பெண்மை என்றொரு கற்பிதம்…


இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே பெண் பேசத் துவங்கினாள் – தனக்கான பேச்சை – அதற்குமுன் அவள் அவ்விதம் பேசுவது பெண்மைக்கழகல்ல என்கிற கருத்தே மனித சமூகத்தைப் பற்றிநின்றது. இரண்டு உலகப் போர்களுக்குப்பின் லட்சக்கணக்கான பெண்கள் உலகெங்கும் ஆண்கள் பார்த்த அதே தொழிற்சாலை களில் உடலுழைப்பைச் செலுத்த வந்தனர். பெண்களுக்கானது என்று வரையறுக்கப்பட்டிருந்த வெளிகளிலிருந்தும் வேலைகளிலிருந்தும் பெண்கள் எல்லை தாண்டி வந்தனர்.சொல்லப்போனால் படிதாண்டி வந்தனர் எனலாம். பெண்மையின் இலக்கணம் மறுதிருத்தம் செய்யப்பட்டது. இன்றைய கணினி யுகத்தில் பெண் இயங்கும்வெளியாக இப்புவிப்பந்து முழுவதுமே கைவந்து சேர்ந்துள்ளது. இணையத்தில் தமக்கான இணைகளைப் பெண்கள் தாமே தேடிக்கொள்கிறார்கள். அச்சம், மடம், நாணம் எல்லாம் ஒதுங்கி வாசலுக்கு வெளியே நிற்கின்றன. இன்றைய பெண்மை பழைய பெண்மையின் பல அம்சங்களைப் போகிறபோக்கில் கழட்டி விட்டுள்ளது. பலபுதிய அம்சங்களை சுவீகரித்துக்கொண்டுள்ளது. என்றாலும் என்றும் தொடரும் அடிமைத் தளைகளான அம்சங்கள் தொடரவே செய்கின்றன. அமெரிக்கா போய் ஏமாந்த பெண்களின் கதை இன்றும் தொடர்கிறது. இது ஏன்?பெண்மை என்கிற ஒன்று காலந்தோறும் அர்த்தம் மாறி வந்தாலும் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் ஆண் – பெண் சமத்துவமோ பெண் விடுதலையோ சாத்தியமில்லை.

ஆளுமைத்தன்மை உடையவன், ஆள்கிறவன் என்கிற பொருளில்தான் ஆண்மை அவனுக்குரியதாயிற்று. (பெடை, பெட்டை, பேணுகை, பாதுகாப்பு – அன்பு போன்ற பொருள் தரும்) பெட்பு என்ற சொல்லினடியாகத் தோன்றிய பெண்மை அவளுக் குரியதாயிற்று. சொற்களே இவ்விதம் பாலியல் பாகுபாட்டுடன் இலங்குகின்ற சூழலில் நாம் வாழ்கிறோம்.

ஆடவர் ஆளவும் பெண்கள் பேணவுமான இந்த ஆண்மை – பெண்மை பிறப்பிலேயே வருவதா? பெண் பெண்மையோடே பிறக்கிறாளா? பெண்மை என்பதுதான் என்ன? எது பெண்ணைப் பெண்ணென்று ஆக்குகிறதோ அதுதானே பெண்மையாக இருக்க முடியும்? அப்படியானால் பெண் என்றால் என்ன?
பெண் என்றால் கருப்பை என்று சொன்னவர் உண்டு. கருப்பையும் பாலூட்டும் மார்பகங்களும்தான் பெண் என்றவர் உண்டு. இயற்கையிலேயே குறைபாடுள்ள மனிதப் பிறப்பே மனுஷி என்று அரிஸ்டாட்டில் போன்ற அக்கால அறிஞர்கள் கூறிய துண்டு. உலகம் ஆண்களுடையது. அதில் பெண்களும் இருக்கிறார்கள். ஆணின் விலா எலும்பிலிருந்து வந்தவள்தான் பெண். ஈசன் தன் உடம்பில் பாதியைக் கொடுத்தார் என்பதாக ஏராளமான நம்பிக்கைகளும் கதைகளும் ஆண் – பெண் பற்றி நம்மிடம் புழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதம் சார்ந்து – நம்பிக்கை சார்ந்து நிற்பவை. சில அறிவியலின் பெயரால் நிற்பவை.
இயற்கையின் படைப்பில் எல்லா உயிர்களிலும் ஆண் – பெண் உண்டு. மறு உற்பத்தி என்பது ஆண் – பெண் என்கிற நேர் எதிரெதிரான இரு பால் அம்சங்களின் இணைப்பில்தான் உள்ளது என வாதிடுவோர் உண்டு. ஆனால், உண்மையில் அறிவியலின் படி பார்த்தால் ஒன்றுவிடாமல் சகல உயிர்களிலும் மறு உற்பத்திக்கு ஆண் – பெண் என்கிற எதிர்வு கள் இருப்பதாகக் கூறிவிட முடியாது. அமீபா போன்ற ஒரு செல் உயிரிகள் பிளவு மற்றும் சேர்க்கையினால் இனப் பெருக்க மாயின. அங்கே பெண் இருக்க வில்லை. அல்லது ஆண் இருக்க வில்லை.

நாம் மிக முக்கியமாக இவை எல்லா வற்றையும் சமூகவியல் நோக்கில் வர லாற்று நோக்கில் பார்க்க வேண்டி யுள்ளது. ஆண்/ பெண் என்கிற பேதம் இயற்கையின் படைப்பு. நாம் சமப்படுத்த முடியாது என்கிற கருத்து ஆழமாக நம்மிடம் உள்ளது. ஆண்கள் வெளி உலகுக்கு; பெண்கள் வீட்டுக்கு என்கிற கருத்து அடுப்படிப் புகையாய் நம் மனங்களில் படிந்து கிடக்கிறது. நம் மனக் குகைகளின் இருண்ட அடுக்குகளில் இயற்கையானது போல ஒளிந்து கிடக்கும் ஆணாதிக்கக் கருத்துக்களை வெளியே இழுத்துப்போட ஒரு விவாதத்தை நமக் குள்ளே துவக்கியாக வேண்டும். சில எளிய வாழ்வியல் நடப்புகள் வழியே நம் விவாதங்களைத் துவக்கலாம்.

“ஒருநிறை வேறாத காதலில்
துடைத்தகற்ற முடியாத
இருகண்ணீர்த் துளிகளாய்த்
தேங்கித் தளும்புகின்றன” (‘முலைகள்’ கவிதை – குட்டி ரேவதி)

என்று ஒரு பெண் தன் மார்பகங்களைப் பற்றிக் கருதுவதாகவும் இன்னும் இதுபோலத் தம் உடம்பின் உறுப்புகள் பற்றித் தமிழ் எழுத்துலகம் இதுவரை வாசித் தறியாத படிமங்களுடன் வலியுடன் கவிதைகளும் கதைகளும் இன்று வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை எழுதும் படைப்பாளிகளாகப் பெண்களே இருக்கி றார்கள். பெண்ணின் உடல் உறுப்புகளை இஷ்டம் போல வர்ணித்து எழுதும் உரிமை இதுகாறும் ஆண்களுக்கே இருந்து வந்தது. வண்டி வண்டியாக எழுதியும் விட்டார் கள். அதையெல்லாம் வாசித்து வாசித்து ரகசியமாய் தனக்குள் ரசித்து வெளிப்பேச்சில் “ச்சீச்சீ இதென்ன இப்படி யெல்லாம் எழுதறார்…” என்று சொல்லி வந்த ஆண் வாசக மனம் இப்போது “துடைத்தகற்ற முடியாத கண் ணீர்த்துளிகள் தாம் என் இரு முலைகள்” என்று ஒரு பெண் கவி பேசும்போது உள்ளுக்குள் காயப்பட்டு வெளிப்பேச்சில் அதே வசனத்தை இன்னும் ஆவேசத் துடன்பேசத் துவங்குகிறது. அப்படி எழுதியது சரியா? அதுக்காக… இப்படி எழுதலாமா? என்றெல்லாம் இலக்கிய உலகில் விவாதங்கள் நடக்கின்றன.

நாம் இங்கு பேசப்போவது பெண்ணின் உடம்பு பற்றி நம் சமூகம் காலம் காலமாக உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள், கருத்துக்கள் மற்றும் அதன் காரணமாகப் பாதிக்கப்படும் பெண்ணின் வாழ்வுரிமை பற்றியே. “உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு” என்று முதலில் நாம் அவர்களின் சோத்திலே மண்ணள்ளிப் போடுகிறோம். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்” என்று தயிரைப் பிசைந்தாலே சிவந்து போகும் விரல்கள் அவளுடையவை என்று ‘ஏத்தி’ விடுகிறோம். மண் மகள் அறியா வண்ணச் சீறடிகள் அவளுடையவை என்று வீட் டிலேயே அடைந்து கிடந்ததைப் போற்றுகிறோம். சாமுத்திரிகா லட்சணங்கள் என்று பெண் உடல் பற்றி விரித்து விரித்து எழுதி வைத்துள்ளோம்.

ஊரெல்லாம் கோவில்களில் சிற்பங்களாகப் பெண்களைச் சிறுத்த இடைகளோடும் பருத்த மார்புகளோடும் செதுக்கி வைத்திருக்கிறோம். அது போலவே சிற்றிடை உள்ள பெண்ணே சினிமாக்களில் கதாநாயகியாக வர முடியும். இடை பருத்த அச்சம் தவிர்த்த நாணம் தொலைத்த பெண்கள் படத்தில் காமெடி வேடம்தான் ஏற்று நடிக்க முடிகிறது.இரண்டாம் தரமான பெண்களாக அவர்கள் நம் மனங்களில் பதிவு பெறுகிறார்கள்.

இந்தப் பரந்த பின்புலமானது நம் வீடுகளில் பிறந்து வளரும் பெண்/ ஆண் குழந்தைகளின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தன் உடல், தன் உடலின் தன்மை, தன் அழகு பற்றி ஒரு விதமான தகவமைப்பைச் செய்கிறது. இதில் நிறைவடையாதபோது மன உளைச் சலையும், மன அழுத்தத்தையும் கூட ஏற்படுத்துகிறது. நான் யோசித்துப் பார்க்கிறேன். நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்…? என் ஒவ்வொரு உறுப்பும் எப்படி இருக்க வேண்டும் – எப்படி இருந்தால் அழகு – எப்படி இருந்தால்தான் அழகு என்று எழுதப்பட்டும் எழுதப் படாமலுமான விதிகள் என்னை வழிநடத்துகின்றன. இடுப்பு வரை நீண்டு தொங்கும் (கார்குழல்) தலைமுடி வேண்டும். மீன்களைப் போன்ற கண்கள் (கயல்விழி) வேண்டும். சங்கு போன்ற கழுத்து வேண்டும் என்று தொடங்கி பாதங்களின் நகங்கள் வரை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்று ‘ரூல்ஸ்’ உள்ளன. மார்பகங்கள் பற்றித்தான் எக்கச் சக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள். அதே மார்பகம் ஆணுக்கு இருந்து விட்டால்? என்னோடு பள்ளியில் படித்த பால்சாமி என்கிற பையனுக்கு மார்பகம் மட்டும் பெண்களைப் போல வளர்ந்திருக்கும். அவன் எப்போதும் கைவைத்த பனியன் போட்டு முழுக் கைச் சட்டையுடன்தான் வருவான். விளையாட்டு மைதா னங்களில் அவன் பட்ட அவமானங்களை இப்போது நினைத்தாலும் என் மனம் மிகுந்த வேதனை கொள்ளும். அவன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது தற்கொலை செய்து கொண்டான். அது ஒரு பக்கம். (அதுபோன்ற ஆண்களின் மன உலகம் பற்றித் தனியாகப் பேச வேண் டும். ) இன்று ஃபேஷன் ஷோக்கள், பொருட்களின் விளம்பரங்கள் என எல்லாவற்றிலும் இதுதான் சரியான பெண் உடல் என ஒன்று தொடர்ந்து முன்வைக்கப் படுகிறது. அதைப் பார்க்கிற ஆண் குழந்தைகளின் மன தில் சரியான பெண் பற்றிய சித்திரம் ஒன்று உருவாகிறது. அதைப்பார்க்கிற பெண் குழந்தையின் மனதில் இன் னொரு விதமான தாக்கம் ஏற்படுகிறது. இன்னும் அதையெல்லாம் தாண்டி இப்போது அழகிப்போட்டிகள் என்று வந்துவிட்டன. வேறு ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்யப் பயன்படும் கருவி யாகப் பெண் உடல் இருந்த நிலைமை போய் இங்கு பெண் உடலே அப்படியே ஒரு காட்சிப் பொருளாக உலகின் முன் வைக்கப்படுகிறது. மார்க் போடப்படுகிறது. அழகிகளாக அறிவிக்கப்படும் பெண்களின் மார்பளவு – இடுப்பளவு – தொடையளவு – எல்லாம் செ.மீ. கணக்கில் விளம்பரப் படுத்தப்படுகிறது. முன்பொரு காலத்தில் அடிமைச் சந்தையில் மேடையேற்றி விற்கப்பட்ட பெண்களின் சிறப்புகளை கூவிக்கூவி அறிவிப்பாளன் பேசியது போன்ற ஒன்றாகத்தான் அழ கிப் போட்டிகள் தோன்றுகின்றன. ஆனால் இவை நாகரிக உலகில் பார்க்கும் எல்லோரும் சமாதானம் ஆகும் வண்ணம் மிக நளினமாக நாசூக்காகச் செய்யப் படுகின்றன.( பள்ளிக்கூட ஆண்டுவிழாக்களில் கூட பெண் குழந்தைகள் கேட் வாக் நடை நடக்கிறார்கள்.

அன்று முதல் இன்று வரை பெண் உடல் எப்படி இருந்தால் அழகு என்று காலம்காலமாக இந்த ஆண் ஆதிக்க உலகம் ஒன்றை முன்வைத்து வருகிறது. அது ஆண்கள் மனதிலும் பெண் கள் மனதிலும் ஏற்றப்பட்டுள்ளது. நாம் இதுகாறும் ‘மழை’ பற்றி எத்தனையோ கவிதைகள் வாசித்திருக்கிறோம். மழை தரும் குளிர்ச்சி பற்றி மழை வெள்ளிக்கம்பியாய்ப் பூமியில் இறங்கும் அழகு பற்றி வானமும், பூமியும் புணரும் காலமான மழை பற்றி என ஏராளமாக எழுதி விட்டோம். ஆனால் இப்போது ஒரு தலித் கவிஞன் கேட்கிறான்.

“மிஞ்சிப் போனால் என்ன சொல்லிற முடியும்
உன்னாலே இந்த மழையைப் பற்றி
ஓதமேறுன கொட்டாயிலே
கோணியிலே முடங்கியும்
குளிரிலே ஒடுங்கியும் இருக்கியா…”
என்று தொடங்கும் மழை பற்றிய அவரது கவிதை இப்படி முடிகிறது. “ஒண்ணு தெரிஞ்சுக்கோ மழை ஜன்னலுக்கு வெளியேதான்
பெய்யுது உனக்கு எங்களுக்கு எங்கள் பொழப்பு மேலேயே…”

(மழை – ஆதவன் தீட்சண்யா)

கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட முலைகள் கவிதைக்கும் இந்த மழை கவிதைக்கும் ஒற்றுமைகள் உண்டு. அறியப்பட்ட வரலாற்றின் மீது இவ்விரு கவிதைகளும் தாக்குதல் தொடுக்கின்றன. பெண் உடல் ஆணுக்கு என்னவாக இருக்கிறது? என்னவாக இருந்தது? என்றுதான் இதுவரை நாம் அறிந்திருக்கிறோம். ஒண்ணு தெரிஞ்சுக்கோ… என் உடல் ஒரு ரசிப்புக்குரிய காமப் பொருள் என்பதுதான் நீ அறிந்தது. எனக்கு என் உடல் கண்ணீரில் கரையும் ஒரு காயம் பட்ட உயிர்ப்பொருள் எனப் பெண்கள் இன்று நமக்குச் சொல்லத்துவங்கியிருக்கிறார்கள்.
ஒரு பத்துக் கவிஞர்கள் இன்று தங்கள் பெண்ணுடலை முன்வைத்து நம் மனசாட்சி களை உலுக்குகிறார்கள். அந்த அளவுக்குத்தான் ஒரு மாற்றம் நடந் திருக்கிறது. ஆனால் கோடான கோடிப் பெண்கள் இது பற்றி தன்னுணர்வு இன்றிக் காலந் தோறும் அவர்கள் மீது திணிக்கப்படும் படிமங்களையே தமதாகக் கருதித் தம் உடலைச் சகல சித்ரவதைகளுக்கும் இயல்பாக(!) இணக்கமாக்கி வாழ்ந்து வருகிறார்கள். இன்று மின்னணு ஊடகங்கள் நடத்தும் பாலியல் வியாபாரம் (-போர்னோகிராபி சேனல்கள்) பெண் உடலை அங்கம் அங்கமாகச் சிதைத்து விற்று வருகிறது. நடிகை த்ரிஷா குளிக்கும் காட்சி, பள்ளியில் பயிலும் சக மாணவியின் உடல் காட்சி எனப் பரபரப்பாகப் பத்திரிகைகளில் பேசப்பட்ட விஷயங்கள் மட்டுமே அல்ல. அந்தக் காலத்து சரோஜா தேவி புத்தகங்களைப்போல இன்று பாலியல் இணைய தளங்கள் லட்சக்கணக்கில் இயங்கி வருகின்றன.

1840-இல்தான் முதன்முதலாக நிர்வாணமாகப் பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டதாகக் கூறு வார்கள். இந்த 160 ஆண்டுகளில் விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியின் விகிதத்துக்கேற்ப பெண் உடல் பாலியல் வியாபாரப் பொருளாக மாறி வரும் வேகமும் அதிகரித்துள்ளது. பெண் உடல் இப்படிப் பயன்படுத்தப் படுவது என்பது பெண்ணை வெறும் உடம்பாக்கி நம் சக மனுஷியை ஒரு உடம்புக்குள் பூட்டி வைத்துச் சித்ரவதை செய்வதன்றி வேறென்ன?
தன் உடலையே தாண்டி வெளிவர முடியாத நிலையில் பெண்ணை இருத்தி வைத்து அவளுடைய சிந்தனை, அறிவாற்றல், படைப்பாற்றல், அரசியல் மதிநுட்பம், ஆளுமை என எல்லாவற்றையும் அழித்து ஒழித்து விடுகிறோம். பெண் தன் உடலைத் தாண்டுவது எப்படி? ஆண்களாகிய நாம் பெண்ணை உடலுக்கு அப்பால் சென்று மனுஷியாகப் பார்ப்பது எப்படி? வரலாற்று ரீதியான வாய்ப்புகள் என்ன?இவையெல்லாம் ஆண்களும் பெண்களும் சேர்ந்த இச்சமூகம் ஆழமாக விவாதித்துச் செயலுக்கு முன்னகர்த்த வேண்டிய கேள்விகள்.

5

மனுஷிகளை ‘அழகி’களாக இந்த ஆணாதிக்க சமூகம் வடிவமைக்கத் துவங்கிப் பல காலம் ஆகி விட்டது. கிளியோபாட்ரா, பாக்தாத் பேரழகி என்றெல்லாம் “நாட்டிலேயே பெரிய அழகி” என்று கதையை ஆரம்பித்து அந்த அழகிகளுக்காகப் போரிட்ட கதை களைக் காவியங்களாக்கிக் காலப்போக்கில் அந்த அழகியைப்போல ஒரு பெண்ணைத் தேடுகிற ஆண் மனம் உருவாகி அதன் மறுபக்கம் அந்த ஆண்மனம் விரும்பும்படியான உடலழகு தனக்கு அமைய வேண்டுமே எனத் தன் உடலை ஆணின் ரசனைக் கேற்ப தயாரிக்கிற நிலைக்குப் பெண் தள்ளப்பட்டாள் – சாதாரண குடும்பத்துப் பெண்களும்தான். காலச்சுழற்சியில் பெண் தன் உடலை மட்டுமின்றி, தன் ருசிகள், விருப்பு -வெறுப்புகள், கருத்துக்கள் என எல்லாவற்றையுமே ஆணின் – ஆணாதிக்கச் சமூகத்தின் விருப்பப்படி தகவமைக்கத் துவங்கினாள்.

உழைப்பாளி வர்க்கத்தில், விவசாயக் குடும்பங்களில் நல்ல உழைப்பாளிப் பெண்கள், திடகாத்திரமான பெண்கள், வீட்டில் எல்லோரையும் பேதமின்றிப் பராமரிக்கின்ற பெண்கள் மதிக்கப்படுவது இன்றும் தொடர்கிறது. ஆனால், மத்திய தர வர்க்கம் துவங்கி அதற்கு மேற்பட்ட வர்க்கங்களில் பெண்கள் பணிவிடை செய்தால் மட்டும் போதாது; தன்னை ‘அழகி’யாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தம்மை அழகுபடுத்திக் கொள்வது ஒன்றும் தவறான காரியமல்ல. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான அளவில் ஆரோக்கியமான அளவில் இருக்கலாம்தான். ஆனால், நடப்பில் இந்த அழகு என்னவாகி நிற்கிறது? பெண் என்றால் அழகு. அழகு என்றால் பெண் என்று ஆகி, அப்புறம் அந்த அழகு என்பதன் விளக்கத்தையும் ஆணுலகம் சொல்லும். கவிதைகளிலும் பாடல்களிலும் ஓவியம் சிற்பங்களிலும் பெண் உடல் செதுக்கப் பட்டுள்ளது. அது ஆண்-பெண் இருவர் மனங்களிலும் பெண்ணின் உருவாகச் செதுக்கப்பட்டுவிடுகிறது. இன்றைக்கு அழகான பெண் – அழகில்லாத பெண் என்பதற்கான எழுதப்படாத, ஆனால் எல்லோரும்ஏற்றுக்கொண்டுவிட்ட, இலக்கணம் இருக்கிற தல்லவா? இந்த ஏற்பு ஒரு நாளில் ஏற்பட்டதல்ல. கால ஓட்டத்தில் வந்து சேர்ந்தது. தானாக உருவான ஒன்றும் அல்ல. கட்டமைக்கப்பட்டு நம் தலைகளில் ஏற்றப்பட்டது. அந்தக் காலத்துக் கிளியோபாட்ரா தன் சரும அழகைப் பேணுவதற்காகத் தினசரி கழுதைப் பாலில் குளிப்பாளாம். அப்படி ஒரு கதை உண்டு. அதே கழுதைப் பால்தான் இன்று ஆயிரம் பவுடர்களாக, சோப்புகளாக, கிரீம்களாக மாறி உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அழகுத் தொழிற்சாலை இன்று உலகின் மிகப்பெரிய தொழிலாக மாறியுள்ளது. அதன் மிகப் பெரிய இரையாகப் பெண்கள் பலியாகி வருவதைப் பார்க்கிறோம்.

“உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு” என்று எவனோ ஒரு மடையன் அன்று தொடங்கி வைத்தான். அது வளர்ந்து பெருகி அழகான பெண்ணின் உருவம் சைஸ் வரை 28-22-34 என்று மார்க் போடு கிற எல்லை வரை போய் நிற்கிறது. பெண்கள் எப்படி உடம்பை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்றாடம் தொலைக்காட்சிகளில் வகுப்பு நடக் கிறது. அதன்படி நடந்து அரைப்பட்டினி கிடந்து அழகிகளாகிவிட்ட பெண்கள் அடுத்த கட்டமாக மாடலிங் – விளம்பரப் பெண்களாக தங்கள் உடம்பை முதலீடு செய்யச் சொல்கிறார்கள். கார் விளம்பரத்திலிருந்து கழுதைத் தீவனம் வரை இந்த ‘அழகிகள்’தான் வந்து நம்மோடு பேசுகிறார்கள். அட விடுங்க சார்… ஏதோ தொழில் – வியாபாரம் விளம் பரம் என்று இதை விட்டுவிட முடியுமா? தொடர்ந்து நம் ஆண் – பெண் குழந்தைகளின் தலையில் அவர் களின் உடல்பற்றி, அழகுபற்றி ஒரு கருத்து வலுவாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. கல்லூரியில் படிக்கும் 20 வயதுப் பெண்கள்கூட ஒரு சோப்பு டப்பா சைஸில் டிபன் பாக்ஸ் கொண்டு சென்று ‘சாப்பிடுகிறார்கள்’. இது ஆரோக்கியத் துக்குக் கேடல்லவா? இதற்குக் காரணம் என்ன? ‘அழகு’ பற்றிய பிரச்சாரம் ஆழமாகப் பாய்ந்து விட்டதுதானே? இன்னும் அடுத்த கட்டமாக பாலியல் சார்ந்த திரைப்படங்கள் மற்றும் இணையதளங்களின் பெருக்கம். போர்னோகிராபி என்று நாகரிகமாக அதை ஒரு ‘கலை’போலச் சொல்லிக் கொண்டு வக்கிர அலைகளை ரகசியமாய் நம் பண்பாட்டு வேர் களில் பாய்ச்சுகிற வேலை நடக்கிறது. அழகாகக் ‘காட்டிக்கொள்ள’ வேண்டும் என்கிற ஆசையின் உச்சமாக – எதிர்மறைப் பக்கமாக இது வந்து சேர்ந்துள்ளது. எல்லாவற்றிலும் இரையாகப் பலியாவது பெண்கள்.

ஆகவே, எது அழகு என்று இன்று நம் மூளை களில் பதிவாகியிருக்கிறதோ அதைக் கேள்விக்குள்ளாக்குவது அவசியம்.. பெண்மை யின் பிரிக்க முடியாத அம்சமாக அழகை ‘அட்டாச்’ பண்ணி வைத்துள்ளார்கள். அதைப் பிச்சு எடுப்போம். அழகு எது என்பதற்கு, புதிய அர்த்தத்தை நாம் வடிவமைத்து நம் பண்பாட்டுத் தளத்தில் பரவ விட வேண்டும். “பொண்ணு சுமாராத்தான் இருக்கு. கூட ஒரு பத்துப் பவுன் நகை போட்டா பேசலாம்” என்பது போன்ற பேச்சுக்கள் நம் சமூகத்தில் சகஜமாக நடக்கிறது. “ரெண்டாவது பொண்ணு கிளி மாதிரி இருப்பா. எவனும் கொத்திக்கிட்டுப் போயிடுவான். மூத்தவளைத் தள்ளித்தான் விடணும்’ என்று வீடுகளில் சாதாரணமாகப் பேசுவதைக் கேட்கலாம். அழகு ‘குறைந்த’ பெண்களின் மன உணர்வுகள் பற்றிப் போதிய அளவுக்கு நம் சமூகமனம் கவலை கொள்வதில்லை. தான் அவ்வளவு அழகாக இல்லை என்று ஒரு பெண் உணர வைக்கப்படுவது எத்தனை கொடுமை. குறிப்பாக இளம் வயதில் அப்படி உணரும் பெண்கள் மனதில் உருவாகும் தாழ்வுணர்ச்சி அவர்களின் குணாதிசயத்திலும் எதிர்பாராத தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

தான் ஒரு அழகி என்று பிறரால் வார்த்தைகளாலும் பார்வைகளாலும் போற்றப்படும் பெண்மனம் கொள்ளும் சிறு கர்வமும் பெருமிதமும்கூட ஒரு விதத்தில் வெட்டிப் பெருமைதானே. தன் அறிவின் மீது, தன் நடத்தை மீது, தன் திறன்கள் மீது, தன் உழைப்பின் மீது நம்பிக்கையும் கர்வமும் கொள்கிற திசையில் அப்பெண்மனம் செல்ல விடாமல் இது தடுக்குமல்லவா? ஆண்களின் பார்வையில் ‘சொல்லப்பட்ட’ இந்த அழகுகள் – பேரழகுகளைப் பொசுக்கிப் போடுவோம். இந்த ரசனையின் குரூர வடிவங்கள் ஈவ்டீசிங்கில் துவங்கி போர்னோகிராபி வரை பரவி நிற்பதை அன்றாடம் காண்கிறோம். தன்னைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும், மலர்ச்சியாக இருப்பதும், பிரியமுடன் பழகுவதும், புத்திக் கூர்மையுடன் சிந்திப்பதும் பேசுவதும், சமூக அக்கறையுடன் செயல்படுவதும் போன்றவற்றை அழகின் புதிய அர்த்தங்களாக நாம் முன்வைக்கலாம். தாழ்வுணர்ச்சியின்றி பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ள போதுமான அளவுக்கான பூச்சுகளும் வாசனையும்கூட இருக்கலாம். ஆயுதக் குவியல்களை விட அதிகமாக உலகெங்கும் தயாரித்துக் குவிக்கப் படும் கப்பல் கப்பலான பூச்சுப் பொடிகளையும் பசை களையும் நம் பிள்ளைகளின் மூளைகளிலிருந்து (நம் மூளையிலிருந்தும்தான்) வழித்தெடுக்க ஒரு பண் பாட்டுப் போரைத் துவக்கிடுவோம். அழகு பற்றி நமது கருத்துக்களின்மீது கட்டி எழுப்பப்பட்டுள்ள அழகுத் தொழிற்சாலைச் சாம்ராஜ்யங்கள் இடிந்து வீழும்படி யான புதிய அழகின் முழக்கங்களை நாம் விவாதித்து வடிவமைப்போம்.

பேரா. ஆர்.சந்திரா கடிதம்:

தாய்மை – தத்தெடுத்தல் சில மாயைகளும் உண்மைகளும்

குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு பதில் தருவது எளிதல்ல. தீவிரப் பெண்ணிய வாதிகள் ‘தாய்மை’ பெண்ணை அடிமையாக வைத்திருக்க உதவுகிறது என்ற கருத்தை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் ஒரு பெண் பிறவி எடுத்ததன் பயனே அவள் தாய்மை அடைவதில்தான் உள்ளது என அழுத்தமாக, தலைமுறை, தலைமுறையாக சொல்லப்பட்டு வந்துள்ளது. பெண்ணாக பிறந்ததற்கு 25 மதிப்பெண்கள் + பூப்படைதல் 25 + திருமணம் 25 + தாய்மை 25 என தாயானால் 100 மதிப்பெண்கள் வழங்கும் சமுதாயம் இது. அதனால்தான் திருமணம் ஆகாத, அல்லது திருமணம் ஆனால் குழந்தை பெறாத பெண்களை இந்தச் சமூகம் வினோதமாகப் பார்க்கிறது. மீடியாவும் இதையே வலியுறுத்துகிறது. ஒரு உதாரணம் : தொலைக்காட்சியில் 14.2.2008 அன்று அஜய் தேவ்கன் – கஜோலுடன் பேட்டி. அதில் ஒரு கேள்வி –

அஜய் கொடுத்த பரிசுகளிலேயே சிறந்ததென எதை குறிப்பிடுவீர்கள்?

சந்தேகத்திற்கிடமின்றி என் மகள் தான் அஜய் அளித்த சிறந்த பரிசு என கஜோல் பதிலளித்தார். எத்தனை கோடி சம்பாதித்தாலும் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், எவ்வளவு படித்திருந்தாலும், கொள்ளுப்பாட்டி சொல்லும் பதில்தான் இன்றும் வெளிப்படுகிறது. பல சினிமா பாடல்கள் கூட இதே கருத்தையே வெளிப்படுத்துகிறது. குழந்தையே இல்லையென்றாலும் தத்து எடுக்கக் கூடாது. யார் பெற்றதோ? எப்படிப் பெற்றதோ என்றெல்லாம் கேள்விகள் கேட்போர் தத்தெடுப்பதை விரும்பு வதில்லை. இந்திய சமுதாயத்தில் கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து முடிவெடுத்து குழந்தைப் பெற்றுக் கொள்வ தில்லை,´Õ சில தம்பதிகளைத் தவிர. கணவன் காரணமாக இருந்தால் கூட, குழந்தை இல்லாவிட்டால், பெண்ணை மலடி என சாடும் சமூகம் இது.

இன்று ஆண் – பெண் இருவரும் வேலைக்கு போகும் போது, குழந்தை வேண்டாம் என பெண்கள் கூறுவதை கேட்கிறோம். அமெரிக்காவில் அறுபதுகளிலேயே குழந்தை வேண்டாம் என்றே பெண்கள் பதிலளித்தனர் என படித்ததுண்டு. வேலையில் பணி உயர்வு, பணி நிரந்தரம், ஓரளவு பொருளாதார வசதி முதன்மை படுத்தப்படுகிறது – கூட்டுக் குடும்பம் மறைந்து போன சூழலில், குழந்தையை யார் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வார்கள்? – கர்ப்ப காலத்திலேயே எவ்வளவு மன, உடல் உபாதைகள்? – நமது சமுதாயத்தில் தாய்மை – குழந்தை பராமரிப்பு ஒரு தனி நபரின் -தாயின் -பொறுப்பு – அது குழந்தை வேண்டாம் அல்லது மகப்பேறை தள்ளிபோட பிரதான காரணமாக உள்ளது. ஆணைப் போலவே அலுவலக வேலை. வீட்டிற்கு வந்தபின்னர் குழந்தை பராமரிப்பு என்ற சுமையை இன்றைய படித்த நல்ல வருமானம் கிட்டும் வேலையில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியுடன் சுமக்கத் தயாராக இல்லை. – இன்றைய பெண்கள் தங்கள் விருப்பங்களை செக்ஸ், குழந்தை உட்பட – வெளிப்படையாக பேசுகின்றனர். அமைதியாக எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள தயாராக இல்லை. வேலைக்குô போகும் பெண் வேண்டும். ஆனால், தன் விருப்பங்களை வெளிப்படுத்தும் பெண்கள் ஆண்களுக்கு அச்சமூட்டுகின்றனர் என்பதே உண்மை.

தத்தெடுத்துக் கொள்ளும் குழந்தை நம்மை வயதான காலத்தில் பராமரிக்குமா? நம் வயிற்றில் பிறந்த குழந்தையே பாசமில்லாமல் உள்ளதே? – குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்துதான் வளர்கின்றனர். நாம் நமது பெற்றோரை, நமது துணையின் பெற் றோரை எப்படி கவனித்துக் கொள்கிறோம் என்பதை குழந்தைகள் பார்த்து பதியவைத்துக் கொள்கின்றனர். நல்ல மதிப்பீடுகளைக் கொடுத்து வளர்த்தால், பெற்ற குழந்தையோ, தத்தெடுத்த குழந்தையோ, நாம் முதியோர் இல்லம் செல்ல வேண்டியிராது. –

இன்னொரு கருத்து -ஒரு பெண் குழந்தை பெற்று, பாலூட்டாவிடில் மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்ற கருத்து பரவலாக உள்ளது. – குழந்தை பெற்று பாலூட்டின போதிலும் புற்று நோய் வர நிறைய வாய்ப்பு உள்ளது. 100ல் 8 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருகிறது என்பது சமீபத்திய கூற்று. சுற்றுச்சூழல் உணவிலுள்ள நச்சு என பல காரணங்கள் மார்பகப் புற்று நோய் வர ஏதுவாக உள்ளது. – தத்தெடுக்க விரும்புவோருக்கு: (கணவன் – மனைவி / சேர்ந்து வாழும் ஆண் – பெண்) – முதல் குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது நல்லது. ஒரு வேளை பின்னர் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தாலும், இரு குழந்தைகளும் இணைந்து ஒன்றாக வளரும் சூழல் ஏற்படுவது நல்லது. – சாதி மதம் பார்த்துத் தத்தெடுக்கத் தேவையில்லை. ஒரு குழந்தை திறமையாக, நல்ல பண்புகளுடன் வளர வளர குடும்பச் சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. அளிக் கப்படும் வாய்ப்புகள் முக்கியம். பெண் குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டால் அப்பா எப்படி நடந்து கொள்வார்? தவறாக நடந்து கொள்கின்ற சம்பவங்களை வைத்து மட்டும் பார்க்கக் கூடாது. தனது பெண்ணிடமே தவறாக நடப்பவர்கள் உள்ளனர். எல்லா ஆண்களும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. பெண்களை சக மனுஷியாக பார்க்கும், பெண்க ளை மதிக்கும் ஆண்கள் அப்படி செய்ய மாட்டார்கள். விதி விலக்கை பொதுமைப் படுத்தக் கூடாது. இந்தியா போன்ற மக்கட்தொகை அதிகமாக உள்ள நாட்டில், நிராதரவாக உள்ள குழந்தைகளுக்கு ஒரு நல்ல குடும்பச் சூழல் தேவை. அதை கொடுக்கலாமே. எந்தக் குழந்தையாக இருப்பினும் அதற்கு அன்பும், அரவணைப்பும், கவனிப்பும் தேவை என்பதை மனதில் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதா? தத்தெடுப்பதா என முடிவு செய்ய வேண்டும்.

6

ஆள்பாதி ஆடைபாதி” என்றொரு பழமொழி நம்மிடம் உண்டு. அதாவது ஆள் எப்படி இருந்தாலும் நல்ல ஆடை அணிந்து டிப்-டாப் பாக மாற்றிவிடலாம். பெண்களின் ஆடை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி சமூகம் தொடர்ந்து கவலைப்பட்டு வருகிறது. உலக வரலாற்றில் மனிதர்கள் ஆடை அணிந்தது பற்றி ஏராளமான கதைகள் உண்டு. எல்லோரும் அறிந்த கதை ஆதாம்-ஏவாள் கதைதான். ஆடையில்லாமல் – அது பற்றி ஒன்றும் அறியாதவர்களாக ஆதாமும் ஏவாளும் இருக்கையில் சாத்தானின் பேச்சைக்கேட்டு ஏவாள், விலக்கப்பட்ட கனியைக் கேட்டு ஆதாமை நச்சரித்து ஆப்பிளைக் கடிக்க – அதன் காரணமாக ஆடை பற்றிய வெட்க உணர்வு பிறந்து அதன்பிறகுதான் மனிதர்கள் ஆடை அணியத் துவங்கினார்கள் என்கிறது கதை.
பரிணாம வளர்ச்சியின் போக்கில் மனிதர்கள் தோன்றியதை விஞ்ஞானம் நிரூபித்த பிறகு ஆதாம் – ஏவாள் பெத்துப்போட்ட குட்டிகள்தான் உலகம் பூராவும் உள்ள மனிதர்கள் என்பது அன்றைய மனிதர்களின் வளமான கற்பனை என்றாகிவிட்டது. அந்தக் கட்டுக் கதையிலும்கூட மனிதனைக் கெடுத்தது பொம்பளை யான ஏவாள்தான் என்று ஆணாதிக்க சிந்தனை ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

மனிதகுல வரலாற்றில் மனிதனுக்குப் பயனுள்ள பல பொருட்களைக் கண்டுபிடித்தது பெண்கள்தான் – விவசாயம், கூடை முடைதல், பானை செய்தல் என. அந்த வரிசையில் ஆடைகள் மற்றும் நெசவுக்கும் முன்னோடிகள் பெண்கள்தான். மாதவிலக்கு ஏற்பட்டு ரத்தப்போக்கு வரும்போது அன்றைய ஆதிப் பெண்கள் காடுகளில் கிடைத்த பஞ்சு, தோல் பொருட்களை பயன்படுத்தத் துவங்கிக் காலப் போக்கில் துணியைக் கண்டுபிடித்தனர் என்கிறது வரலாறு. விலக்கப்பட்ட கனி-வெட்கம் என்கிற வெங்காயம் ஒன்றும் காரணமல்ல. ரத்தப்போக்கு என்கிற உயிரியல் நிகழ்வை ஒட்டிய தேவையே ஆடைகளின் – துணிகளின் – கண்டுபிடிப்புக்கு இட்டுச் சென்றது. இன்றைக்கும் மலைவாழ் மக்களில் பல பிரிவினர் – பல நாட்டு மலைகளி லும் – ஆடையின்றியும் அரை உடம்புக்கு மட்டும் மறைப்போடும் வாழ்வதை நாம் பார்க்கிறோம். ஆகவே பெண்மையின் இலக்கணமாகக் கூறப்படும் வெட்கமோ கூச்சமோ துணிகளின் வருகைக்குக் காரணமல்ல. இயற்கைத் தேவையும் தட்பவெப்ப நிலைமையுமே காரணம். பனிப் பிரதேசங்களில் வாழும் எஸ்கிமோக்கள் என்றைக்குமே டவுசர், பனியனோடு லாந்த முடியாதல்லவா?

பெண்ணின் பாலுறவு சுதந்திரத்தைக் கட்டுப் படுத்தும் ஒரே நோக்குடன் அவள் மீது கற்பு என் கிற கோட்பாடு திணிக்கப்பட்ட சமயத்திலிருந்து தான் அவள் என்ன உடுத்த வேண்டும்? எப்படி உடுத்த வேண்டும்? என்கிற எழுதாச் சட்டங்களை யும் ஆணாதிக்கப் பண்பாடு உருவாக்கியிருக்க வேண்டும். ஆண் தன் மனதில் பெண் குறித்து சிறுகச் சிறுகக் கட்டி எழுப்பியுள்ள அழகியல் சூத்திரங்களும் கோட்பாடுகளும் அதீதமானவை. இயல்பானவையாக இல்லை. பெண் குழந்தைகளுக்கு விதம்விதமாய் ஆடை கட்டி அழகு பார்க்கும் – ஆழ்ந்து ரசிக்கும் ஆண் மனம் முதுமை தவிர்த்த பிற எல்லாப் பருவங்களிலும் பெண்ணைத் திரை விலக்கிப் பார்க்கவே பழகி யுள்ளது.
வீரச்செயல் புரிந்திட முடிவெடுத்த பெண்கள் பெண் உடை தவிர்த்து ஆண் உடை தரித்தே களம் இறங்கியுள்ளனர். மேற்குலகின் ஜோன் ஆப் ஆர்க், நமது கட்டபொம்மனின் தளபதி வெள்ளையத் தேவனின் மனைவி வெள்ளை யம்மாள், விவசாயத் தோழர்களை அணிதிரட்டிய தோழர் மணலூர் மணியம்மை என்று சொல்லிக் கொண்டே போகலாம். பெண் உடை என்பது வீரம், அறிவு போன்ற அம்சங்களோடு பொருந் தாது என்கிற கருத்து காலம் காலமாக இருந்து வருகிறது. அதனால்தான் தோழர் மாசேதுங் சீன நாடு முழுவதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே பச்சை நிறப் பேன்ட்டும் முழுக்கைச் சட்டையும் தொப்பியும் கொடுத்து அணியச் செய்தார். சீனத்தில் நடந்த கலாச்சாரப் புரட்சியில் பல அதீத முடிவுகள் எடுக்கப்பட்டன என்கிற விமர்சனங்கள் ஒருபுறம் இருக்கலாம். ஆனால் ஆடைகளால் உண்டாகும் ஆண்-பெண் பேதம் மற்றும் ஆடையின் மீது தடவப்பட்ட இனக் கவர்ச்சி போன்றவற்றின் மீது அந்தக் கலாச்சாரப் புரட்சி வலுவான அடி கொடுத்தது என்பதை நாம் மறுக்க முடியாது.

ஆடை அணிகிற சமூகமாக மனிதகுலம் மாறிவிட்ட பிறகு அணிந்திருக்கும் ஆடையை அவிழ்ப்பது என்பது அவமதிப்பாக மாறுகிறது. அதிலும் சபை நடுவே வைத்துப் பிறர் பார்க்க ஆடை பறிப்பது என்பது பெரிய மானப் பிரச் சனை ஆகிறது. இந்த விஷயத்திலும்கூட பெரிதும் இலக்காவது பெண்களாகவே இருக்கிறார்கள்.
பாஞ்சாலியை சபை நடுவே துகிலுரிந்த கதை நமக்குத் தெரியும். ஒரு இனத்தை ஒரு சாதியை ஒரு மதத்தை இழிவுபடுத்த வேண்டும் என்று பிற இன, சாதி, மதத்தைச் சார்ந்தவர் நினைத்தால் அந்த இனத்துப் பெண்களை ஆடை பறித்து நிர்வாண மாக்குவதன் மூலமே அதைச் சாதிக்கின்றனர். அதன் மூலம் மாற்று இனத்தவரின் மானங் கெடுத்து மனம் குலையச் செய்து விட முடிகிறது. பெண்களின் ஆடை இவ்விதமாக ஒரு இனத்தின் மானம் காக்கும் ஆடையாக அடையாளமாக மாறிப்போகிறது. – அவளுக்கு அதில் சம்மதம் உண்டா இல்லையா என்பது பற்றி எந்தக் கவலை யும் இல்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த போது இந்துக்களும் முஸ்லிம்களும் எதிர் தரப்புப் பெண்களை நிர்வாணப்படுத்தி சபையில் அணி வகுத்து நடக்கச் செய்த கொடுமைகள் ஏராளமாக நடந்தன.

குமரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மேல்சாதியினர் வரும்போது மேலாடை விலக்கி நிற்க வேண்டும் என்று சட்டம் இருந்ததையும் அதை எதிர்த்துத் தோள் சீலைப் போராட்டம் நடந் ததையும் தமிழக வரலாறு நமக்குக் கூறுகிறது. அப் பகுதியில் இக்கொடுமை காரணமாக கிறிஸ்துவத் துக்கு மதம் மாறிய மக்கள் மேலாடை அதாவது ‘குப்பாயம்’ எனப்படும் சட்டை அணிந்திட அனுமதிக்கப்பட்டார்கள். “குப்பாயம் தந்த கர்த்தரே வாழி” என்று நாட்டுப்புறப் பாட்டு கர்த்தரை சட்டை கொடுத்த சாமியாகவே அடையாளப்படுத்துகிறது.

இவை ஒருபுறம் இருக்க, இன்று தமிழகத்தில் பல கல்லூரிகளில் பெண்களுக்கு மட்டும் னசநளள உடினந எனப்படும் ஆடை ஒழுங்குமுறைச் சட்டங்கள் உள்ளன. சென்னையில் உள்ள பிரபல மான கல்லூரி ஒன்றில் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்ட கவிஞரும் திரைப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை சுடிதார் அணிந்து – ஆனால் மேலே துப்பட்டா இல்லாமல் வந்த காரணத்தால் உள்ளே அனுமதிக்கப் படவில்லை. இதுகுறித்துப் பரவலாக சர்ச்சைகள் நடைபெற்றன. அப்படின்னா பொம்பளைங்க எப்படி வேணுமானா டிரஸ் பண்ணிட்டு வரலாமா என்றும், ஆண்களின் மனதைக் கெடுத்துச் சீரழிப்பதே இன்று கல்லூரி மாணவிகள் அணிந்து வரும் உடைதான் என்றும் ஒரு கருத்து வலுவாக இருக்கிறது.

பள்ளி, கல்லூரிகளில் சீருடை இருப்பது பற்றிப் பெரிய ஆட்சேபம் நமக்கில்லை. ஏற்றத்தாழ்வின்றி சமமான உடை அணிதல் வரவேற்கத்தக்கதே. ஆனால் துப்பட்டா அணியாவிட்டால் ஆண்களின் மனம் கெட்டுக் குட்டிச் சுவராகிவிடும் என்று கூறுவது ஆணாதிக்க சிந்தனையின் உச்ச கட்டமாகும். பெண்களை முகம்பார்த்துப் பேசு வதற்கு முடியாமல் அவளைக் கழுத்துக்குக் கீழே பார்க்கும் பார்வைக்குப் பழகிவிட்ட ஆண் மனதை விமர்சிக்காமல் இங்கே மீண்டும் மீண்டும் பெண்ணே குற்றவாளி ஆக்கப்படுகிறாள்.

நன்கு போர்த்திக் கொண்டு – முக்காடு போட்டு – அல்லது முஸ்லிம் பெண்கள் போல் முழு உடலை யும் கறுப்பு அங்கியால் மறைத்துக் கொண்டு போனால்தான் பாதுகாப்பு என்கிற மனநிலை எப்படி வந்தது?ஈவ் டீசிங் கொடுமையால் கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் – இளம்பெண்கள் – சரிகாஷா போல -யாருமே அரை குறை ஆடையோடு போகவில்லை. முழுக்கவும் போர்த்துக்கொண்டு போனவர்கள்தான். அப் போதும் அவர்கள் வக்கிரமாகப் பார்க்கப்பட்டார்கள். ஆகவே பிரச்சனை உடையில் இல்லை. ஆணின் “பார்வை”யில் அடங்கியிருக்கிறது.

பெண்களின் கண்ணைப் பார்த்துப் பேசப்பழகாத ஆண் மனம்தான் திருத்தப்பட வேண்டுமே ஒழிய அதற்கும் பெண்ணையே பொறுப்பாக்கி டிரெஸ் கோட் கொண்டுவருவது ஆணாதிக்க சிந்தனைகளுக்கு சட்ட வடிவம் கொடுப்பதேயாகும்.

7

அழைப்பு விடுக்க வேண்டிய பார்வை
அடங்கி அடங்கியே சமிக்ஞை மறந்து போச்சு
அழைக்கும்போது
இணங்கி இணங்கியே
காமமும் காதலும் மரத்துப்போச்சு

-உஷா சுப்பிரமணியன்

20ம் நூற்றாண்டை பெண்கள் பேசத் துவங்கிய நூற்றாண்டாகக் குறிப்பிடுவர் வரலாற்று ஆய்வாளர்கள் எனத் துவக்கத்தில் குறிப்பிட்டோம்.. அவர்கள் பேச்சு ஆண் மனதை குற்ற உணர்வு கொள்ளச் செய்கிறது. தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாகி யுள்ளேன் என்று போர்ப்பிரகடனம் செய்து அவர்கள் வருகிறார்கள்.

பார்த்தல், கேட்டல்
ருசித்தல், மணத்தல்
உணர்தல் இவற்றுடன்
பகுத்தறிதல் என்பனவும் எமக்குண்டு

-என்று சுல்பிகா பாடும்போது எனக்கு இன்குலாபின் மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னைப்போல அவனைப் போல எட்டுச்சாணு உசரமுள்ள மனுசங் கடா -என்கிற தலித் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஆணுக்காகவே- ஆணின் துணைக்கிரகமாகவே வாழ நிர்பந்திக்கப் பட்டவள் பெண். அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற்குரிய என்ப -என்றும் இப்பண்புகள் தலைவிக்கு மட்டுமல்ல தோழி, செவிலித்தாய், நற்றாய் ஆகியோருக்கும் பொருந்தும் என்பதாக உயிரும் நாணும் மடனும் என்றிவை செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய -என்றும் தொல்காப்பியம் வற்புறுத்துகிறது. விவசாயி படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவது போல ஒரு காட்சி.

இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள
இங்கிலீசு படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
– என்ற வரிகளோடு வரும்.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று காலம் காலமாகத் தொடர்ந்து ஆண்சமூகம் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறது. இயல்பாக அவர்களை நாம் வாழவிடவில்லை. இன்று எவையெல்லாம் பெண் களுக்குப் பிடித்தவை என்று சொல்லப்படுகின்றனவோ அவையெல்லாம் உண்மையிலேயே அவர்களுக்குப் பிடித்தவையா-அவர்களுக்குப் பிடித்தவை இவைதான் என்று காலம் காலமாக ஆண்களால் சொல்லப்பட்டு வந்ததால் பெண்களின் மூளையில் அதுவே சரியென்பதாகப் படிந்துபோய் பிடிக்கிறதா என்று இப்போது நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தோட்டமும் உன்னதல்ல
நிலமும் உன்னதல்ல
பண்படுத்திப் பசளை
இட்டவள் – நீ

காயும் உன்னதல்ல
கனியும் உன்னதல்ல
காவல் நின்று
கண்விழித்தவள் – நீ

கூலியும் உன்னதல்ல
கொடுப்பனவும் உன்னதல்ல
கொளுத்தும் வெயிலில்
களைத்து நின்றவள் – நீ

மலரும் உன்னதல்ல
மணமும் உன்னதல்ல
மடிதாங்கிக் கொடி
வளர்த்தவள் – நீ

-மாற வேண்டும் நீ கவிதையில் விஜயலெட்சுமி.

பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்தபிறகு பசலை படர்ந்து கை வளையெல்லாம் கழன்று விழ, தலைவி படும் துயரம் பற்றி ஏராளமான பாட்டுக்கள் நம் கைவசம் உண்டு. இன்றும் ஆண்கள் வெளியே பிழைக்கப் போகிறார்கள். துபாய்க்கும் சவுதிக்கும் போய்விடுகிற ஏரளாமான இஸ்லாமிய இளைஞர்களின் மனைவி மார்கள் இங்கே அப்படித் தனித்துக்கிடக்கும் துயரத் தை மீரான் மைதீனின் படைப்புகளிலும் ஜாஹீர் ராஜாவின் நாவல்களிலும் நாம் காண் கிறோம். பெரும்பாலான பெண்கள் ரத்தத்தில் ஹ்யூமோகுளோபின் குறைவால் அவதிப்படுகிறார் கள் என்பது சர்வே எதுவும் எடுக்காமலேயே நம்மால் சொல்ல முடியும் உண்மை யாகும். அதற்கு முக்கியமான காரணம்என்ன என்று பார்த்தால் தனிமைதான். அவர் இல்லாத போது நமக்குன்னு என்னத்தைப் பொங்கி என்னத்தைத் திங்க என்கிற சலிப்பில் ஏதோ இருக்கிற பழையதைக் கொஞ்சம் சாப்பிட்டுச் சாப்பிட்டு இப்படி ஆகி விடுகிறார்கள். சங்க காலத்தில் பசலை படர்ந்த பெண்க ளெல்லாம் இப்படி ஹ்யூமோகுளோபின் குறைவினால் அவதிப்பட்டிருக்கக்கூடும். தூக்கம் கெட்டுப்போன அப்பெண்களை செவ்வரி ஓடிய கண்கள் என்றும் அனீமிக்காக இருந்ததை பச்சை நரம்போடிய கைகள் என்றும் ஆண்கள் பாட்டெழுதிப் பரவசப்படுத்தி அப்படியே இருத்திவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மெடிக்கல் செக்அப் செய்ய வேண்டிய பிரச்சனையை குஷியாகப் பாட்டெழுதிக் கொண்டு போன கொடுமையை நாம் என்னவென்பது?
அதேபோல அவர் இல்லாதபோது தன்னைப் பரா மரித்துக் கொள்ளவும் அழகுபடுத்திக் கொள்ளவும்கூட அவளுக்கு உரிமை இருந்ததில்லை. அதாவது தன் உடலைக் கொண்டாடும் உரிமையோ பாதுகாக்கும் உரிமையோ அவளுக்கிருந்த தில்லை. தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமையும் அவளுக்குக் கிடையாது. புதிய மண்பானையில் ஊற்றி வைக்கப்பட்ட தண்ணீர் வெளிப்புறத்தில் திவலை களாகத் தெரிவதுபோல அவளது உடல்மொழியால் தான் அவள் தன் காதலையோ காமத்தையோ வெளிப் படுத்த முடியும்.

தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங்காலைக் கிழத்திக்கில்லைப்
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்நீர் போலும் உணர்விற்றென்ப -(தொல்காப்பியம்)

ஆண்டாள்தான் தமிழில் முதன்முதலாகத் தன் காமத்தை வெளிப்படையாகப் பேசியவள் என்பார்கள்.

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்தெழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன்
திருமாலுக்கே தன் உடல் சொந்தம் என்று அவள் பாடியதால்தான் அவளை விட்டு வைத்தார்கள் போலும்.
இவையெல்லாம் தன் பண்பாட்டின் பெருமைக்குரிய விடயங்களாகக் காலம் காலமாக நம் சமூகம் பேசி வந்திருக்கிறது. உண்மையில் இவை கடுமையான மனித உரிமை மறுப்புப் பிரச்சனைகளாகும். மனித உரிமைகள் பற்றிய தன்னுணர்வு இல்லாத பழங்காலத்தில் இவை பாடு பொருட்களாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அவை கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவை.

மனிதரின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் ஆகிய மூன்றும் பெண்களைப் பொறுத்த வரை ஆணாதிக்க சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டவை யாகவே காலம்காலமாக இருந்து வருகின்றன.

நாம் ஏற்கெனவே பெண் உடை தொடர்பாகச் சில கருத்துக்களைப் பார்த்தோம். அவள் எப்படி உடுத்த வேண்டும் என்று சொல்வதே அராஜகம். ஆனால் அதையும் தாண்டி அவளே வெறும் அலங்காரம்தான் என்கிற எல்லை வரை நாம் சென்றிருக்கிறோம். கொலுசு, மிஞ்சி, துகில், மெட்டி, ஒட்டியாணம், சங்கிலி சரப்புளி என ஆண்கள் தயாரிக்கும் ஆபரணங்களோடு தொடர்புடைய ஒன்றாக- ஒரு சடப்பொருளாகப் பெண்ணை, பெண் உடலை நாம் ஆக்கி வைத்திருக்கிறோம்.

பெண் உடம்பின் ஒவ்வொரு அங்கம் குறித்தும் எவ்விதமாக வர்ணிக்கவேண்டும் எவற்றை உவமையாகச் சொல்ல வேண்டும் என்பதற்கு இலக்கணம் எழுதுகிற அளவுக்கு கேடுகெட்ட பண்பாட்டை நாம் கொண்டிருக்கி றோம். இதுபற்றி பேராசிரியர் அ.செல்வராசு உற்று நோக்கலும் இலக்கண உருவாக்கமும் என்கிற கட்டுரையில் விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்.

பெண்ணின் மார்பகம் பற்றி (கொங்கைகள்) உவமைப்படுத்தத் தக்கன என இலக்கணம் கூறும் வெண்பா இது.

பாங்கரும்பு சூது கிண்ணம் பைங்குரும்பு செப்புமுடி
கோங்கரும்பு தாளங்குமிழி சிமிழ்-பூங்கமலம்
பம்பரம் வெற்பிளநீர் பந்து சகோரங் கலசம்
கும்பருப்பி யானை குடம்

உண்மையில் இது பெருமைக்குரியதா? இது நம் இலக்கிய மரபு – பாரம்பரியம் – புடலங் காய் என்று கொண்டாடுவதா? ஈவ் டீசிங்கில் இச்செய்யுளைத் தூக்கி உள்ளே போடுவதா?

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப்பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே – ( குறுந்தொகை : பாடல் 167 )

எவ்வளவு அழுக்கான ஆடையணிந்து புகை படிந்த கண்களோடும் தலைவி சமைத்துப்போட்டா லும் கணவன் அவள் சமையல் இனிது என்று பாராட்டுவதைக்கேட்டுத் தலைவி பிறர் அறியாவண்ணம் நுண்ணிதாக மகிழ்ந்தாள் என்று இப்பாடல் ஒரு காட்சியை விளக்குகிறது. ரொம்பப்புகழ் பெற்ற சங்கப் பாடல் இது. உண்மையில் இது மிகவும் ரசிக்கத்தக்க பாடல்தான். என்ன ஒரு ரசமான குடும்பக் காட்சி. ஆனால், மனைவி சமைத்துப்போட கணவன் பாராட்ட அதைக்கண்டு பெண் நாணிச் சிவக்க என்று குறுந்தொகைக் காலத்திலேயே இந்த ஆண் – பெண் வேலைப் பேதமும் உன் கை ருசியே தனிதான் என்று ஏமாற்றி அடுக்களையை அவளது சாம்ராஜ்ஜியமாகத் தலையில் கட்டியதும் வந்துவிட்டதே என்று நினைக்கை யில் பாடல் வருத்தமளிக்கிறது. தொல்காப்பியத்திலேயே,

ஏனது சுவைப்பினும், நீ கைதொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு

– என்று பெண்கள் தலையில் மொளகா அரைக்கப்பட்டு விட்டதுதான்.
ஆனால், இங்கு நாம் அதுபற்றி விளக்கிப் பேசப்போவதில்லை. அதுபற்றிப் பின்னர் பார்க்கலாம். முதல் வரியில் வரும் காந்தள் மெல்விரலை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். கெட்டித்தயிரைப் பிசைந்த தால் சிவந்து போன ஒரு பெண்ணின் கை விரல்களைப் பற்றி இந்த வரி பேசுகிறது. அவ்வளவு மென்மை யான விரல்கள் என்று! இப்படியே ஆரம்பித்து பெண்மையை விட மென்மையான தலையணைகள் என்று இன்று கம்பெனிகள் விளம்பரம் செய்கிறவரை வந்து நிற்கிறோம்.

மென்மை என்பது பெண்மையின் ஓர் அம்சம் என்கிற கருத்து காலம் காலமாக நம் மனங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்காரனும் வெண்டைக்காய்க்கு லேடீஸ் ஃபிங்கர் (பெண் விரல்) என்று பேர் வைத்து அங்கேயும் இதே கொடியை நாட்டி வைத்து நாங்களும் உங்களுக்குக் குறைஞ்சவங்க இல்லே என்று சொல்லிவிட்டான். மென்மையானவள் என்பதால் முரட்டு வேலைக்கு லாயக்கில் லாதவள் என்று சமூக உற்பத்தியின் பல தொழில்களிலிருந்தும் பெண் விலக்கி வைக்கப்படுகிறாள்.

சோசலிச சோவியத் யூனியனுக்குப் போய் வந்து தன் அனுபவங்களை எழுதிய ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அங்குள்ள அங்குள்ள பெண்கள் எல்லா வேலைகளும் செய்கிறார்கள். ஆகவே அவர்களுடைய கைகளெல் லாம் முரடாக இருக்கின்றன. பெண்களுக்குரிய மென் மையை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று வருந்தி எழுதினர். எல்லா ஆண்களுக்குமே அப்படி ஒரு வருத்தம் இருக்கிறதுதான். கையைப் பிடித்தால் பஞ்சு மாதிரி மென்மையாக இருக்கணும் என்கிற எதிர்பார்ப்பு.
ஆனால், நாட்டின் பெருவாரியான உழைக்கிற பெண்களின் கைகள் முரடாகவும் உறுதிப்பட்டும்தான் இருக்கிறது. சங்க இலக்கியங் களும் உப்பு மூட்டைகள் சுமந்த உமணப் பெண்கள் பற்றிப் பேசுகிறது. தூத்துக் குடிக்குப் போனால் இன்றும் அதே உமணப் பெண்கள் உப்பளங்களில் பெட்டிகளை வைத்துத் தூக்கிச் சுமப்பதைக் காண முடியும். சாலைப் பணி களில், கரும்பு வெட்டும் தோட்டங்களில், உயர்ந்து எழு கின்ற கட்டிடங்களுக்கு ஊடே என்று பெண்கள் அரி வாளும் மண்வெட்டியும் பிடித்துக் கடினமான வேலை கள் எல்லாம் செய்கிறார்கள். மென்மை – மெல்லியலாள் என்கிற புருடாக்கள் எல்லாம் மத்திய தர வர்க்கம் மற்றும் அதற்கு மேல் உள்ள பெண்களின் தலையில்தான் பெரிதும் சுமத்தப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியை மண் மகள் அறியா வண்ணச் சீறடியாள் என்று இளங்கோவடிகள் குறிப்பிடு வார். கண்ணகியும் மிக வசதியான வீட்டுப்பிள்ளைதான். கண்ணகியின் பாதங்கள் மண்ணிலேயே பட்டதில்லை என்று பெருமையாகப் பேசினாலும் இன்னொரு பக்கம் அவளை வீட்டை விட்டு வெளியே விடாமல் அப்படி அடைத்து வைத்திருந்தார்கள் என்றும் பார்க்க வேண்டி யுள்ளது. உள்ளேயே பூட்டி வச்சிருந்தா காயும்கூட அவிந்து மென்மை யான கனியாகி விடுவதில்லையா? அதுபோலத் தான் பெண்ணும், மென்மையாக்கப் பட்டிருக்கிறாள். இது இயற்கை யான மென்மை இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பூட்டி வச்சுப் பழுக்க வைத்த மென்மை.

மென்மையின் இன்னொரு முக மாக அவள் பலவீனமானவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். றுநயமநச ளுநஒ என்று ஆங்கிலமும் சொல்கிறது. ஆனால், அது அப்பட்டமான பொய். உடல்ரீதியாகவே பெண்தான் பலசாலி. ஆணின் உடலில் பருவத் தில் மீசை முளைப்பது போன்ற சிற்சில மாற்றங்களைத் தவிர வேறு எந்த சிக்கலும் சாகும் வரை ஏற்படுவதில்லை. ஆனால், பெண் மாதவிலக்கில் துவங்கி கருத் தரித்தல், குழந்தை பெறுதல், மெனோபாஸ் என உயிரைக் காவு கேட்கும் உதிரப்போக்கு நிறைந்த பல உயிரியல் ரீதியான மாற்றங்களைத் தன் உடம்பில் தாங்கியபடியே தன் வாழ்நாள் முழுவதையும் கடந்து கொண்டிருக்கிறாள். ஆண் சந்திக்கும் மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் இந்த உடல் பிரச்னைகளோடு சேர்த்துக் கூடுதலாகச் சந்திக்கிறாள்.

உடல்ரீதியாகவும் சரி மனரீதியாகவும் சரி பெண்தான் ஆணைவிடப் பலசாலி. ஆனால், நமது பொதுப்புத்தி யில் நேர்மாறான புரிதல் தான் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.

பெண்மையின் மென்மை என்றால் என்ன என்பதற்கு நாம் கொண் டுள்ள புரிதல் ஆணின் தன்மைக்கு எதிரானது என்பதுதான். கடுமை, கடினம், முரடு, வலிமை, உறுதி போன்றவை எல்லாம் ஆண் குணம். இவற்றுக்கு எதிராக மென்மை என்பதை நாம் பெண்ணுக்குரியதாக முன்வைக்கிறோம். நாம் இத்தொடரின் ஆரம்ப அத்தி யாயங்களில் குறிப்பிட்டதுபோல ஆணையும் பெண்ணையும் பரஸ்பர எதிர்வுகளாக நிறுத்திப் பார்க்கும் கண் ணோட்டத்திலிருந்தே ஆணிடம் இல்லாது பெண்ணிடம், பெண்ணிடம் இல்லாதது ஆணிடம் என்று இதெல்லாம் இயற்கையின் படைப்பு போன்ற ஒரு தோற்றத்தை இயல்பானது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக வரலாற்றுப் போக்கில் உருவாக்கப் பட்டதுதான். பெண் ஆணுக்கு இணையாக முடியாது. மாறாக அவனிடம் இல்லாத சில பள்ளங்களை இட்டு நிரப்புபவளாக இருப்பதே இயற்கை அவளுக்கு இட்ட கட்டளை என்கிற கண்ணோட்டத்திலிருந்தே இக் கருத்துக்கள் பிறக்கின்றன. சமூகம் இப்படியாக ஏற்றத் தாழ்வுமிக்கதாக, வர்க்க சமூகமாக, உயர்ந்தோர் தாழ்ந் தோர் என்பதாக இருப்பது இயற்கையிலேயே நியாயம் என்பதை வலியுறுத்துகிற முக்கிய ஆதாரமாக இந்த ஆண் பெண் பேதம் பயன்படுகிறது. காலம் காலமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் குணங்கள் என்பவை சும்மா வெறும் விவ ரணைகளாகவோ அலங்காரத்துக்கு ஏற்பட்டவையோ அல்ல. சமூகத்தில் ஆண் செய்பவற்றையெல்லாம் பெண் செய்யக் கூடாது. பெண் செய்வதற்கென்று சில இருக்கின்றன. அவை சமூகத்தின் சட்டங்கள் மட்டு மல்ல, இயற்கையின் விதியே அப்படித்தான் என்று அழுத்தமாகச் சொல்வதற்காகச் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டவையாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரி தேவி என்கிற பெண்மணி இந்தக் கட்டுக்களை யெல்லாம் தாண்டினார். ஒரு சமூக சேவகர் என்கிற முறையில் அங்கு அமலில் இருக்கும் குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பல பிற்போக்கான பழக்க வழக் கங்களுக்கு எதிராக இயக்கம் நடத்தினார். உயர்சாதி ஆண்கள் சிலர் கூட்டாக அவரைப் பாலியல் பலாத் காரம் செய்தனர். அவரது சமத்துவ நடவடிக்கைகளை முடக்குவதற்காகவே அவர் மீது அவ்வன்முறை தொடுக்கப்பட்டது. பொம்பளைக்கு இதெல்லாம் தேவை யா? அவள் தன் எல்லையை மீறலாமா? மீறினால் இப்படித்தானே நடக்கும்? என்கிற கேள்விகளை மீண்டும் பொதுப்புத்தியில் எறிகிற சம்பவமாக அந்த வன்முறை நிகழ்த்தப்பட்டது.

ஆகவே, பெண்மை என்கிற பெயரில் அது பெண்மை, நளினம், தாய்மை, கருணை, தியாகம் என எதுவாக வும் இருக்கலாம். அக் குணங்கள் வெறும் அலங் காரத்துக்கும் ஆண் – பெண் வேறுபாட்டைச் சும்மா காட்டுவதற்காக வும் ஏற்பட்டவை அல்ல, அவற்றுக்கு ஒரு சமூகக் கடமை இருக்கிறது. செயல்பாட்டுத் தன்மை யோடு இணைப்பு இருக்கிறது.

ஒரு பெண் மீது சுமத்தப்படும் குணங்கள் (கவனிக்க: பெண்ணின் குணங்கள் அல்ல. பெண் மீது சுமத்தப்படும் குணங்கள்) பற்றி நாம் பேசுகையில் நாம் இரண்டு வித மாகப் பார்க்க வேண்டும். ஒன்று உயிரியல் ரீதியானது எவை என்கிற கேள்வி. இன்னொன்று பண்பாட்டு ரீதியாக அவள் மீது சுமத்தப்பட்டுள்ள குணங்கள் எவை என்கிற கேள்வி.

பிள்ளை பெற்றுக் கொள்வதும் பாலூட்டுவதும் உயிரியல் சார்ந்தவை. அது இயற்கையானது. இயல் பானது. அதைக் கேள்விக்குள்ளாக்க வாய்ப்பில்லை. அது நிச்சயமாக ஆணுக்குக் கிட்டாத வாய்ப்பு.

அதைத் தவிர தாய்மை, பெண்மை, மென்மை போன்ற மைகள் எல்லாம் யாரு வச்ச மை? என்று கேட்க வேண்டிய மைகள்தான். இவையெல்லாம் பண் பாட்டு ரீதியாக – வரலாற்று ரீதியாக – சமூக ரீதியாகப் பெண் மேல் சுமத்தப்பட்ட மைகள்தான். இவை அத்தனையும் நம் கேள்விக்கு உள்ளாகியே தீர வேண்டும். இவை யும் உயிரியல் ரீதியானவைபோல, இயற்கையின் படைப்புபோல ஒரு புரிதல் நம் (ஆண்-பெண்) எல்லோருடைய மண்டைகளிலும் ஏற்றப்பட்டுள்ளன. அது பண்பாட்டின் வேலை. உண்மையில் பண்பாடுதான் ஒரு பெண்ணைக் கட்டமைக்கிறது. பெண் பிறப்பதில்லை. பெண் கட்டமைப்படுகிறாள் என்று சொல்வது இந்தப் பண்பாட்டுக் கட்டமைப்பைத்தான்.இந்தப்பண்பாடு என்பதுதான் என்ன? இது ஏன் இந்த மாதிரி வேலைகளையெல்லாம் செய்கிறது? அதைக் கேள்விக்குள்ளாக்கி மாற்ற முடியாதா? அதை யார் செய்வது? ஆண்களா? பெண்களா? இருவரும் சேர்ந்தா?

9

ஆண்மை – பெண்மை என்பவை வெறும் உயிரியல் ரீதியானவையோ உடலியல் ரீதியானவையோ மட்டும் அல்ல. கடவுளால் அல்லது இயற்கையால் இப்படி இருக்கக் கடவது எனப் படைக்கப்பட்டவையும் அல்ல. நூற்றாண்டுகளாக மனித குலம் கடந்து வந்த பாதையில் – வரலாற்றின் போக்கில் – அவர்கள் கட்டமைத்துக் கொண்ட சமூக ஏற்பாடுகளின் – சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறைமைகளின் பகுதியாகவே ஆண்மையும் பெண்மையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, ஆண்மை அல்லது பெண்மை என்பவற்றின் பொருளும் பரிமாணமும் முக்கியத்துவமும் காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் மாறக் கூடியவையே. மாறிக் கொண்டேதான் வந்திருக்கின்றன.

இது தொடர்பாகப் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் வேறு வேறு வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் தருகின்றன. மார்க்சிய சிந்தனைப் பள்ளிகள் ஆண் – பெண் உறவு, ஆண்மை – பெண்மை மற்றும் குடும்பம் இவை பற்றியெல்லாம் விரிவான ஆழமான முழுமையான பார்வையை முன்வைக்கின்றன. பாலினம் அல்லது பால்பாகுபாடு என்பது சமூகத்தில் தனித்து இயங்கும் ஒரு யதார்த்தமல்ல. சமூக முழுமையின் ஒரு பகுதியாகத்தான் அவற்றைப் பார்க்க வேண்டும் என்கிறது மார்க்சியம். ஆண்கள், பெண்களின் பங்கு மற்றும் இடம் என்பவை வெறும் செயல்பாட்டு ரீதியான வை மாத்திரமல்ல, சமூகப் பொருளாதார அமைப்பின் அங்கங்களாக அம்சங்களாக – பொருளாதார அதிகாரம், சமூக மேலாதிக்கம், பண்பாட்டுக் கடமைகள், உரிமைகள் ஆகிய இவற்றைப் பிரதிபலிப்பவையாகவும் இவற்றின் மீது தாக்கம் செலுத்துபவையாகவும் ஆண்மை – பெண்மை மற்றும் பாலின பேதம் என்பவை அமைந்துள்ளன.

புரிதல் என்பது எப்போதும் இயங்கியல் ரீதியானது. இந்த உலகத்தை மனிதன் புரிந்து கொள்வது அதைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவோ அதை வெறுமனே வியாக்கி யானம் செய்யவோ அல்ல. மாறாக அதை இன்னும் சிறந்த உலகமாக மாற்றுவதற்காக.

மனித குலம் இரண்டு விதமான பொருளியல் நடவடிக்கைகள் மூலம் தன்னைத்தானே வாழவைத்துக் கொள்கிறது. ஒன்று உற்பத்தி. இன்னொன்று மறு உற்பத்தி. ஒரு சமூகம் தனக்கான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்காகச் செய்யும் சகல நடவடிக்கைகளையும் உற்பத்தி என்று மார்க்சியம் குறிப்பிடுகிறது. மறு உற்பத்தி என்பது குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இச்சமூகத்துக்குத் தருவது – இதில் வெறும் உடம்பாகப் பிள்ளைகளைப் பெற்றுத் தருவதை மட்டும் மறு உற்பத்தி என்று சொல்வதில்லை. இந்த உலகத்தின் போக்கை – நிலவும் வாழ்முறையை ஏற்று அதற்குத் தக்கவாறு குழந்தைகள் தம்மை மாற்றி யமைத்துக் கொள்வது உள்ளிட்டதுதான் மறுஉற்பத்தி. அவ்விதம் தகவமைக்கப்படும் குழந்தைகள் ஏற்கெனவே அச்சமூகத்தில் நிலவும் உற்பத்தி உறவுகளின் படிநிலையில் தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை – பாத்திரத்தை – எதிர்ப்பின்றி ஏற்று வாழப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். நிலப்பிரபுவின் மகன் நிலப்பிரபுவாக கூலியின் மகன் கூலியாக, பிரச்சனை இல்லாமல் உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு காலத்திலும் ஒரு உற்பத்தி முறை அமலில் இருந்து வந்துள்ளது – வருகிறது. அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளியச் சமூகம், சோசலிச சமூகம் என…. அவ்வச்சமூக ஏற்பாட்டுக்கேற்ற மக்களைத் தயாரிக்கும் பாசறைகளாகக் குடும்பங்கள் கடமையாற்றுகின்றன. பிள்ளைகளை மறு உற்பத்தி செய்யும் உடலியல் வாய்ப்புப் பெற்ற பெண்களுக்கு உற்பத்தி முறையில் வேறொரு முக்கியப்பணியை வர்க்க சமூகம் வழங்கியுள்ளது. வர்க்க சமூகத்தில் தமக்குரிய – தமக்கு வரையறுக்கப்பட்ட இடங்களில் மனப்பூர்வமாக உட்கார்ந்து கொள்ளும் பிள்ளைகளாக மனிதர்களைப் பயிற்றுவிக்கிற கடமை. இதையே சமூகவயமாக்கல் என்கிறோம். குடும்பமும் மதமும் தான் இதில் பிரதானப் பங்கு வகிக்கின்றன. பெண்கள் குடும்ப விளக்குகளாகவும் பக்தியின் உருவங்களாகவும் கட்டமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் இதுதான். பண்பாட்டுக் கூறுகளையும் நம்பிக்கைகளையும் சுமந்து தலைமுறை தலைமுறைக்கும் கடத்திச் செல்பவர்களாகவும் மத ஆச்சாரங்கள் கடமைகள் குடும்பச் சடங்குகளை வழுவாது கடைப்பிடிப்பவர்களாகவும் பெண்கள் வர்க்க சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருப்பது இந்த வர்க்கக் கடமையை நிறைவேற்றத்தான்.
இந்த சமூகவயமாக்கும் ஆளும் வர்க்கத்தேவை வெளியிலிருந்து அல்லா- மாறாக வீட்டுக்குள்ளிருந்தே பெண்கள் மூலமாக நிறைவேற்றப்படுகிறது.
இந்தப் புரிதலோடு பண்பாடு என்றால் என்ன என்கிற கேள்விக்குள் நாம் புக வேண்டும். பண்படுத்துவது எதுவோ அதுவே பண்பாடு. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்றே கலித் தொகையும் கூறுகிறது. சமூகத்தின் பாடறிந்து – செல்நெறி அறிந்து – ஒழுகுதலே பண்பாடாகிறது. நிலத்தைப் பண்படுத்துவதை ஆங்கிலத்தில் அக்ரி கல்ச்சர் என்கிறோம். மனதைப் பண்படுத்துவதை கல்ச்சர் என்கிறோம். யார் நிலத்தை யார் பண்படுத்துவது நல்லது என்று நாம் கேட்பதில்லை. யார் மனதை யார் பண்படுத்துவது யாருக்கு நல்லது என்றும் நாம் கேட்பதில்லை.

ஆதிகாலம் தொட்டு – இனக் குழு சமூகத்திலிருந்து – மனித குலம் தன் வாழ்வனுபவத்தினூடே உட்செறித்த மதிப்பீடுகள் வாழ்வின் அர்த்தம் பற்றிய புரிதல்கள், நடை, உடை, பாவனை எனப்பெறும் வாழ்முறைகள் எல்லாம் பண்பாட்டில் அடங்கும் என்பர். ஆனால், வர்க்க சமூகமாக மனித குலம் பிளவுண்ட பிறகு பண்பாட்டுக்கு வேறு பணிகள் வந்து சேர்கின்றன. ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்னும்போது ஆண்மை, பெண்மை, குடும்பம், பண்பாடு என்கிற ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் – வர்க்க நலன் என்பதை நாம் தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தப் பண்படுத்தும் பணி பிரதானமாக மனித மனதின் பொதுப்புத்தி எனப்படும் காமன் சென்ஸ் என்கிற தளத்தில்தான் வலுவாக நடக்கிறது. பட்டறிவும், வாழ்பனுபவமும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கத்தின் (அது பெற்றுள்ள இடத்தின் காரணமாக இயல்பாகவே) சிந்தனைகளும் கலந்த கலவைதான் பொதுப்புத்தியாக வடிவெடுக்கிறது. பொதுப்புத்தியில் எல்லாம் கலந்துதான் கிடக்கும். நம்பிக்கைகள், சமூக விழுமியங்கள், பல்வேறு பண்பாட்டுக் கூறுகள் என எல்லாமும் குழம்பிக் கிடக்கும். அதில் சக்திமிக்க தலையீடு செய்து ஆளும் வர்க்கம் தனக்குச் சாதகமான திசை வழியில் மனித மனங்களை வழி நடத்திடப் பண்படுத்துகிறது.

பண்படுத்தும் இவ்வர்க்கக் கடமையை நிறைவேற்றும் தொழில் நுட்ப அறிவுடன் இயங்கும் தொழிற்சாலைகளாக இருப்பவை பண்பாட்டு நிறுவனங்கள். குடும்பம், கல்விச் சாலைகள், மதம், மீடியா, கலை – இலக்கியங்கள் என விதவிதமான பண்பாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்தியாவில் சாதி எனும் நிறுவனம் நம் சமூகத்தின் வர்க்க ஏற்பாடாகவும், பண்பாட்டு நிறுவனமாகவும், இருவிதப் பணிகளைச் செய்கிறது. இந்நிறுவனங்களின் எல்லாப் பணிகளையும் விரித்துப் பார்க்க இங்கு இடமில்லை. ஆண்மை – பெண்மை உருவாக்கத்தில் இவை எவ்விதமான பண்படுத்தலைச் செய்கின்றன என்று பார்ப்பதே இப்போதைய தேவை.
கல்விச்சாலைகளை அடுத்து நாம் குடும்பம் என்னும் மிக முக்கியமான பண்பாட்டுத் தொழிற் சாலையைப் பார்க்கலாம். கல்விச்சாலைகள், மதங்கள்,மீடியா போன்றவை யெல்லாம் அளவில் பெரிய பண்பாட்டு நிறுவனங்கள் போலத் தோற்றம் தருபவை.குடும்பம் அவ்விதமாகப் பார்த்தால் அளவில் சிறியதுதான்.ஆனால் பண் படுத்தும் பணியை மிக நுட்பமாக- குடிசைத் தொழிலாகச் செய்கிற இடம் குடும்பம்.குடும்பம் என்பதை ( ) குழந்தைகளை சமூகவயப்படுத்தும் மையம் என்பார்கள்.நாம் வாழும் சமூகத்துக்கேற்ற மனிதர்களாக மனுஷி களாக குழந்தைகளை வளர்த்தெடுக்கும் இட மாகவே குடும்பங்கள் இருப்பதால்தான் என்ன விதமான ஆட்சி மாற்றங்கள் ஆட்சிமுறை மாற்றங்கள் நிகழ்ந்தபோதும் குடும்பங்கள் தொடர்ந்து அப்படியே நீடிக்க ஆளும் வர்க்கத் தாரால் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

குடும்பத்தின் மைய அச்சாக இருப்பது பெண் என்கிற உணர்வு அழுத்தமாக நம்மிடம் உள்ளது. ஒரு வீடு என்கிற கட்டிடம் குடும்பமாக மாறுவது அந்த வீட்டில் பெண்/பெண்கள் இருக்கும்போது தான் என்பார்கள். ஆகவே வர்க்க பேதமுள்ள- சாதி பேதமுள்ள – இச்சமூகத்திற்கு ஏற்ற சாதி மற்றும் வர்க்க மனிதர்களாக குழந்தைகளை வளர்த்தெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பை பெண்களின் தலையில் ஏற்றி வைத்திருக்கிறது சமூகம்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப் பொறுப்பைப் பெண் பிசகாமல் நிறைவேற்றி வருகிறாள்.அதனால்தான் ஆம்பளை கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்திட்டாலும் கண்டு கொள்ளாமல் விடுகிற சமூகம் பெண் விஷயத்தில் எந்த சலுகையும் கொடுப்பதில்லை. தர்மங்கள், நியாயங்கள், சரி-தப்புகள்,நீதி-நேர்மைகள் என எல்லாவற்றையும் அவள்தான் கட்டிக் காத்து வரும் தலைமுறைக்கும் எடுத்துச்சொல்ல வேண்டிய வளாக, எடுத்துச்செல்ல வேண்டியவளாக இருக் கிறாள்.எதையும் மீற முடியாதவளாக மீறக் கூடாதவளாக பெண் கட்டமைக்கப்படு கிறாள். அதற்காகத்தான் இந்தப்பெண்மை, தாய்மை என்கிற எல்லா இழவுகளும் அவள் தலையில் ஏற்றப்பட்டுள்ளன -ஆண்களின் தலை யிலும்தான்.

இந்த இடத்தில் மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு என்கிற சிறுகதையை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

மருமகள் வாக்கு

திருமணமாகிப் புகுந்த வீட்டுக்கு வரும் ஒரு மருமகளைப்பற்றிய கதை இது.அந்த வீட்டில் எல்லாம் மாமியார் வச்ச சட்டம்தான்.இன்னைக்கு அரைப்படி அரிசி பொங்கணுமா கால்படி வடிச்சா போதுமா என்பது உட்பட மாமியாரிடம் கேட்டுத் தான் செய்ய வேண்டும். புருசனோடு பேசுவது கூட மாமியார் அனுமதி யோடுதான். மருமகளின் ஒவ்வொரு அசைவும் மாமியார் விருப்பப் படிதான். ஆரம்பத்தில் மருமகள் மனசில் என்ன இது கொடுமையா இருக்கே என்று தோன்றினா லும் நாள் ஆக ஆக இதுதானே நம்ம வீட்டு வழக்கம் என்று ஆகி விட்டது.
அந்த சமயம் உள்ளூர் பஞ்சாயத்துத் தேர்தல் வந்தது.பல சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.பூனைச்சின்னத்துக்கும் கிளிச்சின்னத்துக்கும்தான் சரியான போட்டி. மருமகள் தன்னுடைய ஓட்டு யாருக்கு என்று மனசுக்குள் யோசித்துக் கொண்டிருந்த போது மாமியார் வந்து என்ன யோசனை பலமா இருக்கு உன்னுடைய ஓட்டு கிளிச்சின்னத்துக்குத் தான் ஒண்ணும் யோசிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டாள். மாமியார் அப்படிச்சொன்னா மறுகணமே மருமகள் தன்னுடைய ஓட்டு பூனைக்குத்தான் என்று அழுத்தமாக முடிவு செய்து விட்டாள்.ரகசிய வாக்குத்தானே. யாருக்குப் போட்டோம் என்று மாமியாருக்குத் தெரியவா போகிறது என்று தைரியமாக முடிவு எடுத்தாள்.

இடையிடையே மாமியார் உன் ஓட்டு யாருக்குடீ என்று கேட்கும்போதெல்லாம் நீங்க சொன்னபடி கிளிக்குத்தான் அத்தே என்று சிரிப்போடு பதிலும் சொல்லி விட்டாள். கடைசியில் தேர்தல் நாளும் வந்தது. காலை யிலேயே மருமகள் ஓட்டுப் போடக் கிளம்பி விட்டாள்.மாமியார் கிளிச்சின்னம் என்று ஒரு உறுமலோடு மருமகளை அனுப்பி வைத் தாள்.ஒருநாளும் இல்லாத உற்சாகமும் மகிழ்ச்சி யும் மருமகளின் நடையில் துள்ளியது. வாழ்க்கை யில் முதல் முறையாக மாமியாருக்கு எதிராக வாக்களிக்கப்போகிறோம் என்கிற சந்தோசம் அது.சுட்டு விரலில் மையிட்டு வாக்குச் சீட்டை வாங்கிக்கொண்டு மறைவிடத்துக்குப் போனாள். வாக்குச் சீட்டில் ஒவ்வொரு சின்னமாகப் பார்த்துக்கொண்டே வந்தாள்.கிளிச்சின்னத்தின் மீது பார்வை பதிந்ததும் கிளி சிறகடித்தது. கிளிச்சின்னம் என்கிற மாமியாரின் உறுமல் பின்புறமிருந்து கேட்டது.கிளியைத்தாண்டி அவள் கை கீழே நகரவில்லை.அப்படியே தலை சுற்றுவது போலிருந்தது.கீழே பூனைச்சின்னம் இருப்பதை மயக்க நிலையில்தான் கவனித்தாள். அவளை அறியாமலேயே கை அதுபாட்டுக்கு கிளிச்சின்னத்தில் முத்திரையைப்பதித்து விட்டது. வாக்குச்சீட்டை உள்ளே போட்டு விட்டு வெளியே அவசரமாக ஓடிவந்துவிட்டாள்.

இதுதான் அக்கதையின் சுருக்கம்.பெண்களின் மனநிலையை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தின் சிந்தனை மற்றும் பண்பாட்டு மேலாதிக்கத்துக்குத் தன்னையறியாமலேயே கட்டுண்டு கிடக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மனநிலைக்கும் இக்கதை பொருந்தும். அவள் நினைத்தாலும் அவளால் மீற முடியாத தளைகளுக்குள் பெண் காலம் காலமாகக் கட்டப்பட்டிருக்கிறாள்.பக்தி,குடும்பநலன்,
வீட்டுக்கு ஆகாது,பிள்ளைகளுக்கு நல்லது, அவருக்கு நல்லது என்கிற வளையத்துக்குள் வசமாக சிக்க வைக்கப்பட்டிருக்கிறது பெண் மனம். மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே வீட்டினில் எம்மிடங்காட்ட வந்தார் என்று பாரதி சொன்னது போல பெண் வசக்கப்படுகிறாள் குடும்பத்தில்.அவள் வசங்கும் காலம் என்று ஒரு குறிப்பிட்ட பருவத்தை மட்டும் சொல்லி விட முடியவில்லை. பிறந்ததிலிருந்து சாகும் வரை அவள் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெற்ற மக்கள் வீட்டிலும் என வசக்கத்தான் படுகிறாள். சகல தர்மங்களையும் நம்பிக்கைகளையும் சுமக்க வசக்கப்படுகிறாள்.
ஆனால் அதே சமயம் குடும்பம் எந்த மாற்றத்துக்கும் ஆளாகாமல் அப்படியே தொடர் வதாகச் சொல்ல முடியாது.சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் குடும்பத்துக்குள் தொடர்கிற பண் பாட்டு அசைவுகள் மீதும் தாக்கம் செலுத்தி வந்துள்ளன. கணவன் இறந்தால் அவனோடு மனைவியும் எரிந்து சாம்பலாகிற பண்பாடு இந்தியக்குடும்பங்களில் -குறிப்பாக வட மாநிலங்களில் இருந்ததை நாமும் அறிவோம். இதுபோல சமூகம் குடும்பத்துக்குள் கொண்டுவந்த இன்னும் பல மாற்றங்களைப் பார்க்கலாம்.
12

மனித மனங்களைப் பண்படுத்தும் தொழிலை சக்தி மிக்க முறையிலும் பரந்துபட்ட அளவிலும் நுட்பமான வடிவங்களிலும் செய்யும் பண்பாட்டு நிறுவனமாக ஊடகங்கள் செயல்படுகின்றன. ஊடகங்களில் அச்சு ஊடகங்கள்,மின்னணு ஊடகங்கள்,திரைப்படங்கள் எனப்பலவகை உண்டு. இன்று உலகமயப் பொருளாதாரத்தின் முகமூடி யாகவும் கேடயமாகவும் உறைவாளாகவும் இந்த ஊடகங்கள் திகழ்கின்றன.

ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்று வர்ணிக்கப்படும் ஊடகங்களின் மிகப்பெரிய அரசியல் யாதெனில் சில துறைசார்ந்த செய்திகளை தவறாமல் மீண்டும் மீண்டும் வெளியிடுவதும் சில துறைசார்ந்த செய்திகளை மறந்தும் வெளியிட்டு விடாமல் இருப்பதுமாகும்.சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி விவசாயிகள் பற்றிய செய்திகளை-தொழிலாளர் போராட்டங்கள் பற்றிய செய்திகளை – தேசிய அளவில் வெளியாகும் எந்தப் பத்திரிகையும் எந்த மின் ஊடகமும் வெளியிடுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது கூட அங்கே பிரதமர் சென்ற செய்தியை ஒட்டித்தான் அவை தற்கொலைச் செய்திகளையே வெளியிட்டன. அவை வெளியிடும் செய்திகளில் விவசாயி-தொழி லாளர் பற்றிய செய்திகள் 0.70 சதவீதம்தான்.

பெண்கள் பற்றிய செய்திகளை – நிகழ்ச்சிகளை- எந்த ஊடகமும் புறக்கணிப்பதில்லை.ஆனால் அவை என்னமாதிரியான பெண் செய்திகளை வெளியிடு கின்றன என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி. ஏற்கனவே இந்த ஆணாதிக்க சமூகம் கட்டமைத்து வைத்துள்ள பெண்மை என்கிற பொய்யை-பெண்மை என்கிற கருத்தாக்கத்தை-மேலும் மேலும் அடிக் கோடிட்டுத் திணிக்கும் வேலைதான் ஊடகங்களில் நடக்கிறது.

விவசாயிகள் தற்கொலையை நாட்டின் முக்கிய மான செய்தியாகக் கருதாத தினசரிகள் சாமியார்களின் காமலீலை,அழகிகள் கைது,காதலனுக்காகக் கணவனைக் கொன்ற சங்கீதா என்பன போன்ற செய்தி களையும் சினிமா மற்றும் பொழுதுபோக்குச் செய்திகள் என்ற பேரில் பெண்களின் உடல்காட்டும் புகைப்படங்களையும் வாரக்கணக்கில் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.வார இதழ்களிலோ அட்டை டு அட்டை ஆண் மனதில் காட்சி இன்பம் தூண்டும் லட்சிய வெறியுடன் அச்சிடப்பட்ட பெண் உடல்தான். இவற்றிலெல்லாம் ஊடாடுவது பெண் என்பவள் வெறும் உடல்தான் -வெறும் காட்சிப் பொருள்தான் -ஆண்கள் நுகர்வதற்கான ஒரு போகப் பொருள்தான் -என்கிற ஒரு கருத்தோட்டம்தான். பெண்களுக்கான பத்திரிகைகள் சில சாதனைப்பெண்கள் பற்றி அறிமுகம் செய்வது போன்ற மிகச்சில சேதிகளைத் தவிர மற்றதெல்லாம் பெண்மையின் இலக்கணங்களாக நம் சமூகம் சொல்லிவரும் சமையல்,கோலம்,டிசைனிங் என்றே வட்டமடிக்கின்றன. பிற பத்திரிகைகளுக்கும் பெண் களுக்கான பத்திரிகைகளுக்கும் உள்ள ஒரு முக்கிய மான வித்தியாசம் இதில் பெண் உடம்பாகக் குறுக்கப் படுவதில்லை. ஆனால் பெண்மையின் பெருமை என்கிற கொடுமை தவறாமல் உண்டு.

தொலைக்காட்சி அலைவரிசைகளில் பரவலாகப் பேசப்படுபவை தொடர்கள். தவிர்க்கவியலாத ரெண்டு பெண்டாட்டிக் கதைகளாகவே அமைந்து விடுகிற இத்தொடர்களில் கண்ணீரும் கம்பலையுமாக பெண்கள் புலம்புகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக விமர்சித்து அவற்றைப் புறந்தள்ளுவது நியாயமான பார்வையாக இருக்காது.

கோலங்கள், அரசி, சித்தி, கஸ்தூரி போன்ற தொடர்கள் எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் ஒரு பெண்ணின் போராட்டத்தை- பல சோதனை களைத் தாண்டி அவள் வெற்றி பெறுவதைச் சொல் லும் கதைகளாகவும் இருக்கின்றன என்பதை நாம் பார்க்க வேண்டும். இவற்றை விரும்பிப் பார்க்கும் பெண்கள் மனங்களில் உளவியல்ரீதியாக ஒரு பெருமித உணர்வு சத்தமில்லாமல் பொங்கிப் பெருகு வதை நாம் காணத் தவறக்கூடாது.

ஏழை எம்.ஜி.ஆர். பணக்கார வில்லனைத் தோற் கடிக்கிற பழைய சினிமா பாணிதான் இது என்ற போதிலும் இதில் வெல்வது பெண் என்பது முக்கியம். ஆனால் இத்தொடர்கள் எல்லாவற்றிலுமே வில்லியாக ஒரு பெண்ணே காட்டப்படுவது ஏற் கனவே நம் மனங்களில் அழுந்தப்பதிக்கப்பட்டுள்ள மாமியார் – வில்லி என்கிற படிமத்தை இன்னும் வலுவாக அடிக்கோடிடும் கேட்டைச் செய்கின்றன.

இன்னும் குடும்பப் பொண்ணா லட்சணமாக வாழும் ரோல் மாடல் பெண்கள் ஏராளமாக இத் தொடர்களில் மூக்கைச் சிந்துவார்கள்.எத்தனை காலத்துக்குத்தான் பெண்களை குடும்பப்பாங்கு என்கிற முக்காட்டுக்குள் மூச்சுத் திணற வைப் பது?பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்கிற புளித்துப்போன பழைய வாதமும் இத் தொடர்களில் அடிக்கோடிடப்படுகின்றது.

கலைஞர் தொலைக்காட்சி வந்தபிறகு தொடர் களை விட, மானாட மயிலாட போன்ற ஆட்ட பாட்டத்தொடர்கள் மற்றும் நேரலை ( ) ஒளி பரப்புக் காட்சிகள் மையமான இடத்தைப் பிடித் துள்ளன. இவற்றில் ஆடும் பெண்களின் உடையலங் காரம் மற்றும் ஜட்ஜ்களாக வந்து அமரும் சில மேடம்களின் உடை பற்றிக் குடும்பங்களில் கடும் விமர்சனங்கள் எழுவதைப் பார்க்கிறோம். -டிவியின் ஆட்டங்கள் நம் சேனல்களில் வந்தபோதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன.விமர்சிக்கும் அதே வேளையில் உடையில் ஒருவித கட்டுடைக்கும் சுதந்திர மனோபாவத்தை இந்த ஆட்டங்கள் பெண்களுக்கு வழங்குகின்றன என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்.சேலையை விட சுடிதாரும் நைட்டியும் நிச்சயமாக வசதியும் சுதந்திரமும் தந்தனதானே. இப்படியே போனால் என்னாவது என்று சுதந்திரத்தின் எல்லையை அவசர அவசரமாக ஆண்மனம் நிர்ணயிக்கத் தவிக்கிறது.குடும்ப மனம் என்பதே சமூக மனமாகத் திகழும் ஆண்மனம்தானே.

இவை போக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் பொறுப்பான பெண்கள் கக்கூஸ் சுத்தம் செய்ய சரியான க்ளீனிங் திரவத்தைத் தேர்வு செய்வதையும் துவைப்பதற்கு ஏமாறாமல் ஒரு சோப்பையோ வாஷிங் பவுடரையோ தேர்வு செய் வதையும் குழந்தைகளுக்கும் கணவருக்கும் ஆகா என்று சொல்லும் வண்ணம் மசாலாப் பொடிப் போட்டுச் சமைப்பவராகவும் மீண்டும் மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டே இருக்கின்றன.

திரைப்படங்களும் இதே வேலையைப் பெரிய திரையில் டிஜிட்டல் சவுண்டுகளுடன் செய் கின்றன.காதலிக்கும் போதெல்லாம் டவுசர், பேண்ட்டுகளில் வரும் பெண்கள் கல்யாணம் என்றதும் பட்டுப்புடவை கட்டித் தழையத் தழைய வருவதை எல்லாத்திரைப்படங்களிலும் பார்க் கிறோம். இவர்கள் எல்லோருமே ஒரே ஆண்மனதின் வேறு வேறு ரூபங்கள்தான்.ஒரே குரலில் பெண் களுக்கான உடைக்கலாச்சாரத்தை நம் மண்டையில் திணிக்கிறார்கள்.
இன்னும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு அதே கயவனைத் தாலி கட்டச் சொல்லும் நாட்டாமைகள்,கதாநாயகன் தன் சமூக சேவை நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில் கூடச் சேர்ந்து ஆடிப்பாடுவதற்கு என்றே வந்துபோகிற கதாநாயகிகள் என்று திரைப்படங்களும் தொலைக் காட்சிகளும் கட்டமைக்கிற பெண்மையின் லட்சணங்கள் ஏராளம்.இது ஆண் பெண் இருபால் ரசிகர்களின் மனங்களிலும் ஆழ்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.பெண்மை இன்னும் பல விதங் களில் மீடியாவால் தகவமைக்கப்படுகிறது.

13

நாம் வாழும் சமூகங்கள் நம்மை அதாவது ஆண்களையும் பெண்களையும் சில குறிப்பிட்ட விதங்களில் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டு மென எதிர்பார்க்கின்றன.அந்த எதிர்பார்ப்பே பண்பாட்டுத்தளத்தில் ஆண்களுக்கும் பெண்களுக் குமான விதிகளாக இறுகி நிற்கின்றன.ஆனால் மனிதர்களாகிய நாம் எப்போதும் விதிகளைக் கட்டிக்கொண்டே சாவதில்லை.அழுத்தம் அதிக மாகும்போது விதிகளை உடைத்துக்கொண்டு வெளியே வரத்தான் செய்வோம். அரசியல்-பொரு ளாதாரத் தளங்களில் நடப்பதுபோல இந்த உடைப்பு அவ்வளவு எளிதில் பண்பாட்டுத்தளத்தில் நடந்து விடுவதில்லை.

ஒரு சின்ன விசயம்.

முற்போக்கு மேடைகளில் பிரபலமாகப் பாடப்படும் ஒருசில பாடல்கள் பற்றி ஒரு முகாமில் காரசாரமான விவாதம் வந்தது.ஒரு பாட்டு ஆசைப்பட்ட எல்லாத்தியும் காசிருந்தால் வாங்க லாம் அம்மாவை வாங்க முடியுமா ? என்கிற பாட்டு. இன்னொன்று ஆத்தா உன் சேலை என்கிற பாடல்.இவை அற்புதமாகப் பாட்டெழுதும் தோழர் ஏகாதசியின் பாடல்கள். இத்தகைய பாடல்களை மக்கள் விரும்பிக் கேட்கிறார்கள்.மேடையில் நம் கலைஞர்கள் பாடும்போது கூட்டத்தில் பலர் கண் கலங்கி அழுது விடுவதும் உண்டு. அவரவர் அம்மா ஞாபகம் வந்து ஏக்கப்பெருமூச்சு விடாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.மக்கள் அடிக்கடி விரும்பிக்கேட்கும் பாடலாக சீட்டுக்கொடுத்துப் பாடச்சொல்வதும் உண்டு – இப்பாடல்களை.

ஏற்கனவே அம்மா என்றால் அன்பு-பாசம்-தியாகம் – கண்ணீர் என்று சமூக மனதில் பதிவாகி யிருக்கிற – அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்று இச்சமூகம் எதிர்பார்க்கிறதோ – என்ன விதிக்கப்பட்டிருக் கிறதோ அதையே கண்ணீரும் கம்பலையுமாக சோகத்தில் தோய்த்தெடுத்து இப்பாடல்கள் காற்றில் பரவ விடுகின்றன. முற்போக்காளர்கள் அதே தியாக அம்மாவையா மக்களின் முன்னால் கொண்டுபோய் நிறுத்த வேண்டும்? நமக்கு இந்த அன்பு பாசம் தியாகம் போன்ற மூடாக்குகளிலிருந்து விடுபட்ட -கார்க்கியின் தாய் நாவலில் வரும் அம்மா போல -கேப்டன் லட்சுமி போல -அன்னை லட்சுமி போல -ஜானகி அம்மா போல – பாப்பா அம்மா போல-ஒரு அம்மாவை அல்லவா நாம் முன்னுதாரணமாக மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என்று விவாதம் செய்தோம்.

பாட்டை எழுதிய கவிஞர் இந்த விமர்சனப் பார்வையை ஏற்றுக்கொண்டு அப்படி ஒரு புதிய பாடலை தானே எழுதித்தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் கூட்டம் முடிந்ததும் ஒரு தோழர் தனியாக வந்து சன்னமான குரலில் சொன்னார் இப்படி எல்லாத்தியும் ராவடியாக பெண்விடுதலைப் பார்வையிலேயே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் அன்பு பாசம் தாயின் அரவணைப்பு என்று மனித வாழ்க்கைக்கு அழகும் அர்த்தமும் தந்து கொண்டிருக்கிற எல்லாமே காலியாகி விடாதா?வாழ்க்கை என்பது எல்லாம் சேர்ந்ததல்லவா? வெறும் பிரச்னைகளின் தொகுப்பல்லவே வாழ்க்கை. ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் ஆத்தாவின் மடியில் நமக்கு ஒரு ஆறுதல் இருக்கிறதல்லவா?அதையும் பறித்துக்கொள்வது நியாயமா?என்று தயக்கத்துடன் ஆனால் ஒரு உள்ளார்ந்த கோபத்துடன் அவர் கேட்டார்.

பெண்களுக்காக யார் எப்போது எங்கே லேசாகக் குரல் எழுப்பினாலும் இப்படி லட்சம் சந்தேகங்களும் கேள்விகளும் வந்துவிடும் என்பதை நாம் அறிவோம்.
தாயின் அரவணைப்பை நாம் மறுக்க வில்லை.அதில் உயிரியல்ரீதியான அம்சம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்கிறது.தாய் மட்டுமே தியாகியாவது அயோக்கியத்தனமான ஏற்பாடு அல்லவா என்பதுதான் நாம் எழுப்பும் ஒரே கேள்வி. தாய்க்குத் தியாகம் செய்கிற ஒரு டூட்டி மட்டுமே கொடுப்பது எந்த உலகத்து நியாயம் என்பதுதான் நம் கேள்வி.இருக்கும் கதகதப்பை – அனுபவித்துக் கொண்டிருக்கும் அரவணைப்பை இழந்துவிடச் சொல்கிறார்களே என்கிற ஆண் மனப்பதட்டமே இத்தகைய கேள்விகளுக்குப் பின்னால் துடித்துக் கொண்டிருக்கிறது.ஏன் பதட்டப்பட வேண்டும்?. இப்போதிருக்கும் இந்த ஒருதலைப்பட்சமான ஏற்பாட்டுக்கு மாற்றாக அரவணைப்பு-அன்பு-பாசம்-என்பதற்கான புதிய வரையறுப்புகளை உருவாக்குவோம்.அப்புதிய சூழல் இன்னும் ஜனநாயகமான ஒரு காதலை- இன்னும் பரஸ்பரமான கதகதப்பை வழங்கும்.நாம் இன்னும் நல்ல ஒரு வாழ்வை நோக்கிச் செல்லலாம் அல்லவா?.

எத்தனையோ விசயங்களில் முற்போக்கானவர் களாக இருக்கும் நண்பர்கள் தாய்மை-பெண்மை என்கிற இடம் வரும்போது மட்டும் வெறும் உணர்ச்சி மனிதர்களாக வரலாற்றுணர்வற்றுப் பின் தங்கி விடுகிறார்கள்.மிகப்பெரிய உடைப்பு உணர்வு மட்டத்திலும் அறிவுத்தளத்திலும் நடக்க வேண்டி யிருக்கிறது. அதுவரைக்கும் செத்தாலும் என்னைப் பொத்த ஆத்தாவின் சேலை வேண்டும் என்று அழுது மூக்கைச் சிந்திக்கொண்டிருப்போம் என்று சொல்வது நியாயமா? இதில் இன்னொரு கொடுமையும் சத்த மில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. பாட்டைக் கேட்டு அம்மாக்களுக்காக நாலு சொட்டுக் கண்ணீர் விட்டு ரெண்டு சிலிண்டர் பெருமூச்சும் விட்டுக் கொள்வதில் நம் குற்ற உணர்வுகள் கரைந்து போய் மீண்டும் வழக்கமான ஆண்களாக நிம்மதியாக வலம் வந்து விடுகிறோம். நாம் சுத்திகரிக்கப்பட்டு விடுகிறோம்.சடங்குகள் எப்படி உளவியல்ரீதியாக இயங்கி குற்ற உணர்வுகளில் இருந்து நம்மை விடுவிக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலக் கலை இங்கே அப்பணியைச் செய்து விடுகிறது. அன்பின் பேராலும் பாசத்தின் பேராலும்தான் ஆணாதிக்கம் நம் சமூகத்தில் அமலாகிக் கொண் டிருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொண்டால் எந்த அளவுக்கு சமரசமற்ற இடைவிடாத போரை நாம் நமக்கு உள்ளேயும் சமூகத்திலும் நடத்த வேண்டியிருக்கிறது என்பதை உணரலாம்.

பெண்மை என்கிற இட்டுக்கட்டப்பட்ட கற்பனையின் மீது நாம் பல கனவுகளையும் கடமைகளையும் ஏற்றி வைத்துக்கொண்டே போகிறோம்.உயிரியல் ரீதியான ஆண் பெண் வேறுபாடுகளைத் தவிர மற்ற எல்லாம் பண்பாடு என்ற பெயரில் இச்சமூகம் நம் தலையில் திணித்தவை என்னும்போது மாற்றுப்பாதையை நாம் சமைக்க வேண்டும்.

சென்ற மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தொலைக்காட்சி அலைவரிசை களில் பலருடைய கருத்து உதிர்ப்புகள் ஒளி பரப்பப் பட்டன.ஒரு திரைப்பட இயக்குநர் கூறினார் . பெண்களுக்கு சமத்துவம் சென்னை போன்ற மாநகரங்களில் கிடைத்துவிட்டது. டவுன் சவுத்தில் கிராமப்புறங்களில் இன்னும் கிடைக்கவில்லை(ஈவ் டீசிங்கில் இளம் பெண்கள் செத்தது எல்லாமே பெருநகரங்களில்தான் என்பது காலப் போக்கில் எளிதாக மறந்துபோகிறது)
வேறு பலருக்கு முன்னே மாதிரி இல்லே இப்போ பெண்கள் ரொம்ப முன்னேறிட்டாங்க என்கிற கருத்து இருக்கிறது.

எதெல்லாம் பெண் அடிமைத்தனம் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தயார் செய்து – தீண்டாமைக்குச் செய்வது போல -சர்வே எடுத்து-பரவலாக மக்களிடம் கொண்டு சென்று பெண்நிலை குறித்துப் பெரும் கல்விபுகட்டல் நடைபெற வேண்டியுள்

14

நீண்ட நெடுங்காலமாய் காத்திருக்கிறோம்…

இரண்டு நிகழ்வுகளை நாம் நினைவு படுத்திப் பார்க்க வேண்டும். ஒன்று 1946 முதல் 1951 வரையி லும் நீடித்த தெலிங்கானா போராட்டத்தில் கம்யூ னிஊட்டுகள் தலைமையில் பல நூறு பெண்கள் ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.துப்பாக்கி ஏந்திடப் பயிற்சி எடுத்தார்கள். துப்பாக்கியோடு எதிரிகளைச் சுட்டு வீழ்த்தினார்கள். சக ஆண் போராளிகளைப் போலவே வெட்ட வெளியில் வயல் வெளிகளில் மலைக்காடுகளில் என எவ் விடத்தும் படுத்து உறங்கினார்கள்.வீடுகளைத் துறந்து உற்றார் உறவினரைத்துறந்து தாங்கள் ஏற்றுக்கொண்ட லட்சியத்துக்காக சுதந்திரத்துக்காக நிஜாமின் – பண்ணையார்களின் ஆதிக்கத்துக்கு எதிராகக் களத்தில் நின்றார்கள்.நிஜாம் தோற்கடிக்கப் பட்டபிறகு நேருவின் அரசாங்கத்தின் ராணுவமும் போலீசும் தெலிங்கானா போராட்டத்தை நசுக்கி அழித்த பிறகும் அதுவரை வீடுகளைத் துறந்து இயக்கத்தோடு இருந்துவிட்ட பெண்களை இனி நீங்கள் உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள் என்று கட்சி சொன்னபோது அப்பெண்களில் பலர் கதறி அழுதார்கள். மீண்டும் அந்த நரகக் குழிக்குப் போகவா? நாங்கள் கட்சி அலுவலகத்திலேயே இருந்து விடுகிறோமே என்றுதான் எல்லோரும் கேட்டார்கள்.
இன்று நம்மோடு கூட வாழும் நம் வீட்டுப் பெண்களுக்கு இது நரகக் குழி என்பது இன்னும் பிடிபடவில்லை. காடுகளிலும் வயல் வெளிகளிலும் படுத்துறங்கும் வாழ்க்கையை அவர்கள் சற்றும் ருசிக்கவில்லை. காடுகளை விடுங்கள். வீட்டுக்கு வெளியே இயங்கும் உலகத்தில் எத்தனை கோடி இன்பம் உண்டோ அதில் ஒரு துளியையும் அவர்கள் ருசித்ததில்லை. வெளியே இருக்கும் உலகம் தன்னை விழுங்கும்.தன்னை மானபங்கம் செய்துவிடும் என்கிற அச்சம் தவிர வெளி உலகம் பற்றி நம் பெண்களுக்கு நாம் என்ன காட்டியிருக்கிறோம்.

வேலைக்குப் போகும் பெண்கள் ஒன்றி ரண்டாக- அரையும் குறையுமாக- சில சுதந்திரங் களை தொட்டுப்பார்த்திருந்தாலும் வேலை பார்க்கும் ஆண்கள் அனுபவிக்கும் சுதந்திரம் அவர் களுக்கு இல்லை.நரகம் என்று தெரிந்தும் மீற முடியாத மனத்தடைகளுக்குள் நம் பெண்கள் சிக்கிக் கிடக்கிறார்கள்.பல்லாயிரம் ஆண்டுகளாகப் பண் பாடு அவர்கள் தலையில் (ஆண்கள் தலை யிலும்தான்) ஏற்றி வைத்துள்ள பெண்மை பற்றிய கற்பிதங்களில் இருந்து விடுபட முடியாத மனத் தடைகள்தாம் அவை.

அரசியல்ரீதியாக தன்னை முற்போக்காக வளர்த்துக்கொண்டு இயங்கும் ஒருவர்கூட வீட்டில் – பெண்களைப் பொறுத்தவரை படு பிற்போக்கான வராக அவர்களது விருப்பங்கள் ஆசைகள் கனவுகளுக்கு எந்த மதிப்பும் தராதவராகவே இருக்கிறார். சரி அதுதான் இல்லை.தன்னுடைய நண்பர் களை – தோழர்களை வீட்டுக்கு அழைத்து வரும் அவர் தானும் தன் தோழர்களும் சாப்பிட்ட தட்டுகளை – எச்சில் தட்டுகளை – சூப்பிப்போட்ட முருங்கைக்காய்த் தோலுடன் மிதக்கும் அந்தத் தட்டுகளை தம் வீட்டுப் பெண்கள் எடுத்துச் சென்று கழுவுவதை எந்தக் குற்ற உணர்வும் இன்றி இயல்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். சாப்பிட்டவர்கள் தட்டை எடுத்தால்கூட அட நீங்க ஏன் தட்டை எடுக்கறீங்க.. நீ எடும்மா என்று மனைவியை ஏவித் தமிழ்ப்பண்பாட்டை நிறுவி நிற்கிறார்.தன்னுடைய மனைவியின் நண்பர்கள் தோழிகள் இப்படி வீட்டுக்கு வந்து சாப்பிட்டால் அவர்களது எச்சில் தட்டைத் தான் கழுவுவோமா என்று யோசிக்கிற அறிவெல்லாம் அப்படிப்பட்ட ஆணுக்கு வருவதே இல்லை.இதற்குப் பெயர் முற்போக்கு ஆணாதிக்கம் என்று சொல்வதா? இப்படியே பெண்களை வேலை வாங்கிக் காலம் பூராவும் திங்கிறதைத் தவிர வேற எந்த வீட்டு வேலையிலும் பங்கேற்காத ஆண்கள் கோடிக் கணக்காக இருந்தார்கள். இருக்கிறார்கள். இருப் பார்கள்- நாம் அறிவோடும் உணர்வோடும் கொஞ்சம் சுரணையோடும் இது விஷயத்தில் தலையீடு செய்யாமலே இருந்தால்.

பெண்களுக்கில்லா அந்த அறிவு வரணும். நாம என்னா சார் செய்ய முடியும், என்று ஆண் மனம் கூவுவது கேட்கிறது. ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராட பெண்களை ஆண்கள்தான் தயார் செய்ய வேண்டும்.வர்க்க உணர்வு பெறாத தொழிலாளிக்கு சக தொழிலாளி வர்க்க உணர்வு ஊட்டுவ தில்லையா? வர்க்கபோதம் பெறாத தொழி லாளிக்கு வர்க்கபோதம் ஊட்டுவதில்லையா? அதுபோல ஆணாதிக்க சமூகத்துக்கு எதிராக பெண் உணர்வை பெண்நிலைவாதத்தை அல்லது போதத்தை சக மனிதனாக காலம் காலமாக கூடுதலான சுதந்திரத்தை அனுபவித்து வரும் ஆண்தான் பெண்ணுக்கு ஊட்ட வேண்டும்.

எனக்கு எதிராகப் போராடு என்று என் மனைவியை நான் தூண்டவில்லையானால் நான் ஓர் ஆணாதிக்கவாதிதான். எனக்கெதிராகப் போராட என் மகளை நான் தயார் செய்யவில்லையானால் நான்தான் குற்றவாளி.
பின்னாலிருந்து இரண்டு குரல்கள் கேட் கின்றன. ஒன்று ஆண் குரல். இன்னொன்று பெண் குரல்.

ஆண் குரல் சொல்கிறது இப்படியெல்லாம் பேசறது ரொம்ப அதி தீவிரம் இல்லையா?
பெண் குரல் சொல்கிறது அவுக தட்டெல் லாம் கழுவ வேண்டாம்.நொள்ளை சொல்லாம பொங்கிப் போட்டதை சந்தோசமா சாப்பிட்டுப் போனாப் போதும் இந்த இரண்டு மனநிலைகளுமே சரியல்ல. மனநிலைகளில் மாற்றம் தேவை.
ஆண் குற்ற உணர்வு கொள்ள வேண்டும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்ப் பெண்களை அடிமை கொண்ட பாவத்தின் கறைபடிந்த நம் கரங்களை – இதயங்களை – பெண் விடுதலைக் காகப் போராடும் செயல்களால் கழுவ வேண்டும்.

பெண்கள் -பண்பாடு தங்கள் மீது கழுதைப் பொதிபோல ஏற்றி வைத்திருக்கும் சுமைகளை மனத்தடைகளை உதறி எறிய வேண்டும்.கை நீட்டி அடித்தால்தான் வன்முறை என்று கருதாமல் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் ஒவ்வொரு திருப்பத்திலும் தங்கள் மீது வன்முறை பிர யோகிக்கப்படுவதை உணர வேண்டும். கெட்ட வார்த்தையில் திட்டினால்கூட இச்சமூகம் பெண்ணை – பெண்ணின் உடல் உறுப்புகளைப் பழிக்கும் விதமான சொற்களையே பயன்படுத்து கிறது என்பதைக் கோபத்துடன் பார்க்கப் பழக வேண்டும். ரெத்திரம் பழகு என்று பாரதி பெண்களை நோக்கித்தான் சொன்னான் என உணர வேண்டும். இதெல்லாம் எப்படி சார் நடக்கும்? நடக்கும்.

துவக்கத்தில் குறிப்பிட்ட அந்த இரண்டாவது நிகழ்வுக்கு இப்போது வருவோம்.
அறிவொளி இயக்கம் நடந்து கொண்டிருந்த காலத்தில் அது முற்றிலும் பெண்கள் இயக்க மாகவே நடந்தது. ஆயிரம் ஆயிரம் பெண்கள் வீதிக்கு வந்தார்கள். கற்றார்கள். கற்பித்தார்கள். நாடகம் போட்டார்கள். பாட்டுப் பாடினார்கள். எல்லாம் இந்தத் தமிழகத்துத் தெருக்களில்தான் நடந்தது.

அறிவொளியின் தொடர்ச்சியாக வந்த சுய உதவிக்குழுக்களில் இன்று எத்தனை ஆயிரம் பெண்கள் அணி திரண்டிருக்கிறார்கள்? இத்தனை வருசமா நீங்கள்ளாம் எங்கேதான் இருந்தீங்க என்று நாம் வியக்க வேண்டியிருக்கிறது.
ஆம். இவை எதைக்காட்டுகின்றன? பெண்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் கிளம்பி வருவார்கள்.அறிவொளிக்கு இருந்தது போன்ற ஆதரவான சமூக மனநிலை இருந்தால் பெண்கள் தெருவில் இறங்குவார் கள்.தெலிங்கானாவில் போல எதிர்ப்புகள் பலமாக இருந்தபோதும் தோழமை உறவுகள் துணை நின்றால் பெண்கள் ஆயுதம் ஏந்தவும் தயாரா வார்கள்- தங்கள் விடுதலைக்காகவும் தங்கள் வர்க்கத்தின் விடுதலைக்காகவும் தங்கள் தேசத்தின் விடுதலைக்காகவும்.பண்பாட்டு ரீதியாக மிக மிக அதிகமான மன அழுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் அதையெல்லாம் மீறியும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் விடுதலைக்கான தங்கள் தாகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் இதுபோன்ற இயங்கு தளங்களை உருவாக்குவதும் வாய்ப்புகளைத் திறந்து விடுவதும்தான் சக பயணிகளான – தோழர்களான- ஆண்களின் -மற்றும் தோழமை பூர்வமான இயக்கங் களின் பிரதான வரலாற்றுக் கடமையாகும். அதோ பெண்கள் பாடி வரும் குரல் பிசிறற்றுக் கேட்கிறது. கேட்கிறதா?

நீண்ட நெடும் காலமாய் காத்திருக்கிறோம்
நெஞ்சுக்குழியில் வாழும் கனவைத் தேக்கி நிற்கிறோம்
சமத்துவமாய் வாழ ஒரு சாசனத்தை முன் மொழிகின்கிறோம்
உம் கரம் பிடித்துக் கையெழுத்தை இடுமாறு கோரி நிற்கிறோம்.

கனிந்து வரட்டும் என்று காத்திருக்கக் காலம் இனி இல்லை
எம் காதலரை நெஞ்சுக்கு நெருக்கமான அன்பர்தமை எதிர்த்தே சமர் புரியும் சங்கடத்தைத் தந்து விடாமல்
சமமான உணர்வோடு கரம் இணைத்து
இச்சமூகத்தின் ஆணிவேரை அறுத்திட வாரீர்

ஆணாதிக்கம்தான் அந்த வேர் எனவே புரிந்திட வாரீர்
அறைகூவி அழைக்கின்றோம் தோழர்களே
ஆழ்மனதில் பொங்கி வரும் தாகத்துடனே..
( கவிதையின் துவக்க வரிகள் : ஆதவன் தீட்சண்யா )