பசி என்றால் என்ன?


உணவு தயார். கொண்டு வந்து வீட்டுக்கு நடுவில் வைத்தாகிவிட்டது. ஆனால், வீட்டில் உள்ள எல்லோருக்கும் அதைப் பரிமாற முடியாது. எனவே, சில முடிவுகள் எடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு குறைவான அளவு போதும். தின்றுவிட்டு சுருண்டு படுத்து உறங்கிவிடுவார்கள். அல்லது, வெளியில் நண்பர்களுடன் ஓடிவிடுவார்கள். அவர்களுக்கு உணவு அளவு தெரியாது. பசி தெரியாது. பாதகமில்லை. வயதானவர்களுக்கு அதிக உணவு தேவைப்படாது. அவர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. மெலிந்து, வாடி, வதங்கியிருக்கும் தேகம். கூடுதல் உணவு கொடுத்தாலும் பலனிருக்கப்போவதில்லை. வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு உணவு தேவை. சமைப்பதும், துவைப்பதும், சுத்தப்படுத்துவதும் அவள்தான். எல்லோரும் உண்டபிறகு எஞ்சியிருக்கும் உணவில் ஒரு பகுதி அவளுக்கு. கடினமான வேலைதான் என்றாலும், வீட்டில்தான் கிடக்கப்போகிறாள். ஆண்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிக வேலைப்பளு இருந்தாலும், அவளால் பணம் திரட்டமுடியாது. ஆனால், வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு அதிக உணவு கொடுத்தாகவேண்டும். காய், கறி, சோறு என்ன செய்தாலும் அவர்களுக்கு முதல் பங்கு. பெரிய பங்கு.

பசி என்பது உணவு குறித்து சிரமமான முடிவுகள் எடுப்பது.

தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (NREGA) அதிகாரிகளை எப்போதும் அவர்கள் ஈக்களைப் போல் மொய்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களில் சிலருக்கு அறுபது வயதுக்கு மேலாகிறது. சிலருக்கு எழுபதுக்கும் மேல். ஒருமுறை, இருமுறை கேட்டால் கிடைத்துவிடாது என்பதால் அதிகாரிகளைக் கிட்டத்தட்ட துரத்துவார்கள். கெஞ்சுவார்கள். சூரியன் உச்சியில் கொளுத்திக்கொண்டிருக்கும் ஆந்திரா மாநிலம். ஐந்து, ஆறு கிலோ மீட்டர் நடந்துதான் வரவேண்டும். காலில் செருப்பில்லை. மேலுக்கு ஒரு துண்டு. தலையில் ஒரு கந்தல் துணி. ‘ஐயா, எங்களுக்கும் வேலை கொடுங்கள்!’ உன்னால செய்யமுடியுமா? இப்பவே இப்படி தள்ளாடுறியே? ‘முடியும் ஐயா. என்னை நம்பி கொடுங்கள். பாறையைப் பிளந்த கைகள்.’ கைகளை நீட்டி காண்பிக்கிறார். சில சமயம் நிலத்தில் நீர் பாய்ச்சுவது போன்ற பணிகள் கிடைக்கின்றன. அல்லது, மற்றவர்களுக்குக் கிடைக்கும் அதே கடினமான பணிகள். காட்டைத் திருத்துவது, மரம் பிளப்பது, சாலையமைப்பது, இன்னபிற. நடுங்கும் கை நடுங்கியபடி கிடக்கும். மூச்சு வாங்கும். உடல் தளர்ச்சியடைந்து துவளும். நிறுத்தாமல் பணியாற்றவேண்டும். நிறுத்தினால், அபராதம் விதிக்கப்படலாம். மறுநாள் வேலை கிடைக்காமல் போகலாம். வீட்டுக்குப் போகும்போது, கையில் 70, 80 ரூபாய் கிடைக்கும் என்னும் கனவு அவர்களை மயக்கத்தில் இருந்தும் நடு்க்கத்தில் இருந்தும் மீட்டெடுக்கும்.

பசி என்பது நடுக்கத்தை மறைத்துக்கொண்டு உழைப்பது.

அந்த மகாராஷ்டிர ஆதிவாசி குடும்பத்தின் வீட்டில் எட்டு பேர். சமைக்கப்பட்ட உணவை அந்த எட்டு பேருக்கும் சமமாகப் பிரித்துக்கொடுத்தால், ஒருவருக்கும் வயிறு நிரம்பாது. எனவே, அவர்கள் ஓர் உபாயத்தைக் கண்டறிந்தார்கள். இருவருக்கு மட்டு்ம் வயிறு முட்டும் அளவுக்கு உணவு பரிமாறப்படும். மற்ற ஆறு பேர் வீட்டில் படுத்துக்கொள்வார்கள். அந்த இரண்டு பேரும் வெளியில் சென்று உற்சாகத்துடன் பணியாற்றி இரவு பணத்துடன் வருவார்கள். அடுத்த நாள் இன்னும் இரண்டு பேருக்குச் சாப்பாடு. அவர்கள் பணியாற்றவேண்டும். நேற்று வயிறு முழுக்கச் சாப்பிட்டவர்கள் அடுத்த நாள் வேலைக்குப் போகவேண்டியிருக்காது என்பதால் அவர்கள் பட்டினி கிடப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

பசி என்பது சுழற்சி முறையில் உண்பது.

ராயல்சீமாவில் வீட்டுப் பெண்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அவர்கள் கோரிக்கை, மாணவர்களுக்கான பள்ளி உணவு திங்களன்று அளவில் இரட்டிப்பாக இருக்கவேண்டும் என்பதே. ஏன் என்று கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள். ‘வெள்ளிக்கிழமைக்குப் பிறகு, சனி, ஞாயிறு இரு தினங்களும் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. திங்கள் மதியம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகம் சாப்பிட்டால்தான் அவர்களால் தாக்குப்பிடிக்கமுடியும்.’ இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். ‘எங்களால் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கமுடியவில்லை. நாங்கள் என்ன கத்தினாலும் அவர்களுக்கு எதுவும் ஏறப்போவதில்லை. பாதி மயக்கத்தில் இருக்கும் அந்தக் குழந்தைகளை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது? திங்களன்னு கூடுதல் உணவு கொடுத்தால்தான், மதியத்துக்குப் பிறகாவது வகுப்பைத் தொடரமுடியும்.’

பசி என்பது ஏக்கத்துடன் காத்திருப்பது.

பேண்ட், சட்டை அணிந்து யார் வந்தாலும் மக்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அவர் யார் எங்கிருந்து வருகிறார் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல. அடுக்கடுக்காகக் கேள்விகளால் துளைத்துவிடுவார்கள். எங்களுக்கு ஏதாவது வேலை கிடைக்குமா? எங்களுக்கு உணவு கிடைக்குமா? எங்களுக்குக் கடன் தருவீர்களா? மேலதிகாரிகளிடம் சொல்லி சிபாரிசு செய்வீர்களா? எங்களுக்கு ஏதாவது சலுகைகள் அளித்திருக்கிறார்களா? எங்களுக்குக் கொடுக்க ஏதாவது கொண்டு வந்திருக்கிறீர்களா?

பசி் என்பது அர்த்தத்தை இழப்பது.

‘முன்பு, அரிசி, கோதுமை என்று தானியங்கள் பயிரிட்டுக்கொண்டிருந்தோம். எப்படியாவது கஷ்டப்பட்டு விற்றுவிடுவோம். ஒருவேளை விற்க முடியாவிட்டால், பஞ்சம் வந்தால், நாங்கள் பயிரிட்டதை நாங்களே சாப்பிட்டுவிடுவோம். இப்போது நிலைமை மாறிவிட்டது. நாங்கள் என்ன பயிரிடவேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வதில்லை. என்ன விலையில் விற்கவேண்டும் என்பதை நாங்கள் முடிவுசெய்வதில்லை. எங்கே, எப்படிச் சந்தைப்படுத்தவேண்டும் என்பதை நாங்கள் நிர்ணயிப்பதில்லை. என்ன பூ்ச்சிமரு்ந்து பயன்படுத்தவேண்டும், எந்த அளவில் என்பதையெல்லாம் நாங்கள் யோசிப்பதில்லை. தரகர்கள் வருகிறார்கள். மிரட்டுகிறார்கள். கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்களே விதை தருகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கிறோம். அதிகாரிகளுக்குக் கீழ்படிகிறோம். பிரச்னை என்னவென்றால், நாங்கள் உற்பத்தி செய்வதை அவர்கள் கொள்முதல் செய்யத் தவறும்போது, நாங்கள் நடுங்கிப்போகிறோம். தானியங்களாக இருந்தால் உண்டுவிடலாம். பஞ்சை உண்ணமுடியுமா? அது செரிக்குமா?’ எனவே, அவர்கள் பூச்சிமருந்து உட்கொள்கிறார்கள்.

பசி் என்பது தவறான உணவை உட்கொள்வது. பசி என்பது இறந்துபோவது.

இந்தியாவில், ஒரு மணி நேரத்தில் இரு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் 17 குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி இறந்துபோகின்றன. அரசாங்கம், ஒவ்வொரு மணி நேரமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தவேண்டிய 57 கோடி ரூபாய் வரியைத் தள்ளுபடி செய்துகொண்டிருக்கிறது.

பசி் என்பது அரசாங்கத்தால் வஞ்சிக்கப்படுவது.

மும்பையில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் சேரிப்பகுதிகளில் வாழ்கிறார்கள். வீடு என்று அழைக்கப்படும் நிலையான இருப்பிடத்தில் வாழ்பவர்கள் 71 சதவீதம் பேர். ஒரே ஒரு அறை மட்டுமே கொண்ட இந்த வீடுகளில்தான் குடும்பத்தினர் மொத்தமாக வசிக்கின்றனர். ஆண்களும் பெண்களும் முதியோர்களும் குழந்தைகளும். மும்பையின் தற்போதைய சுற்றுலா கவர்ச்சி, 2 பில்லியன் டாலரில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாளிகை. முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் வசிப்பதற்காக உருவாக்கப்பட்ட வீடு இது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் உலகின் நம்பர் 1 பணக்காரராக முகேஷ் அம்பானி திகழ்வார் என்று ஊடகங்கள் ஆருடம் சொல்கின்றன.

பசி என்பது ஏற்றத்தாழ்வுகளை ஜீரணம் செய்துகொள்வது.

தனித்தனியே நியமிக்கப்பட்ட மூன்று அதிகாரபூர்மான குழுக்கள் ஒருமித்த குரலில் ஒப்புக்கொள்ளும் உண்மை இது. ‘ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 836 மில்லியன் பேர். தலித் மற்றும் பழங்குடியின மக்களில் 86 சதவீதம் பேர் ஏழைகள். 85 சதவீத முஸ்லிம்கள் ஏழைகள். உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உணவு கிடைக்கவில்லை. ஒரு விவசாயக் குடும்பத்தின் மாதாந்திர சம்பாத்தியம் 503 ரூபாய். இதில் 60 சதவீதம் உணவுக்காக செலவழிக்கப்படுகிறது.’

பசி என்பது உண்மை அறிவது.

பிரச்னையின் ஆணிவேர், விவசாயிகள் தற்கொலை அல்ல. விவசாயிகள் தற்கொலை என்பது பிரச்னையின் விளைவு. நிஜமான பிரச்னை, விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றிக்கொண்டது.

பசி் என்பது உண்மை அறிந்தும், செயலற்று இருப்பது.

0

Slumdogs Vs Millionaires: Farm Crisis and food crisis in the age of inequality என்னும் தலைப்பில் பி. சாய்நாத் நேற்று ஜெர்மன் ஹாலில் ஆற்றிய உரையின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை. இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் இது.

Advertisements

One Response to “பசி என்றால் என்ன?”

  1. webhosting christmas 2010 coupon code Says:

    What a wonderful blog. I invest hours on the internet reading blogs, about tons of different subjects. I have to to begin with give kudos to whoever created your web site and second of all to you for writing what i can only describe as an post. I honestly believe there is a skill to writing articles that only several posses and to be truthful you have it. The combination of informative and quality content is definitely very rare with the big quantity of blogs on the internet.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: