இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்குறா


நடிகை சுஜாதாவின் பேட்டி பல வருடங்களுக்கு முன்பு குமுதத்தில் வெளியாகியிருந்தது.

‘‘நீங்கள் வீட்டில் இருக்கும்போது என்ன உடை அணிவீர்கள்?’’ என்பது கேள்வி. அதற்கு சுஜாதா சொல்லியிருந்த பதில், ‘‘வீட்டுல இருக்கும்போது நான் பறச்சி மாதிரி ட்ரெஸ் பண்ணுவேன்’’
————————————–
நடிகை சோனாவை பேட்டி எடுக்க வேண்டியிருந்தது. ‘உங்களுக்குப் பிடித்த கெட்டவார்த்தை ஒன்று சொல்லுங்க’ என்றதும் ‘‘போடா ங்கோத்தா, ங்கொம்மா, தேவடியா பையா’’ என்று அவருக்கு தெரிந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தார். அந்த வரிசையில் அவர் சொன்ன ‘கெட்டவார்த்தை’, ‘‘பற நாயே’’
——————————————
எழுத்தாளர் அழகிய பெரியவனின் சிறுகதை ஒன்று ‘நடந்த கதை’ என்ற பெயரில் குறும்படமாக வெளியாகியிருக்கிறது. இதன் வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்பு சென்னை ஃபிலிம் சேம்பரில் நடந்தது. அதில் விருப்ப ஓய்வு வாங்கிவிட்ட முன்னால் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், புதிய கோடங்கி பத்திரிகை ஆசிரியருமான சிவகாமி ஐ.ஏ.எஸ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘‘நான் முதன் முதலில் வேலூரில் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டேன். உடனே அதுவரைக்கும் அந்த மாவட்டத்தின் எஸ்.பி.யாக இருந்தவரை வேறு ஊருக்கு மாற்றிவிட்டு தேவர் இனத்தை சேர்ந்த புதியவர் ஒருவரை எஸ்.பி.யாக நியமித்தார்கள். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? கலெக்டர், எஸ்.பி., இருவருமே புதியவர்களாக இருந்தால் மாவட்ட நிர்வாகத்தில் சிரமம் வரும்’ என்று மேலிடத்தில் கேட்டபோது அவர்கள், ‘ஏற்கெனவே அங்கு இருந்த எஸ்.பி. ஒரு தலித். நீங்களும் தலித். ஒரு மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி. இருவரும் தலித்களாக இருந்தால் பிரச்னைகளில் ஒரு தலைப்பட்சமாக முடிவு எடுப்பீர்கள். அதனால்தான் அவரை மாற்றிவிட்டு தேவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என்று பதில் சொன்னார்கள். இது எனக்கு மட்டும் நடந்ததில்லை. தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் ஒரு தலித் கலெக்டராக இருக்கிறாரோ, அங்கு பெரும்பாலும் தேவர் இனத்தைச் சேர்ந்த ஒருவரைதான் எஸ்.பி.யாக நியமிப்பார்கள். தலித் ஒருவர் எஸ்.பி&யாக இருந்தால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் கலெக்டராக இருப்பார். வேறு எந்த சாதிகளுக்கும் இப்படிப் பார்க்கப்படுவது இல்லை.’’ என்றார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்பான வேறொரு விழாவில் பேசிய உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., ‘‘நான் திருநெல்வேலியில் கலெக்டராக பணியாற்றியபோது அப்போதையை மாநில தேர்தல் அதிகாரி அங்கு வந்திருந்தார். அவரை வரவேற்று அழைத்துச் செல்லும்போது மிக நேரடியாக என்னிடம், ‘உமாசங்கர், நீங்க பிள்ளைவால்தானே?’ என்று எந்தக் கூச்சமும் இல்லாமல் கேட்டார். ‘இல்லை சார், நான் ஆதி திராவிடன்’ என்றதும் அவரது முகம் சுருங்கிப்போய்விட்டது’’ என்று கலெக்டரான பிறகும் தன்னை பின் தொடர்ந்த சாதியைப்பற்றிக் குறிப்பிட்டார்.

————————————————————-
என் நண்பருக்கு வீடு பார்ப்பதற்காக சூளைமேட்டில் அலைந்தோம். புரோக்கர் ஒருவரும் கூடவே இருந்தார். அவர் காட்டிய ஒரு வீடு பிடித்துவிட்ட நிலையில் அட்வான்ஸ், வாடகை எல்லாம் பேசிவிட்டு வெளியே வந்துகொண்டிருக்கும்போது அந்த புரோக்கர் என் நண்பரிடம் ‘‘நீங்க என்ன ஆளுக சார்?’’ என்றார். நண்பர் கொஞ்சம் தயங்கினார். பிறகு சொன்னார். உடனே புரோக்கர் ‘‘கேட்டதுக்காக தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த எஸ்.சி. பயலுகல்லாம் காசை குடுத்துட்டு உள்ளே நுழைஞ்சுடுறானுங்க. அதுக்காகத்தான்…’’ என்றார். சொன்ன அந்த புரோக்கர் ஒரு முஸ்லீம்.
———————————————————-
நடிகர் சரத்குமார் ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ தொடங்குவதற்கு மிக முன்பாக ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் என்னுடன் ஓரளவுக்கு தொடர்பில் இருந்தார். அப்போது நான் திருநெல்வேலியில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அவ்வப்போது அழைத்துப் பேசுவார். கட்சி தொடங்குவதற்கு முன்பு ஒரு வெள்ளோட்டமாக திருநெல்வேலிப் பகுதியின் சில இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஏராளமான கார்களுடன் பெரிய கும்பல் திருநெல்வேலியில் இருந்து கிளம்பி ஆலங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சுரண்டையில் இரவு பொதுக்கூட்டம். நெல்லையைப் பொருத்தவரை நிருபர்களும் சாதி வாரியாகப் பிரிந்து கிடப்பார்கள். நாடார் நிருபர்கள் ஒரு பக்கம், தேவர் நிருபர்கள் மறுபக்கம், பிள்ளைமார்கள் இந்தப் பக்கம் என்று வெளிப்படையாக இல்லாமல், ஒரு கூட்டு மனநிலை அவர்களை பிரித்து வைத்திருக்கும். உதிரிகள் ஏதோ ஒரு பக்கத்துடன் இணைத்துக்கொள்வார்கள். இந்த நிலையில்தான் சரத்குமாரின் வாகனம் முன் செல்ல, பின்னே ஏராளமான அவரது ரசிகர் மன்ற வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அதில் ஒரு காரில் பத்திரிக்கையாளர்கள் இருந்தார்கள்.

ஆலங்குளத்தில் கொடி ஏற்றிய சரத்குமாரின் கார் கிளம்பியது. அங்கு கூடியிருந்த மிகப்பெரிய கூட்டத்தைப்பற்றி என்னுடன் காரில் இருந்த சகப் பத்திரிகையாளர்கள் சிலர் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்களாய் இருக்கக்கூடும் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அப்போது திடீரென என் செல்போன் அடித்தது. எடுத்தால் ‘சரத்குமார் காலிங்’ என்று வந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு நிருபர் இதைப் பார்த்துவிட அந்த காரில் இருந்த பெரும்பாலான நிருபர்களின் கவனம் என் மேல் திரும்பியது. அதில் ஒருவர், ‘ஏங்க, நிஜமாவே சரத்குமார்தான் பேசுறாரா? நீங்க ஸ்பீக்கர்ல போடுங்க’ என்றார். அந்த ஆசையை நிறைவேற்றும் பொருட்டு ஸ்பீக்கர் போனில் பேசினேன். எதிர்முனையில் பேசிய சரத்குமார், ‘கூட்டம் எப்படி இருந்தது? ஏற்பாடு எப்படி?’ என்பது மாதிரி வழக்கமாகத்தான் விசாரித்தார். ஆனால் என்னுடன் பயணித்த சக பத்திரிகையாளர்களுக்கு, அன்று முதல் நான் நாடாராகிப்போனேன். அதுவும் அவர்கள் கணக்கில் ‘சரத்குமாரே போன் போட்டுப் பேசும் ஆள்’ என்பதால் திருநெல்வேலியை விட்டுவிட்டு வெளியேறும் வரை அந்த சிலரிடம் எனக்கான மரியாதை இருந்துகொண்டே இருந்தது.
———————————————————-
தீபாவளிக்கு ஊருக்குப் போயிருந்தபோது என் அம்மாவுக்கு சேலை எடுத்துக்கொண்டுப் போயிருந்தேன். சேலை டிஸைன் எல்லாம் அம்மாவுக்குப் பிடித்திருந்தது. கலர் மட்டும் பிடிக்கவில்லை. அதை சொல்வதற்கு என் அம்மா சொன்ன வார்த்தை, ‘‘என்னடா கலர் இது… பறையோட்டு கலர் மாதிரி கண்றாவியா இருக்கு’’. அந்த சேலையின் நிறம் நீலம்.
—————————————————————
சில மாதங்களுக்கு முன்பு நண்பர்கள் நான்கைந்து பேர் இயக்குநர் பாரதிராஜாவை சந்திக்கப் போயிருந்தோம். வரவேற்பறையில் பாரதி ராஜா வாங்கிய விருதுகள் வைக்கப்பட்டிருந்தன. அவர் எத்தனையோ கணக்கில்லா விருதுகள் வாங்கியவர். ஆனால் அவர் தன் அலுவலக வரவேற்பறையில் வைத்திருந்தது இரண்டு ஷீல்டுகள்தான். ஒன்று நினைவில் இல்லை. இன்னொன்று மும்பைவாழ் முக்குலத்தோர் சங்கத்தினர் கொடுத்தது.
———————————————————–
விருதுநகர் மாவட்டத்தில் ஏழாயிரம் பண்ணை என்றொரு ஊர் இருக்கிறது. கோவில்பட்டிக்கு அருகில் இருக்கும் இந்த ஊரில் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டான். நான் பணியாற்றும் பத்திரிகைக்கு இந்த செய்தியை சேகரிப்பதற்காகப் போயிருந்தேன். அந்த மாணவனின் வகுப்பில் அவனுடன் படிக்கும் இன்னொரு பையனிடம் பேசிக்கொண்டிருந்தபோது அந்த 14 வயது பையன் சொன்னான், ‘‘அவனும் நாடாக்கமாரு, அந்த வாத்தியாரும் நாடாக்கமாரு. அப்படி இருந்தும் குத்திப்புட்டாண்ணே..’’. ‘சொந்த சாதியில் குத்திக்கொல்லக்கூடாது, வேறு சாதியாக இருந்தால் குத்தலாம்’ என்பது அவன் மண்டைக்குள் ஏற்றப்பட்டிருக்கும் நம்பிக்கை.
—————————————————————
நேற்றிரவு மேற்கு மாம்பலத்தில் நண்பனின் அறைத்தோழன் கேட்டான், ‘‘இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்குறா? சும்மா அதையேப் பேசிக்கிட்டுருக்காதீங்க’’

Advertisements

2 Responses to “இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்குறா”

 1. Metro Boy Says:

  நல்ல பதிவு
  சாதியை பெயரின் பகுதியாக பயன்படுத்தும் வழக்கம் நூறு ஆண்டுகளாக இல்லை. (என் தந்தை பிறந்த வருடம்: 1913; அவர் தந்தையின் SSLC சான்றிதழில் பெயரில் சாதி இருக்காது திண்டுக்கல் : 1900 -ம் ஆண்டு என நினைக்கிறேன்). ஐம்பதுகளில் அறுபதுகளில் நான் பள்ளியில்/கல்லூரியில் இருந்த காலங்களில் சாதி உடன் படிக்கும் மாணவர்களுக்கு தெரியாது. விடுதியில் தந்தை ஊரிலிருந்து வந்துவிட்டால் குழூஉக்குறி வைத்து சில முறை சாதி இதுவாக இருக்கலாம் என ஊகிக்கலாம். ஆனால் சாதி பற்றி பேசுவதோ, கேட்பதோ வெட்கப்படும்படியான விஷயம் என பொதுவாக மாணவர்கள் நினைத்த காலம். நான் பிறந்து வளர்ந்த கிராமத்திலே கூட, நண்பனின் வீட்டுக்கு சென்றால், இருக்கும் பகுதியைக் கொண்டு இதுவாக இருக்கலாம் என பேசிக்கொள்வது கேட்டிருக்கிறேன். பல நண்பர்களின் வீடுகளுக்கு சென்றிருக்கிறேன்; அவர்கள் என்ன சாதி என்று ஒரு கணமேனும் நினைத்துப் பார்த்ததில்லை. அது பற்றி நினைத்தாலே அநாகரிகம் என நினைக்கும் வண்ணம் சூழல் இருந்தது. அப்போதைய முதல் அமைச்சர் காமராஜ நாடார் என்று சரித்திரப் பயிற்சியில் எழுதியதற்காக என் நண்பன் முட்டியில் அடி வாங்கியது நினைவில் பசுமையாக இருக்கிறது. கலப்பு திருமணத்தைப் பற்றி பேசுவது பெருமை. முடிந்தவரை ஊக்குவிக்க வேண்டும் என்பதே பதின்ம வயதில் இருந்த பையன்கள் நினைத்தனர். நூறு ஆண்டுகளில் சாதி பிரிவினை இருக்காது என உள்ளத்தளவில் நம்பியவர்கள் நாங்கள்.
  அப்படி இருந்த தமிழ்நாடு இன்று எப்படி ஆகி விட்டது? (நான் 1972 முதல் வெளி மாநிலங்களில் வசித்து வருபவன்; இடையில் மிகச் சில ஆண்டுகள் சென்னையில் வசித்தது தவிர. இப்போதும் வெளி மாநிலமே). .
  அப்போது சாதி சங்கங்கள் நகரங்களிலே கூட இல்லையென நினைக்கிறேன். தொழில் முறை சங்கங்கள் இருக்கும்; மளிகைக்கடைகாரர்கள் சங்கம் போன்று: இதில் பெரும்பாலும் நாடார்களோ, கோமுட்டிகளோ இருக்கலாம். ஆனால் அது பற்றி பொதுவில் பேச்சு இருக்காது. அலுவல் கமிட்டியில், அனைத்து சாதிகளும் இடம் பெறும் வண்ணம் பார்த்துக் கொள்வார்கள். போகப் போக இந்த உணர்வே இருக்காது என்று நம்பியவர்கள் நாங்கள்.
  இப்போது வக்கீல்களில் இருந்து ஆசிரியர்கள் வரை,சாதி சங்கங்கள் வைத்து குரல் கொடுக்கிறார்கள்; கூச்சல் போடுகிறார்கள்; கொடி பிடிக்கிறார்கள். தம் பிரிவு இனத்தவர் உயர்வு, பங்கு, பங்கு மறுக்கப் படுவது, அவர்களை கை தூக்கி விட வேண்டும் என நினைக்கிறார்கள். அவமானம். அதைவிடக் கொடுமை: அதைப் பற்றி வெளிப்பட கூச்சமில்லாது பேசுவது.
  இப்போது ஆட்சியில் இருப்பவர் எங்களுக்கு கொஞ்சம் சீனியர் : கருணாநிதி, அன்பழகன் போன்று; அல்லது எங்கள் தலைமுறை: சிதம்பரம், துரை முருகன் போன்று. இவர்கள் பள்ளிகளில் கல்லூரிகளில் இருந்தபோது பேசிய மொழி வேறு; இவர்கள் பதவியைப் பிடித்தவுடன் அணுகும் முறை வேறு.
  இது போன்ற பதிவுகளைக் காணும் போது நினைத்துப் பார்த்திருக்கிறேன்: நிலை இவ்வளவு மோசமாகிப் போனதன் காரணம் என்னவோ ?
  இரண்டு காரணங்கள் தோன்றுகின்றன: ஒன்று திராவிட கட்சிகளே எழுபது எண்பது சதவீதம்; காங்கிரசு, கம்யூனிஸ்டுகள் சுதந்திரா/ஜனதா போன்றவை இருபது இருபத்தைந்து சதவீதம். . அவர்களே சாதி ஒழிப்பைப் பற்றி சமூக உணர்வு என்று பெரியாரிசம் பேசி நாற்காலியைப் பிடித்தவர்கள் சாதி பிரிவினைகளை தொடக்கத்தில் மறைமுகமாகவும், பின்பு நேரடியாகவும் ஊக்குவித்தது. இரண்டு அரசு வேளைகளில் ஒதுக்கீடு, அதன் காரணமாக அதன் சில கெட்ட விளைவுகள், பல நல்ல விளைவுகளை விட வீர்யமாக இருந்த கொடுமை. ,
  இது என் சொந்தப் பார்வை. உங்கள் பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
  நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.

 2. vignaani Says:

  The blogger may kindly give his reaction(s)


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: