தலைக் கீழ் புரட்சி!


ஒரு கானலை அதாவது காட்டை விவசாயம் செய்யும்படியான வயல்களாக ஆக்க வேண்டுமானால் முதலில் அதிலுள்ள புதர்களையும், முட்களையும், செடி, கொடிகளையும் பிடுங்கி நெருப்பிட்டுக் கொளுத்தி ஆகவேண்டும். பிறகு மேடுகளை வெட்டிப் பள்ளத்தில் போட்டு நிரவ வேண்டும். கல்லுகளையும், பாறைகளையும் உடைத்து வெளியாக்க வேண்டும். இந்தக் காரியங்களெல்லாம் செய்த பிறகே அந்தப் பூமி எந்த விதமான வெள்ளாமை செய்யப் பயன்படும் என்று கருதி அதற்கேற்ற எருக்களிட்டு பயிர்களைச் செய்து பயன்பெறவேண்டும். அப்படிக்கில்லாமல் உள்ள நிலையிலேயே பயிர் செய்வதானது மனிதனது முயற்சியும், ஆற்றலும், விதைப்பண்டமும் வீணாகப் போவதுடன் பயனற்ற கொடியும், செடியும் மேலும் வளர்ந்து துஷ்ட மிருகங்களும், விஷஜந்துக்களும் தாராளமாய்க் குடியிருக்கத் தகுந்த புதர்களாகத் தான் ஏற்பட்டுவிடும்.

ஆகையால், நாம் இப்போது புதர்களிலுள்ள கொடி, செடி, முள், புல், பூண்டு ஆகியவற்றை அழித்து நெருப்பு வைத்துக் கொளுத்தும் வேலையில் இருக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். இந்த வேலையைச் செய்யும் முன் பயிர் செய்யும் வேலையில் நாம் ஒருக்காலுமும் புகக்கூடாது. மேடுபள்ளங்களைச் சமனாக்காமல் அதில் தண்ணீர் பாய்ச்சும் வேலையை நாம் தொடங்க மாட்டோம். ஏனெனில், நாம் பாய்ச்சும் தண்ணீரெல்லாம் ஏற்கனவே தண்ணீர் நிறைந்திருக்கும் பள்ளத்திற்கே போய்ச் சேர்த்துவிடும். மேட்டிற்கு எவ்வளவு தண்ணீர் பாச்சினாலும் அங்குக் கொஞ்சம் கூடத் தங்காது. ஆகவே, தைரியமான அழிவு வேலை அதாவது காட்டைத் திருத்தி மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமனாக்கும் சமத்துவ வேலையைக் கைக் கொள்ள வேண்டும். அதற்குப் பயப்படக் கூடாது.

இந்த வேலையில் நமக்குப் பெரிதும் கஷ்டமுண்டு என்பதையும் மனதில் வைக்க மறந்துவிடக் கூடாது.

புதர்களில் இருந்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வரும் ஜந்துக்களால் நமக்குப் பல ஆபத்துகள் ஏற்படலாம். அதற்கும் துணிந்து தைரியத்தோடுதான் அழிவு வேலை செய்ய வேண்டியிருக்கின்றது.

ஆகவே சகோதரர்களே! இப்போது நமது நாட்டில் ஆக்க வேலை செய்வது என்பது சாத்தியப்படாது என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

பாழும் மதத்தின் பேரால் உலகமே பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது.

குறிப்பாக, நமது நாடு மதத்தின் பேரால் பிரிந்தது மாத்திரமல்லாமல், ஜாதிகளின் பேரால் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது.

இவை மாத்திரமல்லாமல் பணக்காரன் – ஏழை – படித்தவன் – பாமரன் என்கின்ற பிரிவுகளும் நிரந்தரமாய் இருக்கும்படி ஏற்பாடுகள் ஆகிக் கொண்டும் வருகின்றன. இந்தப்படி நிரந்தரமாயிருக்கும் படியாக ஏற்பாடு செய்து கொண்ட மேல் ஜாதி, கீழ்ஜாதி முதலாகிய பிரிவுகளை அழிக்க ஆரம்பித்தால், இதை ஆதரவாய்க் கொண்டு மற்றொரு கெடுதி நமது நாட்டில் நிரந்தரமாய் இருக்கும்படியாக அதாவது பணக்காரன் – ஏழை என்கின்ற பிரிவு நிரந்தரமாய் இருக்கும்படி ஒரு புது முயற்சி நமது நாட்டில் இப்போது அதிகமாகச் செய்யப்பட்டு வருகின்றது. முதலாளி தொழிலாளித் தன்மையும் நிரந்தரமாய் இருக்க ஏற்பாடாகி வருகின்றது. இவை எல்லாம் அரசியல் கிளர்ச்சியாலும், சீர்திருத்த முயற்சியாலுமே தான் செய்யப்படுகின்றன.

அதாவது, இவ்வேற்பாடுகளைத்தான் இன்றைய முன்னேற்றமென்றும், சீர்திருத்தமென்றும், சுதந்திரமென்றும் சொல்லப்பட்டு வருகின்றன. நமது பாமர ஜனங்கள் இதன் இரகசியத்தைத் தெரியாமல் அதில் விழுந்து விளக்கில் விட்டில் பூச்சிகள் விழுவது போல விழுந்து மடிந்து வருகின்றார்கள். இதற்காகவே தான் கடவுளும், மதமும், ஜாதியும், அரசியலும் ஏற்படுத்தப்பட்டதென்றும் அந்தப்படியே பயன்படுத்தப்பட்டு வருகிறதென்றும் நான் உறுதியாய்க் கூறுகிறேன். இவற்றை எல்லாம் அடியோடு ஒழிப்பது தான் நாம் மனித சமூகத்திற்குச் செய்ய வேண்டிய உண்மையான தொண்டாகும். இதை விட்டு விட்டுச் செய்யும்படியான வேறு எந்தத் தொண்டும் மனித சமூகத்திற்குக் கேடு விளைவிப்பதாகும்.

ஆகவே, நாட்டிற்கு நன்மை செய்வதாய்க் கூறிக் கொண்டு மக்களை மீளாத அடிமையிலும், கொடுமையிலும் ஆழ்த்தப்போகும் பாதகமான வேலைகளை எல்லாம் கூட நாம் அழிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். நாட்டுச் செல்வங்களை நாட்டிலுள்ள மக்களில் சிலர் தங்கள் தேவைகளுக்கு மேலாகவும், தகுதிக்கு மேலாகவும் சேர்த்து வைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் அக்கிரமமான வழியில் செலவு செய்து கொண்டு மக்களை அடிமைப்படுத்தி ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற மக்களே தான் இன்று “இந்த நாடு தரித்திர நிலையில் இருக்கின்றது” விடுதலை பெற வேண்டும் என்று பாசாங்கு செய்கின்றார்கள். கஷ்டப்படும் மக்களும், ஏழை மக்களும் – தங்கள் மீது திரும்பாமல் இருக்கட்டும் என்று அன்னிய நாட்டுக்காரர்களை நமக்குக் காட்டி நம்மை அந்தப் பக்கம் திருப்பி விடுகின்றார்கள்.

சாதாரணமாக நம் குழந்தைகளிடம் இருந்து ஏதாவது சாமான்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்மென்றால், எப்படி அதற்கு வேறு ஒரு வேடிக்கையைப் பார்க்கச் சொல்லி ஆகாயத்தைப் பார், அந்தப் பக்கம் பார் என்பதாகப் பராக்குக் காட்டி, அது அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கும் போது நாம் அந்தச் சாமானை எடுத்துக் கொள்ளுகின்றாமோ அது போலவே, பாமர மக்களைச் சுயராஜ்யம் பார் – பூணர சுயேச்சையைப் பார் – மோட்சம் பார் – கடவுளைப் பார் – என்று பராக்குக் காட்டி அவர்கள் வேலையின் பயனையும், அவர்களது செல்வத்தின் பங்குகளையும் சிலரே கொள்ளை அடித்துக் கொள்ளுகின்றார்கள். இந்தக் கூட்டத்தாரின் தந்திரமே தான் இந்த நாட்டில் தரித்திரம் என்பதற்கும் அடிமைத்தனம் என்பதற்கும், அறிவும், ஆராய்ச்சியும் அற்ற தனம் என்பதற்கும் ஆதாரமாய் இருக்கின்றன.

இந்த நாட்டில் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகத்தை மதமும், கடவுளும் என்கின்ற பேரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கின்றார்கள் என்பதை, நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திரமான நாடு என்று அழுகின்றார்கள். இந்த நாட்டில் உள்ள சந்நியாசிகள் துறவிகள் மதச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துக்களும், வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா? அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும், வரும்படியும் வேண்டி இருக்கின்றதென்று எந்தப் பொருளாதாரவாதியாவது கவனிக்கின்றானா?

ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத்தும், வருஷத்திய இலட்சக்கணக்கான ரூபாய்கள் வரும்படியும் உடையவனாக இருந்தால் அந்த நாடு ஏழைநாடு – தரித்திரநாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றேன். ஒரு முழம், முக்கால் முழம் உயரமுள்ள குழவிக்கல்லுக்கு நமது நாட்டில் எத்தனை கோடி ரூபாய்கள் சொத்தும் எத்தனை இலட்ச ரூபாய் வரும்படியும் இருக்கின்றன என்று பாருங்கள். இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான – ஆயிரக்கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத்தோடு யானை, ஒட்டகம், குதிரை, பல்லக்கு, தேர், ரதம் முதலிய வாகனங்களோடு – பல பெண்டாட்டிகளோடு – பல கலியாணங்களோடு வாழ்கின்றன என்பதை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா?

இதை எந்தப் பொருளாதார நிபுணனாவது கவனித்து நமது தரித்திரமுள்ள நாடு என்று சொல்லுகின்றானா? மற்றும் பிரபுக்கள் – செல்வவான்கள் – லட்சுமி புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டு எத்தனை ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமிகள் உடையவர்களும், எத்தனை ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இன்கம்டாக்ஸ் வரி கொடுக்கக்கூடிய இலாபம் அனுபவித்துக் கொண்டு இலட்ச இலட்சமாய்க் கோடி கோடியாய் பொருள் சேர்த்து, தாசி, வேசி, ராஜபோகம் அனுபவித்துக் கொண்டு, நிரந்திர ராஜாவாகவும், நிரந்தர ஜமீனாகவும், நிரந்தர பிரபுவாகவும், நிரந்தர பாளையக்காரராகவும் இருக்க முயற்சி செய்து கொண்டு இருக்கும் மக்கள் பல நூற்றுக்கணக்கான – ஆயிரக்கணக்கான இருந்து கொண்டு இருக்கும் இந்த நாட்டைத் தரித்திரமுள்ள நாடு என்று யாராலாவது சொல்ல முடியுமா? மற்றும் நாள் ஒன்றுக்கு 100, 200, 500, 1000- ரூபாய்கள் வீதம் சம்பாதிக்கும் வக்கீல்களும், டாக்டர்களும் ஏராளமாய் இருந்து கொண்டு ஒவ்வொருவரும் அய்ந்தாயிரம், இலட்சம், அய்ந்து இலட்சம் பெறும்படியான பங்களாக்களில் வாழ்ந்து கொண்டு நிலத்தில் கால்படாமல் – நகத்தில் அழுக்குப்படாமல் – சரீரத்தில் வேர்வை இல்லாமல் பிழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் பல ஆயிரக்கணக்கான – இலட்சக்கணக்கான வாழும் இந்த நாட்டைத் தரித்திரமுள்ள நாடு என்று யாராவது சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்?

மற்றும் இந்தக் கூட்டத்தினர்கள் தானே இன்றையத்தினம் இந்த நாடு தரித்திர நாடு, ஏழை நாடு, அடிமை நாடு – சுதந்திர நாடு என்று ஆகவேண்டும் சுயராஜ்ஜிய நாடு ஆகவேண்டும் என்றும் பிரமாதமாய்க் கூப்பாடு போடுகின்றார்கள். ஒவ்வொரு காலத்திலும் வருகின்ற சீர்திருத்தங்களில் எல்லாம் இந்த மாதிரி ஜனங்கள் தானே நமது பிரதிநிதிகளாய் இருந்து நமக்காக என்று ஆட்சி புரிந்து வருகின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்குத் தானே இன்னமும் அதிகாரமும், பெருமையும், கீர்த்தியும், பணமும், வரவும் ஏற்படவும், நாம் மதத்தையும், கடவுளையும், ஜாதியையும் காப்பாற்ற முயற்சிப்பதோடு, சுயராஜ்ஜியமும் பெற வேண்டுமென்று பெரிய பாடுகளைப் படுகின்றோம்.

நமது நிலைக்குக் காரணம் என்ன? நமது தரித்திரத்திற்கு யார் காரணம்? நமது செல்வமும் பாடும் என்ன ஆகின்றன? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள்தனமே நமது இன்றைய இழிவு நிலைக்குக் காரணமாயிருக்கின்றது. மதத்தையாவது, ஜாதியையாவது, கடவுளையாவது உண்மையென்று நம்பி அவற்றைக் காப்பாற்ற முயற்சிக்கும் எவனாலும் மக்களுக்குச் சமத்துவமும், அறிவும், தொழிலும், செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது என்பது எனது உறுதி.

ஆனால், இவற்றை அழிக்க மக்கள் ஒருக்காலமும் சம்மதிக்க மாட்டார்கள். இவற்றைக் காப்பாற்ற அனேக விதமான ஸ்தல ஸ்தாபனங்கள் ஆதியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு வந்து குழந்தைப் பருவ முதலே நமக்குள் புகுத்தப்பட்டு வந்திருப்பதால், இது சுலப சாத்தியமான காரியமாக இருக்க முடியவில்லை. இவற்றில் எங்குக் கை வைத்தாலும் நமது எதிரிகள் நம்மீது நாஸ்திகன் என்னும் ஆயுதத்தை வீசி எறிந்து நம்மைக் கொல்லப்பார்த்து விடுவார்கள். நம் மக்களும் பெரும்பாலும், மூடர்களாயிருப்பதால் அந்த நாஸ்திகம் என்னும் ஆயுதத்தைக் கொண்டே நமது எதிரிகளுக்கு உதவியாகவும், நமக்கு எதிராகவும் நின்று நம் முயற்சிகளுக்கு இடையூறு செய்வார்கள்.

ஆகையால் நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறுமாறுதல் செய்ய வேண்டுமானாலும் நம் எதிரிகளின் ஆயுதமாகிய நாத்திகத்திற்குப் பயப்படாமல், “ஆமாம் நான் நாஸ்திகன் தான்” என்று சொல்லிக் கொண்டு அந்த நாஸ்திகத்தையே நாட்டில் எங்கும் மூலை முடுக்குகளில் கூடப் பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போதுதான் நமது எண்ணம் ஈடேற முடியும். ஆதலால், நாம் இனிச் செய்ய வேண்டியது முக்கியமாய் நாஸ்திகப் பிரசாரமேயாகும். அதாவது, “எனக்கு இந்த மதம் வேண்டாம்; இந்தச் சாதி வேண்டாம்; இந்தச் சாஸ்திரம் வேண்டாம்; இவை இல்லாமல் ஜீவிக்க என்னால் முடியும். எனக்கு வேண்டியதெல்லாம் சமத்துவமும் மனிதத் தன்மையுமேயாகும் என்று தைரியமாய்ச் சொல்ல வேண்டும். அதுவும் இந்த நாட்டில் – இந்த உலகத்திலேயே வேண்டுமே ஒழிய, மேல் உலக சங்கதியை இதில் கலக்க வேண்டாம் என்று தைரியமாகப் பிரசாரம் செய்ய வேண்டும். இன்றைய வாலிபர்களுக்கு இதுதான் முக்கிய வேலை என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும்.

பெரியார்

[07.09.1930- தேதி அன்று கேரளா சீர்திருத்த மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவில் இருந்து சில…. – ´குடிஅரசு´ 14.09.1930]

மதங்கள் ஆபாசம் நிறைந்தவைகள்!


இன்று நான் திராவிடர் கழகத்தைப் பற்றி எடுத்துச் சொல்வதை நீங்கள் தயவு செய்து கவனமாகக் கேட்க வேண்டும். ஆனால் கேட்டவற்றை உடனே நம்ப வேண்டுமென்று சொல்லவில்லை. கேட்பவற்றை மனதிலே இருத்தி ஆராய வேண்டும். நான் சொன்னவைகளுக்கு யாராவது மாறுபாடாகச் சொன்னாலும் இரண்டையும் வைத்து நாட்டின் நிலைமையை நன்றாக ஆராய்ந்து பின் எது சரி என்று தோன்றுகிறதோ அந்தப்படி நடக்க வேண்டும் என்று நான் உங்களை முதன்முதலாகக் கேட்டுக் கொள்கிறேன்.

மனிதன் மற்ற ஜீவ பிராணிகளை விட கொஞ்சம் அதிக அறிவு உள்ளவன். ஆகையினால் அந்தப் பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டுகிறேன்.

தோழர்களே! இந்நாட்டுக்குரிய மக்கள் நாம் நாம் திராவிடர் நாட்டு மக்கள் என்று கூறப்பட்டு வருகிறோம். யாராலே, எப்பொழுது அந்தப் பெயர் வந்தது என்பது பற்றி இப்பொழுது விவரிக்க சமயம் இல்லை. அது தேவையும் இல்லை. ஆகவே நம் மக்களுக்குத் திராவிடர் என்பதைத் தவிர வேறு பெயர் இன்றைய தினம் சொல்வதற்கு இல்லை. ஏதாவது சொல்ல வேண்டுமானால் சூத்திரர், தாசர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்தப் பெயர் மிகவும் இழிவான கருத்துடையதாகும். இந்த நாட்டிலே மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 3-பேராகிய பார்ப்பனரைத் தவிர்த்து மற்ற எல்லா பேர்களும் சூத்திரர்கள்தான். அந்தச் சூத்திரர்களைத்தான் நான் இன்று திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறது.

பார்ப்பனர் தன்மை என்பது ஆரியம் எனப்படுவது. நம்மை திராவிடர் என்று சொல்லாமல் வேறு பெயரால் அழைத்துக் கொள்ளலாம் என்றால், மேலே சொல்லியபடி சூத்திரர்கள் என்று சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை. தமிழர்கள் என்று சொன்னால் ஆகாதா என்றால், இந்த சூத்திரத்தன்மையை அது குறிப்பிடவில்லை. ஒரு காலத்திலே தமிழர்கள் என்று குறித்து இருக்கலாம். ஆனால் இப்பொழுது அது மொழியின் பேரால் போய்விட்டது. ஆகையால் தமிழர் என்று இப்பொழுது சொன்னால் அந்த மொழியைப் பேசுகிறவர்களை மாத்திரம் குறிக்கிறது. அதில் பார்ப்பானும் சேர்ந்து கொள்ளுகிறான். ஆகையால்தான் சூத்திரன் என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் திராவிடர்கள் என்று குறிப்பிடுவதிலே, யாரை குறிப்பிடுகிற தென்றால், பார்ப்பனரைத் தவிர்த்த மற்ற மக்களை, சமுதாயத் துறையில் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும், நீசர்கள் என்றும் சொல்லப்படுகிறவர்களைத்தான்.

ஆகையால், இன்று நமக்குத் திராவிடர் சமுதாயத் துறையிலே உள்ள இழிவு நீக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கிய கொள்கை. திராவிடர்கள் இன்றைய தினம் என்ன நிலைமையில் இருக்கிறார்கள்? 100-க்கு 98-பேர்கள் உள்ள சமுதாயம் நீச ஜாதி. ஆனால், 100-க்கு மூன்று பேர் இருக்கிற சமுதாயம் பார்ப்பன ஜாதி. அதாவது மேல் ஜாதி. இந்த நிலை மாறவேண்டும்.

தோழர்களே! இந்தச் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம் தான், இந்த நாட்டு பழங்குடி மக்கள். பார்ப்பனர் என்று சொல்லப்படுபவர்கள் இந்த நாட்டுக்கு, வெளி நாடுகளிலிருந்து பிழைப்புக்காக குடியேறினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இது நான் சொல்லுவதில்லை. ஆதாரத்தின்படி, ஆராய்ச்சியின்படி, பார்ப்பனரால் எழுதி வைத்திருக்கிற ஆதாரத்தின்படி ஆரியன் என்றும், இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவன் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் ஆரிய முறைப்படி நடக்கிறார்கள். இந்த பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குச் சுமார் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே பிழைக்க வந்தவர்கள். வந்ததும் இந்த நாட்டு வாழ்க்கைக்குச் சம்பந்தப்படாமல் இந்த நாட்டு வளப்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

நாம் உழைக்கிறோம், உழுகிறோம்; நம்மால்தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யாவிட்டால் இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம். நம்மால்தான் அத்தனை பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம் தான் வீடு கட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால் தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதி எல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலியன வசதியளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவு படுத்தப்பட்டு இருக்கிறோம்.

பார்ப்பனன் எங்காவது உழுகிறானா? எந்தப் பார்ப்பாத்தியாவது வீடு கூட்டுகிறாளா? கல்லுடைக்கிறார்களா? ஏன்? இவை எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவை எல்லாம் மாறி நாம் முன்னேறவேண்டுமென்றுதான் கேட்கிறோம்.

மற்றவர்களுக்கெல்லாம் உயர்ந்த வசதியாக, பார்ப்பானாக இருப்பதால்தான் 100-க்கு 100-பேர் படித்திருக்கிறார்கள். ஆனால் நாம் சூத்திரர்களாக ஆக்கப்பட்டிருப்பதால் தான் தற்குறிகளாக சகல தொழில்களும் செய்யும்படியாக ஆகிவிட்டோம். அவர்கள் இன்றைய தினம் மோட்சத்திற்கு டிக்கட் கொடுக்கிறார்கள். கடவுளுக்கு அடுத்தபடியில் இருக்கிறார்கள். நம்முடைய மதத்தின் தத்துவத்தின்படி பார்ப்பான்தான் படிக்க வேண்டும்; சூத்திரன் படிக்கக்கூடாது; பார்ப்பனனுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று இருக்கிறது. மதத்தின் பேரால் கடவுள் சொன்னார் என்கிற பேரால் இருந்து வருகிறது. மற்றவர்கள் எல்லாம் தற்குறிகளாக இருந்து வருகிறார்கள்.

இவற்றைப் பற்றி நாம் கவனிப்பது இல்லை. அதாவது கவனிக்கப் போனால், மதம் என்ன சொல்லுகிறது? கடவுளுக்கு இது விரோதம். சாஸ்திரம் என்ன சொல்லுகிறது? என்று பார்க்கிறோம். ஆனால், இதை மக்களுக்கு எடுத்துக் சொல்லும் பொறுப்பில் இதுவரை யாரும் புறப்பட்டதில்லை, எங்களைத் தவிர. நாங்கள் தான் தோன்றி இருக்கிறோம். நாங்கள் என்ன பெரிய வீரர்களா? இல்லை மகா சூரர்களா? நமக்கு முன்னால் இருந்த 63-நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகாத்மாக்கள் எல்லோரையும் விட நாங்கள் என்ன உசத்தியா? இப்பொழுது தான், சட்டசபையிலே மெம்பராக தலைவராக இருக்கும் சிவவண்முகம் பிள்ளையால் கேட்க முடியுமா? சர்.சண்முகம் செட்டியார், சர் ராமசாமி முதலியார், ராஜா சர் முத்தையா செட்டியார், பெரிய பெரிய அரசாங்கப் புலவர்கள் இருக்கிறார்களே, இவர்களுக்காவது வாயில் வருமா? முடியவே முடியாது! காரணம்? இவர்கள் எல்லாம் பார்ப்பானுக்கும் அவனால் ஆக்கப்பட்ட மதம், சாஸ்திரம், கடவுள் ஆகியவற்றுக்கும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்றைய தினம் நாங்கள் அவற்றை லட்சியப்படுத்துவது இல்லை. ஏன்? என்றால் எங்களுக்கு இதைப் பற்றிய கவலையோ பயமோ கிடையாது. இந்த காரியத்திற்கு எங்களைத் தவிர, இன்றும் வெகுநாட்கள் வரை யாரும் தோன்றமாட்டான் என்பது உறுதி.

சுதந்திர சர்க்கார், “தீண்டாமையை ஒழித்தோம்”, அப்படி இப்படி என்று எல்லாம் ஒப்பாரி வைக்கிற காங்கிரஸ்காரன் வாயில் கூட ஜாதியை ஒழித்தோம், சாஸ்திரங்கள், கடவுள்கள் எல்லாம் ஒதுக்கிவிட்டோம் என்று வந்ததே கிடையாது.

ஆகையால் இந்த அருமையான காரியத்தைத் திராவிடர் கழகம்தான் செய்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். எங்களுக்கு இந்த நாட்டுக் கடவுள்களைப் பற்றி கவலை இல்லை. கடவுள்களை எல்லாம் குழவிக் கற்கள், மண்ணாங்கட்டிகள், மாடு, பாம்பு, கழுகு என்றும், சாஸ்திரங்களை எல்லாம் குப்பை கூளங்கள் என்றும், ஆபாசங்கள் நிரம்பியது என்றும், மதத்தை முட்டாள்தனம் என்றும், அடிமைக்கட்டுப்பாடானது என்றும் நினைக்கிறோம். ஜாதி ஒழிய வேண்டுமென்றுதான் அர்த்தம், சாஸ்திரப் புராணங்களைக் கிழித்துக் குப்பையில் போட வேண்டியதுதான். நெருப்பு வைத்து கொளுத்த வேண்டியதுதான் என்று அருத்தம். ஏன் ஜாதி கூடாது என்றால் ஜாதியைக் கூறக்கூடிய ஆதாரங்களும் ஜாதி உற்பத்தி செய்த கடவுளும் மதமும் கூடாது என்றுதான் அர்த்தம்.

இவற்றைச் சொல்ல இன்று யார் சம்மதிப்பார்கள்? இவர்களிடம் போய் சிலப்பதிகாரத்தில் ஜாதி இருக்கிறது; ராமாயணத்தில் ஜாதி இருக்கிறது என்று சொன்னால் அப்படியானால் நமக்கும் இருக்கட்டும் ஜாதி என்பார்களே தவிர அவை தவறு என்று சொல்ல எங்களை விட்டால் வேறு ஆள் இல்லை. எங்களைத் தவிர வேறு யாருக்கும் தைரியமும் வராது. வருமா என்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

தோழர்களே! இன்று நம் பெண்களைத் திருத்தினாலும் திருத்தலாம். ஆனால் படித்த அறிவாளிகளை அய்க்கோர்ட் ஜட்ஜீகளை, மாபெரும் டாக்டர், புலவர்களை, பண்டார சன்னதிகளைத் திருத்துவது கடினம். இன்று வரையில் மேற்கண்டவர்கள் உள்பட நாம் எல்லாம் பார்ப்பனர் வைப்பாட்டி மகன் அடிமை என்று தான் இருக்கிறது. ஆகவேதான் இவை எல்லாம் ஒழிய வேண்டும் என்று நாங்கள் பாடுபடுகிறோம். அவர்களுக்கு ஏனோ மான ஈனமில்லை.

ஆகவே தோழர்களே! இவற்றை எல்லாம் சொல்லி நாங்கள் கடவுள் இல்லை என்ற சொல்ல வந்ததாக நீங்கள் நினைக்கக் கூடாது. கடவுள் உண்டா, இல்லையா என்பது உங்களிடம் பேசுகிற பேச்சல்ல. அது அறிவுப் பேச்சு. ஆனால் உலகத்திலே 250-கோடி மக்களில் 20-கோடி மக்களாகிய நமக்குத்தானே பலகோடி கடவுள்களும், சாஸ்திரமும், மதமும், ஜாதியும் இருக்கின்றன. மீதி உள்ளவர்கள் எல்லோருக்கும் ஒரே கடவுள் ஒரே மதம் என்ற முறையில் மனிதர்களாகத்தானே வாழுகிறார்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இவர்களுக்குள்ளே ஜாதி வேறுபாடு உண்டா? இவர்களுக்கு மதம் இல்லையா? சாஸ்திரம் இல்லையா? வேதம் இல்லையா? ஆனால் இவை ஏதும் ஜாதியைக் குறிப்பிடுபவையல்ல. இதைப் போல நாமும் ஜாதியற்று, மதம் அற்று, இதைக் காட்டுகிற சாஸ்திரம் அற்று வாழவேண்டுமென்று சொன்னால் எல்லோரும் நாசக்காரர்களாய் மதத் துரோகிகளாய் மதிக்கப்படுகிறோம்.

இன்று உண்மையிலேயே இவ்வளவு விஞ்ஞான அறிவு ஏற்பட்ட பிறகும் நாம் முட்டாள்களாக பழைய கருத்துக்களையே கட்டி அழுகிறோம். இன்று ஆகாய கப்பல்களும், கம்பியில்லா தந்தியும், ரேடியோவும் வந்து நம்மை அதிசயப்படுத்துகிற சமயத்தில், நாம் தேர் திருவிழாவும் கும்பாபிஷேகமும் செய்கிறோம். 20-மணி நேரத்தில் அமெரிக்கா போகிறான். ஆனால், நாம் கட்டை வண்டி கட்டிக் கொண்டு பிரயாணம் செய்கிறோம்.

ஆகையால் நாம் எடுத்துக் கொள்கிற முயற்சியின் பயனாக, சமுதாயத் துறையில் நாம் செய்கிற முயற்சியின் விளைவாக சுமார் அய்ந்து வருடத்திற்குள் பார்ப்பானோ, பறையனோ, சூத்திரனோ, பஞ்சமனோ, இருக்கக்கூடாது. இந்த மாதிரியான உணர்ச்சி வந்தால்தான் நமக்கு நன்மை கிடைக்கும். மற்றபடி சுதந்திரமோ, சுயராஜ்யமோ வந்தால் நம் அறிவு வளர்ந்து நாம் முன்னுக்கு வரமுடியாது. ஆகவே, எல்லோரும் இதற்காகப் பாடுபட வேண்டும் என்று சொல்லுகிறேன்.

இன்று நமக்கு இவற்றின் பேரால் அறிவு மட்டும் கெட்டுப் போவதில்லை. ஏராளமான பணமும் பாழ் செலவு செய்யப்படுகிறது. எவ்வளவு பணம் இந்த கடவுள்களால் வரும்படி வருகிறதெனப் பாருங்கள். திருப்பதி கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு 40-லட்சம் ரூபாய் வரும்படி இதையெல்லாம் அனுபவிப்பவர்கள் யார்? மதுரை கோவிலுக்கு 7, 5-லட்ச ரூபாய் வரும்படி; இதையெல்லாம் யார் உண்டு கொழுக்கிறார்கள்? சிறீங்கத்துக்கு 10-லட்சம் ரூபாய் வரும்படி. இதையெல்லாம் யார் மோசடி செய்கிறார்கள்? இவை மக்களுடைய முன்னேற்றத்திற்கு உபயோகப்படுத்தப்படுகிறதா? பின் எங்கே போகிறது? பாழும் மதில்களைக் கட்டுவதற்குச் செலவு செய்யப்படுகிறது. அர்ச்சகர்கள் தொந்தி நிரம்புகிறது. இந்தப் பாழாய்ப் போகும் பணத்தில் ஒரு பகுதியை மக்கள் முன்னேற்றத்திற்காக விஞ்ஞான ஸ்தாபனங்கள் ஏற்படுத்த, அறிவு ஊட்டும் அலுவலகங்களைச் செய்யும்படி செய்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும்?

ஆகையால் இனி கடவுள்கள் என்ற பெயரால் ஒரு காசுகூட கொடுக்கக்கூடாது. பத்து சதுர அடி நிலம் கூட கொடுக்கக் கூடாது. நாம் உண்டாக்கின சாமி, நம்மால் கட்டப்பட்ட கோவில், ஆனால் நாம் அதைத் தொடக்கூடாது. நாம் தொட்டால் சாமி செத்துப் போகும். கும்பாபிஷேகத்துக்கு நாம் செலவு செய்கிறோம். ஆனால் பார்ப்பான் சாமியைத் தொடுவது, சாப்பாடு போடுவது, சகலவற்றிலும் அவனுக்குத் தான் அதிகாரம்.

ஆகையால் இந்த மாதிரியான கண்மூடித்தனமான உணர்ச்சிகளை விட்டுவிட்டு அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும். அப்படி நடந்தால் இந்த ஆயிரம் வருடக் கணக்காக நமக்கும் நம் தாய்மார்களுக்கும் இருந்து வருகிற சூத்திரப் பட்டம் பறந்துபோகும்.

இதற்காகத்தான் நாங்கள் சமுதாயத் துறையில் சமத்துவம் வேண்டுமென்று கேட்கிறோம். மக்கள் பிறவியிலே உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது. எனவே தோழர்களே! சமுதாயத்துறையில் எங்களுடைய திட்டத்தை எடுத்துச் சொன்னோம். இது சரி என ஒப்புக் கொண்டால் நீங்கள் அதன்படி நடக்க வேண்டுமென்று சொல்கிறேன்.

 
– 26.07.1951-இல் ஈரோடு பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. (´விடுதலை´, 30.07.1951)

மதமும், முதலாளித்தனமும் ஒழிய வேண்டும்!


சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் சாஸ்திரங்களையும் சடங்குகளையும் ஒருவாறு கண்டித்ததோடு கூட அரசியலில் பார்ப்பனர்களைப் பலமாக எதிர்த்தும் போராடியது என்பது யாவரும் அறிந்ததாகும். இக்காரணத்தால் பார்ப்பனர்களிடம் உள்ள உத்தியோகங்களைத் தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்னும் நோக்கமுடைய பார்ப்பனரல்லாதார்கள் அனைவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பலமாக ஆதரித்து வந்தனர். பிறகு சுயமரியாதை இயக்கம் உண்மையான உருவத்தைக் காட்ட ஆரம்பித்தது. அதாவது மதத்தையும், சடங்குகளையும், கடவுளையும் கூட அடியோடு அழிக்க வேண்டுமென்னும் பிரசாரத்தில் இறங்கியது. இதனால் முதலில் ஆதரித்த சிலர் சுயமரியாதை இயக்கத்தை விட்டு விலகிக் கொள்ளாமலும், அதில் கலந்து கொள்ளாமலும் நடுத் தெருவில் நின்றனர். இதன் பின் மாதங்களாக, ஈரோடு வேலைத்திட்டத் தீர்மானங்களை மேற்கொண்டு, சமதர்மப் பிரசாரம் செய்து வந்தது. இதைக் கண்டும் அநேகர் பயந்து எங்கே சமதர்மப் பிரசாரத்தினால் தங்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்றனர்.

சிலர் சுயமரியாதை இயக்கம் முன்பிருந்தது போலவே அரசியலில் ஈடுபடாமல் பகுத்தறிவுப் பிரசாரம் மாத்திரம் செய்து கொண்டிருக்க வேண்டுமென அபிப்பிராயப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சிலர், ஈரோட்டுத் தீர்மானங்களை ஒப்புக் கொண்டு, அரசியலிலும் தலையிட்டு சமதர்மப் பிரசாரத்திலும் ஈடுபட வேண்டும் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் பார்ப்பனர்களை மாத்திரம் வைதுகொண்டு, பார்ப்பனரல்லாதார்க்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத்தால் போதுமென நினைக்கின்றனர். இந்த நிலையில் சுயமரியாதை இயக்கம் எந்த விதமாக வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய நமது முடிவை வெளியிடுகிறோம்.

முதலில் சுயமரியாதைச் சமதர்ம இயக்கமானது, ஒரு வகுப்பை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு மாகாணத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு தேசத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஆனால் ஓர் அகில உலக இயக்கமாகும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இககொள்கையை மனத்தில் வைத்துக்கொண்டே அதன் கொள்கைகளும், சட்ட திட்டங்களும், வேலை முறையும் அமைக்கப்பட வேண்டும்.

வகுப்பு பேதங்கள் ஒழிந்து, எல்லாம் ஒன்றாக வேண்டும் என்னும் எண்ணம் எல்லா மக்கள் மனதிலும் வேரூன்றி வருகிற இக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மாத்திரம் ஆபாச முறையில் கண்டிப்பது விரும்பத்தக்கதல்ல என்பதே நமது தாழ்மையான அபிப்பிராயமாகும். பார்ப்பனருக்கும் நமக்கும் எக்காலத்திலும் பகையில்லை. பார்ப்பனீயத்திற்கும், நமக்குமே போராட்டம், பார்ப்பனியத்தை விடாப் பிடியாகப்பிடித்திருக்கும் பார்ப்பனரல்லாதாரே அதிகம். பார்ப்பனீயம் எங்கெங்கே இருக்கின்றதோ அங்கெல்லாம் நமது போராட்டம் சென்றுதான் தீர வேண்டும். வகுப்புத் துவேஷம் என்பது ஒரு வகுப்பினர் அடிக்கும் கொள்ளைத் தொழிலை இன்னொரு வகுப்பினர் கைப்பற்றிச் செய்யும் முயற்சியேயாகும். ஆதலால் நமக்கும், அதற்கும் சம்பந்தமே இல்லை.

சுயமரியாதை இயக்கம் இதுவரையிலும் செய்து வந்த மத ஒழிப்பு வேலையைச் சிறிதும் தளரவிட முடியாது. நமது கொள்கைகளுக்கெல்லாம் அடிப்படை இதுவேயாகும். இப்பொழுது மதத்திற்கு நெருக்கடி நேர்ந்திருக்கும் விசயத்தை மதவாதிகளும், முதலாளி வர்க்கத்தினரும் உணர்ந்து விழித்திருக்கின்றனர். இருவரும் கூடி மீண்டும் பாமர மக்களின் மனதில் மதவுணர்ச்சியை (அடிமை மூடத்தனத்தை)ப் புகுத்த பலமான முயற்சிகளைச் செய்து வருகின்றனர். தேசிய இயக்கங்களும் (முதலாளி இயக்கங்கள்) தேசியவாதிகளும் பலமான மதப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்கு காந்தி அவர்களின் “ஹரிஜன” இயக்கமும், இந்து மகாசபைப் பிரசாரமும் போதிய சான்றாகும். ஆகையால், நாம் முன்னிலும் அதிதீவிரமாக மதமறுப்புப் பிரசாரத்தை விடாமல் செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.

சமதர்ம திட்டத்தை மேற்கொண்டு அரசியலில் தலையிட வேண்டுவது அவசியம் என்பது ஆலோசிக்கத்தக்கதாகும். அரசாங்கத்தின் துணையில்லாமல், சட்டங்களின் ஆதரவில்லாமல், தேச மக்களிடம் உள்ள ஊழல்களை அடியோடு போக்கி விடவோ புதிய காரியங்களைச் செய்வதில் தேச மக்களை ஈடுபடுத்தி விடவோ எக்காலத்திலும் இயலாது. ஆதலால் சீர்திருத்தவாதிகளுக்குத் தங்கள் சீர்திருத்தக் கொள்கைகள் செயலில் வேண்டுமானால் அரசாங்கத்தின் துணையும், சட்டத்தின் துணையும் அவசியமாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில் நமது நாட்டில் இனி அமையப்போகும் அரசாங்கம் கட்சிகளால் ஆளப்படும் அரசாங்கமாகவே இருக்கும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சுயமரியாதை இயக்கமானது நேர்முகமாகவோ, அல்லது மறைமுகமாகவோ சமதர்ம திட்டமுடைய அரசியல் கொள்கையையும் ஒப்புக் கொண்டு தீரவேண்டிய அவசியத்தை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம். நமது சமதர்ம அரசியல் திட்டத்தைக் கண்டு யாரும் அஞ்சவேண்டிய அவசியமில்லை. அரசாங்க சட்டத்திற்குள் அடங்கியே நமது அரசியல் இயக்கம் வேலை செய்து வரும். பலாத்கார முறையையும் நாம் ஒப்புக்கொள்ளுவதில்லை. இத்தகைய சமதர்ம அரசியல் திட்டத்தைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?

(5) சமூகச் சீர்திருத்த வேலையையும் அதை நிறைவேற்ற அரசியலைக் கைப்பற்றும் வேலையையும் சுயமரியாதை இயக்கத்தின் திட்டமாக வைத்துக் கொண்டு இரண்டையும் செய்து வரலாமென அபிப்பிராயப் படுகிறவர்களும் பலருளர். ஆனால் இரண்டு வேலைகளையும் ஒரே இயக்கம் அதாவது ஒரே ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் செய்ய முடியுமா? என்பது ஆழ்ந்து ஆலோசிக்கத் தக்க விஷயமாகும். தற்பொழுது சமூக சீர்திருத்த வேலையென்பது, அரசாங்க விஷயங்களில் தலையிடாமல் ஜன சமூகத்துக்கு இடையேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களைப் போக்குவதும் அப்பழக்க வழக்கங்களில் வைத்துள்ள நம்பிக்கையை ஒழிப்பதும், புதிய வழக்கங்களில் வைத்துள்ள நம்பிக்கையை ஒழிக்கதும் புதிய வாழ்க்கை முறையில் பற்றுக் கொள்ளச் செய்வதும் ஆகும். இதைப் பிரசாரத்தின் மூலம் ஜனங்களுக்கு எடுத்துக்காட்டி வருவதே சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய வேலையாகும்.

இவைகளைச் சட்டத்தின் மூலம் ஜன சமூகத்தில் புகுத்த அரசாங்கத்தைக் கைப்பற்ற வேலை செய்வது அரசியல் இயக்கமாகிவிடும். இவ்வளவேதான் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கும், அரசியல் இயக்கத்திற்கும் வித்தியாசம் என்று கூறலாமே தவிர, வேறு காரணம் கூறுவதற்கு நமக்குத் தோன்றவில்லை. மற்றபடி சமூகச் சீர்திருத்தம் என்பதும், அரசியல் என்பதும் ஒன்றே தவிர வேறில்லை. சமூகம்தான் அரசியல், அரசியல் தான் சமூகம் இரண்டையும் வேறுபடுத்தி பிரிக்க முடியாது. ஆயினும் இருகாரியங்களையும் ஒரே ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் தற்சமயம் செய்ய முடியாதென்பது நமது கருத்து. இத்தகைய இரு நோக்கத்தையும் கொண்டு துவங்கப்பட் ஜஸ்டிஸ் கட்சியின் அக்கால நிலையை நோக்குவார் இதன் உண்மையை நன்கு தெரிந்து கொள்ளலாம். பிரசாரம் பண்ணும் வேலையையும் காரிய நிர்வாகம் செய்யும் வேலையையும் எப்படிச் செய்யமுடியும். சமூகச் சீர்திருத்தத்திற்கும் நாட்டில் பலமான எதிர்ப்பு இருக்கின்றது. சமதர்ம அரசியலுக்கும் நாட்டில் எதிர்ப்பு இருக்கிறது. இரண்டிற்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு இரண்டையும் இயக்கம் செய்து முடிப்பது என்பது சாமானியமான காரியமல்ல. இவ்விரண்டு கொள்கைகளுக்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொள்கின்ற திறமை ஓர் இயக்கத்திற்குத் தற்கால நிலையில் ஏற்பட முடியாது. சமதர்ம அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரத்தை வகிக்க வரும் காலத்தில்தான் இரண்டையும் செய்ய முடியும். அது வரையிலும் சீர்திருத்த இயக்கம் தனித்து நின்று வேலை செய்யவேண்டுவது அவசியமல்லவா? என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வருமாறு வேண்டுகிறோம்.

பொருளாதாரத் திட்டத்தையும், சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப்பதையும் வேலை முறையாகக் கொண்ட சமதர்ம அரசியல் கட்சி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இத்தகைய அரசியல் கட்சி தற்போது நமது நாட்டில் ஒன்றுகூட இல்லை. ஜனநாயகக் கட்சியென்றும், வகுப்புவாதக் கட்சியென்றும் சொல்லிக் கொண்டிருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் முதலாளிக் கட்சிகளே என்பது வெட்ட வெளிச்சம். இக்கட்சியின் நோக்கத்தை ஒப்புக் கொள்ளுகின்றவர்கள் யாராயிருப்பினும் நிற, வகுப்பு, மத வேற்றுமை பாராமல் அவர்களையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த அரசியல் கட்சி, சுயமரியாதை இயக்கத்தினால் பிரசாரம் பண்ணப்படும் சீர்திருத்தங்களுக்கெல்லாம் ஆதரவளித்து வர வேண்டுமென்பதையும் கட்சிக் கொள்கையில் முக்கியமான ஒன்றாகக் கொள்ள வேண்டும். இதற்கென்று ஒரு தனி ஸ்தாபனம் இருக்கவேண்டியது அவசியமாகும்.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைக் கொண்ட, அரசியல் கலப்பற்ற, தனி ஸ்தாபனம் ஒன்று வேண்டுவது அவசியமாகும். இந்த ஸ்பானத்தில் அரசியல், நிறம், வகுப்பு முதலிய வேற்றுமை பாராட்டமால் மதமற்றவர்கள் எல்லோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் சமதர்ம அரசியல் கட்சியாரை எப்பொழுதும் ஆதரித்து நிற்க வேண்டும். தற்பொழுது சுயமரியாதை இயக்கம் செய்து வரும் சமூக வேலையைச் செய்துவர வேண்டும்.

மேற்கூறிய இரு இயக்க ஸ்தாபனங்களின் உறுப்பினர்கள் அந்த ஸ்தாபனங்களின் கொள்கைகளுக்கு மாறுபடாதவர்களாகவும், அக் கொள்கைகளை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு நடக்கின்றவர்களாகவும், அவைகளுக்காகத் தியாகஞ் செய்யப் பின் வாங்காதவர்களாகவும் இருக்க வேண்டும். மற்றபடி இயக்கப் பிரசாரத்தில் அதாவது மகா நாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் யாரையும் சேர்த்துக் கொள்ளலாம். நமது பல கொள்கைகளுக்கு எதிரியாக இருந்து ஒரு கொள்கைக்குச் சாதகமாயிருப்பார்களாயின் அதைப் பொறுத்தவரையிலும் அவர்களை நம்மோடு அவரோடு ஒத்துழைப்பதிலே ஒரு தவறும் நேர்ந்துவிடாது. அதனால் இயக்கத்திற்கு லாபமே தவிர நஷ்டம் வந்துவிடாது. பிரசார நிலையில் கட்டுப்பாடு ஏற்படுத்தினால் இயக்கம் வளருவதற்கே வழியில்லாமற் போய்விடும். நமது கொள்கைக்கு முரண்பட்டவர்களை நம்மோடு சேர்க்கக்கூடாது நமது கூட்டத்திற்கு வரக்கூடாது என்றால் அவர்களை எப்படி நமது கொள்கைகளை ஒப்புக்கொள்ளச் செய்ய முடியும்? ஆதலால் பிரசாரத்தின் பொருட்டு நம்மிடம் சிறிது அனுதாபம் உள்ள எவரையும் சேர்த்துக் கொள்ள மறுக்காமலிருப்பதே இயக்க வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.

மேலே கூறிய விஷயங்களைக் கவனித்துச் சுயமரியாதை இயக்கத்தையும், சமதர்ம இயக்கத்தையும் நடத்தி வந்தாலொழிய உருப்படியான வேலை எதையும் செய்து விடமுடியாது என்பதே நமது கருத்து. இன்னும் பார்ப்பனர்களை மாத்திரம் வைது கொண்டிருப்பதனால் ஒரு பயனுமில்லை. நாமறிந்தவரையில், நமது சமதர்ம கொள்கைகளையும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளையும் முழுதும் ஒப்புக்கொண்டு வேலை செய்வதற்குத் தயாராக எல்லா வகுப்பினரில் வாலிபர்களும், அறிவுடையவர்களும், இருக்கிறார்களென்பதை நிச்சயமாகக் கூறுவோம். ஆதலால் இனி பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், என்ற பிரச்சனைகள் நம்மிடம் தலைகாட்டாமல் ஒழிக்க வேண்டும்; முதலாளிக் கொடுமைகளை ஒழிப்பதையும், மதக்கொடுமைகளை ஒழிப்பதையுமே பிரச்சனையாகக் கொண்டு இப்பிரச்சினையை ஒப்புக்கொள்கின்றவர்களை எல்லாம் இயக்கத்திற் சேர்த்துக் கொண்டு இப்பிரச்சனைகளைத் தீர்க்க வழி கோலுவதே சிறந்ததாகும். மேற்கூறியவைகளையெல்லாம், விரும்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவு செய்யும்படி சுயமரியாதைத் தோழர்களை வேண்டிக் கொள்கிறோம்.

– தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை (‘விடுதலை’, 11.07.1950)

நன்றி: தமிழச்சி

சைவ வைணவப் போட்டி!


மதங்கள் என்பவைகளுக்கெல்லாம் ஒரு கடவுள் இருந்தாக வேண்டும்; மோட்சம்,
நரகம் இருந்தாக வேண்டும்; தெய்வீகம், கடவுள் தன்மை பொருந்திய அவதார
புருஷர்கள், குருமார்கள் இருந்தாக வேண்டும்.

இவை இல்லாமல் உலகில் எந்த மதமும் இருக்க முடியாது. இந்து மதத்துக்கோ
இவைகள் மாத்திரம் போதாது. அதாவது பல கடவுள்கள் வேண்டும்; பலவிதமான
மோட்சங்கள், பலவிதமான நரகங்கள் வேண்டும்; மற்றும் பலவிதமான பிறப்புகள்
முன் பின் ஜன்மங்கள வேண்டும் பல விதமான பிறப்புகள் முன் பின் ஜன்மங்கள்
வேண்டும்; பல விதமான அவதாரங்கள் பலவிதமான குருமார்கள் வேண்டும்;
இவ்வளவும் போதாமல் கடவுளை நேரில் கண்டு மோட்சத்திற்குப் போன பலவிதமான
பக்தர்கள் வேண்டும்.

இந்தக் காரியங்கள் சிறப்பாக இந்துமதத்தின் உட்பிரிவு மதங்களான சைவ மதம்,
வைணவ மதம் என்று சொல்லப்படும் இரண்டு உட்பிரிவு மதங்களுக்கும் ஏறக்குறைய
ஒன்று போலவே இருந்து வருகின்றன.

பெயர்களைப் பொருத்தவரையில் சில மாறுதல்கள் இருக்கலாமே ஒழிய காரியங்களைப்
பொருத்தவரையில் ஏறக்குறைய ஒருவரைப் பார்த்து ஒருவர் காப்பியடித்தது
போலவேதான் இருக்கிறது.

உதாரணமாக வைணவத்தில் ராமாயணம் ஏற்பட்டதற்குக் காரணம் விஷ்ணுவும் அவரது
மனைவியாகிய லட்சுமியும் கலவி செய்ததில் இருந்தே ஏற்பட்டது என்றால்
சைவத்துக்குக் கந்தபுராணம் ஏற்பட்டதற்குக் காரணம் சிவனும் அவரது
மனைவியாகிய பார்வதியும் கலவி செய்ததில் இருந்தே ஏற்பட்டது!

எப்படியெனில் விஷ்ணுவும் லட்சுமியும் பகல் நேரத்தில் கலவியில்
இருந்தபோது, சில ரிஷிகள் படுக்கை அறைக்குள் பிரவேசித்து விஷ்ணுவைக் காண
ஆசைப்பட்டதாகவும், துவார பாலகர்கள் தடுத்ததாகவும், அதற்கு அவர்களை
ரிஷிகள் சபித்ததாகவும், அந்தச் சாபம் தீர வேண்டியதற்காகவே ராமாயணம்
முதலியவை ஏற்பட வேண்டியதாயிற்று.

அதுபோலவே பரமசிவன் பார்வதியோடு பல நூறு வருஷங்கள் விடாமல் கலவி செய்து
கொண்டு இருந்ததாகவும், அதனால் ஏற்படும் வீரியமும், கர்ப்பமும் மிகக்
கொடுமையான காரியத்தைச் செய்யக்கூடியதாகி விடும் என்று, தேவர்கள் முறையிட
கலவி முற்றுப்பெறுவதற்கு முன்பாகவே கலவியை நிறுத்திக் கொள்ள வேண்டியதாகி,
அதனால் இந்திரியம் நிலத்தில் விழுந்து பிறகு என்னனென்னமோ ஆபாசமாகி
கடைசியாக சுப்பிரமணியர் தோன்றி கந்த புராணம் ஏற்பட வேண்டியதாயிற்று என்றே
கதைகள் இருக்கின்றன.

அன்றியும் பூபாரம் தீர்க்கவும் ராட்சதர்களை அழிக்கவும் விஷ்ணு ராமராய்த்
தோன்றினார்.

அதுபோலவே பூபாரம் தீர்க்கவும் அசுரர்களை அழிக்கவும் சிவன்
சுப்பிரமணியனாகத் தோன்றினார்.

ராமன் பிறப்பதற்காக தேவர்கள் விஷ்ணுவை வேண்டினார்கள். சுப்பிரமணியன்
பிறப்பதற்காக தேவர்கள் சிவனை வேண்டினார்கள். ராமன் ராட்சதர்கள்
என்பவர்களைக் கொன்றான். சுப்பிரமணியன் அசுரர்கள் என்பவர்களைக் கொன்றான்.

ராமன் ராட்சதர்களைக் கொல்லும் போது (மூலபலம்) கொல்லக் கொல்ல
உற்பத்தியாகிக் கொண்டே வந்தன.

சுப்பிரமணியன் அசுரர்களைக் கொல்லும்போது கொல்லக் கொல்ல அசுரர்கள் தலைகள்
முளைத்துக் கொண்டே வந்தன.

ராமன் பெண்ஜாதி சீதை ஒரு வளர்ப்புப் பெண். சமுத்திரத்திலே
கண்டெடுக்கப்பட்டவள். சுப்பிரமணியன் பெண்ஜாதியும், ஒரு வளர்ப்புப் பெண்
வள்ளிச் செடிக்கடியில் கண்டெடுக்கப்பட்டவள்.

சைவத்துக்கும் வைணவத்துக்கும் இனியும் அனேக விஷயங்களில் கடவுள்களைப்
பற்றிய கதைப் பொருத்தங்கள் காணலாம். அதுபோல சைவ – வைணவ ஆச்சாரியர்கள்,
விஷயங்களிலும் சைவத்துக்கு ஆழ்வாராதிகளாகவும்,
ஏற்படுத்தப்பட்டிருப்பதோடல்லாமல் பல பக்தர்களையும், அவர்கள் செய்த
காரியங்கள், அதன் பயனாய் அவர்கள் அடைந்த முக்திகள் ஆகிய விஷயங்களிலும்
ஒன்று போலவே கதைகள் கற்பிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.

வைணவ பக்தர்கள் விஷயத்துக்கு பக்த லீலாமிருதம் என்னும் புத்தகம் போலவே
சைவ பக்தர்கள் விஷயத்துக்கு பெரிய புராணம் என்னும் புத்தகமும்
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

வைணவ பக்தரில் ஒரு குயவர் இருந்தால் சைவ பக்தரிலும் ஒரு குயவர்
இருக்கிறார்.

எப்படி எனில் வைணவக் குயவர் கோராகும்பராய் இருந்தால் சைவக்குயவர்
திருநீலகண்டராய் இருக்கிறார்.

இரு குயவ பக்தர்களுடைய கதையும் ஒன்று போலவே அதாவது கோராகும்பரும் தன்
பெண்ஜாதியுடன் பேசாமல் இருந்து, கடைசியாக மகாவிஷ்ணுவே இருவரையும்
பேசும்படி செய்து சேர்த்து வைக்கிறார்.

திருநீலகண்ட குயவனாரும் தன் பெண்ஜாதியோடு பேசாமல் இருந்து கடைசியாக சிவ
பெருமான் வந்தே இருவரையும் பேசும்படி செய்து சேர்த்து வைக்கிறார்.

மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பதிலும் வைணவ மதத்துக்குச் சேர்க்கமாலா
என்கின்ற தீண்டாத ஜாதி பக்தர் ஒருவர் இருந்து அவரைக் கோவிலுக்குள்
விடாமல் தடுக்கப்பட்டு, கனவு கண்டு கடைசியாக விஷ்ணு வந்து அழைத்துப்
போகிறார்.

சைவத்திலும் தீண்டப்படாத வகுப்புக்கு நந்தனார் என்பதாக ஒருவர் இருந்து
பரமசிவன் வந்து கனவில் சொல்லி சாமி தரிசனம் செய்யப்பட்டதாகச்
சொல்லப்படுகிறது.

இரண்டு மத புராணங்களிலும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் ஒரே மாதிரியான
உயர்வும், மற்றவர்களுக்கு இழிவும் ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு ஜாதிப்
பாகுபாடுகளைப்பற்றி ஒரே மாதிரியாகவே குறிப்பிட்டு பலப்படுத்தி
இருக்கிறது.

இவற்றுள் சைவத்தைப் பார்த்து வைணவர்கள் காப்பி அடித்தார்களா? அல்லது
வைணவர்களைப் பார்த்து சைவர்கள் காப்பி அடித்தார்களா? என்பது ஓர்
ஆராய்ச்சி வேலையாக இருக்கலாம்.

என்றாலும் சைவ மதம் கடவுள், சிவன் தான் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட
கடவுளாய் இருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

ஏனெனில் சிவன் காட்டுக் கடவுள். காட்டுமிராண்டித் தன்மையோடு
கற்பிக்கப்பட்ட கடவுள்.

– சிவனுக்குத் துணி (ஆடை) இல்லை. தோல் ஆடை, தலை சவரம் இல்லை, ஜடை முடி,
எலும்பு, பாம்பு நகை,

– காட்டில் கிடைப்பது மண்டை ஓடு பாத்திரம்.

– காட்டுமிராண்டிகளுக்கு ஏற்றது. மழுவு (கல்லு) ஆயுதம், கல்லாயுத காலம்,
புஷ்பம்.

– வாசனை இல்லாதது, பேய் கூத்து நடனம்,

– காட்டுமிராண்டி காலம். அகோரம் – சாயல்,

– நாகரிகம் இல்லாத தன்மை. இவைகளும் இன்னும் பல காரணங்களும் சொல்லலாம்,
சிவன் தான் முதல் கடவுள் என்பதற்கு.

– விஷ்ணுவுக்கு ஆடை பீதாம்பரம். தலை, முகம் சவரம் செய்ததுடன் கிரீடம்.

– நகை – நவரத்தின மாலைகள்.

– ஆயுதம் – சக்கரம் வில்லு.

– புஷ்பம் – அழகும் வாசனையும் கொண்டவை.

முதலிய உலகம் சிறிது நாகரீகம் பெற்றபின் கற்பிக்கப்பட்டிருப்பதைக்
காட்டுகிறது. இவை சிவலீலை, விஷ்ணுலீலை பார்த்தாலும் தெரியும்.

மற்றும் சிவன் பைத்தியக்கார ஏமாளியாகவும், விஷ்ணு தந்திரக்கார சூரனாகவும்
ஆக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே விஷ்ணுவை போட்டிக் கடவுளாக சிருஷ்டிக்கவில்லை என்றாலும்,
சீர்திருத்தக் கடவுளாகவாவது சிருஷ்டித்து இருக்க வேண்டும். எப்படி
இருந்தாலும் ஒன்றைப் பார்த்து ஒன்று காப்பி அடித்துத்தான் போட்டி
புராணங்கள், போட்டி பக்தர்கள், போட்டி திருவிளையாடல்கள் ஏற்பட்டிருக்க
வேண்டும்.

இராமாயணம் கூட கந்தப் புராணத்தைப் பார்த்து காப்பி அடித்து
பாத்திரங்களின் பெயர்களை மாற்றி இருப்பதைத் தவிர்த்து கதையின் கற்பனை ஒரே
தத்துவத்தைக் கொண்டதாகத்தான் இருந்து வருகிறது.

ஆகவே இவற்றுள் எது பொய்யானாலும் இரண்டும் பொய்யாகி விடும். ஆதலால் தான்
பார்ப்பனர்கள் ஒரு சிறு சங்கதியைக் கூட மாற்றவோ திருத்தவோ விடுவதில்லை.

– சித்திரபுத்தின் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை
(‘விடுதலை’ 24.02.1950)

நன்றி: தமிழச்சி

மதம் மக்களைப் பிரிக்கிறதேயன்றி சேர்க்கவில்லை!


நான் இதற்குமுன் இந்த ஊருக்கு (வீரகலூர்) வந்ததில்லை. இந்த ஊர் மக்கள் நான் வர வேண்டும் என்று வெகு ஆவலாய் இருப்பதாகவும், ஆகவே ஒருமுறை வரவேண்டும் என்று தோழர்கள் கேட்டுக் கொண்டதால், என்னுடைய திருச்சி மாவட்ட சுற்றுப்பயணத்தில் இந்த ஊரையும் சேர்த்துக் கொண்டேன். நான் இந்த ஊருக்கு முதன் முறையாக வந்தபோதும் உங்கள் அன்பும், ஆதரவும், உற்சாகமும் எனக்குப் பெருமகிழ்ச்சியினை அளிக்கின்றன.

எங்களுடைய கொள்கைகள் பட்டணத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் இதுபோன்ற கிராமங்களிலெல்லாம் பரவியிருக்குமா என்று சந்தேகப்பட்டுக் கொண்டே புறப்பட்டேன். ஆனால் வழியெல்லாம் சிறுசிறு கிராமத்தில் கூட இயக்கத் தோழர்கள் 100, 500-என்று கூடி எங்களுக்கு வரவேற்பு அளித்து தங்கள் அன்பைக் காட்டினார்கள். இதையெல்லாம் கண்டு நான் பெருமமிழ்வு எய்துகிறேன்.

ஏனென்றால் எங்கள் கொள்கைகளுக்கு எங்கள் இயக்கத்திற்கு விரோதிகள் வெகு பேர் உண்டு. எங்களது கொள்கைகள் நாஸ்திகக் கொள்கைகள் என்றும், “கடவுள் இல்லை” என்று கூறும் “கயமைக்குணம் படைத்தவர்கள்” என்றும், வகுப்புவாதம் பேசுவதே எங்கள் தொழில் என்றும், பலர் எங்கள் மீது பொதுமக்களிடத்தில் விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அப்படி அவர்கள் பிரசாரம் புரிந்தாலும், நானறிந்தவரையில் அவர்களின் விஷமப் பிரச்சாரத்தை நம்பி எங்களை வெறுப்பவர்கள் இல்லை என்பதுதான். அதற்கு மாறாக எங்களைப் போற்றிப் பாராட்டி, நாங்கள் காரியங்களை நடத்த எங்களுக்கு ஊக்கத்தையும் கொடுத்து வருகிறார்கள்.

உலகத்தில் கடவுளே இருக்கக் கூடாது, மதமே இருக்கக்கூடாது என்று பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அன்றியும் எங்களுக்கென்று ஒரு தனிமதத்தை வைத்துக்கொண்டு, எங்களுக்கென்று ஒரு தனி கடவுளை வைத்துக் கொண்டு, அதைப்பற்றி உயர்வாக உங்களிடத்தில் கூறி, அப்படிப்பட்ட இயக்கத்தில் வந்து சேருங்கள் என்றும் அழைக்கவில்லை. எங்கள் நோக்கமெல்லாம், நம்முடைய மக்கள் கடவுள், மதம், அரசியல் விஷயங்களில் உள்ள மூடநம்பிக்கையை ஒழித்து அறிவு பெற வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு மதத்துக்காரரும் தங்கள் தங்கள் மதந்தான் உயர்ந்தது என்று மக்களிடம் பிரச்சாரம் செய்வர். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் சொல்வதெல்லாம் அவரவர்களுடைய அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து எது சரி, எது தவறு என்று பார்த்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான்.

“ஏன் ஒரு குறிப்பிட்ட மதம், கடவுள், அரசாங்கம் இவைகளை நீங்கள் ஆதரிக்கக் கூடாது” என்று உங்களிலே பலர் கேட்கலாம். இந்தப்படியான மதம், கடவுள், அரசாங்கம் முதலியவைகள் அவரவர்கள் கட்சிக்குப் பயன்படுகிறதே தவிர மக்களை ஒழுங்குப்படுத்தி அவர்களை அறிவுள்ளவர்களாக்கி, மக்களுக்குள்ளே இருக்கும் உயர்வு தாழ்வுகளை ஒழித்து, எந்தவிதமான சமத்துவத்தையோ, ஒழுங்கையோ, ஒழுக்கத்தையோ நிலை நாட்டவில்லை என்பதால்தான்.

வேறு மதத்தவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. எந்த மதம் எப்படிப்பட்டதாயிருந்தாலும், அந்த மதம் மனித சமுதாயத்தைப் பிரித்து வைத்திருக்கிறது. நம்முடைய மதம் இன்னது என்று கூறிக்கொள்ளத்ததான் முடிகிறதேயொழிய, வேறென்ன இவைகளால் லாபம்.

இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் இன்னும் மோசம். 4-அல்ல 400-அல்ல 4000-க்கும் மேற்பட்ட வகையாக மக்களைச் சாதி பேர் சொல்லி இந்து மதம் மக்களை ஒன்று சேரவொட்டாமல் பிரித்து வைத்திருக்கிறது. ஒரு மதத்திலேயே 1000-கணக்கான சாதிகள் – அதிலே ஒன்று உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்ற நிலையென்றால் இது எப்படி நியாயம் ஆகும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவனுக்குப் பெயர் பிராமணன், மற்றவனுக்குச் சூத்திரன், கடைசியானவனுக்குப் பஞ்சமன் என்ற பட்டம் இவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடாது, தொடக்கூடாது, பார்த்தால், தொட்டால் தீட்டு என்று எழுதி வைத்துக் கொண்டு இந்த 1950-ஆம் ஆண்டிலேயும் அதையே நடைமுறையில் செய்கிறார்கள்.

அதுபோலவே கிருஸ்துவ மதத்தை எடுத்துக் கொண்டாலும், நம் நாட்டைப் பொறுத்தவரையில் அது மோசமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தை விட கிருஸ்துவ மதம் பல மடங்கு மேல் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நம்நாட்டைப் பொறுத்தவரையில் இந்து மதத்தைப் போலவே பாப்பாரக் கிருஸ்துவன் என்பது போன்று பல சாதிப்பிரிவுகள் இருந்து கொண்டு, அவைகளின் பெயரால் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டும் வருகின்றது. எவனாவது ஒருவன் இந்து மதத்தை விட்டு கிருஸ்துவ மதத்திற்குப் போவானென்றால் இந்து மதத்திலே தனக்கிருக்கும் இழிநிலை, அவைகளிலே போதிக்கப்படும் மூடக் கருத்துக்கள் இவைகள் பிடிக்காமல், அறிவு, நாகரிகம், சமத்துவம் பெறவேண்டுமென்றுதானே கிருஸ்துவ மதத்திற்குப் போயிருப்பான். வேண்டுமானால் சில பார்ப்பனர்கள் இல்லை என்று கூறலாம். பணம் கொடுத்து பாவையரைக் காட்டி நம்மவரை மயக்கினார்கள் என்று கூறுவார்கள். அதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் அந்தப்படி பணத்தைக்காட்டி அவர்களை மதம் மாறும்படி செய்திருந்தால் இப்போதுள்ள கிருஸ்துவர்கள் பணக்காரர்களாய் இருக்க வேண்டும். அப்படி யாரும் பணக்காரர்களாய் இருப்பதாகவும் தெரியவில்லை. அல்லது பெண்களைக் காட்டி ஏமாற்றினார்களென்றால் கிருஸ்தவத் தாய்மார்கள் வெள்ளைக்காரப் பெண்மணிகளாக இருக்க வேண்டும். அதுவும் இல்லை. பின் ஏன் கிருஸ்துவ மதத்திற்கு மாறினார்கள் என்று கேட்டால், இந்து மதத்திலே நமக்கு இருக்கும் இழிவு ஒழியும், அறிவு நாகரிகம் வளரும் என்பதால் தான். இன்னமும் நான் கூறுவேன், இந்த நாட்டிற்கே நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் கிறிஸ்துவர்கள் தான் என்று. கிருஸ்துவ ஆங்கிலேயன் இங்கு வராதிருந்தால் நம் மக்கள் இன்றும் நாய்கள், பன்றிகள் நிலையிலேயேதான் காட்டுமிராண்டிகளாய் இருப்பார்கள். அவனால் ஏதோ நமக்கு அறிவு சிறிது வளர்ந்து, இன்று ஓரளவு நாகரிகம் கொண்டவர்களாக இருக்கிறோம். இந்தக் கருத்தை எந்தப் பார்ப்பனரிடமும் வாதாடி அவைகளை ஒத்துக் கொள்ளம்படி செய்ய என்னால் முடியும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதத்தில் தங்கள் நலன் கருதி இந்துக்கள் சேர்ந்தாலும், அதிலேயும் சாதிப்பிரிவு இருக்கிறது. ஆகவேதான் அதிலேயும் சீர்திருத்தம் வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

அதுபோலவே முஸ்லீம் மதமும் இந்த நாட்டு மக்களை எவ்வளவோ சீர்திருத்தியிருக்கிறது. நம்முடைய நாட்டு மக்கள் அத்தனை பேரும்
சமுதாயத்தில் ஒன்று என்று இல்லாவிட்டாலும் கூட முஸ்லீம்களைப் பொருத்த மட்டிலுமாவது, தங்களுக்குள் சாதி பேதம், உயர்வு, தாழ்வு என்பது இல்லாமல் செய்துவிட்டார்கள். முஸ்லீம் என்று சொன்னால் அவர்கள் காரியத்திற்கு ஒன்றுபட்டு, கட்டுப் பாடாக இருந்து செயலாற்றும் பண்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே கிருஸ்துவ, முகமதிய மதத்தை விட இந்து மதம் மட்டம் என்பதோடு மட்டுமல்ல, அவைகளில் இல்லாத பித்தலாட்டங்கள், ஏமாற்று வேலைகள் இந்து மதத்திலே இருக்கின்றன. ஏனென்றால் இதில்தான் பித்தலாட்டத்தையே போதிக்கும் வேத புராண, இதிகாசங்கள் நிறைந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, ஆயிரங்கடவுள்கள் அதன் பேரால் ஆபாசமான கற்பனைகள் நிறைந்திருக்கின்றன.

அந்தக் கடவுள்கள் உருவ பேதம், குண பேதம் கொண்டு நம்மைவிட மோசமான நிலையிலிருக்கின்றன. பல பொண்டாட்டிகள் உடைய கடவுள், தேவடியாள் வீட்டுக்குச் செல்லும் கடவுள், ஆண்டுதோறும் திருமணம் செய்து கொள்ளும் கடவுள் – ஆக இந்தப் பலரகக் கடவுள்கள் இந்து மதத்தில்தானே இருக்கின்றன.

கிருஸ்தவ மதத்திலும் சில குறைபாடுகள் இருக்கின்றன. முஸ்லீம் மதத்திலும் ஜாதி பேதம், உருவக் கடவுள், ஆபாசக் கடவுள்கள் இல்லை என்றாலும் சில குறைபாடுகள் உண்டு. இல்லை என்று எந்த முஸ்லீமாவது மறுத்துக் கூற முடியுமா? நல்ல கடவுள்கள் என்றால் பணக்காரன் என்று ஒருவனும், பிச்சையெடுத்து வாழவேண்டும். என்று மற்றொருவனும் என்று ஏழை பணக்காரனைக் கொண்ட எந்த மதமும்; கடவுளும் உண்மையான மதம் ஆகாது. ஒருவனுக்குப் பூமி இருக்க வேண்டுமானால் காடுவெட்டி கழனியாக்கிச் செய்திருந்தால் தான் முடியும். அப்படி ஏற்பட்ட சொத்துக்கள் தானே எல்லாவகையான அத்தனையும். அவை ஏன் ஒரு தனி மனிதனிடத்தில் 100-ஏக்கரா 50-ஏக்கரா என்று இருக்க வேண்டும். மற்றவன் வயிற்றுக்கு இல்லையே என்று வாடி இருக்க வேண்டும். ஒருவனிடத்தில் ஏன் 2-அடுக்கு, 3-அடுக்கு மாடி வீடுகள் பல இருக்க மற்றொருவன் குந்தக் குடிலற்று கதறி அழும் நிலையில் இருப்பது. நாணயமான, யோக்கியமான கடவுள் என்றால் மக்களுக்கு இத்துறையில் இதுவரை செய்ததென்ன? இந்த நாட்டில் எத்தனை பேர் படிப்பற்றவர்கள்? படிக்க வசதியில்லாதவர்கள். இவர்களுக்கு இந்தக் கடவுள் சாதித்ததென்ன?

ஆகவேதான் நாங்கள் கூறுகிறோம் “எங்கள் கடவுள், எங்கள் மதம், எங்கள் சாஸ்திரம்” என்று ஒவ்வொருவரும் கூறுவதும் அடிப்படையில் ஒன்றுதான். கலரில் தான் வித்தியாசம் இருக்கிறதென்று. ஏன் என்றால் அவைகள் அந்தக் காலத்திலே சரியாக இருக்கலாம். அந்தக்காலத்து மக்கள் அறிவுக்கேற்ற முறையில் அறிவுத்தெளிவு ஏற்படாத அந்தக் காலத்தில் இந்த மாதிரியான காரியங்கள் செய்தார்கள்.

கடவுள்கள் அத்தனையும் நம்முடைய கற்பனைகளே. இந்துக் குழந்தைக்கு இந்துக் கடவுளரைப் பற்றியும், மகமதியக் குழந்தைக்கு கடவுளைப்பற்றியும், கிருஸ்துவக் குழந்தைக்குக் கிருஸ்துவக் கடவுளைப் பற்றியும் அந்தந்த மதத்தவர்கள் சொல்லிக் கொடுத்துத்தான் தெரிகிறதே தவிர, இயற்கையிலேயே கடவுள் உணர்ச்சி அக்குழந்தைகளுக்கு ஏற்படுவதில்லை.

சாதாரண மனிதர்களிலிருந்து சற்று உயர்ந்த மனிதர்கள் அக்கால மக்களுக்குத் தங்களின் அக்கால அறிவுக்கு ஏற்ற முறையிலே சில பல சட்டம் செய்தார்கள். கிருஸ்துவ மதத்துக்கு யேசுவும், முகமதிய மதத்துக்கு நபியும் தந்தை என்று என்று சொல்லவது இப்படித்தான். ஆனால் இந்து மதத்துக்கு அப்படிக் குறிப்பிட்ட ஓர் ஆளைச் சொல்ல முடியவில்லை. மனுவிலிருந்து ஆரம்பித்து யக்ஞவல்லர், பிரகஸ்பதி, சுக்கிராச்சாரி, பீஷ்மர் என்று போகிறான். காரணம் என்னவென்றால் இந்து மதம் காட்டுமிராண்டி காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆகவேதான் அவனுக்கென்று ஒரு தனியாளைக் காட்ட முடியாத வகையில் அது குழம்பிப்போய் கிடக்கிறது. கிறிஸ்துவ மதம் அப்படியில்லை. அது மக்கள் சற்று நாகரிகம் அடைந்த காலத்தில் செய்யப்பட்டது. ஆகவே அதிலே சில அபிவிருத்திகள் காணப்படுகின்றன. முஸ்லீம் மதம் இன்னும் சற்று பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மதமாதலால் அதிலே பெரும் அளவுக்கு நல்லவைகள் இருக்கின்றன.

கிருஸ்துமதம், முகமதிய மதத்திற்கு முன் இந்து மதந்தான் இருந்திருக்க வேண்டும். ஆரியர்களில் இந்தியாவுக்குள் வந்த ஒரு பகுதியினர் தங்கள் நாட்டில் தாங்கள் அனுசரித்து வந்த பழக்கங்களை வைத்து, இந்த நாட்டுக்கு ஏற்றவாறு தங்கள் கொள்கையை வைத்துக் கொண்டார்கள். அதுபோலவே அய்ரோப்பாவுக்குச் சென்ற ஆரியர்கள் அங்கே தங்கள் நாட்டுக் கொள்கைகளை நடத்தி வந்திருக்க வேண்டும். இன்னும் பார்த்தால் கிருஸ்தவ மத பழைய ஏற்பாடு, முகமதிய மதத்திற்கு முந்திய பழைய ஏற்பாடு இவைகளில் இந்துமத ஆபாசங்கள் போல நிறைந்திருக்கின்றன. ஏசுநாதர் கோவில்களை கள்ளர் குகை என்று கூறினார். ஆகவே அவர் காலத்திலும் அவருக்கு முன் காலத்திலும் கோயில்கள் இருந்திருக்க வேண்டும். யேசுநாதர் உருவ வணக்கத்தையும் ஏற்கவில்லை. ஆகவே அதுவும் அவருக்கு முன் இருந்திருக்க வேண்டும். அவ்வாறேதான் இஸ்லாமியர்கள். ஆரியர்கள் மதத்தில் ஆண் உயர்ந்தவன், பெண்- தாழ்ந்தவள் என்றும், கடவுளுக்கு இன்ன உருவம் என்றும் இருந்து வருகிறது. இதைக் கண்டு ஆணும் – பெண்ணும் சமம் என்ற நீதியினையும், உருவக் கடவுள் வெறுப்பையும் போதித்தார்கள், முகமதியர்கள். ஆகவே இந்து மதத்தில் இருந்த சில குறைகள் களைந்து ஏற்படுத்திய மதங்கள்தான் கிறிஸ்துவ, முகமதிய மதங்கள். குறைகளை நீக்காமல், குறை களைய முற்படுவோரை ஆதரிக்காமல், அவர்களை நாஸ்திகர்கள் என்று தூற்றி பழைய ஏற்பாட்டையே ஒரு குறிப்பிட்டக் கூட்டம், தங்கள் வயிற்றை வளர்க்க வைத்துக் கொண்டு, இன்றும் மாற்றாமல் இருப்பதுதான் இந்து மதம்.

இந்து மதத்தில் இருக்கும் புரோகிதர், அர்ச்சகர் போல் கிறிஸ்துவ, முகமதிய மதத்தில் பிறவியில் கிடையாது. இந்து மதத்திலே “பறையனாய்” இருக்கும் ஒருவன் கிறிஸ்துவனாக ஆனால் பாதிரிப் படிப்புப் படித்து பாதிரியாகலாம். அதுபோல் ஒரு “சக்கிலி” முஸ்லீமானால் மௌல்வி ஆகலாம். ஆனால் இந்து மதத்திலே அந்தத் தொழிலைச் செய்ய ஒரு கூட்டந்தான் அருகதையுடையது. அவர்கள்தான் செய்ய வேண்டும் என்று சாத்திரத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது.

ஆகவே அந்தக் காலத்தில் அவையெல்லாம் சரியாய் இருந்திருக்கலாம். அப்போது மைக் இல்லை; மின்சாரம் விளக்கு இல்லை, ஆகாயக் கப்பல் கிடையாது. ரயில் இல்லை, மோட்டார் இருந்தது கிடையாது. ஆனால் இன்று நாம் விஞ்ஞான காலத்திலே, அறிவு உயர்ந்த நிலையிலே இருக்கிறோம். இந்தக் கால நிலைக்கேற்ற மாற்றங்களை எல்லாத் துறையிலும் அவைகளில் காண வேண்டாமா?

நான் கூறுகிறேன், இன்று ஓர் ஏசு, முகமது நபி தோன்றினால் நிச்சயமாய் தங்கள் பழைய ஏற்பாடுகளை அழித்து விட்டு, இக்கால முறைக்கேற்றவாறு புதிய ஏற்பாடு செய்வார்கள். ஏசுவுக்கும், முகமதுவுக்கும் பின்னர் அந்த இரண்டு மதங்களிலும், இந்து மதத்திலும் “தெய்வீக மனிதர்கள்” தோன்றவில்லை ஏன்? மக்களுக்குக் கஷ்டங்கள் இல்லையா? படிப்பு இல்லை, சாப்பாடு இல்லை, கட்டத் துணியில்லை, இருக்க வீடு இல்லை என்ற நிலைமைதானே இன்றும் இருக்கிறது.

சிலர் கூறுவார்கள் இவை கடவுள் செயல் என்று. ஆனால் அது உண்மையாய் இருந்தால் நீ ஏன் பார்ப்பான், நான் ஏன் பறையன் என்ற எண்ணம் நமக்குத் தோன்றக் கூடாதல்லவா? ஏழை ஏன் பணக்காரனோடு போட்டியிடுகிறான்? “கடவுள் அப்படிச் செய்தார் என்றால், இந்தமாதிரி போட்டி எண்ணங்கள் தோன்றக் கூடாதே!”

அதேமாதிரி கடவுளே பல சாதிகளைப் படைத்தார் என்றால், இன்று ஏன் நாம் சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறோம்; துக்கப்படுகிறோம்? அதை குறித்து அந்தக்காலத்தில் அவர்கள் தெய்வீக மனிதர்களாய் கொண்டாடப்பட்டார்கள். அறிவு பெற்ற இந்தக் காலத்தில் மக்களுக்கு மனக்குறை இருக்கிறது. சாதி இழிவு நீங்கவேண்டும். நீ படிக்க வேண்டும், உத்தியோகம் வேண்டும், பூமி வீடு வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விட்டது. அன்றைய தின மக்கள் அறிவுக்கு அவர்கள் ஒத்துக் கொண்டார்கள், தெய்வீக புருஷர்கள் என்று. இன்று யாரும் எவரையும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

“உழைப்பது நான்; உல்லாசமாய் உட்கார்ந்து உழைக்காமல் உண்ணுபவன் அவனா?” என்று கேட்பவரிடத்தில் யாராவது, போன ஜென்மத்தில் நீ செய்த பாவத்திற்கு இது தண்டனை, கடவுள் ஆணை என்று கூறினால் ஒத்துக்கொள்வானா? மனிதனிடத்தில் இம்மாதிரி போட்டி எண்ணம் ஏற்பட்டவுடனேயே அவன் கண்களுக்குக் குறைபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. அந்தக் குறைபாட்டுக்குக் கடவுள் பொறுப்பாளியல்ல, நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்கள் – ஆனால் சிலர் தங்கள் மனத்திருப்திக்காக கடவுள் செயல் இது என்று கூறிக்கொள்ளுவார்கள்.

எனவே நம்முடைய கஷ்டங்களுக்குக் காரணம் கடவுள் அல்ல. சமுதாயச் சூழ்நிலை, அரசாங்கத் தன்மை, பித்தலாட்டமான மத சம்பிரதாயங்கள் ஆகிய இவைகள்தான் காரணம். இந்தக் குறைபாடுகள் எல்லாம் ஒழிந்தால் தான் நாம் முன்னேற முடியும். மனிதனுடைய எண்ணங்கள் மாறினால்தான் நடப்புகள் மாறும். இதைத்தான் நாங்கள் கூறுகிறோம்.

உதாரணமாக ஒரு வீடு இருட்டாயும், மற்றொரு வீடு வெளிச்சமுள்ளதாயும் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். சன்னல் இருப்பதால் அந்த வீட்டில் வெளிச்சம் இருக்கிறது. சன்னல் இல்லாததால் இந்த வீடு இருட்டாய் இருக்கிறது என்று தெரிந்தால், இருட்டாய் இருக்கும் வீட்டுக்குச் சன்னல் வைத்துத்தானே ஆகவேண்டும். அந்தப்படி சன்னல் வைக்கும் போது இது ஆண்டவனுக்கு விரோதமென்று கூறினால் நியாயமா? அந்தப்படி கூறுவதை ஒப்புக் கொள்வோமா?

அதுபோல் தான் இருண்டிருக்கும் இந்தச் சமுதாயத்தை ஈடேற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் நாங்கள் கூறுகிறோம், எப்படி சன்னல் வைப்பதிலே ஆண்டவனைப் பற்றி அக்கறை கொள்ளமாட்டீர்களோ அது போல நீங்கள் உயர வேண்டிய இந்தக் காரியத்தைச் செய்வதற்கும் உங்களுக்குத் துணிவு வரவேண்டும்.

 

– 01.04.1950 அன்று வீரகலூர் (திருச்சி) பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. (‘விடுதலை’ 04.04.1950)

கடவுளை நம்பும் முட்டாள்களே!


கடவுளை நம்பும் முட்டாள்களே!

அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்;

அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார்;

அவரன்றி ஒரு அணுவும் அசையாது;

அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார்

என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!

கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

கடவுள் இருக்கிறார் என்றால் ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?

பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை?

இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?

கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும், எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும் வணங்கியும் வந்தும், “யோக்கியனாகவோ, கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காணமுடியவில்லையே. ஏன்?

கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு, தாழ் போடாமலும், பெட்டிக்குப் பூட்டு போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லையே, ஏன்? மனிதன் எதனால் “கெட்ட” காரியங்களைச் செய்கிறான்?

ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன் ‘தீங்குகள்’ செய்யப்படுகின்றன?

கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன?

மனிதனிடம் காணப்படும் தீய குணத்திற்குக் காரணஸ்தர்கள் யார்?

ஒரு மனிதனுக்கு அவன் “கெட்ட காரியம்” செய்த பிறகு, செய்து விட்டுச் செத்த பிறகு அவனுக்குத் தண்டனையைக் கொடுக்கும் கடவுள், அந்த மனிதனைக் “கெட்ட” காரியம் செய்யாமல் தடுக்க முடியாமல் போவது ஏன்?

“கெட்ட” காரியம் செய்தவனுக்குத் தண்டனை கொடுப்பதானாலும், கெட்ட காரியம் செய்யப்பட்டதால் துன்பம், நட்டம், நோய், மரணம் அடைந்தவனுக்குக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார்?

மனிதனுக்கு நன்மை, தீமை, இலாபம், நஷ்டம், செல்வம், தரித்திரம், சுகம் துக்கம், அதிருப்தி, கவலை, துன்பம் முதலிய அவஸ்தைகள் எதற்காக ஏற்பட்டும் இருந்தும் வர வேண்டும்?

மனிதன் படும் அவஸ்தைகள் கடவுளுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால் இவை கடவுளுக்குத் திருவிளையாடலா?

“நரகத்தை”ப் பாவ காரியத்திற்குப் பரிகாரமாக, தண்டனையாகச் சிருஷ்டித்த கடவுளை விட வேறு அயோக்கியன், கொடியவன், துஷ்டன் உலகில் யாராவது இருக்க முடியுமா?

இப்படிப்பட்டவனை அன்புருவு, கருணையுருவு என்று சொல்லுகிறவனை விட வேறு மடையன் உலகில் இருக்க முடியுமா?

ஏன் இதைப்பற்றி இவ்வளவு சொல்லுகிறேனென்றால் என் அனுபவத்தில் கடவுளால் உலக முன்னேற்றமும், மனித சமுதாய ஒழுக்கமும், மனிதத்தன்மையும், பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு விட்டதுடன், கெட்டும் வருகிறது என்று உணர்ந்ததாலும், இதை வெளிப்படுத்த வேறு ஆள் இல்லையென்று நான் காணுவதாலும், எனக்கு வயது எல்லைக்கு நெருங்குவதாலும் உணர்ந்ததை வெளிப்படுத்தி விடலாம் என்று கருதியதாலேயேயாகும்.

ஆகவே, மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ, மறக்கிறானோ அவ்வளவுக் கவ்வளவு சமுதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி.

– (14.07.1970- “உண்மை” இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

கோயில்கள் ஏற்பட்டது எப்படி?


உலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில்தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில் தான் அதிகமான பெரிய ஆலயங்கள் (கோயில்கள்) இருக்கின்றன.

இந்தப்படி அதிகமான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டிருப்பவையெல்லாம்
பெரியதும் அக்கால அரசாங்க அரசர்களாலேயே கட்டப்பட்டவையாகும்.

இதற்குக் காரணம் என்னவென்றால், அக்காலத்தில் இந்த ஆலயங்கள் மூலம் அரசாங்கத்திற்குப் பணம் (நிதி) வருவாய்க்கு வழி செய்து கொள்ளும் ஏற்பாடு இருந்திருக்கிறது என்பதுதான்.

எதுபோலென்றால், சுமார் 40, 50-ஆண்டுகளுக்கு முன் வரையில் அரசாங்க நிதி (வரி) வசூலுக்கு அரசாங்கமே மதுக்கடைகளை ஏற்பாடு செய்து, அதை வியாபாரம் போல் செய்து பணம் சம்பாதித்து வரி நிதியோடு சேர்த்து வந்தது போலவேயாகும். அதனாலேயே கோவில் கட்டுவது என்பதை அரசாங்கத்திற்கே உரிமையாக வைத்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன், அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் கோவில் கட்டக்கூடாது என்கிற நிபந்தனையும் இருந்து வந்திருக்கிறது. இதற்கு அதாரம் நம் தேசத்தில் சுதேச சமஸ்தானங்கள் இருக்கும் வரை அந்த “அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் எந்த கோவிலையும் கட்டக்கூடாது” என்ற நிபந்தனை இருந்து வந்திருப்பதேயாகும்.

சுமார் 2000-ஆண்டுகளுக்கு முன் சாணக்கியர் என்ற ஒரு பார்ப்பனர் பொருளாதார நிபுணராக இருந்தார். அவர் உண்டாக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நீதி நூலில் இதைப்பற்றி விளக்கியுள்ளார். இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நூலானது மனுதர்ம சாஸ்திரம், யாக்ஞ், வல்கியர், ஸ்மிருதி ஆகிய நூல்களுக்கும் முன்பு தோன்றியதாக ஆராய்ச்சியாளரின் முடிவு. இதிலிருந்து மனு, யாக்ஞவல்கியர் முதலிய நீதி நூல்களின் ஆயுள் சுமார் 2000-ஆண்டுகளுக்கு உட்பட்டதென்றே தெரிகிறது.

இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் மத சம்பந்தமான ஸ்தாபனங்களை மேற்பார்வைச் செய்யும் அரசாங்க அதிகாரி நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் வரும்படிகளையும், கோவில்களுக்கு பக்தர்களிடமிருந்து பணமாக வசூலித்து, அந்தப்படி வசூலிக்கப்படும் பணத்தையும், அரசாங்க வருவாய் நிதியுடன் சேர்க்க வேண்டும் என்ற விதிகள் இருந்திருக்கின்றன.

அரசாங்கத்திற்குப் புதிய வருவாய்த் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வசூலிக்கப் பல திட்டங்கள் இருந்தன.

ஒரு இரவில் பொது மக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு கடவுளை அல்லது மேடையை ஏற்படுத்தி, அதைத் தானாகத் தோன்றியது என்று விளம்பரப்படுத்தி அதை வணங்கினால் பல கெடுதிகள், வியாதிகள் விலகுமென்று கூறி, திருவிழாக்கள் முதலியன நடத்தி, அதன் மூலம் பணம் சம்பாதித்து பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டியது.

அரசாங்க ஒற்றர்களை விட்டு ஒரு மரத்தில் பிசாசு, முனி இருப்பதாகப்பொது மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி விட வேண்டும். பிறகு இதை விரட்டவும், திருப்தி செய்யவும், பெரிய சாந்தி விழா நடத்தி பெருந்தொகை வசூலித்து பொக்கிஷத்திற்குச் சேர்த்துவிட வேண்டும்.

அரசரது ஒற்றர்கள் சந்நியாசி மாதிரி வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து பணத்தை வசூலிக்க வேண்டியது. இவற்றால் பிசாசு நகரத்தை விட்டுப் போய் விடுகிறது. பணம் அரசரது பொக்கிஷத்திற்குச் சேருகிறது. அந்த காலத்தில் அரசனுக்குப் பணம் தேடிக் கொடுக்கும் வேலை அதிகாரிகளுக்கும் கடுமையான வேலையாகவே இருந்திருக்க வேண்டும்.

மற்றும், பாம்பைக் காட்டி பணம் பறிக்கும் தந்திரம் இதைவிட விசித்திரமானது. இது இன்றுங்கூட சிறிது மாற்றத்துடன் ஒரு கோவிலிலாவது இருந்து வருவதாகத் தெரிகிறது. சாணக்கியர் காலத்தில் தீர்த்தம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்குமென்பதை எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.

சாதாரணமாக எளிதில் இவ்விஷயங்களை நம்பாத மக்களிடத்தில் தான் இந்தத் தீர்த்தம் உபயோகிக்கப்பட்டது. இதை அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மருந்தாக உபயோகித்தார்கள். ஆனால், இந்தத் தந்திரங்களையெல்லாம்
அரசர்களுடைய காரியத்திற்காக உபயோகித்தார்களேயன்றி, இன்று நடப்பதுபோல் ஒரு சிலருடைய சுயநல வாழ்வுக்காகவன்று என்பதை ஞாபகத்திலிருத்திக் கொள்ள வேண்டும். தந்திரம் இரண்டும் ஒன்றுதான்.

“பார்ப்பான் தன்னலத்தையும், ஆதாயத்தையும் கருதி கோவில்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந்திரத்தையும் உபயோகிப்பான்” என்று பிரஞ்சு பாதிரியாரான கற்றறிந்த ´ஆபி டூபாய்´ ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதியிருக்கிறார்.

மேலும், சாணக்கியர் கூறுவதாவது:

“அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் பால் வடித்தாலாவது அல்லது அகலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்திருந்தாலாவது அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது ஜனங்களிடம் காட்டி, பிரசித்தப்படுத்த வேண்டும்.”

“அல்லது ஒரு கிணற்றில் அநேக தலைகளையுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.”

“ஒரு பாம்பு விக்கிரகத்தில் துவாரமிட்டோ அல்லது கோவிலின் இருட்டு மூலையிலோ அல்லது ஏதாவது பொந்திலோ பசியால் வாடிக் கிடக்கும் பாம்பு ஒன்றை வைத்து ஜனங்களைப் பார்க்கச் சொல்லி பணம் வசூலிக்கலாம்.”

“இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத ஜனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தமென்றும், பிரசாதமென்றும் சொல்லி, குடிக்கும்படிச் செய்து அவர்கள் குடித்து மயங்கியவுடன் அதற்குக் கடவுள் கோபம் என்றும் என்றும் சொல்ல வேண்டியது. அல்லது தாழ்ந்த ஜாதியானொருவனைப் பாம்பு கடிக்கும்படிச் செய்து, இம்மாதிரி துர்சகுணம் நேரிடாது தடுக்கப் போவதாகப் பாசாங்கு செய்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.”

“தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகள் அரசனது பொக்கிஷத்தைச் சேர வேண்டும். அரசனது செலவுக்காக அரசன் வாழும் பொருட்டு பணம் வசூலிக்க ஒரே இரவில் தேவதைகளையும், பீடங்களையும், ஸ்தாபித்து திருவிழாக்கள் நடத்த வேண்டும். காணிக்கைகளைப் பெறுவதற்காக அடிக்கடி கடவுள்கள் தோன்றும்படிச் செய்ய வேண்டும்.

சாதாரணமாக மிக வெளிப்படையான தந்திரங்கள்தான் அதிகமாகப் பலனை அளிக்கின்றது. கடவுள் தம் மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்து பணம் திரட்டும் வழி முன் காலத்தில்தான் மற்ற நாட்டுப் புரோகிதர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவில் இன்றும் இவ்வழக்கம் ஒயவில்லை. இங்கு விக்கிரகங்களே பேசுகின்றன. இவற்றை வழிபடுகிறவர்கள் மிகக் கவனமாகக் கேட்டு பரவசமடைகிறார்கள். ஆனால், கல் விக்கிரகத்தின் உள்ளோ பக்கத்திலோ வஞ்சகன் ஒருவன் மறைந்திருந்து விக்கிரகத்தின் வாய் வழியாகப் பேசுகின்றான் என்பதை
இவர்கள் அறிவதில்லை” என்று ´ஆபே டூபாய்´ கூறுகின்றார். இவை போன்று இன்றளவும் கையாப்பட்டு வருகிற பலவிதத் தந்திரங்களையும் அவர் விரிவாக விளக்குகிறார்.

இனி நமது சாணக்கியரைக் கவனிப்போம். சாணக்கியர் காலத்தில் கோவில் வருவாயிலிருந்து ஒரு பைசாவாவது அரசனது பொக்கிஷத்தைச் சேர தவறி விட்டால் அந்த இடத்திலேயே கோவில் அதிகாரி ஏன் தூக்கிலிடப்பட்டிருப்பார் என்பதை நாம் மேற்சொன்னவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அது மிகவும் நியாயமே. ஏனெனில், அக்காலத்தில் விக்கிரகங்களும், பீடங்களும் அரசனது வியாபாரத்திற்காக ஏற்பட்டவைகளாகும். பொது ஜனங்களின் பணத்தைச் செலவிட்டே விக்கிரகங்களையும், பீடங்களையும், மடங்களையும் உண்டு பண்ணி பரிபாலித்து அவற்றைப் பற்றி பெரியதாக விளம்பரப்படுத்தியும் வந்தார்கள். இக்காலத்தில் அரசாங்கத்தார் எவ்வாறு பெரும் பொருள் செலவிட்டு மேட்டூர் தேக்கத்தையும், சுக்கூர் அணைக்கட்டையும் கட்டி அவற்றினின்றும் லாபத்தை எதிர்பார்க்கின்றார்களோ அதே போல முன்காலத்து அரசர்கள் கோவில்களையும், ஸ்தலங்களையும், உற்பத்தி செய்ததும் லாபத்தைக் கருதியோயாகும்.

இம்மாதிரி ´மத ஸ்தாபனங்களை´ ஏற்படுத்தி முற்கால மன்னர்களைச் சுற்றி விரோதிகள் எப்பொழுதும் இருந்து வந்ததால் இடைவிடாது யுத்தங்கள் நேரிட்டுக் கொண்டேயிருந்தன. இதற்காக அவர்கள் பெருஞ்சேனைகளை வைத்திருந்தனர். யுத்தங்களுக்கும், சேனைகளுக்கும் வேண்டிய பணத்திற்காக ஏராளமான வருவாய் தேவைப்பட்டது. கோவில் வருவாயைக் கொண்டு பார்ப்பனருக்கு மட்டும் சோறு போடுவது என்றிருந்தால் அரசும், கோவிலும் அன்றே மறைந்திருக்கும். இக்கோவில்களையும், பீடங்களையும், கடவுள்களையும் படைத்த அக்காலத்து அரசர்களுக்கு அரசாங்கத்தை நடத்தும் கஷ்டம் எவ்வளவு என்று தெரியும்.

உதாரணமாக பூரண மதுவிலக்கு ஏற்பட்டால் நாட்டில் உயர்தரக் கல்வியை நிறுத்த நேரிடுமென்று இன்று (இராஜாஜி முதலியவர்கள்) சொல்லுவது போல, தங்களது ஷேமமும் கோவில் வருமானத்தில் தொங்கிக் கிடந்தன என்பதை அக்கால அரசர்கள் அறிந்திருந்தார்கள். ஆதலால் அவர்கள் அதன் மீது மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள். இவ்வுலக சுக துக்கங்களைக் குறித்து அவர்கள் நினைத்தார்களேயன்றி மோட்சலோகத்தைப்பற்றி நினைக்கவில்லை. இக்காலத்து சுதேச மன்னர்களில் பெரும்பாலோர் யாதொரு பொறுப்பும் கவலையுமெடுக்காது மோட்சலோகத்தைப் பற்றி நினைக்கிறார்கள். பார்ப்பானை திருப்தி செய்தால் மோட்சத்துக்குச் சீட்டு கிடைத்துவிடுமென நம்புகிறார்கள். அங்ஙனம் செய்துவிட்டு தங்கள் ராஜ்ஜியங்களைவிட்டு தற்கால மோட்ச பூமியான பாரிஸ் முதலிய மேல்நாடுகளுக்குச் சென்றுவிடுவதுமுண்டு.

சர்தார் கே.எம். பணிக்கர் அவர்கள் “இந்திய சமஸ்தானங்களும், இந்திய அரசாங்கமும்” என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.

“பல சிற்றரசர்கள் மிதமிஞ்சிய சுக போகங்களுடன் இழிவான வாழ்க்கை வாழ்வதற்குக் காரணம் அவர்கள் இராஜ்ஜிய பாரத்தில் நேராக பொறுப்பேற்று நடத்தாதயேயாகும். முன் காலங்களில் குடிகளைத் துன்புறுத்தும் கொடுங்கோல் மன்னனையும் தனது சுகமொன்றையே கருதும் துர் நடத்தைக்காரரையும் சும்மா விட்டு வைத்திருக்க மாட்டார்கள்.
வெளியிலிருந்தேற்படும் படையெடுப்போ அன்றி உள்நாட்டுக் கலகமோ அவனது வாழ்க்கையை முடித்துவிடும். ஆனால் இக்காலத்தில்
அப்படியல்ல. ஒரு அரசன் தான் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மீறாதிருப்பதுவரையும் நாகரீக ஆசாரங்களை வெளிப்படையாக புறக்கணியாதிருப்பது வரையும் அவனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தார் ஆதரவிருக்கின்றது. அவன் தனது சுக போகங்களுக்காகத் தன் இஷ்டம் போல் பொக்கிஷத்தை உபயோகிக்கவும், குடிகளை கொள்ளையடிக்கவும் விட்டுவிடுகிறார்கள்.”

சர். தாமஸ் மன்ரோவின் அடியிற்கண்ட குறிப்புக்களையும் திரு பணிக்கர் அவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள்.

“இந்தியாவில் மோசமான ராஜ்ய பாரம் ஏற்படுமாயின் அரண்மனையில் புரட்சி உண்டு பண்ணியோ அல்லது உள்நாட்டுக் கலகத்தாலோ அதைச்
சரிபடுத்துவதுதான் வழக்கம். ஆனால், உள்நாட்டு வெளிநாட்டு விரோதிகளினின்றும் மன்னனைக் காப்பாற்ற பிரிட்டிஷ் படைகளிருப்பதால் அவ்விதம் கொடுங்கோன்மையைப் பரிகரிக்கும் வழியெதுவுமில்லாமற் போய்விடுகின்றது. தனது பாதுகாப்புக்கு அன்னியர் உதவியிருக்கிறதென்று நம்பிக்கையால் அவன் சோம்பேறியாய் விடுகின்றான். தனது குடிமக்களுடைய வெறுப்பு தன்னையொன்றுஞ் செய்ய முடியாதவனாகவும் பேராசை பிடித்தவனாகவும் ஆகிவிடுகின்றான்.”

கோவில்களிலிருந்து தனக்குப் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதொன்றையே அரசன் கவனிப்பான் என்பது இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றிலிருந்து விளங்கும். யார் கோவிலுக்குப் போய் வணங்கினார்கள்; யார் மதுவருந்தினார்கள் என்பதைப்பற்றியெல்லாம் அவன் கவனித்ததில்லை. இவர்கள் சண்டாளராகவும், சூத்திராகவும், வைசியராகவும், சத்திரியராகவும், பிராமணராகவும் இருக்கலாம். சண்டாளனாக விருந்தாலும் அவன் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பணம் கொடுக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அரசனும் திருப்தியடைந்திருப்பான். பணம் வரும் என்று தெரிந்தால் அரசன் தனது விக்கிரகங்களையும், பீடங்களையும், ஸர்ப்பங்களையும் கொண்டு சண்டாளருக்கு விசேஷ வேடிக்கைகளையும் காட்டியிருப்பான். ஒரு சண்டாளன் தனது கோவிலுக்குள் நுழையவோ, விக்கிரகத்தையோ, பாம்பையோ, மரத்தையோ வணங்கவோ செய்யவொட்டாமல் ஓர்
வர்ணாசிரம தர்மி தடுப்பது நிமித்தம் தனது காதுக்கு எட்டினால் இம்மாதிரி தடை செய்பவர்கள் பார்ப்பனராக இருந்த போதிலும் இவர்களை சமீபத்திலிருக்கும் மரத்தில் கட்டி தூக்கியிருப்பான்.

அக்காலத்தில் இந்துக் கோவில்கள் அரசனுடைய வருவாய்க்கு அவ்வளவு தூரம் மூலகாரணமாயிருந்தன. ஆகவே எக்காரணத்தைக் காட்டியேனும் இவன் சண்டாளன்; இவன் தாழ்ந்த சாதி; ஆகையால் கோவிலுக்குள் போகவோ, வணங்கவோ கூடாதென்று யாரேனும் சொன்னால் அவன் அந்த இடத்திலேயே கொடிய குற்றஞ் செய்தவனாகக் கருதப்பட்டிருப்பான்.

கோவில்கள், அரசாங்க ஸ்தாபனங்களாகவிருந்தன; ஏதேனும் ஒரு ஸ்தாபனம் ´பொதுச் சொத்து´ என்று சொல்லக்கூடியதாக இருந்திருந்தால் அது இந்தக் கோவில்களாகும். இப்போது உயர் சாதி இந்து வக்கீல்கள் கோயில்களைப் பொது ஸ்தாபனங்கள் என்று சொல்லும் போது ஒரு புது மாதிரியான விசேஷ அர்த்தத்துடன் சொல்லுகின்றார்கள். பிரதம திருஷ்டியில் நான்கு சாதியாருக்கும் தட்டுத் தடையின்றி இக்கோயில்களில் பிரவேசித்து வழிபட உரிமையுண்டு என்பது இவர்கள் கூற்றாகும்.

“வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய மதத்தில் விக்கிரக ஆராதனையில்லை. இது பின்னர் தோன்றிய இழிவுபட்ட ஆராதனையாகும்” என்று காலஞ்சென்ற மாக்ஸ்முல்லர் என்னும் உலகப் பிரசித்தி பெற்ற மேல்நாட்டு ஆசிரியர் கூறுகின்றார்.

வங்காள தேசத்து பிரபல வழக்கறிஞரான மிஸ்டர் ஜே.சி. கோஷ் தமது தாகூர் சட்டப் பிரசங்கத்தில் அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்.

மக்கள் யாகம் முதலியவற்றை நடத்தி வந்த காலத்தில் கோயில்களையும், விக்கிரகங்களையும் ஸ்தாபிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பிராமணர்கள் மட்டுமே அக்கினியை வளர்க்கலாம். அதனால் அவர்களை அக்கினி ஹோத்திரிகள் என்றழைத்தார்கள். மற்ற சாதியாரும் உயர்ந்த போது அவர்கள் வழிபடத் தெய்வங்கள் வேண்டியதாயிற்று. பிராமணரது ஆதிக்கம் குறையவும், அக்கினி வணக்கம் தனது செல்வாக்கையிழந்தது. இதிலிருந்து விக்கிரக வணக்கம் ஆரம்பமாயிற்று. மற்றும் புத்த விக்கிரகங்களையும், ஸ்தூபிகளையும் ஸ்தாபித்து புத்த மதத்தினர் வழிபட வாரம்பித்தது இந்துக் கோயில்களையும், விக்கிரகங்களையும் ஸ்தாபிப்பதற்கு வழிகோலியாயிற்று.

விக்கிரகங்களையும், கோயில்களையும் ஏற்படுத்தியபோது அவற்றைப்
பரிபாலிக்க சொத்துக்களை விட வேண்டியதும் அவசியமாயிற்று! எனவே நிலங்களை விட்டதுமன்றி, பல பழைய கோவில்களில் மக்களை ஈர்க்க (அடிமைப் பெண்களையும்) தாசிகளையும் விட்டார்கள். இதிலிருந்து இந்தியாவில் எந்த நோக்கத்துடன் விக்கிரக ஆராதனை ஆரம்பிக்கப்பட்டது என்பது புலனாகும். இப்பொழுது ஒவ்வொரு கோயிலிலும் நடன சாலை இருப்பதாகவே கருதப்படுகிறது என்று மிஸ்டர் கோஷ் சொல்கிறார்.

பண்டைக்காலத்தில் இக்காலத்திலிருப்பது போலவே கோவில்கள் வேடிக்கை விநோத ஸ்தலங்களாகவே இருந்து வந்தன. இவ்வுத்தேசத்துடன் தான் அக்கால அரசர்களும் ஆலயங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். எனவே இந்நாட்டிலிருக்கும் பல கோயில்கள் வேசியர் விடுதிகளைவிடச் சிறந்தவையல்லவென்று காந்தியார் குறிப்பிட்டது சரித்திரப்படியும் மிகையாகாது. இந்நோக்கத்துடனேயே ஆலயங்களை ஸ்தாபித்தார்கள் என்பது சரித்திரப் பூர்வமாக உண்மையாகும்.

– (1970-ம் ஆண்டில் வெளியான தந்தை பெரியார் அவர்களின் 92-வது பிறந்த நாள் விழா மலரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)