அன்பர்களே! அம்பேத்கர் இந்து அல்லர்


அண்ணல் அம்பேத்கரின் வாழ்வில் மிகவும் முதன்மையாகக் கருதக்கூடிய மூன்று நாட்கள் இருக்கின்றன. அவற்றில் முதலாவது நாள், 1927 டிசம்பர் 21. அன்று, அம்பேத்கர் மநுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தினார். இரண்டாம் நாள், 1935 அக்டோபர் 13. அன்று, “நான் ஓர் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால் ஒருபோதும் ஓர் இந்துவாக சாகமாட்டேன்” என்று அம்பேத்கர் அறிவித்தார். மூன்றாம் நாள், 1956 அக்டோபர் 14. அன்று, அம்பேத்கர் பவுத்தம் தழுவினார்.

அம்பேத்கரின் பிறந்த நாள், மறைந்த நாள் ஆகியவற்றைக் காட்டிலும் இந்த நாட்கள் முதன்மையானவை. ஏனெனில், அவரின் வாழ்க்கைக்கு புதியதும், புரட்சிகரமானதுமான பொருளை இந்த நாட்களில் அவர் செய்த செயல்களே அளித்தன. இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கிற தலித் மக்களுக்கு மத மாற்றமும், பவுத்தமும் சாதியின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியாக இருக்கின்றன. மதமாற்றம் ஒரு விடுதலைத் தத்துவம்.

சாதியத்தின் அடிப்படையாக இருக்கும் இந்து மதத்தினை விட்டு ஒவ்வொரு தலித்தும் வெளியேற வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். அதற்காக கருத்தியல் அளவில் மக்களையும் தயார் செய்தார். அவர் பவுத்தம் தழுவிய அன்று அவரோடு பத்து லட்சம் தலித் மக்களும் பவுத்தம் தழுவினர். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட 1935 தொடங்கி 1956 வரையிலான இருபத்தோரு ஆண்டுகள் நெடியவை. விடுதலைச் சிறகினைப் பெறுவதற்கான கூட்டுப்புழு காலம். உருமாற்றத்தின் காலம். இந்தியாவிலிருக்கும் பல்வேறு மதங்களைப் பற்றிய தீவிரமான ஆய்வினை இடைப்பட்ட இக்காலத்தில்தான் அம்பேத்கர் மேற்கொண்டார்.

இந்து மதத்தை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற வெறியும், தலித் மக்களை எப்படியாவது அம்மதத்தின் கொடூரப் பிடியிலிருந்து மீட்டு விட வேண்டும் என்ற தீவிரமும் அவரிடம் இருந்தது. கண்ணெதிரிலே இந்து மதம் என்னும் நச்சுப் பாம்பு தலித்துகளை தாக்கி, அவர்களின் அறிவை சுற்றி நெறித்து, நொறுக்கி, விழுங்கிக் கொண் டிருப்பதை பார்க்கச் சகிக்கவில்லை. அவருள்ளே ஆத்திரமும் கோபமும் எழுந்தது. இந்து மதத்தின் பிடியிலிருந்து வெளியேறி பவுத்தத்தை தழுவுவது தான் விடுதலைக்கான ஒரே வழி என்ற உண்மையை அம்பேத்கர் இறுதியாகக் கண்டடைந்தார். இதற்கே அவருக்கு அத்தனை ஆண்டுகள் பிடித்தன.

இந்து மதத்திலிருந்து வெளியேறு வதாக அவர் அறிவித்தபோது கொலை மிரட்டல்கள் வந்தன. 1935, அக்டோபர் 13 ஆம் நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்றுதான் இயோலா மாநாடு நடைபெற்றது. இரவு பத்து மணிக்குத் தொடங்கிய இம்மாநாட்டில் அம்பேத்கர் பேச வந்தபோது நேரம் பதினொன்றை கடந்திருந்தது. “கெடுவாய்ப்பால் நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதைத் தடுக்கும் ஆற்றல் என்னிடம் இல்லை. அதனால் பல இன்னல்களையும், இழிவுகளையும் நான் சந்தித்தேன். ஆனால் நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் என்பது மிக உறுதி” என்று அவர் இடியாய் முழங்கியதை, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தலித் மக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். அம்பேத்கர் இவ்வாறு அறிவித்தது இந்துக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. சாதி இந்து தலைவர்களிடமிருந்து கடும் கண்டனங்கள் வந்தன. சிந்தி இனத்தைச் சேர்ந்த இந்து ஒருவர், இந்து மதத்திலிருந்து அம்பேத்கர் வெளியேறினால் அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டி கடிதம் எழுதினார். அக்கடிதம் ரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது.

அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பு கண்மூடித்தனமான தல்ல. அறிவுப்பூர்வமான அணுகுமுறையோடு அம்மதத்தின் கூறுகளை அவர் ஆய்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் தற்கால நிலைமைக்கு இந்து மதமே அடிப்படை என்று அறிந்து கொண்டார். இந்தியாவில் இன்று நிலவும் சாதி முறைக்கும், அதன் மூலமான நால்வர்ண பாகுபாட்டுக்கும் ஆதாரமே இந்து மதம்தான். பார்ப்பன-சத்திரிய கூட்டம் ஆளவும், வைசியக் கூட்டம் சுரண்டவும், சூத்திரக் கூட்டம் உழைக்க வும் ஏற்படுத்தப்பட்ட தந்திரமானதும், நயவஞ்சகமானது மானதொரு ஏற்பாடே இச்சாதி முறை.

தலித் மக்கள் நாயினும் கீழாக இந்த நாட்டில் மதிக்கப்பட்டனர். தீண்டாமைக் கொடுமைகள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. படிக்கக்கூடாது, செருப்பணியக்கூடாது, சுயமரியாதையோடு இருக்கக் கூடாது எனப் பலவகையான சமூகத் தடைகள் விதிக்கப்பட்டன. இந்த சாதிய சட்டங்களை மீறுகிறவர்கள் கொல்லப்பட்டனர். சமூக விலக்கம் செய்யப்பட்டனர். அடித்து உதைக்கப்பட்டனர். இதன் எச்சங்கள் இன்றளவும் கூட தொடர்வதை நாம் அறிவோம்.

இவ்வுண்மைகளை எழுதியதோடு பரப்புரையும் செய்தவர் அம்பேத்கர். “இந்து மதத்தின் புதிர்கள்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். வேதங்களை ஆபாசக் குப்பைகள் என்றும், பகவத் கீதையை ஒரு முட்டாளின் கிறுக்கல்கள் என்றும் கூறியவர் அவர். இந்து மதத்தை தன் வாழ்நாளின் கடைசி கணம் வரை தோலுரித்தார். இயோலா மாநாட்டு அறிவிப்புக்குப் பிறகு அவர் பங்கேற்ற எல்லா மாநாடுகளிலும் மதமாற்றம் குறித்து வலியுறுத்தினார். 1938, ஆகஸ்டில் நடந்த ஒரு கூட்டத்தில் “நான் இந்தக் கூட்டத்திற்கு வருவதாக இல்லை. இந்து மதத்தின் பிடியிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் வெளியேறுவதற்கு சிலர் தடையாக இருப்பதாக கேள்விப்படுகிறேன். உங்களைத் தடுக்கிறவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை நீக்குவதற்கே இக்கூட்டத்திற்கு வந்திருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

இந்து மதத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு அதற்கெதிராக தலித் மக்கள் திரும்ப வேண்டும் என்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட அளப்பரிய முயற்சிகளை இதுபோன்ற உரைகள் தெரியப்படுத்துகின்றன. அம்பேத்கரின் உரைக்குப் பிறகு அன்று அம்மாநாட்டில், “நமது சகோதரர்களும், சகோதரி களும் இந்து மத விழாக்களைக் கொண்டாடக் கூடாது. இந்து மதச் சடங்குகளை பார்ப்பனர்களை அழைத்து கடைப்பிடிக்கக் கூடாது. மத ஒழுக்கங்களை, உண்ணா நோன்புகளைப் பின்பற்றக்கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அம்பேத்கருக்கும் இந்து மதத்துக்கும் நடைபெற்ற போரின் வரலாற்றுப் பக்கங்களை இப்படிப் பக்கம் பக்கமாக விவரித்துக் கொண்டே போகலாம். அவருடைய மறைவுக்குப் பிறகும்கூட அப்போராட்டம் தொடர்கிறது. அம்பேத்கரும், பெரியாரும் இந்து மதத்தால் வெற்றி கொள்ளப்படாத, வெற்றி கொள்ளப்பட முடியாத ஆளுமைகளாக நிற்கின்றனர்.

“இந்து மதத்தின் புதிர்கள்’ நூலை 1987இல் மகாராட்டிர அரசு வெளியிட்டபோது பெரும் கலவரம் வெடித்தது. “இந்தியன் எக்ஸ்பிரசின்’ மராத்தி பதிப்பான “லோக்சத்தா’ தன் தலையங்கம் மூலம் கலவரத்தை தூண்டியது. அம்பேத்கரின் நூலில் ராமனும், கிருஷ்ணனும் மிகக் கேவலமாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது. சிவசேனாவும், ஆர்.எஸ்.எஸ்.சும், மராத்தா மகா சங்கமும் நடத்திய கலவரத்தில் அம்பேத்கரின் நூல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. “ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்’ என்ற பகுதியை அந்த நூலில் இருந்து நீக்கச் சொல்லி பால்தாக்ரே இரண்டு லட்சம் பேரை திரட்டி, பேரணி நடத்தி மனு கொடுத்தார். அப்பகுதியை நீக்கக் கூடாது என்று தலித் மக்களும், ஆதரவு சக்திகளும் பத்து லட்சம் பேர் திரண்டனர். மராட்டிய அரசு இறுதியாக, “இந்நூலில் கூறப்பட்ட அம்பேத்கரின் கருத்துகள் அரசின் கருத்தல்ல” என்ற அடிக்குறிப்பினைப் போட்டு தப்பித்துக் கொண்டது.

மார்க்ஸ், லெனின், மாவோ போன்ற தலைவர்களை எல்லாம் ஏற்றுக் கொள்கிற ஆதிக்கச் சாதியினர் அம்பேத்கரை ஏற்க மறுப்பதன் அடிப்படை, அவருடைய இந்து மத எதிர்ப்பில் தான் இருக்கிறது என்று சொல்லும் “தலித் வாய்ஸ்’ ஆசிரியர் வி.டி. ராஜ்சேகர் அவர்களின் கருத்தை இங்கு நினைவு கூரலாம். “கடவுளையோ, மகான்களையோ சார்ந்திருக்க வேண்டாம். எளிய மனிதனாகிய என்னைக் கடவுளாக்க முற்படுகிறார்கள். அது தவறு. தலைமை வழிபாட்டு எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிய தவறுவீர்களாயின், அது உங்கள் அழிவுக்கே வழிவகுக்கும்’ என்றவர் அம்பேத்கர். ஆனால் அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு, அவரை கடவுளாக்கும் முயற்சிகள் அறியாமை யின் வெளிப்பாடாய், அவரின் விருப்பத்துக்கு மாறாய் நடந்து வருகின்றன. வேறெந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு சிலைகள் அவருக்கு இருக்கின்றன என்று பெருமிதம் கொள்ளும் தலித் மக்கள், மெல்ல சிலை நிறுவுதலை ஒரு வழிபாட்டுச் சடங்காக மாற்ற முயல் கின்றனர். அவரை தலைவராகவும், வழி காட்டியாகவும் கொள்வதெனில் அவருடைய கருத்துக்களைப் பின்பற்றியாக வேண்டுமே! அவரை கடவுளாக்கி விட்டாலோ சிக்கல் இல்லை. அவரை வணங்கி விட்டுப் போய்விடலாம். நம்மிடம் இருக் கின்ற மூடக்குப்பைகளை தொலைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

தலைமை வழிபாடு இந்திய மக்களின் மரபில் ஊறிக்கிடக்கின்ற ஒன்று. அரசன் கடவுளின் பிரதிநிதி என்று சொல்லி சத்திரிய வகுப்பை உருவாக்கி விட்டதிலிருந்தே இம்மனநிலை தொற்றிக் கொண்டது. இங்கு தலைவன் இல்லையேல் எதுவும் நடக்காது. இந்த நிலைக்கு நேரெதிரான “ஜனநாயக’ நிலையை சமூகத்திலும், அரசியலிலும் கொண்டு வந்தவர் அம்பேத்கர். தன்னை வணங்குவதையும், தன் காலில் விழுவதையும் அவர் ஒரு போதும் விரும்பியதில்லை. ஆனால் இன்று அவர் “வழிபாட்டுக்குரிய’ தலைவராக்கப்பட்டிருக்கிறார். இதன் நீட்சியாக இன்று வேறொரு அதிர்ச்சியூட்டும் செயலும் நடக்கத் தொடங்கியுள்ளது. அறியாமையின் பிடியில் இன்னமும் சிக்கியிருக்கும் தலித்துகள் அம்பேத்கரை இந்துவாக்கவும் முயன்று வருகின்றனர்!

கடந்த குடியரசு நாளன்று ஒரு பள்ளியில் நடந்த விழாவுக்குப் போக நேர்ந்தது. அது ஒரு கிராமப்பள்ளி. விழாவை முன்னின்று நடத்திய ஊர்ப்பெரியவர்கள், கொடியேற்றுவதற்கு முன்னால் பூசைகளை செய்தனர். காந்தி, நேரு படங்களோடு சேர்த்து அம்பேத்கர் படமும் அங்கு வைக்கப்பட்டது. பிற தலைவர்களின் படத்தோடு அம்பேத்கர் படத்துக்கும் குங்குமப் பொட்டு இடப்பட்டது. கற்பூரம் கொளுத்தப்பட்டது. தேங்காயையும் உடைத்தார்கள். பெரும்பான்மையினரின் ஒப்புதலோடு நடக்கும் இதை என்னால் தடுக்க முடியவில்லை. ஆனால் ஊர்த்தலைவர்களுடனான நேர்ப் பேச்சிலும்,விழா உரையிலும் என் கடும் கண்டனத்தை தெரிவித்தேன்.

கண்ணுக்குத் தெரியாதபடி மூலை முடுக்குகளில் இப்படி நடப்பவை முற் றிலும் அறியாமையின் வெளிப்பாடென் பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஊர் உலகமறிய அம்பேத்கரை இந்துவாக்க நடக்கும் முயற்சிதான் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. தலித் மக்கள் இருக்கும் பகுதிகளில் மாரியம்மன் திருவிழாக்கள் நடக்கும் காலம் இது. தை மாதம் தொடங்கினாலே தமிழர்களுக்கு திருவிழாக் காலம் தொடங்கி விடுகிறது! மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி என்ற இந்து பண்டிகையையொட்டி மயானக் கொள்ளைகள் நடக்கின்றன. சித்திரை தொடங்கி ஆனி மாதம் வரைக்கும் மாரியம்மன், கெங்கை யம்மன் உள்ளிட்ட இன்ன பிற அம்மாக்களுக்கும்திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அண்மைக் காலமாக இவ்விழாக்களுக்கு வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களிலும், சுவரொட்டிகளிலும் அம்பேத்கரின் படங்கள் இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன.

அம்பேத்கரை பெயரளவிலும், தமது தலைவர் என்ற உணர்வின் அடிப்படையிலும் மட்டுமே அறிந்து வைத்திருக்கிற இளைஞர்களும், ஊர்மக்களும் அவர் படத்தை கடவுளரின் படங்களோடு சேர்த்து விடுகின்றனர். ஆர்வம் கொண்ட தலித் இளைஞர்கள் தமது ரசிக மனோபாவத்தின் வெளிப்பõடாய் விஜய், விக்ரம், நமீதா போன்ற திரைப்பட நாயக, நாயகிகளோடு அம்பேத்கரை சேர்த்து விடுகின்றனர்.

அம்பேத்கரை இந்து பண்டிகைகளோடும், இந்து கடவுளர்களோடும் தொடர்புபடுத்துவது அறியாமையில் நடக்கிறது. ஆனால் இப்படிச் செய்வது அம்பேத்கரை இழிவுபடுத்துகிற செயல் என்பதை அம்மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்! தன் வாழ்நாளெல்லாம் எந்த மதத்தை விமர்சித்தாரோ, எந்த மதத்தை கண்டனம் செய்தாரோ, எந்த மதத்தை தாக்கினாரோ அந்த மதத்துடனேயே அவரைப் பிணைத்து விடுவது, துரோகச் செயலன்றி வேறென்ன? இந்த செயலை தலித் மக்களே செய்கின்றனர் என்பது தான் கொடுமையானது. அறியாமையில் இருக்கும் தலித் மக்கள்தான் இதை செய்கிறார்கள் என்றால், தலித் அரசியல் கட்சிகளிலும், அமைப்புகளிலும் இருக்கின்ற தொண்டர்களும் இந்த மாபெரும் தவறை செய்கின்றனர்.

தமது கட்சியினுடைய கொள்கை கோட்பாடுகளை மறந்துவிட்டு, வாக்கு வங்கி அரசியலை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்படும் பெரிய கட்சிகள் மதப் பண்டிகைகள் எல்லாவற்றுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கின்றன. அக்கட்சிகளின் தலைவர்கள் சிலுவை அணிந்து ஜெபம் செய்கிறார்கள். குல்லாய் அணிந்து தொழுகிறார்கள். இந்து மத பூசைகளையும் செய்கிறார்கள். அவர்கள் இப்படிப் பல்வேறு மதச் சடங்குகளை செய்யும் படங்களும் பெருமிதமாக வெளியிடப்படுகின்றன. இந்தத் தொற்று நோய் தலித் தலைவர்களையும் பீடித்திருக்கிறது. சில தலித் தலைவர்கள் மாரியம்மன் பண்டிகையில் கூழ் ஊற்றும் விழாக்களுக்கு கூட கலந்து கொள்வதாக செய்திகள் வருகின்றன.

அம்பேத்கரின் கருத்தியலை அறிந்திராத, கொள்கை கோட்பாடுகளைப் பின்பற்றாதவர்கள் தலித்துகளுக்கு தலைவர்களாக இருக்கத் தகுதியில்லாத வர்கள். ஓர் அடிமைக்கு இன்னொரு அடிமை ஒருபோதும் தலைவனாக முடியாது. அடிமைத் தளையை உடைத்தெறி கிறவனே தலைவனாக இருக்க முடியும். இந்து மதம்ஓர் அடிமைத்தளை. அம்மதம்தான் தலித்துகளை மிக இழிவான நிலையிலே இந்நாட்டில் வைத்திருக்கிறது. “இந்த நாட்டில் அரசும், அமைப்புகளும் முதலில் செய்ய வேண்டியது, நாட்டு மக்களை அறிவாளிகளாக்குவதுதான்” என்றார் பெரியார். ஆனால் கருத்தியல் தெளிவை தொண்டர்களிடையே உருவாக்குவதில் தலித் அமைப்புகள் பலவும் பின் தங்கியே இருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்து விழாக்களுக்கு அம்பேத்கர் படத்தைப் போட்டு போஸ்டரையும் பேனர்களையும் அடிப்பது, அவ்விழாக்களைக் கொண்டாடுவது, அவ்விழாக்களிலே பங்கேற்பது.

இந்து பண்டிகைகளுக்கு பேனர்வைக்கும் போக்கு தலித் அமைப்புகளுக் கிடையே மோதலைத் தூண்டும் அளவு போயிருப்பது மேலும் கவலையளிப்பதாக உள்ளது. அண்மையில் (7.6.09) அரக்கோணம் பனப்பாக்கத்தில் நடந்த மயூரநாதர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு புரட்சி பாரதம் கட்சியினர் பேனர் களை வைத்துள்ளனர். அதில் ஒன்றை சிறுவர்கள் சிலர் விளையாட்டாய் கிழித் திருக்கின்றனர். அப்பழி விடுதலைச் சிறுத்தைகள் மீது விழ, இரு கட்சியினருக்கும் இடையிலே மோதல் உருவாகி வழக்கு மன்றம் வரை சென்றிருக்கிறது.

இந்து மத விழாக்களுக்கு பேனர் வைக்கச் சொல்லி நாங்கள் கேட்பதில்லை என்று இரு கட்சிகளின் மாவட்டத் தலைவர்களும் சொல்லியிருக்கிறார்கள். உறுப்பினர்கள் ஆர்வமிகுதியால் இப்படி வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள். இந்து மத எதிர்ப்புக் கருத்தியலை உறுப்பினர்களிடையே கட்சி வளர்த்திருந்தால், இம்மோதலுக்கான அவசியமே ஏற்பட்டிருக்காது. தமது கட்சி உறுப்பினர்களின் இத்தகைய இழி செயல்களைத் தடுக்க, தலித் தலைவர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அம்பேத்கரை உள்வாங்கிச் செறித்து விடுவதற்கு இந்து மத அமைப்புகள் பல காலமாக முயன்று வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். தனது தொண்டர்களுக்கு, வணங்கக்கூடிய தலைவர்களின் பட்டியலில் அம்பேத்கரையும் சேர்த்து கொடுத்திருக்கிறது. ஜெயேந்திரன் தன் காலில் விழும் அடிமைகள் சிலரைக் கொண்டு அம்பேத்கர் மன்றங்களைத் தொடங்குகிறார். இம்மாதிரியான ஏமாற்று வேலை கள், அயோக்கியத் தனங்களை விடவும் மோசமானது-தலித் மக்கள் அம்பேத்கரை இந்து பண்டிகைகளோடு இணைப்பது. இப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்த தலித்துகள் முன்வர வேண்டும்

அடிப்படையை உருவாக்காத தொடக்கக் கல்வி – கேள்விக்குறியாகும் தலித் மாணவர்களின் நிலை


போர் முனையின் முன்வரிசையில் இருப்பவர்களைப் போல, ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக வட்டத்தின் விளிம்பில் இருக்கின்றனர். வட்டத்துக்குள் எது ஊடுறுவினாலும் முதல் அடி தலித்துகளுக்கே விழுகிறது. தூக்கிவிட ஆளின்றி அவர்கள் அரற்றிக் கொண்டிருக்கும்போதே தாக்குதல் மய்யம் நோக்கி நகர்கிறது.மய்யத்தில் இருப்பவர் அடிபடும்போது வேகம் குறைந்திருக்கிறது. சொல்லப் போனால், அவர் வெறுமனே சீண்டத்தான் படுகிறார். மேலும் அங்கிருப்பவர் விழுந்தாலும் தூக்கிவிட ஆட்களிருக்கிறார்கள்.

வறுமை, பஞ்சம், இயற்கையழிவு, போர், அரசின் திட்டங்கள் என எல்லாமே தலித்து களைத்தான் முதலில் பதம் பார்க்கின்றன. தமிழக அரசு, ‘அனைவருக்கும் கல்வி’ (SSA) திட்டத்தின் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்தி வரும் ‘செயல்வழிக் கல்வி’ (ABL), ‘படைப்பாற்றல் கல்வி’ (ALM) ஆகிய திட்டங்கள் அப்படித்தான் தலித் மாணவர்களைப் பதம் பார்த்து விடுமோ என்ற கவலையும் அச்சமும் இன்று பரவலாக எழுந்துள்ளது.

ஏற்றத் தாழ்வுடையதும் சமமற்றதுமான இந்தியச் சமூகத்தில் – தலித் மக்களுக்கும், சூத்திரர்களுக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. கி.பி. 1030இல் இந்தியாவுக்கு வந்து சென்ற பயணி அல்பெருனி, கல்வி பயில முயன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுந்தண்டனைகளை நேரில் பார்த்து குறித்திருக்கிறார். இந்த நிலையின் உக்கிரம் படிப்படியாய்க் குறைந்தாலும் பாகுபாடு நிலவியபடியேதான் இருந்தது. இன்றும் அதன் எச்சங்கள் மறைமுக வழியில் தொடர்கின்றன.

விடுதலைக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள், தலித்துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

கவிஞர் கம்பீரன் தனது கவிதையொன்றில் குறிப்பிடுவது போல, பொருத்தமில்லாத முயல் ஆமை ஓட்டப்பந்தையமாகவே பெரும்பாலானவை இருந்தன. தலித்துகள் ஆமைகளைப் போல நகர்ந்து கொண்டிருந்தார்கள். கல்வித் துறையில் அப்படித்தான் இன்றும் முன் நகர்ந்தபடி இருக்கிறார்கள். கல்வித் திட்டங்கள் அவர்களைக் குறித்த கரிசனையற்று இருந்தாலும் அவர் தம் முன் நகர்வு தொடர்கிறது.

கல்வியை அனைவருக்கும் தர வேண்டும் என்பது அவசியமானதுதான். ஆனால் பெறுகிறவர்களின் நிலைக்கு ஏற்ப அதை வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது. கல்வியைப் பொருத்தவரை, தலித் அல்லாத பிறருக்கு இன்று வழங்கப்படுவது மறுசோறுதான்! அவர்கள் ஏற்கனவே வரிசையில் இடம் பிடித்து தின்று கொண்டிருக்கிறார்கள். தலித்தோ இப்போதுதான் முதல் கவளத்தையே உண்கிறான்.

முதன்முறையாக, முதல் தலைமுறையாக பள்ளியில் நுழையும் தலித் மாணவரை – அடிப்படைக் கல்வியின் அடைவுத் திறன் அற்றவராக இன்றைய செயல்முறைக் கல்வியும், படைப்பாற்றல் கல்வி யும் மாற்றிவிடுமோ என்ற அய்யம் உருவாகியுள்ளது. தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் பள்ளி மாணவர்களிடையே மிகக் குறைந்த அளவிலான கற்றல் திறனே உருவாகியிருக்கிறது என்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ள இரு ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. சுமார் 29 மாவட்டங்களில், 870 கிராமங்களில் படிக்கும் 31,000 மாணவர்களை மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட’ஆண்டிறுதி கல்வி அறிக்கை’ – ASER 2008 மற்றும் கல்வியாளர் வசந்தி தேவி தலைமையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை ஆகிய இரண்டுமே இந்த அவல நிலையைச் சொல்கின்றன.

தமிழகத்தில் ஒன்று, இரண்டு வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களில் 54.7 சதவிகிதத்தினர் மட்டுமே எழுத்துகளைப் படிக்கும் திறன் பெற்றுள்ளனர். ஆனால் தேசிய அளவிலான சராசரியோ 75.4 சதவிகிதம் ஆகும். மூன்று முதல் அய்ந்து வகுப்பு வரையுள்ள மாணவர்களில் 45.7 சதவிகிதம் பேர்தான் தமிழில் எளிய பாடப் பகுதிகளைப் படிக்கின்றவர்களாக இருக்கின்றனர். ஆனால், இவ்வகுப்புகளின் தேசிய வாசிப்பு நிலை 66.6 சதவிகிதம் ஆகும். கணிதப் பாடத்தில் ஒன்று மற்றும் இரண்டு வகுப்புகளைச் சேர்ந்த 62.6 சதவிகிதத்தினர் மட்டுமே எண்களைப் புரிந்து கொள்கின்றனர். மூன்று முதல் அய்ந்து வகுப்பு களைச் சேர்ந்த 36.3 சதவிகித மாணவர்கள் மட்டும்தான் கழித்தல் போன்ற கணித செயல்பாடுகளை செய்கின்றனர் என்கிறது, ASER 2008 ஆய்வு.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வியாளர் வசந்தி தேவி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் இதே வகுப்பு மாணவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள்தான் எளிய தமிழ்ப் பத்தி ஒன்றை வாசிக்கும் திறன் பெற்றிருக்கின்றனர். கணிதத்திலும் இதே அவல நிலைதான். இத்தகு ஆய்வறிக்கைகளை மட்டுமே சார்ந்திராமல் ஆசிரிய நண்பர்களின் வட்டத்தில் விசாரித்தறியும் போதும், இதே வகையான அவல செய்திகள்தான் கிடைக்கின்றன. சராசரியாக இருபத்தைந்திலிருந்து எண்பது மாணவர்கள் வரையிலான எண்ணிக்கைகளைக் கொண்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் – பாதிப் பேர்தான் நன்கு வாசிக்கவும், கணித செயல்பாடுகளை மேற்கொள்ளவும் திறன் பெற்று இருக்கிறார்கள். வகுப்புக்கு ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தில் ஓரளவு திறன் பெறுகிறார்கள் என்று அவர்கள் தரும் செய்திகள் சொல்கின்றன.

செயல் வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற கல்வி முறைகள் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான் தமிழக அரசுப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ளன. ஆந்திர மாநிலம் ரிஷிவேலியில் ஜே. கிருஷ்ணமூர்த்தி நிறுவிய பள்ளிகளில் இக்கல்வி முறை இருந்தது. அதைப் பார்த்து முன்னாள் கல்வி இயக்குநர் விஜயகுமாரால் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் 2003இல் சென்னையில் உள்ள 13 பள்ளிகளில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டில் 264 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட இது, 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதற்கு முன்பிருந்த மாணவர் கற்றல் அடைவு நிலை, மேற்சொன்னபடியும்கூட இருந்திருக்கலாம். அந்த நிலை நீடிக்காத வண்ணம் இவ்விரு புதிய கல்விமுறைகளும் உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறைகள் கற்றல் அடைவுத் திறனைப் பின்னுக்கு இழுத்துள்ளதோடு, அந்த நிலையை மேலும் மோசமாக்கும்படி செய்திருக்கின்றன. இதற்கு இக்கல்வி முறை காரணமாக இல்லை; செயல்படுத்துவதில்தான் தொய்வு ஏற்பட்டிருகிறது என்று பல கருத்துக்கள் வருகின்றன. ஆயினும் நடப்புச் சூழலை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்.

இந்தியாவில் சாதிய முறை நிலைப்பெற்ற பின்னர் அனைவருக்கும் கல்வி மறுக் கப்பட்டது. சம்புகனின் கதையும், ஏகலைவனின் கதையும், கர்ணனின் கதையும் அக்காலச் சூழலை கண் முன் நிறுத்துகின்றன. பவுத்தமும், சமணமும் கோலோச்சிய காலத்தில் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பு ஓரளவு இருந்தது. அம்மதங்கள் பார்ப்பனியத்தால் அழிக்கப்பட்டதும் அவ்வாய்ப்புகள் பறிபோயின. ஆனால் எச்சூழலிலும் பார்ப்பனரும், சத்திரியரும் படித்தே வந்தனர். முகலாயர்களின் வருகைக்குப் பிறகு இங்கே மக்தாபாஸ், மதராசா ஆகிய மத மற்றும் பொதுப்

பள்ளிகள் வந்தன. பார்ப்பன குருகுலப் பள்ளிகளோடும், இடைச் சாதி திண்ணைப் பள்ளிக் கூடங்களோடும் இவ்விரு பள்ளிகள் சேர்ந்ததும் கல்வி பரவலானது. வெள்ளையர்கள் வருகைக்குப் பிறகு கல்வியைச் சுற்றியிருந்த சாதி, மத வேலிகள் அகற்றப்பட்டன. 1813இல் வெளியிடப்பட்ட ‘சார்டட்’ அறிக்கை தொடங்கி, 1986இல் வெளியான தேசிய கல்விக் கொள்கை வரை எண்ணற்ற மாற்றங்கள் உருவாயின.

‘‘தொடக்கக் கல்விக்குப் பிறகு தீண்டத்தகாதவர்கள் இடைநிலைக் கல்வியைத் தொடர வேண்டாம். அவர்கள் தமது சாதிக்கு ஏற்ற கைவினைத் தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும். உயர் கல்வியை அவர்களுக்கு அளிக்காததன் மூலம் தீண்டத்தகாதவர்கள் தமது தொழிலைத் தொடர்வார்கள்” என்று பேசிய பாலகங்காதர திலகரைப் போன்ற பார்ப்பனர்கள்தான் 2000இல் அனைவருக்கும் கல்வித் திட்டத்தை பெருமிதத்தோடு அறிமுகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் இதை ‘பிராயச்சித்தம்’ என்று நினைத்திருக்கலாம். ஆனால் அது புலே, அம்பேத்கர் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட காலத்தின் பக்குவம்; காலத்தின் நெருக்கடி!

தமிழகத்தில் இன்று 63 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. 1,75,000 ஆசிரியர்கள் அவற்றில் பணி புரிந்து வருகிறார்கள். 51,807 உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன. 35,000 சுயநிதிப் பள்ளிகள் இருக்கின்றன. கல்வி இன்று பரவலாகி இருக்கிறது. தலித் மக்களுக்கு கல்வி பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகள் அரசுப் பள்ளிகளில் பெருகியுள்ளன. அனைவருக்கும் கல்வித் திட்டம், ஓர் ஆண்டுக்கு 11,000 கோடியை கல்விக்கென செலவழிக்கிறது. மாணவர் சேர்க்கை குறைவு என்ற புகார்களும் இன்று இல்லை. தமிழகத்தில் 6 முதல் 14 வரையிலான வயதுடைய குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை விகிதம் 99.4 சதவிகிதமாகும். இவ்வளவு இருந்தும் கற்றல் அடைவு பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஆய்வறிக்கையில் சுட்டப்படும் கிராமப்புற ஏழை மாணவர்களில், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களே அதிகம். அவர்கள்தான் பெருவாரியாக அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். பிற மாணவர்களும் வசதியுள்ளோரும் தனியார் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். வேலூர் மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் உள்ள கம்மபாளையம் தொடக்கப் பள்ளியைப் பற்றிய செய்தியொன்று அண்மையில் நாளேடுகளில் வெளியாகி இருந்தது. காமராசர் அவர்களால் 100 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அப்பள்ளியில், இன்று மூன்று மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். ஊரில் உள்ள பிற மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளிலே படிக்கின்றனர். இந்த அவல நிலை தமிழகத்தின் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளுக்கு வந்தால் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.

இங்கு பல வகையான பாடத் திட்ட முறைகள், பல வகையான நிர்வாக முறைகள், பல வகையான கற்பித்தல் முறை என்று கல்வியின் நிலை சின்னா பின்னமாகிக் கிடக்கிறது. புற்றீசல் போல பெருகி பணம் பிடுங்கும் ஆங்கிலப் பள்ளிகளை கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தவில்லை. எது எப்படி இருந்தும் கிராமப்புற தலித் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் உள்ளனர். ஏனெனில், அவர்களுக்கு வேறு போக்கிடமில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி தரமாக இருப்பது மிகமிக முக்கியம். தரமும், அடிப்படையும் அற்ற கல்வி அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி விடும். சமூக மாற்றம் ஏற்படாதபடி செய்துவிடும்.

கல்வியைப் பரவலாக்கும் நடைமுறைகளும் அதை வழங்கும் நடைமுறைகளும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல கல்வித் துறைக்கு விளங்குகின்றன. இவை ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. கல்வியைப் பரவலாக்கும் நடைமுறைகள் இன்று சிறப்பான நிலையை எட்டியுள்ளன. வழங்கு முறைகளில் தொய்வுகளும், இடற்பாடுகளும் இருந்தபடியே உள்ளன. கல்வியை மதத்தோடும் சாதியோடும் பிணைத்து இங்கே சிந்தித்துக் கொண்டிருந்தபோது, மேலை நாட்டு அறிஞர்கள் கல்வி வழங்கும் முறைகளை – குழந்தைகளையும் அவர் தம் உளவியலையும் மய்யப்படுத்தி சிந்தித்தனர். ரூசோ, மாண்டிசோரி, புரோபல், ஜான் டுவே என்று அச்சிந்தனையாளர்களின் வரிசை நீள்கிறது.

பிரம்படிப் பாடமும், பாராயணமும் இங்கு நிலவியபோது அங்கே குழந்தைகளை மய்யப்படுத்திய கற்றல் முறைகள் உருபெற்றன. மாண்டிசோரி பள்ளிகள், மழலையர் பூங்காக்கள் போன்றவையெல்லாம் அப்படி உருவானவைதான். இன்று கற்றல் கற்பித்தல் முறையில் பல்வேறு கருத்தாக்கங்கள் வந்துவிட்டன. 12–க்கும் மேற்பட்ட கற்றல் கற்பித்தல் முறைகள் உள்ளன. ஆசிரியர் நூலில் இருந்து ஒரு எழுத்தையும் மீறாமல் மாணவர்களை பொம்மைகளாய்ப் பாவித்து, அடித்து உதைத்து கற்றுத் தந்தது எல்லாம் மலையேறி விட்டது. மாணவர்களை அவர் தம் மனநிலை மற்றும் விருப்பமறிந்து கற்கச் செய்வதுடன், அவர்களுக்கு வழி காட்டுநராக மட்டுமே செயல்பட்டால் போதும் என்ற நிலை இன்று வந்துள்ளது.

செயல் வழிக்கற்றல் என்பதும் படைப்பாற்றல் கல்விமுறை என்பதும் இவ்வகையான நவீன கற்றல் கற்பித்தல் முறைகள்தான். இவ்விரு முறைகளும் நவீன கல்வியியல் மற்றும் கல்வி உளவியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட கூட்டு கற்பித்தல் முறையாகும். இவற்றில் பல கற்றல் செயல்பாடுகள் உள்ளன. செயல்வழிக் கற்றல், ஒன்று முதல் நான்கு வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. படைப்பாற்றல் கல்வி அய்ந்து முதல் எட்டு வகுப்பு களில் செயல்படுத்தப்படுகிறது. செயல்வழிக் கற்றலில் மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடும், பிற மாணவர்களின் உதவியோடும் பல வகையான அட்டைகளைக் கொண்டு தானே கற்கிறார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை யுடைய படிநிலைகள் உண்டு. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வண்ணத்திலான அட்டைகள் உண்டு. பாடவாரியாக கற்றலுக்கு உதவும் படங்கள் உண்டு. வருகைப் பதிவேட்டைக் குறிப்பது, காலநிலையைக் குறிப்பது, கற்றல் அட்டைகளில் இருக்கும் செயல்பாடுகளை செய்வது என மாணவர்கள் தாமே கற்கின்றனர்.

படைப்பாற்றல் கல்வியிலும் இதே வகையான செயல்பாடுகளே உள்ளன. ஆனால் புத்தகங்களே இங்கு அட்டைக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன. இம்முறையில் மாணவர்கள் குறிப்பிட்ட பாடப் பகுதியை தாமே படித்து புரிந்து கொள்வதோடு, அப்பாடப் பகுதி தரும் செய்திகளை தொகுத்தெழுத வேண்டும், கடின சொற்களை இனங் காண வேண்டும். அப்பாடப் பகுதியை எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் ஒரு மன வரைபடத்தையும் வரைய வேண்டும்.

மாணவர்களுக்கு அதிக சுதந்திரத்தை தருவதாகவும், அவர் தம் படைப்புத் திறனை தூண்டி விடுவதாகவும் இம்முறை உள்ளது. குழந்தை மய்யக் கல்வியான இம்முறையில் ஆசிரியர், பாடம், தேர்வு ஆகிய மூன்று ‘பூதங்க’ளின் பயத்திலிருந்து ஒரு மாணவன் விடுதலை பெறுகிறான். ஆனால் இங்குதான் சிக்கல் தொடங்குகிறது. செயல்வழிக்கற்றல் முறையில் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் அட்டைகளை எடுத்து வருவது, அடுக்குவது, கையாளுவது போன்றவற்றிலேயே அதிகமான நேரம் கழிகிறது. கற்றல் செயல்பாட்டில் அட்டைகள் முக்கியம் என்பதால், ஒரு அட்டை தொலைந்தாலும் எல்லாமே நின்றுவிடுகிறது. ஆசிரியரும் மாணவரும் அட்டைகளை அடுக்குவதிலேயே நாட்களைக் கழிக்கின்றனர்.

மாணவர்கள் ஒவ்வொரு படிநிலைக்கும் உரிய அட்டைகளில் இருக்கும் கற்றல் செயல்பாடுகளை முடித்த பின்னர்தான் அடுத்த நிலைக்குப் போக முடியும். இதனால் ஒரு வகுப்பறையில் பல நிலைகளில் நிற்கும் மாணவர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருக்கும் கவனம் செலுத்துவது ஆசிரியர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. இவ்வாறான காரணங்களால், கற்றல் செயல்பாடு தொய்வடைந்து வருகிறது. மீதிறன் பெற்ற மாணவர்கள் ஒரு நிலைக்குமேல் போய் தடுத்து நிறுத்தப்பட்டு பிற மாணவர்களுக்கு கற்றுத்தரும்படி பணிக்கப்படுகிறார்கள். இதனால், அவர்கள் படிப்பும் தடைபடுகிறது. தமிழ் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள், எண்ணுருக்கள் ஆகியவற்றை ஒரு மாணவர் தெளிவாக கற்றுக் கொள்ளும்போதுதான் இவ்விரு முறைகளில் சிறப்பாக செயல்பட முடியும். ஆய்வுகள் சொல்வது போல வாசிப்புக் குறைபாடு இருக்கும்போது, இம்முறைகள் மாணவர்களை மேலும் பாழாக்கி விடுகின்றன.

செயல்வழிக் கல்வியை முடித்து, படைப்பாற்றல் கல்விக்கு வரும் மாணவருக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது மிகமிக அடிப்படையான முன் நிபந்தனையாகிறது. ஆனால் இங்கிருக்கும் நிலையில் நிலைமை அப்படி இல்லை என்பதால், கிராமப்புற மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தங்கள் குழு மாணவர்களோடு பெரும்பாலான பொழுதுகளை வெட்டிக் கதை பேசி கழிக்கிறார்கள்.

கற்றல் அடைவுத் திறனில் குறைவுடைய மாணவர்களிடையே ஒன்றிரண்டு ஆண்டு இடைவெளியிலேயே அடுத்தடுத்த கல்வி முறையை அறிமுகப்படுத்தியதால், கிராமப் புற மாணவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். சொந்தமாகப் படிக்க முடியாத மாணவரால் பாடத்தில் தெளிவு பெற முடியவில்லை. பாடம் நடத்தும்படி இருந்த முந்தைய கற்பித்தல் முறையிலாவது சுமை ஆசிரியர் மேல் விழுந்திருந்தது. இப்போது பாடத்தை கற்கும் சுமை மாணவர்கள் மீதே விழுகிறது. கிராமப்புற கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கு இது பெரும் சவால். முழுமையான கற்றல் திறன் கொண்டவர்களாக உருவாகாத சூழல் அவர்களை மந்தமாக்கி விடுகிறது. ஆனால் தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், தனிப் பயிற்சி பெறும் மாணவர்களும் அதிக கற்றல் திறன் பெற்றவர்களாக உருவாகின்றனர். இந்த வேறுபாடு சமூகத்தில் ஏற்றத்தாழ்வையும் இடைவெளியையும் உருவாக்கி விடுகிறது.

கிராமப்புற ஏழை மாணவர்களிடையே கற்பதற்கான அடிப்படைகளை உருவாக்காமல் ஆசிரியர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழலாம். உண்மைதான். அர்ப்பணிப்பும், கடமையுணர்வும் கொண்ட ஆசிரியர்களாலேயே இன்று இருக்கும் சிறந்த நிலை உருவாகியிருக்கிறது. ஆனால் கிராமப்புறங்களிலும், தலித் மக்கள் பகுதியிலும் உள்ள பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு அதிகபட்ச பொறுப்புணர்வும் அக்கறையும் தேவைப்படுகிறது. பெரும்பாலான பொது மக்கள் அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை இழந்திருப்பது இதனால்தான்.

ஒடுக்கப்பட்ட மக்களிடம் கல்வி வந்து சேர்ந்ததைப் பற்றிய புரிதல் இந்த ஆசிரியர்களில் பலருக்கும் இல்லை. எஸ்.எஸ்.ஏ. மூலம் மாதத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் வீணாகக் கழிகின்றன. அங்கு பாடத்தை கற்பிப்பதில் உள்ள சவால்கள் பற்றியோ, சமூக நிலை பற்றியோ, கலை இலக்கியம் பற்றியோ எதுவுமே பேசப்படுவதில்லை. ஆசிரியர்களுக்கு இப்போது கூடுதல் நெருக்கடியும், அதிகார கெடுபிடிகளும் சேர்ந்துள்ளதால் அவர்களால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியவில்லை என்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஆசிரிய நண்பர் ஒருவர் ஒரு சம்பவத்தை விவரித்தார். ஒரு நாள் பள்ளியைப் பார்வையிட வந்த அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட அலுவலர் அவரை பள்ளி மைதானத்தில் நின்றபடி அழைத்துள்ளார். ‘என்னை ஏன் பார்க்க வரவில்லை? ABL, ALM ஆகியவற்றை ஒழுங்காக நடத்துகிறாயா?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு மிரட்டியுள்ளார். வகுப்பறைகளுக்குள் வந்து பார்வையிடாமல், குறிப்பேடுகளைப் பார்வையிடாமல் இப்படி சத்தம் போட்டு விட்டு சென்றிருக்கிறார். அவர் ஓர் எசமான்; ஆசிரியர் ஓர் அடிமை என்ற கருத்து அந்த அதிகாரியிடம் இருந்திருக்கிறது. இது பல அதிகாரிகளிடம் இருக்கும் மனநிலை. மனித நேயத்துடனான உறவு அதிகாரிகள் – ஆசிரியரிடையே இல்லை. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் பல அம்சங்கள் புள்ளிவிவரத்தைப் பெறுவதிலும், வழங்குவதிலும் மட்டுமே இயங்குவதால், அத்திட்டத்தின் பலன்கள் பிஞ்சிலேயே கருகி விடுகின்றன. வேறு சில சிக்கல்களும் உண்டு. ஒன்று முதல் அய்ந்து வகுப்புகளைக் கொண்ட பல தொடக்கப் பள்ளிகளில் ஓராசிரியர், ஈராசிரியர் என்ற நிலையே நீடிப்பதால், அவர்களால் மாணவர்களுக்குப் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. 60 சதவிகிதம் தொடக்கப் பள்ளிகளில் ஈராசிரியர் என்ற நிலைதான் இன்றும் உள்ளது. ஓர் ஆசிரியருக்கு நாற்பது மாணவர் விகிதம் என்ற நிலையையே இங்கு வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மேற்கு நாடுகளில் அது 1 : 20 என்று வந்துவிட்டது. ஆசிரியர் மாணவர் விகிதத்தை ஒன்றுக்கு இருபது என குறைத்து அதிகப்படியான ஆசிரியர்களைப் பணியமர்த்தினால் நிலைமை வெகுவாக மாறிவிடும்.

இந்த ஆய்வுகளில் ஒன்று, வசந்தி தேவி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்கவே அவர்கள் அந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆனால் அரசு அதை வெளியிடவில்லை. குறைகளை சுட்டிக்காட்டும் போது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அதனிடம் இல்லை. கல்வி அதிகாரிகளும் அப்படித்தான் நடந்துக் கொள்கின்றனர். SSA, ABL, ALM திட்டங்களை விமர்சிக்காமல் புகழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு சமூகத்தில் தலைமுறை அறிவினை, எதிர்காலத்தை தீர்மானிக்கும் விசயம் இது என்பதால் அரசு இதை செவிமடுத்தே ஆக வேண்டும்.

செயல்வழிக் கல்வி, படைப்பாற்றல் கல்வி முறைகளை சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும்படி நெகிழ்வுத் தன்மை கொண்டதாக மாற்றுவது மிகவும் அவசியம். ஆசிரியர்கள், வல்லுநர்கள் குழு அமர்ந்து அதை செய்வது நல்லது. மொழிப்பாடங்களுக்கும், கணிதப் பாடத்திற்கும் இம்முறையிலிருந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விலக்கு அளிக்கலாம். கிராமப்புறம் மற்றும் கற்றல் அடைவு குறைந்த பள்ளிகளில் இம்முறையை காலையிலோ அல்லது மாலையிலோ ஏதாவது ஒரு வேளைக்கு மட்டும் நடைமுறைப் படுத்தும்படி செய்ய வேண்டும். பிற வேளைகளில் கற்றல் அடைவுத் திறன் மேம்பாட்டுப் பணிகளை பிழையின்றி எழுதுதல், சரளமாகப் படித்தல், கணக்கு ஆங்கிலப் பாடங்களில் பயிற்சிகளை செய்தல் போன்றவற்றை கவனிக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கும் ABL, ALM முறைகளை அறிமுகம் செய்வது உடனடி தேவையாகும். இது, கல்வியில் தொடரும் ஏற்றத்தாழ்வை சீராக்கும்.

கல்வியின் கட்டமைப்பு வசதிகளிலும், பள்ளிகளின் எண்ணிக்கையிலும், ஆசிரியர் மற்றும் சேர்க்கை நிலையிலும், தமிழ் நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. ஆனால் அடிப்படைக் கல்வியைப் பெறுவதிலோ தமிழக குழந்தைகளுக்கு சிக்கல் இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் அவர்கள் எவ்வாறு முன்னகர முடியும் என்று கேட்கிறது இவ்வறிக்கைகளிலே ஒன்று. இக்கேள்வியை ஒவ்வொருவரும் கவலையோடு எதிர்கொண்டு செயலாற்ற வேண்டும். குறிப்பாக அரசுக்கு இப்பொறுப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில், அரசை நடத்துகிறவர்களின் பிள்ளைகளோ, அரசு அதிகார வர்க்கத்தின் பிள்ளைகளோ இதனால் பாதிக்கப்படப் போவதில்லை. அவர்களின் பிள்ளைகள் யாரும் அரசுப் பள்ளிகளில் படிப்பதில்லை. ஏழை தலித்துகளின் பிள்ளைகளே அங்கு பெருவாரியாகப் படிக்கிறார்கள். அவர்களே விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலை தொடர்ந்தால், அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறும் தலித் மாணவர்கள் மீண்டும் அடிமை வேலைகளை செய்யவும், மாடு மேய்க்கவும், கழிவு அகற்றவும்தான் போக வேண்டியிருக்கும். இதைப் பார்த்துக் கொண்டிருப்பது அரசுக்கு நல்லதல்ல.

முள்காடு


அப்பன் நடந்து கொள்ளும் விதம் சின்னப்பையனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பாய்மார்களின் முன்னால் அப்பன் நிலைக் கொள்ளாமல் தவிக்கிறான். தலையையும், தாடியையும் பரிதாபத்துடன் சொறிகிறான். குழைந்து நெளிகிறான். நிமிசத்துக்கு நிமிசம் “எஜிமான்… எஜிமான்’ என்கிறான். எல்லாவற்றையும் கவனித்தபடி நின்ற இடத்திலிருந்து இம்மியும் அசங்காமல் அப்பனை முறைத்துக் கொண்டிருந்தான் சின்னப்பையன்.

இரண்டு பாய்மார்கள் கையில் ஒரு காகிதத்துடன் அந்த முள்காட்டில் நின்றார்கள். அவர்களிடமிருந்து மூக்கை நிமிண்டிக் கொள்கிற மாதிரி வாசனை அடித்தது. பாய்மார்கள் எல்லோரும் அத்தர் போடுவார்கள் என்று அப்பன் சொல்லி சின்னப்பையன் கேட்டிருக்கிறான். அப்பன் அதைச் சொன்னபோது அவன் பேச்சினூடே ஒரு வாசனை அடிப்பதாய் சின்னப்பையன் நினைத்தான். இப்போதோ நிஜத்தில் அது பிடிபடாமல் இருந்தது.

தரையில் படாத மாதிரி லுங்கியைத் தூக்கிக் கட்டியிருந்தார்கள் இருவரும். அவன் எதிரிலேயே கொஞ்ச நேரத்துக்கு முன்பு ஒருவர் லுங்கியை அவிழ்த்து உதறி கட்டிக் கொண்டார். இடுப்பிலிருந்து லுங்கியை அவிழ்த்ததும், இரண்டு கைகளிலும் பிடித்து இப்படியும் அப்படியுமாகக் குலுக்கி உதறிய பின், முன்பக்கமாக இறுக்கிச் சுற்றிச் சொருகினார் அவர். முன் தள்ளியிருக்கும் வயிற்றுக்கு எந்தத் தொந்தரவும் தரவில்லை. அவர் அப்படி லுங்கியை கட்டுவது, கார் ஓட்டுவதை சின்னப்பையனுக்கு ஞாபகப்படுத்தியது. அவன் அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டான். அப்போது குப்பன் மகனைப் பார்த்து முறைத்தான்.

அந்த முள்காட்டிலே வஜ்ஜிரம் மண்டியொன்றைக் கட்டுவதற்காக பாய்மார்கள் இருவரும் இடம் பார்த்தார்கள். பீமாராவ் நகர் எனப்படும் அப்பறைச் சேரியையும், பெரியப்பட்டிக்குப் போகும் நெடுஞ்சாலையையும் இணைக்கிற மாதிரி, ஊராட்சி நிர்வாகம் ஒரு தார்ச் சாலையைப் போட்டவுடனே அந்த முள்காட்டிற்கு மதிப்பு கூடித்தான் போனது. கண்ணுக்கெட்டிய விஸ்தாரத்துக்கு வேலிக்காத்தான் முள்செடிகளும், புதர்களும் மண்டியிருக்கும் அங்கு, கருகருவென்ற தலையில் எட்டிப்பார்க்கும் வெள்ளை முடிகளைப் போல சில கட்டடங்களும்கூட இப்போது எழும்பிவிட்டன.

சேரிக்கு வரும் வழியில் வியாபித்திருந்த அந்த முள்காட்டில், நெடுஞ்சாலையை ஒட்டிய மாதிரி ரோட்டரி கட்டடம் ஒன்றும், பெட்ரோல் பங்க் ஒன்றும் முதலில் எழும்பின. சில மாதங்கள் கழித்து இணைப்புச்சாலை ஓரமாக தோல் மண்டியொன்று கட்டப்பட்டது. அதற்கடுத்து ஒரு வஜ்ஜிரம் மண்டியும் வந்தது. கொஞ்சம் போக்குக் காட்டுகிற மாதிரி இருந்து ஒரு வீடும் அந்த அத்துவானக் காட்டில் உருவானது. அந்த ஒற்றை வீட்டில் பழைய தொழில் நடப்பதாக சேரிசனங்கள் பேசிக் கொண்டனர். எப்படியோ சொல்லி வைத்துச் செய்த மாதிரி எல்லா

தொழில்மனைகளும் ஒரே வரிசையில் அமைந்துவிட்டதால், பழந்தொழில் பற்றிய பேச்சு தேய்ந்து அழிந்துவிட்டது!

தோல் மண்டிக்கும், வஜ்ஜிரம் மண்டிக்கும் காவலாளிகளாக சேரியிலிருந்து இரண்டு கிழக்கட்டைகள் அமர்த்திக் கொள்ளப்பட்டதும், குப்பன் அவர்களோடு வந்து ஒட்டிக் கொண்டான். அந்த வயசாளிகளோடு தன்னையும் இணை வைத்து ஊர்க்கதைகளைப் பொழுதுக்கும் பேசுவது. நிலை நிலையாய் மண்டியிருக்கும் உயிர் வேலி முள்புதர்களை வெட்டி விறகாக்குவது. இதுதான் குப்பனின் வேலை.

குப்பன் சுத்தமாக ஓய்ந்து உட்கார்ந்து விட்டான். எப்படித் திரும்பியும் அவனுக்குப் போக்கிடம் இல்லாமல் போய்விட்டது. ஏர் ஓட்டவோ, அறுப்பறுக்கவோ அவனை யாரும் கூப்பிடுவதில்லை. மனிதர்களை வைத்துச் செய்யப்படும் பயிர் வேலைகள் எதுவும் இப்போது இல்லாமலாகி விட்டன. அவன் உஷார்காரனாக இருந்திருந்தால் தோல் வேலைக்கோ, பீடி சுற்றுவதற்கோ மாறிக் கொண்டிருக்கலாம். அதற்கெல்லாம் அவன் போகவில்லை. எதிரில் உருண்டு வந்து நிற்கும் பாறைகளையொத்த ஒவ்வொரு நாளையும் எப்படிப் புரட்டுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவன், கடைசியாக அந்த முள்காட்டிற்கு வந்து சேர்ந்து விட்டான்.

பாய்மார்கள் வஜ்ஜிரம் காய்ச்சலை மேற்பார்வையிடவும், தோல் மண்டிக்கும் தினந்தோறும் வந்து போவார்கள். அவர்களுக்கு தேத்தண்ணீர் வாங்கி வருவான் குப்பன். அவர்கள் இடும் ஏவல் வேலைகளையும் செய்வான். அப்படியே அவர்களுடன் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பழக்கமாகிக் கொண்டான்.

முதலில் தனியாய் வந்தவன், இப்போது பொறுப்பின்றி ஊர் சுற்றிக் கொண்டிருந்த தன் மகனையும் சேர்த்துக் கொண்டான்.

அன்று மத்தியானம் அப்பனும் மகனுமாக முள் வெட்டிக் கொண்டிருந்தபோது, பாய்மார்கள் இருவர் ஸ்கூட்டர்களிலே அங்கு வந்து சேர்ந்ததைப் பார்த்தார்கள். குப்பன் உடனே வெட்ராவையும் கவைக்கோலையும் அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் அவர்களின் எதிரில் பம்மிக் குனிந்தான்.

“சலாம் எஜிமான். வணக்கம் வருது எஜிமான்”

“என்னா குப்பா ஒரே முள்ளுச்செடிய உடமாட்டே போலக்கீது?”

“எஜிமாம்மாருங்க சொன்னா செரிதாங்க. இவன் எம் மகங்க”

விறைத்துக்கொண்டு நிற்கும் மகனைப் பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது குப்பனுக்கு. வெகாளத்தோடு கத்தினான்.

“எஜிமாம்மாருக்கு வணக்கம் வெய்யிடா கம்ஜாத்தி நாயே”

“உடு குப்பா”

“அப்பிடி இல்ல எஜிமான். இந்தக் காலத்துப் பசங்களுக்கு, மட்டுமரியாதைன்னு எங்கத் தெரியிது?”

“சர்தான் குப்பா. நீ சொல்லிக்குட்த்தா கேட்டுக்கறான். சரி. பின்னியும் நீ முள்ளு வெட்டறதுக்கு நேரம் வந்துடுச்சி. இப்பிட வா”

“இதோ வந்துட்டேன் எஜிமான். டேய் எப்பா. ஓடியாடா. எஜிமானுக்குப் பின்னாடி போ”

சின்னப்பையன் வேண்டா வெறுப்பாக பாய்மார்களின் முன்பாகப் போய் அவர்களுக்குச் சில அடிகள் தள்ளி நின்று கொண்டான். அவர்கள் இருவரும் கையில் இருந்த வரை படத்தைப் பார்த்துவிட்டு எதிரில் இருந்த முள்காட்டை நோக்கினர்.

“குப்பா, இதுவும் நம்ம எடந்தான். இங்க ஒரு வஜ்ஜிரம் மண்டி உளுது. மனெ அளந்து நட்ட காணிக்கல்லுங்கள காணும் பாரு. அதுங்கள கொஞ்சம் தேடு பாக்கலாம்”

“ஆவுட்டும் எஜிமான்”

குப்பன் தலையில் துண்டை சுற்றிக் கொண்டான். சோமத்தை முட்டி தெரியும்படியாக மடித்துக் கட்டிக் கொண்டான். காலில் போட்டிருந்த பழைய அவாய் குதிக்காலில் பட்பட்டென்று அடிக்க, இப்படியும் அப்படியுமாக ஓடி முள் புதருக்குள் நுழைந்து காணிக்கற்களைத் தேடினான். முள் விளார்களை விலக்கிக் கொண்டு நுழைந்தபோது பச்சை முட்கள் அவனைக் கீறின. அவர்களுக்குக் கேட்கிற மாதிரியே வலியில் முனகிக் கொண்டான்.

“ஆத்தாள… எப்படி குத்துது பாரு”

“எஜிமான் இதோ கீது. நல்லா செடிங்களுக்குள்ள மறைஞ்சினுகீது. அந்தா மேலாண்ட கல்லு எங்கக் கீதுன்னு பாக்குனும்.”

அங்கிருந்தபடியே சின்னப்பையன் இருக்கும் திக்கைப் பார்த்து சத்தம் போட்டான்.

“என்னாடா நின்னுனு? அங்கக் காணிக்கல்லு தெரிதா பாரு. புள்ளத் தெறமையெ பேலவுட்டுப் பாத்தா, அது அருகம் புல்ல புடிச்சினு முக்குச்சாம். தேடிப்பாரு, தேடிப்பாரு”

காணிக் கற்களைக் கொண்டு கணக்குப் போட்டார்கள் அவர்கள்.

“குப்பா, நல்லா பாத்துக்க. இந்தக் கல்லையும் அந்தக் கல்லையும் புடிச்சினு அந்தாண்ட தெரு அளந்திருக்கிற எடம் வரிக்கும் சுத்தமா முள்ளுங்களெ வெட்டி சீர் பண்ணிடு. நாள மக்யா நாள்ள கட்டட வேல தொடங்குனும்.”

காலில் விழாத குறையாகப் பம்மிய குப்பன் அவர்களிடம் “ஆவுட்டும் எஜிமான்” என்றான்.

பாய்மார்கள் இருவரும் அப்படியே காலாற கொஞ்ச தூரத்துக்கு நடந்து போனார்கள். திரும்பி வந்து வஜ்ஜிர மண்டிக்குள் நுழைந்து கொண்டனர். குப்பன், ஆள் நடமாட்டமில்லாத அந்தச் சாலையில் அவர்களின் வண்டிக்கருகில் அமர்ந்து கொண்டு காத்திருந்தான். அவர்கள் புறப்படுவதற்காகத் திரும்பியபோது விலுக்கென்று எழுந்து நின்றான்.

“எஜிமான் டீ குடிக்கணும். பீடி வாங்கிக்கணும். எதான சில்லற இருந்தா…”

குப்பனின் இடதுகை அனிச்சையாக மேலெழுந்து போய் பின்னந்தலையைச் சொறிந்தது. உதடுகள் பிரிந்து, காவியேறிய பற்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியே வந்து நின்றன. வலது கை மார்பளவுக்கு உயர்ந்து அந்தர வெளியில் அல்லாடியது. வண்டிகள் உறுமியபடி கிளம்பியபோது அவன் கையில் சில நாணயங்கள் விழுந்தன. குப்பன் அவைகளை கண்களில் ஒற்றி, மேல் சட்டையில் போட்டுக் கொண்டான்.

வெறுப்பில் முனகியபடி நாணயங்கள் எழுப்பும் சப்தத்தை கேட்கப் பெறாமல் கத்தினான் சின்னப்பையன்.

“மயிரு. அவங்க எதுர்லயே என்னெ நீ திட்டறியா? அந்தப் பிச்சக் காசை வாங்காக் காட்டிதான் என்னா?”

“அட… எஜிமாம்மாரை கேட்டது தப்புன்றியா? பொளைக்கத் தெரியாத தருதல. மொண்டிக் கத்தியாலயே உன்ன வெட்டி பொலி போட்டுருவேன்.”

திட்டிக் கொண்டிருக்கும் அப்பனை முறைத்துவிட்டு ஊரைப் பார்த்து நடந்தான் சின்னப் பையன்.

அப்பன் தனக்குக் கையளித்திருக்கிற தொழில் கருவிகளான கவைக்கோல், வெட்டுக்கத்தி, இரண்டு செங்கற்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு இளம் பொழுதிலேயே முள்வெட்ட புறப்பட்டான் சின்னப்பையன். முள் விளார்களை அடித்து ஒடுக்கிப் பிடிக்க, அந்தக் கவைக்கோலை நீண்ட காலமாக குப்பன் பயன்படுத்தி வந்தான். அது மினுமினுப்பாக மாறியிருந்தது. கால்களில் முள் குத்தாமலிருக்க செங்கல்லைப் போட்டு அதன் மீது தான் அவன் நின்று கொள்வான். முள் விளார்களை சுமை கட்டும்போது மிதித்து இறுக்கவும் செங்கல் உதவிகரமாக இருக்கும்.

குப்பன் காலையிலிருந்தே அவனைக் கிளம்பச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தான். நேற்று மாலையிலிருந்தே தொடங்கியது காலையில் அதிகமாகிவிட்டது. “ஒரு கஞ்சியெ கிஞ்சியெ குடிச்சுப்புட்டு வேளையோட பெறப்புடுடா சாமி. பாய்மாருங்க சாங்காலமா வர்றத்துக்குள்ள வேல ஆவுனும். அங்க வஜ்ஜிரம் மண்டி உளுந்துச்சியானா, வாச்சிமேன் வேல கீல கேட்டு வாங்கிக்கலாம். உன்னும் எவ்ளோ காலத்துக்கு இந்த நாய்ப்பொளப்பு?”

சின்னப்பையனுக்கு அப்பனின் பேச்சில் எந்தப் பிடிமானமும் உண்டாகவில்லை. வெறுப்போடு கிளம்பி இரண்டு தெருக்கள் கடந்தபோது, ஊர்ப்பெண்கள் சிலர் அவனைத் திட்டியது இன்னும் வெறுப்பைக் கூட்டியது.

“பெறப்புட்டியாடா ஒரே முள்ளு செடிய உட்டுவெக்காம வெட்ட? எல்லாத்தியும் இப்பிடி வெட்டிப்புட்டா அப்புறம் பொம்பிளைங்க எங்கதான் ஒதுங்குறது?”

சின்னப்பையன் யோசனை செய்துகொண்டே நடந்தான். அவர்கள் சொல்வது சரிதான். நேற்றுகூட அவனின் அக்காள் சாவித்திரி, அம்மாவிடம் புலம்பிக் கொண்டிருந்ததை அவன் கேட்டான். பெண்கள் ஒதுங்குவதற்கு மறைப்பே இல்லையென்று குறைப்பட்டுக் கொண்டாள் அவள். சேரி சனங்கள் இயற்கையின் அழைப்புக்கு முள்காட்டிலேயே பதில் தேடினர். அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது.

முள்காடு ஒரு காலத்தில் மிகப்பெரிய புளியந்தோப்பாக இருந்தது. நூறு மரங்களுக்கு மேலிருக்கும். எல்லாமே முதிய மரங்கள். அவனின் தாத்தாவே சிறுவனாக இருந்தபோதும் அந்த மரங்கள் அப்படித்தான் இருந்ததாம்.

மழைக் காலங்களிலும், காற்றடிக் காலங்களிலும் கூச்சல் போட்டு பயமுறுத்தும் புளிய மரங்கள் வெயில் காலங்களில் கனிவு காட்டும். பழுத்துச் சிவந்து விழும் இலைகள் செந்நிற கம்பளி போல் பரந்திருக்க, அவற்றினூடாக மரங்கள் நின்றிருப்பது அழகாய் இருக்கும்.

புளியந்துளிர் காலத்திலும், பழக் காலத்திலும் சின்னப்பையன் நாக்கை சப்புக் கொட்டிக் கொள்வான். மணக்க மணக்க புளியந்துளிர்களைப் போட்டுக் கடைந்து அம்மா குழம்பு வைப்பாள். ஊர் மக்கள் ஒதுங்க தோப்பும், வயல்களும் அன்றிருந்தன. உச்சிப்பொழுதில் நடுதோப்புக்காய் ஒரு முறை அவசரத்துக்கு ஒதுங்கப் போனபோது, கருநாகத்தைப் பார்த்துவிட்டு, காலோடு கழிந்து வந்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

தோப்பை வெட்டிச் சரித்து மனையளந்ததும் புழக்கடைத் தடுப்பு விழுந்தது போலாகிவிட்டது. தோப்பைச் சுற்றியிருந்த நிலங்கள் எல்லாமே வீட்டு மனைகளாகி, ஊர் எழுந்து விட்டது. சேரிப் பக்கமாக இருப்பதால் தோப்பு மனையில் யாரும் வீடு கட்ட முன்வரவில்லை. அது முள்காடாகி சேரி மக்களுக்கு இன்று புழக்கடையாகி விட்டது.

நேற்று பாய்மார்கள் அடையாளம் காட்டிய இடத்திற்கு வந்து சேர்ந்ததும் சின்னப்பையன் போலியாகக் கனைத்துக் கொண்டான். புதர் மறைவுகளில் உட்கார்ந்திருக்கும் சிலர் அவன் குரல்கேட்டு சீக்கிரம் எழுந்து போய்விடுவார்கள் என்று நினைத்தான். இப்போது, முள்களைவிட அவ்விடத்தைப் பற்றிய அருவருப்பே அவனுள்ளே பயமாக மேலெழுந்தது. அந்த முள்காட்டில் கீழே பார்க்காமல் நடக்க முடியாது. முட்களும், மக்கள் உட்கார்ந்து போன நிலைகளும் கால்களைப் பதம் பார்த்து விடும். மழைக்காலங்களில்தான் சேரி சனங்களின் பாடு சொல்லி மாளாது. முள்காட்டில் குளம் போல அங்கங்கே தண்ணீர் நிறைந்துவிடும். மிஞ்சுகின்ற கொஞ்ச நஞ்ச இடங்களிலோ மக்கள் உட்கார்ந்து குமித்து விடுவார்கள்.

அகலமான இணைப்புச் சாலையின் ஓரங்கள் நிறைந்து ஒற்றையடிப் பாதையாகிவிடும். ஒதுங்க இடமின்றி தவிப்பார்கள் சனங்கள். களிமண் பூமி வேறு சொதசொதவென்றாகி வழுக்கும். அவசரத்துக்கு ஒதுங்கப்போய் வழுக்கி விழுந்து உடம்பெல்லாம் பூசிவந்தவர்கள் கதைகளை சின்னப்பையனும், அவனின் கூட்டாளிகளும் சொல்லிச் சிரித்திருக்கிறார்கள்.

முள்காட்டில் நீர் தேங்கும்போது பன்றிக்குட்டிகளைப் போன்ற தவளைகள் மண்ணிலிருந்து கிளம்பும். அவற்றை அடித்துக் கொல்லவும், ஓணான்களைப் பிடிக்கவும், நண்டுகளைத் தேடவும் அவர்கள் சுற்றியலைவார்கள். மழைக்காலங்களின் காலைகளில் முள்செடிகளின் இலைகள் எங்கும் நீர்த்திவலைகள் நிறைந்து சொட்டக் காத்திருக்கும். இளம் வெயில் முள்காட்டில் அடித்ததும் சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாபெரும் பந்தலைப் போல முள்காடு மின்னும். சேரியின் ஒதுக்குப்புறத்தில் பாழடைந்திருக்கிற சமுதாயக் கூடத்தில் தான் சின்னப்பையன் தனது கூட்டாளிகளுடன் கோலி விளையாடுவான், பம்பரம் விடுவான். நிலாக்காலங்களில் அங்கிருந்தபடி அவர்கள் நிலா பார்த்தார்கள். தோப்பு அழிந்த பிறகு வானத் தடுப்பு திறந்து கொண்டதால் கோடிக்கணக்கில் நட்சத்திரங்கள் சேரி மீதும், முள்காட்டின் மீதும் பூக்களைத் தூவின. இரவில் தனியே ஒருநாள் முள்காட்டில் உட்கார்ந்திருந்தபோது, நட்சத்திரமொன்று எரிந்தபடி விழுவதை சின்னப்பையன் பார்த்தான்.

உச்சிப்பொழுதுக்குள் பாதியளவிற்கு முள்புதர்களை வெட்டிக் கழித்து விட்டான் சின்னப்பையன். குப்பன் வேறு அங்கே வந்து குத்துக்காலில் உட்கார்ந்துக் கொண்டு அவனை அதட்டிக் கொண்டிருந்தது இன்னும் வேகப்படுத்தியது. சின்னப்பையன் லாவகமாக முள்விளார்களை வெட்டினான். கைக்கு வாக்காக, முகத்தில் அடிக்காதபடி நிற்கும் கிளையை முதலில் அவன் தேர்ந்து கொள்வான். கைப்பிடிக்கிற இடத்தில் நீண்டிருக்கும் முட்களை கழித்து விடுவான். பிறகு வாகாக ஒரு வெட்டு. சாய்வாக விழும் வெட்டுக்கு முள்செடியின் கிளை தனியே விழும். வெட்டுப்பட்ட கிளையின் அடிப்பாகம் முட்டையைப் போல் நீள் வட்டத்தில் அழகாய் இருக்கும். சில முள்மண்டைகளை வேலி போடுவதற்காக அப்படியே எடுத்து ஓரமாகப் போட்டான் சின்னைப் பையன். சிலவற்றை விறகுக்காக கழித்துப் போட்டான். வெறுட்டும் பசிய வாசம் முள்செடிகளிலிருந்து அங்கு பரவியது.

வியர்வை வழியும் உடம்பில் முட்செடிகளின் பொடி இலைகள் பசைபோட்டது போல் ஒட்டிக் கொண்டிருந்தன. என்னதான் கவனமோடு இருந்தும் நான்கைந்து இடங்களில் முள் அடித்து வலித்தது. வேலையின் மீது மும்முரமாய் இருந்தபோது கூட்டமாக வரும் பெண்களின் சத்தம் மனதைக் கலைத்தது. சின்னப்பையனுக்கு குறுகுறுவென்றிருந்தது. பெண்கள் ஒதுங்கும் இடம் தனியே இருக்கிறது. இங்கு எங்கே வருகிறார்கள் என்று நினைத்தான். அவனுக்கு எதிர்க்கையில் இருந்த இணைப்புச் சாலையிலே கூட்டமாக பெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.

“ஒரே முள்ளு செடிய உடறதில்லடி இந்த சாவித்திரி ஊட்டாரு. பொம்பிளைங்க எங்க ஒதுங்குவாங்கன்னு ஒரு யோசனையில்ல?”

“ஏய், அவுங்களும் என்னாதான் பண்ணுவாங்க?

வெறகுக்கு வெட்றாங்க. மானமாகீறவ ஊட்டுலயே லெட்ரினு கட்டிக்குனும்.”

“ஊட்டாண்ட கட்றதுக்கு அவ்ளோ துட்டுக்கு எங்க போறது. எம்பட்டைங்க இந்த கெவுருமெண்ட்டு ஊட்டுல கட்டித் தந்தது கூட இடிஞ்சி உளுந்து புடுச்சிங்க.”

“க்கும்… அவுனுங்க என்னாத்த கட்டனானுங்க?”

பேசிக் கொண்டேபோன பெண்களில் சாவித்திரியும் இருப்பதைப் பார்த்தான் சின்னப்பையன்.

“ஏய் எக்கோவ். இந்த முள்ளு மண்டைங்கள வந்து கட்டி எடுத்துனுப் போயேன்.”

“டேய், இர்றா. பொம்பிளைங்களுக்கு லெட்ரினு ரூம்பு கட்டச் சொல்லி பி.டி.ஓ. ஆபிசுல மனு குடுக்கப் போறோம்.”

சாலையோரத்தில் பீடி இழுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த குப்பன் தொண்டையைச் செருமி துப்பிவிட்டுச் சொன்னான்.

“குடிக்கக் கூழு இல்ல. ஊரு வேலய எடுத்துனு அலையுதுங்க. இதுங்க எங்க உருப்படப் போதுங்க.”

பெண்களின் தலை மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான் சின்னப்பையன். கத்தியைக் கீழே போட்டு விட்டு உடம்பை நெட்டி முறித்தான்.

“எப்பா, இதுக்குமேல நம்மால முடியாது. வெய்யிலு தாழத்தான் நான் வருவேன்.”

குப்பனின் அருகில் வந்து சொன்னான் சின்னப்பையன். அப்பனின் பதிலுக்குக் காத்திருக்காமல் ஊரைப் பார்த்து நடக்கத் தொடங்கினான். குப்பன் அவனை அசிங்கமாகத் திட்டுவது காதில் விழுந்தது.

உச்சிப் பொழுது கழிந்து வெயில் தாழ்ந்திருந்தபோது சின்னப்பையனை விரட்டினாள் அம்மா.

“உங்கொப்பன் பாத்துனு இருப்பாரு போடா எப்பா”

முனகிக் கொண்டே கிளம்பிய சின்னப்பையன், முள்காட்டிற்குள் நுழைந்ததும் கூச்சல் கேட்டு நின்றான். முள்காட்டின் கிழக்கு மூலையிலிருந்துதான் அப்பெண் குரல் எழும்பியது. சாவித்திரியின் குரலைப் போல அது தோன்றியதும் புதர்களின் நடுவே இருந்த ஒற்றையடிப்பாதை வழியே ஓடினான். கிழக்கு மூலையில் மற்றொரு இணைப்புச் சாலை போட மண் சாலை போட்டிருந்தார்கள். சேரிப் பெண்கள் ஒதுங்கும் இடம் அந்தப் பக்கத்தில்தான் இருந்தது.

சாவித்திரிதான் கத்திக் கொண்டிருந்தாள்.

“உங்கம்மா, அக்கா, தங்கச்சிங்களுத போய்ப் பாருங்களேண்டா, நாயிங்களே”

ஊர்க்காரன் ஒருவனை சேரிப் பெண்கள் இரண்டு பேர் கல்வீசி துரத்திக் கொண்டிருந்தார்கள். அருகில் போவதற்குள்ளாகவே

சின்னப்பையனுக்கு எல்லாம் புரிந்து விட்டது. கீழே குனிந்து பொறுக்கான கற்களை எடுத்துக் கொண்டு, அந்த ஆளின் பின்னால் திட்டியபடியே

துரத்திக் கொண்டு ஓடினான்.

“டேங்கோ… நில்றா”

“டேய் கணா வானான்டா”

சின்னப்பையனிடம் கெஞ்சியபடி கத்தினாள் சாவித்திரி. ஊர்க்காரனின் தலை மறையும் வரை துரத்திக் கொண்டு போனான் சின்னப்பையன். இணைப்புச் சாலை முடியும் இடத்தில் நெடுஞ்சாலை ஓரமாக நீண்ட நேரமாக நின்றான். சின்னப்பையனின் உடல் விறைத்திருந்தது. ஆத்திரம் அடங்காமல் மனம் ஆர்ப்பரித்தது. மூச்சு இறைக்க இறைக்க திரும்பி முள் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு நடந்தான். மகன் வராத ஆத்திரத்தில் திட்டிக் கொண்டும், பாய்மார்களிடம் கெஞ்சிக் கொண்டும் இருந்த குப்பன், சின்னப்பையனின் தலையைப் பார்த்ததும் கோபத்தோடு கத்தத் தொடங்கினான்.

“எங்கடா போய்த் தொலஞ்ச நாதாரி. எஜிமாம்மாருங்க எவ்ளோ நேரமா வந்து நிக்கிறாங்க தெரிமா? போய் நான் வெட்டிப் போட்டுக்கிறதையெல்லாம் ஓரமா இழுத்துப் போட்டுட்டு மீந்துக்கீற முள்ளுச் செடிங்கள வெட்டு.”

சின்னப்பையன் வெறியுடன் அப்பனைப் பார்த்தான். அங்கு நின்று கொண்டிருந்த பாய்மார்களைப் பார்த்து முறைத்தான்.

“முள்ளு வெட்ட முடியாது. எவனாவது முள்ளு வெட்டுன்னு வந்தா ஒததான்.”

பதறிப்போன குப்பன் சின்னப்பையனை அடிக்க ஓடினான். பாய்மார்களிடம் காலில் விழப்போனான். எதையும் சட்டை செய்யாமல் சேரியைப் பார்த்து நடந்து போய்க் கொண்டிருந்தான் சின்னப்பையன்.

தேர்தல் வாக்குறுதிகள்:சட்டத்திற்கு எதிரான சொற்கள்


தேர்தல் வந்துவிட்டது. பதினைந்தாவது நாடாளுமன்றத் தேர்தல். இந்தியாவின் அதிகாரம் மிகுந்த ஒரு மனிதரை, ஜனநாயக வழிமுறைகளின் வழியாகத் தேர்வு செய்யும் தருணம் நெருங்குகிறது. உலகின் மாபெரும் மக்களாட்சி நெறிமுறைகளை கேலிக் கூத்தாக்கிடும் செயல்களுக்கும், அதைப் பாதுகாத்திட முனைந்திடும் செயல்களுக்குமான ஒரு போர்க்களம் அருகில் வருகிறது. உயர்ந்தவர்களையும், திறமையானவர்களையும் மட்டுமே ஆட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்பது சிறந்ததொரு கருத்துதான். ஆனால், இது ஜனநாயகத்திற்குப் பொருந்தாது. நலிந்தவர்களையும், எளியவர்களையும், ஒடுக்கப் பட்டவர்களையும், பெண்களையும், சிறுபான்மையினரையும் இணைத்துப் பிரதிநிதித்துவப் படுத்துவதுதான் ஆட்சி மன்றம். அதுவே உண்மையான ஜனநாயகம் என்றார் பாபாசாகேப் அம்பேத்கர்.

“”தெரு கூட்டுபவர்களுக்கும், அடிமை வேலை செய்பவர்களுக்கும், கீழ்ச் சாதிக்காரர்களுக்கும் சட்டமியற்றுகின்ற இடத்தில் என்ன வேலை?” என்று திலகரைப் போன்ற காங்கிரஸ்காரர்கள் சொன்னபோது, அம்பேத்கர் வேறுவிதமாக அரசின் அதிகாரத்தைப் புரிந்து கொள்ளும்படி கூறினார். ஜனநாயகத்தின் அடிப்படையானதும், உயிர் மூச்சானதுமான கூறு, அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் என்பது அவருடைய எண்ணம். உண்மையில் அவருடைய கருத்துதான் ஜனநாயகத்தின் அடித்தளம்!

கருத்தியல் தளத்தோடு மட்டுமே நின்று போய்விடாமல் அதை செயலாக்குவதற்கான வழிமுறைகளை சட்டமாக்கியதன் மூலம் – இந்திய ஜனநாயகத்தின் தந்தையாக அம்பேத்கர் மிளிர்கிறார். இந்தியாவைப் பொருத்தவரை, அவரிடமிருந்துதான்ஜனநாயகத்தின் வரலாறு தொடங்குகிறது. இன்று அதிகாரப்பரவல் உருவாகியிருக்கிறது. எளிய மனிதர் தொடங்கி, சமூகத்தின் உயர் மட்டங்களிலிருந்து வருகின்ற மனிதர்கள் வரை, தேர்தல் களத்தில் போட்டிப் போடுகிறார்கள். எல்லோருமே எப்படியாகிலும் அதிகாரத்தின் கருவறைக்குள் நுழைந்து விட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இத்தேர்தலுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. 2,500 கோடி ரூபாய்களை வாக்களிப்பதற்கான கையூட்டாக வேட்பாளர்கள் மக்களிடம் அளிக்கப் போகிறார்கள் என்கிற கணிப்பு, ஜனநாயகத்தின்பால் மதிப்பு கொண்டிருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக இருக்கிறது. 1952 ஆம் ஆண்டில் நடை பெற்ற முதல் மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை 10 கோடியே 40 லட்சம். அது கடந்த தேர்தலில் 1,300 கோடி ரூபாயாகியுள்ளது. செலவு இம்முறை பன்மடங்கு அதிகமாகலாம்.

தமது ஞாபக மறதியையல்ல, பகுத்தறிவின்மையை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன என்கிற உண்மை மக்களுக்குத் தெரிவதில்லை. மிகச்சரியான மனிதரை தேர்வு செய்து, ஆட்சிமன்றத்திற்கு அனுப்பும் விடயத்தில் மக்கள் பல நேரங்களில் தோற்றுப் போய் விடுகின்றனர்.

அணி மாறுதல்கள் கூச்சமின்றியும், வெட்கமின்றியும் நடக்கின்றன. சாதி பெரும்பான்மையைப்பார்த்து தொகுதிகளும், ஆட்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். குழாயடிச் சண்டையையும் கூட சில நேரங்களில் மிஞ்சிவிடுகின்றன பிரச்சாரங்கள்! நாள், நட்சத்திரம், ஜாதகம், ராசி என்று எல்லா மூடநம்பிக்கைகளையும் துணைக்கு அழைத்துக் கொள்கின்றன (சில) கட்சிகள். அ.இ.அ.தி.மு.க. எப்போதுமே இதில் முன்னணிதான்! அக்கட்சி அறிவித்திருக்கும் வேட்பாளர்களின் ஜாதகங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று கூட இதை சொல்ல முடியாது, அதை அசிங்கப்படுத்தும் செயல் இது!

இவ்வளவு ஆரவாரங்களோடும், ஆர்ப்பாட்டங்களோடும் தேர்வு செய்யப்படும் அரசு, இந்தியாவில் எதை செய்கிறது? எவற்றை சாதிக்கிறது? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? இத்தேர்தலில் வாக்களிக்கப் போகும் 71.4 கோடி வாக்காளர்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்க முடியாமலும் இருக்கிறவர்களுக்கும் – இக்கட்சிகள் எத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளன? தேர்தல் அறிக்கை என்கிற பொய்களைத் தவிர! உண்மையில் வாக்காளர்களுக்கு அளிக்கப்படப் போவதாகக் கணித்திருக்கும் 2,500 கோடி ரூபாய் கையூட்டுப் பணத்தை விடவும் மோசமானவை, இந்தத் தேர்தல் வாக்குறுதிகளே! வாக்காளர்கள் மறைமுகமாகப் பெற்றுக் கொள்ளும் கையூட்டுப் பணம் கூட, ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உதவியாக இருந்து விடும். ஆனால், இப்பொய் வாக்குறுதிகள் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவியாக இருப்பதில்லை.

தேர்தலில் பணம் ஆற்றும் பங்கைக் காட்டிலும் சொற்கள் ஆற்றும் பங்கே அதிகமானது. தேர்தல் வாக்குறுதிகளே மக்களை ஏமாற்றும் ஆபத்தான சட்டவிரோத செயலை செய்கின்றன. தேர்தல் அறிக்கைகளை செயல்படுத்துவதில் ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியும் அக்கறை செலுத்துவதில்லை. பொய்களை எப்படி செயல்படுத்த முடியும்? அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு அவை தமது ஆட்சியை நடத்தத் தொடங்குகின்றன. குறைந்த விலையில் அரிசி, இலவச தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கைப்பேசி போன்ற அறிவிப்புகள் வாக்கு அறுவடைக்கானவைதான்.

மாநிலக் கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை, இந்த வகையான அறிவிப்புகளை தமது தேர்தல் அறிக்கையில் சேர்க்கத் தவறுவதில்லை. சில வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளிக்கின்றன. மக்களும் ஏன் முன்பே நிறைவேற்றவில்லை என்று கேட்பதில்லை. காங்கிரஸ் கட்சி அண்மையில் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்குவதாக சொல்லியிருப்பதும் அப்படியான ஒரு மறுபடி பொய்தான்!

தேர்தலில் ஏதாவது ஒரு கட்சி வெற்றி பெறுவது உண்மைதான். ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதிலோ, எல்லா கட்சிகளும் தோற்றுப் போய்விடுகின்றன என்பது அதைக் காட்டிலும் உண்மை. நாட்டின் விடுதலைக்குப் பிந்தைய ஆண்டுகளில் எல்லா துறைகளிலும் அடியோடு மாற்றங்கள் நிகழும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், எதிலும் மாறாத நிலையிலேதான் இந்தியா இன்னமும் இருக்கிறது. சாதியை ஒழிக்க இதுவரை எந்த அரசும் முன்வரவில்லை. வன்கொடுமைக் குற்றங்களை முற்றிலும் இல்லாமலாக்குவதில் மண்ணைக் கவ்வியிருக்கின்றன இந்த அரசுகள். பெண்களும், குழந்தைகளும் இன்னமும் அதே நிலையில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

உழைப்பவர்கள் இந்தியாவில் சுரண்டப்படுவதுபோல, உலக நாடுகள் எவற்றிலும் சுரண்டப்படுவதில்லை. உழவர்களின் விளை பொருளுக்கு இன்னும் கூட அவர்களாலேயே விலையை தீர்மானிக்க முடியவில்லை. விவசாய சங்கங்களுக்குக்கூட அப்படி ஒரு உரிமை இருப்பதாகத் தெரியவில்லை. விவசாயிகளின் வீட்டுக்கே சென்று விளை

பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும், குறைந்தபட்ச ஆதார விலை அவற்றுக்கு வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் தனது அண்மைத் தேர்தல் அறிக்கையிலேயே கூட அறிவித்திருக்கிறது. ஆனால், அடுத்த 5 ஆண்டுகளிலே கூட அதை நிறைவேற்றுமா என்பது அய்யத்திற்குரியதுதான். கல்வியில் இருக்கும் ஏற்றத்தாழ்வு இன்னமும் களையப்படவில்லை. இன்னமும் கூட தேவையான அடிப்படை வாழ்வாதார வசதிகளான குடிநீர், சுகாதாரம், வீடு, மருத்துவம் போன்றவை மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஆட்சிகள் அமைகின்றன. மக்கள் ஆளப்படுகின்றனர்.

ஆட்சி மன்றத்திற்குப் போகத் துடிக்கின்ற வேட்பாளர்கள் சுமார் 5,350 கோடி ரூபாய்களை செலவு செய்யப் போவதாக சொல்லப்படுகிறது. செல்வந்த வேட்பாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு அறுபது ஆயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வரைக்கும் வாடகைக் கட்டணமாக அளித்து, பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டர்களையே கூட அமர்த்துகிறார்கள்.

வானத்திலிருந்து இறங்கி வரும் தேவதைகளாக தம்மை நம்பிக் கொள்ளும்படி மக்களிடம் கூறுவார்கள் அவர்கள். இப்படி தேர்வு பெற்று செல்கின்ற பிரதிநிதிகளுக்கு அரசு கோடி கோடியாக செலவு செய்கிறது. ஊதியம், படிகள் என்று கோடிக்கணக்காக ஒதுக்கீடுகளை செய்கிறது. அரசு நலத்திட்டங்களோடு இப்பிரதிநிதிகளின் தொகுதி வளர்ச்சிக்கென்றும் கூட நிதியினை ஒதுக்கீடு செய்கிறது. காங்கிரஸ் அரசு 19247.25 கோடிகளை அவ்வாறு ஒதுக்கியது. இந்த நிதி சொந்த சாதி மற்றும் கட்சி நலனுக்காகவே பெரும்பாலும் செலவு செய்யப்படுகிறது என குற்றச்சாட்டுகள் வந்தாலும் ஒதுக்கீடு நிறுத்தப்படவில்லை. இத்தகைய பிரதிநிதிகள் தமது பொறுப்புகளை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்ற அழகை நாடே பார்த்து ரசிக்கிறது! நாடாளுமன்றத்தில் தனது தொகுதிக்காக வினா எழுப்புவதற்குக்கூட கையூட்டு பெற்ற உறுப்பினர்களைப் பற்றி நாம் அறிவோம். இவர்கள்தான் மீண்டும் நம்முன் மேடையேறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மைக்காலமாய் நாளேடுகளிலும், இதழ்களிலும் வெளியான செய்திகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட, இந்த அரசுகளின் செயலற்ற நிலை நமக்குப் புரிந்துவிடும். 2003 இல் இருந்து 2009 வரைக்குமான நிதிநிலை அறிக்கைகளில், குழந்தைகள் நலத்திட்டங்களுக்கான நிதி 2.30 சதவிகிதத்திலிருந்து 5.35 சதவிகிதத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஊட்டச்சத்தற்ற குழந்தைகளின் எண்ணிக்கையோ 15லிருந்து 19 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 79 சதவிகிதம் பேர் ரத்த சோகை நோயுடன் இருக்கின்றனர். இந்தியாவில் சுமார் 47 சதவிகித குழந்தைகள் எடைக் குறைபாட்டு சிக்கலுடன் இருக்கிறார்கள். இன்னமும் கூட நம் நாட்டிலே எழுபது சதவிகித குழந் தைகள் கல்விக் கூடங்களை எட்ட முடியாமல்தான் இருக்கின்றனர் (ஆதாரம் : FORCES அறிக்கை “டைம்ஸ் ஆப் இந்தியா’, 25.2.2009).

திருச்சி மாவட்டத்திலுள்ள திருமலையான்பட்டியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பொது சுடுகாட்டில் தலித் மக்களால் பிணத்தைப் புதைக்க அனுமதியில்லை. வழக்குரைஞர் ரத்தினம் இதை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவால், நீதிமன்றம் சாதிப் பாகுபாட்டை கண்டித்திருக்கிறது (“தினகரன்’ 25.3.09). உலக காச நோய் நாளான மார்ச் 24 அன்று நமக்கு கிடைத்த செய்தி இதுதான் : மனிதக் கழிவகற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு காசநோய் “பணிப்பரிசாகக்’ கிடைக்கிறது. முப்பதிலிருந்து எழுபது சதவிகிதப் பணியாளர்கள் இந்த உயிர்க்கொல்லி நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் (“இந்தியன் எக்ஸ்பிரஸ்’, 24.3.2009).

திருநெல்வேலி சங்கரன் கோயில் அருகில் உள்ள செந்தட்டி கிராமத்தில், முப்பிடாதி அம்மன் கோயிலில் வழிபட உரிமை கேட்ட இரு தலித்துகள் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் (“தீக்கதிர்’, 8.3.09). ஒரு கேலிச்சித்திரத்தில் வரையப்பட்ட விலங்கின் முகம் ஒபாமா சாயலில் இருந்ததற்காக, அமெரிக்காவில் கடந்த மாதத்தில் பெரும் சலசலப்புகள் கிளம்பின. மேற்சொன்ன செய்திகளுக்காக இங்கு எந்த சிறு சலனமும் இல்லை. எந்த ஒரு வன்கொடுமைக்கும் அரசுகளும், அரசியல்வாதிகளும் பதறுவதில்லை. காய்ப்பேறியதும், சாதி மற்றும் மதங்களின் பிற்போக்கு வைரம் பாய்ந்ததுமான இந்தியாவின் நிலையை அரசின் அறிக்கைகளே ஒப்புக் கொள்கின்றன.

மய்ய அரசின் பதினோராவது அய்ந்தாண்டுத் திட்ட (2007 – 2012) அறிக்கை அப்படியான ஒன்றுதான். அத்திட்டத்தின் கீழ் செயலாற்றும் “பட்டியல் சாதியினர் திறன் வளர்ப்புக்கான பணிக்குழு’வின் அறிக்கை, அண்மையில் தமிழில் வெளிவந்திருக்கிறது. தலித் மக்களின் திறன் வளர்ப்புக் குழுவிற்கு பேராசிரியர் தோரட் தலைவராக இருக்கிறார். கல்வி மேம்பாடு, பொருளாதார உயர்வு, சமூக அதிகாரமயமாக்கல், துப்புரவுப் பணியாளர் நலன், திட்டம் மற்றும் மய்ய அரசின் சிறப்பு நிதி ஆகியவற்றுக்கென இக்குழு மேலும் அய்ந்து துணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிருத்துதாசு காந்தி, இத்துணைக் குழுக்களில் ஒன்றான “திட்டம் மற்றும் மய்ய அரசின் சிறப்பு நிதி ஆணையக்குழு’வின் தலைவராக இருக்கிறார். பெசவாடா வில்சன், பால் திவாகர் போன்றோர் இப்பணிக்குழுவின் முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்து வருகின்றனர்.

துணைக் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே தமது அறிக்கைகளை 11ஆவது அய்ந்தாண்டுத் திட்டக்குழுவிற்கு அளித்துள்ளதோடு, பரிந்துரைகளையும் செய்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலின் வாய்ப்பந்தல்களின் ஊடாக, ஆரவாரங்களின் வழியே, பகட்டுகள் மற்றும் பம்மாத்துகளின் இடையே இவ்வறிக்கையைப் படிக்கின்றபோது, தலித்துகளின் தற்போதைய நிலை அதிர்ச்சியளிக்கிறது. அரசு எந்திரம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டதாக அவ்வறிக்கையை நாம் எடுத்துக் கொள்ள முடியும். நேர்மறையாகப் பார்த்தாக வேண்டும் என்றாலோ, விடுதலைக்குப் பிறகு அரை நூற்றாண்டுப் பயணத்தில் சாதியத்தையும், தீண்டாமையையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் களைவதற்காக அரசுகள் மேற்கொண்டிருக்கும் முயற்சியாகவும் கருதிக் கொள்ளலாம்.

அறிக்கையிலிருந்து சில புள்ளிவிவரங்களை நாம் இங்கே பார்க்கலாம். தலித் மக்களில் 80 சதவிகிதத்தினர் இன்னமும் கிராமப் புறங்களிலேயே வசித்து வருகின்றனர். விவசாயத்தை சுய தொழிலாகக் கொண்டிருப்போர் இவர்களில் 16.8 சதவிகிதம்தான். ஆனால், பிறரோ 41.11 சதவிகிதமாக இருக்கின்றனர். கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 75 சதவிகித தலித்துகள் கூலித் தொழிலாளர்கள்தான். தலித் மக்கள் கிராமப் புறங்களில் 35 சதவிகிதமும், நகர்ப்புறங்களில் 39 சதவிகிதமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தலித்துகள்தான் மிக அதிக அளவில் வறுமையில் (60 சதவிகிதம்) உழல்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் இதே நிலைதான். அங்கு தற்காலிக வேலை செய்யும் தலித்துகளிடையே (69.45 சதவிகிதம்) வறுமை அதிகமாக உள்ளது.

தலித் பெண்களின் கல்வி நிலை இன்னமும் கூட 50 சதவிகிதத்தைக் கடக்கவில்லை (41.9 சதவிகிதம்). பிற சமூக குழந்தைகளை விடவும் தலித் குழந்தைகள் குறைவாகவே பள்ளியில் சேர்கிறார்கள். உயர் கல்வியில் தலித்துகளின் நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அவர்களின் பதிவு விகிதம் (எஉகீ) 5.0 சதவிகிதம்தான். ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் இறப்பு விகிதம், பேறுகால பெண்களின் இறப்பு ஆகியவை தலித்துகள் இடையிலேதான் கூடுதலாக உள்ளன. தீண்டாமைக் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் இவ்வறிக்கை சுட்டுகிறது. தொழில் செய்வதிலும், கூலி பெறுவதிலும் நிலவும் பாகுபாடுகளை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இவ்வறிக்கையில், நாடெங்கிலும் தலித் மக்களுக்கு எதிராக நிலவி வரும் சில வழக்கங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன : தேவதாசி மற்றும் ஜோகினி முறைகள், ஆந்திராவில் இன்றளவும் நிலவி வருகின்றன. இவ்வழக்கப்படி, தலித் பெண்கள் கிராம கடவுளர்க்கு தாசிகளாக நேர்ந்து விடப்படுகின்றனர். இப்பெண்கள் பாலுறவுத் தொழிலாளர்களாகப் பின்னர் பாவிக்கப்படுகின்றனர். தொழில்களில் கூட தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. 30 சதவிகித இந்திய கிராமங்களில் தலித்துகள் வீடு கட்டும் பணியில் அமர்த்தப்படுவதில்லை. கேரளாவில் தலித் மக்கள் வீடு கட்டும் பணிக்கு அனுமதிக்கப்பட்டாலும், இறுதியில் தீட்டுக்கழிக்கும் நோக்கத்துடன் ஒரு சடங்கு நடத்தப்படும் வழக்கம் இருக்கிறது. பீகார் போன்ற மாநிலங்களில் தண்ணீர் எடுத்து வர, சமையல் செய்ய, தானியம் புடைக்க, வீட்டு வேலை செய்யும் தலித் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஓடை மற்றும் ஏரி நீரை பயன்படுத்த அனுமதி இல்லாததால், தலித் விவசாயிகள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் பல மாநிலங்களில் நிலவுகிறது.

இவ்வறிக்கையில் தரப்பட்டிருக்கும் தீண்டாமைக் குற்றங்கள் பற்றிய தகவல்கள் கலக்க மூட்டுகின்றவையாக இருக்கின்றன. உத்திரப் பிரதேசதம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தமிழ் நாடு, ஆகிய மாநிலங்களே தலித்துகளுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதில் முதல் அய்ந்து இடங்களில் இருக்கின்றன. 2001இல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 33,501. உத்திரப்பிரதேசத்தில் மட்டும் ஆண்டுக்கு 10,732 குற்றங்கள் பதிவாகின்றன. இவற்றில் 423 கொலைக் குற்றங்கள். இந்திய அளவில் தலித் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மாநிலங்களில்தான், அம்மக்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாகவே நிகழ்த்தப்படுகின்றன என்கிறது அறிக்கை.

தலித் மக்களை எல்லா நிலைகளிலும் உயர்த்துவதை இலக்காகக் கொண்டிருக்கும் இத்துணைக்குழு அறிக்கை –

பொருளாதார முன்னேற்றம், தரத்துடன் கூடிய வெற்றி, சிறப்பான வெற்றித்திறன், அதிகாரம் பெற்று வலுவடைதல், தீண்டாமைக் கொடுமையொழித்தல், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றைத் தனது அளவுகோல்களாகக் கொண்டிருக்கிறது. மேலும் ஆக்கப்பூர்வமானதும், சிறப்பானதுமான பரிந்துரைகளையும் அளித்துள்ளது (பெட்டிச் செய்தி).

சிறப்பு உட்கூறுத் திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும், செய்த பணிகளை மதிப்பீடு செய்யவும் தலித் மேம்பாட்டுத் துறைக்கு எந்த விதமான அதிகாரமும் வழங்கப்படாதது போல், இத்துணைக் குழுக்களின் பரிந்துரைகளையும் கிடப்பில் போட அரசு கள் வழிகோலும் எனில், இன்னொரு அறிக்கை இதைப் போன்றே சில காலம் கழித்து வெளியாவதைத் தவிர, வேறு மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது.

சுமார் 10 லட்சம் கோடி ரூபாய், 11 ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்துக்கென ஒதுக்கப்படுகிறது. அதில் தலித்துகளுக்கு விகிதப்படி 1.6 லட்சம் கோடிகள் ஒதுக்கப்படலாம். தமிழகத்தில் இது 19,000 கோடியாக இருக்கும். இத்தொகை பல துறைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. பகுத்துப் பார்க்க இயலாதவை, பகுத்துப் பார்க்கக் கூடியவை என்ற வரையறைகளில் பல துறைகள் ஒதுக்கீட்டுத் தொகையை தலித்துகளின் மேம்பாட்டுப் பணிகளுக்கு வழங்குவதே இல்லை. மய்ய அரசில் இருபது துறைகளும், மாநில அரசில் 18 துறைகளும் அவ்வாறு தலித் மக்களுக்குரிய நிதியை மறுத்து வருகின்றன. தலித் மக்களுக்கான சிறப்பு உட்கூறுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளே முழுமையாக செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டு விடுகின்றன.

புள்ளிவிவரப்படி, 1997–98 ஆண்டில் 588 கோடி ரூபாய்; 1998–99 இல் 643 கோடி ரூபாய்; 1999–2000இல் 840 கோடி ரூபாய்; 2000–01இல் 887 கோடி ரூபாய் மற்றும் 2004–05இல் 1,363 கோடி ரூபாய் என்ற அளவில் சிறப்பு உட்கூறுத் திட்டத்திற்கு கடந்த ஆண்டுகளில் 2005 வரையிலான 8 ஆண்டுகளில், நிதி நிலை அறிக்கையில் சுமார் 20 சதவிகிதம் என்ற அளவில் 7,143 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு ஒதுக்கவில்லை. தலித்துகளுக்கான அந்த நிதி பறிபோகிறது.

“தாட்கோ’விற்கு என 2000ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 67.98 கோடி ரூபாய் செலவிடப்படாமல் வீணடிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு சிறப்பு உட்கூறுத் திட்ட மானியத் தொகையாக அளித்து வருகிறது. அதைப் பெரும்பாலான மாநிலங்கள் பயன்படுத்துவதில்லை. கணக்குப்படி, 1991 முதல் 96 வரை சுமார் 80.96 கோடி ரூபாயை தமிழக அரசு பயன்படுத்தாமல் விட்டிருக்கிறது. துப்புரவுப் பணியாளர்கள் மேம்பாட்டிற்கென 2000 ஆம் ஆண்டில் சமூக நீதி மற்றும் அதிகார மளிக்கும் துறை தமிழக அரசுக்கு வழங்கிய 40.18 கோடியில் 18.57 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை. 2009வரை இத்தொகையை கணக்கிட்டால் இவ்வாறு செலவழிக்கப்படாத தொகை 100 கோடிகளைத் தாண்டலாம். இதோடு மட்டுமின்றி சிறப்பு உட்கூறுத் திட்டத்திற்கென மய்ய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் தொகையில் செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படும் தொகை, பல கோடிகளைத் தாண்டுகிறது. 1997 – 2000 வரை அப்படி திருப்பி அனுப்பப்பட்ட தொகை மட்டுமே சுமார் 1,272.67 கோடி ரூபாய் ஆகும். (ஆதாரம் : சமூகக் கண்காணிப்பகம்)

தலித்துகள் தன்னிறைவு அடைந்து விட்டார்கள் என்று கூறி, இனி நிதி ஒதுக்கீடு செய்யாமல் விடுவதற்கான சதியன்றி இச்செயல்கள் வேறொன்றுமில்லை. நிலவும் சூழலில் இத்துணைக் குழுவின் அறிக்கையும் சட்ட வடிவமாக்கப்படாமலோ, ஆணை களாக்கப்படாமலோ போகலாம். அப்படி நடக்குமெனில், தேர்தல் வாக்குறுதிகளைப்போல இந்த அறிக்கைகளும் நீண்டகாலப் பொய்யுரைதான்! திட்டங்களை ஒழுங்காக செயல்படுத்தாத நிலைதான் தலித்துகளின் முன் இருக்கும் சிக்கல். தலித் மக்களுக்கான பெரும்பாலான திட்டங்களும், சட்டங்களும், துரு பிடித்தும், செல்லரித்தும் கிடக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகளை நம்புவதைக் காட்டிலும், இருக்கும் திட்டங்கள் செயலாக்கம் பெறுகின்றனவா என கண்காணித்து செயல்படுத்துவதில்தான் தலித் மக்களின் நிலை மாற்றம் உள்ளடங்கி இருக்கிறது.

தலித் தேசிய வங்கி ஏற்படுத்தப்பட வேண்டும்

பதினொராவது அய்ந்தாண்டுத் (2007 – 2012) திட்டக் குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியப் பரிந்துரைகள் :

1. தலித் மக்களுக்கான கல்வி, பொருளாதார முன்னேற்றம், வன்கொடு மைத் தடுப்பு / நடவடிக்கை போன்ற வற்றுக்கென தனியே ஒரு “சமூகத்திறன் வளர்ப்பு ஆணையம்’ அமைக்கப்பட வேண்டும். இதற்கு ஆட்சியர் நிலையிலுள்ள அதிகாரி தலைவராக இருக்க வேண்டும். இவர் 1995 ஆம்ஆண்டு அரசு விதிப்படி, இணைப்பு அதிகாரியாக (Nணிஞீச்டூ Oஞூஞூடிஞிஞுணூ) இருந்து செயல்பட வேண்டும்.
2. தீண்டாமையை ஒழிக்க, தேசிய அளவிலான பரப்புரையை கரும்பலகைத் திட்டம், போலியோ ஒழிப்பு திட்டம் ஆகியவற்றுக்கு இணையாக ஒலிபரப்புத் துறை மூலம் மேற்கொள்ள வேண்டும்.
3. ஒவ்வொரு அமைச்சகமும், தேசிய தலித் ஆணையத்துடன் கலந்தாலோசித்து, தலித் மக்களுக்காக தனி வரவு செலவுத்திட்ட அறிக்கையை நிதிநிலை அறிக்கையுடன் அளிக்க வேண்டும்.
4. தலித்துகளுக்கென 1000 கோடி ரூபாய் மூலதனத்துடன் ஒரு தேசிய வங்கி அமைக்கப்பட வேண்டும்.
5. மரபு சார்ந்த தொழில் பயிற்சிகளுக்குப் பதிலாக, புகைப்படம் எடுத்தல், பயண முகவர், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் தலித்துகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
6. கழிவகற்றுபவர் மற்றும் உலர் கழிப்பறைகளை கட்டுதல் (தடை) சட்டம் 1993இன் பிரிவுகள் 3(1), 4, 17, 18 ஆகியவற்றை திருத்த வேண்டும் (இச்சட்டத்தின் கீழ் இந்தியாவில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது).
7. இடஒதுக்கீட்டை (மய்ய அரசில்) 15லிருந்து 16.23 சதவிகிதம் என உயர்த்த வேண்டும்.
8. ராணுவப் பணிகளில் இடஒதுக்கீட்டுக்கு சட்டமியற்ற வேண்டும்.
9. தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும்.
10. தலித் மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க உதவி, முனைவர் பட்ட ஆய்வு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ராஜிவ் காந்தி கல்வி நிதி உதவி, அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டு சட்டம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் – பகுத்துப் பார்க்கக் கூடியவை, பகுக்கவியலாதவை என்கிற முரண்பாட்டை முன்னிறுத்தி – தலித் மக்களுக்குரிய திட்டத் தொகையை கீழ்க்காணும் துறைகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன

மாநில அரசுத் துறைகள்

வேளாண்மைத் துறை
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை
தரைவழிப் போக்குவரத்துத் துறை
வேளாண்மை ஆய்வு – கல்வி
எரிசக்தித் துறை
கனரக மற்றும் சிறுதொழில் துறை
சுற்றுலாத் துறை சுற்றுலாத் துறை
கல்வி (குறிப்பாக உயர் கல்வி)
உணவுப்பொருள் வழங்கல் துறை
மருத்துவ நலத்துறை
கலை மற்றும் பண்பாட்டுத் துறை
சமூக நலத்துறை
தொழிலாளர் மற்றும் தொழில் துறை
செய்தித் தொடர்புத் துறை
சமூக மற்றும் மக்கள் நலத் துறை
நீர்ப்பாசனம் மற்றும் மீன்வளத் துறை
விண்வெளி ஆராய்ச்சித் துறை
நிலச் சீர்திருத்தத் துறை

மத்திய அரசுத் துறைகள்

நிலக்கரி, சுரங்கத் தொழில் துறை
எக்கு உருக்காலைத் துறை
தரைவழிப் போக்குவரத்துத் துறை
வேளாண்மை ஆய்வு – கல்வி
ரசாயன / பெட்ரோலியத் துறை
விமானப் போக்குவரத்துத் துறை
நுகர்வு வாணிபத் துறை சர்க்கரை மற்றும் உணவு எண்ணெய்
உணவுப்பொருள் வழங்கல் துறை
அஞ்சல்வழித் தொடர்புத் துறை
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியேõபதி
கலை மற்றும் பண்பாட்டுத் துறை
பொதுத்துறை நிறுவனங்கள்
கனரகத் தொழில்கள் துறை
செய்தித் தொடர்புத் துறை, அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு
அணுசக்தித் துறை
கடலாராய்ச்சி மற்றும் மேம்பாடு
விண்வெளி ஆராய்ச்சித் துறை
நிர்வாகச் செயல்பாட்டுத் துறை