கலங்கள் தொடரட்டும் ….


”சாதிவெறியர்களின் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கலகம் துவங்கியிருக்கும் காலம் இது.”

மதுரையின் உத்தபுரத்தில் தகர்க்கப்பட்ட தீண்டாமைச் சுவர், பலரிடமும் ஒரு அசைவை ஏற்படுத்தியது. தமிழ்ச் சமூகம் முன்னேறிவிட்டதாக பலரும் பொய்த்தம்பட்டம் அடித்துவந்த நிலையில், மாயத் திரையை கிழித்துத்துப்போட்டது அந்த ஆதிக்கச் சுவர்.
அடுத்ததாக செட்டிபுலத்தின் நடைபெற்ற ஆலைய நுழைவுப் போராட்டங்கள், தொடர்ந்து நடைபெற்ற கைது நடவடிக்கைகளும், தடியடி சம்பவங்களும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே கடுமையான தாக்குதலுக்கு உள்ளான சம்பவமும் ஊடகங்களால் மறைக்கபட்டாலும். அரசு யந்திரத்துள்ளும் புறையோடியிருக்கும் சாதி ஆதிக்கத்தை பொதுத் தளத்தில் வெளிச்சமாக்கியது. பச்சிளம் பிஞ்சென்றும், தாடி நரைத்த கிழவனென்றும் இந்த சாதிவெறி எந்த வரையரையும் வைத்திருப்பதில்லை.

தீண்டாமை போகிறபோக்கில் ஏற்பட்டதில்லை, எனவே போகிறபோக்கில் முடியப் போவதுமில்லை. அதற்கு எதிரான கலகங்கள் வெடிக்கும்போது, சாதி ஆதிக்க நடைமுறைகள் ஒருபுறமும். சாதி அடிமைத்தனம் (இந்தப் பதம் சரியெனே நினைக்கிறேன்.) தலித் மக்களின் மீது காலகாலமாய்ச் செலுத்தப்பட்டுவரும் அடக்குமுறைகளின் காரணமாக அவர்கள் எண்ணத் தளத்திலேயே திணிக்கப்பட்டிருக்கும் இந்த அடிமைத்தனம். அடங்கிவாழ அவர்களை பழக்கிய தன்மை. மற்றொருபுறமும். நம்மைத் தாக்கத் துவங்குகின்றன.

அப்போதெல்லாம், ஆதிக்கத் திமிருக்கு தக்க பதிலடி கொடுப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவு முக்கியத்துவம் தலித் இளைஞர்களிடமும், சாதி எதிர்ப்புணர்வு கொண்ட மற்றவர்களிடமும் விழிப்புணர்வை பரப்புவதிலும், போராட்டக் களத்திற்குள் இழுத்துவருவதும் மிக அவசியம். இதை நேரடி அனுபவம் உணர்த்தியது.

நேற்று திருப்பூரில் நடந்தது மேம்போக்காக சாதாரண பிரச்சனைதான், (செய்தி) தலித் இளைஞனுக்கு முடி திருத்துவதற்கு மறுத்தார் ஒரு கடைக்காரர். (கொடுவாய், ராகம் சலூன்) கடையில் முன்பாக 10 நிமிடம் நின்று பேசிப்பார்த்தார்கள். (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்) முடி வெட்ட மறுப்பது தவறு, பேதம் பார்க்காதீர்கள். தீண்டாமை செய்வது தவறு” இதுதான் அவர்கள் சொன்னது.

பதிலுக்கு கடைக்காரர் தரப்பிலும், ஊர்ச் சமூகத்திலிருந்தும், “எங்களை துன்புருத்தாதீர்கள்”, “நான் வெட்ட மாட்டேன் என்று சொல்லவில்லை, ஆனால் நேரமில்லை”, ”அந்தந்தச் சாதி அந்தந்த வேலையையா பார்க்கிறது?”, “அமைதியாக இருக்கும் ஊரில் கலகம் செய்யாதீர்கள்”, “மறுத்தால் வேறு கடைக்கு போகவேண்டியதுதானே?” இவ்வாறு அலறல் எழுந்தது.

தலித் இளைஞனுக்கு, முடி வெட்டுவதில் கூட சமத்துவம் கொடுக்காத இந்த சமுதாயத்தின் ஒரு பகுதியினரின் ஆதிக்க வெறி அந்த வார்த்தைகளின், பின் புலத்தில் குரூரமாய்ச் சிரித்தது.

அழுகிக் கெட்ட புண் மீது விழுந்த சிறு அடி, சீழ்ப்பிடித்த கொப்புளத்தை உடைத்துவிட்டது. மாநில முழுக்க நாற்றமெடுத்தது. சன் தொலைக்காட்சியில் இப்படி எழுதினார்கள் “முடிவெட்டச் சொல்லி வாலிபர் சங்கம் மிரட்டல், பல்லடத்தில் 300க்கும் அதிகமான சலூன் கடைகள் அடைப்பு”. மறியல், பதட்டம். வாலிபர்கள் அமைதியைக் கெடுத்ததாக சில பத்திரிக்கைகள் எழுதின.

அமைதியாக இருக்கும் பகுதியில், கலகமூட்டுவதாக பலர் அலறினார்கள். தலித் கிராமத்தின் பெரியவர்கள் ஒருவிதம் பயத்தை முகத்தில் காட்டினார்கள். ஆனால் இது இளையவர்கள் மத்தியில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

மேலே நிற்பவன்
மேலேயே நிற்க
விழுந்துகிடப்பவன்
விழுந்தே கிடக்க

குரள்வளையின் மீது
பாதங்கள் அழுந்துகையில்
சத்தம் வருவதில்லை
எல்லாம் அமைதியாக இருக்கிறது.

யாருக்கு வேண்டும் அந்த அமைதி? சாதி இல்லை, பேதம் இல்லை என்று சொல்லும் ஒவ்வொருவருக்கும் அந்த ”அமைதியை(!)” கலைக்கவேண்டிய கடமை முன் நிற்கிறது. இந்த நிலை மாறவேண்டுமானால், அது உடனே சாத்தியமில்லை, (நல்ல மனிதர்கள், வெறும் நல்ல மனிதர்களாக மட்டும் இருந்தால் அது எப்போதும் சாத்தியம் இல்லை) களத்தில் இறங்கினால்தானே .. களை பறிக்க முடியும்!

கரங்கள் இணையட்டும் … கலகங்கள் தொடரட்டும் ….

ஈரவெங்காயம் எங்கையா கெடைக்கும்?


பெரியார்தான் வெங்காயம் நு அடிக்கடி சொல்லுவார், அதப் பார்த்தா எதோ இருக்கற மாதிரி தெரியும், ஆனா உரிச்சா உள்ள ஒன்னுமே இருக்காது, வெறும்பயலுகளத்தான் அப்படிச் சொல்லுவாங்க அவரு. ஆனா இப்ப மேட்டர் அது இல்ல.

ஈரவெங்காயம் எங்கையா கெடைக்கும்?

ஒருநாளாச்சும் மார்கெட்டுக்கு போயிருந்தா இவன் இப்பிடி கேப்பானா? அப்படி நீங்க கேட்கறது தெரியுது. ஆனாலும் நீங்க சொல்லியே ஆகனும்.

உடனே ஒரு புத்திசாலி, அது கடைல கிடைக்கும் நு சொன்னாலும் அதுக்கு என் கிட்ட ஒரு பதில் ரெடியா இருக்கு “அது காய்ஞ்ச வெங்காயம்”. நான் கேட்கறது ஈரவெங்காயம்.

நீங்க சொல்லாட்டியும் பரவால நானே சொல்லரன் .. ஈர வெங்காயம் நிலத்துல இருந்துதான் கிடைக்கும், (* விருது விழா 2010: மொக்க நம்பர் 1).

இந்த நிலத்துல இருந்து கிடைக்குற ஈரவெங்காயத்துல இருந்துதான் பிரச்சனையே. ஏன்னா .. அப்ப அப்ப அதோட விலை ஆகாயத்துக்கும் மேல பறக்குது, ஆனால் விளைய வெச்ச விவசாயி அப்படியே தான் இருக்குறாரு.

சிலநாள் முன்னாள தமிழ்நாட்டு விவசாயி ஒருத்தர்ட்ட பேசிட்டிருந்தன் … அப்ப அவர் சொன்னார்.

போனவருசம் வெங்காய விதை சென்ற ஆண்டு ரூ. ஆயிரத்திற்கு கிடைத்தது. ஏன்னா, அத அரசாங்கம் கொள்முதல் செஞ்சு வித்துச்சு, ஆனால் இந்த ஆண்டு அரசு தனது வேளாண் துறைமூலம் வெங்காய விதைக் கொள்முதலுக்கு மிகத் தாமதமாதான் உத்தரவிட்டிருக்கு. இதனால கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விதைகளை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செஞ்சுட்டாங்க. அதனால இப்ப அவங்க அந்த விதைகளை அவர்கள் ரூ3,000 வரை உயர்த்தி வித்து லாபம் பாக்கராங்க. அப்படினு ….

அட …. அரசு கொள்முதல் நின்னா 200 சதவீதம் விலை ஏறுது பாருங்க.

இப்ப இதுல விவசாயிகளோட நிலைய பத்தி யோசிப்பத்த விட, நம்ம எல்லாருடைய நிலமையும் நினைச்சாதான் எனக்கு பெரும் கவலையா இருக்கு.

சாதரணா விதை விசயத்துலயே இப்படி நடக்குதே, பெட்ரோல் டீசல் விலை, பேருந்து கட்டணம், அத்தியாவிசயப் பொருட்கள் நு எல்லாத்துலயும் அரசு இப்ப செலுத்தர தலையீட்ட நிறுத்திட்டா என்ன நடக்கும்?

அதுதான தாராளாமயம், (neo-liberal) அத நம்ம இந்திய அரசாங்கம் அதி வேகமா செய்யப் பார்க்குது. நம்ம கழுத்துக்கு நாமலே சுறுக்கு மாட்டனுமா?

இந்த ஈர வெங்காயம் சிலது நாடாளுமன்றத்திலையும் கிடைக்குதுனு எங்க கிராமத்துலயே பேசிக்கிறாங்க … அது முழுக்க அழுகிக்கெடக்குதாமே …?

சரக்கும் பணமும் …


சரக்கும் பணமும் மூலதனம் – I

சரக்கு (அ) விற்பனைப் பண்டம் (commodity): இரண்டு காரணிகள்.

இன்றைய உலகில் பொருட்களை உருவாக்கி, அதனை விற்பதில் ஒவ்வொரு மனிதனும் பங்கெடுக்கவேண்டியுள்ளது. அதற்காக அவன் தேர்ந்தெடுப்பது எந்தப் பொருளாகவும் இருக்கலாம், கரும்பலகை முன் நின்று பாடம் எடுக்கலாம், சாலையோரம் மூட்டை தூக்கலாம், விமானம் ஓட்டலாம் (அ) தயாரிக்கலாம், ஆயுதம் தயாரிக்கலாம், சவரம் செய்யலாம் அல்லது கடற்கரையில் முருக்கு விற்கலாம். ஒரு மனிதனுக்கு தேவையான எதுவும், அது பண்டமாகவோ, சேவையாகவோ அடுத்த மனிதனால் ஒரு ஆதாயம் பெற்றுக் கொண்டு நிறைவேற்றபடுமானால், அதுதான் சரக்கு.

மனித குலம் நாடோடியாக இருந்த போது இல்லாத இந்தக் குணம் அவனுக்கு இடையில்தான் ஏற்பட்டது என்றாலும், அது கட்டாயமானது.

”ஒரு மனிதன்” (A) – அவன் தயாரிக்கும் பொருள்/அவனால் செய்யப்படும் சேவை (B)- இவற்றின் மூலம் பயனடையும் (C) இன்னொரு மனிதன் என்ற அளவில் ஒவ்வொருவரும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். (A)-(B)-(C). இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் சிறப்பம்சமான விற்பனைப் பண்டம் என்பது குறித்த சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வதன் மூலமே விடை தெரியாத பல கேள்விகளுக்கு நாம் பதில் அறியப் போகிறோம்.

உதாரணம் ஒன்றிலிருந்து துவங்கலாம்.
பழைய பண்ட மாற்று முறையை மனதில் கொள்ளுங்கள். அங்கே பொருளுக்கு பொருள்தான் மாற்றிக் கொள்ளப்படும், கோதுமை விவசாயி ஒருத்தருக்கு ஒரு மூட்டை உப்பு வேண்டுமெனில் அதற்கு தகுந்த அளவு கோதுமையை உப்பளக்காரரிடம் கொடுத்து உப்பை அவர் பெற்றுக் கொள்கிறார். எனவே ஒரு மூட்டை உப்பும், X அளவு கோதுமையும் இங்கே பண்டங்கள்.

பண்டம் என்பது, வாழ்க்கைக்கு தேவையான (உப்பு போன்ற) வாழ்வு சாதனமாகவோ அல்லது உற்பத்திக்கு அவசியமான (மாடு, உரம் போன்ற) சாதனமாகவோ இருக்கலாம்.

இந்த வகையில் அவற்றிற்கு பயன்பாட்டு மதிப்பு உள்ளது. அதே போல கோதுமைக்கும், உப்புக்கும் இடையே ஒரு பொதுவான “மதிப்பும்” உள்ளது.

X அளவு கோதுமை = Y அளவு உப்பு
X அளவு கோதுமை = Z அளவு துணி
X அளவு கோதுமை = L அளவு தானியம்,

என்றவாறு அந்த விவசாயி பல்வேறு பொருட்களை வாங்குகிறார். இங்கே வேறுபட்ட பொருட்கள் ஏதோ ஒரு மதிப்பைப் பொருத்து சமமாகின்றன. எனவே ஒரு பண்டம் பயனுள்ள பொருளாகவும், பரிவர்தனைக்கு ஏற்ற பொருளாகவும் இரண்டு மதிப்புகளையும் கொண்டிருக்கிறது.

கோதுமையின் பயன் மதிப்பு என்றால், அதன் உயிர்ச் சத்து. யன் மதிப்பு என்பது மனித உபயோகத்தை பொருத்தது. பொருளின் பயன் மதிப்புக்கள் காலத்திற்கு ஏற்ப மாறும். அதனை கண்டறிவது வரலாற்று ஆய்வாளர்களின் வேலை.

இப்போது,

X அளவு கோதுமை = Y அளவு உப்பு = Z அளவு துணி = L அளவு தானியம்

என்பதிலிருந்து, அவற்றின் பயன் மதிப்பை நீக்கிவிட்டு பார்த்தால், ”ஏதொ ஒன்று” மிச்சம் இருக்கும். அதுதான் இந்த வேறுபட்ட பண்டங்களை சமப்படுத்துகிறது.

இன்று, ஒரு சிறுவனிடம் போய், “ஒரு மிட்டாய்க்கு” சமமான இன்னொரு பொருளைக் கூறு என்று கேட்டால், ஒரு சிக் சாம்புவை கை காட்டுவான். முற்றிலும் வேறான அந்தப் பொருட்கள் இரண்டையும் இணைக்கும் விசயம், “ஒரு ரூபாய்” எனும் மதிப்புதான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால், நமது கோதுமை விவசாயி பண்டமாற்று முறையில் பரிவர்தனை செய்கிறார்.

“This common “something” cannot be either a geometrical, a chemical, or any other natural property of commodities. Such properties claim our attention only in so far as they affect the utility of those commodities, make them use-values. ……………… … If then we leave out of consideration the use-value of commodities, they have only one common property left, that of being products of labour. ”
இந்த இடத்தில் “ஏதோ ஒன்றாக” செயல்படும் அந்த விசயம் ?. உழைப்பு.

மனித உழைப்பின் உற்பத்திப் பொருளாக இருப்பதே பண்டங்கள் எல்லாவற்றிற்கும் இடையிலான ஒற்றுமை.

முடிவாக, விற்பனைப் பண்டத்தின் இரண்டு காரணிகள், அதன் பயன் மதிப்பும், பரிவர்தனை மதிப்பும் என்பது தெரியவருகிறது. அதாவது, “ஒரு பொருளுக்கான அவசியமும்”, ”அதை நிறைவேற்றுகிற மனித உழைப்பும்”. மேலும் எளிய உதாரணம் மூலம் விளக்கினால், ஒரு சட்டை, உடுத்தத் தகுதியானதாக இருப்பதும், அதனுள் செலுத்தப்பட்ட உழைப்பும் சட்டையை , விற்பனைப் பண்டமாக மாற்றுகின்றன.

எனவே, ஒரு பொருளுக்கு பரிவர்தனை மதிப்பை (பொதுவாக, மதிப்பை) வழங்குவது அதனுள் செலுத்தப்படும் உழைப்பே.

கம்யூனிச பூதம் …


உலகம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்… அது இன்று பல்லாயிரம் அமெரிக்கர்கள் உள்ளிட்ட உலக மக்களின் வேலை வாய்ப்பைக் காலி செய்திருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையைச் சிதைத்திருக்கிறது.

இப்படிச் சொல்வதால் இதற்கு முந்தைய காலகட்டத்தில் உலகம் சொர்கபுரியாக இருந்தது என்பதில்லை. கடந்த காலங்களில் பேராசையால் உலகைப் பீடித்த உலகமயச் சூறாவளி, தினமும் பல்லாயிரக் கணக்கான எளிய மக்களின் வாழ்க்கையை சிதைத்தே வந்தது. அதுபோலவே இந்தியாவிலும் வாழ்க்கை மிகப் பிரகாசமாக அமைந்திருப்பதாகச் சொல்ல முடியாது. ஏழைகள் சாவை நோக்கி அனுதினமும் தள்ளப்படுகிறார்கள்.

இதனை உணர, நாம் எங்கேயோ இருந்து உதாரணம் தேடத் தேவையில்லை. உலகமயம் தீவிரமடைந்ததற்கு பின்னர், நம் இந்தியாவில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள், இதனை அரசின் புள்ளிவிபரங்களே காட்டுகின்றன.

எந்த ஒரு சூழலிலும், முதலாளியச் சமூகம், லாபம் … அதிக லாபம்… என்பதை நோக்கியே செல்கிறது. பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையே தொலையும்போதும் கூட அதற்கு லாபம் குவிப்பதில் தான் ஈடுபாடு.

“புவி வெப்பமடைதல்” பிரச்சனை தலைமேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது. என்றபோதிலும், எந்த முன்னேறிய நாடும் அதுகுறித்து அக்கறை காட்டவில்லை. காரணம்? இப்போதைக்கு அவர்கள் பத்திரமாக வாழ்கிறார்கள்.

இவையெல்லாம் பார்க்கும் மக்களுக்கு… பேராசையும் சுயநலமும் தவிர்த்த சமூக அமைப்பு சாத்தியமே இல்லையா என்ற கேள்வி எழுவது இயல்புதான்..

சோசலிச மாற்று:
இந்த சூழலில்தான், சோசலிச நாடான சீனாவின் செயல்பாடுகள் அங்கு வியத்தகு வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உலகின் பெரும் பணக்காரர்களில் அங்கே ஒருத்தர் தான் வாழ்கிறார். ஆனால் மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. அதேசமயம் முதல் பத்து இடங்களுக்குள் 2 பணக்காரர்களையும், 40 க்கும் மேற்பட்ட பன்னாட்டு முதலாளிகளையும் தன்னிடம் கொண்டு இந்தியா பணக்காரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. மக்கள் நலவாழ்வைப் பொருத்தமடில் அதல பாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருக்கிறது. நல்ல வாழ்க்கையை அளிப்பதில் சோசலிச நாடுகள் முன்னணியில் நிற்கின்றன. கியூபா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் நலம் சார்ந்த செயல்பாடுகள் அனைவரையும் சிந்திக்க வைக்கின்றன.

கம்யூனிச பூதம்:
19 ஆம் நூற்றாண்டி முதல் பாதியில், ஆளும் சக்திகளை ஒரு பூதம் ஆட்டி வைத்தது. அது குறித்த கனவு கூட அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. “கம்யூனிசம்” எனும் அந்தப் பூதம் இப்போது மீண்டும் உயிர்த்தெழத் துவங்கியுள்ளது. பலநாடுகளில் உருவாகியுள்ள தொழிலாளி வர்கம் வீருகொண்டு எழும், அநீதிகளுக்கு எதிராக தன் போரினை மீண்டும் துவக்கும் என்றே தோன்றுகிறது. இந்த நேரத்தில் தொழிலாளி வர்கத்தின் வேதப் புத்தகமாக அறியப்படும் ”கார்ல் மார்க்ஸ் -ன் மூலதனம்” அறிவித்ததெல்லாம் உண்மை தானோ என்று சகலரும் யோசிக்கத்துவங்கியுள்ளனர்.

அதில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறது?

1859 இல் கார்ல்மார்க்ஸ் ஒரு புத்தகம் எழுதினார், அதன் பெயர் ”அரசிய பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு”, அந்த நூலின் தொடர்ச்சியாக அவரே எழுதிய ”மூலதனம்” புத்தகம் 1867 இல் வெளியானது. இரண்டு புத்தகங்களுக்கும் இடையிலான கால இடைவெளி அதிகமாக இருப்பதால் முதல் புத்தகத்தின் சுருக்கத்தையும் இணைத்தே மூலதனத்தை மார்க்ஸ் எழுதிவிட்டார். அதன் முதல் பாகத்தில், இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் பொருளுற்பத்தி முறையின் மீதான பகுப்பாய்வும், இரண்டாம் பாகத்தில் மூலதனத்தின் சுற்றோட்ட நிகழ்முறையையும், வளர்ச்சிப் போக்கில் அது மேற்கொள்ளும் பலதரப்பட்ட வடிவங்களும், கடைசி பாகத்தில் தத்துவத்தின் வரலாற்று வளர்ச்சி குறித்த ஆய்வும் அடங்கியுள்ளது.

இன்றைய சமூகத்தை ஒவ்வொரு அங்குலமாக ஆராயும் மார்க்ஸ், அது குறித்த தீர்க்கமான பார்வையை நமக்குள் விதைக்கிறார். இருக்கும் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கு குறித்து தெரியும்போதுதான், அதனை மாற்றும் வழிமுறையும், மாற்றத்திற்கான தேவையும் புரிபடுகிறது.

இந்த முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சிப்போக்கு எவ்வாறு வெளிப்படும்? , மனித சமூகத்தின் முன்புள்ள ஒரே வாய்ப்பு முதலாளித்துவம் தானா?, வலுத்தவன் வாழ்வான் என்பதே நியதியா?, இது எப்போது மாறூம்?. மாறி வரும் புதிய சமூக அமைப்பும் மாற்றத்திற்கு உட்படுமா? .. என பல்வேறு கேள்விகளுக்கும் விடை கிட்டும் என்ற நம்பிக்கையிலேயே இந்தப் புத்தகத்தின் வாசிப்பு துவங்குகிறது.

அதன் முன்னுரையில் மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல, தொடக்கம் என்பது எப்போது கடினமானதுதான், எந்த வகையான விஞ்னான ஆராய்ச்சிக்கும் இது பொருந்தும்.

உடலை மேலோட்டமாகப் பார்ப்பது எளிது, ஆனால் அதனை புரிந்து கொள்ள முயலும் போது ஒவ்வொரு செல்லாக நுண்ணோக்கியில் வைத்தல்லவா தெரிந்துகொள்ள முடியும்?.
பொருளாதாரத்திர்கென எந்த நுண்ணோக்கியும் இல்லை, இதன் உட்பொருள்கள் வேறுமாதிரியானவை. எனவே, கார்ல்மார்க்ஸ் தனது நுண்ணோக்கியாக தர்க்கங்களைப் பயன்படுத்துகிறார்.

விற்பனை பண்டம் (சரக்கு) என்பதுதான் இந்த உலகை ஆட்டிப்படைக்கும் முதலாளித்துவத்தின் அடிப்படை அலகு என்பதால், சரக்கு என்பது என்ன?. என்ற கேள்வியிலிருந்தே இந்தப் புத்தகம் துவங்குகிறது.

துவக்கமே பொருளாதார ஆய்வாக இருப்பதால், படிக்கத் துவங்கும்போது கொஞ்சம் பிரம்மிப்பு ஏற்படுவதை தவிற்கமுடியவில்லை. இது அறிவு ஜீவிகள் மட்டுமே வாசிக்கத்தகுந்த புத்தகமோ என்றும் தோன்றுகிறது. ஆனால், மிக எளிதான ஆய்வு முறை அந்த பிரம்மிப்பை வெகு சீக்கிரமே போக்கிவிடுகிறது.

மொழிபெயர்ப்புப் புத்தகங்களுக்கேயான கடினத் தன்மையும், மொழியாக்கம் செய்த ஆசிரியர், மார்க்ஸ் இன் வார்த்தைகளை சிதைத்துவிடக் கூடாதே என்பதில் காட்டியுள்ள அக்கரையும் சாதாரண வாசகர்களுக்கு வாசிப்பின் தடங்கல்களாக அமைந்துவிடுகின்றன. ஆனால் இவற்றைக் குறைகளாகப் பார்க்கத் தேவையில்லை.

மலை உச்சியை அடைய முயல்பவர்கள், கரடு முரடான பாறையைக் கடந்துதான் ஆகவேண்டும். மனித சமூகத்திற்கான விடியலை நோக்கிய பயணமும் அப்படியானதுதான்.