சி.பி.ஐ : சிரிப்புப் போலீஸ் ஆப் இந்தியா !


லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஜிம்மியில் ஆரம்பித்து லோக்கல் போலீசால் ‘கண்டு’ பிடிக்க முடியாத கோழி களவாணி வரை துப்புத் துலக்கிக் கண்டு பிடிக்கும் சூராதி சூரர்களாக இவர்களை ஊடகங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். கருணாநிதி வீட்டில் சி.பி.ஐ விசாரணை ரெய்டு என்றும் ஏதோ இந்த சூரப்புலிகளைப் பார்த்து கருணாநிதி குடும்பமே நடுநடுங்கி வீட்டின் மூலையில் குந்த வைத்து உட்கார்ந்திருப்பது போல தினமலர் அடிக்கடி குதூகலிப்பதையும் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தமிழ்த் திரையுலகின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் சூப்பர் கமாண்டோவான கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் டில்லி சி.பி.ஐ அதிகாரியாகத் தோன்றி பாகிஸ்தான் தீவிரவாதியிடம் தங்கத் தமிழில் லெச்சர் அடித்தே டயர்டாக்கி மடக்கிப் பிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். மலையாளத் திரைப்படங்களிலும் கூட மம்மூட்டி மோகன்லால் வகையறாக்கள் சி.பி.ஐ அதிகாரிகளாகத் தோன்றி உள்ளூர் போலீசால் கண்டே பிடிக்கமுடியாத பல்வேறு சிக்கலான வழக்குகளைத் தீர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ கோழியோ ஆடோ களவு போன மேட்டரில் சி.பி.ஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் “அட விடுங்கப்பா… இவங்க எத்தனை ஊர் பஞ்சாயத்தைத் தான் தீர்க்க முடியும்” என்று சி.பி.ஐயின் மேல் கருணையோடு ஒரு நீதிபதி தீர்ப்பு கூட வழங்கியிருந்தார்.

இப்படியாக சி.பி.ஐ பற்றிய ஒரு பயங்கரமான இமேஜும், அவர்களின் விசாரணையின் மேல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதுக்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இப்படி ஊடகங்களாலும் சினிமா உலகத்தாலும் ஷெர்லக் ஹோம்சுக்கு இணையான துப்பறிவாளர்களாக ஜாக்கி வைத்து தூக்கிப் பிடிக்கப்பட்ட சி.பி.ஐ, சமீப நாட்களாக மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் எதார்த்தத்தில் சீரியஸான காமெடி பீஸ்களாகத் தான் இருக்கிறார்கள் என்கிற உண்மை இப்போது அம்பலமாகியிருக்கிறது.

ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன கதை!
கிம் டேவி, புரூலியா, பீட்டர் ப்ளீச், ஆனந்த மார்க்கம் போன்ற பெயர்களை நீங்கள் மறந்திருக்கலாம்; எனவே ஒரு சிறிய நினைவூட்டல். 1995-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் திடீர் என்று ஒரு மர்ம விமானத்தில் வந்த சிலர் ஆயுத மூட்டைகளைப் போட்டனர். அப்போது அது தேசிய அளவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சமயத்தில் அம்மாநிலத்தில் அதிகாரத்திலிருந்த சி.பி.எம் கட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஆனந்த மார்க்கம் என்கிற தீவிரவாத சாமியார் கும்பலுக்குத் தான் இந்த ஆயுத மூட்டைகள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் ஆயுதத்தைப் போட்ட விமானம் திரும்பும் வழியில் மடக்கிய சி.பி.ஐ அதிகாரிகள், அதில் பயணம் செய்த விமானக் குழுவினரையும் ஆயுத வியாபாரி பீட்டர் ப்லீச் மற்றும் ஆயுதக் கடத்தலின் சூத்ரதாரியான நீல்ஸ் க்ரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம் டேவியையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்களில் கிம் டேவி ‘மர்மமான’ முறையில் தப்பியோடி விட்டான் என்று சொன்ன சி.பி.ஐ, அவனைத் தேடி உலகெல்லாம் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தது. சரி. அடுத்து கையிலிருக்கும் பீட்டர் ப்ளீச்சையாவது விசாரித்து தண்டித்திருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம் – மன்னிக்கவும். அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பை வாங்கிக் கொடுத்து பத்திரமாக வழியனுப்பி வைத்தது.

இதற்கிடையே இப்போது திடீர் ஞானோதயம் பெற்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ‘தலைமறைவாக’ இருக்கும் கிம் டேவியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உதார் காட்ட ஆரம்பித்தது சி.பி.ஐ. இதைக் கேள்விப்பட்ட கிம் டேவி, கடந்த மாதம் இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் தோன்றி, தான் மறைந்து வாழவில்லையென்றும், பல ஆண்டுகளாக கோபன்ஹேகனில் தான் வாழ்ந்து வருவதாகவும், அங்கே பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டும் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கொண்டும் வெளிப்படையாகவே செயல்பட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தான் கோபன் ஹேகனில் இருப்பது சி.பி.ஐக்குத் தெரியும் என்றும் அப்படியிருந்தும், சி.பி.ஐ அதிகாரிகள் இந்திய மக்களின் வரிப்பணத்தில் தன்னைத் ‘தேடி’ இத்தனை ஆண்டுகளாக உலகச் சுற்றுலா போய்க் கொண்டிருந்தாரத்கள் என்று இந்திய துப்பறியும் புலிகளின் டவுசரைக் கிழித்தார்.

இன்னும் ஒரு படி மேலே போய், தான் ஒன்றும் தப்பிக்கவில்லையென்றும், தன்னை பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்ததே சி.பி.ஐ தான் என்றும் உண்மையை போட்டு உடைத்தார். ஏனெனில் அப்போது மத்தியிலிருந்த காங்கிரசு அரசு மேற்கு வங்கத்திலிருக்கும் சி.பி.எம் அரசைக் கலைப்பதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்று, திட்டமிட்டே இந்த ஆயுதக் கடத்தலை நடத்தியதாகவும், அவர்கள் எதிர்பார்த்தது போல் நடவாமல் மொத்த திட்டமும் சொதப்பலாகி விட்டதால், தன்னை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க பயந்து கொண்டு தான் தன்னை பாதுகாப்பாக தப்ப விட்டனர் என்றும் சொல்கிறார்.

இதற்கு மேல் இவனை விட்டால் மிஞ்சியிருக்கும் கோவணத்தையும் உருவி விடுவான் என்று முடிவு கட்டிய சி.பி.ஐ, உடனடியாக கிம் டேவியை டென்மார்க்கிலிருந்து கைது செய்து அழைத்து வர ஒரு குழுவை அனுப்புகிறது. உடனே உங்களுக்கு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வரும் விஜயகாந்த் நினைவுக்கு வரலாம் – முதலில் அந்தக் கற்பனைகளை எல்லாம் ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இங்கேயிருந்து விமானம் ஏறி இன்னொரு நாட்டுக்கு பயங்கரமான தீவிரவாதியைப் பிடித்து வரப் போன சூரப்புலிகள் போகும் போது அதற்குத் தேவையான வாரன்டை எடுத்துப் போக ‘மறந்து’ விட்டார்களாம். ஏதோ ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன அப்பாவி மாணவன் போல அங்கே டென்மார்க் அதிகாரிகள் முன் பல்லைக் காட்டிக் கொண்டும் பின் மண்டையைச் சொறிந்து கொண்டும் இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள்.

இதுக்குப் பேசாமல் விஜயகாந்தையே அனுப்பியிருக்கலாம். டென்மார்க் காவல் துறையினரிடம் தமிழில் வாதாடி தீவிரவாதியை மட்டுமல்ல எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அந்த நாட்டு பிரதமரையே கூட தூக்கி வந்திருப்பார். இப்ப பாருங்க வட போச்சு.

ஊரெல்லாம் தேடிவிட்டு தன் தொப்பைக்குக் கீழே குனிந்து பார்க்க மறந்த கதை
சமீபத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட உடன், பாகிஸ்தானில் தான் உலகத்துத் தீவிரவாதிகளெல்லாம் இருப்பது போலவும் ஒரு சீன் போட்டது இந்திய வெளியுறவுத்துறை. இதற்காக பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் ‘அதிபயங்கரமான ஐம்பது தீவிரவாதிகள்’ பட்டியல் ஒன்றைத் தயாரித்த உள்துறை அமைச்சகம், அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து களத்திலிறங்கிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள், தமது பஜனையை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் வாஜுல் காமர் கான் என்பவர், மும்பையின் அருகே உள்ள தானேவில் தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை ஊடகங்களில் அம்பலமானது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டுச் சிதம்பரம், இது ஏதோ சின்னத் தவறு தான் என்றும், தெரியாமல் நடந்து விட்ட இத்தவறைப் பற்றி தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதாகவும், நடந்ததற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.

அவர் சொல்லி வாய் மூடவில்லை. அதற்குள் அதே பட்டியலில் இருக்கும் இன்னொரு தீவிரவாதியான பெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில் தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமாகிறது. முதல் நபராவது ஒளிந்து வாழும் நபர். இரண்டாவது நபரோ ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்.

ஏற்கனவே கைதான பெரோஸ் கான் மீது சர்வதேச போலீஸில் சொல்லி ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது சி.பி.ஐ. அது மட்டுமல்லாமல், இந்தியச் சிறையிலிருக்கும் இந்த நபர் பாகிஸ்தானில் ‘ஒளிந்து’ கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் அரசு இந்தத் தீவிரவாதியைப் பிடிக்க ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்றும் தீவிரமாக பிரச்சாரமும் செய்து வந்தது.

தேடப்படுவது யார் பிடிபட்டது யார் என்கிற சாதாரண விவரத்தைக் கூட சரிபார்க்கத் துப்பில்லாத இந்த விசாரணை அமைப்பு தான் ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை விசாரித்து வருகிறது என்பதை வாசர்களுக்கு நினைவூட்டுகிறோம். தீவிரமான போலீஸ் பயிற்சி, ஒற்றறிவதிலும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும், விசாரணை முறைகளிலும் உலகத்தரமான பயிற்சி, என்று சகல வகைகளிலும் தேர்ச்சி பெற்ற தொழில் முறை நிறுவனமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, அண்ணா ஹசாரே உருவாக்க நினைக்கும் ஜன் லோக்பால் விசாரணை அமைப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

சி.பி.ஐ, ஐ.பி, என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் உளவுப் பிரிவும் உண்மையில் குற்றத்தடுப்பு, உண்மையைக் கண்டறிதல் என்கிற மக்கள் நல நோக்குக்காக இல்லாமல் வெறும் ஆளும் வர்க்க சேவைக்கென்றே வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதன் விளைவு தான் இப்போதைய இந்த அவமானங்களுக்குக் காரணம். ஃபோபார்ஸ் முதல் ரிலையன்சு வரை பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளையும், முதலாளிகளையும் காப்பாற்றிய நிறுவனம்தான் இந்த சி.பி.ஐ.

ஆட்சிக்கு எதிரானவர்களைக் கண்காணிப்பது, மிரட்டுவது என்பதற்காகவே பயன்படுத்தப்படும் இந்தக் கருவிகள், என்ன தான் பயிற்சியளிக்கப்பட்டாலும் கடைசியில் இப்படி காமெடிப் பீஸுகளாக சீரழிந்து போவது தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம். லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: