ஓ பண்பாடு காப்பர்களே!!


பாப்பாபட்டியிலும்,கிரிப்பட்டியிலும்
உங்கள் பண்பாடு பாடையில்
இருப்பதை என் மறந்து போனிர்கள்?

மாறுபட்ட கருத்தினை
பெண்ணொருத்தி கூறினாள் என்பதினால்
பெண்ணினத்தை கேவலப்படுத்தினாள் என்று
கூறும் உன் தமிழ்த் திருநாட்டில் வேசிகள் இல்லையா?

இதே கருத்தை வார்த்தைகளால்
மட்டுமே வேறுபடுத்திக் கூறிய பெரியாரை
திராவிடத் தலைவராக ஏற்றுக் கொண்டதேன்?

பெண்ணும் ஆணும் சேர்ந்துவாழ
திருமணமே தேவை இல்லை என்றுரைத்த
பெரியார் முட்டாளா?

வசைபாடும் தலைவர்களில்
வைப்பாட்டி வைத்துக் கொள்ளாதவர்கள்
எத்துனை பேர்?

உன் தமிழ் மொழியின்
சிலப்பாய் கூறப்படும்
காவியத்தில்
மாதவிக் கென்ன
மகாத்மா பாத்திரமா?

“ஆணுறை பயன்படுத்து” என்று
ஒரு பெண் கூறியது
ஒழுக்கக் கேடெனில்
இத்துணை ஆண்டு காலமாக
அரசு இயந்திரம் இதே விளம்பரத்திற்கு
பலகோடி செலவு செய்ததே;செய்கிறதே-அப்போதேல்லாம்
எங்கே போனது திராவிடனின் கலாச்சாரப் பற்று?
தமிழச்சிகளின் கற்புக் கவசம்?

சானியாமிர்சாவின் கால்சட்டையினாலும்
குஷ்புவின் வார்த்தையாலும்-உன்
வேலி தாண்டும் கலாச்சாரம் அழிகிரதேனில் அது
அழிவதில் தவறில்லை.

அரிவாள்-சுத்தியல்

ரணமாகும் கணங்கள்…


கல்லூரிப் பாலைவனத்தில்
கற்பகத் தருக்களைத்
தேடியலையும்
கலாமின் கனவு வாரிசுகள்
நாங்கள்

எங்களின் புனித வரலாறு
வெளியாகும் போதெல்லாம்
“கூவம்” கூட
முகம் சுளிக்கும்

முடிந்தால்
மூக்கைப் பொத்தியவாறே
கேளுங்கள் நீங்களும்!

எங்களின்
அலாரச்சத்தத்தில்
எல்லோரும் எழுந்த பின்பே
எட்டுமணி சுமாருக்கு,
எட்டிப் பார்ப்போம்,
போர்வைக்குள்ளிருந்து!

மிருகங்களைக்
காரணம் காட்டி
மிச்சம் செய்வோம்,
பேஸ்ட்டையும் சோப்பையும்!

முகம் கழுவி,
தலை கலைத்து
அப்பாவிடம் திட்டுவாங்கி
புறப்படுவோம் கல்லூரிக்கு!

ஜீவ நதியில்
ஓடைகள் கலப்பது போல
வரும் வழியில்
தறுதலையில் ஒன்று சேரும்!

தடுமாறி வரும்
மாநகரப் பேருந்துகளில்,
தாண்டவமாடி
தாவணியிழுத்து
தந்திரமாய் பார்வைகள் வீசி
பார்வையாலே
செருப்படி வாங்கி
பத்திரமாய்
மனதில் சேகரிப்போம்!

முதல் நாளிலிருந்தே
பழகிவிட்டதால்
மூன்றாம் மணி நேரம்தான்
நுழைவோம் வகுப்பில்!

வந்த வேகத்தில்
வருகைப் பதிவு
நடத்திவிட்டு,
வெளிநடப்புகளும்
நிகழ்த்துவோம்!

மொட்டை மரத்தடியில்
வெட்டி அரட்டையில் தொடங்கி
வெட்டு குத்துகளில் முடியும்!
வார்த்தைகள் முற்றி
கைகள் அரிக்கும் போது
அங்கங்கே
அரிவாள்கள் முளைக்கும்!

மைதானங்கள்
போரக்களமாகும்
தருணங்களில்
ரணகளாகும்
எம் பெற்றோர் மனங்கள்!

அவ்வப்போது
பெருமையைக் கட்டிக்காக்க
கட்டாய ஸ்டிரைக்குகள்
அவசிய மாகும் போது!

காவலர்கள் நாய்களாவார்கள்
கையில் கல்லிருக்கும் வரை
நாங்கள் குரைப்போம்,
பதிலுக்குக் கடித்தால்
பதறி சிதறுவோம்!

உயிரையும் கொடுப்பதாய்க்
கூறிக்கொண்டே
ஒவ்வொருத்தியையும்
ஒரங்கட்டும்
எங்கள்
காதலின் புனிதத்தை
கடற்கரை மணலும்
கைப்பேசிகளும் அறியும்!

தேர்வுகள் எல்லாம்
தேள்களைப்போலவே தெரியும்!
அவற்றின் நஞ்சைவிடவும்
கொடியவை
“அரியர்கள்”

மூன்று வருட முடிவில்
எங்களின் கல்லூரி வாழ்வு
முடிவிற்கு வரும்போது
அரியர்கள்
மலைகளாய் மாறி
மலைக்க வைக்கும்!

கவலையில் மயங்கிக்
கண் விழிக்கும் போது
காலில் இடறும்
கவர்மெண்ட் பாட்டில்கள்!

தினந்தோறும்,
எங்களின் புனிதயாத்திரைகள் யாவும்
“டாஸ்மாக்”
நோக்கியே நிகழும்.

சொர்க்கத்திலிருந்து
தூக்கியெறியப்பட்டவர்களாய்,
கல்லூரியை முடித்தவுடன்
கண்கள் கலங்கும்
பிரிந்து போன
நண்பர்களுக்காக அல்ல
பிடரியை பிடிக்கும்
பிரச்சினைகளுக்காக!

இப்போதுதான்
வந்து தொலைக்கும்
எம் மூத்தோரின்
நினைவுகள்!

எத்தனையோ முறை
எகத்தாளமாய்
எக்காளமிட்டோம்
அவர்களைப் பார்த்து!

வீடு வீடாய்
ஏறியிறங்கி
எச்சிலை நாய்போல
துரத்தியடிக்கப்படும்
மார்க்கெட்டிங் வேலையும்
பாதி வயிற்றை நிரப்பும்
பகுதி நேர வேலையுமாய்
காலச்சக்கரத்தை உருட்ட
அவர்கள் படும் கஷ்டமெல்லாம்
கண்ணெதிரே தோன்றும் போது
கண்ணை மூடிக்கொண்ட
கடவுளும்
கவர்மெண்டும்
எங்களின் விரோதியானார்கள்
எத்தனையோ பேர்
எதிர்த்துப் போராடினர்
பிரச்சினைகளின் ஆணிவேரை
பிடுங்கியெறிய!

எள்ளி நகையாடினோம்
எல்லாம் இழந்தபிறகு
ஏங்குகிறோம்
எவனாவது வரமாட்டானா?
பகல்நேர சூரியனாய்!
பகத்சிங்கின் பேரனாய்!!

– செஞ்சுடர்

ஆயுத பூசை?


அதிர்ச்சியாகத்தான்
இருந்தது!
இருக்காதா பின்னே,
பகத்சிங் பிறந்த நாளன்று
அரசு விடுமுறை!

எப்படி சாத்தியம் இது?
அவனென்ன,
காந்தியா?
கதராடை உடுத்தி,
மக்களின்
கோவணம் உருவ!
வெள்ளைக்காரன்,
கால் நக்கி
மெடல் வாங்க!

என்னதான் நடந்தது,
நடந்தபடியே யோசித்த போது
ஞாபகம் வந்தது,
நேற்று
ஆட்டோக்கார “காம்ரேடு”
கடலை பொரி கொடுத்தாரே!
அடடே!
ஆயுத பூசை!

என்ன பொருத்தம்?

தூக்கிய
துப்பாக்கியை மட்டுமல்ல,
தன்
வார்த்தைகளையே தோட்டாக்களாக்கி,
வாரிசுகளிடம்
வழங்கியவனின்
பிறந்தநாளில்
வாழத்துடிக்கிறோம்
வற்றாத,
அவன் நினைவுகளைப் போல!
.
.
.
.
இன்னும்,
தெரிந்து சிலரும்
தெரியாமல் பலரும்
கொண்டாடுகிறார்கள்
ஆயுத பூசை!

யாருக்கான ஆயுதம்
யாருக்கான பூசை?

சும்மாவே இருந்து,
சோறு தின்று,
தொந்தி வளர்ப்பவனுக்கு
திரிசூலம் ஆயுதமென்றால்,

ஊரையே வெளிச்சமாக்க,
உயிரைப் பணயம் வைத்து
உயரக் கம்பங்களில்
ஏறும் எமக்கு
செருப்புதான் ஆயுதம்!

கண நேரம்
கடந்து செல்லும் முன்
மூக்கைப் பிடிக்கச் செய்யும்
உன்
மலச்சாக்கடையில்,
மூச்சடக்கி,
மூழ்கி எழும் எமக்கு
மலவாளிதான் ஆயுதம்!

உன் நுகர்வு வெறியின்
எச்சங்களால்,
உன் மனதைப் போலவே
குப்பை கூளமாகிப் போன
சாலைகளை
பெருக்கித் தள்ளும்
எமக்கு,
துடைப்பமே ஆயுதம்!

அனைவரும்
இந்து என்றாய்,
செய்யும் தொழிலே
தெய்வம் என்றாய்,

சேர்த்து வைத்துக்
கொண்டாடு பார்க்கலாம்,
உன் நவராத்திரிக் கொலுவில்,
செருப்பையும்,
மலவாளியையும்,
துடைப்பத்தையும்,
திரிசூலத்தின்
மூன்று முனைகளாய்
நினைத்து!

-அருண்மொழி

அந்திநேர பூபாளம்!


இனிமையாகத்தான்
இருந்திருக்கும்
எல்லாருக்கும்

எப்போதாவது,
சொந்த ஊருக்குச்
செல்வதென்பது!

ஏதோ,
இழவு வீட்டிற்குச்
செல்வது,
போன்ற துயரம்
கவ்விக் கொள்கிறது
எனக்கு மட்டும்!

யாரைப் பார்த்தாலும்,
“என்ன பொழப்பு இது,
செத்த பொழப்பு”
என்று அலுத்துக் கொள்ளும்,
ஊருக்குத்
துள்ளிக் கொண்டா
போகமுடியும்?

கடலை விளைந்த,
சாலையோர வயல்கள்
எல்லாம்,
கல்லறை போல,
கற்கள் முளைத்து,
காமாட்சி, மீனாட்சி
என புதிய நகர்களைப்
பிரசவித்திருக்கின்றன!

கரம்பு வயல்களில்,
கணுக்கள் வெட்டப்பட்டு,
கழுத்து வலிக்குமளவு,
வளர்ந்து நிற்கின்றன,
சவுக்கு மரங்கள்
காகித ஆலைகளுக்கென!

நான்கைந்து வாரங்களாய்,
தண்ணீரின்றி,
நாசமடைந்து நிற்கிறது
நவீனக் கரும்பு வயல்,
நாற்பதாயிரத்தை விழுங்கிவிட்டு!

தாய் மனத் தலைவனின்
பால்விலை உயர்வுச்
செய்தியைக் கூட அறியாமல்,
துருத்திய எலும்புகளுடன்
தேடியலைகின்றன
காய்ந்த புற்களை,
பால் வற்றியப் பசுக்கள்!

ஊரே சுடுகாடு போலக்
காட்சியளித்தாலும்,
உள்ளூர சந்தோசம்தான்
இன்னும் யாருமே
தூக்கில் தொங்கவில்லை!

கடனை வாங்கியாவது,
கல்லைக் குடைந்து
நீர் பார்க்கத்
துடிக்கிறார்கள்
எல்லாருமே!

ஊரே நாறும்போது,
வீடுமட்டும்
மணக்குமா என்ன?

கால் நூற்றாண்டாய்,
காடு மேடெல்லாம் சுற்றிக்,
குருவி போல் சேர்த்து,
கடன்பட்டு வாங்கிய
காடு முழுவதும்,
காய்ந்து கிடக்க,
கால் மூட்டுத்
தேய்ந்து போய்,
கருக்கரிவாள்களை
எல்லாம்,
துருப்பிடிக்க விட்டபடி,
கனவு காணும் பெற்றோர்களே!

அடித்துப் பிடித்துப்
படிக்க வைத்த
அருமை மகன்,
அரசு வேலையோடு
வருவானென!

ஆயிரம் பேரில்
ஒருவனுக்கு,
வேலை தரவே,
ஆறேழு வருடம்
யோசிக்கும்
அரசாங்க யோக்கியதை
அவர்களுக்கெப்படித் தெரியும்.

விவசாயி வாழ்வே
வெறுங்கனவாகிப் போன பின்பு
நடுமண்டியில் உறைக்கிறது
நாட்டு நிலைமை!

விரக்தியின் விளிம்பில்,
வெறுபேறிப் போனவர்களாய்
தூக்குக் கயிற்றை,
முத்தமிட்டு,
வீரர்களாகிறார்கள்
விவசாயிகள்.

அந்த,
நல்வாய்ப்பை நல்கி
நாடெங்கும்,
பசுமையே இல்லாமல்
செய்தவர்கள்
பசுமைப் புரட்சியின்
தந்தைமார்கள்!

இவர்கள்,
இளைஞர்களை
கனவு காணச் சொல்லிவிட்டு,
இந்திய இதயங்களின்
கனவுகளை,
கருவறுத்தவர்கள்
முதுகெலும்பை
முறித்துப் போட்டவர்கள்.

இவர்கள்,
பரிந்துரைத்த,
விதைகளின் வீரியம்
பிரதிபலிக்கிறது
தரிசு நிலங்களில்,
விதவிதமாய்
முளைத்திருக்கின்றன
களைச் செடிகள்,
கட்சி கொடிகள் போல,
பிடுங்குவாரின்றி!

வயலில் அடிக்கும் போது
வேலை செய்யாத
பூச்சிக் கொல்லி கூட
வஞ்சனை செய்கிறது
விவசாயி குடிக்கும் போது!

வெகு வேகமாய்
அழிக்கப்படுகிறது
விவசாயி வர்க்கம்!
விதவிதமாய்ப்
புள்ளி விவரங்கள்
செத்தவர்களைப் பற்றித்தான்!

கணக்கெடுக்க
வக்கின்றி,
விழி பிதுங்கிறது,
வீணர்களின் அரசாங்கம்!

ஒற்றை அஸ்தமனத்தில்,
முடிந்து போவதில்லை
விடியல்கள்!

அழிந்து விடவில்லை
இளைய தலைமுறை!

எவ்வளவு
நாளைக்குத்தான்

மறைத்து வைப்பீர்கள்
கருக்கரிவாள்களை!

அவர்கள்
தயாரில்லை!

அறுவடையைத்
தள்ளிப் போட!

– அருண்மொழி

தீட்டென்பவனை நாப்கின் கழற்றி அவன் வாயில் அடி..


தீட்டென்பவனை
நாப்கின் கழற்றி
அவன் வாயில் அடி..
நினைவுக்கு வரட்டும்
அவன் பிறப்பு..

-பொளேரென்று செவியில் அடித்தாற்போல பாய்கின்றன வார்த்தைகள்.நெருப்பு பறக்கிறது.வாசிக்க ஆரம்பித்த கணத்திலேயே நம்மை ஆட்கொள்கிறது.அது ‘கொஞ்சூண்டு..’ என்ற தலைப்பிலான கவிதை தொகுதி.திண்டுக்கல் தமிழ்பித்தன்,தயா கவிசிற்பி என்னும் இருவர் சேர்ந்தது உருவாக்கியிருக்கும் புத்தகம்.(தலைப்பில் ‘கொஞ்சூண்டு’ என்ற வார்த்தைக்கும் மேலே சின்னதாக 2 என்று எழுதியிருப்பது நல்ல ரசணை).சிறிய கையடக்க நூல்.ஹைக்கூ வடிவத்தில் பெரும்பாலும் நிலா,வானம்,காதலி,நாய்குட்டி என்று்தான் எழுதப்பார்த்திருக்கிறோம்.இது முற்றிலும் வேறு தளம்.புத்தகமெங்கும் ரணம் பொங்கும் தலித்துகளின் வாழ்க்கை விரவிக்கிடக்கிறது.

செண்ட் பூசிய பணக்கார பிணம்..
துர்நாற்றமடிக்கிறது
எரிக்கையில்..

உறக்கம் பிடிக்கவில்லை..
கனவிலும்
பீ துடைப்பம்..

நாத்தம் குடல புரட்டுது..
சகிச்சுகிட்டு சுத்தப்படுத்தினோம்..
மறுபடியும் அவிய்ங்க பேல.

கருவறை நுழைய அனுமதியில்லை..
கையில ஆயுதமிருந்தும்,
நிராயுதபாணியாய் எங்கள் குலசாமிகள்..

-என்று ஏராளமான கொதிப்போடு சொல்லும் அவர், உச்சகட்டமாக சொல்கிறார் இப்படி.

இட ஒதுக்கீடு வேண்டாம்.
வா…வந்து
நீயே பீ அள்ளு..

-அதிர்ந்து நிமிர்கையில் இடஒதுக்கீடுபற்றி மேலும் அறைகிறார் இப்படி.

வேகாததை
புரட்டிபோடு..
வெந்தது மேலே வரட்டும்..

-இட ஒதுக்கீட்டின் நியாயங்களை இதைவிட எளிமையாக யாரும் சொல்லிவிட முடியாது.இப்படி அவரின் எல்லா கவிதைகளுமே நாட்டின் நடைமுறைக்குத் தேவையான அரசியலை முன்வைக்கின்றன.அழகியல் மட்டுமே கவிதைக்கான பாடுபொருள் இல்லை..நாட்டின் தேவை அதுவல்ல..இதை ஒவ்வொரு கவிதையிலும் உணர்த்துகிறார் தமிழ்பித்தன்.

ஒருமுறை பிய்ந்தது ஹை-ஹீல்ஸ்..
பின்னால் முட்டவில்லை,
ஆண்குறி..

நிலவல்ல, மலரல்ல,
நான் பெண்..
த்தூ…நீதான் ஆண்.

புலியை முரத்தால் அடித்தாள்..
சாதனையல்ல-அது
பெண் இயல்பு..

கள்ளிப்பாள் குடித்தும்
சிரித்தது குழந்தை..
அழுதாள் தாய்..

நீ இந்து.
நானுமா இந்து..?
வா கும்பிடுவோம் முனியப்பனை..

வாழ்கிறபோது நரகம்
செத்தபின் சொர்கம்
செருப்பால் அடி கற்பிக்கிறவனை..

பிறப்பு ஒரு முறைதான்
ஏன் சுமந்தாய் சிலுவையை
கழற்றி அடிக்காமல்..

சூழ்ச்சி சண்டை
பாபருக்கும்-ராமருக்கும்
எங்கள் மண்ணை பிடிக்க..

மரத்தினால்
நிழல்,மழை,கூடு-ஒரு
கோடறி..

நாயை விடு..
பூனையிடம் கற்றுக்கொள்..
தேவை விசுவாசமல்ல;எதிர்ப்பு

நிழல் மறு
வெயில் காண்பி
வியர்வையை அறிமுகம் செய்..

மொத பார்வ..
பயங்காட்டுது
கடல்..

தெரியாமல் மிதித்தேன்
மிதித்ததும் கடித்தது
எறும்பு

கொஞ்சூண்டு மழை
துளிர்த்துகிடுச்சு
முள்ளுசெடி..

பன்றி பீ திண்ணும்.
முடிவுக்கு வராதே..
காய்கறி கொடுத்துப் பார்.

சுமைக்குள் உடல்
உயரத்தில் ஏறுகிறது
நத்தை..

பசியால் செத்த பிணம்
கல்லறை மீது
படையல்..
-மேலுள்ளவை எல்லாம் தமிழ்பித்தனின் கவிதைகள்.அவரோடு இணைந்து எழுதியிருக்கும் தயா கவிசிற்பியும் ஒன்றும் சளைத்தவரில்லை.அவரது கவிதைகளில் சில…

புனிதநூல்.
பக்கங்கள் புரட்டுகின்றன
எச்சில் விரல்கள்.

நாத்து நடாத
கதிர் அறுக்காத சாமிக்குப் பேரு
அன்னலட்சுமி..

பீ கூடையில்
சோத்துசட்டி..
விஞ்ஞானம் வளர்கிறதாம்..த்தூ…மசுரு..

ஒளிர்கிறதா இந்தியா!!!


மனிதனே மலம் அள்ளும் நிலையிலே

இந்தியா ஒளிர்கிறது!

எங்களுக்கு மட்டும் இது

புனிதத் தொழிலோ??

அந்த மலத்தினை வாயில்

தினிக்கும் நிலையிலே

இந்தியா ஒளிர்கிறது !

திண்ணியத்தின் மலம் என்ன

எங்களுக்குத் தீனியோ??

மோடியின் மத வெறிக் கொலையிலே

இந்தியா ஒளிர்கிறது!

இந்துக் கடவுள் என்ன

காவு கேட்கிறதோ??

விவசாயிகள் மரணத்திலே

இந்தியா ஒளிர்கிறது!

உங்களுக்குத் தொழிற்சாலை

எங்களுக்கு கல்லறையோ??

வெக்கங் கெட்ட நாய்களா

எங்களுக்கா

இந்தியா ஒளிர்கிறது ?

“யார் இந்த மகாத்மா?”


வாழ விரும்பிய மக்களை
வாழ்க்கை தளத்தில் இருந்து
வழுக்கி விடவே வழுக்கை தலை.

இந்திய சமஸ்தானங்களில் சாதியை ஒழிக்க
ஈ.வெ.ராமாசாமிகள் உருவாகிவிடக்கூடாது என்பதை
ஊடுறுவி பார்க்கவே மூக்கு கண்ணாடி

பார்ப்பன பன்னிகளின் அருமை பெருமைகளை
பேசுவதற்கே பற்களற்ற பொக்கை வாய்.

பிர்லாவின் மாளிகையில் ஓய்வெடுத்துக் கொண்டே
இந்திய உழைக்கும் மக்களின் கழுத்தை
நெறிப்பதற்காகவே நீண்டு வளர்ந்த
இரு கைகள்

உழைக்கும் மக்களின் விடுதலை போராட்டத்தை
அடக்கி ஒடுக்கவே கையில் கைத்தடி

குஜராத் பனியாக்களின் சொத்துக்களையும்
இந்திய நிலப்பிரபுக்களின் நிலங்களையும்
உழைக்கும் மக்கள் பறித்துவிடுவார்கள்
என்பதற்காகவே, தன்னை பின்பற்ற கோரி
ஒரு முழவேட்டியை உடலில் சுற்றி கொண்ட
எளிமையின் உருவம்,

வெள்ளை எசமானர்களுக்கு சிம்மசொப்பனமாய்
திகழ்ந்த மாவீரன் பகத்சிங்கின்
கழுத்தை முறித்த துக்குகயிறை பார்த்து
புன்னகைத்த முகம்

உலகம் கடவுளுக்கு கட்டுபட்டது
கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்
மந்திரம் பார்ப்பானுக்கு கட்டுபட்டது
இதனை அன்றே சொன்னான் மனு

ஆம்
மக்கள் கடவுள்கள்
காந்தி என்ற மந்திரத்துக்கு கட்டுபட்டவர்கள்
காந்தி என்ற மந்திரமோ பார்ப்பன-பனியாக்களுக்கு
கட்டுபட்டது.
புரிகிறதா?
மணுதர்ம குப்பையில் உருபெற்று எழுந்த
20ம் நூற்றாண்டின் மனுதான்
பொக்கைவாய் காந்தி
அவனின் மக்கள் விரோத பாசிச செயல்களுக்கான
பட்டம்தான் ‘மகாத்மா’ என்பது

மொத்தத்தில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில்
தங்களை அர்ப்பணித்து கொண்ட மாவீரர்களை
வெள்ளையனிடம் காட்டி கொடுக்கும் துரோக
கதாபாத்திரம் தான்
மகாத்மா காந்தி

வரலாறுதோறும் அந்த துரோகம் மீண்டும் மீண்டும்
உருபெற்று எழ முயலும்
நாம் அது உருபெற்று எழும் மனுதர்ம குப்பையை
சோசலிச தீயிட்டு கொலுத்துவோம்
மாமேதை மார்க்ஸ் நமக்கு இதனைத்தான்
கற்பிக்கிறார்.

கோவிலிருந்த அம்மன் சுவரேரி குதித்து வெளியே ஓடினாள்…


கோவிலிருந்த அம்மன்
சுவரேரி குதித்து வெளியே ஓடினாள்
பெண்கள் யாரும் வராததால்
அம்மன் கருவறை நோக்கி வந்த
அர்ச்சகரைப் பார்த்து.

– ஜெகதீஸ்வரன்.