மானம் வண்டியில் ஏறணுமா? மானத்தோடு வாழணுமா?


பொருத்தமில்லாத மனிதர்களோடு
பொருந்திப்போக முடியாமல்
வருத்தத்தோடு நிற்கிறது
இருசக்கர வாகனம் ஒன்று.

மிச்சம் வைக்காமல்
மச்சான் மோதிரத்தை மாட்டிக்கொண்ட
புது மாப்பிள்ளையின்
சுரண்டல் விரல்கள் பட்டவுடனேயே
அவமானத்தால் ஆடிப்போகிறது அதன் கைப்பிடி!

மாமனார் கழுத்தறுத்து மாட்டிக்கொண்ட
மைனர் செயின், பிரேஸ்லெட்டின்
தங்கக் கவுச்சி தாங்காமல்
முகத்தைத் திருப்பிக் கொள்கிறது வண்டிச்சாவி.

ஓசியில் வாங்கியவன்
உட்கார்ந்து ஓட்டப்போவதை நினைத்து
கோபத்தில் பல்லைக் கடிக்கிறது டயர்.

சுயமரியாதை உணர்ச்சியில்லாதவன்
கால்பட்ட அருவருப்பில்
விலகித் துடிக்கிறது கியர்.

சூடு, சுரணையின்றி
வரதட்சணையாக வண்டியைக் கேட்டவனின்
மன வண்டையைத் தாங்காமல்- சூடேறி
குந்தியவனுக்கு எதிராக
குமுறுது என்ஜின்.

வரதட்சணை மாப்பிள்ளைக்கு
சூடுவைக்க முடியாமல்
கேடுகெட்டு போனதாய்
புலம்பும் கார்ப்பரேட்டுக்கு
போய் புத்திசொல்லி
ஆத்திரத்தைக் கிளப்பும் பெட்ரோல்.

அடுத்தவன் காசில்
அனைத்தையும் அடைய நினைப்பவனின்
குரூரம் பார்த்து
குலை நடுங்கி
தன்னை மறைத்துக் கொள்கிறது வண்டிச் செயின்.

இந்த வெட்கம் கெட்ட பயலுக்கு
“எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்’ வேற – என்று
நான்கு கண்களால்
“இன்டிகேட்டர்’ ஜாடை காட்டுது.

அடுத்தவரிடமிருந்து பிடுங்குவதற்கு
ஒரு அளவே இல்லையா?

வரும் கோபத்தில்
அப்படியே! பிடுங்கிக் கொண்டு போய்விடலாமா – என
வால்டியூப்
காற்றோடு கலந்தாலோசிக்கிறது.

தட்டுமுட்டுச் சாமான்களோடு
பெண்ணையும்,
தள்ளிக் கொண்டு போகிறவனின்
தந்திரமறிந்து
நட்டும் போல்ட்டும் கூட
கெட்ட வார்த்தையால் திட்டுது.

உண்மையில்
இவன் வண்டியை மணக்கவே… அதாவது
என்னை மணக்கவே
பெண்ணை மணந்தான் – எனும்
உண்மை புரிந்துவிட,
சகமனிதனை உறிஞ்சி வாழும்..
சகல மனித மாண்பையும் உதிர்த்து வாழும்..
இயந்திர இதயத்தை,
சுமக்க முடியாமல்,
சகிக்க முடியாமல்,
சைலன்சர் வழியாக
காறித்துப்புகிறது வண்டி!

இப்படியொரு வண்டி
உங்களுக்குத் தேவையா?