சோதிடம் அறிவியல் சார்ந்ததா?


நாம் வாழ்கின்ற பூமி, எல்லையில்லாப் பரந்த விண்வெளியில் வலம் வரும் லட்சக்கணக்கான பெரிய நட்சத்திரக் கூட்டங்களில் காணப்படும் சிறிய நட்சத்திரமான சூரியனின் சிறிய பகுதியே. இதில் மனித குலம் மூடநம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவும், நம்பிக்கையும் சேர்ந்து அறிவுப்பாதையின் வழிச் செல்லத் தூண்டுகிறது. மூடநம்பிக்கையானது கற்றுணர்ந்தவர்களின் தன்னம்பிக்கையைக் கூட தகர்த்து தடுமாறச் செய்கிறது. தன்னம்பிக்கையில் வாழ முனைவோருக்கு எதிர்நீச்சல் வாழ்வு மிகமிக அவசியமாகிவிட்டது.

சோதிடம் என்பது ஜோதி என்ற வேர்ச்சொல்லிலிருந்து வருவது வான்வெளி ஒளி என்பதாகக் கொள்ள வேண்டும் என்று கூறுவதோடு சோதிட சாஸ்திர விதிமுறைகளை அறிந்தவராகவும்,. கடவுள் அருளால் தீர்க்க தரிசனம், இயற்கையின் இரகசியங்களை முன்னுணரும் திறன் இருப்பது அவசியம் என விளக்கம் தருவார்கள். இத்தகைய ஆற்றல் பெற்ற சோதிடர்கள் எத்தனை பேர்? ஆனால் வேதனைக்குரியது என்னவெனில் குழந்தை பிறந்து விட்டாலோ, திருமணப்பொருத்தம் என்றாலோ, வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டாலோ உடனே ஓடுவது சோதிடரிடம்தான். சோதிடர் சொல்வது போல் நடக்க வில்லையென்றால், சரியான ஜாதகம் கணிக்கப்பட முடியவில்லை யென்றால் நான் என்ன செய்ய முடியும், குறித்த நேரம், பிறந்த நேரம் சரியில்லை எனத் சோதிடர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்.

சோதிடமும் அறிவியல் சார்ந்ததே எனக்கூறி கற்றோரையும் கவரும் கவர்ச்சிகரமான கருத்துக்கள் கூறுவோர் உண்டு. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் குரு சுக்கிரன், சனி, ராகு, கேது என்ற ஒன்பது கிரகங்களை (கோள்களை) கொண்ட ஜாதகம் கணிக்கப்படுகிறது, சோதிடம் பார்க்கப்படுகிறது என்பர். இதில் ராகு, கேது என்பது கோள்களே அல்ல. சூரியனும், சந்திரனும் நேர்பாதையில் வரும் போது இரு பக்கங்களிலும் விழும் நிழல்களே ராகு, கேது என்பதை உணர வேண்டும். மேலும் சந்திரன் பூமியின் துணைக்கோளாகும்.

சோதிட முறைப்படியே ஒருவருக்கு துல்லியமாக ஜாதகம் கணிக்க வேண்டுமானால் அந்த ஜாதகக்காரரின் பிறந்த தேதி, சரியான நேரம் இடம் தேவை. சூரிய உதயத்தை கணக்கிட்டு ஜாதகத்தைக் கணிப்பதால் பிறந்த இடத்தின் தீர்க்க ரேகை (Longitude), , அட்ச ரேகை (Latitude) மிகமிக தேவை. எத்தனை சோதிடர்கள் இதை அறிவார்கள்? அதன்படி கணிக்கிறார்கள்? ஒரே நேரத்தில் மும்பையில் பிறக்கும் ஒரு குழந்தைக்கும், தமிழ் நாட்டில் பிறக்கும் குழந்தைக்கும் கூட ஜாதகத்தில் நிறைய வேறுபாடுகள் தோன்ற வாய்ப்புண்டு. காரணம் சூரிய உதய நேரம். செவ்வாய் தோஷம் எனக்கூறி எத்தனை பெண்களின் வாழ்வைப் பாழடிக்கிறார்கள்.

சூரியன் வடபாகத்தில் மகர ராசியிலிருந்து மிதுன ராசி வரை ( தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) வலம் வருவதை உத்திராயணம், இது தேவர்களுக்கு பகற் காலம் என்பதும் தென்பாகத்தில் கடக ராசி முதல் தனுசு ராசி வரை (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) தக்ஷ்ணாயணம். இது தேவர்களின் இரவு காலம் என்பதையும் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியும்? மனிதனுக்கு ஒரு நாளில் வந்து செல்லும் பகல் இரவு, மனிதனின் 365 நாள்கள் தேவர்களுக்கு ஒரு பகல் இரவு ஆகிறது. அந்த தேவர்கள் எங்கே? எனக் கேட்க துடிக்கிறது.

ஒரு ராசிக்கு 9 நட்சத்திரப் பாதங்கள் என்றும் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களும் 108 பாதங்கள் 3600 க்குள் அடங்கும். அப்படியெனில் இந்தியாவில் வாழும் 100 கோடிக்கு மேலுள்ள மக்கள் தொகையில் பெரும்பாலும் 3.7 கோடி பேர் ஒரே நட்சத்திரம். 8.3 கோடி பேர் ஒரே ராசி கொண்டவர்களாக அமைவர். இவர்களுக்கு ஒரே மாதிரியான பலன்கள் அமையவேண்டும். இது சாத்தியமா? அல்லது அது போன்று அமைந்துள்ளதா? சிந்திக்கவும்.

இந்தியாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ராசிகளும், ஆயிரக்கணக்கான உள்பிரிவுகளுக்கும் காரணமானவர்கள் கோள்களையும், நட்சத்திரங்களையும், விட்டு வைக்க வில்லை. 27 நட்சத்திரங்களுக்குள் ஆண் (11) பெண் (13), அலி (3) எனப் பிரித்தனர். கோள்களுக்குள் ஜாதிப் பாகுபாடுகள் கண்டனர். குரு சுக்கிரன் பிராமணராகவும், சூரியன், செவ்வாய் சத்திரியனாகவும், சந்திரன், புதன், வைசியனாகவும், சனி சூத்திரனாகவும், இவைகளுக்கு தனித்தனி மொழிகளையும் வகுத்தார்கள் சூழ்ச்சியாளர்கள்.

சூரியனைச் சுற்றிவரும் கோள்களும் அதன் தூரமும், அறிவியல் கூறும் ஆதாரங்களையும் காண்போம். சூரியனிலிருந்து பூமி 14.96 கோடி, புதன் 5.79 கோடி, வெள்ளி 10.82 கோடி செவ்வாய் 22.79 கோடி வியாழன் 77.83 கோடி, சனி 142.7 கோடி கிலோ மீட்டர் தொலைவும், சந்திரன் பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

நட்சத்திரங்களின் தொலை குறைந்த பட்சம் 50 ஒளி ஆண்டுகளுக்கு(Light years) மேற்பட்டது. ஓர் ஒளி ஆண்டு தூரம் கிட்டத்தட்ட 9.5 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரமாகும். எண்ணிப் பாருங்கள் இந்த நட்சத்திரக்கூட்டத்தை வைத்து தான் நமது வாழ்வு கணிக்கப்படுகிறது. அதுவும் யாரால் தனது வாழ்க்கையின் நிலை பற்றியே அறிந்து கொள்ள முடியாத ஒருவரால் என்பது தான் வேடிக்கை.

சோதிடர் சொல்வதில் உண்மையிருக்குமானால் தலைவர்களின் மரணம், தீவிரவாதத்தினால் ஏற்படும் அழிவுகளை பற்றியெல்லாம் முன்னரே ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை? சிந்திக்கவும்.

மூடநம்பிக்கைகள் மீண்டும் துளிர் விட வேண்டுமென அரசியல் நோக்கத்திற்காக அடிமை வாழ்வை மீண்டும் கொணர்ந்து ஆதிக்கம் செலுத்திட முனைவதை மக்கள் பகுத்தறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

தூண்டி விடப்படும் மதவெறியால் பலியாகிப் போகாமல் வாழ்க்கையின் எதிர்காலத்தை அறிவியல் துணைகொண்டு வாழப் பழகிட வேண்டும். கல்வியால் தன்னம்பிக்கை மேற்கொள்வோம். மக்கள் தொண்டால் மனித நேயம் பூத்துக் குலுங்கி, ஒற்றுமையுடன் நாட்டை மலர்ச்சியடையச் செய்வோம். அறிவியலால் பயன் பெறுவோம். அறிவியல் சிந்தனை வளர்ப்போம். (தமிழர் நட்புறவு பேரவை, மும்பை தமிழ் டைம்ஸ் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவை).

——————–மும்பை தமிழ் டைம்ஸ் 14-.12.2003.
நூல்: வாழ்வுரிமை விழிப்புணர்வு.

நன்றி: தமிழ் ஓவியா

சுனாமிக்குக் காரணம் சனிப் பெயர்ச்சியா?


மூட நம்பிக்கை வியாபாரிகள் இருக்கிறார்களே அவர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், அதுதான் வாய்ப்பு என்று தங்கள் கடையை விரித்துவிடுவார்கள்.

நியூசிலாந்து அருகே பசிபிக் பெருங்கடலில் செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சுனாமி-யால் 144 பேர் மரணம் அடைந்தனர். இதேபோல், இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது ரத்தத்தை உறைய வைக்கக் கூடிய துயர நிகழ்வுகளாகும்.

இந்தத் திடீர்ப் பேரழிவுக்குக் காரணம் சனிப் பெயர்ச்சிதான் என்று கண்டுபிடித்திருக்கிறார் ஒரு நவீன கொலம்பஸ்.அவர்தான் ஜோதிடர் காழியூர் நாராயணன்.

இதற்கு ஏடுகளின் விளம்பரம் வேறு!

ஆமாம், இவர்தான் கரைகண்ட ஜோதிடர் ஆயிற்றே வந்ததற்குப்பின் காரணம் சொல்லுவதைவிட, வருவதற்குமுன் ஏன் சொல்லவில்லை அபாய எச்சரிக்கையைச் செய்யவில்லை?

இதுபோன்ற பேர்வழிகள் கடந்த முறை தேர்தலில் சொன்ன ஜோதிடங்கள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதற்குப் பின் தலைமறைவாகக் கிடந்தவர்கள் இப்பொழுது ஏதோ ஒரு சாக்கை பயன்படுத்திக்கொண்டும், மக்களின் மறதியில் நம்பிக்கையை வைத்துக்கொண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர் என்பதைப் பொதுமக்கள் சிந்திக்கத் தவறக்கூடாது.

இதுவரை சனிப்பெயர்ச்சி என்பதை மனிதர்களிடத்தில் வைத்துதான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது நாடுகளை வைத்தும் விளையாட ஆரம்பித்துவிட்டனர். இதன்மூலம் குறுக்கு வழியில் விளம்பரம் கிடைக்கும் அல்லவா!

நிலநடுக்கங்களும், சுனாமிகளும் இப்பொழுதுதான் ஏற்படுகின்றனவா? இதற்கு முன் எத்தனையோ தடவைகள் நடந்ததுண்டே! அதற்கெல்லாம் காரணம் இந்தச் சனிப் பெயர்ச்சிதானா? ஏன் அப்பொழுதெல்லாம் அவ்வாறு கூறவில்லை? அப்பொழுது இருந்த ஜோதிடர்களுக்குச் சாமர்த்தியம் போதாது என்று இந்த நாராயணன்கள் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள் (சொன்னால்தான் பிழைப்புப் போய்விடுமே!) ஆனாலும், உள்ளுக்குள் சிரித்து மகிழ்வார்கள்.

சனி பெயர்ந்தால் அதன் விளைவு பெரிய ஆபத்தாக அல்லவா முடியும்?

கிரகங்கள் ஒன்றையொன்று ஈர்த்திருக்கும் நிலையில், ஒரு கிரகம் பெயர்ந்தால் அதன் விளைவு வேறு கிரகங்களைப் பாதிக்காதா? 75 கோடி மைல் தூரத்தில் உள்ள 73,000 மைல் குறுக்களவு உள்ள சனிக்கிரகம் பெயர்ந்தால், விளைவு என்னவாகும்?

கிரகங்கள் என்ன கூடுவிட்டுக் கூடு பாயும் சித்து விளையாட்டுக்காரர்களா?

இந்த வாரம் ஜூனியர் விகடனில் (4.10.2009, பக்கம் 23) சேஷாத்திரி சாஸ்திரி என்பவர் இந்தச் சனிப் பெயர்ச்சிபற்றி கூறும் கருத்து கவனிக்கத்தக்கதாகும்.

நவக்கிரக வழிபாடு என்பதே இந்த பத்து, இருபது வருடமாக பரவியிருக்கிற தேவையில்லாத கலாசாரம். காசியில் இருக்கும் லிங்கமானாலும், இங்கே ஒரு குளக்கரையில் இருக்கிற லிங்கமானாலும் ஒன்றுதான். இந்தக் கோயிலில் அந்தக் கடவுள் இருக்கிறார், அந்த இடத்தில்தான் அருள்பாலிக்கிறார் என்பதெல்லாம் சிறப்பு சேர்க்க சிலரால் எழுதி வைக்கப்பட்டவைதான். வேறு எந்த தனி முக்கியத்துவமும் இல்லை.

இந்த உலகம் தோன்றியபோதே இருப்பவைதான் சனியும், மற்ற கிரகங்களும். அதற்குப் பின்னால் உருவானவைதான் கோயில்கள். அப்படி இருக்கும்-போது சனீஸ்வரன் திடீரென்று புதுசாக இங்கு வந்தார், அங்கு வந்தார் என்பதெல்லாம் எப்படி சரியாக இருக்க முடியும்? அது ஒரு கோள். அந்தக் கோள், இந்த பிரபஞ்ச இயக்கம் நல்ல முறையில் தொடர்வதற்கு உதவி செய்கிறது. அதற்காக அதற்கு நாம் நன்றி சொல்லலாம், அவ்வளவுதான்! அதை அந்த கிரகத்தின் இடப்பெயர்ச்சி சமயத்தில்தான் சொல்லவேண்டும் என்பதோ… குறிப்பிட்ட கோயிலுக்குத் தேடிச் சென்று தான் சொல்லவேண்டும் என்பதோ கிடையாது. சனியைவிட சூரியனும், சந்திரனும் பூமியில் உள்ளோருக்கு ரொம்ப முக்கியமானவர்கள். அவர்களுக்கும் இடப்பெயர்ச்சி கொண்டாடலாம் என்று கிளம்பினால் என்ன ஆகும்?

இப்படி சொல்கிறவர் தந்தை பெரியாரின் சீடர் அல்ல கருஞ்சட்டைக்காரரும் அல்லர். விடுதலை வாசகரும் அல்லர். சாட்சாத் சாஸ்திரிதான்.

இந்தச் சனிப் பெயர்ச்சி விவரம் எல்லாம் அமெரிக்கர்களுக்கோ, ஜெர்மன்காரர்களுக்கோ தெரியுமா? பல நாடுகளில் எரிமலைகளின் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றனவே காடுகள் பல மாதக் கணக்கில் பற்றி எரிகின்றனவே அவற்றிற்கும் இந்தச் சனிப் பெயர்ச்சிக்கும் தொடர்புண்டு என்று புது மூட்டையை அவிழ்த்துவிட்டாலும் அவிழ்த்து விடுவார்கள் யார் கண்டது?

சுனாமி வருவது, நிலநடுக்கம் ஏற்படுவது, புயல் வீசுவது, கடுமழை பெய்வது ஏன் என்பதற்கான அறிவியல் விளக்கங்களை உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன்கூட ஒழுங்காகச் சொல்லுவான்.

தங்கள் பிள்ளைகளின் புத்தகங்களில் என்ன இருக்கிறது என்பதை குறைந்தபட்சம் பெற்றோர்கள் கருத்தூன்றிப் படித்தாலும் போதுமே, உண்மை விளங்கிவிடுமே!

நம்புங்கள் நாராயணன்களை நம்பினால், நடுவீதியில் நிற்கவேண்டியதுதான் _ எச்சரிக்கை!

———————–“விடுதலை” தலையங்கம் 2-10-2009

சனிக் கிரகமும், சோதிடமும்?


சனிக் கிரகம் பூமியைவிட 755 மடங்கு பெரியது! பூமியிலிருந்து 135 கோடி 49 இலட்சம் கி.மீ. தூரத்தில் உள்ளது! சூரியனை ஒரு முறை சுற்றிவர சுமார் 30 ஆண்டுகள் ஆகின்றன!

சனிக்கிரகம் திரவ நிலையில் நைட்ரஜனும் வளி மண்டலத்தில் ஹைட்ர ஜனும் கீலியமும் நிரம்பிய கிரகமாகும்! வியாழன் கிரகத்தைவிட சற்று சிறியது. 17 துணைக் கிரகங்கள் உண்டு.

சனிக்கிரகத்தின் துணைக் கிரகம் டைட்டானில் காசினி என்ற விண் ஆய்வுக்கலம் 2005-ஆம் ஆண்டு ஜனவரி 16-இல் ஆய்வு நடத்திட அதில் இறங்கியது. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்!

சனியின் துணைக்கிரகம் டைட்டானின் மேற்குப் பகுதியில் எரிவாயு திரவ வடிவிலான ஹைட்ரோ கார்பன்கள் மீத்தேன் ஈத் தேன் உருவில் கிடைக்கின் றன. பூமியில் கிடைக்கும் எரிவாயுவைவிட 100 மடங்கு கூடுதலாக கிடைக்க வாய்ப் புள்ளது.

அமெரிக்கா அனுப்பிய காசினி விண்கலத்தின் ஆய்வின் மூலம் எரிவாயு இருப் பது தெரிய வந்துள்ளது. இது மாத்திரமல்ல – டைட்டானில் 20 சதவிகித பகுதியை காசினி விண்கலம் படம் பிடித்துள்ளது. பல நூறு ஏரிகளையும் கடல்களையும் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

சனிக்கிரகத்தில் 1981-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு சூறாவளிக் காற்று இன்னும் அதே தீவிரத்தோடு சுழன்று கொண்டிருக்கிறது. நூற்றாண்டுக்கு மேல் கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலையை காசினி படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. வாயேஜர் 2 என்ற செயற்கைக்கோளும் சனியைச் சுற்றி ஆய்வு செய்து படம் பிடித்து அனுப்பிக் கொண்டிருக்கிறது.

பூமியை நெருங்கிய சனி!

பூமியிலிருந்து 135 கோடி கி.மீ. தூரத்திலுள்ள சனிக் கிரகம் 2003-ஆம் ஆண்டு டிசம்பரில் பூமியை நெருங்கி 120 கோடி கி.மீ. தூரத்தில் வந்தது. பூமியில் உள்ளவர்களுக்கு சனி எந்தத் தொல்லையையும் தரவில்லை! கெடுதியும் ஏற்பட வில்லை.

கிழக்கு வானில் சிறு புள்ளியாகத் தெரியும் சனிக்கிரகத்தை வெறுங்கண்ணால் பார்க்கலாம். கெடுதியில்லை!

27.06.2005-ஆம் ஆண்டு மாலையில் புதன் வெள்ளி சனி மூன்று கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வந்தது. அதனால் எந்தக் கெடுதியும் ஏற்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்!

28.1.2006-ல் சூரியன் – பூமி சனி மூன்றும் ஒரே நேர் கோட்டில் வந்தது. இவைகள் எல்லாமே விஞ்ஞானி களால் ஆராய்ந்து உலகுக்கு அறிவித்தவை. சோதிடர்கள் இத்தகைய அறிவியலைக் கண்டுபிடித்தார்களா? மக்களுக்கு அறிவித்தார்களா?

10.2.2007-ல் பூமிக்கு மிக அருகில் வந்த சனிக் கிரகத்தை சென்னை மக்கள் கோளரங்கு மூலம் பார்த்தனர். அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. சோதிடத்தின்படி சனிக் கிழமை பாவம் பிடித்தது. எருமையும் காக்கையும் அதற்கு வாகனம். சூரியனும் சந்திரனும் செவ்வாயும் சனிக்கிரகத்திற்குப் பகை!

இவ்வாறு சோதிட ஆராய்ச்சி சொல்லிக் கொண்டிருப்பதை நாம் நம்ப வேண்டுமாம்!

நாம் நம்ப வேண்டியது அறிவியலா – சோதிடமா?

—————நூல்:- “சோதிட மறுப்பும் வானவியல்