சாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?”


சாய்பாபா செத்துவிட்டார். அவரது பக்தர்களுக்கோ, ‘கடவுள் இறந்துவிட்டார்’! கடவுளின் மரணம் நிச்சயம் ஒரு வருந்தத்தக்க இரங்கல் செய்திதான். ஆனால் நமக்கோ கடவுளை விடவும், பக்தர்களைப் பற்றியே அதிக கவலை!

பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்த சாயிபாபா அந்தப் பணத்தில் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், இலவச மருத்துவமனைகள் என கட்டி வைத்துள்ளார். இப்போது அவருக்கான ஆதரவு சக்திகள் தங்களின் தர்க்கத்துக்கு பயன்படுத்தும் பாய்ண்ட்டும் இதுதான். ‘எப்படியோ சம்பாதிச்சுட்டுப் போகட்டும்ங்க.. எவ்வளவு சேவை செய்யிறாரு. கொள்ளையடிக்கிற மத்த எவனும் இதை செய்யிறானா?’ என்பது பக்தர்களுடையது மட்டுமின்றி, பொதுவான மிடில் கிளாஸ் மனநிலையின் வாதமும் கூட.

’எப்படியோ சம்பாதிச்சுப் போகட்டும்’ என்ற சொற்களின் மூலம் மிகப் பெரிய மோசடித்தனங்களையும், ஏமாற்று வேலைகளையும் மிக எளிமையாக இவர்கள் கடந்து செல்கின்றனர். சாயிபாபாவுக்கு மட்டுமல்ல.. இன்று ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கும், குவைத் ராஜாவுக்கும் கூட இதே தர்க்கத்தைதான் பொதுப்புத்தி பொருத்துகிறது. தேர்தல் களத்தில் தி.மு.க.வின் ஊழல்கள் எல்லாம் வாக்குக்கு எதிரானதாக மாறாது எனச் சொன்ன டீ கடைக்காரர் ஒருவர், ‘நாட்டுல எவன் சார் கொள்ளை அடிக்கல.. ஏதோ அவன் பத்து காசு பார்த்தானா… நமக்கு ரெண்டு காசு தந்தானா.. ரைட்டு ஓ.கே.ன்னுட்டுப் போக வேண்டியதான்’ என்று பெருந்தன்மையாக ஊழலை அங்கீகரித்தார்.

நாட்டின் மிகப் பெரும் கொள்ளைகளுக்குதான் இப்படி என்றில்லை. பன்னெடுங்காலமாக இந்த சிஸ்டம் மக்களை கொஞ்சம், கொஞ்சமாக Corrupt செய்து வந்திருக்கிறது. அதன் விளைவு… ஊழல் என்றில்லை… எல்லாமே இப்படித்தான் நடக்கும், ஏற்றுக்கொண்டு அனுசரித்துதான் வாழ வேண்டும் என மக்களின் மனங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. ‘போலிஸ்னா அடிக்கத்தான் செய்வான். அரசியல்வாதின்னா ஊழல் பண்ணத்தான் செய்வான். அதிகாரின்னா லஞ்சம் வாங்கத்தான் செய்வான்’ என சீரழிவுகள் அனைத்தையும் சமூகத்தின் இயல்புகள் என ஏற்றுக்கொண்டிருக்கிறது பொதுப்புத்தி. ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’ என வடிவேல் கேட்பது வெறும் நகைச்சுவை அல்ல, இந்த சமூகத்தின் மனசாட்சி!

அனைத்தையும் அனுசரித்துப் போவதும், ஊழலையும், பொறுக்கித்தனத்தையும், நேர்மையின்மையையும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களாக கொள்வதும் தனிப்பட்ட நபரின் விருப்பத் தேர்வாக இருக்கும் வரை அது ஓர் தனிநபரின் ஆளுமைப் பிரச்னை மட்டுமே. ஆனால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்துபோவது ஒரு சமூக மனநிலையாக மாற்றப் பட்டிருக்கிறது. அதனால்தான் தேர்தலில் போட்டியிடும் யாரும் உத்தமர் இல்லை என தெரிந்தும் மக்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் மட்டுமல்ல.. வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் சமரசத்தால்தான் எல்லோரும் எதிர்கொள்கின்றனர்.

இன்று கல்வி என்பது கொழுத்த பணம் புரளும் வர்த்தகம். தனியார் கல்லூரிகளில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட் ஒரு கோடி ரூபாய் விலைபோகிறது. இந்த அநீதியை எதிர்த்து ‘கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை இலவசமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என உரிமையை போராடிப் பெற யாரும் தயாரில்லை. மாறாக, கிடைத்த படிப்பைப் படிக்கவும், ‘பணத்தைக் கொடுத்தாலும் வேலையை முடித்துத் தரும்’ நீரா ராடியாக்களைத் தேடவுமே விரும்புகின்றனர்.

ஆனாலும் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்துகிறது. தங்களின் அட்ஜஸ்ட்மெண்ட் வாழ்க்கையை நியாயப்படுத்தத் தொடங்குகின்றனர். மாறாக, தங்களுக்கென ஒரு முற்போக்கு அடையாளத்தை சூடிக்கொண்டவர்களோ… அனைத்தையும் அனுசரித்துச் செல்லும் பச்சோந்தித்தனத்தையே கொள்கையாகப் பேசத் தொடங்குகின்றனர். முற்காலத்தியில் முற்போக்குப் பேசி தற்போது ஓட்டரசியலின் லாபங்களை அறுவடை செய்துகொண்டிருக்கும் (ML to MLA) ரவிக்குமார் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சந்தர்ப்பவாத அரசியலுக்கு கொள்கை சாயமடித்து… விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் வேலையை ரவிக்குமார் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்.

இந்த மோசமான சிஸ்டத்தை மாற்றுவதற்குப் பதிலாக இதற்குள் சாமர்த்தியமாக வாழ்வது எப்படி என அனுதினமும் மக்களுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது. தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களுக்கான காரண சக்தியை கண்டறிந்து அகற்றுவதற்குப் பதிலாக… அதன் தாக்குதலை சமாளித்து தற்காத்து வாழ்வது எப்படி என்றே சனங்களுக்குப் போதிக்கப்படுகிறது. ‘ஆயிரம்தான் இருந்தாலும் அவன் புருஷன். நாலு அடி அடிச்சாலும் வாங்கிக்கிட்டு சேர்ந்துதான் வாழனும்’ என்பது அப்பத்தாக்களின் அறிவுரை மட்டுமல்ல… அரசாங்கத்தின் அருளாசியும் இதுதான். ஈஷா தியான மையம், வாழும் கலை… எல்லாம் இந்த கும்பல்தான். நோய் நிவாரணிக்குப் பதில் வலி நிவாரணியும், மயக்க மருந்துமே இவர்களின் பரிந்துரை.

இந்த இடத்தில் நாம் சாயிபாபாவைப் பேசுவோம். சாய்பாபா யார்? அவர் சாதாரண மனிதன். அதனால்தான் இப்போது செத்தும்விட்டார். இத்தனை நாட்கள் தன்னை தெய்வம் என சொல்லிக்கொண்ட சாய்பாபா, மாய மந்திர வித்தைகள் எல்லாம் செய்து உலகம் முழுக்க பக்தர்களை வளர்த்துக்கொண்டு, பல லட்சம் கோடி ருபாய் சொத்துக்களையும் சேர்த்துவிட்டார். அந்த வித்தைகளின் செய்முறை விளக்கம், Working stills வரை வெளியான பின்னும் அவரும் கைவிடவில்லை, மக்களும் அவரை கைவிடவில்லை. இந்த மோசடிகளைப் பேசினால், ‘அவர் தனி மனிதனாக ஒரு நகரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கு பல லட்சம் பேர் மருத்துவ வசதி பெருகின்றனர். கல்வி வசதி பெருகின்றனர்’ என பேச்சை மடை மாற்றுகின்றனர்.

இவ்வளவுப் பேருக்கு இலவசமாக அனைத்தையும் செய்வதற்கு உண்டான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது? மாய மந்திரத்தில் கொண்டு வந்தாரா? ரிசர்வ் பேங்க் ஆபீஸர் வந்து ஒவ்வொரு நோட்டிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாரா? ‘எல்லாம் பக்தர்கள் கொடுத்தது’ என்பார்கள். ’பக்தர்கள் ஏன் கொடுத்தார்கள்?’ என்றால், ‘இது என்ன கேள்வி? அவர் பகவான், இவங்க பக்தர்கள். குடுக்குறாங்க’ என அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆக, தான் இறைவன் அல்லது தெய்வீக சக்தி படைத்தவன் என சாய்பாபா தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்ட இமேஜ்தான் இத்தனைக்குமான அடிப்படை. அந்த அடிப்படையே பொய்களாலும், மோசடிகளாலும் உருவாக்கப்பட்டது என்பதுதான் பிரச்னையின் மையம்.

உங்கள் மகனோ, தம்பியோ, தங்கையோ தான் வேலைப் பார்க்கும் இடத்தில் அலுவலகப் பணம் 10 லட்சத்தைத் திருடிவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள். திருடியப் பணத்தில் நான்கு அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான். இப்போது ‘ஏன் திருடினாய்?’ என கேட்டால் ’அதான் அனாதைப் புள்ளைங்களைப் படிக்க வைக்கிறேன்ல’ என பதில் சொன்னால் அது யோக்கியமானதா? ‘ஏதோ தெரியாத்தனமாகத் திருடிவிட்டான். அதை உணர்ந்து பிராயச்சித்தமாக அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான்’ என்று சொன்னால் கூட அந்த தர்க்கம் புரிந்துகொள்ளக் கூடியது. குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குறைந்தப்பட்ச நேர்மையேனும் அதில் உண்டு. ஆனால் பாபாவின் பக்தர்களோ திருட்டையே ஒரு தெய்வீகத்தன்மையாகப் பார்க்கின்றனர்.

சாய்பாபா சம்பாதித்தது = திருட்டுப் பணம் என்ற இந்த ஒப்பீட்டில் பொருந்தாப் புள்ளி ஒன்று உண்டு. ஓர் எல்லைக்குப் பிறகு சாய்பாபா தானாக சென்று யாரிடமும் திருடவில்லை. பக்தர்கள் தானாக வந்து கொட்டிய பணம் அது. ’பக்தர்கள் மனமுவந்து கொடுத்ததை அவர் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிட்டார். அது தப்பா?’ என்று கேட்கிறார்கள். வேறு சிலரோ, ’அவர் பணம் சம்பாதிப்பதும், அதற்கு கையாளும் வழிமுறைகளும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறுதியில் அந்த பணம் முழுவதையும் சமூகத்துக்குத் தொண்டு செய்யத்தானே பயன்படுத்துகிறார்? இதில் என்ன தவறு இருக்க முடியும்?’ என கேட்கிறார்கள். அதாவது குடியிருக்குறது குடிசையா இருந்தாலும் போய் சேர்ற இடம் கோயிலா இருக்கனும். காரணம் முக்கியம் இல்லை, விளைவுகளே முக்கியம் என்கிறார்கள். ஆனால் காரணமின்றி செயல் இல்லை. சாய்பாபாவின் மாய மந்திரத்தையும், அவர் நடத்தும் இலவச மருத்துவமனையையும் ஒன்றுடன் ஒன்று பிரித்துப் பார்க்க முடியாது. மந்திரம்தான் மருத்துவமனையின் அஸ்திவாரம்.

இன்று சாயிபாபாவின் பிராண்ட் அம்பாசிடர்களாக இருக்கும் அப்துல் கலாம் முதல் மானா மூனா சிங் வரை, சச்சின் டெண்டுல்கர் முதல் மு.கருணாநிதி வரை சகலரும் பாபாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். தனி விமானத்தில் புட்டபர்த்தி விரைகிறார் ஸ்டாலின். இவர்கள் எப்போதேனும் மக்கள் பிரச்னைக்காக இத்தனை விரைவாக செயல்பட்டதுண்டா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் தவிட்டுத் தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்பட்ட தீ விபத்தில் 17 வட மாநிலத் தொழிலாளர்கள் இறந்துபோனார்கள். ஏறக்குறைய 10 நாட்களுக்கும் மேலாக கேட்பாரின்றி கிடந்த அந்தப் பிணங்களை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏனெனில் அவை வி.ஐ.பி.களின் பிணங்கள் அல்ல.

அதிகாரத்துடன் ஒத்துப்போவது, அதிகாரத்துக்கு ஒத்து ஊதுவது, எது பொதுப்புத்தியோ, எது பெரும்பான்மை கருத்தோ, எதற்கு சந்தையில் மவுசு இருக்கிறதோ, எது விலைபோகிற பண்டமோ… அதன் பக்கம் நின்றுகொள்வது்… இதுதான் இந்த சந்தைப் பொருளாதாரம் மக்களிடம் கொண்டு வந்திருக்கும் மனநிலை. இதில் நியாயம், நீதி, அறம் என்பவை எல்லாம் பொருளற்ற வெறும் சொற்கள் மட்டுமே. சுருங்கச் சொன்னால் டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும். அவன்தான் சாமர்த்தியசாலி. இப்படி சுயநலமாகவும், ஒட்டுண்ணியாகவும், பச்சோந்தித்தனமாகவும் இருப்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு தகுதியாகவே கணக்கிடுகின்றன. இதை ஊடகங்கள் தெரிந்தே செய்கின்றன.

சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது மனைவியை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது அனைவரும் அறிந்த கதைதான். இதனால் அவரது வியாபாரத்துக்கு எந்த குந்தகமும் இல்லை. ஊடகங்களில் ஊருக்கு உபதேசித்து அறுவடை செய்த இமேஜை அடியுரமாகப் போட்டு இப்போது ஊர், ஊருக்கு ஈஷா யோகா மையம் நடத்திக்கொண்டிருக்கிறார் சத்குரு. இதேபோல் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீதும், நித்தியானந்தா மீதும் ஏராளமான சர்ச்சைகள் உண்டு. ஆனாலும் ஊடகங்கள் இவர்களை ஐகான்களாக முன்னிருத்துகின்றன. இதன் மறுகோணம், இவர்கள்தான் இந்தியாவின் இந்துத்துவ சாரத்தை தக்க வைத்துக்கொள்கிற குவி மையங்கள். ’ஏன் டி.ஜி.எஸ்.தினகரன் செய்யவில்லையா?’ என்றால், ஆம் அதுவும் இதற்கு இணையான அயோக்கியத்தனம்தான். ஆனால் எந்த மெயின் ஸ்ட்ரீம் பத்திரிக்கையும் டி.ஜி.எஸ்.தினகரனை வைத்து தொடர் எழுதுவது இல்லை என்பதை நாம் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

சாய்பாபாவைப் பொருத்தவரை கடைசியில் எல்லோரும் வந்து முட்டி நிற்கும் இடம் மனிதநேயம். ’இதையாவது செய்யிறாருல்ல.. மத்தவன் யாரும் செய்யலல்ல’ என்ற புள்ளியில் வந்து நிற்பார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மனிதநேயம் என எதுவும் இங்கு இல்லை. தமிழ் மக்களின் உள்ளன்போடு கூடிய மனிதநேயத்தை சுனாமி சமயத்தில் நாம் எல்லோருமேப் பார்த்தோம். சுனாமியில் இறந்துபோனவர்களுக்கு வீடும், வாழ்வாதார வசதிகளும் செய்து தருவதாகக் கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நிதி உதவி வாங்கின பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். இன்றுவரை அதில் பாதிப் பணம் கூட செலவிடப்படவில்லை. பல தன்னார்வ நிறுவனங்கள் மீது சுனாமி நிதி முறைகேடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன. இதை எப்படி மதிப்பிடுவீர்கள்? ‘என்.ஜி.ஓ. காரன் என்னவோ பண்ணிட்டுப் போறான். எங்கேயோ வெளிநாட்டுல பணம் வாங்கி யாரோ நாலு பேருக்காவது வீடு கட்டி தந்தானா, இல்லையா?’ என இதை நியாயப்படுத்துவது சரியானதா? சாய்பாபாவின் ‘எப்படியோ நல்லது செய்தாருல்ல’ லாஜிக்கும் இப்படித்தான். அவை, ஊரை ஏமாற்றிக் கொள்ளை அடித்தவன் தன் ஏமாளி பக்தர்களுக்கு வீசி ஏறியும் பிஸ்கட் துண்டுகள். அதற்குள் நல்லனவற்றைத் தேடுவது என்பது, பெரியாரின் மொழியில் சொல்வதானால், ‘மலத்துக்குள் அரிசி பொறுக்கும் வேலை!’

இது யாவற்றையும் கடந்து பிறந்தால் இறந்துதானே ஆக வேண்டும்? இதை எழுதிய நான் தொடங்கி வாசிக்கும் நீங்கள் வரை ஒருநாள் சாகத்தான் போகிறோம். அதுபோல் இப்போது சாய்பாபாவும் இறந்திருக்கிறார். வடிவேலு வசனத்தைதான் நானும் சொல்கிறேன், ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’!

_________________________________________________

வினவு பின்குறிப்பு:

சாயிபாபா ட்ரஸ்ட்டின் மொத்த சொத்து 40.000 கோடி ரூபாயிலிருந்து 1,45,000 கோடி ரூபாய் வரைக்கும் இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதில் கூட சரியான கணக்கை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. போகட்டும். நாம் குத்து மதிப்பாக ஒரு இலட்சம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். இதில் சாயிபாபா செலவழித்தது எவ்வளவு? தண்ணி டேங்க் கட்ட 100 கோடி, மருத்தவமனைக்கு 100கோடி, கிருஷ்ணா நதிக்கு 100 கோடின்னு கொஞ்சம் கருணை உள்ளத்தோடு கணக்குபோட்டாலும் மொத்தம் ஆயிரம் கோடியைத் தாண்டவில்லை. எனில் மிச்சம் 99, 000 கோடி எங்கே யாரிடம் இருக்கிறது?

அது பிரச்சினையே இல்லை. தற்போது சாய்பாபா ட்ரஸ்ட்டை நிர்வகிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஆதினத்தை கைப்பற்றும் போட்டி ஆரம்பித்து விட்டது. சூடு பிடிக்கும் போது இந்த ஆன்மீகக் கொள்ளையர்களின் கொள்ளையை புரிந்து கொள்ளலாம்.

அடுத்து சாய்பாபவின் பக்தராக இருப்பவருக்கு எதாவது தகுதி வைத்திருக்கிறார்களா? இல்லை. நன்கொடை கொடுக்கப்படும் பணத்தின் ரிஷிமூலத்தை ஆய்வு செய்து தணிக்கை செய்திருக்கிறார்களா? அதுவும் இல்லை.

அதாவது தொழிலில் மோசடி செய்து அபகரிக்கப்படும் பணம், கருப்புப்பணம், இலஞ்சம் பணம், ஊழல் பணம், இன்னபிற கொள்ளைப் பணங்களும், அதன் உரிமையாளர்களான ஃபிராடு பேர்வழிகளும் தாராளமாக சாயிபாபாவை சந்தித்தார்கள். நன்கொடையும் கொடுத்தார்கள். சாயிபாபாவும் அவர்களை பரந்த உள்ளத்தோடு ஏற்று, ஒரு இலட்சம் கோடியில் ஒரு சாம்ராஜ்ஜியத்தையும் கட்டிக் கொண்டார். இடையில் செக்ஸ் மோசடி, கொலை என்று எல்லா மர்மங்களும் கொண்ட திரில்லரில் மறைந்து விட்டு இன்று ஒரே அடியாக போய்ச் சேர்ந்தார். ஆக இந்த வள்ளலின் பின்னணி இதுதான் என்று தெரிந்தால் கைகூப்பி தொழுவீர்களா, காறித் துப்புவீர்களா?

சாய்பாபாவும் மேஜிக் ஷோவும்


காசு கொடுத்து ஒருவனை கடவுள் என்று கூப்பாடு போட்டால்?


சாய்பாபா பக்தர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்… இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.

உடைந்து போயிருப்பார்கள் பாவம். கடைசி நம்பிக்கையான உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, ஒரு விசை ஒரு வினாடியில் இயக்கத்தை நிறுத்திவிட்டது.

மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபத்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்… இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.

பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, மூன்றாம், பத்தாம், பதினாறாம் நாளில் விருந்து தின்றுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப்போவதுதான். வசதியைப் பொருத்து ஓராண்டுக்குப் பின் ஒரு நினைவுநாள் கொண்டாட்டம் பத்திரிகை விளம்பரம்..

ஆனால் எவ்வளவு நெருக்கமானவரின் மரணத்துக்குப்பின்னும், எவரும் வாழ்க்கையை வாழாது விடுவதில்லை. மரணமும் யதார்த்தம் என்று மனத்தின் மூலையில் அறிவு சொல்லிக்கொண்டிருப்பதால்.
அறிவே பழுதாகும்போது மனம் சிதிலமடையும், உடையும், திசைதெரியாமல் தடுமாறும். இதனால்தான் பாபா பக்தர்களிடம் எனக்கு அனுதாபம் அதிகமாகிறது.

வித்தைகாட்டி மயக்கியவனை வித்தகன் என்று கூடச்சொல்லலாம், இறைவன் என்று சொல்ல ஆரம்பித்தால்? காசு வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புகழ்ந்து திரியலாம், ஆனால் காசு கொடுத்து ஒருவனை கடவுள் என்று கூப்பாடு போட்டால்? இங்கேதான் அறிவின் மயக்கம். இங்கேதான் ஆபத்தும்.

எந்த அளவிற்கு தன்னம்பிக்கையிழந்து, தோல்வி வரும் என்ற பயத்தில், நம்மால் முடியாததை இவனாவது செய்வானா என்ற எதிர்பார்ப்பில் இவன்பின் இத்தனை சாதாரண மக்கள் அலைந்திருக்கிறார்கள்! இவன்மூலம் காரியம் சாதிக்கும் தொடர்புகளை விருத்தி செய்துகொள்ள வந்த வியாபாரிகள், இவனது பக்தகோடிகளையும் கவர்வதற்காக வந்து கொஞ்சிய அரசியல்வாதிகளை விட்டுவிட்டாலும், இவன்பின் நின்று நம்பிக்கிடந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்கள் மீதுதான் என் அனுதாபம்.

அவர்களெல்லாம் பாவம் தைரியம் இழந்தவர்கள், தடுமாறுபவர்கள் வாழ்க்கையில் உழைப்பும் முனைப்புமே வெற்றியைத்தரும் என்பது தெரியாதவர்கள், தன் காலில் நிற்கும் வலிமை இல்லாமல் தூண் தேடியவர்கள்!
அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன்.

தெய்வமே உயிரை இயந்திரங்களில் தொங்கவைத்திருந்த்து என்ற போதும் அந்த தெய்வத்திடம் தன்னையே உயிர்ப்பித்துகொள்ளும் சக்தி இருந்தது என்று நம்பி ஏமாந்தவர்களின் சோகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது. அவர்கள் அழட்டும். கண்ணீர் விடட்டும். நம்பி ஏமாறுவதும் மனித இயல்புதான். ஆனால் துக்கத்தின் அளவு நீளமில்லை, extended grief கூட ஆறுமாதத்திற்கு மேல் தீவிரமாய் இருக்காது. அவர்கள் மீண்டு விடுவார்கள், மரணத்தினை ஏற்று அதையும் தாண்டி வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால்….

இதே பக்தர்களில் இரு பிரிவினர் உருவாக வாய்ப்புள்ளது. சிலர் செத்தால் என்ன சாமி அருவமாய் வந்து கூட இருக்கும் எனும் பிரமையில் வாழ்வைத் தொடர்வார்கள். பிறர், சரி இந்த ஒரு தெய்வம் செத்துப்போனாலும் இன்னும் புது தெய்வங்கள் இருக்கும் என்று தேடுவார்கள் –அவர்களுக்காக மீதி இருப்பவற்றுள் ஒன்று வசீகரிக்கும் அல்லது புதிதாய் ஒன்று முளைத்து கடைவிரிக்கும். இவர்களுக்கு இத்துடனாவது இந்த மடமையை விடலாமே என்று மட்டும் தோன்றாது.

இது நுகர்வு கலாச்சாரத்தின் காலகட்டம். ஒரு பொருள் காலாவதியானால் இன்னொன்று உருவாக்கி, விளம்பரப்படுத்தி விற்கப்படும். அதே பொருள்தானே, அப்போதே அது பயன்படவில்லையே என்று நிராகரிக்காமல் புதிய வடிவ-விளம்பரத்தில் விற்கப்படும் அதே வெட்டியானதை வாங்க இன்னும் மக்கள் முண்டியடிப்பார்கள். இவர்களுக்காக அனுதாபம் தெரிவிப்பதைத்தவிர்த்து நான் என்ன செய்ய முடியும்?வரிசையில் நிற்பார்கள், இந்த வரிசையில் செத்தபாபா பக்தர்கள் முன்வரிசைக்கு முண்டியடிப்பார்கள், அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு வேறென்ன என்னால் செய்ய முடியும்?

வாக்களிக்க பணம் வாங்குவது குற்றமா?


அண்ணா ஹசாரே அன்கோவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் மெழுகுவர்த்தியோடு கலந்து கொண்ட நமது அன்பிற்குரிய நடுத்தர வர்க்கம், அதற்கு அடுத்தபடியாக கொஞ்சம் வெறியோடு ஒரு ரஜினி ரசிகனைப் போல ஆதரிப்பது தேர்தல் கமிஷனை! தமிழகத்தில் பறக்கும் படைகளால் பிடிபட்ட கோடிக்கணக்கான பணம், திருச்சி ஆம்னி பேருந்தில் ஐந்து கோடியை பிடித்த வீராங்கனை அதிகாரி, அஞ்சா நெஞ்சன் அழகிரியை தண்ணி குடிக்க வைத்த மதி நுட்பம்….என்று இந்த போற்றுதல்கள் ஊடகமெங்கும் விரவிக் கிடக்கின்றன. முக்கியமாக பெரிசு கருணாநிதியே தேர்தல் கமிஷன் குறித்து எல்லா இடங்களிலும் புலம்பித் தள்ளுவதை நடுநிலையாளர்கள் மாபெரும் வெற்றியாக கருதுகின்றனர்.

ஆனால் இந்த செய்திகளுக்கு பின்னே உங்களையும் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களையும் அரசியலில் இருந்தே விலக்கும் பாசிச போக்கு கலந்திருக்கிறது என்பதை அறிவீர்களா?

அதிகார வர்க்கத்தின் ஒரு பிரிவும், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவும் ஜெயலலிதாவை ஆதரிப்பதன் விளைவாகவே தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கைகளை எடுக்கிறது என்று சிலர் சொல்லக்கூடும். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் அதைத் தாண்டி தேர்தல் என்பதே மக்கள் கலந்து கொள்ளும் திருவிழா அல்ல, வெறுமனே வாக்களிப்பு மட்டும் நடக்கும் ஒரு சடங்கு போல மாற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் தேர்தல் வரும்போது ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் விரிவான தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை நடத்துவது வழக்கம். அதன் அங்கமாக பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கும். இந்த தேர்தல் குறைவான காலத்தில் நடக்கிறது என்றாலும் பல இடங்களில் தோழர்கள் விரிவான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பல இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு போலீசு மறுத்திருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் உண்மையான இலட்சணம்.

பொதுக்கூட்டத்திற்கான விண்ணப்பத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்ற வார்த்தைகளைப் பார்த்தாலே போலீசு மருண்டு விடுகிறது. உடனே “இது குறித்து தேர்தல் கமிஷனிடம் அனுமதி வாங்க வேண்டும்” என்று சம்பந்தப்பட்ட போலீசு சொல்கிறது. நண்பர்களே, ஒரு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷனிடம் எதற்கு அனுமதி வாங்க வேண்டும்? அந்த கமிஷன், தேர்தல் எப்படி சட்டப்படி நடத்த வேண்டும் என்பதைத்தானே செய்ய வேண்டும்? இந்த அரசு, அரசியல், அமைப்பு குறித்த ஒரு இயக்கத்தின் கொள்கையை, அதை பிரச்சாரம் செய்யும் உரிமையை அது எப்படி தீர்மானிக்க முடியும்?

சரி, தோழர்கள் அந்தந்த ஊர்களில் இருக்கும் தேர்தல் கமிஷன் பொறுப்பிலுள்ள அதிகாரிகளிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்கிறது? இதில் சட்டப்படி அவர்கள் பதிலளிக்க முடியாது என்பதால் ” இது குறித்து நீங்கள் போலீசிடமே அனுமதி வாங்குங்கள்” என்கிறார்கள். மீண்டும் போலீசு, மீண்டும் தேர்தல் கமிஷன்….இந்த ஆட்டம் இன்று வரை முடியவில்லை.

நாள் வேறு குறைவாக இருக்கிறதே இதற்கு வழக்கு போட்டு அனுமதி வாங்க முடியுமா என்று தோழர்கள் யோசனையோடு சென்னை உயர்நீதிமன்றம் போனார்கள். தலைமை நீதிபதி இக்பால் தலைமியிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து சரியாக சொல்வதாக இருந்தால் எந்த விசாரணையும் செய்யாமல் “தேர்தல் புறக்கணிப்பு என்பது ஜனநாயக விரோதம்” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆக நாம் இந்த தேர்தலை புறக்கணிப்பது சட்ட விரோதம் என்று திமிருடம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர், மாட்சிமை தாங்கிய நீதிபதிகள். இனி இதை மறுத்து உச்சநீதிமன்றம் போய் வாதாடி அனுமதி வாங்குவதற்குள் தேர்தல் முடிவுகளே வந்து விடும். இதுதான் இந்த நாட்டில் நிலவும் ஜனநாயகம்.

மறுகாலனியாக்கம் மும்முரமாக நடைபெறும் இந்த இருபது ஆண்டுகளில் அரசு மட்டுமல்ல அதற்கு பொருத்தமாக தேர்தலும், கூடத்தான் பாசிசமயமாக மாறியிருக்கிறது. முன்பிருந்த பொதுவான அரசியல் நடவடிக்கைகளெல்லாம் இன்று கிடையாது. முதலில் இரவு பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றார்கள். திராவிட இயக்க வரலாற்றில் விடிய விடிய நடக்கும் இந்த பிரச்சாரக் கூட்டங்கள்தான் பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் மாபெரும் அரசியல் நடவடிக்கையாக இருந்தது. அதற்கு ஆப்பு வைத்த கையோடு பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான முக்கியமான இடங்களை மறுத்தார்கள். ஆளா வராத ஓரிரு இடங்களை மட்டும் ஒதுக்கினார்கள். ஆர்ப்பாட்டங்கள், மறியல் எல்லாவற்றிற்கும் இதுதான் கதி. பின்னர் சுவரெழுத்து, சுவரொட்டிகள், பேனர்கள் எல்லாவற்றுக்கும் தடை விதித்தார்கள்.

இதனால் தற்போது சிறு கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் மக்களிடையே பிரச்சாரம் செய்ய முடியாது. அவர்கள் யாரென்றே மக்களுக்கு தெரியாது. பெரிய கட்சிகள் எல்லாம் ஆளுக்கொரு தொலைக்காட்சி வைத்திருப்பதால் பிரச்சினை இல்லை. அதே போல பணபலத்தால் ஊடகங்களில் விளம்பரம் செய்தும் ஈடு செய்கிறார்கள். இந்த நிலை தொடரும் பட்சத்தில் நமது தேர்தலும் அமெரிக்கா போல கார்ப்பரேட் நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும். அமெரிக்காவில் இரண்டு கட்சிகளைத் தவிர வேறு யாரும் வெற்றி பெறவே முடியாது என்ற சூழ்நிலை இங்கும் தோன்றும். அல்லது தோன்றிவிட்டது.

இது தவிர பெரிய கட்சிகள் கூட முன்னர் போல பெருந்திரளான மக்கள் நடவடிக்கைகளை வைத்து தேர்தலை அணுகுவதை இப்போது மாற்றிவிட்டார்கள். வேட்பாளர் மனுக்கொடுக்கும் போது கூட நான்கு பேர்தான் செல்ல வேண்டும், வாகன ஊர்வலத்தில் நான்குக்கு மேல் அனுமதியில்லை என்று ஏராளமான விதிகள் இப்போது அமலில் இருக்கின்றன. இவையெல்லாம் தேர்தலை சிறப்பாகவும், நடுநிலைமையோடும் நடத்துவதற்கு காரணமென்று பலர் அப்பாவித்தனமாய் நம்புகிறார்கள். அரசியலே சாக்கடை என்று கருதுவதற்கு பழக்கப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம்தான் இதனை எந்தவித பரிசீலனையின்றி போற்றுகிறது.

தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் எதுவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவில்லை, மறுக்கிறது. இந்த நடவடிக்கைகள் தேர்தல் மற்றும் பொதுவான அரசியல் நடவடிக்கைகளிலிருந்து மக்களை விலக்கி வைக்கிறது. அப்படி மக்கள் விலக விலக அரசு என்பது மேலும் பாசிசமயமாகுவதற்கு உதவியாக இருக்கும். ஆளும் வர்க்கம் தான் விரும்பும் எதனையும் மக்கள் எதிர்ப்பின்றி அல்லது அப்படி எதிர்ப்பு காட்டுவதற்கு வழியில்லாத நிலைமையினை உருவாக்கி சாதித்துக் கொள்ளும்.

கூர்ந்து கவனித்தீர்களென்றால் இந்த தேர்தல் கார்ப்பரேட் கட்சிகளின் நடவடிக்கைகளை மட்டும் ஊக்குவிப்பதை புரிந்து கொள்ளலாம். சோனியா, ராகுல், அத்வானி, ஜெயலலிதா போன்றோர் விமானத்தில், ஹெலிகாப்டரில் பறந்து வந்து பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 14 இலட்சம் மட்டும் செலவு செய்யலாம் என்று கண்காணிக்கும் தேர்தல் கமிஷன் இந்த பறக்கும் செலவுகளை மட்டும் வேட்பாளர்கள் கணக்கில் சேர்க்காதாம். தொண்டர்களுக்கு பிரியாணி போடுவதை தடுத்து நிறுத்தி மாபெரும் ஜனநாயக நடவடிக்கை எடுக்கும் கமிஷன் இந்த ஹெலிகாப்டரை மட்டும் பெருந்தன்மையுடன் அனுமதிக்கும் இரகசியம் என்ன?

அதே போல பெரிய கட்சிகள் ஆளுக்கொன்றோ இரண்டோ தொலைக்காட்சிகளை வைத்துக் கொண்டு செய்தி, விளம்பரம் என்ற முகாந்திரத்தில் பிரச்சாரம் செய்கின்றன. இதற்கான செலவை மதிப்பிட்டு தமிழகம் முழுவதும் போட்டியிடும் அந்த கட்சிகளது வேட்பாளர்களின் கணக்கில் சரசாரியாக கழிக்க வேண்டியதுதானே? செய்வார்களா?

ஒரு வேட்பாளர் 14 இலட்சத்திற்கு மேல் செலவழிக்க கூடாது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? முதலாளிகள், பணக்காரர்கள் போன்ற பணம் படைத்த பிரிவினர் தேர்தலில் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஐந்து அல்லது பத்து இலட்சத்திற்கு மேல் மொத்த சொத்தும் இல்லாதவர்கள்தான் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று மாற்றலாமே? அப்படி செய்தால் இந்த செலவு பிரச்சினையே வராதில்லையா? ஆனால் நடப்பு தேர்தலில் 230க்கும் மேற்பட்ட கோடிசுவர வேட்பாளர்கள் பங்கேற்கிறார்கள். கையில் செலவழிக்க வழியற்று பணத்தை சேர்த்திருக்கும் வர்க்கம் தேர்தலில் நின்றால் செலவழிக்காமல் என்ன செய்வான்?

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்துவதற்காக அதிரடி ரெய்டுகளை செய்யும் கமிஷன் இந்த அக்கறையில் உண்மையாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருக்கும், அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கட்சிகள் எதுவும் எந்த முதலாளிகளிடமும் நன்கொடை வாங்க கூடாது என்று உத்தரவு போட்டிருக்கலாமே? டாடா, அம்பானி, பிர்லா, அம்பானி, பஜாஜ், மல்லையா, டி.வி.எஸ் என்று எல்லா முதலாளிகளிடமும் நன்கொடை வாங்கித்தான் காங், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் பிழைப்பை நடத்துகின்றன. இந்த சப்ளையை துண்டித்தால் அவர்கள் தேர்தலில் பணத்தை தண்ணியாக செலவழிக்க முடியாதில்லையா? ஏன் செய்யவில்லை?

ஆக ஒட்டுமொத்தமாக ஒன்று புரிகிறது. இந்த தேர்தலும், தேர்தல் கமிஷனும் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அவர்களது நலனுக்காக இருக்கும் பெரிய கட்சிகளைத்தான் எல்லா சலுகைகளோடும் அனுமதிக்கிறது.

தற்போது ஸ்ரீரங்கத்தில் வாக்களிக்க பணம் வாங்கினார்கள் என்று ஆறு பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏதோ இவர்களெல்லாம் மாபெரும் கிரிமினல்கள் போல அவர்களது பெயர்களையெல்லாம் பெற்றோர் பெயர்களோடு தினசரிகள் பிரசுரித்திருக்கின்றன. இவர்கள் மீது 171 இ எனும் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு தண்டனை என்று எல்லா ஊடகங்களும் மக்களை பயமுறுத்துகின்றன. தேர்தலுக்கு வாக்களிப்பதையே அவமானமாக கருதும் மேட்டுக்குடியினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதி இந்த நடவடிக்கைகளை நெஞ்சார வரவேற்கிறார்கள். ஆனால் மக்களை மிரட்டுவதுதான் இந்த வழக்கின் அடிப்படை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வாக்களிக்க பணம் வாங்குவது தவறு என்றால் அதை மேடையிலேயே ஆதரித்து பேசுபவர்களையல்லவா கைது செய்திருக்க வேண்டும்? ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றோர் பல இடங்களில் பேசும் போது “தி.மு.க காரன் காசு கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள், அது நம்ம காசு, வாக்கு மட்டும் எங்களுக்கு மறக்காமல் போடுங்கள்” என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஊடகங்களில் பலரும் கூட இதை தெரிவித்திருக்கின்றனர். இப்படி ஆதாரப்பூர்வமாக காசு பெறுவதை ஆதரிக்கும் நபர்கள் மீது தேர்தல் கமிஷன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த எம்.பிக்கள் பணம் வாங்கிக் கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் பணம் வாங்கியதும், வாக்களித்ததும் உண்மையென்றாலும் இரண்டுக்குமுள்ள தொடர்பு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்று தள்ளுபடி செய்தது.

அதை வைத்துப் பார்க்கும்போது வாக்காளர்கள் பணம் வாங்குவதை மட்டும் எப்படி நிரூபிப்பார்கள்? அதாவது ஒருவர் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார். அதில் பணம் வாங்குவதை வேண்டுமானால் நிரூபிக்க முடியும், ஆனால் அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்? ஏனெனில் வாக்களிப்பது என்பது இரகசியமானது, அப்படி இரகசியமாக வாக்களிப்பதுதான் வாக்களிப்பவரின் ஜனநாயக உரிமை என்று வேறு பெருமை பேசுகிறார்கள். மேலும் ஒருவர் பணம் வாங்கிக் கொண்டு அந்த கட்சிக்கு மாறாக வேறு கட்சிக்கு கூட வாக்களிக்க முடியும், அதையும் ஏன் என்று கேட்க முடியாதல்லவா? அல்லது வாக்களித்த ஒவ்வொருவரையும் எந்த கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று பரிசோதித்து பார்க்க முடியுமா? ஆக இவர்களது நோக்கம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதா, இல்லை பாமர மக்களை மிரட்டுவதா?

பணம் வாங்கிக் கொண்டு மக்கள் வாக்களிப்பது அவர்களது சுயமரியாதையை இழப்பதாகும் என்று சுயமரியாதையில் கொடிகட்டிப் பறக்கும் நடுத்தர வர்க்கம் சலித்துக் கொள்கிறது. போகட்டும், பொறியியல் கல்லூரியில் மகனுக்கு சீட்டு வாங்க வேண்டுமென்று சில பல இலட்சங்களை வாரிக் கொடுப்பது மட்டும் சுயமரியாதையா? மகனை விடுங்கள் நாலைந்து வயது குழந்தைக்கு எல்.கே.ஜி சீட்டு வாங்குவதற்கு கூட சில பல ஆயிரங்களை எந்த எதிர்ப்புமின்றி வாரி இறைப்பது கூட சுயமரியாதைதானா? பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக சிலர் தெருவுக்கு வந்து போராடும்போது இவர்கள் அதில் சேர்ந்து குரலெழுப்புவதற்கு கூட பயப்படுகிறார்களே, இவர்களா ஏழை மக்களின் சுயமரியாதை குறித்து கவலைப்படுவது?

இன்னும் சிலர் வாக்களிப்பது புனிதமான ஜனநாயகக் கடமை என்பதால் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது அந்த புனிதத்தை கெடுக்கும் செயல் என்று கவலைப்படுகிறார்கள். ஆனானப்பட்ட வெங்கடாசலபதிக்கே ஸ்பெசல் தர்ஷன் என்று பத்தாயிரம் ரூபாய் கட்டணம் வைத்து அனுமதிக்கிறார்களே அதில் கெடாத புனிதமா? இல்லை நம்ம ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் கிண்டி கொடுக்கப்படும் யோக அல்வாவுக்காக பல ஆயிரங்களை கட்டணமாக வாங்குகிறார்களே, அது புனிதத்தை கெடுப்பதில்லையா? ஆக ஆன்மீக சரக்குகளே இப்படி விலை வைத்து விற்கப்படும்போது ஆப்ட்ரால் ஒரு வாக்கு அதுவும் எந்த பிரயோசனமும் இல்லாத சரக்கை விற்பதில் என்ன தவறு? இன்னும் கொஞ்சம் தேசபக்தி ரேஞ்சில் பார்த்தால் பாராளுமன்றத்திற்கே தெரியாமல் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டாரே மன்மோகன் சிங் அது இந்தியாவின் இறையாண்மை புனிதத்தை ‘கற்பழிப்பே’ செய்திருக்கிறதே?

இவர்களின் கவலை எல்லாம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் இல்லை. ஏழை மக்களின் மீது விலை வாசி உயர்வு, வேலையின்மை முதலான பிரச்சினைகளை தள்ளிவிடுவது போல இந்த போலி ஜனநாயகத்தின் யோக்கியதைக்கு காரணம் அவர்களே என்ற மேட்டிமைத்த் திமிர்தான் இதில் வெளிப்படுகிறது.

நிலம் வைத்திருப்பவன் அதை விற்கிறான், பங்குகள் வைத்திருப்பவன் அதை விற்று இலாபம் பார்க்கிறான், அது போல விற்பதற்கு ஏதுமில்லாத ஏழைகள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்வதில் என்ன தவறு?

முதலில் இந்த பணம் பெறும் பிரச்சினையை கொஞ்சம் விரிவாக ஆய்ந்து பார்க்கலாம். எல்லா கட்சிகளும் தமது தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அள்ளி விடக் காரணம் என்ன? அவையெல்லாம் பலரது வாழ்வில் ஏக்கப் பொருளாய் மட்டும் இருப்பது மட்டுமல்ல, கல்வி, சுகாதாரம், வேலை முதலான அனைத்திலும் அவர்களது உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அவர்களது உரிமையை பறித்து கொண்டவர்கள் அப்படி பறித்த உரிமையின் விளைவாக கிடைத்த சுருட்டலில் இருந்து சிலவற்றை கிள்ளிக் கொடுக்கிறார்கள். தமது உரிமைகள் பறிக்கப்பட்டதை உணராத மக்கள் அல்லது அப்படி உணர்ந்தும் அதற்கு தீர்வு தேட முடியாத நிலையிலிருக்கும் மக்கள்தான் தமது வாக்குகளை அளிப்பதற்கு சிலநூறு ரூபாய்களை வாங்குகிறார்கள்.

ஆக அந்த மக்களது பறிக்கப்படும் உரிமைகள் குறித்து கவலைப்படாத எவரும் அவர்கள் வாக்களிப்பதற்காக பணம் வாங்குவது குறித்து கேள்வி கேட்பதற்கு கூட தகுதியற்றவர்களே. ஆனால் அந்த உரிமைகளை போராடிப் பெற வேண்டும் என்று அவர்களிடம் வேலை செய்கின்ற எம்மைப் போன்ற புரட்சிகர சக்திகள் மட்டும்தான் அப்படி பணம் வாங்குவதை தவறு என்று மக்களிடம் பிரச்சாரம் செய்யும் தகுதி படைத்தவர்கள். ஆம். நாங்களும் வாக்களிப்பதற்கு பணம் வாங்குவதை மட்டுமல்ல வாக்களிப்பதையே எதிர்த்து பிரச்சாரம் செய்கிறோம். இது வேறு, அது வேறு.

அடுத்து சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா முதலானோர் கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் மக்கள் கூட ஆளுக்கு நூறோ அல்லது இருநூறு ரூபாய் கொடுத்துத்தான் திரட்டப்படுகின்றனர். அதற்கும் காரணம் ஏழ்மைதான். இல்லையென்றால் வேகாத வெயிலில் மேக்கப் போட்ட ஜெயலலிதாவின் எழுதி வைக்கப்பட்ட உரையை யார் கேட்கப்போகிறார்கள்? முடிந்தால் தேர்தல் கமிஷன் இதை தடுத்து பார்க்கட்டுமே? கூட்டம் கூட்டுவதற்கு யாரும் பணம் கொடுக்க கூடாது, வாகனங்களை ஏற்பாடு செய்யக்கூடாது என்றெல்லாம் அவர்கள் செய்யமாட்டார்கள். ஏன்? கார்ப்பரேட் கட்சிகளின் அரசியல் ஷோக்களுக்கு இப்படித்தான் ஆள் பிடிக்கமுடியும், அப்படி கூட்டினால்தான் அவர்களது அரசியல் நடவடிக்கை வெளியுலகிற்கு தெரியுமென்பதால் அதை அனுமதிக்கிறார்கள்.

இதைத் தாண்டி இப்போது தேர்தல் கூட ஒரு திருவிழா என்ற தகுதியை இழந்து விட்டது. கட்சித் தொண்டர்களின் சுறுசுறுப்பான வேலைகளையும், தெருமுனைக்கூட்டம் துவங்கி பொதுக்கூட்டம் வரையிலும் திரளான மக்கள் பங்கேற்ப்பதையும் இப்போது பார்க்க முடியாது. இனிவரும் காலங்களில் தேர்தல் என்பது வாக்களிப்பது என்பதோடு மட்டும் முடிந்து விடும். மற்ற விசயங்கள் எல்லாம் தொலைக்காட்சிகளில் மட்டும்தான் என்ற நிலை தோன்றும். இதனால் ஏற்படும் இழப்பு என்ன?

இந்த போலி ஜனநாயக அரசியிலில் கூட மக்கள் இடம்பெற முடியாது என்ற நிலைமைதான் தோன்றும். அப்படி தோன்றும் பட்சத்தில் அரசு என்பது தனது பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பே இன்றி அல்லது எதிர்ப்பு காட்டுவதற்கு வழியின்றி நிறைவேற்றும்.

இன்று தேர்தல் கமிஷனை எதிர்த்து சண்டாமாருதம் செய்யும் கருணாநிதிக்கு கூட கவலை இதுவல்ல. தனது கட்சியினர் திருமங்கலம் ஸ்டைலில் வேலை செய்ய முடியவில்லையே, அ.தி.மு.கவிற்கு மட்டும் அதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறதே என்பதுதான் அவரது கவலை. மக்கள் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்படுவது அவருக்கும் உடன்பாடனதுதான்.

சில அறிவாளிகள் 49ஓ குறித்து பிரச்சாரம் செய்கின்றனர். யாருக்கும் வாக்கு இல்லை என்பதை பதிவு செய்வதன் மூலம் தமது எதிர்ப்பை காட்டலாம் என்கின்றனர். வாக்களிப்பது மட்டும் இரகசியம் என்று இருக்கும்போது வாக்கில்லை என்பது மட்டும் வெளிப்படையாக தெரியும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள். இதனாலேயே யாரும் தைரியமாக இதை செய்யப் போவதில்லை. ஒரு வேளை நாளை வாக்களிக்கும் எந்திரத்திலேயே 49ஓ கொண்டுவந்தால் பெருந்திரளான மக்கள் அதில் வாக்களிப்பார்கள். ஆனால் அப்படி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதை ஆளும் வர்க்கம் விரும்பாது. ஆகவேதான் இந்த போலி ஜனநாயகத்தை வீழ்த்துவதற்கு இந்த தேர்தலையே நாம் புறக்கணிக்க வேண்டும் என்கிறோம்.

தேர்தல் கமிஷனது நடவடிக்கைகள் மூலம் தேர்தல் சரியாக நடக்கப் போகிறது என்றோ, அதன் மூலம் தி.மு.கவா, இல்லை அ.தி.மு.கவா யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்றுதான் நாம் கவலைப்படுகிறோம். அல்லது ஆர்வம் கொள்கிறோம். ஆனால் இந்த தேர்தல்மூலம் நாம் நமது அடிப்படை உரிமைகளை இழந்திருக்கிறோம் என்பதால் இதில் மக்கள் தோல்வியடைந்திருக்கின்றனர் என்பதுதான் முக்கியமானது, கோபத்திற்குரியது.

அரசு – அரசாங்கம் : இரட்டை ஆட்சியின் விளக்கம்!


ஆட்சியில் அமரப் போகும் கட்சி எதுவாயினும் அது என்ன திட்டங்களைப் போடலாம், அதை எவ்வாறு அமுல்படுத்தலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அதற்கு இல்லை என்பது தான் உண்மை. மக்களை ஆளும் அரசு என்பது நிதி-நிர்வாகம், நீதிபரிபாலனை, சட்டம் ஒழுங்கு, சிவில் நிர்வாகம் என்று எப்போதும் மாறாமல் நிரந்தரமாய் தேங்கி விட்ட உறுப்புகளைக் கொண்டது. அதன் ஒரு அங்கமாக வருவது தான் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் என்பது. இந்த அரசாங்கம் என்பது குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பது. இதுவே எதார்த்தத்தில் மக்களை ஆளும் அரசின் பிற அலகுகளுக்கு ஒரு முகமூடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசு இயந்திரம் என்பது எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது. ஒரு கிராம அளவில் இருக்கும் நிர்வாக அதிகாரியிடம் தான் அக்கிராமத்தின் நிலம் பற்றிய விவரங்கள், அதிலிருந்து கிடைக்கும் நேரடி மறைமுக வருவாய் தொடங்கி, அக்கிராமத்தில் நிகழும் பிறப்பு, இறப்பு, பற்றிய தகவல்கள் வரை இருக்கும். இதற்கு மேலே மாவட்ட அளவிலே வருவாய்த் துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, போன்ற பல்வேறு துறைகள் மற்றும் வருவாய் ஆய்வாளர், டெப்டி தாசில்தார், தாசில்தார், ஆர்.டி.ஓ, சப் கலெக்டர் கலெக்டர் போன்றவர்கள் உள்ளிட்ட அரசு இயந்திரத்தின் பல்வேறு அங்கங்கள் தான் சிவில் நிர்வாகத்தை நடத்திச் செல்கின்றன.

இவர்கள் தான் வரி வசூல், கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் சப்ளை, ரேஷன் சப்ளை போன்ற அத்தியாவசியமான வேலைகளைச் செய்வது. அதாவது, மக்களை நேரிடையாக ஆள்வதும் இயக்குவதும் அதற்காகத் திட்டமிடுவதும் இந்த இயந்திரம் தான். இந்த இயந்திரத்தின் மிக முக்கியமான அங்கங்களான நீதி மன்றங்கள் நீதிபரிபாலனத்தையும் காவல்துறை இராணுவம் உள்ளிட்ட துறைகள் பாதுகாப்பு, குற்றத்தடுப்பு உள்ளிட்ட விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறது.

இந்த இயந்திரத்தின் இயக்கத்திற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் இடையீடு ஏதுமின்றியே இந்த இயந்திரம் இயங்கும். இதற்கு நமக்குப் பல்வேறு நடைமுறை உதாரணங்கள் உள்ளன. காஷ்மீரிலும், வடகிழக்கிலும், பஞ்சாபிலும் இன்னும் வேறு பல மாநிலங்களிலும் பல்வேறு சந்தர்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட போதும் அரசு நிர்வாகம் தொடர்ந்து நடைபெற்றுதான் வந்தது.

இதில் நமது கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், இந்த அரசு இயந்திரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல என்பதோடு, இது மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென்றே ஏற்படுத்தப்பட்டது. காலனிய ஆட்சிக் காலத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்தை மக்கள் மேல் ஏவிவிடுவதற்கான ஒரு கருவியாக உருவாக்கப்பட்டது தான் இன்று வரையில் மக்களை ஆண்டு வரும் அரசு இயந்திரம். ஆக, இது தன் பிறப்பிலேயே ஜனநாயகமற்ற தன்மையையும் ஏகாதிபத்திய நலனையும் அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும். அன்றைக்குக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் பிரிடிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் ஒரு முகமூடியாகச் செயல்பட கருப்புத் தோல் வெள்ளையர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது தான் இன்று வரை தொடரும் சிவில் நிர்வாக அமைப்பு முறை.

அன்றைக்கு காலனிய ஆதிக்கத்திற்கு விசுவாசமாய் இருந்த அரசு நிர்வாக இயந்திரமும், அதன் உறுப்பான போலீசு இராணுவம் உள்ளிட்ட ஆயுதப் படைகளும் உரிமைக்காகப் போராடிய மக்களை எப்படி ஒடுக்கியதோ அப்படித்தான் இன்றும் பன்னாட்டுக் கம்பெனிகளில் தொழிற்சங்க உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்கள் மேல் பாய்ந்து குதறுகிறது. இன்று ‘சுதந்திர’ இந்தியாவின் மத்தியப் பகுதி மாநிலங்களில் பன்னாட்டுக் கம்பெனிகள் நம் நாட்டு வளங்களைச் சுரண்டிச் செல்வதை எதிர்த்துப் போராடும் மக்கள் மேல் இராணுவம் பாய்வதற்கும், காலனிய காலத்தில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய மக்கள் மேல் வெள்ளை இராணுவம் பாய்ந்ததற்கும் சாராம்சத்தில் வித்தியாசங்கள் ஏதும் இல்லை. அன்றைய வைசிராய்க்கு வெள்ளைத் தோலும் பொன்னிற முடியும் இருந்தது என்பதும் இன்றைய பிரதமருக்கு பழுப்புத் தோலும் டர்பனும் இருக்கிறது என்பதும் தான் இவை இரண்டுக்கும் உள்ள பெரிய வேறுபாடுகள்.

நியமனத்தால் அதிகாரத்திற்கு வரும் அரசு இயந்திரத்தின் அங்கங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்பதால் அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தவறு செய்யும் பட்சத்தில் கூட அவரைத் திருப்பியழைக்கும் ஜனநாயக உரிமை மக்களுக்கு கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் நியமனங்களின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள இந்த அரசு இயந்திரத்தின் அங்கங்கள் முற்றிலுமாக மக்களிமிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது.

தேசத்தின் தலைவிதியையே தீர்மானிக்கும் முக்கியமான முடிவுகள் பாராளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டு மக்களால் ‘ஜனநாயக’ முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்படுவதல்ல. நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய நிறுவனங்களுக்குத் திறந்து விட வகைசெய்யும் காட் ஒப்பந்தம் நாட்டு மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் தெரியப்படுத்தாமல், கள்ளத்தனமாக மான்டேக்சிங் அலுவாலியா போன்ற மெத்தப் படித்த அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு, மன்மோகன் சிங் என்ற முன்னாள் உலகவங்கி அதிகாரியால் தீர்மானிக்கப்பட்டு கையெழுத்தாகியது. அவர் காட்டிய விசுவாசத்தின் பலன் தான் தற்போது வெளியாகியிருக்கும் விக்கிலீக்ஸ் ஆவணங்களில் அமெரிக்கா அவர் மேல் காட்டும் அக்கறையாகப் பல்லிளிக்கிறது.

மக்களால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ பிரதமரே, ஈரான் ஜனாதிபதியை எப்போது சந்திக்க வேண்டும், எப்படிச் சந்திக்க வேண்டும், சந்திக்கும் போது என்ன பேச வேண்டும் என்பதைக் கூட அமெரிக்காவே தீர்மானித்து, அதை வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் மூலமும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் மூலமும் நடைமுறைப்படுத்துகிறார்கள். இதுவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் அமெரிக்க தூதரகங்களின் இரகசிய கேபிள்கள் மூலம் அம்பலமாகியிருக்கிறது. ஆக, அன்றைக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சேவைக்கு உண்டாக்கப்பட்ட சிவில் நிர்வாக அமைப்பு முறை இன்றும் அதே நோக்கத்திற்காக செயல்படுகிறது. வித்தியாசம் என்னவென்றால் அன்றைக்கு மாட்சிமை தாங்கிய பிரிடிஷ் மகாராணியின் காலை நக்கிக் கிடந்தார்களென்றால், இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கிரீடமாக வீற்றிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் காலை நக்கிக் கிடக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமையும் அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சர்களும் தமது துறையின் செயலாளர் காட்டும் திசைவழியில் தான் முடிவுகள் எடுக்கிறார். அரசு இயக்கத்தின் சகல சந்து பொந்துகளிலும் தேர்ச்சிபெற்ற நன்கு ‘படித்த’ இந்த அதிகார வர்க்கத்தின் துணையின்றி தேர்ந்தெடுக்கப்படும் ‘படிக்காத’ அரசியல்வாதிகளால் ஊழல் செய்ய இயலாது. பங்குச் சந்தை ஊழலும், ஹவாலா ஊழலும், இஸ்ரோ-தேவாஸ் ஊழலும், ஆதர்ஷ் வீட்டுமனை ஊழலும், ஸ்பெக்ட்ரம் ஊழலும் படிக்காதவர்களின் மூளையில் தோன்றியதால் ஏற்பட்டதல்ல.

உதாரணமாக, தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு அநேகமாக எல்லா பத்திரிகைகளும் காரணகர்த்தாவாகச் சுட்டிக் காட்டுவது மின்சாரத் துறையின் அமைச்சரான ஆற்காடு வீராசாமியை. எதார்த்தத்தில் அவருக்கு முன் உள்ள வாய்ப்புகள் என்ன? ஆற்காடு வீராசாமி நினைத்தால் தமிழகத்தின் அத்தனை வீடுகளுக்கும் சிறுதொழில் நிறுவனங்களுக்கும் தடையற்ற மின்சாரத்தை வழங்கிவிட முடியுமா?

அரசின் தனியார்மய தாராளமய உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, ஒவ்வொரு மாநிலமும் பன்னாட்டுக் கம்பெனிகள் இங்கே தொழில் நடத்துவதற்கான அடிப்படையான வசதிகளைச் செய்து கொடுத்தாக வேண்டும். அது அவர்களுக்கு உலக வர்த்தகக் கழகத்தாலும், உலக வங்கியாலும் இடப்பட்டிருக்கும் உத்தரவு. இந்த உத்தரவை மீறி நடப்பதற்கான உரிமையோ அதிகாரமோ ஆற்காடு வீராசாமியாகட்டும் கருணாநிதியாகட்டும் எவருக்குமே கிடையாது. நாளை ஜெயலலிதா வந்தாலும் இது தான் நிலைமை. ஆக, அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதரக் கொள்கைகள் காட்டும் திசைவழி என்னவோ, அதில் பயணிப்பது மட்டும் தான் இவர்கள் முன் இருக்கும் வாய்ப்பு.

விவசாயத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பலிகொடுப்பது என்று தீர்மானித்து விட்ட பின், காற்று வாங்கும் உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்து என்ன பயன்? பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தேச எல்லைகளைத் திறந்து விட்டபின், எங்கே நிலம் தர வேண்டும் என்று மட்டும் தான் கேட்க முடியும்; ஏன் உனக்குத் தர வேண்டும் என்று எதிர்த்து நிற்கும் உரிமை அற்றுப் போகிறது. கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்குத் தாரைவார்ப்பது என்று ஒப்புக் கொண்டபின், சத்துணவு முட்டைகளின் எண்ணிக்கையைத் தான் கணக்குக் காட்ட முடியும்; பொன்முட்டைகளை அள்ளிச் செல்வதைத் தடுக்க முடியாது.

கடவுள் இல்லையென்பது பூசாரிக்குத் தான் நன்றாகத் தெரியும் என்பது போலத் தங்களுக்கு அதிகாரம் இல்லையெனும் இந்த உண்மை வேறு யாரையும் விட ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளுக்குத் தான் தெளிவாகத் தெரியும். எனவே தான், அரசு இயந்திரத்தின் முகமூடியாக இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை நிறைவேற்றிக் கொள்வதோடு தாமும் இதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளது பொறுக்கித் தின்பதை மட்டும் கணக்காக நிறைவேற்றிக் கொள்கின்றனர். சமூக நீதி பேசிய கருணாநிதி இன்றைக்கு கொள்கைகளைப் காற்றில் பறக்கவிட்டு விட்டு ஒரு தரகு முதலாளியாகச் சீரழிந்திருக்கிறார் என்பதை இதனூடாகத்தான் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆட்டத்தின் விதிகள் தீர்மானிக்கப்படுவது ஏகாதிபத்தியங்களாலும் பன்னாட்டுக் கம்பெனிகளாலும் தான். ஆட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு ஆட முன்வரும் இந்தக் கட்சிகள், தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முகமூடி எனும் பாத்திரத்தைத் திறம்பட ஏற்று நடிப்பதோடு தாமே பெரும் ஏகபோக முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். ஜெயா-சசி கும்பலின் சாராய சாம்ராஜ்ஜியமாகட்டும் கருணாநிதி குடும்பத்தின் தொழில் சாம்ராஜ்ஜியமாகட்டும் இந்த அடித்தளத்தின் மேல் தான் கட்டப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் சிந்திப்பது போல் இவர்களில் எவர் தேர்தலில் தோற்றுப் போனாலும் அது அவர்களுக்கு தண்டனையாக இருப்பதில்லை. அதிகாரத்தைத் துணையாகக் கொண்டு கட்டப்பட்ட கருணாநிதியின் குடும்பத் தொழில் சாம்ராஜ்ஜியங்கள், அவரின் ஜென்மப் பகையாளியாக ஊடகங்களால் சித்தரிக்கப்படும் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் எந்த நெருக்குதலுக்கும் உள்ளாகப் போவதில்லை. கருணாநிதியின் ஆட்சிக்காலத்திலோ தமிழகத் தெருவெங்கும் டாஸ்மாக் மூலமாக சசிகலாவின் சாராய ஆறு ஓடுவதற்கு தடையெதுவும் விதிக்கப்படுவதில்லை.

உண்மையில் இவர்கள் இருவருமே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல ஒன்றியிருக்கிறார்கள் என்பது தான் எதார்த்தமாக இருக்கிறது. நாளை ஒருவேளை இவர்கள் அல்லாமல் ஒரு ‘நல்லவர்’ அதிகாரத்திற்கு வந்தாலும் இதே தான் நிலை. அந்த நல்லவரின் ஆட்டத்தையும் தீர்மானிப்பது இந்த விதிகள் தான். இராணுவ ஆட்சியை விரும்பும் நடுத்தரவர்க்க அறிவாளிகளும் இருக்கிறார்கள்; ஆனால், இதே இராணுவமும் போலீசும் தமது பிறப்பிலிருந்து இன்றைய தேதி வரையில் ஆளும் வர்க்க நலனுக்குச் சாதகமாக செயல்பட்டு வந்துள்ளதை கவனிக்கத் தவறுகிறார்கள். இன்றும் உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்கும் ஆயுதப் படைகள் ஆளும் வர்க்கம் யாருக்கு விசுவாசமாய் நிற்கிறார்களோ அவர்களுக்கே விசுவாசமாய் நிற்கிறார்கள்.

யார் கடவுள்?


”என்னை ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடாதீர்கள். என்னிடமிருப்பது தெய்வீக சக்தி,அதற்கு எல்லை என்பதே கிடையாது. பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை”
இதைச் சொன்னவர் வேறு யாருமில்லை…. மருத்துவ சாதனங்களின் உதவியால் மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் சத்ய சாயிபாபாதான்.

வானத்தை பூமியாகவும் பூமியை வானமாகவும் மாற்ற வேண்டிய அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், செயலிழந்து விட்ட அவரது சிறுநீரகங்களையும் நுரையீரலையும் பழைய நிலைமைக்கு மந்திரத்தின் மூலமாவது கொண்டு வர வேண்டிய அவசியம் அவருக்கிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ஆஸ்த்துமாவையும், கான்சர் கட்டிகளையும் முதுகுதண்டு வடங்களையும் நொடிப்பொழுதில் ‘குணப்படுத்திய’ சாயிபாபா, உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கஷ்டப்படும் பக்தர்களுக்கு அருகில் சென்று அரவணைத்தும் தடவிக்கொடுத்தும் ‘குணப்படுத்திய’ சாயிபாபா தன்னுடம்பை தானே குணப்படுத்திக்கொள்ளும் அற்புதத்தைக் காண அவரது பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ மருத்துவத்தின் அற்புதத்துக்காக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

சாயிபாபாவை பற்றி பெரிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. வாயிலிருந்து லிங்கத்தை எடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை வரவழைப்பார். மோதிரத்தை கொடுப்பார், விரலுக்கு பொருந்தாவிட்டால் வாயில் ஊதிக் கொடுப்பார். இவை எல்லாரும் ஒரு சில பெரிய மனிதர்களுக்கும் வெளிநாட்டு பக்தர்களுக்கும்தான். மற்ற சாதாரண பக்தர்களுக்கு அல்வா…மன்னிக்கவும் விபூதியை விரல்களிலிருந்து கொட்டுவார். ஆனால் அவர் யாருக்கும் இதுவரை பூசணிக்காயை மட்டும் வாயிலிருந்து எடுத்துக் கொடுத்ததில்லை. இப்போது புரிந்திருக்குமே…

ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளிலும் பக்தர்கள் உண்டு. பல பல்கலைகழகங்களும் மருத்துவமனைகளும் உண்டு. கோடிக்கணக்கில் சொத்துகளும் உண்டு.

1926ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் பிறந்த இவர் தனது 13ஆம் வயதில் மந்திர தந்திர சக்திகளை காட்டத் துவங்கினார். பூக்களை வரவழைப்பது, இனிப்புகளை வரவழைப்பது என்பது வித்தைகளை காட்டினாராம். தன்னை சீரடி சாயிபாபாவின் மறு உருவம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு தானே இறைவன் என்றும் சொல்லிக்கொண்டார்,அதனை நிரூபிப்பதற்காக பூக்களை தரையில் வீசினாராம்., வீசிய பூக்கள் தெலுங்கு எழுத்துகளாக மாறி, அவற்றை படித்தபோது சாயிபாபா என்று இருந்ததாம்.. இதனை அவரது பேராசியர் கஸ்தூரி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். கஸ்தூரி அவர்கள் ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லை போலும். இல்லையேல் பூக்களை வானத்தில் வீசி அவைகள் நட்சத்திரமாக மாறி பின்னர் தெலுங்கு முதல் உலக மொழிகள் அனைத்திலும் சாயிபாபா என்று தென்பட்டதாக அடித்து விட்டிருக்கலாம்.

1950ய-இல் சிறு ஆசிரமமாக தொடங்கப்பட்ட பிரசாந்தி நிலையம் இன்று ஒரு சிறு நகரமாக வளர்ந்து நிற்கிறது. பல நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், தங்குமிடங்களோடு, ஆரம்பப்பள்ளி,பல்கலைகழகங்கள், மருத்துவமனைகள் எல்லாம் சாயிபாபாவின் பெயரில் பிரம்மாண்டமான நிறுவனங்களாக வளர்ந்திருக்கிறது.

அவரது பக்தர்கள் பட்டியலில் பல அரசியல் பிரபலங்கள் அடங்குவர். வாஜ்பேயியிலிருந்து முரளி மனோகர் ஜோஷி,பல உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என்று பலதரப்பினர் அடங்குவர். சாயிபாபா வெளிநாடுகளுக்குச் செல்வதில்லையே தவிர அங்கும் அவருக்கு செல்வாக்குண்டு.

சாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.

”நான் 1976-ஆம் ஆண்டிலிருந்து சாயிபாபாவுடனிருந்தேன். அதற்கு முன்பு டிரான்சிடெண்டல் மெடிட்டிடேஷனில் ஆசிரியராக இருந்தேன். அங்குதான் பாபாவை பற்றிய அறிமுகம் கிடைத்தது. எந்த விளம்பரங்களும் தேவையில்லை, பணம் எதும் கொடுக்கத் தேவையில்லை, வந்து அமர்ந்து கடவுளின் அருளைப் பெற்றுச் சென்றாலே போதுமானது என்று மிகவும் எளிமையாக இருந்தது. புட்டபர்த்திக்கு வந்து சாயிபாபாவின் காலடியில் விழுந்தேன். அவர் காலடியிலேயே 21 ஆண்டுகள் கிடந்தேன். நான் அவருடைய பிரியத்துக்கும் நெருக்கத்துக்குமுரியவனானேன். நான்கு வருட காலம் எங்களுக்கு அந்தரங்க உறவிருந்தது. ஒருமுறை நான் ஒரு பெண்ணை மணந்துக்கொள்ள விரும்பி அவரையும் சாயிபாபாவிடம் அழைத்து வந்தேன். சாயிபாபா, அந்தப் பெண்ணின் முகத்தில் அறைந்ததோடு “அவனை ஒருபோதும் தொடாதே,அவன் என்னுடையன், அவனை நான் மணம் புரிந்திருக்கிறேன்”என்றும் கூறினார். நான் அவரது காலடியில் விழுந்ததோடு பிரியத்துக்குரிய எனது காதலியையும் பிரிந்தேன். ஏனெனில், அவரே கடவுளென்றும் கடவுளுக்காக எதையும் செய்யும் மனநிலையிலும் இருந்தேன்.”
1993-ஆம் ஆண்டு பிரசாந்தி நிலையத்தின் ஆறு உட்குடியிருப்பாளர்கள் சாயிபாபாவின் படுக்கையறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். தாக்குதலில் இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும் நான்கு பேர் கைகளில் கத்தி வைத்திருந்ததால் போலிசால் தற்காத்துக்கொள்ள சுட்டபோது இறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். அனைவரது எதிர்காலத்தையும் அறியும் தெய்வீகச் சக்தி படைத்த சாயிபாபா அப்போது உயிருக்கு பயந்து ஓடிவிட்டார். கொல்லப்பட்ட அனைவரும் சாயிபாபாவுக்கு நெருக்கமானவர்கள்தான்.

அந்த நிறுவனம் ஒரு கொலைகார நிறுவனம். அது பணத்தை வெளுக்கும் ஒரு நிறுவனம். ஆசிரமத்துக்கு ஒருநாளைக்கு குறைந்தது பத்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் வரைக்கும் வருவார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் பக்தர்களிடமிருந்து மட்டும் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும். பல அரசியல்வாதிகளிடமிருந்தும் பணம் டிரஸ்டுக்கு வருவதுண்டு. அதுமட்டுமில்லாமல், பல மந்திரிகள்,அதிகாரிகள், கோர்ட்டு நீதிபதிகள்,சிபிஐ அதிகாரிகள் என்று பலருக்கும் பணம் பட்டுவாடா நடக்கும்.

அங்கிருக்கும் சூப்பர் ஸ்பெசல் மருத்துவமனையைக் கட்ட 108 மில்லியன் டாலர்கள் நிதிஉதவி செய்தது, ஹார்ட் ராக் கஃபே.

அந்த மருத்துவமனை பார்க்க ஒரு அரண்மனைபோலவே இருக்கும். அந்த மருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது எத்தனை சிறுநீரகங்களுடன் முழுமையாக வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

2000ஆம் ஆண்டு யுனெஸ்கோவும் ஆஸ்திரேலியாவின் பல்கலைகழகமும் இணைந்து சத்ய சாயி டிரஸ்டின் குழந்தைகளுக்காக ஒரு செயல் திட்டத்தை வகுத்திருந்தது. பின்னர் குழந்தைகளை பாலியல் வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும் நோக்கமிருப்பதாகவும் சத்யசாயி டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும் யுனெஸ்கோ அறிவித்துவிட்டு http://exbaba.com/shortnews/unesco.html விலகிக்கொண்டது.

“Behind the Mask of the Clown” என்று நான் எழுதிய புத்தகத்தின் மூலம் குறி வைத்து விரட்டப்படுகிறேன். ஆபத்துகள் என்னை சூழ்ந்திருப்பதால் எனது நாட்டை விட்டு வெளியேறி சைப்ரஸில் வசிக்கிறேன். ஆனால், எது வந்தாலும் நான் அமைதியாக இருக்க மாட்டேன், ஏனெனில் சொல்லப்பட வேண்டியது ஏராளம் இருக்கிறது.”
இதுவே போதும். இதற்கு மேலும் நாம் எதுவும் சொல்லத்தேவையில்லாமல் விளங்கும். சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன. இவை எல்லாம் சாயிபாபாவுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. இந்தியாவை மையமாக வைத்து உலகெங்கும் எழுப்பப்படும் ஆன்மீகக் கிளைகளில் இதுதான் நடக்கிறது.

ரவிசங்கரின் வாழும் கலை, அமிர்ந்தானந்தமாயியின் கட்டிபுடி வைத்தியம், கல்கி பகவானின் ஒன்னெஸ் கூட்டங்கள், பால் தினகரனின் ஜெபாலயம் என்று பக்தி இன்று ஒரு முக்கிய வியாபாரப்பொருள். ஆன்மீகமும் பக்தியும் ஒருகாலத்தில் ரிடையர்டான பெருசுகளின் கூடாரமாக இருந்தது போய் இன்று அந்த வியாபாரக் கூடங்களின் வாடிக்கையாளர்கள் இளைஞர்கள்தான். பெரும்பான்மையினர் படித்த நடுத்தர வர்க்கத்தினர்தான்.

பரபரப்பு மிகுந்த அன்றாட வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மை, வேலை நிச்சயமற்ற சூழல், பணிச்சுமை, குடும்பப் பிரச்சினைகள், பயமுறுத்தும் எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு,போட்டி நிறைந்த உலகில் நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஏற்படும் போராட்டங்கள் மற்றும் மன அழுத்தங்கள் முன்னெப்போதும் இல்லாமல் இளைஞர்களை பாதிக்கின்றன.

வீட்டுக்கடனிலிருந்து, உயரும் விலைவாசியிலிருந்து,கிரெடிட் கார்டு…இதுபோக உறவுசார் பிரச்சினைகள்..முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். தான் இப்படி சுரண்டப்படுவதை உணராத இந்த இளைய சமுதாயம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல உடனடித் தீர்வுகளை நோக்கி விரைகின்றனர்.

பெரும்பாலான நிறுவனங்களில் இன்று எட்டு மணிநேர வேலை என்பதே இல்லாமல் போயவிட்டது, எட்டு மணிநேரம் உழைப்பைத் தாண்டி எத்தனை மணிநேரங்கள் உழைத்திருக்கிறோம் என்பதும் இருநாளில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்து முடிக்கவேண்டுமென்கிற முதலாளித்துவ நிர்பந்தமும் மக்களை யோசிக்கவே விடாமல் செய்கின்றன. ஏதோ தனக்கு மட்டும்தான் இந்த நிலை என்பதுபோல எண்ணி குமைகிறார்கள்.

ஒருநாளின் குறைந்தபட்ச ஓய்வு என்பது கூட தற்போது சுருங்கிவிட்டது. ஓடிக்கொண்டேயிருப்பதுதான் நகர வாழ்வு என்பதாக மாறியிருக்கிறது. தனது நிலைக்கான காரணத்தை உணர மறுக்கிறார்கள். கரும்பைப் பிழிவது போல சக்கையாக பிழிந்து நடமாடும் பிணங்களாக வாழ்பவர்கள் ஒன்று இயலாமையாலும் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலையை நோக்கி ஓடுகிறார்கள் அல்லது இந்த சாமியார்களின் மடத்துக்கு வருகிறார்கள்.

இந்த இன்ஸ்டண்ட் குருமார்களும், சகல பிரச்சினைகளுக்கும் தங்களிடம் தீர்வு இருப்பதாகக் கூறி இவர்களை காந்தமாக ஈர்த்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ரிலாக்ஸ் செய்தால் போதும், பிரச்சினைகள் தீர்ந்து போய்விடுமென்று கூறி மயக்குகின்றனர். ஒரு வாரம் தியான வகுப்புக்கு நித்தியானந்தா ஐம்பதாயிரம் வரை வாங்கியதாக கூறுகிறார், அந்த வகுப்புக்குச் சென்று வந்தவரொருவர். ரவிசங்கரோ வாழும் கலையின் ஆரம்ப வகுப்புக்கு ஐந்தாயிரம் வரை வாங்குகிறார்.

தொலைப்பேசியில் பிரச்சினைக்காக ஜெபிக்க பணத்தை அனுப்பினால் போதுமென்கிறது பிரேயர் டவர்ஸ். அடித்தட்டு மக்களாக இருந்தாலும் 100 ரூபாயாவது கொடுத்தால்தான் உறுப்பினராக முடியுமென்கிறார் மேல்மருவத்தூர் அம்மா. நமது தெருமுனையிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படும் ஈஷா யோகா வகுப்பில் வந்து முடிகிறது,இந்த நீண்ட பட்டியல்.

இவர்கள் அனைவரும் சொல்வது, நல்லதையே பார்த்துப் பழகுங்கள், கெட்டவற்றை நினைக்காதீர்கள், எந்த செய்தியிலும் நல்ல பக்கத்தையே பாருங்கள், பொறுமையோடிருங்கள், உங்களுக்குள் இருக்கும் அமைதியைத் தேடிக் கண்டடையுங்கள், ” என்று நீளும் இந்த தத்துவம் கடைசியில் உண்டியலில் வந்து முடியும்.

முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள். ஆளும் வர்க்கத்துக்கு சாமியார்களின் தயவு தேவை. சாமியார்களுக்கு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த அரசு தேவை. அதனால்தான், ஆனந்தாக்களும் பாபாக்களும் வாழையடி வாழையாக தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாம் அருந்தும் தண்ணீர் உட்பட படிக்கும் படிப்பு வரை இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஆன்மீகம் பதிலாகுமா? பிரச்சினைகளை மழுங்கங்கடிப்பதற்கு வேண்டுமானால் ஆன்மீகம் உதவும். கொலைப்பழி இருந்தபோதும் அவாள்கள் சங்கர மடத்துக்கு போகாமல் இருந்தார்களா என்ன? ஜெயேந்திரன் அம்பலமான பிறகும் சங்கர மடத்துக்கு மவுசு குறையாமல்தானே இருக்கிறது!

அதனால்தான் சாயிபாபாவின் ஆசிரமத்தில் நிகழும் கொலைகளையும், குழந்தைகள் மீதான கொடுமைகளையும் மூடிமறைத்து பாதுகாப்பு கொடுக்கிறது ஆளும் வர்க்கம். சாயிபாபாவின் ஆசிரமத்தில் மன்மோகன் சிங்க்குக்கு என்ன வேலை? இவரது தெய்வீக சக்தி இருக்கும் போது மருத்துவ பல்கலைகழகங்களும் பொறியியலும் எதற்கு? தெய்வீக சக்தியையே பயன்படுத்திக்கொள்ள முடியாதா?பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடியவருக்கு, முக்காலமும் அறிந்தவருக்கு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியை தடுத்து நிறுத்தியிருக்கலாமே!

இதோ, இப்போது உலகெங்கும் அவரது பக்தர்கள் அவருக்காக வேண்டியபடி இருக்கிறார்கள். இன்னும் சில பக்தர்கள், இது சாயிபாபாவின் லீலைதானென்றும் அவர் விரைவில் குணமாகி வருவாரென்றும் நம்புகிறார்கள். வேறு சிலரோ, அவர் கடவுள்தான் என்றாலும் சாதாரண மனிதனுக்கு நேரும் முடிவை சந்திப்பதற்காகத்தான் அவரை அவரே காப்பாற்றிகொள்ள வேண்டாமென்று முடிவு செய்திருப்பதாகவும் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள்.

பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும், ஆன்மீகம் செய்து வைத்திருக்கும் கோளாறு புரிகிறதா?

மக்களின் போராட்டங்களை அடக்க ராணுவத்தை குவிக்கும் அரசு இந்த சாமியார்களின் ப்ராடுத்தனத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியாதா என்ன?

முடியும். ஆனால் செய்யாது. பகுத்தறிவு பேசிய கருணாநிதி சாயிபாபா நலம் பெற்று எழ வேண்டுமென்று செய்தி அனுப்புகிறார். இது ஏதோ மனிதாபிமானத்தின்பாற்பட்டதல்ல. தேர்தல் காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சாயிபாபா வாக்குகளை கவர் செய்த மாதிரியும் ஆகும். கூடவே கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் பாப பக்தர்களை திருப்திப்படுத்தியது போலவும் இருக்கும்.

சாயிபாபாவின் மீதான கருணாநிதியின் அக்கறைக்கு பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்

ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல என்று மக்கள் உணரும்போதுதான் சாயிபாபாக்கள் மந்திரவித்தை மோசடிகளை நிறுத்துவார்கள். மாறாக அப்போது சாமியார்கள் மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு சாணக்கிய ஆலோசனை செய்யும் வேலைக்கு போய்விடுவார்கள். போக வைப்போம்.