வக்கிரப் பண்பாட்டை வளர்க்கும் விஷக்கிருமி எது ?


டெல்லியில் துணை மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் சில கிரிமினல்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த நிகழ்வும், அதற்கு எதிராக வெடித்த போராட்டமும் தோற்றுவித்திருக்கும் விவாதங்கள் பல தரப்பட்டவை. ஆனால், அநேகமாக இந்த விவாதங்கள் அனைத்திலும் சரடு போல ஒரு கருத்து இழையோடுகிறது.

“தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இதுகாறும் அடுப்படியில் கட்டுண்டிருந்த பெண்களுக்கும் கூடச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் வழங்கியுள்ளன; ஆலைகள் முதல் ஐ.டி. துறை வரையிலான பல வேலைகளுக்குப் பெண்கள் போகத் தொடங்கிவிட்டார்கள். இரவுப் பணிகளுக்குப் போகக்கூடாது என்ற மனத்தடைகளையெல்லாம் களைந்து விட்டு, துணிச்சலாக இரவு நேரங்களில் வேலைக்குப் போகிறார்கள். திரைப்படங்களுக்குப் போகிறார்கள். இவ்வாறு தனியார்மயக் கொள்கைகளுக்குப் பின்னர் ஏற்பட்டு வரும் இந்த ‘முன்னேற்றம்’ டெல்லி சம்பவம் போன்றவற்றினால் அச்சுறுத்தப்படுகின்றது.”
சுமங்கலி திட்டம்

“சுமங்கலித் திட்டத்தின்” கீழ் கோயம்புத்தூர் மில்களில் பணியாற்றும் இளம் பெண்கள் தாராளமயத்தின் நவீன கொத்தடிமைகள்

“இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்ற கிரிமினல் சக்திகள், பெண்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கே கூடத் தடைக்கற்கள் தான். எனவே, பெண்களையும் அவர்களது சுதந்திரத்தையும் பாதுகாக்கின்ற வகையில் சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும்; இச்செயல்களில் ஈடுபடும் கிரிமினல்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்ற கருத்து நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டுவரையுள்ள எல்லா அறிவுஜீவிகள் மற்றும் ஊடகங்களின் பொதுவான கருத்தாகப் பரவி நிற்கிறது.

மறுகாலனியாக்க கொள்கைகள் கொண்டு வரும் முன்னேற்றத்தை ‘இலஞ்ச – ஊழல்’ தடுக்கிறது, அதிகார வர்க்கத்தில் அரசியல் குறுக்கீடு தடுக்கிறது, திறமையற்ற அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தடுக்கிறார்கள் என்றெல்லாம் கருதுபவர்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக அவர்கள் கருதுவனவற்றின் பட்டியலில் இத்தகைய பாலியல் வல்லுறவுக் குற்றங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பொதுவாக முதலாளித்துவம் ஜனநாயகத்தைக் கொண்டுவரும் என்பதைப் போல, தனியார்மய – தாராளமயக் கொள்கைகளும் ஜனநாயகத்தைக் கொண்டு வந்து விடும் என்ற மயக்கம்தான் மேற்கண்ட கருத்தில் பிரதிபலிக்கிறது.

நாட்டின் முன்னேற்றத்திற்குச் சான்றாக வானளாவிய கட்டிடங்களையும், ஷாப்பிங் மால்களையும், ஐ.டி. நிறுவனங்களையும், விதவிதமான கார்களையும், ஆறு வழிச்சாலைகளையும் காட்டுவது போல, பெண்களின் முன்னேற்றத்திற்குச் சான்றாக பெப்சி நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி, டாஃபே நிறுவன இயக்குநர் மல்லிகா சீனிவாசன், பயோகானின் கிரன் மஜும்தார் போன்றோரைக் காட்டி, இவர்களைப் போல இன்று பல பெண்கள் தொழில்முனைவோராக, நிர்வாகியாக, ஆராய்ச்சியாளராக, கலைஞராக, அரசியல்வாதியாக பொதுவெளியில் உயரும் வாய்ப்பை உலகமயம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து சித்தரித்து வருகின்றன.

இவர்கள் கூறுவது போல் தாராளமயமும் உலகமயமும் பெண்களுக்குச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உண்மையிலேயே வழங்கியுள்ளதா?

இந்திய சமூகத்தில் பெண்கள் குடும்ப பராமரிப்பை செய்து கொண்டே, விவசாயம்,கட்டுமானத் தொழில்களில் தங்களது உழைப்பைச் செலுத்தி வந்திருப்பது காலம்காலமாக நடந்து வந்திருக்கிறது; எனினும், புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில் பல்வேறு துறைகளில் பெண் உழைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகிவருகிறது என்பது உண்மையே. இதற்குக் காரணமென்ன என்பதுதான் கேள்வியே.இரட்டை சுமை

முதற்காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக மிகக் கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி, அடிப்படை உழைக்கும் வர்க்கத்தினர் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரையிலானோரின் வாழ்க்கைத் தரத்தை வெகுவேகமாக அரித்து வருகிறது. வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள், பால், மின்சாரம், போக்குவரத்துச் செலவுகள் போன்ற வழமையான செலவுகள் அதிகரித்திருக்கின்ற அதே நேரத்தில், கல்வி-மருத்துவத் துறைகளின் தனியார்மயத்தின் காரணமாகவும், அவர்களது கட்டணக் கொள்ளை காரணமாகவும் பல குடும்பங்கள் கடனாளி ஆக்கப்பட்டனர். இந்தக் கடுமையான விலைவாசி உயர்வும் நுகர்வுக் கலாச்சாரத்தினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேவைகளும், கணவனின் ஒற்றை வருமானத்தில் குடும்பத்தைப் பராமரிப்பதை இயலாததாக்கியது. இதனால் நடுத்தர வர்க்கத்திலிருந்து உழைக்கும் மக்கள் வரை அனைத்துத் தரப்பு பெண்களும் தங்கள் தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

குறைவான கூலி, சங்கமாகத் திரளமாட்டார்கள் போன்ற காரணங்களால் புதிய வகைப்பட்ட வேலைவாப்புகள் பெண்களுக்கென்றே வழங்கப்பட்டுள்ளன. தன்னார்வக் குழுக்களின் தீவிர பிரச்சாரத்தால் உணவு விடுதிகள், பட்டுநெசவு போன்றவற்றிலிருந்து அகற்றப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் வேலைகளும் பெண்களுக்குச் சென்றுள்ளன. விவசாயத்தின் வீழ்ச்சி காரணமாக, நகர்ப்புறங்களில் கட்டுமான வேலைகளுக்கு வரும் விவசாயக் குடும்பத்தின் பெண்கள், வீடற்றவர்களாக தெருவோரத்தையே வீடாக மாற்றி, அங்கேயே குளித்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து வேலைக்கும் செல்லவேண்டியவர்களாக உள்ளனர்.

பஞ்சாலைகளில் ஊதிய உயர்வு, போனஸ் போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடியதால் ஆண் தொழிலாளர்களைத் துரத்திவிட்டு, அவ்வேலைகளில் பெண்களை அமர்த்தி 10 முதல் 12 மணிநேரம் வரை சுரண்டுகின்றனர். நோக்கியா போன்ற மின்னணுத் தொழிலகங்களில் ஒப்பந்தக் கூலிகளாக, நகரங்களின் ஜவுளிக் கடல்களில் விற்பனையாளர்களாக, மென்பொருள் நிறுவனங்களில் துப்புரவு, எடுபிடி வேலைகளிலும், பாதுகாப்புப் பணிகளிலும், தொழில் தேர்ச்சி பெற்ற வேலைகளிலும், பெண்கள் பலர் வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளின் பெண் நர்சுகள் ஊர்விட்டு ஊர் சென்று, இரவு நேரத்திலும் உழைப்பில் ஈடுபடுகின்றனர். கால் சென்டர்களில் இரவு முழுக்க அமெரிக்காவின் வங்கிகளுக்காவும், மருத்துவமனைகளுக்காகவும் பெண்கள் உழைக்கின்றனர். ஆயத்த ஆடை (கார்மென்ட்ஸ்) தொழிலாளர்களாக இன்று பெண்களே அதிக அளவில் வேலை செய்கின்றனர். ஒரே விதமான பட்டுச்சேலைகளால் அலங்கரிக்கப்பட்ட குமரிப் பெண்கள், பணக்காரர்களின் திருமண வரவேற்பில் பன்னீர் தெளிப்பது முதல் பந்தியில் தண்ணீர் வழங்குவதுவரை ஈடுபட்டு நள்ளிரவில் வீடு திரும்புகின்றனர்.

இவ்வாறு பல்வேறு துறைகளில் தங்கள் உழைப்பை வழங்கும் இப்பெண்கள் வீட்டின் சமையலையும், குழந்தைப் பராமரிப்பையும் செய்து முடித்து விட்டு நிறுவன வேலைகளுக்கு விரைகின்றனர். கைக்குழந்தைகளை அண்டை வீட்டாரிடமோ, காப்பகத்திலோ விட்டுவிட்டு 10 மணி முதல் 12 மணிநேரம் வேலை செய்து விட்டு, குழந்தைகளை அவசரமாகக் கொஞ்சிவிட்டு அடுத்த நாளுக்கான சமையல் வேலையை மீண்டும் தொடங்குகின்றனர். இதுதான் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்துக்குப் பின்னர் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம்.
வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்

வீட்டு வேலை செய்யும் பெண்களையும் பாலியல் வன்முறைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரக் கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (கோப்பு படம்)

இதுவரை உற்பத்தியில் ஈடுபடாதவர்களாக இருந்த பெண்களைத் தற்போது பெருமளவில் ‘உற்பத்தியில் ஈடுபடுத்தியிருப்பதாக’ , பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் பற்றி ஆளும் வர்க்கங்கள் பெருமையுடன் கூறுகின்றன. பெண்கள் ஏற்கெனவே தத்தம் குடும்பங்களில் செலுத்தி வரும் உழைப்பின் மூலம் பராமரிக்கப்படுகின்ற ஆண்கள் மற்றும் அக்குடும்பத்தின் வாரிசுகள்தான் முதலாளித்துவத்தின் உற்பத்திக்கு உழைக்கிறார்கள். எனினும், தமது இலாபத்துக்குப் பயன்படுகின்ற, பெண்களின் இந்த மறைமுக உழைப்பை, முதலாளித்துவப் பொருளாதாரம் மதிப்பதில்லை. அதாவது, குடும்ப உழைப்பு மற்றும் புதிய உழைப்பாளிகளை உருவாக்கித் தரும் மறு உற்பத்தி, அவர்களுடைய பராமரிப்பு ஆகியவற்றுக்கு ஒரு பொருளாதார மதிப்பினை நிர்ணயித்து, அதனை நிகர உள்நாட்டு உற்பத்தியை நிர்ணயிக்கின்ற கணக்கில் சேர்ப்பதில்லை.

ஒரு உணவு விடுதியின் சமையல்காரர், குழந்தைகள் காப்பகத்தில் வேலை பார்க்கும் பெண், சலவைத் தொழிலாளி ஆகியோரது உழைப்பு கூலிக்கு விற்கப்படுவதால் அதற்குப் பொருளாதார மதிப்பு உள்ளதாகக் கணக்கில் கொள்ளும் முதலாளித்துவம், பெண்களுடைய குடும்ப உழைப்பின் மதிப்பை நிராகரிப்பதன் மூலம், அவர்கள் இதுவரை உழைப்பிலேயே ஈடுபடாதவர்கள் போலவும், முதன்முறையாகத் தற்போது உழைப்பில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது போலவுமான தோற்றத்தை உருவாக்குகிறது. உண்மையில் பெண்களின் குடும்ப உழைப்பு மூலம் தான் பெறுகின்ற பொருளாதார ஆதாயத்தைச் சுரண்டிக் கொண்டே, கூடுதலாக, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக, உற்பத்தி சார்ந்த உழைப்பைக் கோரும் வேலைகளுக்குள் இழுத்திருக்கிறது. தனியார்மயக் கொள்கை, பெண்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படும் ‘வேலைவாய்ப்பு’ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இரட்டைச் சுரண்டலுக்கு பெண்களை ஆட்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

*************

பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலை அதிகமாக்கியிருப்பது மட்டுமல்லாமல், மறுகாலனியாக்க கொள்கைகள் அவர்களுடைய உடலையும் முன்னெப்போதும் இல்லாத வடிவங்களிலெல்லாம் விற்பனைப் பண்டமாக்கியிருக்கின்றன.

சிவப்பழகு கிரீம்பத்தாண்டுகளுக்கு முன்னர் யாரும் நினைத்துக்கூட பார்த்திராத வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் .பெங்களூரு சாராய விடுதிகளில் மதுவைக் கலக்கித் தரும் “பார் டென்டர்” களாகவும், 20/20 கிரிக்கெட் போட்டிகளில் கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் “சியர் கேர்ல்ஸ்’’ களாகவும் பெண்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். விரைவில், அமெரிக்காவின் பாலியல் வக்கிர “பிளேபாய்” பத்திரிக்கை குழுமம், இந்தியாவில் தொடங்கவிருக்கும் “பிளேபாய் கிளப்புகளில்” ஆண்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பது, சிகெரெட் பற்றவைப்பது முதலான “சேவை’’களைச் செய்கின்ற வேலைகளில் இந்தியப் பெண்களை நியமிக்கவுள்ளது.

பெண்களைப் போகப்பொருளாகக் கருதும் ஆணாதிக்கச் சிந்தனையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஆண்கள் நுகரத்தக்க பண்டமாகச் சந்தைப்படுத்தியிருக்கின்றது மறுகாலனியாக்க கொள்கை. அதே நேரத்தில், அழகுணர்ச்சி என்ற பெயரில், தம்மை ஆண்களின் நுகர்வுக்கான பண்டமாகத் தயாரித்துக் கொள்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொள்ளும் அளவுக்கு பெண்களின் மனோபாவத்தையும் மாற்றி அமைத்திருக்கிறது.

அழகிப் போட்டிகளை அறிமுகம் செய்து, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் – என அடுத்தடுத்து இந்தியப் பெண்களை உலக அழகிகளாகத் தேர்ந்தெடுத்து, அவர்களையே அழகு சாதனப் பொருட்களின் “பிராண்ட் அம்பாசிடர்’’களாக்கியதன் மூலம், அவர்களைப் போல மெலிந்த சிவப்பான உடல்வாகுவைப் பெறுவதையே மாபெரும் இலட்சியமாகக் கொள்ளுமாறு பெண்களிடம் தொடர் மூளைச்சலவை செய்யப்படுகிறது. இன்று இதன் விளைவாக, இரண்டுவேளை உணவுக்கு உத்திரவாதமில்லாத குக்கிராமங்கள் வரை சிவப்பழகு கிரீம்கள் உள்ளிட்ட பல்வேறு முகப்பூச்சு, அழகு சாதனப் பொருட்கள் எட்டியுள்ளன.

தெருவெங்கும் அழகு நிலையங்கள் முளைத்துள்ளன. அழகு நிலையங்களை எட்டிப்பார்க்காத பெண்களெல்லாம் ‘பத்தாம் பசலிகள்’, ‘கட்டுப்பெட்டிகள்’ போன்ற ‘கருத்து’களைப் பொதுப்புத்தியில் உறைய வைத்து, ஆண்டொன்றுக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கும் மேல் அழகு சாதனப் பொருட்களைச் சந்தையில் விற்று, வீட்டின் பொருளாதாரத் தேவைக்காக வெளியில் வேலைக்கு வந்த பெண்களின் சொற்ப வருமானத்தையும் வழிப்பறி செய்துகொண்டிருக்கிறது, தாராளமயம்.

இத்துடன் சினிமா குத்தாட்டத்திற்கென்றே வடிவமைக்கப்படும் ஆபாசமான உடைகளை நவீனம் எனக் கூறி சிறுமிகளுக்குக்கூட அறிமுகம் செய்துள்ளனர். எவ்வித நெறிமுறைகளும் இனி இருக்கக் கூடாது என்பதை ஒரு மோஸ்தராகவே உருவாக்கி, அதற்கென்றே ஆபாசமான ‘பேஷன் பரேட்’ களை நடத்துகின்றனர். அநாகரீகம் என்று இதுவரை கருதி வந்த அனைத்தையும் தலைகீழாக்கும் செயலை ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாகப் புகுத்தியுள்ளனர். எழுபது-எண்பதுகளில் தடைசெய்யப்பட்ட ரிக்கார்டு டான்ஸ் எனும் பாலுணர்வு வெறி நடனங்களைத் தொலைக்காட்சிகளைப் பார்த்து தம் பிள்ளைகள் ஆடுவதைக் கண்டு பெருமைப்படும் அளவுக்கு பெற்றோர்கள் மூளைச்சலவைக்கு ஆளாகியுள்ளனர்.

இதன் எதிரொலியாக, மனைவி என்பவள் எல்லாவிதத்திலும் தனக்குக் கட்டுப்பட்டவளாகவும், மாடல் அழகிகளைப் போலத் தன்னை அலங்கரித்துக் கொண்டு ‘கண்ணுக்குக் குளுமையாக’க் காட்சியளிப்பவளாகவும் இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை ஆண்களிடம் ஊடகங்கள் உருவாக்கியுள்ளன.

பாய் பிரண்ட்ஸ் இல்லாத இளம் பெண்கள், கல்லூரிகளிலும் பணியிடங்களிலும் “நீ வேஸ்ட்” என்று சக பெண்களால் ஏளனப்படுத்தப்படுகின்றனர். நகர்ப்புறங்களில் டேட்டிங் செல்வது, ரிசார்ட்டுகள், டிஸ்கோத்தேகளுக்குச் சென்று வார இறுதியைக் கொண்டாடுவது போன்ற கலாச்சாரங்கள் பெண்களைப் பலிகடாவாக்குகின்றன. பண்பலை வானொலியில் பெண்மருத்துவ திலகங்கள், பாடல்களுக்கு நடுவே “திருமணம் ஆகாத பெண்கள், பாதுகாப்பாக இருந்துக்கணும். ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் எல்லாம் இன்றைக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன” என ஆலோசனை வழங்குகின்றன.

“இந்தியா டுடே” “அவுட்லுக்” உள்ளிட்டுப் பல முதலாளித்துவ இதழ்கள் இந்தப் பாலியல் ‘புரட்சிக்கு’ தயங்கும் பெண்களை “இன்னமும் இப்படி ஹைதர்காலத்துப் பெண்களாக இருக்கிறீர்களே!” எனக் கடிந்துகொண்டு, பெரும்பாலான இந்தியப் பெண்கள் சோரம் போவதாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வே எடுத்து இக்கலாச்சார ‘புரட்சியை’த் துரிதப்படுத்தி ‘முன்னேற’த் தூண்டுகின்றன. ஊடகங்கள்தான் இப்படி என்றால், அரசோ, அந்நியச் செலாவணிக்காக, கோவா, மாமல்லபுரம் போன்ற சுற்றுலாத் தலங்களில், வெளிநாட்டுப் பயணிகள் பாலியல் வக்கிரங்களைத் தணித்துக் கொள்வதற்காக, சிறுவர்-சிறுமிகளைப் பலிகடாவாக்குவதற்குத் துணைபோகிறது. இக்கொடூரம் பலமுறை அம்பலமான பின்னரும், அரசு இதுவரை இதனைக் கண்டுகொள்ளாமல், மறைமுகமாக ஆதரித்து வருகிறது.

ஆண்களின் நுகர்வுக்கான பண்டமாகப் பெண்களைச் சித்தரிப்பதும், மாற்றுவதும் எந்த அளவுக்கு நடந்திருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்களுக்கு எதிரான வெறி பிடித்த வன்முறைகள் அதிகரித்துள்ளன. தொழில்நுட்பப் பரவலால் எளிதில் கிடைத்திருக்கும் செல்பேசி மூலம் பல பாலியல் வக்கிரங்கள் கிளறிவிடப்பட்டுள்ளன. சிறுமிகள், இளம்பெண்களின் நிர்வாணப் படங்கள் சின்னஞ்சிறு மெமரி சிப்பில் ஏற்றப்பட்டு ஆண்களுக்காகச் சந்தையில் விற்கப்படுகின்றன.

தொலைபேசியில் சில குறிப்பிட்ட எண்களுடன் தொடர்பு கொண்டு பாலியல் சரச உரையாடல்களைப் பெண்களின் குரலில் கேட்டுக் கிளர்ச்சியடைய இளைஞர்கள் விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்படுகின்றனர். வீடியோ கேம்களின் வழியாகவும் ஆண்கள் வக்கிரமாக்கப்படுகின்றனர். இதில் உச்சமாக ‘ரேப் சிமுலேசன்’ எனும் பெயரில் ஜப்பானிலிருந்து வந்துள்ள ‘மெநிகர் வன்புணர்ச்சி’ வீடியோ கேம் உலகளவில் சந்தைப்படுத்தப்படுகிறது.

ஆண்களைத் தங்கள் கிராமங்களிலிருந்து பிய்த்து எடுத்து திருப்பூர் போன்ற ஊர்களில் பதியனிட்டுள்ள வேலை வாய்ப்புகள், பன்னிரண்டு மணி நேரம் வரை தொழிலாளர்களைப் பிழிந்தெடுக்கின்றன. பெண்களுக்கும் இதே கதிதான். இரவு நேர ஷிப்ட்களில் வேலை அலுப்பு தெரியாமல் இருக்க ஆபாச உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு ஓட விடப்படுகின்றது.
குத்தாட்டம்

குத்தாட்டம்: கும்பல் பாலியல் வன்முறையின் கலை வடிவம்.

தமிழ் சினிமாவின் குத்துப்பாட்டு, இந்தி சினிமாவின் “ஐட்டம்” பாடல்கள் போன்றவை இதுவரை இலைமறை காயாக இருந்த பாலியல் உறவுக்காட்சிகளை அப்பட்டமான நடன அசைவுகளாக மாற்றி, பெண்களைச் சீண்டுவதற்குத் தோதான புது விதமான கழிசடை வார்த்தைகளையும் அறிமுகப்படுத்திச் சீரழிவையே கலாச்சாரமாக்குகின்றன. இந்த வகைப்பட்ட பாடல் காட்சிகளால் உசுப்பேற்றப்படும் ஆண், பொது இடங்களில் நடமாடும் பெண்கள் அனைவரையும் போகப்பொருளாகவே பார்க்கிறான். பேருந்துகள், திரையரங்குகள், வேலைசெய்யும் இடங்கள் என ஆண், பெண் இருபாலரும் புழங்கும் எல்லா வெளிகளிலும் ஆண்கள் பெண்களைச் சீண்டுவதும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் அதிகரித்து வருகிறது.

வேலைக்குச் செல்லும் பெண்கள், தொழிற்கூடங்களில் சக தொழிலாளர்கள், மேலாளர்களின் பாலியல் வக்கிரங்களையும் அவமதிப்புகளையும் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியைகள் பள்ளித் தாளாளரை அனுசரித்து நடக்குமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். பிராக்டிகல், இன்டர்னல் மதிப்பெண்களில் கைவைப்பேன் – என மிரட்டும் ஆசிரியர்களின் பாலியல் சுரண்டலுக்கு கல்லூரி மாணவிகள் மட்டுமல்ல, பள்ளி மாணவிகள்கூடப் பலியாகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள், இது குறித்து குடும்பத்தில் வெளிப்படுத்தவோ அல்லது போலீசு நிலையத்தில் முறையிடவோ செய்தால், நடந்த சம்பவங்களுக்கு அவர்களே பொறுப்பாக்கப்படுகிறார்கள். “ஏன் இரவு நேரத்தில் வெளியே சுற்ற வேண்டும்?” என்கிற கேள்வி முதல், அவர்கள் அணியும் ஆடைகள் வரை அனைத்தையும் காட்டி, இந்தப் பிரச்சனையை அவளே வரவழைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

நிலவும் ஆணாதிக்க சமுதாயத்தில் பெண் என்பவள் ‘தூய்மையானவளாக’ இருக்க வேண்டும் என்பதும், தனது “கற்பை”ப் பேணிப் பாதுகாப்பதுதான் அவளது முழுநேர வேலை என்பதும் பொது விதியாக இருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்துப் பேசுவதற்கே அஞ்சும் நிலை உள்ளது. பொது இடங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொள்ளும் ஏதாவதொரு பெண் அதற்கு எதிர்வினையாற்றினால், சுற்றியிருப்பவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். இந்த மவுனம், பெண்கள் மீது நடக்கும் தொடர் வன்முறைகளுக்குத் துணை நிற்கிறது

********

மொத்தத்தில், மறுகாலனியாக்கக் கொள்கைகளின் அமலாக்கம், ஏற்கெனவே ஆணாதிக்க அடிமைத்தனத்தில் உழலும் இந்தியப் பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலை அதிகரித்திருப்பதுடன், அவர்களைப் பாலுணர்வுப் பண்டமாகக் காட்டி வெறியூட்டுவதன் மூலம், அவர்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிகரிப்பதற்கும் வழி வகுத்திருக்கிறது.

அது மட்டுமல்ல, மறுகாலனியாக்கம் திட்டமிட்டே பரப்புகின்ற, தன்னையும் தன் இன்பத்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட, விழுமியங்கள் ஏதுமற்ற நுகர்வு வெறி, மற்றவர் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாத விலங்குகளாக மக்களைத் திட்டமிட்டே மாற்றி வருகிறது. வகை வகையாகவும் விதவிதமாகவும் உணவுப் பொருட்கள், ஆடைகள், பல வண்ணக் கைபேசிகள், ஊடகங்களில் சந்தைப்படுத்தப்படும் நுகர்பொருட்கள் போன்றவற்றை வாங்கி அனுபவிப்பது மட்டுமே நோக்கம் என்றும், இவற்றை அடையும்பொருட்டு எல்லா நெறிகளையும் கைவிடலாம் என்பதும் சகஜமாக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி வன்முறையாளர்கள் யாரோ அல்ல. ‘நாடு விலை போவதைப் பற்றியோ, சமூகம் அழுகி நாறுவதைப் பற்றியோ, அடுத்தவன் துன்பத்தால் துடிப்பதைப் பற்றியோ, தன்னுடைய வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படுவது பற்றியோ, தன்னுடைய தனிப்பட்ட எதிர்காலத்தைப் பற்றியோ கூடக் கவலை இல்லாமல், இருக்கிற வரையில் அனுபவி‘ என்பதையே தம் விழுமியமாக வரித்துக் கொண்ட கிரிமினல்கள்.

டெல்லி வன்முறையைப் பாலியல் வெறி என்ற ஒரு கோணத்திலிருந்து மட்டும் பார்த்துப் புரிந்து கொள்ள இயலாது. நாடு முழுவதும் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏதோ சில கிரிமினல்களின் எதிர்பாராத நடவடிக்கைளும் அல்ல. அவை இந்தப் பண்பாடு தோற்றுவிக்கின்ற, எதிர்பார்க்கக்கூடிய விளைவுகளே!

– கதிர்

…ஆதலினால் காதல் செய்வீர்!


காடுவெட்டிகுரு முதல் குச்சு கொளுத்தி ராமதாஸ் வரை அனைத்து ஆதிக்க சாதி வெறியர்களையும் பதற வைக்கும் ஒரு நெருப்பு சொல் காதல்
தோழி!
*திவ்யாவைப் போல்
தெளிவாக காதலி.
காதல்தான் விருப்பமெனில்
தாழ்த்தப்பட்டோரை
தயங்காமல் காதலி!
வர்க்கம் பார்த்துதான்
வருகிறது காதலெனினும்,
வர்ணம் பொடிபட
எப்போதாவது துடிக்கும் இதயத்தை
நழுவாமல் ஆதரி!

சேரிக்கு
வாழ்க்கைப்பட்டால்தான் தெரியும்
உன் சொந்த சாதி அசிங்கம்.
சாதிக்கு
எதிராய் போனால்தான் புரியும்
தாய், தகப்பன் பாசம்
கருப்பையை அடக்கி நாறும்
சாதியை விட்டொழி!
சைவப்பிள்ளையும், புதிர வண்ணாரும்
இணையேற்றால்
ஒன்றும், கீரிப்பிள்ளை பிறப்பதில்லை,
ஒழுங்கான மனிதமுகம் மலருமங்கே!

வன்னியப்பெண்ணும், பறையரும்
வாழ்க்கைத் துணையானால்
காடுவெட்டி குருவுக்கு வேண்டுமானால்
மூலம் தள்ளிப் போகலாம்,
ராமதாசு வேண்டுமானால்
நாக்கு வெந்து காயலாம்.
நாடு ஒன்றும் மூழ்கிடாது,
சாதி ஒழியும்படி சமத்துவமாய் காதலி!

கக்கத்தில் பையை வைத்து
பக்கத்து ஊரையெல்லாம்
கந்துக்கு தரிசாக்கி…
அந்நிய செலாவணிக்காக
நொய்யலையும், பவானியையும்
சாயப்பட்டைறையில் கருக்கி…
காசுக்காரன் அழித்திட்ட
‘கவுண்டர் வாழ்க்கை’
நீ… அருந்ததியரைக் காதலித்தால்
அழியுமென்றால்!
அழியட்டும் சாதிவெறி!
பெண்ணே! சமூகம் அழகாக
சக்கிலியரைக் காதலி!

அந்நிய மூலதனத்தோடு
அனைத்து சாதியும் கலப்பு,
அதில் சில்லரை பொறுக்கிக் கொண்டே
சிலருக்கு சாதியோட கொழுப்பு.

பன்னாட்டுக் கம்பெனி
பனிரெண்டு மணிநேரம்
கையை பிடித்து இழுக்கையில்…
அமெரிக்க ‘டேட்டிங்’
ஆளைச் சுற்றி வளைக்கையில்..
அரிவாள் தூக்காத சாதி,
நீ சாதி மாறி காதலித்தால்
ஆர்ப்பரிக்குமென்றால்,
தூக்கிய அரிவாள் துருபிடிக்க
துணை கொள் தோழி!
தாழ்த்தப்பட்டோரையே!

– துரை.சண்முகம்.

விஸ்வரூபம் – கருத்துச் சுதந்திரம்


கருத்துச் சுதந்திரம் பாகம் 1

‘விஸ்வரூபம்’ என்ற, திரைக்கு வந்து சில நாட்களே ஆன ‘திரைக் காவியத்தைக்’ காண நேர்ந்தது. சர்ச்சையே அப்படத்திற்கு விளம்பரத்தைத் தேடித் தந்தது. முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரித்தவுடன், நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் அறிவித்தார். பிறகு அவர்களிடம் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியேறும் முடிவை தள்ளிப் போட்டிருக்கிறார். தேசப்பற்று காரணமாக இருக்கலாம்.

விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லீமாக இருக்கும் கதாநாயகன், விஷ்ணுவின் ரூபம் எடுக்கிற படம். அதாவது நல்லது செய்யும் எந்த முஸ்லீமுக்கும் ஓர் இந்து சாயல் இருக்க வேண்டும்.

அவரது ‘விஸ்வரூபம்’ திரைப்படம் புரியவில்லை என்று பலர் கூறுகின்றனர். அதெல்லாம் பொறாமை காரணமாக சொல்கிறார்கள். அது மிக எளிதாக புரியும் படம். ஏதாவது ஒரு ‘கான்’ வில்லனாக வரும் சில அமெரிக்க ஜேம்ஸ்பாண்ட் படங்களின் காட்சிகளையும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடித்த சில இந்தி சினிமாக்களின் காட்சிகளையும், இந்திய ‘தேசபக்தி’ பொங்கும் சில தமிழ் சினிமாக்களின் காட்சிகளையும் வெட்டி ஒட்டிவிட்டு, 11வது அவதாரத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் சேர்த்துவிட்டால் அதுதான் இந்த விஸ்வரூபம். ஆனால் கமல்சார் இதற்காக ஏன் சொத்தை அடகுவைத்தார் என்று புரியவில்லை.

இப்படத்தில் கமலின் பெயர் விஸ்வநாதன். புத்திசாலியான அதிகாரியாக ஒருவர் நடித்தால் நாயகன் ஒன்று ‘ராகவனாக’ இருப்பார் அல்லது இந்த படத்தின் பாத்திரம் போல ‘விஸ்வநாதனாக’ இருப்பார். ஏதாவது ஒரு அம்பிமார். கமல் இந்தப் படத்திலும் ஒரு பார்ப்பனர். இதனால் அவர் சாதிப்பற்று கொண்டவர் என்று நீங்கள் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது அல்லவா! அதனால், அவாள் பாசையில் அச்சுப்பிசகாமல் பேசும் அவரது மனைவி, கோழிக்கறி விரும்பிச் சாப்பிடுவார். இப்படி ஆராய்ச்சி செய்வது சரியா என்று யாராவது என்னைக் கேட்டால் நடிகர் ரஜினிகாந்த், கமலைப் போல அடிக்கடி பார்ப்பன வேடத்தைப் பூணுவதில்லையே, ஏன் என்ற கேள்விக்கு பதில சொல்வீர்களாக.

கமல் சாரின் பார்ப்பன மனைவி ‘அடக் கடவுளே’ என்று சொல்லும்போது கமல் ‘எந்தக் கடவுளே’ என்று கேள்வி கேட்டு, தான் நாத்திகன் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் முஸ்லீம்கள் இப்படத்தின் நோக்கத்தைக் கேள்வி கேட்பார்களே என்பதற்காக கமல் உண்மையிலேயே தொழுகை நடத்தக் கூடிய முஸ்லீமாம். மச்சம் மட்டும் வச்சு மாறுவேடம் போடும் நாயகன் மாதிரி, இதுல முஸ்லீம் பாத்திரம் மச்சம் வச்சவரு மாதிரி இருக்கும். விஸ்வநாதன் என்ற தொழிலுக்காக வேடம் போடும் பாத்திரத்துக்கு பார்ப்பன‌ குடும்பமே இருக்கு.. ஒரு பாட்டு இருக்கு.. கமல் பரத நாட்டியம் ஆடுகிறார் மாமிகள் புடை சூழ. ஆனால் படத்தில் நிஜமாக வரும முஸ்லீம் பாத்திரம் அம்புட்டு அநாதை. படத்துல வரும் கமல்பாய் பேரு ‘தௌபீக்’கா அல்லது நாசரா என்று என்னால் இதுவரை கண்டே பிடிக்க முடியவில்லை. கவுண்டமணி சொல்ற மாதிரி நல்ல டகால்ட்டி.

கருத்துச் சுதந்திரம் பாகம் 2

முல்லா ஒமர் மதுரையிலும், கோவையிலும் தங்கியிருந்ததாக சொல்லியிருக்கிறார். இன்னும் ஏதாவது ஒரு முஸ்லீமின் ரேஷன் கார்டையும் சேர்த்து காண்பித்திருக்கலாம். நோக்கம் இனிதே நிறைவேறியிருக்கும். அகில உலகமெங்கும் உளவுத்துறை வலைப்பின்னலை வைத்திருக்கும் அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகளை விஞ்சிய அகில உலகநாயகனாக நீங்கள் ரெண்டு சண்டை போடுவதற்கும், நாலு பாட்டும் பாடுவதற்கும் முஸ்லீம்கள் பலிகடாக்களா? தசாவதாரத்தில் அதிபர் ‘புஷ்’ வேடமே போட்டாச்சு அப்பறம் ஏன் கமல் சார் தேவையில்லாம இப்படியொரு ஜீனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.

நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னதை விட நேராக அமெரிக்கா போகிறேன் என்று சொல்லியிருக்கலாம். கமலஹாசனில் ‘ஹாசன்’ என்ற வார்த்தைக்காக தங்களை ஜட்டியைக் கழற்றி சோதனை போட்ட நல்ல நாடான அமெரிக்காவிற்கு தாங்கள் போய் வாருங்கள்; நாங்கள் வழியனுப்பி வைக்கிறோம். ஜார்ஜ் பெர்னாண்டஸை.. ஷாரூக்கானை.. அப்துல் கலாமை அதேபோல் சோதனை நடத்திய அமெரிக்கா, தங்களுக்குப் பிடித்த நாடு. இப்படி எந்த அரபுநாடும் நம்நாட்டின் பிரபலங்களை இழிவுபடுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், அரபுநாடுகளின் மீது உங்களுக்கு என்ன கோபமோ?

கருத்துச் சுதந்திரம் பாகம் – 3

ஓர் இந்திய உளவு அதிகாரி நம்ம கமல். உளவுப்பணிக்காக தனது துணைவியாரையே தாரை வார்த்து அவர் உளவு பார்க்கிறார். அந்த நாயகி ஆன்ட்ரியாவை அபூர்வ சகோதரன் படத்தில் வரும் ஏட்டு போல ‘தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க’ என்று கமல் சொல்லாத குறையாக, கூடவே சொட்டர போட்டுக்கிட்டு அலையவிடுகிறார். அரவாணியாக இருக்கும் நாயகன் கமலை மணந்தவள் மற்றொருவரை விரும்புவதை வில்லத்தனமாகக் காட்டுகிறார். ‘அமெரிக்காவில் மழை பெய்யாதா போயிட்டுப் போது’ என்று நாயகி கலக வசனம் பேசினாலும் மொத்தத்தில் அவளை வில்லியாக்கி விடுகிறார். நல்ல பெண்ணுரிமைவாதி நீங்கள்.

ஆண் அடையாளத்தைத் துறந்து, தாம்பத்தியத்தைத் துறந்து, அமெரிக்காவுக்கு வேலை செய்யும் தியாகி நம்ம கமல். அமெரிக்காவைக் காப்பாற்ற இந்திய அரசு வெட்டியாக சம்பளம் கொடுக்கிறது. முல்லா ஒமர் ‘தமிழ் பேசும் ஜிகாதி வான்டட்’ என்று கேட்டதால் கமல் சென்று இறங்கிவிட்டார். உயிரையே பணயம் வைத்து முல்லா ஒமரை நெருங்கிவிட்டார்.

அமெரிக்க ராணுவம் தமது வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள் என்ற ஒரு நியாயமான காரணம் இருப்பதாலேயே ஆப்கனில் ஒரு கிராமத்தைத் தாக்குகிறது. காரணமில்லாமல் தாக்க மாட்டார்களாம்! ஹெலிகாப்டரில் இருந்து சுடும் அமெரிக்க வீரர் ஒரு பெண்ணைத் தவறுதலாக சுட்டுவிட்டதற்காக தன்னைத் தானே சபித்துக் கொள்கிறார். ஏனென்றால் அமெரிக்க வீரர் சாதாரண ஆப்கானிய மனிதனை சுட்டுவிட்டால் தன்னைச் சுட்டுவிட்டதாக எண்ணுவாராம்! கடைசி ஆபரேசனில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அனைவரும் நிற்கும்போது முஸ்லீம் அதிகாரியாகிய கமல் தொழுவதை வாஞ்சையுடன் ஒரு அமெரிக்க அதிகாரி சக அதிகாரிக்கு விளக்குகிறார்! ஏனென்றால் நேர்மையான முஸ்லீம் அதிகாரிகளை அவர்கள் மதிப்பார்களாம்!

ஆமாம் கமல், இந்த குவான்டனாமோ சிறைச்சாலை தெரியுமா? அதில் முஸ்லீம் சிறைவாசிகளை கழுத்தறுத்து வீடியோவில் காட்டுவது; ஒருவரின் உடல் முழுவதும் மலத்தைப் பூசி அவரது முகத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் தனது ஜட்டியால் மூடுவது; நிர்வாணமாக நிற்கும் ஒருவரின் மீது நாய்களை விட்டுக் குதறவிடுவது ஆகிய காட்சிகள் அனைத்தும் வெளியானதைத் தாங்கள் அறிவீர்கள் தானே.. இன்னும் வர்ணிக்க முடியாத கொடூரங்களை நிகழ்த்தியதன் காரணமாக அமெரிக்க மக்களின் எதிர்ப்பினால் அந்த சிறை மூடப்பட்டதையும் அறிவீர்களா?

கருத்துச் சுதந்திரம் பாகம் – 4

சி.என்.என், ஐ.பி.என்., பி.பி.சி உட்பட சர்வதேச ஊடகங்களும் இந்தியாவிலுள்ள நூற்றுக்கணக்கான ஊடகங்களும் செப் – 11, 2011க்குப் பிறகு அடித்துத் துவைத்த ஒரு கருத்தைத்தான் இப்போது கமல் விஸ்வரூபம் எடுக்க வைத்திருக்கிறார். அதுதான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது. ஆனால் அமெரிக்க பயங்கரவாதத்தைப் பற்றி சொல்லத்தான் ஒரு ஊடகத்தைக் கூட காணோம்! அல்ஜசீரா தொலைக்காட்சி அந்த வேலையைச் செய்தது. அதன் அலுவலகத்தை அமெரிக்கா குண்டுவீசி அழித்தது. கருத்துச் சுதந்திரத்தை இப்படி குண்டு போட்டு அழிக்கலாமா என்று அமெரிக்காவுக்கு பாடம் சொல்லி கமல் ஒரு படம் எடுப்பாரா?

அமெரிக்காவுக்கு கைவந்த கலை, திரைப்படங்களில் அரசியல் செய்வது. ஜப்பானைக் அணுகுண்டு போட்டு அழித்துவிட்டு ‘பியர்ல் ஹார்பா’ என்று ஜப்பானையே வில்லனாக்கி ஒரு படம் எடுத்தார்கள். வெளியிட்ட திரையரங்கில் எல்லாம் நம்ம தமிழன் அதை வெற்றிப்படம் ஆக்கினான்.

இப்போது இரட்டைக் கோபுரத் தாக்குதலை வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது இந்தியாவில் சக்கைப் போடு போடுவதற்குள், பேசாம நான் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம் என்று இருக்கிறேன்.

நம்ம கமல் அமெரிக்க லட்சியப் படங்களை தமிழ் மண்ணில் எடுக்க ஆரம்பித்துவிட்டார். இனி அமெரிக்க தூதரகத்தைத் தாக்க வந்த தமிழ்த் தீவிரவாதிகளைப் பற்றி நிறைய படம் வந்தாலும் வரும்.

கருத்துச் சுதந்திரம் பாகம் – 5

‘உன்னைப் போல் ஒருவன்’ல் பயங்கரவாதத்தில் ஈடுபடும் முஸ்லீம்களை பயங்கரவாதத்தால் தான் அழிக்க வேண்டும் என்று சொன்னார். கேள்வி வருமே என்பதற்காக காவி அணியாமல் ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பஸ்தரின் வேடம் பூண்டார். அடுத்து விஸ்வரூபத்தில் அவர் ஒரு நல்ல நேர்மையான முஸ்லீமுக்கு இலக்கணம் சொல்லி இருக்கிறார். ‘நீ குரானைத் தொழு. ஜிகாதிகளைக் காட்டிக் கொடு. அமெரிக்காவின் அடியாளாக இரு. அணு ஆயுதங்களை அப்பாவி அமெரிக்காவின் மீது பிரயோகம் செய்ய முனையாதே. மனிதாபிமானமில்லாமல் இருக்காதே. சிறுவர்களை குண்டு கொடுத்து அனுப்பாதே. ஈவிரக்கமில்லாமல் கொலை செய்யாதே..’ என்று ஒரு முஸ்லீமாக வந்து சொல்கிறார்.

ஆனால் பயங்கரவாதத்தில் ஈடுபடும் முல்லா ஒமர் மற்றும் அவரது குழுவை பயங்கரவாதத் தன்மையில் அழிக்கச் சொல்கிறார். ‘ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேண்டுமானாலும் துவம்சம் செய். அனைவரையும் மரண அடி கொடு.. வெட்டிவீசு கண்களைப் பிடுங்கு.. கையை வெட்டு வாளால் சொருகு.. துப்பாக்கியால் கண்ணில் படுபவனை எல்லாம் போட்டுத் தள்ளு. இத்தனையும் ஒரே சண்டைக்காட்சி நேரத்தில் முடித்து விடு..’ என்று ஆணித்தரமாக புரிய வைப்பதற்காக ஒரு சண்டைக்காட்சி வைத்திருக்கிறார். நியாயத்திற்காக கொடூர வன்முறையில் இறங்கு; நியாயத்தின் பேரால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்து என்கிறார். கமல் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும், இந்தப்படத்திலும் ஒரு புனிதப்போர் நடத்தச் சொல்கிறார். அதாவது இவர் ஒரு புதியவகை ஜிகாதி.

கருத்துச் சுதந்திரம் பாகம் – 6

கமலின் நியாயத் தீர்ப்பை அப்படியே எடுத்துக் கொள்வோம். அவர் சொல்கிறபடி பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை பயங்கரவாதத்தால் அழிக்க வேண்டும்.

ஓசாமா இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தவர் 2000 அமெரிக்கர்களைக் கொன்றார். அது கண்டிக்கத்தக்கது; ஏற்க முடியாதது. சரிதான். இதை வைத்தே அமெரிக்காவில் பல படங்கள் வந்துவிட்டன.

இப்ப கமலுக்கு ஒரு ஸ்கிரிப்ட் சொல்லுவோம். இந்த கதையை படமாக்க கமல் விரும்பினால் கதை இலவசம்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலிலிருந்து படத்தின் கதை விரிகிறது. பிளாஷ்பேக்கில் கேமரா ஆப்கானைக் காட்டுகிறது. இப்போது கதை.

ஆப்கனின் தலைநகரமான காபூலுக்கு உலகின் விதவைகளின் தலைநகரம் எனறு பெயர். கடந்த 30 ஆண்டுகாலப் போரில் 15 லட்சம் விதவைகள் அந்நாட்டில் உள்ளனர். அமெரிக்கப் படையும் அதன் கூட்டுப்படைகளும் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஆப்கானியர்களில் 37 சதவீதம் பேர் ஆண்கள். அவர்கள் அனைவரையும் விதிவிலக்கில்லாமல் தாலிபான்கள் என்றே வைத்துக் கொள்வோம். மீதி 63 சதவீதம் பேர் குழந்தைகளும் பெண்களும். இதயபலவீனம் உள்ளவர்களுக்காக இதை நாம் காட்சிப்படுத்தாமல் விடுவோம்.

15 லட்சம் விதவைகளின் கதைகள் எப்படியிருக்கும்? தகப்பன் இல்லாத 15 லட்சம் குடும்பங்களின் பிள்ளைகள் ஓயாத போரில் உணவுக்காக என்ன செய்யும்? படிப்புக்காக என்ன செய்வார்கள்? தன் தகப்பனைக் கொன்றவர்கள் மீது என்ன உணர்வைக் கொண்டிருப்பார்கள்?

அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் மட்டும் ஈராக்கில் 5 லட்சம் குழந்தைகள் மாண்டனர். ஈராக்கை ஆக்கிரமித்து அதன் அதிபரை ஒரு போலி நீதிமன்றத்தால் கொன்றொழிக்கும் அமெரிக்காவின் நோக்கம் நிறைவேற கொல்லப்பட்ட மக்கள் பல லட்சம் பேர். பாலஸ்தீனம், லெபனான் என பட்டியல் நீளும் இந்த நாடுகளுக்குச் சென்றால் விதவிதமான கதைகள் கிடைக்கும்.

ஆப்கனில் ஒரு திருமணத்தில் குண்டு போட்டு 80 பேரையும், மற்றொரு விழாவில் குண்டு போட்டு 200 பேரையும் கொன்றது அமெரிக்கப் படை. அதை ஒரு சிறுவன் வர்ணிக்கிறான். “ நான் குண்டு சத்தம் கேட்டேன். விழித்துப் பார்த்தால் மருத்துவமனையில் கிடக்கிறேன். என் இரண்டு கால்களும் இல்லை. என் கால்களைப் பறித்தவர்களைப் பலி எடுப்பேன்”. கமல் இந்தக் காட்சியிலிருந்து கூட தங்களது படத்தைத் தொடங்கலாம். கதை இலவசம்.

கருத்துச் சுதந்திரம் பாகம் – 7

ஒரு பெரும் பணக்கார பின்னணி கொண்ட இளைஞன் ஒசாமாவை ரஷ்யாவுக்கு எதிராக முஜாகிதீன் படைகளுக்குத் தலைமை தாங்கப் பணித்தது அமெரிக்கா. அப்போது விடுதலை வீரனாக சித்தரிக்கப்ப‌ட்ட ஒசாமா, அமெரிக்காவின் அடியாளாக அரபுநாடுகளுக்கு எதிராக செயல்பட வேண்டுமென்ற அமெரிக்க நிர்பந்தத்தை உயிருக்கஞ்சாமல் எதிர்த்தான். அதற்கு தன் குடும்பத்தோடு தன் உயிரையும் விலையாகக் கொடுத்திருக்கிறான்.

ஓசாமாவின் லட்சியம் என்ன? அரபுலகம் அந்நிய ஆக்கிரமிப்பிற்கு ஆளாகக் கூடாது. அரபுலக மக்களின் எண்ணெய் ஆதாரம் அந்நியர்களால் களவாடப்படக் கூடாது என்பது தானே. அமெரிக்காவின் லட்சியம் என்ன? அரபுலகை அடிமைப்படுத்த வேண்டும்; உலகின் எண்ணை ஊற்றான அரபுலகை தனது பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது தானே.

ஒசாமா ‘எண்ணைய் வளங்கள் எமக்கே சொந்தம். நீ என்ன எண்ணை வயலுக்கு வந்தாயா? கிணறு தோண்டினாயா?’ என்று கேள்வி கேட்கிறார். தமது சொந்தச் சகோதரிகள் கண்முன்னால் தெருக்களில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதற்கும், தம் சின்னஞ்சிறு குழந்தைகள் கொத்துக்குண்டுகளால் குதறி எறியப்பட்ட கோரத்தைப் பார்க்க சகியாமலும், மண்ணும் மக்களும் அடிமைப்பட்டப் புழுவாய் நெளியும் காட்சியைக் கண்டு குமுறி எழுந்தும் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் பொருளாதார – அரசியல் பயங்கரவாதத்திற்கு எதிராகக் களம் இறங்குங்களடா என் தம்பிகளே, செத்தால் பாடை பத்துமுறை வராது.. என்று பயிற்றுவிக்கிறார். இரட்டைக் கோபுரத்தைத் தாக்கி அழிக்கிறார்.

ஒசாமாவின் போராட்ட வழிமுறைகள் பயங்கரவாதத் தன்மை கொண்டதுதான். கொடிய துன்பங்களை விளைவிப்பவர்களுக்கு கொடிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற கமலின் தர்க்கம் தான் ஒசாமாவின் தர்க்கமும். கமலின் வரையைறையைத்தான் ஆப்கான் தேசத்துத் தாலிபான்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தாலிபான்களை மட்டும் விமர்சிக்கும் கமல், நவீன வல்லரசுகளின் கொடூரமான பயங்கரவாதப் போரைப் பற்றி மௌனம் சாதிக்கிறார்.

ஒரு ஆய்வாளர் சொன்னது போல ‘தற்கொலை கார்குண்டு’ என்பது ‘ஏழைகளின் விமானப்படை’. ஆயுதம் தாங்கிய ரோபோக்களை ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் கொன்றொழிக்க அனுப்பும் வல்லரசுகளின் வக்கிரப்போர்களை எதிர்க்க கமலின் நியாயத்தைப் பொருத்துவோம்.. 63 சதவீதம் பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற செயல் பயங்கரவாதம் இல்லையா? பொதுமக்களைக் கொல்வது பயங்கரவாதம் எனும் போது, தம் நாட்டின் பொது மக்களைக் கொல்லும் வல்லரசுக்கு அந்த வலி எப்படியிருக்கும் என்று புரிய வைக்க ஒரு போராளிக் கூட்டம் எண்ணினால் அது கமலின் தர்க்கப்படி முழு நியாயம் தானே.

இஸ்லாமியப் போராளிகளின் பயங்கரவாதம் கூடாது என்று சொல்பவர், முதலில் அதனைத் தூண்டக் காரணமாக இருக்கும் அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் பயங்கரவாதத்தைத் தடை செய்தபிறகு பேசலாம். அல்லது இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு, பயங்கரவாதமும் ஜனநாயக விரோத ஆட்சி முறையும் இஸ்லாமியப் போராளிகளின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்திவிடும் என்ற அக்கறையிலிருந்து சொல்லலாம். அப்போது ஏற்கலாம். ஆனால் அமெரிக்காவின் எடுபிடியாக நின்று கொண்டு பேசுபவர்களுக்கு எந்த தார்மீக உரிமையுமில்லை.

“யோக்கியர்களே கல்லெறியுங்கள்”

இஸ்லாமிய பயங்கரவாதம் என்று பொதுமைப்படுத்தும் வார்த்தையே கண்டிக்கத்தக்கது. அது குரான் படிப்பவர்களை எல்லாம் பயங்கரவாதி என்று அறிவிப்பு செய்கிறது. உலகிலேயே அதிகமாக முஸ்லீம்கள் இருக்கும் நாடான இந்தோனேசியாவில் பயங்கரவாதம் இல்லையே ஏன்? அங்கும் குரான் இருக்கிறது; இஸ்லாம் இருக்கிறது. ஆனால் எண்ணை இல்லை. அதனால் அங்கே அமெரிக்கா தாக்குதல் நடத்தவில்லை. அந்நாட்டை ஆக்கிரமிக்கவில்லை. எனவே முஸ்லீம்கள் ஜிகாத் நடத்தவில்லை. உலகிலேயே இரண்டாவதாக அதிக முஸ்லீம்கள் வசிக்கும் இந்தியாவில், முஸ்லீம்க‌ள் பயங்கரவாதத்தை கையிலெடுக்கவில்லை. நடக்கும் ஓரிரு சம்பவங்களும் இங்குள்ள பி.ஜே.பி.யும், ஆர்.எஸ்.எஸ்.சும் அவர்களை அழிக்க முயல்வதன் விளைவாக நடக்கின்றன. பாபர் மசூதிக்குப் பிந்தைய இந்தியாவையும் முந்தைய இந்தியாவையும் ஒப்பிட்டால் தெரியும்.

கருத்துச் சுதந்திரம் – 8

மற்றொரு விஸ்வரூபமாக, கருத்துச் சுதந்திரம் பற்றி வடஇந்திய ஊடகங்களும் தமிழ் ஊடகங்களும் கொதித்தெழுந்து விட்டன. நடிகர்கள், எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கமலுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையா என்கின்றனர்.

அதிலும் தூய கருத்துச் சுதந்திரவாதிகளாக சிலர் கலைஞனுக்கு கருத்து வேலி கூடாது என்கின்றனர். சென்சார் போர்டே கூடாது என்கின்றனர். சமத்துவமற்ற சமுதாயத்தில் எது ஒன்றையும் வரம்பின்றி அனுமதிக்க முடியாது. ஒரு சமுதாயத்தின் உயர்ந்த அரசியல் விழுமியங்களால் அது கண்காணிக்கப்பட வேண்டும்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால் மதச்சார்பின்மை என்ற நுண்ணோக்கி கொண்டு அனைத்துக் கருத்துக்களும் கண்காணிக்கப்பட வேண்டும். இந்தியா சோசலிச சனநாயகக் குடியரசு என்று பிரகடனம் செய்யப்பட்டால் அதனடிப்படையில் அனைத்துக் கருத்துக்களும் கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் வரம்பற்ற கருத்துச் சுதந்திரம் என்பது பணபலமும், அதிகார பலமும் கொண்ட கும்பல்களுக்கு சேவை செய்யும் கருத்தாகும். மக்களிடம் ஊதுகுழல் கூட இல்லாத நிலையில் உலகின் அனைத்து ஊடகங்களையும் வைத்துள்ளவர்கள் யார்? வரம்பற்ற கருத்துச் சுதந்திரம், உண்மையில் குரலற்ற மக்களின் குரல்வளையை நெறிக்கும் தூக்குக் கயிறாகவே மாறும்.

முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பைப் பொருத்தவரை அவர்களின் எதிர்ப்பும் கருத்துச் சுதந்திரத்தின் அங்கமாகவே பார்க்கப்பட வேண்டும். எந்தத் தரப்பானாலும் இவ்விதமான தவறான சித்திரிப்புகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் உரிமையுள்ளது. டேம்’99 என்ற படத்தின் தவறான சித்திரிப்புக்கு எதிராக தமிழகம் கிளர்ந்ததைப் போல், பாதிக்கப்படும் தரப்பு தமக்கெதிரான அவதூறுகளுக்காக தடை கோர உரிமையுள்ளது.

ஆனால் குரானையோ அல்லது முஸ்லீம் தலைவர்களையோ அல்லது அதன் மரபுகளையோ, பழக்க வழக்கங்களையோ எவ்விதத்திலும் விமர்சிக்கவே கூடாது என்பது கருத்துரிமைக்கெதிரானது; ஜனநாயக விரோதமானது. உலகில் நிலவும் அனைத்தின் மீதும் கருத்து சொல்லவும் விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது.

ஆனால் சொந்த ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கவும், மதவாதப் பற்களை மறைத்துக்கொண்டு பொதுவாக விமர்சிப்பதாக நாடகமாடும் ஆசாமிகளுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் மற்ற மதங்களை விமர்சிக்க எவ்வித தார்மீக உரிமையுமில்லை.

கருத்துச் சுதந்திரம் பாகம் – 9

பொய்யின் துணையுடன் பயங்கரவாத தர்க்கம் பேசும் கமல் சாரே!

இதோ உண்மை பேசுபவரின் ‘பயங்கரவாத’ தர்க்கத்தின் சுருக்கம்.

2004ல் அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒசாமா பின்லேடன் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கம்.

“அல்லா போற்றி!

அமெரிக்க மக்களே!

நான் பேசத் தொடங்குமுன் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பாதுகாப்பு என்பது மனித வாழ்வின் அசைக்க முடியாத தூண். ‘நாங்கள் சுதந்திரத்தை வெறுக்கிறோம்’ என்று புஷ் சொல்வது மோசடி. சுதந்திர மனிதன் தனது பாதுகாப்பைப் கெடுத்துக் கொள்ளமாட்டான்.

மற்றவர்களின் பாதுகாப்போடு விளையாடும் ஒரு செவிட்டுக் கொள்ளையனைத் தவிர வேறு யாரும் விளையாடவோ, தாம் பாதுகாப்பாக இருப்போம் என்று நம்பவோ மாட்டார்கள். அதே நேரத்தில் சிந்திக்கும் திறனுடையோர் பேரழிவு தாக்கும் போது அது மீண்டும் நடைபெறாமல் தடுக்க அதன் விளைவுகளை பரிசீலிப்பதற்கு கவனம் கொடுப்பார்கள்.

ஆனால் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். செப் – 11ன் சம்பவங்களுக்கப் பிந்தைய நான்காம் ஆண்டில் நாம் இருக்கும் போதும் புஷ் இன்னமும் பேரழிப்பை நடத்திக் கொண்டிகருக்கிறார். உங்களை ஏய்த்து, உங்களிடமிருந்து உண்மையான விளைவுகளை மறைத்து வருகிறார். இவ்வாறு ஏற்கனவே நடந்ததே திரும்பவும் நடப்பதற்கு காரணங்களை உருவாக்குகிறார்.

ஆகவே அந்த முடிவை எடுத்தற்கான தருணங்களைப் பற்றிய உண்மையைச் சொல்கிறேன். அந்நிகழ்வுகளுக்குப் பின்னுள்ள கதையைச் சொல்கிறேன். தங்களின் பரிசீலனைக்காக…

அல்லா அறிவார். நாங்கள் அந்த கோபுரங்களைத் தாக்கும் நிலை ஒருபோதும் நேர்ந்திருக்கக் கூடாது என்பதை அல்லா அறிவார். அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப் படைகள் பாலஸ்தீனிலும் லெபனானிலும் உள்ள எமது மக்கள் மீது நடத்திய ஒடுக்குமுறையும் கொடுங்கோன்மையும் தாங்க முடியாததாக இருந்தது. அது என் மனதைப் பிசைந்தது.

1982ல் இஸ்ரேலியர் லெபனானை ஆக்கிரமிக்க அனுமதித்ததும் 6வது போர்க்கப்பலை அனுப்பியதும் தான் என் ஆன்மாவை நேரடியாக பாதிக்கத் தொடங்கியது. குண்டுவீச்சு தொடங்கியது. பலர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமுற்றனர். மீதி இருந்தவர்கள் அச்சுறுத்தப்பட்டு இடம்பெயர்க்கப்பட்டனர்.

கண் முன் ஓடும் அக்காட்சிகளை என்னால் மறக்க முடியாது. இரத்தமும் சிதறிய உறுப்புகளுமாய் பெண்களும் குழந்தைகளும் எங்கெங்கும் சிதறிக் கிடந்தனர். குடியிருந்தவர்களோடு சேர்த்து வீடுகள் அழிக்கப்பட்டன. எமது வீடுகளின் மேல் ராக்கெட் மழை பொழிந்து தகர்த்தது.

அந்தச் சூழ்நிலையைப் பார்க்கையில் ஆதரவற்ற நிலையில் கதற மட்டுமே திராணி கொண்ட ஒரு குழந்தையை ஒரு முதலை சந்திப்பது போல் இருந்தது. முதலை ஆயுதங்கலக்காத உரையாடலைப் புரிந்து கொள்ளுமா? உலகமே பார்த்தது. கேட்டது. ஆனால் ஏதும் செய்யவில்லை.

அந்தக் கடினமான தருணத்தில் என் மனதில் குமிழ்விட்ட எண்ணங்களை விளக்குவது கடினம். இறுதியில் அது கொடுங்கோன்மையை மறுதலிக்கும் தீவிர உணர்வை உண்டு பண்ணியது. ஒடுக்குமுறையாளர்களை தண்டிக்க வேண்டும் என்ற தீவிர வைராக்கியத்தைப் பிறப்பித்தது.

லெபனானின் இடிந்த கோபுரங்களை நான் பார்த்தபோது ஒடுக்குமுறையாளர்களை அவர்களது வழிமுறையிலேயே தண்டிக்க வேண்டுமென்றும் நமது குழந்தைகளையும் பெண்களையும் காக்கவும், நாம் ருசித்ததை அவர்களையும் ருசிக்க வைக்கவும் அமெரிக்காவின் கோபுரங்களை அழிக்க வேண்டும் என்று என் மனதிற்குப் பட்டது.

அந்த நாளில் தான், பெண்களையும் குழந்தைகளையும் திட்டமிட்டே கொல்வதும் ஒடுக்குமுறை செய்வதும் அமெரிக்காவின் உள்நோக்கமுடைய கொள்கை என்பது உறுதியானது. அழிவே சுதந்திரம் ஜனநாயகம் என்று போற்றப்ப‌ட்டு, எதிர்ப்பு என்பது பயங்கரவாதமாகவும் சகிப்பின்மையாகவும் சித்தரிக்கப்பட்டது.

இது, சீனியர் புஷ் மனிதகுலம் இதுவரைக் கண்டிராத அளவில் இராக்கில் குழந்தைகளை மொத்தப் படுகொலை செய்ததைப் போலவும், ஜீனியர் புஷ், ஒரு ஏஜென்டின் ஆட்சியை அகற்றுவதற்காகவும் இராக்கிலிருந்து எண்ணெயைச் சுரண்டவும் தனது கைப்பாவையை ஆட்சியலமர்த்துவதற்காகவும் இராக்கிலும் மற்ற பகுதிகளிலும் பல மில்லியன் பவுண்டு கணக்கான குண்டுகளை பல மில்லியன் குழந்தைகள் மீது வீசியதையும் பொருள்படுத்துகிறது.

எனவே அவர்களின் மாபாதகத் தவறுகளுக்கான பதில், பெரிய ஒளிவட்டத்தையும் இப்படிப்பட்ட பிம்பங்களையும் கொண்டவர்கள் மீது செப்- 11 ஆக வந்தது. தனது சரணாலயத்தை ஒருவன் காக்க முற்பட்டதற்காக இதில் குற்றம் சொல்லலாமா?

தனது ஆக்கிரமிப்பாளனை தக்க வழிமுறைகளில் தண்டித்து தன்னைத் தற்காத்துக் கொள்வது ஆட்சேபிக்கத்தக்க பயங்கரவாதமா? அப்படித்தான் என்றால் எமக்கு வேறு வழியில்லை.

முடிவாக ஒன்றைச் சொல்கிறேன். உங்களின் பாதுகாப்பு புஷ்ஷின் கையிலோ ஜான் கெர்ரியின் கையிலோ அல்கொய்தாவின் கையிலோ இல்லை. அது உங்கள் கையில் தான் இருக்கிறது. எமது பாதுகாப்போடு விளையாடாத எந்த அரசும் தானாகவே அதன் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்கிறது.

அல்லாவே பாதுகாவலன்.. உதவியாளன்.. உங்களுக்குப் பாதுகாவலனோ உதவியாளனோ இல்லை. இந்த வழிகாட்டலை பின்பற்றுவோருக்கே பாதுகாப்பு.”

– ஓசாமா, Aljazeera.net (online publication), Doha, Qatar, October 30, 2004

இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல், நாயகன் விஸ்வநாதன் (எ) கமலைவிட, ஒசாமா பாத்திரத்துக்கும் ஒமர் பாத்திரத்துக்கும் தான் மிகப் பொருத்தம்.

“யாரென்று தெரிகின்றதா

இவன் யாரென்று தெரிகின்றதா

இவன் யாருக்கும் அடிமையில்லை

யாருக்கும் அரசனில்லை’

ஊரைக்காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்

சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்

பூமியைத் தாங்க வரம் கேட்கின்றோம்

புயலை சுவாசிக்க வரம் கேட்கின்றோம்

போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை

போர்தான் எங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது

நீதி காணாமல் போர்கள் ஓயாது..”

கருத்துச் சுதந்திரம் பாகம் – கடைசி.

கமலின் விஸ்வரூபம் உலக அர்த்தத்தில் அமெரிக்க பயங்கரவாதத்திற்கு அடியாள் வேலை செய்கிறது. இந்திய அர்த்ததில் வளர்ந்துவரும் இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு கொம்பு சீவுகிறது. தமிழ்நாட்டு அர்த்தத்தில் மதுரையையும் கோவையையும் குறிவைக்கச் சொல்கிறது.

கமல் தனது திரைப்படம் வெற்றியடைவதை ஒரு வியாபாரியின் துல்லியத்துடன் திட்டமிடுகிறார். இந்தியளவில் முஸ்லீம் வெறுப்புக்கும் அமெரிக்க மோகத்திற்கும் ஒரு சந்தை வாய்ப்பு இருப்பதை உள்ளுணர்வாக அறிந்து வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து திரைப்படமாக்கி வருகிறார். அதற்காக எந்த நியாயத்தையும் குழிதோண்டிப் புதைக்கவும் தயாராக இருக்கிறார். ஒரு வகை பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்.

ஆஸ்கர் விருது வாங்குவது அவருக்கு வாழ்வின் லட்சியமாக இருக்கிறது. சென்ற முறை “ஹர்ட் லாக்கர்” என்ற திரைப்படம் ஆஸ்கர் விருது வாங்கியது. ஈராக் போரை நியாயப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அது. கமல் சார் அந்தப் போட்டியில் இறங்கிவிட்டார். கொஞ்சம் மாற்றி அமெரிக்காவின் ஆப்கன் போரை நியாயப்படுத்தி எடுத்தாலாவது கொடுக்க மாட்டார்களா என்ற ஆசைதான். ஆசை வெட்கம் மட்டுமல்ல, உண்மையும் அறியாது போலும். மனிதப் பிணங்களின் மீது டாலர்கள் புரள்வதைப் பார்த்து அதன் விளம்பர வியாபாரத்தில் இறங்கிவிட்டார். அது அவருக்கு சாகச வெற்றியாகத் தெரிகிறது. நமக்கு அது சவப்பெட்டி வியாபாராமாகத் தெரிகிறது.

“தீயை, பெருந்தீ கொண்டு அணைக்காதே

காயத்தை ரத்தத்தால் கழுவாதே” – ஜலாலுதீன் ரூபி.

“யாரென்று தெரிகின்றதா

இவர் யாரென்று தெரிகின்றதா

எந்த ரூபம் எடுப்பான்

எவருக்குத் தெரியும்

சொந்த ரூபம் மாற்றி மாற்றி

எடுப்பான் விஸ்வரூபம்.” நன்றி – வைரமுத்துவுக்கு

– தங்கப்பாண்டியன், மதுரை (7708 543 572, vikshmi@gmail.com)

நாம் தமிழர் கட்சி ஆவணம் – ஒரு பார்வை


ஏறத்தாழ 120 பக்கங்களைக் கொண்ட தங்கள் கொள்கை, செயல்திட்டம், விதிமுறைகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றை, நாம் தமிழர் கட்சி அண்மையில் வெளியிட்டுள்ளது.

“நாங்கள் அரசியல்வாதிகளல்லர், புரட்சியாளர்கள்” என்ற அட்டைப்பட அறிவிப்பும், “பல அமர்வுகள், ஆன்றோர் அவையினரோடு கலந்தாய்வு செய்ததன் விளைவே இந்த ஆவணம்” என்னும் முன்னுரைக் குறிப்பும், நம்மை ஒருவிதமான அச்சத்தோடுதான் நூலுக்குள் நுழைய வைக்கின்றன; ‘அடேயப்பா, விரைவில் புரட்சி வரப்போகிறது’ என எண்ணத் தூண்டுகின்றன.

அக்கட்சியின் கொள்கை ஆவணம், என் போன்ற திராவிட இயக்க உணர்வாளர்களுக்கு உடன்பாடற்றதாக உள்ளது என்பதை நான் குறையாகக் கூற முடியாது. எல்லோரும் ஒரே கருத்தில் ஒன்றுபட வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. கருத்து வேறுபடவும், வேறுபடும் இடங்களை ஓங்கி ஒலிக்கவும் எல்லோருக்கும் உரிமை உண்டு.

ஆனால், ஆவணம் என்பது ஒரு பொதுக்கட்டுரை போல் அமைந்துவிடக் கூடாது. கட்டுரையின் தன்மை வேறு, ஆவணத்தின் அமைப்பு வேறு. செய்திப் பிழைகள் இல்லாமலும், சொல்லப்படும் செய்திகளுக்கு உரிய சான்றுகளை அடிக்குறிப்புகளாகக் காட்டியும் ஆவணம் தயாரிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. ஆனால் அவ்விரு தேவைகளும் இந்த ஆவணத்தில் அறவே பின்பற்றப்படவில்லை.

இரண்டாவதாக ஆன்றோர் அவையினரோடு பலமுறை அமர்ந்து கலந்தாய்வு செய்து எழுதப்பட்ட ஆவணத்தில் இத்தனை மொழிப் பிழைகள் (ஒற்றுப் பிழை, தொடர்ப் பிழை, ஒருமை பன்மைப் பிழை) இருத்தல் கூடாது. அவற்றைக் கூட அச்சுப் பிழைகள் எனக் கூறி விட்டுவிடலாம். ‘முழுமையான தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க விரும்பும் கட்சி’ என்பதால், மொழிநடை பற்றியும் கூற வேண்டியதாயிற்று.

மூன்றாவதாக, ஆவணத்தின் பல இடங்கள் தன்முரண் (சுயமுரண்) என்னும் நிலையைக் கொண்டுள்ளன.

இவை பற்றிய என் பார்வையை வெளியிடுவதற்கு முன், ஆவணத்தின் உயிர்நாடி எங்குள்ளது என்று பார்த்திட வேண்டும்.

சமூக, அரசியல் தளங்களில் தீர்க்கப்பட வேண்டிய முரண்கள் குறித்து ஆவணம் பேசுகின்றது. முதலில் தீர்க்கப்பட வேண்டிய முரண், இரு பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி, தமிழ்த் தேசிய இனத்திற்கும், இந்திய தேசிய இனத்திற்குமான முரணையும், இரண்டாவது பகுதி தமிழ்த் தேசிய இனத்திற்கும், திராவிட தேசிய இனத்திற்குமான முரணையும் சுட்டி நிற்கின்றன.

இவ்விரு முரண்களே, முதலில் வேரரறுக்கப்பட வேண்டியவை என்று நாம் தமிழர் கட்சி கருதுகின்றது.

ஏழாவது முரண்பாடாக, தீண்டாமை உள்ளிட்ட சாதிய முரண்பாட்டையும், எட்டாவது முரண்பாடாக ஆண் ஆளுமை, பெண்ணடிமை முரண்பாட்டையும் ஆவணம் சுட்டுகிறது. ஆனால், 7, 8 ஆம் முரண்பாடுகளை ஆவணம் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. “7, 8 ஆம் முரண்பாடுகள் மேற்கட்டுமானம் பற்றியதாகக் கருதப்படும் முரண்பாடுகள்” என்று எளிமையாக வரையறுத்து விடுகிறது.

வர்க்க வேறுபாடே அடித்தள முரண்பாடு என்றும், சாதி ஏற்றத்தாழ்வுகள் மேற்கட்டுமானத்தைச் சேர்ந்தவை என்றும் முன்பு உறுதிபடக் கூறிய பொதுவுடைமைக் கட்சிகளே, இன்று தங்கள் கோட்பாட்டினை மறுஆய்வு செய்து வருகின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சியோ, அதனை மிக எளிதாக மேற்கட்டுமானச் சிக்கல் என்று கூறிவிட்டது.

அதுமட்டுமில்லாமல், தங்கள் உரிமைகளுக்காக ஒடுக்கப்பட்ட சாதியினர் வெகுண்டு எழுந்து போராடி, அதனால் தமிழ்ச் சாதிகள் (அதாவது ஒடுக்கும் சாதியும், ஒடுக்கப்படும் சாதியும்) பிளவுபடும் நிலை ஏற்படுவதையும் நாம் தமிழர் கட்சி விரும்பவில்லையாம். “தமிழினம் பிளவுபடும் எந்தப் போக்கையும் கட்சி ஏற்காது” என்று ஆவணம் திட்டவட்டமாகக் கூறுகின்றது.

ஆக, சாதியின் பெயரால் தமிழனே தமிழனை ஒடுக்கினால், அதைப் பெரிதுபடுத்தாமல், அதற்காகத் தமிழினம் பிளவுபடாமல், ‘நாம் தமிழர்’ என்று ஆண்டான் – அடிமை நிலையிலேயே ஒற்றுமையாக இருந்துவிட வேண்டும் என்பதே ஆவணம் மறைமுகமாக எடுத்துரைக்கும் தத்துவம்.

ஊர், சேரி என வாழ்விடங்கள் இரண்டு இருக்கலாம். இறந்தால் புதைக்கச் சுடுகாடுகள் இரண்டு இருக்கலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கக் குவளைகள் இரண்டு இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். அவையெல்லாம் மேற்கட்டுமான முரண்பாடுகள்தாம். தமிழரா, திராவிடரா எது சரி என்பதே முதன்மையான அடித்தள முரண்பாடு. அதைத்தான் முதலில் தீர்க்க வேண்டும் என்கிறது, முழுமையான தமிழ்த் தேசியம் பேசும் கட்சி.

இதிலே இன்னொரு வேடிக்கையும் உள்ளது. “திராவிடம் என்பது கலப்புக் கூட்டு இனத்தை அடையாளப்படுத்துமேயன்றி, தனிப்பட்ட ஒரு தேசிய இனத்தைக் குறிக்காது” என்னும் வரி, ஆவணத்தின் 9வது பக்கத்தில் காணப்படுகின்றது.

9ஆம் பக்கம் – திராவிடம் தனித் தேசிய இனமே இல்லை என்கிறது. 37வது பக்கமோ, தமிழ்த் தேசிய இனத்திற்கும், திராவிட தேசிய இனத்திற்குமிடையில் முரண்பாடு உள்ளதாகக் கூறுகின்றது. இல்லாத தேசிய இனத்தோடு எப்படி முரண்பாடு கொள்ள முடியும் என்னும் ரகசியத்தை ஆவணம் எங்கும் தேடியும் காண முடியவில்லை.

இன்னொரு முதன்மையான முரண்பாடு, இந்தியத் தேசியத்துடனான முரண்பாடு என்கிறது. தமிழ்த் தேசிய இனத்தை அடிமை இனமாக ஆக்கி இந்திய தேசியம் வைத்துள்ளதாகக் கூறுகிறது. அடிமை விலங்கை அறுக்க, நாம் தமிழர் கட்சி தரும் செயல்திட்டம் 101ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

“இந்திய அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகியனவற்றில் உண்மையான நம்பிக்கை கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி வலிமைப்படுத்தக் கட்சி உறுதி ஏற்கிறது” – இதுதான் அடிமைத்தளை அறுக்கும் திட்டம். முழுமையான தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்பதை, இதைவிடக் ‘கூச்ச நாச்சமில்லாமல், இனி எந்தக் கட்சியாலும் வெளியிட்டுவிட முடியாது.

அடுத்து எந்தச் சான்றும் இல்லாமல், பல செய்திகளை ஆவணம் அள்ளித் தெளிக்கிறது.

“அண்ணல் தங்கோ முயற்சியினால் முகிழ்த்த தமிழர் கழகத்தை முறியடித்துத் திராவிடர் கழகத்தை நிறுவினர்” (ப.13)

“இந்து மதத்திற்கு மாற்றாகத் தமிழியத்தை முன்னிறுத்தாமல், திராவிடம் இந்துமதச் சீர்திருத்தம் பேசும்” (பக்.26)

“முழு இறையாண்மையுள்ள நிகர்மைத் தமிழ்த் தேசக் குடியரசைக் குறிக்கோளாகக் கொண்டு, தமிழரசுக் கழகத்தை (ம.பொ.சி.) நிறுவினார்” (பக்.14)

– இப்படி ஏராளமான உண்மைத் திரிபுகள்.

தமிழ்நாடு கோருவதாகத் தொடங்கி, சமஷ்டி ஆட்சிதான் கேட்கிறோம் என்று மாறி, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்புதான் சமஷ்டி கேட்டோம், இப்போது நிலைமை மாறிவிட்டது, பிரிந்து வாழும் உரிமையை வற்புறுத்தவில்லை என்ற நிலைக்குத் தமிழரசுக் கழகம் வந்து சேர்ந்தது. (சான்று – ‘ம.பொ.சி. – எனது போராட்டம்’ – இரண்டாம் பாகம்- பக்.414)

மேலும், “சுதந்திரத் தமிழ்க் குடியரசு தேவையென்று என் ஆயுளில் எங்குமே நான் பேசியது கிடையாது” என்று ‘இந்து’ ஏட்டிற்கு ம.பொ.சி. அளித்த பேட்டியையும் எஸ்.வி.ஆர். தன் நூலில் (‘சுயமரியாதை சமதர்மம்’ – பக்.727) பதிவு செய்துள்ளார்.

இத்தனை உண்மைகளும் ஆவணத்தில் மறைக்கப்பட்டுள்ளன. ம.பொ.சி. தனித் தமிழ்நாடு கேட்டது போலவும், திராவிட இயக்கம் இரண்டகம் செய்துவிட்டது போலவும் புனைந்து எழுதப்பட்டுள்ளது.

உண்மை அல்லாதனவற்றைப் பேசுவது, நாம் தமிழர் மேடைகளிலும் நடந்துள்ளதை நாடு அறியும்.

25.12.2010 அன்று, சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் (http://www.youtube.com/watch?v=BVot5rzq810&feature=youtu.be&t=5m55s) சீமான் ஒரு நிகழ்ச்சியைக் கூறினார். “எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். பெரியாரை சக்கர நாற்காலியில் அழைத்து வருகிறார்களாம். தந்தை பெரியார் மேடையிலேயே இருக்கும்போதே, தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., எனக்குத் தலைவர்கள் இருவர் – ஒருவர் கலைவாணர், இன்னொருவர் அறிஞர் அண்ணா என்று கூறினாராம். பெரியாரைப் பற்றிச் சொல்லவில்லையே என்று கூட்டம் கொந்தளிக்க, அந்த இரு தலைவர்களையும் உருவாக்கிய தலைவரே அய்யா பெரியார்தான்’ என்றாராம். கூட்டம் ஆர்ப்பரித்துக் கைதட்டியதாம்.”

1977 ஆம் ஆண்டு முதலமைச்சரான எம்.ஜி.ஆர். 73 ஆம் ஆண்டின் இறுதியிலேயே இறந்துபோய் விட்ட அய்யா பெரியாரை எப்படிச் சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்திருக்க முடியும்? எவ்வளவு பெரிய வரலாற்றுப் புரட்டு!

இப்படித்தான் ஆவணமும், வரலாற்றைப் பல இடங்களில் புரட்டுகிறது.

பிறகு, மிகப் புத்திசாலித்தனமாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு, மனுவியம், மனுவாளர்கள் போன்ற சொற்களை எல்லாம் பயன்படுத்தி உள்ளனர். கடைசியில் ‘கலைச்சொல் விளக்கம்’ என்னும் உச்சகட்ட நகைச்சுவையும் இடம்பெற்றுள்ளது.

ஆவணத்தின் 8 ஆம் பக்கத்தில், மனுவாளர்கள் என்னும் சொல்லுக்கு அருகில் அடைப்புக்குறிக்குள் ‘ஆரியப் பார்ப்பனர்’ என எழுதப்பட்டுள்ளது. ஆவணம் முழுவதும், மனுவியம் எதிர்க்கப்பட வேண்டும், மனுவாளர்கள் ஆதிக்கம் கூடாது என்றெல்லாம் குறிப்புகள் உள்ளன.

117 ஆம் பக்கம் தொடங்கும் ‘கலைச்சொல் விளக்க’த்திற்குப் போனால், ஆரியன் என்றால் சீரியன், உயர்ந்தவன் என்றும், பார்ப்பான் என்றால் ஆய்வாளன், இளைஞன் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இங்குதான் நமக்குத் தலை சுற்றுகிறது.

மனுவாளர் என்றால் ஆரியப் பார்ப்பனர். ஆரியப் பார்ப்பனர் என்றால் சீரிய ஆய்வாளர் அல்லது உயர்ந்த இளைஞர். சீரிய ஆய்வாளரையும், உயர்ந்த இளைஞரையும் எதிர்க்க வேண்டும் என்று ஆவணம் சொல்கிறது, ஏன்?

இன்னொரு கலைச்சொல் விளக்கம், பிராமணன் என்றால் பேரமணன் என்கிறது.

‘பல அமர்வுகள், ஆன்றோர் அவையினரோடு கலந்தாய்வு செய்து’ இதனைக் கண்டுபிடித்திருப்பார்கள் போலும்! நாம் அறிந்தவரை, அமணர்கள் என்போர் சமணத்தின் ஒரு பிரிவினரே ஆவர். அவர்கள் பேரமணர்கள் ஆகி, பிராமணர்கள் ஆகி விடுவார்கள் போலிருக்கிறது.

சரி போகட்டும், திராவிடக் கட்சிகளைப் பற்றி இன்னொரு கடுமையான விமர்சனம் ஆவணத்தில் உள்ளது. இலவய அரிசி, மின் விசிறி, மின்கலக்கி, மாவாட்டி எனப் பல இலவயங்களை வழங்கி, தமிழர்களிடம் ஒருவிதமான மனநோயை உண்டாக்கித் தமிழர்களைத் ‘துய்ப்புப் பண்புள்ள வெறும் விலங்குகளாகவே’ திராவிடக் கட்சிகள் வைத்துள்ளனவாம். (பக். 26-27)

இல்லாத ஏழை, எளிய மக்களைத் ‘துய்ப்புப் பண்புள்ள வெறும் விலங்குகள்’ என விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சி, சென்ற தேர்தலில், அ.தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் இத்தனை இலவயங்களையும் தருவதாக அறிவித்த பின்னர்தானே, அக்கட்சிக்கு ஆதரவாக வாக்குக் கேட்டது? என்ன காரணம்? தமிழர்கள் வெறும் விலங்குகளாகவே என்றும் வாழவேண்டும் என்பதற்காகவா?

சரி, தேர்தலில் நிற்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன? ஆவணத்தைப் புரட்டுவோம்:

“ஆட்சி இன்பக் காட்சிகளைக் கனவிலும் கருதாது…” (பக்.20)

“கட்சி பதிவு செய்த நாளிலிருந்து, 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் கட்சி போட்டியிடும்” (பக்.102)

இவ்வளவு ‘தெளிவான’ குறிக்கோள்களையும், செயல்திட்டங்களையும் கொண்டுள்ள நாம் தமிழர் கட்சியில் இணைவதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. அதற்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

‘ஆண், பெண், திருநங்கையர் ஆகிய முப்பாலினத்தவரை மட்டும்’ சேர்த்துக் கொள்வார்களாம். (நான்காவது பாலினம் வேறு உள்ளதா?)

இன்சொல் பேசவேண்டுமாம். எந்நேரமும் மக்கள் தொண்டில் ஈடுபட வேண்டுமாம். சுவருக்கு வெள்ளையடிக்க வரக் கூடாதாம். வீட்டையே இடித்து மறுபடியும் கட்டத் துணிய வேண்டுமாம்.

எல்லாம் சரி, உறுப்பினர் நடத்தை விதிகளில் நான்காவதாக ஒன்று இடம்பெற்றுள்ளது. அதைப் படித்தபோது உண்மையிலேயே நெஞ்சம் ஆனந்தக் கூத்தாடியது. கட்சி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று தோன்றியது. இதோ, அந்த நான்காவது விதி,

“(உறுப்பினர்கள் எவரும்) மதுவகைகளையும், வெறியூட்டுப் (போதை) பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது” (பக்.106)

பழைய நட்பு உரிமையில், ‘செந்தமிழன்’ சீமானைப் பார்த்து இப்படிச் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது,

“அடடா, உடம்பு சிலிர்க்குதடா, தம்பி!”

இன்றைய அரசியலில் விஸ்வரூபம்


தமிழக திரையுலகில் கமலஹாசன் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாதது. கடின உழைப்பு, திரையுலகின் தலைவாயிலில் நின்று கொண்டு, புதிதாகப் பிறப்பெடுக்கும் அனைத்தையும் தானே பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், என்று இவருடைய தனித்த ஆளுமையை, பட்டியலிட்டு சொல்ல முடியும். இழப்புகளைப் பற்றி கவலை கொள்ளாமல், படைப்பின் புதிய பரிமாணங்களை உருவாக்கிக் காட்டியவர் என்ற வகையில், எளிதில் மறந்துவிடக் கூடியவர் அல்லர் கமல். விஸ்வரூபம் இவரது அண்மைகால திரைப்படைப்பு. அது பிரச்சனைகளில் சிக்கிக்கொண்ட போது, வருத்தமுற்ற மனம் இப்பொழுது தடை நீங்கித் திரைக்கு வந்த போது, பெரிதும் மகிழ்ச்சி அடைகிறது.

கமலஹாசனின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிடுகிறது. வழக்கமாக ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சென்று கொண்டிருக்கும் கதைப் பாதையை மாற்றுவழி அமைத்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் இவரது பாணியால், புதிய படங்களில் இந்த எதிர்பார்ப்புகள் கூடுதலாகி விடுகின்றன. இந்த வகையில் 90 கோடி செலவில் உருவாக்கப்பட்ட விஸ்வரூபம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சின்னத்திரைகளில் திடீர் திடீர் என்று தோன்றி மறையும், விளம்பரங்கள் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்கிவிடுகிறது. விளம்பரத்திற்கான செலவுகளும் கூடுலானது தான் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

கமலஹாசன் ஒரு மாபெரும் கலைஞன் என்பதைப் போலவே, அவருடைய திரைப் படைப்புகளும் மாபெரும் விவாதத்தை உருவாக்கிவிடுகின்றன. இது எவ்வாறு நிகழ்கிறது என்பதை புரிந்து, உணர்ந்து கொள்வதில் சிரமங்கள் இருக்கின்றன. இதற்கான காரணங்களை இன்னமும் நம்மால் ஆராய்ந்து தெரிந்து கொள்ள முடியவில்லை. ஹேராம், விருமாண்டி, ஆளவந்தான், உன்னைப்போல் ஒருவன் என்று எல்லாத் திரைப்படங்களும், ஏதாவது ஒருவிதத்தில் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டன. இதற்கு கலைஞனுக்கே உரிய இவருடைய அப்பாவித்தனமான எதார்த்த இயல்புகள் காரணமா? படைப்பாளிகளுக்குரிய, தான் என்ற ஞானச்செருக்கு காரணமா? இந்திய தேசியத்தைப் பற்றியும், இந்திய ஒற்றுமையின் இலக்குகள் பற்றியும் இவர் உணர்ந்து கொண்ட புரிந்துணர்வு காரணமா? என்பதை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டு விடுகிறது.

திரைப்படைப்பாளிகள் இந்திய அளவிலும், தமிழக அளவிலும், விவாதங்களில் சிக்கியிருப்பது புதிதானது அல்ல. கௌதம் கோஷ் வங்கத் திரைப்பட இயக்கத்தின் புகழ்மிக்கவர். இவர் அந்தர் ஜாலி யாத்ரா என்னும் படத்தை இயக்கினார். உள்முகப் பயணம் என்பது இந்த திரைப்படத்தின் பெயர். உடன் கட்டை ஏறுதலில், பார்ப்பன சனாதன தர்மங்களில் வளர்க்கப்பட்ட பெண்ணொருத்தி, பிணம் எரிக்கும் ஆடவன் ஒருவனுடன் சேர்ந்துவிடும் எதார்த்தையும், வாழ்க்கையின் அழகையும் காட்சிப்படுத்துகிறார். திரைப்படத்தின் கருவும், காட்சி அமைவும் நம்மை பெரிதும் பாதித்துவிடுகின்றன.

இது எத்தகைய எதிர்ப்பையும், விவாதத்தையும் படம் வெளிவந்த காலத்தில் உருவாக்கியிருக்கும். சத்யஜித்ரே, சியாம் பனகல், ரித்விக் கட்டாக் போன்ற மாபெரும் படைப்பாளிகள் இத்தகையப் பிரச்சனைகள் எத்தனையோ எதிர் கொண்டிருக்கிறார்கள். எல்லாமும் சமூக ஏற்றதாழ்வுகளை தீவிரமாக கவனப்படுத்தும் கருத்து ரீதியானப் போராட்டத்தை உள்ளடக்கியவை. காலங்காலமாக நிகழ்ந்து வரும் இந்தக் சமூக கொடுமைகளை காட்சி அமைப்பின் மூலம் வீரியப்படுத்திக் காட்டினார்கள். சமூக மனிதனின் மனசாட்சி உறுத்தலால், ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமூக அசைவுகள் தோன்றின.

தமிழ் திரையுலகில் முதன் முதலில் மிகவும் கடுமையான எதிர்ப்பை சந்தித்தவர் இயக்குநர் சுப்ரமணியம் அவர்கள். இவர் 1939 ஆண்டில் இயக்கிய திரைப்படம் தான் தியாக பூமி. இப்பொழுது யோசித்துப் பார்த்தாலும், அந்த கதை அமைப்பு நம்மை மிகவும் அதிர்ச்சியுற வைத்துவிடுகிறது. பார்ப்பன‌ சமூகத்தின் பின்னணியில் அமைந்த திரைப்படம் அது. ஒரு இளம் விதவைப் பெண், தலித் இளைஞன் ஒருவனை மணமுடித்துக் கொள்கிறாள். தீவிரம் மிகுந்த பல்வேறு திருப்பங்களை திரைக்கதை கொண்டிருந்தது. இயக்குநர் சுப்பரமணியம் அவர்கள் பிறந்தது கும்பகோணத்தில். அங்குள்ள பார்ப்பன சங்கத்தினர் ஒன்று கூடி, சாதியிலிருந்து, இவரை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தார்கள். அன்றைய காலத்தில் இது இயக்குநருக்கு ஏற்பட்ட சமூக ரீதியான நெருக்கடியாகும். இதற்காக இவர் அஞ்சவில்லை. எதிர்த்துப் போராடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். ‘நான் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. என் கருத்தில் உறுதியுடன் இருக்கிறேன். இதற்காக எந்த இழப்பையும் சந்திக்கவும் தயாராகவும் இருக்கிறேன்’ என்று பகிரங்கமாக அறித்தார். இதைப் போலவே ‘என்னை சாதியிலிருந்து நீங்கள் ஒதுக்கி வைத்தால் உங்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. உங்களை ஒதுக்கி வைக்கிறேன்’ என்று அறிவித்தார். இவ்வாறான எத்தனையோ கருத்து ரீதியானப் போராட்டங்களை கடந்த காலத்தில் தமிழகம் சந்தித்துள்ளது.

எப்படி பார்த்தாலும், தமிழக, இந்திய அடிப்படை பிரச்சனைகளில் முக்கியமானதாகக் கருதப்படுபவை மதமோதல்களும், சாதிய மோதல்களும் தான். இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில் மதப்பிரச்சனையை பற்றி கமல் யோசித்திருப்பதில் தவறு இல்லை. இதற்கான கமலின் துணிச்சலை நாம் பாராட்டலாம். இந்திய நாடு சுதந்திரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது, எத்தனை படுகொலைகளை நாடு சந்தித்தது! கொலையுண்ட மனிதர்களின் உயிர்மூச்சு தேசத்தின் சமவெளி முழுவதும் ஆக்ரமித்து நின்றன அன்று. ஹேராம் படத்திலும் இதனை ஓரளவிற்கு காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல். இதிலும் விமர்சனங்கள் இருக்கலாம், அது வேறு பிரச்சனை.

இந்திய பாக்கிஸ்தான் பிரிவினை காலத்தில் பிறந்த படைப்பிலக்கியங்க‌ள் பலவற்றை தமிழக படைப்புலகம் வாசிப்பது இப்பொழுது அவசியமானதாகும். மாண்ட்டோ என்னும் புகழ் மிக்க படைப்பாளி ஒருவரின் பிரிவினை காலத்தின் எழுத்தைப் படிக்கும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிடைத்தது. தேசம் பிரிந்த போது இத்தகைய பிரச்சனைகளை நாடு சந்தித்த‌தா? இலக்கியத்தை இவ்வாறு கூட படைக்க முடியுமா, என்ற உணர்வை இந்த நூல் எனக்கு உருவாக்கியது. காலத்தின் குரூரத்தைப் புரிந்து கொள்ள, மண்ட்டேயின் எழுத்துகளில் ஒரு பகுதியை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதனை ராமனுஜம் தெளிந்த தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். புலம் என்னும் பதிப்பகம், நூலை பதிப்பித்துள்ளது.

பிழை சரி செய்யபட்டது என்னும் தலைப்பில் இதனை இவர் எழுதியிருக்கிறார். சொற் சித்திரம் என்னும் வடிவத்தில் மறைபொருளில் கூறும் யுத்தியில் இது அமைக்கப்பட்டுள்ளது. மூர்க்கம் கொண்ட கும்பலில் சிக்கிக் கொண்ட ஒருவனுக்கும், கும்பலுக்குமான உரையாடலாக இது அமைக்கிறது.

யார் நீ?

நீ யாரு?

ஹர் ஹர் மகாதேவ்

என்ன அத்தாட்சி இருக்கிறது.

அத்தாட்சி இருக்கிறது. என்னுடைய பெயர் தரம் சந்த்.

இது அத்தாட்சியே இல்லை.

சரி, வேதங்களிலிருந்து எதை வேண்டுமானாலும் என்னைக் கேளுங்கள்.

எங்களுக்கு வேதங்களில் எதுமே தெரியாது. ஆனாலும் எங்களுக்கு அத்தாட்சி வேண்டும்.

என்ன அத்தாட்சி வேண்டும்?

நீ அணிந்திருக்கும் பைஜாமா நாடாவை அவிழ்த்திவிடு

அவன் பைஜமா நாடாவை அவிழ்ப்பதற்குப் பதில், இறுக்கி கட்டுகிறான். இதனால் கும்பலில் பெரும் கோபக்குரல் எழுகிறது.

அவனைக் கொல்லுங்கள்! கொல்லுங்கள்!! என்னும் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

கொஞ்சம் பொறுங்கள். தயவு செய்து கொஞ்சம் பொறுங்கள். நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன். பகவான் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நான் உஙகள் சகோதரன்.

அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம்.

நான் வந்து கொண்டிருந்த பகுதி, விரோதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, இது ஒன்று தான் நான் செய்த பிழை. மற்ற அத்தாட்சிகளை வைத்துப் பாருங்கள், நான் உங்கள் சகோதரன் தான்.

அந்தப் பிழையை வெட்டி எறியுங்கள். கும்பல் வெறி கொண்டு கத்துகிறது.

அந்தப் பிழை வெட்டி எறியப்படுகிறது.

அன்றைய சமூகப் பதட்டத்தையும், அதனால் எழுப்பட்ட மத அரசியலின் முதுகுப்புறத்தையும் இந்தக் கதை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற காந்தியடிகளின் முழக்கத்தில் இந்த ஒற்றுமைக்கான பாதை உருவாக்கப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்னும் வழிகாட்டும் நெறி கூட இதன் காரணம் கருதியே உருவாக்கப்பட்டன. காந்தி காலத்தில் பிறந்த காங்கிரஸ் கொடியிலும், சுதந்திரத்திற்குப் பின்னர் அமைந்த தேசியக் கொடியிலும், கொடியின் நிறங்கள் மதஒற்றுமைக்கான குறியீடாக்கப்பட்டன. காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களுக்கான மத அடையாளத்தையும், அதன் ஒற்றுமையையையும் நாம் புறக்கணித்துவிட இயலாது. இந்த மத ஒற்றுமைக்காகத்தான் காந்தியடிகளும் தன்னுடைய இன்னுயிரை தியாகம் செய்தார்.

சென்ற நூற்றாண்டின், எண்பதுகளுக்குப் பின்னர் மதஒற்றுமை, ஆட்சி அதிகாரத்தின் சுயநலத்திற்காக பெரும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. பாபர் மசூதி தகர்க்கப்பட்டது. பம்பாயில் மதக்கலவரங்கள் தோற்றுவிக்கப்பட்டன. குஜராத் படுகொலைகள் நிகழ்ந்தன. இந்திய பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், இந்திய தாய், இரண்டாம் முறையாக தமது மக்கள் ஒற்றமையை இழந்து, மோதிக்கொள்வதைப் பார்த்து, தவிக்கத் தொடங்கிவிட்டாள். மரண ஓலங்கள், புலபெயர்வுகள், இடப்பெயர்வுகள் என்று, இந்தியா இரண்டாவது முறையாக மக்களில் ஒரு பகுதியை மீண்டும் அனாதையாக்கிக் கொண்டது.

முஸ்லீம் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இவர்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு இந்திய ஒற்றுமையை யாராலும் கட்டி எழுப்ப முடியாது. இந்திய முஸ்லீம் மக்கள் தாங்கள் தனித்துவிடப்பட்டதாக உணரத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் முழுசமூகத்தின் மீதும் பயங்கரவாத முத்திரைக் குத்தப்பட்டதாக கருதுகிறார்கள். சொந்த குடிமக்களின் மீதே குடியரசு சந்தேகக் கண்கொண்டு பார்த்தால் தாங்கள் என்ன செய்வது என்ற வேதனை அவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்து அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் இன்னமும் விசாரணையின்றி சிறைச்சாலையில் இருக்கிறார்கள். இந்திய சிறைகள் அனைத்திலும் முஸ்லீம் இளைஞர்கள் பயங்கரவாதிகள் என்ற பெயரில் அடைப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும், முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்படுகிறார்கள். பாக்கிஸ்தானுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்துகிறது. இதிலும் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால் பாக்கிஸ்தான் பயங்கரவாத செயல்பாட்டிற்காக இந்திய முஸ்லீம் மக்களுக்கு தண்டனை வழங்கலாமா? காவல்துறையாலும், ராணுவ உளவுத்துறைகளாலும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய இயலுவதில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும். இதற்கு இவர்களுக்கு மிகவும் சுலபமாகக் கிடைப்பவர்கள் அப்பாவி, ஏழை முஸ்லீம் இளைஞர்கள் தான்.

ஒருகாலத்தில் கம்யூனிஸ்டுகளை எதிரிகளாக அறிவித்துக் கொண்டது அமெரிக்க ஏகாதிபத்தியம். இன்றும் கம்யூனிஸ்டுகளை ஒழிப்பதில் ஏகாதிபத்திய ஆதிக்கச் சக்திகள் மிகுந்த கவனத்துடன் தான் செயல்படுகின்றன. கம்யூனிஸ்டுகளைப் போலவே, இன்று அவர்கள் மிகுந்த வெறுப்பைக் கொண்டிருப்பது முஸ்லீம் மக்களின் மீது தான். அமெரிக்காவில் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டது மட்டும் காரணம் இல்லை. உலகமயப் பொருளாதாரத்தில் பெட்ரோலிய எண்ணெய் ஆதிக்கத்தை தன் கையில் வைத்துக் கொள்வதற்கும் இது தேவைப்படுகிறது. உலக நாகரிகத் தொட்டில்களில் ஒன்றான டைகிரிஸ் யூப்ரட்டிஸ் நதிக் கரையில் அமைந்தது தான் ஈராக். இது அமெரிக்காவால், எவ்வாறு நிர்மூலமாக்கப்பட்டது என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

இவை எல்லாவற்றையும் மீறி ஒரு உண்மை நாம் அனைவரும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இது யாரும் அறிந்து விடாதவாறு மூடிமறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மூடுதிரை உருவாக்கி உண்மையை முற்றாக மறைப்பதற்கு இன்றைய ஆதிக்க ஊடகங்கங்கள் வெகுவாக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்தது பின்லேடனும், அதன் பின்னணியில் அமைந்த இயக்கமும் என்பது எத்தனை உண்மையானதோ அதைப்போலவோ பின்லேடனையும் அதன் பின்னணியில் அமைந்த இயக்கத்தையும் பெரும் பண உதவி செய்து வளர்த்தெடுத்தது அமெரிக்காவும், அதன் சிஐஏ உளவு நிறுவனமும் தான் என்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

அமெரிக்கா உலகில் பரப்பி வரும் பயங்கரவாத சுமையையையும் இந்திய முஸ்லீம்கள் சுமக்கிறார்கள். இந்தப் பின்னணியில் கலையும் இலக்கியமும், ‘சகோதரர்களே நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்’ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறான சூழல் இங்கு இல்லை. திரைப்படங்கள் மனிதாபிமானம் கொண்டு மக்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்திருக்க வேண்டும். மாற்றாக, படைப்புலகின் எதிர்மறைப் பார்வையில் இவர்கள் அந்நியப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இதனால் முஸ்லீம்கள் அமைதியற்றவர்களாகி விடுகிறார்கள்.

தமிழ் திரையுலகில் 1960 முதல் 1985 வரை முஸ்லீம் பாத்திரங்கள் பிறருக்கு உதவி செய்பவர்களாக, சமூக இணக்கம் கொண்டவர்களாக காட்டப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் காட்டப்படுகிறார்கள். இந்தப் போக்கு தமிழுக்கு எப்படி வந்தது? வடஇந்தியாவிலிருந்து வந்ததா? உலக ஆதிக்க அரசியலிலிருந்து வந்ததா? இவை எல்லாவற்றையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இந்தப் பின்னணியில் தான் கமலின் விஸ்வரூபம் பெரும் பிரச்சனைகளை சந்தித்தது. இதனை கமலுக்கும் தமிழக முஸ்லீம்களுக்கும் இடையில் அமைந்த பிரச்சனையாகப் பார்க்காமல், இன்றைய தமிழ் சினிமாவின் மீது முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள, மாறுபட்ட கருத்தின் அடையாளமாக புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய திரையுலகில் நிகழ்ந்து வரும் மாற்றங்களையும், படைப்பாளிகளின் இன்றைய நெருக்கடியையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். படைப்பு பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொள்கிறது. ஒருவிதத்தில் பார்த்தால், இது உலகமயத்தின் விளைவு என்பதை உணர்ந்து கொள்வது அவசியமானது. கலைஞன் மானுடத்தின் பொதுவுடமை. அவனது வாழ்வு தாழ்வு அனைத்தும் சமூகம் சார்ந்தது. முஸ்லீம் கூட்டமைப்பு மாறுபாடுகளை தெரிவித்ததும், மீண்டும் இணக்கம் கண்டதும் வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

கமல் மீது எனக்கு தனிப்பட்ட மதிப்பு இருந்த போதிலும் மனத்தின் அடி ஆழத்தில் ஒருவிதமான வேதனை தேங்கி நிற்கிறது. அதனை மனதில் போட்டு அழுத்தி வைக்காமல், வெளிப்படையாகவே வெளியிட விரும்புகிறேன். முள்ளிவாய்க்கால் படுகொலை இரண்டாம் உலகப்போருக்கு பின் நிகழ்ந்த மாபெரும் இன அழிப்பு. 2008 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் மக்கள் மீதான தாக்குதல் 2009 மே மாதம் 18 ஆம் தேதியோடு முடிவடைந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் என்பதை ஐக்கிய நாடுகள் சபையே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழ் மக்களும் இன்னமும் விடுபடவில்லை. இரண்டாம் உலக போரின் மாபெரும் மனித அவலங்களிலிருந்து தோன்றியது தான், ஐரோப்பாவின் புகழ்மிகுந்த இலக்கியங்கள், திரைப்படங்கள், உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளும். தாலிபான் பிரச்சனை பாதித்த அளவிற்கு கமலுக்கு ஏன் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை பாதிப்பைத் தரவில்லை என்பது மனதுக்குள் நீங்காத ஆதங்கமாகவே இருக்கிறது.

– சி.மகேந்திரன் ( thamarai_mahendran@yahoo.co.inஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )