ஒழியட்டும் கிரிக்கெட் தேசபக்தி !!


தேர்தல் காலத்தில் கிரிக்கெட்டையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இந்து மதத்தை விட பெரிய மதம் கிரிக்கெட். ஆனாலும் ஐந்து, பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த கிரிக்கெட் பரபரப்பு இப்போது குறைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போட்டி, கோப்பை என்று மக்களுக்கு சலித்துப் போகுமளவு ஏராளமான ஆட்டங்கள். 20 ட்வெண்டி வந்ததும் அதன் பரிமாணம் நிறையவே மாறியிருக்கிறது. இரசிகனை பொறுத்த வரை முன்னர் போல நுணுக்கங்களை அணுஅணுவாய் இரசிக்கும் தேவை இப்போது இருப்பதில்லை. ஆறு, நாலு என பரபரவென்று அவன் கூச்சலிடுகிறான்.

சரி, ஒழிந்து போகட்டும் என்றால் கிரிக்கெட்டை வைத்து கல்லா கட்டும் முதலாளிகள் அந்த விளையாட்டை ஏதோ மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை இருக்கிறதே அதைத்தான் தாங்க முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியுடனான கால் இறுதி ஆட்டத்தில் இந்திய தேசிய கீதம் ஒலித்த போது பலர் அலுவலகங்கள், வீட்டில் எழுந்து நின்றார்களாம். ஒரு அலுவலகத்தில் ஒரு தோழர் எழுந்து நிற்கவில்லை என்று அவரை குமுறி எடுத்துவிட்டார்களாம். கிரிக்கெட் எப்படி தேசபக்தியின் அடையாளமாக மாற முடியும்?

உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்காக பாக், இந்தியா இரண்டிலும் விளம்பரங்கள் மூலம் தேசபக்தியை உலுப்பிவிடும் பெப்சி தேச எல்லையைத் தாண்டி கல்லாக் கட்டுகிறது. இரசிகன் மட்டும் வாயில் பெப்சியை உறிஞ்சிக் கொண்டு பாரத் மாதாகி – பாக் மாதாகி ஜெய் என்று அலறுகிறான். அதிலும் இந்தியா – பாக் போட்டி என்றால் ஊடகங்களெல்லாம் சிலிர்த்துக் கொண்டு தேசபக்தியை கிளறி விடுகின்றன.

இப்போது கொஞ்சம் பரவாயில்லை.முன்பெல்லாம் பாக் கிரிக்கெட் அணியை வெறி பிடித்தவர்கள் போல சித்தரித்து எழுதுவார்கள். நிறைய போட்டிகளில் பாக் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 33 ஆண்டுகளாக இந்திய பாக் அணிகள் 119 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் முடிவில்லாத 4 போட்டிகளைத் தவிர பாக் அணி 69-லும்,இந்திய அணி 46-லும் வென்றுள்ளன. விளையாட்டு என்றால் வெற்றி தோல்வி சகஜம் என்று போனால் பிரச்சினை அல்ல. அதை ஒரு மானப்பிரச்சினை போல இவர்கள் சித்தரிக்கிறார்கள்.

1986-ஆம் ஆண்டு ஷெர்ஜாவில் நடந்த போட்டியில் கடைசி பந்தில் 4 ரன் அடித்தால் வெற்றி என்ற நிர்ப்பந்தத்தில் பாக் அணி இருக்கிறது. சேதன் சர்மா போட்ட புல்டாசை ஜாவித் மியான்தத் சிக்சருக்கு அனுப்ப இந்திய ரசிகர்கள் அதை எண்ணி எண்ணி பல மாதங்கள் தூங்கவே இல்லை. இப்படி நிறைய முறை பாக் அணி இந்திய ரசிகர்களை தூங்க விடாமல் செய்திருக்கிறது.

காஷ்மீர் பிரச்சினையை வைத்து இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் உள்நாட்டு மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பும் வண்ணம் இந்த தேசபக்தி வெறியை அவ்வப்போது கிளப்பி விடும். இன்னொரு புறம் ஆயுதங்களை போட்டி போட்டு வாங்கும். இந்தியா அணுகுண்டு வெடித்தால் பாக்கும் வெடிக்கும். இப்படி இந்த போலி தேசபக்தியால் இருநாட்டு மக்களும் இழந்த செல்வத்தின் மதிப்பு எத்தனை இருக்கும்? ஆயுதங்களுக்கும், இராணுவத்திற்கும் ஒதுக்கும் தொகையை மக்கள் நலனுக்கு ஒதுக்கியிருந்தால் இரண்டு நாட்டு ஏழைகளுக்கும் ஓரளவாவது கதிமோட்சம் கிடைத்திருக்குமே?

எனினும் இந்த தேசபக்தி வியாபரத்தில் முதன்மைக் குற்றவாளி இந்தியாதான். காஷ்மீர் மக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொன்று குவிப்பதும், அது இயல்பாகவே பாக்கிஸ்தானில் ஒரு இந்திய வெறுப்பை தோற்றுவிக்கவும் காரணமாக இருக்கிறது. பாக் ஆளும் வர்க்கம் இதை வைத்து அரசியல் ஆதாயம் அடைகிறது. இரண்டையும் முற்ற வைத்து ஆயுதங்களை விற்பனை செய்து கல்லா கட்டும் அமெரிக்கா எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறது. அமெரிக்க நலனுக்காக பாக்கில் உருவாக்கப்பட்ட தீவிரவாதிகள் பின்பு பல காரணங்களால் முரண்பட்டு இன்று சுயேச்சையாக செயல்படுகிறார்கள். இந்தியாவில் இவர்கள் நடத்திய குண்டுவெடிப்பை விட பாக்கில் நடத்திய வெடிப்புகளும், கொலைகளும் அதிகம். அன்றாடம் ஏதாவது ஒரு பாக் நகரில், மசூதியில் குண்டு வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது.

காஷ்மீரில் தேச விடுதலை இயக்கங்களை மதவெறி மூலம் மாற்றியமைத்த பெருமை இந்தியா, பாக் இரண்டு நாடுகளுக்கும் சேரும். அதன் விளைவை இப்போது இருவரும் அனுபவிக்கிறார்கள்.

இந்த பின்னணியில்தான் கிரிக்கெட் போட்டிகளையும் கார்கில் போர் போல மாற்றுகிறார்கள். கிரிக்கெட் போட்டியில் பாக் வெற்றி பெற்றால் இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் என்ற அவதூறை இன்றும் இந்து முன்னணி செய்து வருகிறது. முசுலீம் மக்கள் அனைவரும் பாக்கிஸ்தானின் நலனுக்காக வாழ்பவர்கள் போன்ற சித்திரத்தை உருவாக்கி அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதுதான் இந்துமதவெறியர்களின் நோக்கம்.

இந்தியாவில் இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட் இசுலாம் மக்கள் எத்தனை ஆயிரம் பேர்? இதில் எந்த வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கபடவில்லை எனும்போது ஒரு அப்பாவி முசுலீம் இளைஞன் இயல்பாகவே பாக் கிரிக்கெட் வெற்றியை ஆதரிப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி நடப்பதில்லை. ஏதோ விதியை நொந்து கொண்டு இந்தியாவில் கிட்டத்தட்ட அகதிகளாகத்தான் வாழ்கிறார்கள்.

அகமதாபாத்தில் நடந்த கால் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றதும் பரிசுகளை வழங்கியவர் மோடி. முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையின் சூத்திரதாரி இந்திய அணிக்கு பரிசளிக்கிறான் என்றால் அதை பார்ப்பதற்கு விகாரமாக இல்லையா? அந்த மைதானத்தில் இந்திய வெற்றிக்காக கூச்சல் போட்ட நடுத்தர வர்க்கம்தான் பங்குச் சந்தையில் அதிக அளவு பங்குகளை வாங்குவதோடு குஜராத் கலவரம் நடந்த போது அதை வேடிக்கை பார்த்தும் ஆதரித்தது. மோடிக்கு இணையாக முகேஷ் அம்பானியும் போட்டியை குடும்பத்துடன் கண்டு களித்தார். ஆக எல்லாரும் ஒன்றாகத்தான் இணைந்திருக்கிறார்கள்.

கிரிக்கெட்டிற்கும் தேசபக்திக்கும் என்ன சம்பந்தம்? இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடைகளை பன்னாட்டு நிறுவனங்களின் முத்திரைதானே அலங்கரிக்கின்றது? போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் பெப்சி, சோனி, ஹோண்டா போன்ற நிறுவனங்களெல்லாம் உலகமெங்கும் தொழில் செய்கின்றன. இவர்களின் தயவில் இந்தியாவின் தேசபக்தி எப்படி? இந்தியா ஒரு போட்டியில் வென்றதும் மகிழ்ச்சியில் கூட இரண்டு புரோட்டாவையும், பீயரையும் முழுங்குவதுதான் தேசபக்தியின் விளைவுகள். தேசபக்தி இவ்வளவு சுலபமானது என்றால் டாஸமாக்தான் இந்தியாவின் மிகப்பெரிய தேசபக்தி நிறுவனமாக இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் வீட்டில் பாரதமாதா படத்திற்கு பூஜை செய்வதை தேசபக்தி என்கிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் “கமான் இந்தியா” என்று கூவுவதை தேசபக்தி என்கிறார்கள். இந்தியாவில் கிரிக்கெட்டை இளைஞர்களின் மதமாக மாற்றி நுகர்வு கலாச்சார சந்தையில் சக்கை போடு போடும் நிறுவனங்களை அம்பலப்படுத்த, தேசபக்தி போதையில் மூழ்கியிருக்கும் தருணம் பார்த்து இவர்கள் உங்களது சட்டைப்பையிலிருக்கும் பணத்தை திருடும் வழிப்பறிக்கொள்ளயை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் நாம் பாக் அணியை ஆதரித்தே ஆக வேண்டும்.

தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குஜராத்தில் முசுலீம் மக்கள் வேட்டையாடப்பட்டது, தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது, விவசாயிகள் தற்கொலை இதற்கெல்லாம் ஏதாவது சிறு துரும்பையாவது செய்தீர்களென்றால் அது தேசபக்தி எனலாம். அப்படி எதுவும் செய்யாமல் டி.வியை பார்த்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி, பின்னர் உருளை சிப்சை விழுங்கி, பெப்சியை அருந்திக் கொண்டு டெண்டுல்கர் பாடில் ஸ்வீப் அடிப்பதை சிலாகித்தால் அது தேசபக்தியா? இல்லை இதுதான் தேசத்துரோகம்.

பாக்கிஸ்தான் நமது அண்டை நாடு மட்டுமல்ல நமது ரத்தமும் கூட. பாக்கிஸ்தான் மக்கள் நமது சகோதரர்கள். நம்மிடமிருந்து அந்தநாடு பிரிந்ததற்கு ஆங்கிலேயர்கள், காங்கிரசு மற்றும் இந்துமதவெறி கும்பல்தான் முதன்மையான காரணம். இன்று இந்திய ஆளும் வர்க்கங்களால் ஏழை நாடாக வாழ வேண்டிய அவல நிலையில் இருப்பவர்கள். அமெரிக்காவுடன் கூடிக் குலவும் பாக் ஆளும் வர்க்கத்தால் சொந்தநாட்டில் பயங்கரவாத நிகழ்வுகளோடு செத்துப் பிழைக்கும் துர்பாக்கியவாதிகள்.

பாக் கிரிக்கெட் அணியையே எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை அணியோடு நடந்த டெஸ்ட் போட்டியில் தீவிரவாதிகள் தாக்கிய பிறகு எந்த அணியும் அங்கே செல்வதில்லை. இந்த உலகப் போட்டியும் கூட அங்கு நடக்க வேண்டியது, ரத்து செய்யப்பட்டது. பாக் கிரிக்கெட் வாரியத்திற்கு கூட ஏதோ கொஞ்சம் நட்ட ஈடு கொடுத்து வாயை அடைத்தார்கள். மற்ற அணி வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்போது அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை. எளிதாக மேட்ச் பிக்சிங் புரோக்கர்கள் கைகளில் விழுகின்றனர். மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் இந்தியா உட்பட மற்ற நாட்டு அணிகளது யோக்கியர்களும் அடக்கம் என்றாலும் பாக் அணிதான் இதில் மிகவும் கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது. தற்போது கூட பாக் உள்துறை அமைச்சர் பாக் அணி வீரர்களை நேரடியாகவே மேட்ச் பிக்சிங் குறித்து மிரட்டியிருக்கிறார். அவர்களது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது என்று எச்சரித்திருக்கிறார். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு அடிமைகளைப் போல ஆடவேண்டிய நிலைமையில் அந்த அணி இருக்கிறது.

இந்தியா பாக் இரண்டு நாடுகளின் மேட்டுக்குடி சூதாடிகள் மொகலியில் நடைபெற இருக்கும் ஆட்டத்தை வைத்து பத்தாயிரம் கோடிக்கு சூதாடப் போவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அப்பாவி இரசிகர்களோ தமது நாடு வெல்லப் போவதை எண்ணி காத்திருக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் இப்படி ஒரு போலி தேசபக்தி சண்டைக்கு என்ன அவசியம் இருக்கிறது?

தற்போது மவுனமோகன்சிங் அழைப்பின் பேரில் பாக் பிரதமர் கிலானி வர இருக்கிறார். இதை கண்டித்து எழுதும் பால்தாக்கரே அப்படியே “கசாப், அப்சல் குருவுக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அழையுங்கள்” என்று கேலி செய்கிறார். முன்னர் போல ஆடுகளத்தை சேதம் செய்யும் பலம் இன்று சிவசேனாவிற்கு இல்லை என்றாலும் இந்துமதவெறியரின் மனப்போக்கிற்கு இதுதான் எடுத்துக்காட்டு. பாக்குடன் எந்த உடன்பாடும் காணாதபடி இருப்பதையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களது திமிருக்காக இருநாட்டின் ஏழை குடும்பங்களிலிருந்தும் இராணுவத்திற்கு சென்று வாழும் சிப்பாய்கள் மட்டும் சுட்டுக் கொண்டு சாகவேண்டும். ஆர்.எஸ்.எஸ் அம்பிகளோ பூட்டிய அறைக்குள் பாதுகாப்பாக நின்று பாரத்மாதாகி ஜெய் என்று முழங்குவார்கள்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நடந்த கால்பந்து போட்டியில் ஈரான் வென்றதை அந்நாட்டு மக்கள் அரசியல் வெற்றி போல கொண்டாடியதை கூட ஆதரிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும். ஆனால் இரண்டு பரதேசி நாடுகள், ஏழைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் இப்படி மோதிக் கொள்வதையும், விளையாட்டு வெற்றியை போர் வெற்றி போல சிலாகிப்பதையும் எப்படி ஆதரிக்க முடியும்?

எனவே இந்த போலி தேசவெறியை தோலுரிக்கும் வண்ணம் நாம் பாக் அணியை ஆதரிக்க வேண்டும். இந்திய-பாக் மக்களின் ஒற்றுமை மூலமே இந்தியா பாக் ஆயுத போட்டியை நாம் தட்டிக்கேட்க முடியும். உடனே சில தேசபக்த குஞ்சுகள் கசாபை அனுப்பிய நாட்டிற்கா நமது ஆதரவு என்று வெடிப்பார்கள். சரி சம்ஜூத்தா எக்ஸ்பிரசுக்கு சங்க பரிவாரங்களை அனுப்பியது மட்டும் என்னவாம்? அதில் கொல்லப்பட்ட பாக்கின் அப்பாவி மக்களது உயிர் மட்டும் மலிவானதா?

பொதுவில் கிரிக்கெட் என்பதே சோம்பேறித்தனமான விளையாட்டு. மனித உடலின் அதீத சாத்தியங்களுக்கும், கொண்டாட்டத்திற்கும் அங்கே இடமில்லை. கால்பந்து, ஹாக்கி போல மனதுக்கும், உடலுக்கும் வேலை கொடுத்து ஆற்றுப்படுத்தும் சக்தி அதற்கில்லை. வீரர்கள் பெரும்பான்மை நேரங்களில் அசையாமல் இருப்பதுதான் கிரிக்கெட்டின் பண்பு. அதனால்தான் அதுஆங்கிலேய ‘துரை’களின் மத்தியில் பிரபலமாக இருந்தது. இந்தியாவில்கூட பெரும்பான்மை ஆதிக்க சாதிகளை சார்ந்தோரே கிரிக்கெட்டில் நுழைந்து பெரிய ஆளாகும் வாய்ப்பை இன்றும் பெறுகிறார்கள். இந்திய அணியின் பலவீனமாகக் கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவுக்கும் இது முக்கிய காரணம். மற்ற அணிகள் மூன்று வருடத்துக்கு ஒரு அதிவேக பந்து வீச்சாளர்களை தயார் செய்துவிடும் போது இங்கே முப்பது வருடத்துக்கு ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் வருவது பெரிய பாடாக இருக்கிறது. மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தால்தான் நூறு மைல் வேகத்தில் பந்து போட முடியும். பார்ப்பனிய ‘மேல்’சாதியினர் பிடியில் இந்திய கிரிக்கெட் இருக்கும் போது இது இப்போதைக்கு சாத்தியமில்லை. அந்த வகையில் ‘மேல்’சாதி இந்திய அணிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் பாக் அணியைத்தான் ஆதரிக்க வேண்டும். வட இந்தியாவில் இருப்பது போன்ற இந்து தேசிய வெறி தமிழகத்தில் இல்லை. இதன் பாதிப்பில்தான் சென்னையில் இந்திய அணிதோற்றாலும் வெற்றிபெற்ற அணியை இரசிகர்கள் எழுந்து நின்றுபாராட்டுவார்கள் என்பது உலகறிந்த செய்தி. என்ன இருந்தாலும் பெரியார் பிறந்த மண் அல்லவா?

ஒழியட்டும் போலி இந்திய தேசபக்தி !!

Advertisements

One Response to “ஒழியட்டும் கிரிக்கெட் தேசபக்தி !!”

 1. reverse phone lookup Says:

  I’m just commenting to let you recognize what a great
  discovery my cousin’s child obtained reading the blog.
  She noticed lots of things, which included how it can be for example to possess
  an amazing teaching character to lookup out other folks easily determine
  selected impossible topics. You undoubtedly exceeded readers’ expected results.
  Thank you for rendering such beneficial, safe, educational
  and even fun guidance on your topic to Lizeth.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: