ஆன்மிக முட்டாள்கள் ஆகாதீர்கள்!


இன்று தமிழகமெங்கும் நித்தியானந்த ஸ்வாமிகளின் லீலைகள் பற்றித் தான் பேச்சாக இருக்கிறது. கல்கி பகவான் என்பவரையும் பற்றியும் கதை கதையாகச் சொல்கிறார்கள். அவர்களுடைய ஆசிரமங்கள் சூறையாடப்படுகின்றன, முற்றுகையிடப்படுகின்றன. இது போன்ற போலிச் சாமியார்களைக் கண்காணிக்க ஒரு அமைப்பு வேண்டுமென்று வேறு ஒரு கோரிக்கை முதலமைச்சரிடம் வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆன்மிகப் போர்வையில் ஆபாசம், கொள்ளை எல்லாம் நடப்பது இந்து மதத்தில் மட்டுமல்லாமல் மற்ற மதங்களில் கூட நடப்பதை தினமும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம்.

இது போன்று நடப்பதற்கெல்லாம் இந்தப் போலிச் சாமியார்கள் தான் காரணம் என்று பரவலாகக் கருத்து நிலவுகிறது. உண்மையில் அவர்கள் குற்றவாளிகள் என்பதை விட பெரும்பாலான மக்கள் ஆன்மிக முட்டாள்கள் ஆக இருக்கிறார்கள், ஏமாறத் தயாராக இருக்கிறார்கள் என்று சொல்வது தான் அதிகப் பொருத்தமாக இருக்கும். அவர்களுடைய அந்தத் தயார்நிலையையும், முட்டாள்தனத்தையும் ஒருசிலர் தந்திரமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்பது என்னவென்று பெரும்பாலானோருக்குத் தெளிவில்லாமல் இருப்பதே இதன் காரணம். கடவுளைப் பற்றி யாராவது பேசினால், அதுவும் மத நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, நமக்குத் தெரியாத பல உயர்ந்த விஷயங்களையும் சொல்லி பிரசங்கம் செய்தால் அவர்கள் துறவாடைகளையும் அணிபவராக இருந்தால் உடனடியாக அவர்களை வணங்கிப் பின்பற்ற ஒரு கூட்டம் உடனடியாகத் தயாராகி விடுகிறது.

ஆன்மிக அறிவைப் பெற்றிருப்பதனாலே ஒருவர் பகவானோ, பரமஹம்சரோ ஆகிவிட முடியாது. நமக்குத் தெரியாத ஆன்மிக உயர்கருத்துகள் எல்லாம் ஒருவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதாலேயே அவர் மகானாகி விட முடியாது. அறிந்திருப்பது மிகப் பெரிய விஷயம் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அறிந்ததை வாழ்ந்து காட்டுவது தான் அற்புதம். அதுவே ஆன்மிக ஞானத்தின் உண்மையான அளவுகோல்.

கோபம் தவறு, கோபத்தை வெற்றி கொள்வது எப்படி என்றெல்லாம் நான் பிரமாதமாக மற்றவர் மனதைக் கவரும்படி சொல்லலாம். எழுதலாம். ஆனால் கேட்டு விட்டோ, படித்து விட்டோ யாராவது ‘சும்மா இருடா முட்டாள்’ என்று சொன்னால் எனக்குக் கோபம் வருமேயானால் நான் அறிந்ததை எல்லாம் நடைமுறைப்படுத்தும் பக்குவம் எனக்கு வரவில்லை என்பது தான் பொருள்.

எனவே ஒருவர் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்றெல்லாம் ஆன்மிகப் பெருமக்கள் பார்த்து அவரை முடிவு செய்வதை விட அவர் எப்படி வாழ்கிறார் என்று கவனித்து முடிவு செய்வது தான் ஏமாறாமல் தடுக்க உதவும்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வது போல “கழுகு எவ்வளவு மேலே பறந்தாலும் அதன் பார்வை என்னவோ மண்ணில் அழுகிக் கிடக்கும் பிணம் மீது தான்” என்கிற வகையில் கூட ஒருவர் இருக்கலாம். பெரிய பெரிய தத்துவங்கள் பற்றி மேடையில் பேசினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சிற்றின்பப் பிரியராக இருக்கலாம். அவரை ஆராய்ந்து தெளியாமல் ஆண்டவனாக யாராவது பார்த்தால் அது பேதைமை.

ஏமாற்றுபவர்கள் எங்கும், எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். ஏமாந்து விடாமல் இருக்க மனிதன் இறைவன் அளித்த ஆறாவது அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிப் பயன்படுத்தத் தவறினால் ஏமாற்றுபவரின் குற்றத்தை விட, இறைவன் அளித்த ஆறாவது அறிவைப் பயன்படுத்தத் தவறிய குற்றமே பெருங்குற்றமாக இருக்கும்.