சங்க இலக்கியம் : தமிழர்களைப் பேசாத தமிழ் இலக்கியம் …


சங்க இலக்கியம் என்று வகைப்படுத்தப்படும் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகிய பதினெட்டு நூல்களும், தமிழ் இலக்கியம் என்பதில் ஐயமில்லை. அவை தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை ‘தமிழர் இலக்கியமா’ என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தொல்காப்பியப் பாயிரம் வரையறை செய்துள்ள வடவேங்கடம் தென்குமரி ஆகிய எல்லைகளுக்குள் இருந்ததான அக்காலத்துத் தமிழக மக்களாகிய தமிழர்கள் அனைவரையும் தழுவிய வாழ்க்கையை, வாழ்முறையை, வாழ்க்கைப் போராட்டங்களை, இன்ப துன்பங்களை, இலட்சியங்களை, அடைந்த முன்னேற்றங்கள் அல்லது தோல்விகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளனவா என்பது நம் முன்புள்ள ஒரு முக்கியக் கேள்வி. ஏனெனில், தமிழ் இலக்கியம் என்கிற முத்திரையைச் சுமந்துள்ள அப்பதினெட்டு நூல்களும் உள்ள படியே தமிழர் அனைவருக்கும் விசுவாசமாக இருந்துள்ளதா என்பதே நம்முன் வைக்கும் கேள்வியாகும்.

சங்கம் என்கிற அமைப்பின் தோற்ற காலமும், சங்க காலத்தின் மேல் சுமத்தப்பட்ட புனைவுகளும், சங்க காலம் என்பதன் கருத்தியல்களும் ஆராயப்பட வேண்டிய ஒன்று என்பதில் மறுப்பு இருக்க முடியாது. ஏனெனில் அச் சங்ககாலம் என்பதன் மேல் உருவாக்கப்பட்டிருக்கும் பரவசமும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் எப்போதும் ஆய்வுகளை வழிமறிக்கவே செய்து வந்திருக்கின்றன. தொல்காப்பியம் பத்து லட்சம் வருஷங்களுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டது என்று புனைகிற அறிஞர்களை நம்மவர்கள் சந்தேகப்படவே மாட்டார்கள் என்பது உறுதி. நமக்குப் பரவசங்கள் இல்லை. தமிழை நாம் நேசிக்கிறோம். தமிழும் நம்மை நேசிக்கிறது. தமிழ் ஒரு செம்மொழி என்பதையோ, அது சமச்சீர் மொழி என்பதையோ வேறு யாரும் அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது அப்படித்தான் பல காலமாக இருந்தது. இருக்கிறது. அதுகுறித்த பதற்றம் நமக்கு ஏற் படக் காரணம் இல்லை. இதைச் சில கோடி செலவு செய்து நமக்கு நாமே நிரூபித்துக் கொள்ள வேண்டிய தாழ்வு மனத்திலும் நாம் இல்லை. வேண்டியது, திறந்த மனதுடன் உண்மைகளைத் தேடி அடைவது ஒன்றே.

இனிவரும் பக்கங்களில் சங்க இலக்கியம் என்பது குறித்தும், சங்கம் குறித்தும், பாடியவர்கள், பாடப்பட்டோர் குறித்தும், சங்கத்துச் சமூகம் பற்றியும், சமூகப்படி நிலைகள் பற்றியும், உருவான ஏற்றத்தாழ்வு பற்றியும், கைக்கிளை பெருந்திணைகள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் புறக்கணிப்புகளின் காரணம் குறித்தும், தமிழர்களின் ஆதி சமயம் பற்றியும், வைதீகப் பிரவேசம் மாற்றியமைத்த அரசியல் குறித்தும், சமண பவுத்தப் படைப்புகளின் கட்டமைப்புகள் பற்றியும், நிலவுடைமையாளர்கள் ஆக்ரமிப்பு கிழார்கள் என்ற பெயரில் தமிழ்ச்சூழலில் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும், பரவசத் தீர்ப்புகளை முன்னிறுத்தாத உண்மை ஆய்வாளர்கள் கருத்து வழியாக நாம் காணப் போகிறோம். சங்க இலக்கியப் பாட்டுக்கள் எழுதப்பட்ட காலத்துக்கும் தொகுக்கப்பட்ட காலத்துக்கும் இடைப்பட்ட காலத்து அரசியலும், அந்த அரசியலுக்குக் காரணமான அக மற்றும் புறச் சக்திகள் பற்றியும் நாம் பேசலாம்.

தமிழ் வளர்ச்சிக் கட்டங்களில் திடுமென சங்க இலக்கியங்கள் ஆதி முதலில் தோன்றிவிடவில்லை. ஒரு மொழியின் வளர்ச்சிப் போக்கில் இன்ன பொருளுக்கு இன்ன சொற்கள் என்கிற கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து அவை ஒரு நிலைப்படவே பல நுறு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும். குழு வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள் பல்வேறு நிலப்பகுதியிலும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள். மலைப்பகுதிகளில், மலை சார்ந்த காட்டுப் பகுதிகளில், சமதளப் பகுதிகளில், ஆறுகளின் அருகாமைப் பிரதேசங்களில், கடற்கரை ஓரங்களில் என்று அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கிறது. சில ஆயிரம் ஆண்டுகளில், அவர்களின் குழு வாழ்க்கை அவர்களைக் காப்பாற்றும் புறச் சக்திகளாகக் கடவுள்களைக் கண்டிருக்கும். கடவுள்களை வழிபடும் சடங்குகள், சடங்குகள் சார்ந்த ஒலிக்குறிப்புகள் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கும். ஒலிக்குறிப்புகள் எப்போதும் நீளச் சொற்களாக இருக்க முடியாது. ஒற்றை ஒலி. இந்த ஒற்றை ஒலியே ஒற்றை எழுத்துச் சொல்லாகப் பிறகு வளர்ச்சியுற்றிருக்கிறது. தமிழில் நிலவும் ஓர் எழுத்து ஒரு மொழி என்கிற இலக்கணம் இதைத்தான் காட்டுகிறது. உதாரணத்துக்கு, ஆ. இதன் பொருள் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த பசு. மா என்றொரு இன்னும் ஒரு எழுத்து. இது முதலில் மாமரத்துக்கு ஆகி, பிறகு மொழி செம்மைப்பட்டபிறகு பெரிய என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது. கோ என்பது குழுத் தலைவனை, பிறகு அரசனை, பிறகு அவன் குழு இருந்த வீட்டுக்கு கோ+இல் = கோயில் அல்லது கோவில் ஆகி, அரசனும், கடவுளும் சமப்பட்டபோது கடவுளின் வீட்டுக்கும் (கோவில்) ஆகி வந்திருக்கிறது. தொல்காப்பியம் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தது என்கிறது. பொருள் குறியாத, அவை பொருளைக் குறித்தாலும் மன உணர்ச்சிகளைக் (அச்சம், கோபம்) குறித்தாலும் ஒரு ‘பொருளை’க் குறிக்கிறது என்பதை இலக்கணக்காரர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பொருள் குறியாத, பொருள் அற்ற சொற்களை உருவாக்கிக் கொள்ள ஆதி மனிதர்களுக்கு அவசியம் ஏற்படவில்லை. குழு வாழ்க்கை காலத்தில் ஒரு நாளில் ஒரு ஆணோ பெண்ணோ புழங்க ஏழெட்டு வார்த்தைகள் போதுமானவைகளாக இருந்தன. இந்தக் கணக்கே அதிகம்தான். குழுத் தலைவிகளின் செயலும், சைகையுமே குழுவை இயக்கப் போதும்தானே. தமிழ் மொழியின் – பெரும்பாலும் பழம்பெரு மொழிகளின் – ஆதாரச் சொற்கள் ஒற்றை எழுத்துக்கள், அதிகம் போனால் இரண்டு மூன்று எழுத்துக்கள் கொண்டதாகவே இருக்கின்றன. தீ, நீர், மழை, பனி, குளிர் போன்றவை அவை.

வாழ்க்கை அனுபவம் பெருகப் பெருக வார்த்தைகளின் கிடங்குகள் அடர்த்தி பெறுகின்றன. அனுபவத்தை வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி, கலை இலக்கியங்களின் மூலாதாரம் செயல்படத் தொடங்குகிறது. தன் வசிப்பிடத்தில், குகைகளில், பாறைகளில் செடிகளின் சாறு முதலானவை கொண்டு ஓவியமும் அதன் கீழ் எழுத்துக்களும் பொறிக்கத் தொடங்குகிறார்கள் ஆதித் தமிழர்கள். வேட்டை அனுபவம் மீண்டும் குழுக்களுக்கு முன் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. நாடகம் பிறக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள ஓசைகளின் எதிரொலியாகவோ போலச் செய்தோ மொழிகளை (சொற்களை) உருவாக்கிய பிறகு, சொற்களால் ஆன சொற்பிரயோகம் பிறக்கிறது. மிகக் குறைந்த சொற்களைக் கொண்ட குழுக்கூட்டம், ஆதிப்பாடல்களை, பாடல்கள் என்று நாம் அழைக்கிற ஆதி இலக்கியத்தைத் தங்கள் சடங்குகளோடும், சடங்குகள் அற்றும் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன. பின்னால் சமூகமாக அமைந்த கிராம வாழ்க்கையிலும் இப்பழக்கம் தொடர்கிறது. கலையும் இலக்கியமும் இயல்பாகவே தோன்றித் தலை முறைதோறும் செழிக்கிறது. நாட்டுப்பாடல்களில் இதன் ஒரு முகத்தைக் காணலாம்.

ஆறு நல்ல ஆறு /அழகான காவேரி/ஆத்தோரம்
அரண்மனைக்கு/அதிகாரி உன் மாமன் – என்று

தாலாட்டைக் கேட்டு வளர்ந்த குழந்தை வளர்ந்து திருமணமாகி மதுரைப்பக்கம் வருகிறாள். அவள் தன் குழந்தையை இப்படித் தாலாட்டுகிறாள். வையைத் தண்ணிக்கு/ வாயூறும்/ சர்க்கரைக்கு/மாந்தோப்பு அரண்மனைக்கு/ மகராசன் உன் மாமன் என்று பாடுகிறாள். தஞ்சைப்பாட்டும், முன்னரே இங்கிருந்த மதுரைப்பாட்டும் பிணைந்து புதுப்பாட்டு உருவாகிறது. இதுவே மொழிவளர்ச்சி. பாட்டு வளர்ச்சி. பாட்டுக்குப் படிப்பு, ஆறாவது விரல். அவனுக்கு மோனை தெரியாது. எதுகை புரியாது. ஆனால், வவுக்கு ம-பிரதியாக, சமமாக வரலாம் என்று இலக்கணக்காரர்கள் பின்னால் இலக்கணம் எழுதிக் கொள்கிறார். இலக்கியம் எள். இலக் கணம் எண்ணெய். தொல்காப்பியருக்கும் பவணந்திக்கும் வாத்தியாரிச்சி, அந்த தஞ்சையில் பிறந்து மதுரையில் வாழ்க்கைப்பட்ட அந்தப் பெண்மணிதான். மனிதர்க்கு இதயம் இடப்பக்கம். கற்பனை வலப்பக்கம்.

தமிழின் முதல் தலைமுறை இலக்கியம் இதுதான். சங்க இலக்கியத்துக்கு மூத்த முதல் தலைமுறை இலக்கியம் இதுதான். இங்கிருந்து தான் செம்மொழி பிறக்கிறது. தமிழின் அடுத்த தலைமுறை இலக்கியத்தைத் தாங்கி வளர்த்தவர்கள் பாணர்கள். பாணன், பாணினி என்றும் நிகழ்த்துக் கலையின்போது விறலிகள் என்றும் கூத்தர் என்றும் அறியப்பட்ட இலக்கியமும் இசையும் நிகழ்த்துக் கலையும் தங்கள் வாழ்வாதாரங்களாகக் கொண்ட கலைஞர்களே ஆவர்.

பண் இசைத்துப் பாடுவதால், பண்ணுக்கு ஏற்ற பாடல்களை எழுதுவதால் அவர்கள் பாணர்கள் எனப்பட்டார்கள். இவர்கள் பாட்டு அறிந்தவர்கள், கற்பனையும் கவித்துவமும் கொண்டவர்கள் என்றாலும், இவர்கள் அனைவருக்கும் எழுத வரும் என்பது சந்தேகிக்கப்பட வேண்டிய விஷயமாகவே இருக்கிறது. சமீப காலம் வரையிலும், பல கூத்து, நாடகக் கலைஞர்களுக்கு, நிகழ்த்துக் கலைஞர்களுக்கு எழுதப் படிக்க வராது. அது அவர்களுக்குப் பிரச்சினையாக இல்லை. கேள்வி அறிவு போதும்.’ ‘கற்றிலன் ஆயினும் கேட்க’ என்கிற வள்ளுவரின் வரி இதைத் தெளிவுறுத்தும்.

பாணர்கள் பற்றிச் சங்க இலக்கியம் பரக்கப் பேசுகிறது. பல ஆற்றுப்படை நூல்கள் அவர்கள் பற்றியது. என்றாலும் தொ.பரமசிவம் சொல்கிறபடி பாணர் எழுதியதாக ஒரு சங்க இலக்கியப் பாடலும் இப்போது இல்லை (அல்லது தொகுக்கப்படவில்லை). அவர்கள் பாடியதாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிற பாடல்கள் சிலவற்றை அடையாளப்படுத்துகிறார் தொ.பரமசிவம். அதைப் பிறகு காண்போம். அதற்கும் முன்னர் பாணர்கள் சமூகச் சிறப்புடன் வாழ்ந்தமையும், பிறகு வீழ்ச்சியுற்றதையும், அதன் காரணத்தையும் பார்க்கலாம்.

மன்னர்களோடு அல்லது அதிகார மையத்தோடு நெருக்கம் கொண்டாடி இருக்கிறார்கள் பாணர்கள். மன்னர்கள், பாணர்களை இசைத் தொழிலாளிகளாகவும், சுற்றமாகவும், நட்பாகவும் ஏற்றுக் கொண்டாடி இருக்கிறார்கள். சோழன் கரிகாலன் பெருவளத்தான், பாணனுக்குப் பொன்னால் ஆகிய தாமரைப் பூவைப் பரிசாக அளித்திருக்கிறான் என்று பொருநர் ஆற்றுப்படை சொல்கிறது. விறலியர்களுக்கு பொன்நகைகளையும் அவன் கொடுத்து இருக்கிறான். பொன்னால் ஆகிய தாமரைப்பூவை பாணனது கரிய அடர்ந்த தலைமுடியில் சூட்டுவித்து பொன்னால் ஆகிய முத்துமாலையை விறலியர் ஆடவும் நன்னன் கொடுத்ததாக மலை படுகடாம் என்கிற ஆற்றுப்படை நூல் கூறுகிறது. திண்டிவனத்துக்குப் பக்கத்தில் இருக்கும் கிடங்கில் எனும் ஊரில் இருந்து ஆண்ட நல்லியக் கோடர் பாணர் மீது மிகுந்த நேசம் கொண்டவர். பாணர்கள், விறலிகள் அவனைக் காணச் சென்றால், அவன் முதலில் அவர்கள் அணிந்திருக்கும் அழுக்குத் துணிகளை, மூங்கிலின் உட்பட்டையைப் போல் வெள்ளையாகச் சுத்தமாக இருக்கும் துணிகளைக் கொடுத்து மாற்றுவான். ‘பாம்புக் கடி’ போல போதை ஏறும் கள்ளைக் கொடுத்துக் குடிக்கச் சொல்வான். பீமபாகம் போலச் சுவையான பல சுவைகளை உடைய உணவைப் பொன்தட்டில் வைத்துச் சாப்பிடுங்கள் என்று அன்புடன் சொல்வான். தன் பகைவர்களைவென்று அவர்கள் திரைப் பொருள்களாகச் செலுத்திய பொருளை ஏராளமாகத் தருவான். பல பரிசுகளையும் வாரி வழங்குவான். மிக வலிமையான தேரையும், காளை மாட்டையும் யானைகளையும் கொடுத்து அனுப்புவான் என்கிறது சிறுபாணாற்றுப்படை.

காஞ்சியை ஆண்ட திரையன் பாணர்களுக்கு பாலாவியைப் போல வெண்மையும், மென்மையும் கொண்ட ஆடைகளைத் தருவான். பிறகு இறைச்சிகள் பலவற்றோடு கூடிய அரிசிச்சாதம் தருவாள். தேனைத் தோற்கடிக்கும் உணவு வகைகளைத் தருவான். பொன்னால் ஆன நகைகளைப் பாணர்களுக்கும் பாடினிகளுக்கும் தருவான். மேலும், வெள்ளி போன்ற வெள்ளைக் குதிரைகள் பூட்டிய குதிரையுடன் சேர்ந்த தேர்களைத் தருவான் என்கிறது பெரும் பாணாற்றுப்படை.

ஒரு பாணன் சொல்கிறான், “அரசன் போட்ட கறிச் சோற்றைத் தின்று தின்று பல்லே குறைந்துவிட்டது.”

இப்படிப்பட்ட வரவேற்புகளும், மரியாதைகளும் கொண்ட பாணர்கள் இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் வீழ்ச்சி பெற்றுவிட்டார்கள்.

பாணர்களின் அடைமொழியே பசி என்றாகிவிட்டது. பாணன் என்றால் எப்போதும் பசித்தே கிடப்பவன் என்று சங்க இலக்கியமே சொல்கிறது. இறைச்சியைமென்று மென்று பல்லே தேய்ந்த பாணனுக்குப் பசிக்குச் சோறில்லை. அவன் இசைக்கும் தமிழுக்கும் மரியாதை குறைந்துவிட்டது. நியாயமாக பாணர்கள் தங்கள் கலைகளை மக்களிடம் கொண்டு சென்று இருக்கலாம். அதிகார வர்க்கத்தைச் சொறிந்து கொடுக்க அவர்கள் தமிழைப் பயன்படுத்தாமல், மக்கள் கலைஞராக மரியாதை பெற்றிருக்கலாம். ஏனோ அது நிகழவில்லை.

தோயன் மாறன் என்கிற நிலவுடமையாளராகிய கிழாரை, மாடவள் மதுரைக் குமரனார், ‘அவன் பாணர் பசிப் பகைஞன்’ என்று பாராட்டுகிறார், புறநானூறு 180 ஆம் பாட்டில் பாணர்களின் பசியை பூஜிப்பவர், பசிப்பிணி மருத்துவன் என்று பாராட்டப் பெறுகிறான். குறுநில மன்னரைத் தேடிச் சென்ற பாணன் ஏமாந்தான். ஆக, அவனைத் தன் ஏழைக் குடிசையில் தங்கச் சொல்லி ஒரு சம்சாரி அழைக்கும் பாடல் (புறம் 319) முக்கியமானது. பாணர் பசி வாழ்க்கையை மக்கள் அறிவார்கள் என்கிறது இப்பாடல். மக்கள் அவர்களுக்குச் சோறு போடவும் முன் வந்திருக்கிறார்கள். ‘என் வீட்டில் சுட்ட முயல்கறி இருக்கும். அதை உனக்குத் தருகிறேன்’ என்கிறார் அவர்.

மன்னர்களோடு உறவு பூண்டு, பரிசில் வாழ்க்கை வாழ்ந்த பாணர் சமூகம், இறந்தார் சடங்கு நடக்கும்போது பிணத்தின் பக்கம் நின்று பாடத் தொடங்குகிறது. வசதி படைத்த தலைமக்களின் காதலிகளுக்குத் தூது போகிறது. பாணிச்சிகளும் இதே போன்ற தொழிலைச் செய்யும்படி ஆகிறது.

இதுபற்றிச் சில பாடல்களோடு விசாரணை செய்வோம். இந்தப் பாணச் சமூகத்தின் கல்லறைகள் மேல்தான் புலமைச் சமூகம் சங்க இலக்கியமாகக் கட்டமைக்கப்படுகிறது. பாணர்களின் பாடல்களை மிக விழிப்பாகத் தவிர்த்து விட்டது.

நாட்டுப்புறக் கிராமச் சமூகமாக வளர்ச்சியடைந்த அல்லது மாற்றம் அடைந்த குழுச் சமூகம், பின்னர் பாணச் சமூகம், அதன்பிறகு மூன்றாம் தலைமுறையாக வளர்ந்த புலமைச் சமூகம் சங்க இலக்கியத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறது. சிவத்தம்பி, தொ.பரமசிவம் முதலான பல அறிஞர்களின் கருத்து வழி இதன் காரணத்தைத் தொடர்ந்து பேசுவோம். இந்தச் சமூகம் சார்ந்த, சமூக மாற்றம் நிகழ்ந்த நிகழ்ச்சிப் போக்குகளை அறியாமல், சங்க இலக்கியங்களில் உள்ளடக்கத்தின் அசல் முகத்தைக் காணமுடியாது.