தமிழகத்தை அச்சுறுத்தும் சாதிக் கூட்டணி


சாதி இந்துக்களின் வன்கொடுமைகளிலிருந்து தலித் மக்களை ஓரளவுக்குப் பாதுகாக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இன்று விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. ஆணாதிக்கவாதிகளின் கொடுமை களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக ‘ஆண்கள் பாதுகாப்புச் சங்கம்’ என்று இதே தமிழ் நாட்டில் அண்மையில் தொடங்கப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களால் சாதி ஆதிக்கவாதிகளும், ஆணாதிக்கவாதிகளும் பாதிக்கப்படுவதாகத் தற்பொழுது புலம்பத் தொடங்கியுள்ளனர். ஒரு சட்டம் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகிறது என இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையில் இருந்து பார்க்காமல், அந்த பாதிப்புக்குக் காரணமாக இருப்பவர்களின் நிலையில் இருந்து அச்சட்டத்தை மதிப்பிடுவது அறிவுடை ஆகுமா?

தமிழினப் பாதுகாவலராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மருத்துவர் ராமதாஸ், இன்று தன் சாதிக்காரர்களை மட்டும் திரட்டி, சேரித்தமிழர் களுக்கு எதிராகப் ‘பேருரை’ ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இவ்வுரையை மக்கள் தொலைக்காட்சி (தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் தொலைக்காட்சி என்று இதற்கொரு பெருமை உண்டு. அந்தப் பெருமைக்குச் சொந்தக் காரர்கள் தூய சாதியவாதிகளாகவும் இருக்கிறார்கள் என்பது செந்தமிழுக்குப் பெருமை சேர்க்குமா என்று தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டிய தருணம் இது) நேரடியாக ஒளிபரப்புச் செய்ததைப் பார்த்தீர்களா என்று பலரும் என்னிடம் கேட்டனர்.

அவர்களுக்கு நான் சொன்ன பதில் இதுதான்: ‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்’ நான்கு வர்ணங்களையும் நானே உருவாக்கினேன் என்று மார் தட்டிய கிருஷ்ணனின் பகவத் கீதையை ‘முட்டாளின் உளறல்’ என்று செவிட்டில் அறைந்தாற் போல் புரட்சியாளர் அம்பேத்கர் கூறினார். அந்த நான்கு வர்ணங்கள்தான் பிற்காலத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சாதிகளாகப் பரிணாமம் பெற்றன. அந்தச் சாதிகளை ஆதரித்து, நியாயப்படுத்தி, பாதுகாத்து, அதன் மூலம் பிற சாதியினரை இழிவுபடுத்தி, அவர்கள் மீது வன்முறையை அவிழ்த்துவிடும் எவனுக்கும் அம்பேத்கர் சொன்ன கருத்தையே பதிலாக வழிமொழிகிறேன் எனப் பதிலுரைத்தேன்.

பகுத்தறிவுக்கு எதிரான சாதிய மனம் எத்தகைய அறிவியல் ஆதாரங்களையும், சமூக உண்மைகளையும் ஏற்காது. எனவே, இத்தகைய உளறல்களைச் சாதியை முற்றாக மறுக்கும் எவரும் விவாதித்து நேரத்தை வீணாக்கத் தேவையில்லை. ஆனால், இத்தகைய சமூகக் குற்றத்தை ஒரு மாநாட்டைத் திரட்டிச் செய்யும் சமூகக் குற்றவாளிகள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது அதைவிடப் பெருங்குற்றம். கடந்த ஆண்டு இதே இடத்தில் நடத்தப்பட்ட மாநாட்டில், முன்வைக்கப்பட்ட வன்கருத்தியல்களால்தான் தருமபுரியில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றன.

அவர்களின் உடைமைகளும் சூறையாடப்பட்டன. எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி அதே இடத்தில் மீண்டும் தலித் மக்களுக்கெதிராக வன்மத்தை உமிழும் உரைகளைப் பேசவும் ஒளிபரப்பவும் தாராளமாக அனுமதி அளித்த நீதிமன்றத்தாலும் அரசாலும்தான் மாநாடு தொடங்கும் முன்பே, மரக்காணம் தலித் மக்கள் மீது திட்டமிட்ட வன்கொடுமைகள் ஏவப்பட்டிருக்கின்றன. இத்தகைய அருவெறுப்பான கருத்து வன்மங்களைத் தலித் மக்கள் மீது சுமத்தும் முன்னணித் தலைவர்கள் மீது வழக்குத் தொடரப் பட்டிருந்தால், மரக்காண வன்கொடுமைகள் அரங்கேறி இருக்காது.

வன்கொடுமைகள் நிகழ்வதற்கு முன்பே தடுக்க வேண்டிய அரசு அலட்சியமாக நடந்துகொள்கிறது. இச்சட்டத்தை நடை முறைப்படுத்தாததுதான் குற்றமே தவிர, சட்டத்தில் எந்தப் பிழையும் இல்லை. அண்மையில் ‘விஸ்வரூபம்’ என்ற திரைப்படம் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்தது என்பதற்காக, அதைத் திரையிடவிடாமல் தடுத்து நீதிமன்றத்தில் கடுமையாக வாதாடிய அ.தி.மு.க. அரசு, சாதியவாதிகளை மட்டும் தலித் மக்களுக்கு எதிராகப் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதன் நோக்கம் என்ன?

வன்னியர் சங்கமாக உருவெடுத்து, பின்னர் எந்தவொரு சாதியாலும் தனியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்ட காரணத்தால், ‘பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற முகமூடி அணிந்து கொண்டது அனைவரும் அறிந்ததே. உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கரிய சிந்தனையின் அடிப்படையில், கன்´ராம் அவர்கள் கால் நூற்றாண்டுகாலம் கடுமையாக உழைத்து, ஒரு சமூகக் கூட்டணியை உருவாக்கினார். சாதிய சமூகத்தில் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் இழிநிலைக்குத் தள்ளப் பட்ட பெரும்பான்மை மக்களை (பகுஜன் சமாஜ்) பிற்படுத்தப் பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மதச்சிறுபான்மையினர் என நேர் மறையாக அணிதிரட்டி, தொண்ணூறுகளில் ஆட்சி அதிகாரத்தை அவர் கைப்பற்றினார். பின்னர், அது மாயாவதி தலைமையில் சீர் குலைந்து போய்விட்டது என்பது தனிக் கதை.

கன்´ராமின் தத்துவத்தை நகல் எடுத்து, ஆட்சி அதிகாரக் கனவில் திளைத்த ராமதாஸ், சில ‘தலித் ஒற்றுமை’ நாடகங்களை அரங்கேற்றினார். இதைத் தலித் மக்கள் தொடர்ந்து சந்தேகித்தும் எதிர்த்தும் வந்தனர். அதற்கான காரணத்தை இன்று எளிதில் புரிந்து கொள்ள முடியும். எவ்விதச் சமூக இணக்கத் தையும் உருவாக்காமல் அரசியல் தலைவர்கள் மட்டுமே ஒன்றிணைவதால் சமூக நல்லிணக் கத்தைப் பேணிவிட முடியாது. எந்தவொரு சாதியும் தன்னைச் சாதி நீக்கம் செய்து கொள்ளாமல், ஒன்றிணையவே முடியாது. அப்படி ஒன்றிணைந்தாலும், அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னால் சாதி ஆதிக்கம் பதுங்கி நிற்கும்; அதிகாரக் கனவு கைகூடிய பிறகு, அது தன் கொடூர முகத்தை வெளிப்படுத்தும்.

ஆகவேதான் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மதச்சிறுபான்மையினர் என நேர்மறையான அடையாளங்களுடன் அரசியலில் மட்டுமின்றி, சமூகப் பண்பாட்டுத் தளத்திலும் அணிசேரும் போதுதான் அது நிலையான சமூக இணக்கத்துடன் கூடிய அதிகாரப் பகிர்வையும் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தும். ஆனால் ராமதாஸ் தற்பொழுது உருவாக்கி யிருப்பது அப்பட்டமான சாதிவெறிக்கூட்டணி. இது, காலங் காலமாக மநுதர்ம அடிப்படையில் ஊரையும் சேரியையும் நிரந்தரமாகப் பிரிக்கும் கூட்டணி. தன் சுயசாதி முன்னேற்றத்திற்கு (அதுகூட இன்று சுருங்கி, தன் குடும்ப முன்னேற்றமாகி விட்டது. அதற்கு வன்னியர் இரையாவதை அவர்களே உணரத் தொடங்கி விட்டனர்). சேரித் தமிழர்களை எதிரிகளாக அடையாளம் காட்டு கின்றனர். அதாவது தன் சாதியின் சூத்திரப் பிறவி இழிவு அடையா ளத்திற்குக் காரணமான சாதி அமைப்பையும், அந்த அமைப்பை இன்று வரை நியாயப்படுத்தும் பார்ப்பனர்களையும், பிற இடை நிலைச் சாதி வெறியர்களையும் பங்குதாரர்களாகக் கொண்ட கூட்டணி இது. அந்த வகையில், சாதி அமைப்பைத் தகர்ப்பதையே தங்களின் பண்பாடாகக் கொண்டுள்ள தலித்துகளுக்கு எதிரான கூட்டணி இது. அதனால்தான் அதற்குத் ‘தலித் அல்லாதோர்’ என்ற நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.

“இந்தியாவின் (2500 ஆண்டுகால) ஒட்டுமொத்த வரலாறே பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்குமான போராட்டமே” என்றார் அம்பேத்கர். இதைத்தான் ஆரியர் திராவிடர் போராட்டம் என்று பெரியார் அடையாளப்படுத்தினார். பார்ப்பனியம் என்பது ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிக்கும் கொள்கை. பவுத்தம் சமத்துவத்தை வலியுறுத்தும் கொள்கை. படிநிலைப்படுத்தப்பட்ட சாதிய சமூக அமைப்பையும் அதற்கு ஆதாரமான (இந்து) மதத்தையும் எதிர்த்து, ஏற்க மறுத்த தொல்குடி மக்கள் சமத்துவமான பவுத்த பகுத்தறிவு நெறியைப் போற்றியதால், சேரிக்குத் தள்ளப்பட்டனர். சாதிய அமைப்பை ஆதரித்தவர்கள் சூத்திரர்களாக்கப்பட்டு, இவ்வமைப்பை எதிர்க்கும் சேரி மக்களைத் தாக்கும் ஏவலாட்களாக, அதே நேரத்தில் உரிமை அற்றவர்களாக இன்றளவும் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்து தர்மத்தைப் போற்றியவர்கள் ‘தர்மகர்த்தா’க்களாக ஆக்கப்பட்டனரே தவிர, அவர்களுக்குக் கோயில் கருவறையில் நுழையும் உரிமையை அவர்கள் சூத்திரர்கள் என்ற ஒரே காரணத் திற்காக இன்றுவரை பார்ப்பனியம் மறுத்து வருகிறது. சூத்திரர்கள் எவ்வளவுதான் பார்ப்பனியத்திற்கு அடிவருடிகளாக இருந்தாலும், அவர்கள் ‘சற்சூத்திரர்’களாக ஆகலாமே தவிர, ஒரு போதும் பிராமணர்களாக ஆக முடியாது என்பதுதான் இந்து தர்மம்.

இரண்டாயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறைகளுக்குப் பிறகும் சேரிக்குள் தள்ளப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட தலித் மக்கள், சமத்துவத்தை வலியுறுத்தி, ஊரையும் சேரியையும் இணைக்கவே போராடுகின்றனர்.இவை இரண்டையும் இணைத்துக் கூட்டாஞ்சோறு ஆக்கி உண்பதல்ல தலித் மக்களின் நோக்கம். மாறாக, சாதிகளற்ற ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்கும் உன்னத நோக்கத்தை தலித் மக்கள் தங்கள் லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். ‘தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கிய அம்பேத்கர், அதில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இணைந்து செயல்படுவதற்கு ஒரு வேளை இந்த அமைப்பின் பெயர் தடையாக இருக்குமென்றால், இந்த அமைப்பின் பெயரையே மாற்றுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று பிரகடனப்படுத்தியதும்; தாழ்த்தப்பட்ட மக்கள் திராவிடர் கழகத்தில் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனை அனுபவிக்க தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு முழு உரிமை உண்டு என்று பெரியார் அறிவித்ததும் சாதியயாழிந்த சமத்துவச் சமூகத்தை உருவாக்குவதற்கான உயரிய நோக்கத்தைக் கொண்டதாகும்.

உழைக்கும் மக்களைப் பார்ப்பனியம் பிளவுபடுத்தும்; அம்பேத்கரியமும் பெரியாரியமும் இம்மக்களை ஒன்றிணைக்கும். தலித் மக்களின் லட்சிய நோக்கத்தை ராமதாஸ் போன்ற சமூகக் குற்றவாளிகளால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. பாட்டாளி மக்கள் கட்சியினரும், அவர்களின் சாதி வெறிக் கூட்டணியும் எந்த அளவுக்கு சாதிப்பித்து தலைக்கேறி ஆடினாலும், சமத்துவத்தின் குறியீடாகிய சாதி மறுப்புக் காதல் திருமணங்களை தலித் மக்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டேதான் இருப்பார்கள். வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களில் எந்தக் குறைபாட்டையும் காண காஷ்மீர் முதல் குமரி வரை திரண்டிருக்கும் தலித் மக்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

அதில் இருக்கும் ஒரே குறைபாடு, அது சாதி இந்து அரசு நிர்வாகத்தால் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைத் தவிர வேறு அல்ல. அதைத் திருத்துவதற்கோ, மாற்றுவதற்கோ எந்த நியாயங்களும் இல்லை. ராமதாஸ் கூட்டாளிகளின் சவடால் பேச்சுக்களால் அதில் எந்தத் திருத்தத்தையும் செய்ய முடியாது. எனவே, சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கையுள்ள தலித் மக்கள் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களை அலட்சியப்படுத்தி, இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்தான் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

மருத்துவர் ராமதாசின் சாதிவெறி போக்குக்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்றால், அம்பேத்கர் இயக்கங்களும் பெரியார் இயக்கங்களும் செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு; தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டத்திலும் சாதி மறுப்புத் திருமணங்களையும், காதல் திருமணங்களையும் நூற்றுக்கணக்கில் மாநாடுகள் போல அறிவித்து, தொடர்ச்சியாக நடத்துவதையே முக்கிய செயல்திட்டமாக விரைந்து அறிவித்திட வேண்டும்.

மரக்காணம் அவலத்திலிருந்து மீண்டு வாருங்கள்!


சென்ற சனவரி 25ஆம் நாள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வுகள் தமிழின ஒற்றுமையில் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் ஆழ்ந்த கவலை அளிக்கக் கூடியன.

‘கோடி வன்னியர் கூடும் குடும்ப விழா’வுக்காக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்த ஊர்திகளில் ஒன்று விபத்துக்குள்ளானதும், பெரும்பாலும் தலித்துகளாகிய உள்ளூர் மக்களுக்கும் வண்டிகளில் வந்த வன்னியர்களுக்கும் மோதல் வெடித்ததும், வன்னியர்கள் சிலர் அருகிலிருந்த தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளைக் கொளுத்தி உடைமைகளைச் சூறையாடியதும், காவல் துறையினர் வானோக்கித் துப்பாக்கியால் சுட்டும் தடியடி நடத்தியும் சாலை மறியல் செய்த கூட்டத்தைக் கலைத்ததும், விபத்தினாலோ எதிர்த்தரப்பினரின் வன்செயலாலோ வன்னிய இளைஞர்கள் இருவர் உயிரிழந்ததும்… இந்த நிகழ்வுகள் நடந்த விதம், நடந்த வரிசை பற்றியெல்லாம் நம்மால் எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது. இவை எந்த அளவுக்குத் தற்செயலானவை, எந்த அளவுக்குத் திட்டமிட்டவை என்று கண்டறிவதற்கு விரிவான, புறஞ்சார்ந்த, நடுநிலை தவறாத புலனாய்வும் விசாரணையும் தேவை.

தற்செயலாக என்றாலும் சரி, திட்டமிட்ட முறையில் என்றாலும் சரி, நடந்த அவலங்களுக்கு அறப்பொறுப்பு ஏற்க வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் நிறுவுநர் மருத்துவர் இராமதாசு அவர்களும்தான்.

முதலாவதாக, மாமல்லபுரம் விழாவை நடத்தியது வன்னியர் சங்கமா? பாமக-வா? இரண்டும் ஒன்றுதானா? ஒன்றுதான் என்றால் பாமக-வில் இடம்பெற்று, அதன் வளர்ச்சியில் பங்காற்றிய தோழர்கள் இரும்பொறை குணசேகரன், வள்ளிநாயகம், பழனிபாபா, குணங்குடி அனீபா, ஜான் பாண்டியன், முருகவேல்ராஜன், பசுபதி பாண்டியன், தலித் எழில்மலை, பொன்னுசாமி போன்றவர்களுக்கெல்லாம் நீங்கள் தரும் இடம் என்ன? இப்போதும் பாமக பொதுச் செயலாளராக அறியப்படும் தோழர் வடிவேல் இராவணனை ஒப்புக்குத்தான் முன்னிறுத்துகின்றீர்களா? அவர் தன் சமுதாய மக்களுக்காகத் தனியமைப்பு நடத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா? பாமக-வின் இலட்சிய வழிகாட்டிகளாக கார்ல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் படங்களைப் பயன்படுத்துவீர்களே, அவர்களையும் வன்னியர் சங்கத்தில் சேர்த்து விட்டீர்களா?

சாதி அரசியலும் சனநாயக அரசியலும் ஒத்துப் போக மாட்டா என்பதை விளங்க வைப்பதற்காகவே இந்த வினாக்கள்.

நமக்குத் தெரிந்த வரை வன்னியர் சங்கத்திலிருந்துதான் மருத்துவர் இராமதாசின் பொதுவாழ்வுப் பயணம் தொடங்கியது. வன்னியருக்குத் தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையில் சமூகநீதியின் பாற்பட்ட ஒரு நியாயம் இருந்த படியால் நாமும் அந்தப் போராட்டத்தை ஆதரித்தோம். மருத்துவர் இராமதாசின் பார்ப்பனிய எதிர்ப்பும், தமிழ்ச் சார்பும், தேர்தல் புறக்கணிப்பும், தலித்துகளோடு ஒன்றுபடும் ஆர்வப் பேச்சும் கடந்த கால வன்னிய சாதித் தலைவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டின. திரு இளையபெருமாளோடு சேர்ந்து அவர் மேற்கொண்ட தீண்டாமை-இழிவுநீக்க முயற்சிகளும், பிற்காலத்தில் குடிதாங்கிக் கிராமத்தில் தன் சாதியினரின் எதிர்ப்பை மீறிச் செயல்புரிந்து ‘தமிழ்க் குடிதாங்கி’ என்று தோழர் திருமாவளவனிடமே பட்டம் பெற்றதும் அவரது மதிப்பை உயர்த்தின.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கித் தேர்தல் அரசியலுக்குச் சென்ற பிறகும் தமிழீழ விடுதலை, தமிழகத் தன்னுரிமை, ஒரு-மொழிக் கொள்கை, மண்டல் பரிந்துரைச் செயலாக்கம் ஆகிய நிலைப்பாடுகளில் தமிழ்த் தேசிய, சமூகநீதி ஆற்றல்கள் உங்களோடு தோழமை கொண்டு நின்றோம். இப்போதும் அதுதான் சரியென்று நம்புகிறோம். மண் பயனுற மக்கள் தொலைக்காட்சி நிறுவியதை மருத்துவரின் முதன்மைச் சாதனைகளில் ஒன்றாக இப்போதும் மதிக்கிறோம்.

பாமக-வும் விடுதலைச் சிறுத்தைகளும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் அணிசேர்ந்த போது வரவேற்றோம், துணைநின்றோம், தோள் கொடுத்தோம்.

தேர்தல் வழிப் பதவி அரசியலில் முக்குளிக்க முக்குளிக்க பாமக-வின் முற்போக்குக் கொள்கைகள் கரைந்து போய் விட்டன. யாரும் கொள்கை பார்ப்பதில்லை, நான் மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? என்பது மருத்துவரய்யாவின் மந்திரக் கேள்வி ஆயிற்று. ஒளிவுமறைவற்ற சந்தர்ப்பவாத அரசியலால் பாமக-வின் பெயர் கெட்டது. இது நம்பத்தகாத கட்சி என்று மாற்றுக் கட்சியினர் மட்டுமல்லாமல், கட்சி சாராத பொதுமக்களும் கருதலாயினர்.

சென்ற 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாமக அடைந்த படுதோல்வி மருத்துவரை விரக்திப் படுகுழியில் தள்ளியிருக்க வேண்டும். இதிலிருந்து எழுந்து வர கொள்கை அரசியலைத் துணைக் கொள்வதற்குப் பதிலாக அப்பட்டமான சாதி அரசியலைக் கையிலெடுத்து விட்டார்.

எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் காதல் எதிர்ப்பு, தலித் எதிர்ப்பு என்ற பிற்போக்கு நிலைப்பாடுகளிடம் மருத்துவர் தஞ்சம் புகுந்து விட்டார். சென்ற 2012 சித்திரை முழு நிலவில் காடுவெட்டி குருவின் பேச்சு இதற்கு முன்னோட்டம் ஆயிற்று. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு காதல் திருமணம், இதையொட்டி ஒரு ‘கௌரவ’த் தற்கொலை என்பவற்றைச் சாக்கிட்டு மூன்று சேரிகளை வன்னிய சாதி வெறியர்கள் தாக்கிச் சூறையாடியதை பாமக ஒப்புக்குக் கூடக் கண்டிக்கவில்லை. மாறாக மருத்துவர் அந்த வன்கொடுமையை நியாயப்படுத்துவதற்காக காதல், கலப்பு மணம், நாடகத் திருமணம் என்றெல்லாம் தத்துவ விசாரம் செய்து, ‘புள்ளிவிவர’ங்களை அள்ளி விட்டதோடு, தலித்துகளை நக்கலடிக்கவும் தயங்கவில்லை. சாதிப் பொருத்தம், சாதகப் பொருத்தம், பணப் பொருத்தம் பார்த்து நடத்தப்படும் ஏற்பாட்டுத் திருமணங்களே உண்மையில் நாடகத் திருமணங்கள் என்ற உண்மையை மறைத்து, செம்புலப் பெயல்நீர் போலும் அன்புடை நெஞ்சம் தான் கலந்திடும் இயல்பான காதலை நாடகம் என்று மருத்துவர் இராமதாசு வர்ணித்தது அவரது பிற்போக்கு உள்ளக்கிடக்கையை உலகறியச் செய்து விட்டது. ஐயா, உங்கள் முற்போக்கு நாடகம் முடிந்து திரை விழுந்து விட்டது.

இந்த சாதிவெறி அரசியலில் பிற சாதிவெறி ஒட்டுக் குழுக்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்வதும், தலித் அல்லாதார் கூட்டணியை உருவாக்க முயல்வதும் சமூக நீதிக்குக் குழிபறிக்கும் வேலை என்பதில் ஐயமில்லை. பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்று ஈரோட்டுப் பெரியார் சொன்னதை ‘தாடி வைக்காத திண்டிவனத்துப் பெரியாரு’க்கு யார் புரிய வைப்பது?

பாமக-வின் இந்த சாதிய அரசியலின் ஒரு வெளிப்பாடுதான் மரக்காணம் கொடுநிகழ்வுகள். வன்னியர் விழாவுக்கு வந்தவர்களிடம் இராமதாஸ்-குரு வகையறா ஊட்டி வளர்த்த சாதி வெறிதான் அவர்களை மரக்காணம் தெற்குக் காலனிக்குள் நுழைந்து தீவைப்புத் தாக்குதலில் ஈடுபடச் செய்துள்ளது. தலித்துகள் ஒருவேளை மறியலில் ஈடுபட்டிருந்தாலும் கூட அது காவல்துறை தீர்க்க வேண்டிய சிக்கலே தவிர சாலையை விட்டு விலகிப் போய் ஊருக்குள் புகுந்து வன்செயல் புரிவதற்கு நியாயமில்லை. இரண்டு வன்னிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்பு விபத்தா கொலையா, கொலை என்றால் செய்தது யார் என்று காவல்துறை புலனாய்வு செய்துவருகிறது. தமிழகக் காவல்துறையை நம்புவதற்கில்லை என்றால் பாமக கோருவது போல் சிபிஐ புலனாய்வுக்கு வகை செய்யலாம். மரக்காணம் வன்செயல்கள் அனைத்துக்கும் சேர்த்து எல்லாத் தரப்பினரும் ஏற்கும் படியான நீதி விசாரணைக்கும் கூட ஆணையிடலாம். சாதிப் பகைமை மறைந்து நல்லிணக்கம் மீள எவ்விலையும் தரலாம்.

மரக்காணம் அவலத்துக்கு அறப் பொறுப்பு பாமக-வையே சாரும் என்பதில் ஐயமில்லை. அக்கட்சியும் அதன் நிறுவுநரும் அக்கறையோடு தமது அணுகுமுறையை மீளாய்வு செய்து, சாதிய அரசியலிலிருந்தும், அதற்கு வழிகோலிய சந்தர்ப்பவாதப் பதவி அரசியலிலிருந்தும் மீண்டெழுந்து தமிழின நலனுக்கும் சமூகநீதிக்குமான போராட்ட அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

“நுனிக் கொம்பேறினார் அ(.)திறந்தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்” என்ற எச்சரிக்கையை அரசியல் வகையில் பாமக சீர்தூக்கிப் பார்க்க வேண்டுகிறோம்.

மரக்காணம் நிகழ்வுகளில் மருத்துவர் இராமதாசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது பழி சுமத்துவதை ஏற்க இயலாது. அக்கட்சியின் உள்ளூர் ஆதரவாளர்கள் சிலர் ஆத்திரமூட்டலுக்குப் பலியாகி வன்முறையில் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பை நாம் மறுக்கவில்லை. ஆனால் அக்கட்சித் தலைமை, குறிப்பாகத் தோழர் தொல். திருமாவளவன் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டதும், ஏட்டிக்குப் போட்டியாக சாதிவெறியைத் தூண்டாமல் சமூக நல்லிணக்கத்தையும் தமிழ் மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்தியதும் போற்றுதலுக்குரியது. தம்மிடமிருந்து அம்பேத்கர் சுடர் விருது பெற்ற ஒருவர் முன்பு தர்மபுரியிலும் இப்போது மரக்காணத்திலும் தலித் எதிர்ப்பை அரசியலாகக் கைக்கொண்டிருப்பது குறித்துத் திருமாவே வேதனைப்படுவார்.

மருத்துவர் இராமதாசின் சாதிய அரசியலைக் கண்டிப்பது வேறு. வன்னியர்கள் அனைவரையும் சாதிவெறியர்களாகவும் வன்கொடுமைக்காரர்களாகவும் படம்பிடிப்பது வேறு. வன்னியர்களும் உழைக்கும் மக்களே. அவர்களும் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் ஓர் அங்கமே என்பதை மறந்து விடலாகாது. தலித் அல்லாத பிற்பட்ட வகுப்பினர் அனைவரையும் ஆதிக்க சாதியினர் என்று முத்திரையிடுவது சமூக அறிவியலுக்கும், தமிழ்த் தேசியக் கருத்தியல் மற்றும் நடைமுறைக்கும் புறம்பானது. சாதியடுக்கில் ஆதிக்க சாதி என்பது ஒரு சார்புநிலைக் கருத்தாக்கமாகவே இருக்க முடியும். பார்ப்பனர்களைக் கொடுமுடியாகவும் தலித்துகளை அடிக்கல்லாக்கவும் கொண்ட வர்ண-சாதி இந்துச் சமூக அமைப்பில் இடைச்சாதிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்புநிலையில் ஆதிக்கம், அடிமை ஆகிய இருவகைக்கும் பொருந்தக் காணலாம். ஏன்? பார்ப்பனர்களுக்குள்ளேயும், தலித்துகளுக்குள்ளேயும் கூட, இந்தப் பிரிவுகள் இருப்பது மெய்.

தமிழ்ச் சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதியினர் என்று ஒதுக்கி வைத்து விட்டுத் தமிழ்த் தேசியம் வெல்வது முயற்கொம்பே. தீண்டாமைக்கும் சாதிய வன்கொடுமைகளுக்கும் எதிரான போராட்டத்தை உறுதியாக முன்னெடுக்கும் போதே தமிழின ஒற்றுமைக்கு அடிப்படையான தாழ்த்தப்பட்டோர்-பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமைக்காகவும் போராடுவது புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தட்டிக்கழிக்கக் கூடாத ஒரு பணி.

தோழர் திருமா பதவி அரசியலுக்காக எத்தனையோ விட்டுக் கொடுத்தும் கூட, இந்த நெருக்கடியில் அவருடைய தேர்தல் கூட்டாளிகள் நியாயத்தின் பக்கம் நிற்பதை விடவும் வாக்கு வங்கி சார்ந்த சாதிக் கணக்கு பார்த்தே வாய் திறந்தார்கள் என்பதை அவர் கவனித்திருப்பார் என நம்புகிறோம்.

வேடிக்கை என்னவென்றால், மருத்துவர், திருமா இருவருமே போராட்ட அரசியலில் இருந்துதான் பதவி அரசியலுக்குச் சென்றார்கள். இருவருமே தேர்தல் புறக்கணிப்பில் தீவிரமாக இருந்து விட்டுத்தான் சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலில் குதித்தார்கள். மரக்காணம் அவலங்களிலிருந்து மீண்டு வருவதென்றால் சந்தர்ப்பவாதப் பதவி அரசியலை விட்டு உரிமைப் போராட்ட அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்று பொருள்.

மரக்காணம் தொடர்பான ஜெ. அரசின் அணுகுமுறை அரசுக்கும் காவல்துறைக்கும் உள்ள பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகவும், எதிர்காலத்தில் சனநாயக உரிமைகளைப் பறிப்பதற்குக் காரணங்களை உருவாக்குவதாகவும் உள்ளது.

கோரிக்கை எதுவானாலும் சரி, ஓர் அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்த வந்த மருத்துவர் இராமதாசைத் தளைப்படுத்தி சிறையில் அடைத்ததும், அவர் பிணையில் வெளியே வர முடியாத படி புதுப் புது (அல்லது பழைய பழைய) வழக்குகளில் மீண்டும் மீண்டும் தளைப்படுத்துவதும் ஜெ. அரசின் பழிவாங்கும் அரசியலுக்கே சான்றாகும். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான வழக்குகளை விலக்கிக் கொள்ளும்படி இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய அதே போழ்தில் மருத்துவர் இராமதாசு கூடங்குளம் வழக்கில் தளைப்படுத்தப்பட்டது ஜெ. அரசின் வக்கிரத்தையே காட்டுகிறது.

மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் நீங்கலாக மற்ற அனைத்து வழக்குகளையும் விலக்கிக் கொள்வது இயல்புநிலை மீளத் துணைசெய்யும். மருத்துவர் இராமதாசின் சாதிய அரசியலை எதிர்க்கும் போதே அரசின் தயவில் அவரோடு கணக்குத் தீர்க்கத் தேவையில்லை. சாதிய அரசியலை சமூக நீதி அரசியலால் எதிர்கொண்டு முறியடிக்கும் தெளிவும் துணிவும் நமக்குத் தேவை.

எவ்வித நிபந்தனையும் இன்றி மருத்துவர் இராமதாசை உடனே விடுதலை செய்யக் கோருகிறோம். (இதை எழுதி முடிக்கும் நேரத்தில் மருத்துவர் இராமதாசு பிணை விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.)

பொதுவாக மற்றவர்கள் மீதான வழக்குகளையும் விலக்கிக் கொண்டு மரக்காணம் வன்முறை, மகாபலிபுரம் கூட்டம், மற்றும் பின்னிகழ்வுகள் தொடர்பாகச் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்யக் கோருகிறோம். வன்செயல்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கக் கோருகிறோம்.

சட்டப் பேரவை உறுப்பினர் குருவுக்கு எதிராக தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருப்பதைக் கண்டிக்கிறோம். காடுவெட்டி குருவின் தடாலடி மேடைப் பேச்சால் ஒரு தேசத்தின் பாதுகாப்புக்கே ஆபத்து என்றால் அந்தத் தேசம் ஒழிந்து போவதே நல்லது. தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற ஆள்தூக்கிச் சட்டங்கள் எவருக்கு எதிராக ஏவப்பட்டாலும் எதிர்க்கும் கொள்கைத் தெளிவும் திடமும் தமிழக சனநாயக ஆற்றல்களுக்குத் தேவை.

இறுதியாக, மாணவர் போராட்டத்தால் தலைநிமிர்ந்த தமிழன்னை மரக்காணத்தால் தலைகுனிந்து நிற்கிறாள். அவளை மீண்டும் தலைநிமிரச் செய்யும் பொறுப்பு நம் அனைவருக்குமுண்டு.

– தியாகு, பொதுச் செயலாளர், த.தே.வி.இ.

பா.ம.க.வில் உறுப்பினராகும் தகுதிகள்…


மரம் வெட்டத் தெரியுமா?
மரத்தை வெட்டி சாலை மறியல் பண்ணத் தெரியுமா?

மது அருந்தத் தெரியுமா?
மது அருந்திக் கொண்டே
மது ஒழிப்புப் பிரச்சாரம் செய்யத் தெரியுமா?

கொடி பிடித்து கோசம் போடத் தெரியுமா?
கோசம் போட்டுக் கொண்டே கொலை வெறியைத்
தூண்டி விடத் தெரியுமா?

சாதிப் பெருமை பேசத் தெரியுமா?
சாதி பெருமை பேசிப் பேசியே
சேரிக் குடிசைக்குள் தீ வைக்கத் தெரியுமா?

சாதி விட்டு சாதி கூடாதெனச் சொல்லத் தெரியுமா?
கூடாதென சொல்லிக் கொண்டே
சேரிப்பெண்ணை வீடுபுகுந்து நாசம் செய்யத் தெரியுமா?

காதலிக்கத் தெரியுமா?
காதலித்துக் கொண்டே
காதலித்த பெண்ணின் மீது திராவகம் வீசத் தெரியுமா?

சமத்துவம் பற்றி பேசத் தெரியுமா?
சமத்துவம் பற்றி பேசிக் கொண்டே சாதி சங்கங்களைக் கூட்டி
சாதி வெறியைத் தூண்ட தெரியுமா?

ஆர்ப்பாட்டம் செய்யத் தெரியுமா?
ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே அரசாங்க சொத்தை
சூறையாடத் தெரியுமா?

அடாவடித்தனம் செய்யத் தெரியுமா?
அடாவடித்தனம் செய்து கொண்டே
அரசு அதிகாரிகளின் மண்டையை உடைக்கத் தெரியுமா?

ஓநாய்கள் போல ரத்தம் குடிக்கத் தெரியுமா?
ஒன்றுமில்லா காரியத்திற்கு ஒப்பாரி வைக்கத் தெரியுமா?
கள்ளச் சாராயம் காய்ச்சத் தெரியுமா?
கையெறிகுண்டு வீசத் தெரியுமா?

தமிழ்த் தேசியம் பேசத் தெரியுமா?
தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டே
சேரித் தமிழனை படுகொலை செய்யத் தெரியுமா?

இவையெல்லாம் அடிப்படைத் தகுதிகள்
நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில்
உறுப்பினராவதற்கு…

– வழக்கறிஞர் நீதிமலர்

விஸ்வரூபம் – கருத்துச் சுதந்திரம்


கருத்துச் சுதந்திரம் பாகம் 1

‘விஸ்வரூபம்’ என்ற, திரைக்கு வந்து சில நாட்களே ஆன ‘திரைக் காவியத்தைக்’ காண நேர்ந்தது. சர்ச்சையே அப்படத்திற்கு விளம்பரத்தைத் தேடித் தந்தது. முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரித்தவுடன், நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் அறிவித்தார். பிறகு அவர்களிடம் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியேறும் முடிவை தள்ளிப் போட்டிருக்கிறார். தேசப்பற்று காரணமாக இருக்கலாம்.

விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லீமாக இருக்கும் கதாநாயகன், விஷ்ணுவின் ரூபம் எடுக்கிற படம். அதாவது நல்லது செய்யும் எந்த முஸ்லீமுக்கும் ஓர் இந்து சாயல் இருக்க வேண்டும்.

அவரது ‘விஸ்வரூபம்’ திரைப்படம் புரியவில்லை என்று பலர் கூறுகின்றனர். அதெல்லாம் பொறாமை காரணமாக சொல்கிறார்கள். அது மிக எளிதாக புரியும் படம். ஏதாவது ஒரு ‘கான்’ வில்லனாக வரும் சில அமெரிக்க ஜேம்ஸ்பாண்ட் படங்களின் காட்சிகளையும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடித்த சில இந்தி சினிமாக்களின் காட்சிகளையும், இந்திய ‘தேசபக்தி’ பொங்கும் சில தமிழ் சினிமாக்களின் காட்சிகளையும் வெட்டி ஒட்டிவிட்டு, 11வது அவதாரத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் சேர்த்துவிட்டால் அதுதான் இந்த விஸ்வரூபம். ஆனால் கமல்சார் இதற்காக ஏன் சொத்தை அடகுவைத்தார் என்று புரியவில்லை.

இப்படத்தில் கமலின் பெயர் விஸ்வநாதன். புத்திசாலியான அதிகாரியாக ஒருவர் நடித்தால் நாயகன் ஒன்று ‘ராகவனாக’ இருப்பார் அல்லது இந்த படத்தின் பாத்திரம் போல ‘விஸ்வநாதனாக’ இருப்பார். ஏதாவது ஒரு அம்பிமார். கமல் இந்தப் படத்திலும் ஒரு பார்ப்பனர். இதனால் அவர் சாதிப்பற்று கொண்டவர் என்று நீங்கள் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது அல்லவா! அதனால், அவாள் பாசையில் அச்சுப்பிசகாமல் பேசும் அவரது மனைவி, கோழிக்கறி விரும்பிச் சாப்பிடுவார். இப்படி ஆராய்ச்சி செய்வது சரியா என்று யாராவது என்னைக் கேட்டால் நடிகர் ரஜினிகாந்த், கமலைப் போல அடிக்கடி பார்ப்பன வேடத்தைப் பூணுவதில்லையே, ஏன் என்ற கேள்விக்கு பதில சொல்வீர்களாக.

கமல் சாரின் பார்ப்பன மனைவி ‘அடக் கடவுளே’ என்று சொல்லும்போது கமல் ‘எந்தக் கடவுளே’ என்று கேள்வி கேட்டு, தான் நாத்திகன் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் முஸ்லீம்கள் இப்படத்தின் நோக்கத்தைக் கேள்வி கேட்பார்களே என்பதற்காக கமல் உண்மையிலேயே தொழுகை நடத்தக் கூடிய முஸ்லீமாம். மச்சம் மட்டும் வச்சு மாறுவேடம் போடும் நாயகன் மாதிரி, இதுல முஸ்லீம் பாத்திரம் மச்சம் வச்சவரு மாதிரி இருக்கும். விஸ்வநாதன் என்ற தொழிலுக்காக வேடம் போடும் பாத்திரத்துக்கு பார்ப்பன‌ குடும்பமே இருக்கு.. ஒரு பாட்டு இருக்கு.. கமல் பரத நாட்டியம் ஆடுகிறார் மாமிகள் புடை சூழ. ஆனால் படத்தில் நிஜமாக வரும முஸ்லீம் பாத்திரம் அம்புட்டு அநாதை. படத்துல வரும் கமல்பாய் பேரு ‘தௌபீக்’கா அல்லது நாசரா என்று என்னால் இதுவரை கண்டே பிடிக்க முடியவில்லை. கவுண்டமணி சொல்ற மாதிரி நல்ல டகால்ட்டி.

கருத்துச் சுதந்திரம் பாகம் 2

முல்லா ஒமர் மதுரையிலும், கோவையிலும் தங்கியிருந்ததாக சொல்லியிருக்கிறார். இன்னும் ஏதாவது ஒரு முஸ்லீமின் ரேஷன் கார்டையும் சேர்த்து காண்பித்திருக்கலாம். நோக்கம் இனிதே நிறைவேறியிருக்கும். அகில உலகமெங்கும் உளவுத்துறை வலைப்பின்னலை வைத்திருக்கும் அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகளை விஞ்சிய அகில உலகநாயகனாக நீங்கள் ரெண்டு சண்டை போடுவதற்கும், நாலு பாட்டும் பாடுவதற்கும் முஸ்லீம்கள் பலிகடாக்களா? தசாவதாரத்தில் அதிபர் ‘புஷ்’ வேடமே போட்டாச்சு அப்பறம் ஏன் கமல் சார் தேவையில்லாம இப்படியொரு ஜீனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.

நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னதை விட நேராக அமெரிக்கா போகிறேன் என்று சொல்லியிருக்கலாம். கமலஹாசனில் ‘ஹாசன்’ என்ற வார்த்தைக்காக தங்களை ஜட்டியைக் கழற்றி சோதனை போட்ட நல்ல நாடான அமெரிக்காவிற்கு தாங்கள் போய் வாருங்கள்; நாங்கள் வழியனுப்பி வைக்கிறோம். ஜார்ஜ் பெர்னாண்டஸை.. ஷாரூக்கானை.. அப்துல் கலாமை அதேபோல் சோதனை நடத்திய அமெரிக்கா, தங்களுக்குப் பிடித்த நாடு. இப்படி எந்த அரபுநாடும் நம்நாட்டின் பிரபலங்களை இழிவுபடுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், அரபுநாடுகளின் மீது உங்களுக்கு என்ன கோபமோ?

கருத்துச் சுதந்திரம் பாகம் – 3

ஓர் இந்திய உளவு அதிகாரி நம்ம கமல். உளவுப்பணிக்காக தனது துணைவியாரையே தாரை வார்த்து அவர் உளவு பார்க்கிறார். அந்த நாயகி ஆன்ட்ரியாவை அபூர்வ சகோதரன் படத்தில் வரும் ஏட்டு போல ‘தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க’ என்று கமல் சொல்லாத குறையாக, கூடவே சொட்டர போட்டுக்கிட்டு அலையவிடுகிறார். அரவாணியாக இருக்கும் நாயகன் கமலை மணந்தவள் மற்றொருவரை விரும்புவதை வில்லத்தனமாகக் காட்டுகிறார். ‘அமெரிக்காவில் மழை பெய்யாதா போயிட்டுப் போது’ என்று நாயகி கலக வசனம் பேசினாலும் மொத்தத்தில் அவளை வில்லியாக்கி விடுகிறார். நல்ல பெண்ணுரிமைவாதி நீங்கள்.

ஆண் அடையாளத்தைத் துறந்து, தாம்பத்தியத்தைத் துறந்து, அமெரிக்காவுக்கு வேலை செய்யும் தியாகி நம்ம கமல். அமெரிக்காவைக் காப்பாற்ற இந்திய அரசு வெட்டியாக சம்பளம் கொடுக்கிறது. முல்லா ஒமர் ‘தமிழ் பேசும் ஜிகாதி வான்டட்’ என்று கேட்டதால் கமல் சென்று இறங்கிவிட்டார். உயிரையே பணயம் வைத்து முல்லா ஒமரை நெருங்கிவிட்டார்.

அமெரிக்க ராணுவம் தமது வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள் என்ற ஒரு நியாயமான காரணம் இருப்பதாலேயே ஆப்கனில் ஒரு கிராமத்தைத் தாக்குகிறது. காரணமில்லாமல் தாக்க மாட்டார்களாம்! ஹெலிகாப்டரில் இருந்து சுடும் அமெரிக்க வீரர் ஒரு பெண்ணைத் தவறுதலாக சுட்டுவிட்டதற்காக தன்னைத் தானே சபித்துக் கொள்கிறார். ஏனென்றால் அமெரிக்க வீரர் சாதாரண ஆப்கானிய மனிதனை சுட்டுவிட்டால் தன்னைச் சுட்டுவிட்டதாக எண்ணுவாராம்! கடைசி ஆபரேசனில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அனைவரும் நிற்கும்போது முஸ்லீம் அதிகாரியாகிய கமல் தொழுவதை வாஞ்சையுடன் ஒரு அமெரிக்க அதிகாரி சக அதிகாரிக்கு விளக்குகிறார்! ஏனென்றால் நேர்மையான முஸ்லீம் அதிகாரிகளை அவர்கள் மதிப்பார்களாம்!

ஆமாம் கமல், இந்த குவான்டனாமோ சிறைச்சாலை தெரியுமா? அதில் முஸ்லீம் சிறைவாசிகளை கழுத்தறுத்து வீடியோவில் காட்டுவது; ஒருவரின் உடல் முழுவதும் மலத்தைப் பூசி அவரது முகத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் தனது ஜட்டியால் மூடுவது; நிர்வாணமாக நிற்கும் ஒருவரின் மீது நாய்களை விட்டுக் குதறவிடுவது ஆகிய காட்சிகள் அனைத்தும் வெளியானதைத் தாங்கள் அறிவீர்கள் தானே.. இன்னும் வர்ணிக்க முடியாத கொடூரங்களை நிகழ்த்தியதன் காரணமாக அமெரிக்க மக்களின் எதிர்ப்பினால் அந்த சிறை மூடப்பட்டதையும் அறிவீர்களா?

கருத்துச் சுதந்திரம் பாகம் – 4

சி.என்.என், ஐ.பி.என்., பி.பி.சி உட்பட சர்வதேச ஊடகங்களும் இந்தியாவிலுள்ள நூற்றுக்கணக்கான ஊடகங்களும் செப் – 11, 2011க்குப் பிறகு அடித்துத் துவைத்த ஒரு கருத்தைத்தான் இப்போது கமல் விஸ்வரூபம் எடுக்க வைத்திருக்கிறார். அதுதான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது. ஆனால் அமெரிக்க பயங்கரவாதத்தைப் பற்றி சொல்லத்தான் ஒரு ஊடகத்தைக் கூட காணோம்! அல்ஜசீரா தொலைக்காட்சி அந்த வேலையைச் செய்தது. அதன் அலுவலகத்தை அமெரிக்கா குண்டுவீசி அழித்தது. கருத்துச் சுதந்திரத்தை இப்படி குண்டு போட்டு அழிக்கலாமா என்று அமெரிக்காவுக்கு பாடம் சொல்லி கமல் ஒரு படம் எடுப்பாரா?

அமெரிக்காவுக்கு கைவந்த கலை, திரைப்படங்களில் அரசியல் செய்வது. ஜப்பானைக் அணுகுண்டு போட்டு அழித்துவிட்டு ‘பியர்ல் ஹார்பா’ என்று ஜப்பானையே வில்லனாக்கி ஒரு படம் எடுத்தார்கள். வெளியிட்ட திரையரங்கில் எல்லாம் நம்ம தமிழன் அதை வெற்றிப்படம் ஆக்கினான்.

இப்போது இரட்டைக் கோபுரத் தாக்குதலை வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது இந்தியாவில் சக்கைப் போடு போடுவதற்குள், பேசாம நான் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம் என்று இருக்கிறேன்.

நம்ம கமல் அமெரிக்க லட்சியப் படங்களை தமிழ் மண்ணில் எடுக்க ஆரம்பித்துவிட்டார். இனி அமெரிக்க தூதரகத்தைத் தாக்க வந்த தமிழ்த் தீவிரவாதிகளைப் பற்றி நிறைய படம் வந்தாலும் வரும்.

கருத்துச் சுதந்திரம் பாகம் – 5

‘உன்னைப் போல் ஒருவன்’ல் பயங்கரவாதத்தில் ஈடுபடும் முஸ்லீம்களை பயங்கரவாதத்தால் தான் அழிக்க வேண்டும் என்று சொன்னார். கேள்வி வருமே என்பதற்காக காவி அணியாமல் ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பஸ்தரின் வேடம் பூண்டார். அடுத்து விஸ்வரூபத்தில் அவர் ஒரு நல்ல நேர்மையான முஸ்லீமுக்கு இலக்கணம் சொல்லி இருக்கிறார். ‘நீ குரானைத் தொழு. ஜிகாதிகளைக் காட்டிக் கொடு. அமெரிக்காவின் அடியாளாக இரு. அணு ஆயுதங்களை அப்பாவி அமெரிக்காவின் மீது பிரயோகம் செய்ய முனையாதே. மனிதாபிமானமில்லாமல் இருக்காதே. சிறுவர்களை குண்டு கொடுத்து அனுப்பாதே. ஈவிரக்கமில்லாமல் கொலை செய்யாதே..’ என்று ஒரு முஸ்லீமாக வந்து சொல்கிறார்.

ஆனால் பயங்கரவாதத்தில் ஈடுபடும் முல்லா ஒமர் மற்றும் அவரது குழுவை பயங்கரவாதத் தன்மையில் அழிக்கச் சொல்கிறார். ‘ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேண்டுமானாலும் துவம்சம் செய். அனைவரையும் மரண அடி கொடு.. வெட்டிவீசு கண்களைப் பிடுங்கு.. கையை வெட்டு வாளால் சொருகு.. துப்பாக்கியால் கண்ணில் படுபவனை எல்லாம் போட்டுத் தள்ளு. இத்தனையும் ஒரே சண்டைக்காட்சி நேரத்தில் முடித்து விடு..’ என்று ஆணித்தரமாக புரிய வைப்பதற்காக ஒரு சண்டைக்காட்சி வைத்திருக்கிறார். நியாயத்திற்காக கொடூர வன்முறையில் இறங்கு; நியாயத்தின் பேரால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்து என்கிறார். கமல் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும், இந்தப்படத்திலும் ஒரு புனிதப்போர் நடத்தச் சொல்கிறார். அதாவது இவர் ஒரு புதியவகை ஜிகாதி.

கருத்துச் சுதந்திரம் பாகம் – 6

கமலின் நியாயத் தீர்ப்பை அப்படியே எடுத்துக் கொள்வோம். அவர் சொல்கிறபடி பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை பயங்கரவாதத்தால் அழிக்க வேண்டும்.

ஓசாமா இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தவர் 2000 அமெரிக்கர்களைக் கொன்றார். அது கண்டிக்கத்தக்கது; ஏற்க முடியாதது. சரிதான். இதை வைத்தே அமெரிக்காவில் பல படங்கள் வந்துவிட்டன.

இப்ப கமலுக்கு ஒரு ஸ்கிரிப்ட் சொல்லுவோம். இந்த கதையை படமாக்க கமல் விரும்பினால் கதை இலவசம்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலிலிருந்து படத்தின் கதை விரிகிறது. பிளாஷ்பேக்கில் கேமரா ஆப்கானைக் காட்டுகிறது. இப்போது கதை.

ஆப்கனின் தலைநகரமான காபூலுக்கு உலகின் விதவைகளின் தலைநகரம் எனறு பெயர். கடந்த 30 ஆண்டுகாலப் போரில் 15 லட்சம் விதவைகள் அந்நாட்டில் உள்ளனர். அமெரிக்கப் படையும் அதன் கூட்டுப்படைகளும் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஆப்கானியர்களில் 37 சதவீதம் பேர் ஆண்கள். அவர்கள் அனைவரையும் விதிவிலக்கில்லாமல் தாலிபான்கள் என்றே வைத்துக் கொள்வோம். மீதி 63 சதவீதம் பேர் குழந்தைகளும் பெண்களும். இதயபலவீனம் உள்ளவர்களுக்காக இதை நாம் காட்சிப்படுத்தாமல் விடுவோம்.

15 லட்சம் விதவைகளின் கதைகள் எப்படியிருக்கும்? தகப்பன் இல்லாத 15 லட்சம் குடும்பங்களின் பிள்ளைகள் ஓயாத போரில் உணவுக்காக என்ன செய்யும்? படிப்புக்காக என்ன செய்வார்கள்? தன் தகப்பனைக் கொன்றவர்கள் மீது என்ன உணர்வைக் கொண்டிருப்பார்கள்?

அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் மட்டும் ஈராக்கில் 5 லட்சம் குழந்தைகள் மாண்டனர். ஈராக்கை ஆக்கிரமித்து அதன் அதிபரை ஒரு போலி நீதிமன்றத்தால் கொன்றொழிக்கும் அமெரிக்காவின் நோக்கம் நிறைவேற கொல்லப்பட்ட மக்கள் பல லட்சம் பேர். பாலஸ்தீனம், லெபனான் என பட்டியல் நீளும் இந்த நாடுகளுக்குச் சென்றால் விதவிதமான கதைகள் கிடைக்கும்.

ஆப்கனில் ஒரு திருமணத்தில் குண்டு போட்டு 80 பேரையும், மற்றொரு விழாவில் குண்டு போட்டு 200 பேரையும் கொன்றது அமெரிக்கப் படை. அதை ஒரு சிறுவன் வர்ணிக்கிறான். “ நான் குண்டு சத்தம் கேட்டேன். விழித்துப் பார்த்தால் மருத்துவமனையில் கிடக்கிறேன். என் இரண்டு கால்களும் இல்லை. என் கால்களைப் பறித்தவர்களைப் பலி எடுப்பேன்”. கமல் இந்தக் காட்சியிலிருந்து கூட தங்களது படத்தைத் தொடங்கலாம். கதை இலவசம்.

கருத்துச் சுதந்திரம் பாகம் – 7

ஒரு பெரும் பணக்கார பின்னணி கொண்ட இளைஞன் ஒசாமாவை ரஷ்யாவுக்கு எதிராக முஜாகிதீன் படைகளுக்குத் தலைமை தாங்கப் பணித்தது அமெரிக்கா. அப்போது விடுதலை வீரனாக சித்தரிக்கப்ப‌ட்ட ஒசாமா, அமெரிக்காவின் அடியாளாக அரபுநாடுகளுக்கு எதிராக செயல்பட வேண்டுமென்ற அமெரிக்க நிர்பந்தத்தை உயிருக்கஞ்சாமல் எதிர்த்தான். அதற்கு தன் குடும்பத்தோடு தன் உயிரையும் விலையாகக் கொடுத்திருக்கிறான்.

ஓசாமாவின் லட்சியம் என்ன? அரபுலகம் அந்நிய ஆக்கிரமிப்பிற்கு ஆளாகக் கூடாது. அரபுலக மக்களின் எண்ணெய் ஆதாரம் அந்நியர்களால் களவாடப்படக் கூடாது என்பது தானே. அமெரிக்காவின் லட்சியம் என்ன? அரபுலகை அடிமைப்படுத்த வேண்டும்; உலகின் எண்ணை ஊற்றான அரபுலகை தனது பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது தானே.

ஒசாமா ‘எண்ணைய் வளங்கள் எமக்கே சொந்தம். நீ என்ன எண்ணை வயலுக்கு வந்தாயா? கிணறு தோண்டினாயா?’ என்று கேள்வி கேட்கிறார். தமது சொந்தச் சகோதரிகள் கண்முன்னால் தெருக்களில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதற்கும், தம் சின்னஞ்சிறு குழந்தைகள் கொத்துக்குண்டுகளால் குதறி எறியப்பட்ட கோரத்தைப் பார்க்க சகியாமலும், மண்ணும் மக்களும் அடிமைப்பட்டப் புழுவாய் நெளியும் காட்சியைக் கண்டு குமுறி எழுந்தும் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் பொருளாதார – அரசியல் பயங்கரவாதத்திற்கு எதிராகக் களம் இறங்குங்களடா என் தம்பிகளே, செத்தால் பாடை பத்துமுறை வராது.. என்று பயிற்றுவிக்கிறார். இரட்டைக் கோபுரத்தைத் தாக்கி அழிக்கிறார்.

ஒசாமாவின் போராட்ட வழிமுறைகள் பயங்கரவாதத் தன்மை கொண்டதுதான். கொடிய துன்பங்களை விளைவிப்பவர்களுக்கு கொடிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற கமலின் தர்க்கம் தான் ஒசாமாவின் தர்க்கமும். கமலின் வரையைறையைத்தான் ஆப்கான் தேசத்துத் தாலிபான்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தாலிபான்களை மட்டும் விமர்சிக்கும் கமல், நவீன வல்லரசுகளின் கொடூரமான பயங்கரவாதப் போரைப் பற்றி மௌனம் சாதிக்கிறார்.

ஒரு ஆய்வாளர் சொன்னது போல ‘தற்கொலை கார்குண்டு’ என்பது ‘ஏழைகளின் விமானப்படை’. ஆயுதம் தாங்கிய ரோபோக்களை ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் கொன்றொழிக்க அனுப்பும் வல்லரசுகளின் வக்கிரப்போர்களை எதிர்க்க கமலின் நியாயத்தைப் பொருத்துவோம்.. 63 சதவீதம் பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற செயல் பயங்கரவாதம் இல்லையா? பொதுமக்களைக் கொல்வது பயங்கரவாதம் எனும் போது, தம் நாட்டின் பொது மக்களைக் கொல்லும் வல்லரசுக்கு அந்த வலி எப்படியிருக்கும் என்று புரிய வைக்க ஒரு போராளிக் கூட்டம் எண்ணினால் அது கமலின் தர்க்கப்படி முழு நியாயம் தானே.

இஸ்லாமியப் போராளிகளின் பயங்கரவாதம் கூடாது என்று சொல்பவர், முதலில் அதனைத் தூண்டக் காரணமாக இருக்கும் அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் பயங்கரவாதத்தைத் தடை செய்தபிறகு பேசலாம். அல்லது இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு, பயங்கரவாதமும் ஜனநாயக விரோத ஆட்சி முறையும் இஸ்லாமியப் போராளிகளின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்திவிடும் என்ற அக்கறையிலிருந்து சொல்லலாம். அப்போது ஏற்கலாம். ஆனால் அமெரிக்காவின் எடுபிடியாக நின்று கொண்டு பேசுபவர்களுக்கு எந்த தார்மீக உரிமையுமில்லை.

“யோக்கியர்களே கல்லெறியுங்கள்”

இஸ்லாமிய பயங்கரவாதம் என்று பொதுமைப்படுத்தும் வார்த்தையே கண்டிக்கத்தக்கது. அது குரான் படிப்பவர்களை எல்லாம் பயங்கரவாதி என்று அறிவிப்பு செய்கிறது. உலகிலேயே அதிகமாக முஸ்லீம்கள் இருக்கும் நாடான இந்தோனேசியாவில் பயங்கரவாதம் இல்லையே ஏன்? அங்கும் குரான் இருக்கிறது; இஸ்லாம் இருக்கிறது. ஆனால் எண்ணை இல்லை. அதனால் அங்கே அமெரிக்கா தாக்குதல் நடத்தவில்லை. அந்நாட்டை ஆக்கிரமிக்கவில்லை. எனவே முஸ்லீம்கள் ஜிகாத் நடத்தவில்லை. உலகிலேயே இரண்டாவதாக அதிக முஸ்லீம்கள் வசிக்கும் இந்தியாவில், முஸ்லீம்க‌ள் பயங்கரவாதத்தை கையிலெடுக்கவில்லை. நடக்கும் ஓரிரு சம்பவங்களும் இங்குள்ள பி.ஜே.பி.யும், ஆர்.எஸ்.எஸ்.சும் அவர்களை அழிக்க முயல்வதன் விளைவாக நடக்கின்றன. பாபர் மசூதிக்குப் பிந்தைய இந்தியாவையும் முந்தைய இந்தியாவையும் ஒப்பிட்டால் தெரியும்.

கருத்துச் சுதந்திரம் – 8

மற்றொரு விஸ்வரூபமாக, கருத்துச் சுதந்திரம் பற்றி வடஇந்திய ஊடகங்களும் தமிழ் ஊடகங்களும் கொதித்தெழுந்து விட்டன. நடிகர்கள், எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கமலுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையா என்கின்றனர்.

அதிலும் தூய கருத்துச் சுதந்திரவாதிகளாக சிலர் கலைஞனுக்கு கருத்து வேலி கூடாது என்கின்றனர். சென்சார் போர்டே கூடாது என்கின்றனர். சமத்துவமற்ற சமுதாயத்தில் எது ஒன்றையும் வரம்பின்றி அனுமதிக்க முடியாது. ஒரு சமுதாயத்தின் உயர்ந்த அரசியல் விழுமியங்களால் அது கண்காணிக்கப்பட வேண்டும்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால் மதச்சார்பின்மை என்ற நுண்ணோக்கி கொண்டு அனைத்துக் கருத்துக்களும் கண்காணிக்கப்பட வேண்டும். இந்தியா சோசலிச சனநாயகக் குடியரசு என்று பிரகடனம் செய்யப்பட்டால் அதனடிப்படையில் அனைத்துக் கருத்துக்களும் கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் வரம்பற்ற கருத்துச் சுதந்திரம் என்பது பணபலமும், அதிகார பலமும் கொண்ட கும்பல்களுக்கு சேவை செய்யும் கருத்தாகும். மக்களிடம் ஊதுகுழல் கூட இல்லாத நிலையில் உலகின் அனைத்து ஊடகங்களையும் வைத்துள்ளவர்கள் யார்? வரம்பற்ற கருத்துச் சுதந்திரம், உண்மையில் குரலற்ற மக்களின் குரல்வளையை நெறிக்கும் தூக்குக் கயிறாகவே மாறும்.

முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பைப் பொருத்தவரை அவர்களின் எதிர்ப்பும் கருத்துச் சுதந்திரத்தின் அங்கமாகவே பார்க்கப்பட வேண்டும். எந்தத் தரப்பானாலும் இவ்விதமான தவறான சித்திரிப்புகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் உரிமையுள்ளது. டேம்’99 என்ற படத்தின் தவறான சித்திரிப்புக்கு எதிராக தமிழகம் கிளர்ந்ததைப் போல், பாதிக்கப்படும் தரப்பு தமக்கெதிரான அவதூறுகளுக்காக தடை கோர உரிமையுள்ளது.

ஆனால் குரானையோ அல்லது முஸ்லீம் தலைவர்களையோ அல்லது அதன் மரபுகளையோ, பழக்க வழக்கங்களையோ எவ்விதத்திலும் விமர்சிக்கவே கூடாது என்பது கருத்துரிமைக்கெதிரானது; ஜனநாயக விரோதமானது. உலகில் நிலவும் அனைத்தின் மீதும் கருத்து சொல்லவும் விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது.

ஆனால் சொந்த ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கவும், மதவாதப் பற்களை மறைத்துக்கொண்டு பொதுவாக விமர்சிப்பதாக நாடகமாடும் ஆசாமிகளுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் மற்ற மதங்களை விமர்சிக்க எவ்வித தார்மீக உரிமையுமில்லை.

கருத்துச் சுதந்திரம் பாகம் – 9

பொய்யின் துணையுடன் பயங்கரவாத தர்க்கம் பேசும் கமல் சாரே!

இதோ உண்மை பேசுபவரின் ‘பயங்கரவாத’ தர்க்கத்தின் சுருக்கம்.

2004ல் அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒசாமா பின்லேடன் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கம்.

“அல்லா போற்றி!

அமெரிக்க மக்களே!

நான் பேசத் தொடங்குமுன் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பாதுகாப்பு என்பது மனித வாழ்வின் அசைக்க முடியாத தூண். ‘நாங்கள் சுதந்திரத்தை வெறுக்கிறோம்’ என்று புஷ் சொல்வது மோசடி. சுதந்திர மனிதன் தனது பாதுகாப்பைப் கெடுத்துக் கொள்ளமாட்டான்.

மற்றவர்களின் பாதுகாப்போடு விளையாடும் ஒரு செவிட்டுக் கொள்ளையனைத் தவிர வேறு யாரும் விளையாடவோ, தாம் பாதுகாப்பாக இருப்போம் என்று நம்பவோ மாட்டார்கள். அதே நேரத்தில் சிந்திக்கும் திறனுடையோர் பேரழிவு தாக்கும் போது அது மீண்டும் நடைபெறாமல் தடுக்க அதன் விளைவுகளை பரிசீலிப்பதற்கு கவனம் கொடுப்பார்கள்.

ஆனால் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். செப் – 11ன் சம்பவங்களுக்கப் பிந்தைய நான்காம் ஆண்டில் நாம் இருக்கும் போதும் புஷ் இன்னமும் பேரழிப்பை நடத்திக் கொண்டிகருக்கிறார். உங்களை ஏய்த்து, உங்களிடமிருந்து உண்மையான விளைவுகளை மறைத்து வருகிறார். இவ்வாறு ஏற்கனவே நடந்ததே திரும்பவும் நடப்பதற்கு காரணங்களை உருவாக்குகிறார்.

ஆகவே அந்த முடிவை எடுத்தற்கான தருணங்களைப் பற்றிய உண்மையைச் சொல்கிறேன். அந்நிகழ்வுகளுக்குப் பின்னுள்ள கதையைச் சொல்கிறேன். தங்களின் பரிசீலனைக்காக…

அல்லா அறிவார். நாங்கள் அந்த கோபுரங்களைத் தாக்கும் நிலை ஒருபோதும் நேர்ந்திருக்கக் கூடாது என்பதை அல்லா அறிவார். அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப் படைகள் பாலஸ்தீனிலும் லெபனானிலும் உள்ள எமது மக்கள் மீது நடத்திய ஒடுக்குமுறையும் கொடுங்கோன்மையும் தாங்க முடியாததாக இருந்தது. அது என் மனதைப் பிசைந்தது.

1982ல் இஸ்ரேலியர் லெபனானை ஆக்கிரமிக்க அனுமதித்ததும் 6வது போர்க்கப்பலை அனுப்பியதும் தான் என் ஆன்மாவை நேரடியாக பாதிக்கத் தொடங்கியது. குண்டுவீச்சு தொடங்கியது. பலர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமுற்றனர். மீதி இருந்தவர்கள் அச்சுறுத்தப்பட்டு இடம்பெயர்க்கப்பட்டனர்.

கண் முன் ஓடும் அக்காட்சிகளை என்னால் மறக்க முடியாது. இரத்தமும் சிதறிய உறுப்புகளுமாய் பெண்களும் குழந்தைகளும் எங்கெங்கும் சிதறிக் கிடந்தனர். குடியிருந்தவர்களோடு சேர்த்து வீடுகள் அழிக்கப்பட்டன. எமது வீடுகளின் மேல் ராக்கெட் மழை பொழிந்து தகர்த்தது.

அந்தச் சூழ்நிலையைப் பார்க்கையில் ஆதரவற்ற நிலையில் கதற மட்டுமே திராணி கொண்ட ஒரு குழந்தையை ஒரு முதலை சந்திப்பது போல் இருந்தது. முதலை ஆயுதங்கலக்காத உரையாடலைப் புரிந்து கொள்ளுமா? உலகமே பார்த்தது. கேட்டது. ஆனால் ஏதும் செய்யவில்லை.

அந்தக் கடினமான தருணத்தில் என் மனதில் குமிழ்விட்ட எண்ணங்களை விளக்குவது கடினம். இறுதியில் அது கொடுங்கோன்மையை மறுதலிக்கும் தீவிர உணர்வை உண்டு பண்ணியது. ஒடுக்குமுறையாளர்களை தண்டிக்க வேண்டும் என்ற தீவிர வைராக்கியத்தைப் பிறப்பித்தது.

லெபனானின் இடிந்த கோபுரங்களை நான் பார்த்தபோது ஒடுக்குமுறையாளர்களை அவர்களது வழிமுறையிலேயே தண்டிக்க வேண்டுமென்றும் நமது குழந்தைகளையும் பெண்களையும் காக்கவும், நாம் ருசித்ததை அவர்களையும் ருசிக்க வைக்கவும் அமெரிக்காவின் கோபுரங்களை அழிக்க வேண்டும் என்று என் மனதிற்குப் பட்டது.

அந்த நாளில் தான், பெண்களையும் குழந்தைகளையும் திட்டமிட்டே கொல்வதும் ஒடுக்குமுறை செய்வதும் அமெரிக்காவின் உள்நோக்கமுடைய கொள்கை என்பது உறுதியானது. அழிவே சுதந்திரம் ஜனநாயகம் என்று போற்றப்ப‌ட்டு, எதிர்ப்பு என்பது பயங்கரவாதமாகவும் சகிப்பின்மையாகவும் சித்தரிக்கப்பட்டது.

இது, சீனியர் புஷ் மனிதகுலம் இதுவரைக் கண்டிராத அளவில் இராக்கில் குழந்தைகளை மொத்தப் படுகொலை செய்ததைப் போலவும், ஜீனியர் புஷ், ஒரு ஏஜென்டின் ஆட்சியை அகற்றுவதற்காகவும் இராக்கிலிருந்து எண்ணெயைச் சுரண்டவும் தனது கைப்பாவையை ஆட்சியலமர்த்துவதற்காகவும் இராக்கிலும் மற்ற பகுதிகளிலும் பல மில்லியன் பவுண்டு கணக்கான குண்டுகளை பல மில்லியன் குழந்தைகள் மீது வீசியதையும் பொருள்படுத்துகிறது.

எனவே அவர்களின் மாபாதகத் தவறுகளுக்கான பதில், பெரிய ஒளிவட்டத்தையும் இப்படிப்பட்ட பிம்பங்களையும் கொண்டவர்கள் மீது செப்- 11 ஆக வந்தது. தனது சரணாலயத்தை ஒருவன் காக்க முற்பட்டதற்காக இதில் குற்றம் சொல்லலாமா?

தனது ஆக்கிரமிப்பாளனை தக்க வழிமுறைகளில் தண்டித்து தன்னைத் தற்காத்துக் கொள்வது ஆட்சேபிக்கத்தக்க பயங்கரவாதமா? அப்படித்தான் என்றால் எமக்கு வேறு வழியில்லை.

முடிவாக ஒன்றைச் சொல்கிறேன். உங்களின் பாதுகாப்பு புஷ்ஷின் கையிலோ ஜான் கெர்ரியின் கையிலோ அல்கொய்தாவின் கையிலோ இல்லை. அது உங்கள் கையில் தான் இருக்கிறது. எமது பாதுகாப்போடு விளையாடாத எந்த அரசும் தானாகவே அதன் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்கிறது.

அல்லாவே பாதுகாவலன்.. உதவியாளன்.. உங்களுக்குப் பாதுகாவலனோ உதவியாளனோ இல்லை. இந்த வழிகாட்டலை பின்பற்றுவோருக்கே பாதுகாப்பு.”

– ஓசாமா, Aljazeera.net (online publication), Doha, Qatar, October 30, 2004

இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல், நாயகன் விஸ்வநாதன் (எ) கமலைவிட, ஒசாமா பாத்திரத்துக்கும் ஒமர் பாத்திரத்துக்கும் தான் மிகப் பொருத்தம்.

“யாரென்று தெரிகின்றதா

இவன் யாரென்று தெரிகின்றதா

இவன் யாருக்கும் அடிமையில்லை

யாருக்கும் அரசனில்லை’

ஊரைக்காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்

சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்

பூமியைத் தாங்க வரம் கேட்கின்றோம்

புயலை சுவாசிக்க வரம் கேட்கின்றோம்

போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை

போர்தான் எங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது

நீதி காணாமல் போர்கள் ஓயாது..”

கருத்துச் சுதந்திரம் பாகம் – கடைசி.

கமலின் விஸ்வரூபம் உலக அர்த்தத்தில் அமெரிக்க பயங்கரவாதத்திற்கு அடியாள் வேலை செய்கிறது. இந்திய அர்த்ததில் வளர்ந்துவரும் இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு கொம்பு சீவுகிறது. தமிழ்நாட்டு அர்த்தத்தில் மதுரையையும் கோவையையும் குறிவைக்கச் சொல்கிறது.

கமல் தனது திரைப்படம் வெற்றியடைவதை ஒரு வியாபாரியின் துல்லியத்துடன் திட்டமிடுகிறார். இந்தியளவில் முஸ்லீம் வெறுப்புக்கும் அமெரிக்க மோகத்திற்கும் ஒரு சந்தை வாய்ப்பு இருப்பதை உள்ளுணர்வாக அறிந்து வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து திரைப்படமாக்கி வருகிறார். அதற்காக எந்த நியாயத்தையும் குழிதோண்டிப் புதைக்கவும் தயாராக இருக்கிறார். ஒரு வகை பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்.

ஆஸ்கர் விருது வாங்குவது அவருக்கு வாழ்வின் லட்சியமாக இருக்கிறது. சென்ற முறை “ஹர்ட் லாக்கர்” என்ற திரைப்படம் ஆஸ்கர் விருது வாங்கியது. ஈராக் போரை நியாயப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அது. கமல் சார் அந்தப் போட்டியில் இறங்கிவிட்டார். கொஞ்சம் மாற்றி அமெரிக்காவின் ஆப்கன் போரை நியாயப்படுத்தி எடுத்தாலாவது கொடுக்க மாட்டார்களா என்ற ஆசைதான். ஆசை வெட்கம் மட்டுமல்ல, உண்மையும் அறியாது போலும். மனிதப் பிணங்களின் மீது டாலர்கள் புரள்வதைப் பார்த்து அதன் விளம்பர வியாபாரத்தில் இறங்கிவிட்டார். அது அவருக்கு சாகச வெற்றியாகத் தெரிகிறது. நமக்கு அது சவப்பெட்டி வியாபாராமாகத் தெரிகிறது.

“தீயை, பெருந்தீ கொண்டு அணைக்காதே

காயத்தை ரத்தத்தால் கழுவாதே” – ஜலாலுதீன் ரூபி.

“யாரென்று தெரிகின்றதா

இவர் யாரென்று தெரிகின்றதா

எந்த ரூபம் எடுப்பான்

எவருக்குத் தெரியும்

சொந்த ரூபம் மாற்றி மாற்றி

எடுப்பான் விஸ்வரூபம்.” நன்றி – வைரமுத்துவுக்கு

– தங்கப்பாண்டியன், மதுரை (7708 543 572, vikshmi@gmail.com)

நீ சொன்னது தான் நடந்தது அம்மா …


பொறுப்பற்றவனாக
பிழைக்கத் தெரியாதவனாக
கோழையாக, கஷ்டம் தெரியாதவனாக
சம்பாதிக்கத் துப்பில்லாதவனாக
வீட்டுக்குப் பயனில்லாதவனாக,

போதையில் திரிபவனாக
தன்னிலை இழந்து தெருவில் கிடப்பவனாக
சோத்துக்குச் சிங்கி அடிக்கிறவனாக
போலீஸ் வீட்டுக்குத் தேடி வருகிற புள்ளியாக
பெண் பித்தனாக

சொத்தெல்லாம் வித்து வீதிக்கு வருபவனாக
ஏமாளியாக, ஏழையாக
எந்தச் சொந்தக்காரனும் சேர்த்துக் கொள்ளாதவனாக
ஒரு வேலைக்கும் லாயக்கில்லாதவனாக
வேலை பார்த்தும் கூலி பார்க்கத் தெரியாத மூடனாக

நான் ஆவேன் என்று
மற்றவர்கள் சொன்னதெல்லாம்
பொய்த்து
நீ சொன்னது தான் நடந்தது அம்மா.

– பாரதி கிருஷ்ணகுமார்

அம்பேத்காரும் இந்துவா?


“மநுஸ்மிருதி மற்றும் அதைப்போன்ற பிற நூல்களில், மிகவும் கீழ்த்தரமாகக் காணப்படும் கருத்துகள், மிக மோசமான வகையில் மனித உரிமைகளை மீறுவதாக இருக்கின்றன. எனவே, இம்மாநாடு மிக அழுத்தந்திருத்தமாக இதைக் கண்டிப்பதுடன் – அதன் ஒரு வெளிப்பாடாக, மநுஸ்மிருதியை எரிப்பது எனவும் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.”

– 25.12.1927 அன்று மகத் மாநாட்டில், டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த தீர்மானம்

புரட்சியாளர் அம்பேத்கர் மநுஸ்மிருதியை எரித்த (25.12.1927) 80ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இந்து பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் மூட்டிய தீ, நாடெங்கும் பற்றி எரிய வேண்டிய தேவையை, எவரும் எளிதாகப் புறந்தள்ளிவிட இயலாது. சமத்துவத்திற்கானப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியே மநுஸ்மிருதி எரிப்பு. ‘மநுஸ்மிருதிகள் வழக்கொழிந்து விட்டன; இதை எரிப்பதன் மூலம் அம்பேத்கர் ஏன் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?’ என்று அன்றே கேட்கப்பட்டது. இன்றும் இதுபோன்று கேள்வி எழுப்புகின்றவர்களுக்கும் சேர்த்து அம்பேத்கர் தெளிவாக பதிலளித்துள்ளார் : “இந்துக்கள் மநுஸ்மிருதியைப் பின்பற்றுவதால்தான், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் வன்கொடுமைகளை இழைக்கின்றனர். அது, வழக்கொழிந்துவிட்ட ஒரு நூல் என்பது உண்மை எனில், அதை யாராவது எரித்தால், அதற்கு இந்துக்கள் ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? இதை எரிப்பதால் என்ன கிடைக்கும் என்று கேட்கிறார்கள். காந்தி, அயல்நாட்டுத் துணிகளை எரித்ததால் என்ன கிடைத்தது? நியுயார்க்கில் மிஸ் மேயோ எழுதிய ‘அன்னை இந்தியா’ என்ற நூலை எரித்ததால் என்ன சாதித்தார்கள்? அரசியல் சீர்திருத்தத்தை வலியுறுத்திய சைமன் குழுவைப் புறக்கணித்ததால், என்ன சாதிக்கப்பட்டது? இவற்றையெல்லாம் எதிர்ப்பதற்கு என்ன காரணமோ, மநுஸ்மிருதியை எரிப்பதற்கும் அதுதான் காரணம்.”

இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியைத் தூண்டும் ‘புனித ஆற்றலை’ – மநுஸ்மிருதியும், பகவத் கீதையும், இந்து சாஸ்திரங்களும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இந்து வன்முறைகளுக்கு அவைதான் ஊற்றுக்கண். ஆனால், கீழ்த்தரமான இந்நூல்களை விமர்சித்தால், அதை விமர்சிப்பவர்களைத்தான் அரசு கைது செய்கிறது. ‘தமிழ் நாடு முஸ்லிம் மக்கள் கட்சி’யின் தலைவர் எஸ்.எம். பாஷா, மகாபாரதத்தை விமர்சித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலைத் தடை செய்ததோடு மட்டுமின்றி, அவரைக் கைது செய்துமிருக்கிறது (‘தினத்தந்தி’ 30.12.06). ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சனம், “சாதிப் பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும்” என்று பிரகடனப்படுத்தியதன் ஒரு பகுதியாக – ‘அகண்ட இந்து செயல்திட்டம்’ ஒன்றை சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தி, மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சுதந்திரமாக சொல்ல முடிகிறது (‘தி இந்து’ 3.1.07).

அரசியல் தளத்தில் மய்ய ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்த பா.ஜ.க. மற்றும் அதன் சங்பரிவாரங்கள், தற்பொழுது மீண்டும் ‘ராமன் கோயிலைக் கட்டுவோம்’ என்று கிளம்பியிருக்கின்றன. உத்திரப் பிரதேச தேர்தலைக் கவனத்தில் கொண்டும், வாஜ்பாய் சொல்வது போல, ‘லக்னோ வழியாக புதுதில்லி செல்லவும்’ அவை திட்டமிட்டுள்ளன. அதற்கான அடிப்படைவாதப் பணிகளில் அவை ஈடுபட்டுள்ளன. இந்நாட்டு மக்களிடையே இந்து உணர்வைத் தூண்டி ‘ஓட்டுப் பொறுக்கும் அரசியல்’தான் அது என்று சொல்லப்பட்டாலும், அது இந்து முஸ்லிம் கலவரத்திற்குதான் வித்தூன்றும். இக்கலவரங்கள் மூலம் ‘இந்து ஒற்றுமை’ வலுப்பெறுவதால், அதை செயல்படுத்துகின்றனர். இந்த அகண்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியே பெரியார் சிலை உடைப்பு!

பன்முகத் தன்மை வாய்ந்த இந்தியாவை ஒரே தேசியமாக சித்தரித்து, இந்து பண்பாட்டைத் திணிக்க முயல்கின்றனர். எனவே, அதற்கு எதிராக நாம் முன்னிறுத்தும் பண்பாடு, மிகவும் வலிமை வாய்ந்ததாக – சாதி, மத ஒழிப்புப் பண்பாடாக இருந்தாக வேண்டும். தமிழ்ப் பண்பாடு என்று பொதுவாகக் கூறுவது போதாமையாகும். இதற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பார்வை சான்று பகர்வதாகவே இருக்கிறது: “… பார்ப்பன எதிர்ப்பை, இந்து மத எதிர்ப்பாக நாம் மாற்றக் கூடாது… மூடநம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும்; வர்ண சாதி ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும். கடவுள் இல்லை என்பதைக் கருத்தியலாகப் பரப்ப வேண்டும். ஆனால், மதத்தோடும் கோயிலோடும் போர் புரிவது, எதிர்விளைவை உண்டாக்கும்” (‘தமிழர் கண்ணோட்டம்’ சனவரி 2007). பார்ப்பனர்களை எதிர்க்கலாம்; ஆனால், பார்ப்பனக் கடவுளர்களையும், அவர்களின் மதத்தையும், கோயிலையும் எதிர்க்க வேண்டாம் என்பது, கடைந்தெடுத்த முரண்பாடு இல்லையா?

பார்ப்பன ஆதிக்கம் – இந்து மதத்திலும், கோயில்களிலும், ‘புனித நூல்’களிலும்தான் மிக ஆழமாக வேர் கொண்டிருக்கிறது. அதனால்தான், ‘இத்தகைய வேதங்களையும், சாஸ்திரங்களையும், இந்து மதத்தையும் வெடி வைத்தே தகர்க்க வேண்டும்; வேறு எந்த செயலும் பயன் தராது’ என்றார் அம்பேத்கர். எனவே, அம்பேத்கர் மற்றும் பெரியாரைப் பின்பற்றுவதன் மூலம்தான், நாம் இந்து பண்பாட்டுத் தேசியத்தை வேரறுக்க முடியும். இக்கருத்தியல்களை உள்ளடக்காத தமிழ்ப் பண்பாட்டை, இந்து பண்பாடு எளிதில் செறித்துவிடும்!

தினமலரை —– என்று திட்டுவதற்கு இதுவும் காரணம் …


தொல்லைகள் நீங்கி வாழ்வதற்கான வழிகளை ‘தினமலர்’ ஆன்மிக மலர் ‘ராம நவமி’ சிறப்பு இதழில் வெளியிட்டிருக்கிறது (மார்ச் 20, 2010) இதன்படி – “வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லை என்றால், வால்மீகி இராமாயணம் யுத்த காண்டத்தி லுள்ள ஆதித்ய ஹ்ருதயத்தை எடுத்து வைத்துக் கொண்டு, மனப்பாடம் (பாராயணம்) செய்ய வேண்டும். கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், எதிரிகளால் ஏற்படும் துன்பம் ஒழியவும், யுத்த காண்டத்தில் நாகபாச விமோசன கதையைப் பக்தியுடன் படிக்க வேண்டும்.

மங்கள நிகழ்ச்சிகள் தடையின்றி நடத்தவும், குழந்தைகள் படிப்பில் முன்னேற்றமடையவும், ‘புத்திர பாக்கியம்’ ஏற்படவும், குறும்பு செய்யும் குழந்தைகளை திருத்தவும் – ராம ஜனனம், சீதா கல்யாண வைபோகம், பாதுகா பட்டாபிஷேகம், விபீஷண பட்டாபிஷேகம், ராம பட்டாபிஷேகம் ஆகிய இலாமாயணத்தின் பகுதிகளைப் படிக்க வேண்டும்.”

– என்று ‘தினமலர்’ அதி அற்புதமான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.

எனவே உடல்நலன் பெறவும், கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், எதிரிகளை சந்திக்கவும், குழந்தைகள் நன்றாக படிக்கவும்,மங்கள நிகழ்ச்சிகள் நன்றாக நடக்கவும், வால்மீகி ராமா யணத்தை படிக்க வேண்டுமே தவிர, வேறு ‘வெட்டி வேலைகள்’ எதிலும் ஈடுபடாதிருப்பீர்களாக. மருத்துவமனை போக வேண்டாம்; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்; வாங்கிய வங்கிக் கடனை திருப்பி செலுத்த வேண்டாம்; திருமணத்துக்கு வரன் தேடித் திரிய வேண்டாம்; எல்லா வற்றையும் ‘ஸ்ரீராமன்’ கவனித்துக் கொள்வான்! சரி, தானே!

இப்ப சொல்லுங்க தினமலரை —– என்று திட்டலாம்தானே …

இதோ, ஒரு பண்பாட்டுப் புரட்சி!


பிறப்பு முதல் இறப்பு வரை தமிழர் வாழ்வியலில் பண்பாடுகள் என்ற பெயரில் திணிக்கப்பட்ட கூறுகள், தமிழர்கள் சுயமரியாதைக்கு எதிரானவைகளாகவே உள்ளன. தமிழர்களை சூத்திரர் களாக்கும் இழிவும், பெண்கள் அடிமைகள் என்ற கருத்தும், மூட நம்பிக்கைகளுமே, அதில் பொதிந்து கிடக்கின்றன. இந்த அடிமைப் பண்பாடுகளுக்கு எதிராக, மாற்றுக் கலாச்சாரங்களை சமுதாயத்தில் அறிமுகப்படுத்தி, பண்பாட்டுப் புரட்சியை கடும் எதிர்ப்புகளுக்கிடையே விதைத்தது, பெரியாரின் திராவிடர் இயக்கம்.

குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடுவதும், புகைப்படம் எடுப்பதும் குழந்தையின் ஆயுளைப் பாதித்துவிடும் என்ற மூட நம்பிக்கைக்கு எதிராக குழந்தைகளுக்கு பிறந்த நாள் விழாக்கள் அறிமுகமாகி அது பரவலாகிவிட்டது. வடமொழியில் பெயர் சூட்டுவதுதான் சமூக செல்வாக்கை உயர்த்திக்காட்டும் என்ற பார்ப்பனிய செல்வாக்கைத் தவிர்க்க தமிழ்ப் பெயர் சூட்டுதல்; கடவுள், மதத் தலைவர் பெயர்களுக்கு மாற்றாக புரட்சியாளர்கள், விஞ்ஞானிகள் பெயர்களை சூட்டுதல் என்ற மாற்றம் உருவானது. பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால், அதற்கொரு சடங்கை நடத்தி, சாதி உறவுகளின் விழாவாக்கி நாடு முழுதும் அந்தச் செய்தியை அறிவிக்கும் சடங்கை எதிர்த்து, பெரியாரின் திராவிடர் இயக்கம் தான் கேள்வி கேட்டது. இயற்கையாக நிகழும் உடல் மாற்றத்துக்கு ஒரு விழாவா? அப்படியானால், ஆண்களுக்கு அப்படி ஒரு விழாவை ஏன் நடத்துவதில்லை என்ற கேள்விகளை பெரியார் இயக்கம் முன் வைத்தது. கல்வியின் வளர்ச்சியால், இந்தக் கேள்வியை சிந்தித்த பெண்களே அப்படி ஒரு சடங்கை நடத்த விரும்பாத நிலை உருவாகிவிட்டது.

திருமணம் என்பதற்கு ‘விவாக சுபமுகூர்த்தம்’ என்று பெயர் சூட்டி, பார்ப்பன புரோகிதர்களை அழைத்து, வடமொழியில் மந்திரங்களை ஓதும் புரோகித விவாகத்துக்கு எதிராக பெரியார் இயக்கம் அறிமுகப்படுத்திய சுயமரியாதை திருமணம், தமிழர்களின் திருமண முறையாக வளர்ந்து வருகிறது. புதிய வீட்டிற்குகுடிபுகும், ‘கிரகப் பிரவேசங்கள்’ பார்ப்பன புரோகிதர்கள் பசுமாடுகளைக் கொண்டு நடத்தும் முறைக்கு எதிராக, இல்லத் திறப்பு விழாவை பெரியாரின் திராவிடர் இயக்கம் அறிமுகப்படுத்தியது. ‘சூத்திரன்’ வீட்டு மரணச் சடங்குகளில் பங்கேற்காத பார்ப்பனர்கள், இறந்தவரின் ‘ஆன்மாவை’ சொர்க்கத்துக்கு அனுப்பு வதற்காக ‘திதி’ நடத்த மட்டும் வந்துவிடுவார்கள். இதற்கு மாற்றாக நினைவுநாள் படத்திறப்பு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது பெரியாரின் திராவிடர் இயக்கம்.

திருமணம் முடிந்து முதல் குழந்தை பிறப்பதற்கு முன், குழந்தைப் பிறப்பு நன்றாக முடிய வேண்டும் என்பதற்கு பெண்கள் கரங்களில் வளையல்களைப் பூட்டி, சாதி உறவுகளையும், புரோகிதர்களையும் அழைத்து நடத்தப்பட்ட ‘வளைகாப்பு’ சடங்குகள் பெரியாரின் திராவிடர் இயக்கத்தின் பிரச்சாரத்தால் குறைந்து வருகின்றன. வளைகாப்புக்கு பதிலாக, சிறந்த மகப்பேறு மருத்துவமனைகளை முன்கூட்டியே பதிவு செய்யும் நிலை வந்துவிட்டது. பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தினரை திராவிடர் என்ற தளத்தில் அணி திரட்டி, பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு எதிராக பண்பாடு, கல்வி, பதவி, அரசியல் அதிகார உரிமைகளுக்குப் போராடி – அதில் வெற்றிப்பெற்ற பெருமை பெரியாரின் திராவிடர் இயக்கத்துக்கு உண்டு.

‘சூத்திரன்’ வீட்டுச் சாவுகளில் பார்ப்பான் வருவதில்லை என்றாலும்,பார்ப்பனியம் ஊடுருவி நின்றது. இறப்பு சேதியைச் சொல்லவும், தப்பு அடிக்கவும், பிணத்துக்கு பாடை கட்டவும், சுடுகாட்டில் புதைக்கவுமான தொழில்கள் சாதியமைப்பால் நிலைநிறுத்தப்பட்டு, பெண்கள் முற்றிலுமாக இதில் பங்கேற் காமல் தடைபடுத்தப்பட்டனர். பெண்கள் சுடுகாடு வருவதற்கே அனுமதிக்கப்படு வதில்லை. இந்த நிலையில்,பெரியாரின் திராவிடர் இயக்கம் இந்த அடிமை மரபுகளையும் எதிர்த்து கலகம் செய்து வருகிறது. பெண்களே பிணத்தைத் தூக்கிச் சென்று, பெண்களே அடக்கம் செய்யும் நிகழ்ச்சிகளை பெரியார் தொண்டர்கள், தங்கள் வீட்டு மரண நிகழ்வுகளில் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக பெரியார் திராவிடர் கழக சேலம் மாவட்ட அமைப் பாளர் டைகர் பாலன் தாயாரின் மரணத்தில், பெண்களே இறந்தவரின் உடலை சுமந்து இடுகாடுச் சென்று அவர்களே குழித் தோண்டி அடக்கம் செய்துள்ளனர்.

தோழர் டைகர் பாலன் அவர்களின் தாயார் கி. மரகதம் அம்மாள்,கடந்த மார்ச் 20 ஆம் தேதி மாலை முடிவெய்தினார். அடுத்த நாள் 21ஆம் தேதி ஞாயிறு காலை 10.30 மணிக்கு இறுதி ஊர்வலம் நடந்தது. கழகத்தைச் சார்ந்த பெண்களே, இறந்தவர் உடலைச் சுமந்துச் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்ய முன் வந்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள், தோழியர் களுடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பெண்களே சுமந்துச் சென்ற காட்சியைப் பொது மக்கள் பலரும் பார்த்து வியந்தனர். எவ்வித மூடநம்பிக்கைச் சடங்குகளும் இன்றி இடுகாட்டில், பெண்களே உடல் அடக்கம் செய்தனர். கழகத் தோழியர் கனகரத்தினம் பெரியார் வடித்துத் தந்த ஆத்மா மறுப்பு முழக்கங்களை எழுப்ப, தோழர்கள் பதில் முழக்கங்களை எழுப்பினர். ‘ஆத்மா’ மறுப்போடு அடக்கம் முடிந்தது.

பெரியாரின் திராவிடர் இயக்கம், மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை அதன் பண்பாட்டுப் புரட்சிச் சுவடுகளைப் பதித்து வருவதற்கு சான்றாக, இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

திராவிடர் இயக்கமே நாட்டைக் கெடுத்தது என்று மேடைகளில் வசனம் பேசக் கிளம்பியிருப்போர்,வரலாறுகளையும் சமூக மாற்றங் களையும் திரும்பிப் பார்ப்பார்களா?

மதமாற்றம்: பெரியார் கருத்து என்ன?


தீண்டாமையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு மட்டுமே, மதமாற்றத்தை மக்களுக்கு தாம் முன்மொழிவதாகப் பெரியார் கூறுகிறார். மற்றபடி முஸ்லிம் மதத்தில் உள்ள மூட நம்பிக்கை, பெண்ணுரிமை மறுப்பு கருத்துகள், சுயமரியாதைக்காரர்களுக்கு உடன்பாடானது அல்ல என்றும் கூறுகிறார். அம்பேத்கர், மதமாற்றத்தை அறிவித்தபோது, ஒரு தோழர், பெரியாருக்கு கடிதம் எழுதி, மதத்தை மறுக்கும் சுயமரியாதைக்காரர்கள், மத மாற்றத்தை ஆதரிக்கலாமா என்று கேட்டதற்கு, பெரியார் விளக்கமளித்து, ‘குடி அரசு’ ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை வெளியிடுகிறோம்.

“எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால் தான் அதை மனிதத் தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதை புஸ்தகப் பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பொருமானவர்களே ஒழிய காரியத்துக்கு பொருமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும்.

வெளிப்படையாய் நாம் பேசுவதானால் அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும், நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபணை என்ன என்று கேட்கின்றோம். முகம்மதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம்.

கோஷா இருக்கலாம். கடவுள் இருக்கலாம். மூட நம்பிக்கை இருக்கலாம். மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம். சமதர்மமில்லாமலுமிருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு மகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகம்மதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். நாஸ்திகருக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். சமதர்மவாதிகளுக்கும், பொது உடமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். ஆனால் தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற – ஒதுக்கப்பட்டிருக்கின்ற – தாடிநத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, நாயினும், மலத்திலும் புழுத்த விஷக் கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் – தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டு இருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா? இல்லையா என்று கேட்கின்றோம்.

உண்மையாகவே சுயமரியாதைக்காரருக்கு இந்தச் சமயத்திலும் வேலை இருக்கிறது என்றுதான் நாம் கருதுகிறோம். ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவப் பிள்ளை, கிறிஸ்தவ நாயக்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லீம் என்றோ அழைக்க இடமில்லாமலும், அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்ற சமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு “எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக்கொள்ள வேண்டும்” என்கின்றவன் போனால் இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும் “சரி எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்” என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம். நமக்குக் கடிதம் எழுதின நண்பர், “இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது. பெண்களுக்கு உறை போட்டு மூடி வைத்து இருக்கிறார்கள்” என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும் தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம்.

இது பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம். இஸ்லாம் மார்க்கம் தாண்டவமாடும் துருக்கி, ஈஜீப்ட், பர்ஷியா முதலிய இடங்களில் மூடி கிடையாது என்பதோடு, அம்பேத்கர் தமது மனைவிக்கு மூடி போடா விட்டால் எந்த முஸ்லீமும் அவரை கோவிலுக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. எப்படி இருந்தாலும் நாம் அதைப் பற்றி இப்போது விவகரிக்க அவசியமில்லை என்று கருதுகிறோம். ஆகவே, தோழர் அம்பேத்கர் மதம் மாறுவதில் எந்த மதம் மாறப் போகிறார் என்பது நமக்குத் தெரியாது. உலகாயுத மதத்தையோ, நாஸ்திக மதத்தையோ தழுவவோ அல்லது முஸ்லீம் மதத்தைத் தழுவவோ போகிறாரோ என்பதும் நமக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும் வெறும் ஏமாற்றமும் சூடிநச்சியும் கண்டதும், சண்டாளன், பாவி, இழி குலத்தவன், தீண்டத்தகாதவன் என்று மனிதனை வெறுத்துத் தள்ளுவதும், ஒருவர் உழைப்பை ஒருவர் கொள்ளை கொள்ளுவதுமான காரியங்களை மதக்கட்டளையாகக் கொண்டதுமான இந்து மதத்தை விட்டுவிடுகிறேன் என்றால், அதைப் பொருத்த வரையில் முதலில் அதற்கு உதவி செய்ய வேண்டியது ஒவ்வொரு சுயமரியாதைக்காரனுடைய வும் கடமை அல்லவா என்று கேட்கின்றோம்.

இந்து மதம் சீர்திருத்தமடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும், சூடிநச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம் சீர்திருத்தமடைந்து வரவில்லை. இந்துமதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம். இந்து மதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை. அதை சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்துமத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொருத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொருத்தது அல்ல. எந்த மகாத்மாவானாலும், சீர்திருத்தக்காரனானாலும், சுவாமி பட்டம் பெற்றவனானாலும், தன்னுடைய சீர்திருத்தத்தை மதம், சாஸ்திரம் அனுமதிக்கிறது என்று வேஷம் போட்டுத்தான் சீர்திருத்தம் செய்ய ஆசைப்படுகிறாரே ஒழிய வேறில்லை.

எந்த வேதமும், எந்த மதமும், எந்த சாஸ்திரமும் இந்த மகாத்மாவுக்கும், சுவாமிக்கும் சீர்திருத்தம் செய்ய எங்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. அது வேதத்தின் சாரமான – பகவான் வாக்கான என்று சொல்லப்படும் கீதையிலும், மனு சாஸ்திரத்திலும், பராசர் ஸ்மிருதியிலும் பச்சையாய் சொல்லி இருக்கிறது. இவற்றை விவகாரத்துக்கு இடமானது என்று சொல்லிவிட முடியாது. இன்று பொது ஜனங்களை ஏமாற்ற, தற்கால சாந்தியாக சொல்லிக் கொண்டாலும் அந்த முறைக்கும், சாஸ்திரத்துக்கும் மாத்திரமல்லாமல் பழக்க வழக்கங்களுக்கும் அரசியல் காப்பளித்துவிட்ட பிறகு இந்த விவகாரத்துக்கு இடமேது என்று கேட்கின்றோம். இன்று ஏமாற்றி ஓட்டு வாங்கிக் கொண்டு நாளைக்கு எந்த ஊர் என்று கேட்டால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்? ஆகவே தீண்டாமை விஷயத்தில் இவ்வித குழப்பம், இருவித அருத்தம், சமயம் போல் திருப்பிக் கொள்ளும் சௌகரியம் ஆகியவைகள் இல்லாத மதமே தீண்டாமையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு ஏற்றதாகும் என்பது நமது அபிப்பிராயம். வெகு நெருக்கடியான சமயத்தில் அம்பேத்கர் இடமும், சிவராஜு இடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொது ஜனங்களிடம் லட்சக்கணக்கான பணமும் வசூல் செய்து கொண்டு அதைச் செலவழித்து எலக்ஷனில் வெற்றியும் அடைந்து கொண்டு கடைசியில் தீண்டாமை விலக்கு சம்பந்தமாக சட்டம் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் தானே இன்று அம்பேத்கர் வேறு மதத்துக்குப் போகிறாரே என்று வயிற்றில் அடித்துக் கொள்ளுகிறார்கள்? இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள்

அம்பேத்கர் வேறு மதத்துக்கு போவதை அனுமதிக்கக் கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான் நியாயமாகுமா? இதையெல்லாம் கவனித்தால் ஒரு காரியமும் செய்ய முடியாது. ஆதலால் அம்பேத்கருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன் அம்முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரடையவும் கடமையாகும் என்பது மதபிப்பிராயம்.

குடி அரசு, தலையங்கம் 17.11.1935

தோழர் பெரியார்தாசனின் கொள்கை மாற்றம்!


தோழர் பெரியார்தாசன் இவ்வாரம் வெளிவந்த இசுலாமிய இதழ்கள் அனைத்திலும் கதாநாயகனாகிவிட்டார். கடந்த மார்ச் 12 ஆம் தேதி அரபு நாடுகளில் ஒன்றான ரியாத்தில், அவர் இசுலாத்தைத் தழுவியதாக அறிவித்ததே இதற்குக் காரணம். பெரியார்தாசனின் இந்த முடிவுகள் எல்லாம், நமக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. பெரியார் இயக்கத்தினர், தோழர் பெரியார்தாசனை நன்றாகவே புரிந்தவர்கள் தான். பெரியார் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த அவருக்கு, தமிழகம் முழுதும் பெரியார் இயக்கத்துடன் பல ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு என்பதும், எல்லோரிடமும் இனிமையாகவும், தோழமையாகவும் பழகக் கூடியவர் என்பதும் எல்லோருக்குமே தெரியும். பகைமை பாராட்டாத நண்பர். மக்களிடம் பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் தன்னுடைய பேச்சுத் திறமையை வலிமையாகப் பயன்படுத்தியதால், பெரியார் இயக்கத் தோழர்கள் அவரை விரும்பி கூட்டங்களுக்கு அழைத்தார்கள். இப்போது பெரியார் சிந்தனைப் பள்ளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஒரு மதவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதால், பெரியார் இயக்கத் தோழர்கள் சிலர் நம்முடைய பெரியார்தாசன், இப்படிப் போய்விட்டாரே என்று ஆதங்கப்பட்டார்கள். அவரது கடந்த கால வரலாறுகளை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு, இதில் வியப்பு ஏதும் இருக்காது என்பது தான் நமது கருத்து.

அவர் எப்போது பெரியார்தாசன் ஆனார் என்ற கேள்விக்கு அவரே இப்போது ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார். பச்சையப்பன் கல்லூரியில் அவர் மாணவராக இருந்த காலத்தில், பெரியார் பேச வந்தபோது, ஒரு கவிதையை எழுதிப் படிக்க விரும்பியிருக்கிறார். அப்போது அவரது உண்மைப் பெயர் சேஷாசலம். பட்டை சந்தனம், குங்குமப் பொட்டு என்று பக்தி பழமாகக் காட்சியளித்தவர். அந்தக் கவிதையை தனது பேராசிரியர் ஒருவரிடம் அவர் படித்துக் காட்டியபோது, பேராசிரியரோ மாணவர் பெயர் ‘சேஷாசலம்’ என்று இருக்கிறதே என்று தயங்கியிருக்கிறார். உடனே, அடுத்த விநாடியே, தன்னுடைய கவிதையை பெரியாருக்கு முன் படிக்க வேண்டும் என்ற துடிப்பில், பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

“அன்று பெரியார்தாசன் என்று பெயரிட்டபோது, என் தலையில் பட்டை, சந்தனம், குங்குமப் பொட்டு என்று பக்திப்பழம் போன்று காட்சி தந்தேன்” என்று அந்தப் பேட்டியில் (மக்கள் உரிமை, இதழ்,மார்ச். 19) அவர் கூறுகிறார். ஆக, பெரியார் கொள்கையை ஏற்காத காலத்திலே, தனது கவிதையை பெரியார் முன் படிக்கும் ஆர்வத்துக்காக ‘பெரியார்தாசனாக’ பெயர் மாற்றிக் கொண்டவர் தான் பெரியார்தாசன்.

சென்னை பெரியார் திடலில் 1980-களில் நடந்த பயிற்சி முகாமில் மாணவராக பங்கேற்று, திராவிடர் கழகத்தின் பிரச்சாரகராக மேடை ஏறிய பெரியார்தாசன், படிப்படியாக தனது பேச்சாற்றலை வளர்த்து, மக்கள் செல்வாக்கைப் பெற்ற நிலையில், திராவிடர் கழகத்துடன் கருத்து வேறுபாடு எழுந்தது. செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த பெரியார் சமதர்மம் இயக்கத்தில் இணைந்து செஞ்சட்டைப் போட்டு, ‘சமதர்மம்’ பேசலானார்.

அதன் பிறகு, தலித் இயக்கங்களோடு நெருங்கி, அம்பேத்கரின் சாதி ஒழிப்பு, இந்து மத எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்புவதில் தீவிரம் காட்டினார். அதே காலகட்டத்தில் தன்னை புத்த மார்க்கத்தில் இணைத்துக் கொண்டு தனது பெயரை சித்தார்த்தன் என்று மாற்றிக் கொண்டார். சில காலம் சித்தார்த்தன் என்ற பெயரோடு கூட்டங்களில் பேசிய அவர், மீண்டும், தனது பெயரை பெரியார்தாசன் என்றே போடுமாறும், சித்தார்த்தனை தவிர்த்து விடுங்கள் என்று வேண்டுகோள் வைத்து, பெரியார்தாசன் ஆனார்.

பெரியார்தாசனை அழைத்துக் கூட்டங்களை நடத்துவதற்கு பெரியார் இயக்கத் தோழர்கள் மிகவும் விருப்பமாகவே இருந்தாலும், குறைந்த செலவில் பரப்புரை நடத்தும் தோழர்களின் பொதுக் கூட்ட வரவு செலவுகளுக்குள் பெரியார்தாசனை அடக்க முடியாத நிலை வந்ததால், அவரை வைத்து கூட்டங்கள் நடத்துவது குறைந்தது.

அது மட்டுமல்ல, அனைவரிடமும் அன்பு பாராட்டும் அவர், மறுக்காமல் ஒரே தேதியை ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்களுக்கு தந்துவிடும் போது, எந்த ஊருக்கு அவர் வரப்போகிறார் என்ற குழப்பத்திலும் தோழர்கள் தடுமாறும் நிலை வந்துவிட்டது. இந்த நிலையில் தமிழ்ச் சான்றோர் பேரவையில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழகம் முழுதும் ஒரு சுற்று வந்தார். அப்போது ஆதி சங்கரர் தத்துவம், மிகவும் முற்போக்கானது; புரட்சிகரமானது என்று ‘நந்தன்’ பத்திரிகையில் எழுதினார்.

ஒரு கட்டத்தில் பேரவைக் கூட்டங்களும் மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தன்னம்பிக்கைக்கான கருத்தரங்குகளை ஒரு வர்த்தக நிறுவனத்துக்காக பேசக் கிளம்பினார். தன்னம்பிக்கைப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டினார். அப்படித் தன்னம்பிக்கையை விதைத்து வரும்போது, எந்த நிறம் கொண்ட ‘கல்லை’ நகைகள் வழியாக அணிந்தால், ‘ராசி’ கிடைக்கும் என்று தொலைக்காட்சியில் ‘ராசிக் கல்’ பரப்புரையில் இறங்கினார். பெரியார் தொண்டர்கள், “என்ன, இப்படி, நமது பெரியார் தாசனா?” என்று கேட்டார்கள். ராஜராஜன் என்ற தன்னுடைய நண்பர் ஒருவருக்காக, அப்படி தொலைக்காட்சியில் பேச நேரிட்டது என்றும், அதற்காக என்னை பெரியார் இயக்கம் புறக்கணிக்க வேண்டுமா? என்று வேதனைப்பட்டதோடு, சென்னையில் நடந்த ஒரு கூட்டத்திலும் இதை வெளிப்படையாகவே பேசினார்.

அதன் பிறகு, பெரியாரும், சிங்காரவேலரும் சேர்ந்து தொடங்கிய சுயமரியாதை – சமதர்ம இயக்கத்தை மீண்டும் தொடங்கிவிட்டதாகவும், தான் அதன் பொது செயலாளர் என்றும் கூறி வந்தார். பதவி ஓய்வுக்குப் பிறகு மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான ஆலோசனை மய்யங்களைத் தொடங்கி நடத்தி வந்தவர், இப்போது இஸ்லாத்தைத் தழுவிவிட்டதாக அறிவித்திருக்கிறார். ஆக, சேஷாச்சலம் – பெரியார் தாசன் – கவுதமன் – மீண்டும் பெரியார் தாசன் – என்ற அவரது பரிணாம “வளர்ச்சி”, ‘அப்துல்லாஹ்’ என்ற கட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. இப்போது இந்த முடிவுக்கு வந்ததற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார்.

அவரோடு 11வது வகுப்பு வரை படித்த பள்ளித் தோழர் சிராஜ்தீன் என்பவரை, 2000 ஆம் ஆண்டில் ஓர் இரவு அவர் சந்தித்துப் பேசினாராம். சிராஜ்தீன் எழுப்பிய கேள்விகள் அவரை அன்று இரவு முழுதும் தூக்கம் வராமல் செய்து விட்டது என்கிறார். அப்படி,பெரியார்தாசனை தூக்கம் வராமல் செய்துவிட்ட ‘பொருள் பொதிந்த’ கேள்வியையும் பெரியார் தாசன் கூறியிருக்கிறார். “நீ இறை மறுப்பாளனாக பிறக்கவில்லை. இறக்கும்போது இறை மறுப்பாளனாக இறக்கக் கூடாது” என்ற சிராஜ்தீன் சிந்தனைதான், பெரியார்தாசனின் தூக்கத்தைக் கலைத்து விட்டதாம். அந்த இரவு – அந்த கேள்விதான் அவரை இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கைக்குக் கொண்டு வந்த மகத்தான இரவு ஆகும். அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு முதல் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை முற்றாகத் தாம் நிறுத்திக் கொண்டுவிட்டதாக பெரியார் தாசன் கூறுகிறார். ஆனாலும் ஆறு ஆண்டுகள் கழித்து 2010 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தான், அந்த ‘ரகசியத்தை’ நாட்டுக்கு வெளியிட்டிருக்கிறார். ஆக, பெரியாரிஸ்டாக இருந்து அவர் இசுலாமைத் தழுவவில்லை. அவர் கடவுள் மறுப்பை விட்டு 6 ஆண்டுகளாகிவிட்டது. கடவுள் நம்பிக்கையாளராக மாறிய பிறகே இசுலாத்தை தழுவியிருக்கிறார்.

“இழிவு ஒழிய இசுலாமே நன்மருந்து” என்று பெரியாரே கூறியிருப்பதாக ஒரு பேட்டியில் பெரியார் தாசன் கூறியிருப்பதால்,நாம், சில விளக்கங்களைக் கூற வேண்டியிருக்கிறது. இந்த விளக்கங்கள்கூட, பெரியார்தாசனுக்கு அல்ல. காரணம்,தீண்டாமையிலிருந்து விடுபடுவதற்கு மட்டுமே இசுலாத்திற்கு மாறலாம் என்று பெரியார் கூறியதும், அதுவும், அந்த ஆலோசனை சுயமரியாதை இயக்கத்தினருக்கு அல்ல. தீண்டாமையால் பாதிக்கப்படும் வெகுமக்களுக்குத் தான் என்பதும், பெரியார் தாசன் அறிந்தவர் தான்! (பெரியாரின் அந்தக் கட்டுரை, இதே இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது) இறைவன் இருக்கிறான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட முன்னாள் பெரியார் தாசன், இனி டார்வின் பரிணாம வளர்ச்சி மற்றும் உயிரியல் கொள்கையை மறுக்க வேண்டும். மார்க்சின் பொருள் முதல்வாதக் கோட்பாட்டைப் பொய் என்று கூற வேண்டும். பெரியாரின் கடவுள் மறுப்பு அர்த்தமற்றது என்றெல்லாம் பேச வேண்டும்.

“1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு எழுத்து, ஒரு புள்ளி, ஒரு கமா கூட மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே வேதம், இறைவனால் நேரடியாக அருளப்பட்ட வேதம், திருக்குர்ரான் தான்” என்று அவர் பேட்டியில் கூறியுள்ளதை நியாயப்படுத்தி விளக்க வேண்டும்.

இப்படி எல்லாம் பேச வேண்டிய சுமையை நமது முன்னாள் தோழர் தமது தோள் மீது சுமக்க வந்திருக்கிறாரே என்ற கவலைதான், நமக்கு! 1400 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட ஒரு கருத்தை, அதை இறைவன், நேரடியாக சொல்லிய ஒரே காரணத்துக்காக 1400ஆண்டுகால இடைவெளியில் சமூகத்தில் நடந்த மாற்றங்கள், உலகில் நடந்த திருப்பங்கள், விஞ்ஞான வளர்ச்சி, அத்தனைகளையும் ஓரமாக தூக்கிக் கடாசி எறிந்து விட்டு, பெரியார் தாசன் எப்படித்தான், நியாயப்படுத்தப் போகிறாரோ தெரியவில்லை. ஆனாலும் அவர் சமாளிப்பார். இனி மேல் அவர் மதக் கூட்டங்களிலே மட்டும் தானே பேச வேண்டியிருக்கும்? அதனால் பிரச்சினையில்லை. அவர்களிடம் கைதட்டல் வாங்கும் திறமை அவருக்குத்தான் நன்றாக உண்டே! என்ன இருந்தாலும் நல்ல பேச்சாளர் அல்லவா? ஆனாலும், நமக்கு ஒரு வருத்தம் உண்டு. தனது பிரச்சாரத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களை பெரியார் கொள்கைக்குத் திருப்பியதாக கூறும் பெரியார் தாசன், இப்போது பெரியார் கொள்கைக்கு விடைக் கொடுத்துத் திரும்பும்போது ‘ஒற்றை’ தனி மனிதராகத் தானே போக வேண்டியிருக்கிறது என்ற அந்த ஒரு வருத்தம் தான்! வேறு ஒன்றுமில்லை!

– பெரியாரிஸ்ட்