நாம் தமிழர் கட்சி ஆவணம் – ஒரு பார்வை


ஏறத்தாழ 120 பக்கங்களைக் கொண்ட தங்கள் கொள்கை, செயல்திட்டம், விதிமுறைகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றை, நாம் தமிழர் கட்சி அண்மையில் வெளியிட்டுள்ளது.

“நாங்கள் அரசியல்வாதிகளல்லர், புரட்சியாளர்கள்” என்ற அட்டைப்பட அறிவிப்பும், “பல அமர்வுகள், ஆன்றோர் அவையினரோடு கலந்தாய்வு செய்ததன் விளைவே இந்த ஆவணம்” என்னும் முன்னுரைக் குறிப்பும், நம்மை ஒருவிதமான அச்சத்தோடுதான் நூலுக்குள் நுழைய வைக்கின்றன; ‘அடேயப்பா, விரைவில் புரட்சி வரப்போகிறது’ என எண்ணத் தூண்டுகின்றன.

அக்கட்சியின் கொள்கை ஆவணம், என் போன்ற திராவிட இயக்க உணர்வாளர்களுக்கு உடன்பாடற்றதாக உள்ளது என்பதை நான் குறையாகக் கூற முடியாது. எல்லோரும் ஒரே கருத்தில் ஒன்றுபட வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. கருத்து வேறுபடவும், வேறுபடும் இடங்களை ஓங்கி ஒலிக்கவும் எல்லோருக்கும் உரிமை உண்டு.

ஆனால், ஆவணம் என்பது ஒரு பொதுக்கட்டுரை போல் அமைந்துவிடக் கூடாது. கட்டுரையின் தன்மை வேறு, ஆவணத்தின் அமைப்பு வேறு. செய்திப் பிழைகள் இல்லாமலும், சொல்லப்படும் செய்திகளுக்கு உரிய சான்றுகளை அடிக்குறிப்புகளாகக் காட்டியும் ஆவணம் தயாரிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. ஆனால் அவ்விரு தேவைகளும் இந்த ஆவணத்தில் அறவே பின்பற்றப்படவில்லை.

இரண்டாவதாக ஆன்றோர் அவையினரோடு பலமுறை அமர்ந்து கலந்தாய்வு செய்து எழுதப்பட்ட ஆவணத்தில் இத்தனை மொழிப் பிழைகள் (ஒற்றுப் பிழை, தொடர்ப் பிழை, ஒருமை பன்மைப் பிழை) இருத்தல் கூடாது. அவற்றைக் கூட அச்சுப் பிழைகள் எனக் கூறி விட்டுவிடலாம். ‘முழுமையான தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க விரும்பும் கட்சி’ என்பதால், மொழிநடை பற்றியும் கூற வேண்டியதாயிற்று.

மூன்றாவதாக, ஆவணத்தின் பல இடங்கள் தன்முரண் (சுயமுரண்) என்னும் நிலையைக் கொண்டுள்ளன.

இவை பற்றிய என் பார்வையை வெளியிடுவதற்கு முன், ஆவணத்தின் உயிர்நாடி எங்குள்ளது என்று பார்த்திட வேண்டும்.

சமூக, அரசியல் தளங்களில் தீர்க்கப்பட வேண்டிய முரண்கள் குறித்து ஆவணம் பேசுகின்றது. முதலில் தீர்க்கப்பட வேண்டிய முரண், இரு பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி, தமிழ்த் தேசிய இனத்திற்கும், இந்திய தேசிய இனத்திற்குமான முரணையும், இரண்டாவது பகுதி தமிழ்த் தேசிய இனத்திற்கும், திராவிட தேசிய இனத்திற்குமான முரணையும் சுட்டி நிற்கின்றன.

இவ்விரு முரண்களே, முதலில் வேரரறுக்கப்பட வேண்டியவை என்று நாம் தமிழர் கட்சி கருதுகின்றது.

ஏழாவது முரண்பாடாக, தீண்டாமை உள்ளிட்ட சாதிய முரண்பாட்டையும், எட்டாவது முரண்பாடாக ஆண் ஆளுமை, பெண்ணடிமை முரண்பாட்டையும் ஆவணம் சுட்டுகிறது. ஆனால், 7, 8 ஆம் முரண்பாடுகளை ஆவணம் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. “7, 8 ஆம் முரண்பாடுகள் மேற்கட்டுமானம் பற்றியதாகக் கருதப்படும் முரண்பாடுகள்” என்று எளிமையாக வரையறுத்து விடுகிறது.

வர்க்க வேறுபாடே அடித்தள முரண்பாடு என்றும், சாதி ஏற்றத்தாழ்வுகள் மேற்கட்டுமானத்தைச் சேர்ந்தவை என்றும் முன்பு உறுதிபடக் கூறிய பொதுவுடைமைக் கட்சிகளே, இன்று தங்கள் கோட்பாட்டினை மறுஆய்வு செய்து வருகின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சியோ, அதனை மிக எளிதாக மேற்கட்டுமானச் சிக்கல் என்று கூறிவிட்டது.

அதுமட்டுமில்லாமல், தங்கள் உரிமைகளுக்காக ஒடுக்கப்பட்ட சாதியினர் வெகுண்டு எழுந்து போராடி, அதனால் தமிழ்ச் சாதிகள் (அதாவது ஒடுக்கும் சாதியும், ஒடுக்கப்படும் சாதியும்) பிளவுபடும் நிலை ஏற்படுவதையும் நாம் தமிழர் கட்சி விரும்பவில்லையாம். “தமிழினம் பிளவுபடும் எந்தப் போக்கையும் கட்சி ஏற்காது” என்று ஆவணம் திட்டவட்டமாகக் கூறுகின்றது.

ஆக, சாதியின் பெயரால் தமிழனே தமிழனை ஒடுக்கினால், அதைப் பெரிதுபடுத்தாமல், அதற்காகத் தமிழினம் பிளவுபடாமல், ‘நாம் தமிழர்’ என்று ஆண்டான் – அடிமை நிலையிலேயே ஒற்றுமையாக இருந்துவிட வேண்டும் என்பதே ஆவணம் மறைமுகமாக எடுத்துரைக்கும் தத்துவம்.

ஊர், சேரி என வாழ்விடங்கள் இரண்டு இருக்கலாம். இறந்தால் புதைக்கச் சுடுகாடுகள் இரண்டு இருக்கலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கக் குவளைகள் இரண்டு இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். அவையெல்லாம் மேற்கட்டுமான முரண்பாடுகள்தாம். தமிழரா, திராவிடரா எது சரி என்பதே முதன்மையான அடித்தள முரண்பாடு. அதைத்தான் முதலில் தீர்க்க வேண்டும் என்கிறது, முழுமையான தமிழ்த் தேசியம் பேசும் கட்சி.

இதிலே இன்னொரு வேடிக்கையும் உள்ளது. “திராவிடம் என்பது கலப்புக் கூட்டு இனத்தை அடையாளப்படுத்துமேயன்றி, தனிப்பட்ட ஒரு தேசிய இனத்தைக் குறிக்காது” என்னும் வரி, ஆவணத்தின் 9வது பக்கத்தில் காணப்படுகின்றது.

9ஆம் பக்கம் – திராவிடம் தனித் தேசிய இனமே இல்லை என்கிறது. 37வது பக்கமோ, தமிழ்த் தேசிய இனத்திற்கும், திராவிட தேசிய இனத்திற்குமிடையில் முரண்பாடு உள்ளதாகக் கூறுகின்றது. இல்லாத தேசிய இனத்தோடு எப்படி முரண்பாடு கொள்ள முடியும் என்னும் ரகசியத்தை ஆவணம் எங்கும் தேடியும் காண முடியவில்லை.

இன்னொரு முதன்மையான முரண்பாடு, இந்தியத் தேசியத்துடனான முரண்பாடு என்கிறது. தமிழ்த் தேசிய இனத்தை அடிமை இனமாக ஆக்கி இந்திய தேசியம் வைத்துள்ளதாகக் கூறுகிறது. அடிமை விலங்கை அறுக்க, நாம் தமிழர் கட்சி தரும் செயல்திட்டம் 101ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

“இந்திய அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகியனவற்றில் உண்மையான நம்பிக்கை கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி வலிமைப்படுத்தக் கட்சி உறுதி ஏற்கிறது” – இதுதான் அடிமைத்தளை அறுக்கும் திட்டம். முழுமையான தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்பதை, இதைவிடக் ‘கூச்ச நாச்சமில்லாமல், இனி எந்தக் கட்சியாலும் வெளியிட்டுவிட முடியாது.

அடுத்து எந்தச் சான்றும் இல்லாமல், பல செய்திகளை ஆவணம் அள்ளித் தெளிக்கிறது.

“அண்ணல் தங்கோ முயற்சியினால் முகிழ்த்த தமிழர் கழகத்தை முறியடித்துத் திராவிடர் கழகத்தை நிறுவினர்” (ப.13)

“இந்து மதத்திற்கு மாற்றாகத் தமிழியத்தை முன்னிறுத்தாமல், திராவிடம் இந்துமதச் சீர்திருத்தம் பேசும்” (பக்.26)

“முழு இறையாண்மையுள்ள நிகர்மைத் தமிழ்த் தேசக் குடியரசைக் குறிக்கோளாகக் கொண்டு, தமிழரசுக் கழகத்தை (ம.பொ.சி.) நிறுவினார்” (பக்.14)

– இப்படி ஏராளமான உண்மைத் திரிபுகள்.

தமிழ்நாடு கோருவதாகத் தொடங்கி, சமஷ்டி ஆட்சிதான் கேட்கிறோம் என்று மாறி, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்புதான் சமஷ்டி கேட்டோம், இப்போது நிலைமை மாறிவிட்டது, பிரிந்து வாழும் உரிமையை வற்புறுத்தவில்லை என்ற நிலைக்குத் தமிழரசுக் கழகம் வந்து சேர்ந்தது. (சான்று – ‘ம.பொ.சி. – எனது போராட்டம்’ – இரண்டாம் பாகம்- பக்.414)

மேலும், “சுதந்திரத் தமிழ்க் குடியரசு தேவையென்று என் ஆயுளில் எங்குமே நான் பேசியது கிடையாது” என்று ‘இந்து’ ஏட்டிற்கு ம.பொ.சி. அளித்த பேட்டியையும் எஸ்.வி.ஆர். தன் நூலில் (‘சுயமரியாதை சமதர்மம்’ – பக்.727) பதிவு செய்துள்ளார்.

இத்தனை உண்மைகளும் ஆவணத்தில் மறைக்கப்பட்டுள்ளன. ம.பொ.சி. தனித் தமிழ்நாடு கேட்டது போலவும், திராவிட இயக்கம் இரண்டகம் செய்துவிட்டது போலவும் புனைந்து எழுதப்பட்டுள்ளது.

உண்மை அல்லாதனவற்றைப் பேசுவது, நாம் தமிழர் மேடைகளிலும் நடந்துள்ளதை நாடு அறியும்.

25.12.2010 அன்று, சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் (http://www.youtube.com/watch?v=BVot5rzq810&feature=youtu.be&t=5m55s) சீமான் ஒரு நிகழ்ச்சியைக் கூறினார். “எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். பெரியாரை சக்கர நாற்காலியில் அழைத்து வருகிறார்களாம். தந்தை பெரியார் மேடையிலேயே இருக்கும்போதே, தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., எனக்குத் தலைவர்கள் இருவர் – ஒருவர் கலைவாணர், இன்னொருவர் அறிஞர் அண்ணா என்று கூறினாராம். பெரியாரைப் பற்றிச் சொல்லவில்லையே என்று கூட்டம் கொந்தளிக்க, அந்த இரு தலைவர்களையும் உருவாக்கிய தலைவரே அய்யா பெரியார்தான்’ என்றாராம். கூட்டம் ஆர்ப்பரித்துக் கைதட்டியதாம்.”

1977 ஆம் ஆண்டு முதலமைச்சரான எம்.ஜி.ஆர். 73 ஆம் ஆண்டின் இறுதியிலேயே இறந்துபோய் விட்ட அய்யா பெரியாரை எப்படிச் சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்திருக்க முடியும்? எவ்வளவு பெரிய வரலாற்றுப் புரட்டு!

இப்படித்தான் ஆவணமும், வரலாற்றைப் பல இடங்களில் புரட்டுகிறது.

பிறகு, மிகப் புத்திசாலித்தனமாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு, மனுவியம், மனுவாளர்கள் போன்ற சொற்களை எல்லாம் பயன்படுத்தி உள்ளனர். கடைசியில் ‘கலைச்சொல் விளக்கம்’ என்னும் உச்சகட்ட நகைச்சுவையும் இடம்பெற்றுள்ளது.

ஆவணத்தின் 8 ஆம் பக்கத்தில், மனுவாளர்கள் என்னும் சொல்லுக்கு அருகில் அடைப்புக்குறிக்குள் ‘ஆரியப் பார்ப்பனர்’ என எழுதப்பட்டுள்ளது. ஆவணம் முழுவதும், மனுவியம் எதிர்க்கப்பட வேண்டும், மனுவாளர்கள் ஆதிக்கம் கூடாது என்றெல்லாம் குறிப்புகள் உள்ளன.

117 ஆம் பக்கம் தொடங்கும் ‘கலைச்சொல் விளக்க’த்திற்குப் போனால், ஆரியன் என்றால் சீரியன், உயர்ந்தவன் என்றும், பார்ப்பான் என்றால் ஆய்வாளன், இளைஞன் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இங்குதான் நமக்குத் தலை சுற்றுகிறது.

மனுவாளர் என்றால் ஆரியப் பார்ப்பனர். ஆரியப் பார்ப்பனர் என்றால் சீரிய ஆய்வாளர் அல்லது உயர்ந்த இளைஞர். சீரிய ஆய்வாளரையும், உயர்ந்த இளைஞரையும் எதிர்க்க வேண்டும் என்று ஆவணம் சொல்கிறது, ஏன்?

இன்னொரு கலைச்சொல் விளக்கம், பிராமணன் என்றால் பேரமணன் என்கிறது.

‘பல அமர்வுகள், ஆன்றோர் அவையினரோடு கலந்தாய்வு செய்து’ இதனைக் கண்டுபிடித்திருப்பார்கள் போலும்! நாம் அறிந்தவரை, அமணர்கள் என்போர் சமணத்தின் ஒரு பிரிவினரே ஆவர். அவர்கள் பேரமணர்கள் ஆகி, பிராமணர்கள் ஆகி விடுவார்கள் போலிருக்கிறது.

சரி போகட்டும், திராவிடக் கட்சிகளைப் பற்றி இன்னொரு கடுமையான விமர்சனம் ஆவணத்தில் உள்ளது. இலவய அரிசி, மின் விசிறி, மின்கலக்கி, மாவாட்டி எனப் பல இலவயங்களை வழங்கி, தமிழர்களிடம் ஒருவிதமான மனநோயை உண்டாக்கித் தமிழர்களைத் ‘துய்ப்புப் பண்புள்ள வெறும் விலங்குகளாகவே’ திராவிடக் கட்சிகள் வைத்துள்ளனவாம். (பக். 26-27)

இல்லாத ஏழை, எளிய மக்களைத் ‘துய்ப்புப் பண்புள்ள வெறும் விலங்குகள்’ என விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சி, சென்ற தேர்தலில், அ.தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் இத்தனை இலவயங்களையும் தருவதாக அறிவித்த பின்னர்தானே, அக்கட்சிக்கு ஆதரவாக வாக்குக் கேட்டது? என்ன காரணம்? தமிழர்கள் வெறும் விலங்குகளாகவே என்றும் வாழவேண்டும் என்பதற்காகவா?

சரி, தேர்தலில் நிற்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன? ஆவணத்தைப் புரட்டுவோம்:

“ஆட்சி இன்பக் காட்சிகளைக் கனவிலும் கருதாது…” (பக்.20)

“கட்சி பதிவு செய்த நாளிலிருந்து, 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் கட்சி போட்டியிடும்” (பக்.102)

இவ்வளவு ‘தெளிவான’ குறிக்கோள்களையும், செயல்திட்டங்களையும் கொண்டுள்ள நாம் தமிழர் கட்சியில் இணைவதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. அதற்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

‘ஆண், பெண், திருநங்கையர் ஆகிய முப்பாலினத்தவரை மட்டும்’ சேர்த்துக் கொள்வார்களாம். (நான்காவது பாலினம் வேறு உள்ளதா?)

இன்சொல் பேசவேண்டுமாம். எந்நேரமும் மக்கள் தொண்டில் ஈடுபட வேண்டுமாம். சுவருக்கு வெள்ளையடிக்க வரக் கூடாதாம். வீட்டையே இடித்து மறுபடியும் கட்டத் துணிய வேண்டுமாம்.

எல்லாம் சரி, உறுப்பினர் நடத்தை விதிகளில் நான்காவதாக ஒன்று இடம்பெற்றுள்ளது. அதைப் படித்தபோது உண்மையிலேயே நெஞ்சம் ஆனந்தக் கூத்தாடியது. கட்சி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று தோன்றியது. இதோ, அந்த நான்காவது விதி,

“(உறுப்பினர்கள் எவரும்) மதுவகைகளையும், வெறியூட்டுப் (போதை) பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது” (பக்.106)

பழைய நட்பு உரிமையில், ‘செந்தமிழன்’ சீமானைப் பார்த்து இப்படிச் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது,

“அடடா, உடம்பு சிலிர்க்குதடா, தம்பி!”

தைப் புத்தாண்டின் மொழிசார் அரசியல் …


பொங்கல் முதல் நாளைப் புத்தாண்டாகத் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு அறிவித்திருப்பது, ஏதோ ஒரு சிறிய மாற்றமன்று. சுயமரியாதை திராவிட இயக்கக் கோட்பாடுகளின் தொடர்ச்சியும், வளர்ச்சியும் அதில் பொதிந்து கிடக்கிறது என்பதை ஆய்வாளர்கள் அறிவர்.

1926 இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கப் பெற்ற வேளையில், மொழி சார்ந்த அரசியலை அது முன் வைக்கவில்லை. கடவுள் மறுப்புக் கொள்கைகூட அன்று வெளிப்படவில்லை. முதன் முதலில் வெளியான ‘குடியரசு’ இதழின் முகப்பில், கோயில் கோபுரம், சிலுவை, பிறை ஆகியன காணப்படுகின்றன. எம்மதமும் சம்மதம் என்னும் நிலை யைத்தான் அது காட்டுகிறது. ஆக, மத மறுப்பு, கடவுள் மறுப்பு, மொழி உரிமை போன்ற கோட்பாடுகள் எவையும் அன்று முகாமையாக இல்லை.

‘சமத்துவம்’ என்னும் ஒற்றைக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கவே, அன்று சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் தோற்றுவித்தார். சமத்துவத்திற்கான வழிமுறைகளில் ஒன்றாகவும், முதன்மையானதாகவும் ‘இடஒதுக்கீடு’ கோரிக்கை முன்வைக்கப் பட்டது. அதனால்தான், இடஒதுக்கீடு ஆணையை ( கம்யூனல் ஜி.ஓ) வெளியிட்ட அமைச்சர் முத்தையா முதலியாரைப் பெரியார் வெகுவாகப் பாராட்டினார். பல்வேறு திருமணங்களைத் தலைமை யேற்று நடத்திய பெரியார், தன் வீட்டுத் திருமணத்தை (திருவாளர்கள் ஈ.வி.கே.சம்பத் சுலோச்சனா திருமணம்) முத்தையா முதலியார் தலைமையில் நடத்தினார்.

காலப்போக்கில், சமத்துவத்திற்குக் குறுக்கே நிற்கும் மிகப்பெரிய தடைகளாக சாதி, மதம், கடவுள், சமற்கிருத ஆதிக்கம், ஆணாதிக்கம் ஆகியனவற்றைப் பெரியார் உணர்ந்தார். கடவுளோடு மதமும், மதத்தோடு சாதியும் பின்னிப் பிணைந்து கிடப்பதை அறிந்த அவர், அடிவேரான கடவுள் நம்பிக்கையை எதிர்க்கத் தொடங்கினார். சாதியம் என்பது இந்துத்துவத்தின் உருவாக்கம் என்பதால், மற்ற எம் மதத்தைக் காட்டிலும் இந்து மதக் கோட்பாடுகளை, வழிமுறைகளை அவர் கடுமையாகச் சாடினார். இந்து மதத்தைத் தாங்கிப் பிடித்த தூண்களில் ஒன்றாக இருந்த சமற்கிருதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டிய தேவை அவருக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் ஏற்பட்டது.

வழக்கறிஞர் கு.ச.ஆனந்தன், “ சமற்கிருத வல்லாண்மை என்பது, ஒரு மொழி ஆதிக்கத்தை மட்டும் கொண்டதன்று. தமிழர் தம் வாழ்வில், குடும்பத்தில், சமூக /tiny_mce/themes/advanced/langs/en.js” type=”text/javascript”> வாழ்வில், வழிபாட்டில், பழமை வழக்கங்களில், கலை இலக்கியத் துறைகளில் புற்றைப் போன்று பரவி, தமிழர் தம் பாண்பாட்டை அறிய இயலாதபடி, நிலையான மாற்றத்தை உருவாக்கி விட்டதொரு சமுதாய வல்லாண்மை; ஏற்றத் தாழ்வை நிலை நிறுத்திவிட்ட சமயக் கட்டமைப்பு ” என்று தன் நூலில் ( ‘இந்தியாவில் தேசிய இனங்களும், தமிழ்த் தேசியமும்’ ) எழுதியிருப்பதை நாம் நினைவு கூரலாம்.

அந்தச் சமற்கிருத வல்லாண்மையில் ஒன்றுதான், நாயக்க மன்னர்களின் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சித்திரைப் புத்தாண்டு என்னும் புது வழக்கம். பழந்தமிழ் மரபில் அப்படி ஒன்று இருந்த மைக்கான எந்தச் சான்றும் இல்லை. மேலும், அந்தப் புத்தாண்டுத் தோற்றத்தின் பின்புலமாகக் கூறப்படும் புராணக் கதையோ,ஆபாசமும், அருவெறுப்பும் நிறைந்ததாக உள்ளது. அந்த 60 ஆண்டுகளின் பெயர் களில் ஒன்று கூடத் தமிழாக இல்லை.இவ்வாறு நம் மொழிக்கும், பண்பாட்டிற்கும் அந்நியமான ஓர் இழிவு, 400 ஆண்டுகளுக்கும் மேலாக நம் மீது சுமத்தப்பட்டிருந்தது. சுயமரியாதை உடைய எவராலும் தாங்கிக் கொள்ள இயலாத, தாங்கிக் கொள்ளக் கூடாத அந்த அவமானத்தைத் தமிழக அரசு இன்று நீக்கியுள்ளது.

இயல்பாகவே, தி.மு.க.வின் தோற்றம், மொழி சார்ந்த அரசியலோடு இணக்கமான தொடர்புடையது. அறிஞர் அண்ணா அரசியலில் காலடி எடுத்து வைத்த நேரம் இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலமாக இருந்தது. அண்ணா அவர்களின் முதல் சொற்பொழிவே (பதிவாகியுள்ள முதல்உரை) இந்தி எதிர்ப்பாகவும், தமிழின் பெருமையைச் சுட்டுவதாகவும் உள்ளது. துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத் தாலுகா மாநாட்டில் அவர் ஆற்றியுள்ள உரையை, 1937 ஆகஸ்ட் 25 ஆம் நாள் ‘விடுதலையில்’ நாம் பார்க்க முடிகிறது. திராவிட நாடு ஏட்டை 1942 மார்ச் 7 அன்று அண்ணா தொடங்கியபோது, அதன் முகப்பில், “ தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ” என்னும் புரட்சிக் கவிஞரின் வரிகளையே அவர் பயன்படுத்தி இருந்தார்.தலைவர் கலைஞர் அவர்களும், தன் 14 ஆம் அகவையில், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராகவே திருவாரூரில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார் என்பதை நாம் அறிவோம்.

எனவே தொடங்கிய இடத்தின் தொடர்ச்சியாகவே இன்றும் தன் பணியைக் கலைஞர் தொடர்கின்றார் என்பதற்கான எடுத்துக்காட்டே, பொங்கலைப் புத்தாண்டாக அவர் அறிவித்துள்ள செய்தியாகும்.

தமிழ் மொழியை, இனத்தை, தமிழர் மரபைப் போற்றுகின்ற ஒவ்வொருவரும், பொங்கலே புத்தாண்டு என்னும் அறிவிப்பை வாழ்த்தி வரவேற்கின்றனர். கலைஞரின் தமிழ்ப் பணியும், தன்மானப் பணியும் தொடர வேண்டுமென வணங்கி மகிழ்கின்றனர்.

சோ’வின் குடுமி (?) சும்மா ஆடுகிறது …


ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் ‘துக்ளக்’ இதழின் ஆண்டுவிழா இந்த ஆண்டும் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்குச் சென்று வந்த நண்பர்கள், அ.தி.மு.க. பொதுக் கூட்டத்திற்குப் போய்வந்தது போல் இருந்ததாகக் கூறினார்கள்.

முதலில் வாசகர்கள் சார்பில் சிலர் பேசியுள்ளனர். பிறகு, எஸ்.குருமூர்த்தி, பழ.கருப்பையா, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் ஆகியோர் உரையாற்ற, இறுதியில் சோ பேசியிருக்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளாக நேர்மை, நீதி காக்க வெளிவந்து கொண்டுள்ள பத்திரிகை துக்ளக்தான் என்று பழ.கருப்பையா பாராட்டியிருக்கிறார். அவர் எப்போதும் நேர்மை,நியாயம் பற்றி மிகுதியும் கவலைப்படுகின்றவர். அதனால்தான், ஜெயலலிதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். காந்தியவாதி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அவர், காந்தியாருக்குப் பிறகு கண்டெடுத்துள்ள மகாத்மா ஜெயலலிதாதான்.

இப்போது மட்டுமில்லை, தொடக்கத்திலிருந்தே தி.மு.க.ஆட்சி, ஒரு அராஜக ஆட்சிதான் என்பது அவர் கருத்து. ஆனால் நடுவில் கொஞ்சகாலம் அவர் தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தார் என்பது இப்போது நம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. எஸ்.குருமூர்த்தி, சோ மாதிரியே இன்னொரு ‘யோக்கியர்’. முருகன் இப்போது சரத்குமார் கட்சியில் இருக்கிறார். (அது சரி, சரத்குமார் கட்சி இப்போது எங்கே இருக்கிறது?).

இறுதியில் பேசியுள்ள சோ, எப்படியாவது வரும் தேர்தலில், தி.மு.க வைத் தோற்கடித்து விட வேண்டும் என்பது குறித்தே கவனம் செலுத்தியுள்ளார். தேர்தலில் யாரும் வாக்களார்களுக்குப் பணம் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தால், அ.தி.மு.க.தான் வெற்றிபெறும் என்று ஓர் அரிய கண்டுபிடிப்பையும் வெளியிட்டுள்ளார்.

தி.மு.க.வின் மீதும் கலைஞரின் மீதும் இவர்களுக்கெல்லாம் என்ன கோபம்? ஏன் இவர்கள் இப்படி எரிந்து விழுகிறார்கள்? பத்திரிகை சுதந்திரத்தில் தி.மு.க. அரசு குறுக்கிட்டதா அல்லது குறிப்பாகத் துக்ளக் இதழுக்கு ஏதேனும் இடையூறு செய்கிறதா என்றெல்லாம் எண்ணிப் பார்த்தால் ஒரு விடையும் கிடைக்கவில்லை.

காலகாலமாக, சோ, சுப்பிரமணிய சாமி போன்ற பார்ப்பனர்களுக்கும், சில பார்ப்பன அடிமைகளுக்கும் தி.மு.க. மீது, குறிப்பாகக் கலைஞர் மீது இருந்துவரும் பகையே இதற்கான காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஜெயலலிதா தன் ஆட்சியில் எவ்வளவோ தீமைகள் புரிந்தார். சமூகத்தின் சகல தரப்பினர் மீதும் ஒடுக்குமுறைகளை ஏவிவிட்டார். எல்லாவற்றையும் தாண்டி, பார்ப்பனர்கள் ‘லோக குரு’ என்று சொல்லித் தலையில் வைத்து ஆடும் சங்கராச்சாரியையே கைது செய்தார். அத்தோடு நிற்காமல், அவர் செய்த பாலியல் குற்றங்களையயல்லாம் அம்பலப்படுத்தி, அவரைப் புழுதியில் போட்டுப் புரட்டி எடுத்த பின்னும், அவர்கள் ஜெயலலிதாவைத்தான் ஆதரித்தனர்.

அதற்குப் பெயர்தான் ‘இனப்பாசம்’ என்பது.

ராஜாஜிக்குப் பிறகு, அவர்களுக்குக் கிடைத்த ஒரே சொத்து அந்த அம்மையார்தான். அவரும், அவர் கட்சியும் இப்போது கலகலத்துப் போயிருப்பது கண்டு, கலங்கிப் போயிருக்கிறார் சோ.அதனால்தான் தன் நடுநிலை வேடத்தை எல்லாம் கூடக் கலைத்துவிட்டு, நேரடியாகவே வீதிக்கு வந்து, அ.தி.மு.வுக்கு ஆதரவு கேட்டுள்ளார்.

தி.மு.க.வை விடக் கடுமையாகப் பார்ப்பனர்களைச் சாடும் திராவிடர் கழகம் போன்ற பல அமைப்புகள் இங்கே உள்ளன. இன்னும் சொன்னால், தி.மு.க.வில் பார்ப்பனர்களைச் சாடிப் பேசுகின்றவர்கள் மிகக் மிகக் குறைவுதான். இருப்பினும், கலைஞர் மீது அவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் என்றால், அவர் அதிகாரத்தில் உள்ளார் என்பதுதான்.

இன்றைக்குத் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மக்கள் தலைவராகவும், ஐந்தாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளவராகவும் உள்ள கலைஞர், தான் பெரியாரின் பிள்ளைதான் என்பதை அடிக்கடி வெளிப் படுத்துகின்றார். மேடைகளில் பகுத்தறிவுக் கருத்துகளையும், பார்ப்பன எதிர்ப்புச் செய்திகளையும் வெளிப்படுத்துகின்றார். திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைத் தன் பக்கத்திலேயே உட்கார வைத்துக் கொள்கின்றார்.

பொறுக்குமா அவாளுக்கு? அதுதான் பொங்கி எழுகின்றார்கள். எப்படியாவது இந்த மனிதரை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றிவிட முடியாதா என்று துடியாய்த் துடிக்கிறார்கள். ஆனாலும் பாவம் என்ன செய்வது? என்றைக்கும் இல்லாத அளவு, இன்றைக்கு அவருடைய செல்வாக்கு கூடியுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் அவர் அறிவித்த திட்டங்களைத் தாண்டி, இன்று அவர் அறிவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு திட்டமும், அவருடைய புகழையும், ஆட்சியின் செல்வாக்கையும் உயர்த்திக் கொண்டுள்ளன.

இந்தியாவிலேயே, மகளிர் சுயநிதிக் குழுக்களின் மூலம் கூடுதல் பயன்பெற்றிருக்கும் மாநிலம் தமிழ்நாடாகத்தான் உள்ளது. அதனால்தான் இப்போதெல்லாம் தேர்தல்களில் பெண்கள் கூடுதலாக வாக்களித்தால், தி.மு.க.வின் வெற்றி உறுதி என்றாகிறது. கலைஞர் உயிர்க் காப்பீட்டுத் திட்டம், கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்குப் பேருதவி செய்யும் திட்டமாக உள்ளது. ஆந்திர மாநிலத்தில் தோல்வியடைந்த அத்திட்டம், தமிழ்நாட்டில் மிகப் பெரும் வெற்றி அடைந்துள்ளது.

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி மிகப் பெரும் அளவில் எழுந்து கொண்டிருக்கும் எட்டு மாடி நூலகக் கட்டிடமும், புதிய சட்டமன்ற வளாகமும் அவர் பெயரை வரலாற்றில் நிலையாகப் பதிக்கவுள்ளன. கூரை வீடுகளே இல்லாத நிலையை உருவாக்கும் ‘அனைவருக்கும் வீடு’ திட்டமும் அரிய பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சோவும், அவரைச் சுற்றியுள்ள கும்பலும் எழுப்பும் இரைச்சல் எவர் காதிலும் விழப்போவதில்லை. எனினும் ஒன்றைத் தமிழின உணர்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பார்ப்பனர்களைப் பார்த்தாவது நாம் பாடம் படிக்க வேண்டும். அவர்களின் ஆசைக்கு நாம் என்றும் துணைபோய்விடக் கூடாது என்ற எண்ணம் நம் நெஞ்சில் உறுதிப்பட வேண்டும்.

சொல்லுங்கள் கமல் யார் நீங்கள்?


ஒரு முறைக்கு இரண்டு முறை, ஒரு பக்கத்திற்கு இரண்டு பக்கம் விசாரித்து மரண தண்டனை கூடாது என்று சொன்னது ‘விருமாண்டி’. விசாரணை, நீதிமன்றம், மனித உரிமைகள் எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிந்து விட்டு, தனக்குத் தீவிரவாதி என்று படுகின்றவர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்று சொல்கிறது ‘உன்னைப் போல் ஒருவன்’. இரண்டும் கமல்ஹாசனின் படங்கள்.

இரண்டு மணிநேரத்திற்கும் சற்றுக் குறைவாக எடுக்கப்பட்டுள்ள படம் உன்னைப் போல் ஒருவன்.தொடக்கம் முதல் இறுதிவரை, ஒரு குதிரைப் பந்தயத்திற்குள்ள விறுவிறுப்பு.மிக உயர்ந்த தொழில் நுட்ப நேர்த்தி.வழக்கமான காதல் பாடல்கள், ஆபாசக்காட்சிகள், இரட்டைப் பொருள் உரையாடல்கள் எதுவும் படத்தில் இல்லை. தசாவதாரத்தில் காட்சிக்குக் காட்சி வெவ்வேறு தோற்றங்களிலும் ஒப்பனைகளிலும் வெளிப்பட்ட கமல்ஹாசன், இந்தப் படத்தில், முதல் காட்சியில் இருந்து கடைசி வரையில் ஒரே உடை, ஒரே தோற்றம், எந்த மாற்றமும் இல்லை. மொட்டை மாடியில் அமர்ந்து தனியாகப் பேசிக் கொண்டிருக்கிற ஒரு பாத்திரம். தன்னைக் காட்டிலும், உடன் நடிக்கும் மோகன்லாலுக்கு கூடுதல் முக்கியத்துவம். தேர்ந்த கலைஞர்களின் திறன்மிக்க நடிப்பு. இதமான இசை.

இத்தனை சிறப்புகளும் கொண்ட அப்படத்தைப் பார்த்த பிறகு, ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சிதான் நமக்கு மிஞ்சியிருக்க வேண்டும். ஆனால், ஒரு பெரிய மன உளைச்சலையே என் போன்றவர்களிடம் அந்தப் படம் ஏற்படுத்தி உள்ளது.

தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்று திரும்பத் திரும்ப ‘சங்பரிவாரங்கள்’ உருவாக்கியுள்ள கருத்து மாயையை இப்படம் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்க முயற்சித்திருக்கிறது. படத்தில் காட்டப்படும் நான்கு தீவிரவாதிகளில் மூவர் இஸ்லாமியர்கள், ஒரே ஒருவர் இந்து. அவரும்கூட பணத்துக்காக வெடிமருந்து வாங்கி விற்கும் ஒரு தவறான வணிகர் அவ்வளவுதான். தீவிரவாதிகள் எல்லோரும் கொல்லப்பட்டு படம் முடியும் வேளையில், திரையில் ‘சம்பவாமி யுகே யுகே’ பாடப்படுகிறது. கொல்லப்பட்டது இஸ்லாமியர்கள், கொன்றவர் இந்துக் கடவுள் போல இருக்கிறது. (சுட்டுக் கொல்லும் இன்பெக்டர் பெயர் ஒர் இஸ்லாமியப் பெயராக இருப்பது, மிகப் புத்திசாலித்தனமான தற்காப்பு)

கணிப்பொறித் துறையில் வல்லுனர் ஒருவர் வேண்டும் என்று கேட்கும் காவல்துறை ஆணையர் எப்படிக் கேட்கிறார் தெரியுமா? ‘Call one expert from IIT’ ( ஐஐடியில் இருந்து ஒரு வல்லுனரைக் கூப்பிடுங்கள்). ஐஐடி-யைத் தவிர வேறு எங்கும் வல்லுனர்களே கிடையாதா? அதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன ? அங்கிருந்து வரும் ஒரு மகா மேதை படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். ஆனாலும் அவர்தான் மகா மேதை. அசல் அம்மாஞ்சியாக அப்படி ஒரு ஒப்பனை. பார்த்த உடனேயே ‘அவாள்’ என்று தெரியும் தோற்றம்.

காவல் துறை ஆணையர், உண்மையில் மட்டுமல்லாமல், படத்திலும் ஒரு மலையாளி. மகா கெட்டிக்காரர். தமிழக அரசின் தலைமைச் செயலாளரையே எள்ளி நகையாடும் அளவுக்கு கம்பீரமானவர்.

முதலமைச்சரின் கோபாலபுரம் வீடு காட்டப்படுகிறது. அவர் குரலைப் போலவே தொலைபேசியில் குரல் ஒலிக்கிறது. படத்தில் வரும் முதலமைச்சர் கலைஞர்தான் என்பது மறைமுகமாக நிறுவப்படுகிறது. முதலமைச்சரோ மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், எதிர்க் கட்சிகளுக்கு இந்தச் செய்தி தெரிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகளைக் கவனமாக வலியுறுத்துகிறார். அப்போது அந்தக் காவல் துறை அதிகாரியான மலையாளியின் முகத்தில் ஒளிவிடும் ஓர் அலட்சியப் புன்னகை தமிழகத்தையே கேலி செய்கிறது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கு, அல்காய்தா போன்ற இயக்கங்களின் பெயர்கள் வெளிப்படையாகவே பேசப்படுகின்றன.

இப்போது கமலிடம் நமக்கு மூன்று கேள்விகள்.

1.பஜ்ரங்தள் போன்ற, வன்முறையை வழியாகக் கொண்ட, இந்து பயங்கரவாத இயக்கங்களை மையமாக வைத்துப் படம் எடுக்கும் எண்ணம், விருப்பம், துணிச்சல் உங்களுக்கு உண்டா?

2.தனிமனிதர்கள்/குழுக்கள் கைகளில் ஆயுதங்களை எடுப்பது மட்டும்தான் தீவிரவாதமா?பயங்கரவாதிகளை உருவாக்குகிற அரச பயங்கரவாதம் பற்றியும் பேச உங்கள் பேனாவும் கேமராவும் முன்வருமா?

3.படத்தில் வரும் மோகன்லால் இரண்டு மூன்று முறை தொலைபேசி மூலம் உங்களிடம் கேட்கிறாரே, அந்தக் கேள்வியை மீணடும் ஒருமுறை உங்களைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது. யார் நீங்கள்? பெரியாரின் பிள்ளையா? பெரியவாளின் சிஷ்யரா?

பீகார் சிறை உடைப்பு: ஆதிக்க சாதிகளுக்கு எதிரான போர்


சென்ற மாதம் பீகாரில் இருபெரும் நிகழ்வுகள் நடைபெற்றன. ஒன்று, பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல். இன்னொன்று, ஜெகநாபாத் மாவட்டத் தலைமைச் சிறைக்கூடத் தகர்ப்பு. அரசையும், ஆட்சி அதிகாரத்தையும் யார் மேற்கொள்வது என்பதைத் தேர்தல் முடிவு செய்தது. அரசும் ஆட்சி அதிகாரமும் எவரிடம் இருந்தாலும், அவை பீகாரில் செயலற்றே கிடக்கின்றன என்பதைச் சிறைத் தகர்ப்பு வெளிப்படுத்தியது.

இந்துத்வ எதிர்ப்பாளரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவருமான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. ராம் விலாஸ் பாஸ்வானின் கட்சியும் பெரும் தோல்வியைத் தழுவி உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் உடைந்து, எதிரிக்கு இடம் விட்டிருக்கிறார்கள் என்னும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதைத்தாண்டி வேறு காரணங்களும் உள்ளன.

அரசியலுக்குத் தொடர்பே இல்லாமலிருந்த ராப்ரிதேவியை முதல்வராக்கியதும், வன்முறை ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவர இடம் கொடுத்ததும் லாலுவின் தேர்தல் தோல்விக்கு வழிவகுத்துள்ளன. எனினும், பீகாரில் இன்று நிலவும் வன்முறை, இலஞ்சம், ஊழல் போன்ற சூழல்களுக்கு, லாலுவையோ, அரசியல்வாதிகள் சிலரையோ பொறுப்பாக்க முடியாது. அங்கு நிலவிவரும் மிக மோசமான சாதி ஆதிக்கமே அதற்கான அடித்தளம்.

சிறை தகர்க்கப்பட்ட இன்றைய நிகழ்வை வன்முறையின் அரங்கேற்றம் என்று வசைபாடும் பத்திரிகைகள் அதற்கான வேர்கள் எங்கே இருக்கின்றன என்பதை கவனிக்கத் தவறிவிடுகின்றன, அல்லது கவனிக்க மறுக்கின்றன.

நெடுங்காலமாகவே மேட்டுக்குடியினர் அங்கு வன்முறைக் கூலிப்படைகளை வைத்து நடத்தி வருகின்றனர். இராசபுத்திரர்கள், பூமிகார்கள், காயஸ்தர்கள் முதலான ஆதிக்க சாதியினர் ரண்வீர்சேனா, பீஷ்மர் சேனா, சன்லைட் சேனா போன்ற பல்வேறு கூலிப்படைகளின் மூலம், ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் மீது வெறியாட்டத்தை ஏவிவிட்டபடி உள்ளனர். அதன் விளைவாகவே நக்சல்பாரிகள் எனும் பெயரில், ஆயுதம் தாங்கிய மக்கள் படை அங்கு உருவாகியுள்ளது.

மாவோயிய பொதுஉடைமை மையம் (எம்சிசி), மக்கள் யுத்தம் ஆகிய இரு குழுவினர் இணைந்தே செகநாபாத் சிறைத்தகர்ப்பை நிகழ்த்தி உள்ளனர். ஒலிபெருக்கி மூலம், வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மக்களுக்கு வேண்டுகோள் வைத்துவிட்டு, நின்று நிதானமாகத் தங்கள் பணியை அவர்கள் முடித்துள்ளனர். ஏறத்தாழ 2 மணி நேரம், சிறை மட்டுமல்லாமல் அந்நகரமே அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்திருக்கிறது. சிறையிலிருந்த, அவர்களின் இயக்கத்தைச் சார்ந்த 341 பேரை விடுவித்ததோடு, ரண்வீர் சேனையைச் சேர்ந்த 20 பேரை அவர்கள் சிறைப்பிடித்தும் சென்றுள்ளனர். சிறைக்காவலர்கள் இருவரும், ரண்வீர் சேனையின் தலைவரும் அந்நிகழ்வில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நிலவுடைமையாளர்கள், ஆதிக்க சக்தியினர் கூலிப்படை வைத்துக் கொள்ளலாம் என்றால், ஒடுக்கப்பட்ட மக்கள் ஏன் ஆயுதப்படை வைத்துக் கொள்ளக் கூடாது என்னும் வினா பீகாரில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

சாதியும், வர்க்கமும் ஒன்றோடொன்று ஊடாடியும், பின்னிப் பிணைந்துமே உள்ளன என்பதற்குப் பீகார் ஒரு சரியான எடுத்துக்காட்டாக உள்ளது. எனவே அங்கு நடந்தது வெறும் சிறை உடைப்பு மட்டுமன்று, ஆதிக்க சாதிக்கும், மேல் வர்க்கத்திற்கும் எதிரான போராட்டம் என்பதையும் நாம் உணர வேண்டும்

இலண்டனில் – அயோத்தியில் பயங்கரவாதத்திற்கு எதிரான பயங்கரவாதம்


சில நாள்களுக்கு முன்பு, வெடிகுண்டுகளால் இலண்டன் நகரம் அதிர்ந்திருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் உயிர்ப்பலி ஆகியுள்ளனர். ஜி8 வல்லரசு நாடுகளின் தலைவர்களும், இந்தியத் தலைமை அமைச்சர் உள்ளிட்ட பிற நாட்டுத் தலைவர்களும் இலண்டனில் கூடியிருந்த அந்த நாளில் குண்டு வெடித்திருக்கிறது என்பதும் இங்கு நினைவில் கொள்ளப்படவேண்டியதாக உள்ளது.

இது ஒரு மோசமான பயங்கரவாதம் தான். மறுப்பதற்கில்லை. அதேவேளை ஈராக்கின் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் சென்ற ஆண்டு தொடுத்த அந்தப் போரும் பயங்கரவாதம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே பயங்கரவாதத்திற்கு எதிரான இன்னொரு பயங்கரவாதம் இப்போது அரங்கேறி உள்ளது. இதைப்போன்றே இன்னொரு நிகழ்வும் இந்தியாவில் நடந்துள்ளது.

13 ஆண்டுகளுக்கு முன்னால் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இந்து மத வெறியர்கள் இடித்துத் தள்ளினர். இடிந்து போனது இந்தியாவின் அமைதியும், மதச் சார்பின்மையும். அன்றிலிருந்தே எதிர் வினைகளும் தொடங்கிவிட்டன. மும்பையில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் சரம் சரமாய் இடிந்து விழுந்தன. கோவையிலும் குண்டுகள் வெடித்தன. மதக் கலவரங்கள் ஓய்ந்தபாடில்லை. ஒரிசாவில் கிறித்துவப் பாதிரியாரும், அவருடைய சின்னஞ்சிறு மகன்கள் இருவரும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். குசராத்தில் கோத்ரா தொடர்வண்டி எரிப்பு நிகழ்வுகளும், பெஸ்ட் பேக்கரி கொடூரமும் இன்னும் நம் நெஞ்சில் நிழலாடுகின்றன.

இப்போது மீண்டும் அமைதியின்மை தலை தூக்குகிறது. சூன் முதல் வாரத்தில் அயோத்தில் இருக்கும் இராமர் கோயிலைத் தகர்க்க முயன்ற சிலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதை அரசியலாக்கிக்கொள்ளும் அவசரத்தில் பாரதிய சனதா கட்சி, தன் படை பரிவாரங்களை களத்தில் இறக்கி விட்டுள்ளது. ஜின்னா புகழ் அத்வானி, இழந்த தன் முகத்தை மீட்டுக்கொள்வதற்கு இதுவே தக்க தருணம் எனக்கருதி களத்தில் இறங்கி உள்ளார்.

இராமர் கோயிலுக்கு அருகே 15 மீட்டர் தொலைவு வரை நெருங்குவதற்குத் தீவிரவாதிகள் எப்படி அனுமதிக்கப்பட்டனர் என்று சட்டம் பேசுகிறார் மதன்லால் குரானா. பாபர் மசூதியை நெருங்குவதற்கும், தகர்ப்பதற்கும், தரை மட்டம் ஆக்குவதற்கும் கரசேவகர்களை எப்படி அரசு அனுமதித்தது என்று இதுவரை அவர்கள் யாரும் கேட்டதில்லை. பல்லுக்குப் பல், பழிக்குப் பழி, குருதிக்குக் குருதி என்பதுதானே மத அடிப்படைவாதிகள் வகுத்து வைத்திருக்கும் சட்டம். அந்த அடிப்படையில்தான் இன்றும் கலவரங்கள் தொடர்கின்றன.

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் யார், எவர் என்னும் விவரங்கள் முழுமையாக வெளிவருவதற்கு முன்பே, அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று அவசரமாக முடிவு சொல்லப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் உள்ளூர் வழிகாட்டி என்று அடுத்தநாள் செய்தி வருகிறது. எனவே கண்டவரையும் சுட்டுத் தள்ளி விட்டு, சுடப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்வது பெருமை தராது.

போராட்டம், ஆர்ப்பாட்டம், கடை அடைப்பு, கலவரம் போன்ற செயல்களில் ஈடுபட நேரம் பார்த்திருக்கும் பாரதிய சனதா கட்சி, இப்போது அந்த நேரம் வந்து விட்டதாகக் கருதுகிறது. வெறிகொள்ளும் பேச்சுகளை அக்கட்சியின் தலைவர்கள் பேசி வருகின்றனர். சுட்டுக்கொன்ற சிப்பாய்களுக்கு குசராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பத்து இலட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாய் அறிவிக்கிறார். ஆனால் அவரது தலைவர் அத்வானியோ உ.பி. முதலமைச்சர் முலாயம்சிங் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்கிறார். மோடி பாராட்டுகிறார். அத்வானி பழிக்கிறார். முரண்பாடே உன்பெயர் இந்துத்வாவா? அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இன்னொரு பயங்கரவாதம் பயன்படாது என்பதனை எல்லா மத அடிப்படைவாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

– சூலை 16, 2005

தமிழ் பேசச் சொல்வது வன்முறையாம்! பா.ச.க. சொல்கிறது


இல.கணேசனை ஆசிரியராகக் கொண்டு, சென்னையில் உள்ள பாரதிய சனதாக் கட்சி அலுவலகமான கமலாலயத்திலிருந்து வெளிவரும் மாதமிரு முறை ஏடு ‘ஒரே நாடு’. இவ்விதழின், பார்த்திப வருடம் புத்தாண்டுச் சிறப்பிதழில், ‘தக்கது மட்டுமே நிலைத்து நிற்கும்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைச் சாடுவதே கட்டுரையின் சாரம். ‘உலகமயமாதல் எங்கும் பரவிவரும் வேளையில், கடிகாரத்தைப் பின்னோக்கித் திருப்ப முற்படுபவர்களை அடையாளம் கண்டு கொண்டு, அவர்களது முயற்சிகளை முறியடிக்க வேண்டும்’ என்கிறது கட்டுரை. உலகமயமாகி வரும் வேளையில், தமிழ் மொழியைக் காத்தல், காலத்தைப் பின்னோக்கித் திருப்புதல் என்று கூறும் பா.ச.க.வினர், உலகமயமாதலில் கலக்காமல், ஏன் இந்துத்வாவை மட்டும் ஏந்திப் பிடிக்கின்றனர் என்பது விளங்கவில்லை.

உலக மயமாதல் பற்றி நமக்குக் கடுமையான கருத்துகள் உள்ளன. எனினும், இன்றைய உலகம் அறிவியல் மேம்பாட்டினால் மிக நெருங்கி வருகின்றது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவர்களோ, சனநாயகத் தன்மையும், அறிவியல் போக்குமற்ற காட்டு விலங்காண்டிக் காலத்திற்கல்லவா நம்மை இந்துத்வா முலம் அழைத்துச் செல்ல முயல்கின்றனர். இவர்களா உலகமயமாதல் பற்றியும், அறிவியல் முன்னேற்றம் பற்றியும் பேசுவது?

“குறிப்பிட்ட வார்த்தையையே பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது வன்முறையே என்பதில் துளியும் ஐயமில்லை. குறிப்பிட்ட வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்று கட்டாயப்படுத்துவதும் வன்முறையின் மறுபக்கமே” என்று கட்டுரை குறிப்பிடுகிறது. அடடா, வள்ளலாருக்கு அடுத்த ‘அகிம்சாவாதிகள்’ நம் பா.ச.க.வினர்தாம் போலிருக்கிறது.

அயோத்தியில் அத்தனை வன்முறைக்கும் காரணமாயிருந்தவர்கள், குசராத்தில் குருதி கொப்பளிக்க வன்முறை வெறியாட்டம் நடத்தியவர்கள், ஒரிசாவில் பாதிரியாரையும் அவரது சின்னஞ்சிறு மகன்கள் இருவரையும் தீக்கிரையாக்கியவர்கள், தமிழ்நாட்டில் தமிழ் வேண்டும் என்னும் கோரிக்கையை வன்முறை என்கிறார்கள். “தேன் என்றால்தான் எளிதில் புரியுமே தவிர, அதே அர்த்தமுடைய ‘கானக்குறத்தி முலைப் பால்’ என்ற சொல் எளிதில் புரிந்து கொள்ளப்பட மாட்டாது” என்று எழுதுகின்றனர். ‘தேன்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று யார் சொன்னார்கள்? கானக்குறத்தி முலைப்பால் என்று தான் எழுத வேண்டும் என ‘வன்முறை’யில் இறங்கியவர்கள் யார்? ஒரு வேளை இவர்கள் கானக்குறத்தி முலைப்பாலை மிகுதியும் பருகிய போதையில் உளறுகின்றனரோ என்று தோன்றுகின்றது.

எனினும், இக்கட்டுரைக்கு நாம் ஒருவிதத்தில் நன்றி சொல்ல வேண்டும். பா.ச.க.வினர், தமிழுக்கும், தமிழினத்திற்கும் என்றென்றும் எதிரிகளே என்பதை மீண்டுமொருமுறை மெய்ப்பித்திருப்பதற்காக!

– மே 1, 2005

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு உழைக்கும் மக்களே உண்மையான அறிவாளிகள்


2004 அக்டோபர் 8, இந்து ஆங்கில நாளேட்டில், யு. எஸ். ஐயர் என்பவரின் கடிதமொன்று வெளியிடப்பட்டுள்ளது. “தனியார் துறையிலும் இடஒதுக்கீடு செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. இனி ஒருவராலும் அதைத் தடுக்க முடியாது” என்று தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் அண்மையில் அறிவித்துள்ளதைக் கண்டு பொறுக்கமுடியாமல், பெங்களூரிலிருந்து ஒரு ஐயர், தன் கடிதக் கணையை ஏவியுள்ளார்.

இது ஒரு தற்கொலைச் சலுகை என்று தன் கடிதத்தை முடிக்கும் அவர், தங்கள் ஊழியர் முன்னேறிய வகுப்பினரா, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரா என்பன குறித்து, எந்த ஒரு தொழிலதிபரும் கவலை கொள்வதில்லை என்று எழுதுகின்றார். அதாவது, தங்களின் நிறுவனம் முன்னேறுவதற்கு யாரை நியமிக்கலாம் என்றுதான் சிந்திப்பார்களே அல்லாமல், சாதி அடிப்படையில் ஊழியர்கள் சேர்க்கப்படுவதை விரும்பமாட்டார்கள் என்பதே அக்கடிதம் கூறவரும் செய்தி.

சாதிபற்றிக் கவலையில்லை என்று கூறும் அவரது பெயரைப் பார்த்தீர்களா? பெயர் என்ன என்று தெரியவில்லை. ஆணா, பெண்ணா என்பதும் கூடத் தெரியவில்லை. சாதி மட்டும்தான் துருத்திக் கொண்டு நிற்கிறது. தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தின் முன்னேற்றம் பற்றி மட்டும்தான் கவலைப்படுவார்களாம். ஆனால், சமூக அக்கறையுள்ள அமைப்புகளும், அரசாங்கமும் நாட்டின் முன்னேற்றம், சமூகநீதி ஆகியன குறித்துக் கவலைப்பட வேண்டியுள்ளதே.

தனியார் நிறுவனத்தில் அரசு எப்படித் தலையிடலாம் என்று சிலர் கேட்கின்றனர். அரசிடமிருந்து மலிவு விலைக்கும், இலவசமாகவும், நிலத்தையும், நீரையும், மின்சாரத்தையும் தனியார் நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளலாமாம். ஆனால், அதற்குப் பிறகு அரசு தலையிடக் கூடாதாம். இங்கே எத்தனை கிராமங்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கின்றன? அந்தச் சிற்றூர்களிலிருந்து நிலத்தடி நீரையெல்லாம், பெரிய பெரிய ஆழ்குழாய்களைப் போட்டு உறிஞ்சிக் கொள்ளும் இவர்கள், அந்தக் கிராமத்து மக்களில் சிலருக்கு வேலை கொடுத்தால், என்ன குடிமுழுகிப் போய்விடும்? நிர்வாகத்தின் முன்னேற்றம் எப்படித் தடைப்படும்?

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியில் சேர்வோர் அனைவரும் தகுதிக் குறைவானவர்கள் என்பது இங்குத் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட பொய். மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது வெளியிடப்பெறும் மதிப்பெண் பட்டியலைப் பார்த்தால் ஓர் உண்மை பளிச்செனத் தெரியும்.

பொதுப்போட்டியின் குறைந்த அளவு மதிப்பெண் 94 விழுக்காடு என்று இருந்தால், பிற்படுத்தப்பட்டோர் போட்டியில் அது 90 அல்லது 91 விழுக்காடாக இருக்கும். ஆதித்தமிழர் பட்டியலில் மேலும் சில மதிப்பெண்கள் குறையும். அவ்வளவுதான். ஆனால், பொதுப்போட்டிக்கும், பிறபோட்டிகளுக்குமிடையே, மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருப்பது போலவும், 40 – 45 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்கள் பலர் இடஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு வந்துவிடுவது போலவும், இங்கு ஒரு பெரும் மாயை உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரே ஒரு எடுத்துக்காட்டைக் கூட எவராலும் காட்ட முடியாது.

மேலும், மேட்டுக்குடியினரின் கல்வி, கறிக்குதவாத வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே. தமிழகத்தில் மிகப்பெரிய தொழில்களும், பாரம்பரியத் தொழில்களுமான உழவு, நெசவு, மீன் பிடித்தல் ஆகியனவற்றிலும், பிற தொழில்களிலும் நேரடியாக ஈடுபடும் உழைக்கும் மக்களின் வீட்டுப் பிள்ளைகளுக்குத்தாம் பட்டறிவு (அனுபவம்) கூடுதலாக இருக்க முடியும். அவர்களுக்குக் கிடைக்கின்ற ஏட்டுக் கல்வி, அதாவது நூலறிவு, அவர்களின் பட்டறிவை மேலும் செழுமைப்படுத்தும். எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் வெற்றிகரமாக ஈடுபடவைக்கும்

ஆகவே, பிற்படுத்தப்பட்டோர், ஆதித்தமிழர் சிற்றூர்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்புகள், நிறுவனங்களையும், தேசத்தையும் மேன்மைப்படுத்துமேயன்றித் தரங்குறைத்து விடாது. இத்தனை உண்மைகளையும் எடுத்துச் சொல்லித், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பதைச், சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் உடனே செய்ய வேண்டும். சமூக நீதியை ஏற்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சிறு சிறு அமைப்புகள் அனைத்தும் இக்கோரிக்கைக்கான வேலைத் திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும்.

இந்தியாவின் தலைமை அமைச்சரே, இதற்கு ஆதரவாக இருக்கும் இத்தருணத்தில், சூழலை மிகச் சரியாகப் பயன்படுத்தி, மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையும் அல்லவா? தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் வெறும் அறிவிப்புத்தான் கொடுத்துள்ளார். அதை ஆணையாகச், சட்டமாகக் கொண்டுவர நாம்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்தத் திசையில் இதுவரை பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே அலறத் தொடங்கிவிட்டன அக்கிரகாரங்கள்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

– அக்டோபர் 16, 2004

பங்காரு லட்சுமணன், கிருபாநிதி, உமாபாரதி – பலி பீடத்து ஆடுகள்


பாரதீய சனதாக் கட்சி, மிகவும் கட்டுப்பாடான கட்சி என்றும், அதன் தலைவர்கள் தன்னலமோ, பதவி ஆசையோ இல்லாதவர்கள் என்றும் சில கருத்துகள் இங்கே திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளன. அண்மை நிகழ்வுகள், அந்த மாயைகளைத் தகர்த்து நொறுக்கியுள்ளன. அவர்களின் போலி முகமூடிகள் கிழிந்து தொங்குகின்றன. தங்களுக்குள் ‘அதிகாரத் தரகர் யார்’ என்றும் தகராறு நடந்து கொண்டுள்ளது.

உமாபாரதிக்கும், பிரமோத் மகாஜனுக்கும் சண்டை, வி.எச்.பி.க்கும், ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கும் மோதல், அத்வானிக்கே அறைகூவல், செயற்குழுக் கூட்டத்தில் குழப்பம் – என்று செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன. ஆர்.எஸ்.எஸ். கூட்டம் எப்போதும் ஓர் உத்தியைக் கையாளூம். திட்டமிடும் இடத்திலும், தலைமைப் பொறுப்பிலும், பதவிகளிலும் பார்ப்பனர்களை அமர்த்திக் கொள்ளும். அடுத்தவர்கள் மீது கடுமையாகப் பாய்வதற்கும், வன்முறைகளில் இறங்குவதற்கும் பார்ப்பனர் அல்லாதவரை இறக்கிவிடும். பஜ்ரங்தள் தலைவர் வினய் கட்டியார், பா.ஜ.க.வின் உமாபாரதி ஆகிய பார்ப்பனரல்லாதோர் அவ்வாறு இறக்கிவிடப்பட்டவர்களே.

வேடம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகச் சில வேளைகளில் பார்ப்பனரல்லாத ஓரிருவரைத் தலைமைப் பொறுப்புகளுக்கும் கொண்டு வருவார்கள். பிறகு, மிகக் குறுகிய காலத்தில் பலி கொடுத்து விடுவார்கள். அவ்வாறு பலி கொடுக்கப்பட்ட ஆடுகள்தாம் இந்திய அளவில் பங்காரு லட்சுமணன், தமிழக அளவில் கிருபாநிதி போன்றவர்கள். இப்போது அந்த வரிசையில் உமாபாரதி.

குற்றஞ்சாற்றப் பெற்றவர்கள் பதவியில் இருக்கக்கூடாது என்ற ஓர் ஆயுதத்தைப் பா.ச.க. கையில் எடுக்க, அது அவர்களுக்கு எதிராகவே பாய்ந்துவிட்டது, உமாபாரதி, முதல்வர் பொறுப்பிலிருந்து விலகிக், கருநாடக நீதிமன்றத்திற்கு வர நேர்ந்தது. வழக்கு ஒன்றுமில்லாமல் முடிந்துபோனது. ஆனால் அவருக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்கப் பா.ச.க.வினர் மறுத்து விட்டனர்.

‘மத்தியப் பிரதேசத்தில் பா.ச.க. வெற்றி பெற்றது, என்னுடைய சொந்தச் செல்வாக்கினால்தானே தவிர, கட்சியினாலோ, இந்துத்வாவினாலோ அன்று’ என்று கூறிய உமாபாரதி, ‘அதனால் தனக்கு முதல்வர் பதவி மீண்டும் வழங்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார். அவர் கோரிக்கை பயனற்றுப் போனது. சினம் கொண்ட உமாபாரதி ரதயாத்திரை போனார், ரிஷிகேஷ் போனார். அவரைச் சமாதானப்படுத்த அவருக்குக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்பதவி வழங்கிச் சில நாள்களிலேயே, அவரின் அடிப்படை உறுப்பினர் பதவி கூடப் பறிக்கப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் பிறரைப் பார்த்துத் ‘துக்ளக்’குகள் என்று கேலி பேசுகின்றனர்.

தன் பரிவாரம் முழுவதையும் தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எப்போதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் எண்ணம். இன்று நேற்றன்று, பல காலமாய் இச்செயல் நடைபெறுகின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்று ஒரு நிகழ்வு நடந்துள்ளதைச், சில நாள்களுக்கு முன்பு, ‘இந்து’ ஏடு வெளிப்படுத்தியுள்ளது.

1954 நவம்பர் 3ஆம் நாள், பண்டிட் மவுலி சந்தர் சர்மா என்பவர், பாரதீய சன சங்கத்தின் தலைமைப் பதவியையும், உறுப்பினர் பதவியையும் துறந்திருக்கின்றார். சன சங்கத்திற்குள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் மிகுதியாகிக் கொண்டே இருப்பதால்தான் பதவி விலக நேர்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது தொடங்கியிருக்கும் இந்தக் குடுமிபிடிச் சண்டைகளில், இன்னும் சில பரபரப்பான காட்சிகள் அரங்கேற வாய்ப்புள்ளது.

உமாபாரதியைத் தலைவியாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் கட்சியை ஆர்.எஸ்.எஸ். தொடங்க முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆடுகளுக்குக் கழுத்தில் மாலை போட்டுத்தானே பலியிடுவார்கள்.

காஞ்சியில் மடம் – வேலூரில் சிறை புனிதம் உடைபட்டது


இந்த ஆண்டு தீபாவளியில், நரகாசுரன் இடம் மாறிப் போனான். ஆத்திகர்கள் மட்டுமின்றி, நாத்திகர்களும் கொண்டாடிய தீபாவளி இதுவாகத்தான் இருக்கும். கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி, காஞ்சிபுரம், வரதராசப் பெருமாள் கோயிலின் மேலாளர் சங்கர்ராமனை, கோயில் வளாகத்திலேயே, பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்த கொடூரம் நடைபெற்றது.

அக்கொலை வழக்கில், கொலை செய்யச் சதி, கொலையைத் தூண்டுதல், கொலைக் குற்றம் என மூன்று அடிப்படையில் முதல் குற்றவாளியாக (ஏ1), காஞ்சி சங்கராச்சாரி, தீபாவளியன்று கைது செய்யப்பட்டார். கூலிப்படையினருக்குப் பணம் கொடுத்து, மேலாளர் சங்கர்ராமனைக் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன என்று தமிழ்நாடு காவல்துறை கூறியது. மறுநாளே, அவரைப் பிணையில் விடுதலை செய்யவேண்டும் என்றும், அதுவரை ஒரு தனி பங்களாவில் ‘குடியமர்த்த’ வேண்டும் என்றும் அவரது சார்பில் உயர்நீதி மன்றத்தில் மனு செய்யப்பட்டது.

அப்போது அரசு தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட சில செய்திகள் நம்மை அதிர வைத்தன. சங்கர்ராமன் கொலை செய்யப்பட்ட மறுநாள், ஐசிஐசிஐ வங்கியில் உள்ள சங்கரமடக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுக் கொலையாளிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தொகை உட்பட 48 இலட்சம் ரூபாய் கைமாறி உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

அது மட்டுமின்றி, கொலை செய்தவர்கள் சங்கராச்சாரியுடன் நேரடியாக அவரது கைத்தொலைபேசியில் பலமுறை பேசியிருப்பதற்கான ஆதாரங்களையும் அரசு வழக்குரைஞர் எடுத்துக் காட்டியுள்ளார். அடிப்படை ஆதாரங்கள் வலிமையாக இருக்கின்றன என்பதையே இது காட்டுகின்றது. இந்நிலையில்தான், பிணை மனு உயர்நீதி மன்றத்திற்கு வந்தது.

இந்நிலையில், பிணை மனுவை மறுநாளைக்கு (நவம்பர் 13) நீதிபதி ஒத்தி வைத்தார். பிரேமானந்தாவுக்காக வாதாடிய ராம் ஜேத்மலானி, அடுத்த நாள் சங்கராச்சாரிக்காக வாதாடினார். அவர் வாதத்தை மறுத்த அரசு வழக்குரைஞர், “நேபாளத்திற்குத் தப்பி ஓடத் திட்டமிட்டிருந்த போதுதான் சங்கராச்சாரி கைது செய்யப்பட்டார்” என்னும் அதிர்ச்சிச் செய்தியை அறிவித்தார். இறுதியில் வீட்டுக்காவல் கோரிக்கை மறுக்கப்பட்டு, பிணை மனு நவம்பர் 17ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

நீதிமன்றத்திலிருந்து அனைவரும் வெளியேறிக் கொண்டிருக்கையில், அரசு வழக்குரைஞர் மற்றும் சங்கராச்சாரி கைது செய்யப்பட்டதை ஆதரித்த வழக்குரைஞர்கள் மீது, சங்பரிவாரங்கள் காட்டுத்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவிக் கொடியைக் கட்டியிருந்த கம்பைத் திருப்பிப் பிடித்து வழக்குரைஞர்களைத் தாக்கியுள்ளனர்.

அரசு வழக்குரைஞரைக் காவல்துறை காப்பற்றி விட, மற்றவர்களில் மூவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. “எட்டினால் தலையைப் பிடி, இல்லையேல் காலைப்பிடி என்பதுதான் பார்ப்பனீயம்” என்பார் பாவாணர். அந்தத் தொடரை, மறுபடியும் மறுபடியும் காலம் மெய்ப்பிக்கிறது,

2.11.2004 இரவு 10.30 மணிக்கு ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சியில், சங்கராச்சாரி கைது குறித்த விவாதம் நடைபெற்றது. தோழர் தா. பாண்டியன், வழக்குரைஞர் அருள்மொழி, சங்பரிவாரத்தைச் சேர்ந்த விநாயகர் முரளி ஆகியோர் அதில் பங்கேற்றனர்.

சங்கராச்சாரி கைது செய்யப்பட்டதில், சர்வதேசச் சதி இருப்பதாக ஒரு ‘அணுகுண்டு வெடி’யை விநாயக முரளி வெடித்தார். அது மட்டுமின்றி, “இந்துக்கள் யாராவது, வெள்ளிக்கிழமை அன்னிக்கு அதுவும் கோயிலுக்குள்ளயே, கொலை செய்யத் தூண்டுவாளோ?” என்ற ‘ஆன்மீகக்’ கேள்வியையும் முன்வைத்தார். வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாள்களில் மட்டும்தான் கொலை செய்வார்கள் போலிருக்கிறது. ஆனால் இப்போது, சங்கர்ராமன் கொலை வழக்கைப் பார்த்தால், அந்த வெள்ளிக்கிழமை விரதமும் காற்றில் கலந்து விட்டதைப் போலல்லவா தெரிகிறது!

கி.பி. 8 ஆம் நூற்றாண்டு, கேரளாவில் உள்ள காலடியில் பிறந்த ஆதிசங்கரர், திசைக் கொன்றாய் நான்கு மடங்களை இந்தியாவில் நிறுவினார். வடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே துவாரகநாத், தெற்கே சிருங்கேரி என்ற நான்கு ஊர்களில் மட்டுமே அவரால் மடங்கள் நிறுவப்பட்டன. பிறகு சிருங்கேரி மடத்தின் கிளை குடந்தையில் உருவாக்கப்பட்டது. நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சமூக, அரசியல் அமைதியின்மையால், குடந்தையிலிருந்து காஞ்சிக்கு இடம் பெயர்ந்தனர். காஞ்சியில், பொற்கொல்லர் சமூகத்திற்குச் சொந்தமான இடத்தில் முதலில் வந்து ‘ஒண்டிக்கொண்ட’ இவர்கள், பிறகு, ‘இடம் கொடுத்தால் மடம் பிடித்துக் கொள்வார்கள்’ என்ற கதையாய், அனைத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.

எனவே, காஞ்சி மடம், ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதன்று. மேலும், ஸ்மார்த்தப் பார்ப்பனர்களாகிய சங்கராச்சாரிகள், கடவுளை வணங்குகின்றவர்கள் அல்லர். வேதங்களை மட்டுமே வணங்குகின்றவர்கள். ‘வேதங்களை மறுப்பவர்களே நாத்திகர்கள்’ (நாஸ்திக வேத நிந்திக) என்பதுதான் அவர்கள் கொள்கை. ‘அத்வைதம்’ என்றழைக்கப்படும் ‘மாயாவாதமே’ அவர்களின் சமயத் தத்துவம்.

மனுநீதி என்பது சாதிக்கொரு நீதி என்பது நாம் அறிந்ததே. அந்நீதிப்படி, பார்ப்பனர்கள் வேறு யாரையும் கொலை செய்தால், கொலைகாரரின் தலையை மொட்டையடித்தால் போதும். தண்டனை அவ்வளவுதான். கொலை செய்தவர் வேறு வருணமாக இருந்தால் ‘சிரச்சேதம்’ தான். அதனால்தான் தந்தை பெரியார், “கொலைக்குற்றம் செய்தால் நமக்கு உயிர்போகும், பார்ப்பனர்களுக்கு மயிர்தான் போகும்” என்பார். ஆனால் திருவிளையாடற் புராணத்தில் உள்ள ‘மாபாதகம் தீர்த்த படலம்’ இன்னொரு செய்தியைக் கூறுகின்றது. அப்படலத்தில், ஒரு பார்ப்பன இளைஞன், தன் தந்தையைக் கொன்றுவிட்டுத் தாயைப் பெண்டாள முயற்சிப்பான். அந்த ஆபாசக் கதையில், ஒரு நீதி சொல்லப்படும். கொன்றது ஒரு பார்ப்பனராகவே இருந்தாலும், கொல்லப்பட்டதும் ஒரு பார்ப்பனராக இருக்கும் வேளையில் அவருக்குப் ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்து விட்டது என்றும், அதற்குக் கடுமையான தண்டனை உண்டு என்றும் அந்நூல் கூறும்.

அடடே, இப்போது சங்கராச்சாரியையும் ‘பிரம்மஹத்தி தோஷம்’ அல்லவா பிடித்துக்கொண்டுள்ளது. காஞ்சி சங்கரருக்கு உடனடியாகப் பிணை வழங்கவில்லை என்று அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே திருவாவடுதுறை இளைய ஆதினம் எட்டு மாதங்கள் பிணை கிடைக்காமல் சிறையில் இருந்தார். இவ்வளவுக்கும், அவர் மீது கொலை முயற்சி (இ.த.ச. 307) வழக்குதான் தொடுக்கப்பட்டிருந்தது. அதற்கே எட்டு மாதச் சிறை. சங்கரர் மீது தொடுக்கப்பட்டிருப்பதோ நேரடியான கொலை வழக்கு (இ.த.ச. 302)

பொடா சட்டத்தில் கைதாகித் தமிழகச் சிறையில் இருக்கும் 5 பெண்கள் உள்ளிட்ட 24 தோழர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பிணை கிடைக்கவில்லை. உண்மைகள் இவ்வாறு இருக்க, சங்கரர் அவசரப்படுவதில் என்ன நியாயம்? ஓரிரு ஆண்டுகளில் அவருக்கும் பிணை கிடைக்காமலா போய்விடும்?

– நவம்பர் 16, 2004