விபசாரம் என்பது ஒழுக்கத்திற்கு விரோதமல்ல …


மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம். அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூறு இருக்குமானால் அதை முதலில் களைந்தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும். மனித ஜீவ கோடிகளின் திருப்திக்கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதையே செய்ய வேண்டும்.

குடி அரசு – 17.08.1930

மக்களின் அன்பும் காதலும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அது இன்னவிதமாக இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்ப்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில் காதல் என்பது ஜீவசுபாவமானது. அதை ஏதோ ஒரு நிர்பந்தத்திற்காகத் தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமேயாகும். அன்பு, காதல் ஆகியவைகள் ஏற்படுவது ஜீவனுக்கு இயற்கை சுபாவம் என்றும் அது சுதந்திரமுடையதாயும் உண்மையுடையதாயும் இருக்க வேண்டுமென்றும் அதை ஒரு இடத்திலாவது ஒரு அளவிலாவது கட்டுப்படுத்துவது என்பது ஜீவ சுபாவத்திற்கும் இயற்கைத் தத்துவத்திற்கும் மீறினதென்றும் ஒப்புக் கொள்ளுகின்ற மக்கள் அன்பு ஒருவரிடம் தான் இருக்க வேண்டும்; காதல் ஒருவரிடம்தான் இருக்கவேண்டும் என்று சொல்ல முன் வருவது முன்னுக்குப் பின் முரண் என்றே சொல்லுவோம். ஆனால் அநுபவத்தில் உள்ள சில சவுகரிய அசவுகரியங்களை உத்தேசித்து அன்பும் காதலும் கட்டுப்பாட்டுக்குள் அடங்க வேண்டியதாக ஏற்படலாம் என்பதை நாம் மறுக்க வரவில்லை. அன்றியும் ஒப்பந்தங்களினால் கட்டுப்பட வேண்டியதாகவும் காதல் பெருக்கால் தானாகவே கட்டுப்பட்டு விட்டதாகவும் போனாலும் போகலாம். அம்மாதிரி நிலைமைகளில் இம்மாதிரிக் கேள்விக்கே இடமில்லை. ஆதலால் அப்படிப்பட்ட காரியங்களை அவரவர்கள் இஷ்டத்திற்கே விட்டு விட வேண்டியது அவசியமாகும்.

குடி அரசு – 12.10.1930

சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததேயாகும்.. ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தையும் சிறிதும் பொருத்தமற்றதேயாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைக்கு மாத்திரம் தேவையுடையதாகயிருக்கலாம். ஆன போதிலுங்கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்னவென்றால் மேலே சொல்லப்பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தையின் தத்துவங்களையும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்படாமலும் ஆண்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு கட்டுப்படாமையும் அதைப் பற்றி லஷியம் செய்யாமையுமேயாகும்.

மற்றும் வேறொரு அத்தாட்சியும் என்னவென்றால் மக்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்புத் தவறுதலும் விபசாரத்தனமும் கூடாது என்று பொதுவாக இருபாலர்களுக்குத் தானாகத் தோன்றாமலிருப்பதோடு பலர் கற்பித்தும் அதற்காகப் பல நிபந்தனைகளைக் கூட ஏற்படுத்தியும் மற்றும் எவ்வளவோ பயங்களைக் காட்டியும் அதனால் சிலராவது அடிதடி விரோதம், கொலை, உடல் நலிவு முதலியவைகளால் கஷ்டப்படுவதை நேரில் காணக்கூடிய சந்தர்ப்பங்களிருந்தும் இவ்வளவையும் மீறி மக்களுக்குக் கற்புக்கு விரோதமாகவும் விபசாரத்திற்கு அனுகூலமாகவும் உணர்ச்சியும் ஆசையும் ஏன் உண்டாக வேண்டுமென்பதைக் கவனித்தால் அது தானாக விளங்கும். இயற்கையோடு இயைந்த வாழ்வு எது என்பதையும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வு எதுவென்பதையும் எவ்வித நாட்டுப்பற்று, நடப்புப் பற்று, பிறப்புப் பற்று என்பதில்லாமல் நடுநிலையிலிருந்து தன் அநுபவத்தையும் தன் மனதில் தோன்றிய, தோன்றும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் ஒரு உதாரணமாகவும் வைத்துக் கொண்டு பரிசுத்தமான உண்மையைக் காணுவானேயானால் அப்போதும் கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாகக் கட்டுப்படுத்த உண்டாக்கப்பட்ட சுயநல சூட்சி நிறைந்தது என்பதும் தானாகவே விளங்கிவிடும். மற்றும் விபசாரம் என்பது ஒருவனுடைய “பாத்தியதைக்கும்” ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாட்டிற்கும் மாத்திரம் விரோதமே தவிர உண்மையான ஒழுக்கத்திற்கு விரோதமல்ல

பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் என்பன பொது ஜனங்களில் யாருடைய தனி சுதந்திரத்துக்கும் பாதக மேற்பட்டதாகவும் அதுவும் பிரயோகத்தில் சிறிதும் பாரபக்ஷம் உயர்வு தாழ்வு தத்துவம் கொண்டதல்லாததாகவும் இருக்கவேண்டுமென்பதோடு எல்லாவற்றையும் விட அவை முக்கியமாக இயற்கையோடியைந்ததாகவுமிருக்க வேண்டும். அப்படிப்பட்டவைகளும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பாதகமுண்டு பண்ணாததாகவுமிருக்க வேண்டும். நியாயமான என்றதினாலேயே எது நியாயம்? என்பதற்காக “தர்மசாஸ்திரங்களை”த் தேட வேண்டும் என்பது கருத்தல்ல. (மற்றெப்படி கண்டுபிடிப்பதென்றால் ஒருவன் தனக்கு நியாயம் என்று சொல்லப்படுவதானது பிறத்தியானும் அதையே தனக்கும் நியாயமென்று சொன்னால் அவன் முதலில் சொன்னவன் ஒப்புக்கொள்ளுகின்றானா என்று பார்த்து நிர்ணயிப்பதேயாகும். அதாவது இருவருக்கும் ஒன்று போன்றது) அன்றியும் அறிவுக்கும் சாத்தியத்திற்கும், அநுபவத்திற்கும் ஏற்றதாகவும் அவசியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

இப்படிக்கெல்லாம் இல்லாமல் வெறும் நிர்ப்பந்தத்திற்கு நாணயமற்றதும் அறிவுக்கும் அநுபவத்திற்கும் ஒவ்வாததானது மான விஷயங்களுக்காக வலுத்தவர்கள் தந்திரக்காரர்கள் தங்களுக்குத் தோன்றின படிக்கெல்லாம் கட்டுப்பாடுகள் செய்து கொண்டு போவதானது எவ்விதப் பயனையும் தராததோடு மனித சமூகத்திற்கு வீண் கஷ்டத்தை உண்டாக்கி வருவதோடு, அது வெறும் அடிமைத்தனத்தையும், அறிவுத் தடையையும் தான் உண்டாக்கும்.

மனிதனின் ஜீவசுபாவம் என்னவென்றால் உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையுமேயாகும். உணர்ச்சியின் காரணமாய் பசி, நித்திரை, புணர்ச்சி மூன்றும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம். இந்திரியங்களின் காரணமாய்ப் பஞ்சேந்திரியங்களும் அதாவது சரீரம், வாய், கண், மூக்கு, காது ஆகியவைகளின் செயல்களையும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம்.

ஆகவே பொது உணர்ச்சியும் இந்திரிய செயலும் மனிதனுக்கு ஆசையை உண்டாக்கிக் கொண்டேயிருக்கின்றது. ஆசையின் காரணமாய் எதையும் ஆசைப்படுவதும் அதுவும் அனேகமாய் அளவுக்கடங்காமல் மேலும் மேலும் போய்க் கொண்டிருப்பதும் சுபாவமாகவே இருக்கின்றதைப் பார்க்கின்றோம். ஆகவே உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையும் மனிதனால் சாமான்யத்தில் கட்டுப்படுத்தக் கூடியதல்ல. யாராலாவது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றால் அப்படிப்பட்டவரைப் பற்றி நாம் இங்கு பேச வரவில்லை. நாம் சொல்லுவதும் அவருக்குச் சம்பந்தப்பட்டதல்ல. (அவர்கள் பல லட்சத்திற்கு ஒருவர் இருப்பார்களோ என்னமோ) அந்தப்படிக்கில்லாத சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும் இந்திரிய செயலையும் ஆசையையும் கட்டுப்படுத்தும்படியானதாகக் கொள்கைகளை ஒழுக்கங்களை கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவாணியாகுமா? செலாவாணியாவதாயிருந்தாலும் அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளைக் கவனிக்க வேண்டாமாவென்று தான் கேட்கின்றோம்.

குடி அரசு – 26.10.1930

ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்க வேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும்போது நமது புருஷர்கள் இரண்டு பெண்டாட்டிகளுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம் முறையை இஷ்டப்படுபவர்கள் கையாளுவதில் எவ்விதத்தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பிராயமாகும்.

புருஷன் பெண்சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண் சாதி என்பவர்களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத்தில் நமது அபிப்பிராயமாகும்.

ஆகவே, எந்தக் காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவ குண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தை மறுக்காமல், அடக்காமல், சுயேச்சையாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க சௌகரியம் இருப்பதுதான் மனித சமூகவிடுதலை என்றும் சொல்லுகின்றோம்.

முகம்மது நபியும் – வள்ளுவப் பெரியாரும் …


1400 ஆண்டுகளுக்கு முன் அரபு நாட்டில் தோன்றிய முகமது நபி அவர்களும், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தோன்றிய வள்ளுவப் பெரியாரும் அடிப்படைத் தத்துவத்தில் சமமான சீர்திருத்தவாதிகளேயாவர்.

நபிகள் நாயகம் அவர்கள் மக்களுக்குப் போதித்த நல்லறிவுக் கருத்துகளும், வள்ளுவப் பெருந்தகையார் மக்களுக்குப் போதித்த அறிவுக் கருத்துகளும், ஒரே தன்மையுடையன என்றே கூறலாம். நபிகள் நாயகம் அரபு மக்களின் காட்டுமிராண்டித்தன்மையை எதிர்த்துப் போராடி, அறிவுக் கருத்துக்களை நாட்டில் பரப்பினார்.

வள்ளுவப் பெருந்தகை ஆரிய மக்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்ட காட்டுமிராண்டித் தன்மைகளை எதிர்த்துப் போராடி அறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார்.

நபிகள் நாயகம் அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர். வள்ளுவப் பெருத்தகையார் அறிவு நம்பிக்கை கொண்டவர். நபிகள் நாயகம்கடவுளால் தனது கொள்கைகளை மக்களுக்கு அறிவுறுத்த தூதராக அனுப்பப்பட்டவர் என்று சொல்லப் பட்டவர்.

வள்ளுவப் பெருந்தகையார் கடவுள் ஒருவர் இருப்பதாகவோ, கடவுளுக்கும் தனக்கும் யாதாவதொரு சம்பந்தம் இருப்பதாகவோ சொல்லவேயில்லை; கருத்துக் கொண்டிருப்பதாகக் காட்டவும் இல்லை.

நபிகள் நாயகம் தன் கருத்தில், தனது உபதேசத்தில் வெற்றி பெற்றார். பல கோடி மக்களைத் தன்னைப் பின்பற்றுபவர்களாகவும், சிஷ்யர்களாகவும் கொண்டு ஒரு மாபெரும் மதத் தலைவராகவும் ஆனார்.

வள்ளுவப் பெருந்தகையோ எவருக்குமே சமயத் தலைவராகவில்லை. தன்னைப் பின்பற்ற தனக்கு சிஷ்யர்களாக ஒருவருமே இல்லாதவரானார்; இதன் காரணம் என்ன என்றால் அரபு நாட்டில் ஆரியன் (பார்ப்பனன்) இல்லை; தமிழகத்தில் (இந்திய நாட்டில்) பார்ப்பனன் எல்லாத் துறையிலும், மற்ற மக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கங் கொண்டு இருந்ததே, இருப்பதே ஆகும். தமிழ் நாட்டில் மாத்திரமே வள்ளுவரைப் பாராட்டுவோர் சிலர் (இப்போது சற்று அதிகமானவர்கள்) உண்டு என்றாலும், அவர்கள் வள்ளுவரைப் பின்பற்றுபவர் என்று சொல்லி விட முடியாது.

பாராட்டுகிறவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். நபிகள் நாகயக்தை முஸ்லிம் மக்கள் எல்லோரும் கடவுளின் தூதர் என்றே கருதி பக்தியும், பயமும் மரியாதையும் காட்டி வருவதோடு, நாயகத்தைப் பின்பற்றி வழிபடுவதாகவே கூறுகிறார்கள்.

வள்ளுவப் பெருந்தகையாரைத் தமிழகத்தில் வள்ளுவர் கொள்கைக்கு எதிரியான சைவன், தன் சமயத்தவர் என்று சொல்லி அவரது பெருமையைக் கெடுத்தான்.

வள்ளுவப் பெருந்தகையாகரைத் தமிழகத்தில் சைவனாவது – வைணவனாவது நாயன்மார்களைப் போன்றோ, ஆழ்வார்களைப் போன்றோ கூட எவனும் கருதுவதில்லை. சைவனுக்குத் தேவாரம், திருவாசம், பெரியபுராணம் முதலிய பக்தி நூல்களும் புராணங்களும்தான் சமய ஆதாரமாகவும், சமய வழிபடு நூல்களாகவும், வைணவனுக்கு இராமாயணம், பாரதம், பாகவதம், நாலாயிரப் பிரபந்தம் முதலிய பக்தி நூல்களும், புராணங்களும்தான் சமய ஆதாரங்களாகவும், சமய நூல்களாகவும் இருக்கின்றனவே ஒழிய, இவர்களுக்குச் சமயத் தலைவரோ, சமயத் தலைவர் கூறிய ஒழுக்க நூல்களோ காண்பதற்கு இல்லை; மற்றும் நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவோருக்குக் கடவுள் உண்டு; கடவுள் கட்டளை உண்டு; அக்கடவுளிடம் ஒழுக்கம், உயர்வு உண்டு.

சைவர், வைணவர் ஆகியோருக்கும், வள்ளுவப் பெருந்தகையைப் பாராட்டுவோருக்கும் ஒரே கடவுள் இல்லை; ஆனால் பல கடவுள்கள் உண்டு; அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையும், பெயரும், நடப்பும் கொண்டதாகும் என்பதோடு, கடவுள்களுக்கும், ஒழுக்கம் என்பவற்றிற்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாத தன்மை உடையனவாகவே இருக்கும். கடவுளிடம் ஒழுக்கம் இருப்பதாகச் சொல்லலாம்; ஆனால் நடத்தையில் இருக்காது.

நபிகள் நாயகம், ஒரே ஆண்டவன் உண்டு; அவன் ஊர்பேர் உருவம்,பிறப்பு இறப்பு,விருப்பு வெறுப்பு வேண்டியது வேண்டாதது இல்லாதவன் என்று சொன்னதோடு, இருப்பதாகச் சொல்லுவது, பாபம்,தவறு, அறியாமை மடமை என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

சைவனும், வைணவனும், வள்ளுவரைப் பாராட்டுகிறவனும் நபிகள் நாயகம் சொன்ன கடவுள் தன்மைக்கு மாறாகப் பல கடவுள்களையும், அவற்றிற்குப் பல உருவங்களையும், பல பிறப்புகளையும், இறப்புகளையும், விருப்பு வெறுப்புகளையும், மனைவி மக்களையும், மற்றபடி கொலை, கூடாஒழுக்கம் முதலிய பாதகச் செயல்களையும், மற்றும் பல காட்டுமிராண்டித்தனமான குணங்களையும், நடப்புகளையும் கொண்டவைகளாகக் கற்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சிவனோ, விஷ்ணுவோ, பிரம்மாவோ மற்றும் சைவ, வைணவ சமயத்தவர் கடவுள்களாகக் கருதும் மற்றவர்களோ கடவுள்கள் அல்ல; தேவர்களே ஆவார்கள் என்பதுதான் அவர்களைப் பற்றிய ஆதாரங்கள், வேத, சாஸ்திரங்கள் கூறுவனவாகும்.

ஏனெனில், இவர்கள் எல்லோரும் மேற்கண்ட ஒரு கடவுளை ஒரு கடவுள் வணங்கியதாகவும், அவைகளைக் குறித்து தவம் செய்ததாகவும், ஒருவரிடம் ஒருவர் வரம் பெற்றதாகவும், ஒருவரிடமிருந்து ஒருவர் தோன்றியதாகவும், ஒருவரை ஒருவர் தோற்றுவித்ததாகவும், மற்றும் பல ஆபாச காரியங்கள் செய்ததாகவும் கூறப்பட்டிருக்கின்றன. இப்படிக் கூறி இருப்பதானது வேத, சாஸ்திர, உபநிஷத், புராண இதிகாசங்களிலேயே ஒழிய, சமய விரோதிகளாலோ, வேறு சமயத்தார்களாலோ அல்ல; நபிகள் நாயகத்தைப் பின்பற்றுவதாகக் கூறி இஸ்லாம்களாக இருக்கிற மக்கள் யாவரும் நபிகள் நாயகம் சொன்னபடி நடப்பதாகவும், நாயகம் நடந்தபடி நடப்பதாகவும் சொல்லி நடித்து வருகிறார்கள். ஆனால் சைவனோ, வைணவனோ, வள்ளுவப் பெருந்தகையாரைப் பாராட்டிப் போற்றுபவனோ, அவரவர் கடவுள்கள் சொன்னது போலவோ, நடந்தது போலவோ நடப்பது கிடையாது; நடிப்பதும் கிடையாது. சாம்பலைப் பூசிக் கொண்டால் சைவன் செம்மன், களி மண் பூசிக் கொண்டால் வைணவன்; குறளில் இரண்டு பாட்டைப் பாடிவிட்டால் குறளன் என்று ஆகிவிடுகிறார்கள்.

ஆனால், அதோடு கூடவே சிவன், விஷ்ணு முதலான கடவுள்களை அடைய எப்படிப்பட்ட கொலைபாதகச் செயலையும், ஒழுக்கம் கெட்ட செயலையும் செய்யலாம் என்கின்ற எண்ணத்தையும், நடத்தையையும் கொண்டவர்களாகவே பெரும்பாலான சைவர்கள், வைணவர்கள் நடந்து வருகிறார்கள்; நடக்க ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

நபிகள் நாயகம் அவர்கள் பக்தி, அன்பு, – ஒழுக்கம் ஆகிய மூன்றையும் ஆண்டவன் கட்டளையாக அறி-வுறுத்தியிருக்கிறார். இன்று பெரும்பாலாக நாம் காணும் முஸ்லிம்களிடம் பக்திதான் அதிகமாக இருக்கிறது. அன்பும் ஒழுக்கமும் இருக்கின்றது என்றாலும், பக்தி இருக்கின்ற அளவில் 10 இல் 100 இல் ஒரு பங்கு கூட காண முடியாது. இப்படி இருப்பது முஸ்லிம்களிடையே மாத்திரம் அல்ல; இது மனித ஜீவ இயற்கையே ஆகும். எப்படி எனில் பக்திக்காகப் பொருள் நட்டமோ, ஆசை பங்கமோ அவசியமில்லை. உதாரணமாக 5 வேளைத் தொழுகையின் மூலம் பெரிய பக்தியைக் காட்டி விடலாம். இதற்குப் பொருள் நட்டம் அடைய வேண்டிய அவசியமில்லை; ஆனால் விவகாரம் கூடாது; திருட்டு கூடாது; மோசடி கூடாது; பொய் கூடாது; பித்தலாட்டம் கூடாது; உபகாரம் செய்ய வேண்டும்; அன்பு காட்ட வேண்டும் என்பன போன்ற விஷயங்களைக் கடைப் பிடிப்பதனால் இதில் பொருள் நட்டமும், லாபக் குறைவும், ஆசைப் பங்கமும், மனக்குறையும் (முதலிய பல) ஏற்படுகின்றன. இதனாலேயே உலகில் ஒழுக்கமுடையவர்களை விட பக்தர்களும், பக்திமான்களும் உலகில் மலிந்து கிடக்கிறார்கள். ஒழுக்க உபதேசிகளைவிட பக்தி உபதேசிகள் ஏராளமாய் கிளம்பிவிடுகிறார்கள். முஸ்லிம்களும் மனிதர்களே ஆதலால் மனிதத் தன்மையை அவர்களுக்கும் புகுத்தினேன்.

வள்ளுவப் பெருந்தகையார் கடவுளையோ, பக்தியையோ காட்டவில்லை; ஒழுக்கத்தையும், அறிவையுமே அதிகமாக முக்கியமாகக் காட்டியுள்ளார். நபிகள் நாயகம் அவர்களும் அறிவைப் பெருமைப்படுத்தி இருக்கிறார்; என்றாலும், தான் சொன்னவற்றை எல்லாம், அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்; அறிவுக்கு ஏற்றால் ஏற்றுக்கொள்; இல்லாவிட்டால் தள்ளிவிடு என்று சொல்லவில்லை. ஏனெனில், நாயகம் தாம் சொல்லுவதாக எதையும் சொல்லவில்லை. எல்லாம் பெரிதும் ஆண்டவன் சொல்லச் சொன்னதாகப் பொருள்படும்படியாகவே சொல்லியிருக்கிறார். ஆண்டவனால் சொல்லச் செய்தவைகளை மனிதன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பது என்றால், அப்போது ஆண்டவனின் கருத்து என்ன ஆவது? என்கின்ற பிரச்சினை எழும்.

ஆதலாலேயே இஸ்லாத்தில் அறிவுக்கு மதிப்பு இருந்தாலும், நபிகள் நாயகம் சொன்னவற்றிலும், குர் ஆனில் சொல்லப்படுபவைகளிலும் அய்யம் கொண்டோ, தெளிவு ஏற்படவில்லை என்றோ, ஆராய்ச்சி செய்ய எந்த முஸ்லிமும் கருதக்கூடாது; அல்லது முயலக்கூடாது என்பது முஸ்லிம்களின் கொள்கைகளில் ஒன்று; (அது) அமலில் இருக்கிறது. அதற்கு மற்றும் ஒரு காரணம் என்னவென்றால் ஆண்டவன் சொன்னதாகச் சொல்லப்படுபவை எல்லாம் அறிவுக்குப் பொருத்தமானது என்பது மாத்திரமல்லாமல், எக்காலத்திற்கும் பொருத்தமானது என்றும் கருதப்படுகிறது.

அவை இன்றைக்கு யாருக்கு எப்படிப்பட்டாலும், அவை நல்ல எண்ணத்தோடும், உண்மையான நம்பிக்கையோடும், மக்கள் பால் உள்ள மெய் அன்போடும் சொல்லப்பட்டவை என்பதை எந்த அறிவாளியும் ஒப்புக் கொண்டே தீருவான். வள்ளுவப் பெருந்தகையார் ஆண்டவன் எனக்குச் சொல்லி உனக்குச் சொல்லச் சொன்னான் என்று சொல்லாவிட்டாலும், அவர் தமக்குச் சரி என்று பட்டதையும், (தாம்) உண்மை என்று கருதியதையும் மக்களுக்கு நலம் பயக்க வேண்டும் என்ற எண்ணத்தின் மீதே பல கூறியிருக்கிறார். என்றாலும்,

யார் யார் வாய்க் கேட்பினும், அவற்றின் மெய்ப் பொருள் காண்பது மனிதன் கடமை என்றும், எது பற்றியதாயினும் மெய்ப்பொருள் காணவேண்டியது மனிதனின் கடமை என்றும் கூறியிருக்கிறார். இவர் மாத்திரம் அல்லாமல் புத்தர் பெருமான், நான் சொல்வதைக் கூட நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டாம்; உன் ஆராய்ச்சி, அறிவு, என்ன சொல்லுகிறதோ அதை ஏற்றுக் கொள்; நம்பு என்றார். இவர்கள் ஏன் இப்படிச் சொன்னார்கள் என்றால், இவ்விருவரும் தாங்கள் மனிதர்கள் என்று தங்களை முடிவு செய்து கொண்டதோடு, மனிதத் தன்மையை உணர்ந்தவர்கள். ஆதலால் தங்கள் கருத்து என்கின்ற தன்மையில் பேசி இருக்கிறார்கள். அன்றியும் தங்களுக்கு மேற்பட்ட ஒரு கடவுள் இருந்து கொண்டு தங்களை நடத்துகிறார்; தங்களைச் சொல்லச் சொல்லுகிறார் என்கின்ற நம்பிக்கை இல்லாதவர்கள்; இருப்பதாகக் கூறாதவர்கள்.

எப்படி இருந்தாலும், நபிகள் பெருமானும், வள்ளுவப் பெருந்தகையாரும் மக்கள் நல்வாழ்வுக்கு ஆகவேண்டிய கருத்துகளை – காரியங்களை நல்ல எண்ணத்துடன் எடுத்துக் கூறியவர்களேயாவார்கள். மதவேறுபாட்டால் பெரியோர்கள் எல்லாம் மதவாதிகளாகக் கருதப்படுபவர்களாக ஆகிவிட்டதால், மக்கள் யாவருமே மதக்காரர்களாகப் பிரிவினைப்பட்டவர்களாகி விட்டதால், ஒருவர் சொன்னதை அவர் மதக்காரர் அல்லாதவர் சரியானபடி மதிப்பதில்லை; கொள்ளுவதும் இல்லை. இதற்கு மற்றொரு இயற்-கைச் சங்கடம் என்னவென்றால், இப் பெரியார்கள் சொன்னவை எல்லா மக்களுக்கும், எக் காலத்திற்கும் பொருத்தமானது; ஏற்றுக் கொள்ளத் தக்கது என்கின்ற வாதமாகும். இந்த வாதம் இயற்கைக்கு முரண்பட்டதாகும். காலம் மாறுதல் அடையத்தக்கது; இயற்கை சக்திகள் என்பவை எல்லாம் மாறுதல் அடையத் தக்கவையாகும்; அவற்றிற்கு ஏற்பக் கருத்துகளும் மாறும் இயல்புடையதாகும்.

எனவே, மாற்றம் ஏற்படவேண்டும் என்று சொல்லப்படுவதாலேயே பெரியார்களுடைய கருத்துகள் தவறுடையதாக ஆகிவிடாது.