எனக்கு ‘மதம்’பிடிக்காது!


எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தின் முகப்பில் பெரியாருடைய வாசகமொன்று எழுதப்பட்டிருக்கிறது. ‘பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும்’ என்பதுவே அது. அவ்வாசகத்தைக் கண்ணுறும்போதெல்லாம் ஒரு குறுஞ்சிரிப்பு முகம் முழுக்கப் பரவும். ‘பெரியாரே! நீங்கள் மகாகுசும்புக்காரர்’ என்று செல்லமாக மனதுள் சொல்லிக்கொள்வேன். பெரியாரோடு நெருக்கமாவதற்கு உந்துதலாக அமைந்த ‘வீடு தேடும் படலத்திற்கு’நன்றி.

சிறுவயதிலிருந்தே ஒரு கெட்டபழக்கம். அதாவது யாராவது எதையாவது ரொம்பவுந்தான் தூக்கிப் பிடித்தால், ‘அதை’நான் மறுதலித்துவிடுவேன். அப்படி மறுக்கப்பட்டவையும் வெறுக்கப்பட்டவையும் நிறைய உண்டு. ஒரே விதிவிலக்காக அப்பாவும் அண்ணாவும் புத்தகங்களுக்குள்ளேயே தலையைப் புதைத்துக்கொண்டிருந்தபோதிலும், அவற்றில் எனக்கு ஒவ்வாமை ஏற்படவில்லை. அம்மா ஒரு சைவப்பழம். நமக்கெல்லாம் புத்தகங்கள்போல அவருக்கு சாமி. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதம் மற்றும் கோயில் நிச்சயமாக உண்டு. அந்நாட்களில் வீடு கழுவப்பட்டு, சாம்பிராணிப் புகை சுழன்றுகொண்டிருக்கும். அம்மா நடுங்கிய குரலில் தேவாரம் கதைத்துக்கொண்டு வேலைகளைச் செய்வார். அம்மா எங்களை அதிகம் சோதிக்கவிடாமல், அப்பா சுசீலாவையோ சௌந்தரராஜனையோ பாடவிட்டுவிடுவார். பக்திப்பாடல்கள் வீடெல்லாம் கரைபுரண்டு ஓடுகையில் சாமி மீது கொஞ்சூண்டு பக்தி வந்து மெல்லிய பரவசமாக உணர்வோம். ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே..’என்ற பாட்டு எனக்கு மிகவும் பிடித்தது. செவ்வாய் தவிர, வெள்ளிக்கிழமை விரதம் பிடிப்பதற்கு ஒத்திகையாக வியாழக்கிழமையும் மச்சம் (புலாலுணவு) தவிர்க்கப்படும்.

நாய், பூனைகள் உட்பட வீட்டிலுள்ள அனைவரும் அந்நாட்களில் அம்மாவுடன் சேர்ந்து விரதம் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம். அப்பா மகா நக்கல்காரர். அதிலும் அம்மாவை நக்கலடிப்பதென்றால், ஒரு முழுப்போத்தல் சாராயத்தை அவரிடம் அப்படியே தூக்கிக்கொடுத்து ‘உங்களுக்கேதான்’என்று சொல்வதற்கிணையான ஆனந்தம். ‘ஒரு குடிமகனின் சரித்திரம்’என்ற எனது பதிவில் இடம்பெற்ற மணியம் மாமாவில் அப்பாவின் சாயலும் இருக்கும். அப்பா சொல்வார்:

“இன்று பொன்னியும் விரதம். ஆனா அது கொம்மாவைப்போல நல்ல சீலையாப் பாத்து உடுத்துக்கொண்டு கோயிலுக்குப் போகேலாது”என்று.பொன்னி என்பது எங்களது நாயின் பெயர். அதற்கு ஏழு வயதாகிறது. “கொம்மா சொர்க்கத்துக்குப் போகேக்குள்ள பொன்னி உட்பட நாங்கள் எல்லாரும் அவவின்ரை வாலைப் பிடிச்சுக்கொண்டு சொர்க்கத்துக்குப் போயிடலாம்.”என்பார்.

தற்கொலை செய்து இறந்துபோன எனது சகோதரியின் நினைவுநாளன்று அம்மா மோட்சார்ச்சனை (மோட்சம் என்றால் சொர்க்கமென அறியாதவர் அறிக) என்றொரு அர்ச்சனை செய்வார். அதற்கு சில நூறுகள் செலவாகும். அந்த நூறுகளைத் தன்னிடம் தராமல் ஐயரிடம் அம்மா கொடுப்பதில் அப்பாவுக்கு வருத்தமான வருத்தம். அவர் சொல்வார்:

“எவ்வளவு காசுக்கு மோட்சார்ச்சனை செய்யிறமோ அந்தக் காசுக்கு அளவா சொர்க்கத்துக்குப் பக்கத்திலை போகலாமாம்.”

அம்மாவின் கனவில் சாமிகளாக வருவர்.

“நல்ல கடுஞ் சிவப்பு நிறத்திலை சீலை கட்டிக்கொண்டு நெத்தியிலை பெரிய குங்குமப்பொட்டும் வைச்சுக்கொண்டு தலையை விரிச்சுப்போட்டு அவ வாசலிலை வந்து நிக்கிறா… சிரிப்பெண்டால் அப்பிடியொரு சிரிப்பு… வாங்கோ எண்டு கூப்பிடுறன். வாசலிலையே நிக்கிறா…”என்று அம்மா மெய்சிலிர்க்கும் பரவசத்தோடு கனவை மீள்ஞாபகித்துக்கொள்வார்.

இளம்வயதில் தன்னை மோகினிப்பேய்கள் துரத்தியதாக அப்பா பதிலுக்குக் கதைவிடுவார்.

கடவுளரும் பேய்களும் விருத்தெரியாத சின்னவயதில் சுவாரசியம் தந்தார்கள். இப்போதில்லை.

அம்மாவின் அதிதீவிரமான பக்தியும் அதைக்குறித்த அப்பாவின் பார்வையும் மதம் குறித்த எனது சிந்தனைகளை வடிவமைத்தன. (இதைக் கட்டமைத்தன என்று சொல்லவேண்டுமோ…) சடங்குகள் பெரும்பாலும் பாசாங்குகளாக இருக்கக் கண்டோம். தீபா தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல திருவிழா நாட்களில் கோயில்பக்கம் மறந்தும் போவதில்லை. பளபள சேலைகளும் நகைகளும் அர்ச்சகர்களின் பாரபட்ச பந்தாக்களும்… அர்ச்சனைச் சீட்டுக் கட்டணத்தொகைக்கேற்ப காட்டப்படும் தரிசனங்களும் கழுத்தில் விழும் மாலைகளும்… ஏழைகளின் கடவுள் இல்லை அவர்! இதை நான் திருச்செந்தூரில் கண்ணால் பார்த்து வெதும்பியிருக்கிறேன். எங்களுக்கு முன்னால் ஏழ்மைக்கோலத்தில் பரட்டைத் தலையோடு ஒரு பெண் திருநீறுக்காக கையை நீட்டிக்கொண்டே இருந்தார். நிமிடங்கள் கழிந்தும் அர்ச்சகரின் கண்களில் அந்தப் பெண் தட்டுப்படவேயில்லை. எங்கள் கையில் இருந்த திருநீறை நீட்டியபோது வாங்கி நெற்றியில் வைத்துக்கொண்டு கல்லில் உறைந்திருந்த சாமியை ஒரு ‘பார்வை’பார்த்துவிட்டுப் போனார். கலங்கியிருந்த அந்தக் கண்கள் இன்னமும் நினைவிலிருக்கின்றன. ‘கல்லே… உனக்கும் கண்ணில்லையா?’என்ற சீற்றத்தை அதில் பார்த்தேன்.

கனடாவில் நான் இருந்தபோது கதவுதட்டும் மதவியாபாரிகளை என் கணவர் வாசலிலேயே நிறுத்தி அனுப்பிவிடுவார்.

“மதத்தினால் எத்தனை நாடுகளில் எவ்வளவு மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா…? எங்களுக்கு மதம் அவசியமில்லை”என்று, அவர்களிடம் அவர் சொல்லவும் தவறியதில்லை.

சாதியும் மதமும் இல்லாமல் இப்பூவுலகில் நிச்சயமாக வாழ்ந்துவிடமுடியும் என்றே நினைக்கிறேன். ‘விரதம் பிடி… விரதம் பிடி’என்று சொல்லிக் களைத்த அம்மா இப்போது ‘வெள்ளி, செவ்வாயிலும் மச்சம் சாப்பிடுறியாமே…’என்று ஆதங்கத்தோடு தொலைபேசியில் கேட்குமளவுக்கு இறங்கிவந்திருக்கிறார். விரதம் என்பது உடலின் சீரண உறுப்புகளுக்கு ஓய்வு என்பதாகத்தானே இருக்கமுடியும்? அது தன்னை வருத்துவதாக மாறுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அம்மாவின் பேச்சைக் கேட்டு விரதம் பிடித்த நாட்களில் எல்லாம் சாப்பாட்டு நினைவாகவே இருக்கும். ‘எப்போதடா இலையின் முன் அமர்வோம்…’என்ற நினைவன்றி வேறேதும் இருந்ததில்லை.

“எலும்பைக் கழிச்சுப் பாத்தால் பதினைஞ்சு கிலோவும் வராது. வாயால் இயங்குற ஆள்… விரதமெல்லாம் ஏன்… மனசு சுத்தமாயிருந்தால் போதும்”என்ற வார்த்தைகளை ஆஸ்பத்திரியில் வைத்து அப்பா சொன்னார். ‘கந்தசஷ்டி பிடிக்கிறேன் பேர்வழி’ என்று ஆறு நாட்களும் விரதமிருந்து மயங்கிவிழுந்துகிடந்த அம்மாவைப் பார்த்தபடி சொன்ன வார்த்தைகள் அவை.

ஆனாலும், சாமியை அப்படியொன்றும் அம்போவென்று விட்டுவிட என்னாலும் முடிந்ததில்லை. சாமி என்னை அம்போவென்று விட்டுவிடுமோ என்ற உள்ளார்ந்த பயம் காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு நாட்களும் காலையில் எழுந்ததும் அம்மன் முகம் பார்த்து ஒரு நொடி வணக்கம் போடுவதுடன் எனது வழிபாடு முடிந்தது. சாப்பிடப் போவதன் முன் சாமிக்கு அவசியம் நன்றி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஏனெனில், பசி என்பது அதிபயங்கரமானது என நான் அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறேன். என்னிடம் ஒரு அம்மன் படம், ஒரு அன்னைவேளாங்கன்னி சொரூபம் (மூன்றங்குல உயரம்)இருக்கின்றன. நான் மதுரை போனால் இரண்டுபேரும் என்னோடு வருவார்கள். சேலம் போனால் சேலத்திற்கு வருவார்கள். கனடா, ஈழம் இங்கெல்லாம் இந்த இரண்டு தோழியரும் பயணச்சீட்டு எடுக்காமல் என்னோடே பயணிப்பார்கள். தாங்கமுடியாத தனிமையும் துயரமும் பொங்கியெழும் நேரங்களில் மனிதர்களிடம் அதைப் பகிர்ந்துகொள்வதில்லை. ஓரிரு நிமிடங்கள் இந்த இரண்டு பேரிடமும் சொல்லியழுதால் மனசு இலேசாகி அடுத்த வேலை பார்க்கப் போய்விடுவேன். துக்கம் கண்ணீராக வெளித்தள்ளப்படும்போது மனம் இலேசாவது எல்லோருக்கும் இயல்பே. எனக்கென்னவோ ஆண் சாமிகளைப் பிடிப்பதில்லை. அதற்கு பெண்ணியம் ஆணியம் மண்ணீயம் என்ற உள்ளர்த்தங்கள் ஒன்றும் கிடையாது.

திருவிழா தவிர்ந்த ஏனைய நாட்களில் கோயில்கள் அத்தனை அழகாயிருக்கும்! விபூதியும் பூக்களும் கற்பூரமும் கலந்தொரு வாசனை வீசும் பிரகாரத்தின் படிகளில் அமர்ந்து அரசிலைகள் அசைவதைப் பார்த்துக்கொண்டேயிருக்கப் பிடிக்கும். மனதுள் பெருவெளியொன்று விரிந்து விரிந்து செல்லும். உலகத்தின் கசடுகள் எல்லாவற்றையும் கடந்து எல்லாவற்றையும் எல்லோரையும் நேசிக்கவேண்டுமென்ற தாபம் பெருகிடும் நேரமது. அந்த அமைதிக்குப் பெயர் என்னவென்று அறிந்துகொள்ள முற்பட்டதில்லை. ஒருவேளை அந்த அமைதியின் பெயர்தான் கடவுளோ…?

மதத்தின் பெயரால் நடக்கும் பித்தலாட்டங்களை, படுகொலைகளை, சித்துவேலைகளை, மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி நடக்கும் கொள்ளைகளைப் பார்க்குந்தோறும் மதத்தைத் தூக்கியெறியத் தோன்றுகிறது. அதேசமயம், ஏதோவொரு சக்தி நமக்கு மேல் இருக்கிறது; அதுவே நம்மை இயக்குகிறது என்ற பயம் இல்லாமல்போவது ஆரோக்கியமானதல்ல; அப்படி ஒன்று இல்லையெனில் தறிகெட்டலைவோம் என்றும் தோன்றுகிறது. சரி-பிழை என்ற இருவேறுபட்ட மனோநிலைகளில் தத்தளிப்பது எல்லோருக்கும் நேரக்கூடியதே.

நாத்திகவாதி அன்றேல் ஆத்திகவாதி என்று நம்மை முத்திரை குத்திக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ‘நான் இன்னார்தான்’என்று பிரகடனப்படுத்தவேண்டிய தேவை இல்லை. இந்த வாழ்க்கை விடுவிக்கமுடியாத புதிர்களைக் கொண்டது. அதனாலேயே அது சுவாரசியமானதாகவும் இருக்கிறது.

பெரியாரைப் படிக்கவாரம்பித்திருக்கிறேன். அந்த மிகப்பெரிய ஆளுமையிடமிருந்து நான் நிறையத் தெரிந்துகொள்வேன். யார் கண்டது? எதிர்காலத்தில் நானொரு மிகச்சிறந்த கடவுள்மறுப்பாளியாக மாறவும்கூடும். ‘நாத்திகன்…நாத்திகன்…’என்கிறார்கள். கடவுளை மறுக்கும் பெண்களை எப்படி அழைப்பது?