தமிழக மக்களை அவர்களே வெட்கப்படுமளவு பாராட்டினால் தகுமா?


புரட்சித் தலைவியின் பொற்பாதங்களை வணங்கி தினமணியும், ஹிந்துவும் ஜால்ரா சங்கீதத்தை ஆரம்பித்துவிட்டன. அந்த இசையின் இம்சையோடு தேர்தல் முடிவு குறித்த ஓர் ஆய்வு!

கேள்வி 1:
இது அ.இ.அ.தி.மு.க வின் அபார வெற்றியா!
இல்லை தி.மு.க வின் பயங்கர தோல்வியா???

கேள்வி 2:
என்ன காரணம்?

கேள்வி 3:
இந்த வெற்றியில் விஜய்க்கு பங்கு எந்த அளவு?

– மஹாதீர் முஹம்து

_____________________________________________________________________

அன்புள்ள மஹாதீர் முஹம்து

இந்தத் தேர்தல் முடிவில் இளைய தளபதிக்கு எந்தப் பங்கும் இல்லை. எனினும் ஆத்தா வெற்றி பெற்றதும் நெஞ்சிரைக்க ஓடி வந்து வாழ்த்து தெரிவித்து விட்டு இந்த தேர்தலுக்கு வேலைசெய்த தனது இரசிகக் குஞ்சுகளுக்கு அவர் வலிந்து நன்றியை தெரிவித்தார். எல்லாம் ஜெயிக்கிற குதிரையில் பணம் கட்டும் காரியவாதம்தான். இத்தனைக்கும் அவர் தேர்தலில் வெளிப்படையாக பிரச்சாரமோ, டி.வியில் தோன்றி வேண்டுகோளோ கூட தெரிவிக்கவில்லை. எல்லாம் மழுப்பலான அறிக்கைகளோடு முடித்துக் கொண்டார். ஒரு வேளை தி.மு.க மீண்டும் வெற்றி பெற்றால் என்ன நடக்குமோ என்ற சுயநல பயம்தான்.

இதையே சில அரசியலற்ற காரியவாதிகள் “இதற்கு மேல் விஜய் என்ன செய்ய முடியும்” என்று ‘தத்துவ’ விளக்கமும் கொடுப்பார்கள். ஒரு வேளை விஜய் வெளிப்படையாக பிரச்சாரம் செய்திருந்தாலும் அவருக்காக மட்டும் மக்கள் வாக்குகள் சிலிர்ப்புடன் அணிவகுத்திருக்காது. தமிழ்நாட்டில் நட்சத்திரங்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நிலை எம்.ஜி.ஆரோடு முடிந்து விட்டது. ஆனானப்பட்ட ரஜினயே ப்யூஸ் போன நிலையில், விஜயகாந்தெல்லாம் கூட்டணி தயவில் குப்பை கொட்ட வேண்டிய காலத்தில் விஜயெல்லாம் எம்மாத்திரம்? ஆனால் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒரு தேர்ந்த காரியவாதியாக தனது மகன் பிற்காலத்தில் முதலமைச்சராக வருவான் என்று கனவு காண்கிறார். அது தமிழ்சினிமா கதைமாந்தர்கள் சைக்கிளை மிதித்து ஒரு வட்டத்தில் முதலமைச்சராக எழுவதான ரீல் போன்றது.

இந்த வெத்து வேட்டு ஹீரோக்களை விட ஆனது ஆகட்டும் என்று களத்தில் இறங்கிய காமெடியன் வடிவேலு எவ்வளவோ மேல். இதற்கு மேல் விஜய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, விளக்கம் அளிப்பதோ தமிழுக்கும், வினவு வாசகருக்கும் இழைக்கப்படும் அநீதி. இந்த பதில் கூட மஹாதீர் முஹம்து போன்ற நல்லவர்கள் கேட்டு விட்டதினாலே எழுதியதுதான். ________________________________________________

இனி முக்கிய கேள்விக்கு வருவோம். இந்த தேர்தல் வெற்றியை எப்படி பார்ப்பது? இது குறித்து வினவில் முன்னர் வந்த இடுகைகளில் சில விசயங்களை கோடிட்டு காண்பித்திருக்கிறோம். இங்கு சற்று விரிவாக…..

_________________________________________________

அ.தி.மு.கவின் மாபெரும் வெற்றி, தி.மு.வின் மரண அடி தோல்வி இரண்டையும் வாக்குப்பதிவு, ஊழல், குடும்ப ஆட்சி, மக்களின் மௌனப் புரட்சி, தேர்தல் கமிஷன்தான் ரியல் ஹீரோ என்று ஒரு பொதுவான ஃபார்முலாவில் மட்டும் வைத்து விட்டு ஊடகங்களும் அறிஞர் பெருமக்களும் எளிமையாக முடித்து விடுகின்றனர். இவையெல்லாம் உண்மையல்ல என்று சொல்ல முடியாது. அதே நேரம் முழு உண்மைதான் என்று கொள்ளவும் இயலாது.

தி.மு.க பிடிக்கவில்லை என்றால் அ.தி.மு.க, அ.தி.மு.க பிடிக்கவில்லையென்றால் தி.மு.க இதைத் தாண்டி தமிழக மக்கள் அதி புரட்சிகரமாக யோசிப்பதற்கு வழி ஏதும் இருக்கிறதா? இதுவும் உண்மையல்ல என்று சொல்ல முடியாது. இதையே ஒரு ஃபார்முலாவாகக் கொண்டால் மாத்திப் போடு, மாத்தி யோசி, அது இல்லையினா இது என்றும் கூட இந்த தேர்தல் முடிவுகளை சொல்லலாமே?

இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவு வாக்குப்பதிவு அதிகம் இருந்தது உண்மைதான். அதனால் ஆளும் கட்சி மீது மக்கள் கடும் சினத்தோடு இருந்திருக்கிறார்கள் என்று ஒரு ஃபார்முலாவையும் இவர்கள் கூறுகிறார்கள். இந்த அதிக வாக்குப்பதிவுக்கும் அந்தக் கடுஞ்சினத்திற்கும் என்ன தொடர்பு? ஏன்? தொடர்பு இல்லையென்றால் வேறு என்ன காரணம்?

நண்பர்களே, தேர்தலையும், அரசியலையும் ஒரு சில கணக்கு விவரங்கள், நல்லது கெட்டது, ஊழல் நேர்மை, என்று சில வாய்ப்பாடுகளோடு மட்டும் சிந்திப்பதற்கு பழக்கப்படுத்தப் பட்டுள்ளோம். தேர்தல் அரசியலோடு தொடர்புடைய சமூக இயக்கம், மக்கள் மனவோட்டம் என்ன விதிமுறைகளோடு இயங்குகிறது, என்ன விசைகளால் உந்திச் செல்லப்படுகிறது என்பனவற்றை ஆய்வு செய்து கண்டுபிடித்தால் மட்டுமே இந்த தேர்தலில் வெற்றியின் தரத்தையும், தோல்வியின் மகிமையையும் நாம் கொஞ்சமாவது அறிந்து கொள்வோம்.

இந்த தேர்தல் முடிவினை வைத்து தினமணி பத்திரிகை, “”தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!” என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை “”தினமணி” பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது!” என்று மெய்சிலிர்க்கிறது. தமிழக மக்கள் பயங்கரமாக ஆர்த்தெழுந்து ஊழல், குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒரு ருத்ரதாண்டவமே ஆடியிருக்கிறார்கள் என்று வார்த்தைகளே வெட்கப்படுமளவு உச்சிமோருகிறது தினமணி.

அதிலும் பணம் கொடுத்து வாக்களிப்பவர்கள் என்ற அவப்பெயரை துடைத்தெறிந்து இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மாறி நாட்டையே காப்பாற்றிவிட்டார்களாம், தமிழக மக்கள்! இந்த வரலாறு காணாத தோல்விக்கு காரணமென்று தி.மு.கவின் குற்றப் பட்டியல்களை பட்டியலிடும் தினமணி, இந்த வெற்றிக்கு அருகதையானவர்தானா என்று ஜெயலலிதாவைப் பற்றி மறந்தும் கூட எழுதவில்லை. மட்டுமல்ல, சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் இருந்தாலும் பரவாயில்லை என்று தமிழக மக்கள் ஜெயா கும்பலை வெற்றிபெற வைத்துவிட்டார்களாம். இந்த ‘பரவாயில்லை’ என்பதன் அரசியல் தரத்தை பரிசீலித்துப் பார்க்கும் போது அந்த இமாலாய சாதனையின் அரசியல் வீழ்ச்சியை புரிந்து கொள்ள முடியாதா என்ன?

தி.மு.க படுதோல்வி, அ.தி.மு.க மாபெரும் வெற்றி என்பதை மற்றுமொரு தேர்தல் முடிவாக எடுத்துக் கொண்டு போனால் கூட பிரச்சினை இல்லை. அதை ஜாக்கி வைத்து வானத்துக்கு தூக்குவதையும், தங்களது பல்வேறு அபிலாஷைகளை ஏற்றி அழகு பார்ப்பதையும் பார்த்தால் இவர்கள் அ.தி.மு.கவிற்கு மட்டுமல்ல, தி.மு.கவிற்கும் கருணாநிதியே நினைத்திராத ஆழமான பெருமைகளையெல்லாம் வழங்கி விடுகிறார்கள். தங்களது சொந்த முயற்சியில் எதையும் செய்ய முனையாத, விரும்பாத நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகள் பாமரர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு மட்டும் பொழிப்புரை, விளக்கம் கொடுத்து தன்னை சூப்பர்மேனாக கருதிக்கொள்ளும் அபத்தத்தைத்தான் சகிக்க முடியவில்லை.

தினமணியின் வானாளாவிய பாராட்டின் விளக்கம் ஜெயலலிதாவின் அணுகுமுறையில் பெறும் ஒளிதான் என்ன? மே 13 வாக்கு எண்ணிக்கை துவங்கி முன்னணி நிலவரம் உறுதியான நிலையில் மதியம் ஊடகங்களை சந்தித்த ஜெயலலிதா என்ன கூறினார்? தி.மு.க ஆட்சி மாநிலத்தை குட்டி சுவராக்கிவிட்டதாம், கஜானா காலியாம், சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லையாம் என்றெல்லாம் சொல்லிவிட்டு அடுத்து அவர் சொன்னதுதான் முக்கியமானது.

தி.மு.க ஆட்சி முடிந்து தான் ஆட்சிக்கு வந்த 91, 2001, 2011 ஆகிய மூன்று முறையும் இப்படித்தான் மாநிலத்தை மீட்டு வளம் கொழிக்க வைத்தாராம். 91 இல் ஆட்சிக்கு வந்து மாநிலத்தை மேம்படுத்தி அடுத்த தேர்தலில் தோல்வியுற்று 96-இல் ஆட்சி தி.மு.கவிற்கு போனதும் மாநிலம் சீர்கேடு அடைந்ததாம்.

கவனியுங்கள் நண்பர்களே, 91-96 ஆட்சிக்காலத்தில் ஜெயா-சசி கும்பல் ஆட்டம் போட்டதும், முழுத் தமிழகத்தை மொட்டை போட்டதும், பின்னர் வந்த தேர்தலில் அமைச்சர்கள் செருப்படி பட்டதும்தான் வரலாறு. இன்று ஜெயா அதை பொற்காலம் என்கிறார். எனில் பாசிச ஜெயா ஒரு துரும்பளவு கூட மாறவில்லை முன்னிலும் திமிராக பேசுகிறார் என்பதைக்கூடவா தினமணி அம்பிகள் புரிந்து கொள்ள முடியாது?

தினமணி தமிழ் அம்பிகளின் கதை இதுவென்றால் ஹிந்து இங்கிலீஷ் அம்பிகளின் கதையைப் பாருங்கள்! சனிக்கிழமை அன்று ஹிந்து பத்திரிகை தலையங்கத்தில் தினமணியின் கருத்தையே ரொம்பவும் பணிவான மொழியில், பிரச்சினையில்லாமல் எழுதியிருந்தார்கள். அதன் சாரமென்னவென்றால் இந்த ஆட்சி மாற்றம் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலைதான் என்பதே. கான்வென்டு வர்க்கத்தின் தலைவியான ஜெயலலிதாவுக்கு ஹிந்து பத்திரிகைதான் மிகவும் முக்கியமானது. மற்றவர்கள் பேசினால் கூட கவலையில்லை, ஹிந்து பத்திரிகை இப்படி பேசுகிறார்கள் என்றதும் ஜெயலலிதா ஊடகங்களிடம் பகிரங்கமாக அறிவிக்கிறார்,

“இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிரான அலையால் நான் வெற்றி பெறவில்லை. 2001-2006இல் எனது பொற்கால ஆட்சியை மக்கள் நினைவு கூர்ந்து அந்த ஆட்சி வேண்டுமென்றுதான் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார். அடுத்த நாள் இந்த நாலுவரிச் செய்தி ஹிந்து பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வெளிவருகிறது. இடையில் என்ன நடந்திருக்கும்?

ஏற்கனவே மாலினி பார்த்தசாரதியை எப்படியும் கைது செய்ய வேண்டுமென்று மிரட்டிய ஜெயாவின் தர்பாரை மவுண்ரோடு மகாவிஷ்ணு மறந்திருக்கமாட்டார். அதே போன்று தலையங்கத்தில் இந்த முடிவு எதிர்ப்பு அலை என்று எழுதியது அம்மா காதுக்கு போய் மிரட்டல் வந்திருக்கலாம். அல்லது குடும்ப சண்டையில் மூழ்கியிருக்கும் ராம் தலையங்கத்தின் வரிகளை பார்த்து விட்டு அடுத்த நாளே இதை தணிக்கும் வகையில் இந்த செய்தியை திட்டமிட்டு வெளியிட்டிருக்கலாம். ஏனெனில் இந்த தலைப்புச் செய்தி வேறு எந்த ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக வெளிவரவில்லை.

ஆக இந்த தேர்தல் முடிவுகள் தனது பொற்கால ஆட்சிக்கு ஏங்கிய மக்களின் விருப்பம் என்று பேசும் ஜெயலலிதாவை , வைத்தியநாதனின் தினமணி மேம்போக்காவாவது கண்டிக்குமா?

சரி, 2001லிருந்து ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி பொற்காலமா, இல்லை அடக்குமுறைக் காலமா? மதமாற்றத் தடை சட்டம், ஆடு-கோழி பலி தடுப்புச் சட்டம், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பதவி நீக்கம் என்று பார்ப்பனிய பாசிசம் ஆட்டம் போட்டது இந்தக் காலம்தான். இதனாலேயே 2004 தேர்தலில் 39 பாராளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. அதன் பின்னரே ஜெயலலிதா மேற்கண்ட அடக்குமுறைச் சட்டங்களை திரும்பப் பெறுகிறார். வரலாறு இப்படியிருக்க இதுதான் பொற்காலமென்று மக்கள் விரும்புகிறார்கள் என்று ஜெயலலிதா பேசுகிறார் என்றால் யார் மீது உள்ள நம்பிக்கையில்?

எல்லாம் தினமலர், தினமணி, ஹிந்து அடிமை அம்பிகள் மேல் உள்ள நம்பிக்கையில்தான். இல்லையென்றால் இன்று தலையங்கம் எழுதியிருக்கும் தினமணி, ஜெயலலிதாவுக்கு சில பல ஆலோசனைகளை மிக மிகப் பணிவாக எடுத்து வைத்து, இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியாதது அல்ல என்று காலில் விழுகிறது. ஏ துப்பு கெட்ட தினமணியே, ” 91இல் ஊழல் செய்தாய், 2001இல் அடக்குமுறை செய்தாய், இந்த முறையாவது ஒழுங்காக ஆளுகின்ற வழியைப் பார்” என்று கூட சொல்வதற்கு உங்களுக்கு தைரியமில்லையா? பிறகு என்ன நீங்கள் தேர்தல் முடிவு குறித்து தமிழனுக்கு வீரப்பட்டம் கொடுக்கிறீர்கள்?

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி பேரத்தில் காங்கிரசு, தி.மு.க முரண்பாடு வந்து அமைச்சர்கள் ராஜினாமா என்ற நாடகத்தை தினமலர் என்ன எழுதியது தெரியுமா? இது அத்தனையும் ஜெயலலிதாவின் மாஸ்டர் பிளானாம். இது இன்று நேற்றல்ல, ஜெயா கும்பல் ஆட்சியைப் பிடித்தது முதல் இப்படித்தான் பேசுகிறார்கள். ஜெயா ஒரு தைரியமான நபராம். முழு கட்சியும் அவரது காலில் விழுந்து கிடப்பதுதான் அதன் அடையாளமாம். பாசிசத்தையே இப்படி தைரியமென்று வியந்தோதும் அம்பிகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் உலகம் காறித் துப்பும்.

கருணாநிதியை எதிர்ப்பதில்தான் கொஞ்சம் அரசியல் இருக்கிறதேயன்றி, ஜெயாவை ஆதரிப்பதில் கொஞ்சம் கூட அரசியல் இல்லை. இதுதான் இந்த தேர்தல் முடிவின் யோக்கியதை. அந்த வகையில் அ.தி.மு.கவின் வெற்றி என்பது ஒரு விபத்துதானே ஒழிய அது நேர்மறையில் நடந்ததல்ல.

ஒப்பீட்டளவில் 96-2001 தி.மு.க ஆட்சி என்பது பெரிய ஊழல்கள், ஏகபோகம், குடும்ப ஆட்சியோ இல்லாமல் இருந்தது. எனினும் 2001 தேர்தலில் தி.மு.க தோற்றது. அதை ஒட்டி தலையங்கம் எழுதிய தினமணி ” இது அதிர்ச்சியூட்டும் தீர்ப்பு, எனினும் ஜனநாயகத்தின் அழகே தனிதான்” என்றது. ஆக தினமணியே ஒத்துக்கொள்ளும் விதத்தில் இருந்த தி.மு.க ஆட்சி தோற்றதற்கு என்ன காரணம்?

பொதுவில் எம்.ஜி.ஆர், அ.தி.மு.க ஆட்சி குறித்து பாமர மக்களிடையே சில மூடநம்பிக்கைகள் உண்டு. ” இவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் மழை பெய்யும், விலைவாசி குறையும், பணப்புழக்கம் இருக்கும்”. இப்போது கூட ஜெயா டி.வியில் பேசிய ஒரு கட்சிக்காரர் இவற்றையே காரணங்களாக கூறுகிறார். அதாவது எந்த அரசியல் விழுமியங்களுமற்ற ஒரு லும்பன் சிந்தனையைக் கொண்டிருக்கும் பாமரர் கூட்டம் அ.தி.மு.கவின் வாக்கு வங்கியாக எப்போதும் இருக்கிறது. இந்த தேர்தலில் படித்த லும்பன் கூட்டமும் இதில் சேர்ந்திருக்கிறது.

அதனால்தான் இவர்கள் எல்லாரும் கருணாநிதியை திட்டுகிறார்களே தவிர, நேர்மறையில் அம்மா தகுதியானவர் என்று சொல்வதற்கு தயாரில்லை. ஆனால் ஊடகங்கள் அந்த வேலையை பெரும் ஜால்ரா சத்தத்துடன் செய்து வருகின்றன.

சாராமாகக் கூறில் கருணாநிதி தோற்கடிக்கப்பட்டதில் இருக்கும் அரசியல் ஜெயலலிதாவின் வெற்றியில் இல்லை. இவையெல்லாம் வேறுவழியின்றி போடப்பட்ட வாக்குகளால் மட்டும் வரவில்லை. அரசியலற்ற காரியவாதத்தின் செல்வாக்கு காரணமாகவே இது நடந்திருக்கிறது.

ஜெயாவை முசுலீம்களின் காவல் தெய்வமாக அங்கீகரித்த த.மு.மு.கவின் முகத்தில் கரி பூசும் விதமாக இந்த பதவியேற்பு விழாவில் கொலைகார மோடி கலந்து கொள்கிறார். இப்படி இன்னும் ஒரு சில நாட்களில் பழைய ஜெயலலிதாவை நாம் அப்படியே பார்க்கலாம். ஆனாலும் அதற்கும் கூட நமது ஜால்ரா ஊடகங்கள் புதுப்புது விளக்கங்கள் அளிக்கும். ‘அம்மா’ ஆதரவு காரியவாத மக்கள் கூட்டமும் அதை திக்கெட்டும் புகழாய்ப் பரப்பும்.

இந்த தேர்தல் பரப்புரையில் ஜெயா என்ன பேசினார்? ஆசியாவிலேயே முதல் பெரும் பணக்காரக் குடும்பமாக கருணாநிதி குடும்பம் மாறிவிட்டது, ஊழல் செய்வதில் புது சாதனை படைத்து விட்டது என்றெல்லாம் பேசினார் அல்லவா? இப்போது அதன் பொருட்டு என்ன செய்யப் போகிறார்? கருணாநிதி குடும்பத்திலிருந்து அந்த சொத்துக்களை திரும்ப பறிக்கப் போகிறாரா? அது நடக்க வேண்டுமென்றால் ஜெயாவுக்கு எதிராக கருணாநிதி போட்ட வழக்குகளிலேயே நடந்திருக்க வேண்டுமல்லவா? அத்தனையும் ஊத்தி மூடப்பட்ட நிலையில் இப்போது கருணாநிதிக்கு மட்டும் என்ன நடக்கும்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக மிடாசின் சரக்கு கருணாநிதி அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்ட உண்மையை பார்க்கும் போது சன்.டிவியிலிருந்து மாதந்தோறும் ஒரு கப்பம் போகாமாலா இருக்கும்? ஆக தமிழக மக்கள் இவ்வளவு ஆர்த்தெழுந்து வாக்கு போட்டு விரட்டியடித்த கருணாநிதிக்கு என்ன தண்டனை? கருணாநிதியே சொன்னது போல மக்கள் அவருக்கு ஒய்வு கொடுத்ததுதான். ஊழலுக்கு தண்டனை பதவி கிடையாது என்றால் அதன் பெயர் தண்டனையா?

இந்த ‘தண்டனை’யை வாங்கிக் கொடுத்த தமிழக மக்களைப் போய் அவர்களே வெட்கப்படுமளவு பாராட்டினால் தகுமா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: