித்தனைப்போல அல்லாமல் ஒவ்வொரு கேள்விக்கும் தன் ஆய்வுகளிலிருந்து ஆகச் சரியான பதிலைச் சொல்லிக்கொண்டே காலத்தின் புதிர்களை விடுவித்துக்கொண்டே தன்னை மேலும் மேலும் தெளிவு படுத்திக் கொண்டே காலத்துடன் நகர்கிறார் மார்க்ஸ். இப்படியான ஒரு படிமத்துடன் வாசகரையும் காலத்தின் கேள்விகளுக்கு முன் நிறுத்தி மார்க்ஸோடு சேர்ந்து நாமும் புதிர்களை அவிழ்த்து இனக்குழு வாழ்க்கையிலிருந்து தனிச்சொத்து தோன்றிய வரலாற்றையும் அதன் நிலைநிறுத்தலில் தத்துவங்கள் ஆற்றிய பங்கு பற்றியும் அறிந்தபடியே கார்ல் மார்க்ஸ் என்னும் இளம் போராளியின் கால்தடம் பற்றிக் கூடவே நடந்து செல்கிறோம்.

வழிநெடுகிலும் மார்க்ஸ் ஹெகலையும் ஃபோயர்பாக்கையும் ஆடம் ஸ்மித்தையும் ரிக்கார்டோவையும் உட்கொண்டு பின் நிராகரித்து முன்னோக்கி நடந்து செல்வதைப் பார்க்கிறோம். மார்க்ஸின் காலத்திலேயே 73 நாட்கள் ஆட்சியிலிருந்த பாரீஸ் கம்யூன் சரிகிறது. அவர் காலத்துக்குப் பின் 73 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த சோவியத்தும் கீழை ஐரோப்பிய நாடுகளும் சரிகின்றன. ஆனாலும் மார்க்ஸ் இன்னும் வீறு நடை போடுகிறார் உலகெங்கும் நடைபெறுகிற போராட்டங்களின் வடிவில். 32 பக்கங்களுக்குள் 40க்குமேற்பட்ட புகைப்படங்கள் ஏராளமான பக்கக் குறிப்புகள், கவிதைகள் என வாசகர் நெஞ்சம் உவகை கொள்ளும் விதமான தயாரிப்பாக ஒவ்வொரு பாட்டாளியும் வீட்டில் வைத்திருந்து அவ்வப்போது எடுத்துப் படித்துக் கொள்ள வேண்டிய புத்தகமாக இருக்கிறது.

சிலந்தியும் ஈயும்
வில்ஹெல்ம் லீப்நெஹ்ட்
தமிழில் : இரா.கிருஷ்னையா
(16 பக்கம்.விலை ரூ.5)

லீப்நெஹ்ட் (1826-1900) ஜெர்மானியத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ஒரு பெயர் என்றார் லெனின். இத்தலைப்பில் தொழிலாளி வர்க்கத்தோடு அவர் பேசிய உரை இந்நூலாக வந்துள்ளது. ஈக்களை தன் வலைப்பின்னலில் விழ வைத்துப் பின் அவற்றைக் கொலைவெறியோடு உண்டு புசிக்கும் கொழுத்த சிலந்தியை முன் வைத்து பாட்டாளிகளுக்கு நீங்கள்தான் அந்த ஈக்கள். உங்கள் ஆண்டைகளும் முதலாளிகளும் தரகு முதலாளிகளும்தான் அந்தச் சிலந்திகள் என்று புரிய வைக்கிறார். சிலந்திகள் பின்னும் சிக்கலான வலைகளுக்குள் மாட்டிக்கொண்டு விதியை நோவதற்கு மாறாக எண்ணிக்கையில் அதிகமான ஈக்களெல்லாம் ஒன்றாக முடிவெடுத்தால் தங்களின் சிறகசைப்பில் எத்தனை சிக்கலான வலைப் பின்னல்களையும் அறுத்தெறிந்து விடுதலை பெற முடியும் என்பதை ஆவேசத்துடன் விளக்கும் புத்தகம்.

ஹரப்பா வேதங்களின் நாடா?
த.வி.வெங்கடேஸ்வரன்
(24 பக்கம் ரூ.5)

வேதங்கள் பிறந்தது இந்தியாவில்தான். ஆதிக்கலாச்சாரமான ஹரப்பா/மொஹஞ்சோதரா கலாச்சாரம் ஆரிய மரபுதான். ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை. இங்கிருந்துதான் வெளியே போனார்கள். ராமபிரானும் அவருடைய சந்ததியினரும் இம்மண்ணின் மூதாதைகள் என்பது போன்ற ஏராளமான ‘சரித்திர உண்மைகள்’ எல்லாம் சங் பரிவாரங்கள் அவுத்து விடும், சரடு திரித்து விடும் கயிறு என்பதை வலுவான சரித்திர மற்றும் மொழியியல் ஆதாரங்களோடு நிறுவும் புத்தகம். இந்திய மொழிகளிலும் பாரசீகத்திலும் ஈரான் ஈராக் பகுதியில் பேசப்படும் மொழியிலும் இருக்கும் பொதுவான வேர்ச்சொற்கள் பலவற்றை உதாரணமாக எடுத்துக்கொண்டு எப்படி அவை மேற்குக் கதவு வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தன என்பதை விளக்குகிறது.

ஆப்கானிஸ்தானத்தின் ஒரு பகுதியில் இன்னும் புழக்கத்தில் உள்ள பிருஹி என்னும் திராவிட மொழி பற்றிய தகவல்கள் நமக்கு முற்றிலும் புதியவையாகும். “ஆரிய வருகை” என்னும் சரித்திர நிகழ்வு பற்றிய செய்தியை இந்தியாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு சிந்தனைப்போக்கு உள்ளவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்கிற செய்தியெல்லாம் வாசகருக்கு சுவையான செய்திகளாக அமைகின்றன. குதிர்கள் இந்தியப்பகுதிக்கு வந்தது கி.மு.2000க்குப் பிறகுதான். சோம பானம் பற்றி வேதங்கள் சிலாகித்துப் பேசுகின்றன. ஆனால் அதைத் தயாரிக்கத் தேவையான எபித்திரா என்னும் தாவரம் இங்கு விளையவில்லை. அது பாரசீக நிலப்பரப்பில்தான் இப்போதும் விளைந்து கொண்டிருக்கிறது. தவிர ரிக் வேதத்தில் திரும்பத் திரும்பக் கூறப்படும் நிலப்பரப்பு பனி படர்ந்த மலை முகடுகளுக்கு நடுவே உள்ளதாக வருகிறது. ஹரப்பா அப்படியான நிலப்பகுதியல்ல. பாரசீகம்தான் அது. இன்னும் இதுபோலப் பல வானவியல், அகழ்வாய்வுச் சான்றுகளோடு வேதங்கள் பாரசீகச் சமவெளிகளிலும் இந்துகுஷ் மலைப் பகுதியிலுமாகத்தான் எழுதப்பட்டிருக்க முடியும் என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறது இந்நூல்.

இந்திய மண்ணில் பொருள் முதல்வாதம்
வி.பி.சிந்தன்
(32 பக்கம் ரூ.5)

பொருள்முதல்வாதம் அந்நியச் சரக்கு. தொன்மையான காலத்திலிருந்தே இந்திய மண்ணில் வேரூன்றி ஆல்போல் தழைத்து வேர்கொண்டிருப்பது ஆன்மீகம்தான் என்று பலகாலமாகச் சிலர் பரப்பிவரும் கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஒரு பெருமைமிக்க வரலாறு இந்தியப் பொருள்முதல்வாதச் சிந்தனைக்கு உண்டு என்பதை எளிய தமிழில் எடுத்துச்சொல்லும் நூல். பொருள்முதல் வாதம் இந்திய மண்ணில் பலமடைந்திருந்த காலத்தில்தான் மருத்துவம், கணிதம், வானசாஸ்திரம் மற்றும் பல்வேறு துறைகளில் அளப்பரிய சாதனைகள் படைக்கப்பட்டன. எல்லாம் எங்கள் இந்தியாவில் இருந்தது இன்று சிலர் பெருமைப்பட்டுக்கொள்ளும் பல சாதனைகள் இந்தியப் பொருள்வாதத்தின் சாதனைகளே. அந்த வரலாற்றை எராளமான நூல்களை நூலகங்களை எல்லாம் ஆன்மீகவாதம் அழித்ததுதான் இந்தியாவின் சோக வரலாறு. விஞ்ஞான வளர்ச்சியோ இயந்திர நுட்பங்களோ இல்லாத அக்காலத்தில் தோன்றிய பொருள்முதல்வாதச் சிந்தனைகள் அதற்கேயுரிய பலவீனங்களோடுதான் இருந்தன. மாற்றங்களின் காரணம் பொருளேதான். கடவுளல்ல என்று சொன்ன அசேதன காரணவாதத்தை முன் வைத்த சாங்கியம், அணுக்கள்தான் மூலப்பொருட்கள் என்று வாதாடிய நியாய வைசேஷிகர்கள், கண்முன் இருக்கும் உலகத்தைத் தவிர வேறு கற்பனைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது, ஐம்புலன்களைத் தவிர அறிவுக்கு வேறு தோற்றுவாய் இல்லை என வாதாடிய லோகாயதம், எந்தப் புதிய கடவுளையும் முன்வைக்காமல் தனியுடமையையும் வேத மரபுகளையும் நிராகரித்து எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது என்று எழுந்த பௌத்தம், என ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் இந்தியப் பொருள்முதல்வாதத்துக்கு உண்டு என்பதை பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவரின் நெகிழ்ச்சிமிக்க வார்த்தைகளில் வாசிக்கிறோம்.

மலராத அரும்புகள்
பேரா.ஆர்.சந்திரா
(24 பக்கம் ரூ.5)

“9 அல்லது 10 வயதுக் குழந்தைகள் காலை 3 அல்லது 4 மணிக்கு படுக்கையிலிருந்து இழுத்து வரப்பட்டு இரவு 10 அல்லது 11 மணிவரை வேலை செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டு, அவர்கள் உடல் சுருங்கி முகம் வெளுத்து நினைக்கவே பயமாக இருக்குமளவுக்கு கற்களாக குழந்தைகள் ஆக்கப்படுகின்றனர்” 150 ஆண்டுகளுக்கு முன்னால் மூலதனம் நூலில், இங்கிலாந்து நாட்டில் நடப்பது பற்றி மாமேதை காரல் மார்க்ஸ் எழுதிய வரிகள் இவை. இவ்வரிகளை வாசிக்கும்போது ஏதோ தமிழ்நாட்டில் சிவகாசியைப் பற்றி எழுதியது போல இருக்கிறது. வாசகர் நெஞ்சம் அதிரும்படியான பல புள்ளிவிவரங்களோடு, குழந்தை உழைப்பாளிகளின் வாழ்வுபற்றியும் மாற்றத்துக்கான போராட்டத்தின் அவசியம் பற்றியும் பேசும் புத்தகம். தீப்பெட்டித்தொழில், பட்டாசு, கண்ணாடித்தொழில், மண்பாண்டம் மற்றும் கல்குவாரி, கொலுசுப்பட்டறை, தையல் வேலை, பாலியல் தொழில் என சுகாதாரத்தைச் சீர்குலைக்கும் பல தொழில்களில் நம் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கல்வியும் விளையாட்டுமாகக் கழிய வேண்டிய பால்யம் இப்படிக் கழிகிறது.

“தினசரி உலகில் 10 கோடி குழந்தைகள் தினமும் வெறும் வயிற்றுடன் மௌனமாகப் படுக்கைக்குச் செல்கிறார்கள்” என்னும் யூனிசெஃப்பின் அறிக்கையில் உள்ள இந்த ஒருவரி எந்த உலக மகா இலக்கியமும் ஏற்படுத்தாத மன உளைச்சலையும் வேதனையையும் குற்ற உணர்வையும் கண்ணீரையும் வாசகருக்குத் தருகிறது. இதுபோன்ற ஏராளமான தகவல்கள். மட்டுமின்றி ராணுவத்துக்கு 40 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யும் நம் உலகம் இந்த உலகத்துக் குழந்தைகளுக்கெல்லாம் சத்தான உணவை வழங்கிடத் தேவையான 50300 கோடிப் பணம் இல்லாமல் முகம் திருப்புகிறது. குழந்தைகள் மீது எந்த அக்கறையுமற்ற இந்த உலகம் மாற்றப்பட்டே தீரவேண்டும்.

காந்தி அம்பேத்கர் – மோதலும் சமரசமும்
அருணன்
(48 பக்கம் ரூ.10)

ஏதோ காந்திஜியும் அம்பேத்காரும் ஜென்மப் பகைவர்கள் போல வாழ்ந்ததாக இன்றைக்குச் சில பேர் சித்தரிக்கிறார்கள். யதார்த்தம் நேர் மாறாக இருந்ததை வாசகர் மனம் கொள்ளும் விதமாக இப்புத்தகம் விளக்குகிறது. உயர்சாதி மனோபாவம் ஆதிக்கம் செலுத்திய காங்கிரசின் பிரதிநிதியாக காந்திஜி பேசியபோதெல்லாம் முரண்பட்டு நின்ற அண்னல் அம்பேத்கார் காந்திஜியின் மனதை அறிந்தவராக செயல்பட்ட வரலாற்றின் தருணங்கள் நம் முன் விரிகின்றன.

எந்தக் காலத்திலும் காங்கிரசிலேயே இருந்திராத அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதுவும் சட்ட அமைச்சராக. அதிலும் குறிப்பாக சுதந்திர இந்தியாவின் புதிய அரசியல் சாசனம் வரையப்படுகிற வேளையில். இதற்குக் காரணகர்த்தாக்களாக விளங்கியவர்கள் காந்திஜியும், நேருவும் என்பது சரித்திர உண்மையல்லவா?

இதே போல பூனா ஒப்பந்தம் என்ற பேரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் காந்திஜி துரோகம் செய்துவிட்டார் என்கிற குரலும் இப்போது கேட்கிறது. சாதி இந்துக்களின் சூழ்ச்சியே பொதுத் தொகுதிமுறை. அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமையை நாம் வென்றெடுக்க வேண்டும் என்கிற ஆவேச முழக்கங்கள் சில தலித் இயக்கத் தலைவர்களால் எழுப்பப்படுகிறது.

பூனா ஒப்பந்தம் என்பது என்ன? இரட்டை வாக்குரிமையை அம்பேத்கர் எந்த வரலாற்றுப் பின்னணியில் முன் வைத்தார்? எரவாடா சிறையில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் நடந்த உரையாடலின் சாரம் என்ன? காந்தியின் மனநிலையில் எப்படி அம்பேத்கர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார், இவை எல்லாம் ஒரு சரித்திர நாவலின் அத்தியாயங்கள் போல ஜீவனுள்ள மொழிநடையில் விரிந்து செல்கிறது. இரட்டை வாக்குரிமைதான் இறுதி லட்சியம் என அம்பேத்கர் கருதியிருந்தால் அவர் அரசியலமைப்புச் சட்டத்தில் அதை ஏன் சேர்க்கவில்லை?

இது போன்ற கேள்விகளுக்கு நிதானமாக விடையளித்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்யத் தூண்டும் புத்தகம்.

ஒரு நிமிடம் ஒரு மரணம்
காச நோய் பற்றிய ஒரு விளக்கம்
டாக்டர் ராமன் கக்கர்
தமிழில்: வி.என்.ராகவன்
(90 பக்கம் ரூ.15)

காசநோய், ஷயரோகம், எலும்புருக்கி எனப் பல பெயர்களால் அறியப்படும் TB தாக்கி நம் நாட்டில் ஒரு நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார். உலகிலேயே நம் நாட்டில்தான் காச நோயாளிகள் அதிகமாக இருக்கின்றனர். உலகின் காச நோயாளிகளில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில். சுமார் 3 லட்சம் குழந்தைகள் இதன் காரணமாக ஆண்டுதோறும் பள்ளியை விட்டு நிற்கின்றனர். ஒரு லட்சம் பெண்கள் இந்நோய் காரணமாக விவாகரத்து செய்யப்படுகின்றனர். பெரும்பாலும் ஏழைகளையே இந்நோய் தாக்குகிறது. ஆகவே எய்ட்சுக்குச் செலவிடும் அளவில் பாதிகூட காச நோய்க்குச் செலவிட பணக்கார நாடுகள் தயாராக இல்லை. இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இந்நோய்க்கு மருந்து கண்டுபிடித்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இந்த மரணங்கள் ஏன்? இந்த மரணங்கள் தவிர்க்கப் படக்கூடிய சாத்தியமுள்ளவையே. தேவை காசநோய் பற்றியும் அதற்கான சிகிச்சை பற்றியுமான விழிப்புணர்வு. கவிஞர் ஜான் கீட்ஸையும், ஷெல்லியையும், டி.எச்.லாரன்ஸையும், ஆர்.எல்.ஸ்டீவன்சனையும், பிரஞ்சுப்புரட்சிக்கு வித்திட்ட ரூசோவையும், ஜெர்மானியக் கவி கோத்தெயையும், பிரான்ஸ் கஃப்காவையும், தாஸ்தவ்ஸ்கியையும், ஆண்டன் செகாவையும், புகழ்பெற்ற நாவலான ‘அனிமல் ஃபார்ம்’ எழுதிய ஜார்ஜ் ஆர்வில்லையும், நம் கணிதமேதை சீனிவாச ராமானுஜத்தையும் தாக்கிய இக்காசநோயை நாட்டை விட்டு விரட்டும் போராளியாக ஒவ்வொரு வாசகரையும் ஆக்கிவிடும் வலுவான புத்தகமாக இது அமைந்துள்ளது.

தண்ணீர்.. தண்ணீர்… தண்ணீர்…
பேராசிரியர் ஆர்.சந்திரா
(32 பக்கம் ரூ.5)

97 சதவீதம் உப்பு நீராகக் கடலில் உள்ளது. 2 சதவீதம் பூமியெங்கும் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. மீதி 1 சதவீதம் தண்ணீரைத்தான் குடிநீராகவும் விவசாயத்துக்கும் மற்ற வேலைகளுக்கும் நாம் பயன்படுத்த முடியும். ஆனால் மனிதகுலம் எந்தெந்த வகையிலெல்லாம் நீர் கிடைக்குமோ அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக உறிஞ்சத் துவங்கி விட்டது என்கிற அபாய எச்சரிக்கையுடன் துவங்குகிறது புத்தகம். வளர்ந்த நாடுகள் 85 சதம் நீர்வளத்தை தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்துகின்றன. ஆப்பிரிக்க நாடுகள் 88 சதவீத நீரையும், பல வளரும் நாடுகள் 70 சத நீரையும் விவசாயத்துக்காகப் பயன்படுத்துகின்றன. இந்தியாவும் சீனாவும் நிலத்தடி நீரில் 100 சதவீதத்தையும் பயன்படுத்தி விட்டன.
இந்தப் பின்னணியில் நீர் வியாபாரம் நீரைத் தனியார்மயமாக்குதல் நடந்து வருகிறது. 1987ல் கொண்டுவரப்பட்ட தேசிய நீர்க்கொள்கை நீர்ப்பயன்பாட்டில் முன்னுரிமை பற்றிக் குறிப்பிடும்போது முதலில் குடிநீர், அடுத்து நீர்ப்பாசனம், மூன்றாவதாக மின்சார உற்பத்தி, நான்காவதாக தொழிற்சாலை/மற்ற பயன்பாடுகள் என வரிசைப்படுத்தியது. ஆனால் 2002 புதிய தேசிய நீர்க்கொள்கையில் இந்த முன்னுரிமை இல்லை. நீர் வியாபரத்துக்கு அகலக் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இப்பின்னணியில் அனைவருக்கும் பொதுவான சொத்தான நீர்வளத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்கிற பத்துக் கட்டளைகளுடன் புத்தகம் முடிவடைகிறது.

மார்க்சிய தத்துவம் – ஓர் அறிமுகம்
எஸ்.ஏ.பெருமாள்
(32 பக்கம். விலை ரூ.7)

தமிழகமெங்கும் நெடுங்காலமாக இடதுசாரி இயக்கத் தோழர்களுக்கு வகுப்புகள் எடுத்த அனுபவத்தோடு பளிச்சிடும் இச்சிறுநூல் மிகவும் பயனுள்ள ஆரம்பக் கையேடாகத் திகழும் என தோழர் என்.சங்கரய¢யா தனது அணிந்துரையில் குறிப்பிடுகிறார். லுத்விக் போயர்பாக் மற்றும் வில்லியம் ஹெகல் ஆகிய இரு படிக்கட்டுகளைத் தாண்டி வந்த மார்க்சிய தத்துவம் தோன்றிய வரலாற்றுப் பின்னணியில் துவங்கி இயக்கவியலின் அடிப்படை அம்சங்களை விளக்கி இயக்கவியலுக்கே உரித்தான மூன்று அடிப்படை விதிகளை எளிய உதாரணங்களுடன் பல்வேறு உப தலைப்புகளில் விரிவாகவே விளக்குகிறது. மார்க்சின் காலத்துக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் எவ்விதம் மார்க்சியத்துக்கு வலுச்சேர்த்தன என்பதை விளக்கும் புத்தகம், இந்திய தத்துவவியலின் இரு பிரதான போக்குகளைப் பற்றிய அறிமுகத்தையும் செய்து, தத்துவப் போராட்டம் என்பது அடிப்படையில் எதிர் எதிர் வர்க்கங்களுக்கிடையிலான போராட்டத்தின் சாரமே என்கிற லெனின் கருத்தை தெளிவாக விளக்குகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றிய அறிமுகத்தோடு ஆதி பொதுவுடமைச் சமூகத்தில் துவங்கி சோசலிச சமூகம் வரையிலான சமூக வளர்ச்சியின் 5 கட்டங்களை விளக்கி வர்க்கப்போராட்டத்துக்கான தொழிலாளி வர்க்கக் கட்சியைக் கட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தி முடிகிறது.

உலகமயமாக்கல்
சகாப்தத்தில் கலாச்சாரம்
சீதாராம் யெச்சூரி
(16 பக்கம் ரூ.5)

பொருட்களை உற்பத்தி செய்யும் சாதனங்களை வைத்திருக்கும் வர்க்கமே, அறிவுச்சாதனங்களையும் வைத்திருக்கும். எனவே அவர்கள் சிந்தனையாளர்களாகவும் எண்ணங்களை உற்பத்தி செய்பவர்களாகவும் இருந்து உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறார்கள். அவர்களின் எண்ணங்களே அந்த சகாப்தத்தின் ஆளும் எண்ணங்களாகி விடுகின்றன என்கிற மார்க்ஸ், ஏங்கல்சின் கருத்தை மேலும் விளக்கும் கிராம்சி “ஆளும் வர்க்கங்களின் எண்ணங்களை அரசு மட்டும் செயல்படுத்துவதில்லை. அரசு என்பது சமுதாயம் என்ற கோட்டையைச் சுற்றியுள்ள அகழியே. அந்தக் கோட்டைக்குள்தான் கலாச்சார நிறுவனங்களும் ஆளும் வர்க்கங்களின் ஆட்சியை நியாயப்படுத்தும் காரண காரியங்களும் பின்னிப் பிணைக்கப்படுகின்றன” என்கிறார் என்று துவங்கும் புத்தகம் எளிய நடைமுறை உதாரணங்களுடன், கலாச்சாரம் பற்றிய ஆழமான புரிதலை வாசகருக்கு ஏற்படுத்துகிறது. மக்கள் மீது ஆளும் வர்க்கங்களின் எண்ணங்களை ஆதிக்கம் செலுத்த வைப்பதற்காக குடும்பம், சமுதாயம், சாதி, மதம், வழிபாட்டு ஸ்தலங்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. ஏதோ எல்லோருக்கும் ஒரு பொதுவான கலாச்சாரம் இருப்பதாக ஒரு மாயை ஏற்படுத்தப்படுகிறது. உலகமயமாக்கலும் வகுப்புவாதமும் கலாச்சாரத்தைப் பயன்படுத்தி தங்களின் அன்றாடப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புகின்றன. மார்க்ஸ் சொன்னது போல முதலாளித்துவ உற்பத்தியானது, மக்களுக்காகப் பொருட்களை உற்பத்தி செய்வதோடு, பொருட்களுக்காக மக்களையும் உற்பத்தி செய்கிறது. கலாச்சாரம் அப்பணியைச் செய்யப் பயன்படுகிறது. ஆகவே நாம் தற்போதுள்ள நமது கலாச்சார வடிவங்களை மாற்றி மேம்படுத்துவதோடு பொது மக்களின் கலாச்சாரத்திற்கான புதிய வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற அறைகூவலே புத்தகத்தின் இறுதி வரிகளாக வந்துள்ளன.

ரோஸ்
இரா.நடராசன்
(64 பக்கம் ரூ.10)
ஆயிஷாவைப் போல மனதை உலுக்கும் இன்னொரு கதை. கதை என்று கூடச் சொல்ல முடியாது. ஒரு வாழ்க்கைச் சித்திரம். ’ஒரு’ என்கிற அடைமொழி கூடச் சரியில்லை. நம் அன்றாட வாழ்வின் ஒரு பக்கம் அப்படியே நம் கண்முன் ரீவைண்ட் ஆகி நம் குழந்தைகளின்பால் நாம் செலுத்தும் வன்முறையை நம் உள்ளம் அதிர உணரச் செய்கிறது. ஒரு மௌனப்படம் போல நம்மை அழுத்தும் இக்கதையில் சம்பவங்களோ விவரணைகளோ எதுவுமே இல்லாமல் பேசும் வசனங்களால் மட்டுமே கதையை நகர்த்திச் செல்லும் உத்தி வலுவாகப் பயன்பட்டுள்ளது. ஒரு பெண்ணை லாட்ஜுக்கு அழைத்துச்செல்லும் ஒரு கதையில் பூமணி இந்த உத்தியைப் பயன்படுத்தி எழுதியிருப்பார். அதற்குப் பிறகு இவ்வளவு வலுவுடன் இந்த உத்தி இக்கதையில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து வீட்டிலும், வேலைக்குச் செல்லும் பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும், ஒவ்வொருவரும் தினசரி இரவு படுக்கைக்குச் செல்லுமுன் ஒரு முறை இப்புத்தகத்தை வாசித்துத் தங்கள் மனசாட்சியுடன் பேசிக்கொள்ள வேண்டும். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. புத்தகத்தை வாங்கிவிடுவோம்.

மனிதமும்
உரிமைகளும்
ச.பாலமுருகன்
(64 பக்கம் ரூ10)

மனித உரிமைகள் பற்றிய தகவல் தொகுப்புகளாகவும், கருத்துக்குவியல்களாகவும், புதிய வாசகர்களுக்கு அயர்ச்சியூட்டும் விதமாகவும், பல புத்தகங்கள் இதுவரை வந்துள்ளன. அவை எல்லாவற்றிலிருந்தும் முற்றிலுமாக மாறுபட்டு எளிய தமிழில் தமிழகத்திலும், நாட்டின் பிற பகுதிகளிலும், பிற நாடுகளிலும் நடைபெற்ற பல உண்மைச் சம்பவங்களை முன்வைத்து இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் மனித உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனதைக் கண்டு அதிர்ந்து போன அறிஞர்கள், இனியும் இப்படி ஒரு துயரம் நிகழாது இருக்க மனிதம் பாதுகாக்கப்பட சில சட்டங்கள் தேவை என உணர்ந்தனர். அதன் விளைவாக 1948 டிசம்பர் 10இல் சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை ஐ.நா.பொதுச்சபை வெளியிட்டது. ஆனாலும் ஐ.நாவில் உறுப்பு நாடாக இருந்து கொண்டே பல மனித உரிமை மீறல்களைச் செய்யும் அரசுகளும் மீறல்களைக் கண்டு கொள்ளாத அரசுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
சிலியிலும், குஜராத்திலும், சந்தனக்கடத்தல் வீரப்பனைத் தேடும் பெயரால் கர்நாடக தமிழக எல்லைப்பகுதி மக்கள் மீதும் என நடத்தப்பட்ட கொடுமைகளை முன்வைத்து சித்திரவதை பற்றிய ஐ.நா.பிரகடனம் விளக்கப்பட்டுள்ளது. பெண் சிசுக்கொலையிலிருந்து காதல் திருமணங்கள் முறியடிக்கப்படுவது மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் வரை எவ்விதம் பெண் உரிமைகள் பற்றிய பிரகடனம் மீறப்படுகிறது என்பது விளக்கப்பட்டு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளையும், முன்வைக்கிறது. பழங்குடி மக்கள் வாழ்வுரிமை, குழந்தைகளுக்கான உரிமைகள், வீடற்றவர்களுக்கான மனித உரிமைகள், சாதியின் பேரால் மனித உரிமை மீறல்கள் என நகர்ந்து செல்லும் புத்தகம், மரண தண்டனை தேவையா என்கிற விவாதத்தை முன்வைத்து சட்டத்தின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துவிடாமல் அதே சமயம் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி நாம் மனித உரிமைகளை நிறுவப் போராட வேண்டும் என்கிற அறைகூவலோடு புத்தகம் முடிகிறது.

மார்க்சியமும்
கலாச்சாரப் பணியும்
நாராயண் சுர்வே
தமிழாக்கம் : கமலாலயன்
(16 பக்கம்ரூ.5)

1944இல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தொழிற்சங்கவாதியாக இடைவிடாத மக்கள் பணியாற்றிக்கொண்டே கலாச்சாரத் தளத்திலும் தொழிலாளர் மத்தியில் பணிபுரியும் அனுபவத்தோடு கலாச்சார தளத்தில் இடதுசாரி இயக்கம் தவறிய இடங்களை இயக்கத்தின் மனசாட்சியாக நின்று நேரடியாகப் பேசுகிறார் சுர்வே. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் சாதீய அமைப்பு, சடங்கு வெறி, மதவாதம், மறுபிறப்புக் கோட்பாடுகள் போன்றவையெல்லாம் நமது கலாச்சார வரலாற்றின் பகுதியாக உள்ளன. நாம் எந்த அளவுக்கு வரலாற்றின் இந்தப் பகுதிக்குப் பொறுப்பேற்றிருக்கிறோம்? நாம் எதுவுமே செய்யவில்லை என்று கூறவில்லை. ஆனால் பிரதான இலக்கை நோக்கி எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறோம்? என்று கேள்விகளை எழுப்பி விடைகாண முயற்சிக்கும் புத்தகம் இது. பொருள் உற்பத்தியும் பிற சமூக நடவடிக்கைகளும் மனிதனின் தூலமான தேவைகளின் அடிப்படையில் எழுகின்றன. ஆனால் கலாச்சார நடவடிக்கைகளோ அவனது மானசீகமான தேவைகளின் அடிப்படையில் எழுகின்றன என்கிற தெளிவான புரிதலோடு நகரும் புத்தகம், ஒரு மனிதன் வெறுமை உணர்வினாலும், உள்ளீடற்ற தன்னுணர்வினாலும் துன்புறும்போது மதத்தின் பக்கம் திரும்புகிறான் என்பதை உணர்த்தி கலாச்சாரத் தளத்தில் செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய முன்வைப்புகளோடு முடிகிறது. நேரடியாக வாசிக்கும் உணர்வை ஏற்படுத்தும் நல்ல மொழிபெயர்ப்பு.

தற்காலத் தமிழகத்தில்
சமூக வன்முறைகள்
டாக்டர்.கா.அ.மணிக்குமார்
(32 பக்கம் ரூ.5)

கடந்த காலங்களில் எழுதப்பட்ட வரலாறுகளில் கலவரங்களாகவும் கிளர்ச்சிகளாகவும் வன்முறைகளாகவும் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த பல நிகழ்வுகள் இன்று மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டு அவற்றில் பல சமூக இயக்கங்களாகவும் சமூக மாற்றத்துக்கான முன்னோட்ட நிகழ்வுகளாகவும் கண்டறியப்பட்டு புதிய வரலாறு எழுதப்பட்டு வருகிறது என்கிற வரிகளோடு துவங்குகிறது இப்புத்தகம். கடந்த ஐநூறு ஆண்டு கால தமிழக வரலாற்றில் சமுதாய மாற்றம் ஏற்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக வன்முறை நிகழ்ந்துள்ளது. அது வலக்கை, இடக்கைச் சாதிகளின் மோதலாகவோ நாடார்களுக்கும் பிற சாதியினருக்குமான மோதலாகவோ தலித்துகளுக்கும் ஆதிக்க சாதிகளுக்குமான மோதலாகவோ அவ்வவ் காலகட்டத்தில் வடிவம் எடுத்துள்ளன. 1652 இன் பிளாக் டவுன் கலவரம், 1707 இன் பெத்தநாயக்கர் பேட்டை மோதல், 1789 இன் இரண்டாம் பிளாக் டவுன் கலவரம் போன்றவையும் பிற்காலத்தில் மத மாற்றத்துக்கு எதிராக நடந்த 1829 நல்லூர் கலவரம் போன்றவை சரியான சமூகப் பின்புலத்தோடு வாசகருக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன.

ஐரோப்பியப் பாதிரியார்களின் ஊக்கத்தாலும் காலனி அரசின் ஆதரவாலும் பொருளாதார முன்னேற்றம் பெற்ற நாடார்கள், தங்கள் சமூக அந்தஸ்து இன்னும் கீழான நிலையில் இருப்பதை எண்ணிக் கவலை கொண்டு கோவில் நுழைவு, உயர்சாதித் தெருக்கள் வழியே மண ஊர்வலம் செல்லுதல் போன்றவற்றுக்காகப் போராடத் துவங்கினர். இதன் காரணமாக வெடித்த 1895 இன் கழுகுமலைக் கலவரம், தென் மாவட்ட மக்களின் நினைவுகளில் இன்றும் அசைகிற 1899 இன் சிவகாசிக் கொள்ளை, தென்காசித் தாக்குதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

20 ஆம் நூற்றாண்டு, தலித்துகளின் எழுச்சியோடு திறக்கிறது. ஆகவே ஆதிக்க சாதிகளின் தாக்குதல் பெரும் வன்முறை நிகழ்வுகளாகின்றன. தென் தமிழக வரலற்றில் இன்றுவரை எதிரொலிக்கும் 1957 இன் முதுகுளத்தூர் கலவரம், வர்க்க ரீதியாகத் திரண்ட தஞ்சைப் பகுதி தலித் மக்கள் மீது ஏவப்பட்ட 1968 இன் கீழ வெண்மணிப் படுகொலைகள் என்று துவங்கி 1995 கொடியன்குளம் வன்முறை 1995 திருநெல்வேலிக் கலவரங்கள், 1997 மேலவளவுப் படுகொலை, 1999 தாமிரபரணிப்படுகொலைகள் என சரித்திரம் நம் கண்முன்னே விரிகிறது. சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள ஒவ்வொரு களப்பணியாளர் கையிலும் எப்போதும் இருக்க வேண்டிய புத்தகம்.

அரசு
லெனின்
(32 பக்கம் ரூ.5)

அரசு என்பது என்ன? அது எவ்வாறு தோன்றியது? முதலாளித்துவத்தை அறவே தூக்கியெறியப் போராடும் தொழிலாளி வர்க்கக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அரசைப் பற்றிக் கொள்ளவேண்டிய அடிப்படையான உறவு நிலை யாது? என்கிற கேள்விகளுக்கு விடையாக 1919 இல் தோழர் லெனின் ஆற்றிய உரையின் தமிழ் வடிவமே இப்புத்தகம். முதலாளித்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவ ஞானிகளால் மிக அதிகமாகக் குழப்பிவிடப்பட்ட பிரச்சனையான அரசு பற்றி வரலாற்றுப்பூர்வமாக லெனின் விளக்குகிறார். வன்முறைகளைப் பயன்படுத்தும் வன்முறைக்கு மக்களைக் கீழ்ப்படுத்தும் முறையான தனி இயந்திரமான அரசு ஆதிகால இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்ததில்லை. அப்பொதெல்லாம் பொதுத் தொடர்புகள், சமுதாயக் கட்டுப்பாடு, வேலை ஏவுதல் முறை ஆகிய எல்லாமே பழக்க வழக்கம் மரபு ஆகியவற்றின் பலத்தினாலோ, குலத்தின் மூத்தோர்கள் அல்லது மகளிர் பெற்றிருந்த செல்வாக்கினாலோ, உயர் மதிப்பினாலோ நிர்வகிக்கப்பட்டன. சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்ட பிறகே அரசென்பது ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரமாக உருவாகிறது. சுரண்டலுக்கு வாய்ப்பே இல்லாமல் போகும் போது, நில உடமையாளரும் ஆலை முதலாளிகளும் எங்குமே இல்லை என்னும்போது சிலர் வாரி வாரி விழுங்க மற்றவர் பட்டினி கிடக்கும் நிலை நீடித்திராத போது, இதற்கெல்லாம் இனி வாய்ப்பே இல்லை என்னும் நாளில்தான் அந்த இயந்திரத்தை நாம் குப்பையில் வீசுவோம். இதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் நிலை என முடிகிறது புத்தகம்
ஸ்தாபனத்தைப் பற்றி..
ஸ்டாலின்
தமிழில் : வீ.பா.கணேசன்
(24 பக்கம் ரூ.5)

நம்மில் சிலர், கட்சி தனது சரியான பாதையைத் தீர்மானித்து, அதைப்பற்றி பலத்த பிரச்சாரம் செய்து பொதுவான கொள்கைகளாகவும் தீர்மானங்களாகவும் ஒருமனதாக நிறைவேற்றிவிட்டால் எல்லாப் பகுதிகளிலும் வெற்றி தானாகவே வந்து சேர்ந்து விடும் என்று நம்புகிறார்கள். இது தவறானது. இது ஒரு பிரமை. என்றுமே வெற்றி தானாக வருவதில்லை. அதை அடைய வேண்டும். சரியான அரசியல் வழியை உருவாக்கிய பிறகு ஸ்தாபன வேலையே வெற்றி தோல்வி அனைத்தையும் தீர்மானிக்கிறது என்கிற தெளிவுடன் துவங்கும் புத்தகம் ஸ்தாபனம் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி விரிவாகப் பேசி அனுபவத்தின் அடிப்படையில் தீர்வுகளையும் முன்வைக்கிறது.

ஊழியர்களும் மக்களுமே இந்த உலகத்தின் மிக உயர்ந்த செல்வம், மூலதனம், தீர்மான சக்தி என்பதை உணரவேண்டும். வெறும் படிப்பினால் மட்டும் ஊழியர்கள் உருவாகிவிட மாட்டார்கள். இடையூறுகளை எதிர்த்த போராட்டத்தில்தான் உண்மையான ஊழியர்கள் உருவாகிறார்கள். ஒரு சரியான அரசியல் கொள்கை செயல்படுத்தப்பட அதைத் தனது சொந்தக் கொள்கையாகக் கருதும், அதைச் செயல்படுத்தத் தயாராய் உள்ள, அதைச் செயல்படுத்தும் திறமையுள்ள அதில் எழும் கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய, அதைப் பாதுகாத்து அதற்காகப் போரிடக்கூடிய ஊழியர்கள் வேண்டும். சரியான நேரத்தில் சரியான ஊழியர்களைத் தேர்வு செய்வது துணிச்சலாக அவர்களை உயர்த்துவது, தலைமைப் பண்புகளை ஊட்டுவது மக்களிடமிருந்து கற்றுக் கொண்டு மக்களுக்குக் கற்றுக் கொடுப்பது போல பல அடிப்படையான ஸ்தாபனப் பிரச்னைகள் பற்றிய தெளிவைத் தருகிற அடிப்படை நூல். குழப்பமற்ற தெளிவான மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. அரசியல் ஊழியர்களுக்கான அடிப்படையான கையேடு.

கட்சியில் நிலவும் தவறான கருத்துக்களை திருத்துவது எப்படி?
மாசேதுங்
தமிழில் : வீ.பா.கணேசன்
(16 பக்கம் விலை.ரூ.5)

செஞ்சேனையின் நான்காவது சேனையிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தில் அன்று நிலவிய பாட்டாளி வர்க்கத்துக்குப் புறம்பான கருத்துக்களை அடையாளம் கண்டு அவற்றைக் களைவதற்கான வழிமுறைகளை முன்வைக்கிற முயற்சியாக வந்துள்ள இப்புத்தகம் காலம்தோறும் உலகம் முழுவதுமுள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சந்திக்கும் ஸ்தாபன பிரச்னைகளைத் தீர்க்க உதவும் அனுபவங்களை உள்ளடக்கியுள்ளது.
செஞ்சேனையின் ராணுவப்பணிகளும் அரசியலும் ஒன்றுக்கு ஒன்று முரணானது என்னும் கருத்து சில தோழர்களிடம் இருந்தது. இன்னும் சிலர் அக, புற நிலைமைகளைப் புறக்கணித்து புரட்சியில் அவசரத் தன்மை என்ற நோயால் அவதிப்பட்டனர். வேறுசிலர் தம்மை விடப் புரட்சிகரமானவர் யாருமில்லை என்கிற உணர்வில் இருந்தனர். இன்னும் சிலர் அதீத ஜனநாயக வியாதிக்கு ஆளாகி எல்லா முடிவுகளும் கீழிருந்துதான் மேலே போக வேண்டும் என்கிறார்கள். தங்களது கருத்து நிராகரிக்கப்படும் சிறுபான்மையினர் பெரும்பான்மை முடிவை விசுவாசமாக அமல் படுத்த தயங்குவது, மறுப்பது, வயதையோ உடல் நலத்தையோ பாராது சமமான வேலைப்பிரிவினை கோரும் சமத்துவ வாதம், கட்சிக்குள் பழி வாங்கும் சுபாவம், சிறு கும்பல் வாதம், கூலி மனப்பன்மை, இன்ப நாட்ட வாதம் போன்ற பல வியாதிகளின் தன்மைகள் அவற்றின் மூலங்கள் அவற்றைத் தீர்ப்பதற்கான உபாயங்கள் என புத்தகம் விவாதிக்கிறது.

நான் நாத்திகன் ஏன்?
பகத்சிங்
தமிழில்: ப.ஜீவானந்தம்
(24 பக்கம் ரூ.5)

பகத்சிங் ஒரு நாத்திகராக இருப்பதற்குக் கரணம் அவரது ஆணவமும் அகந்தையுமே என்று அவரோடு சிலகாலம் பழகிய தோழர்கள் கருதுவதாக அறிந்த பகத்சிங் அது அப்படியா என்று தனக்குள் பயணம் செய்து விடை காணும் புத்தகம் இது. தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான அமரர் ஜீவா அவர்களின் இலகுவான கூர்மையான மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. சிறுவயதில் கடவுள் பக்தராகவே பகத்சிங் இருந்துள்ளார். தினசரி காலை மாலை பிரார்த்தனைகள் செய்கிறவராக காயத்ரி ஜெபம் செய்கிறவராகவே இருந்தார். அவருடைய தந்தையாரும் பக்திமானாகவே இருந்தார். பின்னாட்களில் புரட்சிகர இயக்கங்களில் பங்கேற்கத் துவங்கிய பிறகு அவர் படித்த புத்தகங்களும் தோழர்களுடன் விவாதித்ததுமே அவரை நாத்திகராக மாற்றியது. அராஜகவாதத்தில் நம்பிக்கை கொண்ட தலைவரான பக்குனின் எழுதிய கடவுளும் ராஜ்ஜியமும் (God and State) எனும் நூல், நிர்லம்ப சாமியால் எழுதப்பட்ட பகுத்தறிவு (Common Sence) போன்ற நூல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஏகச் சக்ராதிபத்திய ஆதிக்க இருள் சூழ்ந்த தங்கள் நாட்டில் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த லெனின், ட்ராட்ஸ்கி போன்றோர் பச்சை நாத்திகர்கள் என்பதை அறிந்தேன். நானும் பச்சை நாத்திகனானேன் என்கிறார் பகத் சிங்.

வெள்ளையரின் பிடியில் சிக்கி வதைபட்ட காலத்திலும் கூட தான் நாத்திகனாகவே நின்று நிலைத்ததைக் கூறுகிறார். பின் ஆத்திகர்களை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை வைக்கும் பகத்சிங், என் நாத்திகம் பற்றிச் சந்தேகம் கொண்டு மரண வாசலில் நிற்கும்போது நிச்சயம் நான் கடவுளைப் பிரார்த்திப்பேன் என ஆருடம் கூறிய நண்பர்கள் உண்டு. இதோ தூக்குக் கயிறு என்னை நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் நான் நாத்திகனாகவே இருக்கிறேன் என்பதை உலகத்துக்குச் சொல்லுங்கள் என்று முடிக்கிறார்.

ஊழியர்களைப் பற்றி..
கியோர்கி டிமிட்ரொவ்
தமிழில் : வீ.பா.கணேசன்
(16 பக்கம்.ரூ.5)

ஊழியர்களைப் பற்றிய சரியான கொள்கை என்றால் என்ன என்கிற கேள்வியோடு துவங்கும் புத்தகம் முதலாவதாக ஊழியர்களைப் புரிந்து கொள்வது என்கிற விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆராய்கிறது. உலகின் பல கம்யூ. கட்சிகளின் அனுபவத்தை முன்வைக்கிறது. போல்ஷ்விக் என்னும் பூதக்கண்ணாடி கொண்டு ஊழியர்களைப் பரிசீலிக்கும் போது இதுவரை நம் கண்ணில் தென்படாத ஊழியர்களெல்லாம் முன்னுக்கு வருவார்கள். அன்னிய வர்க்கக் கருத்துள்ளவர்களை அடையாளம் கண்டு களைய முடியும். இரண்டாவதாக ஊழியர்களை சரியான முறையில் உயர்த்துவது மூன்றாவது சிறந்த முறையில் ஊழியரைப் பயன்படுத்துவது நான்காவதாக ஊழியர்களுக்கு முறையான உதவி அளிப்பது ஐந்தாவதாக ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முறையான கவனம் செலுத்துவது என வரிசைப்படுத்துகிறது புத்தகம். அடுத்து ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பது என்னும் பிரச்னை பற்றிக் கூறுகையில் முதலாவதாக ஊழியர்களுக்கு தொழிலாளி வர்க்கத்தின் லட்சியத்தின் மீது முழுமையான ஈடுபாடு, கட்சியின் மீது உண்மையான பற்று இரண்டாவதாக வெகுஜனங்களுடன் நெருக்கமான தொடர்பு மூன்றாவதாக சுதந்திரமான முறையில் ஊழியரின் திறனை உணரும் திறமை – முடிவுகள் எடுப்பதில் பொறுப்பேற்பது நான்காவதாக வர்க்க எதிரியையும் கம்யூனிஸ்ட் வழியிலிருந்து விலகுவதையும் எதிர்த்து ஊசலாட்டமின்றிப் போராடுவது என வரிசைப் படுத்துகிறது.

நாம் தத்துவம் பேசிக் கலையும் கூட்டமல்ல. எல்லா நேரத்திலும் ஒவ்வொரு அடி வைக்கும் போதும் கற்றுக்கொள்வது அவசியம். கற்றுக்கொள்வதற்காகப் போராடுவது. போராடுவதற்காகக் கற்றுக் கொள்வது. நமது எல்லா வேலைகளிலும் போராட்டங்களிலும் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோரின் சிறந்த போதனைகளை ஸ்டாலினிஸ்ட் உறுதியோடு இணைக்க வேண்டும் என முடிக்கிறது

மார்க்சியத்தின் எதிர்காலம்
பிரபாத் பட்நாயக்
(32 பக்கம் ரூ.5)

மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்கிற கூக்குரல் காலந்தோறும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் மனித குல விடுதலையே மார்க்சியத்தின் அடிப்படை நோக்கம் என்னும்போது அது முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை. அதற்கு முற்றிலும் வேறொரு சோசலிச சமூகம் அவசியமாகிறது. சோசலிசம் என்னும் அமைப்பில்தான் சமூக நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் இருக்கும் எண்ணங்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் இடையில் ஒத்திசைவு இருக்கும். ஆனால் பிரச்னை எங்கே வருகிறது எனில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை எங்கனம் புரிந்து கொள்வது? ஒன்றை ஆசிரியர் தெளிவு படுத்துகிறார். மார்க்சியம் என்பது உறைந்துபோன உடலாக இருக்கும் கருத்துக்கள் (Frozen body of ideas) அல்ல. மார்க்சியம் என்பது அதன் மூலக்கருவைச் (core) சுற்றி காலத்துக்கு ஏற்றாற் போல அதன் ஸ்தூலமான நிலைமையை தீர்க்கமாக ஆய்ந்து தொடர்ந்து மறுசீரமைக்கப்படும் கருத்துப் பெட்டகமாகும். இந்த மறு சீரமைப்பு சோவியத் யூனியனும் இதர பல சோசலிச நாடுகளும் சிதைந்து போன பின்னணியில் மூலதனத்தின் ஆதிக்கம் புதிய ரூபங்களை எடுத்துள்ள இன்றைய காலத்தில் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற கேள்விக்கான விடையாக இந்நூல் வந்துள்ளது. மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்று கூறுபவர்கள் மனித குல விடுதலைக்கு புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டதால் அவ்விதம் கூறவில்லை. மாறாக மனிதகுல விடுதலை என்னும் செயல்திட்டத்தை அவர்கள் கைவிட்டு விட்டதால் கூறுகிறார்கள்.

மே தின வரலாறு
அலெக்சாண்டர் ட்ராச்டென்பர்க்
தமிழில்:எம்.சிவக்குமார்
(32 பக்கம் ரூ.5)

1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் ஹே மார்க்கெட்டில் எட்டுமணி நேர வேலைக்காகப் போராடிய தொழிலாளர் மீது ஏவப்பட்ட வன்முறையில் கொல்லப்பட்ட தொழிலாளிகளின் குருதியில் தோய்ந்ததுதான் மேதினம் என்கிற வரைக்கும் தமிழ்நாட்டில் உள்ள எல்லா தொழிலாளிக்குமே தெரியும். அதற்குமேல் மேதினம் உருவான வரலாற்றுப் பின்னணி பற்றி விரிவாக அறிந்து கொள்ள தமிழில் வந்துள்ள எளிய புத்தகம் இதுவே. சம்பள உயர்வுக்காகவும் சங்கம் வைக்கும் உரிமைக்காகவும் அமெரிக்கத் தொழிலாளர்கள் போராடி வந்தாலும் கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் எழுதியது போல அமெரிக்காவில் பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பகுதியான கறுப்பு இனத் தொழிலாளி அடிமையாக நீடிக்கும் வரை வெள்ளைத் தொழிலாளியின் வாழ்க்கையிலும் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. உள்நாட்டுப் போருக்குப் பின் அடிமைத்தனத்தின் அழிவிலிருந்து புதிய உத்வேகம் பிறந்தது. எட்டு மணி நேர வேலைக்கான போராட்டம் வெடித்தது. சர்வதேசத் தொழிலாளர் காங்கிரசும் எட்டுமணி நேர வேலைக்கான கோரிக்கைக்காகப் போராட உலகத் தொழிலாளிகளுக்கு அறைகூவல் விடுத்தது. இது ஒரு இயக்கமாக அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலும் ந்யூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது. இந்த நிகழ்ச்சிப் போக்குகள் மேதினத்தை நோக்கி நகர்ந்த வரலாறுதான் இப்புத்தகம்.

எது மூடநம்பிக்கை?
சு.பொ.அகத்தியலிங்கம்
(24 பக்கம் ரூ.5)

பூனையின் பாய்ச்சலுக்கும், பல்லியின் சொல்லுக்கும், பயந்து வாழ்வது அநேகமாகச் செத்ததற்குச் சமமே என்னும் கவிஞன் காஸி நஸ்ருல் இஸ்லாமின் கவிதை வரிகளோடு துவங்கும் இப்புத்தகம் மூடநம்பிக்கை என்பது எது? பழையதெல்லாம் மூடநம்பிக்கை என்று தூக்கிப் போடுவது முட்டாள்தனம். புதியதெல்லாம் புத்திசாலித்தனமானது என்று முடிவுக்கு வருவதும் மூடத்தனம் என்கிற புரிதலோடு நகரும் புத்தகம் நம் மக்கள் மத்தியில் உலவுகிற அவர்களை பல சமயம் ஆட்டிப்படைக்கிற பல நம்பிக்கைகள் கருத்துகள் பழக்க வழக்கங்களை அறிவியல் பார்வையுடன் அலசி ஆராய்கிறது. சோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம், தோஷங்கள், பேய் பிசாசுகள் என பல விஷயங்களை ஆராயும் புத்தகம் புதிய மூட நம்பிக்கைகளாக மக்களிடம் விதைக்கப்படும் விளம்பரங்களைக் கைவைத்து இறுதியில் எது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் படவில்லையோ, எது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக தடுக்கிறதோ, எதைக் கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்கிறோமோ, எதைப் பரிசீலித்துப் பார்க்காமல் ஒப்புக்கொள்கிறோமோ அதெல்லாம் மூடநம்பிக்கை என்கிற தெளிவுடன் முடிகிறது. கிண்டலும் நகைச்சுவை உணர்வும் ததும்பும் மொழி இப்புத்தகத்தின் சிறப்பாகும்.

ஜோதிராவ் பூலே:
சமூக சீர்திருத்தத்தின் தந்தை
ஜி.பி.தேஷ்பாண்டே
தமிழில் : ச.கனிதா
(24 பக்கம் ரூ.5)

இந்தியாவின் முதல் சூத்திர அறிஞர் என அழைக்கப்படும் சமூக சீர்திருத்தத்தின் தந்தை ஜோதிராவ் பூலே அவர்களின் வாழ்க்கையையும் சிந்தனைகளையும் அறிமுகம் செய்கிற நூல். மரராட்டிய மாநிலத்தின் சூத்திர சாதிகளில் ஒன்றான மாலி (தோட்டக்காரன்) என்னும் சாதியில் பிறந்து பூக்களை வளர்த்ததால் பூலே என்கிற பெயர் வாய்க்கப்பட்ட குடும்பம் ஜோதிராவ் பூலேயினுடையது. மெட்ரிக் வரை படித்த பூலே 1848ஆம் ஆண்டில் மிகவும் தாழ்த்தப்பட்ட சூத்திராதி சூத்திரப் பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை இந்தியாவிலேயே முதன் முதலாகத் துவங்கினார். உயர்சாதியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி அப்பள்ளியை நடத்தினார். அதைத் தொடர்ந்து எல்லாச் சாதிப் பெண்குழந்தைகளுக்கான பள்ளியைத் துவங்கினார். தன் வீட்டுக்கிணற்றில் தீண்டாச் சாதி மக்களை நீர் எடுக்கத் திறந்து விட்டார். ஆதிக்க சாதியார் அவரைக் கொலை செய்ய முயற்சித்தனர். உண்மையைத் தேடுபவர் மன்றமான சத்ய சோதக் சமாஜ் துவக்கப்பட்டது. தன் இறுதி நாட்களில் பக்க வாத நோயினால் வலது பக்க உடல் அசைவற்றுப்போனது. இடது கையாலேயே சர்வஜனிக் சத்யதர்மா புஸ்தக் (உண்மை நம்பிக்கையின் நூல்) கை எழுதி முடித்தார். பிராமண ஆதிக்கத்துக்கு எதிராக மட்டுமின்றி பெண்களின் விடுதலையையும் சேர்த்தே பேசியவர் பூலே. பிராமணப் பெண்களையும் கூட சூத்திராதி சூத்திரர் பட்டியலிலேயே பூலே வைத்தார். மதம், வர்ணாசிரமம், சடங்குகள், மொழி, இலக்கியம், ஆங்கிலேய ஆட்சி, ஆண் பெண் சமத்துவம், விவசாயப் பிரச்னைகள் எனப் பரந்துபட்ட தளங்களில் வேகத்துடன் செயல்பட்ட மகாத்மா பூலேயை எளிமையாக அறிமுகம் செய்துள்ள புத்தகம்.

கார்-ஆ பேருந்தா?
பேரா. என். மணி, பிரஃபுல் பிட்வாய்
(16 பக்கம் ரூ.5)

அதிகம் பேசப்படாத ஒரு பொருளைப்பற்றி இப்புத்தகம் பேசுகிறது. சமீப ஆண்டுகளில் இந்திய நகரங்களில் கார்கள், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அபரிமிதமாகப் பெருகியுள்ளது ஏன்? பெருநகரங்களெங்கும் உலக வங்கிக் கடனுதவியுடன் பெரும் பெரும் பாலங்கள் ஏன் கட்டப்படுகின்றன? தனியார் வாகனங்களின் எண்ணிக்கை பெருகியுள்ள அதே நேரத்தில் பொதுப் போக்குவரத்துக்கான பேருந்துகளின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் 4 மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் திட்டமிட்ட முறையில் குறைக்கப்படுவதானது மக்களை தனியாக ஏதோ ஒரு வாகனம் வாங்க நிர்ப்பந்திக்கும் அரசியல் ஆகும்.
கார்களின் எண்ணிக்கை பெருக அரசின் கார்களுக்கு ஆதரவான கொள்கையும் வரி குறைப்பும் கார் தொழிலுக்கு வட்டி குறைப்பும் எளிய தவணைகளில் கார் கடன் வழங்குவதும் முக்கிய காரணங்களாகும். கார் பெருக்கத்தால் காற்று மாசுபடுவது அதிகரிக்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எரிபொருள் மூலாதாரங்கள் அதிவேகமாகக் காலியாகின்றன. நகர்ப்புறத்தை அண்டி வாழும் ஏழை எளிய மக்கள் ஒரு நாளின் பெரும் பகுதி நேரத்தை வாகனங்களுக்குக் காத்திருப்பதிலேயே செலவிட வேண்டிய நிலை. கார்களின் பெருக்கத்துக்கு மத்திய தர வர்க்கத்தின் ஆடம்பர கௌரவ மோகமும் ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே காரா பேருந்தா என்னும் கேள்வியில் ஒரு வர்க்கப்போராட்டமே அடங்கியுள்ளது.

ஆண் குழந்தைதான் வேண்டுமா?
மைதிலி சிவராமன்
(32 பக்கம். விலை.ரூ.5)

ஆண், பெண் பாலின விகிதம் வேகமாகக் குறைந்து வரும் இன்றைய சூழலில் அதற்கான காரணங்களை அலசி ஆய்வு செய்து இந்நிலை தொடராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்கிற பரிந்துரைகளையும் முன் வைக்கிறது இப்புத்தகம். பெண் பாலின எண்ணிக்கைக் குறைவின் காரணமாக ஹரியானாவில் ஆண்கள் மணம் செய்து கொள்ள உள்ளூரில் பெண் கிடைக்காமல் வெளியிலிருந்து ஏஜண்டுகள் மூலம் கடத்திக்கொண்டு வரும் பெண்களை வீட்டுக்கு வெளியே குடிசை போட்டு வைத்து எந்த மரியாதையும் இல்லாமல் அப்பெண்களை நடத்துவதும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கேவலமாக நடத்தப்படுவதும் தொடர்பான அ.இ. ஜனநாயக மாதர் சங்கத்தின் அறிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. பெண் சிசுக்கொலையில் வேகமாக ஹரியானாவைப் பின் தொடரும் தமிழகத்துக்கும் இந்நிலை வராது என்பது என்ன நிச்சயம்? பார்ப்பனீயக் கலாச்சாரமான வரதட்சிணை இப்போது எல்லாச் சாதியாரிடத்தும் பரவியுள்ளது. அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் வேலை வாய்ப்புகள் குறைந்து உத்தரவாதமற்ற வாழ்க்கை பற்றிய பயம் கொள்ளும் ஆண்கள் வரதட்சணை மூலமாவது ஒரு பாதுகாப்புக் கிடைக்காதா என எண்ணும் போக்கு வளர்கிறது. விளைவு பெண் சிசுக்கொலைகள். இது மாதர் அமைப்புகள் மட்டுமே போராடிச் சாதித்து விடக்கூடிய பிரச்னை அல்ல. எல்லா அமைப்புகளும் இணைந்த ஒட்டு மொத்த சமூகமே களமிறங்கிப் போராட வேண்டிய புனிதப் போராலேயே மாற்றம் கொண்டுவரமுடியும் என அறைகூவல் விடுக்கும் புத்தகம்.

ஏகாதிபத்தியம்
ஓர் அறிமுகம்
பிரபாத் பட்நாயக்
தமிழில் : விஜயராகவன்
(48 பக்கம் ரூ.10)

லெனினிசம் முழுமை பெற்று வெளிப்பட்ட நூல்களில் மிக முக்கியமானது ‘ஏகாதிபத்தியம்’ ஆகும். மார்க்சியத்தை மறுசீரமைக்கும் போக்கில் லெனின் இப்புத்தகத்தின் மூலம் சிக்கலான பல கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். முதலாவதாக உச்சகட்டம் பற்றியது. ஏகாதிபத்தியம் ஒரு நாட்டுத் தொழிலாளியை இன்னொரு நாட்டுத் தொழிலாளியைக் கொல்லும் யுத்தத்தில் தள்ளி விடுகிறது. ஒரே ஒரு தெரிவைத்தான் ஏகாதிபத்தியம் தருகிறது. அதாவது தங்களையும் தங்கள் சக தொழிலாளிகளையும் அழித்து ஒழிப்பது அல்லது முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவது என்பதே. இரண்டாவதாக வளர்ந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கம் காலனி நாடுகளின் விடுதலைப் போராட்டங்களிலும் தலையிட வேண்டும் என்பது. மூன்றாவதான விளக்கம் உலகப்புரட்சி நிகழ்ச்சி நிரலுக்கு வந்து விட்ட பிறகும் சமூக ஜனநாயகக் கட்சியின் மாபெரும் தலைவர்கள் பலர் திருத்தல்வாதப் பாதையில் செல்வது ஏன் என்பது பற்றியது. நான்காவதாக 1. என்ன செய்ய வேண்டும்? 2. அரசும் புரட்சியும் ஆகிய இரு நூல்களிலுமாக மலர்ந்து வந்து கொண்டிருந்த லெனினிசம் என்பது ஏகாதிபத்தியம் நூலின் மூலம் முழுமை பெறுகிறது. ஐந்தாவதாக மார்க்சினுடைய பணிகளின் மூலக்கருவாக விளங்கியவை எவை அதைச் சுற்றியுள்ளவை எவை என்று இப்புத்தகத்தில் லெனின் பிரித்தறிந்ததாகும். ஒவ்வொரு தோழரும் ஆழ வாசிக்க வேண்டிய புத்தகம்.

இந்தியாவில் ஹாரிபாலிட்
தமிழில்: முகவை ராஜமாணிக்கம்
(56 பக்கம் ரூ.10)

1953இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3வது காங்கிரசிற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் ஹாரிபாலிட் எழுதிய நாட்குறிப்புகளின் மொழிபெயர்ப்பாக இந்நூல் வந்துள்ளது. பம்பாயில் தொழிலாள மக்கள் வாழும்படியான பிரதேசங்களில் நான் கண்ட காட்சிகளை என்னால் எளிதில் மறந்து விடவே முடியாது. வறுமையின் எத்தகைய கோரமான இருப்பிடம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பேராசைக்கும் பகற்கொள்ளைக்கும் இக்காட்சியைவிட வேறு விளக்கம் வேண்டியதில்லை. முதல் பொதுக்கூட்டத்தில் பம்பாயிலுள்ள தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒவ்வொரு பகுதி தொழிலாளர் சார்பாகவும் பல தோழர்கள் 50க்கு மேற்பட்ட மலர் மாலைகளை என் கழுத்தில் போட்டார்கள். இந்த மலர் மாலைகளும் உபச்சாரமும் என் மனத்தை உருக்கி விட்டன, என் இரு கன்னங்களிலும் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. உணர்ச்சிகரமாகவும் உயர்ந்த நகைச்சுவை உணர்வோடும் எழுதப்பட்டுள்ள இக்குறிப்புகள் ஒரு சரித்திர ஆவணமாக மதிக்கத் தக்கவை ஆகும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை
(எளிமையான சுருக்கம்)
விழி பதிப்பகம்
இரா.ஜவஹர்
(24 பக்கம் ரூ.5)

கார்ல் மார்க்சும் ஏங்கல்சும் கூட்டாகத் தயாரித்து 1848 ஆம் ஆண்டு வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை என்னும் நூலின் சாரத்தை (மூல நூலை வாசிக்கத் தூண்டும் விதத்தில் இப்புத்தகம் அறிமுகம் செய்கிறது. உலகப் புகழ்பெற்ற வாசகங்கள் பலவற்றை உள்ளடக்கிய இந்நூலின் நான்கு அத்தியாயங்களும் முதலாளி வர்க்கத்தின் தோற்றத்தில் துவங்கி அதன் தனித்தன்மைகள் உற்பத்தி சக்திகளின் வரலாறு காணாத பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணமான முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தடையாக நிற்கும் வினோத முரண்பாடு போன்றவை விளக்கப்படுகின்றன. முதலாளி வர்க்கத்துக்கே சமாதி கட்டும் ஆயுதங்களை அதாவது உற்பத்தி சக்திகளை முதலாளி வர்க்கமே உருவாக்கியுள்ளது. தொழில்துறை வளர வளர தொழிலாளியின் ஏழ்மையும் அதிகரிக்கிறது. முதலாளி வர்க்கம் ஆளத்தகுதியற்றதாகிவிட்டது. ஆகவே பாட்டாளி வர்க்கம் தனிச்சொத்துரிமையை ஒழிக்கும் கம்யூனிச சித்தாந்தத்தைக் கையிலேந்தி ஒன்றுபட வேண்டும். பாட்டாளிகள் இழப்பதற்கு அடிமைச்சங்கிலியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வென்று அடைவதற்கோ ஒரு உலகமே இருக்கிறது. உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று புத்தகம் அறைகூவி முடிகிறது.

பஞ்சாயத்து: அனைத்து அதிகாரமும் மக்களுக்கே
டாக்டர் சூரியகாந்த் மிஸ்ரா
(தமிழில் எஸ். நூர்முகமது) & க.பழனிதுரை
(எழுத்தாக்கம் திருப்பூர் தூயவன்)
(16 பக்கம் ரூ.5)

மேற்குவங்கத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சர் டாக்டர் சூரிய காந்த் மிஸ்ரா கோவையில் ஆற்றிய உரையில் மேற்கு வங்கத்தில் 28 ஆண்டுகளாக இடது முன்னணி வெற்றி பெறுவதின் ரகசியம் உள்ளாட்சிகளுக்கு உண்மையான அதிகாரம் வழங்கியதில் அடங்கியுள்ளது என்பதை விளக்குகிறார். சமூக மாற்றத்துக்காக அவர்கள் வைத்துள்ள ஐந்து முழக்கங்களை விளக்குகிறார்: 1.வேகம். 2.திறமை. 3.நேர்மை. 4.வெளிப்படைத்தன்மை 5.சுய கட்டுப்பாடு – அதிகாரம் மக்களுக்கே என்பதுதான் நமது கோஷம். மக்களுக்கு அதிகாரம் என்றால் உள்ளாட்சிகளுக்கு அதிகாரம். அவரது உரையைத் தொடரும் முனைவர் க.பழனிதுரை தமிழகத்தில் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமான உறவு பயனாளிகள் அல்லது வாக்காளர்கள் என்கிற வடிவிலேயே இருக்கிறது. மக்களை மனுக்கொடுக்கும் பயனாளிகளாக மாற்றுவதால் மக்களின் சுய கௌரவம் பாதிப்படைகிறது. ஆனால் மே.வங்கத்தில் மக்கள் அதிகாரத்தின் பங்காளிகளாக உள்ளனர். இதுவே நாம் செல்ல வேண்டிய பாதை என்கிறார்.

வகுப்புவாதமும் வரலாறும்
ரொமிலா தாப்பர்
தமிழில் : பூவுலகின் நண்பர்கள்
(24 பக்கம் ரூ.5)

புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர் அவர்களின் உரை கேள்வி பதில் வடிவில் புத்தகமாக்கப்ப்பட்டுள்ளது. ஏன் பிற அறிஞர்களைக் காட்டிலும் வரலாற்று அறிஞர்கள் மட்டும் வகுப்புவாதம் குறித்து அதிக அக்கறை காட்ட வேண்டும்? நம்பிக்கை வரலாற்றுக்கு அடிப்படையாக இருக்க முடியாதா? ‘ஆரிய வம்சம்’ என்ற கூற்று தொடர்பான பிரச்னை என்ன? இது பற்றி இந்துத்வவாதிகளின் கூற்று என்ன? தேசிய வரலாற்று அறிஞர்களின் கருத்து என்ன? வரலாற்று ஆதாரங்கள் என்ன சொல்கின்றன? மொழிக்கும் இனத்துக்குமான வேறுபாடு என்ன? முஸ்லீம்கள் ஏன் இந்துக்கோவில்களை இடித்தார்கள்? என்பது போன்ற ஏராளமான சமகாலக் கேள்விகளுக்கான விடைகளோடு வந்துள்ள புத்தகம்.

பஞ்சாயத்தும் கிராமப்புற வறுமை ஒழிப்பும்-மேற்கு வங்க அனுபவம்
டாக்டர்.சூரியகாந்த மிஸ்ரா
தமிழில் : கி.இலக்குவன்
(16 பக்கம். ரூ.5)

1973-76 ஆண்டுகளில் மேற்கு வங்க கிராமப்புறங்களில் மக்கள் தொகையில் 73.16 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வந்தனர். ஆனால் இடது முன்னணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 1999-2000 ஆண்டுகளில் கிராமப்புற வறுமையின் அளவு 31.85 சதமாகக் குறைந்தது. இது எப்படி நடந்தது? பல காரணங்கள் உண்டெனினும் நிலச்சீர்திருத்தமே முக்கிய காரணம். அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலமான 4 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேரில் 4 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர் மக்களுக்கு (28 லட்சம் பேருக்கு) விநியோகம் செய்யப்பட்டது. விவசாயப் பொருட்கள் வழங்கப்பட்டன. சிறு சிறு நீர்ப்பாசன திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன. அதன் காரணமாக உணவுதானியங்களில் பற்றாக்குறை மாநிலமாக ஒரு காலத்தில் இருந்த மேற்கு வங்கம் இப்போது உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. இது மட்டுமன்றி பஞ்சாயத்து அமைப்புகளின் கைகளில் அனைத்து அதிகாரமும் பரவலாக்கப்பட்டு அவர்களும் வறுமை ஒழிப்பில் பங்கேற்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோலப் பல காரணங்களை ஆதாரங்களோடும் புள்ளி விவரங்களோடும் விளக்கும் புத்தகம்.

ஜனநாயக எழுச்சிகளின் நூற்றாண்டு
அய்ஜாஸ் அகமது
தமிழில்:சஹஸ்
(16 பக்கம் ரூ.5)

ஐரோப்பாவின் ஒரு சிறு மூலையில் தடுமாற்றத்துடன் உருவான ஜனநாயகத்துக்கான கோரிக்கை 20 ஆம் நூற்றாண்டில் புதுப்புது வடிவங்கள் எடுத்துப் பெரும் சூறைக்காற்றாக வீசியடித்தது. சுதந்திர சந்தையை மட்டுமே அர்த்தப்படுத்தும் முதலாளித்துவ ஜனநாயகத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்ட தொழிலாளிகள், விவசாயிகள், பெண்கள், காலனியாதிக்க நுகத்தடியின் கீழ் இருந்த மக்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர், தேசிய இனக்குழுவினர் ஆகியோர் ‘ஜனநாயகம்’ என்பதற்கு வரலாற்று ரீதியான புதிய பொருளையும் புரட்சிகரமான திசைவழியையும் உருவாக்கினர். 1990 வரையிலான 20ஆம் நூற்றாண்டின் இதயமாக ஜனநாயகக் கோரிகைகளே இருந்தன என்பதை வரலாற்றுப் பூர்வமாக விளக்கும் இந்நூல் சோசலிசப் பின்னடைவுக்குப் பிறகான நிலைமைகளையும் பரிசீலிக்கிறது. சனநாயக இயக்கம் இன்று ஒரு நெருக்கடிக்குள் சிக்கியிருந்தபோதும் சோசலிசம் மற்றும் தேச விடுதலைக்கான போராட்டங்களோடு இணையாமல் அது நீடிக்க முடியாது என்பதை அழுத்தமாக உணர்த்தும் புத்தகம்.

கருவாச்சி
(நமது வம்சத்தின் வரலாறு)
த.வி.வெங்கடேஸ்வரன்
(40 பக்கம் ரூ.10)

மனித குலத்தின் ஆதித்தாய் எந்த ஊர்க்காரி? குரங்கிலிருந்து பிறந்தோம் என்பது மட்டும் போதுமான விளக்கமாக அமைய முடியாதல்லவா? மரபணு ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு நம் வம்சத்தின் வரலாற்றைத் தேடும் முக்கியமான புத்தகம் இது. செல்லில் இரண்டு வகை டி.என்.ஏக்கள் உள்ளன. ஒன்று உட்கரு டி.என்.ஏ. மற்றொன்று மைடி.என்.ஏ. உட்கரு டி.என்.ஏ தான் நமது நிறம், மூக்கின் நீளம், முகத்தின் அமைப்பு மற்றும் தலைமுடி வரை நிர்ணயிக்கிறது. இன்னொரு டி.என்.ஏ வான மைடி.என்.ஏ என்பது செல்லின் சைட்டோபிளாசத்திலுள்ள மைட்டோகாண்ட்ரியாவில் உள்ளது. இந்த டி.என்.ஏ வில் தான் நமது மூததையரைப் பற்றிய ரகசியம் புதைந்துள்ளது. உட்கரு டி.என்.ஏ வை அம்மாவும் அப்பாவும் வழங்கிட மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏவை அம்மா மட்டுமே வழங்க முடியும். ஆகவே பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த பிரசவமான தாய்மார்களின் நஞ்சுக்கொடிகளின் வழியே ஆய்வு செய்து நம் அனைவருக்குமான தாய் மூதாய் ஆப்பிரிக்கக் கறுப்பினப் பெண் என்பதை விஞ்ஞானிகள் நிறுவியுள்ளனர். ஆகவே முஷாரப்பும் அத்வானியும் காஸ்ட்ரோவும் புஷ் வகையாறாக்களும் கூட ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றாகிறது. அவசியம் ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய வாசிக்க வேண்டிய புத்தகம்.

வரலாறு என்றால் என்ன?
பேராசிரியர் அ.கருணானந்தன்
(32 பக்கம் ரு.5)

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதில் துவங்கி வரலாறு என்றால் என்ன என்பதற்கு ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட விதவிதமான விளக்கங்கள் உள்ளன. வரலாற்றினூடாகப் பயணம் செய்து வரலாறு என்றால் என்ன என்பதற்கான விடையைத் தேடும் சுவையான புத்தகம் இது. நமது பழைய வரலாறு என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட கற்பனைகளே என்ற வால்டேரின் கணிப்பிலிருந்து மாறுதலே இல்லாத பழைய காலத்தின் ஆவணம்தான் வரலாறு என்னும் அரிஸ்டாட்டிலின் கருத்து வரை ஆய்வு செய்யும் புத்தகம் இந்தியாவில் புராணங்களையும் இதிகாசங்களையும் அப்படியே வரலாறாக எடுத்துக்கொண்டு அரசியல் நடத்தும் போக்கினைப் பற்றி விவரிக்கிறது. ஆய்வின் முடிவாக வரலாறு என்பது மாற்றங்களின் வரலாறே என்ற கணிப்புக்கு நாம் வருகிறோம்.

மாற்றங்களைக் கொண்டுவரும் உழைப்பின் வரலாறு. போராட்டங்களின் வரலாறு. வரலாறு என்றால் என்ன என்ற கேள்விக்கான விடையும் விளக்கமும் வரலாற்றைப் பார்க்கும் கண்ணோட்டத்திலும் வரலாற்றைப் பயன்படுத்துவதிலுள்ள நோக்கத்திலும்தான் உள்ளன. மனித குல விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் அமைதிக்குமான உணர்வாகவும் உந்துதலாகவும் கருவியாகவும் இருப்பதே நம்மைப் பொறுத்தவரை வரலாறாக இருக்க முடியும் என்று கச்சிதமாக முடிகிறது புத்தகம்.

கடவுள் பிறந்த கதை
எஸ்.ஏ.பெருமாள்
(32 பக்கம் ரூ.5)

கடவுளுக்கு எதிரான போராட்டம் என்பது கடவுள் பிறந்த கதையை மதங்கள் பிறந்த கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் துவங்குகிறது என்பார்கள். அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துள்ள புத்தகம் இது. பிடிபடாத மர்மங்களோடு இருந்த இயற்கையின் சக்திகளை சில மந்திரங்களின் மூலம் சில சடங்குகள் மூலம் கட்டுப்ப்டுத்த முயன்ற மனித நடவடிக்கையே ஆரம்ப கால நம்பிக்கையாக இருந்தது. நம்மோடு கூட இருந்து மரணத்தினால் காணாமல் போகிற மனிதர்கள் ஆவி ரூபத்தில் நம்மோடு இருப்பதான மனத் தேறுதலை அடிப்படையாகக் கொண்டு ஆவி வழிபாடு தோன்றியது. மக்கட்பேற்றைத் தரும் ஆண் பெண் குறிகளை வழிபடும் போக்கும் முன்னோரை வழிபடும் போக்கும் தம் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் உதவியாக இருக்கும் அல்லது இடைஞ்சலாக இருக்கும் விலங்குகளை பாம்புகளை வழிபடும் போக்கும் என மெல்ல மெல்ல வழிபாடுகள் வளர்ந்த கதை சுவையான உதாரணங்களுடன் சொல்லப்பட்டுள்ளன. பல கடவுள்களுக்கு பதிலாக ஒரு கடவுளை ஆதிக்க வர்க்கம் கொண்டுவந்து மதங்களை நிறுவி மக்களின் எதிர்ப்புணர்வுகளை மழுங்கடிக்கும் கதையும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மதமென்னும் மதமதப்பிலிருந்து மீண்டால்தான் துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என புத்தகம் முடிகிறது.

உலகமயமாக்கலும் பணி அமர்வுத் தரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றமும்
விஜயராகவன்
(56 பக்கம்.ரூ.10)

உள்நாட்டுச் சந்தையையும் உலகச் சந்தையையும் தாராளமயமாக்குவதன் மூலம் வர்த்தகம் நிதிமூலதனம் மற்றும் தகவல் ஆகியவை நாடுகளின் எல்லைகளைக் கடந்து தங்கு தடையற்றுப் பரவுவதற்கான ஏற்பாடுதான் உலகமயமாக்கல் என்பதை நாம் அறிவோம். பணித்தரத்தைப் பற்றி முதலாளித்துவம் நிறையப் பேசி பணியமர்வுத்தரம் பற்றிப் பேசவொட்டாமல் செய்துவிட்டது. முதலாளித்துவ அமைப்பில் உழைப்பும் ஒரு சரக்கு என்றாகிவிட்ட போது பணியமர்வு முறையையும் சரக்காகவே கொள்ள வேண்டும். எல்லா விஷ்யங்களிலும் தர அளவு பார்ப்பதுபோல் பணியமர்விலும் தரம் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. அப்படிப் பார்க்கையில் அதிக ஊதியமும் சமூகப் பாதுகாப்பும் கொண்ட பணியமர்வே அதிகப் பணியமர்வுத் தரமுடையதாக இருக்க முடியும் எனத் துவங்கும் இப்புத்தகம் பணியமர்வுத் தரத்தை தீர்மானிக்க நான்கு முக்கிய அளவுகோல்களை முன் வைக்கிறது. 1.பணியின் நிரந்தரத்தன்மை 2.உற்பத்தியின் பங்களிப்புக்கேற்ற ஊதியம் 3.பணியமர்வுப் படிநிலை முன்னேற்றம் 4.சமூகப் பாதுகாப்பு. உலகமயமாக்கலின் விளைவாக பணியமர்வுத் தரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் துறைவாரியாக வரலாற்றுப் பூர்வமாக இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அதிகம் பேசப்படாத பொருள் பற்றிய தெளிவான புத்தகம்.

தமிழக ஆறுகளின் அவல நிலை
பேராசிரியர் எஸ்.ஜனகராஜன்
(16 பக்கம் ரூ.5.)

தமிழகத்தின் ஆறுகள், ஏரிகள் குளங்கள் போன்ற நீர் நிலைகள் குறித்த நேரடி ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட டாக்டர் கனகராஜ் எழுதிய அவலநிலையில் தமிழக ஆறுகள் என்னும் புத்தகத்திலிருந்து இக்கட்டுரை சுருக்கித் தரப்பட்டுள்ளது. பாலாற்றுப்படுகையில் வாணியம்பாடியிலிருந்து தாமல் கிராமம் வரை மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் அதிர்ச்சியூட்டுகின்றன. நிலத்தடி நீர் தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகளால் முற்றிலும் மாசடைந்து போன கிராமங்களாக இவை மாறியுள்ளன. விவசாய நிலத்தில் 50 சதவீதம் சாகுபடியற்ற பரப்பாக மாறியுள்ளது. நீர்வளமிக்க பகுதிகளாக இருந்த இப்பகுதியில் இப்போது நீர் வியாபாரம் அதிகமாக நடைபெறுகிறது. கிராமங்களை விட்டு மக்கள் வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கால்நடைகளின் எண்ணிக்கை 70 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது. சராசரி மழைப்பொழிவு குறையவில்லை. ஆனாலும் ஏன் இந்த நிலை என்பதை புத்தகம் ஆய்கிறது. பூமி உள்வாங்கும் நீரின் அளவைவிட இறைக்கப்படும் நீரின் அளவு அதிகமாகி வருவதால் வறட்சிக்காலங்களில் நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்குள்ளாகிறது. சக்திமிக்க நீர் மேலாண்மையும் கேட்பாரற்றுக் கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏரிகள் குளங்களைப் பராமரிப்பதும் உடனடித் தேவை என்பது நமக்கு உணர்த்தும் புத்தகம்.

விடுதலைப்புலி திப்பு சுல்தான்
டாக்டர் வெ.ஜீவானந்தம்
(40 பக்கம் ரூ.10)

அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயரிடம் சமரசம் செய்து கொண்டு சன்மானம் பெற்று சொகுசு வாழ்க்கை தேடிக்கொண்ட சமஸ்தான அதிபர்கள் மத்தியில் விடுதலை வீரனாக போர்க்களத்திலேயே வீர மரணமெய்திய ஒரே இந்திய மன்னன் திப்பு சுல்தான். அவர் சுயசார்பு அரசை உருவாக்க பிரஞ்சு உதவியுடன் ஏவுகணைகள் செய்தார். சீன வல்லுநர்களை வரவழைத்து பட்டு உற்பத்தி செய்தார். கண்ணம்பாடி அணைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னே அடிக்கல் நாட்டி தரிசு நிலங்களை விளை நிலமாக்க முயன்றார். விவசாய ஆராய்ச்சி மையம் உருவாக்கினார். மக்களின் அறிவை விசாலமாக்க பெரும் நூலகம் அமைத்தார். மது ஒழிப்பை தீவிரப்படுத்தினார். நெப்போலியனுடனும் துருக்கியுடனும் ஆப்கனுடனும் உறவு கொண்டு அணிசேரா நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். எனினும் வரலாற்றில் அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அக்குறை நீக்கிட சிறு பங்கினை ஆற்றும் புத்தகம் இது.

பின் இணைப்பாக தரப்பட்டுள்ள திப்புவின் மரணத்துக்குப் பின் நடந்த கொள்ளை பற்றிய கட்டுரை வாசக நெஞ்சங்களை நிச்சயம் பதறச்செய்யும்.

150 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை
பிரபாத் பட்நாயக்
தமிழில் : விஜயராகவன்
(32 பக்கம் ரூ.5)

மார்க்ஸ், ஏங்கல்ஸ் இருவருடைய உலகக் கண்ணோட்டத்தை முதன் முதலில் வெளிப்படையாக அறிவித்த புத்தகம் கம்யூனிஸ்ட் அறிக்கைதான். இது ஒரு அறிக்கை என்பதால் சுருக்கமாகவும் அடர்த்தியான ஆற்றல் மிக்கதாகவும் சமூக மாற்றத்துக்கான புரட்சிகர நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டிய அவசியம் இருந்தது. இப்புத்தகம் வெளியாகி 150 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையிலும் அதன் இன்றைய பொருத்தப்பாடு மறுக்க முடியாததாக இருக்கிறது. அதற்கான காரணங்களை பிரபாத் பட்நாயக் இச்சிறு நூலில் விரிவாக ஆய்வு செய்து இந்த உலகமயமாக்கல் நாட்களிலும் சோசலிசத்தைப் புதுப்பிக்க உருவாக்கப்பட வேண்டிய ஒருங்கிணைக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு கம்யூனிஸ்ட் அறிக்கையில் தரப்பட்டுள்ள கண்டுபிடிப்புகள் அடித்தளமாக அமையும் என நிறுவுகிறார். வரலாற்றை பொருள்முதல்வாதப் பார்வையில் விளக்கியதும் வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகப் பார்த்ததும் மனித குலத்தை “வரலாற்றுக்கு முன்பான” நிலையிலிருந்து “வரலாறு படைக்கும்” நிலைக்குக் கொணரப்போகும் பட்டாளிவர்க்கம் என்கிற வரலாற்றுச் சக்தி எப்படி உருவாகப் போகிறது என்பதை விளக்கியதுமான சாராம்சம் கம்யூனிஸ்ட் அறிக்கையை நிலைபெற்று நிற்க வைத்துவிட்டது.

20ஆம் நூற்றாண்டு
அரசியலில் இந்தியா
அய்ஜாஸ் அகமது
தமிழில்:சஹஸ்
(16 பக்கம் ரூ.5.)

உலகின் பிற பகுதிகளைப் போலவே முதல் உலகப்போருக்கும் ரஷ்யப் புரட்சிக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இந்தியாவிலும் நவீன அரசியல் காலம் துவங்கியது. இந்திய தேசிய இயக்கம் முன்னணிக்கு வந்த 1919-22 வரையிலான சுருக்கமான காலம் உலகின் பெரும் பகுதிகளுக்கு ஒரு அசாதாரண காலமாகும். ருஷ்யப் புரட்சியின் பின்னணியில் ஐரோப்பாவின் பெரும்பகுதி வர்க்க எழுச்சிகளைச் சந்தித்தது. சீனாவின் மே 4 இயக்கம், 1919 ஆம் ஆண்டின் எகிப்தியப் புரட்சி, ஆப்கன், துருக்கி, ஈரானிலும் இக்காலகட்டத்தில் பல எழுச்சிகள் ஏற்பட்டன.

உலகைச் சுற்றிலும் பல கம்யூனிஸ்ட் நாடுகள் உருவான பின்னணியில்தான் 1925இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதைக் காண வேண்டும். அதே ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்டதையும் இந்தியாவில் நடந்த தனித்த நிகழ்வாக நாம் பார்க்க முடியாது. உலகின் பிற பகுதிகளில் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பாசிச சக்திகள் பெரும் வேகத்துடன் வளர்ந்த பின்னணியில்தான் ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்டதைக் காண வேண்டும்.

இன்று இந்திய தேசியத்தின் ஆதார சாரமான ஏகாதிபத்திய எதிர்ப்பு, மத சார்பற்ற தன்மை ஆகியவை கைவிடப்பட்டுள்ளது எந்த உலகத்தின் பின்னணியில் என்பதையும் நாம் காண வேண்டும். இப்படியாக இந்தியாவின் அரசியலை 20ஆம் நூற்றாண்டு உலக நிகழ்வுகளின் பின்னணியில் புரிந்து கொள்ள உதவும் புத்தகம் இது.

கல்வித் துறையால் – வறுமையால் நசுக்கப்படும் குழந்தைகள்
மைதிலி சிவராமன்
(32 பக்கம் ரூ.5.)

கருத்துப்பூர்வமாக மட்டுமே பேசி புள்ளிவிவரங்களை அள்ளி வீசாமல் உண்மைச் சம்பவங்களையும் பொது விசாரணையில் குழந்தைகள் பேசிய பேச்சுக்களையும் அடுக்கிச் சொல்வதன் மூலம் ஒரு உணர்ச்சிகரமான புத்தகமாக மாறிவிடுகிறது. கல்விச்சாலைகளின் வன்முறை பெற்றோரின் சம்மதத்தோடுதான் நடைபெறுகிறது. வகுப்பறைத் தண்டனைகள் சிறார்களிடையே ஏற்படுத்தும் வெறுப்பு, பீதி, அவமானம் பற்றி யாருக்குமே அக்கறையில்லை. குழந்தை உழைப்பாளிகள் பொது விசாரணையில் பேசிய பேச்சுகளின் பதிவுகள் இப்புத்தகத்தை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது.

வங்கித்துறையும் இந்தியாவின் எதிர்காலமும்
க.கிருட்டிணன்
(16 பக்கம் ரூ.5)

வங்கிகள் பொதுத்துறைக்குள் வருவதற்கு முன்னால் தனியார் வங்கிகள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றிச் செயல்பட்டு வந்தன. வங்கிகளின் உடைமையாளர்கள் அவரவர் வங்கிகளின் மூலம் பொதுமக்களிடமிருந்து திரட்டிய சேமிப்புத் தொகையை பெரும்பாலும் தம் சொந்த பந்தங்களுக்காகவே பயன்படுத்தினர். ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பும் கிடையாது. விளைவு ஏராளமான வங்கிகள் திவாலாகிப் போயின. பணம் போட்ட மக்கள் நிலை பரிதாபத்துக்குரியதானது. வெள்ளைக்காரன் நடத்திய வங்கியும் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடியது. இதைக் குறிப்பாக உணர்த்தியே பாரதி “பொழுதெலாம் எமது செல்வம் கொள்ளை கொண்டு போகவோ” என்கிற வரிகளை எழுதினான் என்பார் தொ.மு.சி.ரகுநாதன். இந்தியா விடுதலையடைந்த பிறகு 1949ல்தான் வங்கித்தொழில் ஒழுங்கமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1950க்கும் 1969க்கும் இடைப்பட்ட 19 ஆண்டுகளில் மட்டும் 500க்கு மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலாகிக் காணாமல் போயின. எல்லாம் போனது போக எஞ்சியிருந்தவற்றில்தான் 14 வங்கிகளை 19 ஜுலை 1969ல் அரசு நாட்டுடமை ஆக்கியது.
அன்று வங்கிகளின் வைப்புநிதியாக ரூ.4646 கோடி மட்டுமே இருந்தது. நாட்டுடமை ஆக்கப்பட்ட பின் இன்று வைப்பு நிதி ரூ.16,75,000/ கோடியாக வளர்ந்துள்ளது. இந்த வரலாற்றுப் பின்னணியை விளக்கும் இப்புத்தகம் வங்கிகள் இணைப்பு, வங்கிகளில் அந்நிய நேரடி முதலீடு என்கிற ஆபத்தான முயற்சிகளில் இறங்கியுள்ள மத்திய அரசு இம்முயற்சிகளில் வெற்றி பெற்றால் கடும் விளைவுகளை இந்தியா சந்திக்கவேண்டி வரும் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார் ஆசிரியர்.

பெண்ணியம் பேசலாம் வாங்க
உ.வாசுகி
(32 பக்கம்.ரூ.5)

உரையாடல் பாணியில் பெண்ணியம் பற்றி பெண் சமத்துவம் பற்றிப் பேசுவோர் நம் சமூகத்தில் எதிர்கொள்ளும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக இப்புத்தகம் வந்துள்ளது. கிண்டலும் கோபமும் கலந்த நடை புத்தகத்தின் வரிகளுக்கு உயிர் தருகின்றன. சும்மா வாசிச்சுட்டுப் போயிட முடியாது. பெண் என்கிற காரணத்துக்காக பாரபட்சம் இருக்கக்கூடாது என்பதுதான் பெண்ணியத்தின் சாரம். என்றாலும் அமேசான் பெண்ணியம், தனித்துப் பார்க்கும் பெண்ணியம், சுற்றுச்சூழல் பெண்ணியம், தாராளவாதப் பெண்ணியம், பொருள்முதல் வாதப் பெண்ணியம் எனப் பலவாக அறியப்பட்டுள்ள பெண்ணியச் சிந்தனைகளை அறிமுகம் செய்யும் இந்நூல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஜனநாயகம், சமத்துவம், பெண்விடுதலை என்கிற முழக்கங்களாகப் பெண்ணியத்தை முன்வைப்பது ஏன் என விளக்குகிறது. ஆண், பெண் இருபாலரிடத்தும் அவசியம் பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய எளிய புத்தகம்

இன்சூரன்ஸ் துறை எதற்கு?
க.சுவாமிநாதன்
(32 பக்கம் ரூ.5)

பொதுத்துறை நிறுவனங்களை அந்நியருக்கும் தனியாருக்கும் குறைந்த விலையில் விற்றுத்தள்ள முயலும் மத்திய அரசு எத்தனை போராட்டங்களை பாட்டாளி வர்க்கம் நடத்தியபோதும் சற்றும் மனந்திருந்தாமல் மீண்டும் மீண்டும் தன் முயற்சியைத் தொடர்ந்து பல பொதுத்துறை நிறுவனங்களைக் காவு கொடுத்து வருகிறது. ஆனால் 1980களிலிருந்து இன்சூரன்ஸ் துறையை அழிக்கப் போராடிவரும் மத்திய அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் பாச்சா பலிக்காமல் தொடர்ந்து தோற்று வருகிறார்கள்.

காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில் தாரகை போல் ஜொலித்து நிற்கும் இந்தியாவின் இன்சூரன்ஸ் துறை உலகமயமாக்கல் நாட்களில் போராடும் மக்களுக்கு நம்பிக்கை தரும் யதார்த்தமாக தாக்குப் பிடித்து நிற்க முடிவது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை காணும் பயணத்தில் நம்மை அழைத்துச்செல்லும் இப்புத்தகம் வரலாற்றின் பக்கங்களினூடாக நடந்து செல்கிறது. ராஜாராம் மோகன் ராயும் லாலா லஜபதிராயும் ஈஸ்வர்சந்திர வித்யாசாகரும் கை வைத்துத் துவக்கிய இன்சூரன்ஸ் துறை என்பதால்தான் இன்றைய டோட்டல் பிராடு அரசியல்வாதிகளால் அமைச்சர்களால் ஆளும்+எதிர் கட்சிகளால் இத்துறையை அழித்து விட முடியவில்லை என்று மனம் வரலாற்று அதிர்வு கொள்கிறது. இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தன் ஊழியர்களை மிகச் சரியாக அணிதிரட்டிக் கல்வி புகட்டி சற்றும் மனந்தளராத போராட்டத்தில் இறக்கிவிட்டிருக்கும் வரலாறும் இப்புத்தகத்தில் பதிவாகியுள்ளது. சங்கப்பணிகளும் மக்கள் இயக்கமும் இணையும் போதுதான் நாட்டில் நல்லது நடக்கும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்தின் பணிகளும் வரலாற்று ரீதியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. தேசப் பொருளாதார நிர்மாணத்துக்குக் கோடி கோடியாகக் கொட்டித் தரும் கற்பதருவான இன்சூரன்ஸ் துறையை காக்க நம்மாலான ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்கிற மன உந்துதலை வாசகர் மனங்களில் ஏற்படுத்தும் விதமாக இப்புத்தகம் வந்துள்ளது.

மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர்
பி.பி.சான்ஸ்கிரி
(40 பக்கம். ரூ.5.)

அண்ணல் அம்பேத்கர் பற்றி பலரும் பல காலங்களில் பலவிதமான மதிப்பீடுகளை முன் வைத்தனர். முன் வைத்து வருகின்றனர். அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி எழுதப்பட்ட இக்கட்டுரை அம்பேத்கருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே நிலவிய முரணும் நட்பும் பற்றி ஆய்கிறது. அம்பேத்கரின் காலத்திலும் அவரது வருகைக்கு முன்னும் இந்திய சமூகத்தில் பிறந்து வளர்ந்த அத்தனை சமூக சீர்திருத்த இயக்கங்களும் பாரம்பரியமிக்க இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய உயிரோடிருக்கும் மரத்தின் மீது நவீன முதலாளித்துவக் கலாச்சாரம் என்னும் ஒட்டுக்கிளையை ஒட்டுப்பயிர் செய்ய முயன்றவையே ஆகும். இதே வழியில்தான் காங்கிரசும் பாரம்பரியம் என்ற பெயரில் உயர்சாதி மனோபாவத்தை விட்டொழிக்க முடியாமலிருந்தது. ஆகவே அம்பேத்கர் காங்கிரசோடு முரண்பட்டு நின்றதில் நியாயமுண்டு.
ஆனால் கம்யூனிஸ்ட்டுகளுடன் அவர் ஏன் சேர்ந்து நிற்கவில்லை? தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்பது சாதிய அமைப்பு உருவாக்கியிருந்த தடைகளை வலிமையிழக்கச் செய்வதை அவர் ஏன் பார்க்கத் தவறினார்? இக்கேள்விகள் கம்யூனிஸ்ட்டுகள் சாதியம் பற்றி அன்று கொண்டிருந்த கோட்பாட்டு ரீதியான நிலைபாட்டை பரிசீலிக்கத் தூண்டுகின்றன. தலித் மக்களின் விடுதலைக்காக பிரத்யேகமான முயற்சிகள் தேவையில்லை. வர்க்கப் போராட்டத்தின் வீச்சில் சாதியம் அழியும் என்கிற செக்டேரியன் பார்வை அன்று கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு இருந்ததையும் தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்பது தலித் ஒற்றுமை என்பதை சீர்குலைக்கும் முயற்சியாக அம்பேத்கர் காண நேர்ந்ததையும் இப்புத்தகம் விளக்குகிறது. மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என இந்நூல் வலியுறுத்துகிறது.

உழைப்பு, உழைப்பாளர், உலகமயம்
என்.குணசேகரன்
(32 பக்கம்.ரூ.5)

இன்று உலகமயமாக்கலுக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டங்கள் நாடு முழுவதும் இடைவிடாது நடைபெற்று வந்த போதிலும் பொதுவாக தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு தளர்வு ஏற்பட்டது போல தோற்றம் உருவாகியுள்ளது. இது ஏன்? இது உண்மையா? என்கிற கேள்விகளோடு விசாரணையைத் துவக்குகிறது புத்தகம். உலகமயமாக்கல் கொள்கை இந்தியாவை ஆட்டிப்படைக்கத் துவங்கிய பிறகு முறைசார்ந்த தொழில்களில் வேலை வாய்ப்பு திட்டமிட்டு குறைக்கப்பட்டு வந்துள்ளது. இன்னொரு புறம் வேலைகளை உப காண்ட்ராக்ட்களுக்கு விடுவது, அவுட்சோர்சிங் போன்ற நடைமுறைகள் காரணமாகவும் முறைசாராத் தொழிலாளர் எண்ணிக்கை பெருகி வருகிறது. உலகமயத்தின் இன்னொரு விளைவாக விவசாயம் அழிந்து கிராமப்புறத்திலிருந்து வேலை தேடி நகர்ப்புறம் வரும் மக்களும் முறை சாராத் தொழிலாளர் படையில் சேருகின்றனர்.

ஆகவே வலுவான தொழிலாளர் இயக்கத்தின் பலம் குறைகிறது. இதன் பொருள் இனி தொழிற்சங்க இயக்கம் முன்போல எழுச்சி கொள்ள முடியாது என்பதல்ல. முறைசாராத் தொழிலாளர்களைப் பெருமளவுக்கு அணிதிரட்ட வேண்டிய மிகப்பெரும் சவாலும் கடமையும் தொழிற்சங்க இயக்கத்தின் முன் உள்ளது. தேசிய எல்லைகளைத் தாண்டி கரம் நீட்டும் நிதி மூலதனத்தின் வருகைக்குப் பின் முதலாளித்துவ அதிகாரத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதே சிரமமாகியுள்ளது. இதை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்தும் இப்புத்தகம் ஆழமாகப் பேசுகிறது.

மிரட்டும் குளிர்பானங்கள்
அசுரன்
(பக்கம் 16 ரூ.5)

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரிலும் (பிஸ்லரி, அக்வாஃபினா, கின்லே) பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களிலும் பூச்சிக்கொல்லிகள் இருப்பதை டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம் கண்டுபிடித்து வெளியிட்டு பெரும் பரபரப்பை எற்படுத்தியது. அம்மையத்தின் அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்ட தகவல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லிகள் மிரண்டா லெமனில் 70 மடங்கும் கோகோகோலாவில் 45 மடங்கும் ஃபாண்டாவில் 43 மடங்கும் பெப்சியில் 37 மடங்கும் தம்ஸ் அப்பில் 22 மடங்கும்… என்று பட்டியல் நீளும் போது நமக்கு அடிவயிறு கலங்குகிறது. அதைவிடவும் பூச்சிக் கொல்லியே இல்லாவிட்டாலும் இந்தத் தண்ணீர் பாட்டிலும் குளிர் பானங்களும் ஆபத்தானவை என்று விளக்கப்படும் வரிகள் மேலும் அதிர்ச்சியைத் தருகின்றன. அரசாங்கத்தின் கையாலாகாத்தனமும் சரியாகத் தோலுறித்துக் காட்டப்பட்டுள்ளது.

கல்வித்துறை அவலங்கள்
சாவித்திரி கண்ணன்
(32 பக்கம் ரூ.5)

தமிழகத்தின் கல்வித்துறை குறித்து ஆரம்பக் கல்வி, உயர்கல்வி குறித்தெல்லாம் நம் உள்ளங்களில் அலைமோதும் கேள்விகளே இப்புத்தகத்தில் வரிசையாகத் தொகுக்கப்பட்டு அவற்றுக்கான விடைகள் தேடும் முயற்சியில் கல்வித்துறையின் அவலங்கள் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பள்ளி செல்லும் பருவத்தில் உள்ள 22 கோடி குழந்தைகளில் 12 கோடி குழந்தைகள் மட்டுமே பள்ளி செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளன என்கிற அதிர்ச்சித் தகவலோடு துவங்கும் புத்தகம் தன்னுடைய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 30 சதவீதம் செலவழிக்கும் மத்திய அரசு கல்விக்காக 3.4 சதவீதம்தான் ஒதுக்குகிறது. இதை 10 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்கிற கோரிக்கை கேட்பாரற்றுக் கிடக்கிறது. தமிழகத்தில் 70000 ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. அரசுப்பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. 1950-60கள் வரையிலும் பெரும் செல்வந்தர் வீட்டுப்பிள்ளைகள் கூட அரசுப் பள்ளிகளில்தான் படித்து வந்தனர். ஆனால் 60களுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆங்கிலவழிக் கல்விக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பெரும் ஊக்கமளித்து வளர்த்த வரலாறு நமக்கு மேலும் அதிர்ச்சி தருகிறது. பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பெருகிவரும் ‘நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்’ என கல்வித்துறை சார்ந்த சகல விஷயங்கள் பற்றிய அலசலாக இப்புத்தகம் வந்துள்ளது.

மேதினம்
செல்வபெருமாள்
(30 பக்கம் ரூ.5)

“நேரம் வரும் அப்பொழுது, எங்களது மௌனம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இன்று நீங்கள் எங்கள் குரலை நெறிப்பதை விட..’’ தூக்கு மேடையில் நின்று சிகாகோ தியாகி ஆகஸ்ட் ஸ்பைஸ் முழக்கிய இவ்வார்த்தைகளோடு புத்தகம் துவங்குகிறது. 1880களில் அமெரிக்காவில் தொழிலாளிகளின் சராசரி ஆயுட்காலம் வெறும் 30 வருடம் மட்டுமே என்கிற செய்தி 1886இல் மேதினம் அமெரிக்காவில் வெடித்ததன் பின்னணியாக உள்ளது. சாசன இயக்கத்திலிருந்து மேதினத்தை நோக்கி நகர்ந்த தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாறு சுருக்கமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 1862இல் இந்திய ரயில்வேத் தொழிலாளிகள் 8 மணி நேர வேலை கேட்டு வேலைநிறுத்தம் செய்தது முதல் வ.உ.சி நடத்திய தொழிற்சங்க இயக்கம் வரையிலான வரலாற்றின் இந்தியப் பக்கம் விரிகிறது. வேலை நிறுத்த உரிமை, சங்கம் வைக்கும் உரிமை அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் இந்த நாட்களில் மேதினத்தின் சாரத்தை உழைப்பாளி மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. அதற்கு உதவும் வகையில் இப்புத்தகம் வந்துள்ளது.

அதிரடித்தயாரிப்பு – ஏகாதிபத்திய ஜனநாயகம்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
அருந்ததிராய்
(32 பக்கம் ரூ.5)

ஐ.நா வைப் பயன்படுத்தி பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆயுதச் சோதனை மூலம் ஈராக்கை மண்டியிடச் செய்வதற்கு அதன் மக்களைப் பட்டினி போட்டு அரை மில்லியன் குழந்தைகளைங் சாகடித்துவிட்டு அந்நாட்டின் கட்டுமானங்களைச் சிதைத்து விட்டு அந்நாட்டின் பெரும்பகுதி ஆயுதங்கள் அழிக்கப்பட்டதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் ஆக்கிரமிப்பு ராணுவத்தை அந்நாட்டுக்குள் அனுப்பி அமெரிக்கா கோழைத்தனமான போரை நடத்தியது. அப்போரை முன் வைத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஜனநாயக கபடத்தைத் தோலுரித்து நியூயார்க் ஹார்லேமில் உள்ள ஆற்றோர சர்ச்சில் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆற்றிய முழு உரையின் தமிழாக்கமே இந்நூல். வரலாறு நெடுகிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஜனநாயகத்தின் பெயரால் நடத்தி வரும் படுகொலைகளைப் பட்டியலிடும் அருந்ததிராய் யுத்தத்தில் ஈடுபடுவதும் அதற்கான செலவுக்கான பணத்தைத் தருவதும் சாதாரண ஏழை அமெரிக்கர்களே என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஈராக்கின் பாலைவன வெப்பத்தில் வெந்து கொண்டிருக்கும் படைவீரர்கள் பணக்கார வீட்டுக் குழந்தைகளல்ல. ஆனால் இப்போரை ஏகாதிபத்தியம் இவ்வமெரிக்க மக்களின் பேராலேயே நடத்துகிறது. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராடிவருவதை பாராட்டும் அருந்ததிராய் உரையின் இறுதியில் அமெரிக்க மக்களை நோக்கியே பேசுகிறார். “உங்கள் ஜனாதிபதியின் கருத்தை நான் வெறுப்புடன் மறுக்கிறேன். உங்கள் நாடு எந்த வகையிலும் மகத்தானதல்ல. ஆனால் நீங்கள் மகத்தான மக்களாக முடியும். வரலாறு உங்களுக்கு அந்த வாய்ப்பைத் தருகிறது. காலத்தே துணிந்து செயல்படுங்கள்”

உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்
கே.வரதராஜன்
(32 பக்கம் ரூ.6)

உலகமயமாக்கல் கொள்கைகளை மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டு அமுல்படுத்தியதன் விளைவாக தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணில் 21 விவசாயிகள் பட்டினியால் செத்து மடிந்தார்கள். ஆந்திராவில் தற்கொலைச் சாவுகள்.

பிரதானமாக உலகமயமாக்கல் விவசாயத்துறையில் என்ன செய்கிறது? இடுபொருள் விலையிலோ விளைபொருள் விலையிலோ அரசு தலையிடாது. நீர்ப்பாசனம் உள்ளிட்ட முக்கிய விவசாயத் துறைகளில் அரசின் மூலதனம் படிப்படியாகக் குறைக்கப்படும். மின்சாரம், விதைகள் உரம், பூச்சிமருந்து ஆகிய எல்லாவற்றுக்கும் மானியம் ஒழிக்கப்படும் அல்லது பெருமளவு வெட்டப்படும். வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதிக்கு கதவுகள் அகலத் திறந்து விடப்படும். இக்கொள்கைகள் காரணமாக விவசாய விளை பொருட்களின் விலைகள் வீழ்ச்சி அடைந்தன. கரும்பு, தேயிலை, காட்டன் விவசாயிகள் வாழ்க்கை அதளபாதாளத்தில் விழுந்துள்ளது. நாட்டின் உணவு தானிய உற்பத்தி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக ரேஷன் அரிசிக்கும் ஆபத்து வந்தது. இத்தனைக்கும் மேலாக தண்ணீர் வியாபாரத்துக்கு இந்திய நாட்டைத் திறந்து விட்டதன் காரணமாக விவசாயத்துக்குத் தேவையான தண்னீர் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலைகளில் உடனடியாக மாற்றம் கொண்டுவந்தாக வேண்டும். அதற்கான விவசாயிகள் விவசாயத் தொழிலாளிகளின் போராட்டங்கள் எழுந்து வரவேண்டிய அவசியத்தை இந்நூல் அழுத்தமாக வலியுறுத்துகிறது.

வேலை நிறுத்த உரிமை மறுப்பு நீதியா?
உ.ரா.வரதராசன்
(32 பக்கம் ரூ.5)

13 லட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நடத்திய வீரஞ்செறிந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டி சி.ஐ.டி.யு.வின் சார்பாக தோழர். டி.கே.ரெங்கராஜன் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் எந்தத் துறையில் வேலை நிறுத்தமானாலும் சரி, அந்த ஆயுதம் நீதி இழைப்பதை விடவும், அதிகமான தீங்கையே இழைக்கிறது. அதனால் பாதிக்கப்படுவது சமுதாயமும் பொதுமக்களுமே என்றும் “இன்றைய நிலையில் காரணம் நியாயமானதாக இருந்தாலும் சரி நியாயமற்றதாக ஆனாலும் சரி வேலை நிறுத்தத்தை நியாயப்படுத்த முடியாது” என்று கூறினர். இவ்வாசகங்கள் நாடு முழுதும் உழைப்பாளி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இத்தீர்ப்பு வாசகங்கள் பற்றிய முழுமையான அலசலாக இந்நூல் வந்துள்ளது. தங்கள் குறைகளைக் களைவதற்கான வழிமுறையாக உழைக்கும் மக்களின் படைகளிலுள்ள முக்கியமான ஆயுதமே வேலை நிறுத்த உரிமைதான் என்பதை உலகில் பல ஜனநாயக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த வேலை நிறுத்த உரிமையும்கூட காலங்காலமாக பாட்டாளி வர்க்கம் நடத்திய போராட்டங்களின் மூலமாக வென்றெடுக்கப்பட்ட ஒன்றுதான். எந்த அரசின் பெருந்தன்மையாலோ நீதிபதிகளின் தீர்ப்பினாலோ கிடைத்ததல்ல. உலகமயம் தாராளமயத்தின் பின்னணியில் வேலை நிறுத்தங்களுக்கு எதிராக நீதிமன்றங்களின் அணுகுமுறை மாறியுள்ளதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. இத்தீர்ப்பின் பின்னாலுள்ள வர்க்க அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

மனசே டென்சன் ப்ளீஸ்
நளினி
(16 பக்கம் ரூ.5)

பொதுவாக மத்திய தர வர்க்கத்து அன்றாட வாழ்வில் எங்கும் டென்சன் டென்சன் என்பதே பேச்சாக இருக்கும். டென்சன்களுக்கான காரணங்களையும் அதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பேசுகிறது இப்புத்தகம். டென்சன்களை தர வாரியாக வகைப்படுத்தும் புத்தகம் தனிநபரே சரி செய்து விடக்கூடிய மன அழுத்தங்களை யோகா போன்ற பயிற்சிகள் மூலம் குறைக்க முடியும் என விளக்குகிறது. பொருளாதாரம், வேலையின்மை போன்ற சமூகப் பிரச்னைகளால் வரும் மன அழுத்தத்தை அப்பிரச்னைகளை முழுமையாகப் புரிந்து கொள்வதன் மூலமும் சமூக இயக்கங்களில் பங்கேற்பதன் மூலமும் குறைத்துவிட முடியும் என அறிவியல் பூர்வமான தீர்வுகளை முன்வைக்கிறது. நாம் கைக்கொள்ளத்தக்க பலவிதமான மனப் பயிற்சிகளையும் அறிமுகப்படுத்துகிறது. எளிய தமிழில் நம் அன்றாட வாழ்வின் உதாரணங்களோடு பல இடங்களில் பேச்சு வழக்கில் கருத்துக்களை எடுத்துச் சொல்லி விளங்க வைக்கும் புத்தகமாக வந்துள்ளது.

அரசியல் எனக்குப் பிடிக்கும்
ச.தமிழ்ச்செல்வன்
(48 பக்கம். ரூ.10)

அரசியல் என்றால் என்ன? அதை ஏன் பலரும் சாக்கடை என்று சொல்கிறார்கள்? அரசியலின் வரலாறு என்ன? அரசு என்பதன் பொருள் என்ன? இப்படியான எளிய கேள்விகளோடு துவங்கும் புத்தகம் அரசு என்னும் அடக்குமுறைக் கருவி மனித குல வரலாற்றில் தோன்றிய கதையிலிருந்து இடதுசாரி என்றால் என்ன? வலது சாரி என்றால் என்ன போன்ற கேள்விகளுக்கு விவாத பாணியில் விளக்கம் சொல்கிறது. விதவிதமான ஆட்சி முறைகள் பற்றிப் பேசி ஜனநாயகம் என்பதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவ அரசியலை சமகால கட்சி அரசியலோடு இணைத்து விளக்குகிறது. அரசியல் பற்றி சமீபத்தில் வந்துள்ள இந்த எளிய புத்தகத்தில் கலாச்சார அரசியல் பற்றியும் முதலாளித்துவத்தை ஆவேசமாக எதிர்க்கும் பாட்டாளி வர்க்கம் கருத்து ரீதியாக அதே முதலாளித்துவத்தின் கலாச்சார நிறுவனங்களிடமே மாட்டிக்கொண்டிருக்கும் யதார்த்தம் பற்றியும் அதற்கெதிராக பாட்டாளி வர்க்கம் நடத்த வேண்டிய கலாச்சார அரசியல் பற்றியும் பேசுகிறது.

கிராம்ஷியின் சிந்தனைப்புரட்சி
இ.எம்.எஸ் & பி.கோவிந்தப்பிள்ளை
தமிழாக்கம் : வி.கே.பாலகிருஷ்ணன்
(104 பக்கம். ரூ.40)

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக வாழ்ந்து பாசிச முசோலினிக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடிய காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு இந்த மூளை செயல்படக்கூடாது என்கிற நீதிமன்றத் தீர்ப்போடு சிறையில் அடைக்கப்பட்ட தோழர் அந்தோனியோ கிராம்சியின் வாழ்க்கையை அவருடைய சிந்தனைகளை சுருக்கமாக எடுத்துரைக்கும் புத்தகம். சொல்லத் தரமற்ற சிறைக்கொடுமைகளை அனுபவித்தபடியே பாசிசம் பற்றியும் கலாச்சாரம் பற்றியும் மர்க்சிசம் பற்றியும் அவர் எழுதிய சிறைக்குறிப்புகள் அவரது மரணத்துக்குப் பிறகு கடத்தப்பட்டு சோவியத் நாட்டில் முதன் முதலாக அச்சிடப்பட்டது. 2848 பக்கங்கள் கொண்ட அச்சிறைக்குறிப்பு மர்க்சிசம் லெனினிசத்தை மேலும் வளர்த்துச் செழுமைப்படுத்தும் உயிர்ப்புள்ள வழிகாட்டும் ஆவணங்களாக இன்று உலகெங்கும் பாட்டாளி மக்களால் கொண்டாடப்படுகின்றன. சமூகத்தை சிவில் சமூகம் அரசியல் சமூகம் எனக் கட்டுடைத்த கிராம்சியின் முக்கிய சிந்தனைகளான கலாச்சார மேலாண்மை (Cultural hegemony), உயர் அறிவாளிகள் பாரம்பரிய அறிவாளிகள் ,கற்பித்தலின் தத்துவம் போன்றவை இந்நூலில் விளக்கபட்டுள்ளன. பாசிச சக்திகளைப் புரிந்து கொண்டு போராட வேண்டிய நிலையில் உள்ள களப்பணியாளர்கள் கிராம்சியை உள்வாங்காமல் ஒரு அடி கூட முன்னேற முடியாது

எங்கும் பரவும் மநுவிரோதிகள்


1927 டிசம்பர் 25 அன்று மநுஸ்மிருதியை அம்பேத்கர் எரித்தபோது வர்ணாசிரமத்தின் வாரீசுகள் அவரை பீமாசுரன் என்றும் மநுவிரோதன் என்றும் வசைபாடினர். தனது கருத்தியல் எதிராளிகளின் மனநிலையை சமன்குலைத்து சிதறடித்த அந்த இணையற்ற கலகக்காரனோடு ஒருமை கொள்ளும் முகமாகவே நான் ஒரு மநுவிரோதன் என்று என்னை பெருமிதம் பொங்க அறிவித்துக் கொண்டேன். சாதி மறுப்பாளர் என்று தன்னை மனப்பூர்வமாய் நம்பிக் கொள்கிற ஒவ்வொருவரும் இப்படி தம்மைத்தாமே அறிவித்துக்கொள்ள முன்வர வேண்டும் என்ற விழைவும் இதில் அடங்கியிருக்கிறது.

பெரிய பெரிய தலைவர்களெல்லாம் சும்மா இருக்கும்போது இவனென்ன பெரிய இவனாட்டம் ‘நான் ஒரு மநுவிரோதன்’ என்று பிரகடனம் செய்துகொள்கிறான் என்று தலைப்பைப் பார்த்ததுமே முனகத் தொடங்கியவர்களிடம் மெத்தப் பணிவோடு ஒன்றை கேட்க வேண்டியிருக்கிறது- பெரிய பெரிய தலைவர்களெல்லாம் ஏன் சும்மா இருக்கிறார்கள்? அல்லது சும்மா இருப்பதால் பெரிய பெரிய தலைவர்களாய் இருக்கிறார்களா என்பதே அது. தவிரவும் அவர்களெல்லாம் தம்மை அவ்வாறு முழுமனதோடு அறிவித்துக் கொண்டால் இந்த சமூகம் என்னவாய் உருமாற்றம் கொள்ளும் என்று இத்துனூண்டு கற்பனை செய்துதான் பாருங்களேன்…

மநுஸ்மிருதியால் இன்றளவும் ஆதாயம் அடைந்துகொண்டிருக்கிற சாதியினரைத் தவிர மற்றெல்லோரும் அதை எதிர்ப்பதற்குரிய எல்லா நியாயங்களையும் கொண்டிருக்கின்றனர். பார்ப்பனச் சாதியில் பிறந்திருந்தாலும்கூட தம்மைத்தாமே சிந்தனை மற்றும் செயல்ரீதியாக சாதிநீக்கம் செய்து கொண்டவர்களுக்கும்கூட இந்த நியாயம் இருப்பதாகவே நம்புகிறேன். எனவே தம்மை மநுவிரோதி என்று அறிவித்துக் கொள்ளாதவர்களை மநுவின் சினேகிதர் என்றோ மநுவுக்கே…… (சரி, வேண்டாம் விடுங்கள்….ஆதவன் கடாமுடான்னு பேசறார் என்ற குற்றச்சாட்டில் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும்?) என்றோ குறுக்கிப் பார்க்கும் நோக்கம் எதுவும் நமக்கில்லையாயினும், அவ்வாறு தம்மை மநுவிரோதி என்று அறிக்கையிட்டுக் கொள்வதில் ஒருவருக்குள்ள தடைதான் என்ன என்று கேட்க விரும்புகிறேன்.

மநுவை எதிர்ப்பதென்பது, இங்கு நிலவும் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு ஒடுக்குமுறை அமைப்பை எதிர்ப்பதற்கும் புரட்சிகரமாய் மாற்றியமைக்கவுமான ஒரு நெடியப் போராட்டத்தின் தொடக்கமே. உஞ்சவிருத்தி செய்து வயிற்றைக் கழுவும் நிலைக்கு தனது பொருளாதார நிலை- வர்க்கநிலை- தாழ்ந்து கிடக்கும் போதும் தனது சமூக அந்தஸ்தில் பின்னம் ஏதும் ஏற்படாமல் பாதுகாத்த மநுவைக் கொண்டாட ஒரு பார்ப்பனருக்கு நியாயம் இருக்கிறது. எனில், பெரும் கல்வியாளராகவும் செல்வந்தராகவும் சொத்துடமையாளராகவுமாகி தனது வர்க்கநிலையை பார்ப்பனரல்லாத ஒருவர் உயர்த்திக் கொண்டுவிட்டப் பின்னும்கூட, அவரது பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுவிட்ட சாதியிழிவைத் சுமந்து திரிந்தாக வேண்டிய அவலத்தை உருவாக்கிய மநுவை அவர் எதிர்ப்பதுதானே சுயமரியாதையின் அடையாளம்?

பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், சுயமரியாதை போன்ற சொற்களைக் கண்ட மாத்திரத்தில் தி.க. வாடை வீசுகிறது என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்கிறவர்கள், வசக்கி தொழுவத்தில் கட்ட முடியாத ஒரு முரட்டுப்பிராணியைக் குறித்த கவலையை வெளிப்படுத்தும் பாவனையோடு ‘ஆதவனிடம் நிறைய டீவியேஷன் இருக்கிறது’ என்று அபிப்ராயம் தெரிவிக்க கிளம்பியுள்ளனர். ஒட்டுமொத்த மனிதகுலமும் சுயமரியாதையோடு வாழும் உன்னத சமூகத்தை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் சகலத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்ற மார்க்சீயத்தின் வழிகாட்டுதலே, ஒருவர் தம்மை மநுவிரோதி என்றோ மநுவின் பரம/ஜென்ம விரோதி என்றோ அறிவித்துக் கொள்ளத் தூண்டுகிறது.

எனது ஆண்குறியை வெட்டிக் கொண்டாலும் வெட்டிக் கொள்வேனே தவிர எனது பூணூலை அறுத்துக் கொள்ளமாட்டேன் என்று ஒரு மௌனியால் பகிரங்கமாக தனது சாதியகங்காரத்தை வெளிப்படுத்த முடியுமென்றால், உயிர்நிலையான ஆண்குறியை விடவும் பெரிதென கொண்டாடுகிற அந்த பூணூலை அவருக்கு வழங்கிய மநுவை எதிர்ப்பதைத் தவிர பார்ப்பனரல்லாத பிறசாதியாருக்கு வேறு என்னதான் மார்க்கமிருக்கிறது? எனவே இப்போது, மெல்ல உதடு பிரித்து ஒருமுறை உங்களுக்கு நீங்களே ரகசியமாகவேனும் ‘நான் ஒரு மநுவிரோதி’ என்று சொல்லிப் பாருங்கள். அவ்வாறு உச்சரிக்கும்போது நாக்கு அழுகி விழுந்துவிடும் என்று அஞ்சுகிறவர்கள் சற்றே ஓரமாக உட்கார்ந்து தமக்குத்தாமே வாக்கரிசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2.

நேர்காணல் மீதான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. விமர்சனம் என்ற பொதுத்தலைப்பின் கீழ் வகைப்படுத்த முடியாத வசவுகளும் குமைச்சல்களும்கூட இதில் அடக்கம்தான். வாழ்வின் பல்வேறு தளங்களை ஊடறுத்துச் செல்வதாய் கேள்விகளும், அக்கேள்விகள் குறித்த எனது புரிந்துணர்வின் வழிகாட்டுதலில் அமைந்த பதில்களுமாய் நேர்காணல் அமைந்திருக்க, அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் ஒரு மநுவிரோதன் என்ற தலைப்பினாலேயே தொந்தரவுக்குள்ளாகி, முதல் பக்கத்திற்குள் கூட புக முடியாமல் அட்டையையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை மநு எப்போதோ வாழ்ந்து மடிந்த யாரோ அல்ல, இன்றளவும் மனிதகுலத்தின் ஆகச்சிறந்த அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே வாரி வழங்கிக் கொண்டிருக்கிற வள்ளல். எனவே மநுவின் விரோதிகளை தமது சொந்த எதிரிகளாய் வரித்துக்கொண்டு பகைமூட்டம் கொள்ளும் குணம் இயல்பாகவே வந்துவிடுகிறது. ஆனாலும் மநுவை ஆதரித்து வெளிப்படையாய் பேசமுடியாத கடும் மன அழுத்தத்தால், தமது கைகால் நகங்களை ரத்தம் பீறுமளவுக்கு கடித்துக் கொண்டிருக்கிற- கண்டதும் காய்தல் அல்லது கடுப்பாங்காய்ச்சல்- என்ற இந்த புதுவகை வியாதிக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பரிதாபம்தான்.

நேர்காணலின் பேசுபொருள்கள் பலவும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தபோதும் சாதி வர்க்கம் குறித்த எனது கருத்துக்கள் மட்டுமே விவாதத்திற்குரியதாய் மேலெழுந்துள்ளன. சாதியத்தை ஏன் எதிர்க்க வேண்டும் அல்லது கைவிட வேண்டும் என்பது குறித்த வரலாற்றுப்பூர்வமான தெளிவை எட்டியவர்கள் எனது கருத்துக்களை ஏற்கவும் உடன்நின்று விவாதிக்கவும் தலைப்பட்டுள்ளனர். பிறப்பால் எந்த சாதியினராக இருந்தபோதிலும் தனது உள்ளுணர்வு நிலையில் தங்கியிருக்கும் சாதியக்கூறுகளைக்கூட எதிர்த்து தமக்குள்ளே போராடிக் கொண்டிருக்கிற- அதுகுறித்து வெளிப்படையாய் விவாதிக்கிற பலரை நானறிவேன். சாதியப் பெருமிதத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கோடு தமக்கு கற்றுத் தரப்பட்ட நடையுடை பாவனைகள், உணவுப் பழக்கவழக்கம், வழிபாடு, நம்பிக்கை, தெய்வங்கள், திருவிழாக்கள், வாழ்க்கைவட்டச் சடங்குகள் எல்லாவற்றையும் சொந்தவாழ்வில் கைவிடுவதற்காக தமக்குள் போராடிக் கொண்டிருக்கின்ற அவர்கள் எனது கருத்தை மேலும் செழுமைப்படுத்த ஆர்வம் கொண்டுள்ளனர். சாதி கடந்ததொரு சமூகத்திற்கான விருப்பத்தை அவர்களோடு பகிர்ந்துகொள்வதில் நமக்கு எவ்வித மனத்தடையும் ஏற்படவில்லை.

ஆனால் தமது சொந்தவாழ்வில் எந்தக் கட்டத்திலும் சாதியை கைவிடாமலே, ஆனால் கைவிட்டதான பாவனையை வெளிக்காட்டிக் கொண்டிருப்பவர்கள், தமது குட்டு வெளிப்பட்டுவிட்ட அவமானத்தில் பெரிதும் மனத் தொந்தரவுக்காளாகியுள்ளனர். தாங்கள் சாதியைக் கைவிட்டு வெகுகாலமாகிவிட்டப் பின்பும் தங்களது அந்தரங்கத்தையும் நேர்மையையும் ஆதவன் சந்தேகிப்பது சரியா என்று புகார் தெரிவிக்கிறார்கள். ‘சொந்த சாதியிலேயே கல்யாணம் செய்துகொண்ட ஒரே காரணத்திற்காக எனக்கு சாதியுணர்வு இருப்பதாக எப்படி சொல்லமுடியும்?’, ‘ஆதிதிராவிடர் அல்லது அருந்ததியர் காலனியில் நான் வசிக்கப்போகவில்லை என்பதற்காக நான் தீண்டாமை பார்க்கிறேன் என்று கூறமுடியுமா?’, ‘அசைவ உணவு சாப்பிடாதது ஒரு குற்றமா?’, ‘மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டவுடனே ஒருவர் சாதிமறுப்பாளர் ஆகிவிட முடியுமா?’, ‘பழக்கமில்லாத ஒரு பண்டத்தை சாப்பிட்டாக வேண்டும் என்று வற்புறுத்துவது அராஜகமில்லையா?… மனதுக்கு ஒப்பாததை உண்ணுமாறு வற்புறுத்துவதில் பாசிசத்தின் கூறு பல்லிளிக்கிறது…’ – என்றெல்லாம் இவர்கள் எழுப்பும் பலவாறான வாதங்களின் வழியே தாங்கள் இன்னும் சாதியின் பிடிக்குள் சிக்கியிருப்பதைத்தான் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உணவைப் பற்றி பேசும்போது பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு சென்றுவிடுகின்றனர். வளர்ப்புமுறை, குடும்பச் சூழல், பழக்கவழக்கம், அதுஇதுவென்று முன்வைக்கும் சால்ஜாப்புகள் ஏராளம். தர்மம்- அதர்மம், நீதி-அநீதி என்பதில் ‘அ’ ஒட்டுடன் வருபவை எல்லாமே கீழானவை என்று அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் சைவம்- அசைவம் என்பது என்னவாக உள்வாங்கப்படுகிறது என்று பிரகதீஸ்வரன் மேடைகளில் எழுப்பும் கேள்வியின் நியாயத்தை எப்போது உணரப் போகிறோம்? ஒருவரது உணவு சைவமா அசைவமா என்பதை சாதியைத் தவிர வேறெது தீர்மானிக்கிறது? (ஜீரணக்கோளாறு போன்ற உடல் உபாதைகளை முன்னிட்டு தாவரவுணவுக்கு மாறியவர்கள் இந்த ஆட்டத்தில் சேர்த்தியில்லை).

வெவ்வேறு வகையான உணவுப் பழக்கவழக்கங்கள் இருப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் ஒருசாரார் மற்றொரு சாராரின் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து என்ன மதிப்பீடு கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியம். இன்னொருவரை இழிவாக- தீட்டாக- அசூயையாக பார்க்குமாறு வலியுறுத்தும் சாதியம் அடுத்தவரது உணவையும் அவ்வாறே பார்க்குமாறு வலியுறுத்துகிறது என்பதுதானே உண்மை? கறி தின்கிறவர் பருப்புசாம்பாரின் நாற்றம் தாங்காமல் தனக்கு குமட்டிக் கொண்டு வருவதாகச் சொன்னால் அது இயல்பானதுதானே என்று ஒத்துக்கொள்ள முடியாதவர்கள், கறி தின்னும் பழக்கம் இல்லாத ஒருவர் கறியைப் பார்த்ததும் குமட்டிக்கொண்டு எடுப்பது வாந்தியா சாதியா என்று ஏன் சந்தேகிப்பதில்லை?

‘மதியம் மாட்டுக்கறி விருந்து’ என்று மாநாட்டு அழைப்பிதழில் அச்சடித்து தனது தொண்டர்களைத் திரட்டியது தென்சென்னை தமுஎச. மற்ற அமைப்புகளுக்கெல்லாம் என்னவானது? கறி என்றதும் ஆடு, கோழி, மீன் மட்டுமே நினைவுக்கு வருவதும் மாட்டுக்கறி என்பதே நினைவுக்கு வராத செலக்டீவ் அம்னீசியாவால் பீடிக்கப்படுவதையும் எதன் பேரால் நியாயப்படுத்த முடியும்? இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களாகிய தலித்துகளின் உணவை- கறியை இழிவானதென்று பொதுஇடங்களிலும் தனிவாழ்விலும் ஒதுக்கிவைக்குமாறு சாதியம் கற்றுக் கொடுத்ததை மண்டை நிறைய நிரப்பிக்கொண்டு- அதை நியாயப்படுத்த ‘ஆதவன் எல்லாவற்றையும் க்ரூடாக பார்க்கிறான்’ என்று பழிபோடுவது எப்படி சரியாகும்? ‘இப்படி நுணுகி நுணுகி ஒவ்வொன்றிலும் சாதி பார்த்தால் என்னத்துக்கு ஆகும்?’ என்று அலுத்துக்கொள்ளும் கேள்விகள் ஆபத்தானவை. ஏற்கனவே எல்லாம் சாதியாகத்தான் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் நேர்மையின்றி, நாம் க்ரூடாய் பார்ப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். க்ரூடாய் இருக்கலாம், குருடாய் இருப்பதுதான் சிக்கல் என்று சொற்சிலம்பம் ஆட இது பொருத்தமான தருணமல்ல.

எந்தவொரு கறிக்கடையில் நுழைந்தாலும் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழிக்கறி, பன்றிக்கறி, மீன் -என எல்லாமே அடுத்தடுத்து நேர்த்தியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் மக்கள் எவ்வித அசூயை உணர்வுமின்றி எல்லாவற்றையுமே உண்பதையும் லண்டனில் கண்டபோது எனக்கு நம்மூர் கறி அரசியல்தான் நினைவுக்கு வந்து அலைக்கழித்தது. அங்கே மாட்டுக்கறி தான் விலை அதிகம். ஒரு கிலோ 6 பவுண்ட். மற்றவையெல்லாம் அதைவிட கீழ்தான். விருந்தாளியை மகிழ்விக்கும் பிரியத்தில் தோழர்கள் அழைத்துப்போன பெரிய உணவுவிடுதிகளில் பிரமிப்பூட்டும் வண்ணங்களிலும் வடிவங்களிலும் தொங்கவிடப் பட்டிருந்த மாட்டுக்கறியை ஆவல் பொங்க பார்த்துக்கொண்டேயிருந்தேன். இங்காவது நல்ல மதிப்போடு இருக்கிறாயே… ரொம்ப சந்தோஷம் என்று அங்கே தொங்கிக் கொண்டிருந்த கறிக்கொத்துகளைப் பார்த்து மனசார வாழ்த்தினேன். அங்கே உயர்வாக மதிக்கப்படக்கூடிய ஒன்று இங்கே கீழ்மைப்பட்டிருப்பதற்கு காரணம் சாதியும், அதை நியாயப்படுத்தும் இந்துமதப் புரட்டுக்கதைகளும்தான். பழக்கவழக்கத்தின் பெயரால் சாதியையும் இந்துமதத்தையும் காப்பாற்றுகிறவராக இருக்கிற ஒருவர் எப்படி சாதியைத் துறந்தவராக- மதச் சார்பற்றவராக- பொது மனிதாயப் பண்புகளை போற்றுகிறவராக தன்னை அறிவித்துக் கொள்ள முடியும்? ஆகவே மறுபடி சொல்கிறோம்- சாதியைக் கைவிடுவதென்பது முறி எழுதி கைச்சாத்து வைத்ததும் முடிந்துபோகிற விசயம் இல்லை.

எப்போதோ எழுதப்பட்ட மநுஸ்மிருதியை தூசுதட்டி இப்போது எதற்காக எதிர்க்க வேண்டும் என்கிறவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். மநுஸ்மிருதி உருவான காலம் அதன் சூழல் ஆகியவற்றுக்குள் இருத்திப் பார்த்தால் அத்தகைய கோட்பாடுகள் உருவானதற்கான நியாயத்தை உணரமுடியும் என்றும்கூட இவர்கள் வாதிடுவதுண்டு. இன்னும் ஒருபடி மேலே போய், அன்றைய தேவையை முன்னிட்டு உருவான மநுஸ்மிருதி, இன்றைக்கும் பொருந்தும் என்று சொல்வது முட்டாள்தனம் என்று மிகவும் முற்போக்கு போல வாய்வேஷமும்கூட கட்டுவார்கள். இன்றைக்கு பொருந்தாது என்ற வாதத்திற்குள் ஒளிந்துகொண்டு, அன்றைக்கு பொருத்தமாயிருந்தது என்ற நிறுவ முயற்சிக்கிற இவர்கள் உண்மையில் மநுவைவிடவும் ஆபத்தானவர்கள். மநுஸ்மிருதி எந்தகாலத்திற்கும் தேவையற்றது- நிராகரிக்கப்பட வேண்டியது என்பதை தெரிந்துகொள்ள இவர்கள் வேறெவரின் தத்துவ விளக்க நூல்களை படிக்காவிட்டாலும்கூட, திருலோக சீதாராராம் அல்லது இராமாநுஜாசாரியார் மொழிபெயர்ப்பிலான மநுதரும சாஸ்திரத்தையாவது படித்துத் தொலைக்கட்டும் என்று இவ்விடத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. அதன்பிறகாவது, மநுஸ்மிருதி செத்தப்பாம்பல்ல, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கொத்தி சமூகத்தையே நீலம்பாரிக்கச் செய்துகொண்டிருக்கிற நச்சுப்பாம்பு என்ற தெளிவு கிட்டும்.

தவிரவும் மநுவை தூசுதட்டி எடுக்கவேண்டிய அவசியம் ஒன்றும் நமக்கு ஏற்படவில்லை. ஏனென்றால் அது இன்றளவும் தன் கொடியபலத்தோடு இந்திய சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க நடைமுறையில் நூறுநூறு உதாரணங்களைக் காட்ட முடியும். மநுவுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலைவைத்தவர்களைப் பார்த்தோ, மநுஸ்மிருதியை தன் உயிரினும் மேலாய் மதிப்பதாகச் சொன்ன காஞ்சி சங்கரர்களைப் பார்த்தோ ‘ஏனிப்படி தூசு தட்டி எடுக்கிறீர்கள்’ என்று கேட்காதவர்கள் நம்மைப் பார்த்து இப்படி குற்றம்சாட்ட என்ன நியாயமிருக்கிறது? ஒருவேளை அவர்களெல்லாம் அவாள்-ளாய் இருப்பதனால் குற்றம்சாட்ட அஞ்சுகிறீர்களோ என்று நாம் கேட்டால், பார்ப்பனீய எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பாய் குறுகிவிட்டது பார்த்தீர்களா என்று சொற்சிலம்பம் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள்.

இந்த ஆதவன் என்ன சொல்லிவிட்டிருக்கப் போகிறான் என்று முன்முடிவான இளக்காரத்தோடு புத்தகத்தைப் படித்தவர்களையும் நானறிவேன். ‘நீங்கல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு, இங்க வந்து ஏன் கழுத்தறுக்கிறீங்க’ என்று பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்களைப் பற்றி ஒரு ஆசிரியருக்குள்ள அதே இளக்காரத்தின் மறுபதிப்புதான் இவர்களிடமும் இருக்கிறது. இது ஒருவகையான கெட்டித் தட்டிப்போன சாதியப் பார்வைதான். இவர்களைப் பொறுத்தவரை படிப்பது, இலக்கியத்தில் ஆர்வம் கொள்வது, பேட்டி கொடுப்பதெல்லாம் தலித்துகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம். திறந்த மனதோடு நேர்காணலை அணுக இவர்களது முன்முடிவுகள் அனுமதிக்காததால் எனது வார்த்தைகளுக்கு அவர்கள் விரும்பும் பொருளை வருவிக்க பெருமுயற்சி செய்துகொண்டிருக்கின்றனர்.

ஒரு தலித், தன் சொந்தத்துயரை, தன் சமூகத்தின் பாடுகளை சொல்லத் தொடங்கியதுமே அதை சாதியக்குரலாக அடையாளம் காட்டி, தனிமைப்படுத்தத் துணியும் அமைப்புகள்- தலைவர்கள்- தத்துவார்த்த ஆசான்கள், பார்ப்பனர் என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்தாமல் கவனமாக பிராமணர் என்று தங்களது அமைப்புகளை சொல்லப் பழகியிருப்பதன் பின்னே சாதியம் ஒளிந்திருக்கவிவ்லையா என்ற கேள்வியை எப்போதுதான் எழுப்பப் போகிறோம்? ஒரு தலித் தன் அவலத்தை எவ்வளவு உரக்கச் சொல்லலாம் என்பதைக்கூட நாங்கள்தான் வரையறுத்து இறுதிப்படுத்துவோம் என்று தலித்தல்லாதவர்கள் கூறுவார்களேயானால் அதையும் மேற்சாதி திமிர்த்தனம் என்று குற்றம் சாட்டுவதில் என்ன தவறிருக்க முடியும்? ஒரு தலித்தின் ஓலத்தைக் கேட்டால் கிழிந்து போய்விடுமளவுக்கு மென்மையான காதுச்சவ்வு கொண்டவர்கள் எங்காவது ஓரமாக உட்கார்ந்து ‘குழலூதும் கண்ணனுக்கு…’ என்று எதையாவது கேட்டுத் தொலைக்குமாறு வேண்டப்படுகிறார்கள். எல்லாம் கரெக்ட்தானப்பா, இருந்தாலும் கொஞ்சம் அடக்கி வாசி என்ற குரலுக்குள்ளும் இதே வஞ்சகம்தான் மறைந்திருக்கிறது.

3.

சாதியழிப்புப் போராட்டத்தை வர்க்கப் போராட்டத்திற்கு கீழ்ப்படுத்துவதாயும், சாதியழிப்புப் போராட்டத்திற்கு கூடுதல் அழுத்தம் தந்து வர்க்கப்போராட்டத்தின் கூர்முனையை மழுங்கச் செய்வதாயும் ‘ஒருபொருட் குறித்த இருவித குற்றச்சாட்டுகள்’ வந்துகொண்டிருக்கின்றன. அதாவது, இரண்டும் வெவ்வேறானவை என்ற பிசகான முடிவிலிருந்து இந்த கருத்துகள் வெளிப்படுகின்றன. இந்திய சமூக மாற்றத்திற்கான புரட்சியின் உள்ளடக்கம் வர்ண, வர்க்க ஒடுக்குமுறைகளை எதிர்த்தே நடைபெறும் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள இவர்களுக்குள்ள மனத்தடையே இவ்வித குற்றச்சாட்டுகளின் அடிப்படை.

நீ எங்கள் பக்கம் இல்லையென்றால், பின்லேடன் பக்கம்தான் என்கிற ஜார்ஜ் புஷ்சைப் போல இங்கும் சிலர் கேலிக்கூத்தான ஒரு வகைப்பிரிப்பை செய்து கொண்டுள்ளனர். ஒருவர் பெரியாரிஸ்டாகவோ அம்பேத்கரிஸ்டாகவோ மார்க்சிஸ்டாகவோ தான் இருக்கமுடியுமே தவிர மூவரது சிந்தனைகளையும் உள்வாங்கிச் செயல்படுகிறவராக இருக்கவே முடியாது என்றும் அவ்வாறு செயல்படத் துணிகிறவர்கள் ‘அதிலொரு கால் இதிலொரு கால் வைத்திருக்கும் ரெண்டாங்கெட்டான்கள்’ என்றும் இவர்கள் அறிவிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே இம்மூவரது சிந்தனைகளுக்குள்ளும் இருக்கும் பொதுமைப்பண்புகளை உள்வாங்கிச் செயல்படுவது தத்தமது தனித்தன்மையை இழக்கச்செய்துவிடும் என்ற பதற்றத்திலிருந்து அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும் எதிரெதிராய் களமிறக்கும் இந்த வித்தைக்காரர்கள் மைதானம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். ஆட்டத்தை இனிமேல்தான் நாம் கவனமாய் தொடர வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்ககாலம் தொட்டே மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்பதை கண்டடைவதற்கான தேடல் தொடங்கிவிட்டதை பல்வேறு ஆவணங்கள் வழியே உறுதிப்படுத்த முடியும். திட்டவட்டமானச் சூழலில் திட்டவட்டமான பிரயோகம் என்ற உட்செரிப்பும் இளக்கமும் விரிந்து கொடுக்கும் வலுவும் கொண்ட மார்க்சீயம் என்ற அறிவியலை, திடீர் ரசப்பொடிக்கான செயல்முறைக் குறிப்புபோல புரிந்துகொண்டுள்ளக்கூடாது என்ற தவிப்பிலிருந்து தொடங்கிய இத்தேடலை பின்நவீனத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புபோல சிலர் கொண்டாடுவதும், ஆகவே பின்நவீனத்துவ எதிர்ப்புப்போராளிகள் சிலர் எதிர் நடவடிக்கைகளில் இறங்கி மார்க்சீயத்தின் தூயவடிவத்தை பாதுகாப்பதான பெரும் பொறுப்பு தன்தோளில் சுமத்தப்பட்டிருப்பதான கற்பிதத்தில் அபத்தமாய் கட்டுரை எழுதுவதுமாகிய கேலிக்கூத்துகள் ஓய்ந்தபாடில்லை. மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்பதை மார்க்சீயத்தை குறைத்து மதிப்பிடுவதாய்- வீரியத்தைக் குறைப்பதாய்- திரிபாய்- பார்க்கிற மனவியாதியிலிருந்துதான் சாதியடுக்குமுறை பற்றிய விவாதங்களை வர்க்கப் போராட்டத்திற்கு எதிரானவைகளாக கண்டு பதறி ‘தத்துவப் போராட்டத்திற்கு’ களமிறங்குகின்றனர் சிலர். இதன் மறுதலையாக, மார்க்சீயம் போதாமைகளோடு இருப்பதாக கற்பிதம் செய்துகொண்டு, அந்த போதாமையை இட்டுநிரப்பும் இடைப்பொருட்களாக தலித்தியம், பெண்ணியம், சூழலியம் ஆகியவற்றை பரிந்துரைக்கும் போக்கும் நீடிக்கிறது.

ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலையைப் பற்றி பேசுவது, ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலையைப் பற்றியதாகாது என்ற ‘தனி’ தலித்திய குரலுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் விடுதலை பற்றி பேசுவது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலைக்கு குந்தகமானது என்ற ‘வறண்ட’ பாட்டாளி வர்க்கக் குரலுக்கும் இடையேயான இடைவெளியை, அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும் ஊன்றிப் பயில்வதின் மூலம் கடக்கமுடியும் என்றே நம்புகிறேன். ஊன்றிப் பயில்வது என்பதை அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறேன். அவ்வாறு பயில்வதன் மூலம், தலித் அணிதிரட்சியை வெறும் சாதிய அடையாளமாகவும், மார்க்சீய இயக்கங்களை பொருளாதாரவாதத்திற்குள் சிக்கிக்கொண்டு தத்தளிப்பவையாகவும் குறுக்கிப் பார்ப்பதிலிருந்து விடுபட முடியும். சாதியத்தை எதிர்த்துப் போராடுவதானது, உழைக்கும் மக்கள் ஒரு வர்க்கமாக அணிசேர்வதை மறிக்கிற ஒரு பெருந்தடையை தகர்த்தெறியும் போராட்டம்தான் என்று புரிந்துகொள்கிறபோதுதான் அம்பேத்கரையும் பெரியாரையும் வெற்று சீர்திருத்தவாதிகளாக தகுதியிறக்கம் செய்கிற அல்லது மார்க்சியம் போதாமையுடன் உள்ளது என்று தீர்ப்பளிக்கிற அதிமேதாவிகள் நிஜமேதாவிகளாகி தரையிறங்க முடியும் என்று ஆசீர்வதிக்கிறோம். (ஆமாய்யா, இப்படி சொல்றது அகங்காரம் தான். இப்ப என்னான்ற…?)

மார்க்சியம் அம்பேத்கரியம் பெரியாரியம் ஆகியவற்றை உள்வாங்கிக் கொள்வது என்பதை, எல்லாம் கலந்து நூறு கிராம் மிக்சர் வாங்கும் ஜனகராஜ் காமெடியாக குறுக்கியும் குதர்க்கமாயும் புரிந்துகொள்ளத் தேவையில்லை. உழைக்கும் அடித்தட்டு மக்கள் மீதான சகல சுரண்டல்களையும் எதிர்ப்பதிலும் முடிவுக்கு கொண்டு வருவதிலும் அக்கறை கொண்ட தத்துவங்கள் என்ற அடிப்படையில் அவற்றுக்கிடையேயுள்ள பொதுப்பண்புகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது புரிதலேயன்றி, மூன்றும் ஒன்றுதான் என்பதல்ல. அவற்றுக்குள் இருக்கும் வேறுபாடுகள் பகைமுரண்கள் அல்ல என்றும் இவ்விடத்தில் சொல்ல வேண்டியுள்ளது.

4.

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் இரண்டாவது தலித் மாநாட்டில் பங்கேற்க நான் இலண்டன் சென்றிருந்தததையட்டி இந்நூலின் வெளியீட்டு விழா அங்கே நடந்தது. மாநாட்டிலும் விழாவிலும் பங்கேற்றவர்களில் அநேகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளைப் புகலிடமாகக் கொண்டவர்கள். இலங்கைச் சமூகத்திலிருந்து வெளியேறி அந்தந்த நாடுகளில் குடியுரிமையும்கூட பெற்றிருக்கிறார்கள். உற்றார் உறவினர் ஆஸ்திபாஸ்தி அத்தனையையும் விட்டுவிட்டு வர முடிந்த இலங்கைத் தமிழர்களால் தத்தமது சாதியை விட்டுத் தொலைக்க முடியவில்லை என்ற துயரத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். புகலிடத்திற்கேற்றாற்போல சாதிய புறக்கணிப்புகளும் தீண்டாமையும் ஒடுக்குமுறையும் புதுவடிவம் பெற்று நீடித்திருப்பதை அவர்கள் அம்பலப்படுத்தினர். இலங்கையின் சமூக அமைப்பிலிருந்து முற்றாக வேறுபட்டு முதலாளித்துவ அமைப்பின் உச்சத்தை எட்டியிருக்கிற ஐரோப்பிய சமூகத்தில் சாதியம் நீடிப்பதற்கான தேவை என்ன வந்தது? அதேநேரத்தில் இந்திய வம்சாவளியினராய் இருந்தபோதிலும் இந்தியச் சமூகத்துடனான உறவுகளை முறித்துக் கொண்ட பிஜியர்களிடம் சாதி முனைப்பாக இல்லையென்றும் அவர்களிடம் சாதிப்பெயர் குடும்பப்பெயராக மட்டுமே தங்கியுள்ளதென்றும் ஆய்வாளர்கள் சொல்வதையும் இவ்விடத்தில் சேர்த்தே பரிசீலிக்க வேண்டியுள்ளது. பிஜியின் நிலவுறவுகளில் பேரளவிலான மாற்றங்கள் எதுவும் ரகசியமாக நடந்துவிடாத நிலையில் அங்கு சாதி எப்படி மங்கியது என்ற படிப்பினை நமக்குத் தேவையாகிறது.

அடிக்கட்டுமானமா மேல்கட்டுமானமா என்று பிரித்துணர முடியாதபடி சவ்வூடிக் கிடக்கிற சாதியமைப்பை, மேல்கட்டுமானம்தான் என்று திட்டவட்டமாக வரையறுத்துக்கொண்டு, ஆகவே அடிக்கட்டுமானம் மாறிவிட்டால் மேல்கட்டுமானம் தானேயழிந்துவிடும் என்று குடுகுடுப்பையடிக்கிற யாந்திரீக கோடாங்கிகள், வெண்டைக்காயைத் தூக்கி விளக்கெண்ணெய்யில் போட்டு வதக்கியதைப்போல ஏதேனுமொரு வியாக்கியானத்தை இதற்கும் தரக்கூடும். நமது அக்கறை அதுபற்றியதல்ல. அடிக்கட்டுமானம் மாறியதுமே, முந்தைய சமூக அமைப்பின் மேற்கட்டுமானம் தகர்ந்துவிடாது நீடிக்கவே செய்யும் என்றும் அதை எதிர்த்தப் போராட்டத்தையும் தொடர வேண்டியிருக்கும் என்றும் மார்க்சீய மூலவர்கள் சொன்னதை நாம் மறந்துவிடக் கூடாது என்பதே. சொடக்கென்று சுவிட்ச் போட்டு, அதை மாற்றினால் இதுவும் மாறிவிடும் என்று சமூக மாற்றத்தை எளிமைப்படுத்திப் பார்க்கும் போக்குகளை நிராகரிப்பதில்தான் புரட்சிகர இயக்கத்தின் இயங்காற்றல் தங்கியிருக்கிறது என்ற உண்மையைத்தான் நாம் பின்தொடர வேண்டியிருக்கிறது.

சாதியானது அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா என்று துல்லியமாக பிரித்தறிவதில் நீடிக்கும் தத்துவார்த்தக் குழப்பத்தால்தான் புரட்சியை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதைப் போலவும், அதை சரியாக பிரித்தறிந்துவிட்டால் மறுகணமே புரட்சியை நடத்தி முடித்துவிடலாம் என்பது போலவுமான பாவனைகளின் பேரில் இங்கு சிலர் விவாதித்துக் கொண்டுள்ளனர். இவர்களது விவாத அறைக்கு வெளியே முடிவைத் தெரிந்து கொள்வதற்காக சாதியடுக்குமுறையாளர்களும், உழைப்பைச் சுரண்டுகிறவர்களும் விடுமுறை எடுத்துக்கொண்டு பொறுமையோடு காத்திருப்பதைப் போன்ற கற்பிதத்திற்குள் மூழ்கி ‘நாங்கள் முடிவெடுக்கும் வரை எதுவும் நடக்காது என்பது போன்ற இறுமாப்பில் விவாதித்துக் கிடக்கின்றனர். ஐயா அறிவுசால் பெரியவர்களே, உமது அறிவின் ஆழ நீள அகலங்களை அளந்து காட்டும் வித்தைகளை கைவிட்டு எதார்த்தத்துக்கு திரும்புங்கள். நடப்பில், தினசரி வாழ்வில், ஒவ்வொரு கணத்தையும் தீண்டாமை புறக்கணிப்பு ஒடுக்குமுறை அவமானத்தால் குன்றிக் கொண்டிருக்கும் தலித்துகளின் துயரம் கண்டு வெடிக்கிற இதயமும் அந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற வைராக்கியமும் போர்க்குணமும் கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கம், மரணத்தின் வாதையில் எழுகிற ஓலம் எத்தனை டெசிபல் கொண்டது என்று சாவதானமாக விவாதிக்கிற – எதற்கும் பதற்றமடையாத உங்களைப் போன்ற ஆய்வாளப் பெருந்தகைகள் முன்வைக்கும் எல்லா வறட்டுச் சூத்திரங்களையும் நிராகரிக்கிறது.

தலித்துகள் பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அங்கெல்லாம் அவர்களது நிலைமை என்ன? முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பொறுப்புகளுக்கு தலித்துகளால் வர முடிகிறதா? அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் கோருகிற போது, இடஒதுக்கீட்டுக்காக போராடுகிற கட்சிகள்கூட கட்சிக்குள் இடஒதுக்கீடா என்று கலக்கமடைவதைப் பார்க்கமுடிகிறது. தலித்துகளை கவனக்கமுடிகிறது. தலித்துகளை கவனமாய் தவிர்த்துவிட்டு பிறசாதிகள் மட்டும் தலைமைப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்வது இடஒதுக்கீடுதானே என்று கேட்டால் அப்போது தலைமைப் பண்புகள் பற்றியும் தலைவர்களாக வளர்ந்தெழுவது பற்றியும் இயக்கத்திற்கான உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் பற்றியும் வாதிடப்படுகிறது. தானே தக்கிமுக்கி தன்னை வளர்த்துக் கொள்கிற யாரும் தலைமைப் பொறுப்புக்கு உயரலாம் என்று வியாக்கியானம் சொல்வார்கள். ஒபாமாவைப் பார்… ஒரு கறுப்பனாய் பிறந்து அமெரிக்க அதிபராகவில்லையா என்பார்கள். செருப்பு தைக்கும் தொழிலாளியின் பிள்ளையான ஸ்டாலின் ரஷ்யாவை ஆளவில்லையா என்பார்கள். இந்தியாவை செருப்பு வேண்டுமானால் ஆளமுடியுமே தவிர செருப்பு தைக்கிறவன் ஆளமுடியாதபடி சாதி தடுக்கிறது என்பதை மறைக்கிறார்கள். இது நெடுங்காலமாய் கேட்டு புளித்துப்போன தகுதி- திறமை என்கிற கட்டுக்கதையின் இன்னொரு வடிவம்தான்.

தவிரவும் இந்த உழைப்பு அர்ப்பணிப்பு தியாகம் என்பதற்கான அர்த்தங்கள் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. மக்களுக்காகப் போராடுவதோ அதற்காக சிறைசெல்வதோ அரசின் அல்லது ஆதிக்கசக்திகளின் அடக்குமுறைகளை தாங்கிக்கொள்வதோ இந்த முதலாளித்துவ கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. எனவே இவற்றுக்கு தலைவர்கள் தேவையில்லை. கட்சியை நடத்துகிற நிர்வாகிகள் அல்லது மேலாளர்கள் போதும். ஏதேனும் மாநாடு பொதுக்கூட்டம் போட்டு அடுத்தத் தேர்தல்வரை கட்சியின் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் போதுமானது. இந்த மாநாடு அல்லது கூட்டத்தில் பங்கேற்பதுதான் தலைமையின் பணி என்றால் அதை தலித்துகளும் செவ்வனே நிறைவேற்றுவார்கள்தானே? ரயிலில் முன்பதிவு கிடைக்காமல் பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்ததும், பயணத்தில் சரியாக தூங்க முடியாததும்கூட தலைவர்களின் தியாகமாக கற்பிதம் செய்யப்படுமானால் அந்த தியாகத்தை தலித்துகளாலும் செய்யமுடியும்தானே?. பிரச்னைகளுக்கு தீர்வை எட்டும் நோக்கத்தை கொண்டிராமல் வெறுமனே எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு போராட்டத்தில் கலந்துகொள்வதுதான் உழைப்பு அர்ப்பணிப்பு என்றால் அதை தலித்துகளும் செய்வதில் தடையென்ன இருக்கிறது? அப்படியிருந்தும் இந்தக் கட்சிகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளில் தவிர தலித்துகளுக்கு வேறெங்கும் பொறுப்புகள் தரப்படாததில் சாதி ஒளிந்திருக்கிறதா அல்லது ஏன் தரப்படவில்லை என்று கேள்வியெழுப்புவதில் சாதி வெளிப்படுகிறதா?

தரையிலே நீச்சலடித்துப் பழகச் சொல்லி தண்ணிக்குள் கடைசிவரை இறக்கிவிடாத – அல்லது இறக்கிவிட்டாலும் மூச்சுத்திணறி சாக வைக்கிற முதலாளித்துவ கட்சிகளின் தந்திரத்தைப் புரிந்துகொள்கிற தலித்துகள் இடதுசாரி இயக்கங்களில் அணிதிரளத் தொடங்குகின்றனர். உழைக்கும் மக்களை அணிதிரட்டி வர்க்க போதமூட்டி நிலவும் சுரண்டல் அமைப்பை என்றென்றைக்கும் இல்லாததாய் ஒழித்துக்கட்டி புரட்சிகரமாய் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட மார்க்சீய இயக்கங்கள் மற்றெவரைக் காட்டிலும் தலித்துகளுக்கே மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. எனவேதான் தலித்துகளுக்கென்று தலித்துகளாலேயே நடத்தப்படும் இயக்கங்களில் இருப்பதை விடவும் இடதுசாரி இயக்கங்களில் தலித்துகள் கணிசமாக அணிதிரள்கின்றனர். தலித்துகள் கணிசமாக அணிதிரண்டிருக்கிறார்கள் என்பதற்காக அல்லாது, பன்முகச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒரு சமூகத்திரள் சுயமரியாதையோடு வாழ்வதற்கான முன்தேவைகளை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் இடதுசாரி இயக்கங்களின் உடனடி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களிலும் செயல்பாட்டிலும் சாதியழிப்பு முன்னுரிமைப் பெற்று வருகிறது. இடதுசாரி இயக்கங்களை வெறும் பொருளாதாரவாதத்திற்குள் அமிழ்த்திவைத்து திணறடிக்க விரும்புகிறவர்கள், ‘நூறுசத புரட்சிக்கு’ குறைவான எல்லா நடவடிக்கைகளையும் திரிபாக தப்பர்த்தம் கொண்டு தலித்துகளுக்கான இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களால் அமைதியற்றுப் போயுள்ளனர். அவர்கள் மேலும் அமைதியிழந்து நிம்மதி கெட்டு சீரழிவதை கைவிட்டு, இடதுசாரி இயக்கங்களின் தத்துவம் மற்றும் செயல்பாடுகளை பின்தொடந்து வரும் நல்லறிவை வழங்குமாறு எல்லாம் வல்ல மார்க்சிடம் பிரார்த்திப்போமாக.

சென்னை வெளியீட்டுவிழாவில் பகத்சிங் குறித்து புனிதபாண்டியன் தெரிவித்தக் கருத்துக்கு பதில் சொல்லாதது, பாரதியார் குறித்து இறுதித் தீர்ப்பை வாசிக்காதது ஆகிய மகாகுற்றங்களுக்காக தங்களது குடோனிலிருக்கும் ‘ஒரிஜினல் புரட்சியாளர்’ சான்றிதழை மார்க்சிஸ்டுகளுக்கு வழங்கமுடியாது என்று அறிவித்துள்ள கெட்டிச்சிவப்பர்களுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. தோழர் புனிதபாண்டியன் ஒப்பிட்டுத்தான் பேசினாரேயன்றி பகத்சிங்கை இழிவுபடுத்துவது அவரது நோக்கமாக இருக்குமென்று நான் கருதவில்லை. அவர் பொறுப்பில் வெளியாகும் தலித்முரசின் 2008 மார்ச் இதழ் பகத்சிங்கின் நினைவுநாளை உரியமுறையில் கவனப்படுத்தியிருப்பது இதற்கொரு சான்று.

பாப்லோ நெரூடா என்கிற மகத்தான கவிஞனின் படைப்பாளுமை, ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு, சோசலிசத்திற்கு ஆதரவான அரசியல் விருப்புறுதி ஆகியவற்றை புறந்தள்ளி, அவரே தன் கைப்பட எழுதிய நினைவுக்குறிப்புகளிலிருந்து சிலவரிகளை உருவியெடுத்து அவரை காமாந்தகனாக சித்தரித்து கட்டுரை எழுதுவதில் ஒழுக்கவாதிகள் சிலர் முனைப்பு கொண்டுள்ளனர். பெரியாரின் பன்முகப் பங்களிப்புகளை நிராகரித்து- அவரே பகிரங்கமாக வெளிப்படுத்திய தகவல்களிலிருந்து சில வரிகளை உருவியெடுத்து காவிரிக்கரை மைனராக சிறுமைப்படுத்துவதில் சில பத்திரிகைகள் ஆர்வம் கொண்டுள்ளன. வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த ஆளுமைகளும் அவர்களது சிந்தனைகளும் சமூகத்திலிருந்து முற்றிலுமாக வெறுத்தொதுக்கப்பட வேண்டியவை என்கிற ரீதியில் முன்வைக்கப்படும் இம்மதிப்பீடுகள் உள்நோக்கம் கொண்டவைதான். ஆகவே அவ்வாளுமைகளின் செயல்பாட்டின் மீதான விமர்சனத்தையும், தனிமனிதச் சாடலையும் பிரித்தறிய வேண்டிய நிர்ப்பந்தம் நம்முன் நிற்கிறது. இப்புரிதலோடுதான் பாரதியையும் நான் அணுகுகிறேன்.

பாரதியின் கவிதைகள்மீது எனக்கு மயக்கமெதுவும் இல்லையென்றாலும் கூரிய விமர்சனமும் இல்லாமல்தான் இருந்தேன். திரும்பிய பக்கமெல்லாம் தேசியகவி, மகாகவி என்றெல்லாம் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் எனக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியிருக்கக்கூடும். காலனிய ஆட்சி, இந்திய தேசியம், விடுதலைப் போராட்டம் ஆகியவை குறித்து அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் முன்வைத்த மாற்று வரலாற்றினூடே பார்க்கிறபோது, இந்துத்துவத்தின் மூலவர்களில் ஒருவரான திலகருடன் பாரதி நட்பு கொண்டிருந்ததும், பசுவதை போன்றவற்றில் அவர் வெளிப்படுத்திய பார்ப்பனீய புனிதக்கோட்பாட்டையும், இன்னும் அகவயமான பார்ப்பனீய சார்பு மனநிலையையும் இயல்பானதாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இதையே ஞானத்தின் உச்சமென்று அறிவித்துக் கொள்வதால் ஆகப்போவது எதுவுமில்லை என்பதால் அடுத்த வேலைக்கு நகர்கிறேன்.

5.

-இப்படி நான் ஒரு மநுவிரோதியை முன்வைத்து விவாதிப்பதற்கான தளங்கள் விரிந்து கொண்டேயிருக்கிற நிலையில் இரண்டாவது பதிப்பு வெளியாகிறது. ஓர் ஒற்றைச்சொல்லில் ஏன் ஒரேயொரு எழுத்தில்கூட தன்னை வெளிப்படுத்தும் சாதுர்யம் கொண்டதே அதிகாரம். மொழியை கவனமாக கையாள வேண்டும் என்ற பிரக்ஞை நிலையில்தான் நம்முடைய அரசியல் நிலைபாட்டில் வழுவாது நிற்க முடிகிறது. ஆனால் பிரக்ஞைநிலையில் அல்லாமல் தன்னியல்பாக உள்ளுணர்வு நிலையிலேயே சுயஅதிகாரத்தை மறுப்பதற்கான தொடர்போராட்டத்தை எனக்குள் நடத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் ஒரு மநுவிரோதன் என்ற தலைப்பில் உள்ள ஆண் என்கிற பால்நிலை அதிகாரத்தை நான் மிக தாமதமாகவே உணர்ந்தேன். எனவே இனி நான் ஒரு மநுவிரோதி என்றே இந்நூல் அறியப்படட்டும்.

தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பின்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துக்கள் எதன் மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன். இப்போது உங்கள் முறை.

அன்புடன்,
ஆதவன் தீட்சண்யா
13.08.08

இலண்டனில் வெளியீட்டு விழாவை நடத்திட்ட ராகவன், தேசம்நெட் ஜெயபாலன், ரங்கன், சேனன், ஷோபா சக்தி, வேலு, நிர்மலா, காண்டீபன், சபேசன், ராஜேஸ்வரி பாலா, சபாபதி, சபா நாவலன் உள்ளிட்ட தோழர்களை இந்த இரண்டாம் பதிப்பு வெளியாகும் தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் பங்கேற்று தோழர்கள் பிரளயன், பி.சம்பத், வ.கீதா, புனிதபாண்டியன், கொளத்தூர் மணி, ச.தமிழ்ச்செல்வன், மரு.ஜெயராமன், மினர்வா ஆகியோர் தெரிவித்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் எழுதவும் இயங்குவுமான ஆற்றலைத் தருமென நம்புகிறேன். புதுக்கோட்டை, புதுச்சேரி, சேலம், தஞ்சையில் நடைபெற்ற விமர்சன அரங்குகளிலும் இந்நூல் குறித்து மதிப்புமிக்க விமர்சனங்களை பலரும் முன்வைத்துள்ளனர். நான் பெரிதும் மதிக்கும் தோழர் எஸ்.வி.ஆர், பேரா.ஆ.சிவசுப்பிரமணியம், ந.முத்துமோகன் போன்ற தோழர்கள் பலரும் தனிப்பட்ட முறையில் நூல் குறித்த தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவற்றின் வெளிச்சத்தில் எனது போதாமைகளை உணர்ந்து கொள்ள முடிந்தது. திறப்படுத்திக் கொள்ளும் முயற்சி தொடர்கிறது.

விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்ட விடுதலை, தீக்கதிர், மார்க்சிஸ்ட், புத்தகம் பேசுது இதழ்களுக்கும், இந்நூல் குறித்து இணையதளங்களில் விவாதித்து வரும் நண்பர்களுக்கும் நன்றி. பல்வேறு மட்டங்களிலும் இந்நூல் வாசிக்கப்படுவதற்கான தூண்டுதலாய் இருந்த தோழர். என்.குணசேகரனின் முயற்சி இங்கே தனித்து நினைவுகூரப்படுகிறது. இரண்டாம் பதிப்புக்கு செல்ல வேண்டும் என்று என்னையும் பூபாளம் புத்தகப் பண்ணையினரையும் உந்தித் தள்ளிய தோழர்.சிராஜ், மோகனசுந்தரம், கீற்று.காம் ரமேஷ் ஆகியோரின் கரங்களை மெதுவே பற்றிக் கொள்கிறேன்.

எனக்கு எல்லாவகையிலும் திறப்பாயிருந்த தோழர்.து.சண்முகம் அவர்கள் இந்த புத்தகம் அச்சாகி வந்த அதேநாளில் மறைந்துவிட்ட பெருந்துயரம் என் எழுத்தெங்கும் கசிந்து நிற்கும்

இந்தா பிடியுங்கள் இந்தியா டுடே (கழிப்பறையில் தண்ணீரை மிச்சம் பிடிக்க)


அஞ்சலி என்ற பெயரில் ‘இந்தியா டுடே’ கீழ்க்கண்ட கட்டுரையைப் பிரசுரித்திருக்கிறது

அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008

மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.

அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.

அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதிபூண்டது ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைதான்; வெகுஜனங்களை மயக்குவதற்கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்சென்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.

அவர் பதவியிலிருந்த 11 மாதங்களில் அவருடைய திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். எனினும் மண்டல் கமிஷன் இந்திய அரசியலின் கட்டமைப்பையே மாற்றி அமைத்தது. ஜாதி செயல் திட்டத்துடன் பல அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பிறந்து வந்தார்கள். அரசியல்வாதியாக வி.பி.சிங் கொள்கைகளின்படி வாழ்ந்தார். அந்தக் கொள்கைகளின் பின்னணியாக என்ன இருந்தது என்பது என்பது வேறு கதை.

அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அவரின் இறுதிக்காலத்தில் மதசார்பின்மையின் இஷ்டதெய்வமாகவும் கண்ணுக்கு தெரியாத ஆலோசகராகவும் அவர் இருந்தார். சமூகநீதி அரசியல் என்ற பெயரில் இந்தியாவை உலுக்கிய மனிதர் இறுதியில் நிஜ அரசியலுடன் தொடர்பில்லாமல், கவிதை, ஓவியங்களால் ஆறுதல்பட்டவராக இருந்தார்.

-எஸ். பி

இந்தியா டுடே இதழின் உள்ளடக்கத்திற்கு எதிர்வினையாக அதைக் கிழித்து மலம் துடைத்து அதன் பொறுப்பாசிரியருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா? நல்லமாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனுசனுக்கு ஒரு சொல். ஆனால் இந்தியா டுடே மாடுமல்ல மனுசனுமல்ல திருந்துவதற்கு. எனவே அது முன்னிலும் திசைகெட்டு துடைக்கவும் அருகதையற்றதாய் வந்துகொண்டிருக்கிறது.

இவ்விதழின் கட்டுரையாளர்கள் காலையில் டீ காபிக்குப் பதிலாக புஷ்ஷின் மூத்திரத்தைக் குடித்துவிட்டு எழுத உட்காருவார்கள் போலும், இந்தியாவில் நடக்கும் எதுவுமே அவர்களுக்கு உவப்பாயிருப்பதில்லை. எனவே எப்போதும் அமெரிக்காவப் பாரு, அவுத்துப்போட்டு ஆடு என்கிற ரீதியில் எதையாச்சும் எழுதிக்குமிப்பார்கள். முதலாளித்துவ லாபவெறிக்குத் தடையாக இருக்கிற சட்டதிட்டங்களை உடைத்து நொறுக்கவேண்டும், அரசியல் பொருளாதாரத் தளங்களில் நிலவும் கட்டுப்பெட்டித் தனங்களை மீறிப் பாயவேண்டும் என்பார்கள். அதற்கிசைவான நுகர்வுவெறியை உருவாக்க பக்கம்பக்கமாக எழுதுவார்கள். அதேநேரத்தில் பண்பாட்டுத்தளத்தில் நிலவும் கட்டுப்பாடுகளாலும் பழமைவாதத்தாலும் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் சமூகத்தை விடுவிக்கும் முயற்சிகள் ஏதேனும் நடப்பதுபோல் தெரிந்தால் இந்தியாவின் மரபுக்கும் பாரம்பரியத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதாக அலறிக் கொதிப்பார்கள். ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மனங்களைத் தகவமைக்கவும் சாதியத்தின் பிடியிலேயே சமூகம் தொடர்ந்து கட்டுப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் தேவையான தலைப்புகளில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகளை நடத்தி தமது கைச்சரக்குகளை அவிழ்த்துவிடுவார்கள்.

பத்திரிகைச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு வெளியாகும் இந்தியா டுடேயின் எழுத்துக்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தொடர்ந்து விஷம் கக்குவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்துத்துவ வெறியர்கள் நிகழ்த்தும் கருத்தியல் வன்முறையின் கெடுவிளைவுகளை இவ்விதழின் எந்தவொரு வரியிலிருந்தும் நம்மால் உணரமுடியும். இங்குள்ள சிறுபான்மையினர் அனைவரையும் தேசவிரோதிகளாக- தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்துத்துவ நிலைபாட்டை தன் மொழிநடையில் வெளியிட்டு இந்தியா டுடே, இந்துத்துவ டுடேவாக மாறுவது தற்செயலானதல்ல.

என்னதான் ஒருவர் தேசம், மக்கள் ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி, கட்டற்ற சுதந்திரம் என்ற பொதுப்பதங்களில் பதுங்கித் திரிந்தாலும் இடஒதுக்கீடு குறித்துப் பேசும்போது அவரது எல்லா வேஷங்களும் கலைந்து அப்பட்டமான பார்ப்பனராக மாறிவிடுகிறார் என்பது இந்தியா டுடே பத்திரிகைக்கும் பொருந்தும். இடஒதுக்கீடு பற்றி எழுதும் போதெல்லாம் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிடுவதற்கும் இவங்கப்பன் வூட்டு சொத்தில் பங்கு கேட்க வந்ததைப்போல பதறுவதற்கும் இது துளிகூட வெட்கப்பட்டதில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் தமது விஷமத்தனமான கருத்துகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக எவ்வளவு அவதூறுகள் முன்வைக்கப்பட்டாலும் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்களும் பயனாளிகளும் முன்வரமாட்டார்கள் என்ற தைரியத்திலேயே இந்தியா டுடே இவ்வாறு எழுதுகிறது.

( இந்துத்துவ/ பார்ப்பன சங்கத்தின் செய்திமடல்போல வெளியாகும் இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகள் அதன் நேரடிப் பயனாளிகளான குறிப்பிட்ட அந்த சாதியினருக்குள் மட்டுமே புழங்கித் தொலைப்பதில்லை. தமக்கு எதிரான துவேஷங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தினாலும் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்களும் இவற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு கூருணர்வற்று மொன்னையாகக் கிடக்கிறார்கள் என்ற பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டே கடைவிரிக்கப் படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தையும் கொழுப்புச் சுதந்திரத்தையும் ஒன்றெனக் குழப்பி நடத்துகிற இந்த செய்தி வியாபாரத்தில் கைவைக்கிற முடிவை தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் மேற்கொள்வதும்கூட இந்தியா டுடே போன்றவற்றின் கொட்டத்தை அடக்கும் வழிகளில் ஒன்றென வலியுறுத்த வேண்டியுள்ளது. எவ்வளவுதான் எதிர்ப்புக் கருத்தை வெளியிட்டாலும் ஒரு பத்திரிகையைப் புறக்கணிப்பது எப்படி சரியாகும் என்று குழப்பமடைகிற பெருந்தன்மைக்காரர்கள், குறைந்தபட்சம் அவற்றில் வரும் விஷமங்களுக்கு எதிர்வினை புரியவும் முன்வருவதில்லை. )

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் அறிக்கையை அமல்படுத்தியதற்காக மறைந்த பிரதமர் வி.பி.சிங் மீது பார்ப்பனக்கூட்டம் இன்றளவும் பகையுணர்வு கொண்டிருக்கிறது என்பதைத்தான் அவருக்கான அஞ்சலிக்குறிப்பில் இந்தியா டுடே வெளிப்படுத்தியுள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தை சீரழித்தவர் என்றும் சமூக அடுக்குமுறையைக் குலைத்தவர் என்றும் அது வி.பி.சிங்கை வசைபாடியிருக்கிறது. இடஒதுக்கீட்டால் எதுவும் நடக்கவில்லை என்று சிலர் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு திரிந்தாலும், இந்தியா டுடேவுக்குத் தெரிந்திருக்கிறது- தமது எந்த நரம்பை அறுத்தெடுத்திருக்கிறது இடஒதுக்கீடு என்று.

மும்பை ஓட்டல்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நாடு திணறிக்கொண்டிருந்தபோது வி.பி.சிங் மரணமடைந்ததால், அவரது மரணத்தை ஊடகங்களால் பொருட்படுத்தவியலாமல் போய்விட்டதாக ஒரு அங்கலாய்ப்பு இருக்கிறது. தப்பு நண்பர்களே தப்பு. யாதொரு பிரச்னையும் இல்லாத காலத்தில் வி.பி.சிங் இறந்திருந்தாலும்கூட இதேயளவில்தான் ஊடகங்கள் பேசியிருக்கும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஊடகங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒற்றைச்சாதியின் மனநிலையில் வி.பி.சிங் திட்டவட்டமான எதிரியாகவே பதித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். எனவே நடுநிலை என்கிற ஜிகினாப்பூச்சுகளை உதிர்த்துவிட்டு அப்பட்டமாக விரோத குரோதங்களை வெளியிட்டு வி.பி.சிங்கின் மரணத்தை அவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. தலித்துகளைத் திரட்டி பார்ப்பன மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடிய அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளுக்கும், தனக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு பிற்படுத்தப்பட்டவர்களை மேலெடுக்கத் துணிந்த வி.பி.சிங்கின் நினைவுநாளுக்கும் உரிய முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ள உதவியமைக்காக இந்த ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு ரகசியமாய் நன்றி சொல்லவும்கூடும்.

எனவே, வி.பி.சிங்கின் மரணம்கூட இந்தியா டுடே போன்ற பத்திரிகைக்கு நிம்மதியைத் தராமல் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால்தான் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் தன்னைத்தானே கொளுத்திக்கொண்ட ராஜீவ் கோஸ்வாமி என்கிற சாதிக் கொழுப்பேறியவனின் உடலில் படர்ந்த தீயின் எச்சமே, 2008 நவம்பர் 29 அன்று கங்கைக்கரையில் வி.பி.சிங்கின் சிதையை எரித்ததாக எழுதி ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றிருக்கிறது அது. வி.பி.சிங்குக்கு கொள்ளிவைத்தான் என்றால், ராஜீவ் கோஸ்வாமி அவருக்குப் பிறந்தவனா என்றெல்லாம் கேட்டு கொச்சைப்படுத்த நாம் விரும்பவிலை. ஆனால் எவ்வளவு ஆங்காரமிருந்தால் இப்படி எழுதுவதற்கு இ.டு துணியும் என்பதுதான் இங்கு கண்டனத்துக்குரியது.

ராஜீவ் கோஸ்வாமி எதற்காக தன்னைத்தானே கொளுத்திக்கொண்டான்? அவனும் அவன் பரம்பரையும் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்ட அவமானம் தாங்காமலா? அல்லது அதிகாலையில் எழுந்து ஊரான் பேண்டதையும் மோண்டதையும் அள்ளிச் சுமக்க வேண்டியிருக்கிறதே என்ற அருவருப்பினாலா? அழுக்குத் துணியை வெளுக்கணுமே அல்லது அக்குளிலும் அடியிலும் சவரம் செய்து தொலைக்கணுமே என்ற உளைச்சலிலா? காலத்துக்கும் இப்படி சேற்றில் உழன்று மாய வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பிலா…? அவன் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் யாருடைய பிறப்புறுப்பிலாவது தீப்பந்தம் சொருகப்பட்டிருக்கிறதா? இத்தனை வகையான கொடுமைகளுக்கும் ஆளாகிற நாங்களே சகித்துக் கொண்டு உயிரோடிருக்கும்போது, தீவைத்துக்கொண்டு சாகுமளவுக்கு உனக்கென்னடாப்பா குறை வச்சோம்…. இந்த நாட்டோட நிலம் நீச்சு, ஆஸ்தி பாஸ்தி, கோயில் குளம் எல்லாத்தையும் கொடுத்தோம். எங்க ஊரு ராஜாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ராணியை கன்னி கழிக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தோம். நாலு குதிரையோடும் நாலு வேதசுலோகத்தோடும் வந்த உங்களுக்கு இவ்வளவையும் கொடுத்தப்புறமும் உனக்கு என்னடாப்பா மனக்குறை… ஒருவேளை உங்க தாயாதிகளும் பாட்டன்மார்களும் சொல்கிற அகண்ட பாரதம் உருவாக லேட்டாகும் போல என்று அவசரப்பட்டு கொளுத்திக்கிட்டாயா என்று கேட்பதற்கு அவன் உயிரோடு இல்லை இப்போது.

எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு என்ற மோசடி வாசகத்தை ஊரெல்லாம் ஸ்டிக்கர் போட்டு ஒட்டிவைத்துவிட்டு விதி, வினைப்பயன், யாகம், பூசை, புனஸ்காரம் என்பதன் பெயரால் தன் சாதி மட்டுமே சுகித்துவந்த இந்த நாட்டின் வளங்களிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்டு தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் வருகிறார்கள் என்றதுமே பதறிப்போய் கொளுத்திக் கொண்ட அவன், இந்தியா டுடேவுக்கு வேண்டுமானால் தியாகியாகத் தெரியலாம். ஆனால் அந்த ராஜீவ் கோஸ்வாமியை மசுருக்கு சமானமாகக்கூட நாங்கள் கருதமுடியாது. ஒரு சூத்திரனோ அவர்ணனோ சுவாசித்து வெளியேற்றியக் காற்றை சுவாசிக்க விரும்பாது மூக்கைப் பிடித்துக்கொண்டு செத்துப் போகிறவனை எப்படி தியாகியாகக் கருதமுடியும்?

மண்டல் அறிக்கை அமலாக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களிடம் தங்களது இடங்களை இழக்கவேண்டி வருமே என்ற பயத்தில் எப்பாடு பட்டேனும் அதைத் தடுத்து நிறுத்த ஆதிக்கசாதியினர் இறக்கிய துருப்புச்சீட்டுகளில் ஒன்றுதான் ராஜீவ் கோஸ்வாமி. பார்ப்பன மேலாதிக்க கருத்தியலை உள்வாங்கி வளர்ந்த அவனது சாவு பொதுநலன் பொருட்டானதல்ல. அவன் தானாக நெருப்பிட்டுக் கொள்ளவில்லை என்றும், கொளுத்தப்பட்டானென்றும் உலவுகிற கதைகூட உண்மையாக இருக்கலாம். தமது சுயநலத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொளுத்துகிற நெடிய வரலாறு இந்நாட்டின் பார்ப்பனர்களுக்கு உண்டு. அதோடு அதற்கான பழியை பிறர்மீது சுமத்திவிடுகிற சாமர்த்தியமும் அவர்களுக்கு எப்போதுமுண்டு.

இந்தியா டுடே சொல்வதுபோல வி.பி.சிங்கை எரித்த நெருப்பு ராஜீவ் கோஸ்வாமியுடையதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மண்ணின் வேளாண்குடிகளது கால்நடைகளை, நந்தனை, வள்ளலாரை, விதவைகளை, கலைஇலக்கியங்களை யாகமென்றும் ஜோதியென்றும் சதியென்றும் அனல்வாதமென்றும் எரித்துப் பொசுக்கினீர்களே அந்த நெருப்பிலும் கருகாது கனன்று கனன்று காலம்தாவி வந்த எங்கள் கோபம்தான் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் மனநெருக்கடிக்குள் ராஜீவ் கோஸ்வாமியை நெட்டித் தள்ளியிருக்கும் என்ற உண்மையை உணர்வதற்கு இந்தியா டுடேவுக்கு திறந்த மனமும் சாதிப்புரையேறாத கண்ணும் தேவை.

ஹோமத்தில் உடைத்துப்போடும் மாங்குச்சியைப்போல முகூர்த்த நேரம் முடிந்ததும் அணைந்துவிடும் என்ற நினைப்பில் இந்துத்வம் கொளுத்திப்போட்டு விசிறி விட்ட நெருப்பு இந்த நாட்டின் நாலாதிசைகளிலும் எமது மகவுகளை பொசுக்கித் தின்றுவிட்டு ரத்தக் கவுச்சியோடு அலைந்து கொண்டிருக்கும்போது ராஜீவ் கோஸ்வாமியின் தற்கொலை மட்டும் இந்தியா டுடேவுக்கு இழப்பாகத் தெரிவதில் நியாயமென்று ஒரு வெங்காயமும் இல்லை- சாதிப்புத்தியைத் தவிர.

மண்டலுக்கு எதிராக மாணவர் போராட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்களும் அவர்களுக்கு அடுத்த நிலையிலிருந்து சில ஆதிக்க சாதியினரும் நடத்திக் கொண்டிருந்த அட்டூழியங்களை கல்விநிலையங்களுக்கும் வெளியே பரப்பும் நோக்கத்தோடு ரதயாத்திரை கிளம்பினார் அத்வானி- ராமனையும் கூட்டிக்கொண்டு. நாடு முழுவதும் கலவரங்கள்…. கொலைகள்… கொள்ளைகள்… பாலியல் வன்கொடுமைகள்…. காமிக்ஸ் கதைகளில் வருகிற அ.கொ.தீ.கவிடம் மாட்டிக் கொள்கிற ஒரு சிறுமியைப் போல இந்த சமூகம் இந்துத்வாவினால் அடைந்த இழப்புகள் சொல்லி மாளாதவை. பார்ப்பன மேலாதிக்கத்தை இந்த மண்ணில் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவ கும்பல் நிகழ்த்திய இத்தனை அட்டூழியங்களுக்கும் வி.பி.சிங்கை பொறுப்பாளியாக்க தனது அஞ்சலிக்குறிப்பை பயன்படுத்தப் பார்க்கிறது இந்தியா டுடே. எனவே அது ‘மண்டல் நாயகரான இவர் இந்திய அரசியலில் மாபெரும் சமூகச் சீரழிவைக் கொண்டுவந்தவர்’ என்ற தலைப்பின் கீழ் அஞ்சலி செலுத்துவதாய் கூறிக்கொண்டு அவதூறு செய்திருக்கிறது.

மண்டல் அறிக்கையின் வழியாக ஜாதியை முன்வைத்து தகுதியைப் பின்னுக்குத் தள்ளி சமூக அடுக்குமுறையை சீர்குலைத்தவர் என்று இந்தியா டுடே வி.பி.சிங் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் ஒளிவுமறைவு எதுவுமில்லை. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்த சாதியமைப்பு பார்ப்பனர்களுக்குத் தேவையாயிருக்கிறது என்பதைக் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி அது வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை போட்டியிட வாய்ப்புப்பெறாத சாதியினர், இடஒதுக்கீட்டினால் தங்களைப் பின்னுக்குத்தள்ளி முன்னேறிவிடக்கூடும் என்ற கையாலாகாத்தனத்திலிருந்து அது இவ்வாறு பிதற்றுகிறது. திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திக்கொண்டு வருகிறவனை திருடன் என்று சொல்லி திசைதிருப்பும் மோசடியைப்போல, தகுதியையும் திறமையையும் நிரூபித்துக் காட்டாமலே சாதியின் பெயரால் எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்ட கூட்டம், சாதிரீதியான இடஒதுக்கீடு தகுதி திறமையை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று கதைவிடுகிறது.

இடஒதுக்கீடு கூடாது, தகுதியும் திறமையும் உள்ளவர்கள் போட்டியில் வெற்றிபெற்று வரட்டும் என்கிற வாதத்தில் பெரிய நியாயம் இருப்பதுபோல தோன்றும். அப்படியொரு புண்ணாக்கும் இல்லை. போட்டியிட வருவதற்கே இடஒதுக்கீடு தேவையாயிருக்கிறது. அவ்வளவு மறிப்புகள், தடைகள். சரி, தகுதியும் திறமையும் தங்களிடம் உச்சி முதல் பொ… வரை நிரம்பிக்கிடப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களே போட்டியிலாவது நேர்மையாக பங்கேற்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. போட்டித்தேர்வுகளில் பங்கேற்று முன்னேறிய சாதியினரை விடவும் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகிற ஓபிசி, தலித் மாணவர்களை பொதுப் பட்டியலுக்குள் கொண்டுவராமல் அவரவர் சாதிக்கான ஒதுக்கீட்டு இடத்தில் (கோட்டாவுக்குள்) தள்ளி நிரப்பிவிட்டு, பொதுப்பட்டியலுக்கான 50.5 சதவீதத்தையும் முன்னேறிய சாதிக்கான தனிஒதுக்கீடாக அபகரித்துக் கொள்கிற இந்தியா டுடேயின் சொந்தக்காரர்கள் மானவெட்கமற்று தகுதி திறமை பற்றிப் பேசுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற்ற 474 பேரில், அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற முத்தியால் ராஜூ ரேவு என்ற ஓபிசியை கோட்டாவுக்கு தள்ளியதன் மூலம், பட்டியலில் 474வது இடத்தில் இருந்த பார்ப்பனர் ஒருவரை மெரீட்வாலாவாக மாற்றி பொதுப்பட்டியலுக்குள் இழுத்துக்கொண்ட மோசடி இன்று நீதிமன்றத்தில் இழுபட்டு நாறிக்கொண்டிருக்கிறது.

Mandal vs Kamandal என்ற இந்துத்துவாவின் உத்தி கடைசியில் வி.பி.சிங் தலைமையிலான அரசைக் கவிழ்த்துவிட்டது. ஆட்சியை இழந்தாலும் தமது வாழ்வில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தவர் என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் அனைவரின் மனதிலும் என்றென்றைக்கும் தன்னிகரற்ற இடத்தைப் பெற்றிருப்பவர் வி.பி.சிங். ஆகவே, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சமூக அடுக்குமுறையை குலைத்தவர் என்ற இந்தியா டுடேயின் குற்றம்சாட்டுக்கு முழுப்பொருத்தம் பெற்றவர் அவர். பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதும் பென்ஷனை வாங்கிக்கொண்டு பேரப்பிள்ளைகளோடு பினாத்திக் கொண்டிருக்காமல் நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் குறுக்கிட்டு கருத்து சொல்கிறவராகவும் களத்தில் நிற்பவராகவும் அவர் கடைசிவரை இருந்தார் என்பதும்கூட இந்தியாடுடேவுக்கு எரிச்சலூட்டும் விசயம்தான். எனவேதான் மதச்சார்பின்மையின் இஷ்டதெய்வமாக இருந்தார் என்று கிண்டலடிக்கிறது. நடக்கமுடியாமல் நகர்கிற வயதிலும் மதவெறி கொண்டலைகிற வாஜ்பாய் போன்றவர்கள் இருக்கும் நாட்டில், மதச்சார்பின்மை என்ற உயரிய கோட்பாட்டிற்காக தனது மரணம் வரையிலும் ஒருவர் வாழ்ந்தார் என்பது பெருமைக்குரிய செய்திதானே.

இடிக்கப்பட்டது சுவர் மட்டுமா…


சர்ச்சைக்குரிய சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருசாரார், தங்கள் குடும்ப அட்டைகளை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்தனர்….. , சர்ச்சைக்குரிய சுவற்றை இடித்து தங்கள் சமூகத்தை அரசு அவமதித்துவிட்டதைக் கண்டித்து ஒருசாரார் ஊரைவிட்டு வெளியேறி மலையடிவாரத்தில் வெட்டவெளியில் குடியேறினர்… ஊரைக் காலி செய்து மலையடிவாரத்தில் தங்கியிருந்தவர்கள் கொட்டும் மழையிலும் வெட்டவெளியிலேயே இருந்ததால் இன்னின்னாருக்கு சளி, இருமல். இத்தனைபேருக்கு காய்ச்சல்…. அரசாங்கம் தருவதற்கு முன்வந்த மருத்துவ சிகிச்சைகளை ஏற்க மறுப்பு… – இப்படியாக உத்தப்புரம் சுவர் இடிப்பை எதிர்ப்பவர்கள் மீது அனுதாபம் சுரக்குமளவுக்கு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பதற்றத்தோடு வெளியாகும் செய்திகளின் பின்னுள்ள உண்மைதான் என்ன? அந்த சுவர் யாரால் எதற்காக எப்போது ஏன் கட்டப்பட்டது, இப்போது ஏன் எதற்காக யாரால் இடிக்கப்பட்டது? சர்ச்சை என்ற வார்த்தை இங்கே எதைக் குறிக்கிறது என்பவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களை இந்த ஊடகங்கள் மக்களுக்குத் தெரிவிக்கின்றனவா?

மேற்கு மகாராஷ்ட்ராவில் கொய்னா அணைக்கட்டின் காரணமாக இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட தலித்துகளும் மராத்தாக்களும் வேறொரு இடத்தில் குடியமர்த்தப்பட்டனர். தலித்துகள் வாழும் பகுதி பீம் நகர். மராத்தாக்கள் வாழும் பகுதி டேர். இரு சமூகத்தவருக்கும் பொதுவான சமுதாயக்கூடத்தை தலித்துகள் பயன்படுத்த முடியாத வண்ணம் மராத்தாக்கள் மதில்சுவர் எழுப்பி தடுத்துவிட்டனர். சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நீதிமன்றம் மூலமாக சுவற்றுக்கு ஒரு சட்டப்பூர்வ ஒப்புதலையும் பெற்றுவிட்டார்கள். சுவற்றை இடிக்காவிட்டால் 14.04.2008 அம்பேத்கர் பிறந்த நாளன்று தாங்கள் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தலித்துகள் அறிவிக்க வேண்டியிருந்தது. (பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு விசயத்தில் கண்மூடித்தனமான உயர்சாதி மனேபாவத்தோடு செயல்பட்டாலும்) மிகவும் உள்ளொடுங்கிய கிராமமொன்றில் நடந்த அந்த தீண்டாமைக் கொடுமையை வெளிப்படுத்தி தலித்துகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் சுவற்றை இடிக்க வைத்ததில் ஆங்கில ஊடகங்களின் பங்கு பாராட்டுதலுக்குரியது. வலுவான மக்கள் இயக்கங்கள் இல்லாத இடங்களில் ஊடகங்கள் மக்களின் கண்ணிய வாழ்வுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் ஊடகங்களும் துணைநிற்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்று.

உத்தப்புரம் விசயத்தில் ஊடகங்கள் அப்படி ஒருபால் கோடாமையோடு நடுநிலையாக- அதாவது நியாயத்தின் பக்கம் நிற்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. செய்திகளின் நம்பகத்தன்மை, ஊடகத்துறையில் சாதி வகிக்கும் பாத்திரத்தை முன்வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் உத்தப்புரம் பிரச்னை அணுகப்படுகிறது.. சுவர் எழுப்பப்பட்டதன் பின்னணியில் உள்ள சாதிப் பாகுபாட்டையோ, அதனால் தலித்துகள் அடைந்துள்ள அவமானவுணர்வையோ, அது இடிக்கப்படுவதில் உள்ள நியாயத்தையோ மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு பதிலாக சுவர் விரும்பிகளின் செய்திகளுக்கே கூடுதல் அழுத்தம் கொடுக்கின்றனர். வட்டார நிருபர்கள் தங்களது சாதிச் சாய்மானத்தை – தலித் எதிர்ப்பு நிலையை கைவிட்டுவிட்டு பிரச்னையை அணுக முன்வருவார்களேயானால் உத்தப்புரம் சுவரைப் போன்ற நூற்றுக்கணக்கான தீண்டாமைக் கொடுமைகளை வெளிக் கொணர முடியும்.

2.

பெரும்பாலான கிராமங்களில் ஊர்க்கூட்டம் என்ற பெயரால் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்துகள் ஆதிக்கசாதியினரின் தேவைகளை நிறைவேற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. சுயேச்சையான அரசியல் பொருளாதார பலமற்று தமது வாழ்வாதாரங்களுக்கு ஆதிக்கசாதியினரை அண்டி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தலித்துகள் ஊர்க்கூட்டத்தின் பெயரால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கீழ்ப்படிந்தேயாக வேண்டிய நிலையுள்ளது. எனவே, மதுரை மாவட்டம் பேரையூர் ஒன்றியத்திலுள்ள உத்தப்புரம் கிராமத்தில் 1990ல் தலித்துகளும் தலித்தல்லாதவர்களும் கூடிப் பேசி ஒருமனதாக எழுப்பிக் கொண்டதே அச்சுவர் என்று புதிதாக கிளப்பிவிடப்பட்டுள்ள தலபுராணமானது அப்பட்டமான பொய். தலித்தல்லாதவர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்துகொண்டு நெருக்குகிறபோது அதற்கு உடன்படுவதைத் தவிர தலித்துகளுக்கு வேறு வழியிருந்திருக்கவில்லை என்பதே உண்மை.

ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானதைப் போல அந்த சுவர் 600 மீட்டர் நீளமுள்ளது அல்ல என்றும் வெறும் 149 மீட்டர் நீளமேயுடையதென்றும் அதன் நீள அகலங்களின் துல்லியம் குறித்த சர்ச்சையும் கிளப்பிவிடப்பட்டுள்ளது. ஊரின் எந்த மூலையிலும் தலித்துகள் நுழைந்துவிடாதவாறு வளைத்து வளைத்து சுவர் கட்டப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியை திசைதிருப்பவே இந்த நீள அகல ஆராய்ச்சி பயன்படுத்தப்படுகிறது. ஒரு வாதத்திற்காக 149 மீட்டர் மட்டுமே சுவர் கட்டப்பட்டிருப்பதாக வைத்துக் கொண்டாலும், தலித்துகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுப்பது குற்றம்தானே? இதுபற்றி எந்த நடுநிலை நாளேடும் வாய் திறக்காதது என்?

இரவுநேரங்களில் மின்சாரம் பாய்ச்சப்படுவதாக சொல்லப்படுவதும் பொய்தான் என்கின்றனர் சுவர் விரும்பிகள். அப்படியானால் 17.04.08 அன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியான புகைப்படம் எதை உணர்த்துகிறது? அன்றைய தினமே சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் தோழர் நன்மாறன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியபோது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர், மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் மின் கம்பிகளை அகற்றிவிட்டதாகவும் தெரிவித்தது பொய்யா?

தனிப்பட்டவர்கள் தமது சொந்த பட்டா நிலத்தில் தத்தமது பாதுகாப்புக்காக வீட்டின் பின்புறம் கட்டிக்கொண்ட மதிற்சுவர்களின் இணைப்புதானேயன்றி அது திட்டமிட்டு கட்டப்பட்டதல்ல என்றும் வாதிடப்படுகிறது. அவரவர் தம் விருப்பத்திற்கு வீட்டுக்குப் பின்னால் கட்டிக் கொண்டார்களென்றால், ஊர்க்கூட்டம் போடப்பட்டதும் சுவர் கட்டுவது குறித்து முடிவெடுத்ததும் அதில் தலித்துகளை மிரட்டி கையொப்பம் பெறப்பட்டதும் எதற்காக? அவரவர் நிலத்தில் கட்டிக்கொள்ளப்பட்டது என்றால் ஊர் புறம்போக்கில் பொதுப்பயன்பாட்டிற்கென அமைந்திருந்த பாதையை மறித்துக் கட்டியது யார்? அரசாங்க நிலத்தை ஆக்ரமித்து சட்டவிரோதமாய் சுவரெழுப்பிய அந்த குற்றவாளி தனிநபரா அல்லது உத்தப்புரம் பிள்ளைமார் அனைவருமா?

தவிரவும் இங்கு ‘பாதுகாப்புக்காக’ என்ற வார்த்தைப் பயன்பாட்டை கவனிக்க வேண்டியுள்ளது. நாடு முழுவதும் ஆதிக்கசாதியினரால் தலித்துகள் நாளும் நொடியும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், உத்தப்புரத்தில் மட்டும் விதிவிலக்காக தலித்துகளால் ஆதிக்கசாதியினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அளந்துவிடும் கதைகளை யார்தான் நம்புவது? திருடுவது, பெண்களிடம் வம்பாடுவது போன்ற குற்றங்களைச் செய்கிற சிலர் பிள்ளைமார் உட்பட எல்லாச் சாதியிலும் இருக்கிறார்கள். அப்படியிருக்க, உத்தப்புரம் தலித்துகள் அனைவரையும் திருடர்களாகவும் பெண்களை சீண்டுகிறவர்களாகவும் குற்றம் சாட்டி அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே சுவர் கட்டினோம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. ஒட்டுமொத்தமாக ஒரு சாதியையே குற்றவாளிகளாக சிறுமைப்படுத்தி குணச்சிதைவைப் பூசுவதும் தீண்டாமை வன்கொடுமையின் இன்னொரு வடிவமேயாகும்.

– இப்படி சுவர் கட்டிய குற்றத்தை மறைக்க அடுத்தடுத்து பல பொய்களை சுவர் விரும்பிகள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்க, இவ்விசயத்தில் பல கட்சிகள் பெரிய பெரிய பிளாஸ்திரிகளை ஒட்டிக்கொண்டு வாய் திறக்காமல் கிடந்தன. இதில் ஆளுங்கட்சி – ஆளாத கட்சி, தலித் கட்சி – தலித்தல்லாதவர் கட்சி என்று எந்த பேதமும் இல்லை. உத்தப்புரத்தின் பிள்ளைமார் சாதிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்குமான தனிப்பட்ட பிரச்னையாக இதை மாற்றிவிடப் பார்த்தன. அதேநேரத்தில், ஆதிக்கசாதியினரின் குற்றங்களை கண்டிக்கும் திராணியற்ற தமது அரசியல் கோழைத்தனத்தை மறைக்க, அரசியல் ஆதாயத்துக்காக தலித்துகளை தூண்டிவிடுவதாக மார்க்சிஸ்ட் கட்சி மீது புகார் கூறவும் அவை தயங்கவில்லை.. சுவற்றை இடிக்கச் சொல்வது அரசியல் ஆதாயத்துக்காக என்றால் அதுபற்றி கருத்து தெரிவிக்காமல் இருப்பதும் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் என்ற குறைந்தபட்ச தர்க்கத்தைக் கூடவா மக்களால் புரிந்து கொள்ளமுடியாது?

சுவற்றை இடி அல்லது இடிப்போம் என்ற முழக்கத்தோடு மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் 2008 ஏப் 29 அன்று இரண்டாயிரம் பேருடன் ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும்கூட கட்சிகளிடம் எந்த அசைவும் இல்லை. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பகுதியாக கலந்துகொண்ட உத்தப்புரம் தலித்துகளின் உணர்வுகளை, அவர்களின் ஏகோபித்த தலைவராய் அன்றுவரை இருந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமியால்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. உத்தப்புரம் கிராமத்தோடு தனக்கு கடந்த பத்தாண்டுகளாக தொடர்பிருப்பதாகவும், ஆறேழுதடவை அங்கு போய் வந்திருப்பதாகவும், தன்னிடம் இந்த சுவர் பற்றி யாருமே புகார் சொல்லவில்லை என்றும் கூறியதோடு, சுவற்றைக் கட்டியுள்ள பிள்ளைமார் சாதியினர் ஆதிக்கசாதியினரிலேயே மிகவும் மிதமானவர்கள் என்றும் நற்சான்று வழங்கினார் கிருஷ்ணசாமி.

அத்தோடு அவர் நிற்கவில்லை. தன்பாட்டுக்கு நின்று கிடக்கும் சுவரை இடிப்போம் தகர்ப்போம் என்று அரசியல் ஆதாயத்துக்காக சில கட்சிகள் தலித்துகளை தூண்டிவிடுகின்றன. அவர்கள் பின்னால் சென்றுவிடாதீர்கள் என்று தலித்துகளை எச்சரிக்கவும் செய்தார் கிருஷ்ணசாமி. சாதிய மோதல்கள் முடிவுக்கு வந்து இணங்கி வாழும் இந்த நேரத்தில் சுவர் பிரச்னையை எழுப்பினால் பிற சாதியினர் ஒன்று சேர்ந்துகொண்டு தலித்துகளை தனிமைப்படுத்திவிடுவார்கள் என்பதே அவர் தினத்தந்தியிலும் டெக்கான் கிரானிக்களிலும் கொடுத்த பேட்டியின் சாரம்.

கிருஷ்ணசாமியின் இந்த எச்சரிக்கை நமக்கொன்றும் புதிதல்ல. ஒடுக்குமுறையை ஒடுக்குமுறை என்று உணர்ந்து எதிர்க்காதவரை, இணங்கி வாழ்வதாக தோற்றம் காட்டுவதில் சிக்கலொன்றும் இல்லைதானே? சாதியொடுக்குமுறை இருப்பதாக கேள்வியெழுப்பும் போதெல்லாம் ‘எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை, தாயாப்புள்ளையா கூடிக்குலாவி வாழ்கிறோம்’ என்பதான வசனங்களை எவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்?

எதிர்த்தால் தலித்துகளை தனிமைப்படுத்திவிடுவார்கள் என்ற கிருஷ்ணசாமியின் அச்சம் நியாயமானதுதான். ஆனால் பயந்தே கிடந்தால் எப்போதுதான் எதிர்ப்பது? எதிர்த்துப் பேச அஞ்சியிருந்தால் இமானுவல் சேகரன் என்ற தியாகி கிடைத்திருப்பாரா? தலித்துகளின் பெருமைக்குரிய முன்னோர்களில் ஒருவரான வீரன் சுந்தரலிங்கம் கையில் பளபளக்கும் வாளை வெறும் அட்டைக் கத்தியாக குறுக்கும் அதிகாரம் தனக்கில்லை என்பதை கிருஷ்ணசாமி உணர வேண்டும். அடித்தால் திருப்பி அடி என்ற ஆவேச முழக்கமெல்லாம் சுவற்றில் எழுதப்படும் வெற்று வாசகங்களாக தேய்ந்துபோனால் தலித்துகள் எப்போதுதான் சுயமரியாதையோடு வாழத் தொடங்குவது என்பது பற்றி, மீசையை முறுக்கி போஸ் கொடுப்பதிலேயே பொழுதைக் கழிக்கும் பிற தலித் தலைவர்களும் சற்றே யோசிக்க வேண்டியுள்ளது.

கட்சிகள் தான் இப்படியென்றால் வாழும் சமத்துவப் பெரியாரின் ஆட்சி சுவர் பிரச்னையை எவ்வாறு அணுகியது என்று பார்ப்போம். தமிழக மக்களின் பிரச்னை என்றால் பிரதமருக்கு ஆறஅமர கடிதம் எழுதுவதும், தமது குடும்ப விசயமென்றால் பதறியடித்து ஃபேக்ஸ் அனுப்பிவிட்டு நேரடியாய் ஆளம்புகளையும் ஏவிவிடுகிற ராஜதந்திரியை முதல்வராகப் பெற்றிருக்கிற இம்மாநில அரசாங்கத்தின் நடவடிக்கை சுவர் பிரச்னையை மேலும் மேலும் சிக்கலாக்கியது. களஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் 2008 பிப்ரவரி 22 அன்றே இப்பிரச்னையை மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டன. அரசின் தரப்பில் அசைவில்லை.

மார்ச் 25 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு தரப்பட்டது. நடவடிக்கை இல்லை. ஏப்ரல் 17ம் தேதி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது. மின் இணைப்புதான் துண்டிக்கப்பட்டதேயன்றி சுவர் விசயத்தில் நடவடிக்கை இல்லை. சுவரை இடிக்குமாறு சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தும், மாநிலக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியும் கூட பலனில்லை. ஏப்ரல் 29ம் தேதி ஆர்ப்பாட்டத்துக்கும் அசரவில்லை. ஆறப்போட்டு ஊறப்போட்டு, ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்று இழுத்தடிப்பின் மூலம் தீவிரத்தை நீர்த்துப்போக வைக்கமுடியுமா என்ற ரீதியிலேயே பிரச்னை அணுகப்பட்டது. கோடநாடு எஸ்டேட் விசயத்தில் காட்டுகிற வேகத்திலும் விவேகத்திலும் இத்துனூண்டு காட்டியிருந்தால்கூட ஒரு தீர்வை எட்டியிருக்க முடியும்.

தீண்டாமையைக் குற்றமாக அறிவிக்கும் சட்டம் அமலில் உள்ள இந்த நாட்டில் இவ்வளவு வெளிப்படையாக தீண்டாமையை அறிவிக்கும் வகையில் சுவரெழுப்பிய பிள்ளைமார்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்திருக்க வேண்டும், சுவற்றையும் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். சாதிகளைக் கடந்து ஒரு சமூகமாக இணங்கி வாழ்வதை உத்திரவாதப்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் முடியாதபோது இந்த நாட்டின் அரசியல் சட்டம் முன்மொழிகிற சமத்துவத்தை மதிக்காத குற்றத்திற்காக அவர்களது குடியுரிமையை ரத்து செய்து அவர்களிடமிருந்து குடும்ப அட்டைகளை அரசாங்கம் பறிமுதல் செய்திருக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். நாட்டின் இயற்கை மற்றும் பொதுவளங்களையும் நிதியாதாரங்களையும் பயன்படுத்துவதிலிருந்து அவர்கள் முற்றாக விலக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டும். மொத்தத்தில் தீண்டாமையை கடைபிடிக்கிற அவர்கள் இச்சமூகத்தின் எல்லா முனைகளிலும் தளங்களிலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது சாதிவெறி என்னும் மரபுரீதியான மனநோயால் பீடிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் மனநல மருத்துவமனையிலாவது சிகிச்சைக்கு சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இதில் எதுவொன்றையும் செய்கிற சொரணையும் அரசியல் உறுதிப்பாடும் ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இல்லாது போய்விட்டது.

சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரால் தங்களை தாஜா செய்யவே நிர்வாகம் முயற்சிக்கிறது என்பதை புரிந்துகொண்ட பிள்ளைமார்கள் மிகுந்த இளக்காரத்தோடும் செருக்கோடும்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். தீண்டாமையை கடைபிடிப்பதை தங்களது பிறவி உரிமைகளில் ஒன்றாகக் கோருகிற அவர்களுக்கெதிராக கடுமை காட்டாததன் விளைவு, சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் தமது குடும்ப அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் துணிவைக் கொடுத்துள்ளது.

நாட்டின் அவமானச் சின்னங்களில் ஒன்றாக இருக்கும் அந்த தீண்டாமைச் சுவரை பார்வையிட்டு காறியுமிழ மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் 07.05.2008 அன்று உத்தப்புரத்திற்கு வருவதாய் அறிவிக்கப்பட்ட நிலையில், அதுவரை மந்தகதியில் இருந்த நிர்வாகம் சற்றே பதற்றமடைந்து களமிறங்கியது. 05.05.08 அன்றிரவு பெரும் எண்ணிக்கையிலான போலிசாரை கிராமத்திற்குள் இறக்கி 06.05.08 காலையில் இருபதடி சுவற்றை இடித்து பொதுப்பயன்பாட்டுக்கான ஒரு பாதையை நிறுவியுள்ளது.

3.

‘இடிக்கப்பட்டது உத்தப்புரம் சுவர். தலித்துகள் புழங்குவதற்கான பொதுப்பாதை நிறுவப்பட்டுவிட்டது…’ என்ற செய்தியைக் கேட்டதும் புதுதில்லியிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கப்பட்டதாய் கேள்விப்பட்டேன். ஊர் முழுவதையும் வளைத்து வளைத்து எழுப்பியுள்ள சுவற்றில் வெறும் இருபது அடியை இடித்ததற்கா இவ்வளவு கொண்டாட்டம் என்று தோன்றியது. ஆனால் சுவற்றைக் கட்டிவைத்திருந்த சாதிவெறியர்கள் இந்த இருபதடி இடிப்புக்குக் காட்டிய எதிர்வினையைக் கண்ட பிறகுதான், அந்த சுவற்றிலிருந்து ஒரேயொரு ஒற்றைச் செங்கல்லை உருவியிருந்தாலும்கூட அது கொண்டாடப்பட வேண்டிய வெற்றியே என்பது உறைத்தது.

ஏற்கனவே அறிவித்திருந்தபடி தோழர் பிரகாஷ் காரத் 07.05.08 காலை உத்தப்புரம் வந்து சுவர் இடிக்கப்பட்ட பகுதியில் பொதுப்பயன்பாட்டுக்காக போடப்பட்டிருந்த புதிய பாதையையும் இன்னும் எஞ்சியிருக்கிற சுவற்றையும் பார்வையிட்ட பிறகு ஊர் மந்தையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தலித்துகளிடையே உரை நிகழ்த்தினார். தங்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த புதியபாதையில் நடப்பதில் ஏற்படும் சுதந்திரவுணர்ச்சியை அனுபவிக்கும் பேரார்வம் கண்ணில் பொங்க காத்திருந்த அந்த உத்தப்புரம் தலித்துகளோடு சேர்ந்திருந்த அந்தப் பொழுதை வாழ்வின் உணர்ச்சிமயமானதொரு திருப்பமாகவே உணர்கிறேன்.

இந்த பூமியில் ஒவ்வொரு அடியை எடுத்து வைப்பதற்கும் ஒரு தலித் போராட வேண்டியிருக்கிறது என்ற உண்மையை உணர்த்துகிறவர்களாக அவர்கள் வெயிலிலே தகதகத்துக் கொண்டிருந்தார்கள். (கூட்டத்திடலுக்கு அருகேயிருந்த ஒரு சுவற்றில் ‘சமத்துவப்போராளி’ என்ற பட்டத்துடன் மருத்துவர் கிருஷ்ணசாமியின் படம் போட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டதைக் கண்டதும் எனக்கு தாளமுடியாத சிரிப்பு. அன்று காலையில் மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய சரத்குமாரைப் பார்த்து அவரது தொண்டர்கள் ‘சமத்துவ நாயகன்’ என்று கோஷம் எழுப்பியபோதும் எனக்கு இதேமாதிரியான சிரிப்பு வந்து தொலைத்தது).

இதுவரை பபுள்கம் மென்றுகொண்டிருந்த அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் சுவர் இடிப்புக்குப் பிறகு வாய் திறந்தன. அரசியல் ஆதாயத்திற்காக மார்க்சிஸ்ட்டுகள் சுவர் பிரச்னையை எடுத்திருப்பதாகப் பொருமினார்கள். அடப்பாவமே, கட்சி என்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான் இயங்குகிறது என்ற புரிதலில்லாமல் இருக்கிறார்களே… ஒருவேளை பொருளாதார ஆதாயத்திற்கென்று இருப்பதுதான் கட்சி என்று இவர்கள் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ?

கம்யூனிஸ்ட்கள் தலித்துகள் பிரச்னையை முன்வைத்துப் போராடுவதில்லை என்று குற்றம் சாட்டுவதும், தலித்துகள் பிரச்னையை முன்வைத்து கம்யூனிஸ்ட்டுகள் போராடும்போது மிகுந்த மனத் தொந்தரவுக்குள்ளாகி, தமக்குப் பாத்தியப்பட்ட ராஜ்ஜியத்துக்குள் அந்நியர் நுழைந்துவிட்டதைப் போன்ற அசூயை உணர்வுக்கும் அச்சவுணர்வுக்கும் ஆட்பட்டு குதர்க்கமான சந்தேகங்களை எழுப்புவதுமாகிய பலவீனத்திலிருந்து தலித் முரசு போன்ற பத்திரிகைகளும் விடுபட வேண்டியிருக்கிறது. இம்மாத தலையங்கத்தில், சுவர் பிரச்னையை மார்க்சிஸ்ட் கட்சிதான் கையிலெடுத்துப் போராடுகிறது என்று சொல்வதற்குக்கூட அதற்கு மனம் வரவில்லை. சிலர் என்றே குறிப்பிடுகிறது. எல்லாவற்றுக்கும் மதமாற்றமே தீர்வு என அது இந்த தலையங்கத்திலும் குறிப்பிடுகிறது.

தலித்துகள் எந்த மதத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டாலும் அவர்களை தலித்துகளாகவே பிறர் பார்க்கின்றனர் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள அது தயாராயில்லை. சரி, தலித்துகள் பௌத்தத்தை தழுவிவிட்டதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது சுவற்றைக் கட்டியவர்களே அதை இடித்துவிடுவார்களா? கிருஷ்ணசாமிக்கு ஆரோக்கியமான மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. உத்தப்புரம் சுவர் போன்ற பல தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தலித் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும் என்று பரந்த ஒற்றுமைக்கு அறைகூவல் கொடுத்திருக்கிறார். அந்த சுவற்றை இடிக்க இடதுசாரிகள் நடத்தியப் போராட்டத்தை தான் ஏன் ஆதரிக்கவில்லை என்பது பற்றி அவர் எப்போதாவது சொல்வார் என்று நம்புவோமாக. சுவர் பற்றிய எல்லா உண்மைகளும் வெளியாகிவிட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போதுதான் ‘உண்மையறியும்’ குழுவை நியமித்திருக்கிறது. இனிமேல் அது கண்டறியப் போகும் புதிய உண்மைகளை வரவேற்க நேரமிருப்பவர்கள் காத்திருக்கவும்.

சுவர் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலித்தல்லாதவர்கள் ஊரை காலிசெய்துவிட்டு மலையடிவாரத்திற்கு சென்று காற்றிலும் மழையிலும் வெயிலிலும் குளிரிலும் வெட்டவெளியிலேயே குழந்தைக் குட்டிகளோடு தங்கியிருப்பதாக ஊடகங்கள் புலம்பத் தொடங்கின.

1989 சாதிக் கலவரங்களையொட்டி தலைமறைவாகி திருப்பூருக்கு ஓடிப்போய் கொஞ்சம் பசையுள்ளவர்களாக வளர்ந்திருக்கும் உத்தப்புரம் பிள்ளைமார் திருப்பூரிலிருந்து திரட்டிக்கொண்டு வந்திருக்கும் ஆட்களின் துணையோடு தலித்துகளின் தோப்புகளை ஆக்கிரமித்து அங்குதான் பிள்ளைமார் அனைவரும் தங்கியிருக்கிறார்கள் என்ற உண்மையைச் சொல்ல எந்த ஊடகமும் தயாரில்லை.

தாக்குதலுக்கான முன்தயாரிப்போடு கத்தி கபடா அருவாக்கம்பு போன்ற ஆயுதங்களை திரட்டிக் கொண்டு வந்துள்ள அவர்களைத் தடுத்தால் பிரச்னை வேறுவகையாக திசைதிரும்பிவிடும் என்ற நன்னோக்கில் தலித்துகள் அமைதி காத்து வருகின்றனர் என்பதையும், தங்களது தோப்புகளை மீட்டுத் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்திருக்கிறார்கள் என்பதையும்கூட தெரிவிக்க ஊடகங்கள் முன்வரவில்லை. தலித்துகளின் மூச்சுக்காற்று பட்டால்கூட தீட்டு பாய்ந்துவிடும் என்று அலட்டிக்கொள்கிறவர்களுக்கு, தலித்துகளின் தோப்புகள் இப்போது புனிதச்சோலையாய் தெரிகிறது போலும்.

07.05.08 நாங்கள் சென்றிருந்தபோது உத்தப்புரத்தில் தலித்தல்லாதவர்கள் வீடு அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. தன் பிதிரும் பிள்ளைகளும் வனவாசம் போயிருக்கிற விசயம் தெரியாமல் ஒரேயொரு மூதாட்டி மட்டும் எல்லோரும் தன்னை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டார்களென புலம்பிக் கொண்டிருந்ததது. ஊரை விட்டுப் போனாலும் போவோமே தவிர தீண்டாமையைக் கைவிட முடியாது என்கிற சாதியாணவத்தில் திளைத்திருக்கிற பிள்ளைமார்கள், கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து தங்களைக் காப்பாற்ற ‘மகாத்மாவே எழுந்து வாரீர்’ என்று சுவரொட்டி வெளியிட்டிருந்த கேவலத்தையும் கண்டோம். காந்தி இருந்திருந்தால் இவர்கள் மீது காறித் துப்பியிருப்பார்.

வனவாசத்தில் இருக்கும் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க 09.05.2008 அன்றுதான் பாரதீய ஜனதா கட்சியினர் நுழைந்துள்ளனர். இன்னும் சில தினங்களுக்குப் பின், இந்த சுவர் யாராலும் கட்டப்பட்டதல்ல, அது 5 லட்சத்து 13 ஆயிரத்து 743 வருடங்களுக்கு முன்பு தனக்குத்தானே சுயம்புவாக உருவானது என்ற புதிய கதை ஒன்று கிளம்புவதற்கான வாய்ப்புமுள்ளது. ஏனென்றால் நாட்டில் எந்த கட்டுமானம் எப்படி உருவானது, அதை இடிக்கலாமா கூடாதா என்பதற்கான நாள் தேதி நட்சத்திரம் பற்றிய சகல தஸ்தாவேஜூகளும் தங்களிடம் இருப்பதாக கப்சா விடுவதில் அவர்களுக்கு இணையாக இங்கு யார் இருக்கிறார்கள்?

உத்தப்புரம் சுவர் பிரச்னையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாதிருக்கும் முக்குலத்தோரை எப்படியாவது இழுத்துவிட்டு தலித்துகளையும் முக்குலத்தோரையும் மோதவிட வேண்டும் என்று ஒரு கோஷ்டி களமிறங்கியுள்ளது. உத்தப்புரம் அருகேயுள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியிலுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அவமரியாதை செய்து பழியை தலித்துகள் மீது சுமத்திவிட்டால் அவர்கள் எதிர்பார்க்கிற மோதல்கள் தொடங்கிவிடும் என்று காய் நகர்த்துகிறார்கள். சிலைகளை முன்வைத்து மனிதர்களை பலிகேட்கும் சாதிவெறியை கட்டுக்குள் நிறுத்த, சிலையை அவமதித்த உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்ய தமிழக அரசு முனைப்புடன் இயங்க வேண்டும்.

உத்தப்புரத்தில் அடைந்திருக்கும் விடுதலையுணர்ச்சி ஒவ்வொரு கிராமத்துக்கும் பரவுமானால், ஒடுக்குமுறை சாதியாதிக்கத்தை தலித்துகள் தகர்த்துவிடுவார்கள் என்ற அச்சத்தை முன்வைத்து இடைநிலைச்சாதிகளை தலித்துகளுக்கு எதிராக அணிதிரட்டும் வேலையும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தோப்புக்குள் தங்கியிருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மூவேந்தர் முன்னேற்றக் கழக பொறுப்பாளிகள் வந்து போயிருக்கின்றனர். தோப்புக்குள்ளிருப்பவர்களை சமாதானப்படுத்தி ஊருக்குள் அழைத்துவரும் முயற்சியில் ஆளுங்கட்சியினரும் ஈடுபட்டிருக்கிறது. தோப்புக்கு உணவுப் பொருட்களை அனுப்பி பிள்ளைமார்களின் சாதிவெறியுடன் ஒருமைப்பாடு தெரிவிப்பதில் அக்கம்பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த சில இடைநிலைச் சாதிகளும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.

தலித்துகளின் தன்மான உணர்வையும் கல்வி பொருளாதார பண்பாட்டு வளர்ச்சியையும் காணச் சகியாத பல்வேறு குமைச்சல்களையும் பொருமல்களையும் உத்தப்புரத்தை மையமாக வைத்து ஒருங்கிணைக்கவும் தலித்துகளை தனிமைப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளிலிருந்தும் தம்மைப் பாதுகாக்கும் நிலைக்கு தலித்துகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இருபதடி சுவற்றை இடித்ததற்கே இவர்களுக்கு இவ்வளவு கோபம் வருமென்றால், சிறைக்குள் அடைக்கப்பட்டதுபோல திரும்பிய பக்கமெல்லாம் தென்படும் மதில்சுவற்றுக்குள் பதினெட்டு ஆண்டு காலமாக முடக்கப்பட்டிருந்த தலித்துகள் மனதில் எவ்வளவு கொந்தளிப்பு இருக்கும் என்ற நியாயத்தைப் பேச இன்று மார்க்சிஸ்ட்டுகளைத் தவிர வேறு யார்தான் இருக்கிறார்கள் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும்…..