பன்றிக் காய்ச்சல்: முகமூடிகள் தடுக்குமா?


பன்றிக்காய்ச்சலால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சிலர் இறந்திருக்கின்றனர். இவர்கள் இறப்பதற்கென்றே சென்னையின் மருத்துவமனைகளில் பத்திரிகையாளர்கள் பரபரப்பு செய்திகளுக்காக காத்துக்கிடந்ததை ஒரு ஊடக நண்பர் தெரிவித்திருந்தார். வைரஸை கருணாநிதிதான் கப்பலில் இறக்குமதி செய்து தமிழகத்தில் பரப்பியதைப்போன்று ஜெயா டி.வி கொண்டாடுகிறது. வேறு சில நாடுகளிலும் சிலர் இந்த நோயினால்பலியாகிருக்கின்றனர். முகமூடிகளும், மாத்திரை, மருந்துகளும் அமோகமாக விற்பனையாவதை பார்த்து மருந்து முதலாளிகள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். உண்மையில் இந்த நோயின் தோற்று வாய் எது? முதலாளிகளின் இலாபத்திற்கும் இந்தக் காய்ச்சல் பரவுவதற்கும் என்ன தொடர்பு? எதிர்கால நோய்தொற்று போர்முறைகளுக்கு இந்தக் காய்ச்சல் ஒரு முன்னோட்டமா? நீங்கள் எங்கேயும் படிக்க முடியாத செய்திகளையும், உண்மைகளையும் எடுத்துரைக்கும் புதிய ஜனநாயகம் கட்டுரையை இங்கே மீள்பதிவு செய்கிறோம்.. பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கு மின்னஞ்சல், ட்விட்டர், குறுஞ்செய்திகள் வழியாக செயல்படும் நண்பர்கள் இந்தக்கட்டுரையையும் பரப்பினால் அந்த வராக அவதாரத்தின் பிரம்மாக்களை மக்களுக்கு அறிமுகம் செய்யலாம்.

கடந்த நூற்றாண்டில், உலகை ஆட்டிப்படைத்த பெரியம்மை, பிளேக், போன்ற கொள்ளை நோய்கள், அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் அவ்வப்போது தோன்றும் புதுப்புது கொள்ளை நோய்கள், உலகையே அச்சுறுத்தி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா என வகை வகையான நோய்கள் தோன்றிப் பரவின. இந்நோய்களால் பல்லாயிரக்கணக்காண மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் வந்திருக்கும் புதுவித நோய்தான் பன்றிக் காய்ச்சல். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளை இந்த நோய் ஆட்டிப் படைக்கிறது. இந்நோய்க்குப் பயந்து பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடி வருகின்றன. பத்திரிக்கைகளும், இதர செய்தி ஊடகங்களும் இந்த நோய் குறித்து மக்களை எவ்வளவு பயமுறுத்த முடியுமோ அந்தளவுக்குப் பயமுறுத்தி வருகின்றன. அமெரிக்கா சென்று திரும்பிய சில இந்தியர்களுக்கு இந்தக் காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகள் பரவியதால், மக்களிடையே பெரும்பீதி கிளம்பியுள்ளது. விமான நிலையங்களில் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்கிறார்கள். அவர்களில் உடல் வெப்ப நிலை அதிகமாக உள்ளவர்களைத் தனியறையில் (குவாரண்டைன்) தடுத்து வைத்து விடுகிறார்கள். சாதாரணமாக ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ, புளூக்காய்ச்சலாக இருக்குமோ எனும் அச்சத்திற்காளாகிறார்கள்.

பொதுவாக, இன்புளுயன்சா என்னும் வைரஸ் தாக்குவதால் மனிதர்களுக்குச் சாதாரணமாக ஏற்படும் நோய்தான் புளூ காய்ச்சல் . இது கடுமையான காய்ச்சலையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தக் கூடிய தொற்றுநோயாகும். ஆண்டு தோறும் இது பல லட்சம் பேரைத் தாக்குகிறது. அவர்களில் குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் ஆகியோரை இது கடுமையாகப் பாதிக்கிறது. இதனால் சிலர் இறந்தும் போகிறார்கள். ஆனால், பன்றிக் காய்ச்சல் எனப்படும் ‘ஸ்வைன் புளூ’ பன்றிகளிடையே தோன்றி, அவற்றிற்கு அருகில் வேலை செய்து, தொடர்ந்து அங்கேயே வசிக்கும் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்நோய் மனிதனைத் தாக்கும் போது சுவாசத்தைப் பாதித்து மரணத்தை ஏற்படுத்துகிறது.

மெக்சிகோவின் கிழக்குப் பகுதி நகரான லா கிளோரியாவில்தான் முதன் முதலாக இந்த நோய் தோன்றியது. அந்நகரில் உள்ள பன்றிப் பண்ணை ஒன்றிலிருந்து நகருக்குப் பரவிய வைரஸ் மெக்சிகோ முழுவதும் பரவி, அண்டை நாடுகளான அமெரிக்கா, கனடா ஆகியவற்றுக்கும் பரவி, தற்போது ஐரோப்பாவிற்குள்ளும் ஊடுருவிவிட்டது.

pig-factory-farmsமுதலாளித்துவ நாடுகளின் நவீன பண்ணைகளில் பல லட்சம் பன்றிகள் ஒன்றாக அடைத்து வைத்து வளர்க்கப் படுகின்றன. லாப வெறியோடு, சிறிய இடத்தில் நகரக் கூட இடமில்லாமல் இவற்றை ஆண்டுக்கணக்காக வைத்திருக்கின்றனர். பன்றிகளைக் கொழுக்க வைப்பதற்கெனக் கொடுக்கப்படும் இரசாயனம் கலந்த உணவுகளும், அப்புறப்படுத்தப் படாமல் கிடக்கும் டன் கணக்கிலான கழிவுகளும், இத்தகைய பண்ணைகளை கிருமிகளின் உற்பத்திச் சாலைகளாக மாற்றியுள்ளன. மெக்சிகோவில் நோய் தோன்றிய பண்ணை ஸ்மித் பீல்டு நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்தப் பண்ணையிலிருந்து மட்டும் ஆண்டு தோறும் 10 லட்சம் பன்றிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் 2006ஆம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 2 கோடியே 60 லட்சம் பன்றிகளை ஏற்றுமதி செய்துள்ளது. தங்களது பண்ணையின் சுகாதாரத்தைப் பறைசாற்ற இந்த நிறுவனம் பல்வேறு தரச் சான்றிதழ்களைக் காட்டினாலும், சுகாதாரம் என்னவோ காகிதத்தில் மட்டுமே உள்ளது.

இந்த நிறுவனத்தைப் போல அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் கோடிக்கணக்கான பன்றிகள் இந்த லட்சணத்தில்தான் வளர்க்கப்படுகின்றன. பன்றிக்காய்ச்சலைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிக்கைகள் எதுவும் ‘இன்டென்சிவ் பார்மிங்’ எனும் அதிதீவிர உற்பத்திமுறையைப் பற்றியோ, அதனைக் கையாளும் முதலாளிகளின் லாப வெறிதான் இந்த நோய்க்குக் காரணம் என்பதைப் பற்றியோ எழுதுவதே இல்லை.

இந்நோய் தோன்றிய ஒரு சில வாரங்களிலேயே மெக்சிகோ முழுவதும் பரவி அந்நாட்டையே செயலிழக்க வைத்துவிட்டது. நாடு முழுவதும் அறிவிக்கப்படாத ஊரடங்கு நிலவுகிறது, எல்லா நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மே 1 அன்று நடக்கும் தொழிலாளர் பேரணி கூட அங்கு நடைபெறவில்லை. அதே சமயம் இந்நோயைக் கட்டுப்படுத்த அரசால் முடியவில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கூட நோய்த்தடுப்பூசி போட முடியாத நிலையில்தான் மெக்சிகோ அரசு உள்ளது. மெக்சிகோவின் எல்லையைத் தாண்டி அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ள இந்தக் காய்ச்சலை அமெரிக்காவாலும் தடுக்க இயலவில்லை. அமெரிக்க அரசு ஏற்கெனவே எல்லா சமூக நலத் திட்டங்களையும் ஒழித்துக் கட்டிவிட்டதுடன், சுகாதாரத் துறையை முற்றிலும் தனியார் மயமாக்கிவிட்டது. நோயிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொறுப்பு மக்களிடமே விடப்பட்டுள்ளது. மக்களோ மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் பிடியில் உள்ளனர். ஏற்கெனவே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க மக்களைத் தற்போது பன்றிக் காய்ச்சல் பாடாய்ப் படுத்துகிறது.

எல்லா அழிவுகளிலும் லாபம் தேடும் முதலாளித்துவம் பன்றிக்காய்ச்சலையும் விட்டு வைக்கவில்லை, புளு வைரஸிற்கு மருந்துகளை தயாரித்து விற்கும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு அடித்தது யோகம். அவை மருந்துகளையும், தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன. ஊடகங்களைத் தங்கள் பக்கம் வளைத்துக் கொண்டு உலகம் முழுவதும் இந்நோய் தாக்குவது உறுதி என்று பீதியூட்டி தங்களது சந்தையை விரிவுபடுத்தி வருகின்றன. பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியதும் இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு மதிப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதே இதற்குச் சாட்சி. கடந்த முறை பறவைக் காய்ச்சல் வந்த போதும் இவற்றின் மதிப்பு இதே போல உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

பணம் மருத்துவம்இவ்வாறு ஒருபுறம் மருந்துக் கம்பெனிகள் லாபம் ஈட்டினாலும், மற்றொருபுறம் பன்றி இறைச்சியினால் நோய் பரவும் என்ற பீதியின் காரணமாக, பன்றி இறைச்சி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் பன்றி இறைச்சி ஏற்றுமதியாளர்களைக் காக்க உலக சுகாதார நிறுவனம் களத்தில் இறங்கியது. பன்றி இறைச்சியின் மூலம் காய்ச்சல் பரவாது என்று பிரச்சாரம் செய்தது. பன்றிக் காய்ச்சல் என்ற பெயரையே ‘மெக்சிகன் காய்ச்சல்’ என்று மாற்றிவிட்டது. இதன் மூலம் காய்ச்சல் பரவுவதற்குக் காரணம் மெக்சிகர்கள்தானே ஒழிய, பன்றிகள் அல்ல என்று மறைமுகமாகக் கூறுகிறது.

கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பண்ணையில் 220 பன்றிகளுக்கு இந்தக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்தப் பண்ணை நிர்வாகமும், கனடா அரசும் பண்ணையில் வேலை பார்த்த ஒரு மெக்சிகத் தொழிலாளியிடமிருந்துதான் பன்றிகளுக்குக் காய்ச்சல் பரவியதாகக் கூறியது. ‘ஏன் பன்றிகளிடமிருந்து அந்தத் தொழிலாளிக்கு நோய் பரவியிருக்கக்கூடாது’ எனக் கேட்டால் கனடா பன்றிகளுக்குத் தானாக புளூ காய்ச்சல் வராது, அவற்றிற்கு தொழிலாளர்களிடமிருந்துதான் பரவியிருக்கும் எனக் கூறித் தொழிலாளியைப் பன்றியை விடக் கேவலமாகச் சித்தரிக்கின்றனர்.

பன்றிக் காய்ச்சல் பன்றிகளிடமிருந்து தோன்றி மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறினாலும், இது வல்லரசுகள் நடத்தும் உயிரியல் ஆயுதப் போருக்கானதொரு சோதனை எனவும் கூறுகின்றனர். தற்போது அனைத்து முதலாளித்துவ நாடுகளும் இச்சோதனைகளின் மூலம் பல்வேறு புதிய வைரஸ்களை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றன. அவற்றைச் சோதித்துப் பார்க்க அமெரிக்காவே கூட மக்களிடையே பரவச் செய்திருக்கக்கூடும். ஆனால் இது போன்ற சோதனைகளை தேச நலன் என்ற பெயரில் மூடி மறைத்துவிடுகின்றனர்.

மே 5ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 1500 பேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். 30 பேர் இறந்திருந்தனர். அமெரிக்காவில் மட்டும் 109 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர், ஒருவர் உயிரிழந்திருந்தார். இப்போது இந்நோய் கட்டுப்படுத்த முடியாதபடி பரவி வருகிறது.

உலகப் பணக்கார நாடான அமெரிக்காவிற்கே இந்த நிலையென்றால், ஏழை நாடுகளை இந்நோய்த் தாக்கும்போது அம்மக்களின் கதி என்ன ஆவது? ஏற்கெனவே அமெரிக்கா தனது ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அத்துடன் மருத்துவக் கழிவுகளையும், ரசாயனக் கழிவுகளையும் அந்நாடுகளில் கொட்டி, சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் மாசுபடுத்தி வருகிறது. தூத்துக்குடியிலும், சென்னையிலும் அமெரிக்காவிருந்து கொண்டுவந்து கொட்டப்பட்ட குப்பைகளில் வெடிமருந்துகளும், வெடிக்காத குண்டுகளும் பல ஆண்டுகளாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, கொச்சி துறைமுகத்திலிருந்து கோவைக்குக் கொண்டுவந்து கொட்டப்பட்ட கழிவுகளில் பயன்படுத்தப் பட்ட ஊசி, குளுகோஸ் பாட்டில் உட்பட மருத்துவக் கழிவுகள் மலை மலையாகக் குவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தனது கழிவுகளை ஏழை நாடுகளுக்குப் பரிசளித்துப் பழகிய அமெரிக்கா, பன்றிக் காய்ச்சலை மட்டும் அந்த நாடுகளுக்குப் பரவாமல் கட்டுப்படுத்தி விடுமா?

இந்தியாவில் சுகாதாரத்துறையை வேகமாகத் தனியார்மயப்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச மருத்துவ உதவிகளையும் அரசு திட்டமிட்டு நிறுத்திவருகிறது. அரசுதனியார் கூட்டுச் சுகாதாரத் திட்டம் என்ற பெயரில் அரசு மருத்துவமனைகள் கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்படுகின்றன. இந்நிலையில் இங்கு பன்றிக் காய்ச்சல் பரவினால் அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும். இந்திய சுகாதார அதிகாரிகள், பன்றிக்காய்ச்சலை இந்தியா எளிதில் எதிர்கொள்ள முடியும் என்றும், அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் பேட்டியளித்துள்ளனர். ஆனால் தமிழக மக்களைத் தாக்கிய சாதாரண சிக்குன் குனியா நோயையே தடுத்து நிறுத்த முடியாத இவர்கள்தான், பன்றிக் காய்ச்சல் போன்ற வெகு வேகமாகப் பரவும் நோய்களிலிருந்து மக்களைக் காக்கப் போகிறார்களாம்.

காற்று, நிலம், நீர் என அனைத்தும் மாசுபட்டு, சுற்றுச் சூழல் நாசமானாலும் பரவாயில்லை, புதிது புதிதாகக் கொடிய நோய்கள் உருவாகி மக்களெல்லாம் செத்து மடிந்தாலும் பரவாயில்லை. தங்களது லாபம் மட்டும் குறையாமல் இருந்தால் போதும் – என லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முதலாளித்துவம் இயங்கி வருகிறது. அரசும், முதலாளிகளின் நலனைக் காப்பதிலேயே குறியாய் உள்ளது, மக்களின் அழிவில் கூட முதலாளிகள் லாபம் சம்பாதிக்க உதவுகிறது.

இந்நிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம்? இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமான முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டப் போராடப் போகிறோமா? அல்லது இப்போதைக்குப் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்டு அடுத்து வரவிருக்கும் புது நோய் ஒன்றிற்காகக் காத்திருக்கப் போகிறோமா?

பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!


இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூரில் பி.டி கத்திரிக்காய்க்கு எதிரான உழவர் உழைப்பாளர் கட்சியின் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. அபாயகரமான சாயக்கழிவுகளுடன் அசால்ட்டாக வாழ்க்கை நடத்தும் எங்கள் கவனத்தை கத்திரிக்காயா திருப்பும் ?? கொடி புதுசாயிருக்கே என ஒருசிலர் கவனித்ததுதான் மிச்சம். ஆனால் சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரையை வாழ்த்துரை வழங்கச்செய்து பி.டி கத்திரிக்காய்க்கு மாபெரும் விளம்பரம் ஒன்றை செய்திருக்கிறது விவசாயப் பல்கலைக்கழகமும் அவர்களின் சமீபத்தைய குலசாமியான மான்சாண்டோவும். இதுவரை அப்துல் கலாமை உதாரணபுருஷனாக கொண்டிருந்து கொஞ்சம் சலித்துப்போயிருந்த மக்களின் புதிய கண்டுபிடிப்புதான் மயில்சாமி அண்ணாதுரை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நான்கு பி.டி கத்திரிக்காய்களை கோவை வேளான் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார் ம.சா.அ.து. இதுவரை உள்ளூரில் விளைந்த கத்திரிக்காயால் சுற்றுப்புறத்திற்கு என்ன கேடு வந்துவிட்டது என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அதையும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரை வைத்து சொல்லச் சொல்வதன் காரணம் என்ன ?? ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மார்கெட்டிங் செய்ய அப்துல் கலாமை அனுப்பினார்கள், இப்போது அண்ணாதுரையின் முறை.பி.டி கத்திரிக்காயின் நல்லதா கெட்டதா என விவாதிக்கும் முன் அதன் தேவையைப்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடப்படுவதிலும் ஒரு பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்திரிக்கு ( தங்கள் நிலத்தின் ஒரு பாகத்தில் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் கத்திரியை பயிரிடுகிறார்கள் ) மரபணு மாற்றம் செய்வது என்பது ஒரு முன்னோட்டமே. அடுத்து வரப்போகும் மற்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கான தடைகளை இப்போதே கத்திரியை அனுப்பி ஆழம் பார்க்கிறார்கள். நமது கேனத்தனத்தினைப் பொறுத்து பி.டி நெல் உள்ளிட்ட மற்ற பயிர்கள் இன்னும் சுலபமாக உள்ளே நுழையும்.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு முதலில் பயன்பாட்டுக்கு வர இருப்பது கத்திரிக்காய்தான். பி.டி கத்திரிக்காய் உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகளைப்பற்றி ஆராயாமல் ஏதோ வீடு கட்டும் ஒப்புதலை வழங்குவதுபோல அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு ( genetic engineering approval committe ). கத்திரி மீதான ஆய்வு முடிவுகள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அதன் பிறகு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பல்வேறு விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய இந்தியாவில் வசதி இல்லை என்றும் உடனடியாக ஒரு ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசை கோரியிருக்கிறார் புஷ்பா பார்கவா ( இவர் உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட GEAC யின் பார்வையாளர் ). மத்திய அரசும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது. அப்படியானால் ஜெயராம் ரமேஷ் மக்களுக்குத் தரப்போவது எந்த ஆய்வறிக்கை என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

உண்மையில் GEAC ஆய்வு என சொல்வது பி.டி கத்திரிக்காயை உருவாக்கிய மான்சாண்டோ செய்த ஆய்வைத்தான். அந்த ஆய்வு பத்து எலிகளைக் கொண்டு மூன்று மாதங்கள் மட்டும் நடைபெற்றது. இதில் நீண்டகால பாதிப்புகள் குறித்து எந்த தகவலை பெறமுடியும் ? முதலில் எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இப்போது இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்க்கப்பட்டு விட்டதுபோலும். விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாமை, மகரந்த சேர்க்கை மூலம் மற்ற பயிர்களும் மலடாகும் போன்ற பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்யும் சாத்தியம் இந்தியாவில் கண்ணுக்கெட்டியவரை கிடையாது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அவற்றின் ஆபத்துக்கள் பற்றி பெரிய தெளிவு மக்களிடம் கிடையாது அல்லது அவர்களுக்கு விளக்கம் தரப்படவில்லை. தாய்ப்பால் முதல் அண்டார்டிகா வரை பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு அறியப்பட்டபிறகும் அந்த விவரம் பெரும்பாலான பாமர மக்களுக்கு தெரியவில்லை. இதேகதைதான் பல ஆலைக்கழிவுகளின் விசயத்தில் இப்போதும் நடக்கிறது. இந்த லட்சணத்தில் மக்களிடம் கருத்து கேட்டு பி.டி கத்திரிக்காயை அனுமதிக்கப்போவதாக சொல்வது வேறு பயமுறுத்துகிறது.

இதன் இன்னொரு முகம் பொருளாதாரம் சார்ந்தது. விவசாயிகளை சகல வழிகளிலும் நிறுவனங்களை சார்ந்திருக்கச் செய்வது. ஏற்கனவே உரம் பூச்சி மருந்து என பல இடுபொருட்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள். விதைகளும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எல்லா விவசாயியும் ஒப்பந்தப் பணியாளரைப்போல மாண்சான்டோவுக்கு வேலைசெய்ய வேண்டியதுதான். பி.டி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை 1750, அப்போது சாதாரண பருத்தி விதை முன்னூறு ரூபாய்கூட கிடையாது. அப்படி வாங்கியவர்களும் பெரிய மகசூல் எடுத்ததாக மான்சாண்டோவாலும்கூட நிரூபிக்க முடியவில்லை அவர்களின் உள்ளூர் எடுபிடிகளான வேளான் பல்கலை(ளை)க்கழகங்களாலும் நிரூபிக்க முடியவில்லை. பி.டி பருத்தியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது கத்திரிக்காய் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ தெரியாது. இது போதாதென்று இன்னும் ஐம்பத்தாறு பி.டி பயிர்கள் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றன.

விதை யார் கொடுத்தால் என்ன, கத்திரிக்காய் வழக்கம்போல கிடைக்கும்தானே என கேட்கவும் ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க என்னிடமும் ஒரு கேள்வி உண்டு, உங்கள் பிள்ளை எங்கிருந்து வந்தால் என்ன ? அது உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது ?

விதைக்கான உரிமை பறிபோகும் வேளையில் விளைபொருளின் மீதான உரிமையையும் பறிக்க ஒரு சட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரும்புக்கான நியாய ஆதரவு விலை அவசரச்சட்டம் என்பதுதான் அது. அதாவது இப்போது அமுலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சுமார் முன்னூறு ரூபாய் குறைவான விலையை ஒரு டன்னுக்கு “அவசரமாக” நிர்ணயம் செய்யும் சட்டம்தான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. ஒரு விளைபொருளின் விலையை குறைப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர முயலும் ஒரே சாதனை அரசு இந்தியாவில்தான் இருக்கமுடியும். இத்தனைக்கும் கடந்த ஓராண்டில் மட்டும் சர்க்கரையின் சந்தை விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.ஒப்புக்குக்கூட எந்தவிதமான காரணமும் சொல்லாமல் விவசாயிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பான ஒரு திட்டத்தை சட்டமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது காங்கிரஸ்.

ஏற்கனவே எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி திட்டமிட்டு குறைக்கப்பட்டு இறக்குமதி நிரந்தரமாகிவிட்டது. அடுத்து கரும்பு இறக்குமதி துவங்கியாயிற்று ( கரும்பு உற்பத்திப் பரப்பு 48% குறைந்துவிட்டதாக ( அல்லது குறைக்கப்பட்டுவிட்டதாக) மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அடுத்து அரிசி இறக்குமதிக்கு சாக்குப்பையை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. மேற்கூறிய எல்லா பொருட்களும் சமீப காலமாக கடுமையான விலையேற்றத்தை சந்தித்திருக்கின்றன. விவசாயிக்கும் விவசாயத்திற்கும் எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மறுநாள் பாதிக்கப்போவது சாதாரண நுகர்வோரான இந்தியக் குடிமகனைத்தான். மன்மோகனும், மாண்டெக் சிங்கும் இந்தியாவை பணம் படைத்தோருக்கு மட்டுமான ஒரு தேசமாக மாற்றும் வரை ஓயப்போவதில்லை. அதுவரை நம்மை திசைதிருப்ப இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான் தீவிரவாதம். அதுசரி செத்தாலும் உள்ளூர்காரனால் சாவதுதானே தேசபக்தி.

கரும்பு விலை சட்டத்தின் மூலம் நமக்கு இன்னொரு முக்கியமான பாடம் கிடைத்திருக்கிறது. டில்லியை ஒருநாள் முற்றுகையிட்டாலே ஒரு அராஜகமான சட்டத்தை நிறுத்த முடியும் என்பதுதான் அது.

-நன்றி வில்லவன்

முதல் பகுத்தறிவாளனும் முதல் மத குருவும்…


காலம்: சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னால்
இடம்: தமிழ்நாடு தேனி மாவட்டம் மலைப்பகுதி, ஆஸ்திரேலியக் கடற்கரை, மத்திய ஆப்பிரிக்கக் காடு, வட அமெரிக்கப் புல்வெளி, டைகரிஸ் நதி ஓரம் – எல்லா இடங்களிலும் பல முறை நடந்தது இது

கதாநாயகன் வேட்டை முடிந்து குகைக்குத் திரும்பும் போது மாலை வெளிச்சம் மங்க ஆரம்பித்து விட்டது. மூட்டி வைத்த தீயின் முன் அமர்ந்திருந்த சக மனிதர்கள் மான்களையும், மாடுகளையும், குதிரைகளையும், தோலுரித்துத் தீயிலிட்டுக் கொண்டிருந்தனர். குழந்தைகள் சிறு குரங்குகளைத் துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வயது வந்த பெண்களும் ஆண்களும் அவர்கள் மார்புகளும் ஆண்குறிகளும் எல்லோர் முன்னாலும் காற்றில் ஆடிக்கொண்டு இருக்க அதற்காக வெட்கப் பட்டு மூடாமல் அருகருகே அமர்ந்திருந்தனர். சாப்பிட்ட பிறகு கலவி செய்வது மட்டும் தானே வேலையே! மூடி வைத்தால் யாருக்கு என்ன இருக்கென்று எப்படித் தெரியும்?

ஆனால் உண்பது, உடலுறவு கொள்வது என்ற அத்தியாவசியத் தேவைகள் நிறைவேறும் முன்னதாக அவர்களுக்கு வேண்டிய இன்னோரு சிறு தேவை, நடுநாயமாக உட்கார்ந்திருந்த அந்தப் பெருங்கிழவன் சொல்லும் கதை. இன்றும் எல்லோரும் அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ள கிழவன் தன்னிடமிருந்த காட்டுப் புல்லாங்குழலை இடையிடையே ஊதியபடியே பேச ஆரம்பித்தான்.

காலம் காலமாகக்கேட்டு வரும் பழங் கதைதான். ஆனாலும் தீயில் வேகும் விலங்குகள் தயாராகும் வரை, கிழவன் தாடியைத் தடவியபடி வானில் ஒலித்த பேரிடி, மலையை மூழ்கடித்த பெரு வெள்ளம், பத்து தலை கொண்ட நாகப் பாம்பு, அதை வீழ்த்திய மாவீரன் – என்று சொல்லிக் கொண்டே போக கூட்டம் முதல் முறை கேட்பது போல் திறந்த வாய் மூடாமல் கேட்டது.

கிழவன் சமர்த்தன். மழை வந்தால் அதற்கேற்றாற் போல் ஒரு கதை. அடுத்த ஊரிலிருப்பவர்கள் சண்டையிட வந்தால் வேறு கதை. குழந்தை இறந்தால் ஒரு கதை. பிள்ளை உருவாக்க முடியாதவனுக்கு விறைப்பு வர ஒரு கதை. சிரிக்கவும் அழவும் வேறு வேறு கதைகள். எல்லாமே அவனுக்கு அத்துப் படி. இந்தக் கதை சொல்வதற்குப் பரிசாக, வயதான காரணத்தால் வேட்டையாட முடியாத அவன் தின்ன சம பங்கு மான் கறியும், தினசரி அவன் புணர ஒரு பெண்ணும் தருவது ஊர் வழக்கம். அவனது எண்ணற்ற பிள்ளைகளில் ஒருவன் கிழவன் இறந்த பின் கதை சொல்ல இப்போதே தயாராகி வருகிறான்.

வேட்டையை முடித்து வந்த கதாநாயகனுக்குக் கதையில் மனம் ஈடுபடவில்லை. தனக்கு 20 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொடுத்துள்ள ஏழெட்டு பெண்மணிகளிடமோ அல்லது வேறு ஒரு பெண்ணிடமோ செல்லவும் மனம் நாடவில்லை. பசியும் எடுக்கவில்லை. காரணம் அவன் மனதை அரிக்கும் ஒரு கேள்விதான். அதை எல்லாம் தெரிந்த அந்தக் கிழவனிடமே கேட்பது என்று முடிவு செய்தான். தன் தோளில் இருந்த மானின் உடலை இறக்கி வைத்து விட்டு சத்தமாகக் கேட்டான்.

“கிழவா! எனக்கு ஒண்ணு தெரியணுமே..”

“இதென்னடாது வம்பாப் போச்சு! 20 பிள்ள பெத்தும் ஒனக்கு சந்தேகம் தீரலியா?”

கூட்டம் சிரித்தது. ஆனால் அவன் அதில் கவனம் சிதறாமல் கேள்வியைக் கேட்டான்.

“ஏன் வெளிச்சமா இருக்கு, அப்புறம் இருட்டு வருது, திரும்பவும் வெளிச்சம் வருது?”

கிழவன் இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை. கூட்டமும் எதிர் பார்க்கவில்லையென்பது அவர்கள் சிரிப்பை நிறுத்தியதில் புரிந்தது. கூட்டம் கிழவன் பக்கம் பார்வையைத் திருப்பியதில் அவனுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதும் புரிந்தது.

“என்ன கேக்குற?”

“தூங்கி எந்திரிக்கும் போது வெளிச்சமா இருக்கு, அப்பறமா திரும்ப இருட்டுது, திரும்பத் தூங்கி எந்திரிச்சதும் வெளிச்சமா இருக்கே. அது ஏன்?”

கிழவன் தன் வாழ்நாளில் “தெரியாது” என்று சொன்னதே கிடையாது. அப்படிச் சொல்லி விட்டால் தனக்கென்று இருக்கும் சிறப்பான இடம் போய்விடும் என்று அவனுக்குத் தெரியும்.

“அடப் போடா… இதெல்லாம் ஒரு கேள்வியா…. சூரியன் தொடர்ந்து இருந்துக் கிட்டே இருந்தா நாமெல்லாம் எப்பத் தூங்குறது? அதான் சாமி நம்ம மேல ஒரு பெரிய போர்வையப் போட்டு போர்த்தி விடுறாரு. இருட்டு வருது. நீ வேணுங்கிற அளவு தூங்கினதும் போர்வைய எடுத்திடறாரு. வெளிச்சம் வந்திடுது”

“ஆனா இருட்டின பெறகு மேல பாத்தா ஏதோ சின்ன சின்ன புள்ளியா நெறய வருதே! அப்பறம் பெரிசா வட்டமா ஒண்ணும் வருதே!”

“அதெல்லாம் போர்வைல இருக்குற ஓட்டைடா. இது கூடப் புரியலயா?”

கூட்டம் சள சளவென்று ஆமோதிக்க கதாநாயகனுக்கு மீண்டும் ஒரு முறை பேச வாய்ப்பே கிடைக்கவில்லை.

மெல்ல கூட்டத்திலிருந்து விலகி நடந்தான். மூட்டிய தீயின் வெளிச்சம் தீர்ந்து, காட்டின் இருள் துவங்கும் ஓரத்திற்கு வந்து தரையில் படுத்தான். வானத்தைப் பார்த்தான். தூரத்தில் கிழவன் சொல்லிக் கொண்டிருந்த கதைக்கும் அவன் கண்ணில் படும் காட்சிகளுக்கும் தொடர்பு இல்லையென்பது மெல்லத் தெரிந்தது.

இயல்பாகவே அவனுக்குள் கேள்விகள் தோன்றுவது உண்டு.

சில சமயம் ஏன் மேலிருந்து தண்ணீர் கொட்டுகிறது?
ஏன் ஆறுகள் திடீரென பொங்குகின்றன?
தூரத்து மலையிலிருந்து ஏன் நெருப்புக் குழம்பாக வடிகிறது?
தலை முடி ஏன் வெளுக்கிறது? தோல் ஏன் சுருங்குகிறது?
உடனிருப்பவர்கள் ஏன் திடீரென கண்மூடிப் படுக்கிறார்கள்? அதன் பின் எழவே மாட்டேனென்கிறார்கள்?

சாவு என்றால் என்ன? செத்த பிறகு அவர்கள் போகும் அதே இடத்திற்குத்தானா நான் கொல்லும் மானும் மாடும் போகின்றன?

கதாநாயகனுக்கு தலை வலித்தது.

அதையெல்லாம் விடு. இன்றைய கேள்வியை மட்டும் யோசி என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

மேலே தெரியும் இருட்டு கருப்புப் போர்வையா? இவ்வளவு பெரிய போர்வை எங்கிருந்து வருகிறது? போர்வைக்கு வெளியில் என்ன இருக்கிறது?

சாமி என்பவர்தான் போர்த்தி விடுகிறாரா? சாமி என்பவர் யார்? அவருக்கு ஏன் இப்படி ஒரு வேண்டாத வேலை?

இந்த ஊரையும் மக்களையும் உருவாக்கி அவர் என்ன சாதிக்கிறார்?அவரது ஊர் என்ன? அவரை உருவாக்கியது இன்னும் ஒரு சாமியா? அந்த சாமி ஏன் இந்த சாமியைப் படைத்தார்?

இப்படிப் போயிக் கொண்டே இருந்தால் எதுதான் ஆரம்பப் புள்ளி? அந்த ஆரம்பப் புள்ளி ஏன் தோன்றியது?

இதை எல்லாம் கிழவனிடம் கேட்டுப் பயனில்லை.

கடவுள் என்பவரைப் பற்றி எதுவும் கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி கேட்பவர்கள் கெட்டவர்கள் என்று கிழவன் சொல்லியிருக்கிறான். நல்லவனாக வாழ்ந்து கடவுளை வணங்குபவனுக்குதான் நல்ல மான் கறியும், தினசரி புணரப் புதுப் புதுப் பெண்களும் கிடைக்கும் – கிழவனுக்குக் கிடைப்பது போல. கடவுளை மதிக்காத கெட்டவர்களை புலி தின்னும். புதை குழி விழுங்கும். செத்தபின் கூட அவர்களுக்கு தண்டனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மீண்டும் கேள்விகள்.

கெட்டவன் நடந்து கொள்வது தவறென்றால் அவன் ஏன் கடவுளால் படைக்கப் படுகிறான்?
கெட்டதே நடக்காமல் கடவுளால் தடுக்க முடியாதா?
முடியாதென்றால் அவர் எல்லாம் வல்லவர் இல்லையே!

கெட்டதைத் தடுக்க முடிந்தும் தடுக்காமல் இருக்கிறாரா?
அப்போது அவரும் கெட்டவர் ஆகி விடுகிறாரே!

அவரால் தடுக்க முடியும், தடுக்க விருப்பமும் உள்ளது என்றால் ஏன் கெட்டது நடக்கிறது?
அல்லது கெட்டதை அவரால் தடுக்கவும் முடியாது, அவருக்கு அதைத் தடுக்கும் விருப்பமும் இல்லை என்றால் அவர் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?

கதாநாயகனுக்கு தலைவலி அதிகமாகி விட்டது.

கதாநாயகனுக்குத் தெரியாத இன்னும் ஒரு உண்மை. இதே கேள்விகள் இந்தப் பூமிப் பந்தில் பல இடங்களில் பல நாயகர்களுக்கு எழுந்தன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கிழவனும் இருந்தான்.

தொடரும்

நன்றி: எபிகியூரஸ், கார்ல் சாகன், ரிச்சர்ட் டாகின்ஸ், பி.டி. ஸ்ரீநிவாச அய்யங்கார், பில் ப்ரைசன், ஈ.வே.ராமசாமி.

கேள்வியே புரியாமல் பதில் சொல்லும் அறிவாளிகளும், கேள்வியைப் புரிந்து கொண்டு பதில் தேடி வரும் முட்டாள்களும்…


காலம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது.

vote-012பல இலட்சம் ஆண்டுகள் பொழிந்த அமில மழை, அது நின்ற பின் பல ஆயிரம் ஆண்டுகள் மெதுவாக வெப்பம் அடங்கிய பூமி, படிப்படியாகக் குளிர் அதிகரித்து சில ஆயிரம் ஆண்டுகளுìÌள் நிலப் பரப்பை முழுதாக மூடிய பனி, உருகிய பனியில் தோன்றிய நீர்ப்பரப்புகள், நிலத்தடியில் அதிவெப்பத்தோடு கனன்று கொண்டிருக்கும் உருகிய திடப் பொருட்கள், நிலத்தின் மேல் சுழலும் வெதுவெதுப்பான வாயு மண்டலம், பிரபஞ்சம் உருவான நாள் முதல் அண்ட வெளியில் பரவியிருக்கும் மனிதக் கண்ணில் புலப்படாத கதிர் வீச்சுக்கள், ஒவ்வொரு திடப் பொருளும் இன்னொன்றைத் தன்னை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு விசை, இவ்விசையின் கோணங்களும் தாக்கங்களும் மாறுபடுவதால் ஒவ்வொரு கோளையும் நட்சத்திரத்தையும் இழுப்பதோடு சுழலவும் வைக்கும் சுழற்சி விசை … இவை எல்லாம் கால மாற்றத்தின் சாட்சிகள்.

கதாநாயகர்கள் நடத்தி வரும் புதையல் தேடலில் இதுவரை சிக்கியிருக்கும் சிற்சில முத்துக்களும், வைரங்களும் இவை.

பாக்டீரியாக்களும், வைரஸ்களும், தாவரங்களும், பூச்சிகளும், பறவைகளும், பாலூட்டிகளும், மனிதர்களும் இந்தக் காலமாற்றத்தின் சக விளைவுகள்.

கதாநாயகர்ளின் புதையல் தேடலில் சிக்கி உள்ள சிறு சிறு மாணிக்கங்கள், வைடூரியங்கள்.

இந்தத் முத்து மணிகளை மாலையாகக் கோற்கும் கயிறு இன்னும் கிடைக்காததால் தனித்தனியாக இத்தனை செல்வமும் சிதறிக் கிடக்கிறது.

கதாநாயகர்கள் கயிறு தேடிக் கொண்டிருக்கிறார்கள்

எல்லாம் தெரிந்த கிழவனுக்கு இந்தத் தேடுதல் பிரச்சினையே இல்லை. அவனிடம் ஏற்கனவே கயிறு இருக்கிறது.ஆத்திர அவசரத்திற்கு எப்போதோ நூற்ற ஒரு சணல் கயிறு. அதில் கோர்க்க ரத்தினக்கள் இல்லாவிட்டாலும் கைமாறிக் கைமாறிப் பல கிழவனார்கள் திரித்த ஒரு தடிமனான தாம்புக் கயிறு.

முத்தும் மணியும் சிதறிக் கிடக்கிறது என்று தெரியாதவர்கள், வேறு இடத்தில் அதி அற்புதமான நவரத்தின மாலை உருவாகிக் கொண்டிருப்பதை உணறாமல், பிரபஞ்சத்தின் புதையல் தேடலில் கலக்காமல், பெருமையுடன் அணிந்து கொண்டிருக்கும் ஒரு பயனுமில்லாத இல்லாத கயிறு.

இது அஸ்திவாரமில்லாமல் கட்டப் பட்ட ஒரு கூடாரம். காலப் போக்கில் கோட்டையாகக் கருதப் படுவது துர்பாக்கியம்.

இது என்ன கேள்வியென்றே தெரியாமல் ஒருவன் எழுதிய பதில். மீண்டும் மீண்டும் சொல்லப் பட்டதால் உண்மையாகக் கருதப் பட்டு நாள்பட பதிலுக்கேற்றாற் போல கேள்வியை உருவாக்கிக் கொண்டு உள்ள அக்கிரமம்.

கிழவனின் கயிறு சிறு சிறு நூல் பிரிகளால் ஆரம்பமானது.

மழை பெய்யும் போது பயப்படு; அழு; வானைப் பார்த்து இறைஞ்சு; மழை நிற்கும்.சூரியனுக்கும் மனிதர்களைப் போலக் கோபம் வரும். காலை வேளை தலை காட்டாது. தடுமாறிப் போவாய். எனவே அத்திசையைப் பார்த்து நன்றி சொல்லு. நெருப்புதான் உலகின் ஆதாரம். ஆதாரத்தை மதிக்க வேண்டும். இல்லையேல் அழிவு நிச்சயம்.

“மதிப்பது என்றால் எப்படி?” இன்னோரு மனிதன் ஆயுதத்தால் உன்னை வெல்லும் போது உன் ஆயுதத்தைத் தூக்கிப் போட்டு தரையில் விழுகிறாயே, அதே போல் தலை வணங்கு, கையெடுத்துக் கும்பிட்டு நீ நிராயுதபாணி என்று காட்டிக் கொள்ளு, உன் அடிமை நிலையை நிரூபிக்க எதிரின் கால் தொடுவாயே, அதேபோல் தரையில் விழு, வணங்கு. மனிதர்களுக்கு நீ மரியாதை காட்டுவது போல இயற்கைக்கும் காட்டு. அதற்குப் புரியும். இயற்கையைக் காக்காய் பிடித்து வைத்துக் கொள்.

“இயற்கைக்கு எங்கிருந்து மனிதனைப் போல காழ்ப்புணர்ச்சி வரும்? பொறாமை, சமாதானம், வன்மம், அன்பு இவையெல்லாம் இயற்கைக்கு எங்கிருந்து வரும்? ஒரு ஊரில் தலை வணங்குவது பணிவு, அடுத்த ஊரில் மூக்கால் மூக்கை உரசுவது அன்பு… இப்படி மனிதருக்குளேயே வேறுபாடுகள் இருக்கையில் உருவமில்லாத இயற்கைக்கு மனித சமிஞ்கைகள் மூலம் என் அடிபணிதல் எப்படிப் புரியும்?”

இக்கேள்விகள் கேட்கப் பட்டிருந்தால் இந்தக் கயிறு திரிக்கப் பட்டிருக்க வாய்ப்பே இல்லை! ஆனால், இவை கேட்கப் படவில்லை. கிழவனின் கயிறு கேள்வியில்லாமலே உருவான பதில். தற்காலிகமாக எழும்பிய கூடாரம். கேட்பாரில்லாததால் அது கோட்டையாக வளர ஆரம்பித்தது.

இயற்கையை வணங்க ஒரு வழி வகை இருக்கிறது. சம்பிரதாயங்கள் இருக்கின்றன. மழையின் மனித உருவம் இது. நெருப்பின் மனித உருவம் இது. காமத்தின் மனித உருவம் இது. இவற்றை வெல்ல வேறு வேறு வழிகள் இருக்கின்றன. இந்த உருவங்களை, கடவுள்களை, திருப்திப் படுத்த நான் வழி சொல்கிறேன்.

நிலவில்லாத நாளில் ஒரு வழி. முழு நிலவன்று ஒரு வழி. அறுவடைக்கு முன்…. வெள்ளம் வரும்போது…. உயிப் பலி கொடுத்து…. மலர் அணிவித்து….

பட்டினி கிடந்து ஒரு வழி. பலவகை விருந்தோடு ஒரு வழி. மேள தாளத்தோடு ஒரு வழி. மவுனமாக ஒரு வழி. வெவ்வேறு பிரச்சினகளை தீர்க்க வெவ்வேறு வழிகள், முறைகள், சம்பிரதாயங்கள்…

மறந்து விடாதே. இக்கடவுளுடன் உன்னால் பேச முடியாது. எப்படிப் பேச வேண்டுமென்று எனக்குத் தெரியும். எந்த மொழியில் பேச வேண்டுமென்றும் தெரியும். அதை உனக்கு சொல்ல மாட்டேன். காரணம் நீ கடவுளின் காலிலிருந்து வந்தவன். நான் நாக்கிலிருந்து. இவன் தோளிலிருந்து. இந்த ஊரை இவன் காவல் காக்கட்டும். நீ ஒதுங்கிப் போ. எனக்குப் பின் என் பிள்ளை வழி சொல்லுவான். இவன் பிள்ளை ஊர் காப்பான். நீ எங்களுக்கு ஏவல் செய்வாய்.

ஏனென்று கேட்காதே? நான் கடவுளின் மைந்தன். என் அம்மாவைத் தொடாமலே கர்ப்பமாக்கியது அவன் தான். அடுத்த ஊர் கிழவன் சொல்வதையெல்லாம் இனிமேல் நம்பாதே. என் அப்பன் என் காதில் மட்டும் தான் உண்மை சொன்னான். ஏழு நாளில் உலகம் படைத்தவன் அவன். ஒரு ஆணையும் அவன் விலாவிலிருந்து ஒரு பெண்ணையும் படைத்தான். வெள்ளத்தில் உலகம் முங்கியபோது ஒருவனின் படகில் எல்லா உயிரினத்தையும் ஏற வைத்தான். அவை பல்கிப் பெருகித்தான் இவ்வுலகம் உயிர்களால் நிறைந்தது. “இரண்டிரண்டு உயிர்களிலிருந்து எப்படி பல உயிர்கள் வந்தன? மூன்றாம் தலைமுறை உருவானதை நினத்தாலே கெட்ட எண்ணங்கள் வருதே?” எதிர்க் கேள்வி கேட்டால் நாக்கறுப்பேன்!!

என் இறைவன் தகப்பனை விட்டு மகனைக் கொல்வான். பாவிகளை நரகத்தில் தள்ளுவான். (“பாவம் என்றால் என்ன?” அப்புறம் சொல்கிறேன்.) காலகாலமாக எண்ணைச் சட்டியில் வறுத்து எடுப்பான். வெள்ளமும் பஞ்சமும் புயலும் நில நடுக்கமும் எரிமலையும் வீசுவான். நோயள்ளித் தெளிப்பான். ஆனால் அவன் எல்லையில்லாத அன்புள்ளவன். உன் பாவத்தை என் மேல் தள்ளி விட்டு விடு. உனக்காக அவனிடம் நான் ரத்தம் சிந்துகிறேன். நீ தப்பித்துக் கொள். போகும் வழியில் உன்னிடம் உள்ளதை அந்த உண்டியலில் போட்டு விட்டுப் போ.

“கடவுள் உன் அப்பன்தானே? பாவமே செய்யவிடாமல் தடுக்கச் சொல்லேன்.” உனக்குத் தெரியாது என் அப்பனுக்கு ஆகாதவன் இருக்கிறான் சாத்தானென்று பெயர். அவன் தான் பாவத்துக் காரணம். “அவன் உன் அப்பனை விட பெரிய ஆளாக இருப்பான் போலிருக்கிறதே! அவனைப் படைத்தது யார்?” இந்தக் கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். “எப்போது?” அதெல்லாம் விளக்க முடியாது. என் வழியில் வா! இல்லையேல் நீ நரகம் தான் போவாய்.

கடவுளென்பவன் உருவமில்லாதவன். இன்றிலிருந்து மற்ற கிழவன்களை நம்பாதீர்கள். நான் மலைக் குன்றிலிருக்கும் போது என் காதில் மட்டும் ஆளனுப்பி சொன்னான். நான்தான் அவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவன். நான் சொல்வது மட்டும்தான் சரி. இறைவன் தன்னை தினமும் பல முறை வணங்கச் சொல்லியிருக்கிறான். ஏனென்று கேட்காதீர்கள்! அவனுக்கு கருவம் அதிகமாக இருக்கலாம். அதனாலென்ன? சொன்னதை செய்யுங்கள். இல்லையேல் சாவுங்கள்! ஒரு நிமிடம்… பெண்களெல்லாம் ஓரமாக வாருங்கள்… உங்களைப் பார்த்தால் ஆண்களுக்கு ஆசை வருகிறது… எல்லாவற்றையும் மூடுங்கள்…

கூடாரம் கோட்டையாகிவிட்டது. தவறான பதில்களால் பக்கங்கள் நிரம்பி விட்டன. ஆனால் கேள்வி மட்டும் இந்தக் கிழவன்களுக்குப் புரியவே இல்லை.

கதாநாயகர்களுக்கு கேள்வி என்னவென்று எப்போதோ தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக பதிலும் புரிய ஆரம்பித்தது. புதையல் கிடைக்கவும் ஆரம்பித்தது.

-வித்தகன்

அறிவியலுக்கு மொட்டை அடித்தால் அறிவு வளருமா?


மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ விட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் தோல்வி அடைந்ததை அறிந்திருப்பீர்கள். இதனால் அந்நிறுவனத்தின் அறிவியலாளர்கள் சோர்ந்து போயிருக்க கூடும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தோல்வி ஏன் என்று அறிவியல் பூர்வமாக ஆய்ந்து அதை சரி செய்வதுதானே நியாயமானது? இது இந்தியாவிற்கு மட்டுமல்ல எந்த நாட்டு ராக்கெட்டிற்கும் பொருந்தும்.

12.7.2010 ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-15 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதிலுள்ள செயற்கைக் கோள்கள் எல்லாம் பழுதின்றி சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கான 51 மணிநேர கவுண்ட்டவுன் சனிக்கிழமையன்று துவங்கியது. இத்தகைய முக்கியமான தருணத்தில் ராக்கெட் ஏவும் வேலைகளோடு நமது விஞ்ஞானிகள் வேறு ஒரு ‘முக்கியமான’ விவகாரத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதாவது ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட வேண்டுமென்பதற்காக திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபட்டிருக்கின்றனர். இஸ்ரோவின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் உட்பட பல விஞ்ஞானிகள் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்திருக்கின்றனர். ராக்கெட்டின் மாதிரி வடிவம் ஏழுமலையானின் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடும் நடத்தியிருக்கின்றனர்.

இதிலிருந்து என்னவெல்லாம் நடந்திருக்குமென்று யூகிக்க முடிகிறது. ராக்கெட் முன்னாடி தேங்காய் உடைத்து, சூடம் கொளுத்தி, கருப்பு கயிறு கட்டி, திருஷ்டி பொம்மையை பொருத்தி எல்லாம் செய்திருப்பார்கள் போலும். கவுண்ட்டவுன் நேரத்தில் திருப்பதி சென்று காஸ்ட்லி ஆண்டவனை வழிபட்டு ராக்கெட் வெற்றிக்கு இறைஞ்சுகிறார்கள் என்றால் இந்தியாவில் அறிவியல் உருப்படுமா?

சாதாரண வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக ஆண்டவனை நோக்கி பாமார மக்கள் செல்வதற்கும் இந்த மெத்தப் படித்த சான்றோர்களுக்கும் என்ன வேறுபாடு? ஒருவேளை ராக்கெட் கடலில் வீழ்ந்தால் அதற்காக வெங்கடாசலபதியிடம் காப்பீடா பெற முடியும்? இல்லை ராக்கெட் கடலில் விழுந்ததற்கான அறிவியல் காரணங்களை திருப்பதி கோவிந்தாவா அலசி வழி சொல்லப் போகிறார்? ஏனைய்யா இப்படி அறிவியலை இழிவுபடுத்துகிறீர்கள்?

ஒருவேளை இஸ்ரோவின் தலைவர் முஸ்லிமாக இருந்து அவர் அதற்காக மெக்காவோ, நாகூருக்கோ செல்வதை இவர்கள் அனுமதிப்பார்களா? நாட்டின் உயர் ஆய்வு நிறுவனங்களில் கூட இந்துத்தவத்தின் வடிவங்கள் எப்படி உறுதியாக இருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.

திருப்பதியில் போய் மொட்டைபோடுபவர்களுக்கு மீண்டும் முடி வளர்ந்து விடும் என்பதால் பிரச்சினையில்லை. ஆனால் அறிவியலுக்கும் மொட்டை அடித்து விட்டால் அறிவு வளருவது சாத்தியமில்லை.

பில்லியனர்கள் வாழும் நாட்டில் ஏழைகள் இருப்பது ஏன்?


உணவு உத்தரவாதம் – வறுமைக் கோட்டுக்கு மேல் [APL], வறுமைக் கோட்டுக்குக் கீழ் [BPL] மற்றும் இந்தியன் ப்ரீமியர் லீக் [IPL] பித்தலாட்டங்கள் – பி.சாய்நாத்

படம் – http://www.thehindu.com

பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலைக் கட்டுப்பாட்டை விலக்கிய ஆணை வெளியிடப்பட்ட நேரத்தில் அது முரண்நகையான ஒன்றாக இருந்தது. டீசல் மற்றும் மண்ணெண்ணையின் கடுமையான விலை உயர்வை உள்ளடக்கிய, கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும்படியான முடிவு இது. ”அனைவரையும் தழுவிய வளர்ச்சி”யின் [inclusive growth] அவசியம் பற்றி டொரொண்டோவில் உலகத் தலைவர்களுக்கு மன்மோகன் சிங்கே உபதேசித்துக்கொண்டிருந்த வேளையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டதுதான் அதிலுள்ள முரண்நகை. மேலும், அந்த வேளையில்தான் நாமும் “உணவு உத்தரவாதம்” பற்றியும், எந்த அளவுக்கு சிறப்பான முறையில் அதை சட்டபூர்வமானதாக்க முடியும் என்றும் முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தோம். உணவுப் பொருட்களின் விலையேற்றம் 17 சதவீதத்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தபோதும், பொதுப் பணவீக்கம் இரண்டிலக்கத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்த போதும்தான் இந்த முடிவு வெளியிடப்பட்டது. எனில், இந்த வளர்ச்சியில் நாம் யாரைத் ”தழுவிக்கொள்ள” முயல்கிறோம்?

இந்த பெட்ரோலிய விலைக் கட்டுப்பாடு நீக்கம் பற்றிய செய்தி-ஊடகங்களின் எதிர்வினையோ அந்த நடவடிக்கைக்குச் சற்றும் குறைவிலாக் கொடுமையாகவே இருந்தது. கேபினெட் அமைச்சர்களே இந்த முடிவிலிருந்து விலகி நிற்பதாகக் காட்ட முயன்ற வேளையில், பெரும்பாலான பத்திரிகைகளின் தலையங்கங்களோ இதை மாபெரும் வெற்றி விழாக் கொண்டாட்டம் போலக் காட்டி முடைநாற்றத்தைக் கிளப்பின. ”இறுதியில் வெற்றியடா” என எக்காளமிட்டது ஒரு தலைப்புச் செய்தி; ”வரவேற்கத்தக்க துணிகரச் செயல்” என எட்டுக் கட்டையில் செவிப்பறை கிழித்தது மற்றொன்று. அரிதாய் சில விதிவிலக்குகள் தவிர்த்து – திங்களன்று நடத்தப்பட்ட பந்த் பெற்ற பல பத்து லட்சம் மக்களின் ஆதரவுக்கு நேர்மறாக- இந்த வெகுஜன ஊடகங்கள் விரிந்த எதார்த்த உண்மையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்திக் கொண்டன.

மறைந்த முர்ரே கெம்ப்டன் கூறி வந்தது போல, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தலையங்க ஆசிரியர்கள் செய்கின்ற வேலை என்னவென்றால், “போர் ஓய்ந்ததும் குன்று மறைவுகளில் இருந்து வெளிப்பட்டு, இறங்கி வந்து காயம்பட்டுக் கிடப்போரைச் சுட்டுக் கொல்வதே.” செய்தி ஊடகங்கள் இன்று இந்த வரையறுப்பைப் பெருமிதத்துடன் நிறுவி இருக்கின்றன. இந்த மாதத்திலேயே போபால் தொடர்பாக இப்படியும் ஒரு தலையங்கம் வந்தது. போர் ஓயும் வரை கூட இம்முறை அவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் மனித உரிமை அமைப்பினர்” என்று துயர்மிகு போபாலின் வில்லன்களாக அவர்களைச் சித்தரித்தது அந்த தலையங்கம். “போபாலில் ஒரு துணை நிறுவனத்தைத் தொடங்குவது பற்றி தனது பங்குதாரர்களிடையே பெருமையுடன் அறிவிக்கும் முன்னர் உலகின் எந்த ஒரு தொழிற்கழகமும் ஒருமுறைக்கு இருமுறை தயக்கத்துடன் யோசிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறது” என்று தனது உண்மையான துயரத்தை வெளிப்படுத்தி துக்கம் கொண்டாடியது. ”யூனியன் கார்பைட்” என்ற சொல்லே அத் தலையங்கத்தில் ஒரு முறை கூட இடம் பெறவில்லை. சுடுகிறார்கள் .. தப்பிச் செல்லுங்கள் கெம்ப்டன். [Roll over Kempton. The shooting’s on]

பத்திரிகைகளில் அன்றாட முக்கிய செய்திகளுக்கு ஊடாக விலையேற்றத்துக்கு எதிரான தொடக்க நிலை எதிர்ப்புகளும் சற்றே இடம்பிடித்தன. நமது மிகப் பெரிய ஆங்கில தினசரியில் மூன்று, நான்கு பத்திகளும் சில விரற்கடை அகலமும் கொண்ட தாராளமான இடத்தை அச்செய்தி ஆக்கிரமித்தது. மும்பையில் ஒரு மாடல் அழகியின் தற்கொலைச் சாவு செய்திக்கு, ஒரு விளம்பரம் கூட இடம்பெறாத முழுப் பக்கத்தை அதே தினசரி அடுத்தடுத்த இரு நாட்களில் அற்பணித்திருந்தது. சர்வதேச கிரிகெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு நமது உணவு மற்றும் வேளாண் அமைச்சர் தேர்வு செய்யப்பட்டது பற்றிய செய்தி சென்ற வாரம் பெரிதாய்க் கருத்தேதும் கூறப்படாமல் கடந்து சென்றது. தேசத்தின் கவனம் முழுவதும் உணவுப் பொருள் விலையேற்றம் மற்றும் உணவு உத்தரவாதம் பற்றிய விசயத்தில் குவிந்திருந்த அதே நேரத்தில்தான் இதுவும் நிகழ்ந்தது.

திரு சரத் பவார் பிரதமரிடம் தனது அமைச்சக வேலைப் பளுவைக் குறைக்கக் கோருவார் என்று அவரை மேற்கோள் காட்டி எழுதப்பட்டது. (AFP, New Delhi, July 2) “அமைச்சுப் பணியில் எனக்கு உதவுவதற்குக் கூடுதல் நபர்களை நியமிக்க நான் பரிந்துரைப்பேன். நான் மூன்று அமைச்சர்களைக் கேட்டிருந்தேன். ஆனால் அவர்கள் எனக்கு ஒரே ஒருவரை மட்டுமே அளித்திருக்கிறார்கள்… நான் எனது வேலைகளில் சிலவற்றைக் குறைக்கக் கோருவதன் மூலமாக நாம் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்” என செய்தியாளர்களிடையே பவார் கூறினார். எனினும், “அரசாங்கத்தில் எனக்குள்ள பணிகள் பாதிப்படைவதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றும் அவர் நமக்கு உறுதியளிக்கிறார். அப்..பா, நிம்மதியாக இருக்கிறது. உணவு மற்றும் வேளாண் அமைச்சரை உணவு மற்றும் வேளாண் துறையுடன் இணைப்பதையும் தழுவியதாக தனது ’அனைத்தும் தழுவிய வளர்ச்சி’யை விரிவுபடுத்திக்கொள்ள பிரதமருக்கு இதுவே தக்க தருணமாக இருக்கலாம். (அல்லது நாம் அத்துறையுடன் கிரிக்கெட்டையும் இணைத்துவிடலாம்.) ஒரே துறைக்கு நான்கு அமைச்சர்கள் …. இது உண்மையிலேயே அனைவரையும் தழுவிய வளர்ச்சிதான்.

இருப்பினும் எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டை நீக்கிய செயல் ஒன்று விடாமல் எல்லாப் பொருட்களின் மீதும் தனது ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே உணவுப் பொருள் விலையேற்றம் சுருள்கத்தி போல வீசியடிக்கும் அதே நேரத்தில் இதுவும் சேர்ந்துகொள்கிறது. அதை இடைமறித்துப் பேசும் அமைச்சர்கள் மற்றும் ஐ.மு.கூ. வெட்டிப் பேச்சாளர்களின், “ஒருசில மாதங்களின் விலையேற்றம் படிந்தே தீரும்” என்ற தொடர்ந்த வெற்று சவடால்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.

உணவுப் பொருள் உத்தரவாத மசோதா ஒட்டுமொத்தப் புதுப்பித்தலுக்கு உட்படுத்தப்படலாம் என்ற செய்திகள் இப்போது வருகின்றன. அவ்வாறாயின் அது வரவேற்கத் தக்கது என்றே நினைக்கிறேன் – அது எப்படியும் முந்தைய தயாரிப்பு முயற்சிகளின் அளவுக்குப் படுமோசமாக இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக ஒன்றைப் பாருங்கள். அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு [Empowered Group of Ministers] ஃபிப்ரவரி மாதம் கூடியது. ”முன்வைக்கப்பட்ட தேசிய உணவு உத்தரவாத மசோதாவை சட்டமாக்குவது தொடர்பாக விவாதிக்க” அவர்கள் கூடியிருந்தனர். இந்த அமைச்சர்கள் குழு முடிவு செய்த முத்தான முதல் விசயம் இதுதான்: 2.1(a) “உணவு உத்தரவாதம் என்பதன் வரையறுப்பு குறிப்பாக உணவு தானியங்கள் (கோதுமை, அரிசி) பற்றியது என்ற அளவுக்கு வரம்பிடப்பட வேண்டும்; அது ஊட்டச்சத்து உணவு உத்தரவாதம் (nutritional security) என்ற விரிந்த பொருளில் இருந்து துண்டிக்கப்பட வேண்டும்.”

ஊட்டச்சத்து உணவு உத்தரவாதம் என்பதில் இருந்து துண்டிக்கப்பட்ட உணவு உத்தரவாதமா? ஊட்டச்சத்து உணவு உத்தரவாதம் என்பது “விரிவானதொரு விஷயம்” என்பதை அதே சொற்றொடர்களே ஏற்கின்றன என்பதைக் கவனியுங்கள். அவ்வாறு இருக்க அவை இரண்டையும் எதற்காகப் பிரித்துப் பார்க்க வேண்டும்?

கிலோ மூன்று ரூபாய் விலையில் 35 கிலோ அரிசி, அதுவும் மக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும், என்பதுதான் உணவு உத்தரவாதமா? சுகாதாரம், ஆரோக்கியம், சத்துணவு, வாழ்வாதாரம், வேலை, உணவுப் பொருட்களின் விலை இப்படி உணவு உத்தரவாதத்தைத் தீர்மானிக்கும் வேறெந்தக் காரணிகளுமே இல்லையா? இந்த உணவு உத்தரவாதம் தொடர்பான விவாதத்தில் இருந்து எரிபொருள் விலையேற்றத்தையும் கூட நாம் துண்டித்து விடலாமா? அல்லது வேண்டுமென்றே ஒழித்துக்கட்டப்படும் பொது வினியோக முறையையும்; கோதுமை, பருப்பு வகைகள், எண்ணை வகைகள் என எல்லா உணவுப் பொருட்களிலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துகொண்டிருக்கும் முன்பேர வர்த்தகம் தோற்றுவிக்கும் பேரழிவுகளையும் கூட இந்த உணவு உத்தரவாதம் தொடர்பான விவாதத்தில் இருந்து துண்டித்துவிடலாமா?

தானே முன்வைக்கும் உணவு உத்தரவாதம் தொடர்பாக எவ்வளவுக்கு எவ்வளவு செலவைக் குறைக்க முடியும் என்பதற்கான வழியைத் தேடி அலைகிறது அரசு என்பதே உண்மை. பட்டினியை வரையறுப்பது பட்டினி கிடப்போரின் எண்ணிக்கை அல்ல; மாறாக, அரசு அதற்காகச் செலவிட விரும்பும் தொகைதான் அதைத் தீர்மானிக்கிறது. அதன் விளைவுதான் வ.கோ.கீ.யின் ஆகக் குறைந்த எண்ணிக்கையைப் பெருவதற்கான இந்த முடிவிலாத் தேடல். அரசைப் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்ட மூன்று கமிட்டிகளுமே வறுமை பற்றி செய்திருந்த மதிப்பீடுகள் அரசின் மதிப்பீட்டை விடப் பாரதூரமான அளவு அதிகமாய் இருந்தன. ஆளும் மேட்டுக்குடிகளின் உலகக் கண்ணோட்டத்துடன் பெரிதும் ஒத்துப்போன டெண்டுல்கர் கமிட்டி கூட கிரமாப்புற வறுமை 42% அளவுக்கு உயர்ந்திருப்பதாக்க் காட்டியது. (பலவீனமானதும், எளிதில் தகர்ந்துவிடக் கூடியதுமான அடிப்படையில் அமைந்த உண்மை இது. இருப்பினும், இது அரசின் மதிப்பீட்டைவிட அதிகம்)

என்.சி. சக்சேனா தலைமையிலான வ.கோ.கீ வல்லுனர் குழுவின் மதிப்பீட்டின்படி இது 50%. அதே நேரத்தில், முறைசாராத் துறைத் தொழில்களின் தேசிய ஆணையம் தனது அறிக்கையின் முதல் பக்கத்தில் 83 கோடியே 60 லட்சம் இந்திய மக்கள் (நமது மக்கள் தொகையில் 77 சதவீதத்தினர்) ரூபாய் 20 அல்லது அதற்கும் குறைவான தொகையில் ஒருநாள் பொழுதைத் தள்ளுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. இதை ஒத்துக்கொள்ளுவது என்பதன் பொருள் பட்டினிக் கொடுமையைப் போக்க மேலும் சில ஆயிரம் கோடிகளைச் செலவிடுவது என்பதாகும். ஆனால் இந்த அரசின் வரையறுப்போ மிக எளிமையானது. பட்டினி கிடப்பவனுக்கெல்லாம் நம்மால் சோறுபோட முடியாது. எனவே, நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குப் பட்டினிப் பட்டாளத்தை வெட்டிச் சுருக்க வேண்டியதுதான் என்பதே அது.

”காசு இல்லை” என்று கைவிரிக்கும் போக்குதான் அனைத்திலும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். புதியதொரு விமான நிலையம் அமைக்க இந்த நாடு ரூ.10,000 கோடி செலவு செய்கிறது. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த ரூ.40,000 கோடியோ அதற்கும் மேலோ கூட செலவு செய்யப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.60,000 கோடிகளை மகிழ்ச்சியாய் இழக்க முடிகிறது. மத்திய பட்ஜெட்டில் ஆகப்பெரும் பணக்காரர்களுக்கும் பெரும் தொழிற்துறைக்கும் மூன்றே மூன்று செலவினங்களின் கீழ் ரூ.5 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்ய முடிகிறது. ஆனால், பட்டினி கிடப்பவர்களுக்குக் கொடுப்பதற்கு மட்டும் பணம் கஜானாவை விட்டுக் கிளம்ப மறுக்கிறது. பொது வினியோக முறையை அனைவருக்குமானதாக்க அப்படி என்ன செலவாகிவிடும்? எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் கிலோ ரூ.3 விலையில் அரிசி/கோதுமை கிடைக்கச் செய்ய வேண்டுமானால் வரும் பட்ஜெட்டில் உணவு மானியத் தொகையாக ரூ.84,399 கோடியை ஒதுக்க வேண்டியிருக்கும் என மதிப்பிடுகிறார்கள் பர்வீன் ஜா மற்றும் நிலச்சல் ஆச்சார்யா. இந்த ஆண்டு பட்ஜெட்டில் பணக்காரர்களுக்குச் செய்த வரித் தள்ளுபடிகளில் ஆறில் ஒரு பங்குதான் இந்தத் தொகை. (இதற்கு ஆகும் கூடுதல் செலவு ஆண்டுக்கு ரூ.45,000 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லை என்கின்றன பிற மதிப்பீடுகள்.)

உலகப் பட்டினிப் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் 66ம் இடத்தைப் பிடித்துள்ள ஒரு நாட்டில்; குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையில் சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஒரு நாட்டில்; ஜ.நா-வின் மனிதவள முன்னேற்றப் பட்டியலில் பூட்டான், லாவோசுக்கும் கீழாக 134வது இடத்தில் இருக்கும் ஒரு நாட்டில் பட்டினிக் கொடுமையைப் போக்கப் பணம் ஒதுக்க முடியாதென்றால் அதன் விலை – அல்லது விளைவு – என்னவாக இருக்கும்?

உலகப் பெரும் பணக்காரர்களாக, ஃபோப்ஸ் பட்டியலில் 49 பேர் இடம் பிடித்திருப்பதும் இதே நாட்டில் இருந்துதான். (அந்த பெரும் பணக்காரர்களில் பெரும்பாலோர் பல வடிவங்களில் இந்த அரசாங்கத்திடம் இனாம் வாங்குகிறார்கள். இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர்பான இனாம்களைப் பெற்றவர்கள் சிலர்) தனது குடிமகன் பட்டினி கிடக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய ஒரு முயற்சி கூட எடுக்க முடியாது என்றால், அப்படிப்பட்ட அரசு அதிகாரத்தில் இருக்கவும் வேண்டுமா? இந்தியக் குடிமக்கள் அனைவரின் உணவுக்கான உத்தரவாதம் என்பது எங்களது குறிக்கோளுமல்ல, விருப்பமும் அல்ல என்பதையாவது குறைந்தபட்சம் நேர்மையாக வெளிப்படுத்துமா இந்த அரசாங்கம்? தனது பெயருக்கு நேர் எதிரானதைச் சட்டபூர்வமானதாக்கும் ஒரு மசோதாவுக்கு “உணவு உத்தரவாத மசோதா” என்ற போலிப் பெயர் எதற்கு? அனைவரும் பெற முடியாத ஒன்றை ‘உரிமை’ என்ற பெயரால் எவ்வாறு அழைக்க முடியும்?

ஒரு தெரிவிப்பு: வ.கோ.கீ. வல்லுனர் குழுவில் நானும் ஒரு உறுப்பினராய் இருந்தேன். அக்குழுவின் அறிக்கையுடன் இணைக்கப்பட்ட குறிப்பு ஒன்றில், உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் கண்ணியமான வேலை ஆகிய நான்கு துறைகளில் வாய்ப்பு அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும் என விவாதித்து இருக்கிறேன். அரசின் கொள்கையை வழிநடத்தும் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அவ் விவாதம் அமைந்திருக்கிறது. நமது மக்களின் உரிமைகள் அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் அமைந்திருக்கிறதே அன்றி அவர்களின் வாங்கும் சக்தியால் அல்ல. வ.கோ.கீழ் (BPL) ஆகவோ வ.கோ.மேல் (APL) ஆகவோ இருப்பதனால் அல்ல. ( IPL ஆசாமியாக இருப்பதனாலும் அல்ல.) உரிமைகள் அதன் வரையறைப்படி பொதுவானவை, பிரிக்க முடியாதவை.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த உணவு உத்தரவாத மசோதாவில் காணப்படும் அம்சங்கள் நமது வழிகாட்டு நெறிமுறைகளை முன்னெடுத்துச் செல்கின்றனவா? அல்லது பலவீனப்படுத்துகின்றனவா? அரசியல் சட்டப்படியான உரிமைகளைக் கரைத்துக் காணாமல் போகச் செய்து தயாரிக்கப்பட்ட இந்த நீர்த்துப்போன சரக்கை ஒரு முற்போக்கான சட்டம் போல் முன்வைப்பது ஒரு மோசடி வேலை. செயல்படக் கூடிய ஒரே பொது வினியோக முறை என்பது அனைவருக்குமானதாக இருக்கும் ஒன்றே. அனைவருக்கும் பொதுவான முறைமைக்கு சற்றே நெருக்கமாய் செயல்பாட்டு உள்ள – கேரளா, தமிழ்நாடு – மாநிலங்களில் மட்டுமே இந்த பொது வினியோக முறை சிறப்பாய் செயல்பட்டிருக்கிறது.

150 மாவட்டங்களில் “பரீட்சார்த்தமாக” பொது வினியோக முறையின் மூலம் உணவு தானியங்களைப் (அதாவது, பிரதானமாக கோதுமை, அரிசி) பெறும் வாய்ப்பை “அனைவருக்குமானதாக” [universal] செய்து பார்ப்பது என்ற பேச்சு தற்போது அடிபடுகிறது. கருத்தளவில் இது ஒரு படி முன்னேற்றமாகத் தோன்றினாலும் நடைமுறையில் இது தவறு என்பது நிரூபிக்கப்படும். இது மாறுவேடத்தில் வரும் ”இலக்கைச் சென்றடையும்” [targeting] வரம்பிடப்பட்ட செயல்பாடே தவிர வேறல்ல. “யுனிவர்சல்” மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு உணவு தானியங்கள் வெகுவாய்க் கடத்தப்படும்போது இந்த வகை ஏற்பாடு ஆட்டங்காணும். பரீட்சார்த்த நடவடிக்கைகளைத் தவிர்த்து இறுதி இலக்குக்கே நேரடியாய்ச் செல்வது நல்லது. உணவு உத்தரவாதத்தை அனைவருக்குமானதாக ஆக்குங்கள்.
________________________________________________________

– பி. சாய்நாத், நன்றி தி ஹிந்து – 07 Jul 2010
– தமிழாக்கம்: அனாமதேயன்

மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!


இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.

தற்போதைய இந்திய வாழ்க்கையின் ஆழ்மனதில் பதிந்துவிட்ட பெப்சி – கோக்கின் படிமத்திற்கு இணையாக வேறு எதையும் ஒப்பிட இயலாது. கேவலம் இரு குளிர்பான நிறுவனங்களுக்கு அப்படி ஒரு மகிமையா, அது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்.

எனில் அவை வெறும் தாகம் தீர்க்கும் குளிர்பானம் மட்டுமல்ல. எதைக் குடிப்பது – உண்பது – உடுத்துவது – பார்ப்பது – படிப்பது – கருதுவது – ரசிப்பது – நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம். அத்தகைய அமெரிக்க தாகத்தை, ஏக்கத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்துவதே அதன்முதன்மைப் பணி.

கொக்கோ – கோலாவைப் போல அமெரிக்கப் பண்பாட்டினைப் பிரதிநிதித்துவம் செய்யும் பன்னாட்டு நிறுவனம் வேறு எதுவுமில்லை. ஹாலிவுட், வால்ட்-டிஸ்னி, மெக்டோனால்டு, ஃபோர்டு கார், பாப் – ராக்கிசை என பல அமெரிக்க வகை மாதிரிகளில் கோக் மட்டுமே நெடுங்காலமாய் அமெரிக்காவின் தூதுவனாய் உலகெங்கும் செல்வாக்குடன் இடைவிடாமல் சுற்றி வருகிறது. இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கோக் அதற்கான சாதனையை முதலில் தான் அவதரித்த திருத்தலத்திலேயே செய்து காட்டியிருக்கிறது.

ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி எனன்தான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

_____________________________________________

இரண்டு அமெரிக்க சோடாக் கம்பெனிகள் உலகை ஆக்ரமித்த வரலாறு!

1886- ஆம் ஆண்டு, அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் ஜான் ஸ்டித் எனும் மருந்தாளுநர் கோக்கின் சோடா இனிப்பு கரைசலை உருவாக்கினார். அன்று நாளொன்றுக்கு 9 பாட்டில்கள் தலா 2 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோக், 2000ஆம் ஆண்டின் முதல் 4 மாத இலாபமாக மட்டும் 5000 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. மேலும் இன்று தனது சோடாக் கரைசலையும் கோக், கிளாசிக் கோக், காஃபின் இல்லாத கோக், டயட் கோக், செர்ரி கோக், ஃபேண்டா, ஸ்பிரிட், மிஸ்டர் பிப், மெல்லோ யெல்லோ என 25 வகைகளாய் பெருக்கியிருக்கிறது. இன்று அதன் சொத்து மதிப்பு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய்.

1898ஆம் ஆண்டு பெப்சியின் சோடாக் கரைசலை கால்ப் ப்ராதம் என்ற மருந்தாளுநர் உருவாக்கினார். குளிர்பானம், நொறுக்குத் தீனி, உணவகங்கள் என்று பெப்சியின் பேரரசு 150 நாடுகளில் 4,80,000 ஊழியர்களுடன் நடந்து வருகிறது. சொத்துமதிப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய்.

உலக குளிர்பான சந்தையில் 46 சதம் வருவாய் கோக்கிற்கும், 21 சதம் பெப்சிக்கும் போய்ச் சேருகிறது. இப்படி இரண்டு நிறுவனங்ளும் உலகின் தாகம் தீர்க்கும் தேவன்களாக, பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டுதோறும் சுருட்டி வருவது எப்படி சாத்தியமானது? நம்மூரில் தயாரிக்கப்படும் கலர் கோலி சோடாவின் கரைசலை விட பெப்சி – கோக்கின் கரைசல் அப்படி ஒன்றும் உயர்ந்ததல்ல. கார்பன் வாயு, இனிப்பு, வண்ணம், நீர் கொண்டு கலக்கப்படும் இக்கரைசல் தயாரிப்பதற்கு எளிதானதே. அதி உயர் தொழில்நுட்பமோ, ரகசியமோ எதுவும் கிடையாது. அதே சமயம் இந்தக் கோலாக்களில் இருக்கும் மற்ற வேதிப்பொருட்கள், போதை போல அடிமைப்படுத்தும் பொருட்கள் எதுவும் மற்றவர்களுக்குத் தெரியாது. இவற்றை கண்டுபிடிப்பு இரகசியம் என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் வெளியிட மறுக்கின்றன.

ஆனாலும் உலகெங்கும் சாதாரணத் தொழிலாக நடத்தி வந்த இத்தகைய சிறு குளிர்பான உற்பத்தியாளர்களை இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் ஒரு நூற்றாண்டாய் ஒழித்து விட்டன. இந்த இரண்டு கோலாக்களும் ஏதோ சொர்க்கத்தில் தயாரித்து அளிக்கப்படும் அழகான, தரமான அமுது என்ற சித்திரத்தையும் தமது வஞ்சகமான பிரச்சாரத்தால் ஏற்படுத்தி விடட்ன.

________________________________________________

கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு!

இதற்கு நமது இந்திய எடுத்துக்காட்டையே பார்க்கலாம். 77இல் ஜனதா அரசால் கோக் வெளியேற்றப்பட்ட பிறகு குளிர்பானச் சந்தையில் பார்லே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. பார்லேயின் தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்ற பானங்கள் அப்போது பிரபலமாக இருந்தன. 90களின் ஆரம்பத்தில் 60 சதவீத சந்தையைக் கைப்பற்றிய பார்வே நிறுவனம் கேம்பா கோலா, த்ரில், டபுள் கோலா போன்ற போட்டி பானங்களை எளிதில் வென்றது. இவை இந்திய அளவில் விற்கப்பட்ட பானங்கள். இது போக மாநில, வட்டார, உள்ளூர் அளவில் ஏராளமான பானங்கள் இருந்தன.

தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. விருதுநகரில் 1916இல் பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்ட காளிமார்க் 80கள் வரை 30 சதவீத தமிழக சந்தையை வைத்திருந்தது. மேலும் இந்திய அளவில் பழரச பானத்திற்கு கிராக்கி இருந்தது. பார்லேயின் ப்ரூட்டி, பயோமா இன்டஸ்ட்ரியின் ரசனா போன்றவை பழரச சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.

பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது. 1980களில் இருந்தே பெப்சி நிறுவனம் சில இந்திய தரகு முதலாளிகளின் உதவியுடன் இந்தியாவில் நுழைய முயன்று, இறுதியில் 1990ஆம் ஆண்டு வென்றது. 100 சதவீத பங்குகள் வைத்திருக்கவும், உள்நாட்டு பாட்டில் தொழிற்சாலைகளை வாங்கவும், காய்கனி, டப்பா உணவு ஏற்றுமதி செய்யவும்… என ஏராளமான சலுகைகள் இந்திய அரசால் பெப்சிக்கு வழங்கப்பட்டன. பெப்சியும் வந்த வேகத்தில் 20 சதவீத குளிர்பான சந்தையைக் கைப்பற்றியது.

இங்கிருந்து வெளியேற்றப்பட்ட கோக் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ஆம் ஆண்டு மீண்டும் குதித்தது. கோத்ரெஜ், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் கோக்குடன் கூட்டு சேர்ந்தன. சந்திரசாமியின் அரசியல் பினாமியான சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு கோக்கிற்கு அனுமதி வழங்கியது. இப்படியாக அமெரிக்காவின் இரண்டு சோடாக் கம்பெனிகள் வறண்டு போன இந்தியாவைக் குளிப்பாட்டி கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தன.

அன்றைய இந்தியாவின் குளிர்பான சந்தை 1200 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஒரு இந்தியன் ஒராண்டுக்கு குடிக்கும் பாட்டில்கள் 3 மட்டுமே தனிநபர் சராசரியாய் இருந்தது. மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம்தான். இன்றோ வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக மாறிவிட்டது. அன்று விற்பனையான குளிர்பான பாட்டில்கள் 276 கோடி, இன்று 350 கோடி பாட்டில்களாக உயர்ந்து விட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இதை 1200 கோடிப் பாட்டில்களாக உயர்த்தப் போவதாக கோக்கும் – பெப்சியும் மார்தட்டி வருகின்றன.

இன்று குளிர்பானச் சந்தையில் ஏக போகம் வகிக்கும் நிலையை கோக்கும் – பெப்சியும் அடைந்துவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை நேரடியாகவும், சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றுதல், பிரம்மாண்டமான விளம்பர இயக்கம் என மறைமுகமாகவும் பயன்படுத்தி இந்த ஏகபோகம் எட்டப்பட்டது.

கோக் வருகைக்கு முன்பு இங்கே கோலா வகை பானங்களுக்கு வரி அதிகமாகவும், பழரச வகைகளுக்கு குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயத்துக்கு ஆதரவாக அரசால் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பின்னர் காட் ஒப்பந்தப் படி கோலாவுக்கான வரி குறைக்கப்பட்டது. அதன் பின்பே கோலாக்களின் விற்பனை பழரசத்தை விட உயர்ந்தது. இப்படி அரசால் பெற்ற சலுகைகள் ஏராளம்.

அடுத்து 50% குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனத்தை இந்தியா வந்த ஆறே மாதங்களில் கோக் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் 60 பாட்டில் தொழிலதிபர்களும், 2 இலட்சம் சில்லறை விற்பனையாளர்களும், நாடு தழுவிய வலுவான விற்பனை வலைப்பின்னலும் கோக்கிடம் சரணடைந்தன. தம்ஸ் அப்பும், லிம்காவும், கோக்கின் தயாரிப்பு என விற்கப்பட்டன. பார்லே நிறுவனத்தில் அதிபர் ரமேஷ் சவுகானும், கோக்கின் யானை பலத்துடன் போட்டியிட முடியாது எனத் தெரிந்து கொண்டு தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.

மிகப்பெரும் தரகு முதலாளியான பார்லேவுக்கே கதி இதுதான் எனும்போது காளிமார்க் போன்ற சிறுமுதலாளிகள் என்ன செய்வார்கள்? தினத்தந்தியின் உள்ளூர் பதிப்பில் விளம்பரம், காடாத் துணி பேனர் விளம்பரம் என்றிருந்த காளிமார்க், அமெரிக்க சோடாக் கம்பெனிகளின் அதிரடியான வானொளி விளம்பரத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படியாக கோக் – பெப்சி எனும் அமெரிக்க கழுகுகள் ஆளின்றி நாட்டைக் கவ்வ ஆரம்பித்தன.

இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான முதலீடு, மிக விரிவான உற்பத்தி – வலைப் பின்னல், குண்டு வெடிப்பைப் போன்ற விளம்பரங்கள் ஆகிய முப்பெரும் அஸ்திரங்கள் கொண்டு இந்தியாவில் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.

______________________________________________________________

விற்பனை ஜனநாயகமல்ல, விற்பனை சர்வாதிகாரம்!

தங்களது ஆதிக்கத்தை திணிக்க இவர்கள் சாம, தான, பேத, தண்டம் என சகல வழிகளிலும் போர் நடத்தினர். ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், தெண்டுல்கர் ஆகியோர் பல்லிளிக்கும் விளம்பரங்களைப் பார்த்து வாய் பிளக்கும் நெஞ்சங்களுக்கு இந்நிறுவனங்ளின் கோர முகம் தெரியாது.

பிடித்த பொருள் கிடைக்க வில்லையென்றால் கிடைக்கும் பொருளை வாங்குவது நுகர்வோர் வழக்கம். அதன்படி தமது பானங்களை மட்டுமே கடைக்காரர் விற்க வேண்டும் என்பதை இந்நிறுவனங்கள் தமது வர்த்தகக் கொள்கையாக வைத்திருக்கின்றன. கடைக்காரருக்கு குளிர்பதன பெட்டியை மலிவு விலையில் அல்லது இலவசமாய் வழங்குவார்கள். முதல் மிச்சம் என கடைக்காரர் நினைப்பார். ஆனால் கோக் அல்லது பெப்சி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும், அதை விற்றே கடன் அடைக்க வேண்டும், அதனால் அதிகமாக அந்த பானங்களை இருப்பு வைக்க வேண்டும் என்ற சுழலில் தாம் சிக்குவோம் என்பதை அவர் அறியமாட்டார். மேலும் பெயர்ப் பலகைகள், சுவர்க்கடிகாரம், பனியன், தொப்பி என்ற பரிசுப் பொருட்கள், முதல் கொள்முதல் இலவசம் போன்ற சலுகைகளாலும் கடைக்காரர்களை அவர்களை அறியாமலே விலை போக வைத்துவிட்டனர்.

தமது பானங்கள் போகாத புதிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கு தாதா ஏஜெண்டுகளை வைத்திருக்கின்றனர். தாதாக்கள் அப்பகுதியைப் பழக்கிய பிறகு நிறுவனங்களின் ஏஜெண்டுகள் சந்தையைத் தொடருவர். உணவகங்கள், பெரும் அங்காடிகள், திரையரங்குகள் போன்ற பெரிய விற்பனையாளர்களுக்கு பெரும் தொகையைக் கொடுத்து தமது குளிர்பானங்களை மட்டும் விற்க வைக்கின்றனர்.

புது தில்லியில் பி.வி.ஆர் மல்டி பிளக்ஸ் திரையரங்கிற்கு 60 இலட்சமும், பம்பாயின் ஸ்டெர்லிங் திரையரங்கிற்கு 30 இலட்சமும் கொடுத்த பெப்சி சமீபத்தில் மதுரை மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கிற்கும் ஒருபெரும் தொகை கொடுத்து தனது பாட்டில்களை மட்டும் விற்க வைத்திருக்கிறது. கோக், பெப்சி இரண்டும் இதற்காக மட்டும் வருடந்தோறும் 10 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றன.

குளிர்பான விற்பனையில் பாட்டில்கள் சுழற்சி அதாவது பாட்டில் தொழிற்சாலை – கடை – மீண்டும் தொழிற்சாலை என இடையறாமல் பயணம் செய்வது முக்கியம். ஒரு வருடத்தில் ஒருபாட்டில் 10 முறையாவது விற்கப்பட்டால்தான் லாபம். இதில் 30 சதவீதம் பாட்டில்கள் உடைபடும். மீதி சுற்றிவரும். அப்படி சுற்றி வரும் தனது எதிர் நிறுவன பாட்டில்களை முடக்குவதற்கு இந்நிறுவனங்கள் ஏராளமான சதி வேலைகள் செய்கின்றன.

அடுத்து குளிர்பானத் தயாரிப்பு – விற்பனைக்கான அடிப்படை கட்டுமான வசதிகளுக்காக இந்நிறுவனங்கள் பாதியை மட்டும் முதலீடு செய்கின்றன. மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலம் முதலீடு செய்ய வைக்கின்றன. பெப்சி – கோக்கின் ரசாயன கரைசல் கூழ் (எசன்ஸ்) மட்டும் அமெரிக்காவிலிருந்து வரும். கூழை நீரில் கலந்து பாட்டிலில் விற்பதற்கென்றே உலகம் முழுவதும் பிராந்திய அளவில் ஏராளமான பாட்டில் தொழிற்சாலைகளை வைத்திருக்கின்றனர். இந்தியாவில் கோக்கிற்கு 60, பெப்சிக்கு 26 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் கோக் மட்டும் பாதியை சொந்தமாகவும் மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் வைத்திருக்கின்றது.

இத்தகைய பாட்டில் தொழிற்சாலைகளின் அதிபர்கள் கோக் கோருகின்ற அளவு முதலீடு செய்ய வேண்டும். கோக் பானங்களை மட்டும் தயாரிக்க வேண்டும். தேவைப்பட்டால் தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும். இவையெல்லாம் ஒப்பந்த விதிகள். தற்போது இத்தொழிற்சாலைகளை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கி வருகிறது கோக். சிலரை பாதி பங்குகளை தருமாறு கட்டளையிடுகிறது. கோக்கின் மிரட்டலை எதிர்த்து 23 அதிபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். “எங்களை அதிக முதலீடு செய்ய வைத்துவிட்டு, இப்போது ஒப்பந்தத்தை ரத்துசெய், அல்லது விற்றுவிடு” என்று கோக் மிரட்டுவதாக பூனா பாட்டிலிங் தொழிற்சாலை அதிபர் தனது வழக்கில் கூறியிருக்கிறார்.

அதே போன்று மொத்த வியாபாரிகளும் கோக்கினால் அச்சுறுத்தப்பபடுகின்றனர். தமிழக நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேஷ், “கோக்கின் அநீதியான வர்த்தகப்படி எங்களுக்கு மாதம் 2000 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. எதிர்த்துக் கேட்டால் வேறு வணிகர்களை நியமனம் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள்” என்கிறார்.

இது போக பெப்சியும், கோக்கும் தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள். தனது நிர்வாகிகளை கோக் விலைக்கு வாங்குவதாக பெப்சி வழக்குத் தொடுத்திருக்கிறது. இதில் பெப்சிக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் தேசபக்த ஆர்.எஸ்.எஸ் இன் அருண் ஜெட்லி, “2000 கோடி முதலீடு செய்திருக்கும் பெப்சிக்கு இழைக்கப்படும் அநீதி” என்று நீதிமன்றத்தில் உருகினார். “இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பபடி ஒரு ஊழியர் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும் உரிமையை தடை செய்ய முடியாது” என்று கோக் திருப்பியடித்தது. பெப்சியும், கோக்கின் பானங்களைத் தயாரித்து வந்த குஜராத், கோவா பாட்டில் தொழிற்சாலைகளை விலைக்கு வாங்கியிருக்கிறது. இப்படி இருவரும் தங்களது வியாபார மோசடிகளுக்காக இந்தியாவில் மட்டும் 300 கோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள்.

இப்போது குடிநீர் என்றாலே ‘மினரல் வாட்டர்’ என்றாக்கி விட்டார்கள். இந்தியாவின் மினரல் குடிநீர் சந்தை மதிப்பு 1250 கோடி ரூபாயாகும். வருடந்தோறும் 100 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் இத்துறையையும் அமெரிக்க சோடாக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை. கோக் – கின்லே, பெப்சி – அக்வாபினா எனும் குடிநீர் பாட்டில்களை அறிமுகப்படுத்தி அதை மட்டுமே விற்குமாறு தமது விற்பனையாளர்களை மாற்றி வருகின்றனர். தற்போது குடிசைத் தொழில்போல நடந்துவரும் இத்தண்ணீர் வியாபாரமும் அவர்களால் வெகு விரைவில் ஒழிக்கப்படும்.

இதற்கு மேல் பல மாநிலங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கியிருக்கின்றனர். ஆய்வகம், சரக்கு லாரி கட்டும் பனிமணை, பழரச உற்பத்தி, காய் – கனி பண்ணை, நொறுக்குத்தீனி, டப்பா உணவு ஏற்றுமதி என ஏராளமான திட்டங்களையும் வைத்திருக்கின்றன. இந்தியாவின் 15 கோடி நடுத்தவர வர்க்க மக்களைக் கொண்ட வலுவான சந்தையைக் கைப்பற்றுவதை தமது நோக்கமாகக் கொண்டுள்ளன. மாத சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பம் ஒருமாதம் பல நூறு ரூபாய்களை தங்களுக்கு மொய் எழுதவேண்டும் என்பதே அவர்களது இலக்கு.

கனவில் வாழும் நடுத்தர வர்க்கத்தைக் கள் ஊற்றி மதி மயங்க வைக்கும் வித்தைக்காக பல விளம்பர படைப்பாளிகள் பெப்சி – கோக்குக்காக உழைக்கின்றனர். விளம்பர நிறுவனங்களுக்கு மட்டும் இரு நிறுவனங்களும் தலா 50 கோடியை கட்டணமாகக் கொடுக்கின்றன. இதுபோக வானொளி, ஏனைய விளம்பரங்களுக்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகின்றன. ஷாருக்கான், டெண்டுல்கர், ஐஸ்வர்யாராய் போன்ற நிழலுலக நட்சத்திரங்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

“உலக அளவில் கொள்ளையடிக்க உள்ளுர்ககாரனாக வேடம் போடு” என்பது பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டும் செயல் திட்டம். அதற்கேற்ப தங்களது விளம்பரங்களுக்கு அந்தந்த மாநில நடிகர்களை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். கோக் ஆந்திராவில் சிரஞ்சீவியையும், தமிழ்நாட்டில் விஜயையும், பெப்சி தமிழகத்தில் மாதவனையும், தெலுங்கில் கல்யானையும் விளம்பரங்களில் இறக்கியிருக்கின்றன. இனி இன்பத் தமிழிலும் சுந்தரத்தெலுங்கிலும் “என்ஜாய் கொக்கோ கோலா, ஏ தில் மாங்கே மோர் – ஆஹா”வும் கவிதையாய் பொழியும்.

இதுவும் போக டி ஷர்ட், தொப்பி, கிரிக்கெட், சினிமா ஸ்பான்சர், மூடி சேகரிப்பு, ஹாலிவுட் – மல்யுத்த நட்சததிரங்களின் ஸ்டிக்கர்கள், அறிமுக விலை தள்ளுபடி, சென்னையில் இட்லிக்கு கோக் இலவசம், மும்பையில் சப்பாத்திக்கு இலவசம், பெங்களூருவில் பிஸ்ஸா வாங்கினால் பெப்சி கேன் இலவசம் என மேட்டுக்குடியைக் கவர ஏராளமான மினுக்குத் திட்டங்கள்.

____________________________________________________________

இது அமெரிக்காவின் குளிர்பானக் கம்பெனிகள் இந்தியாவில் தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு போர்!

3 ஷிப்ட்களில் 150 தொழிலாளிகள் வேலைபார்த்த காளிமார்க்கின் விருதுநகர் பாட்டில் தொழிற்சாலையில் இன்று இருபது பேர், ஒரு ஷிப்ட் மட்டும் வேலை செய்கின்றனர். தென் மாவட்டங்களில் இன்று காளிமார்க்கை பரிதாபமான ஒரிரு பெட்டிக் கடைகளில் மட்டும் காணலாம். திருச்சியில் வின்சென்ட் குளிர்பான அலுவலகப் பெயர் பலகை பாழடைந்து சவக்களையுடன் காணப்படுகிறது. மதுரை மாப்பிள்ளை விநாயகர் குளிர்பானம் தமது திரையரங்குகளில் கூட விற்க முடியாத அவல நிலையில் இறந்து வருகிறது. காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற பன்னீர் சோடா நிறுவனங்களை இனி தொல்பொருள் ஆராய்ச்சியில்தான் தேட வேண்டும். மோரும், இளநீரும், போஞ்சியும், பானகமும் அருகி வருகின்றன. நீராகாரம் என்பது என்னவென்றே நகர்ப்புற இளைஞர்களுக்குத் தெரியாது.

10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இந்திய குளிர்பான நிறுவனங்களும், இலட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழந்திருக்கின்னர். நமது விவசாய பொருளாதார, தட்ப வெப்ப நிலைக்கு பொருத்தமான மரபு வகை பானங்களை மறந்துவிட்டோம். அமெரிக்காவின் கார்பன் வாயு கலந்த ஆல கால விடத்தை குடிக்க பழக்கப்படுத்தப்படுகிறோம். பெப்சியும், கோக்கும் தமது எசன்ஸை மட்டும் அமெரிக்காவில் இருந்து அனுப்பி, உள்ளூர் பாட்டில் தொழிலதிபர்களை வைத்து நீர் கலந்து, ஏஜெண்டுகளை வைத்து விநியோகித்து, விளம்ரங்களுக்கு நுகர்வோரிடமே பிடுங்கிக் கொண்டு, ஏராளமான சொத்துக்களை வாங்கிக் கொண்டு, டப்பா உணவு ஏற்றுமதி – கோலா விற்பனை இரண்டிலும் சில ஆயிரம் கோடிகளை கொள்ளையடிக்கின்றனர்.

இந்தியா மட்டுமல்ல முழு உலகும் இந்தக் கொள்ளையிலிருந்து தப்பவில்லை. அமெரிக்காவுக்கு கீழே இருக்கும் மெக்சிகோ நம்மைப் போன்ற ஏழை நாடுதான். அங்கேயும் ஆண்டுக்கு ஒருவர் 500 பாட்டில்களை குடிக்கும் அளவுக்கு தனிநபர் நுகர்வை ஏற்றி விட்டார்கள். எங்கெல்லாம் அமெரிக்க இராணுவம் நுழைந்ததோ அங்கெல்லாம் பெப்சியும், கோக்கும் நுழைந்தன. பின்னர் இராணுவம் திரும்பினாலும் கோலாக்கள் திரும்பவில்லை.

ஜப்பான், கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து இங்கெல்லாம் கோலாக்கள் அம்மக்களின் ரத்தத்தில் கலந்துவிட்டன. சிங்கப்பூரில் ஒரு ஓட்டலுக்கு சென்றால் முதலில் குடிநீர் வைக்கமாட்டார்கள். கோக்தான் தருவார்கள். இப்படி தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டு வருகிறது.

தொன்மையான புகழ் பெற்ற நாகரிகங்களெல்லாம் நதிக்கரையில் தோன்றின. மனித குலநாகரிகத்தில் நீரின் பங்கு அத்தகையது. இன்றும் நல்லநீர் கிடைக்காமல், மழை பெய்யாமல், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் ஏராளமான நாடுகள் உள்ளன. வருடா வருடம் ஒரிஸா, ராஜஸ்தான், குஜராத்தில் பிளந்து கிடக்கும் மண்ணுக்கும், மக்களுக்கும் அந்த நீரின் அருமை தெரியும். தண்ணீர் நமது உடலில் இரண்டறக் கலந்தது. நமது பண்பாடு. விவசாயத்தின் உயிர். அத்தகைய நீரை நமது சிந்தனையில் இருந்து அழிக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொடூரம்?

பெப்சி – கோக்கின் ரசாயனக் கலவையில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. வியாபார ரகசியம் என்ற உரிமையால் பாதுகாக்கப்படும் அந்தக் கலவையின் தீங்கை மேற்குலகிலேயே பலர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். பெப்சி – கோக் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘டயட்’ என்ற பானத்தில் (கலோரி இல்லாத இனிப்பு நீர்) உள்ள ‘ஆஸ்பார்ட்டாம்’ என்ற ரசாயனப்பொருள் உடலுக்கு நேரடித் தீங்கை விளைவிக்கக் கூடியது என அமெரிக்காவில் எதிர்ப்பு இயக்கம் கிளம்பியிருக்கிறது. ஆனால் அதிகார வர்க்கத்தைச் சரிகட்டி கோக் தொடர்ந்து அதை விற்கிறது.

பிரான்சில் மக்கள் அருந்தும் பானமும், ஏற்றுமதி செய்யப்படுவதும் ஒயின்தான். பிரெஞ்சு நாடு திராட்சை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு. அந்த விவசாய பொருளாதாரத்தை வைத்து இந்த பானம் அவர்களிடையே மரபு வகை பழக்கமாக உள்ளது. கோக், பெப்சியின் வருகையால் பிரெஞ்சு விவசாயிகள் பாதிக்கப்பட்டு எதிர்த்துப் போராடுகின்றனர்.

இப்படி உலகம் முழுவதும் அந்தந்த மக்களது வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம் மூன்றும் அமெரிக்காவின் ஆக்ரமிப்பு நுகர்வுப் பண்பாட்டால் அழிக்கப்படுகின்றது. பிஸ்ஸா, பர்கர், எம்.டி.வி, ஹாலிவுட், துரித உணவகம், பேரங்காடி, டபிள்யூ. டபிள்யூ. எஃப், நைக், மெக்டோனால்டு போன்றவையே நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. கற்றுக்கொடுக்கின்ற தேவன்களாக மாறிவிட்டன.

உழைப்பாளிகளின் பானமான தேநீரை நடுத்தர – மேட்டுக்குடி இளைஞர்களிடம் கொண்டு செல்ல நெஸ்லேயும் – கோக்கும், பெப்சியும் – இந்துஸ்தான் லீவரும் இணைந்து ஐஸ் டீ, ரெடிமேடு டீ போன்றவைகளைத் தர இருக்கிறார்கள். கோக், பெப்சி இரண்டும் உலகம் முழுவதும், ஏன் கழிப்பறைகளில் கூட கிடைக்க வேண்டும் என்பது வரை போய்விட்டன. சமீபத்தில் போன் செய்தால் கோக் டின் கொட்டும் ‘டயல் எ கோக்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இந்தக் கொள்ளையடிக்கும் உத்திக்கு முடிவு கிடையாது.

இது வெறும் குளிர்பானமல்ல. உங்களை உங்கள் மண்ணிலிருந்து பிடுங்கி எறியும் ஒரு வெடிகுண்டு. பெப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது. இந்த மண்ணையும், மக்களையும் உதறித்தள்ளி அமெரிக்க நாய்களுக்கு அடிமையாக இருப்போம் என்பவர்கள்தான் கோக் குடிக்க முடியும். ஆம். பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்.