பாரதி புத்தகலாயத்தின் 100 புத்தகங்கள் – ஒரு பருந்துப் பார்வை


ச.தமிழ்ச்செல்வன்

எங்கிருந்து தொடங்குவது? யார் தொடங்குவது? என்று நெடுங்காலம் புகைந்து கொண்டிருந்த தயக்கங்களை எல்லாம் உடைத்து வெள்ளம் போலப் பாய்ந்து வந்துள்ள பாரதியின் 100 புத்தகங்கள் தமிழகக் கலாச்சார வரலாற்றில் ஒரு புதிய திறப்பு. நூலக இயக்கத்தில் வாசிப்பு இயக்கத்தில் ஒரு புத்தம் புதிய பக்கம். இவ்வளவு அதீதமான வார்த்தைகளுடன் இவ்வரிகளைத் துவக்குவதற்கான காரணம் இப்புத்தகங்கள் யாருக்காக எழுதப்பட்டுள்ளன? யாரால் எழுதப்பட்டுள்ளன? எப்படி யாரால் எடுத்துச் செல்லப்படுகின்றன? என்கிற கேள்விகளுக்கான பதில்களில் அடங்கியுள்ளது.

தமிழகத்தின் ஏழை எளிய உழைப்பாளி மக்களுக்காக துடிப்பு மிக்க இளைஞர்களுக்காக சமூக அக்கறை மிக்க மாணவர்களுக்காக புகை மூட்டத்திலிருந்து வெளியேறிச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தவிக்கும் பெண்களுக்காக இப்புத்தகங்கள் படைக்கப்பட்டுள்ளன. காட்சி இன்பம் தந்து மனங்களை வசீகரிக்கும் வண்ணமயமான அட்டைப்படங்களுடன் ஐந்து ரூபாய் விலையில் (பக்கம் அதிகமான ஒரு சில புத்தகங்கள் மட்டும் பத்து ரூபாய்) இது எல்லாமே நமக்கே நமக்கா என்கிற பிரமிப்பை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளன.

பாரதி புத்தகாலயத்தின் மாவட்டக் கிளைகள் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள ஜனநாயக இயக்க வீரர்கள், தொழிற்சங்கத் தொண்டர்கள், தொண்டுள்ளம் கொண்ட வாலிப சேனை, மாணவர்கள், பிரமுகர்கள், தலைவர்கள், எழுத்தாளர்கள், இடதுசாரிகள் என உள்ளூர் சமூகத்தின் உயிர்த்துடிப்பு மிக்க மக்கள் பகுதியினர் இப்புத்தகங்களை வீதி வீதியாக தங்கள் தோள்களில் சுமந்து செல்கிறார்கள். காணக்கிடைக்காத காட்சி. பல ஊர்களில் பெரியவர்கள் பேசிக்கொள்வது நம் செவிகளில் விழுகிறது. ‘‘ரொம்ப காலம் கழிச்சு நம்ம தோழர்கள் எல்லோர் கையிலேயும் புத்தகங்களை இப்பதான் பாக்கறோம் இல்லீங்க..” உலக புத்தக தினம் கடந்து போய்விட்டது. கண்காட்சிக்கென அறிவிக்கப்பட்ட தேதிகளெல்லாம் முடிந்து போய்விட்டன. ஆனால் துவக்கப்பட்ட புத்தகப் பயணம் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் இன்னும் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. அதை இனி யாரும் நிறுத்த முடியாது.

இப்புத்தகங்களை எழுதியவர்களில் சிலர் ஏற்கனவே அறிமுகமான எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தலைவர்கள். ஆனால் கணிசமான புத்தகங்களை புதிய கைகள் எழுதியிருக்கின்றன. பாரதி புத்தகாலயத்தின் (காலத்தின்) அறைகூவலை ஏற்று உழைப்பாளி மக்களுக்காக நீங்கள் எழுதாவிட்டால் பிறகு யார்தான் எழுத முடியும் என்கிற அன்புக் கட்டளையை மனதார ஏற்று குறுகிய காலத்துக்குள் வாசகர்களின் மீது கொண்ட தீராத அன்பிலும் அக்கறையிலும் பேனாவைத் தொட்டு எழுதி முடித்த புத்தகங்கள் இவை. நடைபெற்று வரும் கலாச்சாரப் போரின் புதிய படை வீரர்களான இப்புதிய படைப்பாளிகளின் கரங்களை இறுகப்பற்றி முத்தமிட்டு வரவேற்கிறோம். இன்னும் நூறு நூறு படைப்பாளிகள் பேனாவை எடுத்தாக வேண்டும். நூறு நூறு புத்தகங்கள் வந்தாக வேண்டும். ஆயிரமாயிரம் தோள்கள் அவற்றை நம் மக்களிடம் எடுத்துச் சென்றாக வேண்டும். அதற்கான உந்துதலை பாரதி 100 நிச்சயமாகத் தருகிறது.
இனி இப்புத்தகங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றி….

ஏமாளியும் திருடனும்
(நாட்டுப்புறக் கதைகள்)
கதைத் தேர்வும் விவாதக் குறிப்பும்: பேராசிரியர் ச.மாடசாமி
(32 பக்கம் ரூ 5.)

எட்டுக் கதைகளின் தொகுப்பு இது. தமிழ்நாட்டில் அறிவொளிக் காலத்தில் தொகுக்கப்பட்ட கதைகளும் சில வெளிநாட்டுக் கதைகளும் விவாதக் குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன. எவரும் வாசித்து விடக்கூடிய எளிய நடையில் கதைகள் சொல்லப்பட்டு எவரிடம் சென்று இக்கதைகள் வாசிக்கப்பட வேண்டும் என்கிற சுவாரஸ்யமான சிபாரிசுகளுடன் வந்துள்ள புத்தகம். உதாரணத்துக்கு ஒரு கதை. மறைந்த அறிஞர் ஏ.கே.ராமானுஜம் அடிக்கடி எடுத்துக்காட்டிப் பேசும் கதை. ஒரு ஊரில் ஒரு விதவைத் தாய். அவளுக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் கல்யாணம் ஆனதும் கிழவ¤க்கு மரியாதை குறைகிறது. மகன்களும் மதிப்பதில்லை. ஆகவே மருமகள்களும் மதிப்பதில்லை. நாலு பேரும் திட்டத் திட்ட தாயின் மனப்பாரம் பெருகி உடலும் பருத்து விடுகிறது. முடிவில் அவள் ஊரின் கடைசியில் நிற்கும் சத்திரத்தின் குட்டிசுவருடன் பேசத் துவங்குகிறாள். மூத்த மகன் ப்ச்சின் கொடுமையைச் சொல்லி அழவும் ஒரு சுவர் இடிந்து விழுகிறது. அவளுடைய பாரம் கொஞ்சம் குறைகிறது. இப்படியே நாலுபேர் கொடுமையும் சொல்லி முடிக்க நாலு குட்டிச்சுவர்களும் இடிந்து வீழ அவள் உடலும் மெலிந்து போகிறாள். இப்போது அவளைப் பார்க்கும் மக்கள் இரக்கப்படுகிறார்கள். இது கதை. இக்கதையை பேச்சுப் புறக்கணிக்கப்பட்ட குடும்பங்களிலும், வகுப்பறைகளிலும், அலுவலகங்களிலும் வாசிக்க வேண்டுமென தொகுப்பாளர் குறிப்பு முடிகிறது.

ஹோமியோபதி மருத்துவம்
ஓர் அறிமுகம்
டாக்டர் எஸ்.வெங்கடாசலம்
(40 பக்கம், ரூ.10)

அலோபதியின் பக்க விளைவுகளையும் பின் விளைவுகளையும் கண்டு விரக்தியடைந்த ஜெர்மானிய டாக்டர் சாமுவேல் ஹானிமன் M.D அவர்களின் கண்டுபிடிப்பான ஹோமியோபதி மருத்துவம் மற்றும் வீட்டிலேயே வைத்து அவசரத்துக்குப் பயன்படுத்தத் தக்க ஹோமியோ மருந்துகளின் பட்டியலும் அவை பற்றிய குறிப்புகளுமென ஒரு சரியான அறிமுகத்தை நமக்குத் தரும் புத்தகம் இது. பிற வைத்திய முறைகளில் மருந்து உட்கொண்டு இரைப்பைக்குச் சென்ற பிறகுதான் வேலை செய்ய ஆரம்பிக்கிறது. ஆனால் ஹோமியோபதியில் மருந்தின் மூலப்பொருள் நாவின் மிக நுட்பமான நரம்புத் தொகுதிகளின் வழியாக ஊடுறுவிச் சென்று துரிதமாகச் செயல்படத் துவங்குகிறது. ஹோமியோபதியிலே போனா ரொம்ப லேட்டாகுமே என்கிற மூடநம்பிக்கையை உடைத்துத் தகர்க்கும் பல அவசியமான தகவல்களை இப்புத்தகம் நமக்குத் தருகிறது. ஹோமியோபதியில் நோய்க்கு மருந்து தருவதில்லை. மாறாக நோயாளிக்கு அதாவது நோயாளியின் உடல் நல சரித்திரம், அவரது மரபுக்கூறு, பழக்க வழக்கங்கள், அவரது பசி, தூக்கம், கழிவு, விருப்பு வெறுப்பு, ஆசைகள், கோபப்படும் விதம், குடும்பச்சூழல் எனப் பலவற்றையும் முழுமையாகக் கணக்கில் கொண்டு நோயாளிக்கு மருந்து தரப்படுகிறது. வேறு மருத்துவத்துக்கே போகாதீர்கள் என்கிற அடிப்படைவாதம் இப்புத்தகத்தில் இல்லை. தேவைப்படும்போது சிறப்பு நிபுணர்களையும் பார்த்துக்கொண்டு அச்சிகிச்சையுடன் ஹோமியோ மருந்தையும் இணைத்துக் கொண்டால் விரைவில் நலம் பெறலாம் என்கிறது புத்தகம். தவிரவும் லண்டனைச் சேர்ந்த டாக்டர் எட்வர்டு பேட்ச் அவர்களின் மலர் மருத்துவம் பற்றியும் லேசான அறிமுகத்தை இந்நூல் செய்கிறது. மிக முக்கியமாக ஒரு மருத்துவரின் பார்வையிலிருந்து பேசாமல் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சாதாரண ஏழை மக்களின் மருத்துவத் தேவைகளைக் கணக்கில் கொண்டு இப்புத்தகம் பேசுகிறது

கடவுள் உண்டா இல்லையா?
ஏ.பாலசுப்பிரமணியன்
(16 பக்கம் ரூ.5)

மதத்தின் பெயரால் பயங்கர யுத்தங்கள் நடந்துள்ளன. படுகொலைகள் இன்றும் நடக்கின்றன. ஆனால், நாத்திகர்கள் ஆத்திகர்களைக் கொலை செய்ததாகவோ தங்கள் கருத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்பதற்காக யுத்தம் நடத்தியதாகவோ வரலாறு இல்லை என்கிற வரிகளோடு துவங்கும் இப்புத்தகம் ஒரு ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் இடையில் நடக்கும் உரையாடலின் மூலம் கடவுள் இருக்கிறது என்கிற நம்பிக்கையின் ஆணி வேரை அசைக்கிறது. பித்தப்பை எனப்படும் Gall Bladder என்னென்ன செய்கிறது என்பதுகூட நமக்கு முழுசாகத் தெரியாது. உடற்கூறு விஞ்ஞானத்தின் அறியாமை காரணமாக நம் உடல் பற்றியே பல தவறான கருத்துக்கள், மூட நம்பிக்கைகளை நாம் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது பிரபஞ்சம் முழுவதும் பற்றிய ஞானத்தில் நிச்சயமாகக் குறைபாடுகள் இருக்கும். ஆனால் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்தார் என்று கூறுவது எப்படி சரியாகும் என்கிற மாதிரி சின்னச் சின்னக் கேள்விகள், பின் அவற்றுக்கான விடைகள், பின் அதைத் தொடரும் அடுத்த கேள்வி என்கிற பாணியில் நகர்ந்து செல்லும் இப்புத்தகம் நாத்திகத்தை முரட்டடியாக அல்லாமல் அறிவியல் அடிப்படையில் ஆத்திகரும் ஒப்புக்கொள்ளும் வண்ணம் எடுத்துச் சொல்கிறது. இப்பிரபஞ்சத்தில் என்றென்றும் பொருள் இருந்தே வந்திருக்கிறது. படைப்பு என்பதே இல்லை. ஆகவே படைத்தவனும் இல்லை என்று கச்சிதமாக உரையாடல் நிறைவுபெற புத்தகம் முடிகிறது. வெறும் 16 பக்கங்களில் இவ்வளவு விஷயங்களை இவ்வளவு எளிமையாகச் சொல்லி இருப்பது நூலாசிரியரின் மேதமையன்றி வேறென்ன?

தமிழர் திருமணம்
அன்று முதல்.. இன்று வரை
பேராசிரியர் ச.மாடசாமி
(32 பக்கம் ரூ.5)

“ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு” என்று ஐ.நா.சபை குடும்பத்துக்கு விளக்கம் தருகிறது. ஆனால் குடும்பம் அந்தக் கூரையோடு மட்டுமில்லை. மறித்து எழுப்பப்பட்ட சுவர்களோடும், எல்லைகளைக் குறுக்கும் வேலிகளோடும்தான் இருக்கிறது என்கிற வரிகளில் வேகம் பிடித்து நகர்கிற இப்புத்தகம் மிகவும் இயல்பான ஆனால் அடர்த்தியான அதே சமயம் கூர்மையான வரிகளில் குடும்பம் பற்றியும் தமிழர் வரலாற்றில் திருமணங்கள் அடைந்து வந்துள்ள மாற்றங்கள் பற்றியும் அம்மாற்றங்களுக்கான சமூகப் பின்புலங்கள் பற்றியும் பேசுகிறது. ஆழமான ஆய்வுதான் என்றாலும் அலுக்காமல் படிக்கவைக்கும் அனுபவ வார்த்தைகளால் புத்தகம் மிளிர்கிறது. தலை நரைச்ச கிழவனுக்குத் தாலி நான் கட்ட மாட்டேன் என்று பெண் அடம் பிடித்து விடாமலிருக்க கல்யாணத்தின் போது மணமகளைக் கண்ணைப் பொத்தி மேடைக்கு அழைத்து வரும் ஒரு சாதிப் பழக்கத்திலிருந்து பீட்சாவுக்கும் பர்கருக்கும் பழகிவிட்ட இந்திய இளைஞர்கள் கல்யாணம் என்று வந்துவிட்டால் மட்டும் தங்கள் நவீன மனதை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஜாதி, ஜாதகம் என்று பாய்ந்து விடும் வீழ்ச்சி வரையிலும் திருமணங்கள் எப்படிப் பெண்ணுக்குப் பாரபட்சமாக காலந்தோறும் இருந்து வருகின்றன என்பதை தகுந்த ஆதாரங்களோடும் வாசக மனதில் உறைக்கும் விதமாகவும் இப்புத்தகம் பேசுகின்றது. தமிழ் அடையாளங்கள் என்று எதுவும் தமிழர் திருமணங்களில் இல்லை. மனிதநேய அடையாளங்களாவது மிஞ்ச வேண்டுமே என்கிற நியாயமான கவலையோடு புத்தகம் முடிகிறது.

நாமும் நமது கலைகளும்
முகில்
(32 பக்கம் ரூ.5)

கேரளத்தின் கதகளியைப் போல, கன்னடத்தின் யக்க்ஷகானத்தைப் போல, ஆந்திராவின் வீதி நாடகத்தைப் போல, மகாராஷ்டிரத்தின் தமாஷாவைப் போல, உத்திரப்பிரதேசத்தின் நெடங்கியைப் போல, வங்காளத்தின் ஜாத்ராவைப் போல, அஸ்ஸாமின் ஆங்கிய நாட்டைப் போல, தமிழ்நாட்டின் மண்ணோடும் சேறோடும் புரண்டுகொண்டிருக்கும் கலை தெருக்கூத்தல்லவா என்கிற உணர்ச்சிகரமான வரிகளோடு துவங்குகிறது புத்தகம். 400 வயது கடந்துவிட்ட தெருக்கூத்து இன்றும் இளமையோடு மக்களின் மனங்கவர்ந்து நிற்பதற்கான உள்ளார்ந்த கூறுகளை ஆய்வு செய்யும் இந்நூல் தெருக்கூத்தில் கட்டியங்காரனின் பங்கு பற்றி விரிவாகப் பேசுகிறது. கூத்தின் கதையோடு அன்றாட நாட்டு நடப்புகளை இணைக்கும் பிரதான பணியைச் செய்யும் கட்டியங்காரன் பார்வையாளர்களின் பிரதிநிதியாகத்தான் மேடையில் நிற்கிறான். உலக நாடக இயக்கத்துக்கு தமிழகத்தின் கொடை என்றே கட்டியங்காரனைக் குறிப்பிட முடியும். இத்தோடு தமிழகத்து ஆட்டக்கலைகள் பற்றிய அறிமுகத்தையும் இப்புத்தகம் நமக்குத் தருகிறது. கரகாட்டம், காவடியாட்டம், கரடியாட்டம், புலியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், ஒயிலாட்டம். கும்மியாட்டம், பேயாட்டம், பொய்க்கல் குதிரையாட்டம், மகுடாட்டம், தேவராட்டம், ஹெக்கலிக்கட்டை ஆட்டம், பாம்பாட்டம், தப்பாட்டம் என ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு சிறிய அறிமுகம் வாசகருக்குக் கிடைக்கிறது. இக்கலைகளைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பது தொடர்பாக சில முன் வைப்புகளோடு புத்தகம் நிறைவு பெறுகிறது.

பன்முகப் பண்பாட்டுச் சூழலில் சைவ, வைணவ சமயங்கள்
(இந்துத்துவத்துக்கு ஒரு மறுப்பு)
என்.குணசேகரன்
(16 பக்கம் ரூ.5)

ஏடறியாக் காலத்திலிருந்தே இந்தியா ஒரு இந்து தேசியச் சமூகமாகவே இருந்து வருகிறது என்கிற வரலாற்றுக்கும் அறிவியலுக்கும் விரோதமான பச்சைப் பொய்யை நாகூசாமல் பரப்பி வரும் சங் பரிவாரங்களை உள்ளிருந்தே தாக்கும் முயற்சியாக சமய வரலாறுகளின் ஊடாகப் பயணிக்கிறது இப்புத்தகம். தமிழகத்தில் சைவமும் வைணவமும் வளரக் காரணமாக இருந்த பக்தி இயக்கத்தின் தோற்றம், அதன் வரலாற்று சமூகப் பின்புலம் போன்றவற்றைச் சுருக்கமாக ஆய்வு செய்யும் இந்நூல் வேதமரபுச் சிந்தனைகள், பௌத்த மற்றும் சமண நீரோட்டங்களோடு மாற்றம் பெற்று பக்தி இயக்கமாகப் பரிணமித்த கதையை நமக்குக் கூறுகிறது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் நடத்திய சமயச் சொற்போர்கள், ஆதிசங்கரருக்கு மறுப்பாக அன்றே மத்வாச்சாரியார் மக்களிடம் பரப்பிய துவைதக் கருத்துக்கள், வடகலை தென்கலைப் போராட்டங்கள் என தொடர்ந்து மக்கள் தம் வாழ்க்கைப் போராட்டங்களின் ஊடாக கொண்டும் நிராகரித்தும் வந்த தத்துவங்கள் பற்றியெல்லாம் எளிய தமிழில் எவரும் உள்வாங்கும் விதமாகச் சொல்லிச் செல்கிறது இப்புத்தகம். சைவமும் வைணவமும் அன்று சங்கரரின் கொள்கைகளுக்கு எதிராகவே நின்றிருந்தபோதும் அடிப்படையில் எல்லாத்துக்கும் காரணம் கடவுள்தான் என்று சொல்வதில் இரண்டும் ஒத்துப்போயின. அதன் மூலம் சமூக வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளை மறைத்து அன்றைய ஆளும் வர்க்கத்துக்கு அடிபணியும் மனநிலையை மக்களிடம் உருவாக்கும் வேலையில் அனைத்துத் தத்துவ நோக்குகளும் ஒற்றுமையாகச் செயல்பட்டதை வெட்ட வெளிச்சமாக்குகிறது இந்நூல். எல்லோரும் ஓர் நிறை. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கிற பாரதியின் பிரகடனமே நாம் அடையவேண்டிய இலக்கு என்பதைச் சுட்டி நிறைவடைகிறது புத்தகம்.

நாடகம் என்ன செய்யும்?
சி.அண்ணாமலை
(16 பக்கம் ரூ.5)

மனிதன் கூடிவாழத் தொடங்கிய நாள்முதலாக அவனோடு கூட வரும் கலைவடிவம் நாடகம். தமிழகத்தில் இந்நாடக வடிவத்தின் தோற்றம் பற்றிய விவாதங்களில் துவங்கி கூத்தின் மரபுகளை உள்வாங்கிய சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடக பாணி மற்றும் மேற்கத்திய வடமொழி மரபுகளை உள்வாங்கிய பம்மல் சம்பந்த முதலியாரின் சபா நாடக பாணி என இரு பெரும் போக்குகளாக நாடகம் தமிழில் நிலை பெற்றது பற்றிப் பேசுகிறது நூல். சபா நாடகப்போக்கு சென்னையின் மத்திய வர்க்கத்து மனிதர்களைக் குறிவைத்த கடி ஜோக்ஸ் கதம்பங்களாகத் தேய்ந்து போனதைக் குறிப்பிடும் ஆசிரியர் அப்பாணியிலேயே சாதனைகள் படைத்த கோமல் சுவாமிநாதன், எஸ்.வி.சகஸ்ரநாமம் போன்றோர் பற்றியும் மறவாமல் குறிப்பிடுகிறார். சுவாமிகள் துவக்கி வைத்த இசை நாடக வடிவம் இன்றளவும் தென் பகுதிகளில் ஸ்பெஷல் நாடகம் என்ற பெயருடன் புராண இதிகாசக் கதைகளையும் சில சமூகக் கதைகளையும் கொண்டு சினிமாவின் பாதிப்புகளோடு கிராமங்களில் நடத்தப்பட்டு வருவதைக் குறிப்பிடுகிறார். சுதந்திரப் போராட்ட காலத¢திலும் திராவிட இயக்கத்தின் ஆரம்ப நாட்களிலும் நாடகங்கள் ஆற்றிய பங்கு பற்றியும் இந்நூல் பேசுகிறது. இவ்விரு போக்குகளையும் தாண்டி 70களுக்குப் பின் தமிழகத்தில் அறிமுகமான நிஜ நாடகங்கள் அப்புறம் வீதி நாடகங்கள் போன்றவை எரியும் சமூகப் பிரச்னைகளைக் கையிலெடுத்து வளர்ந்த விதம் பற்றிப் பேசுகிறது. இன்று தொலைக்காட்சி, சினிமாக்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட சூழலிலும் கல்வியில் நாடகம் ஆற்றும் பங்கு, சுனாமி போன்ற பேரழிவுக்குள்ளான மக்களிடம் நாடகம் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அறிவொளி இயக்கத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய நாடகங்கள் எனத் தொடரும் பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடும் புத்தகம் இக்கலை வளர நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய முன்வைப்புகளோடு முடிகிறது.

நூலகங்களுக்குள் ஒரு பயணம்
கமலாலயன்
(24 பக்கம் ரூ.5)

உலகின் முதல் நூலகம் எங்கிருந்தது? இந்தியாவின் முதல் நூலகம்? தமிழகத்தில்? என்கிற வரலாற்றுக் கேள்விகளுடன் தன் பயணத்தைத் துவங்கும் இப்புத்தகம் மிகப்பெரிய நூலகங்களான நாகார்ச்சுன வித்தியாபீடம் மற்றும் நாளந்தா பல்கலைக்கழக நூலகம் பற்றி விரித்துப் பேசுகிறது. நூலக இயக்கத்தின் துவக்க காலம் மத அமைப்புகளின் கையிலிருந்ததைக் குறிப்பிடும் நூல், ஞான பண்டாரங்கள் என்ற பெயரில் சமண சமயம் நிறுவிய நூலகங்கள், செழுங்கலை நியமம் என்ற பெயரில் பௌத்தம் நிறுவிய நூலகங்கள் சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரில் சைவம் அமைத்த நூலகங்கள் மற்றும் வைணவ நெறியின் ஞான பிரதிஷ்டை பற்றிய விவரங்களோடு விரிகிறது. மொகலாயர் காலத்திலும் தொடர்ந்த நூலகத்தின் பயணம் பற்றியும் பாபர் நாமா என்னும் புகழ் பெற்ற நூலை பாபர் அவர் அமைத்த நூலகத்தில் வைத்தே எழுதினார் என்பது போன்ற சுவையான தகவல்களையும் தருகிறது. நூலகத்துறை என ஒன்றைத் முதலில் நிறுவியது பரோடா சமஸ்தானம். நூலகத்துறை பற்றி இந்தியாவில் வந்த முதல் இதழ் ‘லைப்ரரி மிசலேனி’ யையும் பரோடா சமஸ்தான நூலகத்துறையே வெளியிட்டது. இன்றைய நவீன நூலக இயக்கத்தின் முன்னோடிகளான ஆந்திரத்தின் அய்யங்கி வெங்கட்டரமணய்யா பற்றியும் தமிழகத்தின் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன் (S.R.ரெங்கனாதன்) பற்றியும் குறிப்பிடும் புத்தகம் உலக நூலக இயக்கத்துக்கே பயன்படும் கோலன் பகுப்பு முறையை உருவாக்கிய ரங்கநாதனின் பணிகளை விரிவாகப் பேசுகிறது. நூல்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி பற்றிக் கவலை கொண்ட அவர் கிராம நூலகம், நடமாடும் நூலகம் போன்ற கருத்துக்களை, கனவுகளை தன் வாழ்நாளிலேயே நடைமுறைப்படுத்திப் பார்த்தார்.

நூலக இயக்கத்தின் மூன்று தூண்களாக எழுத்தாளர், பதிப்பாளர், நூலக நிர்வாகி ஆகியோரைக் குறிப்பிடும் ஆசிரியர் பயிற்சியும் பட்டறிவும் நூல்கள் குறித்த உள்ளார்ந்த உத்வேகமும் உடையோரே நூலகராகப் பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறுகிறார்.

தாமஸ் ஆல்வா எடிசன்
வெ. சாமிநாத சர்மா
(32 பக்கம் ரூ.5)

கி.பி.1492இல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டான். அதன் பிறகு ஐரோப்பா அங்கு போனது. லட்சக்கணக்கான சுதேசிகளைக் கொன்று அவர்களுடைய எலும்புக்கூடுகளின் மீதுதான் ஐரோப்பிய ஆதிக்கம் என்கிற கட்டடம் சமைக்கப்பட்டது. அப்படி அங்கு குடிபோன ஒரு குடும்பத்தின் வாரிசுதான் தாமஸ் ஆல்வா எடிசன் என்று துவங்கும் இப்புத்தகம் எடிசனின் வாழ்க்கை வரலாற்றை 1949லேயே தமிழர்களுக்குச் சொல்லுவதற்காக எழுதப்பட்டதாகும்.

டைனமோ, பேட்டரி, லவுட் ஸ்பீக்கர், ஸ்டென்சில் உருட்டும் எந்திரம், சினிமாவுக்கு முன்னோடியான கினிட்டோகிராப் போல 1328 அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைக் கண்டுபிடித்து வடிவமைத்த எடிசன் முறையாகப் படித்த ஒரு கல்வியாளரோ விஞ்ஞானியோ அல்லர். ஓடும் ரயில் வண்டியில் தினசரி பேப்பர் போடும் பையனாக வாழ்வைத் துவங்கிய ஒரு குழந்தை உழைப்பாளி. அதில் கிடைத்த காசில் வீட்டுக்குக் கொடுத்தது போக தன் அறிவியல் ஆர்வத்துக்காக வீட்டிலேயே சிறிய பரிசோதனைக்கூடம் ஒன்றை அமைத்தவர். 1860 இல் உள்நாட்டுப்போரை ஒட்டி அமோகமாக நடந்த பத்திரிகை விற்பனையில் முதலிடம் பிடித்த எடிசன் ஓடும் ரயிலில் பத்திரிகைகள் ஸ்டாக் வைக்க என்று தனக்கென ஒரு தனி கம்பார்ட்மெண்டைப் பெற்றுக்கொண்டு அதிலேயே தன் பரிசோதனைச் சாலையை நிறுவிக்கொண்டு ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அதன் பிறகு தந்தி குமாஸ்தாவாக சொந்த பத்திரிகை நடத்துபவராக வேலை இல்லாமல் அலைகிறவராக எனப் பலவிதமாக வாழ நேர்ந்தது. பின்னர் நியூயார்க்கில் சொந்தத் தொழில் துவங்கி அதில் வெற்றியும் பெற்று வணிகரீதியாகப் பயன்படும் ஏராளமான கருவிகளைச் செய்து பெரும் பொருள் ஈட்டினார். 1931ஆம் ஆண்டு உயிர் நீத்த எடிசன் தன் 75ஆவது வயதிலும்கூட நாள் ஒன்றுக்கு 18 மணி நேரத்துக்கு மேல் உழைத்த கதையை அக்கறையுடன் சொல்கிறது இப்புத்தகம். குழந்தைகளுக்கும் அவசியம் வாங்கித் தர வேண்டிய புத்தகம்.

வெளிச்சம் தருமா
புதிய மின்சாரச் சட்டம்?
வெ.மன்னார்
(24 பக்கம் ரூ.5)

அண்ணல் அம்பேத்கரும் பண்டித ஜவகர்லால் நேருவும் பெரும் கனவுகளுடன் இயற்றிய இந்திய மின் வழங்கல் சட்டம் 1948 பற்றிய சரித்திரக் குறிப்புகளோடு புத்தகம் தொடங்குகிறது. அனைவருக்கும் மின்சாரம் வழங்குதல், நீர்ப்பாசனம், ஆலைகள், தகவல் தொடர்பு, ரயில், போக்குவரத்துக்கு மின்சாரத்தைக் கூடுதலாகப் பயன்படுத்துதல். கிராமப்புறங்களுக்கு மின் வசதியை உத்தரவாதப் படுத்துதல், சட்டமன்ற நாடாளுமன்றப் பரிசீலனைக்கு மின்துறையை உட்படுத்துதல் போன்றவை அவ்விரு தலைவர்களின் கனவுகளாக இருந்தன. அது பெருமளவு நனவாகியும் உள்ளது. 1947இல் வெறும் 1700 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி தற்பொழுது 1,14,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

அதிக முதலீட்டைக் கோரிய மின்துறையில் முதலீடு செய்ய அன்று இந்திய முதலாளிகள் தயாராக இல்லை. மிகப்பெரிய கட்டுமானம் நிலைபெற்று விட்ட இப்போது அதைத் தனியார் மயமாக்க முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள். அதற்குக் கதவைத் திறந்து வைக்கும் முயற்சியாக 1998இல் பா.ஜ.க அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக மின்சாரச் சட்டம் 2003ஐ பாஜகவும் காங்கிரசும் இரட்டைக்குழல் துப்பாகியாகச் செயல்பட்டு இடதுசாரிகளின் எதிர்ப்பை முறியடித்து நிறைவேற்றி விட்டன. மின் துறையில் தனியார் முதலீட்டை அனுமதிக்கும் இச்சட்டம் முதலாளிகள் 15 முதல் 16 சதம் லாபம் ஈட்ட அனுமதிக்கிறது. ஏழை இந்தியாவுக்கு மின்சார மறுப்பு பணக்கார இந்தியாவுக்கு ஜொலிக்கும் மின் சப்ளை என்கிற நிலையை நோக்கி நாட்டை இழுத்துச்செல்லும் இச்சட்டத்தின் முழுமையான அம்சங்களை மிகமிக எளிய தமிழில் மக்களை இச்சட்டத்துக்கு எதிராகக் கோபம் கொள்ளச் செய்யும் வரிகளோடு புத்தகம் வந்துள்ளது.

மீடியா அரசியல்
பிரபாத் பட்நாயக்
தமிழில் : சாமி
(20 பக்கம் ரூ.5)

ஜனநாயகத்தின் கண்களென மீடியாவைக் குறிப்பிடுவார்கள். நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிப் போக்குகளை மக்களிடம் எடுத்துச்செல்லும் விதத்தால் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். மக்களின் கருத்து உருவாக்கப்படும். போபோர்ஸ் பீரங்கி ஊழல் பற்றிப் பத்திரிகைகள் மக்களுக்கு எடுத்துச் சென்ற விதம் ஒரு அரசாங்கத்தையே கவிழ்த்தது. ஆனால் இன்று ஊடகங்களுக்கு அத்தகைய ஆற்றல் இருக்கிறதா? என்கிற கேள்வியுடன் புத்தகம் பேசத் துவங்குகிறது. குஜராத்தில் நடந்த மனிதப் படுகொலைகளுக்குப் பின்னால் மாநில அரசின் கை இருக்கிறது என்பதை பத்திரிகைகள் (குறைந்த பட்சம் ஆங்கில மொழி ஏடுகள் அனைத்தும்) ஒரே குரலில் மக்களுக்கு எடுத்துச் சென்றன. எனினும் குஜராத் அரசோ மோடியோ பதவியிறக்கம் செய்யப்படவில்லை. சாகசங்கள் புரிந்து பாதுகாப்புத் துறையில் நடந்த பேரங்களை டெகல்கா டாட் காம் வெளிக்கொண்டு வந்தது. எனினும் எந்தப் பெரிய மாற்றமும் நடைபெறவ¤ல்லை. பாதுகாப்பு அமைச்சர் அலுங்காமல் பதவியில் நீடித்தார். இவை காட்டும் உண்மை என்ன? ஊடகங்களின் ஆற்றல் குறைந்து போயுள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? இரண்டு வகையான காரணங்களை புத்தகம் அடையாளம் காட்டுகிறது. ஒன்று ஊடகங்கள் குறிப்பிட்ட ஊழல்களைச் சுற்றியே செய்திகளைப் பரிமாறி ஒரிசாவின் பழங்குடி மக்கள் உண்ண உணவின்றி வதைபட்டதைப் போன்ற ‘சாதாரண’ விஷயங்கள் பற்றிக் கண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம் தம் நம்பகத்தன்மையை இழக்கின்றன. இன்னொன்று தார்மீக நெறிமுறைகள் பற்றிய மக்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாசிசக் கருத்துக்கள் செல்வாக்கடையும் போது பாசிசக் கருத்துக்கள் ஆட்சியில் இருக்கும் போது, இவை நடைபெறுகின்றன.

வளர்ச்சிக்கு உதவாத ஊக வணிகத்துக்கும் இத்தகைய கருத்துநிலை வீழ்சிக்குமான உறவைப் பற்றியும் விரித்துப் பேசும் புத்தகம் அரசியல்வாதிகள் மீது அவநம்பிக்கை கொண்டுள்ள மக்கள் பத்திரிகைகள் மீது ஓரளவு நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த தார்மீக மூலதனத்தைப் பயன்படுத்தி ஊடகங்கள் சரியான திசை வழியில் செல்லமுடியும் என வலியுறுத்தி முடிகிறது.

மனிதர்கள் நாடுகள் உலகங்கள்
(உலகமயமாக்கல் சில உண்மைகள்)
ஜா.மாதவராஜ் & சு.வெங்கடேசன்
(48 பக்கம் ரூ.10)

‘உலகமயமாக்கல்’ என்கிற ஒற்றை வார்த்தை பிரபலமாகியிருக்கிறது. ஆனால் வரலாற்று நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியில் வைத்து இதன் முழுப்பரிமாணத்தையும் பார்க்க வேண்டும். இந்த ஆதங்கத்துடன் துவங்குகிற இப்புத்தகம் கவித்துவமிக்க மொழியில் ஏராளமான பயனுள்ள பக்கக் குறிப்புகளோடும் படங்களோடும் பொருத்தமான ஆழமிக்க கவிதை வரிகளோடும் உலகமயமாக்கல் என்பதன் சதிகள் நிறைந்த வரலாற்றை, அது ஏழை எளிய நாடுகளுக்கு அர்த்தமாகும் விதத்தை மூலதனத்துக்குச் சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக அது நடத்திட்ட போர்களை விரிவாக நமக்குச் சொல்கிறது. நேரடி யுத்தங்கள், பொருளாதாரத் தடைகள், காப்புரிமை மோசடிகள், கலாச்சாரத் தாக்குதல்கள் என உலகமயம் நாட்டுக்கு நாடு காலத்துக்குக் காலம் புதுப் புது வடிவங்கள் எடுத்து பன்னாட்டு நிதி மூலதனங்கள் நடந்து செல்ல பட்டுக்கம்பளம் விரிக்கிறது.
சூரியன் உதிப்பதும் மறைவதும் கூடத் தெரியாத தொடர் ஒளிபரப்பில் மனிதர்கள் வேறு திசையில் சிந்திப்பதற்கான அவகாசமே தரப்படுவதில்லை. நம் மீது திணிக்கப்படும் அவர்கள் மொழி, அவர்கள் உணவு, அவர்கள் கலாச்சாரம், அவர்கள் உலகம் எல்லாம் எதற்காக அவர்களின் சந்தை – அவர்களின் பொருட்கள் அதற்காக.

ஆனால் அவர்கள் நினைப்பது போல் மக்கள் ஒன்றும் அப்படியே மதிமயங்கிப் போய்விடவுமில்லை. போராட்டங்கள் வெடிக்கின்றன. உலகமயமாக்கலுக்கு எதிரான ஆவேசமான போராட்டங்களைப் பற்றிய உணர்ச்சிகரமான செய்திகளை இந்நூல் பதிவு செய்கிறது. இந்தியாவின் பல பாகங்களிலும் ஏன் தமிழகத்தில் படமாத்தூர் போன்ற இடங்களில் நடைபெற்ற, நடைபெறும் போராட்டங்களும் பதிவாகியுள்ளன. இதுபோன்றதொரு விஷயம் பற்றிக்கூட இவ்வளவு சுவையாகவும் உணர்ச்சிகரமாகவும் அழகாகவும் ஒரு புத்தகம் கொண்டுவர முடியும் என்பதை நிரூபித்து வாசகரை வியப்பிலாழ்த்தும் புத்தகம்.

செப்டம்பர்
நினைவுகள்
அருந்ததிராய்
தமிழாக்கம் : விஜயன்
(32 பக்கம் ரூ.5.)

2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் உலக வர்த்தக நிறுவனத்தின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. செப்டம்பர் 11 என்றாலே அந்த நிகழ்வு மட்டும்தானா? இல்லை. இதே போன்றதொரு செப்.11 இல் 1973ஆம் ஆண்டில் சிலி நாட்டில் ஜெனரல் பினோசெ அமெரிக்க சி.ஐ.ஏ.வின் ஆதரவுடனான ராணுவ சூழ்ச்சி மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சல்வடார் அலெண்டேயின் அரசாங்கம் தூக்கியெறியப்பட்டது. அலெண்டே கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் ‘காணாமல் போயினர்’. தேசத்தையே ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து சி.ஐ.ஏ வின் ஆதரவுடன் அந்நாட்டை ஆண்ட பினோச்செவுக்கு “நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு அமெரிக்காவில் இருக்கும் எங்களின் ஆதரவு உள்ளது. உங்கள் அரசாங்கம் வெற்றி பெற வாழ்த்துகிறோம். சிலி நாட்டின் மக்கள் பொறுப்பற்றவர்கள் என்பதற்காக அந்நாடு மார்க்சியப் பாதையில் செல்ல அனுமதிக்க முடியாது” என்று வாழ்த்துச் செய்தி அனுப்பினார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்றைய அமெரிக்க அரசின் செயலாளர் ஹென்றி கிஸிஞ்சர். இதுபோல அமெரிக்கா தாங்கிப்பிடித்த லத்தீன் அமெரிக்க நாடுகளின் உதவாக்கரை சர்வாதிகாரிகள், எதேச்சதிகாரிகள், போதை மருந்து வியாபாரிகள், ஆயுத வியாபாரிகள் போன்ற 60000க்கும் மேற்பட்டோர் அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் ஸ்கூல் ஆப் அமெரிக்காஸ் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள்.

செப்டம்பர் 11 மேற்காசியப் பகுதியில் சோக நினைவுகளைத் தூண்டும் தேதி. 1922 செப்.11இல் தான் பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனப் பகுதிக்குள் யூதர்களின் நாடு ஒன்றினை உருவாக்க ஆணை பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக பாலஸ்தீனத்தில் 76 சதவீத நிலப்பரப்பை அபகரித்து இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப் பட்டது. அப்பிரகடனம் வெளியான சில நிமிடங்களுக்குள்ளாகவே அமெரிக்கா அந்நாட்டை அங்கீகரித்தது. இன்றுவரை பாலஸ்தீனியர்கள் நாடற்ற மக்களாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். 1922 செப்.11 முதல் 2001 செப்.11 வரை 80 ஆண்டுகளாக நடக்கும் இப்போர்களை பின்னிருந்து நடத்தி வருவது யார்? ஆதரவளிப்பது யார்? என்பது போன்ற கேள்விகளோடு ஏராளமான வரலாற்றுத் தகவல்களை அடர்த்திமிக்க இலக்கிய மொழியில் நமக்குத் தரும் புத்தகம் இது.

நமக்கான குடும்பம்
ச.தமிழ்ச்செல்வன்
(16 பக்கம் ரூ.5)

ஒரு ஆண் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறான்? ஒரு பெண் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறாள்? ஒரு ஆண் எப்படி வளர்க்கப்படுகிறான்? ஒரு பெண் எப்படி வளர்க்கப்படுகிறாள்? மதம் ஆணை எப்படிப் பார்க்கிறது? மதம் பெண்ணை எப்படிப் பார்க்கிறது? நமக்கான குடும்பத்தில் ஒரு ஆண் என்ன செய்ய வேண்டும்? ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்? என்கிற எளிமையான கேள்விகளை முன் வைத்து அவற்றுக்கு விடை தேடும் முயற்சியில் நம் குடும்ப வாழ்வின் அடிப்படைகளை அசைக்கிற நடவடிக்கைகளை நோக்கி வாசகரை நெட்டித்தள்ளுகிறது இப்புத்தகம். ஒரு கேள்விக்கான பதிலின் முடிவில் அடுத்த கேள்வி பிறக்கிற பாணியில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பெண் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள் அல்லது கட்டமைக்கப் படுகிறாள். அக்கட்டமைக்கும் போக்கில் மதங்கள் ஆற்றும் பங்கு ‘மகத்தானது’. பெண் அவளது சகல பரிமாணங்களையும் இழந்து ஒரு உடம்பாக மட்டுமே தன்னை உணரும்படியாக ஆக்கப் படுகிறாள். தாய்மை, பெண்மை போன்ற போலி அடையாளங்கள் அவள் மீது திணிக்கப்படுகின்றன. அறிவியலுக்குப் புறம்பாக சில குணாதிசயங்களும் கூட மென்மையானவள், அச்சம் – மடம் – நாணம் மிக்கவள், அவள் மீது ஏற்றப்படுகின்றன. இப்படிப் பல்லாயிரம் ஆண்டுகாலமாக அவள் மீது படிந்து கிடக்கும் புழுதியை ஊதித்தள்ளுகிறது இப்புத்தகம். பாய்ச்சல் வேகத்தில் காலங்களைக் கடந்து நேரடியாக இன்றைய வாசகரை நோக்கி விரல் நீட்டிக் கேள்விகளை முன் வைக்கிறது. படித்து ரசிப்பதற்காக அல்ல. செயல்பாட்டுக்கான உந்துதலை வாசக நெஞ்சில் எற்படுத்தும் புத்தகம்.

சார்லஸ் டார்வின்
வெ.சாமிநாத சர்மா
(24 பக்கம் ரூ.5)

மனிதன் கடவுளின் சிருஷ்டி என்பர் பலர். ஆனால் பல அறிஞர்கள் இயற்கைச் சக்திகளின் வளர்ச்சிதான் மனித உருவம் என்றும் இதில் கடவுளின் கைவேலை ஒன்றும் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் சார்லஸ் ராபர்ட் டார்வின் என்பார்தான் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன் வைத்து இப்பரப்பில் நிலவி வந்த யூகங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார்.

பாதிரியாருக்குப் படித்து தேவ ஊழியம் செய்யப் போயிருக்க வேண்டிய டார்வின் பூச்சியினங்களின் ஆராய்ச்சிக்காக பீகிள் என்ற கப்பலேறி ஐந்தாண்டுகள் பயணம் செய்து தென் அமெரிக்காவின் பல பாகங்களுக்கும் சென்று பரிணாம வளர்ச்சி விதிகளோடு திரும்பினார். டார்வின் பிறந்து வளர்ந்து உருவான கதையை தமிழ் வாசகர்களுக்குச் சொல்லும் முயற்சியாக இந்நூல் வந்துள்ளது. 1809ஆம் ஆண்டு பிறந்து 1882ஆம் ஆண்டு மறைந்த அவருடைய பால்ய காலம், திருமண வாழ்க்கை எனப் பலவற்றையும் இந்நூல் சொன்னாலும் “டார்வினை அவருடைய அறிவுக்காகவோ பொறுமைக்காகவோ விடாமுயற்சிக்காகவோ உலகம் போற்றவில்லை. மனித எண்ண்த்திலே ஒரு புரட்சியை உண்டு பண்னி விட்டார். அதனாலேயே உலகத்தாரின் மனதில் சாசுவதமான இடத்தைப் பெற்று விட்டார்” என்று பொருத்தமான வரிகளுடன் புத்தகம் முடிகிறது. குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய புத்தகம்.

நலம் நலமறிய ஆவல்
எஸ்.வி.வேணுகோபாலன்
(32 பக்கம் ரூ.5)

மத்திய தர வர்க்கத்தை எப்போதும் சில பூதங்கள் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும். அல்சர், கொலஸ்ட்ரால், பிரஷ்ஷர், டயபடீஸ், அனீமிக், ஸ்பாண்டிலிடீஸ்-மூட்டு வலி, யூரினல் பிரங்னை, கிட்னியில் ஸ்டோன் ஆகிய இந்த இங்கிலீஷ் பேர் கொண்ட பூதங்களால் அலைக்கழிக்கப்படாத நடுத்தர வர்க்கத்து நடுத்தர வயது மனிதனோ மனுஷியோ இருக்க முடியாது. இந்த பூதங்களுக்கெல்லாம் வேப்பிலையடித்து விரட்டுவதற்கான எளிய உபாயங்களை நமக்குச் சொல்கிறது இப்புத்தகம். கொழுப்பு பற்றிய மூட நம்பிக்கைகள் பல நம்மிடம் உண்டு. நமது உணவில் 15 விழுக்காடு வரை கொழுப்பு இருப்பது அவசியம் தான். தாவர எண்ணெய் எதிலும் கொலஸ்ட்ரால் இல்லை. சில விளம்பரங்கள் தேவையற்ற பயத்தை ஏற்படுத்தி நிம்மதியாக நம்மை சாப்பிட விடாமல் தடுக்கின்றன. அப்புறம் சின்னதாக உடல் உபாதை ஒன்று வந்து விட்டால் பதறியடித்து உடனே மருத்துவரிடம் ஓடோடிச் சென்று தேவையற்ற டெஸ்ட்டுகள் செய்து அளவுக்கு அதிகமான மாத்திரைகள் ஊசிகள் அறுவை சிகிச்சை என உடம்பையும் மனசையும் இம்சிக்கிறோம். மாற்று மருத்துவ முறைகளில் துன்பமில்லாமல் நிவாரணம் இருக்கையில் நாம் அறிவியல்பூர்வமானது என்கிற நம்பிக்கையில் அலோபதியிலேயே விழுந்து கிடக்கிறோம். இப்படியாக நமக்கு அன்றாடம் பயன்படக்கூடிய மருத்துவக் குறிப்புகளுடன் சரியான உணவுப் பழக்கத்துக்கான சிபாரிசுகளுடன் வந்துள்ள புத்தகம். நல்ல நகைச்சுவையுணர்வு மிக்க நடையில் நம் கைகளில் தவழும் இப்புத்தகம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம். படித்துக் குடும்பத்தோடு தெளிவு பெற உதவக்கூடிய புத்தகம்.

ஸர். ஐசக் ந்யூட்டன்
வெ.சாமிநாத சர்மா
(24 பக்கம் ரூ.5.)

1642 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி பிறந்து 1727 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி மறைந்த சர். ஐசக் நியூட்டனின் வாழ்க்கைக் கதையின் சில பக்கங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் புத்தகம். நியூட்டன் என்பது இங்கிலாந்து நாட்டிலே லங்காஷையர் மாகாணத்திலே உள்ள ஒரு சிற்றூரின் பெயர்.

குறைப்பிரசவத்தில் பிறந்த ஐசக் நியூட்டன் பிறப்பதற்குச் சில மாதங்கள் முன்பாகவே தந்தையை இழந்தார். தாயும் வேறு திருமணம் செய்து கொண்டு போய்விட பாட்டியிடம் வளர்ந்த நியூட்டன் பள்ளிப் பருவத்திலேயே எதையும் உற்று நோக்கும் குணத்துடன் இருந்தார். எனினும் தொடர்ச்சியாகப் படிக்க முடியாத வறுமை வீட்டிலிருந்தது. படிப்பை நிறுத்திவிட்டு உழைக்கப் போனார். பின்னர் இவருடைய கற்கும் ஆர்வத்தைக் கண்டு பாதிரியார் அவருடைய படிப்புத் தொடர ஏற்பாடு செய்கிறார். 1665இல் அவர் கேம்ப்ரிட்ஜில் படித்துக்கொண்டிருந்தபோது பிளேக் நோய் பரவியது. அதனால் கல்லூரியை மூடிவிட்டார்கள். ஆகவே தன் அம்மாவுடன் இருக்க உல்ஸ்தோர்ப் கிராமத்துக்கு வந்திருந்த போதுதான் ஆப்பிள் விழுவதைப் பார்த்து பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதைக் கண்டு பிடித்தார். ஆகாய மண்டலத்தில் தோன்றி மறையும் வால் நட்சத்திரங்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்து அவைகளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய கருவிகளையும் கண்டுபிடித்தார். 1705ஆம் அண்டு பிரிட்டிஷ் மகாராணியார் தனது பரிவாரங்களுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்துக்கு விஜயம் செய்து நியூட்டனுக்கு சர் பட்டம் கொடுத்துச் சென்றார். இவை போன்ற சுவையான செய்திகளை உள்ளடக்கிய இப்புத்தகம் இளம் வாசகர் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லப் படவேண்டிய ஒன்று.

தமிழில் தலித் இலக்கியம்
முகில்
(32 பக்கம் ரூ.5)

தலித் என்பவர் யார்? ஒரு சாதியைக் குறிக்கிற ஒன்றாக தலித் என்ற சொல்லைக் குறுக்கி விடக்கூடாது. தலித் என்பது வேதனையின் குறியீடாக இருக்கட்டும். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அடையாளப்படுத்துகிற ஒரு சொல்லாக அதை எடுத்துக் கொள்வோம் என்கிற புரிதலோடு இப்புத்தகம் பேசுகிறது. தலித் இலக்கியம் மராட்டியத்தில் பிறந்திடக் காரணமாய் அமைந்த மகாத்மா பூலேயின் பணிகள் சிந்தனைகள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் பன்முகப்பட்ட செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிடும் இந்நூல், அம்பேத்கர் துவக்கிய சித்தார்த்தா கல்லூரியிலிருந்து படித்து வெளியேறிய இளைஞர்களால் துவக்கப்பட்ட சித்தார்த்தா இலக்கிய சங்கமே பின்னாளில் மராட்டிய மாநில தலித் இலக்கிய சங்கம் உருவாகக் காரணமாக அமைந்ததைக் குறிப்பிடுகிறது.

மராட்டிய தலித் இலக்கியத்தில் தலித் படைப்பாளிகளின் தன் வரலாற்று நூல்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றிச் சரியாகக் குறிப்பிடும் போது தமிழில் தலித் இலக்கியமெனெப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்தாளர் பாமாவின் ‘கருக்கு’ ஒரு தன் வரலாற்று நூலே என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழ் நாட்டில் தலித் இலக்கியச் சொல்லாடல்களை உலவச் செய்த முன்னோடிகளென ராஜ்கௌதமன், ரவிக்குமார், அ.மார்க்ஸ் போன்றோரைக் குறிப்பிடும் ஆசிரியர் அவர்களோடு முரண்படும் இடங்களையும் நட்புணர்வோடு பேசுகிறார். கொச்சை மொழியே தலித் இலக்கிய மொழியாக இருக்க முடியும் என ஒரு கட்டத்தில் பெரும் விவாதம் தமிழில் நடந்து கொண்டிருந்தது. ஆதிக்க இலக்கியத்தின் மொழி ஒடுக்கப்பட்ட மக்களின் மொழியைக் கொச்சையெனப் புறக்கணிக்கும்போது கொச்சை மொழியை உயர்த்திப் பிடிக்கும் எதிர் மனநிலையின் நியாயத்தை அங்கீகரிக்கும் ஆசிரியர், தலித் இலக்கியம் கறுப்பர் இலக்கியத்திலிருந்தும் பெண்ணிய இலக்கியத்திலிருந்தும் தன்னுடைய அழகியலை வளர்த்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையைப் பதிவு செய்கிறார். வர்க்கப்போராட்டத்துக்கும் சாதி ஒழிப்பு/தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்துக்கும் சம அழுத்தம் தரும் இயக்கங்களின் தேவையைச் சொல்லி நூல் நிறைவு பெறுகிறது.

காரல் மார்க்ஸ்
புது யுகத்தின் வழிகாட்டி
இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
தமிழில்:பி.ஆர்.பரமேஸ்வரன்
(32 பக்கம்.ரூ.5.)

பெரும்பான்மையினரான சாதாரண மக்களால் தெளிவாக வெளிப்படுத்த முடியாத அவர்களின் சொந்த உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் வடிவம் அளிக்க மார்க்ஸினால் முடிந்தது. ரிஷிகளையும் தேவதூதர்களையும் பற்றிக் கூறுவது போல ஏதோ ஒரு அசாதாரண ஆற்றலின் மூலம்தான் மார்க்ஸ் புதிய தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் உருவாக்கினார் என்று சொல்வது மார்க்சுக்குச் செய்யும் மிகப் பெரிய அநீதியாகும். மார்க்சியம் என்று பரவலாக அறியப்படும் கருத்துப் பெட்டகம். டாக்டர் காரல் மார்க்ஸ் என்ற அறிஞர் அ முதல் ஃ வரை தனது மூளையிலிருந்து உருவாக்கிய தத்துவம் அல்ல. மாறாக அவர் பிறந்த காலத்துக்கு முன்னாலேயே வளர்ந்து நிற்கும் புரட்சிகர சித்தாந்தங்களைக் கற்று உள்வாங்கிப் பின் அவற்றோடு முரண்பட்டு அவற்றின் குறைபாடுகளை அடையாளம் கண்டு புதிய தத்துவத்தை கட்டி எழுப்பினார்.
ஹெகலிடமிருந்து இயக்கவியலையும் ஃபாயர்பாக் போன்றவர்களிடமிருந்து பொருள்முதல்வாதத்தையும் உள்வாங்கி அவற்றின் குறைகளை நீக்கியே இயக்கவியல் பொருள்முதல் வாதத்துக்கு மார்க்ஸ் வந்து சேர்ந்தார் என்கிற வரலாற்றை இப்புத்தகம் தயக்கமும் சந்தேகமுமற்ற தெளிவான குரலில் பேசுகிறது. ஆரம்ப ஆண்டுகளில் தத்துவ ஞானப் பிரச்னைகளில் அதிகக் கவனம் செலுத்திய மார்க்ஸ் தன் வாழ்வின் கடைசி முப்பது ஆண்டுகளை நவீன முதலாளித்துவத்தின் செயல்பாட்டை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யவும் அதனைக் கட்டுப்படுத்துகிற பொது விதிகளைக் கண்டறியவுமே செலவிட்டார்.

அந்த நாட்களில் முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றிருந்த இங்கிலாந்திலேயே பல ஆண்டுகள் தங்கியிருந்து தன்னுடைய ஆராய்ச்சியை நடத்தினார். அதன் விலைவாகவே தொழிலாளி வர்க்கத்தின் பைபிள் என்றுப் பிறர் சொல்லும் மூலதனம் என்னும் நூல் நமக்குக் கிடைத்தது. தத்துவ ஞானத்துறையில் ஜெர்மனியும் பொருளாதாரத் துறையில் இங்கிலாந்தும் என்பது போல சோசலிச சிந்தனைத் துறையிலும் புரட்சிகரப் போர்த்தந்திரங்களின் துறையிலும் அன்று முன்னேறியிருந்தது பிரான்ஸ். இம்மூன்று நிலப்பரப்புகளிலுமாகத் தன் ஆய்வுகளை விரித்த காரல் மார்க்ஸின் சிந்தனையின் வரலாறாகவே இந்நூல் அமைந்து மார்க்சைப் புரிந்து கொள்ள வாசகருக்கு நல்ல வழிகாட்டியாக விளங்குகிறது.

1947
ச.தமிழ்ச்செல்வன்
(32 பக்கம் ரூ.5)

விடுதலையின் ஆண்டாக நம் மனங்களில் படிந்து போயிருக்கும் 1947இன் மறு பக்கத்தை நமக்குத் திறந்து காட்டும் புத்தகம். இந்தியா இரண்டு நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான் என ஆன கதையை மனம் அதிரும் ஆதாரங்களுடன் பேட்டிகளுடன் உண்மைச் சம்பவங்களுடன் விளக்கிச் சொல்லும் புத்தகம். பிரிவினையின் போது லட்சோப லட்சம் மக்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக இடம்பெயர்ந்தனர். மனித குல வரலாற்றில் மிக அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தது 1947இல் இந்தியாவில்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள். அகதிகளானது மட்டுமல்ல துயரம், மதப் பகைமை மூட்டி வளர்க்கப்பட்டதன் விளைவாக இருபக்கமும் படுகொலைகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதன் காரணமாக கருவுற்றனர்.

கருச்சிதைவு செய்து கொள்வதற்காக மருத்துவமனை வளாகங்களில் வரிசையில் நின்ற பெண்கள் ஆயிரமாயிரம். பத்து மாதம் சுமந்து அக்குழந்தைகளைப் பெற்று அவர்களை அரசாங்க அனாதை ஆசிரமங்களில் விட்டுச் சென்ற பெண்கள் இன்னும் பல ஆயிரம். அக்குழந்தைகள் சிலர் இரக்கமுள்ள மனிதர்களால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டனர். பலர் அனாதைகளாக பிச்சைக்காரர்களாக பிக்பாக்கட் திருடர்களாக இந்திய மற்றும் பாகிஸ்தான் தெருக்களில் அலைய விதிக்கப்பட்டது. வழியில் தொலைந்து போன பெற்றோர்களைத் தேடும் பிள்ளைகளும் பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோரும் இரு நாட்டு எல்லைகளிலும் நின்று மகளே என்றும், மகனே என்றும், அம்மா என்றும், அப்பா என்றும் கதறும் ஒலிகள் காலங்கள் தாண்டியும் வந்து கொண்டிருக்கும் அவலத்தைப் பதிவு செய்துள்ள உணர்ச்சிகரமான புத்தகம். பிரிவினையை அறியாத இன்றைய தமிழ் வாசகர்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகம்.

உடல் உறுப்புகள்
பேராசிரியர் எஸ்.மோகனா
(64 பக்கம் ரூ.10)

எந்தப் பீடிகையும் இல்லாமல் நம் உடலின் முக்கிய உறுப்புகளின் பணிகள், அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றி நேரடியாகப் பேசத்துவங்குகிறது புத்தகம். 13 தலைப்புகளில் ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. உடலுக்கு என்ன தேவையோ அதையே நாக்கு தேடுகிறது. கால்சியம் சத்துக் குறைவான பிள்ளைகள் பலப்பம், சாக்பீஸ், சுண்ணாம்பைத் தேடுகின்றன. தாது உப்புக் குறைவாயுள்ள பிள்ளைகள் மண்ணைத் தின்கின்றன. ஒரு பொருள் பதார்த்தம் நீர்ம நிலையில் இருந்தால்தான் அதன் சுவையை சுவை அரும்புகள் உணர்ந்து தகவலை மூளைக்கு அனுப்ப முடியும். பல்லைச் சுத்தம் செய்வது போலவே தினமும் நாக்கையும் மென்மையாகச் சுத்தம் செய்வது அவசியம்.

உங்களின் சிரிப்பு, அழுகை, கோபம், பயம் என்று நவரச உனர்ச்சிகளை வெளிப்படுத்துபவை முகத்திலுள்ள 40 தசைகளே! சின்னச் சிரிப்புக்கு 11 தசைகளும் அழுகைக்கு 17 தசைகளும் செயல்பட வேண்டும். உடலில் அதிகம் உழைப்பவை கண்களின் தசைகளே. ஒரு நாளைக்கு 10 லட்சம் தடவைக்கு மேல் மூடி மூடித் திறக்கின்றன. தசைகளைக் காக்க புரதச் சத்தும் நல்ல ஓய்வும் தொடர்ந்த உடற்பயிற்சியும் தேவை. இப்படியான உபயோகமான தகவல்களை வெகு சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்லும் இப்புத்தகம் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.

வ.உ.சியின் சுதேசிக்கப்பலும்
தொழிற்சங்க இயக்கமும்
ச.தமிழ்ச்செல்வன்
(24 பக்கம் ரூ5.)

பன்னாட்டு மூலதனக் கம்பெனிகள் நம் தேசத்தில் நுழைந்து நம் செல்வங்களையெல்லாம் கொள்ளை கொண்டு போகத் தலைப்பட்டுள்ள இந்த நாளில் வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியைத் துவக்கி எதிர்ப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் அதை நடத்திய வ.உ.சியின் கதை தொழிலாளி வர்க்கத்துக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. பாரடா தோழா இதுதான் உன் பாரம்பரியம் என்கிற தொனியில் 1908 இல் தூத்துக்குடியில் வ.உ.சி துவக்கிய கோரல் ஆலைத் தொழிலாளர் சங்கம் நடத்திய முதல் வேலை நிறுத்தம் பற்றியும் அதற்கு ஆதரவாகத் தூத்துக்குடி நகர மக்களை வ.உ.சி திரட்டி மக்களுக்கும் தொழிற்சங்கத்துக்கும் வலுவான பிணைப்பை ஏற்படுத்திய வரலாறு பற்றியும் சொல்லப்படுகிறது.

ஆத்திரமடைந்த வெள்ளை நிர்வாகம் வேறு காரணம் சொல்லி வ.உ.சியைக் கைது செய்கிறது. உடனடியாக கோரல் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து தெருவில் இறங்கினர். இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் இதுதான் என்பதை ஆதாரத்துடன் புத்தகம் சொல்கிறது. வ.உ.சி கைதை ஒட்டி நெல்லை நகரம் கொதித்து எழுகிறது. பொதுமக்களும் மாணவர்களும் தொழிலாளிகளும் பங்கேற்கும் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடக்கிறது. ஒரு முஸ்லீம், ஒரு பறையர், ஒரு பூசாரி, ஒரு ரொட்டிக்கடைத் தொழிலாளி என நான்கு பேர் களப்பலி ஆகின்றனர். தூத்துக்குடியில் வெள்ளையருக்கு ஆதரவாகப் பேசும் அதிகாரிகளுக்கு சவரம் செய்ய நாவிதர்கள் மறுக்கிறார்கள். துணி துவைக்க சலவைத் தொழிலாளிகள் மறுக்கிறார்கள். துப்புரவுப் பணியாளர்களின் மறுப்பு காரணமாக வெள்ளையர் வீடுகள் நாறுகின்றன. தொழிற்சங்கமும் பொதுமக்களும் இரண்டறக் கலந்து நின்ற வரலாறு உணர்ச்சிகரமாக நம் கண்முன்னே விரிகிறது.

ஆயிஷா
இரா.நடராசன்
(24 பக்கம் ரூ.5)

ஒரு சிறுகதை. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் கல்வி வட்டாரங்களில் பணிபுரியும் எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் சிறுகதை. இன்று பாரதியின் மூலம் எல்லோருக்குமான வாசிப்புக்கு வந்துள்ளது. பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் ஆயிஷா என்கிற மாணவிக்கும் இடையில் கல்வி தொடர்பான கேள்விகள் முலம் மலரும் உறவு கதையின் அடிச்சரடாக ஓடுகிறது. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான நட்பு, அப்பா, மகன் உறவு – அம்மா, மகள் உறவு பற்றியெல்லாம் கூடக் கதைகள் சில வந்ததுண்டு. பாடத்திட்டத்தோடு கூடிய கேள்விகள் அக்கேள்விகள் வழியே அக்குழந்தையின் மேதமையை சட்டெனெ அடையாளம் கண்டுவிடும் ஆசிரியை. ஆனால் அவளை சரியாக அடையாளம் காண முடியாத செக்குமாட்டு வாழ்க்கையில் சிக்கிக் கொண்ட பிற சக ஆசிரியர்கள் அவளை நடத்தும் விதம் அவள் மீது பிரயோகிக்கும் வன்முறை, இதையும் மீறி இந்த ஆசிரியையுடன் அவள் கொள்ளும் சினேகம், நேசம், புரிந்து கொண்ட ஒருவராவது பள்ளியில் இருக்கிறாரே என்கிற பெருமிதம், கேள்விகளால் தொடரும் இந்த நட்பு, ஆனால் இறுகிப் போன கல்விமுறை ஆயிஷாவை என்ன செய்து விட்டது? கதையை வாங்கிப் படித்துத்தான் ஆக வேண்டும்.

காந்தி புன்னகைக்கிறார்
ஜா. மாதவராஜ்
(32 பக்கம் ரூ.10)

அவனது பரிணாமம் என்பது இருளில் நடந்தது. அவனது பயணத்தின் தடயங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. சாத்தானின் பிரவேசம் என்பது இப்படித்தன் இருக்கும் போலும். அவன் பெயர் நாதுராம் கோட்சே! அவரது வாழ்வு என்பது ஒளி நிறைந்தது. அவரிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் உலகமே அறிந்திருந்தது. அவர்தான் தேசப்பிதா காந்தி மகான். ஒரு திரைப்படத்தின் இணைக் காட்சி (parallel shot) பாணியில் விறுவிறுப்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லப்படும் வரலாறு இப்பக்கங்களில் விரிகிறது. காந்தியும் கோட்சேயும் தனி நபர்கள் அல்லர். வெவ்வேறான எதிரெதிரான இரு கருத்துக்களின் தத்துவங்களின் பிரதிநிதிகள். கோட்சேயைக் கொலைகாரனாக மாற்றிய இந்துத்துவ தத்துவம் இந்திய வரலாற்றில் இயங்கிய வரலாறும், கோட்சே அதன் பிடியில் சிக்கி வளர்ந்த கதையும் ஆதாரங்களுடன் சொல்லப்படுகிறது. மதச் சார்பற்ற அரசியலுக்கு வித்திட்ட மகாத்மா இந்துத்துவத்தை எதிர்கொண்ட தருணங்களும் விதமும் கூர்மையாக விளக்கப்பட்டுள்ள புத்தகம். காந்தி கொலையுண்ட நிகழ்வும் அதற்கு முன்னர் அவரைக் கொலை செய்ய நடந்த முயற்சிகளும் ஒரு மௌனப்படம் போல நம் முன்னே காட்சிபூர்வமாக நகர்கின்றன. காந்தி கொலைக்குப் பிறகு நாட்டில் நடந்த நிகழ்வுகளும் சமீப காலங்களில் வெறி கொண்டு எழுந்து நிற்கும் இந்துத்வா சக்திகள் கோட்சேயைத் தியாகியாகக் காட்ட எடுக்கும் முயற்சிகளும் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றன. காந்தி பிறந்த குஜராத் மண்ணில் ரத்த ஆறு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் 1947 ஆகஸ்ட் 15 அன்று காந்தி நின்ற இடமான கல்கத்தா அமைதிப்பூங்காவாக மணக்கிறது ஹூக்ளி நதி அமைதியாப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதில் பொதிந்துள்ள உண்மையை அடையாளம் கண்டு காந்தி நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார்.

பெரியாரும்
சுயமரியாதை இயக்கமும்
விஜயன்
(16 பக்கம் ரூ.5)

திராவிடக் கட்சி மேடைகளின் பின்புலத்திலும் கட்சிப்பாடல் வரிகளிலும் பழைய புகைப்படங்களிலும் தவறாமல் இடம் பெறும் பெரியார் இவர்களின் கொள்கைகளில் காணாமல் போயிருப்பது வரலாற்றுச் சருகலா? அரசியல் சந்தர்ப்பவாதமா? இரண்டும் இல்லை. இங்கு நடப்பது விலகல் என்று சூடாகத் துவங்குகிறது புத்தகம்.

ஆரம்ப நாட்களில் காந்தியின் தேசியத்தினால் கவரப்பட்டு பின் உயர்சாதி விருப்பு வெறுப்புகளையும் பிற்போக்கான கருத்துக்களையும் நடைமுறைகளையும் விட்டொழிக்க மனமில்லாத “தேசியவாதிகளை” வெறுத்து விலகிப் பின் மதவாத உணர்வுகளைச் சவுக்காலடிக்கப் புறப்பட்டுப் பின் சோசலிசத்தின் சிறப்பை உணர்ந்து இடது பக்கம் சிறிது தூரம் சென்று பின் பிராமண எதிர்ப்பு நிலை எடுத்து மீண்டும் சீர்திருத்தப் பணிக்கே திரும்பி சுதந்திரம் என்ற பேரால் பிராமண ஆட்சி வருவதை விட வெள்ளைக்காரனே மேல் என்று பிரிட்டிஷ் ஆதரவு நிலை எடுத்து – என பெரியார் என்னும் கட்டுக்கடங்காத சக்தியின் தனிமனித சரிதையும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இந்த வரலாற்றின் பக்கங்களின் முக்கிய வரிகளை சுருக்கமாக மறுவாசிப்புச் செய்கிறது இப்புத்தகம்.

அம்மறுவாசிப்பின் மூலம் பெரியார் ஒவ்வொரு கட்டத்திலும் முந்தைய நிலைபாட்டிலிருந்து விலகிய புள்ளிகளை நமக்கு அடையாளம் காட்டி வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவி செய்கிறது. பொப்பிலி அரசரை ஆதரித்துக்கொண்டே ஜமீந்தார் அல்லாதார் மாநாட்டை நடத்தினார். நாட்டுக்கோட்டை செட்டியார்களை வைத்துக்கொண்டே லேவாட்ர்ஹேவிக்காரர்கள் இல்லாதார் மாநாட்டை நடத்தினார். தரகு வணிகர்களும் நிலப்பிரபுக்களும் அமர்ந்த மேடையில் ஏகமனதாக சமதர்மத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் மீது விமர்சனங்கள் உண்டு என்றாலும் தமிழ் மண்ணில் ஒரு மாற்றம் வரவேண்டும் என விரும்பும் எவரும் பெரியாரை மறந்து விட்டு அல்லது அவரைக் கற்காமல் ஓரடியும் எடுத்து வைக்க முடியாது எனத் தெளிவான குரலில் சிக்கனமான வார்த்தைகளில் வலுவான வாதங்களை முன் வைக்கும் புத்தகம்.

என்றென்றும் மார்க்ஸ்
ஜா.மாதவராஜ்
(32 பக்கம் ரூ.10)

தன் நேயர்களிடம் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் உலகின் மிகச் சிறந்த சிந்தனையாளர் யார் என்று லண்டன் பி.பி.சி. நிறுவனம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. உலக முதலாளிகளும், நடத்திய பி.பி.சி.யும் அதிர்ச்சியடையும் வண்ணம் மக்கள் காரல் மார்க்ஸ் என்று விடையளித்தனர். முதலாளித்துவம் என்னும் விருட்சத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் சபிக்கப்பட்ட காலம் என்னும் வேதாளத்தை விடுதலை செய்து தன் தோள்களில் தூக்கிச் செல்லும் காரல் மார்க்ஸிடம் கேள்விகளைக் கேட்டபடி வருகிறது வேதாளம். விக்கிரமாதித்தனைப்போல அல்லாமல் ஒவ்வொரு கேள்விக்கும் தன் ஆய்வுகளிலிருந்து ஆகச் சரியான பதிலைச் சொல்லிக்கொண்டே காலத்தின் புதிர்களை விடுவித்துக்கொண்டே தன்னை மேலும் மேலும் தெளிவு படுத்திக் கொண்டே காலத்துடன் நகர்கிறார் மார்க்ஸ். இப்படியான ஒரு படிமத்துடன் வாசகரையும் காலத்தின் கேள்விகளுக்கு முன் நிறுத்தி மார்க்ஸோடு சேர்ந்து நாமும் புதிர்களை அவிழ்த்து இனக்குழு வாழ்க்கையிலிருந்து தனிச்சொத்து தோன்றிய வரலாற்றையும் அதன் நிலைநிறுத்தலில் தத்துவங்கள் ஆற்றிய பங்கு பற்றியும் அறிந்தபடியே கார்ல் மார்க்ஸ் என்னும் இளம் போராளியின் கால்தடம் பற்றிக் கூடவே நடந்து செல்கிறோம்.

வழிநெடுகிலும் மார்க்ஸ் ஹெகலையும் ஃபோயர்பாக்கையும் ஆடம் ஸ்மித்தையும் ரிக்கார்டோவையும் உட்கொண்டு பின் நிராகரித்து முன்னோக்கி நடந்து செல்வதைப் பார்க்கிறோம். மார்க்ஸின் காலத்திலேயே 73 நாட்கள் ஆட்சியிலிருந்த பாரீஸ் கம்யூன் சரிகிறது. அவர் காலத்துக்குப் பின் 73 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த சோவியத்தும் கீழை ஐரோப்பிய நாடுகளும் சரிகின்றன. ஆனாலும் மார்க்ஸ் இன்னும் வீறு நடை போடுகிறார் உலகெங்கும் நடைபெறுகிற போராட்டங்களின் வடிவில். 32 பக்கங்களுக்குள் 40க்குமேற்பட்ட புகைப்படங்கள் ஏராளமான பக்கக் குறிப்புகள், கவிதைகள் என வாசகர் நெஞ்சம் உவகை கொள்ளும் விதமான தயாரிப்பாக ஒவ்வொரு பாட்டாளியும் வீட்டில் வைத்திருந்து அவ்வப்போது எடுத்துப் படித்துக் கொள்ள வேண்டிய புத்தகமாக இருக்கிறது.

சிலந்தியும் ஈயும்
வில்ஹெல்ம் லீப்நெஹ்ட்
தமிழில் : இரா.கிருஷ்னையா
(16 பக்கம்.விலை ரூ.5)

லீப்நெஹ்ட் (1826-1900) ஜெர்மானியத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ஒரு பெயர் என்றார் லெனின். இத்தலைப்பில் தொழிலாளி வர்க்கத்தோடு அவர் பேசிய உரை இந்நூலாக வந்துள்ளது. ஈக்களை தன் வலைப்பின்னலில் விழ வைத்துப் பின் அவற்றைக் கொலைவெறியோடு உண்டு புசிக்கும் கொழுத்த சிலந்தியை முன் வைத்து பாட்டாளிகளுக்கு நீங்கள்தான் அந்த ஈக்கள். உங்கள் ஆண்டைகளும் முதலாளிகளும் தரகு முதலாளிகளும்தான் அந்தச் சிலந்திகள் என்று புரிய வைக்கிறார். சிலந்திகள் பின்னும் சிக்கலான வலைகளுக்குள் மாட்டிக்கொண்டு விதியை நோவதற்கு மாறாக எண்ணிக்கையில் அதிகமான ஈக்களெல்லாம் ஒன்றாக முடிவெடுத்தால் தங்களின் சிறகசைப்பில் எத்தனை சிக்கலான வலைப் பின்னல்களையும் அறுத்தெறிந்து விடுதலை பெற முடியும் என்பதை ஆவேசத்துடன் விளக்கும் புத்தகம்.

ஹரப்பா வேதங்களின் நாடா?
த.வி.வெங்கடேஸ்வரன்
(24 பக்கம் ரூ.5)

வேதங்கள் பிறந்தது இந்தியாவில்தான். ஆதிக்கலாச்சாரமான ஹரப்பா/மொஹஞ்சோதரா கலாச்சாரம் ஆரிய மரபுதான். ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை. இங்கிருந்துதான் வெளியே போனார்கள். ராமபிரானும் அவருடைய சந்ததியினரும் இம்மண்ணின் மூதாதைகள் என்பது போன்ற ஏராளமான ‘சரித்திர உண்மைகள்’ எல்லாம் சங் பரிவாரங்கள் அவுத்து விடும், சரடு திரித்து விடும் கயிறு என்பதை வலுவான சரித்திர மற்றும் மொழியியல் ஆதாரங்களோடு நிறுவும் புத்தகம். இந்திய மொழிகளிலும் பாரசீகத்திலும் ஈரான் ஈராக் பகுதியில் பேசப்படும் மொழியிலும் இருக்கும் பொதுவான வேர்ச்சொற்கள் பலவற்றை உதாரணமாக எடுத்துக்கொண்டு எப்படி அவை மேற்குக் கதவு வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தன என்பதை விளக்குகிறது.

ஆப்கானிஸ்தானத்தின் ஒரு பகுதியில் இன்னும் புழக்கத்தில் உள்ள பிருஹி என்னும் திராவிட மொழி பற்றிய தகவல்கள் நமக்கு முற்றிலும் புதியவையாகும். “ஆரிய வருகை” என்னும் சரித்திர நிகழ்வு பற்றிய செய்தியை இந்தியாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு சிந்தனைப்போக்கு உள்ளவர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்கிற செய்தியெல்லாம் வாசகருக்கு சுவையான செய்திகளாக அமைகின்றன. குதிர்கள் இந்தியப்பகுதிக்கு வந்தது கி.மு.2000க்குப் பிறகுதான். சோம பானம் பற்றி வேதங்கள் சிலாகித்துப் பேசுகின்றன. ஆனால் அதைத் தயாரிக்கத் தேவையான எபித்திரா என்னும் தாவரம் இங்கு விளையவில்லை. அது பாரசீக நிலப்பரப்பில்தான் இப்போதும் விளைந்து கொண்டிருக்கிறது. தவிர ரிக் வேதத்தில் திரும்பத் திரும்பக் கூறப்படும் நிலப்பரப்பு பனி படர்ந்த மலை முகடுகளுக்கு நடுவே உள்ளதாக வருகிறது. ஹரப்பா அப்படியான நிலப்பகுதியல்ல. பாரசீகம்தான் அது. இன்னும் இதுபோலப் பல வானவியல், அகழ்வாய்வுச் சான்றுகளோடு வேதங்கள் பாரசீகச் சமவெளிகளிலும் இந்துகுஷ் மலைப் பகுதியிலுமாகத்தான் எழுதப்பட்டிருக்க முடியும் என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறது இந்நூல்.

இந்திய மண்ணில் பொருள் முதல்வாதம்
வி.பி.சிந்தன்
(32 பக்கம் ரூ.5)

பொருள்முதல்வாதம் அந்நியச் சரக்கு. தொன்மையான காலத்திலிருந்தே இந்திய மண்ணில் வேரூன்றி ஆல்போல் தழைத்து வேர்கொண்டிருப்பது ஆன்மீகம்தான் என்று பலகாலமாகச் சிலர் பரப்பிவரும் கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஒரு பெருமைமிக்க வரலாறு இந்தியப் பொருள்முதல்வாதச் சிந்தனைக்கு உண்டு என்பதை எளிய தமிழில் எடுத்துச்சொல்லும் நூல். பொருள்முதல் வாதம் இந்திய மண்ணில் பலமடைந்திருந்த காலத்தில்தான் மருத்துவம், கணிதம், வானசாஸ்திரம் மற்றும் பல்வேறு துறைகளில் அளப்பரிய சாதனைகள் படைக்கப்பட்டன. எல்லாம் எங்கள் இந்தியாவில் இருந்தது இன்று சிலர் பெருமைப்பட்டுக்கொள்ளும் பல சாதனைகள் இந்தியப் பொருள்வாதத்தின் சாதனைகளே. அந்த வரலாற்றை எராளமான நூல்களை நூலகங்களை எல்லாம் ஆன்மீகவாதம் அழித்ததுதான் இந்தியாவின் சோக வரலாறு. விஞ்ஞான வளர்ச்சியோ இயந்திர நுட்பங்களோ இல்லாத அக்காலத்தில் தோன்றிய பொருள்முதல்வாதச் சிந்தனைகள் அதற்கேயுரிய பலவீனங்களோடுதான் இருந்தன. மாற்றங்களின் காரணம் பொருளேதான். கடவுளல்ல என்று சொன்ன அசேதன காரணவாதத்தை முன் வைத்த சாங்கியம், அணுக்கள்தான் மூலப்பொருட்கள் என்று வாதாடிய நியாய வைசேஷிகர்கள், கண்முன் இருக்கும் உலகத்தைத் தவிர வேறு கற்பனைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது, ஐம்புலன்களைத் தவிர அறிவுக்கு வேறு தோற்றுவாய் இல்லை என வாதாடிய லோகாயதம், எந்தப் புதிய கடவுளையும் முன்வைக்காமல் தனியுடமையையும் வேத மரபுகளையும் நிராகரித்து எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது என்று எழுந்த பௌத்தம், என ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் இந்தியப் பொருள்முதல்வாதத்துக்கு உண்டு என்பதை பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவரின் நெகிழ்ச்சிமிக்க வார்த்தைகளில் வாசிக்கிறோம்.

மலராத அரும்புகள்
பேரா.ஆர்.சந்திரா
(24 பக்கம் ரூ.5)

“9 அல்லது 10 வயதுக் குழந்தைகள் காலை 3 அல்லது 4 மணிக்கு படுக்கையிலிருந்து இழுத்து வரப்பட்டு இரவு 10 அல்லது 11 மணிவரை வேலை செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டு, அவர்கள் உடல் சுருங்கி முகம் வெளுத்து நினைக்கவே பயமாக இருக்குமளவுக்கு கற்களாக குழந்தைகள் ஆக்கப்படுகின்றனர்” 150 ஆண்டுகளுக்கு முன்னால் மூலதனம் நூலில், இங்கிலாந்து நாட்டில் நடப்பது பற்றி மாமேதை காரல் மார்க்ஸ் எழுதிய வரிகள் இவை. இவ்வரிகளை வாசிக்கும்போது ஏதோ தமிழ்நாட்டில் சிவகாசியைப் பற்றி எழுதியது போல இருக்கிறது. வாசகர் நெஞ்சம் அதிரும்படியான பல புள்ளிவிவரங்களோடு, குழந்தை உழைப்பாளிகளின் வாழ்வுபற்றியும் மாற்றத்துக்கான போராட்டத்தின் அவசியம் பற்றியும் பேசும் புத்தகம். தீப்பெட்டித்தொழில், பட்டாசு, கண்ணாடித்தொழில், மண்பாண்டம் மற்றும் கல்குவாரி, கொலுசுப்பட்டறை, தையல் வேலை, பாலியல் தொழில் என சுகாதாரத்தைச் சீர்குலைக்கும் பல தொழில்களில் நம் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கல்வியும் விளையாட்டுமாகக் கழிய வேண்டிய பால்யம் இப்படிக் கழிகிறது.

“தினசரி உலகில் 10 கோடி குழந்தைகள் தினமும் வெறும் வயிற்றுடன் மௌனமாகப் படுக்கைக்குச் செல்கிறார்கள்” என்னும் யூனிசெஃப்பின் அறிக்கையில் உள்ள இந்த ஒருவரி எந்த உலக மகா இலக்கியமும் ஏற்படுத்தாத மன உளைச்சலையும் வேதனையையும் குற்ற உணர்வையும் கண்ணீரையும் வாசகருக்குத் தருகிறது. இதுபோன்ற ஏராளமான தகவல்கள். மட்டுமின்றி ராணுவத்துக்கு 40 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யும் நம் உலகம் இந்த உலகத்துக் குழந்தைகளுக்கெல்லாம் சத்தான உணவை வழங்கிடத் தேவையான 50300 கோடிப் பணம் இல்லாமல் முகம் திருப்புகிறது. குழந்தைகள் மீது எந்த அக்கறையுமற்ற இந்த உலகம் மாற்றப்பட்டே தீரவேண்டும்.

காந்தி அம்பேத்கர் – மோதலும் சமரசமும்
அருணன்
(48 பக்கம் ரூ.10)

ஏதோ காந்திஜியும் அம்பேத்காரும் ஜென்மப் பகைவர்கள் போல வாழ்ந்ததாக இன்றைக்குச் சில பேர் சித்தரிக்கிறார்கள். யதார்த்தம் நேர் மாறாக இருந்ததை வாசகர் மனம் கொள்ளும் விதமாக இப்புத்தகம் விளக்குகிறது. உயர்சாதி மனோபாவம் ஆதிக்கம் செலுத்திய காங்கிரசின் பிரதிநிதியாக காந்திஜி பேசியபோதெல்லாம் முரண்பட்டு நின்ற அண்னல் அம்பேத்கார் காந்திஜியின் மனதை அறிந்தவராக செயல்பட்ட வரலாற்றின் தருணங்கள் நம் முன் விரிகின்றன.

எந்தக் காலத்திலும் காங்கிரசிலேயே இருந்திராத அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதுவும் சட்ட அமைச்சராக. அதிலும் குறிப்பாக சுதந்திர இந்தியாவின் புதிய அரசியல் சாசனம் வரையப்படுகிற வேளையில். இதற்குக் காரணகர்த்தாக்களாக விளங்கியவர்கள் காந்திஜியும், நேருவும் என்பது சரித்திர உண்மையல்லவா?

இதே போல பூனா ஒப்பந்தம் என்ற பேரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் காந்திஜி துரோகம் செய்துவிட்டார் என்கிற குரலும் இப்போது கேட்கிறது. சாதி இந்துக்களின் சூழ்ச்சியே பொதுத் தொகுதிமுறை. அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமையை நாம் வென்றெடுக்க வேண்டும் என்கிற ஆவேச முழக்கங்கள் சில தலித் இயக்கத் தலைவர்களால் எழுப்பப்படுகிறது.

பூனா ஒப்பந்தம் என்பது என்ன? இரட்டை வாக்குரிமையை அம்பேத்கர் எந்த வரலாற்றுப் பின்னணியில் முன் வைத்தார்? எரவாடா சிறையில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் நடந்த உரையாடலின் சாரம் என்ன? காந்தியின் மனநிலையில் எப்படி அம்பேத்கர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார், இவை எல்லாம் ஒரு சரித்திர நாவலின் அத்தியாயங்கள் போல ஜீவனுள்ள மொழிநடையில் விரிந்து செல்கிறது. இரட்டை வாக்குரிமைதான் இறுதி லட்சியம் என அம்பேத்கர் கருதியிருந்தால் அவர் அரசியலமைப்புச் சட்டத்தில் அதை ஏன் சேர்க்கவில்லை?

இது போன்ற கேள்விகளுக்கு நிதானமாக விடையளித்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்யத் தூண்டும் புத்தகம்.

ஒரு நிமிடம் ஒரு மரணம்
காச நோய் பற்றிய ஒரு விளக்கம்
டாக்டர் ராமன் கக்கர்
தமிழில்: வி.என்.ராகவன்
(90 பக்கம் ரூ.15)

காசநோய், ஷயரோகம், எலும்புருக்கி எனப் பல பெயர்களால் அறியப்படும் TB தாக்கி நம் நாட்டில் ஒரு நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார். உலகிலேயே நம் நாட்டில்தான் காச நோயாளிகள் அதிகமாக இருக்கின்றனர். உலகின் காச நோயாளிகளில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில். சுமார் 3 லட்சம் குழந்தைகள் இதன் காரணமாக ஆண்டுதோறும் பள்ளியை விட்டு நிற்கின்றனர். ஒரு லட்சம் பெண்கள் இந்நோய் காரணமாக விவாகரத்து செய்யப்படுகின்றனர். பெரும்பாலும் ஏழைகளையே இந்நோய் தாக்குகிறது. ஆகவே எய்ட்சுக்குச் செலவிடும் அளவில் பாதிகூட காச நோய்க்குச் செலவிட பணக்கார நாடுகள் தயாராக இல்லை. இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இந்நோய்க்கு மருந்து கண்டுபிடித்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இந்த மரணங்கள் ஏன்? இந்த மரணங்கள் தவிர்க்கப் படக்கூடிய சாத்தியமுள்ளவையே. தேவை காசநோய் பற்றியும் அதற்கான சிகிச்சை பற்றியுமான விழிப்புணர்வு. கவிஞர் ஜான் கீட்ஸையும், ஷெல்லியையும், டி.எச்.லாரன்ஸையும், ஆர்.எல்.ஸ்டீவன்சனையும், பிரஞ்சுப்புரட்சிக்கு வித்திட்ட ரூசோவையும், ஜெர்மானியக் கவி கோத்தெயையும், பிரான்ஸ் கஃப்காவையும், தாஸ்தவ்ஸ்கியையும், ஆண்டன் செகாவையும், புகழ்பெற்ற நாவலான ‘அனிமல் ஃபார்ம்’ எழுதிய ஜார்ஜ் ஆர்வில்லையும், நம் கணிதமேதை சீனிவாச ராமானுஜத்தையும் தாக்கிய இக்காசநோயை நாட்டை விட்டு விரட்டும் போராளியாக ஒவ்வொரு வாசகரையும் ஆக்கிவிடும் வலுவான புத்தகமாக இது அமைந்துள்ளது.

தண்ணீர்.. தண்ணீர்… தண்ணீர்…
பேராசிரியர் ஆர்.சந்திரா
(32 பக்கம் ரூ.5)

97 சதவீதம் உப்பு நீராகக் கடலில் உள்ளது. 2 சதவீதம் பூமியெங்கும் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. மீதி 1 சதவீதம் தண்ணீரைத்தான் குடிநீராகவும் விவசாயத்துக்கும் மற்ற வேலைகளுக்கும் நாம் பயன்படுத்த முடியும். ஆனால் மனிதகுலம் எந்தெந்த வகையிலெல்லாம் நீர் கிடைக்குமோ அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக உறிஞ்சத் துவங்கி விட்டது என்கிற அபாய எச்சரிக்கையுடன் துவங்குகிறது புத்தகம். வளர்ந்த நாடுகள் 85 சதம் நீர்வளத்தை தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்துகின்றன. ஆப்பிரிக்க நாடுகள் 88 சதவீத நீரையும், பல வளரும் நாடுகள் 70 சத நீரையும் விவசாயத்துக்காகப் பயன்படுத்துகின்றன. இந்தியாவும் சீனாவும் நிலத்தடி நீரில் 100 சதவீதத்தையும் பயன்படுத்தி விட்டன.
இந்தப் பின்னணியில் நீர் வியாபாரம் நீரைத் தனியார்மயமாக்குதல் நடந்து வருகிறது. 1987ல் கொண்டுவரப்பட்ட தேசிய நீர்க்கொள்கை நீர்ப்பயன்பாட்டில் முன்னுரிமை பற்றிக் குறிப்பிடும்போது முதலில் குடிநீர், அடுத்து நீர்ப்பாசனம், மூன்றாவதாக மின்சார உற்பத்தி, நான்காவதாக தொழிற்சாலை/மற்ற பயன்பாடுகள் என வரிசைப்படுத்தியது. ஆனால் 2002 புதிய தேசிய நீர்க்கொள்கையில் இந்த முன்னுரிமை இல்லை. நீர் வியாபரத்துக்கு அகலக் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இப்பின்னணியில் அனைவருக்கும் பொதுவான சொத்தான நீர்வளத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்கிற பத்துக் கட்டளைகளுடன் புத்தகம் முடிவடைகிறது.

மார்க்சிய தத்துவம் – ஓர் அறிமுகம்
எஸ்.ஏ.பெருமாள்
(32 பக்கம். விலை ரூ.7)

தமிழகமெங்கும் நெடுங்காலமாக இடதுசாரி இயக்கத் தோழர்களுக்கு வகுப்புகள் எடுத்த அனுபவத்தோடு பளிச்சிடும் இச்சிறுநூல் மிகவும் பயனுள்ள ஆரம்பக் கையேடாகத் திகழும் என தோழர் என்.சங்கரய¢யா தனது அணிந்துரையில் குறிப்பிடுகிறார். லுத்விக் போயர்பாக் மற்றும் வில்லியம் ஹெகல் ஆகிய இரு படிக்கட்டுகளைத் தாண்டி வந்த மார்க்சிய தத்துவம் தோன்றிய வரலாற்றுப் பின்னணியில் துவங்கி இயக்கவியலின் அடிப்படை அம்சங்களை விளக்கி இயக்கவியலுக்கே உரித்தான மூன்று அடிப்படை விதிகளை எளிய உதாரணங்களுடன் பல்வேறு உப தலைப்புகளில் விரிவாகவே விளக்குகிறது. மார்க்சின் காலத்துக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் எவ்விதம் மார்க்சியத்துக்கு வலுச்சேர்த்தன என்பதை விளக்கும் புத்தகம், இந்திய தத்துவவியலின் இரு பிரதான போக்குகளைப் பற்றிய அறிமுகத்தையும் செய்து, தத்துவப் போராட்டம் என்பது அடிப்படையில் எதிர் எதிர் வர்க்கங்களுக்கிடையிலான போராட்டத்தின் சாரமே என்கிற லெனின் கருத்தை தெளிவாக விளக்குகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றிய அறிமுகத்தோடு ஆதி பொதுவுடமைச் சமூகத்தில் துவங்கி சோசலிச சமூகம் வரையிலான சமூக வளர்ச்சியின் 5 கட்டங்களை விளக்கி வர்க்கப்போராட்டத்துக்கான தொழிலாளி வர்க்கக் கட்சியைக் கட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தி முடிகிறது.

உலகமயமாக்கல்
சகாப்தத்தில் கலாச்சாரம்
சீதாராம் யெச்சூரி
(16 பக்கம் ரூ.5)

பொருட்களை உற்பத்தி செய்யும் சாதனங்களை வைத்திருக்கும் வர்க்கமே, அறிவுச்சாதனங்களையும் வைத்திருக்கும். எனவே அவர்கள் சிந்தனையாளர்களாகவும் எண்ணங்களை உற்பத்தி செய்பவர்களாகவும் இருந்து உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறார்கள். அவர்களின் எண்ணங்களே அந்த சகாப்தத்தின் ஆளும் எண்ணங்களாகி விடுகின்றன என்கிற மார்க்ஸ், ஏங்கல்சின் கருத்தை மேலும் விளக்கும் கிராம்சி “ஆளும் வர்க்கங்களின் எண்ணங்களை அரசு மட்டும் செயல்படுத்துவதில்லை. அரசு என்பது சமுதாயம் என்ற கோட்டையைச் சுற்றியுள்ள அகழியே. அந்தக் கோட்டைக்குள்தான் கலாச்சார நிறுவனங்களும் ஆளும் வர்க்கங்களின் ஆட்சியை நியாயப்படுத்தும் காரண காரியங்களும் பின்னிப் பிணைக்கப்படுகின்றன” என்கிறார் என்று துவங்கும் புத்தகம் எளிய நடைமுறை உதாரணங்களுடன், கலாச்சாரம் பற்றிய ஆழமான புரிதலை வாசகருக்கு ஏற்படுத்துகிறது. மக்கள் மீது ஆளும் வர்க்கங்களின் எண்ணங்களை ஆதிக்கம் செலுத்த வைப்பதற்காக குடும்பம், சமுதாயம், சாதி, மதம், வழிபாட்டு ஸ்தலங்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. ஏதோ எல்லோருக்கும் ஒரு பொதுவான கலாச்சாரம் இருப்பதாக ஒரு மாயை ஏற்படுத்தப்படுகிறது. உலகமயமாக்கலும் வகுப்புவாதமும் கலாச்சாரத்தைப் பயன்படுத்தி தங்களின் அன்றாடப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புகின்றன. மார்க்ஸ் சொன்னது போல முதலாளித்துவ உற்பத்தியானது, மக்களுக்காகப் பொருட்களை உற்பத்தி செய்வதோடு, பொருட்களுக்காக மக்களையும் உற்பத்தி செய்கிறது. கலாச்சாரம் அப்பணியைச் செய்யப் பயன்படுகிறது. ஆகவே நாம் தற்போதுள்ள நமது கலாச்சார வடிவங்களை மாற்றி மேம்படுத்துவதோடு பொது மக்களின் கலாச்சாரத்திற்கான புதிய வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற அறைகூவலே புத்தகத்தின் இறுதி வரிகளாக வந்துள்ளன.

ரோஸ்
இரா.நடராசன்
(64 பக்கம் ரூ.10)
ஆயிஷாவைப் போல மனதை உலுக்கும் இன்னொரு கதை. கதை என்று கூடச் சொல்ல முடியாது. ஒரு வாழ்க்கைச் சித்திரம். ’ஒரு’ என்கிற அடைமொழி கூடச் சரியில்லை. நம் அன்றாட வாழ்வின் ஒரு பக்கம் அப்படியே நம் கண்முன் ரீவைண்ட் ஆகி நம் குழந்தைகளின்பால் நாம் செலுத்தும் வன்முறையை நம் உள்ளம் அதிர உணரச் செய்கிறது. ஒரு மௌனப்படம் போல நம்மை அழுத்தும் இக்கதையில் சம்பவங்களோ விவரணைகளோ எதுவுமே இல்லாமல் பேசும் வசனங்களால் மட்டுமே கதையை நகர்த்திச் செல்லும் உத்தி வலுவாகப் பயன்பட்டுள்ளது. ஒரு பெண்ணை லாட்ஜுக்கு அழைத்துச்செல்லும் ஒரு கதையில் பூமணி இந்த உத்தியைப் பயன்படுத்தி எழுதியிருப்பார். அதற்குப் பிறகு இவ்வளவு வலுவுடன் இந்த உத்தி இக்கதையில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து வீட்டிலும், வேலைக்குச் செல்லும் பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும், ஒவ்வொருவரும் தினசரி இரவு படுக்கைக்குச் செல்லுமுன் ஒரு முறை இப்புத்தகத்தை வாசித்துத் தங்கள் மனசாட்சியுடன் பேசிக்கொள்ள வேண்டும். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. புத்தகத்தை வாங்கிவிடுவோம்.

மனிதமும்
உரிமைகளும்
ச.பாலமுருகன்
(64 பக்கம் ரூ10)

மனித உரிமைகள் பற்றிய தகவல் தொகுப்புகளாகவும், கருத்துக்குவியல்களாகவும், புதிய வாசகர்களுக்கு அயர்ச்சியூட்டும் விதமாகவும், பல புத்தகங்கள் இதுவரை வந்துள்ளன. அவை எல்லாவற்றிலிருந்தும் முற்றிலுமாக மாறுபட்டு எளிய தமிழில் தமிழகத்திலும், நாட்டின் பிற பகுதிகளிலும், பிற நாடுகளிலும் நடைபெற்ற பல உண்மைச் சம்பவங்களை முன்வைத்து இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் மனித உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனதைக் கண்டு அதிர்ந்து போன அறிஞர்கள், இனியும் இப்படி ஒரு துயரம் நிகழாது இருக்க மனிதம் பாதுகாக்கப்பட சில சட்டங்கள் தேவை என உணர்ந்தனர். அதன் விளைவாக 1948 டிசம்பர் 10இல் சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை ஐ.நா.பொதுச்சபை வெளியிட்டது. ஆனாலும் ஐ.நாவில் உறுப்பு நாடாக இருந்து கொண்டே பல மனித உரிமை மீறல்களைச் செய்யும் அரசுகளும் மீறல்களைக் கண்டு கொள்ளாத அரசுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
சிலியிலும், குஜராத்திலும், சந்தனக்கடத்தல் வீரப்பனைத் தேடும் பெயரால் கர்நாடக தமிழக எல்லைப்பகுதி மக்கள் மீதும் என நடத்தப்பட்ட கொடுமைகளை முன்வைத்து சித்திரவதை பற்றிய ஐ.நா.பிரகடனம் விளக்கப்பட்டுள்ளது. பெண் சிசுக்கொலையிலிருந்து காதல் திருமணங்கள் முறியடிக்கப்படுவது மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் வரை எவ்விதம் பெண் உரிமைகள் பற்றிய பிரகடனம் மீறப்படுகிறது என்பது விளக்கப்பட்டு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளையும், முன்வைக்கிறது. பழங்குடி மக்கள் வாழ்வுரிமை, குழந்தைகளுக்கான உரிமைகள், வீடற்றவர்களுக்கான மனித உரிமைகள், சாதியின் பேரால் மனித உரிமை மீறல்கள் என நகர்ந்து செல்லும் புத்தகம், மரண தண்டனை தேவையா என்கிற விவாதத்தை முன்வைத்து சட்டத்தின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துவிடாமல் அதே சமயம் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி நாம் மனித உரிமைகளை நிறுவப் போராட வேண்டும் என்கிற அறைகூவலோடு புத்தகம் முடிகிறது.

மார்க்சியமும்
கலாச்சாரப் பணியும்
நாராயண் சுர்வே
தமிழாக்கம் : கமலாலயன்
(16 பக்கம்ரூ.5)

1944இல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தொழிற்சங்கவாதியாக இடைவிடாத மக்கள் பணியாற்றிக்கொண்டே கலாச்சாரத் தளத்திலும் தொழிலாளர் மத்தியில் பணிபுரியும் அனுபவத்தோடு கலாச்சார தளத்தில் இடதுசாரி இயக்கம் தவறிய இடங்களை இயக்கத்தின் மனசாட்சியாக நின்று நேரடியாகப் பேசுகிறார் சுர்வே. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் சாதீய அமைப்பு, சடங்கு வெறி, மதவாதம், மறுபிறப்புக் கோட்பாடுகள் போன்றவையெல்லாம் நமது கலாச்சார வரலாற்றின் பகுதியாக உள்ளன. நாம் எந்த அளவுக்கு வரலாற்றின் இந்தப் பகுதிக்குப் பொறுப்பேற்றிருக்கிறோம்? நாம் எதுவுமே செய்யவில்லை என்று கூறவில்லை. ஆனால் பிரதான இலக்கை நோக்கி எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறோம்? என்று கேள்விகளை எழுப்பி விடைகாண முயற்சிக்கும் புத்தகம் இது. பொருள் உற்பத்தியும் பிற சமூக நடவடிக்கைகளும் மனிதனின் தூலமான தேவைகளின் அடிப்படையில் எழுகின்றன. ஆனால் கலாச்சார நடவடிக்கைகளோ அவனது மானசீகமான தேவைகளின் அடிப்படையில் எழுகின்றன என்கிற தெளிவான புரிதலோடு நகரும் புத்தகம், ஒரு மனிதன் வெறுமை உணர்வினாலும், உள்ளீடற்ற தன்னுணர்வினாலும் துன்புறும்போது மதத்தின் பக்கம் திரும்புகிறான் என்பதை உணர்த்தி கலாச்சாரத் தளத்தில் செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய முன்வைப்புகளோடு முடிகிறது. நேரடியாக வாசிக்கும் உணர்வை ஏற்படுத்தும் நல்ல மொழிபெயர்ப்பு.

தற்காலத் தமிழகத்தில்
சமூக வன்முறைகள்
டாக்டர்.கா.அ.மணிக்குமார்
(32 பக்கம் ரூ.5)

கடந்த காலங்களில் எழுதப்பட்ட வரலாறுகளில் கலவரங்களாகவும் கிளர்ச்சிகளாகவும் வன்முறைகளாகவும் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த பல நிகழ்வுகள் இன்று மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டு அவற்றில் பல சமூக இயக்கங்களாகவும் சமூக மாற்றத்துக்கான முன்னோட்ட நிகழ்வுகளாகவும் கண்டறியப்பட்டு புதிய வரலாறு எழுதப்பட்டு வருகிறது என்கிற வரிகளோடு துவங்குகிறது இப்புத்தகம். கடந்த ஐநூறு ஆண்டு கால தமிழக வரலாற்றில் சமுதாய மாற்றம் ஏற்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக வன்முறை நிகழ்ந்துள்ளது. அது வலக்கை, இடக்கைச் சாதிகளின் மோதலாகவோ நாடார்களுக்கும் பிற சாதியினருக்குமான மோதலாகவோ தலித்துகளுக்கும் ஆதிக்க சாதிகளுக்குமான மோதலாகவோ அவ்வவ் காலகட்டத்தில் வடிவம் எடுத்துள்ளன. 1652 இன் பிளாக் டவுன் கலவரம், 1707 இன் பெத்தநாயக்கர் பேட்டை மோதல், 1789 இன் இரண்டாம் பிளாக் டவுன் கலவரம் போன்றவையும் பிற்காலத்தில் மத மாற்றத்துக்கு எதிராக நடந்த 1829 நல்லூர் கலவரம் போன்றவை சரியான சமூகப் பின்புலத்தோடு வாசகருக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன.

ஐரோப்பியப் பாதிரியார்களின் ஊக்கத்தாலும் காலனி அரசின் ஆதரவாலும் பொருளாதார முன்னேற்றம் பெற்ற நாடார்கள், தங்கள் சமூக அந்தஸ்து இன்னும் கீழான நிலையில் இருப்பதை எண்ணிக் கவலை கொண்டு கோவில் நுழைவு, உயர்சாதித் தெருக்கள் வழியே மண ஊர்வலம் செல்லுதல் போன்றவற்றுக்காகப் போராடத் துவங்கினர். இதன் காரணமாக வெடித்த 1895 இன் கழுகுமலைக் கலவரம், தென் மாவட்ட மக்களின் நினைவுகளில் இன்றும் அசைகிற 1899 இன் சிவகாசிக் கொள்ளை, தென்காசித் தாக்குதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

20 ஆம் நூற்றாண்டு, தலித்துகளின் எழுச்சியோடு திறக்கிறது. ஆகவே ஆதிக்க சாதிகளின் தாக்குதல் பெரும் வன்முறை நிகழ்வுகளாகின்றன. தென் தமிழக வரலற்றில் இன்றுவரை எதிரொலிக்கும் 1957 இன் முதுகுளத்தூர் கலவரம், வர்க்க ரீதியாகத் திரண்ட தஞ்சைப் பகுதி தலித் மக்கள் மீது ஏவப்பட்ட 1968 இன் கீழ வெண்மணிப் படுகொலைகள் என்று துவங்கி 1995 கொடியன்குளம் வன்முறை 1995 திருநெல்வேலிக் கலவரங்கள், 1997 மேலவளவுப் படுகொலை, 1999 தாமிரபரணிப்படுகொலைகள் என சரித்திரம் நம் கண்முன்னே விரிகிறது. சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள ஒவ்வொரு களப்பணியாளர் கையிலும் எப்போதும் இருக்க வேண்டிய புத்தகம்.

அரசு
லெனின்
(32 பக்கம் ரூ.5)

அரசு என்பது என்ன? அது எவ்வாறு தோன்றியது? முதலாளித்துவத்தை அறவே தூக்கியெறியப் போராடும் தொழிலாளி வர்க்கக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அரசைப் பற்றிக் கொள்ளவேண்டிய அடிப்படையான உறவு நிலை யாது? என்கிற கேள்விகளுக்கு விடையாக 1919 இல் தோழர் லெனின் ஆற்றிய உரையின் தமிழ் வடிவமே இப்புத்தகம். முதலாளித்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவ ஞானிகளால் மிக அதிகமாகக் குழப்பிவிடப்பட்ட பிரச்சனையான அரசு பற்றி வரலாற்றுப்பூர்வமாக லெனின் விளக்குகிறார். வன்முறைகளைப் பயன்படுத்தும் வன்முறைக்கு மக்களைக் கீழ்ப்படுத்தும் முறையான தனி இயந்திரமான அரசு ஆதிகால இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்ததில்லை. அப்பொதெல்லாம் பொதுத் தொடர்புகள், சமுதாயக் கட்டுப்பாடு, வேலை ஏவுதல் முறை ஆகிய எல்லாமே பழக்க வழக்கம் மரபு ஆகியவற்றின் பலத்தினாலோ, குலத்தின் மூத்தோர்கள் அல்லது மகளிர் பெற்றிருந்த செல்வாக்கினாலோ, உயர் மதிப்பினாலோ நிர்வகிக்கப்பட்டன. சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்ட பிறகே அரசென்பது ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரமாக உருவாகிறது. சுரண்டலுக்கு வாய்ப்பே இல்லாமல் போகும் போது, நில உடமையாளரும் ஆலை முதலாளிகளும் எங்குமே இல்லை என்னும்போது சிலர் வாரி வாரி விழுங்க மற்றவர் பட்டினி கிடக்கும் நிலை நீடித்திராத போது, இதற்கெல்லாம் இனி வாய்ப்பே இல்லை என்னும் நாளில்தான் அந்த இயந்திரத்தை நாம் குப்பையில் வீசுவோம். இதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் நிலை என முடிகிறது புத்தகம்
ஸ்தாபனத்தைப் பற்றி..
ஸ்டாலின்
தமிழில் : வீ.பா.கணேசன்
(24 பக்கம் ரூ.5)

நம்மில் சிலர், கட்சி தனது சரியான பாதையைத் தீர்மானித்து, அதைப்பற்றி பலத்த பிரச்சாரம் செய்து பொதுவான கொள்கைகளாகவும் தீர்மானங்களாகவும் ஒருமனதாக நிறைவேற்றிவிட்டால் எல்லாப் பகுதிகளிலும் வெற்றி தானாகவே வந்து சேர்ந்து விடும் என்று நம்புகிறார்கள். இது தவறானது. இது ஒரு பிரமை. என்றுமே வெற்றி தானாக வருவதில்லை. அதை அடைய வேண்டும். சரியான அரசியல் வழியை உருவாக்கிய பிறகு ஸ்தாபன வேலையே வெற்றி தோல்வி அனைத்தையும் தீர்மானிக்கிறது என்கிற தெளிவுடன் துவங்கும் புத்தகம் ஸ்தாபனம் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி விரிவாகப் பேசி அனுபவத்தின் அடிப்படையில் தீர்வுகளையும் முன்வைக்கிறது.

ஊழியர்களும் மக்களுமே இந்த உலகத்தின் மிக உயர்ந்த செல்வம், மூலதனம், தீர்மான சக்தி என்பதை உணரவேண்டும். வெறும் படிப்பினால் மட்டும் ஊழியர்கள் உருவாகிவிட மாட்டார்கள். இடையூறுகளை எதிர்த்த போராட்டத்தில்தான் உண்மையான ஊழியர்கள் உருவாகிறார்கள். ஒரு சரியான அரசியல் கொள்கை செயல்படுத்தப்பட அதைத் தனது சொந்தக் கொள்கையாகக் கருதும், அதைச் செயல்படுத்தத் தயாராய் உள்ள, அதைச் செயல்படுத்தும் திறமையுள்ள அதில் எழும் கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய, அதைப் பாதுகாத்து அதற்காகப் போரிடக்கூடிய ஊழியர்கள் வேண்டும். சரியான நேரத்தில் சரியான ஊழியர்களைத் தேர்வு செய்வது துணிச்சலாக அவர்களை உயர்த்துவது, தலைமைப் பண்புகளை ஊட்டுவது மக்களிடமிருந்து கற்றுக் கொண்டு மக்களுக்குக் கற்றுக் கொடுப்பது போல பல அடிப்படையான ஸ்தாபனப் பிரச்னைகள் பற்றிய தெளிவைத் தருகிற அடிப்படை நூல். குழப்பமற்ற தெளிவான மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. அரசியல் ஊழியர்களுக்கான அடிப்படையான கையேடு.

கட்சியில் நிலவும் தவறான கருத்துக்களை திருத்துவது எப்படி?
மாசேதுங்
தமிழில் : வீ.பா.கணேசன்
(16 பக்கம் விலை.ரூ.5)

செஞ்சேனையின் நான்காவது சேனையிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனத்தில் அன்று நிலவிய பாட்டாளி வர்க்கத்துக்குப் புறம்பான கருத்துக்களை அடையாளம் கண்டு அவற்றைக் களைவதற்கான வழிமுறைகளை முன்வைக்கிற முயற்சியாக வந்துள்ள இப்புத்தகம் காலம்தோறும் உலகம் முழுவதுமுள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சந்திக்கும் ஸ்தாபன பிரச்னைகளைத் தீர்க்க உதவும் அனுபவங்களை உள்ளடக்கியுள்ளது.
செஞ்சேனையின் ராணுவப்பணிகளும் அரசியலும் ஒன்றுக்கு ஒன்று முரணானது என்னும் கருத்து சில தோழர்களிடம் இருந்தது. இன்னும் சிலர் அக, புற நிலைமைகளைப் புறக்கணித்து புரட்சியில் அவசரத் தன்மை என்ற நோயால் அவதிப்பட்டனர். வேறுசிலர் தம்மை விடப் புரட்சிகரமானவர் யாருமில்லை என்கிற உணர்வில் இருந்தனர். இன்னும் சிலர் அதீத ஜனநாயக வியாதிக்கு ஆளாகி எல்லா முடிவுகளும் கீழிருந்துதான் மேலே போக வேண்டும் என்கிறார்கள். தங்களது கருத்து நிராகரிக்கப்படும் சிறுபான்மையினர் பெரும்பான்மை முடிவை விசுவாசமாக அமல் படுத்த தயங்குவது, மறுப்பது, வயதையோ உடல் நலத்தையோ பாராது சமமான வேலைப்பிரிவினை கோரும் சமத்துவ வாதம், கட்சிக்குள் பழி வாங்கும் சுபாவம், சிறு கும்பல் வாதம், கூலி மனப்பன்மை, இன்ப நாட்ட வாதம் போன்ற பல வியாதிகளின் தன்மைகள் அவற்றின் மூலங்கள் அவற்றைத் தீர்ப்பதற்கான உபாயங்கள் என புத்தகம் விவாதிக்கிறது.

நான் நாத்திகன் ஏன்?
பகத்சிங்
தமிழில்: ப.ஜீவானந்தம்
(24 பக்கம் ரூ.5)

பகத்சிங் ஒரு நாத்திகராக இருப்பதற்குக் கரணம் அவரது ஆணவமும் அகந்தையுமே என்று அவரோடு சிலகாலம் பழகிய தோழர்கள் கருதுவதாக அறிந்த பகத்சிங் அது அப்படியா என்று தனக்குள் பயணம் செய்து விடை காணும் புத்தகம் இது. தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான அமரர் ஜீவா அவர்களின் இலகுவான கூர்மையான மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. சிறுவயதில் கடவுள் பக்தராகவே பகத்சிங் இருந்துள்ளார். தினசரி காலை மாலை பிரார்த்தனைகள் செய்கிறவராக காயத்ரி ஜெபம் செய்கிறவராகவே இருந்தார். அவருடைய தந்தையாரும் பக்திமானாகவே இருந்தார். பின்னாட்களில் புரட்சிகர இயக்கங்களில் பங்கேற்கத் துவங்கிய பிறகு அவர் படித்த புத்தகங்களும் தோழர்களுடன் விவாதித்ததுமே அவரை நாத்திகராக மாற்றியது. அராஜகவாதத்தில் நம்பிக்கை கொண்ட தலைவரான பக்குனின் எழுதிய கடவுளும் ராஜ்ஜியமும் (God and State) எனும் நூல், நிர்லம்ப சாமியால் எழுதப்பட்ட பகுத்தறிவு (Common Sence) போன்ற நூல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஏகச் சக்ராதிபத்திய ஆதிக்க இருள் சூழ்ந்த தங்கள் நாட்டில் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த லெனின், ட்ராட்ஸ்கி போன்றோர் பச்சை நாத்திகர்கள் என்பதை அறிந்தேன். நானும் பச்சை நாத்திகனானேன் என்கிறார் பகத் சிங்.

வெள்ளையரின் பிடியில் சிக்கி வதைபட்ட காலத்திலும் கூட தான் நாத்திகனாகவே நின்று நிலைத்ததைக் கூறுகிறார். பின் ஆத்திகர்களை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை வைக்கும் பகத்சிங், என் நாத்திகம் பற்றிச் சந்தேகம் கொண்டு மரண வாசலில் நிற்கும்போது நிச்சயம் நான் கடவுளைப் பிரார்த்திப்பேன் என ஆருடம் கூறிய நண்பர்கள் உண்டு. இதோ தூக்குக் கயிறு என்னை நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் நான் நாத்திகனாகவே இருக்கிறேன் என்பதை உலகத்துக்குச் சொல்லுங்கள் என்று முடிக்கிறார்.

ஊழியர்களைப் பற்றி..
கியோர்கி டிமிட்ரொவ்
தமிழில் : வீ.பா.கணேசன்
(16 பக்கம்.ரூ.5)

ஊழியர்களைப் பற்றிய சரியான கொள்கை என்றால் என்ன என்கிற கேள்வியோடு துவங்கும் புத்தகம் முதலாவதாக ஊழியர்களைப் புரிந்து கொள்வது என்கிற விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆராய்கிறது. உலகின் பல கம்யூ. கட்சிகளின் அனுபவத்தை முன்வைக்கிறது. போல்ஷ்விக் என்னும் பூதக்கண்ணாடி கொண்டு ஊழியர்களைப் பரிசீலிக்கும் போது இதுவரை நம் கண்ணில் தென்படாத ஊழியர்களெல்லாம் முன்னுக்கு வருவார்கள். அன்னிய வர்க்கக் கருத்துள்ளவர்களை அடையாளம் கண்டு களைய முடியும். இரண்டாவதாக ஊழியர்களை சரியான முறையில் உயர்த்துவது மூன்றாவது சிறந்த முறையில் ஊழியரைப் பயன்படுத்துவது நான்காவதாக ஊழியர்களுக்கு முறையான உதவி அளிப்பது ஐந்தாவதாக ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முறையான கவனம் செலுத்துவது என வரிசைப்படுத்துகிறது புத்தகம். அடுத்து ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பது என்னும் பிரச்னை பற்றிக் கூறுகையில் முதலாவதாக ஊழியர்களுக்கு தொழிலாளி வர்க்கத்தின் லட்சியத்தின் மீது முழுமையான ஈடுபாடு, கட்சியின் மீது உண்மையான பற்று இரண்டாவதாக வெகுஜனங்களுடன் நெருக்கமான தொடர்பு மூன்றாவதாக சுதந்திரமான முறையில் ஊழியரின் திறனை உணரும் திறமை – முடிவுகள் எடுப்பதில் பொறுப்பேற்பது நான்காவதாக வர்க்க எதிரியையும் கம்யூனிஸ்ட் வழியிலிருந்து விலகுவதையும் எதிர்த்து ஊசலாட்டமின்றிப் போராடுவது என வரிசைப் படுத்துகிறது.

நாம் தத்துவம் பேசிக் கலையும் கூட்டமல்ல. எல்லா நேரத்திலும் ஒவ்வொரு அடி வைக்கும் போதும் கற்றுக்கொள்வது அவசியம். கற்றுக்கொள்வதற்காகப் போராடுவது. போராடுவதற்காகக் கற்றுக் கொள்வது. நமது எல்லா வேலைகளிலும் போராட்டங்களிலும் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியோரின் சிறந்த போதனைகளை ஸ்டாலினிஸ்ட் உறுதியோடு இணைக்க வேண்டும் என முடிக்கிறது

மார்க்சியத்தின் எதிர்காலம்
பிரபாத் பட்நாயக்
(32 பக்கம் ரூ.5)

மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்கிற கூக்குரல் காலந்தோறும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் மனித குல விடுதலையே மார்க்சியத்தின் அடிப்படை நோக்கம் என்னும்போது அது முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை. அதற்கு முற்றிலும் வேறொரு சோசலிச சமூகம் அவசியமாகிறது. சோசலிசம் என்னும் அமைப்பில்தான் சமூக நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் இருக்கும் எண்ணங்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் இடையில் ஒத்திசைவு இருக்கும். ஆனால் பிரச்னை எங்கே வருகிறது எனில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை எங்கனம் புரிந்து கொள்வது? ஒன்றை ஆசிரியர் தெளிவு படுத்துகிறார். மார்க்சியம் என்பது உறைந்துபோன உடலாக இருக்கும் கருத்துக்கள் (Frozen body of ideas) அல்ல. மார்க்சியம் என்பது அதன் மூலக்கருவைச் (core) சுற்றி காலத்துக்கு ஏற்றாற் போல அதன் ஸ்தூலமான நிலைமையை தீர்க்கமாக ஆய்ந்து தொடர்ந்து மறுசீரமைக்கப்படும் கருத்துப் பெட்டகமாகும். இந்த மறு சீரமைப்பு சோவியத் யூனியனும் இதர பல சோசலிச நாடுகளும் சிதைந்து போன பின்னணியில் மூலதனத்தின் ஆதிக்கம் புதிய ரூபங்களை எடுத்துள்ள இன்றைய காலத்தில் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற கேள்விக்கான விடையாக இந்நூல் வந்துள்ளது. மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்று கூறுபவர்கள் மனித குல விடுதலைக்கு புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டதால் அவ்விதம் கூறவில்லை. மாறாக மனிதகுல விடுதலை என்னும் செயல்திட்டத்தை அவர்கள் கைவிட்டு விட்டதால் கூறுகிறார்கள்.

மே தின வரலாறு
அலெக்சாண்டர் ட்ராச்டென்பர்க்
தமிழில்:எம்.சிவக்குமார்
(32 பக்கம் ரூ.5)

1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் ஹே மார்க்கெட்டில் எட்டுமணி நேர வேலைக்காகப் போராடிய தொழிலாளர் மீது ஏவப்பட்ட வன்முறையில் கொல்லப்பட்ட தொழிலாளிகளின் குருதியில் தோய்ந்ததுதான் மேதினம் என்கிற வரைக்கும் தமிழ்நாட்டில் உள்ள எல்லா தொழிலாளிக்குமே தெரியும். அதற்குமேல் மேதினம் உருவான வரலாற்றுப் பின்னணி பற்றி விரிவாக அறிந்து கொள்ள தமிழில் வந்துள்ள எளிய புத்தகம் இதுவே. சம்பள உயர்வுக்காகவும் சங்கம் வைக்கும் உரிமைக்காகவும் அமெரிக்கத் தொழிலாளர்கள் போராடி வந்தாலும் கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் எழுதியது போல அமெரிக்காவில் பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பகுதியான கறுப்பு இனத் தொழிலாளி அடிமையாக நீடிக்கும் வரை வெள்ளைத் தொழிலாளியின் வாழ்க்கையிலும் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. உள்நாட்டுப் போருக்குப் பின் அடிமைத்தனத்தின் அழிவிலிருந்து புதிய உத்வேகம் பிறந்தது. எட்டு மணி நேர வேலைக்கான போராட்டம் வெடித்தது. சர்வதேசத் தொழிலாளர் காங்கிரசும் எட்டுமணி நேர வேலைக்கான கோரிக்கைக்காகப் போராட உலகத் தொழிலாளிகளுக்கு அறைகூவல் விடுத்தது. இது ஒரு இயக்கமாக அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலும் ந்யூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது. இந்த நிகழ்ச்சிப் போக்குகள் மேதினத்தை நோக்கி நகர்ந்த வரலாறுதான் இப்புத்தகம்.

எது மூடநம்பிக்கை?
சு.பொ.அகத்தியலிங்கம்
(24 பக்கம் ரூ.5)

பூனையின் பாய்ச்சலுக்கும், பல்லியின் சொல்லுக்கும், பயந்து வாழ்வது அநேகமாகச் செத்ததற்குச் சமமே என்னும் கவிஞன் காஸி நஸ்ருல் இஸ்லாமின் கவிதை வரிகளோடு துவங்கும் இப்புத்தகம் மூடநம்பிக்கை என்பது எது? பழையதெல்லாம் மூடநம்பிக்கை என்று தூக்கிப் போடுவது முட்டாள்தனம். புதியதெல்லாம் புத்திசாலித்தனமானது என்று முடிவுக்கு வருவதும் மூடத்தனம் என்கிற புரிதலோடு நகரும் புத்தகம் நம் மக்கள் மத்தியில் உலவுகிற அவர்களை பல சமயம் ஆட்டிப்படைக்கிற பல நம்பிக்கைகள் கருத்துகள் பழக்க வழக்கங்களை அறிவியல் பார்வையுடன் அலசி ஆராய்கிறது. சோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம், தோஷங்கள், பேய் பிசாசுகள் என பல விஷயங்களை ஆராயும் புத்தகம் புதிய மூட நம்பிக்கைகளாக மக்களிடம் விதைக்கப்படும் விளம்பரங்களைக் கைவைத்து இறுதியில் எது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் படவில்லையோ, எது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக தடுக்கிறதோ, எதைக் கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்கிறோமோ, எதைப் பரிசீலித்துப் பார்க்காமல் ஒப்புக்கொள்கிறோமோ அதெல்லாம் மூடநம்பிக்கை என்கிற தெளிவுடன் முடிகிறது. கிண்டலும் நகைச்சுவை உணர்வும் ததும்பும் மொழி இப்புத்தகத்தின் சிறப்பாகும்.

ஜோதிராவ் பூலே:
சமூக சீர்திருத்தத்தின் தந்தை
ஜி.பி.தேஷ்பாண்டே
தமிழில் : ச.கனிதா
(24 பக்கம் ரூ.5)

இந்தியாவின் முதல் சூத்திர அறிஞர் என அழைக்கப்படும் சமூக சீர்திருத்தத்தின் தந்தை ஜோதிராவ் பூலே அவர்களின் வாழ்க்கையையும் சிந்தனைகளையும் அறிமுகம் செய்கிற நூல். மரராட்டிய மாநிலத்தின் சூத்திர சாதிகளில் ஒன்றான மாலி (தோட்டக்காரன்) என்னும் சாதியில் பிறந்து பூக்களை வளர்த்ததால் பூலே என்கிற பெயர் வாய்க்கப்பட்ட குடும்பம் ஜோதிராவ் பூலேயினுடையது. மெட்ரிக் வரை படித்த பூலே 1848ஆம் ஆண்டில் மிகவும் தாழ்த்தப்பட்ட சூத்திராதி சூத்திரப் பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை இந்தியாவிலேயே முதன் முதலாகத் துவங்கினார். உயர்சாதியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி அப்பள்ளியை நடத்தினார். அதைத் தொடர்ந்து எல்லாச் சாதிப் பெண்குழந்தைகளுக்கான பள்ளியைத் துவங்கினார். தன் வீட்டுக்கிணற்றில் தீண்டாச் சாதி மக்களை நீர் எடுக்கத் திறந்து விட்டார். ஆதிக்க சாதியார் அவரைக் கொலை செய்ய முயற்சித்தனர். உண்மையைத் தேடுபவர் மன்றமான சத்ய சோதக் சமாஜ் துவக்கப்பட்டது. தன் இறுதி நாட்களில் பக்க வாத நோயினால் வலது பக்க உடல் அசைவற்றுப்போனது. இடது கையாலேயே சர்வஜனிக் சத்யதர்மா புஸ்தக் (உண்மை நம்பிக்கையின் நூல்) கை எழுதி முடித்தார். பிராமண ஆதிக்கத்துக்கு எதிராக மட்டுமின்றி பெண்களின் விடுதலையையும் சேர்த்தே பேசியவர் பூலே. பிராமணப் பெண்களையும் கூட சூத்திராதி சூத்திரர் பட்டியலிலேயே பூலே வைத்தார். மதம், வர்ணாசிரமம், சடங்குகள், மொழி, இலக்கியம், ஆங்கிலேய ஆட்சி, ஆண் பெண் சமத்துவம், விவசாயப் பிரச்னைகள் எனப் பரந்துபட்ட தளங்களில் வேகத்துடன் செயல்பட்ட மகாத்மா பூலேயை எளிமையாக அறிமுகம் செய்துள்ள புத்தகம்.

கார்-ஆ பேருந்தா?
பேரா. என். மணி, பிரஃபுல் பிட்வாய்
(16 பக்கம் ரூ.5)

அதிகம் பேசப்படாத ஒரு பொருளைப்பற்றி இப்புத்தகம் பேசுகிறது. சமீப ஆண்டுகளில் இந்திய நகரங்களில் கார்கள், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அபரிமிதமாகப் பெருகியுள்ளது ஏன்? பெருநகரங்களெங்கும் உலக வங்கிக் கடனுதவியுடன் பெரும் பெரும் பாலங்கள் ஏன் கட்டப்படுகின்றன? தனியார் வாகனங்களின் எண்ணிக்கை பெருகியுள்ள அதே நேரத்தில் பொதுப் போக்குவரத்துக்கான பேருந்துகளின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் 4 மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் திட்டமிட்ட முறையில் குறைக்கப்படுவதானது மக்களை தனியாக ஏதோ ஒரு வாகனம் வாங்க நிர்ப்பந்திக்கும் அரசியல் ஆகும்.
கார்களின் எண்ணிக்கை பெருக அரசின் கார்களுக்கு ஆதரவான கொள்கையும் வரி குறைப்பும் கார் தொழிலுக்கு வட்டி குறைப்பும் எளிய தவணைகளில் கார் கடன் வழங்குவதும் முக்கிய காரணங்களாகும். கார் பெருக்கத்தால் காற்று மாசுபடுவது அதிகரிக்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எரிபொருள் மூலாதாரங்கள் அதிவேகமாகக் காலியாகின்றன. நகர்ப்புறத்தை அண்டி வாழும் ஏழை எளிய மக்கள் ஒரு நாளின் பெரும் பகுதி நேரத்தை வாகனங்களுக்குக் காத்திருப்பதிலேயே செலவிட வேண்டிய நிலை. கார்களின் பெருக்கத்துக்கு மத்திய தர வர்க்கத்தின் ஆடம்பர கௌரவ மோகமும் ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே காரா பேருந்தா என்னும் கேள்வியில் ஒரு வர்க்கப்போராட்டமே அடங்கியுள்ளது.

ஆண் குழந்தைதான் வேண்டுமா?
மைதிலி சிவராமன்
(32 பக்கம். விலை.ரூ.5)

ஆண், பெண் பாலின விகிதம் வேகமாகக் குறைந்து வரும் இன்றைய சூழலில் அதற்கான காரணங்களை அலசி ஆய்வு செய்து இந்நிலை தொடராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்கிற பரிந்துரைகளையும் முன் வைக்கிறது இப்புத்தகம். பெண் பாலின எண்ணிக்கைக் குறைவின் காரணமாக ஹரியானாவில் ஆண்கள் மணம் செய்து கொள்ள உள்ளூரில் பெண் கிடைக்காமல் வெளியிலிருந்து ஏஜண்டுகள் மூலம் கடத்திக்கொண்டு வரும் பெண்களை வீட்டுக்கு வெளியே குடிசை போட்டு வைத்து எந்த மரியாதையும் இல்லாமல் அப்பெண்களை நடத்துவதும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கேவலமாக நடத்தப்படுவதும் தொடர்பான அ.இ. ஜனநாயக மாதர் சங்கத்தின் அறிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. பெண் சிசுக்கொலையில் வேகமாக ஹரியானாவைப் பின் தொடரும் தமிழகத்துக்கும் இந்நிலை வராது என்பது என்ன நிச்சயம்? பார்ப்பனீயக் கலாச்சாரமான வரதட்சிணை இப்போது எல்லாச் சாதியாரிடத்தும் பரவியுள்ளது. அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் வேலை வாய்ப்புகள் குறைந்து உத்தரவாதமற்ற வாழ்க்கை பற்றிய பயம் கொள்ளும் ஆண்கள் வரதட்சணை மூலமாவது ஒரு பாதுகாப்புக் கிடைக்காதா என எண்ணும் போக்கு வளர்கிறது. விளைவு பெண் சிசுக்கொலைகள். இது மாதர் அமைப்புகள் மட்டுமே போராடிச் சாதித்து விடக்கூடிய பிரச்னை அல்ல. எல்லா அமைப்புகளும் இணைந்த ஒட்டு மொத்த சமூகமே களமிறங்கிப் போராட வேண்டிய புனிதப் போராலேயே மாற்றம் கொண்டுவரமுடியும் என அறைகூவல் விடுக்கும் புத்தகம்.

ஏகாதிபத்தியம்
ஓர் அறிமுகம்
பிரபாத் பட்நாயக்
தமிழில் : விஜயராகவன்
(48 பக்கம் ரூ.10)

லெனினிசம் முழுமை பெற்று வெளிப்பட்ட நூல்களில் மிக முக்கியமானது ‘ஏகாதிபத்தியம்’ ஆகும். மார்க்சியத்தை மறுசீரமைக்கும் போக்கில் லெனின் இப்புத்தகத்தின் மூலம் சிக்கலான பல கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். முதலாவதாக உச்சகட்டம் பற்றியது. ஏகாதிபத்தியம் ஒரு நாட்டுத் தொழிலாளியை இன்னொரு நாட்டுத் தொழிலாளியைக் கொல்லும் யுத்தத்தில் தள்ளி விடுகிறது. ஒரே ஒரு தெரிவைத்தான் ஏகாதிபத்தியம் தருகிறது. அதாவது தங்களையும் தங்கள் சக தொழிலாளிகளையும் அழித்து ஒழிப்பது அல்லது முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவது என்பதே. இரண்டாவதாக வளர்ந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கம் காலனி நாடுகளின் விடுதலைப் போராட்டங்களிலும் தலையிட வேண்டும் என்பது. மூன்றாவதான விளக்கம் உலகப்புரட்சி நிகழ்ச்சி நிரலுக்கு வந்து விட்ட பிறகும் சமூக ஜனநாயகக் கட்சியின் மாபெரும் தலைவர்கள் பலர் திருத்தல்வாதப் பாதையில் செல்வது ஏன் என்பது பற்றியது. நான்காவதாக 1. என்ன செய்ய வேண்டும்? 2. அரசும் புரட்சியும் ஆகிய இரு நூல்களிலுமாக மலர்ந்து வந்து கொண்டிருந்த லெனினிசம் என்பது ஏகாதிபத்தியம் நூலின் மூலம் முழுமை பெறுகிறது. ஐந்தாவதாக மார்க்சினுடைய பணிகளின் மூலக்கருவாக விளங்கியவை எவை அதைச் சுற்றியுள்ளவை எவை என்று இப்புத்தகத்தில் லெனின் பிரித்தறிந்ததாகும். ஒவ்வொரு தோழரும் ஆழ வாசிக்க வேண்டிய புத்தகம்.

இந்தியாவில் ஹாரிபாலிட்
தமிழில்: முகவை ராஜமாணிக்கம்
(56 பக்கம் ரூ.10)

1953இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3வது காங்கிரசிற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் ஹாரிபாலிட் எழுதிய நாட்குறிப்புகளின் மொழிபெயர்ப்பாக இந்நூல் வந்துள்ளது. பம்பாயில் தொழிலாள மக்கள் வாழும்படியான பிரதேசங்களில் நான் கண்ட காட்சிகளை என்னால் எளிதில் மறந்து விடவே முடியாது. வறுமையின் எத்தகைய கோரமான இருப்பிடம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பேராசைக்கும் பகற்கொள்ளைக்கும் இக்காட்சியைவிட வேறு விளக்கம் வேண்டியதில்லை. முதல் பொதுக்கூட்டத்தில் பம்பாயிலுள்ள தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒவ்வொரு பகுதி தொழிலாளர் சார்பாகவும் பல தோழர்கள் 50க்கு மேற்பட்ட மலர் மாலைகளை என் கழுத்தில் போட்டார்கள். இந்த மலர் மாலைகளும் உபச்சாரமும் என் மனத்தை உருக்கி விட்டன, என் இரு கன்னங்களிலும் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. உணர்ச்சிகரமாகவும் உயர்ந்த நகைச்சுவை உணர்வோடும் எழுதப்பட்டுள்ள இக்குறிப்புகள் ஒரு சரித்திர ஆவணமாக மதிக்கத் தக்கவை ஆகும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை
(எளிமையான சுருக்கம்)
விழி பதிப்பகம்
இரா.ஜவஹர்
(24 பக்கம் ரூ.5)

கார்ல் மார்க்சும் ஏங்கல்சும் கூட்டாகத் தயாரித்து 1848 ஆம் ஆண்டு வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை என்னும் நூலின் சாரத்தை (மூல நூலை வாசிக்கத் தூண்டும் விதத்தில் இப்புத்தகம் அறிமுகம் செய்கிறது. உலகப் புகழ்பெற்ற வாசகங்கள் பலவற்றை உள்ளடக்கிய இந்நூலின் நான்கு அத்தியாயங்களும் முதலாளி வர்க்கத்தின் தோற்றத்தில் துவங்கி அதன் தனித்தன்மைகள் உற்பத்தி சக்திகளின் வரலாறு காணாத பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணமான முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தடையாக நிற்கும் வினோத முரண்பாடு போன்றவை விளக்கப்படுகின்றன. முதலாளி வர்க்கத்துக்கே சமாதி கட்டும் ஆயுதங்களை அதாவது உற்பத்தி சக்திகளை முதலாளி வர்க்கமே உருவாக்கியுள்ளது. தொழில்துறை வளர வளர தொழிலாளியின் ஏழ்மையும் அதிகரிக்கிறது. முதலாளி வர்க்கம் ஆளத்தகுதியற்றதாகிவிட்டது. ஆகவே பாட்டாளி வர்க்கம் தனிச்சொத்துரிமையை ஒழிக்கும் கம்யூனிச சித்தாந்தத்தைக் கையிலேந்தி ஒன்றுபட வேண்டும். பாட்டாளிகள் இழப்பதற்கு அடிமைச்சங்கிலியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வென்று அடைவதற்கோ ஒரு உலகமே இருக்கிறது. உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று புத்தகம் அறைகூவி முடிகிறது.

பஞ்சாயத்து: அனைத்து அதிகாரமும் மக்களுக்கே
டாக்டர் சூரியகாந்த் மிஸ்ரா
(தமிழில் எஸ். நூர்முகமது) & க.பழனிதுரை
(எழுத்தாக்கம் திருப்பூர் தூயவன்)
(16 பக்கம் ரூ.5)

மேற்குவங்கத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சர் டாக்டர் சூரிய காந்த் மிஸ்ரா கோவையில் ஆற்றிய உரையில் மேற்கு வங்கத்தில் 28 ஆண்டுகளாக இடது முன்னணி வெற்றி பெறுவதின் ரகசியம் உள்ளாட்சிகளுக்கு உண்மையான அதிகாரம் வழங்கியதில் அடங்கியுள்ளது என்பதை விளக்குகிறார். சமூக மாற்றத்துக்காக அவர்கள் வைத்துள்ள ஐந்து முழக்கங்களை விளக்குகிறார்: 1.வேகம். 2.திறமை. 3.நேர்மை. 4.வெளிப்படைத்தன்மை 5.சுய கட்டுப்பாடு – அதிகாரம் மக்களுக்கே என்பதுதான் நமது கோஷம். மக்களுக்கு அதிகாரம் என்றால் உள்ளாட்சிகளுக்கு அதிகாரம். அவரது உரையைத் தொடரும் முனைவர் க.பழனிதுரை தமிழகத்தில் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமான உறவு பயனாளிகள் அல்லது வாக்காளர்கள் என்கிற வடிவிலேயே இருக்கிறது. மக்களை மனுக்கொடுக்கும் பயனாளிகளாக மாற்றுவதால் மக்களின் சுய கௌரவம் பாதிப்படைகிறது. ஆனால் மே.வங்கத்தில் மக்கள் அதிகாரத்தின் பங்காளிகளாக உள்ளனர். இதுவே நாம் செல்ல வேண்டிய பாதை என்கிறார்.

வகுப்புவாதமும் வரலாறும்
ரொமிலா தாப்பர்
தமிழில் : பூவுலகின் நண்பர்கள்
(24 பக்கம் ரூ.5)

புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர் அவர்களின் உரை கேள்வி பதில் வடிவில் புத்தகமாக்கப்ப்பட்டுள்ளது. ஏன் பிற அறிஞர்களைக் காட்டிலும் வரலாற்று அறிஞர்கள் மட்டும் வகுப்புவாதம் குறித்து அதிக அக்கறை காட்ட வேண்டும்? நம்பிக்கை வரலாற்றுக்கு அடிப்படையாக இருக்க முடியாதா? ‘ஆரிய வம்சம்’ என்ற கூற்று தொடர்பான பிரச்னை என்ன? இது பற்றி இந்துத்வவாதிகளின் கூற்று என்ன? தேசிய வரலாற்று அறிஞர்களின் கருத்து என்ன? வரலாற்று ஆதாரங்கள் என்ன சொல்கின்றன? மொழிக்கும் இனத்துக்குமான வேறுபாடு என்ன? முஸ்லீம்கள் ஏன் இந்துக்கோவில்களை இடித்தார்கள்? என்பது போன்ற ஏராளமான சமகாலக் கேள்விகளுக்கான விடைகளோடு வந்துள்ள புத்தகம்.

பஞ்சாயத்தும் கிராமப்புற வறுமை ஒழிப்பும்-மேற்கு வங்க அனுபவம்
டாக்டர்.சூரியகாந்த மிஸ்ரா
தமிழில் : கி.இலக்குவன்
(16 பக்கம். ரூ.5)

1973-76 ஆண்டுகளில் மேற்கு வங்க கிராமப்புறங்களில் மக்கள் தொகையில் 73.16 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வந்தனர். ஆனால் இடது முன்னணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 1999-2000 ஆண்டுகளில் கிராமப்புற வறுமையின் அளவு 31.85 சதமாகக் குறைந்தது. இது எப்படி நடந்தது? பல காரணங்கள் உண்டெனினும் நிலச்சீர்திருத்தமே முக்கிய காரணம். அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலமான 4 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேரில் 4 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர் மக்களுக்கு (28 லட்சம் பேருக்கு) விநியோகம் செய்யப்பட்டது. விவசாயப் பொருட்கள் வழங்கப்பட்டன. சிறு சிறு நீர்ப்பாசன திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன. அதன் காரணமாக உணவுதானியங்களில் பற்றாக்குறை மாநிலமாக ஒரு காலத்தில் இருந்த மேற்கு வங்கம் இப்போது உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. இது மட்டுமன்றி பஞ்சாயத்து அமைப்புகளின் கைகளில் அனைத்து அதிகாரமும் பரவலாக்கப்பட்டு அவர்களும் வறுமை ஒழிப்பில் பங்கேற்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோலப் பல காரணங்களை ஆதாரங்களோடும் புள்ளி விவரங்களோடும் விளக்கும் புத்தகம்.

ஜனநாயக எழுச்சிகளின் நூற்றாண்டு
அய்ஜாஸ் அகமது
தமிழில்:சஹஸ்
(16 பக்கம் ரூ.5)

ஐரோப்பாவின் ஒரு சிறு மூலையில் தடுமாற்றத்துடன் உருவான ஜனநாயகத்துக்கான கோரிக்கை 20 ஆம் நூற்றாண்டில் புதுப்புது வடிவங்கள் எடுத்துப் பெரும் சூறைக்காற்றாக வீசியடித்தது. சுதந்திர சந்தையை மட்டுமே அர்த்தப்படுத்தும் முதலாளித்துவ ஜனநாயகத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்ட தொழிலாளிகள், விவசாயிகள், பெண்கள், காலனியாதிக்க நுகத்தடியின் கீழ் இருந்த மக்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர், தேசிய இனக்குழுவினர் ஆகியோர் ‘ஜனநாயகம்’ என்பதற்கு வரலாற்று ரீதியான புதிய பொருளையும் புரட்சிகரமான திசைவழியையும் உருவாக்கினர். 1990 வரையிலான 20ஆம் நூற்றாண்டின் இதயமாக ஜனநாயகக் கோரிகைகளே இருந்தன என்பதை வரலாற்றுப் பூர்வமாக விளக்கும் இந்நூல் சோசலிசப் பின்னடைவுக்குப் பிறகான நிலைமைகளையும் பரிசீலிக்கிறது. சனநாயக இயக்கம் இன்று ஒரு நெருக்கடிக்குள் சிக்கியிருந்தபோதும் சோசலிசம் மற்றும் தேச விடுதலைக்கான போராட்டங்களோடு இணையாமல் அது நீடிக்க முடியாது என்பதை அழுத்தமாக உணர்த்தும் புத்தகம்.

கருவாச்சி
(நமது வம்சத்தின் வரலாறு)
த.வி.வெங்கடேஸ்வரன்
(40 பக்கம் ரூ.10)

மனித குலத்தின் ஆதித்தாய் எந்த ஊர்க்காரி? குரங்கிலிருந்து பிறந்தோம் என்பது மட்டும் போதுமான விளக்கமாக அமைய முடியாதல்லவா? மரபணு ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு நம் வம்சத்தின் வரலாற்றைத் தேடும் முக்கியமான புத்தகம் இது. செல்லில் இரண்டு வகை டி.என்.ஏக்கள் உள்ளன. ஒன்று உட்கரு டி.என்.ஏ. மற்றொன்று மைடி.என்.ஏ. உட்கரு டி.என்.ஏ தான் நமது நிறம், மூக்கின் நீளம், முகத்தின் அமைப்பு மற்றும் தலைமுடி வரை நிர்ணயிக்கிறது. இன்னொரு டி.என்.ஏ வான மைடி.என்.ஏ என்பது செல்லின் சைட்டோபிளாசத்திலுள்ள மைட்டோகாண்ட்ரியாவில் உள்ளது. இந்த டி.என்.ஏ வில் தான் நமது மூததையரைப் பற்றிய ரகசியம் புதைந்துள்ளது. உட்கரு டி.என்.ஏ வை அம்மாவும் அப்பாவும் வழங்கிட மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏவை அம்மா மட்டுமே வழங்க முடியும். ஆகவே பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த பிரசவமான தாய்மார்களின் நஞ்சுக்கொடிகளின் வழியே ஆய்வு செய்து நம் அனைவருக்குமான தாய் மூதாய் ஆப்பிரிக்கக் கறுப்பினப் பெண் என்பதை விஞ்ஞானிகள் நிறுவியுள்ளனர். ஆகவே முஷாரப்பும் அத்வானியும் காஸ்ட்ரோவும் புஷ் வகையாறாக்களும் கூட ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றாகிறது. அவசியம் ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய வாசிக்க வேண்டிய புத்தகம்.

வரலாறு என்றால் என்ன?
பேராசிரியர் அ.கருணானந்தன்
(32 பக்கம் ரு.5)

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதில் துவங்கி வரலாறு என்றால் என்ன என்பதற்கு ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட விதவிதமான விளக்கங்கள் உள்ளன. வரலாற்றினூடாகப் பயணம் செய்து வரலாறு என்றால் என்ன என்பதற்கான விடையைத் தேடும் சுவையான புத்தகம் இது. நமது பழைய வரலாறு என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட கற்பனைகளே என்ற வால்டேரின் கணிப்பிலிருந்து மாறுதலே இல்லாத பழைய காலத்தின் ஆவணம்தான் வரலாறு என்னும் அரிஸ்டாட்டிலின் கருத்து வரை ஆய்வு செய்யும் புத்தகம் இந்தியாவில் புராணங்களையும் இதிகாசங்களையும் அப்படியே வரலாறாக எடுத்துக்கொண்டு அரசியல் நடத்தும் போக்கினைப் பற்றி விவரிக்கிறது. ஆய்வின் முடிவாக வரலாறு என்பது மாற்றங்களின் வரலாறே என்ற கணிப்புக்கு நாம் வருகிறோம்.

மாற்றங்களைக் கொண்டுவரும் உழைப்பின் வரலாறு. போராட்டங்களின் வரலாறு. வரலாறு என்றால் என்ன என்ற கேள்விக்கான விடையும் விளக்கமும் வரலாற்றைப் பார்க்கும் கண்ணோட்டத்திலும் வரலாற்றைப் பயன்படுத்துவதிலுள்ள நோக்கத்திலும்தான் உள்ளன. மனித குல விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் அமைதிக்குமான உணர்வாகவும் உந்துதலாகவும் கருவியாகவும் இருப்பதே நம்மைப் பொறுத்தவரை வரலாறாக இருக்க முடியும் என்று கச்சிதமாக முடிகிறது புத்தகம்.

கடவுள் பிறந்த கதை
எஸ்.ஏ.பெருமாள்
(32 பக்கம் ரூ.5)

கடவுளுக்கு எதிரான போராட்டம் என்பது கடவுள் பிறந்த கதையை மதங்கள் பிறந்த கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் துவங்குகிறது என்பார்கள். அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துள்ள புத்தகம் இது. பிடிபடாத மர்மங்களோடு இருந்த இயற்கையின் சக்திகளை சில மந்திரங்களின் மூலம் சில சடங்குகள் மூலம் கட்டுப்ப்டுத்த முயன்ற மனித நடவடிக்கையே ஆரம்ப கால நம்பிக்கையாக இருந்தது. நம்மோடு கூட இருந்து மரணத்தினால் காணாமல் போகிற மனிதர்கள் ஆவி ரூபத்தில் நம்மோடு இருப்பதான மனத் தேறுதலை அடிப்படையாகக் கொண்டு ஆவி வழிபாடு தோன்றியது. மக்கட்பேற்றைத் தரும் ஆண் பெண் குறிகளை வழிபடும் போக்கும் முன்னோரை வழிபடும் போக்கும் தம் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் உதவியாக இருக்கும் அல்லது இடைஞ்சலாக இருக்கும் விலங்குகளை பாம்புகளை வழிபடும் போக்கும் என மெல்ல மெல்ல வழிபாடுகள் வளர்ந்த கதை சுவையான உதாரணங்களுடன் சொல்லப்பட்டுள்ளன. பல கடவுள்களுக்கு பதிலாக ஒரு கடவுளை ஆதிக்க வர்க்கம் கொண்டுவந்து மதங்களை நிறுவி மக்களின் எதிர்ப்புணர்வுகளை மழுங்கடிக்கும் கதையும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மதமென்னும் மதமதப்பிலிருந்து மீண்டால்தான் துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என புத்தகம் முடிகிறது.

உலகமயமாக்கலும் பணி அமர்வுத் தரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றமும்
விஜயராகவன்
(56 பக்கம்.ரூ.10)

உள்நாட்டுச் சந்தையையும் உலகச் சந்தையையும் தாராளமயமாக்குவதன் மூலம் வர்த்தகம் நிதிமூலதனம் மற்றும் தகவல் ஆகியவை நாடுகளின் எல்லைகளைக் கடந்து தங்கு தடையற்றுப் பரவுவதற்கான ஏற்பாடுதான் உலகமயமாக்கல் என்பதை நாம் அறிவோம். பணித்தரத்தைப் பற்றி முதலாளித்துவம் நிறையப் பேசி பணியமர்வுத்தரம் பற்றிப் பேசவொட்டாமல் செய்துவிட்டது. முதலாளித்துவ அமைப்பில் உழைப்பும் ஒரு சரக்கு என்றாகிவிட்ட போது பணியமர்வு முறையையும் சரக்காகவே கொள்ள வேண்டும். எல்லா விஷ்யங்களிலும் தர அளவு பார்ப்பதுபோல் பணியமர்விலும் தரம் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. அப்படிப் பார்க்கையில் அதிக ஊதியமும் சமூகப் பாதுகாப்பும் கொண்ட பணியமர்வே அதிகப் பணியமர்வுத் தரமுடையதாக இருக்க முடியும் எனத் துவங்கும் இப்புத்தகம் பணியமர்வுத் தரத்தை தீர்மானிக்க நான்கு முக்கிய அளவுகோல்களை முன் வைக்கிறது. 1.பணியின் நிரந்தரத்தன்மை 2.உற்பத்தியின் பங்களிப்புக்கேற்ற ஊதியம் 3.பணியமர்வுப் படிநிலை முன்னேற்றம் 4.சமூகப் பாதுகாப்பு. உலகமயமாக்கலின் விளைவாக பணியமர்வுத் தரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் துறைவாரியாக வரலாற்றுப் பூர்வமாக இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அதிகம் பேசப்படாத பொருள் பற்றிய தெளிவான புத்தகம்.

தமிழக ஆறுகளின் அவல நிலை
பேராசிரியர் எஸ்.ஜனகராஜன்
(16 பக்கம் ரூ.5.)

தமிழகத்தின் ஆறுகள், ஏரிகள் குளங்கள் போன்ற நீர் நிலைகள் குறித்த நேரடி ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட டாக்டர் கனகராஜ் எழுதிய அவலநிலையில் தமிழக ஆறுகள் என்னும் புத்தகத்திலிருந்து இக்கட்டுரை சுருக்கித் தரப்பட்டுள்ளது. பாலாற்றுப்படுகையில் வாணியம்பாடியிலிருந்து தாமல் கிராமம் வரை மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் அதிர்ச்சியூட்டுகின்றன. நிலத்தடி நீர் தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகளால் முற்றிலும் மாசடைந்து போன கிராமங்களாக இவை மாறியுள்ளன. விவசாய நிலத்தில் 50 சதவீதம் சாகுபடியற்ற பரப்பாக மாறியுள்ளது. நீர்வளமிக்க பகுதிகளாக இருந்த இப்பகுதியில் இப்போது நீர் வியாபாரம் அதிகமாக நடைபெறுகிறது. கிராமங்களை விட்டு மக்கள் வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கால்நடைகளின் எண்ணிக்கை 70 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது. சராசரி மழைப்பொழிவு குறையவில்லை. ஆனாலும் ஏன் இந்த நிலை என்பதை புத்தகம் ஆய்கிறது. பூமி உள்வாங்கும் நீரின் அளவைவிட இறைக்கப்படும் நீரின் அளவு அதிகமாகி வருவதால் வறட்சிக்காலங்களில் நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்குள்ளாகிறது. சக்திமிக்க நீர் மேலாண்மையும் கேட்பாரற்றுக் கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏரிகள் குளங்களைப் பராமரிப்பதும் உடனடித் தேவை என்பது நமக்கு உணர்த்தும் புத்தகம்.

விடுதலைப்புலி திப்பு சுல்தான்
டாக்டர் வெ.ஜீவானந்தம்
(40 பக்கம் ரூ.10)

அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயரிடம் சமரசம் செய்து கொண்டு சன்மானம் பெற்று சொகுசு வாழ்க்கை தேடிக்கொண்ட சமஸ்தான அதிபர்கள் மத்தியில் விடுதலை வீரனாக போர்க்களத்திலேயே வீர மரணமெய்திய ஒரே இந்திய மன்னன் திப்பு சுல்தான். அவர் சுயசார்பு அரசை உருவாக்க பிரஞ்சு உதவியுடன் ஏவுகணைகள் செய்தார். சீன வல்லுநர்களை வரவழைத்து பட்டு உற்பத்தி செய்தார். கண்ணம்பாடி அணைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னே அடிக்கல் நாட்டி தரிசு நிலங்களை விளை நிலமாக்க முயன்றார். விவசாய ஆராய்ச்சி மையம் உருவாக்கினார். மக்களின் அறிவை விசாலமாக்க பெரும் நூலகம் அமைத்தார். மது ஒழிப்பை தீவிரப்படுத்தினார். நெப்போலியனுடனும் துருக்கியுடனும் ஆப்கனுடனும் உறவு கொண்டு அணிசேரா நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். எனினும் வரலாற்றில் அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அக்குறை நீக்கிட சிறு பங்கினை ஆற்றும் புத்தகம் இது.

பின் இணைப்பாக தரப்பட்டுள்ள திப்புவின் மரணத்துக்குப் பின் நடந்த கொள்ளை பற்றிய கட்டுரை வாசக நெஞ்சங்களை நிச்சயம் பதறச்செய்யும்.

150 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை
பிரபாத் பட்நாயக்
தமிழில் : விஜயராகவன்
(32 பக்கம் ரூ.5)

மார்க்ஸ், ஏங்கல்ஸ் இருவருடைய உலகக் கண்ணோட்டத்தை முதன் முதலில் வெளிப்படையாக அறிவித்த புத்தகம் கம்யூனிஸ்ட் அறிக்கைதான். இது ஒரு அறிக்கை என்பதால் சுருக்கமாகவும் அடர்த்தியான ஆற்றல் மிக்கதாகவும் சமூக மாற்றத்துக்கான புரட்சிகர நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டிய அவசியம் இருந்தது. இப்புத்தகம் வெளியாகி 150 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையிலும் அதன் இன்றைய பொருத்தப்பாடு மறுக்க முடியாததாக இருக்கிறது. அதற்கான காரணங்களை பிரபாத் பட்நாயக் இச்சிறு நூலில் விரிவாக ஆய்வு செய்து இந்த உலகமயமாக்கல் நாட்களிலும் சோசலிசத்தைப் புதுப்பிக்க உருவாக்கப்பட வேண்டிய ஒருங்கிணைக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு கம்யூனிஸ்ட் அறிக்கையில் தரப்பட்டுள்ள கண்டுபிடிப்புகள் அடித்தளமாக அமையும் என நிறுவுகிறார். வரலாற்றை பொருள்முதல்வாதப் பார்வையில் விளக்கியதும் வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகப் பார்த்ததும் மனித குலத்தை “வரலாற்றுக்கு முன்பான” நிலையிலிருந்து “வரலாறு படைக்கும்” நிலைக்குக் கொணரப்போகும் பட்டாளிவர்க்கம் என்கிற வரலாற்றுச் சக்தி எப்படி உருவாகப் போகிறது என்பதை விளக்கியதுமான சாராம்சம் கம்யூனிஸ்ட் அறிக்கையை நிலைபெற்று நிற்க வைத்துவிட்டது.

20ஆம் நூற்றாண்டு
அரசியலில் இந்தியா
அய்ஜாஸ் அகமது
தமிழில்:சஹஸ்
(16 பக்கம் ரூ.5.)

உலகின் பிற பகுதிகளைப் போலவே முதல் உலகப்போருக்கும் ரஷ்யப் புரட்சிக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இந்தியாவிலும் நவீன அரசியல் காலம் துவங்கியது. இந்திய தேசிய இயக்கம் முன்னணிக்கு வந்த 1919-22 வரையிலான சுருக்கமான காலம் உலகின் பெரும் பகுதிகளுக்கு ஒரு அசாதாரண காலமாகும். ருஷ்யப் புரட்சியின் பின்னணியில் ஐரோப்பாவின் பெரும்பகுதி வர்க்க எழுச்சிகளைச் சந்தித்தது. சீனாவின் மே 4 இயக்கம், 1919 ஆம் ஆண்டின் எகிப்தியப் புரட்சி, ஆப்கன், துருக்கி, ஈரானிலும் இக்காலகட்டத்தில் பல எழுச்சிகள் ஏற்பட்டன.

உலகைச் சுற்றிலும் பல கம்யூனிஸ்ட் நாடுகள் உருவான பின்னணியில்தான் 1925இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதைக் காண வேண்டும். அதே ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்டதையும் இந்தியாவில் நடந்த தனித்த நிகழ்வாக நாம் பார்க்க முடியாது. உலகின் பிற பகுதிகளில் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பாசிச சக்திகள் பெரும் வேகத்துடன் வளர்ந்த பின்னணியில்தான் ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்டதைக் காண வேண்டும்.

இன்று இந்திய தேசியத்தின் ஆதார சாரமான ஏகாதிபத்திய எதிர்ப்பு, மத சார்பற்ற தன்மை ஆகியவை கைவிடப்பட்டுள்ளது எந்த உலகத்தின் பின்னணியில் என்பதையும் நாம் காண வேண்டும். இப்படியாக இந்தியாவின் அரசியலை 20ஆம் நூற்றாண்டு உலக நிகழ்வுகளின் பின்னணியில் புரிந்து கொள்ள உதவும் புத்தகம் இது.

கல்வித் துறையால் – வறுமையால் நசுக்கப்படும் குழந்தைகள்
மைதிலி சிவராமன்
(32 பக்கம் ரூ.5.)

கருத்துப்பூர்வமாக மட்டுமே பேசி புள்ளிவிவரங்களை அள்ளி வீசாமல் உண்மைச் சம்பவங்களையும் பொது விசாரணையில் குழந்தைகள் பேசிய பேச்சுக்களையும் அடுக்கிச் சொல்வதன் மூலம் ஒரு உணர்ச்சிகரமான புத்தகமாக மாறிவிடுகிறது. கல்விச்சாலைகளின் வன்முறை பெற்றோரின் சம்மதத்தோடுதான் நடைபெறுகிறது. வகுப்பறைத் தண்டனைகள் சிறார்களிடையே ஏற்படுத்தும் வெறுப்பு, பீதி, அவமானம் பற்றி யாருக்குமே அக்கறையில்லை. குழந்தை உழைப்பாளிகள் பொது விசாரணையில் பேசிய பேச்சுகளின் பதிவுகள் இப்புத்தகத்தை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது.

வங்கித்துறையும் இந்தியாவின் எதிர்காலமும்
க.கிருட்டிணன்
(16 பக்கம் ரூ.5)

வங்கிகள் பொதுத்துறைக்குள் வருவதற்கு முன்னால் தனியார் வங்கிகள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றிச் செயல்பட்டு வந்தன. வங்கிகளின் உடைமையாளர்கள் அவரவர் வங்கிகளின் மூலம் பொதுமக்களிடமிருந்து திரட்டிய சேமிப்புத் தொகையை பெரும்பாலும் தம் சொந்த பந்தங்களுக்காகவே பயன்படுத்தினர். ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பும் கிடையாது. விளைவு ஏராளமான வங்கிகள் திவாலாகிப் போயின. பணம் போட்ட மக்கள் நிலை பரிதாபத்துக்குரியதானது. வெள்ளைக்காரன் நடத்திய வங்கியும் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடியது. இதைக் குறிப்பாக உணர்த்தியே பாரதி “பொழுதெலாம் எமது செல்வம் கொள்ளை கொண்டு போகவோ” என்கிற வரிகளை எழுதினான் என்பார் தொ.மு.சி.ரகுநாதன். இந்தியா விடுதலையடைந்த பிறகு 1949ல்தான் வங்கித்தொழில் ஒழுங்கமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1950க்கும் 1969க்கும் இடைப்பட்ட 19 ஆண்டுகளில் மட்டும் 500க்கு மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலாகிக் காணாமல் போயின. எல்லாம் போனது போக எஞ்சியிருந்தவற்றில்தான் 14 வங்கிகளை 19 ஜுலை 1969ல் அரசு நாட்டுடமை ஆக்கியது.
அன்று வங்கிகளின் வைப்புநிதியாக ரூ.4646 கோடி மட்டுமே இருந்தது. நாட்டுடமை ஆக்கப்பட்ட பின் இன்று வைப்பு நிதி ரூ.16,75,000/ கோடியாக வளர்ந்துள்ளது. இந்த வரலாற்றுப் பின்னணியை விளக்கும் இப்புத்தகம் வங்கிகள் இணைப்பு, வங்கிகளில் அந்நிய நேரடி முதலீடு என்கிற ஆபத்தான முயற்சிகளில் இறங்கியுள்ள மத்திய அரசு இம்முயற்சிகளில் வெற்றி பெற்றால் கடும் விளைவுகளை இந்தியா சந்திக்கவேண்டி வரும் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறார் ஆசிரியர்.

பெண்ணியம் பேசலாம் வாங்க
உ.வாசுகி
(32 பக்கம்.ரூ.5)

உரையாடல் பாணியில் பெண்ணியம் பற்றி பெண் சமத்துவம் பற்றிப் பேசுவோர் நம் சமூகத்தில் எதிர்கொள்ளும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக இப்புத்தகம் வந்துள்ளது. கிண்டலும் கோபமும் கலந்த நடை புத்தகத்தின் வரிகளுக்கு உயிர் தருகின்றன. சும்மா வாசிச்சுட்டுப் போயிட முடியாது. பெண் என்கிற காரணத்துக்காக பாரபட்சம் இருக்கக்கூடாது என்பதுதான் பெண்ணியத்தின் சாரம். என்றாலும் அமேசான் பெண்ணியம், தனித்துப் பார்க்கும் பெண்ணியம், சுற்றுச்சூழல் பெண்ணியம், தாராளவாதப் பெண்ணியம், பொருள்முதல் வாதப் பெண்ணியம் எனப் பலவாக அறியப்பட்டுள்ள பெண்ணியச் சிந்தனைகளை அறிமுகம் செய்யும் இந்நூல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஜனநாயகம், சமத்துவம், பெண்விடுதலை என்கிற முழக்கங்களாகப் பெண்ணியத்தை முன்வைப்பது ஏன் என விளக்குகிறது. ஆண், பெண் இருபாலரிடத்தும் அவசியம் பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய எளிய புத்தகம்

இன்சூரன்ஸ் துறை எதற்கு?
க.சுவாமிநாதன்
(32 பக்கம் ரூ.5)

பொதுத்துறை நிறுவனங்களை அந்நியருக்கும் தனியாருக்கும் குறைந்த விலையில் விற்றுத்தள்ள முயலும் மத்திய அரசு எத்தனை போராட்டங்களை பாட்டாளி வர்க்கம் நடத்தியபோதும் சற்றும் மனந்திருந்தாமல் மீண்டும் மீண்டும் தன் முயற்சியைத் தொடர்ந்து பல பொதுத்துறை நிறுவனங்களைக் காவு கொடுத்து வருகிறது. ஆனால் 1980களிலிருந்து இன்சூரன்ஸ் துறையை அழிக்கப் போராடிவரும் மத்திய அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் பாச்சா பலிக்காமல் தொடர்ந்து தோற்று வருகிறார்கள்.

காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில் தாரகை போல் ஜொலித்து நிற்கும் இந்தியாவின் இன்சூரன்ஸ் துறை உலகமயமாக்கல் நாட்களில் போராடும் மக்களுக்கு நம்பிக்கை தரும் யதார்த்தமாக தாக்குப் பிடித்து நிற்க முடிவது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை காணும் பயணத்தில் நம்மை அழைத்துச்செல்லும் இப்புத்தகம் வரலாற்றின் பக்கங்களினூடாக நடந்து செல்கிறது. ராஜாராம் மோகன் ராயும் லாலா லஜபதிராயும் ஈஸ்வர்சந்திர வித்யாசாகரும் கை வைத்துத் துவக்கிய இன்சூரன்ஸ் துறை என்பதால்தான் இன்றைய டோட்டல் பிராடு அரசியல்வாதிகளால் அமைச்சர்களால் ஆளும்+எதிர் கட்சிகளால் இத்துறையை அழித்து விட முடியவில்லை என்று மனம் வரலாற்று அதிர்வு கொள்கிறது. இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தன் ஊழியர்களை மிகச் சரியாக அணிதிரட்டிக் கல்வி புகட்டி சற்றும் மனந்தளராத போராட்டத்தில் இறக்கிவிட்டிருக்கும் வரலாறும் இப்புத்தகத்தில் பதிவாகியுள்ளது. சங்கப்பணிகளும் மக்கள் இயக்கமும் இணையும் போதுதான் நாட்டில் நல்லது நடக்கும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்தின் பணிகளும் வரலாற்று ரீதியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. தேசப் பொருளாதார நிர்மாணத்துக்குக் கோடி கோடியாகக் கொட்டித் தரும் கற்பதருவான இன்சூரன்ஸ் துறையை காக்க நம்மாலான ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்கிற மன உந்துதலை வாசகர் மனங்களில் ஏற்படுத்தும் விதமாக இப்புத்தகம் வந்துள்ளது.

மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர்
பி.பி.சான்ஸ்கிரி
(40 பக்கம். ரூ.5.)

அண்ணல் அம்பேத்கர் பற்றி பலரும் பல காலங்களில் பலவிதமான மதிப்பீடுகளை முன் வைத்தனர். முன் வைத்து வருகின்றனர். அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி எழுதப்பட்ட இக்கட்டுரை அம்பேத்கருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே நிலவிய முரணும் நட்பும் பற்றி ஆய்கிறது. அம்பேத்கரின் காலத்திலும் அவரது வருகைக்கு முன்னும் இந்திய சமூகத்தில் பிறந்து வளர்ந்த அத்தனை சமூக சீர்திருத்த இயக்கங்களும் பாரம்பரியமிக்க இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய உயிரோடிருக்கும் மரத்தின் மீது நவீன முதலாளித்துவக் கலாச்சாரம் என்னும் ஒட்டுக்கிளையை ஒட்டுப்பயிர் செய்ய முயன்றவையே ஆகும். இதே வழியில்தான் காங்கிரசும் பாரம்பரியம் என்ற பெயரில் உயர்சாதி மனோபாவத்தை விட்டொழிக்க முடியாமலிருந்தது. ஆகவே அம்பேத்கர் காங்கிரசோடு முரண்பட்டு நின்றதில் நியாயமுண்டு.
ஆனால் கம்யூனிஸ்ட்டுகளுடன் அவர் ஏன் சேர்ந்து நிற்கவில்லை? தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்பது சாதிய அமைப்பு உருவாக்கியிருந்த தடைகளை வலிமையிழக்கச் செய்வதை அவர் ஏன் பார்க்கத் தவறினார்? இக்கேள்விகள் கம்யூனிஸ்ட்டுகள் சாதியம் பற்றி அன்று கொண்டிருந்த கோட்பாட்டு ரீதியான நிலைபாட்டை பரிசீலிக்கத் தூண்டுகின்றன. தலித் மக்களின் விடுதலைக்காக பிரத்யேகமான முயற்சிகள் தேவையில்லை. வர்க்கப் போராட்டத்தின் வீச்சில் சாதியம் அழியும் என்கிற செக்டேரியன் பார்வை அன்று கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு இருந்ததையும் தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்பது தலித் ஒற்றுமை என்பதை சீர்குலைக்கும் முயற்சியாக அம்பேத்கர் காண நேர்ந்ததையும் இப்புத்தகம் விளக்குகிறது. மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும் என இந்நூல் வலியுறுத்துகிறது.

உழைப்பு, உழைப்பாளர், உலகமயம்
என்.குணசேகரன்
(32 பக்கம்.ரூ.5)

இன்று உலகமயமாக்கலுக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டங்கள் நாடு முழுவதும் இடைவிடாது நடைபெற்று வந்த போதிலும் பொதுவாக தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு தளர்வு ஏற்பட்டது போல தோற்றம் உருவாகியுள்ளது. இது ஏன்? இது உண்மையா? என்கிற கேள்விகளோடு விசாரணையைத் துவக்குகிறது புத்தகம். உலகமயமாக்கல் கொள்கை இந்தியாவை ஆட்டிப்படைக்கத் துவங்கிய பிறகு முறைசார்ந்த தொழில்களில் வேலை வாய்ப்பு திட்டமிட்டு குறைக்கப்பட்டு வந்துள்ளது. இன்னொரு புறம் வேலைகளை உப காண்ட்ராக்ட்களுக்கு விடுவது, அவுட்சோர்சிங் போன்ற நடைமுறைகள் காரணமாகவும் முறைசாராத் தொழிலாளர் எண்ணிக்கை பெருகி வருகிறது. உலகமயத்தின் இன்னொரு விளைவாக விவசாயம் அழிந்து கிராமப்புறத்திலிருந்து வேலை தேடி நகர்ப்புறம் வரும் மக்களும் முறை சாராத் தொழிலாளர் படையில் சேருகின்றனர்.

ஆகவே வலுவான தொழிலாளர் இயக்கத்தின் பலம் குறைகிறது. இதன் பொருள் இனி தொழிற்சங்க இயக்கம் முன்போல எழுச்சி கொள்ள முடியாது என்பதல்ல. முறைசாராத் தொழிலாளர்களைப் பெருமளவுக்கு அணிதிரட்ட வேண்டிய மிகப்பெரும் சவாலும் கடமையும் தொழிற்சங்க இயக்கத்தின் முன் உள்ளது. தேசிய எல்லைகளைத் தாண்டி கரம் நீட்டும் நிதி மூலதனத்தின் வருகைக்குப் பின் முதலாளித்துவ அதிகாரத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதே சிரமமாகியுள்ளது. இதை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்தும் இப்புத்தகம் ஆழமாகப் பேசுகிறது.

மிரட்டும் குளிர்பானங்கள்
அசுரன்
(பக்கம் 16 ரூ.5)

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரிலும் (பிஸ்லரி, அக்வாஃபினா, கின்லே) பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களிலும் பூச்சிக்கொல்லிகள் இருப்பதை டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம் கண்டுபிடித்து வெளியிட்டு பெரும் பரபரப்பை எற்படுத்தியது. அம்மையத்தின் அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்ட தகவல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லிகள் மிரண்டா லெமனில் 70 மடங்கும் கோகோகோலாவில் 45 மடங்கும் ஃபாண்டாவில் 43 மடங்கும் பெப்சியில் 37 மடங்கும் தம்ஸ் அப்பில் 22 மடங்கும்… என்று பட்டியல் நீளும் போது நமக்கு அடிவயிறு கலங்குகிறது. அதைவிடவும் பூச்சிக் கொல்லியே இல்லாவிட்டாலும் இந்தத் தண்ணீர் பாட்டிலும் குளிர் பானங்களும் ஆபத்தானவை என்று விளக்கப்படும் வரிகள் மேலும் அதிர்ச்சியைத் தருகின்றன. அரசாங்கத்தின் கையாலாகாத்தனமும் சரியாகத் தோலுறித்துக் காட்டப்பட்டுள்ளது.

கல்வித்துறை அவலங்கள்
சாவித்திரி கண்ணன்
(32 பக்கம் ரூ.5)

தமிழகத்தின் கல்வித்துறை குறித்து ஆரம்பக் கல்வி, உயர்கல்வி குறித்தெல்லாம் நம் உள்ளங்களில் அலைமோதும் கேள்விகளே இப்புத்தகத்தில் வரிசையாகத் தொகுக்கப்பட்டு அவற்றுக்கான விடைகள் தேடும் முயற்சியில் கல்வித்துறையின் அவலங்கள் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பள்ளி செல்லும் பருவத்தில் உள்ள 22 கோடி குழந்தைகளில் 12 கோடி குழந்தைகள் மட்டுமே பள்ளி செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளன என்கிற அதிர்ச்சித் தகவலோடு துவங்கும் புத்தகம் தன்னுடைய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 30 சதவீதம் செலவழிக்கும் மத்திய அரசு கல்விக்காக 3.4 சதவீதம்தான் ஒதுக்குகிறது. இதை 10 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்கிற கோரிக்கை கேட்பாரற்றுக் கிடக்கிறது. தமிழகத்தில் 70000 ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. அரசுப்பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. 1950-60கள் வரையிலும் பெரும் செல்வந்தர் வீட்டுப்பிள்ளைகள் கூட அரசுப் பள்ளிகளில்தான் படித்து வந்தனர். ஆனால் 60களுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆங்கிலவழிக் கல்விக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பெரும் ஊக்கமளித்து வளர்த்த வரலாறு நமக்கு மேலும் அதிர்ச்சி தருகிறது. பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பெருகிவரும் ‘நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்’ என கல்வித்துறை சார்ந்த சகல விஷயங்கள் பற்றிய அலசலாக இப்புத்தகம் வந்துள்ளது.

மேதினம்
செல்வபெருமாள்
(30 பக்கம் ரூ.5)

“நேரம் வரும் அப்பொழுது, எங்களது மௌனம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இன்று நீங்கள் எங்கள் குரலை நெறிப்பதை விட..’’ தூக்கு மேடையில் நின்று சிகாகோ தியாகி ஆகஸ்ட் ஸ்பைஸ் முழக்கிய இவ்வார்த்தைகளோடு புத்தகம் துவங்குகிறது. 1880களில் அமெரிக்காவில் தொழிலாளிகளின் சராசரி ஆயுட்காலம் வெறும் 30 வருடம் மட்டுமே என்கிற செய்தி 1886இல் மேதினம் அமெரிக்காவில் வெடித்ததன் பின்னணியாக உள்ளது. சாசன இயக்கத்திலிருந்து மேதினத்தை நோக்கி நகர்ந்த தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாறு சுருக்கமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 1862இல் இந்திய ரயில்வேத் தொழிலாளிகள் 8 மணி நேர வேலை கேட்டு வேலைநிறுத்தம் செய்தது முதல் வ.உ.சி நடத்திய தொழிற்சங்க இயக்கம் வரையிலான வரலாற்றின் இந்தியப் பக்கம் விரிகிறது. வேலை நிறுத்த உரிமை, சங்கம் வைக்கும் உரிமை அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் இந்த நாட்களில் மேதினத்தின் சாரத்தை உழைப்பாளி மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. அதற்கு உதவும் வகையில் இப்புத்தகம் வந்துள்ளது.

அதிரடித்தயாரிப்பு – ஏகாதிபத்திய ஜனநாயகம்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
அருந்ததிராய்
(32 பக்கம் ரூ.5)

ஐ.நா வைப் பயன்படுத்தி பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆயுதச் சோதனை மூலம் ஈராக்கை மண்டியிடச் செய்வதற்கு அதன் மக்களைப் பட்டினி போட்டு அரை மில்லியன் குழந்தைகளைங் சாகடித்துவிட்டு அந்நாட்டின் கட்டுமானங்களைச் சிதைத்து விட்டு அந்நாட்டின் பெரும்பகுதி ஆயுதங்கள் அழிக்கப்பட்டதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் ஆக்கிரமிப்பு ராணுவத்தை அந்நாட்டுக்குள் அனுப்பி அமெரிக்கா கோழைத்தனமான போரை நடத்தியது. அப்போரை முன் வைத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஜனநாயக கபடத்தைத் தோலுரித்து நியூயார்க் ஹார்லேமில் உள்ள ஆற்றோர சர்ச்சில் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆற்றிய முழு உரையின் தமிழாக்கமே இந்நூல். வரலாறு நெடுகிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஜனநாயகத்தின் பெயரால் நடத்தி வரும் படுகொலைகளைப் பட்டியலிடும் அருந்ததிராய் யுத்தத்தில் ஈடுபடுவதும் அதற்கான செலவுக்கான பணத்தைத் தருவதும் சாதாரண ஏழை அமெரிக்கர்களே என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஈராக்கின் பாலைவன வெப்பத்தில் வெந்து கொண்டிருக்கும் படைவீரர்கள் பணக்கார வீட்டுக் குழந்தைகளல்ல. ஆனால் இப்போரை ஏகாதிபத்தியம் இவ்வமெரிக்க மக்களின் பேராலேயே நடத்துகிறது. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராடிவருவதை பாராட்டும் அருந்ததிராய் உரையின் இறுதியில் அமெரிக்க மக்களை நோக்கியே பேசுகிறார். “உங்கள் ஜனாதிபதியின் கருத்தை நான் வெறுப்புடன் மறுக்கிறேன். உங்கள் நாடு எந்த வகையிலும் மகத்தானதல்ல. ஆனால் நீங்கள் மகத்தான மக்களாக முடியும். வரலாறு உங்களுக்கு அந்த வாய்ப்பைத் தருகிறது. காலத்தே துணிந்து செயல்படுங்கள்”

உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்
கே.வரதராஜன்
(32 பக்கம் ரூ.6)

உலகமயமாக்கல் கொள்கைகளை மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டு அமுல்படுத்தியதன் விளைவாக தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணில் 21 விவசாயிகள் பட்டினியால் செத்து மடிந்தார்கள். ஆந்திராவில் தற்கொலைச் சாவுகள்.

பிரதானமாக உலகமயமாக்கல் விவசாயத்துறையில் என்ன செய்கிறது? இடுபொருள் விலையிலோ விளைபொருள் விலையிலோ அரசு தலையிடாது. நீர்ப்பாசனம் உள்ளிட்ட முக்கிய விவசாயத் துறைகளில் அரசின் மூலதனம் படிப்படியாகக் குறைக்கப்படும். மின்சாரம், விதைகள் உரம், பூச்சிமருந்து ஆகிய எல்லாவற்றுக்கும் மானியம் ஒழிக்கப்படும் அல்லது பெருமளவு வெட்டப்படும். வெளிநாட்டுப் பொருட்களின் இறக்குமதிக்கு கதவுகள் அகலத் திறந்து விடப்படும். இக்கொள்கைகள் காரணமாக விவசாய விளை பொருட்களின் விலைகள் வீழ்ச்சி அடைந்தன. கரும்பு, தேயிலை, காட்டன் விவசாயிகள் வாழ்க்கை அதளபாதாளத்தில் விழுந்துள்ளது. நாட்டின் உணவு தானிய உற்பத்தி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக ரேஷன் அரிசிக்கும் ஆபத்து வந்தது. இத்தனைக்கும் மேலாக தண்ணீர் வியாபாரத்துக்கு இந்திய நாட்டைத் திறந்து விட்டதன் காரணமாக விவசாயத்துக்குத் தேவையான தண்னீர் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலைகளில் உடனடியாக மாற்றம் கொண்டுவந்தாக வேண்டும். அதற்கான விவசாயிகள் விவசாயத் தொழிலாளிகளின் போராட்டங்கள் எழுந்து வரவேண்டிய அவசியத்தை இந்நூல் அழுத்தமாக வலியுறுத்துகிறது.

வேலை நிறுத்த உரிமை மறுப்பு நீதியா?
உ.ரா.வரதராசன்
(32 பக்கம் ரூ.5)

13 லட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நடத்திய வீரஞ்செறிந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டி சி.ஐ.டி.யு.வின் சார்பாக தோழர். டி.கே.ரெங்கராஜன் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் எந்தத் துறையில் வேலை நிறுத்தமானாலும் சரி, அந்த ஆயுதம் நீதி இழைப்பதை விடவும், அதிகமான தீங்கையே இழைக்கிறது. அதனால் பாதிக்கப்படுவது சமுதாயமும் பொதுமக்களுமே என்றும் “இன்றைய நிலையில் காரணம் நியாயமானதாக இருந்தாலும் சரி நியாயமற்றதாக ஆனாலும் சரி வேலை நிறுத்தத்தை நியாயப்படுத்த முடியாது” என்று கூறினர். இவ்வாசகங்கள் நாடு முழுதும் உழைப்பாளி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இத்தீர்ப்பு வாசகங்கள் பற்றிய முழுமையான அலசலாக இந்நூல் வந்துள்ளது. தங்கள் குறைகளைக் களைவதற்கான வழிமுறையாக உழைக்கும் மக்களின் படைகளிலுள்ள முக்கியமான ஆயுதமே வேலை நிறுத்த உரிமைதான் என்பதை உலகில் பல ஜனநாயக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த வேலை நிறுத்த உரிமையும்கூட காலங்காலமாக பாட்டாளி வர்க்கம் நடத்திய போராட்டங்களின் மூலமாக வென்றெடுக்கப்பட்ட ஒன்றுதான். எந்த அரசின் பெருந்தன்மையாலோ நீதிபதிகளின் தீர்ப்பினாலோ கிடைத்ததல்ல. உலகமயம் தாராளமயத்தின் பின்னணியில் வேலை நிறுத்தங்களுக்கு எதிராக நீதிமன்றங்களின் அணுகுமுறை மாறியுள்ளதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. இத்தீர்ப்பின் பின்னாலுள்ள வர்க்க அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

மனசே டென்சன் ப்ளீஸ்
நளினி
(16 பக்கம் ரூ.5)

பொதுவாக மத்திய தர வர்க்கத்து அன்றாட வாழ்வில் எங்கும் டென்சன் டென்சன் என்பதே பேச்சாக இருக்கும். டென்சன்களுக்கான காரணங்களையும் அதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பேசுகிறது இப்புத்தகம். டென்சன்களை தர வாரியாக வகைப்படுத்தும் புத்தகம் தனிநபரே சரி செய்து விடக்கூடிய மன அழுத்தங்களை யோகா போன்ற பயிற்சிகள் மூலம் குறைக்க முடியும் என விளக்குகிறது. பொருளாதாரம், வேலையின்மை போன்ற சமூகப் பிரச்னைகளால் வரும் மன அழுத்தத்தை அப்பிரச்னைகளை முழுமையாகப் புரிந்து கொள்வதன் மூலமும் சமூக இயக்கங்களில் பங்கேற்பதன் மூலமும் குறைத்துவிட முடியும் என அறிவியல் பூர்வமான தீர்வுகளை முன்வைக்கிறது. நாம் கைக்கொள்ளத்தக்க பலவிதமான மனப் பயிற்சிகளையும் அறிமுகப்படுத்துகிறது. எளிய தமிழில் நம் அன்றாட வாழ்வின் உதாரணங்களோடு பல இடங்களில் பேச்சு வழக்கில் கருத்துக்களை எடுத்துச் சொல்லி விளங்க வைக்கும் புத்தகமாக வந்துள்ளது.

அரசியல் எனக்குப் பிடிக்கும்
ச.தமிழ்ச்செல்வன்
(48 பக்கம். ரூ.10)

அரசியல் என்றால் என்ன? அதை ஏன் பலரும் சாக்கடை என்று சொல்கிறார்கள்? அரசியலின் வரலாறு என்ன? அரசு என்பதன் பொருள் என்ன? இப்படியான எளிய கேள்விகளோடு துவங்கும் புத்தகம் அரசு என்னும் அடக்குமுறைக் கருவி மனித குல வரலாற்றில் தோன்றிய கதையிலிருந்து இடதுசாரி என்றால் என்ன? வலது சாரி என்றால் என்ன போன்ற கேள்விகளுக்கு விவாத பாணியில் விளக்கம் சொல்கிறது. விதவிதமான ஆட்சி முறைகள் பற்றிப் பேசி ஜனநாயகம் என்பதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவ அரசியலை சமகால கட்சி அரசியலோடு இணைத்து விளக்குகிறது. அரசியல் பற்றி சமீபத்தில் வந்துள்ள இந்த எளிய புத்தகத்தில் கலாச்சார அரசியல் பற்றியும் முதலாளித்துவத்தை ஆவேசமாக எதிர்க்கும் பாட்டாளி வர்க்கம் கருத்து ரீதியாக அதே முதலாளித்துவத்தின் கலாச்சார நிறுவனங்களிடமே மாட்டிக்கொண்டிருக்கும் யதார்த்தம் பற்றியும் அதற்கெதிராக பாட்டாளி வர்க்கம் நடத்த வேண்டிய கலாச்சார அரசியல் பற்றியும் பேசுகிறது.

கிராம்ஷியின் சிந்தனைப்புரட்சி
இ.எம்.எஸ் & பி.கோவிந்தப்பிள்ளை
தமிழாக்கம் : வி.கே.பாலகிருஷ்ணன்
(104 பக்கம். ரூ.40)

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக வாழ்ந்து பாசிச முசோலினிக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராடிய காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு இந்த மூளை செயல்படக்கூடாது என்கிற நீதிமன்றத் தீர்ப்போடு சிறையில் அடைக்கப்பட்ட தோழர் அந்தோனியோ கிராம்சியின் வாழ்க்கையை அவருடைய சிந்தனைகளை சுருக்கமாக எடுத்துரைக்கும் புத்தகம். சொல்லத் தரமற்ற சிறைக்கொடுமைகளை அனுபவித்தபடியே பாசிசம் பற்றியும் கலாச்சாரம் பற்றியும் மர்க்சிசம் பற்றியும் அவர் எழுதிய சிறைக்குறிப்புகள் அவரது மரணத்துக்குப் பிறகு கடத்தப்பட்டு சோவியத் நாட்டில் முதன் முதலாக அச்சிடப்பட்டது. 2848 பக்கங்கள் கொண்ட அச்சிறைக்குறிப்பு மர்க்சிசம் லெனினிசத்தை மேலும் வளர்த்துச் செழுமைப்படுத்தும் உயிர்ப்புள்ள வழிகாட்டும் ஆவணங்களாக இன்று உலகெங்கும் பாட்டாளி மக்களால் கொண்டாடப்படுகின்றன. சமூகத்தை சிவில் சமூகம் அரசியல் சமூகம் எனக் கட்டுடைத்த கிராம்சியின் முக்கிய சிந்தனைகளான கலாச்சார மேலாண்மை (Cultural hegemony), உயர் அறிவாளிகள் பாரம்பரிய அறிவாளிகள் ,கற்பித்தலின் தத்துவம் போன்றவை இந்நூலில் விளக்கபட்டுள்ளன. பாசிச சக்திகளைப் புரிந்து கொண்டு போராட வேண்டிய நிலையில் உள்ள களப்பணியாளர்கள் கிராம்சியை உள்வாங்காமல் ஒரு அடி கூட முன்னேற முடியாது