தமிழகத்தை அச்சுறுத்தும் சாதிக் கூட்டணி


சாதி இந்துக்களின் வன்கொடுமைகளிலிருந்து தலித் மக்களை ஓரளவுக்குப் பாதுகாக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இன்று விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. ஆணாதிக்கவாதிகளின் கொடுமை களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக ‘ஆண்கள் பாதுகாப்புச் சங்கம்’ என்று இதே தமிழ் நாட்டில் அண்மையில் தொடங்கப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களால் சாதி ஆதிக்கவாதிகளும், ஆணாதிக்கவாதிகளும் பாதிக்கப்படுவதாகத் தற்பொழுது புலம்பத் தொடங்கியுள்ளனர். ஒரு சட்டம் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகிறது என இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையில் இருந்து பார்க்காமல், அந்த பாதிப்புக்குக் காரணமாக இருப்பவர்களின் நிலையில் இருந்து அச்சட்டத்தை மதிப்பிடுவது அறிவுடை ஆகுமா?

தமிழினப் பாதுகாவலராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மருத்துவர் ராமதாஸ், இன்று தன் சாதிக்காரர்களை மட்டும் திரட்டி, சேரித்தமிழர் களுக்கு எதிராகப் ‘பேருரை’ ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இவ்வுரையை மக்கள் தொலைக்காட்சி (தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் தொலைக்காட்சி என்று இதற்கொரு பெருமை உண்டு. அந்தப் பெருமைக்குச் சொந்தக் காரர்கள் தூய சாதியவாதிகளாகவும் இருக்கிறார்கள் என்பது செந்தமிழுக்குப் பெருமை சேர்க்குமா என்று தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டிய தருணம் இது) நேரடியாக ஒளிபரப்புச் செய்ததைப் பார்த்தீர்களா என்று பலரும் என்னிடம் கேட்டனர்.

அவர்களுக்கு நான் சொன்ன பதில் இதுதான்: ‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்’ நான்கு வர்ணங்களையும் நானே உருவாக்கினேன் என்று மார் தட்டிய கிருஷ்ணனின் பகவத் கீதையை ‘முட்டாளின் உளறல்’ என்று செவிட்டில் அறைந்தாற் போல் புரட்சியாளர் அம்பேத்கர் கூறினார். அந்த நான்கு வர்ணங்கள்தான் பிற்காலத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சாதிகளாகப் பரிணாமம் பெற்றன. அந்தச் சாதிகளை ஆதரித்து, நியாயப்படுத்தி, பாதுகாத்து, அதன் மூலம் பிற சாதியினரை இழிவுபடுத்தி, அவர்கள் மீது வன்முறையை அவிழ்த்துவிடும் எவனுக்கும் அம்பேத்கர் சொன்ன கருத்தையே பதிலாக வழிமொழிகிறேன் எனப் பதிலுரைத்தேன்.

பகுத்தறிவுக்கு எதிரான சாதிய மனம் எத்தகைய அறிவியல் ஆதாரங்களையும், சமூக உண்மைகளையும் ஏற்காது. எனவே, இத்தகைய உளறல்களைச் சாதியை முற்றாக மறுக்கும் எவரும் விவாதித்து நேரத்தை வீணாக்கத் தேவையில்லை. ஆனால், இத்தகைய சமூகக் குற்றத்தை ஒரு மாநாட்டைத் திரட்டிச் செய்யும் சமூகக் குற்றவாளிகள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது அதைவிடப் பெருங்குற்றம். கடந்த ஆண்டு இதே இடத்தில் நடத்தப்பட்ட மாநாட்டில், முன்வைக்கப்பட்ட வன்கருத்தியல்களால்தான் தருமபுரியில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றன.

அவர்களின் உடைமைகளும் சூறையாடப்பட்டன. எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி அதே இடத்தில் மீண்டும் தலித் மக்களுக்கெதிராக வன்மத்தை உமிழும் உரைகளைப் பேசவும் ஒளிபரப்பவும் தாராளமாக அனுமதி அளித்த நீதிமன்றத்தாலும் அரசாலும்தான் மாநாடு தொடங்கும் முன்பே, மரக்காணம் தலித் மக்கள் மீது திட்டமிட்ட வன்கொடுமைகள் ஏவப்பட்டிருக்கின்றன. இத்தகைய அருவெறுப்பான கருத்து வன்மங்களைத் தலித் மக்கள் மீது சுமத்தும் முன்னணித் தலைவர்கள் மீது வழக்குத் தொடரப் பட்டிருந்தால், மரக்காண வன்கொடுமைகள் அரங்கேறி இருக்காது.

வன்கொடுமைகள் நிகழ்வதற்கு முன்பே தடுக்க வேண்டிய அரசு அலட்சியமாக நடந்துகொள்கிறது. இச்சட்டத்தை நடை முறைப்படுத்தாததுதான் குற்றமே தவிர, சட்டத்தில் எந்தப் பிழையும் இல்லை. அண்மையில் ‘விஸ்வரூபம்’ என்ற திரைப்படம் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்தது என்பதற்காக, அதைத் திரையிடவிடாமல் தடுத்து நீதிமன்றத்தில் கடுமையாக வாதாடிய அ.தி.மு.க. அரசு, சாதியவாதிகளை மட்டும் தலித் மக்களுக்கு எதிராகப் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதன் நோக்கம் என்ன?

வன்னியர் சங்கமாக உருவெடுத்து, பின்னர் எந்தவொரு சாதியாலும் தனியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்ட காரணத்தால், ‘பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற முகமூடி அணிந்து கொண்டது அனைவரும் அறிந்ததே. உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கரிய சிந்தனையின் அடிப்படையில், கன்´ராம் அவர்கள் கால் நூற்றாண்டுகாலம் கடுமையாக உழைத்து, ஒரு சமூகக் கூட்டணியை உருவாக்கினார். சாதிய சமூகத்தில் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் இழிநிலைக்குத் தள்ளப் பட்ட பெரும்பான்மை மக்களை (பகுஜன் சமாஜ்) பிற்படுத்தப் பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மதச்சிறுபான்மையினர் என நேர் மறையாக அணிதிரட்டி, தொண்ணூறுகளில் ஆட்சி அதிகாரத்தை அவர் கைப்பற்றினார். பின்னர், அது மாயாவதி தலைமையில் சீர் குலைந்து போய்விட்டது என்பது தனிக் கதை.

கன்´ராமின் தத்துவத்தை நகல் எடுத்து, ஆட்சி அதிகாரக் கனவில் திளைத்த ராமதாஸ், சில ‘தலித் ஒற்றுமை’ நாடகங்களை அரங்கேற்றினார். இதைத் தலித் மக்கள் தொடர்ந்து சந்தேகித்தும் எதிர்த்தும் வந்தனர். அதற்கான காரணத்தை இன்று எளிதில் புரிந்து கொள்ள முடியும். எவ்விதச் சமூக இணக்கத் தையும் உருவாக்காமல் அரசியல் தலைவர்கள் மட்டுமே ஒன்றிணைவதால் சமூக நல்லிணக் கத்தைப் பேணிவிட முடியாது. எந்தவொரு சாதியும் தன்னைச் சாதி நீக்கம் செய்து கொள்ளாமல், ஒன்றிணையவே முடியாது. அப்படி ஒன்றிணைந்தாலும், அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னால் சாதி ஆதிக்கம் பதுங்கி நிற்கும்; அதிகாரக் கனவு கைகூடிய பிறகு, அது தன் கொடூர முகத்தை வெளிப்படுத்தும்.

ஆகவேதான் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மதச்சிறுபான்மையினர் என நேர்மறையான அடையாளங்களுடன் அரசியலில் மட்டுமின்றி, சமூகப் பண்பாட்டுத் தளத்திலும் அணிசேரும் போதுதான் அது நிலையான சமூக இணக்கத்துடன் கூடிய அதிகாரப் பகிர்வையும் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தும். ஆனால் ராமதாஸ் தற்பொழுது உருவாக்கி யிருப்பது அப்பட்டமான சாதிவெறிக்கூட்டணி. இது, காலங் காலமாக மநுதர்ம அடிப்படையில் ஊரையும் சேரியையும் நிரந்தரமாகப் பிரிக்கும் கூட்டணி. தன் சுயசாதி முன்னேற்றத்திற்கு (அதுகூட இன்று சுருங்கி, தன் குடும்ப முன்னேற்றமாகி விட்டது. அதற்கு வன்னியர் இரையாவதை அவர்களே உணரத் தொடங்கி விட்டனர்). சேரித் தமிழர்களை எதிரிகளாக அடையாளம் காட்டு கின்றனர். அதாவது தன் சாதியின் சூத்திரப் பிறவி இழிவு அடையா ளத்திற்குக் காரணமான சாதி அமைப்பையும், அந்த அமைப்பை இன்று வரை நியாயப்படுத்தும் பார்ப்பனர்களையும், பிற இடை நிலைச் சாதி வெறியர்களையும் பங்குதாரர்களாகக் கொண்ட கூட்டணி இது. அந்த வகையில், சாதி அமைப்பைத் தகர்ப்பதையே தங்களின் பண்பாடாகக் கொண்டுள்ள தலித்துகளுக்கு எதிரான கூட்டணி இது. அதனால்தான் அதற்குத் ‘தலித் அல்லாதோர்’ என்ற நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.

“இந்தியாவின் (2500 ஆண்டுகால) ஒட்டுமொத்த வரலாறே பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்குமான போராட்டமே” என்றார் அம்பேத்கர். இதைத்தான் ஆரியர் திராவிடர் போராட்டம் என்று பெரியார் அடையாளப்படுத்தினார். பார்ப்பனியம் என்பது ஏற்றத் தாழ்வுகளை அங்கீகரிக்கும் கொள்கை. பவுத்தம் சமத்துவத்தை வலியுறுத்தும் கொள்கை. படிநிலைப்படுத்தப்பட்ட சாதிய சமூக அமைப்பையும் அதற்கு ஆதாரமான (இந்து) மதத்தையும் எதிர்த்து, ஏற்க மறுத்த தொல்குடி மக்கள் சமத்துவமான பவுத்த பகுத்தறிவு நெறியைப் போற்றியதால், சேரிக்குத் தள்ளப்பட்டனர். சாதிய அமைப்பை ஆதரித்தவர்கள் சூத்திரர்களாக்கப்பட்டு, இவ்வமைப்பை எதிர்க்கும் சேரி மக்களைத் தாக்கும் ஏவலாட்களாக, அதே நேரத்தில் உரிமை அற்றவர்களாக இன்றளவும் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்து தர்மத்தைப் போற்றியவர்கள் ‘தர்மகர்த்தா’க்களாக ஆக்கப்பட்டனரே தவிர, அவர்களுக்குக் கோயில் கருவறையில் நுழையும் உரிமையை அவர்கள் சூத்திரர்கள் என்ற ஒரே காரணத் திற்காக இன்றுவரை பார்ப்பனியம் மறுத்து வருகிறது. சூத்திரர்கள் எவ்வளவுதான் பார்ப்பனியத்திற்கு அடிவருடிகளாக இருந்தாலும், அவர்கள் ‘சற்சூத்திரர்’களாக ஆகலாமே தவிர, ஒரு போதும் பிராமணர்களாக ஆக முடியாது என்பதுதான் இந்து தர்மம்.

இரண்டாயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறைகளுக்குப் பிறகும் சேரிக்குள் தள்ளப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட தலித் மக்கள், சமத்துவத்தை வலியுறுத்தி, ஊரையும் சேரியையும் இணைக்கவே போராடுகின்றனர்.இவை இரண்டையும் இணைத்துக் கூட்டாஞ்சோறு ஆக்கி உண்பதல்ல தலித் மக்களின் நோக்கம். மாறாக, சாதிகளற்ற ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்கும் உன்னத நோக்கத்தை தலித் மக்கள் தங்கள் லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். ‘தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கிய அம்பேத்கர், அதில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இணைந்து செயல்படுவதற்கு ஒரு வேளை இந்த அமைப்பின் பெயர் தடையாக இருக்குமென்றால், இந்த அமைப்பின் பெயரையே மாற்றுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று பிரகடனப்படுத்தியதும்; தாழ்த்தப்பட்ட மக்கள் திராவிடர் கழகத்தில் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனை அனுபவிக்க தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு முழு உரிமை உண்டு என்று பெரியார் அறிவித்ததும் சாதியயாழிந்த சமத்துவச் சமூகத்தை உருவாக்குவதற்கான உயரிய நோக்கத்தைக் கொண்டதாகும்.

உழைக்கும் மக்களைப் பார்ப்பனியம் பிளவுபடுத்தும்; அம்பேத்கரியமும் பெரியாரியமும் இம்மக்களை ஒன்றிணைக்கும். தலித் மக்களின் லட்சிய நோக்கத்தை ராமதாஸ் போன்ற சமூகக் குற்றவாளிகளால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. பாட்டாளி மக்கள் கட்சியினரும், அவர்களின் சாதி வெறிக் கூட்டணியும் எந்த அளவுக்கு சாதிப்பித்து தலைக்கேறி ஆடினாலும், சமத்துவத்தின் குறியீடாகிய சாதி மறுப்புக் காதல் திருமணங்களை தலித் மக்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டேதான் இருப்பார்கள். வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களில் எந்தக் குறைபாட்டையும் காண காஷ்மீர் முதல் குமரி வரை திரண்டிருக்கும் தலித் மக்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

அதில் இருக்கும் ஒரே குறைபாடு, அது சாதி இந்து அரசு நிர்வாகத்தால் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைத் தவிர வேறு அல்ல. அதைத் திருத்துவதற்கோ, மாற்றுவதற்கோ எந்த நியாயங்களும் இல்லை. ராமதாஸ் கூட்டாளிகளின் சவடால் பேச்சுக்களால் அதில் எந்தத் திருத்தத்தையும் செய்ய முடியாது. எனவே, சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கையுள்ள தலித் மக்கள் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களை அலட்சியப்படுத்தி, இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்தான் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

மருத்துவர் ராமதாசின் சாதிவெறி போக்குக்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்றால், அம்பேத்கர் இயக்கங்களும் பெரியார் இயக்கங்களும் செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு; தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டத்திலும் சாதி மறுப்புத் திருமணங்களையும், காதல் திருமணங்களையும் நூற்றுக்கணக்கில் மாநாடுகள் போல அறிவித்து, தொடர்ச்சியாக நடத்துவதையே முக்கிய செயல்திட்டமாக விரைந்து அறிவித்திட வேண்டும்.

மரக்காணம் அவலத்திலிருந்து மீண்டு வாருங்கள்!


சென்ற சனவரி 25ஆம் நாள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வுகள் தமிழின ஒற்றுமையில் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் ஆழ்ந்த கவலை அளிக்கக் கூடியன.

‘கோடி வன்னியர் கூடும் குடும்ப விழா’வுக்காக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்த ஊர்திகளில் ஒன்று விபத்துக்குள்ளானதும், பெரும்பாலும் தலித்துகளாகிய உள்ளூர் மக்களுக்கும் வண்டிகளில் வந்த வன்னியர்களுக்கும் மோதல் வெடித்ததும், வன்னியர்கள் சிலர் அருகிலிருந்த தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளைக் கொளுத்தி உடைமைகளைச் சூறையாடியதும், காவல் துறையினர் வானோக்கித் துப்பாக்கியால் சுட்டும் தடியடி நடத்தியும் சாலை மறியல் செய்த கூட்டத்தைக் கலைத்ததும், விபத்தினாலோ எதிர்த்தரப்பினரின் வன்செயலாலோ வன்னிய இளைஞர்கள் இருவர் உயிரிழந்ததும்… இந்த நிகழ்வுகள் நடந்த விதம், நடந்த வரிசை பற்றியெல்லாம் நம்மால் எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது. இவை எந்த அளவுக்குத் தற்செயலானவை, எந்த அளவுக்குத் திட்டமிட்டவை என்று கண்டறிவதற்கு விரிவான, புறஞ்சார்ந்த, நடுநிலை தவறாத புலனாய்வும் விசாரணையும் தேவை.

தற்செயலாக என்றாலும் சரி, திட்டமிட்ட முறையில் என்றாலும் சரி, நடந்த அவலங்களுக்கு அறப்பொறுப்பு ஏற்க வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் நிறுவுநர் மருத்துவர் இராமதாசு அவர்களும்தான்.

முதலாவதாக, மாமல்லபுரம் விழாவை நடத்தியது வன்னியர் சங்கமா? பாமக-வா? இரண்டும் ஒன்றுதானா? ஒன்றுதான் என்றால் பாமக-வில் இடம்பெற்று, அதன் வளர்ச்சியில் பங்காற்றிய தோழர்கள் இரும்பொறை குணசேகரன், வள்ளிநாயகம், பழனிபாபா, குணங்குடி அனீபா, ஜான் பாண்டியன், முருகவேல்ராஜன், பசுபதி பாண்டியன், தலித் எழில்மலை, பொன்னுசாமி போன்றவர்களுக்கெல்லாம் நீங்கள் தரும் இடம் என்ன? இப்போதும் பாமக பொதுச் செயலாளராக அறியப்படும் தோழர் வடிவேல் இராவணனை ஒப்புக்குத்தான் முன்னிறுத்துகின்றீர்களா? அவர் தன் சமுதாய மக்களுக்காகத் தனியமைப்பு நடத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா? பாமக-வின் இலட்சிய வழிகாட்டிகளாக கார்ல் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் படங்களைப் பயன்படுத்துவீர்களே, அவர்களையும் வன்னியர் சங்கத்தில் சேர்த்து விட்டீர்களா?

சாதி அரசியலும் சனநாயக அரசியலும் ஒத்துப் போக மாட்டா என்பதை விளங்க வைப்பதற்காகவே இந்த வினாக்கள்.

நமக்குத் தெரிந்த வரை வன்னியர் சங்கத்திலிருந்துதான் மருத்துவர் இராமதாசின் பொதுவாழ்வுப் பயணம் தொடங்கியது. வன்னியருக்குத் தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையில் சமூகநீதியின் பாற்பட்ட ஒரு நியாயம் இருந்த படியால் நாமும் அந்தப் போராட்டத்தை ஆதரித்தோம். மருத்துவர் இராமதாசின் பார்ப்பனிய எதிர்ப்பும், தமிழ்ச் சார்பும், தேர்தல் புறக்கணிப்பும், தலித்துகளோடு ஒன்றுபடும் ஆர்வப் பேச்சும் கடந்த கால வன்னிய சாதித் தலைவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டின. திரு இளையபெருமாளோடு சேர்ந்து அவர் மேற்கொண்ட தீண்டாமை-இழிவுநீக்க முயற்சிகளும், பிற்காலத்தில் குடிதாங்கிக் கிராமத்தில் தன் சாதியினரின் எதிர்ப்பை மீறிச் செயல்புரிந்து ‘தமிழ்க் குடிதாங்கி’ என்று தோழர் திருமாவளவனிடமே பட்டம் பெற்றதும் அவரது மதிப்பை உயர்த்தின.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கித் தேர்தல் அரசியலுக்குச் சென்ற பிறகும் தமிழீழ விடுதலை, தமிழகத் தன்னுரிமை, ஒரு-மொழிக் கொள்கை, மண்டல் பரிந்துரைச் செயலாக்கம் ஆகிய நிலைப்பாடுகளில் தமிழ்த் தேசிய, சமூகநீதி ஆற்றல்கள் உங்களோடு தோழமை கொண்டு நின்றோம். இப்போதும் அதுதான் சரியென்று நம்புகிறோம். மண் பயனுற மக்கள் தொலைக்காட்சி நிறுவியதை மருத்துவரின் முதன்மைச் சாதனைகளில் ஒன்றாக இப்போதும் மதிக்கிறோம்.

பாமக-வும் விடுதலைச் சிறுத்தைகளும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் அணிசேர்ந்த போது வரவேற்றோம், துணைநின்றோம், தோள் கொடுத்தோம்.

தேர்தல் வழிப் பதவி அரசியலில் முக்குளிக்க முக்குளிக்க பாமக-வின் முற்போக்குக் கொள்கைகள் கரைந்து போய் விட்டன. யாரும் கொள்கை பார்ப்பதில்லை, நான் மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? என்பது மருத்துவரய்யாவின் மந்திரக் கேள்வி ஆயிற்று. ஒளிவுமறைவற்ற சந்தர்ப்பவாத அரசியலால் பாமக-வின் பெயர் கெட்டது. இது நம்பத்தகாத கட்சி என்று மாற்றுக் கட்சியினர் மட்டுமல்லாமல், கட்சி சாராத பொதுமக்களும் கருதலாயினர்.

சென்ற 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாமக அடைந்த படுதோல்வி மருத்துவரை விரக்திப் படுகுழியில் தள்ளியிருக்க வேண்டும். இதிலிருந்து எழுந்து வர கொள்கை அரசியலைத் துணைக் கொள்வதற்குப் பதிலாக அப்பட்டமான சாதி அரசியலைக் கையிலெடுத்து விட்டார்.

எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் காதல் எதிர்ப்பு, தலித் எதிர்ப்பு என்ற பிற்போக்கு நிலைப்பாடுகளிடம் மருத்துவர் தஞ்சம் புகுந்து விட்டார். சென்ற 2012 சித்திரை முழு நிலவில் காடுவெட்டி குருவின் பேச்சு இதற்கு முன்னோட்டம் ஆயிற்று. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு காதல் திருமணம், இதையொட்டி ஒரு ‘கௌரவ’த் தற்கொலை என்பவற்றைச் சாக்கிட்டு மூன்று சேரிகளை வன்னிய சாதி வெறியர்கள் தாக்கிச் சூறையாடியதை பாமக ஒப்புக்குக் கூடக் கண்டிக்கவில்லை. மாறாக மருத்துவர் அந்த வன்கொடுமையை நியாயப்படுத்துவதற்காக காதல், கலப்பு மணம், நாடகத் திருமணம் என்றெல்லாம் தத்துவ விசாரம் செய்து, ‘புள்ளிவிவர’ங்களை அள்ளி விட்டதோடு, தலித்துகளை நக்கலடிக்கவும் தயங்கவில்லை. சாதிப் பொருத்தம், சாதகப் பொருத்தம், பணப் பொருத்தம் பார்த்து நடத்தப்படும் ஏற்பாட்டுத் திருமணங்களே உண்மையில் நாடகத் திருமணங்கள் என்ற உண்மையை மறைத்து, செம்புலப் பெயல்நீர் போலும் அன்புடை நெஞ்சம் தான் கலந்திடும் இயல்பான காதலை நாடகம் என்று மருத்துவர் இராமதாசு வர்ணித்தது அவரது பிற்போக்கு உள்ளக்கிடக்கையை உலகறியச் செய்து விட்டது. ஐயா, உங்கள் முற்போக்கு நாடகம் முடிந்து திரை விழுந்து விட்டது.

இந்த சாதிவெறி அரசியலில் பிற சாதிவெறி ஒட்டுக் குழுக்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்வதும், தலித் அல்லாதார் கூட்டணியை உருவாக்க முயல்வதும் சமூக நீதிக்குக் குழிபறிக்கும் வேலை என்பதில் ஐயமில்லை. பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்று ஈரோட்டுப் பெரியார் சொன்னதை ‘தாடி வைக்காத திண்டிவனத்துப் பெரியாரு’க்கு யார் புரிய வைப்பது?

பாமக-வின் இந்த சாதிய அரசியலின் ஒரு வெளிப்பாடுதான் மரக்காணம் கொடுநிகழ்வுகள். வன்னியர் விழாவுக்கு வந்தவர்களிடம் இராமதாஸ்-குரு வகையறா ஊட்டி வளர்த்த சாதி வெறிதான் அவர்களை மரக்காணம் தெற்குக் காலனிக்குள் நுழைந்து தீவைப்புத் தாக்குதலில் ஈடுபடச் செய்துள்ளது. தலித்துகள் ஒருவேளை மறியலில் ஈடுபட்டிருந்தாலும் கூட அது காவல்துறை தீர்க்க வேண்டிய சிக்கலே தவிர சாலையை விட்டு விலகிப் போய் ஊருக்குள் புகுந்து வன்செயல் புரிவதற்கு நியாயமில்லை. இரண்டு வன்னிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்பு விபத்தா கொலையா, கொலை என்றால் செய்தது யார் என்று காவல்துறை புலனாய்வு செய்துவருகிறது. தமிழகக் காவல்துறையை நம்புவதற்கில்லை என்றால் பாமக கோருவது போல் சிபிஐ புலனாய்வுக்கு வகை செய்யலாம். மரக்காணம் வன்செயல்கள் அனைத்துக்கும் சேர்த்து எல்லாத் தரப்பினரும் ஏற்கும் படியான நீதி விசாரணைக்கும் கூட ஆணையிடலாம். சாதிப் பகைமை மறைந்து நல்லிணக்கம் மீள எவ்விலையும் தரலாம்.

மரக்காணம் அவலத்துக்கு அறப் பொறுப்பு பாமக-வையே சாரும் என்பதில் ஐயமில்லை. அக்கட்சியும் அதன் நிறுவுநரும் அக்கறையோடு தமது அணுகுமுறையை மீளாய்வு செய்து, சாதிய அரசியலிலிருந்தும், அதற்கு வழிகோலிய சந்தர்ப்பவாதப் பதவி அரசியலிலிருந்தும் மீண்டெழுந்து தமிழின நலனுக்கும் சமூகநீதிக்குமான போராட்ட அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

“நுனிக் கொம்பேறினார் அ(.)திறந்தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்” என்ற எச்சரிக்கையை அரசியல் வகையில் பாமக சீர்தூக்கிப் பார்க்க வேண்டுகிறோம்.

மரக்காணம் நிகழ்வுகளில் மருத்துவர் இராமதாசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது பழி சுமத்துவதை ஏற்க இயலாது. அக்கட்சியின் உள்ளூர் ஆதரவாளர்கள் சிலர் ஆத்திரமூட்டலுக்குப் பலியாகி வன்முறையில் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பை நாம் மறுக்கவில்லை. ஆனால் அக்கட்சித் தலைமை, குறிப்பாகத் தோழர் தொல். திருமாவளவன் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டதும், ஏட்டிக்குப் போட்டியாக சாதிவெறியைத் தூண்டாமல் சமூக நல்லிணக்கத்தையும் தமிழ் மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்தியதும் போற்றுதலுக்குரியது. தம்மிடமிருந்து அம்பேத்கர் சுடர் விருது பெற்ற ஒருவர் முன்பு தர்மபுரியிலும் இப்போது மரக்காணத்திலும் தலித் எதிர்ப்பை அரசியலாகக் கைக்கொண்டிருப்பது குறித்துத் திருமாவே வேதனைப்படுவார்.

மருத்துவர் இராமதாசின் சாதிய அரசியலைக் கண்டிப்பது வேறு. வன்னியர்கள் அனைவரையும் சாதிவெறியர்களாகவும் வன்கொடுமைக்காரர்களாகவும் படம்பிடிப்பது வேறு. வன்னியர்களும் உழைக்கும் மக்களே. அவர்களும் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் ஓர் அங்கமே என்பதை மறந்து விடலாகாது. தலித் அல்லாத பிற்பட்ட வகுப்பினர் அனைவரையும் ஆதிக்க சாதியினர் என்று முத்திரையிடுவது சமூக அறிவியலுக்கும், தமிழ்த் தேசியக் கருத்தியல் மற்றும் நடைமுறைக்கும் புறம்பானது. சாதியடுக்கில் ஆதிக்க சாதி என்பது ஒரு சார்புநிலைக் கருத்தாக்கமாகவே இருக்க முடியும். பார்ப்பனர்களைக் கொடுமுடியாகவும் தலித்துகளை அடிக்கல்லாக்கவும் கொண்ட வர்ண-சாதி இந்துச் சமூக அமைப்பில் இடைச்சாதிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்புநிலையில் ஆதிக்கம், அடிமை ஆகிய இருவகைக்கும் பொருந்தக் காணலாம். ஏன்? பார்ப்பனர்களுக்குள்ளேயும், தலித்துகளுக்குள்ளேயும் கூட, இந்தப் பிரிவுகள் இருப்பது மெய்.

தமிழ்ச் சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதியினர் என்று ஒதுக்கி வைத்து விட்டுத் தமிழ்த் தேசியம் வெல்வது முயற்கொம்பே. தீண்டாமைக்கும் சாதிய வன்கொடுமைகளுக்கும் எதிரான போராட்டத்தை உறுதியாக முன்னெடுக்கும் போதே தமிழின ஒற்றுமைக்கு அடிப்படையான தாழ்த்தப்பட்டோர்-பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமைக்காகவும் போராடுவது புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தட்டிக்கழிக்கக் கூடாத ஒரு பணி.

தோழர் திருமா பதவி அரசியலுக்காக எத்தனையோ விட்டுக் கொடுத்தும் கூட, இந்த நெருக்கடியில் அவருடைய தேர்தல் கூட்டாளிகள் நியாயத்தின் பக்கம் நிற்பதை விடவும் வாக்கு வங்கி சார்ந்த சாதிக் கணக்கு பார்த்தே வாய் திறந்தார்கள் என்பதை அவர் கவனித்திருப்பார் என நம்புகிறோம்.

வேடிக்கை என்னவென்றால், மருத்துவர், திருமா இருவருமே போராட்ட அரசியலில் இருந்துதான் பதவி அரசியலுக்குச் சென்றார்கள். இருவருமே தேர்தல் புறக்கணிப்பில் தீவிரமாக இருந்து விட்டுத்தான் சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலில் குதித்தார்கள். மரக்காணம் அவலங்களிலிருந்து மீண்டு வருவதென்றால் சந்தர்ப்பவாதப் பதவி அரசியலை விட்டு உரிமைப் போராட்ட அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்று பொருள்.

மரக்காணம் தொடர்பான ஜெ. அரசின் அணுகுமுறை அரசுக்கும் காவல்துறைக்கும் உள்ள பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகவும், எதிர்காலத்தில் சனநாயக உரிமைகளைப் பறிப்பதற்குக் காரணங்களை உருவாக்குவதாகவும் உள்ளது.

கோரிக்கை எதுவானாலும் சரி, ஓர் அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்த வந்த மருத்துவர் இராமதாசைத் தளைப்படுத்தி சிறையில் அடைத்ததும், அவர் பிணையில் வெளியே வர முடியாத படி புதுப் புது (அல்லது பழைய பழைய) வழக்குகளில் மீண்டும் மீண்டும் தளைப்படுத்துவதும் ஜெ. அரசின் பழிவாங்கும் அரசியலுக்கே சான்றாகும். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான வழக்குகளை விலக்கிக் கொள்ளும்படி இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய அதே போழ்தில் மருத்துவர் இராமதாசு கூடங்குளம் வழக்கில் தளைப்படுத்தப்பட்டது ஜெ. அரசின் வக்கிரத்தையே காட்டுகிறது.

மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் நீங்கலாக மற்ற அனைத்து வழக்குகளையும் விலக்கிக் கொள்வது இயல்புநிலை மீளத் துணைசெய்யும். மருத்துவர் இராமதாசின் சாதிய அரசியலை எதிர்க்கும் போதே அரசின் தயவில் அவரோடு கணக்குத் தீர்க்கத் தேவையில்லை. சாதிய அரசியலை சமூக நீதி அரசியலால் எதிர்கொண்டு முறியடிக்கும் தெளிவும் துணிவும் நமக்குத் தேவை.

எவ்வித நிபந்தனையும் இன்றி மருத்துவர் இராமதாசை உடனே விடுதலை செய்யக் கோருகிறோம். (இதை எழுதி முடிக்கும் நேரத்தில் மருத்துவர் இராமதாசு பிணை விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.)

பொதுவாக மற்றவர்கள் மீதான வழக்குகளையும் விலக்கிக் கொண்டு மரக்காணம் வன்முறை, மகாபலிபுரம் கூட்டம், மற்றும் பின்னிகழ்வுகள் தொடர்பாகச் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்யக் கோருகிறோம். வன்செயல்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கக் கோருகிறோம்.

சட்டப் பேரவை உறுப்பினர் குருவுக்கு எதிராக தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருப்பதைக் கண்டிக்கிறோம். காடுவெட்டி குருவின் தடாலடி மேடைப் பேச்சால் ஒரு தேசத்தின் பாதுகாப்புக்கே ஆபத்து என்றால் அந்தத் தேசம் ஒழிந்து போவதே நல்லது. தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற ஆள்தூக்கிச் சட்டங்கள் எவருக்கு எதிராக ஏவப்பட்டாலும் எதிர்க்கும் கொள்கைத் தெளிவும் திடமும் தமிழக சனநாயக ஆற்றல்களுக்குத் தேவை.

இறுதியாக, மாணவர் போராட்டத்தால் தலைநிமிர்ந்த தமிழன்னை மரக்காணத்தால் தலைகுனிந்து நிற்கிறாள். அவளை மீண்டும் தலைநிமிரச் செய்யும் பொறுப்பு நம் அனைவருக்குமுண்டு.

– தியாகு, பொதுச் செயலாளர், த.தே.வி.இ.

பா.ம.க.வில் உறுப்பினராகும் தகுதிகள்…


மரம் வெட்டத் தெரியுமா?
மரத்தை வெட்டி சாலை மறியல் பண்ணத் தெரியுமா?

மது அருந்தத் தெரியுமா?
மது அருந்திக் கொண்டே
மது ஒழிப்புப் பிரச்சாரம் செய்யத் தெரியுமா?

கொடி பிடித்து கோசம் போடத் தெரியுமா?
கோசம் போட்டுக் கொண்டே கொலை வெறியைத்
தூண்டி விடத் தெரியுமா?

சாதிப் பெருமை பேசத் தெரியுமா?
சாதி பெருமை பேசிப் பேசியே
சேரிக் குடிசைக்குள் தீ வைக்கத் தெரியுமா?

சாதி விட்டு சாதி கூடாதெனச் சொல்லத் தெரியுமா?
கூடாதென சொல்லிக் கொண்டே
சேரிப்பெண்ணை வீடுபுகுந்து நாசம் செய்யத் தெரியுமா?

காதலிக்கத் தெரியுமா?
காதலித்துக் கொண்டே
காதலித்த பெண்ணின் மீது திராவகம் வீசத் தெரியுமா?

சமத்துவம் பற்றி பேசத் தெரியுமா?
சமத்துவம் பற்றி பேசிக் கொண்டே சாதி சங்கங்களைக் கூட்டி
சாதி வெறியைத் தூண்ட தெரியுமா?

ஆர்ப்பாட்டம் செய்யத் தெரியுமா?
ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே அரசாங்க சொத்தை
சூறையாடத் தெரியுமா?

அடாவடித்தனம் செய்யத் தெரியுமா?
அடாவடித்தனம் செய்து கொண்டே
அரசு அதிகாரிகளின் மண்டையை உடைக்கத் தெரியுமா?

ஓநாய்கள் போல ரத்தம் குடிக்கத் தெரியுமா?
ஒன்றுமில்லா காரியத்திற்கு ஒப்பாரி வைக்கத் தெரியுமா?
கள்ளச் சாராயம் காய்ச்சத் தெரியுமா?
கையெறிகுண்டு வீசத் தெரியுமா?

தமிழ்த் தேசியம் பேசத் தெரியுமா?
தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டே
சேரித் தமிழனை படுகொலை செய்யத் தெரியுமா?

இவையெல்லாம் அடிப்படைத் தகுதிகள்
நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில்
உறுப்பினராவதற்கு…

– வழக்கறிஞர் நீதிமலர்

வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?


வன்னியர்கள் ஆண்ட பரம்பரை.. வீர பரம்ரை’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் முன் வந்து மீசை முறுக்குகிறார்கள் வன்னிய அறிவாளிகள்.

‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை இல்லை’ என்றோ, அவர்களை இழிவானவர்கள் என்றோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் மறுப்பதில்லை. வன்னியர்களிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார்கள். வன்னியர்களுடன் திருமணம் செய்து கொள்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக கருதுவதுமில்லை.

ஆனால்; நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகள், வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ என்று இழிவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்புபடுத்தி ‘இவன் தொடற பறையன்’ என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கிராமபுறங்களில் தலித்தல்லாத வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகளிடம் இந்த வழக்கு இருக்கிறது.

சக்கிலியர், பறையர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண், வன்னியப் பெண்ணை திருமணம் முடித்தால் எகிறி குதிக்கிற வன்னியர்களைப்போலவே,

வன்னியர் ஆண்; பார்ப்பனர், நாயுடு, முதலி. பிள்ளை வீட்டு பெண்ணை திருமணம் முடித்தால், அதை இழிவாகவும் தன் ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாகவும் கருதுகிறார்கள் தலித்தல்லாத கூட்டணியில் உள்ள வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகள்.

தன் வீட்டுப் பெண்ணை தலித் இளைஞன் திருமணம் முடித்தால், தன் ‘ஆண்ட பரம்பரை ஜாதி’க்கு ஏற்பட்ட இழிவாக கருதி, தலித் மக்களுக்கு எதிராக கொதித்தெழுகிற வன்னிய ஜாதி உணர்வாளர்கள்,

வன்னிய ஜாதி பெண்ணை பார்ப்பனரோ, செட்டியோ, பிள்ளையோ, முதலியோ காதல் திருமணம் முடித்தால், அதை காதல் நாடகம் என்றோ அல்லது தன் ஆண்ட பரம்பரை ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, அந்த ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக கிளர்தெழாமல் சுமூகமாக இருக்க வைப்பது எது?

இப்படியாக தன்னை இழிவாக கருதுகிற ஆதிக்க ஜாதிகளிடம் அடக்கி வாசிப்பதும், தன்னை உயர்வாக மதிக்கிற தாழ்த்தப்பட்ட மக்களிடம் மீசை முறுக்குவதுதான் வீரமா?

வன்னியர் ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

குறிப்பு: இந்தக் கேள்வி கள்ளர் ஜாதி உணர்வாளர்களுக்கும் பொருந்தும்.

தலித் உட்ஜாதிகளுக்குள் பறையரையும், சக்கிலியரையும் தங்களை விட கீழானவராக கருதுகிற பள்ளர் ஜாதி உணர்வாளருக்கும், சக்கிலியரை தன்னைவிட கீழானவராக கருதுகிற பறையர் ஜாதி உணர்வாளருக்கும் பொருந்தும்.

மணல் கூழாங்கற்களின் குழந்தை


‘மணல்
கூழாங்கற்களின்
குழந்தை–!

நீங்கள்
மண்ணை வெட்டுவது
எங்கள் மழலையை
வெட்டுவதற்குச் சமம்-!

அடுத்தவனுக்குப்
பள்ளம் தோண்டியே
அடையாளப்பட்டவனே…
எங்கள்
மண்ணையும் தோண்டிப்
பூமியை புதைத்துவிடாதே!

சோறு போடும்
நிலத்தைக்
கூறு போடும் நீ
விந்துக்குப் பிறந்தவனா?
சிறுநீருக்குப் பிறந்தவனா?

மணல் தரையை
நீங்கள்
மாமிசமாய் அறுத்துத் தின்றால்
எங்கள்
பாவாடை சட்டைக்காரிகள்
எங்கே
பாண்டி ஆடுவது?

எங்கள் மழலைகள் எங்கே
மணல் வீடு கட்டுவது?

கோவண மனிதர்கள்
எங்கே
கொல்லைக்குப் போவது?

நாங்கள்
ஒத்தையடிப்பாதையில்
எப்படி
ஊர் போய்ச் சேருவது?

வேரறுந்த மரத்தின் கீழ்
எப்படி
வெயில் இளைப்பாறுவது?

அகதியாய்ப் போன
பறவைகளை
யார் அழைப்பது?

உங்கள்
சிகரெட் புகையில்
மழை வரும்
என்பதற்காக
எங்கள்
தாகத்தைத்
தள்ளிப்போட முடியாது!

திருட்டுத்தொழிலை விட்டுவிடு
திருடிய மண்ணைக்
கொட்டி விடு!

இனிமேல் திருட நினைத்தால்…
இவனைஇரண்டு துண்டாய்
வெட்டிவிடு!’

கபிலன்