மான உணர்ச்சி ஏழைகளுக்கு மட்டும்தான் சொந்தமோ?


தன்மகன் போரிலே புறமுதுகில் அம்பு தைத்து மாண்டு போனான் என்று கேள்விப்பட்டதும் ‘அந்த கோழைக்கு இந்த மார்புகளா பாலூட்டியது’ என்று சினம் கொண்டு தன் மார்புகளை அறுத்தெரிந்தாளாம் ஒரு புறநானூற்றுத் தாய். இலக்கியத்தில் பதிவான அந்த வீரத்தாயின் வரிசையில் உண்மையாகவே ஒரு தாய் இருக்கிறாள். நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டி என்ற கிராமத்தில் கூலி வேலைச் செய்து பிழைப்பை ஓட்டும் ஒரு பாவப்பட்ட கூலி ஏழை சந்திராதான் அந்த தாய். 45 வயதான இந்த தாய்க்கு 16 வயதில் ஒரு மகன்.

‘தன் மகன் ஒரு திருடன்’ என்று கேள்விப்பட்டவுடன் தூக்கு மாட்டிக்கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் அந்த உத்தமி. அந்தத் தாய் செய்த தவறு ஒன்றே ஒன்று தான். கூலி வேலை செய்து சம்பாதித்த அற்பத் தொகையில் தன் மகனை 11ஆம் வகுப்பு வரை படிக்க வைக்கத்தான் முடிந்தது. வயிறார அவனுக்கு இரண்டு வேளை சோறு போட முடியவில்லை. வாழ வேண்டிய வயதிலேயே தன் கணவனைப் பறிகொடுத்த அந்த அனாதைத் தாயால் உழைக்;க முடிந்தது அவ்வளவுதான்.
அவளது மகன் திருடியது வேறு எந்த அபூர்வமானப் பொருளையும் அல்ல. கேவலம் ஒத்த ரூபாய் புழுத்த அரிசி சோத்தைத்தான். சோத்தைத் திருடித் தின்ற இந்தக் கொடுமையை அமெரிக்கா நுழைந்து குதறிய சோமாலியாவில் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அவளுடைய 16 வயதுடைய மாணவன் இளவரசன், அடுத்த வீட்டில் சோத்தைத் திருடித் தின்னும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். என்னென்ன கற்பனைகளோடு அவனுடைய அப்பாவி பெற்றோர்கள் அவனுக்கு ‘இளவரசன்’ என்று பெயர் வைத்தார்களோ…. பாவம் சோத்துத் ‘தரித்திரம்’ அவனை விடாது விரட்டியது.

அவனுக்கு சொந்த பந்தங்கள் இருந்தும் அந்தப் பாலகனின் பசியால் வாடிய முகத்தைப் பார்த்தும் கூட ஒருவாய் சோறு போட யாரும் முன் வரவில்லை. அடுத்தவர் சாப்பிடும் போது தெரு நாய் பார்ப்பது போல வாயையும், கையையும் பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி, இறுதியாக முடிவெடுத்தான், திருடித்தின்றாவது பசியாற்றுவதென்று. ஒருநாள்…. இரண்டு நாள்… அடுத்த நாளென்று வெற்றியின் ஊடாக ‘திருட்டுத் தொழில்’ தொடர்ந்தது.

‘பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’- என்ற பழமொழி உண்மையாயிற்று. எச்சில் கையோடு கைது செய்தது சேந்தமங்கலம் போலீசு. சுற்றி வளைத்துப் பிடித்துத் தந்தது சோத்துக்கு சொந்தக்காரர் கூட அல்ல, அக்கம் பக்கத்து வீட்டு ‘அரிச்சந்திரர்கள்’ தான். வெறும் சோத்தைத் திருடினான் என்றால் வழக்கு போட முடியாது என்று கருதிக்கூட ‘நகையைத் திருடி விட்டான்’ என்று பிடித்துக் கொடுத்திருக்க அதிகம் வாய்ப்புள்ளது. தனது வயதையொத்த பணக்கார குலக் கொழுந்துகள் பள்ளிக்குச் செல்லும் சொகுசுக்காரைத்; திருட அவன் துணியவில்லை. விதவிதமான துணிமணிகளைக் கண்டு அதைத் திருடி மினுக்கிக்கொள்ளலாம் என்று அவன் எண்ணியதில்லை.

உணவுக்கு கையேந்த வேண்டுமா, வாளேந்த வேண்டுமா?
பல இளைஞர்கள் தமது காதல் ஜோடிகளுடன் கைகோர்த்துச் செல்வதைக்கண்டு தானும் அப்படி இருக்கலாமென்று அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை. உணவு விடுதிகளில் விதவிதமாக உண்பவர்களைப் பார்த்து வயிற்றொpச்சல் அடைந்ததில்லை. அதை ஈடுசெய்ய உமிழ்நீரைத்தான் விழுங்கிக் கொண்டான். இறுதியில் அவனால் சோத்தைத் தான் திருட முடிந்தது. எந்தப் பொருளைத் திருடுவது என்பதைத்கூட வர்க்கம் தானே தீர்மானிக்கிறது.

இந்தச் சமூக விரோத பெருங்குற்றத்திற்கு ‘யார் காரணம்?! அவனா… இல்லை அவனையும், அம்மாவையும் அனாதையாக விட்டு விட்டுச் செத்துப் போனாரே….அவனுடைய அப்பா, அவரா?! இல்லை, பச்சப்புள்ளையைப் பார்க்க வைத்துத் தின்றார்களே அவனுடைய சொந்த பந்தங்கள்.. அவர்களா?! இல்லை…’எப்படியாவது சாந்துச்சட்டி சுமந்து தன் மகனை காலேஜ் வரைக்கும் படிக்க வச்சா…. ஒரு நல்ல வேலை கெடச்சி, மகன் கஞ்சி குடிச்சி பொழச்சிக்குவான்’ என்று அந்தக் கனவிலேயே உடைந்து போன உடலோடும், வாழ்க்கையோடும் சித்தாள் வேலைக்குப் போய் 11-ஆம் வகுப்பு வரைப் படிக்க வைத்தாளே, அந்த மானமுள்ளத் தாயின் தவறா?!’ இப்படித்தானே நீங்களும் யோசிப்பீர்கள்?

நியாய விலைக் கடைகளில் கலைஞர் சிரிக்கிறார். “ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி”! மகிழ்ச்சி. அந்த ஒத்த ரூபாய் அரிசிகூட கிடைக்காமல் ஏன் அந்த ‘இளவரசன்’ சோத்தைத் திருடினான்? இதற்கு ‘நியாயமாக’ பதில் சொல்ல கலைஞரால் முடியுமா?! இல்லை… பூச்சியும், எலியும் தின்றால் கூட அந்த அரிசியை ஏழைகளுக்குத் தரமாட்டேனென்று அடம் பிடிக்கிறாரே… பிரதமர்… அவர் பதில் சொல்வாரா?! கலைஞர் வேண்டுமானால் ‘தம்பிக்கு கடிதம்’ எழுதி தப்பித்துக் கொள்ளலாம். இந்தக் கொடுமைக்கு அவரது குடும்பமே ஒன்று சேர்ந்தால் கூட பதில் சொல்ல முடியாது. ஒரு வேளை கடந்த நவம்பர் 17ஆம் தேதி தன் பேரன் துரை தயாநிதிக்கு நடந்த திருமணத்தில் ரேசன் அரிசி சோத்தை வேகவத்து விருந்து போட்டிருந்தால், இதற்கு பதில் சொல்லத் தகுதியிருந்திருக்கும் கலைஞருக்கு. ஆனால் ‘ஊருக்குத்தான் ஒத்த ரூபாய் அரிசி’!

சின்ன வயதிலேயே தகப்பனை எடுத்து விழுங்கிவிட்டு, வீட்டுக்காரர்கள் வந்து விடுவார்களோ என்ற பதற்றத்தில் கவளம், கவளமாக திருட்டுச் சோத்தை கண்ணில் நீர்வர விழுங்கி விட்டு, கடைசியில் ஒரே ஆதராவாக இருந்த தாயையும் எடுத்து விழுங்கி விட்டு, இப்போது சேலம் சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறான் இளவரசன்.
சட்டம் தன் கடமையைச் செய்கிறது. இருக்கட்டும், நல்லது.

சோறு திருடினான் என்பதைக்கூட அந்த தாயால் தாங்க முடியவில்லை. குற்ற உணர்ச்சி அழுத்த தன் உயிரை துறந்திருக்கிறாள். ஆனால் இந்த மான உணர்ச்சி ஏழைகளுக்கு மட்டும்தான் சொந்தமோ? ஸ்பெக்ட்ரம் ஊழலின் அளவு ஒத்தை ரூபா அரிச போன்றது அல்ல. ஒன்னே முக்கால் இலட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என்று கூட அந்த ஏழைகள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த பூஜியங்களை அறிந்தவர்களுக்கும், அபகரித்தவர்களுக்கும் மான உணர்ச்சி கிஞ்சித்தும் இல்லையா? கலைஞர் குடும்பம், டாட குடும்பம், மந்திரிகள், அதிகாரிகள், முதலாளிகள் எங்கும் யாராவது ஒருவர் கூட தற்கொலை செய்ய வில்லையே? சோறு திருடுவதுதான் மானக்குறைவா, இலட்சம் கோடிகளில் திருடினால் அது பெருமையா?

காமன்வெல்த் போட்டிக்கு ஏற்பாடு செய்ததில், கேவலம் மலம் துடைக்கும் பேப்பரில்கூட கமிஷன் வச்சிகாசு திருடினாரே காங்கிராஸ் கல்மாடி… அவருடைய வீட்டுப் பெண்கள் யாராவது ரோசத்தோடு தூக்கு மாட்டிக் கொண்டிருக்கலாமே…. ஏன் செய்யவில்லை? நம்ம நாட்டுல தேசபக்திக்கு மட்டும் குறைச்சலே இல்லை. நடிகர் அர்ஜுனையே விஞ்சிவிடுவார்கள். ‘வீரமரணம்’ அடைந்த கார்கில் வீரர்களின் விதவை மனைவிமார்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுத்ததில் தன்னுடைய மாமியார், மைத்துனி, மைத்துனர் ஆகியோருக்கும் ‘வீட்டு வசதி’ செய்து கொடுத்தாரே… மகாராஷ்டிரா முதல்வர் அசோக்சவான்… அவருடைய களவாணித்தனம் தெரிந்து அவருடைய வீட்டுப் பெண்களோ, ஆண்களோ இல்லை அவரோ ஏன் ஒருவர் கூட ஏன் தூக்கு மாட்டிக் கொள்ளத் துணிய வில்லை!!
இதற்கெல்லாம் மன்மோகனும், சிதம்பரமும் பதில் சொல்வார்களா? பதில் சொல்ல பிரதமருக்கு ஏது நேரம்! 10 ஆயிரம் கோடி செலவு செய்து அம்பானி கட்டியிருக்கிற ‘அன்டிலியா’ வீட்டுக்கு பால்காய்ச்சவே நேரம் போதவில்லை.

ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தன் பிள்ளைகளுக்கு நோகாமல் எடுத்துத் தந்தாரே மதவெறியன் கர்நாடகா முதல்வா; எடியூரப்பா… அவர் வீட்டில் யாராவது தேசப்பற்றோடு ஏன் தூக்கு மாட்டிக்கொள்ளவில்லை?!
தோல்வி மனப்பான்மையால் தற்கொலை செய்துக்கொள்வதில் எமக்கு உடன்பாடில்லை என்பது வேறு விசயம். ஆனால் அந்தத் தாயின் தன்மான உணர்ச்சி சுயமாpயாதையுள்ள அனைவரையும் தலைகுனிய வைக்கிறது. ஆனால் நாட்டையே திருடும், கூட்டிக் கொடுக்கும் திருடர்கள் தலை நிமிர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார்களே… அதைப் பார்த்து பொறுத்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் அவமானமில்லையா?!
முதலாளிகள் போடும் எச்சில் காசில் வாழும் இந்த மானங்கெட்ட அரசும், அதிகாரவர்க்கமும், அரசியல்வாதிகளும் இனிமேலும் நாட்டையும், நாட்டின் கௌரவத்தையும் காப்பாற்றுவார்கள் என்று உங்களால் நம்ப முடிகிறதா?! ஒன்றே ஒன்றுதான் இதற்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும். ஓன்று அவர்களாகவே தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும். அது நடக்கப் போவதில்லை. ஏனென்றால் எல்லாரும் சொரணை கெட்டவர்கள். நாம்தான் அவர்களை தூக்கிலேற்ற வேண்டும்
மானமுள்ள எம் உழைப்பாளி மக்களே உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள். வறுமைக்கும், தரித்திரத்திற்கும் காரணமானவர்களின் உயிரை எடுங்கள். இந்தத் தினவெடுத்த முதலாளித்துவத்திற்கு ஒரு உணவுக் கலகம் விடை சொல்லட்டும். அந்த உணவுக் கலகம் என்பது புரட்சிதான் என்பதற்கு முன்னோட்டமாக இருக்கட்டும்.
– சா.செல்வராசு

நீ சொன்னது தான் நடந்தது அம்மா …


பொறுப்பற்றவனாக
பிழைக்கத் தெரியாதவனாக
கோழையாக, கஷ்டம் தெரியாதவனாக
சம்பாதிக்கத் துப்பில்லாதவனாக
வீட்டுக்குப் பயனில்லாதவனாக,

போதையில் திரிபவனாக
தன்னிலை இழந்து தெருவில் கிடப்பவனாக
சோத்துக்குச் சிங்கி அடிக்கிறவனாக
போலீஸ் வீட்டுக்குத் தேடி வருகிற புள்ளியாக
பெண் பித்தனாக

சொத்தெல்லாம் வித்து வீதிக்கு வருபவனாக
ஏமாளியாக, ஏழையாக
எந்தச் சொந்தக்காரனும் சேர்த்துக் கொள்ளாதவனாக
ஒரு வேலைக்கும் லாயக்கில்லாதவனாக
வேலை பார்த்தும் கூலி பார்க்கத் தெரியாத மூடனாக

நான் ஆவேன் என்று
மற்றவர்கள் சொன்னதெல்லாம்
பொய்த்து
நீ சொன்னது தான் நடந்தது அம்மா.

– பாரதி கிருஷ்ணகுமார்

நாய் நக்கித்தான் குடிக்கும்…


உங்கள் புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். உங்களுக்கு குறிப்பிட்ட சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி அதிகம். ஆத்து நிறைய தண்ணி ஓடுனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்கிறார்களே அது உங்களைப் பொறுத்தவரை சரிதான்.

-பெயர் குறிப்பிடவில்லை.

ஆத்து நிறைய தண்ணி ஓடுனாலும் நாய் மட்டும்தான் நக்கி குடிக்கும்; சிங்கம் என்ன ‘சொம்புல‘ மொண்டா குடிக்கும்? அதுவும் நக்கித்தான் குடிக்கும்.

இதுபோன்ற பழமொழிகள் – தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கவே பயன்படுகிறது. ஆதிகாரத்திற்கு வந்த யாரோ ஒரு சிலர் செய்கிற தவறுகளை ஒட்டுமொத்தமாக அந்த சமூகத்தின் மீதே சுமத்தி, அவர்களை இழிவாக சுட்டிக் காட்ட ஆதிக்க ஜாதிக்காரர்களால் காழ்ப்புணர்ச்சியோடு பயன்படுத்தப்படுகிறது.

அதே தவறை ஆதிக்க ஜாதிக்காரர்கள் செய்யும்போது, அதை அவர்கள் சார்ந்த ஜாதியோடு தொடர்பு படுத்தி பார்ப்பதில்லை. இது தான்ஆதிக்க ஜாதி மனோபாவம்.

அதுமட்டுமல்லாமல், தனக்கு பயப்படுகிற விலங்குகளை மட்டமாகவும், தான் பயப்படுக்கிற விலங்குகளை வீரமாகவும் மதிப்பிடுகிற மனோபாவமும் இத்துடன் சேர்ந்து கொள்கிறது.

சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றை வீரத்திற்கு அடையாளமாக காட்டுகிறார்கள். ஆனால், அவைகள் வீரமான மிருகங்கள் அல்ல. சிங்கம், புலி, சிறுத்தை தன்னைவிட பலவீனமான ஆடு, மாடு, மான் போன்றவற்றை வேட்டையாடி தின்கிறது. இது எப்படி வீரமாகும்?

அவைகளை ஆதிக்கத்திற்கான குறியீடாக வேண்டுமானால் பயன்படுத்தலாம். எளிய ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள ராணுவத்தையும், அப்பாவி ஈராக் மக்கள் மீது படையெடுத்து அவர்களை கொன்ற அமெரிக்க ராணுவத்தையும் குறிப்பிடுவதற்கு சிங்கம், புலி, சிறுத்தை குறியீட்டை பயன்படுத்தலாம்.

தன்னைவிட பலமான கழுகோடு சண்டையிட்டு அதை விரட்டியடித்து, தன் குஞ்சுகளை காக்கிறதே கோழி, அதுதான் வீரம். அமெரிக்கா என்கிற ஆதிக்கக் கழுகை விரட்டியடித்து, வெற்றிக் கண்டு தன் நாட்டை பாதுகாத்த எளிய வியட்நாம் மக்களைப் போல்.

‘என்னங்க இது..? நம்ம கொழம்புல கொதிக்குது கோழி.. அதபோய் வீரம்னு சொல்றீங்க..!’ -என்று அலுத்துக்காதீங்க. நீங்க அலுத்துக்க மாட்டிங்க… நீங்கதான் சைவமாச்சே.

வே.மதிமாறன்

அய்யப்பனுக்குப் பெண் வாடையே ஆகாதாம்!


அடக்கி ஆள்வதற்கும், அடிமைப்படுத்துவதற்குமே உருவாக்கப்பட்ட கடவுள் எனும் சர்வாதிகாரக் கோட்பாட்டை, மனித சமூகம் தங்களுக்கான நெறியாகக் கொண்டாடத் தொடங்கியதிலிருந்துதான் – வெளிப்படையாக அரங்கேறின பல்வேறு அசிங்கங்கள். கடவுளும், கடவுளின் பெயரால் உருவாக்கப்பட்ட மதம் இரண்டு நிரந்தர இழுக்குகளை இந்தச் சமூகத்தின் மீது சுமத்தின. அழிக்க அழிக்க, வீறு கொண்டு எழுந்து நின்று அச்சுறுத்தும் அவை, ஜாதியும் பெண்ணடிமைத்தனம். சமூகத்தின் ஒரு பிரிவு மக்களைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்ததைப் போலவே அது ஒட்டுமொத்த பெண் சமூகத்தையே தீண்டாமைக்கும், வன்முறைக்கும் இரையாக்கியது. மதம், மனிதர்களுக்கான நெறியாக உருவாக்கப்படவில்லை. அது, மனிதர்களைக் கூறு போடவே பயன்படுகிறது. எளியோரை, வலியோர் சூறையாட மதம் அனுமதியளிக்கிறது.

பெண் உடலின் இயற்கையான வளர்ச்சியையும் மாற்றங்களையும், இந்து மதம் ‘தீட்டு’ என்கிறது. பெண்ணை பலவீன மானவளாகவும் பேதையாகவும் சித்தரிப்பதோடு, கடவுளின் அருகில் செல்லத் தகுதியற்றவளாக்குகிறது. ஆணை ஆளப் பிறந்தவனாகவும், பெண்ணை அடங்கிப்போக வேண்டியவளாகவும் நிர்பந்திக்கிறது. ஆண் தலைமையிலான குடும்ப அமைப்பை வலியுறுத்தி, கணவனைத் துதிக்கச் சொல்கிறது. தாலியை வேலியாக்கி, தனக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து வெளியேறும் / ஆண் சார்ந்து வாழ்வதைப் புறக்கணிக்கும் பெண்களை அது ‘வேசி’ என்கிறது. பார்ப்பன இந்து மதம், அதன் சட்டதிட்டமான மநு தர்மமே இன்றைய சமூகத்தின் அத்தனை பெண்ணடிமைத் தனங்களுக்கும் ஆணி வேர். அதை உணர்ந்தோமா நாம்? பகுத்தாய்ந்தோமா? அந்த ஆணிவேரைப் பிடுங்கி எறிவதற்குப் பதிலாக, அதற்கு நாள்தோறும் நீர் வார்த்தல்லவா செழிக்க வைத்திருக்கிறோம்!

ஆண்களை விடவும் பெண்கள், பக்தியிலும் கடவுள் நம்பிக்கையிலும் தீவிரமாக இருப்பதன் காரணம் என்ன? பெண் அப்படிப் பழக்கப்படுத்தப்படுகிறாள். உண்பதையும் உறங்குவதையும் போல, தொழுதல் அவளின் அன்றாடக் கடமையாக்கப்படுகிறது. பெண்களின் அணிகலன்களாகக் கருதப்படும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவற்றை மறுதலிக்கத் துணிகிறவர்கள், களங்கற்றவர்களாகிறார்கள். அதனாலேயே பெண் சிறு வயது முதலே அடக்கமானவளாகவும், கடவுளை வணங்குகின்றவளாகவும், அதன் மூலம் ‘ஆண்மை’க்கு அடங்கிப் போகின்றவளாகவும் வளர்க்கப்படுகிறாள். இந்த அடிமைத்தனக் கட்டமைப்பின் சிறு கல் ஆட்டம் கண்டாலும் சமூகமே கொதித்தெழுகிறது; ஆண்களோடு சேர்ந்து கொண்டு பெண்களும் அதற்கு ஆமோதிக்கின்ற நிலையே நிலவி வருகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம், எது அடிமைத்தனம் என்ற தெளிவு பெண்களிடம் இல்லாததுதான்.

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான (ஆண்) பக்த கோடிகள் ‘பாதயாத்திரை’ செல்கின்றனர். இங்கு பெண்களுக்கு அனுமதியில்லை. அதாவது பருவமடையாத பெண்களும், மாதவிலக்கு நின்ற முதியவர்களும் செல்லலாமாம். அதற்கான வயது வரம்பையும் கோயில் நிர்வாகமே நிர்ணயித்துள்ளது. சபரிமலை கோயிலுக்கு ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்தும், குறிப்பாக கிராமங்களிலிருந்தும் ஏராளமானோர் செல்கின்றனர். அது வரையிலும் ஊரில் ரவுடியாகவும் பொறுக்கியாகவும் திரிந்த ஆண்கூட, திடீரென மாலை போட்டு ‘சாமி’யானவுடன் அவனுக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்க்க வேண்டுமே!

முருகனுக்கும், அய்யப்பனுக்கும் மாலை போடும் கார்த்திகையும் மார்கழியும், பெண்களுக்கு சபிக்கப்பட்ட மாதங்கள். ஏற்கனவே இருக்கும் குடும்பப் பொறுப்புகள் மற்றும் வேலைப்பளுவோடு, இந்த ‘சாமி’களுக்காக இன்னும் சீக்கிரம் எழுந்து பணிவிடைகளைத் தொடங்க வேண்டும். இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையென்றோ, விருப்பமில்லையென்றோ எந்தப் பெண்ணும் சொல்லிவிட முடியாது. ஆண் நிலை அப்படியில்லை. தனக்கான கடவுளை வணங்கும் உரிமை, மாற்றிக்கொள்ளும் உரிமை, மறுதலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அதே நேரத்தில் ஆண் சார்ந்த வழிபாடுகளைச் செய்ய மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அய்யப்பனுக்குப் பெண் வாடையே ஆகாதாம்! அதனால் பெண்களுக்கு அனுமதியில்லையாம். ஆனால், இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் கன்னட நடிகை ஜெயமாலா, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது அவருடைய இளம் வயதில், அய்யப்பன் கோயிலுக்குள் சென்றது மட்டுமின்றி, பாதங்களையும் தொட்டு வணங்கியதாகப் பேட்டியளிக்கத் தொடங்கிய குழப்பம் மாதக்கணக்கில் நீடிக்கிறது. ‘பெண்களைத் தன் கோயிலுக்குள் வரவிடாதது பற்றி அய்யப்பன் எதிர்ப்பு காட்டவில்லையே. இதிலிருந்தே தெயவில்லையா பெண் வாடை ஆகாதென்று!’ என வாதிடுவோர் உண்டு. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் அய்யப்பனைத் தொட்டு வணங்கியதாக ஜெயமாலா இன்று சொன்னதைத் தொடர்ந்து, இன்னும் சில நடிகைகள் தாங்களும் சென்றதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் அய்யப்பன் எதிர்ப்புக் காட்டவில்லையே! பதினெட்டு ஆண்டுகளாக செல்வச் செழிப்போடு மகிழ்ச்சியாகத் தானே வாழ்கிறார் ஜெயமாலா! தெய்வக்குத்தம் என்றால், ரத்தம் கக்கி செத்துப்போயிருக்க வேண்டுமே?!

அய்யப்பனை விட்டுவிடுவோம். ஆண்களுக்கு என்ன பிரச்சனை என்றால், தங்களின் சர்வாதிகார வட்டத்துக்குள் ஒரு பெண் நுழைந்தால் எல்லாம் கண்காணிக்கப்படும், கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற பதட்டம்! அதனால்தான் ஒரு பெண், அய்யப்பன் சந்நிதானத்துக்குள் நுழைந்தாள் என்ற உண்மையை ஏற்க மறுக்கின்றனர்! சட்டம், தீண்டாமையை குற்றம் என்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை என்கிறது. ஆனால், யார் கண்டு கொண்டார்கள்?

சமூகத்தின் எல்லா விதிகளும் ஆணுக்காகவே உருவாக்கப்படுவதும், ஆண் தன் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வதுமே கண்கூடு. அய்யப்பன் கோயிலின் தந்தி, வழிபாட்டுக்கு முன் பம்பை ஆற்றில் நீராட வேண்டும் என்பது விதி. கன்டரரு மோகனரு தந்தி ஷவரில் குளிப்பது வழக்கம். கேட்டால், பம்பை ஆற்று நீர்தானே ஷவரில் வருகிறது என்கிறார். நியாயம்தான் என அய்யப்பன் மன்னித்துவிடக்கூடும். அதே தந்தி, பாலியல் தொழிலாளியிடம் போனதையுமா பெண் வாடையே பிடிக்காத அய்யப்பன் மன்னிப்பது?!

இங்கு சங்கராச்சாரிக்கு இருக்கும் பெண்கள் தொடர்பைப் போலவே, தந்தி மோகனருக்கும் இருப்பதாக நாளொரு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சாமியார்களின் அய்யோக்கியத்தனங்கள் வெறும் கிளுகிளுப்பான செய்திகளாக மட்டுமே இங்கு சித்தரிக்கப்படுகின்றன. மாறாக, அதனால் பெருகும் சமூகச் சீர்கேட்டை யாரும் உணர்ந்தபாடில்லை. கொலையும் செய்து, கோடி கோடியாக கொள்ளையும் அடித்து, பெண்களுடனும் கூத்தடித்ததாக சங்கராச்சாரி கையும் களவுமாகப் பிடிபட்டபோதும் சுதந்திரமாக வெளியில் உலவ முடிகிறது. அதற்கு இந்த மதவாத சமூகம் அனுமதிக்கிறது. கடவுள், மதம், சாதியை நம்பும் இளிச்சவாய் மக்கள் கூட்டம் இருக்கும் தைரியத்தில் தான் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் குற்றவாளி சங்கராச்சாரியால் தனது 75 ஆவது பிறந்த நாளுக்காக கும்பாபிஷேகத்தை நடத்திக் கொள்ள முடிகிறது.

ஒரு காலத்தில் கோயில் நுழைவுப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. மனிதர்களுள் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி, மூடநம்பிக்கைகள் பரவக் காரணமாயிருந்த கோயில் சிலைகளை பெரியார் செருப்பால் அடித்தார். உரிமைகளை வென்றெடுக்கும் முயற்சியாகவே அவை நடந்தேறின. ஜெயமாலா செய்தது அந்த மாதியான ஒரு போராட்டமா என்றால்,அதுதான் இல்லை. மூட நம்பிக்கையின் உச்சபட்சமே அவரை அய்யப்பன் கோயிலுக்குள் நுழைய வைத்தது. பிரச்சன்னம் பார்த்து அய்யப்பன் கோபமாக இருப்பதாக உன்னிக்கிருஷ்ணன் சொன்னவுடன், தன் குடும்ப நலனுக்காகப் பகார பூசை செய்யும் மழுங்கிப் போன மதவாதிதான் அவரும்.

ஆக, பிரச்சனை இதுதான். ஆண்கள் கண்டுபிடித்த கடவுளும், கடவுளின் பெயரால் உருவான மதம், மதம் வலியுறுத்தும் சாதியும் பாலினப் பாகுபாடுகளும், பாகுபாடுகளைத் தூக்கிப் பிடிக்கும் ஆண்களும், ஆண்கள் தலைமையிலான குடும்ப அமைப்புமே பெண்களுக்கெதிரான எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். பெண் விடுதலைக்காகப் போராடும் யாரும் இதைத் துல்லியமாகக் கணிக்கவில்லை. பெரியார் மட்டுமே அதைத் துணிச்சலாக செய்தார். இன்றைய பெண்ணியவாதிகள் யாருக்கும் அத்தகையதொரு தெளிவு இருப்பதாகச் சொல்வதற்கில்லை. பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை அவர்கள் தப்பவிட்டு, அதன் வெளிப்பாடுகள் மீதுதான் பெண்ணியவாதிகள் பெரும்பாலும் தாக்குதல் நிகழ்த்துகிறார்கள். வரதட்சணையை எதிர்க்கிறார்கள், இடஒதுக்கீடு கேட்கிறார்கள், குடும்ப வன்முறையை எதிர்க்கிறார்கள். எல்லாம் சரி. ஆனால், அடிமைத்தனத்தை அடியோடு அழிக்கும் அந்த ஆயுதத்தை யாரும் கையிலெடுத்த பாடில்லை. அது, பகுத்தறிவைப் பரப்புவது.

கடவுள் நம்பிக்கை என்பது, அவரவர் தனிப்பட்ட விருப்பமாகவே பார்க்கப்படுகிறது. அது மிகப் பெரிய சமூக அவலம் என்பதைச் சொல்ல இன்றைக்கு ஆளில்லை. வரதட்சணைக்கு எதிராக எத்தனை காலமாகப் போராடுகிறோம்! அது ஒழிந்ததா? பாலியல் வன்முறைக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்தியாவில் அரை மணி நேரத்துக்கு ஒரு பெண், பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். ஏன்? பெண் உரிமைக்கு குரல் கொடுப்பவர்களும், சட்டம் பிரச்சனையை மேலோட்டமாக அணுகுவதே காரணம். இந்து மதம் அழிந்தால்தான் சாதியும் அழியும் என்பது எவ்வளவு உண்மையோ, அது போலதான் பெண்ணடிமைத்தனம். சாமியிடம் போய் சாதி அழிய வேண்டுவது முட்டாள்தனம். பெண்ணடிமைத்தனம் அப்படியே!

படிப்பறிவு வேறு, பகுத்தறிவு வேறு. நம் கல்வி அமைப்பு, சமூக அறிவையும் பகுத்தறிவையும் அளிப்பதில்லை. அதனாலேயே பெரிய படிப்பு படித்து உயர் பதவியிலிருக்கும் பெண்களாகட்டும், நவ நாகரிக மங்கைகளாகட்டும், அவர்களால் குடும்ப வன்முறையை எதிர்க்க முடிவதில்லை. மாவட்ட ஆட்சித் தலைவரான அமுதா, தீ மிதிக்கும்போது, கல்வியறிவற்ற பெண்கள் என்ன செய்வார்கள்? இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உரிமைகளுக்கான முழக்கங்களோடு, வன்முறைகளுக்கான எதிர்ப்புகளோடு உடலை, உணர்வை கொண்டாடும் வீரிய படைப்பிலக்கியங்களோடு, கடவுள் – மதம் – ஜாதி அழிந்தொழிய பாடுபடும்போதுதான் பெண்ணியம் வலிமைமிக்கதாகும். இல்லையெனில், இப்படித்தான் வரதட்சணை பெருகும்; இடஒதுக்கீடு கானல் நீராகவே இருக்கும்; குடும்ப வன்முறைக்கும் பாலியல் வன்முறைக்கும் பலியாவது அதிகரிக்கும்; பெண்ணை வெறும் உடலாகப் பார்க்கும் பார்வை மாறவே மாறாது… பெண்ணிய அமைப்புகள் தங்களுக்கானத் திட்டங்களை வகுக்கும்போது, பகுத்தறிவுப் பரவலை தன்மைப்படுத்த வேண்டியது அவசியம்.

பகுத்தறிவை எட்டிய பெண், பலவீனமானவளாக இருக்க மாட்டாள். கடவுளைப் புறக்கணிக்கும் பெண், அடிமைத்தனங்களைப் புறக்கணிப்பவளாகிறாள். தன்னை வெறும் உடலாகப் பாவிப்பதை எதிர்ப்பாள். தனக்கெதிரான அநீதிகளைத் துணிச்சலாக சந்திப்பாள். சமத்துவத்தைக் கொண்டாடுவாள். பெண் விடுதலை வேண்டுமெனில், ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மீது சுமத்தப்பட்ட கடவுளை மறுத்து, மதங்களைத் துறந்து, சாதியைப் புறக்கணித்துப் பகுத்தறிவாளராக வேண்டும். அந்த அறிவும் தெளிவும் யாரையும் யாருக்கும் அடிமையாக வாழவும் அனுமதிக்காது, அடிமைப்படுத்தவும் துணியாது.

இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன்


தன் எல்லா இழிவுகளையும் திணிப்பதற்கென்றே ஒடுக்கப்பட்ட சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறது இந்த நாடு. பரந்து விரிந்த இந்நாட்டின் கட்டற்ற வளங்களையும், சுகங்களையும் மட்டுமல்ல; ஜனநாயகத்தை நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்டோருக்கென நடைமுறையில் உள்ள சட்டங்களையும், நலத் திட்டங்களையும்கூட ஆண்டு அனுபவித்து வருகிறது ஆதிக்க வர்க்கம். சாதிய ஒடுக்குமுறை என்னும் கொடுமையால், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உன்னதக் கலைஞர்கள் உருவாகாமலேயே தொலைந்திருக்கின்றனர். உருவானோரும் எங்கும் நிறைந்திருக்கும் சாதியின் கூரிய ஆயுதங்களால் உருக்குலைந்து போயிருக்கின்றனர்.

தீண்டத்தகாதோரை திறமையானவர்களாக ஏற்க மறுக்கும் இந்நாட்டின் சாதியச் சூழலில், வறுமையும் ஒடுக்குமுறையும் மாறி மாறி அழுத்த, அடிமையாகப் பிறந்த ஒவ்வொரு கலைஞனும் அறிவாலும், திறமையாலும் தனிப்பட்ட தன் போர்க்குணத்தாலும்தான் முன்னேறியிருக்கிறார்கள். துச்சமான பார்வைகளையும், கேவலமான நய்யாண்டிகளையும், புறக்கணிப்புகளையும் மீறி தன் அடையாளங்களைப் பதிய வைக்க போராடுவோரை – ஆதிக்கவாதிகளுக்கான இந்த ஜனநாயக நாடு கருணையின்றி கைவிட்டிருக்கிறது.

இந்நாட்டில் பிறந்ததற்காகவும், இச்சமூகத்தில் வாழ நேர்ந்ததற்காகவும் – ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட உள்ளமும் வெட்கத்திலும், வேதனையிலும் கொந்தளித்துக் கிடக்கிறது என்பதே உண்மை. கண்ணுக் கெட்டிய உயரங்களையும், கைகளுக்கெட்டிய வெற்றிகளையும் தலித்துகள் தொட்டுவிடாதபடி தடுத்துக் கொண்டே இருக்கிறது ஆதிக்க வர்க்கம். ஒன்றல்ல இரண்டல்ல… சாதிய சவுக்கால் அடித்து வீழ்த்தப்பட்டோர் ஆயிரமாயிரம். தடகள வீராங்கனை சாந்தியும் அதில் ஒருவர்.

வாழ்வின் அடிப்படைத் தேவையான அமைதியை முற்றிலுமாக இழந்துவிட்ட ஓர் உயிர். நான்காண்டுகளுக்கு முன்னர் அந்த பரபரப்பு எழுந்தபோதே சாந்தியை சந்தித்து, மனம்விட்டு உரையாட வேண்டும் என்ற உந்துதல் உண்டானது. ஆனால், அப்போது அவருக்கிருந்த நெருக்கடியில், யாராக இருந்தாலும் தனிமையைத்தான் விரும்பியிருப்பர். ஏற்கனவே ஊடகங்கள் துரத்திக் கொண்டிருந்த நிலையில், வெளிச்சத்தில் முகம் காட்டவே அவர் அச்சப்பட்டு முடங்கியிருந்தார் என்பதுதான் உண்மை. ஆசிய விளையாட்டுப் போட்டியில் எழுந்த சர்ச்சையின்போது, சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையும், பேட்டி என்ற பெயரில் கேட்க வேண்டிய கேள்விகளும், அதற்கு சாந்தி கொடுத்தாக வேண்டிய விளக்கங்களும்கூட அவருக்கு மிகப் பெரிய துன்புறுத்தலாகவே அமையும் என்பதால், அம்முயற்சியைக் கைவிட்டு – “சாந்தியைக் கொண்டாடுவோம்’ என்ற கட்டுரையை மட்டும் “தலித் முரசு’ இதழில் பதிவு செய்தேன். அப்போதிருந்து பல நூறு முறை சாந்தியை சந்திக்க வேண்டுமென தோன்றியிருக்கிறது. அதற்கு சிறப்பான காரணங்கள் இருந்தன!

மதங்களும் சாதியும் வாழ்வியல் நெறியாகவும், பண்பாட்டுக் குறியீடாகவும் ஆக்கப்பட்டிருப்பதைப் போலவே, பாலின மாறுபாடுகளும், விருப்பங்களும்கூட, வறட்டுத்தனமான பண்பாட்டு வட்டத்திற்குள் வளைக்கப்பட்டிருக்கின்றன. பகுத்தறிந்து பார்த்தால் மட்டுமே இவற்றுள் இருக்கும் பிறழ்வுகளையும் சிக்கல்களையும் ஒருவரால் புரிந்த கொள்ள இயலும். மதத்தையும், அது உருவாக்கிய சாதிப்படி நிலையையும் புரிந்து கொள்ள முடிந்தவர்களால்கூட, மனிதரின் பாலியல் மாறுபாடுகளை அறிய முடிவதில்லை. அறிவார்ந்த சமூகத்திடம்கூட பாலினப் புரிதலில் நிலையானதோர் ஊனம் இருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெருமைக்குரிய பதக்கங்களை வென்றும், பாலியல் சோதனையில் தோல்வியடைந்ததாக இழிவுபடுத்தவும்பட்ட சாந்தி, வறுமையும் ஒடுக்குமுறையும் நிறைந்த தலித் சமூகத்தில் பிறந்ததும் – அவருடைய வாழ்வைப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அதிகப் படுத்துகிறது. பெரும் முயற்சிகளுக்குப் பிறகு அண்மையில் சாந்தியை சந்திக்கும் சூழல் அமைந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியில் சவுந்தரராஜன் – மணிமேகலை தம்பதியினரின் மூத்த மகளாகப் பிறந்தவர் சாந்தி. குறுகிய ஓட்டு வீட்டில் வசித்து, கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர், ஆண் குழந்தை ஆர்வத்தில் அடுத்தடுத்து மூன்று மகள்களையும், அய்ந்தாவதாக ஒரு மகனையும் பெற்றனர். ஒரு வேளை பசியாற்றிய பழைய சோற்றை பங்கிட்டுக் கொள்வதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. கொஞ்சம் சோறும் நிறைய தண்ணீரும் கலந்து நீராகாரம்தான் சாந்தி அறிந்த ஒரே உணவு வகை! கத்தக்குறிச்சியின் தலித் குடியிருப்புகளில் வாழ்ந்த எல்லோருமே ஒருவேளை உணவிற்கு அல்லல்பட்டவர்கள்தான். அதுவும் கிடைக்காத நாட்களில், பகல் முழுவதும் பட்டினி கிடந்து விட்டு இரவு வேளையில், உயர்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிக்குச் சென்று, வீட்டிற்கு வெளியே நின்று இறைஞ்சி கேட்டு உணவு வாங்கி வருவது வழக்கம். மிக நிச்சயமாக, அதுவும் பழைய சோறாகத்தான் இருக்கும்.

சாந்தி : “பசி வாட்டுறப்போ எப்படியாவது ஒருவாய் சோறு கிடைக்காதாங்கற ஏக்கம்தான் நிறைஞ்சிருக்கும். அது எங்கயிருந்து வருதுனெல்லாம் ஆராயத் தோணாது. எங்களுக்கு விவரம் தெரியல. ஆனா, வீடு வீடா போய் சோறு வாங்குவது, அப்பா அம்மாவுக்கு அவமானமா இருந்திருக்கலாம். வேலை செஞ்சுட்டு கூலி வாங்குற மாதிரிதான் இதுவும் ரொம்பா இயல்பான விஷயமா எங்களுக்கு இருந்துச்சு. நல்ல சோறு கிடைக்குமாங்கற எதிர்பார்ப்பு, எஸ்.சி. குழந்தைகளோட அதிகபட்ச கனவுன்னு சொல்லலாம்.’

சத்துக் குறைபாட்டினால் எலும்பும் தோலுமாகவே எல்லா குழந்தைகளும் வளர்ந்தன. உடுத்த உடையும் குடிக்க கஞ்சியும் இல்லாத நிலையிலும் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் உறுதியாக இருந்தனர் – சவுந்தரராஜனும் மணிமேகலையும். கத்தக்குறிச்சியிலிருந்து அய்ந்து கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ராமசாமி தெய்வானையம்மாள் மேல்நிலைப் பள்ளியில் சாந்தியும் சகோதரர்களும் படித்தனர். அய்ந்து கிலோ மீட்டரையும் நடந்தே கடக்க வேண்டியிருந்தது. இலங்கையில் வாழ்ந்தவரான சாந்தியின் தாத்தா முத்தையாவிற்கு, விளையாட்டில் குறிப்பாக ஓட்டத்தில் ஆர்வமிருந்தது. சாந்தியின் திறமையை முதலில் கண்டறிந்ததும் உறுதியாக நம்பிக்கையூட்டியதும் அவர்தான். ஏழாம் வகுப்பு வரை வீட்டிலேயே பயிற்சி மேற்கொள்ள முத்தையா ஊக்கப்படுத்தினார். வீட்டுக்கு அருகிலிருந்த சிறிய இடத்திலும், வயல்வெளியிலும் ஓட்டப் பயிற்சி செய்தார் சாந்தி.

சாந்தி : “காலையிலும் மாலையிலும் பயிற்சி செய்ற பழக்கம் இருந்துச்சு. பசங்களோட சேர்ந்து விளையாடாம தனியா ஓடிட்டிருந்தா கிண்டல்தானே பண்ணுவாங்க. நான் எதையும் காதுல போட்டுக்க மாட்டேன். பி.டி. உஷா பற்றி தாத்தா சொல்லியிருந்ததால, அப்பவே எனக்குள்ள ஒரு லட்சியம் உருவாகிடுச்சுனு சொல்லலாம். பள்ளிக் கூடத்துல விளையாட்டுப் போட்டிகள்ல நான்தான் ஜெயிப்பேன். பரிசா கிடைக்குற சோப்பு டப்பாவும், டிபன் பாக்சும்தான் என்னோட அதிகபட்ச ஆர்வம். வீட்டுக்கு சின்னச் சின்னதா ஏதாவது பொருள் கொண்டு வந்து கொடுக்குறதுல ஒரு சந்தோஷம் இருந்துச்சு.’

பத்தாம் வகுப்பிலிருந்துதான் முறைப்படியான பயிற்சி சாத்தியப்பட்டது. விளையாட்டு ஆசிரியரான பழனிவேல், சாந்தியின் தனித் திறமையை கவனித்து பயிற்சியளிக்கத் தொடங்கினார். ஒடுக்கப்பட்ட சூழலில் சேரியில் வளரும் சிறுவர்களுக்கு கிடைக்கும் சிறு வழிகாட்டலும் ஊக்கமும் – இருண்டு கிடக்கும் அவர்களின் எதிர்காலத்தின் மேல் விழும் ஒளிக்கீற்று. தனக்கு கிடைத்த ஒரே ஊன்றுகோலை இறுகப் பற்றிக் கொண்டதால், சாந்தியின் சாதனைகள் பள்ளியிலேயே தொடங்கின. வேங்கடகுளம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது, முதன்முறையாக மாநில அளவிலான போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று, தன் கணக்கைத் தொடங்கினார்.

சாந்தி : “ரொம்ப சந்தோஷப்பட்ட நாள் அதுன்னு சொல்லலாம். வாழ்க்கையில பெரிசா எந்த மாற்றமும் உண்டாகலன்னாலும் என் லட்சியத்தை நோக்கி நான் போயிட்டிருக்கேன்னு புரிஞ்சது. அப்பவும் என்னோட மிகப் பெரிய கவலையாவும் தடையாவும் இருந்தது என்னோட வறுமை, ஊட்டச் சத்துள்ள உணவு. கிராமத்துக் குழந்தைகளுக்கு இயற்கையா இருக்குற உடல்/மன வலிமை எனக்குமிருந்ததால சாதிக்க முடிஞ்சதுன்னாலும், புரதச் சத்துக்காக முட்டையும் பாலும் மிகப் பெரிய கனவாவே இருந்துச்சு! என்னோட குடும்பச் சூழல்ல அதையெல்லாம் நான் எதிர்பார்க்க முடியாது. கூட விளையாட வர்ற பசங்கள்லாம் திடமா ஆரோக்கியமா இருக்கிறப்போ நான் மட்டும் கறுத்து, மெலிஞ்சு சுருங்கிப் போயிருந்தேன். தாழ்த்தப்பட்ட, ஏழைக் குடும்பத்துல பிறந்ததுக்காக நான் வருத்தப்பட்டது அப்போதுதான்.’

திருச்சி ஜே.ஜே. கல்லூரியில் பி.பி.ஏ. படிக்க சேர்ந்தார் சாந்தி. மகளின் எந்த முடிவையும் தடுக்காமல் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர் பெற்றோர். இதனால் எந்நேரமும் பயிற்சியிலேயே கழிந்தன பொழுதுகள். சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது. 2002 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்று, சர்வதேசக் களத்திற்குள் நுழைவதற்கான தகுதியைப் பெற்றார். அடுத்த ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற “ஏஷியன் ட்ராக் அண்ட் பீல்ட்’ போட்டிகளுக்கு தேர்வானார் சாந்தி. வெளிநாட்டுப் பயணத்திற்கான தங்கும் மற்றும் பயணச் செலவுகளை விளையாட்டுத் துறை ஏற்றுக் கொண்டிருந்தாலும், நல்ல உடைகளோ, சொந்த செலவிற்கு பணமோ இன்றி வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு கிளம்பினார். அய்யாயிரம் மீட்டரில் முதல் பரிசு, எண்ணூறு மீட்டரில் இரண்டாம் பரிசு, நானூறு மீட்டரில் மூன்றாம் பரிசு என மூன்று பரிசுகளைப் பெற்றிருந்தும், சாந்தியின் ஒடுக்கப்பட்ட மனம் அதைக் கொண்டாட முடியவில்லை.

சாந்தி : “வெறும் ரெண்டாயிரம் ரூபா எடுத்துட்டுப் போனேன். எங்க அப்பா அம்மானால அதுதான் முடிஞ்சது. அதையே கடன் வாங்கிதான் கொடுத்தாங்க. நான் ஜெயிப்பேன்னு நிச்சயமாகத் தெரியும். ஏன்னா தினமும் காலையிலயும் மாலையிலயும் பத்து கிலோ மீட்டர் ஓடுவேன். பயிற்சியை யும் முயற்சியையும் சரியா செஞ்சேன். மூணு பதக்கங்களை வாங்கியும் அங்க நான் தனியாவே இருந்தேன். என்கூட வந்த மற்ற போட்டியாளர்கள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கல. என்னாலயும் அவங்களோட இயல்பாகப் பழக முடியல. போட்டி நேரம் போக ஷாப்பிங் போவாங்க. நிறைய செலவு செய்வாங்க. என்னால அது முடியாது. என்னோட அறையிலேயே அடைஞ்சு கிடப்பேன். ரெண்டாயிரம் ரூபாயோட போன நான், 39 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையா கொண்டு வந்தேன். என்னை தவிர்த்தவங்க ஒரு மெடல்கூட வாங்கல. பரிசுப் பணத்தை செலவு செய்யாம அப்படியே கொண்டு வந்து வீட்டுல கொடுத்தேன். சந்தோஷப்பட்டாங்க. அவங்களுக்கு அது பணம்; கொஞ்ச நாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாம் அவ்ளோதான். ஆனால், என் சாதனையோட மதிப்பை புரிஞ்சுக்க யாருமே இல்øலயேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.’

ஒரே போட்டியில் 5000, 800, 400 மீட்டர்களில் பதக்கங்கள் வெல்வது அசாதாரணமான செயல். எவருமே கணிக்காத சூழலில் சாந்தியின் சாதனை அமைந்தது. எந்த சந்தேகங்களோ, சர்ச்சைகளோ இன்றி பதக்கங்களைப் பெற்று வந்தார். இந்த இமாலய வெற்றிக்குப் பின்னான இரண்டாண்டுகள், கவனத்தை மீண்டும் பயிற்சியின் பக்கம் திருப்பியதில், 2005 ஆம் ஆண்டு முழுவதும் வெற்றி மாலைகள் சாந்தியின் மேல் விழுந்து கொண்டே இருந்தன. தென்கொரியாவில் 800 மீட்டரில் வெள்ளிப்பதக்கமும், தாய்லாந்தில் இரண்டு தங்கங்களையும், கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டிகளில் தாய்லாந்தில் நடைபெற்ற முதல் ஆசியப் போட்டியில் தங்கத்தையும், அதே ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளியையும் வென்றார். இத்தனை வெற்றிகளுக்குப் பின்னர்தான் தன் லட்சியத்தை அடைந்து கொண்டிருக்கும் பூரிப்பு கொஞ்சமாக அவருள் பூத்தது. எந்த விளையாட்டு வீரருக்கும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே அதிகபட்ச இலக்கு என்பதால், சாந்தியும் அதை குறி வைத்தே இயங்கிக் கொண்டிருந்தார்.

சாந்தி : “ஊருக்குள்ள எனக்குனு ஒரு மரியாதை உருவாகி இருந்துச்சு. எல்லோரும் அன்பாவும் மரியாதையாவும் பார்க்க ஆரம்பிச்சாங்க. 2005 முழுக்க பதக்கங்களா வாங்கிட்டிருந்தேன். எங்க ஓட்டு வீட்டுக்குள்ள அதை வைக்குறதுக்குதான் இடமில்லை. 2005 ஆம் வருஷத்தோட விளையாடவே முடியாமப் போகும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் அவங்க ஓடி முடிச்சதுக்கப்புறம் சிறுநீர் பரிசோதனை செய்வாங்க. போதை மருந்து, ஊக்க மருந்து சாப்பிட்டது உறுதியாச்சுன்னா, அடுத்த ரெண்டு வருஷத்துக்கு விளையாட முடியாது. ஒவ்வொரு முறையும் இந்த பரிசோதனையை தைரியமா செஞ்சுக்குவேன். போட்டி நாட்கள்ல தலைவலி மாத்திரைகூட எடுத்துக்க மாட்டேன். ஏன்னா நாம் சாதாரணமா எடுத்துக்குற வலி நிவாரணிகள்லகூட ஸ்டீராய்ட்ஸ் இருக்கலாம். கஷ்டப்பட்டு பெற்றதை கவனக்குறைவுனால இழந்துடக் கூடாதில்லையா?’

ஊக்க மருந்து விஷயத்தில் இத்தனை கவனமாக இருந்த சாந்தி, உடல் கூறு தேர்வில் தோற்றுப் போவோம் என அதுவரையும் நினைத்திருக்கவில்லை! 2005 டிசம்பரில் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, 800 மீட்டரில் வெள்ளிப் பதக்கம் வென்றபோது, இந்திய ஊடகங்கள் அவரை வாழ்த்தின. அடுத்த ஒரு வாரத்தில் எல்லாமே தலைகீழாய் மாறியது. பெண்ணென்று பொய் சொல்லி சாந்தி ஏமாற்றிவிட்டதாகவும், பாலினச் சோதனையில் தோல்வியடைந்துவிட்டதாகவும் ஊடகங்கள் அறைகூவ, அந்த அலறல்களுக்கு நடுவே உடைந்து நொறுங்கிப் போனார் சாந்தி.

சாந்தி : “முதல்ல எனக்கு எதுவுமே புரியல. தோஹாவுல 800 மீட்டர் பந்தயத்துல வெள்ளிப் பதக்கம் ஜெயிச்சதோட என்னோட போட்டிகள் முடிஞ்சது. மற்ற வீரர்கள் விளையாடிட்டிருந்தாங்க. நான் என்னோட அறையிலயே இருந்தேன். ரெண்டு நாள் கழிச்சு. என்னை பரிசோதனை செய்யணும்னு கூட்டிட்டுப் போனாங்க. ரத்தம், சிறுநீர், பொது உடல் பரிசோதனைகளும் பண்ணாங்க. என்னோட பயிற்சியாளர்கிட்ட எதுக்கு இந்த பரிசோதனைன்னு கேட்டேன். என்னோட அறையில் தங்கியிருந்த சக வீராங்கனைகள், என் மேல புகார் செஞ்சிருக்குறதா சொன்னார். குழப்பமா இருந்தது. பதக்கத்தோட நான் நாடு திரும்பினேன். ஒரு வாரம் கழிச்சு டி.வி. செய்திகள்ல பார்த்துதான் என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். என்னோட பயிற்சியாளர் ரஷ்யக்காரர். பெங்களூருவில் இருக்கார். அவர்கிட்ட விளக்கம் கேட்க முடியாதுங்கறதால விட்டுட்டேன். ஆனா என் வாழ்க்கை, லட்சியம், கனவு இந்த ஒரு விஷயத்துனால நொறுங்கிப் போச்சு. அதுவரைக்கும் இருந்த சாந்தியா அதுக்கப்புறம் நான் வாழவே முடியல.’

பாலினச் சோதனையில் தோல்வி என்ற முதல் செய்தி வந்தபோது, காரைக்குடியில் தன் மாமா வீட்டில் இருந்தார் சாந்தி. தொடர்ச்சியாக தொலைக்காட்சி செய்திகளில், சாந்தி ஆணா, பெண்ணா என்ற விவாதம் நடந்ததால், செய்திச் சேனல்களை தற்காலிகமாகத் தடை செய்து வைத்தனர் சாந்தியின் உறவினர்கள். கல் தடுக்கி விழுந்திருந்தால் அத்தனை காயம் ஏற்பட்டிருக்காது. சாந்தி சரிந்ததோ மலை உச்சியிலிருந்து! தனித்த உழைப்பாலும் முயற்சியாலும் வெற்றியின் உயரங்களில் ஏறிக் கொண்டிருந்த நேரம் இப்படியொரு சரிவு, எத்தனை பெரிய வலியை உண்டாக்கியிருக்கும்?! பெண்ணாகப் பிறந்து, பெண்ணாகவே உணர்ந்து, பெண்ணாகவே வாழ்ந்து வந்த நிலையில், சில சோதனைகள் பெண்ணில்லை என விலக்கி வைக்க, அகதியைப் போன்ற கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார் சாந்தி.

சாந்தி : “நான் பொண்ணுதான். ஒரு பொண்ணாதான் பிறந்தேன். அதனாலதான் எனக்கு சாந்தினு பேர் வச்சாங்க. நான் பிறந்தப்போ, என்னோட உறவினர்களும் ஊர்க்காரர்களும் வந்து பார்த்தாங்க. என்னை வேறு எப்படி நிரூபிக்கச் சொல்றீங்க? பெண்ணுக்குனு விதிக்கப்பட்ட அடையாளங்களோட இருக்குறதுக்காக, உடலில் அட்டைகளைப் பொருத்திக்கிட்டு என்னால திரிய முடியாது. கருப்பை இல்லேன்னா பொண்ணில்லையா? பருவமெய்தலேன்னா பொண்ணில்லையா? பருவமெய்தாமலேயே திருமணம் செஞ்சுகிட்டு வாழ்றவங்கள எனக்குத் தெரியும். உங்களோட விதிமுறைகளும் சோதனைகளும் என்னை பெண்ணில்லனு சொன்னா, அதை நான் ஏத்துக்கணுமா? என் பாலினம் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. சிகிச்சை எடுத்துக்குறதுக்கு நான் நோயாளி இல்ல. எனக்கு தோணுச்சுனா திருமணம் செஞ்சுக்குவேன்; இல்லேன்னா தனியாவே இருப்பேன். அதை வச்சு என் பாலினத்தை யாரும் உறுதி செய்ய முடியாது. இந்த சமுதாயத்துல எப்பவுமே நான் தலைநிமிர்ந்து வாழ முடியாத நிலையை உருவாக்கிட்டாங்க. ஆம்பளையா, பொம்பளையானு என் காதுபட கிண்டல் செய்றவங்களை தினமும் கடந்து போறேன். என் வாழ்க்கை முழுசும் தொடரப் போற கொடுமையான கேள்வி இது

ஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே


கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விருந்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமரிடம் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளை விட பழமைவாத இந்து அமைப்புகள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்திருந்தாராம். உலகில் பலருடைய, பல நாடுகளுடைய இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருக்கும் விக்கிலீக்ஸ் இதையும் வெளிக் கொண்டுவந்திருக்கிறது. இதுவும் ஒருவிதத்தில் இரட்டை வேடம்தான் என்றாலும் அந்தக் கூற்றில் தவறேதும் இல்லை, சரியானது தான். ஆனாலும், அது முழு உண்மையையும் வெளிப்படுத்திவிட்டதாக கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்து அமைப்புகள் எனும் சொல்லின் பொருளில் காங்கிரசும் உள்ளடங்கியுள்ளது.

பாஜக தொடங்கி ஆர்.எஸ்.எஸ், சிவசேனா உட்பட அனைத்து இந்து அமைப்புகளும், ராகுல் ஒரு கத்துக்குட்டி என்பது முதல் காங்கிரஸ் பொறுப்பற்ற கட்சி என்பது வரை நாளிதழ்களில் அறிக்கைவிட்டு ‘உள்ளேன் ஐயா’ கூறியுள்ளன. தொண்டர்களோ உருவ பொம்மை எரிப்பதுவரை போய்விட்டனர். மோடி, “ராகுல் பாகிஸ்தான் ஆதரவாளர்” என்கிறார்; வெங்கையா நாயுடு, “பொறுப்பற்ற பேச்சு, இந்தியாவை பலவீனப்படுத்தும்” என்கிறார்: பால் தாக்கரே, “இந்து மதத்திற்கு எதிரான சகிக்க முடியாத கருத்து” என்கிறார்; உமாபாரதி, “நேரு குடியரசு அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் க்கு இடம் கொடுத்தார் தெரியுமா?” என்கிறார்; ஆர்.எஸ்.எஸ், “உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டு தூதரிடம் பேசலாமா?” என்கிறது. ஆனால் மறந்தும் கூட ஒருவராவது, அவர் சொன்னது தவறு இந்து அமைப்புகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பில்லை என்று கூற மறுக்கிறார்கள். ஏனென்றால் அப்படிக் கூறினால் மக்கள் வேறொரு வாயால் சிரிப்பார்கள் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். பின் எதற்கு இந்த கூச்சல்?

பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக அடிவாங்கி முடங்கிக்கிடந்த பாஜகவை ஸ்பெக்ட்ரம் ஊழல் விழித்தெழ வைத்தது ஊழலை எதிர்த்து ஏனையோருடன் இணைந்து இருபது நாட்களுக்கும் அதிகமாக இவர்கள் நடத்திய ‘கூச்சல் குழப்ப’ போராட்டத்தினால்(!) மக்கள் மத்தியில் ஊழலை எதிர்ப்பவர்கள் என்று தங்களுக்கு மதிப்பு வந்துவிட்டதாக மிதந்து கொண்டிருந்தவர்களுக்கு, குளிர்கால கூட்டத்தொடர் முடிந்துவிட்டது ஒரு ஆற்றாமையை ஏற்படுத்தியிருந்தது. அதிலிருந்து விடுபட சரியான நேரத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ராகுல் பேச்சை பயன்படுத்திக்கொண்டு அடுத்த சுற்றை தொடங்கிவிட்டனர்.
பண்டைக்காலம் முதல் இன்றுவரை இந்துமத அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாகவே இருந்துள்ளன என்பதை யாரால் மறுக்க முடியும்? பார்ப்பனீயத்தை எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட பௌத்தம், சாங்கியம் போன்றவற்றை தின்று செரித்தது பயங்கரவாதமில்லையா? நந்தன், வள்ளலாரை எரித்துக்கொன்றுவிட்டு ஜோதியில் கலந்ததாக கதை கட்டிவிட்டது பயங்கரவாதமில்லையா? வில்லை இனி தொடக்கூடாது என்பதற்காக ஏகலைவன் கட்டைவிரலை வெட்டியெறிந்துவிட்டு குருதட்சனை என்று கூசாமல் கூறியது பயங்கரவாதமில்லையா? ஒரு கிழவனை இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக்கொண்டு கொன்றது பயங்கரவாதமில்லையா? இந்தியாவெங்கும் கொலைவெறிபிடித்து நடத்திய கலவரங்கள் பயங்கரவாதமில்லையா? காலிஃபிளவர் வயலுக்கு இரத்தப்பாசனம் செய்த பகல்பூர் படுகொலைகள் பயங்கரவாதமில்லையா? எப்படி உயிருடன் எரித்தோம், எப்படி வன்புணர்ச்சி செய்தோம் என செய்முறை விளக்கங்களுடன் சொல்லிக்காட்டிய குஜராத் வெறியாட்டங்கள் பயங்கரவாதமில்லையா? யாருக்குச் சொந்தமான இடம் என அறுபடு ஆண்டுகளாக நடந்த வழக்கில் நாங்கள் அப்படி நம்புகிறோம் ஆகவே உங்களுக்கு இடமில்லை என கட்டப்பஞ்சாயத்து செய்ய‌ வைத்தது பயங்கரவாதமில்லையா? மக்களில் பெரும்பாலானோரை தீண்டத்தகாதவன் என ஒதுக்கிவைத்திருக்கும் இந்துமதமே பயங்கரவாதமில்லையா?

பிஜேபியினரும் இந்து அமைப்பினரும் குதிக்கத்தொடங்கியதும், நான் அப்படிக் கூறவில்லை எல்லா பயங்கரவாதங்களும் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று தான் கூறினேன் என்று பின்வாங்கியிருக்கிறார் ராகுல். காங்கிரசோ இதில் ஏதோ சதி இருக்கிறது என்று ஐயப்பட்டிருக்கிறது. ஆனால் இதை இவர்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன் சிமியும், ஆர்.எஸ்.எஸ் ம் பயங்கரவாத அமைப்புகள் தான் என்று ராகுல் பேட்டியளித்தார். காவி பயங்கரவாதம் என சிதம்பரம் கூறினார். ஆக இது வெளிப்பட்ட ரகசியமல்ல, காங்கிரஸின் தற்போதைய வேலைத்திட்டமே, இந்து அமைப்புகளை பயங்கரவாத அமைப்புக‌ள் என்று தாக்குவது தான். இது ஒரு ஓட்டுப்பொறுக்கி அரசியல் உத்தி தானேயன்றி, இந்து அமைப்புகள் என்று தன்னிலிருந்து பிரித்துக்காட்ட காங்கிரஸுக்கு எந்த தகுதியும் இல்லை.

தான் ஒரு இந்து சனாதனி என காந்தி அறிவித்துக் கொள்ளவில்லையா? ஆர்.எஸ்.எஸில் உறுப்பினராக இருந்தவர்கள் காங்கிரஸிலும் உறுப்பினர்களாக, தலைவர்களாக, பிரதமராக‌ இருக்கவில்லையா? காந்தி கொலையினால் தடைவிதிக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எ உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடையை விலக்க காய் நகர்த்தியது காங்கிரஸ்காரகளில்லையா? முஸ்லீம்களா கொள்ளையடிக்கப்பட்ட கோவில் என்று சோமநாத ஆலயத்தை புதுப்பிக்கும் அரசியலைக் கையிலெடுத்து இந்து வெறியை ஊட்டியது இராஜேந்திர பிரசாத் இல்லையா? தற்போதைய பிஜேபி யின் வசனமான பசுவதை தடைச்சட்டம் என்பதை வடமாநிலங்களில் அமலுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் இல்லையா? உபி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ் டன் இளைஞர் காங்கிரஸும், காங்கிரஸ் சேவாதளமும் இணைந்து படுகொலைகள் புரியவில்லையா? திருட்டுத்தனமாய் பாபர் மசூதியில் வைக்கப்பட்ட ராமர் பொம்மையை வழிபட கதவைத்திறந்தது ராஜீவ் இல்லையா? 92 மசூதி இடிப்பின் போது ஒரு லட்சம் ராணுவத்தினர் மசூதியை இடிப்பதற்கு பாதுகாப்பு வழங்கவில்லையா?

பிஜேபி இந்து அமைப்புகளுக்கும், காங்கிரஸுக்கும் இடையில் ஒரு வித்தியாசமும் இல்லை. இஸ்லாமிய மக்கள் மீது காங்கிரஸுக்கு எவ்வித அக்கரையும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு இந்து மக்கள் மீது பிஜேபி க்கும் ஒரு அக்கரையும் இல்லை என்பதும் உண்மையே. எதிரும் புதிருமான கொள்கைகளை கொண்டிருப்பதைப்போல் படம் காண்பிக்கும் இந்த இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது செயல்படுத்திய கொள்கை ஒன்றுதான். தனியார்மயம், தாராளமயம், உலகமயம். விலைவாசி எட்டமுடியாத உயரத்தில் நிற்பது தொடங்கி, இன்று மலைக்க வைத்திருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல்வரை அனைத்திற்கும் ஊற்றுக்கண்ணாய் இருப்பது இரண்டு கட்சிகளும் தட்டாமல் செயல்படுத்தும் இந்த பொருளாதாரக் கொள்கைகள் தான்.

இந்து என்றும் முஸ்லீம் என்றும் கிருஸ்தவம் என்றும் பேதம் பார்க்காமல் லவ்ஹூல் மஹ்பூழ் ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் தீர்க்க தரிசனம் நிறைவேறும் நிமித்தமாக ஏவப்படும் பிரம்மாஸ்திரமாய் உழைக்கும் மக்களைத் தாக்கும் தனியார்மய கொள்கைகளை அட்டியின்றி நிறைவேற்றிவரும் இக்கட்சிகள் நடத்தும் நாடகத்தை சிந்திக்கும் மக்களால் மதிக்க முடியுமா? மக்கள் கழுத்தறுக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றிக்கொண்டு இந்து என்றும் முஸ்லீம் என்றும் பக்கம் பிரித்து வரும் இவர்கள் முகத்தில் காறி உமிழாமல் மக்களுக்கு ஒரு விடிவும் இல்லை.

தங்கம்: அழகா, ஆபாசமா?


கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ஆசாரி இளைஞர்களையோ இப்போது காணவில்லை. முழு இடமும் தன் உருவத்தை தலைகீழாக மாற்றியிருந்தது. தங்கத்தை நம்பி வாழ்ந்த அந்த மக்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்?

பாரம்பரிய தங்கநகைத் தொழிலின் அழிவு!

கோவையிலும் சரி, பொதுவாக நமது நாட்டிலும் சரி, தங்க நகை உருவாக்கம் என்பது முழுவதுமாக ஒரு நிலபிரபுத்துவ பாணியிலான உற்பத்தியாகவே இருந்துள்ளது. தங்க ஆசாரிகள், தமது வீடுகளிலேயே பட்டறைகளை அமைத்திருப்பர்; அவர்களது மொத்த குடும்பமும் சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடும். நகை தேவைப்படுவோர் தங்கத்தை (நகையாகவோ, நாணயமாகவோ) ஆசாரியிடம் கொடுத்தால் அவர் நகையாக வார்த்துத் தருவார்.

ஒரு நகையின் டிசைன்/ மாடல் போன்றவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அதில் கல்பதிப்பது, அந்த நகையில் இருக்கும் பால்ஸ், கம்பி போன்றவைகளை டிசைனுக்குத் தகுந்தவாறு நுணுக்கமாக பொருத்துவது, மெருகூட்டுவது என்று அதன் உருவாக்கத்தின் சகல அம்சத்திலும் அந்த ஆசாரியே பங்குபெற்றிருப்பார்.

இவ்வகையான உற்பத்தி முறையில் ஒரு நகையை உருவாக்க அதன் வேலைப்பாடுகளின் நுணுக்கத்தைப் பொருத்து ஒருவாரமோ பத்துநாளோ ஆகலாம்.

இந்தப் பழையகால உற்பத்திமுறையில் தங்க நகை வடிவமைப்புத் தொழில் பல நூற்றாண்டுகளாக அப்படியே தேங்கி நின்றது. ஏனென்றால் நுகர்வு குறைவு. தேவைக்கதிகமாக வாங்கிப் பூட்டி வைப்பது என்பது போன்ற வழக்கங்கள் மிக மிக சில மேட்டுக்குடி குடும்பங்களிலேயே இருந்தது. மேலும் உற்பத்தி அதிகமாகி அதை சந்தையில் தள்ளியாக வேண்டும் எனும் கட்டாயமும் எழவில்லை.

புதிய தாராளவாதக் கொள்கையின் அறிமுகம் இந்த நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் புதிதாக உருவாகி வந்த சேவைத்துறை ஊழியர்களுக்கும் ஐந்திலக்க சம்பளம் என்பது சாதாரணமாகிவிட்டபடியால்ல், அத்துறைகளின் மாப்பிள்ளைமார்களுக்கும் பெற்றோர்களுக்கும் மணப்பெண் வீட்டை ரத்தம் வர கறப்பதற்கான வாய்ப்பும் கூடியது. தங்கம் ஒரு சேமிப்பு என்ற நடுத்தர வர்க்க மனோபாவத்தைக் கடந்து, அது இப்போது அந்தஸ்தின் அடையாளமாகி விட்டது.

நகை நுகர்வின் அதிகரிப்பு, அதன் உருவாக்க முறையில் மாற்றத்தை தோற்றுவித்தது. இதன் விளைவாக அத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடையேயும் தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து பெரும் மாற்றங்கள் உருவாகத் துவங்கின.

நகைத் தொழில் அதிகமாக நடந்து வந்த கோவையில் தொண்ணூறுகளின் இறுதியில் நகைப் பட்டரைத் தொழிலாளிகள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். முன்னொரு காலத்தில் ‘ஜே ஜே’ என்று நகைப் பட்டறைகள் நடந்து வந்த சலீவன் வீதி, குரும்பர் வீதி போன்ற பகுதிகள் எழவு விழுந்த வீடுகள் போன்று ஆனது. 98ல் இருந்து இரண்டாயிரத்திரண்டாம் ஆண்டுக்குள், நான்கே ஆண்டுகளில் சுமார் 300 நகைத் தொழிலாளிகளுக்கும் மேற்பட்டோர், நகையைக் கழுவப் பயன்படும் சயனைடைத் தின்று தற்கொலை செய்துகொண்டார்கள்.

முப்பதாயிரம் பேர்களுக்கு மேல் ஈடுபட்டிருந்த நகைத் தொழிலில் இருந்து இருபதாயிரம் பேர் காணாமல் போயினர். 2002 வாக்கில் வெறும் பத்தாயிரம் பேர் தான் ஈடுபட்டிருந்தனர். இந்த வீழ்ச்சி 98க்குப் பின்னர்தான் உணரப்பட்டது என்ற போதிலும், வீழ்ச்சிக்கான விதை அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தூவப்பட்டுவிட்டது.

தாராளமயமும், நுகர்வுக் கலாச்சாரமும் ஊட்டிய தங்க போதை!

1991இல் என்.ஆர்.ஐ இந்தியர்கள் இந்தியாவுக்குள் தங்கம் கொண்டு வருவதில் இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மேலும் தங்கம் இறக்குமதி செய்வதில் இருந்த மற்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ன. 1990ல் இருந்து 1998 காலகட்டம் வரை தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 15 சதவீதமாக வளர்ச்சியுற்றது. இது அதே காலகட்டத்தில் வளர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட, எண்ணை, சர்க்கரை உள்ளிட்ட மற்ற பொருட்களுக்கான தேவை அதிகரித்த விகிதத்தை விட, உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரித்த விகிதம் மிகவும் அதிகமாகும்.

இப்படி வெள்ளமென உள்நுழைந்த தங்கம், நகை உருவாக்கத் தொழிலில் மாற்றத்தைக் கோருகிறது. அதே காலகட்டத்தில் சிறிய அளவிலான நகைக் கடைகளுக்குப் போட்டியாக வட்டார அளவிலான வீச்சு கொண்ட நகை மாளிகைகள் உருவாகத் தொடங்கின. வாடிக்கையாளர்களில் ஒரு பெரும் பகுதியினர் இனிமேலும் ஆசாரிகளிடம் சென்று நாட்கணக்கில் காத்திருந்து அவர்கள் செய்து தரும் டிசைனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறத் துவங்கியது.

கடைக்குச் சென்றோமா பத்துக்கு இருபது டிசைன்களைப் பார்த்தோமா அதில் ஒன்றைப் பொறுக்கியெடுத்தோமா என்று வேலை சுளுவாகியது. இத்தகைய மாளிகைகள், தமது ஷோரூம்களில் வைத்து விற்கும் நகைகளை ஏதாவது ஒரு பட்டறையில் தங்கப் பாளங்களைக் கொடுத்து முழு நகையாக செய்து வாங்கி வந்தன.

இது நகைப் பட்டறைகளுக்கு விழுந்த முதல் அடி. தமது வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினரை கவர்ச்சிகரமான ஷோரூம்கள் கொண்ட நகை மாளிகளிடம் அவர்கள் இழந்தனர்.

நகை மாளிகைகளுக்கு இவர்கள் செய்து கொடுத்தாலும், லாபம் முன்பை விடக் குறைவு தான். ஆனாலும் ஓரளவுக்கு வேலையிழப்பை சமாளித்து வந்தவர்களுக்கு இன்னுமொரு இடி சங்கிலித்தொடர் நகை மாளிகைகளின் வரவால் ஏற்பட்டது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் கொழுத்து விட்ட மேட்டுக்குடி வர்க்கம், வாழ்க்கைத்தரமும் சேமிப்பும் மேம்பட்ட நடுத்தர வர்க்கம், இவர்கள் அனைவரிடமும் நிலவிய பிற்போக்குத்தனமான நகை மோகமும், நகை முதலாளிகளுக்கு பொன்னானதொரு வாய்ப்பை, மெய்யாகவே தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கியது.

நகைக்கடையை சுமக்கும் மணமகள்கள்: செல்வத்தின் செருக்கு!
நுகர்வு மோகத்துக்கான வடிகாலாகவும், அந்தஸ்தைக் காட்டிப் பீற்றிக் கொள்ளத் தோதான பகட்டாகவும், அதே நேரத்தில் எச்சரிக்கை உணர்வு மிக்க இந்திய நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பெட்டகமாகவும், லஞ்ச ஊழல் கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கும் வரி ஏய்ப்பு செய்வதற்குமான கையடக்கமான முதலீடாகவும் இருந்த தங்கம், தனிச்சிறப்பானதொரு இடத்தை சந்தையில் பிடித்தது.

ஜாய் ஆலூக்காஸ், கல்யாண் ஜுவல்லரி, ஸ்ரீ குமரன் நகை மாளிகை, ஜோ ஆலுக்காஸ் சன்ஸ், மலபார் கோல்ட், ஆலாபட் ஜுவல்லரி, தனிஷ்க் என்று புற்றீசல் போலக் கிளம்பின சங்கிலித் தொடர் நகைக்கடைகள். இவர்களில் பலர் பாரம்பரிய நகை வியாபாரிகள் அல்ல என்பதுடன்,கார்ப்பரேட் நிறுவனங்களும், கறுப்புப் பண மாஃபியாக்களும்தான் இன்று இத்தொழிலில் கோலோச்சுகின்றனர்.

இவர்களுடைய விற்பனைக்கு ஏற்கெனவே வாடிக்கையாளர்களிடம் நிலவி வந்த தங்க மோகம் போதுமானதாக இல்லை. வாழ்த்து அட்டை வியாபாரிகளும் பரிசுப்பொருள் வியாபாரிகளும், “தந்தையர் தினம், தனயர் தினம், தமக்கையர் தினம், காதலர் தினம், காதல் கைகூடாதவர்கள் தினம்” எனப் பலவகையான தினங்களை உற்பத்தி செய்வதைப் போல நகை வியாபாரிகள் புதிய சம்பிரதாயங்களை உருவாக்கத் தொடங்கினர். ‘உயர்’சாதிகளிலிருந்து மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்தும் நடுத்தர வர்க்கம் பரவலாகத் தோன்றி விட்டதால், இன்ன ஜாதிக்கு இன்ன தாலி என்றும், இன்ன ராசிக்கு இன்ன ராசிக்கல் என்றும் பரிந்துரைக்க ஜோதிட ‘வல்லுநர்களை’ பெரும் நகைக் கடைகள் அமர்த்திக் கொண்டனர்.

ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் கேள்வியே பட்டிராத அக்ஷய த்ரிதியை என்ற ஒரு பண்டிகையை பரணிலிருந்து தூசு தட்டி எடுத்தனர். அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று மாறி மாறி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அட்சய திரிதியை நாளில் நகை வாங்கினால் ‘நல்லது’ என்றும் ‘ஐசுவரியம்’ பொங்கும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர்.

மேல் வர்க்கத்தாரின் மீது பிரமிப்பு கொள்ளும் அடித்தட்டு வர்க்கத்து மக்களும் கூட அந்த நாளில் “ஒரு குந்துமணி அளவுக்காவது வாங்கித்தான் வைப்போமே” என்று சிந்திக்கும் அளவுக்கு அக்ஷய த்ரிதியை ஒரு சடங்காகவே மாறிப்போனது. நல்லதோ கெட்டதோ ஒரு தேவைக்குப் பயன்படும் என்ற நியாயத்தைக் கூறிக்கொண்டு, கடன் வாங்கியாவது அந்த நாளில் தங்கத்தை வாங்குவது ஒரு பழக்கமானது. போதும் போதாதற்கு மக்களிடையே நிலவும் சினிமாக் கவர்ச்சியும் துணைக்கழைத்துக் கொள்ளப்பட்டது. துணிக்கடைகளைப் போலவே நகைக்கடைகளுக்கும் பிரபல நடிகைகள் நடிகர்கள் பிராண்டு அம்பாசிடர்களாகினர்.

கூலிகளாய் ஆக்கப்பட்ட தங்கநகை பட்டறை முதலாளிகள்!

இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் பரவலாக சிறிய யூனிட்டுகளில் நவீன இயந்திரங்கள் இடம்பெறத் துவங்கின. இதற்கிடையில் பாரம்பரிய நகைத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து வேலைச் சந்தையின் போட்டியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளை சங்கிலித் தொடர் நகை மாளிகைகள் தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் ஒழித்துக் கட்டின.

ஓரளவுக்கு நவீன நகை மாளிகைகளின் தாக்குதலை சமாளித்து குற்றுயிரும் குலை உயிருமாக மிஞ்சிய நகைப்பட்டறைகள் பெரும் நகைக்கடைகளுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்து தரும் யூனிட்டுகளாக மாறிப்போயின. மொத்தமாக அவர்களின் வாடிக்கையாளர் அடித்தளமே ஆட்டம் கண்டு நொறுங்கிப் போனது. சிறுபட்டரைகளிடம் மிச்சம் மீதியிருந்த சுயேச்சைத் தன்மையையும் முற்றாக ஒழிந்து முழுக்க முழுக்க பெரிய நகைமாளிகைகளை அண்டியிருக்கும் அத்துக் கூலிகளாக முழுமையாக மாறிப்போயினர். சிறு பட்டறை முதலாளிகள் எல்லாம் வேலை எடுத்துச் செய்யும் ஏஜென்டுகளாக மாற்றம் பெற்றனர்.

இந்தக் கால கட்டத்திற்குப் பின் ஒரே நகையை ஒரே பட்டரையில் தயாரிக்கும் பாணிக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒரு நகையில் பல்வேறு அம்சங்களை வெவ்வேறு பட்டறைகளில் தயாரித்து பின்னர் இன்னொரு பட்டறையில் இணைத்துக் கொள்வது என்ற பாணி உருவெடுத்தது. நாடெங்கும் பரவிக்கிடந்த தங்கநகைத் தொழிலாளர்கள் தமது சொந்த ஊர்களில் இருந்து ஒருசில நகரங்களில் வந்து குவிந்தனர். புகழ் பெற்ற ஜெய்பூர் மாடல், பெங்காலி மாடல், கேரள காசு மாலை, மாங்கா மாலை நகைகள் கோவையில் இருந்து தயாராகிறது என்ற செய்தியின் பின்னே உள்ள நிதர்சனம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான கேரள நகைத் தொழிலாளர்களும், பெங்காலித் தொழிலாளர்களும் கோவையில் வந்து குவிந்துள்ளனர் என்பதாகும்.

சுரண்டப்படும் பல்தேசிய தொழிலாளிகள்!

இப்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் என்பது நிரந்தரமானதல்ல மூன்றிலிருந்து நாலாயிரத்துக்குள் சம்பளம் இருக்கும் மற்றபடி இன்செண்டிவ் அடிப்படையில் தான் வேலை செய்கிறார்கள். அதாவது இத்தனை கிராம் ஆபரண உற்பத்திக்கு இத்தனை இன்செண்டிவ் எனும் அடிப்படையில். கோவை நகரம் என்பது சென்னையை ஒப்பிடும் போது அதிகம் செலவு பிடிக்கும் நகரம். எத்தனை சிக்கனமாக வாழ்க்கை நடத்தினாலும் கூட நாலாயிரம் என்பது மாதத்தின் இருபதாவது நாளிலேயே தீர்ந்து போகும். எனவே இன்செண்டிவ் தான் தாக்குப்பிடிப்பதற்கும் ஊருக்கு ஏதோ கொஞ்சம் பணம் அனுப்புவதற்கும் இருக்கும் ஒரே வழி.

இந்தப் பட்டறைகளில் நவீன முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறை பழைய நிலபிரபுத்துவ பாணி உறவுகளோடு கைகோர்த்துக் கொண்டு, தொழிலாளிகளை கசக்கிப் பிழிகிறது. அதாவது, 8 மணி நேரம் அல்லது குறிப்பிட்ட நேர அளவிலான வேலை என்று கிடையாது; நிலையான சம்பளமும் கிடையாது. மாறாக அட்சய திரிதியை, தீபாவளி, முகூர்த்த தினங்கள் போன்று எப்போது பரபரப்பான விற்பனை நடைபெறும் நாள் வருகிறதோ அப்போது பெரு நகைக்கடைகள் தங்கக் கட்டிகளை இது போன்ற பட்டறைகளுக்குக் கொடுத்து நகையாக வாங்குவார்கள்.

அந்த சமயத்தில் மட்டும் ஊழியர்களை கசக்கிப் பிழிவது; அதுவும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தூங்காமலும், இடையில் பட்டறையை விட்டு வெளியேற தடை விதிப்பதும் (தங்கத் துணுக்குகளை நக இடுக்குகளில் மறைத்து எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற சந்தேகத்தில்) கழிவறை வரையில் கண்காணிப்பதும் என்று குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட காட்டுவதில்லை. தொழிலாளிகளும் அந்த நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு. சீசன் அல்லாத நாட்களில் சம்பளம் கிடையாது.

இப்படிப்பட்ட பட்டறைகள் பொதுவில் காற்றோட்டம் இல்லாமலும் அடைசலாகவும் தான் இருக்கும். தப்பித்தவறிக்கூட தங்கத் துகள்கள் பட்டறை முதலாளிகளுக்குத் தெரியாமல் வெளியேறுவதைத் தடுப்பதற்கே இந்த ஏற்பாடு. தொடர்ந்து உட்கார்ந்தே வேலை செய்வதால் மூலவியாதி, முதுகுவலி, தங்கம் உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களின் விளைவாய் ஆஸ்துமா போன்ற உபாதைகளோடு தான் பெரும்பாலான நகைத் தொழிலாளிகள் தமது வாழ்வை கழிக்க வேண்டியுள்ளது. சிறிய பட்டறைகளில் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருந்தாலும் அவர்களோடு சேர்ந்து சிறு முதலாளிகளும் வேலை செய்கிறார்கள்.

முதலாளித்துவ பாணி இயந்திர உற்பத்தியாய் இருப்பதால் பால்ஸ் ஒரு பட்டறை, மோதிரம் ஒரு பட்டறை, கம்மலுக்கு ஒரு பட்டறை, கல் பதிக்க, கம்பி நீட்ட என்று உதிரி உதிரியாகத் தயாராகி, கடைசியில் ஒரு பட்டறையில் இணைக்கப்படுகிறது. இதன் உடன் விளைவாக ஒரு நகைத் தொழிலாளிக்கு முழுமையான ஒரு ஆபரணத்தை உருவாக்கும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது.

டிசைன்களை உருவாக்க பட்டைய படிப்பு, கம்ப்யூட்டர் வடிவமைப்புக்கான படிப்பு என்று ஏற்பட்டதால் பாரம்பரிய தொழில் நுட்ப அறிவு முழுமையாக நிராகரிக்கப்பட்டு கிட்டத்தட்ட அழியும் தருவாயில் உள்ளது. முழுமையான ஆபரண உருவாக்கத் திறனும் நுட்பமும் கொண்ட தொழிலாளி வெறும் கம்பி இழுக்கும் வேலையோ கல்பதிக்கும் வேலையோ செய்யும்படிக்கு நிர்பந்திக்கப்படுகிறார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் குறைகூலிக்கு இது போன்ற பட்டறையில் தொழிலாளியாய்வேலைக்குச் செல்கிறார்.

சீசன் நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு எனும் நெருக்கடி காரணமாக, நாட்கணக்கில் தூக்கமில்லாமலும் ஓய்வின்றியும் இவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. தூக்கம் வராமல் இருக்க கனமான உணவைத் தவிர்த்தும், பிஸ்கட்டுகள் சாக்லேட்டுகள் போன்ற நொறுக்குத் தீனிகளைத் தின்று இரண்டு மூன்று நாட்கள் தாக்குப் பிடித்தும் வேலை செய்கிறார்கள் தொழிலாளர்கள். தொடர்ந்து தூங்காவிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஆனால் தண்ணீர் குடித்தாலோ அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்து போக வேண்டியிருக்கும் என்பதால் அவ்வப்போது உதடுகளை மட்டும் நனைத்துக் கொள்ள மட்டுமே தண்ணீர்.

தங்கத்தின் சூதாட்டமும், இரத்தக்கறை படிந்த வரலாறும்!

தென்னாப்பிரிக்க தங்கச் சுரங்கத்தில் ஒரு தொழிலாளி
சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 800 டன் தங்க நகைகள் விற்பனையாகியுள்ளது. இதில் கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பங்கு மட்டுமே அறுபது சதவீதத்திற்கும் அதிகம். உலகளவில் ஆண்டுதோறும் விற்பனையாகும் தங்கத்தில் 15% இந்தியாவில்தான் விற்பனையாகிறது. எனவே இந்தியாவை ‘தங்கத்தின் இதயம்’ என்கிறார்கள் தங்க வியாபாரிகள்.

தங்கம் இப்போது முன்பேர ஊக வணிகத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதாலும், டாலரின் வீழ்ச்சி காரணமாக பாதுகாப்பான முதலீட்டின் அடுத்த புகலிடமாகத் தங்கம் இருப்பதாலும், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அதன் விலை மூன்று நான்கு மடங்கு எகிறியுள்ளது. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான செயற்கையான விலையேற்றம் என்பது உழைக்கும் மக்களை அதன் அருகில் கூட வர முடியாமல் விரட்டியடித்துள்ளது.

பளபளக்கும் இந்த உலோகத்தின் வெளிச்சத்தில் தமது பகட்டினைக் காட்டும் சீமான்கள் இந்த வெளிச்சத்தின் கீழே இருண்டு கிடக்கும் கோடிக்கணக்கானோரின் வாழ்வை அறிந்திருக்கவே மாட்டார்கள்.

அழிந்து போன கோவை தங்க நகை தொழிலாளிகளை எண்ணியபடி காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தேன். கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையின் முன் கூட்டம் அடைத்துக் கொண்டிருந்தது. சிலர் முகமெல்லாம் சிரிப்பாக கடையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். பஞ்சடைந்த நகைத் தொழிலாளின் கண்கள் நினைவிலாடியது. இந்தப் பழைய உலகத்தின் அற்பத்தனங்கள் வைக்கும் செலவு என்பது ஊகபேர சூதாடிகள் நிர்ணயிக்கும் விலையான பவுனுக்கு பதினாறாயிரம் ரூபாய்கள் மட்டும் தானா…?

எங்கோ தென்னாப்ரிக்காவின் தங்க வயலின் பொந்துகளுக்குள் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் அற்று, நச்சுவாயுக்களை சுவாசித்து டன் டன்னாக பாறையை வெட்டி குந்துமணி குந்துமணியாக தங்கத்தைச் சேர்க்கும் அந்தக் கறுப்பினத் தொழிலாளியின் வியர்வைக்கும் இங்கே ஏதோவொரு சந்தினுள் ஒரு இருட்டு அறையினுள் குண்டு பல்பின் வெளிச்சத்தில் வெளியாகும் ஆஸ்துமா இருமலுக்கும் என்ன விலை வைக்க முடியும்? ஸ்பெயின் நாட்டுக் காலனியவாதிகள் கொன்றொழித்த இருபது கோடி செவ்விந்தியர்களின் ரத்தத்திலும் எண்ணி மாளாத கறுப்பின அடிமைகளின் ஏக்கப் பெருமூச்சின் வெப்பத்திலும் தோய்ந்த தங்கம் உங்கள் கழுத்தில் ஊறுகிறது.

சந்தி சிரிக்குது இராணுவத்தின் தேசபக்தி !


பல நூறு இந்தியச் சிப்பாய்களைப் பலிகொண்ட கார்கில் போர் மக்களுக்கு இலவசமாக வழங்கியது வெறும் தேசபக்தியை மட்டும்தான். ஆனால் இப்போர் வீரர்களுக்குக் காலணிகள் வாங்கியதிலும், செத்துப்போன வீரர்களுக்குச் சவப்பெட்டி வாங்கியதிலும், பல கோடிகளை சுருட்டிக்கொள்ள ஆளும் கட்சிக்குப் பயன்பட்டது. எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத ஊழல்களை அரங்கேற்ற இன்னும் அப்போர் பயன்படுகிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் ஆதர்ஷ் ஊழல்.

மும்பை-கொலாபா பகுதியில் இருக்கும் இராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி கார்கில் போர்வீரர்களுக்கும், அப்போரில் மாண்டவர்களின் மனைவிகளுக்கும் தரப்போவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டியை உருவாக்கியது மகாராட்டிர அரசு. இது தொடர்பாக எழுந்துள்ள ஊழல் விவகாரத்தில், நாளுக்கு ஒரு மோசடி குறித்த விவரம் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.

மகாராட்டிர முதல்வர் அசோக் சவான் தனது மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கியிருப்பது அம்பலமாகவே, சவானைப் பதவி விலக வைத்து அதைக் காட்டியே உத்தம வேடம் போட முனைந்தது, காங்கிரசு. ஆனால் உள்ளே செல்லச்செல்ல, காங்கிரசு, பாரதிய ஜனதா, சிவசேனா, அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள் என்று மிகப் பிரம்மாண்டமானதொரு ஊழல் வலைப்பின்னல் அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது.

முதலில் 6 மாடிகள், 40 வீடுகள் என்று போடப்பட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக 31 மாடிகள், 103 வீடுகள் என்று அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கப்பட்டபின், 60% வீடுகளை கார்கில் தியாகிகளுக்கும் மீதமுள்ள 40% வீடுகளைப் பொதுமக்களுக்கும் ஒதுக்குவது என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 34 பேர் மட்டும்தான் இராணுவத்தை சேர்ந்தவர்கள். அதிலும் வெறும் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர் முனையில் இருந்தவர்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு (சிவசேனா), முன்னாள் முதல்வர் சுசில் குமார் ஷின்டே (தற்போது மத்திய அமைச்சர்), பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி போன்ற சர்வகட்சிப் பிரமுகர்களும் ஆதர்ஷில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கின்றது.

ஓட்டுப்பொறுக்கிகளின் மோசடியைக் காட்டிலும், செத்துப்போன சிப்பாய்களின் உடலைக் காட்டி இராணுவ உயர் அதிகாரிகள் இதில் நடத்தியிருக்கும் கொள்ளைதான் மிகவும் கீழ்த்தரமானது. தரைப்படை முன்னாள் தலைமை தளபதிகள் என்.சி.விஜ், தீபக் கபூர், முன்னாள் கடற்படை தளபதி மாதவேந்திர சிங், வைஸ் அட்மிரல் மதன்ஜித் சிங், மேஜர் ஜெனரல் ஆர்.கே.ஹூடா ஆகிய அதி உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இக்குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

குடியிருப்பில் இடம் ஒதுக்க வேண்டுமானால், மும்பையில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். ஏற்கெனவே சொந்த வீடு இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் இருந்த போதிலும், குர்கானில் 6 பிளாட்டுகளும் மும்பையில் லோகன்ட்வாலாவில் ஒரு வீடும் வைத்திருக்கும் முன்னாள் தலைமைத் தளபதி தீபக் கபூர், அவை அனைத்தையும் மறைத்துப் பொச்சான்றிதழ் கொடுத்துள்ளார். ஆண்டு வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் வீடு ஒதுக்கப்படும் என்று விதிமுறை இருந்ததால், எல்லா இராணுவத் தளபதிகளும் தங்களது சம்பளச் சான்றிதழை மறைத்து, போர்ஜரி வேலை செய்து சம்பளத்தைக் குறைத்துக் காட்டிச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நாக்பூரைச் சேர்ந்த பெரும் தொழிலதிபருமான அஜய் சஞ்சேதியின் மகன், மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோரது பெயர்களிலும் ஆதர்ஷ் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. “மாதச்சம்பளம் ரூ.8000 என்று குறிப்பிட்டுள்ள கார் டிரைவர் சுதாகர் மட்கே, 60 இலட்சம் மதிப்புள்ள ஆதர்ஷ் வீட்டை எப்படி வாங்க முடியும்? இந்த நபர் கட்காரியுடைய பினாமி” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் காங்கிரசின் மனிஷ் திவாரி.

விதிமுறைகளை மீறி இந்தக் குடியிருப்புக்கு அனுமதி அளித்த, 2004-இல் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதிப் வியாஸின் மனைவி நீனா வியாஸ், நகர்ப்புற வளர்ச்சித்துறையின் துணைச் செயலர் பி.வி. தேஷ்முக் என ஒரு பெரிய அதிகார வர்க்கக் கும்பலும் இக்குடியிருப்பில் தமக்கு இடம் ஒதுக்கிக் கொண்டுள்ளது.

கடலிலிருந்து 500 மீட்டர் தூரம் வரையில் கடலோர ஒழுங்குமுறைப் பிராந்தியம் என்றும் அந்த இடத்தில் வீடுகளோ கட்டிடங்களோ கட்டுவது சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறி மீனவர் குடியிருப்புகள் மற்றும் சேரிப்பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரம் வீடுகள் மும்பையில் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், தடை செய்யப்பட்ட இந்தப் பகுதியில் ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் எவற்றின் மீதும் அரசு கைவைக்கவில்லை.

மேற்கு கடற்கரை ஓரம் மும்பை முதல் கோவா வரையிலான இயற்கை எழில் கொஞ்சும் கடலோரப் பகுதி, உலகிலேயே ரியல் எஸ்டேட் விலை உச்சத்திலிருக்கும் பகுதிகளில் ஒன்று. இந்தக் கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புதான் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு.

கடற்படை துணை அட்மிரல் சஞ்சீவ் பாசின், “இக்குடியிருப்பு கட்டப்பட்டுள்ள இடம், கப்பல்தளத்துக்கு வெகு அருகில் தாக்குதல் எல்லைக்குள் இருப்பதால், கடற்படைத் தளத்தை உளவு பார்ப்பது எளிதென்றும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும்” இராணுவ அமைச்சகத்துக்கு எழுதியதால்தான் இத்திட்டம் விசாரிக்கப்பட்டு, தளபதிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. சஞ்சீவ் பாசின், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீதும் அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை என்றும் குறிப்பு எழுதியிருந்தார்.

ஆதர்ஷ் மோசடிகள் பற்றி அறிவதற்காக பூனாவைச் சேர்ந்த விஹார் துர்வே என்பவர், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் இத்திட்டத்தில் பயனடைந்தவர்கள் பற்றிக் கேட்டிருந்தார். அவருக்கு இரண்டுமுறை தகவல் மறுக்கப்பட்டது. காரணம், மராட்டிய அரசின் தகவல் கமிஷனர் ரமானந்த் திவாரியின் மகனுக்கும் ஆதர்சில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது பின்னர் தெரியவந்தது.

தற்போது முதலமைச்சர் மாற்றம், சி.பி.ஐ விசாரணை என்ற நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கொலாபாவில் உள்ள இராணுவ எஸ்டேட் அலுவலகத்தின் கோப்புகளில் முக்கியமான ஆவணங்கள் பல காணாமல் போயிருக்கின்றன. இராணுவத்துக்குச் சொந்தமான அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடு கட்டுவதற்கு மார்ச் 2000-இல் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழைக் காணவில்லை. முதன்முதலில் எந்தெந்த சிப்பாய்களுக்கு வீடு ஒதுக்குவதாகச் சொல்லி இந்தத் திட்ட முன்வரைவு முன்வைக்கப்பட்டதோ, அதனையும் காணவில்லை.

மகாராட்டிர அரசின் நகர்ப்புற வளர்ச்சிச் துறையில் ஆதர்ஷ் சொசைட்டி தொடர்பான கோப்புகளிலும் முக்கியமான காகிதங்களைக் காணவில்லை என்று சி.பி.ஐ. கூறியிருக்கிறது.

இரண்டு முன்னாள் முதல்வர்களும், மூத்த அதிகாரிகளும் கையொப்பமிட்ட ஆணைகள், சுற்றுச்சூழல் விதிகளைத் தளர்த்தி நகர்ப்புற வளர்ச்சி இலாகா கொடுத்த தடையில்லாச் சான்றிதழ், சாலையின் அகலத்தை 60 மீட்டரிலிருந்து 18 மீட்டராக குறைத்துக் கொண்டு, மீதியுள்ள 42 மீட்டர் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதற்கு ஆதர்ஷ் சொசைட்டிக்கு அரசால் வழங்கப்பட்ட அனுமதி, 6 மாடிகளை 31 மாடிகளாக உயர்த்தி கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி – இவை தொடர்பான ஆவணங்கள் காணவில்லை என்று சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.

ஆதர்ஷ் ஊழலைத் தொடர்ந்து, இதைவிடப் பிரம்மாண்டமான ரியல் எஸ்டேட் ஊழலான லவாசா ஊழல் அம்பலமாகியிருக்கிறது. விவசாய நிலங்கள், பழங்குடி மக்களின் நிலங்கள் அடங்கிய சுமார் 12,316 ஏக்கர் மலைப்பிராந்தியத்தை மகாராட்டிர அரசு 2001-இல் தாரை வார்த்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.

“சிறு கடை வியாபாரிகளையும், குடிசை வாசிகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்களுடைய கடைகளையும் வீடுகளையும் இடித்துத் தள்ளும் அரசு, ஆதர்ஷ் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்புகிறார், மேதா பட்கர். தனக்குச் சொந்தமான நிலத்தையே காப்பாற்றிக் கொள்ளமுடியாத இராணுவம், தேசத்தை எப்படிக் காப்பாற்றும் என்று எள்ளி நகையாடுகிறார். மும்பை சாந்தாகுரூஸ் விமான நிலையத்திற்கு அருகிலேயே இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு விலை பேசப்பட்டு கட்டிடங்களாக மாறியிருப்பதையும் அம்பலமாக்கியிருக்கிறார்.

நாடு முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமாக இருக்கும் பல இலட்சம் ஹெக்டேர் நிலங்களில் விலை பேசப்பட்டவை எத்தனை, எத்தனை ஆயிரம் கோடிகளை இராணுவ அதிகாரிகள் விழுங்கியுள்ளார்கள் என்ற விவரங்கள் ஒருக்காலும் வெளியே வரப்போவதில்லை.

ஆதர்ஷ் ஊழல் அம்பலமானவுடன் தலைமைத் தளபதிகள் கபூர், விஜ் ஆகியோர் “இந்த வீடுகள் சிப்பாய்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று எங்களுக்குத் தெரியாது” என்று பச்சையாகப் புளுகியிருக்கின்றனர். வீடுகளைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அறிவித்திருக்கின்றனர். தற்போதைய இராணுவத் தலைமைத் தளபதியோ, “இந்த சிறிய விசயத்தை வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது” என்று பேசியிருக்கிறார்.

நேர்மை, கட்டுப்பாடு, தியாகம், ஒழுக்கம் என்றெல்லாம் கதை சொல்லித்தான், சிவில் சமூகத்துக்கு மேம்பட்ட கேட்பாரற்ற அதிகாரமாக இராணுவம் பாதுகாக்கப்படுகிறது. பச்சைப் படுகொலைகள் பல அம்பலமாகி, காஷ்மீரே பற்றி எரியும் சூழ்நிலையிலும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் இரத்து செய்யக்கூடாது என்றும், தாங்கள் செய்யும் சட்டவிரோதப் படுகொலைகளுக்காக எல்லோரையும்போல நீதிமன்றத்தில் நின்று இராணுவம் பதில் சொல்ல முடியாது என்றும் திமிர்த்தனமாகப் பேசி வருகிறது இராணுவத்தின் அதிகார வர்க்கம்.

ஆனால், கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதப்பசுவாகச் சித்தரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் இராணுவத்தின் யோக்கியதை ஆதர்ஷ் ஊழலில் சந்தி சிரிக்கிறது. போர் முனையில் உயிர் விட்ட தனது சிப்பாய்களுடைய பிணத்தைக் காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டியிருக்கும் இராணுவ உயர் அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கிகளைக் காட்டிலும் தாங்கள் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

பொதுச்சொத்தை கொள்ளையிடுவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டிருக்கும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் இராணுவத்தின் உடுப்பையும் களைந்து நிர்வாணமாக்கியிருக்கின்றன. ஆயுதம் முதல் சிப்பாய்களுக்கான அன்றாட ரேசன் வரையில் இராணுவத்துக்காக செய்யப்படும் அனைத்துச் செலவுகளிலும், 10% கமிஷன் என்பது இந்திய இராணுவத்தில் அமல்படுத்தப்படும் எழுதப்படாத விதி. ஆதர்ஷ் ஊழலில் இந்த சதவீதக் கணக்கு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. 103-க்கு 100 ஊழல். அதாவது, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர்முனையில் இருந்தவர்கள்.

ஆதர்ஷ் என்ற இந்திச் சொல்லுக்கு முன்மாதிரி என்று பொருள். தேசத்துக்கே இராணுவம்தான் முன்மாதிரி எனும்போது, இராணுவம் சம்பந்தப்பட்ட ஊழலும் முன்மாதிரியாகத்தானே இருக்கவேண்டும்?

அமெரிக்காவை திட்டாதிர்கள் மூடர்களே!!!!


எது நடந்தாலும் அமெரிக்காவை குறை சொல்றது ஒரு பேஷனா போயிடுச்சு சார்! அதுவும் இந்த கம்யுனிஸ்டுகாரனுவ எதெடுத்தாலும் அமெரிக்காவை தொடாம பேசறதே இல்ல. அமெரிக்கா இல்லன்னா நம்ப நாட்டுக்கு கரண்டு பஞ்சம் வந்திடும் தெரியுமா? பின்ன பஞ்சத்த போக்கத்தான் அமெரிக்காவோட நம்ப பிரதமரு அணுசக்தி ஒப்பந்தம் போட்டாரு. அத போயி இந்த கம்யுனிஸ்ட் கட்சிகாரனுவ எதிர்கிறாங்க. சரி அதவுடுங்க நம்ப முன்னாள் சனாதிபதி அய்யா அப்துல் கலாம அமெரிக்க விமான நிலையத்துல தடவி பார்த்து சோதன போட்டபையாகட்டும், நம்ப மந்திரி சார்சு பெர்னாட்ச ஆடிய உருவி அமெரிக்காகாரங்க சோதனை போட்டப்பையும் நம்ப ஏதாவது கோவப்பட்டோமா? நாமும் அமெரிக்காவும் நன்பேண்டா!!!! அதனாலதான் அதெல்லாம் கண்டுக்கப்படாது.

சதாம் உசேன கொன்னா என்னா? அந்த நாட்டு மக்களை கொன்னா என்ன? அவ்வுளவு ஏன்? தோ… இங்க இருக்குற விடியோவ பாருங்களேன் .. இரண்டு பத்திரிகை நிருபர்களை அமெரிக்க ராணுவம் கொலை செய்யறத! அமெரிக்க ஆர்மிகாரனுவ பேசிக்கிட்டே … கிண்டல் செஞ்சிட்டே … பதர பதர ஓடுபவர்களை விரட்டி கொல்வதை. சரி அதவுடுங்க சார் . இத பாத்துட்டு நிங்க டென்சன் ஆகி அமெரிக்காவை திட்டி பதிவு போட்டா அல்லது எங்கியாவது பேசினா நம்ப பிரதமர் கோச்சிக்க போறாரு . ராசா விவகாரம், ஆதர்ஷ் விவகாரம் என எதா இருந்தாலும் சிரிப்பாரு. ஆனா அமெரிக்காவை திட்டுனா தாங்காது அவருக்கு. நம்ப தமிழ்நாட்டுல தின சனி பத்திரிகை மன்னிக்கவும் மலர் பத்திரிகையில் அப்புறம் வாசகர் கடிதம் வரும் . நமது இந்தியர்கள் வேளை செய்து சம்பாதிக்கும் தேசமான அமெரிக்காவை திட்டாதிர்கள் மூடர்களே என.

ஆனந்த சுதந்திரம்… …அடைந்து விட்டோமா?


இந்தியாவின் 63வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சூழலில், இந்த சுதந்திரம் அனைத்து இந்தியர்களுக்கும் பயன் அளித்திருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஊழலில் திளைக்கும் அரசியல் சூழலையும், நிராதரவாக நிற்கும் ஏழை – பாமர குடிமக்களையும் பார்க்கும்போது இது குறித்தெல்லாம் இந்திய விடுதலைப் போராளிகள் சிந்தித்து இருப்பார்களா? என்று தோன்றலாம்.

ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் மிகுந்த தொலைநோக்குடன் இந்தியாவின் இன்றைய நிலை குறித்து சிந்தித்ததுடன் அதை பதிவும் செய்திருக்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் கூட்டத்தில் 1949ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி உரையாற்றிய அறிஞர் அம்பேத்கார், இன்றைய இந்தியாவின் நிலை குறித்து தமது ஐயங்களை மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

“1950 ஜனவரி 26ம் தேதி முதல் இந்தியா மக்களாட்சி நாடாக செயல்பட தொடங்கும். அதாவது மக்களுக்காக, மக்களால், மக்கள் அரசு செயல்படத் தொடங்கும். அந்த நாளில் முரண்பாடுகளோடு கூடிய வாழ்விற்குள் நாம் நுழைய இருக்கிறோம். நம்மிடம் அரசியல் ரீதியான சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக – பொருளாதார ரீதியான சமத்துவம் இருக்காது. அதற்கு பதிலாக சமூக – பொருளாதார நிலையில் இந்தியர்களிடம் ஏராளமான முரண்பாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும்.”

“எவ்வளவு நாட்களுக்கு இவ்வாறு சமூக – பொருளாதார முரண்பாடுகளோடும், ஏற்றத்தாழ்வுகளோடும் நம்மால் வாழ முடியும்? சமூக – பொருளாதார நிலைகளில் சமத்துவத்தை எவ்வளவு நாட்களுக்கு மறுக்க முடியும்? சமூக – பொருளாதார சமத்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் செயலற்று, சும்மா இருந்து விட மாட்டார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பை, இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுக்குநூறாக தகர்த்து எறிவார்கள்!” என்று மாமேதை அம்பேத்கார் தீர்க்கதரிசனத்துடன் இன்றைய இந்தியாவின் நிலையை அன்றே முன்னறிவித்தார்.

இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியாக “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் தொகுத்தார். இந்த நெறிமுறைகளை இந்திய அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவார்கள் என்று நம்பினார். எனினும் பிறந்து சில காலமே ஆன இந்திய குடியரசின் தோள்களில் கூடுதல் சுமையை ஒரேயடியாக சுமத்தக்கூடாது என்ற அடிப்படையில், “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை”களை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு எதனையும் அவர் விதிக்க விரும்பவில்லை. மேலும் இதில் கூறப்பட்டுள்ள விடயங்களை அரசு உடனடியாக வலியுறுத்தி குடிமக்கள் வழக்கு தொடுப்பதற்கும் வகையில்லாத நிலையில் இந்த அத்தியாயத்தை படைத்தளித்தார். ஆனாலும் “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை அம்ல்படுத்தாமல் புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அம்பேத்கார் எச்சரித்தார்.

இந்திய அரசியல்வாதிகளைப்பற்றி அம்பேத்கார் கொண்டிருந்த ஐயம் நியாயமானதே என்று காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடுதல்; இவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தல்; ஏழை, பாமர, உழைக்கும் மக்களை ஏமாற்றி, அவர்களின் உடைமைகளை, உழைப்பை சுரண்டுதல்; தொழிலாளர்கள், பணியாளர்களின் உடல் நலம் குறித்து அக்கறையற்று இருத்தல்; குழந்தைகளுக்கு கல்வி மறுத்து அவர்களையும் உடல் உழைப்பு தொழிலாளிகளாக்குதல்; கல்வி, வேலை வாய்ப்பை மறுத்தல்; தொழிற்சாலை நிர்வாகத்திலிருந்து தொழிலாளர்களை அகற்றுதல்; பட்டியல் இனமக்களையும், பழங்குடியினரையும் ஏமாற்றி வஞ்சித்து சமூக அநீதி புரிதல்; சுயச்சார்பு வேளாண்மையை திட்டமிட்டு அழித்து இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக்குதல்; சுற்றுச்சூழலை, வனங்களை, வன உயிரிகளை பாதுகாப்பதற்கு பதிலாக அவற்றை திட்டமிட்டு அழித்தல்; சுயேச்சையாக செயல்படவேண்டிய நீதித்துறையை அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாற்றியமைத்தல் ஆகிய மக்கள் விரோத பணிகளையே இந்தியாவை இதுவரை ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் தொடர்ந்து செய்து வருகின்றன.

அரசின் மேற்கண்ட நடவடிக்கைகளால் நாட்டில் வசிக்கும் அனைத்து தரப்பினரும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்கள் பழங்குடி இனத்தவரும், பட்டியல் இனத்தவருமே

சத்தீஷ்கர், ஜார்கண்ட், ஓரிஸா, ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மலை மற்றும் வனப்பகுதிகளில் இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியம், பாக்சைட், நிலக்கரி, சிலிகா, கிரானைட் போன்ற அரிய கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. இந்த இயற்கை வளங்களை சூறையாடும் வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் அரசு அமைப்புகள் முனைந்து நிற்கின்றன.

இப்பகுதி மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதியையும் செய்து தராத அரசு அமைப்புகள் இம்மக்களின் வாழ்வுரிமையை பறித்தெடுப்பதில் முனைந்து நிற்கின்றன.

இதைப் புரிந்து கொண்டால் இந்தியாவில் தீவிரவாதம் உருவாவதற்கு மத்திய, மாநில அரசுகளின் நடைமுறைகளே காரணம் என்பது விளங்கும்.


“இந்தியாவின் பழங்குடி சகோதரர்களும், சகோதரிகளும் மிகநீண்ட காலமாகவே அரசு நிர்வாகம் என்பதை அராஜக நடைமுறைகளும், ஆதிக்க மனோபாவமும் கொண்ட வனத்துறை அதிகாரியாக – கொடூரமான மிருகத்தன்மை கொண்ட காவல்துறை அதிகாரியாக – பேராசை படைத்த நிலவரி வசூலிக்கும் அதிகாரியாக மட்டுமே பார்த்து வந்துள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இம்மக்களை சென்றடையவில்லை. மாறாக வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் இம்மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டே வந்துள்ளது!” என்று வி.ஐ.பி. ஒருவர் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த வி.ஐ.பி., அருந்ததி ராய் போன்ற எழுத்தாளரோ, மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ இல்லை.

இறையாண்மை கொண்ட இந்திய அரசின் பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள்தான் மேற்சொன்ன கருத்துகளை, ஒப்புதல் வாக்குமூலமாக கூறியுள்ளார். மாவோயிஸ்ட்களால் வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் கடந்த 2010 ஜூலை 14ம் தேதி டெல்லியில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திருவாளர் மன்மோகன் சிங் அவர்கள்தான் மேற்கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். ஆனால் இதை மாற்றுவதற்கான ஆக்கப் பூர்வமான வழிகள் எதுவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக ஆயுதப்படைகளை அதிகரிக்கும் போக்கே நிலவி வருகிறது.

இந்திய சுதந்திர போராளிகளின் கனவுகளை, அம்பேத்காரின் திட்டங்களை தவிடுபொடியாக்கி, தீவிரவாதத்திற்கு வித்திட்டு, நீர் வார்த்து, உரமிட்டு வளர்த்தவர்கள் அதற்கான காரணங்களை அறிந்தும், அது குறித்து முழுமையா ஆய்வு செய்யாமல் கலைந்து சென்றனர்.

ஒரிஸா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்தில் ஏராளமான நிலக்கரி வளம் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கடந்த 1987ம் ஆண்டு மத்திய அரசு கையகப்படுத்தியது. இந்தியாவின் நவரத்தினங்கள் என்று கூறப்படும் மிகச்சிறந்த நிறுவனங்களி்ல் ஒன்றான இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்திடம் இந்த நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இப்பகுதி மக்களுக்கு உரிய இழப்பீடும், மாற்று குடியிருப்பு வசதிகள், சாலை போன்ற அடிப்படை வசதிகள், கல்வி – மருத்துவம் போன்ற அத்தியாவசிய வசதிகள், வேலைவாய்ப்பு போன்றவை செய்து தருவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

அப்பகுதி மக்கள், விவசாயத்தை புறக்கணிக்க நிர்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களது நிலங்களில் புழங்கும் உரிமை ஆயுத முனையில் பறித்தெடுக்கப்பட்டது. அத்துமீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

ஆனால் அரசு வாக்குறுதி வழங்கியபடி இழப்பீடோ, மற்ற வசதிகளோ இந்த கட்டுரை எழுதப்படும் இன்றுவரை செய்து தரப்படவில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்வாதாரங்களை தியாகம் செய்துவிட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக நின்ற அம்மக்கள் ஒரிஸா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மிக நீண்டகாலம் நடைபெற்ற வழக்கில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரிஸா உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு தீர்ப்பளித்தது. சுமார் 20 ஆண்டுகள் வாழ்விழந்து தவித்த அம்மக்களுக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம்.

இந்த மேல்முறையீட்டு மனுவை மூன்று ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த கடந்த 2010 ஜூலை 19ம் தேதியன்று தீர்ப்பளித்தது. இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள அம்பேத்காரின் கருத்துகளுடன் தீர்ப்பை ஆரம்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஃடாப் ஆலம் மற்றும் பி. எஸ். சவுகான் ஆகியோர் ஒரிஸா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளனர்.

இலட்ச கணக்கான இந்தியர்களின் அடிப்படை வாழ்வுரிமைகளை பறித்து இந்திய அரசு உருவாக்குவதாக கூறும் துர்வளர்ச்சி காரணமாக, குடிமக்களுக்கு வளர்ச்சி என்ற சொல்லே வெறுக்கக்கூடியதாக, அச்சமூட்டக்கூடியதாக மாறிவிட்டதை நீதிபதிகள் இந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் அரசின் இவ்வாறான ஒவ்வொரு பொறுப்பற்ற செயல்பாடும் தீவிரவாத அரசியலுக்கும், புரட்சிகர செயல்பாடுகளுக்கும் வித்திடுவதையும் நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டுகின்றனர்.

மாபெரும் தொழில்திட்டங்களுக்காக கட்டாயமாக இடம் பெயர்க்கப்படும் மக்களுக்கு தேவையான சாலை, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்படும் அவலத்தையும் நீதிபதிகள் இந்த தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு சமூக அவலத்தை விமரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கான காரணத்தையோ, தீர்வுகளையோ முழுமையாக விவாத்தித்தார்களா என்பது கேள்வியே

மாமேதை அம்பேத்காரின் தீர்க்கதரிசனம், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு ஆகிய அனைத்தும் நாட்டில் தீவிரவாதம் உருவாவதற்கான காரணங்களை தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. ஆனால் இவற்றை திரும்பியும் பாராமல் தீவிரவாதிகளை ஒடுக்கவதற்காக பசுமை வேட்டை போன்ற ஆட்கொல்லித் தீர்வுகளை அரசு அமைப்புகள் முன்வைக்கின்றன.

இந்த அவலச் சூழலில் இந்தியாவின் 63வது சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. சுயேச்சையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டிய பத்திரிகைத்துறையும், நீதித்துறையும் கண்ணுக்குத் தெரியாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கியிருக்கின்றன.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களும் ஏதோவொரு சுரண்டலுக்கு ஆளாகியே வாழ்ந்து வருகின்றனர்.

இதுதான் ஆனந்த சுதந்திரமா? இதற்குத்தான் சுதந்திரப் போராளிகள் ஆசைப்பட்டனரா? சுதந்திரப் போராளிகளின் கனவுகளை நனவாக்குவதில் குடிமக்களுக்கு பங்கு உள்ளதா?

இந்தியாவின் இன்றைய அவல நிலையை மாற்றுவதில் இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் பங்குள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை மனித உரிமைப் பார்வையில் கற்றுக் கொள்வதும், மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதுமே இன்றைய தேவை. இது ஆட்சித்துறை, நீதித்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மிகமுக்கிய தேவையாகும்.

இவ்வாறு கற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு அரசு அமைப்புகளை தொடர்ந்து வலியுறுத்துவதும், தேவையான இடங்களில் போராடுவதுமே இந்திய சுதந்திரப் போராளிகளின் கனவுகளை நனவாக்கும். இல்லாவிட்டால் ஆகஸ்ட் 15 என்பது மூவண்ண கொடியேற்றும் ஒரு விடுமுறை நாளாக மட்டுமே இருக்கும்.

-பி. சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

நன்றி: சட்டப் பாதுகாப்பு, ஆகஸ்ட்-2010