வாந்தியெடுக்கப்பட்ட வரலாறு.


“கட்டம் கட்டினால் காட்டிக் கொடுப்பார்
விஜயகாந்த் தூதுவர்களை சந்தித்த அழகிரி – ஜெ ஷாக்
கங்கணம் கட்டும் காங்கிரஸ்
சோனியாவின் வருத்தம்-சமாளித்த கலைஞர்-டெல்லி டென்ஷன்
கூட்டணியா-சாதனையா-தி.மு.க எடுக்கும் ரிஸ்க்
கதறடிக்கும் காங்கிரசின் பொலிட்டகல் பிளாக்மெயில்
கூட்டணிக்கு 5 நிபந்த்தனை-தி.மு.க-காங்கிரஸ் உறவு தொடருமா-பரபர திருப்பம்
தோற்றுப்போன சி.டி சதி
நிதானித்த விஜயகாந்த்-படபடத்த ஜெ-விறுவிறு கிளைமாக்ஸ் காட்சிகள்
ஒரு இலை விழுந்தால் இரு இலை துளிர்க்கும்-காங்கிரசின் சூசக தகவல்
துடுக்கு முருகன்-துடிக்கும் கூட்டணி
உடைகிறது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி-கோபாலபுரம் டூ ஜன்பத் காட்சிகள்
கடைசி அஸ்திரம் கனிமொழி-குலாம் நபி போட்ட குண்டு
கருணாநிதி வைத்த மார்ச் 5 செக்
பணாலான காங்கிரஸ் ப்ளான்-ஆப்பு வைத்த கலைஞர்
ஜெயிக்க நினைக்கிறாரா-சினிமா எடுக்கப் போகிறாரா
கூட்டணியை கரை சேர்த்த சக்திகள்
சீறிய சோனியா-எகிறிய கலைஞர்
அடுத்த பஞ்சாயத்து-தி.மு.கவில் களைகட்டும் பங்கீடு
உறவு பிரிவு-முக்கிய கட்சிகளின் கலக்கல் திருப்பங்கள்……..”

இவையெல்லாம் ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகைகளில் சமீபமாக வெளிவந்த அட்டைப்படக் கட்டுரை தலைப்புகள்!

அரசியல் என்றாலே சாக்கடை என்று சலித்துக் கொண்டு கூண்டுக்கிளி வாழ்க்கையில் காலத்தை ஓட்டும் நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து வீசப்பட்ட தலைப்புகள்தான் இவை. இந்த தலைப்புகளில் நெளியும் சாரம் என்ன? இவை வாசிப்பவர்களுக்கு தரும் சேதி என்ன?

இவையெல்லாம் ஏதோ தேர்தலுக்காக மட்டும் வைக்கப்பட்ட தலைப்புக்கள் அல்ல. தேர்தல் இல்லாத காலங்களிலும் அரசியல் கட்டுரைகளின் யோக்கியதை இதுதான். அதாவது அரசியல் நிகழ்வுகளைக் கூட ஏதோ திடுக்கிடும் மர்மமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான மசாலா திரைப்படம் போல இவர்கள் பார்க்கிறார்கள், எழுதுகிறார்கள், அப்படி ஒரு இரசனையையும் உருவாக்குகிறார்கள். கூட்டணி கூத்துக்கள், தலைவர்களின் வெற்று சவுடால்கள், கொள்கையே இல்லாத வார்த்தை ஜாலங்கள், தன்மானமே இல்லாத உரிமை போர்கள், சுயமரியாதை அற்ற பட்டங்கள்…இவைதான் அரசியல் என்று நமக்கு ஊட்டப்படுகிறது.

தமிழகத்தின் அரசியல் தரம் மிகவும் தாழ்ந்து கிடப்பதாக புலம்பும் நடுத்தவர்க்கம் படிக்கும், இத்தகைய தலைப்புகளின் தரமே நமது அரசியலின் யோக்கியதைக்கு ஒரு துளிபதம். இதில் இவர்கள் சாதாரண மக்கள் அதாவது இந்த புலனாய்வு புலிகளை படிக்காத பாமரர்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பதாக வேறு சலித்துக் கொள்வார்கள். சரி, இவர்கள் காசு வாங்கிக் கொண்டு படித்துக் களிக்கும் பத்திரிகைகளின் தரத்தை விட அது ஒன்றும் கீழானதில்லையே? துட்டுக்கு ஓட்டு என்பதை விட துட்டுக்கு மூளையை அடகு வைப்பது கேடானதில்லையா?

அரசியல் என்றால் என்ன?

எல்லா தனிமனிதர்களும் சமூகத்தோடு இணைந்து வாழ்வதன் மூலமே உயிர்வாழ முடியும். அந்த ஒப்பந்தத்தை அதிகாரத்தின் மூலம் ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பின் இயலே அரசியல். அந்த அதிகாரம் யாருக்காக, யாரால், யார் மீது ஏவப்படுகிறது என்பதிலிருந்து அந்த அரசியலின் மையமான அரசாங்கத்தின் வர்க்க நோக்கு தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் நமது நாட்டில் இருக்கும் அரசு என்பது முதலாளிகள், நிலப்பிரபுக்கள், ஏகாதிபத்தியங்கள் நலனுக்காக அதிகாரத்தை நம் மீது ஏவி கட்டுப்படுத்தி வருகிறது. இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

அரசியல் என்பது நம் அன்றாட வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் ஊடுறுவியிருக்கிறது. வீட்டில் சமையல் அறையிலிருந்து, தெருவிலிருக்கும் ஏ.டிஎம் வரைக்கும் அதுவே அனைத்தையும் தீர்மானிக்கிறது. இத்தனை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும் அந்த அரசாங்கத்திற்கான தேர்தலை இப்போது அறிவித்திருக்கிறார்கள். இந்த அரசு எப்படி செயல்படுகிறது, இதன் அதிகாரம் என்ன, அரசை வழிநடத்துவது தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளா, இல்லை அதிகார வர்க்கமா என்பதெல்லாம் உண்மையில் பெரும்பாலான அறிவாளிகளுக்கே தெரியாத ஒன்று.

போகட்டும். இத்தகைய முக்கியத்துவத்தை கொண்டிருக்கும் ஒன்றின் மீதான தேர்தல் என்பது எப்படி புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது?

இந்த அரசு அமைப்பை நாங்கள் போலி ஜனநாயக அமைப்பு என்கிறோம். மற்றவர்கள் இதுதான் சாத்தியமான ஜனநாயகம் என்கிறார்கள். சரி, அவர்கள் வாதப்படி பார்த்தாலே கூட தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பொதுப்புத்தியில் என்ன விதமான செய்திகள், ஆய்வுகள், விவாதங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்?

பொருளாதாரம், விலைவாசி உயர்வு, கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, தொழில், மாணவர், இளைஞர், பெண்கள், என்று இந்த பிரச்சினைகளெல்லாம் தற்போது எப்படி இருக்கிறது என்றோ, இது குறித்து ஆட்சியிலிருக்கும் கட்சி என்ன செய்தது, அதை எதிர்க்கும் கட்சிகள் அதற்கு என்ன மாற்று திட்டம் வைத்திருக்கிறது என்றல்லவா இவை பொதுவெளியில் பேசப்பட்டிருக்க வேண்டும்?

ஆனால் பேசப்படுவது என்ன? பொதுக்கூட்ட மேடைகளில், பத்திரிகைகளில், பதிவுலகில் என்ன அலசப்படுகிறது? மேலே கண்ட அந்த திடுக்கிடும் தலைப்புகள்தான் அரசியல் என்றால் நாம் வாழ்வது நிச்சயமாக போலி ஜனநாயக அமைப்பில்தான். அதாவது நமது வாழ்வை தீர்மானிக்கும் அரசியல் குறித்து ஒரு வடிவேலு காமடியை இரசிக்கும் மனநிலையில்தான் நாம் இருக்கிறோம் என்று பொருள். இதுதான் மக்களின் தரம் என்றால் அங்கே நிச்சயம் ஜெயவும், வைகோவும், கருணாநிதியும், கார்த்திக்கும், விஜயகாந்தும்தான் இருப்பார்கள். அவர்களுக்கிடையேயான சுயநல முரண்பாடுகள் மட்டும் அரசியலாக ஆர்வத்துடன் படிக்கப்படும். இறுதியில் மக்கள் சுயவிருப்பத்தோடு இங்கே அடிமைகளாக மட்டுமே இருக்க முடியும்.

அதனால்தான் ஜூனியர் விகடன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ரஜினியை அட்டைப் படத்தில் போட்டுவிட்டு, “ரஜினி – சோ மீட்டிங் ரகசியம், யாருக்கு வாய்ஸ்?” என்று ஒரு தலைப்பை போட்டு வெட்கமே இல்லாமல் விற்கிறது. நாமும் வெட்கம் கெட்டு அதை காசு கொடுத்து படிக்கிறோம்.

அரசியலை ஒரு சினிமா கிசுகிசு போல பார்ப்பதற்கும், இரசிப்பதற்கும் கற்று கொடுத்து அதை ஒரு மலிவான, வெற்றிகரமான பாணியாக மாற்றிய பெருமை ஜூ.விக்கு சேரும். அந்த ராஜபாட்டையில்தான் நக்கீரன் முதல் ஏனைய புலனாய்வு புலிகள் வர்த்தக வெறியுடன் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஜூவியின் கழுகுதான் இந்த கிசுகிசு அரசியலின் சீனியர். இன்றும் அந்த கழுகு வாந்தியெடுப்பதைத்தான் படித்த தமிழர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். இந்த வார ஜூவியை வாங்கி பார்த்தால் அந்த ரஜினி வாய்ஸ் குறித்த செய்தி, மொத்தம் ஒரு பத்துவரிகளுக்குள் இருக்கும்.

அ.தி.மு.க கூட்டணியில் ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் இருப்பதால் ரஜினியை தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக நாலு வார்த்தை பேசவைத்து அதை அவர்களது டி.வியில் போடுவதற்கு கருணாநிதி மூலம் முயன்றார்களாம். இது போயஸ் தோட்டத்திற்கு லீக்காகி அம்மா உடனே சோ ராமசாமியைக் கூப்பிட்டு, “ரஜினி பெண்ணு திருமணத்துக்கு போகலேன்னு எம்மேல வருத்தமா இருப்பாரு, அதை வைச்சு கருணாநிதி நமக்கு எதிரா அவரை யூஸ் பண்ண பாக்குறாரு, நீங்க உடனே போய் சந்திச்சு நமக்கு சாதகமா மாத்திடுங்க”ன்னு சொன்னராம். உடனே சோவும் ரஜினியை சந்திச்சாராம். ரஜினியும் இரு அணிக்கும் வாய்ஸ் கொடுக்க முடியாது, இரண்டு பேர் மேலயும் வருத்தங்கள் இருப்பதாக சொன்னாராம். இதுதான் மேட்டர். இது ஜூவியில் மட்டுமல்ல தினமலர் உள்ளிட்ட அ.தி.மு.க அணி ஆதரவு நாளிதழ்கள் எல்லாவற்றிலும் சுவரொட்டி செய்தியாகவே வெளிந்தது.

இந்த சந்திப்பெல்லாம் வரலாற்று புகழ் மிக்க சந்திப்பு என்றால் வரலாறு செய்த தவறுதான் என்ன?

அரசியலை பெருந்திரளான மக்கள் திரளின் நடவடிக்கையாக காட்டாமல் ஒரு சில தலைவர்களது விருப்பு வெறுப்போடு மட்டும் காட்டுவது எதைக் குறிக்கிறது? நாமெல்லாம் படித்தவர்களோ இல்லை படிக்காதவர்களோ யாராக இருந்தாலும் வெறும் அடிமைகளே என்பதுதான் இதன் உட்கிடை. இந்த செய்தி உண்மையாகவே இருக்கட்டும். இதில் கோடிக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொள்ளப்போகும் தேர்தலுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?

ரஜினி நினைத்தால் யாருக்காவது வாய்ஸ் கொடுத்து ஜெயிக்க வைக்க முடியும் என்பது ஒரு வாதத்துக்காக உண்மையாக இருக்கட்டும். எனில் அது குறித்து மக்களுக்கு இடித்துரைக்க வேண்டுமா, இல்லை அதை தேவவாக்காக பரப்ப வேண்டுமா? ரஜினி வாய்ஸ் கொடுப்பதை அவரது சொந்த விருப்பங்களே தெரிவு செய்யும் எனில் தமிழக மக்களெல்லாம் இளித்த வாயர்களா? நமது தலையெழுத்தை இந்த கட்டவுட் நாயகன்தான் தீர்மானிப்பான் என்றால் நாமெல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்கள் என்று உயிர்வாழ்வது தகுமா?

தமிழக மக்களுக்கு இருக்கும் சினிமா மோகத்தை வைத்து நட்சத்திரங்களை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஊடகங்களும் அதை ஊதி வளர்க்கின்றன. உண்மையில் இத்தகைய சினிமா நட்சத்திரங்களை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்களா என்ன? அப்படி அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அது குறித்த விமரிசன விழிப்புணர்வையல்லவா ஊடகங்கள் எனப்படும் ஜனநாயகத் தூண்கள் செய்திருக்க வேண்டும்? மாறாக இவர்களே அந்த மோடிமஸ்தான் வேலையை காசுக்காகவும், மலிவான சர்குலேஷன் அதிகரிப்புக்காகவும் செய்கிறார்கள் என்றால் இவர்களை விபச்சாரத் மாமாக்கள் என்றே அழைக்க முடியும். நமது தேர்தல் குறித்த செய்திகளை இத்தகைய மாமாக்கள்தான் படிக்கத் தருகிறார்கள், நாமும் அதை விரும்பி படிக்கிறோம் என்றால் தமிழகத்தை ஒரு விபச்சார தேசம் என்றே அழைக்கலாமே?

1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதொல்வியுற்று, தி.மு.க பெரு வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ரஜினி, ” அ.தி.மு.கவுக்கு ஓட்டு போட்டா தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்று தி.மு.கவிற்கு ஆதரவாக இரண்டு வார்த்தை பேசினார். உடனே தமிழக மக்கள் ஜெயாவை தூக்கி கிடாசிவிட்டு கருணாநிதியை ஆட்சியில் அமர்த்தினார்கள் என்று பல அறிவாளிகளும், ஊடகங்களும் ஒரு பொய்யை வரலாற்றில் பதிந்திருப்பதோடு அவ்வப்போது அதை நினைவுபடுத்தவும் செய்கிறார்கள்.

நடந்த உண்மை என்ன? அந்த தேர்தலுக்கு முன் தமிழகத்தை ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த ஜெயா-சசி கும்பல் பாசிச வெறியாட்டம் போட்டதோடு, முழு தமிழகத்தையும் மொட்டை போட்டது. ஊழல், சொத்து சேர்ப்பு, அதிகார ஆணவம், ஈழம் மற்றும் தமிழின ஆதரவாளர்கள் மீது அடக்குமுறை என்று சர்வாதிகாரத்தில் பீடை நடை போட்டது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முழு தமிழ்நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அதனாலேயே அவர்களுக்கு யாரும் எடுத்துக் கொடுக்க தேவையில்லாமல் ஜெயா கும்பல் மீது கடும் வெறுப்பு இருந்தது.

அந்த தேர்தலுக்காக கிராமங்களுக்கு சென்ற அ.தி.மு.க அமைச்சர்கள் பலர் செருப்படி பட்டனர். இந்த ஜெயா எதிர்ப்பு அலை காரணமாகவே தி.மு.க வெற்றி பெற்றது. ஒரு வேளை இந்த சூப்பர் ஸ்டார் அன்று அ.தி.மு.கவிற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பிஞ்ச வெளக்குமாறால் அபிஷேகம்தான் கிடைத்திருக்கும். அன்று ஜெயாவை எதிர்த்து விரட்டுவது மக்களின் சொந்தப் பிரச்சினையாக இருக்கும் போது பவர் ஷூ போட்டு பால் கறப்பதாக நடிக்கும் இந்த கோமாளியா அதை தீர்மானிக்க முடியும்?

ஜெயா முதலமைச்சராக காரில் வரும்போது இந்த ரஜினி ஏதோ ஒரு சாலையில் காத்திருந்திருக்கிறார். இரண்டாவதாக பம்பொய் படமெடுத்த பிறகு மணிரத்தினத்தின் வீட்டுக் காம்பவுண்டில் யாரோ சிலர் வெடிக்காத வெங்காய வெடிகளை வீசினார்கள். இது இரண்டும் சூப்பர் ஸ்டாரின் மனதை பாதித்திதாம். பாட்ஷா திரைப்பட வெற்றி விழாவில் அதை அவர் ஏதோ முடிந்த வரை இதை புலம்பியவாறு வெளியிட்டார். இதுதான் இந்த வாய்ஸ் வாந்தியெடுக்கப்பட்ட வரலாறு.

அன்று தா.மா.காவையும் தி.மு.கவையும் இணைப்பதற்கு இந்த சோ ராமசாமி பாடுபட்டாராம். யார் இந்த சோ? தமிழகத்தின் நீரா ராடியா. ராடியாவுக்கு நீண்டமுடி இருக்கும். சோவுக்கு மொட்டை தலை. ராடியா முதலாளிகளுக்கான புரோக்கர் என்றால் சோ பார்ப்பனியத்துக்கு குறிப்பாக பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவிற்கும் புரோக்கர். தமிழகத்தின் பல தேர்தல் தலைவிதிகளை அதாவது அதற்கு காரணமான கூட்டணிகளை இந்த மொட்டைபாஸ்தான் தீர்மானிப்பார் என்று பலர் நம்புகிறார்கள்.

பார்ப்பனியத்துக்கு ஓரளவு ஆப்பு வைத்த திராவிட இயக்கத்தின் மேல் ஜென்ம விரோத பகையுடன் இருக்கும் சோ, பார்ப்பனர்கள், பிராமண சங்கம் சார்பாக தி.மு.கவிற்கு எதிராக எல்லா அரசியல் தரகு வேலைகளையும் பார்ப்பார். இப்படி மேல்மட்ட மனிதர்களின் அரசியல் நடவடிக்கைகள் மூலம் மக்களது தலைவிதியை தீர்மானிக்க விரும்பும் இந்த நரியை விமரிசித்து துரத்துவதற்கு பதில் ஊடகங்கள் சாணக்கியர் என்று கொண்டாடுகின்றன. காரணம் அந்த ஊடகங்களில் பெரும்பான்மையானவை பார்ப்பன ஊடகங்களாக இருப்பதுதான்.

மக்கள் தமது சொந்த உணர்வின் காரணமாக கருணாநிதியை எதிர்ப்பது ஆரோக்கியமானதா, இல்லை இந்த மொட்டை பாஸ் புரோக்கரது லாபி வேலை காரணமாக எதிர்ப்பது போல சித்தரிப்பது ஆரோக்கியமானதா? முதலாளிகளுக்கு ஆதரவாக யாரெல்லாம் அமைச்சர்கள் என்று நீரா ராடியா தீர்மானிப்பதற்கும், பார்ப்பனியத்துக்கு ஆதரவான கூட்டணியை இவர் தீர்மானிக்கிறார் என்பதற்கும் என்ன வேறுபாடு?

கருணாநிதியின் கார்ப்பரேட் குடும்ப ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கான கூட்டணி மாமா வேலைகளை இந்த மொட்டைப் பார்ப்பான்தான் செய்து முடித்தான் என்றால் இதை விட தமிழக மக்களை இழிவு செய்ய முடியுமா? ஆனால் ஊடகங்கள் அப்படி இழிவு செய்வதை தொடர்ந்து செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீரங்கத்து பாப்பாத்தியான ஜெயாவின் ராஜகுருவாக இந்த மைலாப்பூர் பாப்பான்தான் இருக்கிறார் என்பது அ.தி.மு.கவின் யோக்கியதையை பறை சாற்றுகிறது. அந்த வகையில் கருப்பு எம்.ஜி.ஆர் கூட இன்று போயஸ் தோட்டத்தில் சரணடைந்திருப்பது துக்ளக் ஆண்டுவிழாவிலேயே பேசப்பட்டது.

தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் துக்ளக் சோவின் நடவடிக்கைகளை அறியாதவர்கள், ஏற்காதவர்கள். அமெரிக்கா போக முடியாத தமிழ்நாட்டு பார்ப்பனர்களும், அமெரிக்கா சென்றும் பார்ப்பனியத்தை தலைமுழுகாத தமிழ்நாட்டு பார்ப்பனர்களும்தான் சோவை தமது அரசியல் ஆசானாக கருதுகிறார்கள். இப்படி இந்த பார்ப்பன குரு தமிழக சட்டமன்ற தேர்தலில் சகுணியாட்டம் ஆடுவது நமது இழிவான அரசியல் யதார்த்தம்.

தனது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதன் மூலமே கோடிஸ்வரரான ரஜினி எனும் நடிகனுக்கு, தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட தகுதி இல்லை. அடுத்த படத்தில் அண்டார்டிகாவில் ஏதோ இந்தி நடிகையுடன் கையைக் காலை அசைத்து ஆடப்போகிற இந்த சுயநலவாதிக்கு ஏதோ பெரும் வாய்ஸ் இருப்பதாகவும், அதை கண்டு தமிழகமே அஞ்சி நடுங்குவதாகவும் ஜூ.வி ஒரு தேர்ந்த மாமா போல சித்தரிப்பது பச்சையான அயோக்கியத்தனம்.

சொல்லப்போனால் ரஜினிக்கு இப்படி ஒரு வாய்ஸ் பவர் இருப்பதாகவும், அதனால் அவர் கட்சி ஆரம்பித்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கதையை உருவாக்கி வெளியிட்டு இன்று வரை அது வரலாற்றில் இடம்பெற்றிருப்பதற்கு காரணமே துக்ளக் சோதான்.

பொது அரங்கில் இத்தகைய சகுணிகளும், வாய்ஸ் ஸ்டார்களும் என்று தூக்கியெறியப்படுகிறார்களோ அன்றுதான் தமிழகம் ஆரோக்கியமான அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். கருணாநிதி, ஜெயா போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளையும் வீழ்த்த முடியும். இல்லையேல் நமது தலையெழுத்தை ரஜினி, சோ போன்ற பாசிசக் கோமாளிகள்தான் தீர்மானிக்கப் போவதாக நம்மை மாற்றிவிடுவார்கள். அதை அடிமைத்தனம் என்றும் அழைக்கலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: