“நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் ரெண்டு பேருக்கும் நாக்குதான் கொஞ்சம் நீளம். ஓயாமல் நக்கித் தொலைக்கிறார்கள் ”


இந்து புராணக் குப்பைகளில் சூப்பர் ஸ்டார் அவதாரம் என்று போற்றப்படும் கிருஷ்ணன், என்ற கிரிமினலின் லீலைகள் எப்படி வருணிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் படித்திருப்போம். கிருஷ்ணன் கோபியர்களின் சேலையைப் பிடித்து இழுத்தது, குளத்தில் குளிக்கும் போது எட்டிப் பார்த்தது போன்ற ‘ஈவ் டீசிங்’ வேலைகளை அன்றைய வியாசனில் இருந்து நேற்றைய கண்ணதாசன் வரை எப்படியெல்லாம் விதந்தோதி எழுதியிருந்தார்கள் என்பதைப் பார்த்திருக்கிறோம்.

அவன் துவாபர யுகத்தில் வெண்ணை திருடித் தின்றதையும், கோபியரோடு குத்தாட்டம் போட்டதையும் புராணமாகவும் வரலாறாகவும் போற்றும் ஒரு தேசத்திற்கு கலியுகத்தில் மீண்டும் ஒரு ‘அவதாரம்’ எழுந்தருளினால் காட்சிகள் எப்படியிருக்கும் என்பதை கடந்த சில நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த மாதம் 6ம் தேதி இந்திய ஆளும் வர்க்கத்தின் சமூகத்திலும் தரகு முதலாளிகளின் சமூகத்திலும் ‘ஒபாமாவதார்’ எழுந்தருளியது. அவதாரம் சும்மா வருமா…? கூடவே உளவுத்துறை, ஒற்றர்கள், அமெரிக்க அரசு அதிகாரிகள், பாதுகாப்புக்காக கமாண்டோக்கள், பத்திரிகையாளர்கள் என்று தன்னோடு சேர்த்து ஒரு மூவாயிரம் பேரையும் கூட்டி வந்துள்ளார். இந்த மந்தையையும், மந்தையின் மேய்ப்பரையும் பாதுகாக்க அமெரிக்க அரசு நாளொன்றுக்கு 900 கோடி ரூபாய் செலவு செய்கிறதாம். மூன்று நாள் கணக்கு – சுமார் 2700 கோடிகள்! கொஞ்சம் காஸ்ட்லியான அவதாரம் தான். போகும்போது “பில்லை சார் கையில கொடுத்திடு” என்று மன்மோகன்சிங்கை கையைக் காட்டி விட்டு பரிவாரங்கள் கிளம்பிவிடும். 2700 கோடி என்பது அமெரிக்காவின் செலவுக் கணக்கு தான் – இதற்குச் சற்றும் குறையாத வகையில் இந்திய அரசும் மொய் வைத்திருக்கும். மொய்க் கணக்கு நோட்டை நாம் எந்தக் காலத்திலும் பார்க்க முடியாது.

வந்து இறங்கியுள்ள துரைமார்களுக்கு துரைசானிகளுக்கும் மனம் கோணாமல் சேவை செய்து விட வேண்டும் என்ற பதைப்பில் இந்திய ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் நாணிக் கோணிக் கொண்டு நிற்பதைக் காணக் கண் கோடி வேண்டும். மும்பை தாஜ் ஓட்டலின் அத்துணை அறைகளையும் ஒபாமாவதாருக்கும் அவரின் சம்சாரவதாருக்குமாகச் சேர்த்து முன்பதிவு செய்து விட்டார்கள்.

சீமைத்துரைக்கும் அவரது பரிவார தேவதைகளுக்கும் லோக்கல் சோம பானமா ஊத்திக் கொடுக்க முடியும்? இவர்களுடைய தாக சாந்திக்காக வாங்கப்பட்டிருக்கும் சீமை பானம் பாட்டில் ஒன்றின் விலை மட்டும் 5 லட்சம் ரூபாயாம்! மூவாயிரம் பேருக்கும் மூன்று நாட்களுக்கு “தண்ணி செலவு” மட்டும் எவ்வளவு ஆகுமோ தெரியவில்லை. தலைக்கு “ஆஃப்” அடித்தாலும் மூணு நாளுக்கு 225 கோடி ரூபாய் கணக்கு வருகிறது.

அப்புறம் இந்த 3000 பேருக்கும் கம்பெனி கொடுத்த வகையில் நம்மூர் அதிகாரிகள், அமைச்சர் பெருமக்களுக்கான செலவு, அனைவருக்குமான சாக்கனா செலவு இதெல்லாம் தனி. மொத்தத்தில் என்ன செலவு ஆகியிருக்கும் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இதெல்லாம் அரசாங்க ரகசியங்கள். அமெரிக்க சக்ரவர்த்தி திவாலாகி டவுசர் கிழிந்த நிலையில் விஜயம் செய்யும்போதே இவ்வளவு தடபுடலான வரவேற்பு! இன்னும் இருக்கவேண்டிய படி இருந்தால் என்ன நடக்குமோ, கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

“ரெம்ப நல்லவர்” என்று அமெரிக்காவிடம் பேரெடுத்தவரான, இதே மன்மோகன் சிங் தான் அழுகி வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்க அத்தனை பகுமானம் காட்டியவர். முதலாளித்துவ ஊடகங்களுக்கு இந்த ஆபாசங்களெல்லாம் ஒரு பொருட்டேயில்லை – மிஷேல் ஒபாமா “பாண்டி” விளையாண்டது, பல்லாங்குழி விளயாண்டது, புருசனோடு சேர்ந்து டப்பாங்குத்து ஆடியது போன்ற அவதார லீலைகளையெல்லாம் கதை கதையாக முன்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு. நாளன்னிக்கு புராணம்.

செத்துப் போன பார்ப்பன இந்து மதத்தைப் புதைக்காமல் விட்டதைப் போல இந்த அதிகாரவர்க்கத் தரகர்களையும் விட்டுவிட்டால் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின் இந்த ஒபாமாவதார ஆபாசங்களும் கிருஷ்ணாவதாரக் கதையைப் போல் ஒரு புராணமாக செட்டில் ஆகிவிடும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை.

இந்தியாவின் ‘பெரும்’ இடதுசாரிக் கட்சியான சி.பி.எம் கட்சி தமது பலத்தை அணிதிரட்டாமல் ஒபாமாவுக்கு வெறும் அடையாள எதிர்ப்பு காட்டப்போதாக அறிவித்ததையே பொறுக்க முடியாமல் ஆன்மீகப் பேரொளி சிரீ.சிரீ ரவிசங்கர் கண்டித்திருக்கிறார்.

ஆளும் வர்க்கத்துக்கே மிகவும் பிடித்தமான ‘தீவிரவாதப்’ பிரச்சினையில் தான் சரியாக ஒத்துழைக்கவில்லை என்பது அவர்களது மனக்குறை. அதற்கே இந்த சாமியார் குதிக்கிறார். ’அதிதி தேவோ பவ:’ என்ற ஹிந்து கலாச்சாரமே பாதிக்கப்பட்டு விட்டதாக பதறுகிறார். ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாகக்கூறி டாக்டர் ஸுப்ரமண்யம் ஸ்வாமி அவர்கள், ஸுப்ரீம் கோர்ட்டில் ஒரு ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன் போடக்கூடும். ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளும் களத்தில் குதிக்கக் கூடும்.

ஒபாமா வருகையின் ஒவ்வொரு நொடியும், ஆளும் வர்கத்தின் பவ்யமும், தரகு முதலாளி வர்க்கத்தின் ஏக்கப்பார்வைகளும் முதலாளித்துவ ஊடகங்களில் விரிவாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு காட்சி தான் பாக்கி; ஒபாமாவும் மிஷேலும் நடந்து வரும் போது ‘எசமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்…’ என்று பாடிக் கொண்டே சோனியாவும் மன்மோகனும் துண்ணூறு பூசிக் கொள்ளும் காட்சி!

வாராது வந்த இந்த மாமணி ஒன்றும் சும்மாங்காச்சுக்கும் இந்தியாவுக்கு இன்பச் சுற்றுலா வரவில்லை. இப்போது அமெரிக்காவில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. பொருளாதாரப் பெருமந்தத்தைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஒபாமா, தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முடியவில்லை. அவர் கொண்டுவந்த காப்பீட்டு மசோதா அமெரிக்கர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது உள்நாட்டில் பணப்புழக்கத்தையும் வேலைவாய்ப்பையும் தூண்டிவிட்டாக வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

இந்தப் பின்னணியில்தான் இந்தியா இராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதத்திற்கு உயர்த்தியுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடிகள் ($30 Billion) மதிப்புக்கு இராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய இந்திய அரசு பட்ஜட் ஒதுக்கீடு செய்துள்ளதையும் இதனுடன் இணைத்துப் பார்த்தால் ஓரளவு தெளிவான சித்திரம் கிடைக்கும்.

மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அரசுச் செயலர் ராபர்ட் ஓ ப்ளேக்கின் கூற்றுப்படி, அமெரிக்காவின் F-16 ரக போர் விமானங்கள் இந்திய பாதுகாப்புத் துறையின் டென்டரில் பங்கேற்கிறது – இந்த டென்டரை அமெரிக்கா வென்றால் அது அமெரிக்காவில் 27,000 வேலைகளை உருவாக்கும் என்கிறார் பிளேக். அவர்கள் எப்போதுமே தொழிலாளிகளுக்கு கிடைக்கப்போகும் “ஜாப்” பற்றித்தான் கணக்கு சொல்வார்கள். முதலாளிகளுக்கு கிடைக்கப் போகும் இலாபக்கணக்கை சொல்வது அமெரிக்க மரபு அல்ல. அந்த இலாபமும், இந்திய பாதுகாப்புத் துறையின் சுயேச்சைத் தன்மையைக் குலைப்பதால் கிடைக்கப் போகும் பலனும் தனி கணக்கு. முதலில் F-16 ரக போர் விமானங்கள் டென்டரில் இருந்து நிராகரிக்கப் பட்டதையும், பின்னர் அதை திரும்பச் சேர்த்துக் கொண்டதையும் இப்போது நினைவு படுத்திப் பாருங்கள்.

இதுல ஒரு உள் குத்தும் இருக்கிறது. பாக்கிஸ்தான் விமானப்படையிலும் இந்த எஃப்-16 விமானங்கள் இருக்கின்றன. இந்தியாவிலும் வரப்போகின்றன என்றால் இரண்டில் எது உசத்தியான தேசபக்தி விமானமென்பது தெரியவில்லை.

மேலே சொன்னது இராணுவத் துறையில் மட்டும் தான். உலகளவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15% அணு சக்தியிலிருந்து உற்பத்தியாகிறது. அணு உலைகளினால் ஏற்படும் கதிர்வீச்சு ஆபத்துகளைக் கணக்கில் கொண்டு அங்கே கழித்துக் கட்டப்பட்ட இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவின் தலையில் சுமத்தவும், அணு தொழில் நுட்பத்தில் இந்தியா பெற்றிருக்கும் சுயேச்சைத் தன்மையைக் குலைக்கவும் போடப்பட்டிருக்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அணு உலைகளை அமைப்பதிலுயும் இந்திய அரசு அந்நிய முதலீடுகளை அனுமதித்திருக்கிறது.

இப்படி இறக்குமதி செய்து நிறுவப்படும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பில் இருந்து அந்நிய முதலாளிகளைக் கழற்றி விடும் வகையிலான சட்டத்தையும் அண்மையில்தான் மன்மோகன் அரசு நிறைவேற்றியிருக்கிறது தொழில்நுட்பக் கோளாறுகள், இயந்திரக் கோளாறுகள், பாதுகாப்புக் குறைபாடுகள் போன்றவற்றால் ஏற்படும் விபத்துகளுக்கான பொறுப்பில் இருந்து அமெரிக்க, அந்நிய முதலாளிகளைத் தப்புவிக்கும் CSC (Convention for supplimentary compensation for nueclear damage) ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்து இட்டுவிட்டது. எல்லாம் திட்டமிட்டபடி வரிசைப் படி செய்து முடித்ததற்காக தன் அடிமைகளை ஒரு வார்த்தை பாராட்டி விட்டு ஒரு மேஸ்திரி பார்வை பார்த்து விட்டுச் செல்லவும், அப்படியே சம்சாரத்தோடு தீவாளி கொண்டாடவும் ஒபாமா வந்து விட்டார்.

இந்திய அமெரிக்க அறிவுத்துறை முன்முயற்சி, விவசாயத்துறையில் அமெரிக்கா கொண்டு வரும் உமியையும், இந்தியா கொண்டுவரும் அவலையும் ரெண்டு பேரும் சேர்ந்து ஊதி ஊதித் தின்பதற்கான ஒப்பந்தம், அப்புறம் 4 கோடி குடும்பங்களின் வயிற்றுப் பிழைப்பான சில்லறை வணிகம் முதலான சில்லறை சமாச்சாரங்களை அமெரிக்காவுக்கு திறந்து விடுவதற்கான சுபமுகூர்த்த நாட்கள்.. போன்றவை இந்த விஜயத்தின் போது முடிவாக இருக்கின்றன.

திவான் பகதூர் மன்மோகன் சிங்கின் விசுவாசத்தையும் சேவையையும் மெச்சி, தெற்காசியப் பிராந்திய பாதுகாப்பு என்ற எல்லையைத் தாண்டி, ஆப்பிரிக்கா உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவின் சார்பில் ரோந்துப் பணியில் ஈடுபடும் “பங்களா நாய்” பதவியையும் இந்தியாவுக்கு வழங்கவிருக்கிறார் ஓபாமா.

குனிந்து, வளைந்து கும்பிடு போட்டு, கையது கொண்டு வாயது பொத்தி, “எசமான,.. அப்டியே இந்த பாகிஸ்தானை ‘லைட்டா’ கண்டிச்சி ஒரு வார்த்தை ஒங்க வாயால சொல்லிட்டு போனீங்கன்னா…” என்று ஒபாமாவிடம் இழுத்துப் பார்த்தார் மன்மோகன்சிங்.

“பாகிஸ்தானில் குழப்பம் நிலவுவது (அதாவது நீ குழப்பம் விளைவிப்பது) உனக்கு நல்லதல்ல. பாகிஸ்தான் வளமாகவும், வலிமையாகவும், ஸ்திரமாகவும் இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது” என்று கூறி நறுக்கென்று மன்மோகன் சிங்கின் தலையில் ஒரு குட்டு குட்டி விட்டார் ஒபாமா. டர்பன் மறைத்திருப்பதால், வீக்கம் வெளியில் தெரியவில்லை. “இருக்கட்டும்.. இருக்கட்டும்… அதனாலென்ன.. சும்மா ஒரு இதுக்கு சொன்னேன் மன்னா…” என்று தலையைத் தடவிக் கொண்டுவிட்டார் மன்மோகன்சிங்.

பரமசிவனுக்கு ஒரு பாம்பு. அமெரிக்காவின் கழுத்திலோ இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு பாம்புகள். இருந்தாலும் “நீதான் நல்ல பாம்பு” என்று இந்தியாவுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார் ஒபாமா.

மொதல்ல நல்லவரா இருந்தாதானே அப்புறமா இந்தியா வல்லவராக முடியும்?

திரும்பிச் செல்லும் போது ஒபாமார மிஷேலிடம் சொல்வாராயிருக்கும் – “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் ரெண்டு பேருக்கும் நாக்குதான் கொஞ்சம் நீளம். ஓயாமல் நக்கித் தொலைக்கிறார்கள் ” என்று!

அமைதியாக வாழ்வது என்றால் அனைத்தையும் சகித்துக்கொண்டு அடிமையாக வாழ்வது என்று அர்த்தம்!


‘நீங்கள் எங்களோடு இல்லை என்றால் எதிரியோடு இருப்பதாக அர்த்தம்’ என்ற புஷ் கோட்பாடுதான் இப்போது மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரத்தின் தத்துவம். எதிர்ப்பியக்கங்கள் மற்றும் போராடும் மக்களுக்கு ஆதரவாகப் பேசும் அறிவுஜீவிகள் இந்த கோட்பாட்டின் பெயரால்தான் மிரட்டப்படுகின்றனர். ஆனால் இது திடீரென்று இப்போது அமுல்படுத்தப்படும் ஒன்றல்ல. மக்கள் பிரச்னைகள் தலைதூக்கும்போது எல்லாம் இந்த அரசு இத்தகைய கோட்பாட்டையே கையில் எடுக்கிறது.

முதலில் இவர்களுக்கு போராட்டம் என்பதே பிடிப்பது இல்லை. ‘போராடுவதே சட்டவிரோதமானது’ என்று நினைக்கின்றனர். போலீஸ், நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் உறுப்புகளாக செயல்படுபவர்களும், அரச மனநிலையை சுவீகரித்துக் கொண்டவர்களாக இருக்கும் மிடிள்கிளாஸ் மக்களும் போராட்டங்களை வெறுக்கின்றனர். போராட்டம் என்பது போக்குவரத்துக்கு இடையூரானதாகவும், போராடுபவர்கள் வேலையற்ற முட்டாள்கள் எனவும் சித்தரிக்கப்படுகிறது. பொதுப்புத்தியும், அரசப் புத்தியும் ‘அமைதியான சூழலை’ வேண்டி நிற்க, போராட்டக்காரர்கள் மட்டுமே இந்த அமைதிப் பூங்காவில் சத்தம் போடுபவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆனால் போராட்டம் என்பதே எப்படி தவறான ஒன்றாக இருக்க முடியும்?

மறுக்கப்படும் உரிமைகளுக்காக போராடுவது என்பது ஒரு ஜனநாயக நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை அம்சம். அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாத சூழலில், மக்கள் தங்களின் எதிர்ப்பை போராட்டங்கள் வழியாகத்தான் காட்ட முடியும். ஆனால் அரசும், அதன் அடியாட்களாக செயல்படும் போலீஸும், ராணுவமும் ‘போராடுவதே தப்பு’ என நினைக்கிறது. போராட்டத்துக்கு எதிராகவும், போராடும் மக்களுக்கு எதிராகவும் போலீஸ் மற்றும் ராணுவத்தின் மனநிலையே மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. உடனே, ‘ரயிலை குண்டு வைத்து தகர்ப்பதும் போராட்டம்தானா?’ என்று எவரேனும் கேட்கக் கூடும். எதிர்ப்பியக்கம் ஒன்று எளிய மக்களைப் பாதிக்கும் இத்தகைய வன்முறை வடிவங்களை கைகொள்ளும் என்றால், அரச வன்முறையை எதிர்த்துப் போரிடும் தார்மீக தகுதியை அது இழந்துவிடுகிறது. எனவே மக்களுக்கு எதிரான வன்முறையை எவர் செய்தபோதிலும் மோசமானதே. ஆனால் இந்த அரசு எளிய மக்களின் சாதாரணப் போராட்டங்களை எப்படி எதிர்கொள்கிறது?

வடகிழக்கிலும், காஷ்மீரிலும், தெலுங்கானாவிலும், சட்டீஸ்கரிலும் மட்டுமல்ல… குடிநீர் வேண்டி, சாலைவசதி கேட்டு, பேருந்து வசதிக் கோரி நாள்தோறும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்தபடியேதான் இருக்கின்றன. தலித் மக்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டுமானப் பணியாளர்கள், முஸ்லிம் மக்கள் என சமூகத்தின் எல்லா வகையினரும் ஏதோ ஒரு திசையில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இவற்றை இந்த அரசு எப்படி எதிர்கொள்கிறது? குடிதண்ணீர் கேட்டு போராடினால் தண்ணீர் லாரி வருவதற்குப் பதில் போலீஸ் வேன் வருகிறது. சாலைவசதி, ரேசன் அரிசி, தொழிலாளர்களின் கூலி உயர்வு என எந்தப் பிரச்னைக்காகப் போராடினாலும் அரசாங்கம் போலீஸை அனுப்பி வைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறைக்காக பள்ளிக் குழந்தைகள் சாலை மறியல் செய்தபோது அதற்கும் போலீஸ் வேன்தான் சென்றது. விவசாயிகள், உதிரித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் போலீஸால் அச்சுறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

போலீஸ் தனது லத்திக்கம்பின் கீழ் சமூகத்தின் அனைத்து வகையினரையும் அடக்கி ஒடுக்க நினைக்கிறது. இதை எதிர்க்க வேண்டிய மக்கள் மனமோ, அடிப்பது போலீஸ் குணம் என்றும் அடிவாங்கி அடங்கிப் போவதுதான் மக்களின் குணம் என்றும் நினைக்கிறது. இதற்கு துலக்கமான உதாரணம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீஸ் நடத்திய வெறியாட்டம். ‘போலீஸ்னா அடிக்கத்தான் செய்வான்’ என்ற வசனத்தை அப்போது நாம் நிறைய கேட்டோம். ஆனால் ‘போலீஸ் உங்கள் நண்பன்’ என்று எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிம் எழுதி வைத்திருக்கின்றனர். உண்மையில் போலீஸ், மக்களின் நண்பனா? இல்லை, அவர்கள் அதிகார வன்முறையில் ஊறித் திளைத்த இந்த அரசின் அடியாள்படை.

உயர்நீதிமன்ற கலவரத்தில் வக்கீல்களை சமூக விரோதிகளைப்போலவும் பொறுக்கிகள் போலவும் சித்தரித்தது போலீஸ். ஆனால் யோசித்துப் பாருங்கள். எந்த போலீஸாவது பஸ்ஸில் டிக்கெட் எடுப்பதுண்டா? தெருவோர தள்ளுவண்டி வியாபாரியிடம் எந்த போலீஸ் காசு கொடுத்து பழம், காய்கறி வாங்குகிறார்? லாக்&அப் கொலைகள், லஞ்சம், ரோந்து என்ற பெயரில் வழிப்பறி, பாலியல் வன்முறை என்று தமிழக போலீஸ் பொறுக்கித்தனத்தின் கூடாரமாக இருக்கிறது. சிவகாசி ஜெயலட்சுமி முதல் திண்டிவனம் ரீட்டாமேரி வரைக்கும் நாடறிந்த உதாரணங்களே ஆயிரம் சொல்ல முடியும். தண்டிக்கப்பட வேண்டிய இந்த கிரிமினல் குற்றவாளிகள்தான் சட்டத்தின் காவலர்களாக இருக்கின்றனர். இவர்களை வைத்துதான் இந்த அரசு மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் அடக்கி ஒடுக்குகிறது.

இந்தியா ஜனநாயக நாடு என்றும், நீதிமன்றம், சட்டமன்றம், நிர்வாகம், பத்திரிகைகள் என்ற தூண்கள் இந்த ஜனநாயகத்தை தாங்கி நிற்பதாகவும், ஒன்றில் தவறு நடந்தால் இன்னொரு இடத்தில் மக்கள் நிவாரணம் பெறலாம் என்பதுதான் குடியாட்சியின் சிறப்பு என்றும் கூறுகிறார்கள். ஆனால் உயர்நீதிமன்ற கலவரத்தில் போலீஸின் தடியாட்சியை சட்டமன்றம், நீதிமன்றம், ஊடகங்கள் அனைத்தும் ஓரணியில் நின்று நியாயப்படுத்தின. சுப்பிரமணியன் சாமியின் முகத்தில் வழிந்த முட்டைக்கறையினால் நீதிமன்றத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக அலறிய யாரும், நூற்றுக்கணக்கான வக்கீல்கள் சிந்திய ரத்தத்தால் நீதிமன்றத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக பேசவில்லை, எழுதவில்லை. வழியும் ரத்தம் யாருடையது என்பதிலிருந்தே அது புனிதமா, அசிங்கமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இதே வகையினர்தான் இப்போது ‘பசுமை வேட்டை நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான ஏற்பாடு’ என்று கண்களை மூடிக்கொண்டு நம்பச் சொல்கின்றனர்.

அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு வரலாற்றில் நீண்ட நெடிய பாத்திரம் உண்டு. இயக்கமாக மட்டும் இல்லை, தனிநபராகவே அநீதிகளை எதிர்த்து நிற்போர் எல்லா காலங்களிலும் இருக்கிறார்கள். உண்மையில் போராட்டம் என்பது தன்னிலிருந்தே தொடங்குகிறது. தன் சொந்த முரண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு ஓர் இக்கட்டுக்கு வரும்போது மனம் போராட்டத்தை நிகழ்த்துகிறது. அது அவ்வாறு விரிவடைந்து குடும்ப உறுப்பினர்களுக்குள் சமமின்மை, சாதி பேதம், வர்க்க பேதம் என முரண்பாடுகள் முன்னேற்றமடைந்து மனம் தன்னைத்தானே கேள்வி கேட்கிறது. உச்சத்தில் சொல்லிலும், செயலிலும் அது வெளிப்படுகிறது. சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு போராளி இவ்விதம் தன்னிலிருந்துதான் உருவாக முடியும்.

உண்மையில் போராட்டம் என்பது மகிழ்ச்சியான அனுபவம். நீங்கள் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் யாரோ பத்து பேர் சாலையோரத்தில் நின்று வேலை வெட்டியில்லாமல் கத்திக் கொண்டிருப்பதாக நினைத்து கடந்து செல்லலாம். ஆனால் அவர்கள் அப்படி ‘கடந்து செல்பவர்களுக்காகவும்’ சேர்த்துதான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தினவாழ்வின் நெருக்கடிகள் அழுத்தும்போது எல்லோராலும் போராட்டங்களில் பங்கெடுக்க வீதிக்கு வர முடியாது என்பது யதார்த்தமான் உண்மைதான். ஆனால் அதையெல்லாம் மீறித்தான் போராட வேண்டியிருக்கிறது. வீட்டில், வீதியில், பேருந்தில், அலுவலகத்தில் என எங்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அல்லது சந்தர்ப்பங்களை வலிந்து உருவாக்கிக்கொண்டேனும் போராட வேண்டும். சொகுசான வாழ்க்கைக்கு சிறு இடையூறும் இல்லாமல் போராட்டம் என்பது சாத்தியம் இல்லை. அதேநேரம் அந்த இடையூறு நமது இருப்பை சிதைத்துவிடாத ஒன்றாக இருக்க வேண்டுமானால் அந்த எல்லை எது என்பதை சொந்த அனுபவத்தில் சுய பரிசோதனையின் மூலம்தான் கண்டறிய முடியும், தர்க்கங்களிலும், பேச்சிலும் அல்ல!

ஒரே ஒரு முறை அப்படியான ஒரு போராட்டத்தில் பங்கெடுக்க வீதியில் இறங்குங்கள். முதல் தடவை தயக்கமாக இருக்கும். ஆனால் அந்த போராட்டம் முடிந்ததும் உங்கள் மனதுக்குள் கம்பீரமும், பெருமித உணர்வும் பொங்கும். அதுதான் மக்கள் போராட்டங்களின் உண்மையான வெற்றி. நமது சமூக அமைப்பில் போராடிக் கொண்டிருப்பது ஒன்றுதான் நேர்மையாக வாழ்வதற்கான வழி. அமைதியாக வாழ்வது என்றால் அனைத்தையும் சகித்துக்கொண்டு அடிமையாக வாழ்வது என்று அர்த்தம்!

காந்தி – தீண்டாமையின் நவீன வடிவம் …


‘மகாத்மா காந்தி’ என்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனக்குள் பிரவேசிக்கத் தொடங்கியது, அநேகமாக எனது 5 ஆவது வயதில் எனக்கணக்கிட்டுப் பார்க்கிறேன். அது என் தொடக்க கல்விக்காகப் பள்ளிக்குச் சென்ற வயது. நகராட்சிப் பள்ளியாக இருந்தபோதும், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை காந்தியின் பஜனைப் பாடல்களைப் பாட வேண்டும். ஒரு மணி அடிப்பார்கள், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தரையில் சப்பணமிட்டு அமர்ந்தபடி, இரண்டு கைகளையும் கும்பிட்டபடி, தலை தரையைத் தொடும்படி உட்கார்ந்து கொண்டு, “ரகுபதி ராகவ ராஜாராம்’ தொடங்கி, ஏறத்தாழ அரைமணி நேரத்திற்கு காந்தியின் பாடல்களைப் பாடுவோம். நான் படித்த நகராட்சிப் பள்ளி இருந்த பகுதியும் காந்தி நகர். தலைமை ஆசிரியரின் நாற்காலிக்குப் பின்புறச் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படத்திற்குரியவராகவும், பஜனை செய்வதற்குரியவராகவும், பாடப் புத்தகங்களில் படிப்பதற்குரியவராகவும், சுதந்திர நாள், குடியரசு நாள், அவர் பிறந்த நாள் போன்ற நாட்களில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மைதானத்தில் நடக்கும் இறைவணக்கக் கூட்டமாக இருந்தாலும், அனைத்திலும் பேசப்பட்ட, பேச வைக்கப்பட்ட ஒருவர் காந்திதான். பிறகுதான் நேரு மாமா!

காந்தி தாத்தாவாகவும், நேரு மாமாவாகவும் என்னுள் கருத்துருவாக்கப்பட்டதுதான் இதற்கான மூலகாரணமாக இருக்க வேண்டும். ஏனெனில், இந்த பாதிப்புகள் எனக்குள் மட்டும் அல்ல; ஏறத்தாழ என் வயது, அதற்கு மேலும் உள்ள வயதினருக்கும் கூட இதுதான் நிலைமை. இது, உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அல்ல, உள்ளே திணிக்கப்பட்டது. இன்றைக்கும் கூட, இதுதான் இந்தியத் திணிப்பாக இருக்கிறது. இந்தியாவில் வேறு எந்தத் தலைவரையும் இந்த அளவிற்கு திட்டமிட்டுத் திணிக்கவில்லை!

1960 களில் தொடங்கி 1974 வரை, தொடக்கக் கல்வி முதல் மருத்துவக் கல்லூரி மாணவனான பிறகும் கூட, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் என்ற ஒருவர் என்னுள் வரவேயில்லை. ஏப்ரல் 14, 1975ஆம் ஆண்டு சகோதரர் கே.ஆர்.எம். ஆதிதிராவிடர் அவர்கள் என்னையும், டாக்டர் ஜெயவேல் அவர்களையும் அழைத்துக் கொண்டு, சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்திற்கு வெளியே நின்ற அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிக்கச் செய்தார். இடஒதுக்கீட்டில் இடம் பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தொடங்குவதற்கு முன்பு வரை, எத்தனையோ முறை விண்ணப்பப் படிவங்களில் 18 சதவிகித இடஒதுக்கீட்டில் இடம் பெற விண்ணப்பித்திருக்கிறேன். இடம் பெற்றேன். ஆனால் அதுவரை கூட, இந்த இடஒதுக்கீடு கிடைக்க, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இதற்கான சட்டத்தை எனக்கும், என் சமூகத்திற்கும் பெற்றுக் கொடுத்த இந்த மாபெரும் புரட்சியாளரைப் பற்றி அறியாதிருந்தேன். என்னைப் போலவே, அன்றும் இன்றும் கோடிக்கணக்கான தலித்துகள் இருக்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர், ஜோதிபா புலே, அயோத்தி தாசப் பண்டிதர், தாத்தா ரெட்டமலை சீனிவாசன் போன்றவர்களின் நூல்களைப் படித்த போதும், சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், உத்தம் சிங் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறுகளாலும், தந்தை பெரியார் காந்தியுடன் முரண்படும் இடங்களாலும், காந்தி மீது நான் அன்று கொண்டிருந்த எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கின. ஜவகர்லால் நேரு, எம்.ஓ.மத்தாய் மற்றும் ஊணூஞுஞுஞீணிட் ச்t Mடிஞீணடிஞ்டt எழுதிய லேப்பியர் மற்றும் காலின்ஸ் போன்றவர்களின் கருத்துகளும் மாறுபட்டிருந்தன.

1934 இல் வியன்னாவில் இருந்து, சுபாஷ் சந்திர போஸ் எழுதி இந்தியாவில் தடை செய்யப்பட்ட நூலான “இந்தியப் போர்’ என்ற நூலைப் படித்தபோதுதான், காந்தியின் சுதந்திரப் போராட்டமே கேள்விக்குரியதாக இருந்தது. காந்தியைப் பற்றி குறிப்பிடும்போது, “இந்தியர்களை ஈர்க்கும் ஓர் அபூர்வ சக்தி காந்தியிடமிருக்கிறது. பிறிதொரு நாட்டில் அவர் பிறந்திருந்தால், அந்நாட்டில் அவர் முற்றுந் தகுதியற்றவராகவே இருந்திருப்பார். அங்கு அவரது சாத்வீகம், அவருக்கு ஆபத்துண்டாக்கியிருக்கும் அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கும். ஆனால், அது இந்தியாவில் வேறுவிதம்…” (“இந்தியப் போர்’, பக்கம் : 169).

இறந்து 59 ஆண்டுகள் முடிந்த பிறகும் கூட, எதற்காக அவர் விவாதிக்கப்பட வேண்டும்? ஒரு சிறு பிரிவு மக்களைத் தவிர, இந்தியாவின் அனைத்துப் பிரிவு மக்களும் காந்தி என்ற பெயரை புனிதமானதாக எண்ணிப் போற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் “தீராநதி’ இதழில் (ஆகஸ்ட் 2009) வந்த ஒரு செய்தி என்னை அதிர வைத்ததும் கூட, இந்த வெளீயிட்டைக் கொண்டு வரக் காரணமாயிருந்தது. அதாவது, “யுனெஸ்கோ’ நிறுவனம், 1947 இல் வெளியிட்டிருக்கும் “கல்வி குறித்த சிந்தனையாளர்கள்’ புத்தகத் தொகுப்பில், உலகின் பெரும் புகழ் பெற்ற சிறந்த கல்வியாளர்கள் நூறு பேருடைய அர்ப்பணிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கன்பூசியஸ், கிரேக்கத்தின் பிளாட்டோ, ஆஸ்திரியாவின் பிராய்டு, இத்தாலியின் கிராம்ஸி போன்றவர்களோடு இந்தியாவின் பிரதிநிதியாக இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள், காந்தி, தாகூர், அரபிந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாக்டர் மால்கம் ஆதிசேஷையா.

டாக்டர் மால்கம் ஆதி சேஷையா, தாகூர் தவிர மற்ற மூவருக்கும் கல்விக்கும் என்ன தொடர்பு? மற்ற மூவரும் ஆன்மிகவாதிகள். பிளாட்டோ, பிராய்டு வரிசையில் வருமளவிற்கு காந்தி கல்வியாளரா? இந்தியாவில் கல்வியாளர்களுக்கு இவ்வளவு கடும் வறட்சியா? அல்லது கன்பூசியஸ், கிராம்ஸி அளவிற்கு காந்தி கல்விச் சிந்தனையாளரா?

ஆதிக்க சாதியினரைத் தவிர, மற்ற தீண்டத்தகாதவர்கள் (அன்று 6 கோடி) கல்வி கற்பதற்குத் தடையாயிருந்த தத்துவம் வர்ணம். வர்ணம்தான் அனைத்து இழிவுகளுக்கும், வன்கொடுமைக்கும் காரணமாயிருந்தது. இருக்கிறது. வர்ணம் ஒழியாத வரை தீண்டாமை ஒழியாது. அந்த வர்ணம் குறித்த காந்தியின் செயல்திட்டம் என்ன? வர்ணத்தை ஒழித்து, அனைவருக்கும் கல்வி கிடைக்க காந்தி என்ன செய்தார்? சிறீமான் காந்தி வர்ணத்தைப் போற்றிப் பாதுகாக்கிறார். எப்படி? “வர்ணம் விதித்ததுதான் நியதி. அது மாற்றமில்லாதது. வர்ண விதியை நாம் பின்பற்றி நடக்காததுதான், பொருளாதார அழிவுக்குக் காரணமாக உள் ளது. மக்களின் வேலையில்லா திண்டாட்டத்திற்கும் வறுமைக்கும் அது காரணமாயிருக்கிறது’ என்று எச்சரிக்கிறார்.

வர்ணம் ஒரு மனிதருக்கு – என்ன தொழிலை விதித்துள்ளதோ அந்தத் தொழிலைத்தான் அவர் எடுத்துக் கொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு மரத் தச்சரின் மகன், தான் ஒரு வக்கீலாக வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனால், இன்று ஒரு தச்சனின் மகன் வக்கீலாக வேண்டும் என்று விரும்புகிறார். ஏனெனில் பணம் திருடுவதற்கு, அந்தத் தொழில்தான் மிக எளிதான வழி என்பதை அவர் அறிந்து கொண்டிருக்கிறார் (மகாத்மா காந்தி நூல்கள் தொகுப்பு – 7, பக்கம் 89, 90, 91).

மருத்துவனாக மாற விரும்பினால், அவனைத் திருடன் என்கிறார்! பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒரு தேசத்தைக் கல்வி தானே சீர்படுத்தும். லெனின் ஆட்சியதிகாரத்திற்கு வந்தபோது, சோவியத் ரஷ்யாவில் படித்தவர்கள் எண்ணிக்கை 2 சதவிகிதம். தோழர் அந்தன் மொகரங்கோவிடம், கல்வி பயிற்றுவிக்கும் பொறுப்பினைக் கொடுத்தபோது, லெனின் கேட்டுக்கொண்டது ஒன்றே ஒன்றுதான். “ரஷ்யாவில் உள்ள மக்கள் நூறு சதவிகிதம் கல்வி கற்றவர்களாக மாற்றப்பட வேண்டும்’ என்பதுதான். பத்தே ஆண்டுகளில் 2 சதவிகிதமாக இருந்த படித்தவர்களின் எண்ணிக்கையை 98 சதவிகிதமாக மாற்றிக் காண்பித்தாரே! லெனின் கல்வியாளர். ஆனால் காந்தியோ குலத் தொழிலை விட்டுவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் என்கிறார்!

இவரைப் போய் உலகில் தோன்றிய கல்வியாளர்கள் பட்டியலில் இடம்பெயரச் செய்துள்ளனரே! ராஜாகோபாலாச்சாரியின் குலக்கல்வித் திட்டத்திற்கு காந்திதான் குரு. குலக் கல்வித் திட்டம்தான் இந்தியாவை சமூக, பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றும் என்றும் கூறுபவர் கல்விமானா? காந்தியின் “அரசியல்’ பற்றிய விமர்சனங்கள், அவர் அரசியல் நடத்திக் கொண்டிருந்த காலத்திலேயே, பகத்சிங் மரணத்தில் “வஞ்சக நாடகமாடியது’ தொடர்பாக வந்த விமர்சனங்களே இன்று வரைக்கும் ஆவணமாக உள்ளது. அதற்குள் போகத் தேவையில்லை.

பொருளாதாரம் குறித்த அவரது பார்வையில், அவர் காலத்தில் வாழ்ந்த 35 கோடி இந்தியர்களுக்குமான எந்த செயல்திட்டமும் இல்லை. 35 கோடி 110 கோடியாக உயர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுமளவிற்கு, அவரிடம் பொருளாதார ஞானமும், பொருளாதாரம் குறித்த அடிப்படைச் சிந்தனையும் இல்லை. தொலை நோக்கு அறிவும் இல்லை. அடுத்ததாக “இந்தியாவின் தொழு நோயான’ தீண்டாமையைப் போக்குவதற்குப் பதிலாக, சாதியக் கொடுங்கோன்மையைத் தூக்கிப் பிடித்த காந்தியின் கோர முகத்திரையை அம்பேத்கர் – “காந்தியும், காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?’ என்ற நூலில் கிழித்துக் காண்பித்துள்ளார்.

இன்னமும் கூட, இந்தியாவில் தலித் மக்கள் வாழ்கின்ற பெரும்பான்மைக் குடியிருப்புப் பகுதிகளுக்குப் பெயர் “காந்தி நகர்!’ இது அவமானப் பெயர் அல்லவா? எம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு எழுப்பப்பட்ட பெயரல்லவா? டாக்டர் அம்பேத் கரும் தந்தை பெரியாரும் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் கூட, பார்ப்பனியத்திற்கு அவர்கள் மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பதைப் போலவே, தீண்டத்தகாத மக்களாக்கப்பட்ட தலித்துகளுக்கு, காந்தியின் தலித் விரோத, நால்வர்ணச் சிந்தனைகள் இன்னும் கூட ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றன.

“என் அபிப்ராயத்தில் பரம்பரையாய் அல்லது சுயமாய் அடைந்த உயர்நிலை என்பதே இல்லை. எல்லோரும் பிறக்கையில் சமமாகவே பிறக்கின்றனர். பிறப்பினாலேயே பின் அடைந்த ஞானத்தினாலோ பிராமணர் தங்களை மேல்சாதியார் என அழைத்துக் கொள்ளும் இடங்களிலெல்லாம் நான் அவர்களை எதிர்த்திருக்கிறேன். இன்னொரு மனிதனை விடத் தான் உயர்ந்தவனாகக் கருதுவது மனிதத்தன்மையற்ற செயல் என்பது என் கருத்து… ஆகையால் பிராமணனிடமோ, வேறு எவரிடமோ இந்த உயர்சாதிப் பேய் தலைகாட்டுவதை பிராமணன் அல்லாதான் எதிர்க்கையில் அவனுக்கு நான் உறுதுணையாய் நிற்கிறேன். உயர்ந்தவனென்று தன்னை கருதுவோன், தான் மனிதனாய்க் கருதப்படுவதற்குள்ள உரிமையை இழந்து விடுகிறான் என்பது என் அபிப்ராயம்” (“யங் இந்தியா’ 29.9.1927).

லோகமான்ய திலகரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள 1.8.1920 அன்று காந்தி அங்கு சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்கு தோள் கொடுக்க காந்தி சென்றபோது, அங்கிருந்த பார்ப்பனர்கள், “நீ வைசியன், இந்தப் பாடையைத் தொடக்கூடாது” எனக் கூறி அவரைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள். (தனஞ்செய் கீர் எழுதிய “லோகமான்ய திலகர்’ – ஆங்கில நூல் பக்கம். 442). நால் வர்ணக் கட்டமைப்பில் மூன்றாவது இடத்தில் இருப்பவர்க்கே இதுதான் மரியாதை! பிணத்தைத் தொடுவதற்குக் கூட அருகதையற்றவராகத்தான் காந்தி பார்ப்பனர்கள் கண்களுக்குப் பட்டாரே தவிர, இந்திய தேசத்தின் விடுதலையை முன்னிறுத்துபவராகத் தெரியவில்லை. இதுதான் இந்து மதம். இதற்குப் பிறகும்கூட “வர்ணத்திற்கு’ இவர் பொழிப்புரை எழுதுவது, இந்து மதம் பற்றிய அடிப்படை அறிவு அறவே கிடையாது என்பதைத் தவிர வேறு ஏதும் இல்லை!

“தீண்டாமை, இரக்கமற்ற செயல்’ என்பதைச் சொல்ல “மகாத்மா’ தேவையில்லை. ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் தெருக்குழந்தை கூட, தீண்டாமையின் கொடுமையைப் பார்த்துக் காறித் துப்பும். இவர் என்ன இரக்கப்படுவது? இவரின் இரக்கம், வெண்மணியில் வெந்த எம் குழந்தைகளின் மயிருக்குக் கூட உதவாது. தீண்டாமையின் இழிவினை, அவமானத்தை 24 மணிநேரமும் நேருக்கு நேர் எதிர் கொள்பவனுக்குதான் அதன் வேதனை என்னவென்று உணர முடியும்!

அடுத்ததாக இவர் சொல்கிறார் : “உயர் சாதிப் பேய் தலைகாட்டுவதை பிராமணன் அல்லாதவன் எதிர்க்கையில், அவனுக்கு நான் உறுதுணையாய் நிற்கிறேன்”…. தெற்கே, மாபெரும் இயக்கப் போராளி தந்தை பெரியார் பார்ப்பனர்களை நேருக்கு நேர் எதிர்த்தபோது, இவரும் இவரோடு குல்லாப் போட்டுக் கொண்டிருந்த கூட்டமும் எத்தனை முறை பெரியாரோடு இணைந்து, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தனர் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? அல்லது பெரியாரைப் பற்றியும் அவருடைய இயக்கம் தமிழ் நாட்டில் நடத்திய போராட்டங்களும் இவருக்குத் தெரியாமல் போய்விட்டதா?

டாக்டர் அம்பேத்கரோடு இவரும், இவரது காங்கிரஸ் கூடாரமும் எத்தனை பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களை நடத்தின? அப்போதெல்லாம் இவர் எங்கே போயிருந்தார்? எத்தனைப் போராட்டங்களை இவரே முன்நின்று நடத்தினார்? இதற்கு ஏதேனும் ஆதாரப்பூர்வமான சான்றுகள் உண்டா? ஒரு “மகாத்மா’ பேசியதற்கும் அது செயல்பட்டதற்கும், ஏதேனும் தொடர்பு உண்டா?

அன்றைய தேதியில் 35 கோடி மக்கள் தொகையும், மிகப்பெரிய நிலப்பரப்பும் கொண்ட தேசம் அன்னியராட்சியில் சுரண்டப்பட்டு வந்த காலத்தில் (அவர்கள் சுரண்டுவதற்காகவே, பல திட்டங்கள் தீட்டினாலும்) மக்களின் அடிப்படைத் தேவையான போக்குவரத்திற்கு ரயில்களும், ஆரோக்கியத்திற்கு மருத்துவமனைகளையும் கட்டி வந்ததையும் இந்த தேசத்திற்குச் சுதந்திரம் வேண்டும் என்று தலைமையேற்று நடத்திவந்த “சுதந்திரப் போராட்ட வீரர்’ கூறுகிறார்…

“ரயில்வேக்களும், ஆஸ்பத்திரிகளும் இயல்பாக அழிவதை நான் நிச்சயம் வரவேற்பேன் என்றாலும், அவற்றை நாசம் செய்ய வேண்டும் என்பது என் நோக்கமல்ல. உயர்ந்த பரிசுத்தமான ஒரு நாகரிகத்துக்கு ரயில்வேக்களோ, ஆஸ்பத்திரிகளோ சான்றாகாது. அவை அத்தியாவசியமான ஒரு தீமையாக இருக்கின்றன என்பதுதான் அவை பற்றிக் கூறக்கூடிய சிறப்புரையாகும்” (“யங் இந்தியா’, 26.1.1921) புத்தகம் – காந்தியின் தொகுப்புகள், பகுதி – 6)

இதுபோன்ற “அறிவார்ந்த’ கருத்துகளைக் கூறி வந்த சிந்தனைக் கடலின் ஒப்பற்ற அறிக்கைகளை, அவருடைய துதிபாடிகள் வேண்டுமானால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் இவரின் “கருத்துகளும்’ “செயல்பாடுகளும்’ தான்தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமையை வேரோடும் வேரடி மண்ணோடும் “பிடுங்கி எறிந்தது’ என்ற வரலாற்றுப் பொய்யை நாம் எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்?

காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஏன் போராடவில்லை? என்று எந்த தலித்தும் எந்தக் காலத்திலும் கேள்வி எழுப்பியது இல்லை. அது தேவையும் இல்லை. எம் மக்களின் பிரச்சனைகளுக்குப் போராட எமக்கென்று தலைமை இருக்கிறது. எமது விடுதலைக்காகப் போராடிய எமது ஒப்பற்ற தலைவர்களின் பணிகளை, எம் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களிடம் எம் தலைவர்களைப் பற்றிய தவறான புரிதல்களை ஏற்கச் செய்த சாகசங்கள் எல்லாம் வழிநெடுக ஏராளமாகப் பரவிக் கிடக்கின்றன.

பவுத்தம் கோலோச்சிய காலங்களில் இவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் தர்க்க நிலைகள் வெகுவாகச் சிறப்புற்றிருந்தன என்பதற்கான ஆதாரங்கள் செழுமையாக உள்ளன. பூர்வ பவுத்தர்களான இவர்கள் பார்ப்பனியத்தால் சிதறடிக்கப்பட்டு, திருநிலையற்றவர்களாக, ஊருக்கு ஒதுக்குப்புறமான சேரிகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டனர். பார்ப்பனியம் வெற்றி பெற்று, இவர்கள் இந்துக்களாக்கப்பட்டனர். மீண்டும் நால்வர்ணப் படிநிலை சமூகம் வந்த பின்பு, இவர்கள் இந்து மதத்தின் பின் இணைப்பாகக் கருதப்படுகின்ற பஞ்சமர்கள் என்ற வர்க்கமாக்கப்பட்டார்கள். அதன் பின்னர் தொடர்ந்து இம்மக்கள் வஞ்சிக்கப்பட்டே வந்தனர்.

1891 ஏப்ரல் 14 அன்று மகாராட்டிரத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த அம்பேத்கர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடியலுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். ஏறத்தாழ 2000 ஆண்டுகளாகத் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டு வந்த ஒரு சமூகத்தின் விடியலுக்கு, நிரந்தரத் தீர்வை ஆங்கிலேயர்களிடம் போராடிப் பெற்றார். “என் சமூகத்திற்கு விடுதலை கிடைக்க வேண்டும்’ என்று உழைத்த அந்தப் புரட்சியாளரின் கனவை, காந்தி என்ற இந்து மத வெறியர் தன் நயவஞ்சகப் போராட்டத்தினால் கிடைக்கவிடாமல் தடுத்தார்.

ஆனால், இன்று தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்விற்காக குள்ளநரி ஒன்று போராடியதாகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடியலுக்காக அது உழைத்ததாகவும் இந்திய வரலாறு தலைகீழாக மாற்றித் தவறாக எழுதப்பட்டுள்ளது. அப்படி எழுதப்பட்ட வரலாற்றை உலக மக்களுக்கு இன்றுவரை அது போதித்து வருகிறது. இம்மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, இந்து மதமும், இந்து சனாதனிகளான பார்ப்பனிய – பனியா கும்பல்களும், இந்த மக்களை காந்தியின் விசுவாசிகளாகவும் மாற்றியுள்ளனர்.

இந்து வெறியரான, தலித்தின மக்களின் நயவஞ்சக துரோகியான காந்தி என்பவர், இம்மக்களின் “ஆபத்பாந்தவர் அல்லர்’ என்ற வரலாற்று உண்மைகளை காந்தி வாழ்ந்த காலத்திலேயே அம்பலப்படுத்தினார் அம்பேத்கர். இந்தப் பசுத்தோல் போர்த்திய புலி எவ்வாறு தலித் விரோதப் போக்கை தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது என்பதை அனைத்து மக்களிடமும் ஆய்வுக்குக் கொண்டு செல்லும் நோக் குடனேயே “காந்தியின் தீண்டாமை’ என்ற இத்தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஒரு திறந்த வாசிப்புக்கும், பொது விவாதத்திற்கும் உங்களை அழைக்கிறேன்.

மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?


பட்டினியோடு போராடி வரும் ஏழைகளுக்கு அரசின் தானியக் கிடங்குகளில் கெட்டுப் போகக்கூடிய நிலையிலுள்ள உணவு தானியங்களை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ மைய அரசு வழங்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைக் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் கொதித்துப் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். உணவு மானியம் உள்ளிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்து மானியங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழித்துக்கட்டி வரும் மன்மோகன் சிங்கிற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது ஏற்பட்ட வெறுப்பு புரிந்துகொள்ளத்தக்கதுதான். “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” எனக் கூறி, நீதிபதிகளின் அத்துமீறலை இடித்துக் காட்டினார் மன்மோகன் சிங்.

‘‘நாயும் பன்றியும் தெருவில் சுற்றலாம்; ஆனால், பஞ்சமன் தெருவில் நுழையக் கூடாது” என்ற பார்ப்பன நீதியைப் போல, ஒரு உணவுக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறார், மன்மோகன் சிங். “உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழியும் தானியங்களை இந்திய எலிகளும் ஐரோப்பிய மாடுகளும் தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமாட்டோம்” என்பதுதான் அவரது கொள்கை.

மன்மோகன் சிங் சொல்லாமல் விட்டுவிட்ட இந்தக் கொள்கையை அவரது உணவு அமைச்சர் சரத் பவார் வெளிப்படையாகக் கூறினார். “அரசு ஏற்கெனவே உணவு மானியமாக 66,000 கோடி ரூபாயைக் கொடுத்து வருகிறது. இதற்கு மேல் எப்படி இலவசமாகத் தரமுடியும்?” இந்த உணவு மானியத்தை இந்திய எலிகளும் கடத்தல்காரப் பெருச்சாளிகளும் பங்கு போட்டுக் கொள்ளும் கதையைப் பிறகு பார்ப்போம். ஆனால், மன்மோகன் சிங் கும்பலைப் பொருத்தவரை தற்பொழுது கொடுக்கப்படும் உணவு மானியமே அதிகம் என்பதும், இதை வெட்ட வேண்டும் என்பதும்தான் கொள்கை.

மைய அரசிடம் தற்பொழுது 6 கோடி டன்னுக்கும் அதிகமாக அரிசியும், கோதுமையும் கையிருப்பில் இருக்கிறது. “இது வழக்கமாக அரசிடம் இருக்க வேண்டிய கையிருப்பைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றும், இதில் 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப்போய்க் கிடப்பதாகவும்” சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்திய உணவுக் கழகத்திடம் போதிய கிடங்குகள் இல்லாததால்தான், வெறும் 55,000 டன் உணவு தானியங்கள் மட்டுமே கெட்டுப் போயிருப்பதாக அரசு உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருக்கிறது.

எவ்வளவு டன் உணவு கெட்டுப் போயிருக்கக்கூடும் என்ற வாதப்பிரதிவாதம் ஒருபுறமிருக்கட்டும். யானையை வாங்கியவன் அதனை அடக்க அங்குசத்தை வாங்க மறந்துவிட்ட கதையாக, 6 கோடி டன் அளவிற்குக் கொள்முதலை நடத்தியிருக்கும் அரசு, அதனைச் சேமித்து வைக்க இந்திய உணவுக் கழகத்திடம் கிடங்குகள் இல்லை எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இப்பொழுது இதற்குத் தீர்வாக, இந்த அபரிதமான கையிருப்பைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கத் தனியார் கிடங்குகளை வாடகைக்கு எடுக்கப் போவதாக மைய அரசு கூறியிருக்கிறது.

உணவு மானியத்தைக் குறைப்பதற்காக, தானியக் கொள்முதல் செய்வதிலிருந்தும் கிடங்குகளைக் கட்டுவதிலிருந்தும் அரசு விலகிக் கொள்வது; அரசுக்குப் பதிலாக இந்நடவடிக்கைகளில் தனியாரை அனுமதிப்பது என உலக வங்கி இந்தியாவில் தனியார்மயம் புகுத்தப்பட்ட காலத்தில் இருந்தே கட்டளையிட்டு வருகிறது. ஓட்டுப் பொறுக்கும் அரசியல் காரணங்களுக்காகத் தானியக் கொள்முதலை முழுவதும் கைவிடாத அரசு, சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தானிய சேமிப்புக் கிடங்குகளைக் கட்டுவதைக் கைவிட்டதோடு, அதனைத் தனியாரிடமும் ஒப்படைத்தது. இன்று 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப் போய்விட்டதாகக் கூறப்படுதவற்கு இந்த உலக வங்கியின் கட்டளையும், அதனைச் சிரமேற்கொண்டு செயல்படுத்திய ஆளும் கும்பலும்தான் காரணம்.

திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தைப் பசியோடு போராடும் ஏழைகளுக்கு ரேசன் கடைகளின் மூலம் வழங்குவது வீண் செலவாம்; அதே சமயம், ஏழை மக்களுக்குப் பயன்படாத இந்தக் கையிருப்பைத் தனியார் கிடங்குகளில் சேமித்து வைக்க – பதுக்கி வைக்க என்றும் சொல்லலாம் – வாடகையைக் கொட்டி அழுவது ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கையாம்!

இப்படிப்பட்ட நிலைமை வரக்கூடும் என முன்னறிந்துதான் என்னவோ, மன்மோகன் சிங் அரசு மார்ச் மாதம் போட்ட பட்ஜெட்டிலேயே, தனியார் கிடங்கு களுக்கான குத்தகை கால வரம்பை உயர்த்தும் கொள்கை முடிவைத் தீர்க்க தரிசனத்துடன் எடுத்திருக்கிறது.

இந்த அபரிமிதமான கையிருப்பை, நாயிடம் சிக்கிய தேங்காயைப் போல மன்மோகன் சிங் தனியார் கிடங்குகளில் வைத்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இந்தக் கையிருப்பை முன்னரே விநியோகித்திருந்தால், அதைப் பாதுகாப்பதற்குச் செலவான பணமும் அரசுக்கு மிச்சமாகியிருக்கும்; தானியங்களும் கெட்டுப் போயிருக்காது என்ற சாதாரண உண்மை பொருளாதார அறிஞரான மன்மோகனுக்குத் தெரியாமலா போய்விட்டது?

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக உயர்ந்துகொண்டே செல்லும் இத்தருணத்தில், மன்மோகன் சிங் தன்னிடம் உள்ள கையிருப்பை ரேசன் கடைகளின் மூலமோ அல்லது வெளிச் சந்தையின் மூலமோ புழக்கத்துக்குக் கொண்டு வந்திருந்தால், விலைவாசி உயர்வு ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கும். ஆனால், அரசு இப்படி சந்தையில் தலையிட்டு விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதை மன்மோகன் சிங் விரும்புவதில்லை. தமக்கு ஓட்டுப் போட்ட ஏழை மக்கள் இவ்விலையேற்றத்தால் பாதிக்கப்படுவார்களே என்பது பற்றியெல்லாம் அக்கறையில்லாமல், விலைவாசி உயர்வு அவசியமானது என்றுதான் திமிர்த்தனமாக அறிக்கை விட்டுவருகிறார், அவர்.

அரசு சந்தையில் தலையிட்டால், மளிகைப் பொருட்கள் வியாபாரத்தில் நுழைந்துள்ள ரிலையன்ஸ், பிர்லா போன்ற தரகு முதலாளிகளின் நிறுவனங்கள் விலைவாசி உயர்வைப் பயன்படுத்திக் கொண்டு அடித்துவரும் கொள்ளை இலாபம் படுத்துவிடும் என்பதாலேயே, அவரது அரசு சந்தையில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவை அவர் புறக்கணிப்பதற்கும் இதுதான் காரணம். விலைவாசியை உயர்த்துவதற்காக வியாபாரிகள் சட்டவிரோதமான பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால், மன்மோகன் சிங் அரசோ உணவுக் கொள்முதல்/சேமிப்பு என்ற பெயரில் சட்டபூர்வமாகப் பதுக்கலை நடத்தி, வர்த்தகச் சூதாடிகளுக்கு உதவி வருகிறது.

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள உத்தரவில், “வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர் என முத்திரை குத்தப்பட்டுள்ள குடும்ப அட்டைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்; அல்லது அவற்றின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் வண்ணம் வருமான வரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. வெளித் தோற்றத்தில் பட்டினி கிடக்கும் ஏழைகளுக்கு ஆதரவாகப் பேசுவது போலத் தெரியும் இந்த உத்தரவு, உண்மையில் உணவு வழங்கல் கொள்கையில் உலக வங்கியின் கட்டளைகளை விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்த ஆலோசனையே சாட்சி. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிலுள்ள இந்த ஆலோசனையை டாக்டர் மன்மோகன் சிங் புறக்கணிக்க மாட்டார் என்று அடித்துக் கூறலாம்.

வறுமைக் கோட்டுக்கு மேலே என்ற முத்திரை குத்தப்பட்ட குடும்ப அட்டைகள் டாடா, அம்பானி குடும்பங்களுக்கா கொடுக்கப்பட்டுள்ளது? இந்தியாவிலேயே மிகப் பெரிய நகர்ப்புறச் சேரியான மும்பையில் உள்ள தாராவியில் விரல்விட்டு எண்ணக்கூடிய குடும்பங்கள் தவிர, அங்கே வசித்து வரும் பிற பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழுவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளை இப்படிப் பிரிப்பது ஏழைகளைக் காவு கொள்ளும் திட்டம் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

திட்ட கமிசனும் தேசிய ஆலோசனை கவுன்சிலும் இணைந்து சமீபத்தில் நடத்திய கூட்டத்தில், “வறுமைக் கோட்டுக்குக் கீழே/மேலே என்ற பிரிவினையின்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அரசுக்கு ஆண்டுதோறும் 1,40,000 கோடி ரூபாய் உணவு மானியமாகச் செலவாகும்; அதனால், அது நடைமுறை சாத்தியமற்றது. மேலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்குக்கூட மாதமொன்றுக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமையைத் தவிர, வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எதையும் வழங்க முடியாது” எனத் திட்ட கமிசன் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

அதாவது, அரசு தனது கையிருப்பிலுள்ள தேவைக்கும் அதிகமான உணவு தானியத்தை மானிய விலையில் ஏழைகளுக்கு வழங்காது என்பது உறுதியாகிவிட்டது. பூதம் புதையலைக் காத்த கதையாக மன்மோகன் சிங் இந்தக் கையிருப்பைப் பாதுகாத்துக் கொண்டிருக்கப் போகிறாரா அல்லது முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, அவரது ஆட்சியில் மக்கள் பட்டினி கிடந்த போதும் 2.8 கோடி டன் உணவுப் பொருட்களை ஐரோப்பிய மாடுகள் தின்பதற்காக ஏற்றமதி செய்தாரே, அதைப் போலச் செய்வாரா என்ற கேள்விக்கு எதிர்காலம் பதில் சொல்லக்கூடும்.

ஏழைகள் பட்டினி கிடக்கும்பொழுது அரசு அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்ற அறநெறியெல்லாம் மன்மோகன் சிங்கிடம் கிஞ்சித்தும் கிடையாது. இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையே அலட்சியப்படுத்தி வரும் அவர், ஏழைகள் பட்டினி கிடப்பதையா ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வார்?

2010-11 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உணவு மானியத்தில் 450 கோடி ரூபாயை வெட்டிய அவரது அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் 5,00,000 கோடி ரூபாயை வரிச் சலுகையாக வாரி வழங்கியது. இது பாமரனுக்கு ஓரவஞ்சனையாகத் தெரியலாம். ஆனால், மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் அலுவாலியா – ப.சிதம்பரம் கும்பலைப் பொருத்தவரை, இந்தப் பாதையில் சென்றால்தான் இந்தியா உலகத் தரத்தை அடைய முடியும் என்று கருதுகிறார்கள்.

அவர்கள் தமக்கு வாக்களித்த கோடிக்கணக்கான ஏழை – எளிய மற்றும் நடுத்தர மக்களின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்தவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், புதுப் பணக்கார மேட்டுக்குடிக் கும்பலின் பிரதிநிதியாகத்தான் மன்மோகன் சிங் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.

சொல்லிக் கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இந்தக் கும்பலின் நலனை முன்னிறுத்தித்தான் போடப்படுகின்றன. அவ்‘வளர்ச்சி’த் திட்டங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வை மேலும் மேலும் நாசப்படுத்தி வருவதை யாரேனும் கண்டித்தால், எதிர்த்துப் போராடினால், அவர்கள் அனைவரையும் “வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’’, “மாவோயிசத் தீவிரவாதிகள்” என முத்திரை குத்தி ஒடுக்கி வருகிறார், மன்மோகன் சிங். இப்படிப்பட்ட கும்பலிடம் உணவு மானியத்தை வெட்டக்கூடாது, ஏழை மக்களுக்கு கூடுதலாக உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என ஆலோசனை கூறுவதெல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும்!

பசி என்றால் என்ன?


உணவு தயார். கொண்டு வந்து வீட்டுக்கு நடுவில் வைத்தாகிவிட்டது. ஆனால், வீட்டில் உள்ள எல்லோருக்கும் அதைப் பரிமாற முடியாது. எனவே, சில முடிவுகள் எடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு குறைவான அளவு போதும். தின்றுவிட்டு சுருண்டு படுத்து உறங்கிவிடுவார்கள். அல்லது, வெளியில் நண்பர்களுடன் ஓடிவிடுவார்கள். அவர்களுக்கு உணவு அளவு தெரியாது. பசி தெரியாது. பாதகமில்லை. வயதானவர்களுக்கு அதிக உணவு தேவைப்படாது. அவர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. மெலிந்து, வாடி, வதங்கியிருக்கும் தேகம். கூடுதல் உணவு கொடுத்தாலும் பலனிருக்கப்போவதில்லை. வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு உணவு தேவை. சமைப்பதும், துவைப்பதும், சுத்தப்படுத்துவதும் அவள்தான். எல்லோரும் உண்டபிறகு எஞ்சியிருக்கும் உணவில் ஒரு பகுதி அவளுக்கு. கடினமான வேலைதான் என்றாலும், வீட்டில்தான் கிடக்கப்போகிறாள். ஆண்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிக வேலைப்பளு இருந்தாலும், அவளால் பணம் திரட்டமுடியாது. ஆனால், வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு அதிக உணவு கொடுத்தாகவேண்டும். காய், கறி, சோறு என்ன செய்தாலும் அவர்களுக்கு முதல் பங்கு. பெரிய பங்கு.

பசி என்பது உணவு குறித்து சிரமமான முடிவுகள் எடுப்பது.

தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (NREGA) அதிகாரிகளை எப்போதும் அவர்கள் ஈக்களைப் போல் மொய்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களில் சிலருக்கு அறுபது வயதுக்கு மேலாகிறது. சிலருக்கு எழுபதுக்கும் மேல். ஒருமுறை, இருமுறை கேட்டால் கிடைத்துவிடாது என்பதால் அதிகாரிகளைக் கிட்டத்தட்ட துரத்துவார்கள். கெஞ்சுவார்கள். சூரியன் உச்சியில் கொளுத்திக்கொண்டிருக்கும் ஆந்திரா மாநிலம். ஐந்து, ஆறு கிலோ மீட்டர் நடந்துதான் வரவேண்டும். காலில் செருப்பில்லை. மேலுக்கு ஒரு துண்டு. தலையில் ஒரு கந்தல் துணி. ‘ஐயா, எங்களுக்கும் வேலை கொடுங்கள்!’ உன்னால செய்யமுடியுமா? இப்பவே இப்படி தள்ளாடுறியே? ‘முடியும் ஐயா. என்னை நம்பி கொடுங்கள். பாறையைப் பிளந்த கைகள்.’ கைகளை நீட்டி காண்பிக்கிறார். சில சமயம் நிலத்தில் நீர் பாய்ச்சுவது போன்ற பணிகள் கிடைக்கின்றன. அல்லது, மற்றவர்களுக்குக் கிடைக்கும் அதே கடினமான பணிகள். காட்டைத் திருத்துவது, மரம் பிளப்பது, சாலையமைப்பது, இன்னபிற. நடுங்கும் கை நடுங்கியபடி கிடக்கும். மூச்சு வாங்கும். உடல் தளர்ச்சியடைந்து துவளும். நிறுத்தாமல் பணியாற்றவேண்டும். நிறுத்தினால், அபராதம் விதிக்கப்படலாம். மறுநாள் வேலை கிடைக்காமல் போகலாம். வீட்டுக்குப் போகும்போது, கையில் 70, 80 ரூபாய் கிடைக்கும் என்னும் கனவு அவர்களை மயக்கத்தில் இருந்தும் நடு்க்கத்தில் இருந்தும் மீட்டெடுக்கும்.

பசி என்பது நடுக்கத்தை மறைத்துக்கொண்டு உழைப்பது.

அந்த மகாராஷ்டிர ஆதிவாசி குடும்பத்தின் வீட்டில் எட்டு பேர். சமைக்கப்பட்ட உணவை அந்த எட்டு பேருக்கும் சமமாகப் பிரித்துக்கொடுத்தால், ஒருவருக்கும் வயிறு நிரம்பாது. எனவே, அவர்கள் ஓர் உபாயத்தைக் கண்டறிந்தார்கள். இருவருக்கு மட்டு்ம் வயிறு முட்டும் அளவுக்கு உணவு பரிமாறப்படும். மற்ற ஆறு பேர் வீட்டில் படுத்துக்கொள்வார்கள். அந்த இரண்டு பேரும் வெளியில் சென்று உற்சாகத்துடன் பணியாற்றி இரவு பணத்துடன் வருவார்கள். அடுத்த நாள் இன்னும் இரண்டு பேருக்குச் சாப்பாடு. அவர்கள் பணியாற்றவேண்டும். நேற்று வயிறு முழுக்கச் சாப்பிட்டவர்கள் அடுத்த நாள் வேலைக்குப் போகவேண்டியிருக்காது என்பதால் அவர்கள் பட்டினி கிடப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

பசி என்பது சுழற்சி முறையில் உண்பது.

ராயல்சீமாவில் வீட்டுப் பெண்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அவர்கள் கோரிக்கை, மாணவர்களுக்கான பள்ளி உணவு திங்களன்று அளவில் இரட்டிப்பாக இருக்கவேண்டும் என்பதே. ஏன் என்று கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள். ‘வெள்ளிக்கிழமைக்குப் பிறகு, சனி, ஞாயிறு இரு தினங்களும் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. திங்கள் மதியம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகம் சாப்பிட்டால்தான் அவர்களால் தாக்குப்பிடிக்கமுடியும்.’ இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். ‘எங்களால் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கமுடியவில்லை. நாங்கள் என்ன கத்தினாலும் அவர்களுக்கு எதுவும் ஏறப்போவதில்லை. பாதி மயக்கத்தில் இருக்கும் அந்தக் குழந்தைகளை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது? திங்களன்னு கூடுதல் உணவு கொடுத்தால்தான், மதியத்துக்குப் பிறகாவது வகுப்பைத் தொடரமுடியும்.’

பசி என்பது ஏக்கத்துடன் காத்திருப்பது.

பேண்ட், சட்டை அணிந்து யார் வந்தாலும் மக்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அவர் யார் எங்கிருந்து வருகிறார் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல. அடுக்கடுக்காகக் கேள்விகளால் துளைத்துவிடுவார்கள். எங்களுக்கு ஏதாவது வேலை கிடைக்குமா? எங்களுக்கு உணவு கிடைக்குமா? எங்களுக்குக் கடன் தருவீர்களா? மேலதிகாரிகளிடம் சொல்லி சிபாரிசு செய்வீர்களா? எங்களுக்கு ஏதாவது சலுகைகள் அளித்திருக்கிறார்களா? எங்களுக்குக் கொடுக்க ஏதாவது கொண்டு வந்திருக்கிறீர்களா?

பசி் என்பது அர்த்தத்தை இழப்பது.

‘முன்பு, அரிசி, கோதுமை என்று தானியங்கள் பயிரிட்டுக்கொண்டிருந்தோம். எப்படியாவது கஷ்டப்பட்டு விற்றுவிடுவோம். ஒருவேளை விற்க முடியாவிட்டால், பஞ்சம் வந்தால், நாங்கள் பயிரிட்டதை நாங்களே சாப்பிட்டுவிடுவோம். இப்போது நிலைமை மாறிவிட்டது. நாங்கள் என்ன பயிரிடவேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வதில்லை. என்ன விலையில் விற்கவேண்டும் என்பதை நாங்கள் முடிவுசெய்வதில்லை. எங்கே, எப்படிச் சந்தைப்படுத்தவேண்டும் என்பதை நாங்கள் நிர்ணயிப்பதில்லை. என்ன பூ்ச்சிமரு்ந்து பயன்படுத்தவேண்டும், எந்த அளவில் என்பதையெல்லாம் நாங்கள் யோசிப்பதில்லை. தரகர்கள் வருகிறார்கள். மிரட்டுகிறார்கள். கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்களே விதை தருகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கிறோம். அதிகாரிகளுக்குக் கீழ்படிகிறோம். பிரச்னை என்னவென்றால், நாங்கள் உற்பத்தி செய்வதை அவர்கள் கொள்முதல் செய்யத் தவறும்போது, நாங்கள் நடுங்கிப்போகிறோம். தானியங்களாக இருந்தால் உண்டுவிடலாம். பஞ்சை உண்ணமுடியுமா? அது செரிக்குமா?’ எனவே, அவர்கள் பூச்சிமருந்து உட்கொள்கிறார்கள்.

பசி் என்பது தவறான உணவை உட்கொள்வது. பசி என்பது இறந்துபோவது.

இந்தியாவில், ஒரு மணி நேரத்தில் இரு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் 17 குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி இறந்துபோகின்றன. அரசாங்கம், ஒவ்வொரு மணி நேரமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தவேண்டிய 57 கோடி ரூபாய் வரியைத் தள்ளுபடி செய்துகொண்டிருக்கிறது.

பசி் என்பது அரசாங்கத்தால் வஞ்சிக்கப்படுவது.

மும்பையில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் சேரிப்பகுதிகளில் வாழ்கிறார்கள். வீடு என்று அழைக்கப்படும் நிலையான இருப்பிடத்தில் வாழ்பவர்கள் 71 சதவீதம் பேர். ஒரே ஒரு அறை மட்டுமே கொண்ட இந்த வீடுகளில்தான் குடும்பத்தினர் மொத்தமாக வசிக்கின்றனர். ஆண்களும் பெண்களும் முதியோர்களும் குழந்தைகளும். மும்பையின் தற்போதைய சுற்றுலா கவர்ச்சி, 2 பில்லியன் டாலரில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாளிகை. முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் வசிப்பதற்காக உருவாக்கப்பட்ட வீடு இது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் உலகின் நம்பர் 1 பணக்காரராக முகேஷ் அம்பானி திகழ்வார் என்று ஊடகங்கள் ஆருடம் சொல்கின்றன.

பசி என்பது ஏற்றத்தாழ்வுகளை ஜீரணம் செய்துகொள்வது.

தனித்தனியே நியமிக்கப்பட்ட மூன்று அதிகாரபூர்மான குழுக்கள் ஒருமித்த குரலில் ஒப்புக்கொள்ளும் உண்மை இது. ‘ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 836 மில்லியன் பேர். தலித் மற்றும் பழங்குடியின மக்களில் 86 சதவீதம் பேர் ஏழைகள். 85 சதவீத முஸ்லிம்கள் ஏழைகள். உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உணவு கிடைக்கவில்லை. ஒரு விவசாயக் குடும்பத்தின் மாதாந்திர சம்பாத்தியம் 503 ரூபாய். இதில் 60 சதவீதம் உணவுக்காக செலவழிக்கப்படுகிறது.’

பசி என்பது உண்மை அறிவது.

பிரச்னையின் ஆணிவேர், விவசாயிகள் தற்கொலை அல்ல. விவசாயிகள் தற்கொலை என்பது பிரச்னையின் விளைவு. நிஜமான பிரச்னை, விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றிக்கொண்டது.

பசி் என்பது உண்மை அறிந்தும், செயலற்று இருப்பது.

0

Slumdogs Vs Millionaires: Farm Crisis and food crisis in the age of inequality என்னும் தலைப்பில் பி. சாய்நாத் நேற்று ஜெர்மன் ஹாலில் ஆற்றிய உரையின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை. இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் இது.