வாந்தியெடுக்கப்பட்ட வரலாறு.


“கட்டம் கட்டினால் காட்டிக் கொடுப்பார்
விஜயகாந்த் தூதுவர்களை சந்தித்த அழகிரி – ஜெ ஷாக்
கங்கணம் கட்டும் காங்கிரஸ்
சோனியாவின் வருத்தம்-சமாளித்த கலைஞர்-டெல்லி டென்ஷன்
கூட்டணியா-சாதனையா-தி.மு.க எடுக்கும் ரிஸ்க்
கதறடிக்கும் காங்கிரசின் பொலிட்டகல் பிளாக்மெயில்
கூட்டணிக்கு 5 நிபந்த்தனை-தி.மு.க-காங்கிரஸ் உறவு தொடருமா-பரபர திருப்பம்
தோற்றுப்போன சி.டி சதி
நிதானித்த விஜயகாந்த்-படபடத்த ஜெ-விறுவிறு கிளைமாக்ஸ் காட்சிகள்
ஒரு இலை விழுந்தால் இரு இலை துளிர்க்கும்-காங்கிரசின் சூசக தகவல்
துடுக்கு முருகன்-துடிக்கும் கூட்டணி
உடைகிறது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி-கோபாலபுரம் டூ ஜன்பத் காட்சிகள்
கடைசி அஸ்திரம் கனிமொழி-குலாம் நபி போட்ட குண்டு
கருணாநிதி வைத்த மார்ச் 5 செக்
பணாலான காங்கிரஸ் ப்ளான்-ஆப்பு வைத்த கலைஞர்
ஜெயிக்க நினைக்கிறாரா-சினிமா எடுக்கப் போகிறாரா
கூட்டணியை கரை சேர்த்த சக்திகள்
சீறிய சோனியா-எகிறிய கலைஞர்
அடுத்த பஞ்சாயத்து-தி.மு.கவில் களைகட்டும் பங்கீடு
உறவு பிரிவு-முக்கிய கட்சிகளின் கலக்கல் திருப்பங்கள்……..”

இவையெல்லாம் ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகைகளில் சமீபமாக வெளிவந்த அட்டைப்படக் கட்டுரை தலைப்புகள்!

அரசியல் என்றாலே சாக்கடை என்று சலித்துக் கொண்டு கூண்டுக்கிளி வாழ்க்கையில் காலத்தை ஓட்டும் நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து வீசப்பட்ட தலைப்புகள்தான் இவை. இந்த தலைப்புகளில் நெளியும் சாரம் என்ன? இவை வாசிப்பவர்களுக்கு தரும் சேதி என்ன?

இவையெல்லாம் ஏதோ தேர்தலுக்காக மட்டும் வைக்கப்பட்ட தலைப்புக்கள் அல்ல. தேர்தல் இல்லாத காலங்களிலும் அரசியல் கட்டுரைகளின் யோக்கியதை இதுதான். அதாவது அரசியல் நிகழ்வுகளைக் கூட ஏதோ திடுக்கிடும் மர்மமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான மசாலா திரைப்படம் போல இவர்கள் பார்க்கிறார்கள், எழுதுகிறார்கள், அப்படி ஒரு இரசனையையும் உருவாக்குகிறார்கள். கூட்டணி கூத்துக்கள், தலைவர்களின் வெற்று சவுடால்கள், கொள்கையே இல்லாத வார்த்தை ஜாலங்கள், தன்மானமே இல்லாத உரிமை போர்கள், சுயமரியாதை அற்ற பட்டங்கள்…இவைதான் அரசியல் என்று நமக்கு ஊட்டப்படுகிறது.

தமிழகத்தின் அரசியல் தரம் மிகவும் தாழ்ந்து கிடப்பதாக புலம்பும் நடுத்தவர்க்கம் படிக்கும், இத்தகைய தலைப்புகளின் தரமே நமது அரசியலின் யோக்கியதைக்கு ஒரு துளிபதம். இதில் இவர்கள் சாதாரண மக்கள் அதாவது இந்த புலனாய்வு புலிகளை படிக்காத பாமரர்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பதாக வேறு சலித்துக் கொள்வார்கள். சரி, இவர்கள் காசு வாங்கிக் கொண்டு படித்துக் களிக்கும் பத்திரிகைகளின் தரத்தை விட அது ஒன்றும் கீழானதில்லையே? துட்டுக்கு ஓட்டு என்பதை விட துட்டுக்கு மூளையை அடகு வைப்பது கேடானதில்லையா?

அரசியல் என்றால் என்ன?

எல்லா தனிமனிதர்களும் சமூகத்தோடு இணைந்து வாழ்வதன் மூலமே உயிர்வாழ முடியும். அந்த ஒப்பந்தத்தை அதிகாரத்தின் மூலம் ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பின் இயலே அரசியல். அந்த அதிகாரம் யாருக்காக, யாரால், யார் மீது ஏவப்படுகிறது என்பதிலிருந்து அந்த அரசியலின் மையமான அரசாங்கத்தின் வர்க்க நோக்கு தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் நமது நாட்டில் இருக்கும் அரசு என்பது முதலாளிகள், நிலப்பிரபுக்கள், ஏகாதிபத்தியங்கள் நலனுக்காக அதிகாரத்தை நம் மீது ஏவி கட்டுப்படுத்தி வருகிறது. இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

அரசியல் என்பது நம் அன்றாட வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் ஊடுறுவியிருக்கிறது. வீட்டில் சமையல் அறையிலிருந்து, தெருவிலிருக்கும் ஏ.டிஎம் வரைக்கும் அதுவே அனைத்தையும் தீர்மானிக்கிறது. இத்தனை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும் அந்த அரசாங்கத்திற்கான தேர்தலை இப்போது அறிவித்திருக்கிறார்கள். இந்த அரசு எப்படி செயல்படுகிறது, இதன் அதிகாரம் என்ன, அரசை வழிநடத்துவது தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளா, இல்லை அதிகார வர்க்கமா என்பதெல்லாம் உண்மையில் பெரும்பாலான அறிவாளிகளுக்கே தெரியாத ஒன்று.

போகட்டும். இத்தகைய முக்கியத்துவத்தை கொண்டிருக்கும் ஒன்றின் மீதான தேர்தல் என்பது எப்படி புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது?

இந்த அரசு அமைப்பை நாங்கள் போலி ஜனநாயக அமைப்பு என்கிறோம். மற்றவர்கள் இதுதான் சாத்தியமான ஜனநாயகம் என்கிறார்கள். சரி, அவர்கள் வாதப்படி பார்த்தாலே கூட தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பொதுப்புத்தியில் என்ன விதமான செய்திகள், ஆய்வுகள், விவாதங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்?

பொருளாதாரம், விலைவாசி உயர்வு, கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, தொழில், மாணவர், இளைஞர், பெண்கள், என்று இந்த பிரச்சினைகளெல்லாம் தற்போது எப்படி இருக்கிறது என்றோ, இது குறித்து ஆட்சியிலிருக்கும் கட்சி என்ன செய்தது, அதை எதிர்க்கும் கட்சிகள் அதற்கு என்ன மாற்று திட்டம் வைத்திருக்கிறது என்றல்லவா இவை பொதுவெளியில் பேசப்பட்டிருக்க வேண்டும்?

ஆனால் பேசப்படுவது என்ன? பொதுக்கூட்ட மேடைகளில், பத்திரிகைகளில், பதிவுலகில் என்ன அலசப்படுகிறது? மேலே கண்ட அந்த திடுக்கிடும் தலைப்புகள்தான் அரசியல் என்றால் நாம் வாழ்வது நிச்சயமாக போலி ஜனநாயக அமைப்பில்தான். அதாவது நமது வாழ்வை தீர்மானிக்கும் அரசியல் குறித்து ஒரு வடிவேலு காமடியை இரசிக்கும் மனநிலையில்தான் நாம் இருக்கிறோம் என்று பொருள். இதுதான் மக்களின் தரம் என்றால் அங்கே நிச்சயம் ஜெயவும், வைகோவும், கருணாநிதியும், கார்த்திக்கும், விஜயகாந்தும்தான் இருப்பார்கள். அவர்களுக்கிடையேயான சுயநல முரண்பாடுகள் மட்டும் அரசியலாக ஆர்வத்துடன் படிக்கப்படும். இறுதியில் மக்கள் சுயவிருப்பத்தோடு இங்கே அடிமைகளாக மட்டுமே இருக்க முடியும்.

அதனால்தான் ஜூனியர் விகடன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ரஜினியை அட்டைப் படத்தில் போட்டுவிட்டு, “ரஜினி – சோ மீட்டிங் ரகசியம், யாருக்கு வாய்ஸ்?” என்று ஒரு தலைப்பை போட்டு வெட்கமே இல்லாமல் விற்கிறது. நாமும் வெட்கம் கெட்டு அதை காசு கொடுத்து படிக்கிறோம்.

அரசியலை ஒரு சினிமா கிசுகிசு போல பார்ப்பதற்கும், இரசிப்பதற்கும் கற்று கொடுத்து அதை ஒரு மலிவான, வெற்றிகரமான பாணியாக மாற்றிய பெருமை ஜூ.விக்கு சேரும். அந்த ராஜபாட்டையில்தான் நக்கீரன் முதல் ஏனைய புலனாய்வு புலிகள் வர்த்தக வெறியுடன் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஜூவியின் கழுகுதான் இந்த கிசுகிசு அரசியலின் சீனியர். இன்றும் அந்த கழுகு வாந்தியெடுப்பதைத்தான் படித்த தமிழர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். இந்த வார ஜூவியை வாங்கி பார்த்தால் அந்த ரஜினி வாய்ஸ் குறித்த செய்தி, மொத்தம் ஒரு பத்துவரிகளுக்குள் இருக்கும்.

அ.தி.மு.க கூட்டணியில் ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் இருப்பதால் ரஜினியை தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக நாலு வார்த்தை பேசவைத்து அதை அவர்களது டி.வியில் போடுவதற்கு கருணாநிதி மூலம் முயன்றார்களாம். இது போயஸ் தோட்டத்திற்கு லீக்காகி அம்மா உடனே சோ ராமசாமியைக் கூப்பிட்டு, “ரஜினி பெண்ணு திருமணத்துக்கு போகலேன்னு எம்மேல வருத்தமா இருப்பாரு, அதை வைச்சு கருணாநிதி நமக்கு எதிரா அவரை யூஸ் பண்ண பாக்குறாரு, நீங்க உடனே போய் சந்திச்சு நமக்கு சாதகமா மாத்திடுங்க”ன்னு சொன்னராம். உடனே சோவும் ரஜினியை சந்திச்சாராம். ரஜினியும் இரு அணிக்கும் வாய்ஸ் கொடுக்க முடியாது, இரண்டு பேர் மேலயும் வருத்தங்கள் இருப்பதாக சொன்னாராம். இதுதான் மேட்டர். இது ஜூவியில் மட்டுமல்ல தினமலர் உள்ளிட்ட அ.தி.மு.க அணி ஆதரவு நாளிதழ்கள் எல்லாவற்றிலும் சுவரொட்டி செய்தியாகவே வெளிந்தது.

இந்த சந்திப்பெல்லாம் வரலாற்று புகழ் மிக்க சந்திப்பு என்றால் வரலாறு செய்த தவறுதான் என்ன?

அரசியலை பெருந்திரளான மக்கள் திரளின் நடவடிக்கையாக காட்டாமல் ஒரு சில தலைவர்களது விருப்பு வெறுப்போடு மட்டும் காட்டுவது எதைக் குறிக்கிறது? நாமெல்லாம் படித்தவர்களோ இல்லை படிக்காதவர்களோ யாராக இருந்தாலும் வெறும் அடிமைகளே என்பதுதான் இதன் உட்கிடை. இந்த செய்தி உண்மையாகவே இருக்கட்டும். இதில் கோடிக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொள்ளப்போகும் தேர்தலுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?

ரஜினி நினைத்தால் யாருக்காவது வாய்ஸ் கொடுத்து ஜெயிக்க வைக்க முடியும் என்பது ஒரு வாதத்துக்காக உண்மையாக இருக்கட்டும். எனில் அது குறித்து மக்களுக்கு இடித்துரைக்க வேண்டுமா, இல்லை அதை தேவவாக்காக பரப்ப வேண்டுமா? ரஜினி வாய்ஸ் கொடுப்பதை அவரது சொந்த விருப்பங்களே தெரிவு செய்யும் எனில் தமிழக மக்களெல்லாம் இளித்த வாயர்களா? நமது தலையெழுத்தை இந்த கட்டவுட் நாயகன்தான் தீர்மானிப்பான் என்றால் நாமெல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்கள் என்று உயிர்வாழ்வது தகுமா?

தமிழக மக்களுக்கு இருக்கும் சினிமா மோகத்தை வைத்து நட்சத்திரங்களை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஊடகங்களும் அதை ஊதி வளர்க்கின்றன. உண்மையில் இத்தகைய சினிமா நட்சத்திரங்களை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்களா என்ன? அப்படி அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அது குறித்த விமரிசன விழிப்புணர்வையல்லவா ஊடகங்கள் எனப்படும் ஜனநாயகத் தூண்கள் செய்திருக்க வேண்டும்? மாறாக இவர்களே அந்த மோடிமஸ்தான் வேலையை காசுக்காகவும், மலிவான சர்குலேஷன் அதிகரிப்புக்காகவும் செய்கிறார்கள் என்றால் இவர்களை விபச்சாரத் மாமாக்கள் என்றே அழைக்க முடியும். நமது தேர்தல் குறித்த செய்திகளை இத்தகைய மாமாக்கள்தான் படிக்கத் தருகிறார்கள், நாமும் அதை விரும்பி படிக்கிறோம் என்றால் தமிழகத்தை ஒரு விபச்சார தேசம் என்றே அழைக்கலாமே?

1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதொல்வியுற்று, தி.மு.க பெரு வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ரஜினி, ” அ.தி.மு.கவுக்கு ஓட்டு போட்டா தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்று தி.மு.கவிற்கு ஆதரவாக இரண்டு வார்த்தை பேசினார். உடனே தமிழக மக்கள் ஜெயாவை தூக்கி கிடாசிவிட்டு கருணாநிதியை ஆட்சியில் அமர்த்தினார்கள் என்று பல அறிவாளிகளும், ஊடகங்களும் ஒரு பொய்யை வரலாற்றில் பதிந்திருப்பதோடு அவ்வப்போது அதை நினைவுபடுத்தவும் செய்கிறார்கள்.

நடந்த உண்மை என்ன? அந்த தேர்தலுக்கு முன் தமிழகத்தை ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த ஜெயா-சசி கும்பல் பாசிச வெறியாட்டம் போட்டதோடு, முழு தமிழகத்தையும் மொட்டை போட்டது. ஊழல், சொத்து சேர்ப்பு, அதிகார ஆணவம், ஈழம் மற்றும் தமிழின ஆதரவாளர்கள் மீது அடக்குமுறை என்று சர்வாதிகாரத்தில் பீடை நடை போட்டது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முழு தமிழ்நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அதனாலேயே அவர்களுக்கு யாரும் எடுத்துக் கொடுக்க தேவையில்லாமல் ஜெயா கும்பல் மீது கடும் வெறுப்பு இருந்தது.

அந்த தேர்தலுக்காக கிராமங்களுக்கு சென்ற அ.தி.மு.க அமைச்சர்கள் பலர் செருப்படி பட்டனர். இந்த ஜெயா எதிர்ப்பு அலை காரணமாகவே தி.மு.க வெற்றி பெற்றது. ஒரு வேளை இந்த சூப்பர் ஸ்டார் அன்று அ.தி.மு.கவிற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பிஞ்ச வெளக்குமாறால் அபிஷேகம்தான் கிடைத்திருக்கும். அன்று ஜெயாவை எதிர்த்து விரட்டுவது மக்களின் சொந்தப் பிரச்சினையாக இருக்கும் போது பவர் ஷூ போட்டு பால் கறப்பதாக நடிக்கும் இந்த கோமாளியா அதை தீர்மானிக்க முடியும்?

ஜெயா முதலமைச்சராக காரில் வரும்போது இந்த ரஜினி ஏதோ ஒரு சாலையில் காத்திருந்திருக்கிறார். இரண்டாவதாக பம்பொய் படமெடுத்த பிறகு மணிரத்தினத்தின் வீட்டுக் காம்பவுண்டில் யாரோ சிலர் வெடிக்காத வெங்காய வெடிகளை வீசினார்கள். இது இரண்டும் சூப்பர் ஸ்டாரின் மனதை பாதித்திதாம். பாட்ஷா திரைப்பட வெற்றி விழாவில் அதை அவர் ஏதோ முடிந்த வரை இதை புலம்பியவாறு வெளியிட்டார். இதுதான் இந்த வாய்ஸ் வாந்தியெடுக்கப்பட்ட வரலாறு.

அன்று தா.மா.காவையும் தி.மு.கவையும் இணைப்பதற்கு இந்த சோ ராமசாமி பாடுபட்டாராம். யார் இந்த சோ? தமிழகத்தின் நீரா ராடியா. ராடியாவுக்கு நீண்டமுடி இருக்கும். சோவுக்கு மொட்டை தலை. ராடியா முதலாளிகளுக்கான புரோக்கர் என்றால் சோ பார்ப்பனியத்துக்கு குறிப்பாக பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவிற்கும் புரோக்கர். தமிழகத்தின் பல தேர்தல் தலைவிதிகளை அதாவது அதற்கு காரணமான கூட்டணிகளை இந்த மொட்டைபாஸ்தான் தீர்மானிப்பார் என்று பலர் நம்புகிறார்கள்.

பார்ப்பனியத்துக்கு ஓரளவு ஆப்பு வைத்த திராவிட இயக்கத்தின் மேல் ஜென்ம விரோத பகையுடன் இருக்கும் சோ, பார்ப்பனர்கள், பிராமண சங்கம் சார்பாக தி.மு.கவிற்கு எதிராக எல்லா அரசியல் தரகு வேலைகளையும் பார்ப்பார். இப்படி மேல்மட்ட மனிதர்களின் அரசியல் நடவடிக்கைகள் மூலம் மக்களது தலைவிதியை தீர்மானிக்க விரும்பும் இந்த நரியை விமரிசித்து துரத்துவதற்கு பதில் ஊடகங்கள் சாணக்கியர் என்று கொண்டாடுகின்றன. காரணம் அந்த ஊடகங்களில் பெரும்பான்மையானவை பார்ப்பன ஊடகங்களாக இருப்பதுதான்.

மக்கள் தமது சொந்த உணர்வின் காரணமாக கருணாநிதியை எதிர்ப்பது ஆரோக்கியமானதா, இல்லை இந்த மொட்டை பாஸ் புரோக்கரது லாபி வேலை காரணமாக எதிர்ப்பது போல சித்தரிப்பது ஆரோக்கியமானதா? முதலாளிகளுக்கு ஆதரவாக யாரெல்லாம் அமைச்சர்கள் என்று நீரா ராடியா தீர்மானிப்பதற்கும், பார்ப்பனியத்துக்கு ஆதரவான கூட்டணியை இவர் தீர்மானிக்கிறார் என்பதற்கும் என்ன வேறுபாடு?

கருணாநிதியின் கார்ப்பரேட் குடும்ப ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கான கூட்டணி மாமா வேலைகளை இந்த மொட்டைப் பார்ப்பான்தான் செய்து முடித்தான் என்றால் இதை விட தமிழக மக்களை இழிவு செய்ய முடியுமா? ஆனால் ஊடகங்கள் அப்படி இழிவு செய்வதை தொடர்ந்து செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீரங்கத்து பாப்பாத்தியான ஜெயாவின் ராஜகுருவாக இந்த மைலாப்பூர் பாப்பான்தான் இருக்கிறார் என்பது அ.தி.மு.கவின் யோக்கியதையை பறை சாற்றுகிறது. அந்த வகையில் கருப்பு எம்.ஜி.ஆர் கூட இன்று போயஸ் தோட்டத்தில் சரணடைந்திருப்பது துக்ளக் ஆண்டுவிழாவிலேயே பேசப்பட்டது.

தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் துக்ளக் சோவின் நடவடிக்கைகளை அறியாதவர்கள், ஏற்காதவர்கள். அமெரிக்கா போக முடியாத தமிழ்நாட்டு பார்ப்பனர்களும், அமெரிக்கா சென்றும் பார்ப்பனியத்தை தலைமுழுகாத தமிழ்நாட்டு பார்ப்பனர்களும்தான் சோவை தமது அரசியல் ஆசானாக கருதுகிறார்கள். இப்படி இந்த பார்ப்பன குரு தமிழக சட்டமன்ற தேர்தலில் சகுணியாட்டம் ஆடுவது நமது இழிவான அரசியல் யதார்த்தம்.

தனது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதன் மூலமே கோடிஸ்வரரான ரஜினி எனும் நடிகனுக்கு, தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட தகுதி இல்லை. அடுத்த படத்தில் அண்டார்டிகாவில் ஏதோ இந்தி நடிகையுடன் கையைக் காலை அசைத்து ஆடப்போகிற இந்த சுயநலவாதிக்கு ஏதோ பெரும் வாய்ஸ் இருப்பதாகவும், அதை கண்டு தமிழகமே அஞ்சி நடுங்குவதாகவும் ஜூ.வி ஒரு தேர்ந்த மாமா போல சித்தரிப்பது பச்சையான அயோக்கியத்தனம்.

சொல்லப்போனால் ரஜினிக்கு இப்படி ஒரு வாய்ஸ் பவர் இருப்பதாகவும், அதனால் அவர் கட்சி ஆரம்பித்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கதையை உருவாக்கி வெளியிட்டு இன்று வரை அது வரலாற்றில் இடம்பெற்றிருப்பதற்கு காரணமே துக்ளக் சோதான்.

பொது அரங்கில் இத்தகைய சகுணிகளும், வாய்ஸ் ஸ்டார்களும் என்று தூக்கியெறியப்படுகிறார்களோ அன்றுதான் தமிழகம் ஆரோக்கியமான அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். கருணாநிதி, ஜெயா போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளையும் வீழ்த்த முடியும். இல்லையேல் நமது தலையெழுத்தை ரஜினி, சோ போன்ற பாசிசக் கோமாளிகள்தான் தீர்மானிக்கப் போவதாக நம்மை மாற்றிவிடுவார்கள். அதை அடிமைத்தனம் என்றும் அழைக்கலாம்.

ஒழியட்டும் கிரிக்கெட் தேசபக்தி !!


தேர்தல் காலத்தில் கிரிக்கெட்டையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இந்து மதத்தை விட பெரிய மதம் கிரிக்கெட். ஆனாலும் ஐந்து, பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த கிரிக்கெட் பரபரப்பு இப்போது குறைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போட்டி, கோப்பை என்று மக்களுக்கு சலித்துப் போகுமளவு ஏராளமான ஆட்டங்கள். 20 ட்வெண்டி வந்ததும் அதன் பரிமாணம் நிறையவே மாறியிருக்கிறது. இரசிகனை பொறுத்த வரை முன்னர் போல நுணுக்கங்களை அணுஅணுவாய் இரசிக்கும் தேவை இப்போது இருப்பதில்லை. ஆறு, நாலு என பரபரவென்று அவன் கூச்சலிடுகிறான்.

சரி, ஒழிந்து போகட்டும் என்றால் கிரிக்கெட்டை வைத்து கல்லா கட்டும் முதலாளிகள் அந்த விளையாட்டை ஏதோ மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை இருக்கிறதே அதைத்தான் தாங்க முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியுடனான கால் இறுதி ஆட்டத்தில் இந்திய தேசிய கீதம் ஒலித்த போது பலர் அலுவலகங்கள், வீட்டில் எழுந்து நின்றார்களாம். ஒரு அலுவலகத்தில் ஒரு தோழர் எழுந்து நிற்கவில்லை என்று அவரை குமுறி எடுத்துவிட்டார்களாம். கிரிக்கெட் எப்படி தேசபக்தியின் அடையாளமாக மாற முடியும்?

உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்காக பாக், இந்தியா இரண்டிலும் விளம்பரங்கள் மூலம் தேசபக்தியை உலுப்பிவிடும் பெப்சி தேச எல்லையைத் தாண்டி கல்லாக் கட்டுகிறது. இரசிகன் மட்டும் வாயில் பெப்சியை உறிஞ்சிக் கொண்டு பாரத் மாதாகி – பாக் மாதாகி ஜெய் என்று அலறுகிறான். அதிலும் இந்தியா – பாக் போட்டி என்றால் ஊடகங்களெல்லாம் சிலிர்த்துக் கொண்டு தேசபக்தியை கிளறி விடுகின்றன.

இப்போது கொஞ்சம் பரவாயில்லை.முன்பெல்லாம் பாக் கிரிக்கெட் அணியை வெறி பிடித்தவர்கள் போல சித்தரித்து எழுதுவார்கள். நிறைய போட்டிகளில் பாக் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 33 ஆண்டுகளாக இந்திய பாக் அணிகள் 119 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் முடிவில்லாத 4 போட்டிகளைத் தவிர பாக் அணி 69-லும்,இந்திய அணி 46-லும் வென்றுள்ளன. விளையாட்டு என்றால் வெற்றி தோல்வி சகஜம் என்று போனால் பிரச்சினை அல்ல. அதை ஒரு மானப்பிரச்சினை போல இவர்கள் சித்தரிக்கிறார்கள்.

1986-ஆம் ஆண்டு ஷெர்ஜாவில் நடந்த போட்டியில் கடைசி பந்தில் 4 ரன் அடித்தால் வெற்றி என்ற நிர்ப்பந்தத்தில் பாக் அணி இருக்கிறது. சேதன் சர்மா போட்ட புல்டாசை ஜாவித் மியான்தத் சிக்சருக்கு அனுப்ப இந்திய ரசிகர்கள் அதை எண்ணி எண்ணி பல மாதங்கள் தூங்கவே இல்லை. இப்படி நிறைய முறை பாக் அணி இந்திய ரசிகர்களை தூங்க விடாமல் செய்திருக்கிறது.

காஷ்மீர் பிரச்சினையை வைத்து இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் உள்நாட்டு மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பும் வண்ணம் இந்த தேசபக்தி வெறியை அவ்வப்போது கிளப்பி விடும். இன்னொரு புறம் ஆயுதங்களை போட்டி போட்டு வாங்கும். இந்தியா அணுகுண்டு வெடித்தால் பாக்கும் வெடிக்கும். இப்படி இந்த போலி தேசபக்தியால் இருநாட்டு மக்களும் இழந்த செல்வத்தின் மதிப்பு எத்தனை இருக்கும்? ஆயுதங்களுக்கும், இராணுவத்திற்கும் ஒதுக்கும் தொகையை மக்கள் நலனுக்கு ஒதுக்கியிருந்தால் இரண்டு நாட்டு ஏழைகளுக்கும் ஓரளவாவது கதிமோட்சம் கிடைத்திருக்குமே?

எனினும் இந்த தேசபக்தி வியாபரத்தில் முதன்மைக் குற்றவாளி இந்தியாதான். காஷ்மீர் மக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொன்று குவிப்பதும், அது இயல்பாகவே பாக்கிஸ்தானில் ஒரு இந்திய வெறுப்பை தோற்றுவிக்கவும் காரணமாக இருக்கிறது. பாக் ஆளும் வர்க்கம் இதை வைத்து அரசியல் ஆதாயம் அடைகிறது. இரண்டையும் முற்ற வைத்து ஆயுதங்களை விற்பனை செய்து கல்லா கட்டும் அமெரிக்கா எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறது. அமெரிக்க நலனுக்காக பாக்கில் உருவாக்கப்பட்ட தீவிரவாதிகள் பின்பு பல காரணங்களால் முரண்பட்டு இன்று சுயேச்சையாக செயல்படுகிறார்கள். இந்தியாவில் இவர்கள் நடத்திய குண்டுவெடிப்பை விட பாக்கில் நடத்திய வெடிப்புகளும், கொலைகளும் அதிகம். அன்றாடம் ஏதாவது ஒரு பாக் நகரில், மசூதியில் குண்டு வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது.

காஷ்மீரில் தேச விடுதலை இயக்கங்களை மதவெறி மூலம் மாற்றியமைத்த பெருமை இந்தியா, பாக் இரண்டு நாடுகளுக்கும் சேரும். அதன் விளைவை இப்போது இருவரும் அனுபவிக்கிறார்கள்.

இந்த பின்னணியில்தான் கிரிக்கெட் போட்டிகளையும் கார்கில் போர் போல மாற்றுகிறார்கள். கிரிக்கெட் போட்டியில் பாக் வெற்றி பெற்றால் இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் என்ற அவதூறை இன்றும் இந்து முன்னணி செய்து வருகிறது. முசுலீம் மக்கள் அனைவரும் பாக்கிஸ்தானின் நலனுக்காக வாழ்பவர்கள் போன்ற சித்திரத்தை உருவாக்கி அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதுதான் இந்துமதவெறியர்களின் நோக்கம்.

இந்தியாவில் இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட் இசுலாம் மக்கள் எத்தனை ஆயிரம் பேர்? இதில் எந்த வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கபடவில்லை எனும்போது ஒரு அப்பாவி முசுலீம் இளைஞன் இயல்பாகவே பாக் கிரிக்கெட் வெற்றியை ஆதரிப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி நடப்பதில்லை. ஏதோ விதியை நொந்து கொண்டு இந்தியாவில் கிட்டத்தட்ட அகதிகளாகத்தான் வாழ்கிறார்கள்.

அகமதாபாத்தில் நடந்த கால் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றதும் பரிசுகளை வழங்கியவர் மோடி. முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையின் சூத்திரதாரி இந்திய அணிக்கு பரிசளிக்கிறான் என்றால் அதை பார்ப்பதற்கு விகாரமாக இல்லையா? அந்த மைதானத்தில் இந்திய வெற்றிக்காக கூச்சல் போட்ட நடுத்தர வர்க்கம்தான் பங்குச் சந்தையில் அதிக அளவு பங்குகளை வாங்குவதோடு குஜராத் கலவரம் நடந்த போது அதை வேடிக்கை பார்த்தும் ஆதரித்தது. மோடிக்கு இணையாக முகேஷ் அம்பானியும் போட்டியை குடும்பத்துடன் கண்டு களித்தார். ஆக எல்லாரும் ஒன்றாகத்தான் இணைந்திருக்கிறார்கள்.

கிரிக்கெட்டிற்கும் தேசபக்திக்கும் என்ன சம்பந்தம்? இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடைகளை பன்னாட்டு நிறுவனங்களின் முத்திரைதானே அலங்கரிக்கின்றது? போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் பெப்சி, சோனி, ஹோண்டா போன்ற நிறுவனங்களெல்லாம் உலகமெங்கும் தொழில் செய்கின்றன. இவர்களின் தயவில் இந்தியாவின் தேசபக்தி எப்படி? இந்தியா ஒரு போட்டியில் வென்றதும் மகிழ்ச்சியில் கூட இரண்டு புரோட்டாவையும், பீயரையும் முழுங்குவதுதான் தேசபக்தியின் விளைவுகள். தேசபக்தி இவ்வளவு சுலபமானது என்றால் டாஸமாக்தான் இந்தியாவின் மிகப்பெரிய தேசபக்தி நிறுவனமாக இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் வீட்டில் பாரதமாதா படத்திற்கு பூஜை செய்வதை தேசபக்தி என்கிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் “கமான் இந்தியா” என்று கூவுவதை தேசபக்தி என்கிறார்கள். இந்தியாவில் கிரிக்கெட்டை இளைஞர்களின் மதமாக மாற்றி நுகர்வு கலாச்சார சந்தையில் சக்கை போடு போடும் நிறுவனங்களை அம்பலப்படுத்த, தேசபக்தி போதையில் மூழ்கியிருக்கும் தருணம் பார்த்து இவர்கள் உங்களது சட்டைப்பையிலிருக்கும் பணத்தை திருடும் வழிப்பறிக்கொள்ளயை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் நாம் பாக் அணியை ஆதரித்தே ஆக வேண்டும்.

தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குஜராத்தில் முசுலீம் மக்கள் வேட்டையாடப்பட்டது, தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது, விவசாயிகள் தற்கொலை இதற்கெல்லாம் ஏதாவது சிறு துரும்பையாவது செய்தீர்களென்றால் அது தேசபக்தி எனலாம். அப்படி எதுவும் செய்யாமல் டி.வியை பார்த்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி, பின்னர் உருளை சிப்சை விழுங்கி, பெப்சியை அருந்திக் கொண்டு டெண்டுல்கர் பாடில் ஸ்வீப் அடிப்பதை சிலாகித்தால் அது தேசபக்தியா? இல்லை இதுதான் தேசத்துரோகம்.

பாக்கிஸ்தான் நமது அண்டை நாடு மட்டுமல்ல நமது ரத்தமும் கூட. பாக்கிஸ்தான் மக்கள் நமது சகோதரர்கள். நம்மிடமிருந்து அந்தநாடு பிரிந்ததற்கு ஆங்கிலேயர்கள், காங்கிரசு மற்றும் இந்துமதவெறி கும்பல்தான் முதன்மையான காரணம். இன்று இந்திய ஆளும் வர்க்கங்களால் ஏழை நாடாக வாழ வேண்டிய அவல நிலையில் இருப்பவர்கள். அமெரிக்காவுடன் கூடிக் குலவும் பாக் ஆளும் வர்க்கத்தால் சொந்தநாட்டில் பயங்கரவாத நிகழ்வுகளோடு செத்துப் பிழைக்கும் துர்பாக்கியவாதிகள்.

பாக் கிரிக்கெட் அணியையே எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை அணியோடு நடந்த டெஸ்ட் போட்டியில் தீவிரவாதிகள் தாக்கிய பிறகு எந்த அணியும் அங்கே செல்வதில்லை. இந்த உலகப் போட்டியும் கூட அங்கு நடக்க வேண்டியது, ரத்து செய்யப்பட்டது. பாக் கிரிக்கெட் வாரியத்திற்கு கூட ஏதோ கொஞ்சம் நட்ட ஈடு கொடுத்து வாயை அடைத்தார்கள். மற்ற அணி வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்போது அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை. எளிதாக மேட்ச் பிக்சிங் புரோக்கர்கள் கைகளில் விழுகின்றனர். மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் இந்தியா உட்பட மற்ற நாட்டு அணிகளது யோக்கியர்களும் அடக்கம் என்றாலும் பாக் அணிதான் இதில் மிகவும் கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது. தற்போது கூட பாக் உள்துறை அமைச்சர் பாக் அணி வீரர்களை நேரடியாகவே மேட்ச் பிக்சிங் குறித்து மிரட்டியிருக்கிறார். அவர்களது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது என்று எச்சரித்திருக்கிறார். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு அடிமைகளைப் போல ஆடவேண்டிய நிலைமையில் அந்த அணி இருக்கிறது.

இந்தியா பாக் இரண்டு நாடுகளின் மேட்டுக்குடி சூதாடிகள் மொகலியில் நடைபெற இருக்கும் ஆட்டத்தை வைத்து பத்தாயிரம் கோடிக்கு சூதாடப் போவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அப்பாவி இரசிகர்களோ தமது நாடு வெல்லப் போவதை எண்ணி காத்திருக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் இப்படி ஒரு போலி தேசபக்தி சண்டைக்கு என்ன அவசியம் இருக்கிறது?

தற்போது மவுனமோகன்சிங் அழைப்பின் பேரில் பாக் பிரதமர் கிலானி வர இருக்கிறார். இதை கண்டித்து எழுதும் பால்தாக்கரே அப்படியே “கசாப், அப்சல் குருவுக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அழையுங்கள்” என்று கேலி செய்கிறார். முன்னர் போல ஆடுகளத்தை சேதம் செய்யும் பலம் இன்று சிவசேனாவிற்கு இல்லை என்றாலும் இந்துமதவெறியரின் மனப்போக்கிற்கு இதுதான் எடுத்துக்காட்டு. பாக்குடன் எந்த உடன்பாடும் காணாதபடி இருப்பதையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களது திமிருக்காக இருநாட்டின் ஏழை குடும்பங்களிலிருந்தும் இராணுவத்திற்கு சென்று வாழும் சிப்பாய்கள் மட்டும் சுட்டுக் கொண்டு சாகவேண்டும். ஆர்.எஸ்.எஸ் அம்பிகளோ பூட்டிய அறைக்குள் பாதுகாப்பாக நின்று பாரத்மாதாகி ஜெய் என்று முழங்குவார்கள்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நடந்த கால்பந்து போட்டியில் ஈரான் வென்றதை அந்நாட்டு மக்கள் அரசியல் வெற்றி போல கொண்டாடியதை கூட ஆதரிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும். ஆனால் இரண்டு பரதேசி நாடுகள், ஏழைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் இப்படி மோதிக் கொள்வதையும், விளையாட்டு வெற்றியை போர் வெற்றி போல சிலாகிப்பதையும் எப்படி ஆதரிக்க முடியும்?

எனவே இந்த போலி தேசவெறியை தோலுரிக்கும் வண்ணம் நாம் பாக் அணியை ஆதரிக்க வேண்டும். இந்திய-பாக் மக்களின் ஒற்றுமை மூலமே இந்தியா பாக் ஆயுத போட்டியை நாம் தட்டிக்கேட்க முடியும். உடனே சில தேசபக்த குஞ்சுகள் கசாபை அனுப்பிய நாட்டிற்கா நமது ஆதரவு என்று வெடிப்பார்கள். சரி சம்ஜூத்தா எக்ஸ்பிரசுக்கு சங்க பரிவாரங்களை அனுப்பியது மட்டும் என்னவாம்? அதில் கொல்லப்பட்ட பாக்கின் அப்பாவி மக்களது உயிர் மட்டும் மலிவானதா?

பொதுவில் கிரிக்கெட் என்பதே சோம்பேறித்தனமான விளையாட்டு. மனித உடலின் அதீத சாத்தியங்களுக்கும், கொண்டாட்டத்திற்கும் அங்கே இடமில்லை. கால்பந்து, ஹாக்கி போல மனதுக்கும், உடலுக்கும் வேலை கொடுத்து ஆற்றுப்படுத்தும் சக்தி அதற்கில்லை. வீரர்கள் பெரும்பான்மை நேரங்களில் அசையாமல் இருப்பதுதான் கிரிக்கெட்டின் பண்பு. அதனால்தான் அதுஆங்கிலேய ‘துரை’களின் மத்தியில் பிரபலமாக இருந்தது. இந்தியாவில்கூட பெரும்பான்மை ஆதிக்க சாதிகளை சார்ந்தோரே கிரிக்கெட்டில் நுழைந்து பெரிய ஆளாகும் வாய்ப்பை இன்றும் பெறுகிறார்கள். இந்திய அணியின் பலவீனமாகக் கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவுக்கும் இது முக்கிய காரணம். மற்ற அணிகள் மூன்று வருடத்துக்கு ஒரு அதிவேக பந்து வீச்சாளர்களை தயார் செய்துவிடும் போது இங்கே முப்பது வருடத்துக்கு ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் வருவது பெரிய பாடாக இருக்கிறது. மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தால்தான் நூறு மைல் வேகத்தில் பந்து போட முடியும். பார்ப்பனிய ‘மேல்’சாதியினர் பிடியில் இந்திய கிரிக்கெட் இருக்கும் போது இது இப்போதைக்கு சாத்தியமில்லை. அந்த வகையில் ‘மேல்’சாதி இந்திய அணிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் பாக் அணியைத்தான் ஆதரிக்க வேண்டும். வட இந்தியாவில் இருப்பது போன்ற இந்து தேசிய வெறி தமிழகத்தில் இல்லை. இதன் பாதிப்பில்தான் சென்னையில் இந்திய அணிதோற்றாலும் வெற்றிபெற்ற அணியை இரசிகர்கள் எழுந்து நின்றுபாராட்டுவார்கள் என்பது உலகறிந்த செய்தி. என்ன இருந்தாலும் பெரியார் பிறந்த மண் அல்லவா?

ஒழியட்டும் போலி இந்திய தேசபக்தி !!

காங்கிரசின் வேட்டி கிழிப்பும், கோஷ்டி மோதலும் …


தேசியக் கட்சி என்ற பந்தாவுடன் வலம் வரும் காங்கிரசு கும்பல்தான் இந்நாட்டின் எல்லா வகை அரசியல் சீரழிவுக்கும் தோற்றுவாய். காலனிய ஆட்சியின் போதே வெள்ளையனது பிச்சையால் உருட்டித் திரட்டப்பட்ட இந்த கட்சியில் அப்போதும் இப்போதும் மிட்டா மிராசுதார்களும், பண்ணைகளும்தான் தலைவர்களாக உலா வருகிறார்கள். காந்தி, காமராஜ், கக்கன் என்று மக்கள் திரளுக்கு மட்டும் அதுவும் பண்டாரங்கள், பரதேசிகளைப் போன்ற சித்திரத்தை காட்டிவிட்டு உள்ளூர் முதல் மாநிலம், டெல்லி வரை ‘மேல்’சாதி, மேட்டுக்குடி, பரம்பரை பணக்காரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்.

தூய வெள்ளையும் சொள்ளையுமாய் கதராடை அணிந்து வரும் இந்த எளியவர்களது சொத்துக் கணக்கை கேட்டீர்கள் என்றால் அந்த எளிமை ஆபாசமாக உறுத்தத் துவங்கும். விருந்தினருக்கு சுதேசி பானமான நீர் மோரைத் தரும் வீட்டுக்காரர் ஒரு சீமைச்சாராய அதிபர் என்றால் என்ன சொல்வீர்கள்?

ஆகஸ்டு 15 அதிகார மாற்றத்திற்கு பின்னர் இந்தியா முழுவதும் இந்த ஆண்டைகளின் கட்சிக்கெதிராக மக்கள் உணர்வு கொந்தளிக்க தொடங்கியிருந்தது. ஒவ்வோரு மாநிலத்திற்கேற்ப இந்த எதிர்ப்புணர்வு பிராந்திய அரசியல் இயக்கமாக எழத் துவங்கியிருந்தது. கேரளம், மே.வங்கத்தில் இடது சாரி இயக்கம், தமிழகத்தில் திராவிட இயக்கம், மராட்டியத்தில் சிவசேனா, இந்தி மாநிலங்களில் சமூக நீதிக்கட்சிகள், பா.ஜ.க என்று 50களில் துவங்கி 80கள் வரை இந்த போக்கை காணலாம்.

தமிழகத்தில் கூட தி.மு.க தனது சொந்த அரசியல் கொள்கை காரணமாக வெற்றி பெற்றது என்பதை விட காங்கிரசு மேல் இருந்த மக்களின் எதிர்ப்புணர்வு காரணமாக வெற்றி பெற்றது என்றே மதிப்பிடலாம். நேர்மறை அடிப்படையில்லாத ஒன்று எதிர்மறை காரணமாக வென்ற சூழல் அது. பரம்பரை பணக்காரர்களான காங்கிரசு தலைவர்களை எதிர்த்து எளிய பின்னணியிலிருந்து வந்த தமிழக இளைஞர்கள் தி.மு.க என்ற பெயரில் வெற்றி கொண்டார்கள்.

ஆந்திராவில் கூட என்.டி.ராமாராவ் காங்கிரசு எதிர்ப்புணர்வு காரணமாகவே குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்தார். லல்லு, மொலாயம், மாயாவதி என்று பலரும் இதே காரணத்தினாலேயே அரசியலில் வெற்றி பெற்றார்கள்.

எனினும் இந்த போக்கு காரணமாக காங்கிரசின் பலம் வெகுவாக குறைந்தாலும், சரியான மாற்று உருவாகாத நிலையில் அதுவே இன்னமும் ஆளும் கட்சியாக தொடருகிறது. மேலும் காங்கிரசை எதிர்த்து வந்த கட்சிகள் அனைத்தும் இன்று குட்டி குட்டி காங்கிரசாக மாறிவிட்டன. அரசியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கிடையே வேறுபாடு இல்லை. காங்கிரசு அகில இந்திய கார்ப்பரேட் கம்பெனி என்றால் இந்த கட்சிகள் பிராந்திய அளவிலான கம்பெனிகளாக நிலைபெற்று விட்டன.

இன்று கூட்டணி பலத்தால் ஆளும் காங்கிரசு கும்பல் தனது அதிகார மேன்மை காரணமாகவே கட்சி உறுப்பை பேணி வருகிறது. 90களுக்கு பிறகு இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் தீவிரமாக அமல்படுத்தபட்ட காலங்களில் காங்கிரசின் அரசியல் பலம் குறைந்திருந்தாலும் அதன் ஊழல், நிறுவன பலம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. நரசிம்மராவ் மகன் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யாத நிலக்கரி ஊழலாகாட்டும், சுக்ராம் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றியதாக இருக்கட்டும், போபார்ஸ் மூதல் பேர்ஃபாக்ஸ் வரை இராணுவ இறக்குமதி ஊழல், பங்கு சந்தை ஊழல், தொலைத்தொடர்பு ஊழல் என்று நாடறிந்த பிரம்மாண்டமான ஊழல்கள் அத்தனையிலும் காங்கிரசு ஆதாயம் அடைந்திருக்கிறது.

பன்னாட்டு முதலாளிகள், இந்திய முதலாளிகள், அமெரிக்கா முதலான ஏகாதிபத்தியங்கள் அனைவரும் இன்று காங்கிரசையே முதன்மையான கூட்டாளியாக பயன்படுத்துகின்றனர். இரண்டாவது பங்காளி பா.ஜ.க. இன்று அம்பானிகளின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவிலேயே பெரும் நிறுவனமாக எழுந்திருப்பது காங்கிரசின் ஆட்சி மூலம்தான்.

இந்தப் பின்னணியில் தமிழக காங்கிரசைப் பார்போம்.

___________________________________________

60கள் வரை பலநூறு ஏக்கர் நிலம் சொந்தமான பண்ணையார்கள், ‘மேல்’சாதியினர், மேட்டுக்குடியினர் எல்லாரும் காங்கிரசை அலங்கரித்தனர். காமராசரின் ஆட்சி கூட இவர்களுக்குத்தான் நன்கு பயன்பட்டது. இதன்பின் திராவிட இயக்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், காங்கிரசு தனது சமூக அடிப்படையை முற்றிலுமாக இழந்தது. இன்றும் தொடர்கிறது. மத்தியில் ஆட்சி அதிகாரம், திராவிட இயக்கத்தின் சீரழிவு, திராவிட கட்சிகள் கூட்டணி போன்றவற்றை வைத்தே காங்கிரசு வாழ்கிறது. இதனால் கருமாதிக்கு போக வேண்டிய கட்சி இன்றும் தமிழகத்தில் சவுண்டு விடுகிறது.

இந்த போக்கினாலேயே காங்கிரசு என்பது தலைவர்கள் மட்டும் இருக்கும் கட்சியாக மாறிவிட்டது. தொண்டர்களை வழங்கும் சமூக அடித்தளத்தை காங்கிரசு இழந்தாலும் தேர்தலுக்கு தேர்தல் தி.மு.கவோ, அ.தி.மு.கவோ இந்த உண்டு கொழுத்த சொகுசுக் கனவான்களது கட்சியை சுமந்தன. 70,80களில் இந்த பண்ணையார்கள் கல்யாண மண்டபங்கள், திரையரங்குகள், மொத்த ஏஜென்சிகள், கேஸ்-பெட்ரோல் முகவர்களாக பரிணமித்தனர். 90களுக்கு பிறகு அபரிதமான அரசு வங்கிக் கடன் மூலம் பெரும் முதலாளிகளாகவும் வளர்ந்து விட்டனர். இன்று தமிழக காங்கிரசில் இருக்கும் அத்தனை தலைவர்களும் சுயநிதிக் கல்லூரிகளை வைத்தும் நடத்துகின்றனர். இன்று அரசு வங்கிகளின் வராக்கடன்களது பட்டியிலில் பல காங்கிரசு தலைவர்கள் அடக்கம்.

பார்ப்பன ஊடகங்கள், மேட்டுக்குடியினரை பொறுத்த வரை திராவிட இயக்கம் என்றால் லோ கிளாஸ் மக்களது ரவுடி இயக்கம், காங்கிரசு என்றால் நாகரீகமான கட்சி என்ற ஸ்டீரியோ டைப் கருத்தை அன்றும் இன்றும் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த காங்கிரசு முதலைகளுக்கு எப்போதும் ஒரு மேட்டிமைத்தனமான பார்வை இருக்கும். தாங்கள்தான் ஆளப்பிறந்தவர்கள் என்று கூச்சமில்லாமல் கருதிக் கொள்வார்கள்.

தலைவர்கள் நிரம்பிய கட்சி என்பதாலேயே இங்கு தொண்டர்கள் யாருமில்லை. தலைவர்கள் மட்டும் இருப்பதினால்தான் இங்கு வேட்டி கிழிப்பு கலாச்சாரம் ஒரு தேசிய அடையாளமாக அனைவராலும் ஒத்துக்கொள்ளப்படுகிறது.

இன்று திடீர் பணக்காரர்களாக ஆனவர்கள், குறுக்கு வழியில் தொழிலதிபர்களாக மாறியவர்கள், அதிகாரத்தின் உதவயால் தொழில் செய்பவர்கள் என அனைவரும் தமது தொழில் பாதுகாப்பு காரணமாக காங்கிரசில் சேர்ந்து ஒரு தலைவர் பதவியை போட்டுக் கொள்கின்றனர். இந்த அடையாளம் தொழில் போட்டி, தாவாக்கள், பஞ்சாயத்துக்கள், போலிசு பிரச்சினை என சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது.

தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளில் எல்லாம் அத்தனை சுலபமாக தலைவர் பதவியை பெற்று விட முடியாது. அதற்கு ஏதோ ஒரு விதத்தில் களப்பணி செய்து ஒரு சமூக அடிப்படையை திரட்ட வேண்டும் என்ற ஒழுங்கு இருக்கிறது. காங்கிரசுக்கு அந்த களப்பணி தேவை இல்லை என்பதால் இங்கு சுலபமாக தலைவர் பதவியை பெற்றுவிடலாம். அதற்கு தேவைப்படும் தொகையை கட்டி விட்டீர்களென்றால் பதவி வீடு தேடி வரும்.

மேலும் உங்களுக்கு தலைவர் பதவி வந்துவிட்ட படியாலேயே நீங்கள் கிரமமான கட்சி வேலைகள் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படியே செய்ய விரும்பினாலும் காங்கிரசில் என்ன எழவு களப்பணி காத்திருக்கிறது? அவர்களுக்கு இருக்கும் ஒரே பணி சத்தியமூர்த்தி பவனில் வேட்டியைக் கிழித்துவிட்டு எதிர் கோஷ்டியை பதம்பார்ப்பதுதான். அதுவும் கூட காசு கொடுத்தால் எப்போதும் திரட்டிவிடலாம். இதனால் உள்ளூர் முதலாளிகள், வர்த்தகர்கள், பைனான்ஸ்காரர்கள், என்று பலரும் காங்கிரசில் விருப்பத்தோடு சேர்கின்றனர்.

________________________________________

2.2.2011 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரில் “காங்கிரசில் பதவி வாங்க டீ, சுண்டல் போதும் – மதுரை காங்கிரசு காமடி” என்ற உண்மையிலேயே காமடியான கட்டுரை ஒன்று வந்திருக்கிறது. அதில் வரும் சில பத்திகளை அப்படியே தருகிறோம்,

“…மதுரை காங்கிரசில் முக்கிய நிர்வாகியாக இருப்பவர் வாசன் ஆதரவாளரான கோடீஸ்வரன். கட்சிப் பதவிகளை விற்பதுதான் அவர் செய்யும் கட்சிப்பணி. ஒரு உதாரணத்திற்கு, சமீபத்தில் ரோட்டில் தள்ளு வண்டியில் பிளாஸ்டிக் பாத்திரம் விற்கும் ஒருவரிடம் நான் பிளாஸ்டிக் சாமான்கள் வாங்கினேன். நான் கதர் சட்டை வேஷ்டி கட்டியிருப்பதைப் பார்த்த அவர், “நீங்க காங்கிரஸ்காரரா?” எனக் கேட்டார்.
நான் என் கட்சிப் பதவியைச் சொன்னேன். பதிலுக்கு அவர், “நீங்க எவ்வளவு பணம் கொடுத்தீங்க, நான் இருபதாயிரம் கொடுத்து துணைத்தலைவர் பதவி வாங்கியிருக்கிறேன். இது மாதிரி எட்டு வண்டி சிட்டியில ஓடுது. பாதுகாப்புக்கு இருக்கட்டுமேன்னுதான் இந்த கார்டு” எனச் சொல்லி மதுரை நகர் காங்கிரசு துணைத் தலைவர் என அச்சடித்த விசிட்டிங் கார்டை என்னிடம் காண்பித்தார். அரண்டு போனேன்.
அது போல காங்கிரசு கட்சியில் இருந்தவர் கட்சியிலிருந்து விலகி ஹோட்டல் தொழில் செய்து வந்தார். அவர் பத்தாயிரம் கொடுத்து கட்சியின் துணைத் தலைவர் ஆகியிருக்கிறார். அவர் ஒரு காலத்தில் கட்சியில் இருந்தவர் என்பதால் பத்தாயிரம் ரூபாய் சலுகையாம். இதே போல டாக்டர் ஒருவருக்கும் இருபதாயிரம் ரூபாய் கொடுத்து பதவி வாங்கப்பட்டிருக்கிறது.
தினமும் டீ, சுண்டல் வாங்கிக் கொடுத்தவரை சர்க்கிள் கமிட்டி தலைவராக்கி விட்டார்கள். “டீ, சுண்டல் உடம்புக்கு ஆகாது. மட்டன் சுக்கா சாப்பிடுங்க” என்று ஐஸ் வைத்தவருக்கு டீ, சுண்டல் பார்ட்டியிடமிருந்து கமிட்டி தலைவர் பதவி பிடுங்கி அளிக்கப்பட்டது. டீ, சுண்டலுக்கும், மட்டன் சுக்காவுக்கும் இதனால் சண்டை ஏற்பட நிர்வாகி மட்டன் சுக்காவுக்கே ஆதரவளித்தார்.
அண்மையில் கட்சி ஆபீஸில் டீ, சுண்டல் பார்ட்டியைப் பார்த்தேன். “அண்ணே, நான் இப்ப மாவட்டப் பொதுச் செயலாளர் ஆயிட்டேன்” என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. “ஆபிஸ் பக்கமே வரக்கூடாதுன்னு உன்னை அவர் விரட்டினாரே” என்ற போது ” அதெல்லாம் சமரசம் ஆயிட்டோம். தொடர்ந்து பிரியாணி வாங்கிக் கொடுத்தேன். டெலிபோன் பில் கட்டினேன். இதெல்லாம் நம்ம கட்சியில சகஜம்தானே”…
_________________________

சிரித்துக் கொண்டே படித்துவிட்டீர்களா? காங்கிரசில் சேர்வதும், ஆளாவதும் இத்தனை சுலபமா என்று இனி வலிந்து விளக்கத் தேவையில்லை.

காங்கிரசு கட்சி ரொம்ப ஆக்டிவாக இருப்பது தேர்தல் காலத்தில்தான். கூட்டணி கட்சிகளின் தயவில் சொகுசாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ, எம்.பி என்று செட்டிலாவதற்கான வாய்ப்பை அதுதானே வழங்குகிறது? தேர்தல் காலங்களில் காங்கிரசு குறுநில மன்னர்கள் நடத்தும் மகாபாரதப் போர் தனி ரகம். அதை கதையாக எழுத அந்த வியாசன் வந்தால் கூட நடவாத ஒன்று.

இந்த குறுநில மன்னர்கள் தனித்தனியாக நின்று சண்டையிட்டு கொள்வதற்கு பதில் ஆளுக்கொரு கோஷ்டியாக அணி பிரித்து சிலம்பாடுவார்கள். அதிலும் கொட்டை போட்ட கோஷ்டிகள் சாமர்த்தியமாக காய் நகர்த்தும். தற்போது 63 தொகுதிகளுக்கும் காங்கிரசு கட்சி ஒருவழியாக வேட்பாளர்களை அறிவித்து விட்டது. தங்கபாலு மனைவிக்கு, கிருஷ்ணசாமி மகனுக்கு, செல்வந்த ரவுடி செல்வபெருந்தகைக்கு, பழம் பெருச்சாளிகள் செல்வக்குமார், ஞான சேகரன், பீட்டர் அல்போன்சுக்கு, மொத்தத்தில் வாசன் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, பி.சிதம்பரம் கோஷ்டி, என்று முடித்து விட்டார்கள்.

இதில் என்னமாய் பீலா விட்டார்கள்? இரண்டு முறை உறுப்பினராக இருந்தவர்களுக்கு சோனியா காந்தி நோ சொல்லிவிட்டார் என்று அள்ளி விட்டார்கள். பட்டியலைப் பார்த்தால் மூன்றுமுறைக்கும் மேல் எம்.எல்.ஏவாக இருந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள். தங்கபாலு மைலாப்பூர் தொகுதியை ராவாக லபட்டியிருக்கிறார் என்றாலே இந்த வேட்பாளர் ஒதுக்கீடையும் அதற்கு அன்னை சோனியாவின் அருளையும் புரிந்து கொள்ளலாம்.

ராகுல் காந்தி எனும் நேரு குடும்பத்தின் இளவரசரது சிபாரிசால் யுவராஜ் போன்ற புதிதாக வந்த செல்வக் கொழுந்துகளுக்கு யோகம் அடித்திருக்கிறது. அதிலும் ராகுல் காந்தியின் முயற்சியில் தமிழகத்தில் 13 இலட்சம் உறுப்பினர்களை சேர்த்திருக்கிறார்களாம். அவர்களெல்லாம் பயோடேட்டா, புகைப்படம், சான்றிதழ் கொடுத்து சேர்ந்திருக்கிறார்களாம். இதையெல்லாம் சிலர் மாபெரும் சாதனையாக பீற்றுகின்றனர். கொடுத்தவனெல்லாம் நாளைக்கு ஏதாவது அப்பாயிண்ட்மெண்டோ, இல்லை தொழில் லைசோன்சோ, இல்லை வங்கிக் கடனுக்கோ இந்த உறுப்பினர் பில்டப் பயன்படும் என்று கொடுத்திருக்கிறான். மற்றபடி இந்த 13 இலட்சம் பேரில் பத்துபேர் கூட காங்கிரசுக்கு ஓட்டு அளிப்பது நிச்சயமில்லை.

___________________________________________________

இப்படித்தான் மாபெரும் கொழுப்பு சேர்ந்த ஒரு சதைப்பிண்டமாக காங்கிரசு உப்பி வருகிறது. இத்தகைய ‘ஜனநாயக’ நடைமுறை கொண்ட கட்சிதான் இந்தியாவை வேகமாக ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்து வருகிறது. காங்கிரசின் அத்தனை அரசியல் நிலைப்பாடுகளையும் துளிக்கூட வேறுபாடில்லாமல் ஏற்கும் கட்சிகள்தான் தி.மு.கவும், அ.தி.மு.கவும். இதில் தி.மு.க மற்றுமொரு காங்கிரசு கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது.

காங்கிரசு இந்த நாட்டில் உள்ள ஏல்லா சீர்கேடுகளுக்கும் ஊற்று. இந்த ஊற்றை இந்த நாட்டின் நீதித்துறை, நிர்வாகத்துறை, இராணுவத்துறை என்று சகல அமைப்புகளும் காத்து வருகின்றன. காங்கிரசை ஒழித்தால்தான் இந்தியாவின் தலையெழுத்து மாற்றப்படும். ஆனால் காங்கிரசை தேர்தல் முறையின் மூலம் ஒழிக்க முடியாது. ஏனெனில் இந்த தேர்தலையும், இந்த அரசியல் அமைப்பையும் எது காத்து நிற்கிறதோ அதுவே காங்கிரசையும் காத்து நிற்கிறது.

காங்கிரசு என்ற கட்சியின் அடியொற்றித்தான் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் பயணிக்கின்றன. இவர்களது ஒட்டுமொத்த அழிவில்தான் காங்கிரசின் அழிவும் அடங்கியிருக்கிறது.

பெண் தலைவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?


வர்க்க விடுதலையும் பெண் விடுதலையும்

அரசியல் என்பது ஆண்கள் கோலேச்சும் துறைதான், பெண்களுக்கு அங்கே இடமில்லை என்று பொழுது போக்கு பெண்ணியவாதிகள் சிலர் அவ்வப்போது சலித்துக் கொள்வார்கள். இந்த சலிப்பினாலேயே சோனியா, ஜெயா, குஷ்பு, புவனேஸ்வரி, கனிமொழி போன்ற பெண் தலைவர்களின் அரசியல் வெற்றியை ஆரவாரத்துடன் வரவேற்பார்கள். இந்த பெண் தலைவர்கள் மீது அரசியல் ரீதியான விமரிசனங்கள் இருந்தாலும் ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில் இவர்கள் பெற்ற வெற்றியை சிலாகிப்பார்கள்.

முதலில் எந்த ஒரு துறையையும் அதில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளையும் இப்படி ஆண், பெண் என்று பாலின வேறுபாட்டால் எளிமையாக பிரிப்பது அபத்தம். இந்த உலகில் அரசியல், பொருளாதாரம், சமூகம் அனைத்தும் பாலின வேறுபாட்டை அடிப்படையாக வைத்து மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. செயல்படுவதில்லை. மேற்கத்திய நாடுகளில் எழுந்த நடுத்தர வர்க்க பெண்ணியவாதிகள்தான் முதலில் இப்படி பார்க்கும் பார்வையை பரப்பினார்கள். முதலாளித்துவம், கம்யூனிசம் எல்லாமே ஆணாதிக்கம்தான் என்று ஒப்பிட்டு பேசுவார்கள். சரி, இதிலிருந்து எப்படி விடுதலை என்று கேட்டால் அது இறுதியில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் கோரிக்கையாக மட்டுமே இருக்கும். இன்று அந்த பார்வை தேய்ந்து காற்றில் கரைந்து போயிருக்கிறது. காரணம் அது யதார்த்தத்தோடு கொண்டிருக்கும் கற்பனையான உறவுதான்.

அதே நேரம் உலகம் முழுவதும் சமூக இயக்கத்தில் பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும் அப்பட்டமாகவும், நுட்பமாகவும் பின்பற்றப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த பிரச்சினையை வார்த்தை, மொழியில் மட்டும் ஆய்வு செய்து கண்டுபிடிப்பவர்கள் எவரும் நடைமுறையில் உழைக்கும் வர்க்கத்தின் பெண் விடுதலை குறித்து எதுவும் பேசுவதில்லை, செய்வதில்லை. அது குறித்து அறிந்ததும் இல்லை. ஏனெனில் பெண்கள் எல்லாருக்கும் பிரச்சினைகள் என்பது ஒரே மாதிரியாக இல்லை. பாலியல் ரீதியான பிரச்சினைகளும் வர்க்கத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. பொதுவில் வசதியானவர்கள், ஏழைகள் என்ற வர்க்க வேறுபாடே பெண் உலகத்தையும் தீர்மானிக்கிறது. ஏழைப் பெண்ணின் விடுதலை என்பது பொருளாதாரா துறையில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஆணாதிக்கம் என்பது அதற்கு உட்பட்ட ஒன்றுதான். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் ஆண்களும், பெண்களும் ஒன்றாகத்தான் அவதிப்படுகிறார்கள்.

இந்த உலகில் ஆணாதிக்கத்தை நிர்மூலமாக்குவதற்கு, பொருளாதார அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட பெண்களே துவக்கினார்கள், சாதித்திருக்கிறார்கள். உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறே அதற்கு சான்று. சென்னை சேரி ஒன்றில் வாழும் பெண்ணிடம் என்ன பிரச்சினை அவரது வாழ்வில் முதன்மையானது என்று கேட்டால், “நேரத்திற்கு வராத குடிநீர், கழிப்பறை வசதி இல்லாதது, விலைவாசி உயர்வு, நிலையான வேலை கிடைக்காமை, ஆண்களின் குடிப்பழக்கம் ” என்று பட்டியிலிடுவார். இதையே ரோட்டரி கிளப்பிற்கு வரும் சீமாட்டிப் பெண்ணிடம் கேட்டால், சினிமா, விளம்பரத் துறை, தொழில் முனைவோர், அரசியல் கட்சி போன்றவற்றில் பெண்கள் முன்னிலை வகிக்காதது குறித்து வருந்துவார். அந்த வருத்தத்திற்கு பின்னர் ரோட்டரி கிளப்பின் உறுப்பினர் ஒருவர் அளிக்கும் நட்சத்திர விருந்துடன் அந்த மகளிர் தின கொண்டாட்டம் முடிவுக்கு வரும்.

இன்றைய அரசியலின் பெண் தலைவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?

பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னமும் நிறைவேறாமல்தான் இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வட இந்திய சமூக நீதிக் கட்சிகள் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இட ஒதுக்கீடு தேவை என்கிறார்கள். 33 சதவீத இட ஒதுக்கீடும் சரி, இல்லை அதற்குள் சாதி ரீதியான இட ஒதுக்கீடும் சரி இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் பெண்களது வரவை நிறைவேற்றப் போவதில்லை. வர்க்க ரீதியாக ஆதிக்கம் செய்யும் குடும்பத்தின் பெண்கள்தான் இந்த இட ஒதுக்கீட்டை பெறப் போகிறார்கள். அந்த வகையில் அவர்களது பிரதிநிதித்துவமும், செயல்பாடும் வசதி படைத்த வர்க்கத்தின் சார்பாகவே நடைபெறும். இதில் ஆணென்ன, பெண்ணென்ன? இன்று அரசியல் என்பதே மேட்டுக்குடி குலக்கொழுந்துகளின் தொழில் என்றான பிறகு அதில் பெண்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு மட்டும் அன்றாடங்காய்ச்சிகளின் வாய்ப்பாகவா இருக்கப் போகிறது?

மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரசு சார்பாக போட்டியடும் ஜெயந்தி தங்கபாலுவை வைத்து பெண்ணுரிமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று யாராவது பேசினால் சிரிக்க மாட்டீர்களா? தங்கபாலுவின் மனைவிக்கு இடம் கிடைத்தமைக்கு காரணம் அவர் தங்கபாலு என்ற அரசியல தரகர், சுயநிதிக் கல்லூரி முதலாளி, மெகா டி.வி ஓனர், மற்றும் காங்கிரசு தலைவர் என்ற ஒரு மாகாராஜாவின் மகாராணி அந்தஸ்தை பெற்றிருப்பதுதான்.

தமிழகத்தின் உள்ளூராட்சி தேர்தலையே எடுத்துக் கொள்ளுங்கள். இதில் சில இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு அவர்களும் வெற்றி பெற்று செயல்படுகிறார்கள். இந்த பெண்களில் பெரும்பான்மையினர் தங்கபாலு போன்ற உள்ளூர் அரசியல் ஆதிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். மேலும் இன்றும் கூட இந்த பெண் தலைவர்களை யாரும் உள்ளூரில் பஞ்சாயத்து தலைவர்களாக கருதுவதில்லை. ஊராட்சி தலைவர் யார் என்று கேட்டால் கணவனது பெயரைத்தான் மக்கள் சொல்லுவார்கள். இதனால் மக்கள் ஆணாதிக்க கண்ணோட்டம் கொண்டவர்கள் என்று பொழுது போக்கு பெண்ணியவாதிகள் கருதலாம். உண்மை அதுவல்ல.

ஆதிக்கம் செய்யும் குடும்பத்தின் தலைவனாக இருக்கும் கணவனது செயல்பாட்டில் இந்த மனைவியும் பங்கு பெறுவதன் நீட்சிதான் பஞ்சாயத்து தலைவர் அவதாரம். சாதி, வர்க்க ரீதியாக ஆதிக்கம் செய்யும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் யாரும் தங்களை பாலின ரீதியாக அடையளம் காண்பதில்லை. மக்களும் அவர்களை அப்படி பார்ப்பதில்லை.

எனில் அரசியலில் பெண்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை யார் செய்யமுடியும்? உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்த பெண்கள் வரும் போது மட்டும்தான் அவர்கள் உண்மையிலேயே பஞ்சாயத்து தலைவர்களாக அறியப்படுவார்கள். அவர்களின் கணவர்களது பெயரில் அறியப்படமாட்டார்கள். இதை இன்னும் எடுப்பாக பார்க்க வேண்டுமென்றால் நாடறிந்த பெண் தலைவர்களது பாத்திரத்தின் மூலம் எதிர்மறையாக அறியலாம்.

நேரு குடும்பத்தின் சீமாட்டி சோனியா காந்தி

காங்கிரசு கட்சியின் தலைவராக இந்திய மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும், வழிநடத்தும் சோனியாவின் அருகதை என்ன? ஆக்ஸ்போர்டில் அவர் ராஜீவ் காந்தியை காதலித்தார் என்பதுதான். ராஜ குடும்பத்தை சேர்ந்த இளவரசரை காதலிக்கும் தகுதியே ஒரு பெண்ணை நாடாளும் ராணியாக மாற்றிவிடும் என்றால் அந்த நாட்டை யாராலும் காப்பாற்ற இயலுமா என்ன? முக்கியமாக சோனியாவுக்கு இந்தியாவைப் பற்றியோ, இல்லை இந்திய மக்களது பிரச்சினைகளைப் பற்றியோ இன்று வரை எதுவும் தெரியாது. இது அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமல்ல. உள்நாட்டிலேயே பிறந்த பிரியங்கா காந்திக்கு மட்டும் உண்மையான இந்திய வாழ்க்கை குறித்து என்ன தெரியும்?

ராஜிவ் காந்தி அரசியலுக்கு வந்தது சஞ்செய் காந்திக்கு நடந்த விபத்து காரணமென்றால், சோனியா காந்தி வந்ததும் கூட ராஜிவ் காந்திக்கு நடந்த விபத்துதான். ஆக காங்கிரசின் தலைவராக வருவதற்கு இத்தகைய விபத்துக்களே போதுமென்றால் நாடு எத்தகைய ஆபத்தில் இருக்கிறது? ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதும் சோனியா காந்தியை கெஞ்சிக் கூத்தாடி காங்கிரசின் தலைவராக்கியது காங்கிரசின் ஆண் தலைவர்கள்தான். இதனால் சோனியா காந்தி அரசியல் ஆசைக்கு அப்பாற்பட்டவர் என்பதல்ல. இத்தகைய சீன்கள் நடந்தால்தான் தன்னைப்போன்ற வெளிநாட்டுப் பெண் பதவிக்கு வருவது பொருத்தமாக இருக்கும் என்பது அவரின் அணுகுமுறை.

நேரு குடும்பத்தை சேர்ந்த ஒரு பொம்மையைக் கூட முன்னிறுத்தி இந்திய மக்களை வசியப்படுத்தலாம் என்று காங்கிரசு பெருச்சாளிகள் முடிவு செய்ததன் அபத்தம்தான் சோனியா. இப்படி ஜனநாயகமற்ற முறையில் குடும்ப அந்தஸ்து காரணமாக தலைமைக்கு வந்த சோனியா அதே போல பல காங்கிரசு குடும்ப பெருச்சாளிகளை வைத்துத்தான் அரசியல் செய்ய முடியும். செய்தும் வருகிறார்.

அந்த வகையில் இன்றைய காங்கிரசு மேல் மட்டத் தலைமை என்பது பரம்பரை பரம்பரையாக ஆணாதிக்க இந்துத்வ நிலவுடைமை விழுமியங்களில் புரண்டு நெளியும் கூட்டம்தான். அதன்படி இங்கே இந்த ஆணாதிக்க அடக்குமுறைக்கு தலைமை தாங்கும் வேலையைத்தான் சோனியா செய்து வருகிறார். இதனால் சோனியா பெண் என்பதோடு பெண் விடுதலைக்கும் எதிரியாகவே இருக்கிறார். தள்ளாத வயதிலும் கூட பொறுக்கியாக முடியும் என்று சாதனை படைத்த என்.டி.திவாரி போன்ற மகான்களையெல்லாம் கவர்னர் ஆக்கியது அன்னை சோனியாதான் என்பதை நினைவில் கொள்க.

புரட்சித் தலைவரின் ஆசியுடன் புரட்சித் தலைவி

ஜெயலலிதாவை எடுத்துக் கொள்வோம். எம்.ஜி.ஆரின் படங்களிலும் அவரது வாழ்க்கையிலும் ஆசை நாயகியாக பணி செய்த பலரில் இவரும் ஒருவர். எம்.ஜி.ஆர் கருத்தளவிலும், நடைமுறையிலும் ஒரு பாசிஸ்ட்டாக நடந்து கொண்ட தலைவர். இந்த பாசிசத்துக்குள் பெண்ணை பச்சையாக அடிமைப்படுத்தி ருசிக்கும் விகாரமும் இயல்பாகவே இருக்கிறது. இதை ஏற்றுக் கொண்டுதான் புரட்சித்தலைவியின் இளமைப் பருவம் கழிந்தது. அந்த தகுதியிலேயே பின்னர் கட்சியின் தலைமையை கைப்பற்றினார். ஜானகி, லதாவுக்கு மாற்றாக இந்த தலைவியை சில அ.தி.மு.க பெருச்சாளிகள்தான் திட்டமிட்டு திணித்து வெற்றி பெற்றனர். தமிழகம் கண்ட மிகப்பெரும் அரசியல் விபத்தாகவும் அது மாறிப் போனது.

இந்த அ.தி.மு.க பெருச்சாளிகளும் சரி, பின்னர் வந்த சசிகலா கும்பலின் பெருச்சாளிகளும் சரி, சாதி ஆதிக்கத்திற்கும், பொருளாதார சுரண்டலுக்கும் பெயர் பெற்றவர்கள். அதன் உள்ளீடாக இருக்கும் பெண்ணடிமைத்தனம்தான் இவர்களது கோட்பாடு மற்றும் நடைமுறை என்பதை விளக்கத் தேவையில்லை. ஜெயாவின் சாணக்கிய குருவான சோ கூட தன்னை அப்பட்டமான பெண் விடுதலையின் எதிரியாக பேசி, எழுதி வருபவர்தான். அ.தி.மு.க மகளிர் அணி தலைவிகள் என்றாலே பொதுவில் புரிந்து கொள்ளப்படும் இழிவான பொருளுக்கான அடிப்படையை இவர்கள்தான் உருவாக்கியவர்கள்.

ஆனானப்பட்ட தேவர் சாதி சிங்கங்களே ஜெயாவின் காலில் விழுந்து கும்பிடுவதை வைத்து இது ஆணாதிக்கத்தின் தோல்வி என்றோ பெண் விடுதலையின் வெற்றி என்றோ முடிவு செய்து விடக்கூடாது. இங்கே ஆதிக்க சாதி – வர்க்கத்தின் தலைவியாகவே ஜெயாவுக்கான பாசிசத் தலைமை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அம்மா காலில் விழுபவர்கள் அனைவரும் தனிப்பட்டமுறையில் பெண்களை கேடாக நினைத்து நடத்துபவர்கள்தான். அவர்களது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கூட பொதுவில் அடிமை ராணிகளாகத்தான் வாழ்கிறார்கள். ஆனாலும் பாமரர்களை அடிமைப்படுத்தும் அடிமை ராணிகள்.

பெண்ணுரிமை திடீர் போராளி குஷ்பு

இந்தியா டுடே மூலம் பெண்ணுரிமை போராளியாக அவதரித்த குஷ்புவை எடுத்துக் கொள்வோம். கதாநாயகி என்றால் சுண்டி விழும் சிவப்பு நிறத்தில் உள்ள வட இந்திய பெண்கள்தான் வேண்டும் என்று அலைகிற தமிழ் இயக்குநர்களின் தேடலில் கிடைத்த குஷ்பு வடக்கிலிருந்து வந்தார். கதாநாயகியாக நிலைபெற்றார். பிரபுவுடன் காதல். அவரை மணம் செய்ய்யப் போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நேரம். ஆனாலும் பரம்பரை பண்ணையார் மரபுகளுடன் வாழும் சிவாஜியின் குடும்பம் ஒரு நடிகையை ஏற்க தயாரில்லை. அங்கீகாரமில்லாமல்தான் வாழ வேண்டும் என்ற நிலையில் அது முடிவுக்கு வந்தது. சரி, பெண்ணுரிமை போராளியான குஷ்பு அப்போது இது குறித்து போராடவோ குறைந்த பட்சம் பேசக்கூட தயாரில்லை. என்ன இருந்தாலும் பெரிய இடத்து விவகாரமல்லவா!

பின்னர் சுந்தர் சியை மணந்தார். ஜாக்பாட் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தனது இமேஜை உயர்த்திக் கொண்டார். திரைப்படங்களை தயாரிக்குமளவும் வளர்ந்தார். ஆரம்பத்தில் அம்மாவுடன் நெருக்கமானார். பின்பு ஏதோ பிசினஸ் தகராறு காரணமாக அய்யா கட்சியில் சேர்ந்தார். இடையில் இந்தியா டுடே மூலம் மண உறவுக்கு முந்தைய பாதுக்காப்பு குறித்து பேசினார். தமிழ் ஆர்வலர்கள் பொங்கி எழுந்து குஷ்புவை பெண்ணுரிமை போராளியாக மாற்றி விட்டார்கள். கடைசியில் அதே தமிழ் ஆர்வலர்கள் மூர்ச்சையாகுமளவு தி.மு.கவிலே சேர்ந்து செம்மொழி மாநாட்டிலெல்லாம் முதல் வரிசையில் இடம்பெற்றார். தமிழ் பெற்ற பேறு!

தமிழ் திரையுலகம் திரையில் மட்டுமல்ல திரைக்கு பின்னாலும் பெண்களை வதைக்கும் கொடுமைகள் சொல்லி மாளாதது. அந்த உலகில் அந்த கொடுமைகளை ஏற்றுக் கொண்டு சம்பாதித்து ஆளான குஷ்பு அது குறித்து எங்கேயும் பேசியதில்லை. ஏனெனில் அந்த விழுமியங்கள் சினிமாத் துறையில் இயல்பாக இருக்கும் ஒன்று. அதை ஒத்துக் கொண்டுதான் ஒரு நடிகை அவர் பிரபலமானாலும் குப்பை கொட்டமுடியும். சரியாகச் சொன்னால் பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் கதைகளில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகை பெண்ணுரிமை குறித்து கனவிலும் கூட பேச முடியாதல்லவா?

இன்று தி.மு.கவின் உள்ளூர் பண்ணைகளை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். புரட்சித் தலைவியின் புகழ் பரப்பும் அ.தி.மு.கவிற்கு எதிராக தி.மு.க இறக்கியிருக்கும் மற்றுமொரு புரட்சித் தலைவிதான் குஷ்பு. எனினும் கருணாநிதி குடும்பப் பெண்கள் பொறாமை பயம் காரணமாக விதித்திருக்கும் வரம்பிற்குள் நின்றுதான் குஷ்பு தனது அரசியல் கடமையை ஆற்றுகிறார். பதிலுக்கு தி.மு.கவின் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் அவருக்கும் ஒரு பங்கு காத்திருக்கிறது. எனில் குஷ்புவின் அரசியல் வெற்றியை பெண்களின் வெற்றியாக பார்க்க முடியுமா?

முக்குலத்தோர் வீராங்கனை புவனேஸ்வரி

இரசிகர்களால் பூனைக்கண் என்று அன்பாக அழைக்கப்படும் புவனேஸ்வரியின் கதையை பார்ப்போம். சினிமாவில் சில காட்சிகளில் வந்து போகும் பாத்திரமாகவும், தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களில் வில்லியாகவும் நடித்து ஏதோ கொஞ்சம் புகழ் பெற்றார். பிறகு வாய்ப்பு கிடைக்காத போது அல்லது கிடைத்த வாய்ப்புகளை வைத்து மற்ற நடிகைகள் செய்யும் ‘தொழிலை’யும் செய்து வந்தார். அதில் ஏதோ உள் குத்து நடந்து விபச்சார வழக்கில் கைதானார். தன்னைக் கைது செய்தவர்கள் மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று புவனேஸ்வரி போட்ட பட்டியிலில் தமிழ் திரையுலகமே கொஞ்சம் பயந்து போனது. அதை எதிர்த்து பெரிய ஆர்ப்பாட்டமும் செய்தது. இடையில் புவனேஸ்வரி பேசத் துவங்கினால் பெரிய கைகள் சிக்கும் என்று அந்த வழக்கை ஏதோ ஊற்றி மூடிவிட்டார்கள்.

பிறகு திடீரென்று ஒரு நாளில் தேவர் குல நாட்டாமை சேதுராமன் கட்சியில் சேர்ந்து மகளிர் அணித் தலைவியாக அறிவிக்கப்பட்டார். விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணையே இப்படி ஒரு பதவியில் நியமித்தது குறித்து அந்த தேவர் குல சிங்கத்திற்கு விளிம்பு நிலை மனிதர்களை வாழ்விக்க வந்த திலகம் என்று பட்டம் கொடுக்க முடியுமா? புரட்சித் தலைவியின் காலில் விழுந்த சிங்கங்கள் இப்படி புவனேஸ்வரியையும் தலைவியாக்கி அழகு பார்ப்பதில் பெரிய முரண்பாடு இல்லை. இன்று புவனேஸ்வரி போயஸ் தோட்டம் சென்று அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய கையோடு தேர்தல் பிரச்சாரத்திற்கும் சென்று விட்டார்.

இங்கே கவர்ச்சிக்கு அறியப்பட்ட ஒரு நடிகையை மலிவாக பயன்படுத்தும் ஓட்டுக் கட்சி அரசியலைத்தான் காண்கிறோம். தொழில் செய்யும் ஒரு நடிகை அரசியலுக்கு வரக்கூடாதா என்று சிலர் கேட்கலாம். ஆனால் அன்றாட வாழ்வில் ஆயிரத்தெட்டு இடர்களுடன் வாழும் உழைக்கும் வர்க்க பெண்களை இந்த நடவடிக்கை இழிவுபடுத்தவில்லையா? மேக்கப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகையை வைத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி கூட்டம் சேர்க்கலாம் என்பது கூட சாராம்சாத்தில் விபச்சாரம் போன்றதுதான்.

கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெயிட்டாக அடிபடும் கனிமொழி சமீபத்தில் குமுதம் ரிப்போர்ட்டரில் ” நான் பெண் என்பதால் டார்கெட் செய்யப்படுகிறேன்” என்று கூறியிருந்தார். பெண்ணுரிமை என்னபாடு படுகிறது பாருங்கள்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் கனிமொழி காலச்சுவடிலும், உயிர்மையிலும் சில வீணாய்ப் போன கவிதைகளை எழுதி வந்தார். எல்லாம் திராவிட இயக்கத்தோடு ஒட்டவே ஒட்டாத தனிமனித – உள் மன – அடி ஆழக் – கவிதை கண்றாவிகள். கனிமொழிக்கு ஜால்ரா போட்டால் தி.மு.க அரசில் பொறுக்கித் தின்னலாம் என்று கணக்கு போட்ட சில இலக்கியவாதிகள் இந்த கவிதைகளுக்கு தேனே,மானே என்று டன்கணக்கில் ஐஸ் வைத்தார்கள். கனிமொழியும அதை உண்மையென நம்பி அவர்களை ஆதரித்தார்.

பிறகு கருணாநிதியின் குடும்பத்திற்குள் பாகப்பிரிவினை வந்த போது ராஜாத்தி அம்மாள் “எனக்கு ஒன்னுமே இல்லையா” என்று மூக்கைச் சிந்திய போது கனிமொழி எம்.பியானார். பிறகு டெல்லியில் தி.மு.க மையமானார். ஸ்பெக்ட்ரம் ஊழலில், ராடியா டேப்பில் புகுந்து விளையாடினார். இவரும் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக கிளம்பியிருக்கிறார்.

கனிமொழியின் அரசியல் வருகையை பெண்ணுரிமையின் வெற்றியாக யாரும் எடுத்து கொள்ள முடியாதில்லையா? சொல்லப்போனால் அவரது நைனா பலகாலம் அங்கீகரிக்காத துணைவியின் மகள் என்ற முறையில் அவர் பெண்ணுரிமைக்காக பேசுவதாக இருந்தால் கருணாநிதியைத்தான் லெப்ட் அன்ட் ரைட் வாங்கியிருக்க வேண்டும். கருணாநிதி மட்டுமா, தி.மு.கவில்தான் எத்தனை இரண்டு பெண்டாட்டிகாரர்கள்! சமீபத்தில் டி.ஆர் பாலுவின் அதிகாரப்பூர்வ மனைவி ஆந்திராவிலிருக்கும் நாவிதரானா அதிகாரப்பூர்வமற்ற மனைவிக்கு எந்த அங்கீகாரமுமில்லை என்று பத்திரிகைக்கு செய்தியே அனுப்புகிறார். இதில் நாவிதர் என்று குறிப்பிட்டு இழிவுபடுத்தும் அளவு கேவலமான இந்த கட்சியில் கனிமொழி பெண்ணுரிமைக்காக பேசுவதாக இருந்தால் பாலுவை அல்லவா குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்?

இரண்டு பெண்டாட்டிகள், எண்ணிக்கையில்லாத வைப்பாட்டிகள் என்று வாழும் தி.மு.க ஆணாதிக்கவாதிகளின் வெற்றிக்குத்தான் நம்ம கவிஞரம்மா இப்போது கிளம்பியிருக்கிறார். இதில் தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா போன்ற கொசுறு கவிஞர்களெல்லாம் கூட கலந்து கொள்கிறார்கள். இவர்களெல்லாம் பெண்களின் பிரதிநிதி என்றால் நாம் தமன்னாவையும், பிரியங்கா சோப்ராவையும் ஏன் ஷகிலாவையும் கூட முன்னோடிகளாக ஏற்கலாம்.

உழைக்கும் வர்க்கத்திலிருந்தே பெண் தலைவர்கள் தோன்றுவார்கள்

ஜெயலலிதா தொடங்கி, குஷ்பு, கனிமொழி, புவனேஸ்வரி வரைக்கும் தாங்கள் பெண்கள் என்பதால் தாக்குதலுக்கு உள்ளாகிறோம் என்று கூறுவது அருவெறுப்பாக இல்லையா?

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல இந்தியாவில் சாதி, வர்க்க ரீதியாக ஆதிக்கம் செய்யும் குடும்பங்கள்தான் அரசியலிலும் கோலேச்சுகிறார்கள். இந்த குடும்பங்களிலிருந்து திணிக்கப்பட்ட இந்த பெண் தலைவர்களை நாம் எப்படி பெண்ணுரிமையின் வெற்றியாக போற்ற முடியும்? உண்மையில் பெண்ணுரிமையின் அபாயத்தையும், அவல நிலையையும்தான் இந்த தலைவர்களது வருகை காட்டுகிறது.

கொதிக்கும் வெயியில் தார் போடும் பெண்கள், சில்லிடும் குளிரிலும் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்கள், குடலை புரட்டும் துற்நாற்றத்தில் நின்று கருவாடு பதம் செய்யும் பெண்கள், வாடிப்போன மலர்களாக ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள், குடும்பத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணிக்கும் நடுத்தர வர்க்கத்து பெண்கள்…. இவர்களிடமிருந்துதான் உண்மையான பெண் தலைவர்கள் தோன்றி வரமுடியும்.

ஆனால் இந்த சமூக அமைப்பும், தேர்தல் அரசியலும் இந்த உழைக்கும் பெண்களை நுழையவிடாமல் பல்வேறு தடைகளை பூட்டி வைத்திருக்கிறது. அதை உடைக்க வேண்டுமென்றால், பெண் விடுதலையை சாதிக்க வேண்டுமென்றால் நாம் இந்த தேர்தல் முறைக்கு வெளியே இருந்துதான் போராட வேண்டும்.

கள்ளனிடமே கஜானா சாவியைத் தூக்கிக் கொடுத்து காவலுக்கு நிறுத்திய கதை…


கள்ளனிடமே கஜானா சாவியைத் தூக்கிக் கொடுத்து காவலுக்கு நிறுத்திய கதையாக 91ஆம் ஆண்டு கேரளத்தில் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் நடந்த ஊழலில் தொடர்புடைய பி.ஜே தாமஸ், மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் கமிஷனராக கடந்த செப்டம்பரில் நியமிக்கப் பட்டார். பி.ஜே தாமஸ் நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரதமர் மவுனமோகன் சிங், தாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், ஏற்றுக் கொள்வதாகவும், இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்வதே முக்கியமானது என்று தெரிவித்து விட்டார்.

பிரதமரின் இந்த ‘விளக்கத்துக்காகவே’ காத்திருந்த எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், பிரதமரே தனது தவறை ‘உணர்ந்து’ பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதால், இந்த விவகாரத்தை இத்தோடு ஊத்தி மூடி விடுவது நல்லது என்று திருவாய் மலர்ந்துள்ளார். அவரது கட்சியின் செய்தித் தொடர்பாளர் அதற்கு மேலாக மன்மோகன்சிங் பொறுப்பேற்றுக் கொண்டதோடு நில்லாமல் மன்னிப்பு ஒன்றையும் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பிரகாஷ் காரத்தோ, பிரதமர் பாராளுமன்றத்தில் கொடுக்கப் போகும் விளக்கத்துக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தேசியளவிலான முதலாளித்துவ ஊடகங்களும் ஏதோ நெம்ப நல்லவரான மவுனமோகன் சிங்கிற்கு இந்தச் சம்பவம் தீராத களங்கத்தை இப்போது தான் புதிதாக ஏற்படுத்தி விட்டது போலவும், அதற்கு அவரே தனது நீண்ட மவுன விரதத்தைக் கலைத்து ஒரு பதிலைச் சொல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது போலவும் மக்களுக்குக் கதை சொல்லி வருகின்றன. என்னதான் புளுகினாலும், பித்தலாட்டம் செய்தாலும், கொள்ளையடித்தாலும் இவரு ரொம்ப நல்லவருன்னு எல்லாரும் சேர்ந்து பாடும் கோரஸ் சப்தம் நம் காதில் காய்ச்சிய ஈயம் போய் பாய்கிறது.

ஏதோ தவறு நடந்து போச்சு என்று முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு இப்போது சொல்லும் இதே பிரதமர் தான் இந்தாண்டு ஜனவரி மாதம் தாமஸின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாணைகளின் போது தாமஸின் மேல் இருக்கும் ஊழல் புகார்கள் பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னார். தாமஸின் மேல் நடந்து வரும் ஊழல் வழக்கு பற்றிய விபரங்கள் அவரது சுயவிவரத்தில் (பயோடேட்டா) காணப்படவில்லையென்றும் அதனால் அது பற்றித் தமக்கு ஒன்றுமே தெரியாது என்றும் கூசாமல் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.

ஒரு சாதாரணக் குடிமகன் பாஸ்போர்ட் பெற வேண்டி விண்ணப்பித்தாலே அவர் மேல் ஏதேனும் வழக்குகள் இருக்கிறதா, இன்ன முகவரியில் தான் இருக்கிறாரா என்பது பற்றியெல்லாம் காவல் துறையைக் கொண்டு விசாரித்து உறுதி செய்து கொள்கிறார்கள். ஒரு சாதாரண குமாஸ்தா வேலைக்கு ஆள் எடுப்பதாக இருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தையே தோண்டியெடுத்து விசாரிக்கிறார்கள். ஆனால், ஒரு நாட்டின் ஊழல் கண்காணிப்பு அமைப்பின் முக்கியமான பதவியொன்றிற்கு ஒருவரை நியமிக்கும் போது மட்டும் அவரே கொடுத்த சுயவிவரத்தை மட்டும் தான் கணக்கில் எடுத்தார்களாம் – அவரது பின்னணி குறித்து விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ளவில்லையாம். இதையும் எந்தக் கூச்ச நாச்சமும் இன்றி நீதிமன்றத்தில் சொன்னது நாட்டின் மிக உயர்ந்த பதவில் இருக்கும் ஒருவர்!

இந்தக் புளுகுணிக் கதைகளையெல்லாம் எந்தக் எதிர்க் கேள்வியும் இன்றி மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன முதலாளித்துவப் பத்திரிகைகள். இவர்களெல்லாம் படித்தவர்களாம்.

தேசியளவிலான ஊடகங்களில் தாமஸ் 91ஆம் ஆண்டு கேரள உணவுத் துறைச் செயலாளராக இருந்த போது பாமாயில் இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்து அது பற்றி நடக்கும் விசாரணையில் அவரும் அக்கியூஸ்டு லிஸ்ட்டில் இருப்பது பற்றியும் குற்றப்பத்திரிகையில் அவரது பெயரும் இருப்பதைப் பற்றியும் அம்பலப்படுத்தி எழுதி நாறடித்துக் கொண்டிருந்த போதும் கூட அவரது பதவியைப் பறிக்காமல் விட்டு வைத்திருந்தார் நெம்ப நல்லவரான மவுனமோகன்.

மன்மோகன் சொல்லும் இந்தத் “தெரியாது” என்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பே பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் அவரின் இந்தத் “தெரியாது” அஸ்திரத்தை மக்களை நோக்கி ஏவி விட்டுள்ளார். இப்போது செய்வதைப் போலவே அப்போதும் முதலாளித்துவ ஊடகங்கள் அந்தக் கதைகளை கர்ம சிரத்தையாக நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தற்போது தலைப்புச் செய்தியிலிருந்து இரண்டாம் பக்கத்துக்கும் மூன்றாம் பக்கத்துக்கும் நகர்ந்து விட்டது – கூடிய விரைவில் எட்டாம் பக்கத்தின் எட்டாம் பத்திக்கும் போய் விடும். ஸ்பெக்ட்ரம் நாடகத்தின் பலியாடான ஆ. ராசாவைக் கம்பிகளுக்குப் பின்னே தள்ளியாகி விட்டது. ஆனால், அந்தப் பதவிக்கு அவரை ரெக்கமன்டேசன் செய்த – ஊழலில் பலனடைந்த – டாடாவும், மிட்டலும், அம்பானியும் எஸ்கேப்பாகி விட்டனர். தன் உள்ளங்கைகளுக்குள்ளேயே ஊழல் நடந்து கொண்டிருந்த போது மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங் அப்பாவியாகி விட்டார்.

அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது. நம் நாட்டின் அணு விஞ்ஞானிகள் எத்தனையோ வருடங்களாக ராப்பகலாக உழைத்து சொந்த முயற்சியில் உருவாக்கிய அணு உலைகள் அனைத்தையும் கொண்டு போய் தனது அமெரிக்க எஜமானர்களுக்கு பாத காணிக்கையாக்கி விட்டார் மன்மோகன். அதற்கு வழிவகை செய்த அமெரிக்க ஹைட் சட்டம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றைக்குக் கேள்வி கேட்டபோதும் இன்று பி.ஜே தாமஸ் விவகாரத்திற்குச் சொன்ன அதே பதிலைத் தான் சொன்னார் – “ஹைட் சட்டமா…? அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே”

எஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை வழங்கும் செயற்கைக்கோள் ட்ரான்ஸ்பான்டர்களை தேவாஸ் எனும் தனியார் கம்பெனிக்கு தாரைவார்க்க 2005ம் ஆண்டே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இஸ்ரோ நிறுவனத்தின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸும் தேவாஸ் நிறுவனமும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்திற்கான அனுமதியை அளித்தது பிரதமர் உள்ளிட்ட காபினெட் அமைச்சர்களின் கூட்டம். வின்வெளித் துறையோ நேரடியாக பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடியது.

பின்னர் இந்த ஒப்பந்தத்தின் விபரங்கள் ஊடகங்களில் அம்பலமாகி ஊரே நாற்றமடித்துக் கொண்டிருந்த போது இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயரோ, ட்ராஸ்பான்டர்களை தனியார் கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்வது தான் எங்கள் பணி. அதிலிருந்து கிடைக்கும் ஸ்பெக்ட்ரம் பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்றார். அதாவது எல்லாரும் சேர்ந்து கொண்டு “நாங்கள் தாம்புக் கயிறைத் தான் விற்றோம் அதில் கட்டப்பட்டிருந்த மாட்டைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்றனர்”

நமது மவுனச்சாமியார் வாய் திறந்து அளித்த ‘விளக்கமும்’ இது தான் – “எனக்குத் தெரியாது” . தனக்குக் கீழ் நேரடியாக இயங்கும் ஒரு துறையில் நடந்துள்ள இந்த முறைகேடுகள் பற்றியே ஒரு பிரதமருக்குத் தெரியாதென்று சொல்வாராம், அவரை நாமும் மெத்தப் படித்தவர், பொருளாதாரத்தில் புலி, நேர்மையில் எலி என்றெல்லாம் நம்ப வேண்டுமாம் – அப்படித்தான் முதலாளித்துவ ஊடகங்கள் நம்மிடம் சொல்லுகின்றன.

இன்ன துறைகளுக்கு இன்னின்ன அமைச்சர்கள் தான் இருக்க வேண்டும் என்று பெருமுதலாளிகள் கோருகிறார்கள் என்றால், அதன் மூலம் அவர்கள் அடையக் கூடிய ஆதாயம் என்னவாய் இருக்கும் என்று புரிந்து கொள்ளத் தெரியாது. தனது அரசின் கீழ் இருக்கும் ஒரு துறையே கார்ப்பரேட் தரகர்களுக்கும் தனது கட்சியின் முக்கிய தலைகளுக்குமான பேச்சுவார்த்தைகளை இரசியமாய் பதிவு செய்திருப்பது பற்றித் தெரியாது. அதில் ஊழல் நடத்தப்படும் விதம் குறித்தும் ஆதாயம் அடைந்தது குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரியாது.

இதெல்லாம் ஒன்றும் தெரியாது என்றால் வேறு என்ன எழவு தான் தெரியும்? விசயம் அம்பலமான பின் தெரியாது என்று கூசாமல் புளுகத் தெரியும். அப்படிப் புளுகுவதையும் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டே செய்யத் தெரியும். அறிவாளியாயும் முட்டாளாயும் ஒரே நேரத்தில் நடிக்கத் தெரியும்.

மேற்படித் திறமைகளும் நடுத்தர வர்க்கத்தினரிடையே எடுபடும் ‘படித்தவர்’ எனும் இமேஜும் சேர்த்து தான் அவரை பிரதமர் நாற்காலியில் நீடிக்க விட்டுள்ளது. இன்று தேசத்தின் வளங்களனைத்தையும் கொள்ளையிட்டுப் போகும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டுத் தரகு முதளாளிகளுக்கும் இப்போதைக்கு இப்படி ஒரு அப்பிராணி மூஞ்சி தேவையாக இருக்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளின் பகல் கொள்ளைகளுக்குப் பயன்படுவார்களென்றால் மோடி போன்ற ஒரு ரத்தக் காட்டேரி ‘திறமையான’ நிர்வாகியாக அவதரிக்க முடியும். மன்மோகன் போன்ற ஒரு காரியவாதக் கல்லூளிமங்கன் ‘நல்லவராகவும், அப்பாவியாகவும்’ வேடம் போட்டுக் கொள்ள முடியும்.

இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்குறா


நடிகை சுஜாதாவின் பேட்டி பல வருடங்களுக்கு முன்பு குமுதத்தில் வெளியாகியிருந்தது.

‘‘நீங்கள் வீட்டில் இருக்கும்போது என்ன உடை அணிவீர்கள்?’’ என்பது கேள்வி. அதற்கு சுஜாதா சொல்லியிருந்த பதில், ‘‘வீட்டுல இருக்கும்போது நான் பறச்சி மாதிரி ட்ரெஸ் பண்ணுவேன்’’
————————————–
நடிகை சோனாவை பேட்டி எடுக்க வேண்டியிருந்தது. ‘உங்களுக்குப் பிடித்த கெட்டவார்த்தை ஒன்று சொல்லுங்க’ என்றதும் ‘‘போடா ங்கோத்தா, ங்கொம்மா, தேவடியா பையா’’ என்று அவருக்கு தெரிந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தார். அந்த வரிசையில் அவர் சொன்ன ‘கெட்டவார்த்தை’, ‘‘பற நாயே’’
——————————————
எழுத்தாளர் அழகிய பெரியவனின் சிறுகதை ஒன்று ‘நடந்த கதை’ என்ற பெயரில் குறும்படமாக வெளியாகியிருக்கிறது. இதன் வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்பு சென்னை ஃபிலிம் சேம்பரில் நடந்தது. அதில் விருப்ப ஓய்வு வாங்கிவிட்ட முன்னால் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், புதிய கோடங்கி பத்திரிகை ஆசிரியருமான சிவகாமி ஐ.ஏ.எஸ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘‘நான் முதன் முதலில் வேலூரில் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டேன். உடனே அதுவரைக்கும் அந்த மாவட்டத்தின் எஸ்.பி.யாக இருந்தவரை வேறு ஊருக்கு மாற்றிவிட்டு தேவர் இனத்தை சேர்ந்த புதியவர் ஒருவரை எஸ்.பி.யாக நியமித்தார்கள். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? கலெக்டர், எஸ்.பி., இருவருமே புதியவர்களாக இருந்தால் மாவட்ட நிர்வாகத்தில் சிரமம் வரும்’ என்று மேலிடத்தில் கேட்டபோது அவர்கள், ‘ஏற்கெனவே அங்கு இருந்த எஸ்.பி. ஒரு தலித். நீங்களும் தலித். ஒரு மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி. இருவரும் தலித்களாக இருந்தால் பிரச்னைகளில் ஒரு தலைப்பட்சமாக முடிவு எடுப்பீர்கள். அதனால்தான் அவரை மாற்றிவிட்டு தேவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என்று பதில் சொன்னார்கள். இது எனக்கு மட்டும் நடந்ததில்லை. தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் ஒரு தலித் கலெக்டராக இருக்கிறாரோ, அங்கு பெரும்பாலும் தேவர் இனத்தைச் சேர்ந்த ஒருவரைதான் எஸ்.பி.யாக நியமிப்பார்கள். தலித் ஒருவர் எஸ்.பி&யாக இருந்தால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் கலெக்டராக இருப்பார். வேறு எந்த சாதிகளுக்கும் இப்படிப் பார்க்கப்படுவது இல்லை.’’ என்றார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்பான வேறொரு விழாவில் பேசிய உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., ‘‘நான் திருநெல்வேலியில் கலெக்டராக பணியாற்றியபோது அப்போதையை மாநில தேர்தல் அதிகாரி அங்கு வந்திருந்தார். அவரை வரவேற்று அழைத்துச் செல்லும்போது மிக நேரடியாக என்னிடம், ‘உமாசங்கர், நீங்க பிள்ளைவால்தானே?’ என்று எந்தக் கூச்சமும் இல்லாமல் கேட்டார். ‘இல்லை சார், நான் ஆதி திராவிடன்’ என்றதும் அவரது முகம் சுருங்கிப்போய்விட்டது’’ என்று கலெக்டரான பிறகும் தன்னை பின் தொடர்ந்த சாதியைப்பற்றிக் குறிப்பிட்டார்.

————————————————————-
என் நண்பருக்கு வீடு பார்ப்பதற்காக சூளைமேட்டில் அலைந்தோம். புரோக்கர் ஒருவரும் கூடவே இருந்தார். அவர் காட்டிய ஒரு வீடு பிடித்துவிட்ட நிலையில் அட்வான்ஸ், வாடகை எல்லாம் பேசிவிட்டு வெளியே வந்துகொண்டிருக்கும்போது அந்த புரோக்கர் என் நண்பரிடம் ‘‘நீங்க என்ன ஆளுக சார்?’’ என்றார். நண்பர் கொஞ்சம் தயங்கினார். பிறகு சொன்னார். உடனே புரோக்கர் ‘‘கேட்டதுக்காக தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த எஸ்.சி. பயலுகல்லாம் காசை குடுத்துட்டு உள்ளே நுழைஞ்சுடுறானுங்க. அதுக்காகத்தான்…’’ என்றார். சொன்ன அந்த புரோக்கர் ஒரு முஸ்லீம்.
———————————————————-
நடிகர் சரத்குமார் ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ தொடங்குவதற்கு மிக முன்பாக ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் என்னுடன் ஓரளவுக்கு தொடர்பில் இருந்தார். அப்போது நான் திருநெல்வேலியில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அவ்வப்போது அழைத்துப் பேசுவார். கட்சி தொடங்குவதற்கு முன்பு ஒரு வெள்ளோட்டமாக திருநெல்வேலிப் பகுதியின் சில இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஏராளமான கார்களுடன் பெரிய கும்பல் திருநெல்வேலியில் இருந்து கிளம்பி ஆலங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சுரண்டையில் இரவு பொதுக்கூட்டம். நெல்லையைப் பொருத்தவரை நிருபர்களும் சாதி வாரியாகப் பிரிந்து கிடப்பார்கள். நாடார் நிருபர்கள் ஒரு பக்கம், தேவர் நிருபர்கள் மறுபக்கம், பிள்ளைமார்கள் இந்தப் பக்கம் என்று வெளிப்படையாக இல்லாமல், ஒரு கூட்டு மனநிலை அவர்களை பிரித்து வைத்திருக்கும். உதிரிகள் ஏதோ ஒரு பக்கத்துடன் இணைத்துக்கொள்வார்கள். இந்த நிலையில்தான் சரத்குமாரின் வாகனம் முன் செல்ல, பின்னே ஏராளமான அவரது ரசிகர் மன்ற வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அதில் ஒரு காரில் பத்திரிக்கையாளர்கள் இருந்தார்கள்.

ஆலங்குளத்தில் கொடி ஏற்றிய சரத்குமாரின் கார் கிளம்பியது. அங்கு கூடியிருந்த மிகப்பெரிய கூட்டத்தைப்பற்றி என்னுடன் காரில் இருந்த சகப் பத்திரிகையாளர்கள் சிலர் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்களாய் இருக்கக்கூடும் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அப்போது திடீரென என் செல்போன் அடித்தது. எடுத்தால் ‘சரத்குமார் காலிங்’ என்று வந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு நிருபர் இதைப் பார்த்துவிட அந்த காரில் இருந்த பெரும்பாலான நிருபர்களின் கவனம் என் மேல் திரும்பியது. அதில் ஒருவர், ‘ஏங்க, நிஜமாவே சரத்குமார்தான் பேசுறாரா? நீங்க ஸ்பீக்கர்ல போடுங்க’ என்றார். அந்த ஆசையை நிறைவேற்றும் பொருட்டு ஸ்பீக்கர் போனில் பேசினேன். எதிர்முனையில் பேசிய சரத்குமார், ‘கூட்டம் எப்படி இருந்தது? ஏற்பாடு எப்படி?’ என்பது மாதிரி வழக்கமாகத்தான் விசாரித்தார். ஆனால் என்னுடன் பயணித்த சக பத்திரிகையாளர்களுக்கு, அன்று முதல் நான் நாடாராகிப்போனேன். அதுவும் அவர்கள் கணக்கில் ‘சரத்குமாரே போன் போட்டுப் பேசும் ஆள்’ என்பதால் திருநெல்வேலியை விட்டுவிட்டு வெளியேறும் வரை அந்த சிலரிடம் எனக்கான மரியாதை இருந்துகொண்டே இருந்தது.
———————————————————-
தீபாவளிக்கு ஊருக்குப் போயிருந்தபோது என் அம்மாவுக்கு சேலை எடுத்துக்கொண்டுப் போயிருந்தேன். சேலை டிஸைன் எல்லாம் அம்மாவுக்குப் பிடித்திருந்தது. கலர் மட்டும் பிடிக்கவில்லை. அதை சொல்வதற்கு என் அம்மா சொன்ன வார்த்தை, ‘‘என்னடா கலர் இது… பறையோட்டு கலர் மாதிரி கண்றாவியா இருக்கு’’. அந்த சேலையின் நிறம் நீலம்.
—————————————————————
சில மாதங்களுக்கு முன்பு நண்பர்கள் நான்கைந்து பேர் இயக்குநர் பாரதிராஜாவை சந்திக்கப் போயிருந்தோம். வரவேற்பறையில் பாரதி ராஜா வாங்கிய விருதுகள் வைக்கப்பட்டிருந்தன. அவர் எத்தனையோ கணக்கில்லா விருதுகள் வாங்கியவர். ஆனால் அவர் தன் அலுவலக வரவேற்பறையில் வைத்திருந்தது இரண்டு ஷீல்டுகள்தான். ஒன்று நினைவில் இல்லை. இன்னொன்று மும்பைவாழ் முக்குலத்தோர் சங்கத்தினர் கொடுத்தது.
———————————————————–
விருதுநகர் மாவட்டத்தில் ஏழாயிரம் பண்ணை என்றொரு ஊர் இருக்கிறது. கோவில்பட்டிக்கு அருகில் இருக்கும் இந்த ஊரில் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டான். நான் பணியாற்றும் பத்திரிகைக்கு இந்த செய்தியை சேகரிப்பதற்காகப் போயிருந்தேன். அந்த மாணவனின் வகுப்பில் அவனுடன் படிக்கும் இன்னொரு பையனிடம் பேசிக்கொண்டிருந்தபோது அந்த 14 வயது பையன் சொன்னான், ‘‘அவனும் நாடாக்கமாரு, அந்த வாத்தியாரும் நாடாக்கமாரு. அப்படி இருந்தும் குத்திப்புட்டாண்ணே..’’. ‘சொந்த சாதியில் குத்திக்கொல்லக்கூடாது, வேறு சாதியாக இருந்தால் குத்தலாம்’ என்பது அவன் மண்டைக்குள் ஏற்றப்பட்டிருக்கும் நம்பிக்கை.
—————————————————————
நேற்றிரவு மேற்கு மாம்பலத்தில் நண்பனின் அறைத்தோழன் கேட்டான், ‘‘இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்குறா? சும்மா அதையேப் பேசிக்கிட்டுருக்காதீங்க’’

ஊடக பொறுக்கித்தனத்தின் உண்மை முகம்!


காதல் கவிதை’ என்று அகத்தியன் ஒரு படம் இயக்கினார். அந்த படத்தில் கதாநாயகன் ஒரு பத்திரிக்கை அலுவலகத்துக்கு கவிதை ஒன்றை விளம்பரமாகக் கொடுக்கச் செல்வார். அங்கு விளம்பரப் பிரிவில் இருப்பவர் தலையை நிமிர்ந்துக் கூட பார்க்காமல், ‘என்ன சைஸ்.. எட்டுக்கு எட்டா, ஆறுக்கு ஆறா?’ என்பார். ‘இது கவிதை சார்’ என்று கதாநாயகன் சொல்ல, ‘இருக்கட்டும். என்ன சைஸ்.. அதைச் சொல்லுங்க’ என்பார் அந்த நபர்.

ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் ரசனையும், சிந்தனையும் இப்படித்தான் கவிதைக்கும், விளம்பரத்துக்கும் எந்த வித்தியாசங்களுமற்று இறுகிப் போயிருக்கிறது. எல்லாவற்றையும் வெறும் ’நியூஸ் மெட்டீரியலாக’ மட்டுமே பார்ப்பது அல்லது எல்லாவற்றிலும் நியூஸைத் தேடுவது என்றாகிவிட்டன இன்றைய ஊடகங்கள். அறம், நேர்மை, மக்களின்பால் கரிசனம் ஒரு புண்ணாக்கும் இல்லை. ஊடகங்களுக்குத் தேவை எல்லாம் இன்றைய பசிக்கான தீனி மட்டுமே. அது நீங்களோ, நானாகவோகூட இருக்கலாம்.

கருணையற்ற இன்றைய ஊடக உலகின் முகத்தை அப்படியே துவைத்து தொங்கப் போடுகிறது ‘பீப்ளி லைவ்’ என்ற பெயரில் அண்மையில் வெளியாகி இருக்கும் ஓர் இந்தி திரைப்படம். அமீர்கான் தயாரிப்பில் அனுஷ்கா ரிஸ்வி என்ற பெண் இயக்குநர் இயக்கி இருக்கும் இந்த படம் மன சுத்தியுடனும், அரசியல் நேர்மையுடனும் இன்றைய உலகை அணுகுகிறது. நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட துயரங்களுக்கு மத்தியில், வாழ வழியற்ற இந்திய விவசாயிகளின் நிலைமையையும், அந்த துயரத்தையும் ஒரு பண்டமாக்கி விற்கத் துடிக்கும் ஊடகங்களின் பிழைப்புவாதத்தையும் ஒரு சேர அம்பலப்படுத்துகிறது பீப்ளி லைவ். படம் முன் வைக்கும் அரசியலை பேசும்முன்பாக கதையைப் பற்றி கொஞ்சம்…

‘முக்கிய பிரதேஷ்’ மாநிலம்தான் கதைக்களம். தமிழ்நாட்டில் பட்டி, புதூர் என்ற பின்னொட்டுடன் நிறைய கிராமங்கள் இருப்பதுபோல வட இந்தியாவில் பீப்ளி என்ற பெயரோடு ஆயிரக்கணக்கான கிராமங்கள் உண்டு. அப்படி ஒரு பீப்ளியில் கதை தொடங்குகிறது. ஈரப்பசையற்ற வறண்ட நிலமும், கள்ளிச்செடி முளைத்துக் கிடக்கும் பாலை நிலமுமான ஊரில் நத்தா, புதியா என்ற இரு சகோதரர்கள் வசிக்கிறார்கள். இருவரும் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய வங்கியில் கடன் வாங்கியுள்ளனர்.

விவசாயம் காலை வாரிவிட்டுவிடுகிறது. ஒரு லாபமும் இல்லை. கடன் கொடுத்த வங்கியோ, கடனைத் திருப்பிக் கட்டவில்லை என்றால் நிலத்தை பிடுங்கிக் கொள்வதாகச் சொல்கிறது. பதறிப்போகும் சகோதரர்கள் நிலத்தை தக்க வைத்துக்கொள்ள எவ்வளவோ போராடுகின்றனர். எங்குமே அவர்களால் பணம் புரட்ட முடியவில்லை. அந்த சமயத்தில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு தொகை வழங்குவதை கேள்விப்படுகின்றனர். அப்படியானால் இருவரில் ஒருவர் தற்கொலை செய்துகொள்வது என்றும், அதற்கான இழப்பீட்டுத் தொகையை வாங்கி மற்றொருவர் அரசிடம் இருந்து நிலத்தை மீட்பது என்றும் முடிவு செய்கின்றனர்.

நத்தா தற்கொலை செய்துகொள்வதாகத் திட்டம். ஆனால் இவர்களின் திட்டம் மெதுவாக ஊடகங்களுக்கு கசிந்து விடுகிறது. பீப்ளி என்ற அந்த சிறிய கிராமத்தை நோக்கி ஊடகங்கள் பறக்கின்றன. நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைகாட்சிகளின் ஓ.பி. வேன்கள் புழுதியை கிளப்பியபடி ஊருக்குள் விரைகின்றன. ‘மைக்கை’ கையில் பிடித்தபடி ‘இந்திய தொலைகாட்சிகளிலேயே முதன்முறையாக’ ஒரு தற்கொலையை ‘லைவ்’ ஆக ஒளிபரப்புப் போவதைப் பற்றி வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நத்தாவின் ஒவ்வொரு அசைவையும் டி.வி. கேமராக்கள் படம் பிடிக்கின்றன. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமல் நத்தா பதற்றமாகிறான். அலர்ட் ஆகும் அரசாங்கம் நத்தா தற்கொலை செய்து கொள்ளாமல் பாதுகாப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்புப் போடுகிறது. அவர் ஒண்ணுக்கு அடிக்கப் போனால் கூட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பாகப் போகிறது. எந்தக் காட்சியையும் ஊடகங்கள் தவறவிடத் தயாரில்லை.

தற்காலிக கடைகள் முளைக்கும் அளவுக்கு அந்த சிறு கிராமம் பரபரபாக்கப்படுகிறது. அதில் தாங்களும் பங்குபெறும் பொருட்டு அரசியல்வாதிகளும் ஓடிவந்து தலைகாட்டி ஊடகங்களுக்கு செவ்விகள் வழங்குகின்றனர். ஒரு நாள் காலையில் எழுந்து ஒரு பாறை மறைவில் மலம் கழிப்பதற்காக ஒதுங்குகிறார் நத்தா. அப்போது ஒரு உயரமான டெண்ட்டில் இருந்து அதை தனது கேமராவின் வழியே பார்க்கிறார் ஓர் ஊடகக்காரர். எல்லோரும் அந்த இடத்தை நோக்கி ஓடுகின்றனர். அங்கு நத்தா இல்லை. எங்குமே நத்தா இல்லை.

நத்தா காணாமல் போய்விட்டார். ஊடகங்கள் அதை மேலும் பரபரப்பான செய்தியாக கன்வர்ட் செய்து விற்கின்றன. நத்தா கடைசியாக மலம் கழித்த இடத்தை வட்டம் போட்டு அதை படம் பிடித்து ஒளிபரப்புகின்றனர். நத்தா எங்கே என்று யாருக்குமே தெரியவில்லை. இறுதியில் பீப்ளி என்ற அந்த சிறு கிராமத்தில் இருந்து ஊடகங்கள் வெளியேறுகின்றன. தற்காலிகக் கடைகள் பிரிக்கப்படுகின்றன. கேமரா அப்படியே பின்னோக்கிப் போகிறது.

மெல்ல, மெல்ல நகரம் வருகிறது. ‘மோர் ஸ்பேஸ், மோர் லெக்ஷூரி’ என்ற போர்டு வரவேற்கிறது. அதையும் கடந்து கேமரா செல்கிறது. ஒரு பிரமாண்ட கட்டடத்தின் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பரிதாப முகத்துடன் தாடியை மழித்து தன் உருவத்தை மாற்றிக்கொண்டு கட்டுமான வேலைகள் செய்துகொண்டிருக்கிறார் நத்தா. ‘ஒவ்வொரு வருடமும் 8 மில்லியன் விவசாயிகள் நாடு முழுவதும் விவசாயத்தை கைவிடுகின்றனர்’ என்ற குறிப்புடன் படம் முடிவடைகிறது. படம் முடிந்துவிட்டது.

விவசாயிகளின் பிரச்னையும், ஊடகங்களின் அரசியலும்?

‘தேவைக்கேற்ற உற்பத்தி’ என்பதே இந்திய பாரம்பரிய விவசாயத்தின் தன்மை. நிலம் இருக்கிறதே என்று யாரும் எல்லாவற்றிலும் மாங்கு, மாங்கென வெள்ளாமை செய்தது இல்லை. ஆனால் இந்த சீரழிந்த அரசியல், நிர்வாக அமைப்பின் விளைவினால் நாடெங்கும் பட்டினிப் பஞ்சங்கள் ஏற்பட்டபோதுதான் ‘புரட்சிகர’ திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ‘பசுமைப் புரட்சி’ ‘வெண்மை புரட்சி’ என்று இந்திய உற்பத்தி சந்தை என்பது லாப நோக்குள்ள ஒன்றாக மாற்றி அமைக்கப்பட்டது.

எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற நிலத்தில் கால் கூட வைத்திடாத ‘ஒய்ட் காலர்’ விவசாயிகள் இதற்கான திட்டங்களை வகுத்துத் தந்தனர். பசுமை புரட்சியின் விளைவு… விவசாய நிலங்களின் சத்துக்கள் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு, நிலம் என்பது மலட்டுத்தன்மை கொண்டதாக மாறத் தொடங்கியது. இதன் பின்னர் வந்த உலக மயமாக்கலும், தாராளமயமாக்கலும் விவசாயிகளுக்கு மேலும் பல ஆப்புகளை சொருகியது.

‘மான்சான்டோ’ விதைகள், ‘பி.டி.காட்டன்’ இப்போது மரபணு மாற்றப்பட்ட விதைகள் என இந்திய விவசாயத்தின் பிடி, உலகை கட்டுப்படுத்தும் பெருநிறுவனங்களின் வசம் போனது. மான்சான்டோ விதையைப் பொருத்தவரை ஒவ்வொரு முறையும் விதை நெல்லுக்கு அவனிடம்தான் போய் நிற்க வேண்டும். விளைந்ததை விதை நெல்லாகப் பயன்படுத்த முடியாது. இதன்மூலம் ஏற்பட்ட நஷ்டத்தினால் ஆந்திராவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இதேபோல ‘பி.டி. காட்டன் விதைத்தால் லட்சம் கொட்டும், கோடிகள் குவியும்’ என ஆசைக்காட்டி பி.டி.காட்டனை விற்றார்கள். அதில் ஏற்பட்ட நஷ்டம், மஹாராஷ்டிராவின் விதர்பா விவசாயிகளை கொத்து, கொத்தாக பலியெடுத்தது.

சுயசார்புடன் இருந்த இந்திய விவசாயத்தை முழுக்க, முழுக்க சார்ந்திருக்கும் நிலைக்கு மாற்றி விவசாயிகளை மரணக் குழிகளை நோக்கித் தள்ளினார்கள். தேவை சார்ந்ததாக இருந்த இந்திய விவசாயம், வர்த்தகம் சார்ந்ததாக மாற்றப்பட்டது. மேற்கத்திய நாட்டினர் எந்த உணவை விரும்பி சாப்பிடுவார்களோ அவை இங்கு பயிரிடப்பட்டன. அந்த உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை மட்டுமே லாபகரமானதாக மாற்றி அமைக்கப்பட்டது. அது மட்டுமல்ல… உணவுப் பயிர்கள் உற்பத்தியை விட, பணப்பயிர்கள் உற்பத்தியையே இந்திய அரசு ஊக்குவிக்கிறது.

நெல், வாழை, உளுந்து, காய்கறிகள்… போன்ற உணவு விவசாயத்துக்கு அரசு சார்பில் எந்தவித உற்சாகப்படுத்தலும், ஊக்குவித்தலும் இல்லை. மாறாக சணல், ரப்பர்… போன்ற பணப்பயிர்களின் உற்பத்திக்கே அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது. ‘அந்நிய செலாவணி’ என்று இதற்குக் காரணம் சொல்லும்போதே இது, ‘மக்கள் நல அரசு’ என்ற நிலையில் இருந்து ‘லாப நல அரசு’ என்ற நிலையை வந்தடைந்துவிடுகிறது.

இப்படி முழுக்க, முழுக்க திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டிருக்கும் இந்திய விவசாயம் இறுதியில் விவசாயிகளை தற்கொலைப் பாதையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அவர்கள் வாழ வழியற்று, வங்கியில் கடன் வாங்கிய சில ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்த முடியாதபோது அதற்காக நிலத்தை பிடுங்கிக்கொள்ளும் அரசு, அவர்கள் தற்கொலை செய்துகொண்டதும் இழப்பீடுத் தொகை வழங்குகிறது. இந்த முரண்பாட்டை துல்லியமாக கையாண்டிருக்கும் இயக்குநர், படம் நெடுக அதிகாரத்தை நோக்கிய நக்கல்களை உதிர்த்தபடியே போகிறார்.

‘பிளாக் ஹியூமர்’ என்ற வகையிலான இந்த நகைச்சுவை ஒட்டுமொத்த படத்தின் மையத்தையும் தாங்கி நிற்கிறது. குறிப்பாக இந்திய காட்சி ஊடகங்களின் பொறுப்பற்ற பொறுக்கித்தனத்தையும், பிழைப்புவாதத்தையும் காட்சிக்கு, காட்சி தோலுரிக்கிறார் இயக்குநர்.

வாட்டி வதைத்த சூடான் பஞ்சத்தில் மயங்கி சாகக் கிடக்கும் குழந்தை, அதன் அருகே காத்திருக்கும் கழுகு… என்ற கெவின் கார்ட்டர் எடுத்த புகைப்படம் உலகப் புகழ்பெற்றது. அந்த மன உளைச்சலில் கெவின் கார்ட்டர் தற்கொலை செய்துகொண்டது வேறு செய்தி. அந்த பிணம் தின்னும் கழுகைப் போலதான் இந்திய ஊடகங்கள் செய்திக்காக அலைகின்றன. வட கிழக்கு இந்தியாவில் அணுதினமும் கண்காணிப்பின் கீழ் மக்கள் வாழ்வதை, காஷ்மீரில் தினம், தினம் செத்து மடிவதை வெறுமனே எண்ணிக்கைகளாக்கி கடந்து போகின்றனர். குறைந்த மரணங்கள் அவர்களுக்கு தலைப்பு செய்தியை தருவதில்லை. எங்கேனும் ஒரு விபத்து, வன்முறை எனில் ‘எத்தனை பேர் சாவு?’ என்பதில்தான் தொலைகாட்சிகளின் கவனம் முழுவதும் இருக்கிறது.

அப்படி இருக்கையில் ‘பீப்ளி’யில் ஒரு விவசாயியின் மரணத்தை ‘லைவ்’ செய்யலாம் என்றால் சும்மாவா? எல்லோரும் நேரடி ஒளிபரப்பு வாகனங்களுடன் கிராமத்தில் காத்துக்கிடப்பதும், அந்த கிராமத்தின் சாதாராண மக்களை காட்சிப் பொருட்களாக்கி டி.ஆர்.டி.யைக் கூட்டுவதும் யதார்த்தத்தில் நாம் பார்ப்பதுதான்.

இலங்கை யுத்தத்தை இந்திய ஊடகங்கள் அணுகிய விதத்தையே இதற்கு உதாரணமாகக் கொள்ள முடியும். ஆனால் அதில் ஒரு முரண்பாடு இருந்தது. வழமையான செய்தி ஊடகங்களின் பரபரப்புக்கேனும் கூட அவர்கள் இலங்கையின் இன அழிப்பை காட்டவில்லை. அந்த விஷயத்தில் அவர்கள் இந்திய அரசின் அயலுறவுக் கொள்கை என்னவோ அதையே பின்பற்றினார்கள். பொதுவாக இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் பிரச்சனைகளும், தேசிய இனங்களின் போராட்டங்களும் திட்டமிட்டே தேச பக்தியுடன் இணைக்கப்படுகின்றன.

காஷ்மீர் தொடங்கி தண்டகாரன்யா வரை அனைத்துமே இப்படித்தான். அதை கேள்வி கேட்பவர்கள் தேசதுரோகிகளாகி விடுகின்றனர். தேசபக்தி, எப்போதுமே நல்ல விற்பனைப் பொருள் என்பதால் இது காலம் காலமாக நடந்துகொண்டிருக்கிறது.

சினிமா என்பது அழகியல் இன்பங்களில் மனதை லயிக்க செய்யும் பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமல்ல. ஒரு திரைப்படத்தின் காட்சிகள் பார்வையாளனின் மனதில் பாரதூரமான பாதிப்புகளை உண்டுபண்ணுகின்றன. இந்தியா மாதிரியான அரை நிலவுடைமை சமூகத்தில் பண்ணையார் தனமும், அடிப்படைவாத குணங்களும்தான் சினிமாவின் குணங்களாக இருக்கின்றன. நடப்பு முதலாளித்துவத்தின் ஜிகினா தன்மைக்கு ஏற்ப வளைந்துகொடுக்கவும் செய்கிறது. இந்த பின்னணியில் நிலவும் சமூக அமைப்பை கேலியும், கிண்டலுமாக கையாண்டிருக்கும் பீப்ளி லைவ் இந்தியாவின் சிறந்த அரசியல் படங்களில் ஒன்றாக திகழ்கிறது!