பில்லியனர்கள் வாழும் நாட்டில் ஏழைகள் இருப்பது ஏன்?


உணவு உத்தரவாதம் – வறுமைக் கோட்டுக்கு மேல் [APL], வறுமைக் கோட்டுக்குக் கீழ் [BPL] மற்றும் இந்தியன் ப்ரீமியர் லீக் [IPL] பித்தலாட்டங்கள் – பி.சாய்நாத்

படம் – http://www.thehindu.com

பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலைக் கட்டுப்பாட்டை விலக்கிய ஆணை வெளியிடப்பட்ட நேரத்தில் அது முரண்நகையான ஒன்றாக இருந்தது. டீசல் மற்றும் மண்ணெண்ணையின் கடுமையான விலை உயர்வை உள்ளடக்கிய, கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும்படியான முடிவு இது. ”அனைவரையும் தழுவிய வளர்ச்சி”யின் [inclusive growth] அவசியம் பற்றி டொரொண்டோவில் உலகத் தலைவர்களுக்கு மன்மோகன் சிங்கே உபதேசித்துக்கொண்டிருந்த வேளையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டதுதான் அதிலுள்ள முரண்நகை. மேலும், அந்த வேளையில்தான் நாமும் “உணவு உத்தரவாதம்” பற்றியும், எந்த அளவுக்கு சிறப்பான முறையில் அதை சட்டபூர்வமானதாக்க முடியும் என்றும் முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தோம். உணவுப் பொருட்களின் விலையேற்றம் 17 சதவீதத்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தபோதும், பொதுப் பணவீக்கம் இரண்டிலக்கத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்த போதும்தான் இந்த முடிவு வெளியிடப்பட்டது. எனில், இந்த வளர்ச்சியில் நாம் யாரைத் ”தழுவிக்கொள்ள” முயல்கிறோம்?

இந்த பெட்ரோலிய விலைக் கட்டுப்பாடு நீக்கம் பற்றிய செய்தி-ஊடகங்களின் எதிர்வினையோ அந்த நடவடிக்கைக்குச் சற்றும் குறைவிலாக் கொடுமையாகவே இருந்தது. கேபினெட் அமைச்சர்களே இந்த முடிவிலிருந்து விலகி நிற்பதாகக் காட்ட முயன்ற வேளையில், பெரும்பாலான பத்திரிகைகளின் தலையங்கங்களோ இதை மாபெரும் வெற்றி விழாக் கொண்டாட்டம் போலக் காட்டி முடைநாற்றத்தைக் கிளப்பின. ”இறுதியில் வெற்றியடா” என எக்காளமிட்டது ஒரு தலைப்புச் செய்தி; ”வரவேற்கத்தக்க துணிகரச் செயல்” என எட்டுக் கட்டையில் செவிப்பறை கிழித்தது மற்றொன்று. அரிதாய் சில விதிவிலக்குகள் தவிர்த்து – திங்களன்று நடத்தப்பட்ட பந்த் பெற்ற பல பத்து லட்சம் மக்களின் ஆதரவுக்கு நேர்மறாக- இந்த வெகுஜன ஊடகங்கள் விரிந்த எதார்த்த உண்மையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்திக் கொண்டன.

மறைந்த முர்ரே கெம்ப்டன் கூறி வந்தது போல, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தலையங்க ஆசிரியர்கள் செய்கின்ற வேலை என்னவென்றால், “போர் ஓய்ந்ததும் குன்று மறைவுகளில் இருந்து வெளிப்பட்டு, இறங்கி வந்து காயம்பட்டுக் கிடப்போரைச் சுட்டுக் கொல்வதே.” செய்தி ஊடகங்கள் இன்று இந்த வரையறுப்பைப் பெருமிதத்துடன் நிறுவி இருக்கின்றன. இந்த மாதத்திலேயே போபால் தொடர்பாக இப்படியும் ஒரு தலையங்கம் வந்தது. போர் ஓயும் வரை கூட இம்முறை அவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் மனித உரிமை அமைப்பினர்” என்று துயர்மிகு போபாலின் வில்லன்களாக அவர்களைச் சித்தரித்தது அந்த தலையங்கம். “போபாலில் ஒரு துணை நிறுவனத்தைத் தொடங்குவது பற்றி தனது பங்குதாரர்களிடையே பெருமையுடன் அறிவிக்கும் முன்னர் உலகின் எந்த ஒரு தொழிற்கழகமும் ஒருமுறைக்கு இருமுறை தயக்கத்துடன் யோசிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறது” என்று தனது உண்மையான துயரத்தை வெளிப்படுத்தி துக்கம் கொண்டாடியது. ”யூனியன் கார்பைட்” என்ற சொல்லே அத் தலையங்கத்தில் ஒரு முறை கூட இடம் பெறவில்லை. சுடுகிறார்கள் .. தப்பிச் செல்லுங்கள் கெம்ப்டன். [Roll over Kempton. The shooting’s on]

பத்திரிகைகளில் அன்றாட முக்கிய செய்திகளுக்கு ஊடாக விலையேற்றத்துக்கு எதிரான தொடக்க நிலை எதிர்ப்புகளும் சற்றே இடம்பிடித்தன. நமது மிகப் பெரிய ஆங்கில தினசரியில் மூன்று, நான்கு பத்திகளும் சில விரற்கடை அகலமும் கொண்ட தாராளமான இடத்தை அச்செய்தி ஆக்கிரமித்தது. மும்பையில் ஒரு மாடல் அழகியின் தற்கொலைச் சாவு செய்திக்கு, ஒரு விளம்பரம் கூட இடம்பெறாத முழுப் பக்கத்தை அதே தினசரி அடுத்தடுத்த இரு நாட்களில் அற்பணித்திருந்தது. சர்வதேச கிரிகெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு நமது உணவு மற்றும் வேளாண் அமைச்சர் தேர்வு செய்யப்பட்டது பற்றிய செய்தி சென்ற வாரம் பெரிதாய்க் கருத்தேதும் கூறப்படாமல் கடந்து சென்றது. தேசத்தின் கவனம் முழுவதும் உணவுப் பொருள் விலையேற்றம் மற்றும் உணவு உத்தரவாதம் பற்றிய விசயத்தில் குவிந்திருந்த அதே நேரத்தில்தான் இதுவும் நிகழ்ந்தது.

திரு சரத் பவார் பிரதமரிடம் தனது அமைச்சக வேலைப் பளுவைக் குறைக்கக் கோருவார் என்று அவரை மேற்கோள் காட்டி எழுதப்பட்டது. (AFP, New Delhi, July 2) “அமைச்சுப் பணியில் எனக்கு உதவுவதற்குக் கூடுதல் நபர்களை நியமிக்க நான் பரிந்துரைப்பேன். நான் மூன்று அமைச்சர்களைக் கேட்டிருந்தேன். ஆனால் அவர்கள் எனக்கு ஒரே ஒருவரை மட்டுமே அளித்திருக்கிறார்கள்… நான் எனது வேலைகளில் சிலவற்றைக் குறைக்கக் கோருவதன் மூலமாக நாம் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்” என செய்தியாளர்களிடையே பவார் கூறினார். எனினும், “அரசாங்கத்தில் எனக்குள்ள பணிகள் பாதிப்படைவதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றும் அவர் நமக்கு உறுதியளிக்கிறார். அப்..பா, நிம்மதியாக இருக்கிறது. உணவு மற்றும் வேளாண் அமைச்சரை உணவு மற்றும் வேளாண் துறையுடன் இணைப்பதையும் தழுவியதாக தனது ’அனைத்தும் தழுவிய வளர்ச்சி’யை விரிவுபடுத்திக்கொள்ள பிரதமருக்கு இதுவே தக்க தருணமாக இருக்கலாம். (அல்லது நாம் அத்துறையுடன் கிரிக்கெட்டையும் இணைத்துவிடலாம்.) ஒரே துறைக்கு நான்கு அமைச்சர்கள் …. இது உண்மையிலேயே அனைவரையும் தழுவிய வளர்ச்சிதான்.

இருப்பினும் எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டை நீக்கிய செயல் ஒன்று விடாமல் எல்லாப் பொருட்களின் மீதும் தனது ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே உணவுப் பொருள் விலையேற்றம் சுருள்கத்தி போல வீசியடிக்கும் அதே நேரத்தில் இதுவும் சேர்ந்துகொள்கிறது. அதை இடைமறித்துப் பேசும் அமைச்சர்கள் மற்றும் ஐ.மு.கூ. வெட்டிப் பேச்சாளர்களின், “ஒருசில மாதங்களின் விலையேற்றம் படிந்தே தீரும்” என்ற தொடர்ந்த வெற்று சவடால்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.

உணவுப் பொருள் உத்தரவாத மசோதா ஒட்டுமொத்தப் புதுப்பித்தலுக்கு உட்படுத்தப்படலாம் என்ற செய்திகள் இப்போது வருகின்றன. அவ்வாறாயின் அது வரவேற்கத் தக்கது என்றே நினைக்கிறேன் – அது எப்படியும் முந்தைய தயாரிப்பு முயற்சிகளின் அளவுக்குப் படுமோசமாக இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக ஒன்றைப் பாருங்கள். அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு [Empowered Group of Ministers] ஃபிப்ரவரி மாதம் கூடியது. ”முன்வைக்கப்பட்ட தேசிய உணவு உத்தரவாத மசோதாவை சட்டமாக்குவது தொடர்பாக விவாதிக்க” அவர்கள் கூடியிருந்தனர். இந்த அமைச்சர்கள் குழு முடிவு செய்த முத்தான முதல் விசயம் இதுதான்: 2.1(a) “உணவு உத்தரவாதம் என்பதன் வரையறுப்பு குறிப்பாக உணவு தானியங்கள் (கோதுமை, அரிசி) பற்றியது என்ற அளவுக்கு வரம்பிடப்பட வேண்டும்; அது ஊட்டச்சத்து உணவு உத்தரவாதம் (nutritional security) என்ற விரிந்த பொருளில் இருந்து துண்டிக்கப்பட வேண்டும்.”

ஊட்டச்சத்து உணவு உத்தரவாதம் என்பதில் இருந்து துண்டிக்கப்பட்ட உணவு உத்தரவாதமா? ஊட்டச்சத்து உணவு உத்தரவாதம் என்பது “விரிவானதொரு விஷயம்” என்பதை அதே சொற்றொடர்களே ஏற்கின்றன என்பதைக் கவனியுங்கள். அவ்வாறு இருக்க அவை இரண்டையும் எதற்காகப் பிரித்துப் பார்க்க வேண்டும்?

கிலோ மூன்று ரூபாய் விலையில் 35 கிலோ அரிசி, அதுவும் மக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும், என்பதுதான் உணவு உத்தரவாதமா? சுகாதாரம், ஆரோக்கியம், சத்துணவு, வாழ்வாதாரம், வேலை, உணவுப் பொருட்களின் விலை இப்படி உணவு உத்தரவாதத்தைத் தீர்மானிக்கும் வேறெந்தக் காரணிகளுமே இல்லையா? இந்த உணவு உத்தரவாதம் தொடர்பான விவாதத்தில் இருந்து எரிபொருள் விலையேற்றத்தையும் கூட நாம் துண்டித்து விடலாமா? அல்லது வேண்டுமென்றே ஒழித்துக்கட்டப்படும் பொது வினியோக முறையையும்; கோதுமை, பருப்பு வகைகள், எண்ணை வகைகள் என எல்லா உணவுப் பொருட்களிலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துகொண்டிருக்கும் முன்பேர வர்த்தகம் தோற்றுவிக்கும் பேரழிவுகளையும் கூட இந்த உணவு உத்தரவாதம் தொடர்பான விவாதத்தில் இருந்து துண்டித்துவிடலாமா?

தானே முன்வைக்கும் உணவு உத்தரவாதம் தொடர்பாக எவ்வளவுக்கு எவ்வளவு செலவைக் குறைக்க முடியும் என்பதற்கான வழியைத் தேடி அலைகிறது அரசு என்பதே உண்மை. பட்டினியை வரையறுப்பது பட்டினி கிடப்போரின் எண்ணிக்கை அல்ல; மாறாக, அரசு அதற்காகச் செலவிட விரும்பும் தொகைதான் அதைத் தீர்மானிக்கிறது. அதன் விளைவுதான் வ.கோ.கீ.யின் ஆகக் குறைந்த எண்ணிக்கையைப் பெருவதற்கான இந்த முடிவிலாத் தேடல். அரசைப் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்ட மூன்று கமிட்டிகளுமே வறுமை பற்றி செய்திருந்த மதிப்பீடுகள் அரசின் மதிப்பீட்டை விடப் பாரதூரமான அளவு அதிகமாய் இருந்தன. ஆளும் மேட்டுக்குடிகளின் உலகக் கண்ணோட்டத்துடன் பெரிதும் ஒத்துப்போன டெண்டுல்கர் கமிட்டி கூட கிரமாப்புற வறுமை 42% அளவுக்கு உயர்ந்திருப்பதாக்க் காட்டியது. (பலவீனமானதும், எளிதில் தகர்ந்துவிடக் கூடியதுமான அடிப்படையில் அமைந்த உண்மை இது. இருப்பினும், இது அரசின் மதிப்பீட்டைவிட அதிகம்)

என்.சி. சக்சேனா தலைமையிலான வ.கோ.கீ வல்லுனர் குழுவின் மதிப்பீட்டின்படி இது 50%. அதே நேரத்தில், முறைசாராத் துறைத் தொழில்களின் தேசிய ஆணையம் தனது அறிக்கையின் முதல் பக்கத்தில் 83 கோடியே 60 லட்சம் இந்திய மக்கள் (நமது மக்கள் தொகையில் 77 சதவீதத்தினர்) ரூபாய் 20 அல்லது அதற்கும் குறைவான தொகையில் ஒருநாள் பொழுதைத் தள்ளுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. இதை ஒத்துக்கொள்ளுவது என்பதன் பொருள் பட்டினிக் கொடுமையைப் போக்க மேலும் சில ஆயிரம் கோடிகளைச் செலவிடுவது என்பதாகும். ஆனால் இந்த அரசின் வரையறுப்போ மிக எளிமையானது. பட்டினி கிடப்பவனுக்கெல்லாம் நம்மால் சோறுபோட முடியாது. எனவே, நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குப் பட்டினிப் பட்டாளத்தை வெட்டிச் சுருக்க வேண்டியதுதான் என்பதே அது.

”காசு இல்லை” என்று கைவிரிக்கும் போக்குதான் அனைத்திலும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். புதியதொரு விமான நிலையம் அமைக்க இந்த நாடு ரூ.10,000 கோடி செலவு செய்கிறது. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த ரூ.40,000 கோடியோ அதற்கும் மேலோ கூட செலவு செய்யப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.60,000 கோடிகளை மகிழ்ச்சியாய் இழக்க முடிகிறது. மத்திய பட்ஜெட்டில் ஆகப்பெரும் பணக்காரர்களுக்கும் பெரும் தொழிற்துறைக்கும் மூன்றே மூன்று செலவினங்களின் கீழ் ரூ.5 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்ய முடிகிறது. ஆனால், பட்டினி கிடப்பவர்களுக்குக் கொடுப்பதற்கு மட்டும் பணம் கஜானாவை விட்டுக் கிளம்ப மறுக்கிறது. பொது வினியோக முறையை அனைவருக்குமானதாக்க அப்படி என்ன செலவாகிவிடும்? எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் கிலோ ரூ.3 விலையில் அரிசி/கோதுமை கிடைக்கச் செய்ய வேண்டுமானால் வரும் பட்ஜெட்டில் உணவு மானியத் தொகையாக ரூ.84,399 கோடியை ஒதுக்க வேண்டியிருக்கும் என மதிப்பிடுகிறார்கள் பர்வீன் ஜா மற்றும் நிலச்சல் ஆச்சார்யா. இந்த ஆண்டு பட்ஜெட்டில் பணக்காரர்களுக்குச் செய்த வரித் தள்ளுபடிகளில் ஆறில் ஒரு பங்குதான் இந்தத் தொகை. (இதற்கு ஆகும் கூடுதல் செலவு ஆண்டுக்கு ரூ.45,000 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லை என்கின்றன பிற மதிப்பீடுகள்.)

உலகப் பட்டினிப் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் 66ம் இடத்தைப் பிடித்துள்ள ஒரு நாட்டில்; குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையில் சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஒரு நாட்டில்; ஜ.நா-வின் மனிதவள முன்னேற்றப் பட்டியலில் பூட்டான், லாவோசுக்கும் கீழாக 134வது இடத்தில் இருக்கும் ஒரு நாட்டில் பட்டினிக் கொடுமையைப் போக்கப் பணம் ஒதுக்க முடியாதென்றால் அதன் விலை – அல்லது விளைவு – என்னவாக இருக்கும்?

உலகப் பெரும் பணக்காரர்களாக, ஃபோப்ஸ் பட்டியலில் 49 பேர் இடம் பிடித்திருப்பதும் இதே நாட்டில் இருந்துதான். (அந்த பெரும் பணக்காரர்களில் பெரும்பாலோர் பல வடிவங்களில் இந்த அரசாங்கத்திடம் இனாம் வாங்குகிறார்கள். இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர்பான இனாம்களைப் பெற்றவர்கள் சிலர்) தனது குடிமகன் பட்டினி கிடக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய ஒரு முயற்சி கூட எடுக்க முடியாது என்றால், அப்படிப்பட்ட அரசு அதிகாரத்தில் இருக்கவும் வேண்டுமா? இந்தியக் குடிமக்கள் அனைவரின் உணவுக்கான உத்தரவாதம் என்பது எங்களது குறிக்கோளுமல்ல, விருப்பமும் அல்ல என்பதையாவது குறைந்தபட்சம் நேர்மையாக வெளிப்படுத்துமா இந்த அரசாங்கம்? தனது பெயருக்கு நேர் எதிரானதைச் சட்டபூர்வமானதாக்கும் ஒரு மசோதாவுக்கு “உணவு உத்தரவாத மசோதா” என்ற போலிப் பெயர் எதற்கு? அனைவரும் பெற முடியாத ஒன்றை ‘உரிமை’ என்ற பெயரால் எவ்வாறு அழைக்க முடியும்?

ஒரு தெரிவிப்பு: வ.கோ.கீ. வல்லுனர் குழுவில் நானும் ஒரு உறுப்பினராய் இருந்தேன். அக்குழுவின் அறிக்கையுடன் இணைக்கப்பட்ட குறிப்பு ஒன்றில், உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் கண்ணியமான வேலை ஆகிய நான்கு துறைகளில் வாய்ப்பு அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும் என விவாதித்து இருக்கிறேன். அரசின் கொள்கையை வழிநடத்தும் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அவ் விவாதம் அமைந்திருக்கிறது. நமது மக்களின் உரிமைகள் அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் அமைந்திருக்கிறதே அன்றி அவர்களின் வாங்கும் சக்தியால் அல்ல. வ.கோ.கீழ் (BPL) ஆகவோ வ.கோ.மேல் (APL) ஆகவோ இருப்பதனால் அல்ல. ( IPL ஆசாமியாக இருப்பதனாலும் அல்ல.) உரிமைகள் அதன் வரையறைப்படி பொதுவானவை, பிரிக்க முடியாதவை.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த உணவு உத்தரவாத மசோதாவில் காணப்படும் அம்சங்கள் நமது வழிகாட்டு நெறிமுறைகளை முன்னெடுத்துச் செல்கின்றனவா? அல்லது பலவீனப்படுத்துகின்றனவா? அரசியல் சட்டப்படியான உரிமைகளைக் கரைத்துக் காணாமல் போகச் செய்து தயாரிக்கப்பட்ட இந்த நீர்த்துப்போன சரக்கை ஒரு முற்போக்கான சட்டம் போல் முன்வைப்பது ஒரு மோசடி வேலை. செயல்படக் கூடிய ஒரே பொது வினியோக முறை என்பது அனைவருக்குமானதாக இருக்கும் ஒன்றே. அனைவருக்கும் பொதுவான முறைமைக்கு சற்றே நெருக்கமாய் செயல்பாட்டு உள்ள – கேரளா, தமிழ்நாடு – மாநிலங்களில் மட்டுமே இந்த பொது வினியோக முறை சிறப்பாய் செயல்பட்டிருக்கிறது.

150 மாவட்டங்களில் “பரீட்சார்த்தமாக” பொது வினியோக முறையின் மூலம் உணவு தானியங்களைப் (அதாவது, பிரதானமாக கோதுமை, அரிசி) பெறும் வாய்ப்பை “அனைவருக்குமானதாக” [universal] செய்து பார்ப்பது என்ற பேச்சு தற்போது அடிபடுகிறது. கருத்தளவில் இது ஒரு படி முன்னேற்றமாகத் தோன்றினாலும் நடைமுறையில் இது தவறு என்பது நிரூபிக்கப்படும். இது மாறுவேடத்தில் வரும் ”இலக்கைச் சென்றடையும்” [targeting] வரம்பிடப்பட்ட செயல்பாடே தவிர வேறல்ல. “யுனிவர்சல்” மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு உணவு தானியங்கள் வெகுவாய்க் கடத்தப்படும்போது இந்த வகை ஏற்பாடு ஆட்டங்காணும். பரீட்சார்த்த நடவடிக்கைகளைத் தவிர்த்து இறுதி இலக்குக்கே நேரடியாய்ச் செல்வது நல்லது. உணவு உத்தரவாதத்தை அனைவருக்குமானதாக ஆக்குங்கள்.
________________________________________________________

– பி. சாய்நாத், நன்றி தி ஹிந்து – 07 Jul 2010
– தமிழாக்கம்: அனாமதேயன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: