இது தான் இந்துத்துவா கலாச்சாரமோ!


மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த உரையின் இடையில் ஒரு வேண்டுகோளை வைத்தார். நாட்டின் வறட்சி நீங்க மழை தேவை. அதற்கு அனைவரும் இந்திரனை வணங்கவேண்டும் வேண்டிக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தியாவில் ஊடுருவி இருக்கும் பார்ப்பனியம் இந்துத்துவ மனப்பான்மை அதிகம் படித்தவர்களையும், நிபுணர்களையும்கூட தாக்கிக் கவிழச் செய்யும் சக்தி உடையவை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

அவருக்குத் தெரியாதா? அவர் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பிலேயே மழை எப்படி பொழிகிறது? மழை பொழிவதற்குக் காரணம் என்ன என்பது தெரியாமலா இருந்திருக்கும்?

தெரிந்திருந்தும் இப்படி சொல்லுகிறார் அதுவும் ஓர் அரசின் நிதிநிலை அறிக்கை என்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த உரையின்போது மதச் சிந்தனையை நுழைக்கிறார் என்றால், இதன் தன்மையைச் சிந்திக்கும் திராணியுள்ள மனிதர்கள்தான் ஆழமாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கான ஒரு லைசென்ஸ் என்று தந்தை பெரியார் சொல்லிச் சென்றதையும் ஒரு கணம் நினைவு கூரவேண்டும்.

மழைக்கு இந்திரன் என்றால், பொருளாதார வளர்ச்சிக்கு செல்வக்கடவுளான லட்சுமி என்றும், நாட்டைப் பாதுகாக்கும் பாதுகாப்புத் துறைக்கு அழித்தல் கடவுளான சிவன் என்றும், ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறதே இந்து மதத்தில் அவர்களையெல்லாம் வேண்டிக் கொள்ளுங்கள் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு, இந்தப் பட்ஜெட் உரையெல்லாம் வெறும் சம்பிரதாயம்தான்; மற்றபடி நமது கடவுள்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லவேண்டியதுதானே.

இதில் ஒரு கொடுமையும், ஆபாசமும் என்னவென்றால், இந்திரன் என்ற கடவுள் இந்து மதப் புராணப்படி கேவலமான குணம் படைத்தவன். கவுதம முனிவரின் மனைவி அகலிகையைப் புணரவேண்டும் என்பதற்காக கவுதம முனிவரைப்போல கபட வேடம் தாங்கி, அகலிகையைக் கற்பழித்தவன். அந்தக் காரணத்துக்காக கவுதம முனிவரால் சாபம் கொடுக்கப்பட்டவன். அதனால் இந்திரன் உடல் முழுவதும் பெண் குறி ஏற்பட்டுவிட்டது ஆயிரம் கண்ணுடையவன் இந்திரன் என்று பெருமையாக இந்துத்துவா-வாதிகள் சொல்லிக் கொள்வது இந்தக் கண்ணறாவியைத்தான்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51(ஏ) பிரிவு விஞ்ஞான அணுகுமுறை ஆராய்ச்சி, சீர்திருத்தம் இவற்றை வளர்க்க ஒவ்வொரு குடிமகனும் பாடுபட வேண்டியது அடிப்படைக் கடமை என்று கூறுகிறது. அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றவர்கள் அதனை மூட நம்பிக்கை என்னும் குப்பைத் தொட்டியிலே வீசி எறிகின்றார்களே! இது தான் இந்துத்துவா கலாச்சாரமோ!

சிந்தியுங்கள்!