இஸ்லாம் ஆண்கள் ஏன் அரேபியா பாணி ஆடைகளை தமிழகத்தில் அணிவது இல்லை?


உடை என்பது வாழும் இடத்தின் பருவநிலைகளுக்கு ஏற்ப இருக்கவேண்டிய ஒன்று. மேலும், அது அன்றாட வேலைகளை எளிதாகச்செய்யும் வண்ணம் இருக்க வேண்டும். நீச்சல் குள‌த்தில் பிகினி யில் இருப்பது சதாரண‌விசயம். ஆனால் பாவாடை போட்டுக்கொண்டு பாரசூட்டில் குதித்தால், அது விரசமாக பார்க்கப்படும். உடையின் வடிவமும் , தேவையின் அளவும் ஒருவர் வாழும் இடம் , இயற்கைச் சூழ்நிலை போன்றவற்றால் மாறும் தன்மை கொண்டது. மதம் சமூகம் விதிக்கும் கட்டளைகளுக்காக, பாலைவன உடையை ஆர்க்டிக்கில் அணிய முடியாது.
மதங்களின் கட்டுமானத்தில் , ஒவ்வொரு உடையின் பின்னாளும் உடல் சார்ந்த / சமூகம் சார்ந்த‌ அரசியல் மற்றும் வரலாறு உள்ளது. குழந்தைகளுக்கு செக்குமாடுபோல ஒரு பழக்கத்தையும் , பிறந்தவுடன் மதம் என்ற ஒரு சுமையையும் , அந்த மதம் தோன்றிய இடத்தில் உள்ள புரியாத பழக்க வழக்கங்களை ஏற்றிவிட்டு , வளர்ந்தபின் அவர்கள் அதைவிடமுடியாமல் கூச்சப்படும்போது அதை உரிமை,கண்ணியம்,நற்குடி என்று நமக்கு நாமே சொல்லி , நம்மையும் சமூகத்தியும் ஏமாற்றிக் கொள்ளவேண்டாம்.

கண்ணியம் என்பது அணியும் மட்டும் உடையில் இல்லை. இடத்திற்கு தக்க உடை அணிவதும் , அந்த உடையில் எப்படி உடல் மொழியை வெளிப்படுத்துகிறோம் என்பதிலும்தான் உள்ளது. செவிலியர் பணியில் இருக்கும் பெண்கள் முழங்கால்வரை போடும் உடையில் இல்லாத கண்ணியம் , முழுக்க முழு சேலை கட்டிக் கொண்டு “வடுமாங்கா ஊறுது” என்று ஆடுவதில் இருக்கப்போவது இல்லை.

ஆட்டம் தவறு என்று சொல்லவில்லை. ஆட்டம், கொண்டாட்டங்களுக்கு எதிரானவனும் இல்லை நான். எந்த உடையிலும் உடல்மொழிதான் செய்தியைச் சொல்லும் என்று சொல்லவே இந்த உதாரணம். நிர்வாணமாக நின்று ஓவியத்திற்கு Model ஆக இருப்பதில் காமம் இல்லை. மார்பகத்தை கேன்சர் காரணங்களுக்காக பரிசோதனை செய்யும் மருத்துவரின் கையில் முழு மார்பகமும் இருந்தாலும், அவரின் உடல் மொழியிலோ அல்லது பரிசோதனைக்கு வந்த பெண்ணின் உடல் மொழியிலோ காமம் இருக்கப்போவது இல்லை.

குழந்தைகள் மீது மதம் மற்றும் உடைத் திணிப்பு
பெண்ணோ ஆணோ , வாழும் இடத்தில் உள்ள பருவ நிலைக்கு ஏற்ப ,பிறந்தது முதல் 18 வயது வரை எல்லா வகை ஆடைகளையும் அணிந்து வாழும் சுதந்திர சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். சேலை ,சுரிதார்,பேண்ட் சட்டை,ஸ்கர்ட் ‍ டாப்ஸ்,அரை டவுசர் டாப்ஸ்,பொது இடத்தில் குளிக்க‌ நீச்சல் உடை,இன்னபிற.மேலும், 18 வயது வரை குழந்தைகள் மதமற்று இருக்கட்டும். 18 வயது வரையில் அவர்கள் எல்லா மதத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு தாருங்கள். அனைத்தையும் அறியட்டும். எதையும் தடை செய்யாதீர்கள்.

சேலைகட்டிக்கொண்டு முழங்காலுக்கு மேலே தொடை தெரிய தூக்கி ஆடுவது ஆபாசம். ஆனால் அரை டவுசர் போட்டுக்கொண்டு அதே தொடைகள் தெரிய டென்னிஸ் விளையாடுவதில் எந்த ஆபாசமும் இல்லை.

ஆபாசமாக இருப்பதும் , கவர்ச்சியாக இருப்பதும் ஆடையில் இல்லை. உடல் மொழியில்தான் உள்ளது எனது கற்பிக்கப்படவேண்டும். How do you carry yourself and what signal you give to others என்பதுதான் கண்ணியத்தை அளக்கும் அளவுகோல்.

இப்படிச் சுதந்திரத்தை கொடுத்து வளர்த்துவிட்டு,18 க்குப் பின்னர் அவர்கள் விரும்பி அணியும் உடையைத் தடை செய்யாதீர்கள். நிச்சயம் அவர்கள் நீச்சல் உடையுடன் ஷாப்பிங் போகப்போவது இல்லை. அல்லது சேலையுடன் நீச்சல்குளம் போகப்போவது இல்லை. இதுதான் சுதந்திரம். இதற்கு பிறகு அவர்கள் அவர்களாக மதம் / உடை என்று எதையும் தேர்ந்தெடுப்பது அவர்களின் உரிமை. அதற்குப்பின் நீங்கள் அவர்களின் வாழ்க்கையில் உடை/மதம்/பழக்கத்தில் தலையிடவேண்டாம். வழிகாட்டல் இருக்காலாம், ஆனால் மதம் சார்ந்த அல்லது குடும்பம் சார்ந்த நிர்ப்பந்தமாக இருத்தல் கூடாது.

ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டவர்கள் .ஒரே குடும்பத்தில் ஒரே பெற்றோரால் வளர்க்கப்படும் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்தபின் வெவ்வேறு பாதையை (உணவு ,உடை,பழக்கம்,கல்வி) தேர்ந்தெடுத்து வளரும் சாத்தியக் கூறுகள் அதிகம். எனவே, பெற்றோர்கள் ” எங்களின் பழக்கம் இது , பின்னாளில் நீ உனதை தேர்ந்தெடுத்துக்கொள் ” என்ற விசயத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அது அவர்களின் மனத்தடைகளைக் களையும். பெற்றோர்கள் நல்ல மென்டோராக இருக்க வேண்டும் சர்வதியாரியாக இருக்கக்கூடாது.

உடல் உடை அரசியல்

ஆடை என்பது நாகரீக சமுதாயத்தில் உடலின் தேவைகளுக்காக அணிவது. அணியும் ஆடையைத் தாண்டி , வெளிப்படுத்தும் உடல் மொழியில்தான் கண்ணியம் உள்ளது. யாரும் எப்போதும் எல்லா உடல்க‌ளையும் புணரும் நோக்கிலேயே அலைவது இல்லை. கணுக்கால் தெரிந்தவுடன் காமம் வரும்படி (அதாவது காதல்) செய்துவைத்துள்ள நம் திரைப்படங்களும் , நம் நாட்டில் உள்ள பாலியல் வறட்சியும் நமது மணக்கோணல்களுக்கு ஒரு காரணம்.

சேலை அல்லது பாவடை தாவணி அணியவைத்து, அந்த உடையிலேயே பெரும்பாலும் புணருதல்,மோகித்தல் வகையான‌ அசைவுகளை கொடுக்கும் நமது திரைப்படங்களைவிட, நீச்சல் குளத்தில் பிகினியுடன், நேரடியாக நம்மிடம் உரையாடும் ஒரு பெண்ணின் உடல் மொழி காமத்தை தூண்டுவது இல்லை. வளர்ந்த நாடுகளில் , நீச்சல் குளத்தில் எந்தப் பெண்ணும் அவர்கள் அணிந்துள்ள உடை குறித்து கவலை கொள்வது இல்லை. இயல்பாக நம்மிடம் பேசுவார்கள். அருகில் இருப்பார்கள். அமெரிக்க நீச்சல் குளங்களில் இதுவரை நடந்துள்ள வண்புணர்வு நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை , நமது நாட்டு கோவில் திருவிழாக்களிலும், பஸ்களிலும் உரசப்படும் பெண்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும்.

முன் அறிமுகம் இல்லாத பெண்களுடன் உடல் ஆடை குறித்தான எனது அனுபவம்
நேரடியான பேச்சுக்கள் மனத்தடைகளைக் குறைக்கும். Life Guard இல்லாத நீச்சல் குளங்களில், பாதுகாப்பு காரணக்களுக்காக தனியாக‌ ஒருவர் மட்டும் இருக்க அனுமதியில்லை. மிகச்சாதரணமாக ,பிகினி உடையுடன் என்னிடம் வந்து “தனியாக நீச்சல் அடிக்கிறேன் , கொஞ்ச நேரம் எனக்காக இங்கேயே இருக்க முடியுமா” என்று ,என்றுமே பார்த்துப் பேசியிராத ஒரு அறிமுகம் இல்லாத, வெளிநாட்டுப்பெண் நேரிடையாக கேட்டதுண்டு.

டில்லியில் இருந்து ரிசிகேஷ்,ஹரித்துவார் போன்ற வரலாற்றுச் சிறப்பும் ,இயற்கையின் கொடையுமாக உள்ள இடங்களுக்கு பயணம் சென்றபோது , ஒரு இளம் தம்பதியினர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் ஒருவயதில் குழந்தையுடன் வந்திருந்தார்கள். பஸ்பயண நேரமே பழக்கம்.

ஹரித்துவாரில் குளித்து முடித்தபின் பெரும்பாலும் கங்கைக் கரையிலேயே உடைமாற்றல் நடக்கும். ஆண்கள் நாங்கள் இருவரும் முதலில் குளித்துவிட்டோம். நான் மட்டும் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டேன். நாங்கள் வந்தபின் குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணும் அவள் கணவனும் குளிக்கச் சென்றனர். ஆற்றின் அதிகவேகம் கருதி மனைவியின் பாதுகாப்புக்காக அந்தக் கணவன் இரண்டாவது முறைக் குளியல். இருவரும் குளித்து வந்தபின், அந்த கணவன் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டார். அந்தப் பெண் இப்போது உடை மாற்றவேண்டும்.

அவர்கள் இருவரும் என்னையும் அழைத்து ஒரு சேலையை சுற்றிப்பிடிக்கச் சொன்னார்கள். நானும் , அவளது கணவரும் சேலையை வட்டமாகச் சுற்றிப்பிடித்து வெளிப்புறமாக நோக்கியிருந்தோம். குழந்தையை நடுவில் கிடத்திவிட்டு நாங்கள் பிடித்துக்கொண்ட ‘சேலை வட்ட மறைப்புக்குள்’ வேறு புதிய உடை மாற்றினாள் அந்தப் பெண். நான் அவர்களின் குடும்ப உறுப்பினர் கிடையாது. பஸ்நேரப் பழக்கம் மட்டுமே. இது இயல்பு மற்றும் நம்பிக்கை சார்ந்த நிலை. நல்ல மனங்கள் உண்டு என்பதைச் சொல்லவே இது.

மனிதனாக இருத்தலை அங்கீகரிக்க இதைவிட ஒரு அந்நியப் பெண்ணிடம் என்ன வேண்டும்?

தற்போது வழக்கத்தில் இருக்கும் பாலைவனப் பிரதேச மக்களின் உடைகள்

ஹிஜாப் (hijab ) அன்னும் வார்த்தை அரபியின் ஹஜபா ( hajaba) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. ஹஜபா என்றால் பார்வையில் இருந்து உடல் கன பரிணாமங்களை (conceals a figure) மறைத்துக் கொள்வது என்ற பொருள்படும். ஹிஜாப் உடையில் பல இரகங்கள் உள்ளது.