ஏன் இந்த நடிப்பு?


கைத்தட்டத்தானா உன் கை? – தமிழா!
கைத்தட்டத்தானா உன் கை

வையமெல்லாம் பகைவர்
நமைமோதும் வேளை – உன்

கையிரண்டும் களத்தில்
ஏந்தாதா வாளை ?

ஆட்சி இழந்தாய்
திசைதோறும் அலைந்தாய்! – வெறும்

காட்சிப் பொருளாய் நீ
உயிர் வாழ்ந்து தொலைத்தாய்!

காட்சிப் பொருளாய் நீ
உயிர் வாழ்ந்து தொலைந்தாய்!

என்னடா உனக்கு
என்றென்றும் உதையா? – உன்

முன்னவன் இமயம்
வென்றானே – கதையா?

கொடுமை மறந்தா உன்
கை ஓசை வெடிப்பு ? – அட !

அடிமை உன் வாழ்வில்
ஏன் இந்த நடிப்பு?

தமிழை கல்விமொழி ஆக்கு


தமிழை கல்விமொழி ஆக்கு
தமிழ்மொழி பேசட்டும்
உன் பிள்ளை நாக்கு

வெள்ளைக்காரன் மொழியை
கற்றுக்கொடாதே- என்

பிள்ளை வாயில் கொடிய
நஞ்சை இடாதே

மணிப்புறா ஒரு நாளும்
குயில் மொழி ஏற்காது!

மான் நரி மொழியைத்தன்
நாக்கிலே தூக்காது!

அணிற்பிள்ளை கிளிமொழி
பேசவே பேசாது!

ஆங்கிலத்தை நீயேன்
சுமக்கின்றாய் கூசாது?

பிள்ளையே தன் தாயை
கண்முன் வதைப்பதா?

பேசும் தாய்மொழியின்
உயிரை நாம் சிதைப்பதா?

பள்ளியே தமிழுக்கு
கொள்ளியாய் ஆவதா?

பாராண்ட தமிழ்மொழி
சாவதா? சாவதா?

வள்ளுவன் ஆங்கிலம்
படித்தானா? இல்லையே!

வந்தான் வெள்ளையன் இங்கு
வந்தது தொல்லையே!

வெள்ளைக்காரன் போயும்
விலங்கு அறல்லையே!

வேண்டாத தமிங்கிலம்
உடைக்குது பல்லையே!

எத்தனை பெரிய மனம் உனக்கு?


எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு

ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்! – உன்னை
எட்டி உதைத்தாலும் அவன் மனிதன்!
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்! – உன்
கதையை முடித்தாலும் அவன் மனிதன்!

அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்! – உன்னை
அடிமை கொண்டாலும் அவன் மனிதன்!
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன் – உன்
உரிமை பறித்தாலும் அவன் மனிதன்!

தாக்க வந்தாலும் அவன் மனிதன் – உன்
தமிழைக் கெடுத்தாலும் அவன் மனிதன்
ஏய்க்க வந்தாலும் அவன் மனிதன் – தமிழ்
இனத்தை அழித்தாலும் அவன் மனிதன்!

இனமானப் புலி எங்கே?


இன்றிருந்த பகல்தனிலே
ஞாயிறில்லை!

இரவினிலும் நிலவில்லை!
விண்மீன் இல்லை!

இன்றெரிந்த விளக்கினிலே
வெளிச்சம் இல்லை!

இன்றிதழ்கள் ஒன்றிலுமே
முறுவல் இல்லை!

எந்தமிழர் மனத்திந்நாள்
இயக்கம் இல்லை!

இன்றெமது நாட்டினிலே
பெரியார் இல்லை!

எவர்தருவார் ஆறுதல்? இங்
கெவரும் இல்லை!

கோல்தரித்து நேற்றுலகைத்
தமிழன் ஆண்டான்!

கொற்றவனை அவனை இழி
வாக்கி மார்பில்

நூல்தரித்து மேய்ப்போராய்
நுழைந்த கூட்டம்

நூறு கதை உருவாக்கி
பிரம்ம தேவன்

கால்தரித்த கருவினிலே
தமிழன் வந்தான்

காணீர்’ என்றுரைத்தமொழி
கேட்டுக் கண்ணீர்

மேல்தரித்து நெஞ்சில் வெந்
தழல் தரித்து

வெகுண்டெழுந்த பெரியாரை
இழந்து விட்டோம்!

அஞ்சுதலும் கெஞ்சுதலும்
அறியா வீரர்

அறவலியும் மறவலியும்
நிறைந்த செம்மல்

நெஞ்சுரமும் நிமிர்நடையும்
படைத்த வல்லான்

நிறைமதியும் போர்க்குணமும்
இணைந்த ஆற்றல்

துஞ்சுதலும் உடற்சோர்வும்
இலாப் போராளி

தொடுபகையும் சூழ்ச்சிகளும்
உடைத்த சூறை

நஞ்சரையும் வஞ்சரையும்
மிதித்த வேழம்

நடுவழியில் எமைநிறுத்தி
நடந்ததெங்கே?

அட தமிழா!


என்னருந் தமிழா!
ஏனடா… ஆண்டான்

புண்ணினை நக்கிப்
போட்டதை விழுங்கும்

உண்ணி நாயானாய்
ஒழிந்ததோ மானம்?

கண் சிவந்தோடிக்
களம் புக வாடா!

ஆண்டவன் அன்றோ?
அட தமிழா நீ

பாண்டியன் அன்றோ?
பாரடா உன்னை

ஈண்டு மாற்றார்கள்
எச்சிலால் வளர்த்தார்…

கூண்டினை நொறுக்கு!
குதியடா வெளியே!

உரிமை இழந்தாய்!
ஊழியஞ் செய்தார்!

வரிகள் கொடுத்தாய்!
வளைந்து பிழைத்தாய்!

விரிபழம் புகழை
விற்றனை பாவி!

எரிமலை ஆகடா!
எழுக! நீ எழுக!

தூக்கடா வாளை!
தோளை உயர்த்தடா!

தாக்கடா பகையை !
தலைகளை வீழ்த்தடா!

நீக்கடா தளையை!
நிமிர்ந்து நில்லடா!

ஆக்கடா கொற்றம்!
ஆளடா இன்றே!

தமிழன் முதுகெழும்பைக் காணவில்லை


தமிழன் முதுகெழும்பைக் காணவில்லை!
தலைமீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!
தமிழன் முதுகெழும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!

இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!
திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே!

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்து விட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம் போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன?

நீயா தமிழனின் பிள்ளை?


சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! – நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! – அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! – அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! – அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!