இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்


‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர். பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.

காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை அலசி ஆராயும் முன், காஷ்மீர் மாநிலம் கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி ஒரு திறந்தவெளி இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரில் 3,00,000 இந்திய இராணுவச் சிப்பாய்களும், தேசியத் துப்பாக்கி படைப் பிரிவைச் சேர்ந்த 70,000 சிப்பாய்களும், மத்திய போலீசு படையைச் சேர்ந்த 1,30,000 சிப்பாய்களும் – ஆக மொத்தம் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலப் போலீசுப் படை இந்த எண்ணிக்கையில் சேராது.

காஷ்மீரில் ‘அமைதி’யை ஏற்படுத்த இத்தனை இலட்சம் துருப்புகள் தேவை என்றால், எத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் இருக்கக்கூடும் என உங்கள் மனம் கணக்குப் போடலாம். அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள், அங்கே வெறும் 660 தீவிரவாதிகள்தான் இருப்பதாக சமீபத்தில் இந்திய இராணுவம் அறிக்கை அளித்துள்ளது.

‘‘தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தை முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை; இளைஞர்களும் தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; போராடுபவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கிடையாது; மாறாக, தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்; இப்போராட்டத்தை போலீசைக் கொண்டே கட்டுப்படுத்திவிட முடியும்; இராணுவம் தேவையில்லை” எனச் சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர். உண்மை இப்படியிருக்க, அம்மாநிலத் தலைநகர் சீறிநகரை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?

ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?

****

தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு, எப்படிபட்ட அநீதியை காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வருகிறது தெரியுமா?
1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர். அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.

அம்மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில் “தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.

காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது, மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான், இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும், இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால், கொலையும், கொள்ளையும், பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.
காஷ்மீர்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ‘காணாமல் போனவர்களின்’ புகைப்படங்களைப் பார்ர்த்து விம்மியழும் காஷ்மீரத்துத் தாய்

இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் இந்து தேசிய வெறிதான் இப்பிரச்சினையின் மூல காரணமாக இருக்கிறது என்பதும்.

இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தாமல் மறுத்தது; இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது; காங்கிரசு கும்பல் தனது சுயநலனுக்காக அம்மாநிலத்தில் நடத்திய ஆட்சி கவிழ்ப்புகள், தேர்தல் மோசடிகள் – இவைதான் 1980-களின் இறுதியில் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தன.

வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை. இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதற்குக் காரணம் பாகிஸ்தானா, இல்லை இந்திய தேசியவாதிகளா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அம்மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கிப் போவதற்காக 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கப் போவதாக அக்கூட்டணி ஆட்சி அறிவித்தது. அமர்நாத் யாத்திரை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வருடாந்திர நிகழ்ச்சி நிரலாக மாறிப் போனதால், காஷ்மீர் மக்கள் பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். உடனே, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவிற்கு ஆட்களைத் திரட்டிவந்து எதிர் போரட்டத்தை நடத்தியதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது ஒரு சட்டவிரோத பொருளாதார முற்றுகையைத் திணித்தது. காஷ்மீர் மக்கள் இம்முற்றுகையை முறியடிக்கும் வண்ணம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பது என்ற போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான பின்னர், நில ஒதுக்கீடு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இப்போராட்டத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. இந்தச் சந்தர்ப்பவாத ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் முகமாக, “காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்; அத்துமீறல்கள் குறித்த உண்மை கண்டறியும் குழு நிறுவப்படும்” என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஒமர் அப்துல்லா. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது ஒருபுறமிருக்க, காஷ்மீர் மக்களின் மீதான இராணுவத்தின் பிடியும், அடக்குமுறையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதையும் மக்கள் கண்டனர்.

ஷோபியான் என்ற சிறுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது; கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஜஹித் ஃபாரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைச் சுடுவது போல எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; கடந்த ஏப்ரல் மாதம் தேசியத் துப்பாக்கிப் படைப் பிரிவினர், மூன்று தொழிலாளர்களை எல்லைப் பகுதிக்குக் கடத்திக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை எல்லை தாண்டி வரமுயன்ற தீவிரவாதிகளாக ஜோடனை செய்த சம்பவம் – இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரும், துணை இராணுவப் படைகளும், காஷ்மீர் போலீசாரும் நடத்திய பல பச்சைப் படுகொலைகள்தான் இப்போராட்டத்தின் தூண்டுகோலாக அமைந்தன.

‘‘துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகு, மக்களின் விடுதலை உணர்வும் செத்துவிடும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களிலும், பப் கலாச்சாரத்திலும் மூழ்கிப்போய் விடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், எங்களின் விடுதலை வேட்கை கொஞ்சம்கூடக் குறையாமல் இருப்பதைத்தான் இப்போராட்டம் காட்டுகிறது” என காஷ்மீர் மக்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பள்ளத்தாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஷாத் சலீம்.
காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலை உணர்வுதான் இப்போராட்டத்தின் அடிப்படையாக உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க, இப்போராட்டம் பற்றிப் பலவித கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் மைய அரசும் அதனை நத்திப் பிழைக்கும் தேசியப் பத்திரிகைகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு பரப்பி வருகின்றன. “விரக்தியடைந்த இளைஞர்களின் போராட்டம்” என ஒருபுறம் நையாண்டி செய்துவரும் அக்கும்பல், இன்னொருபுறமோ, “லஷ்கர்-இ-தொய்பாவிடம் 200 ரூபாய்யை வாங்கிக்கொண்டு நடத்தப்படும் கூலிப் போராட்டம்” என அவதூறு செய்து வருகிறது.

சோபுர் நகரில் கடந்த ஜுன் 29 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான். “அவன் அப்பாவி கிடையாது; கூலிக்காக வேலை செய்யும் போக்கிரி” என அச்சிறுவனைப் பற்றிக் கூறியிருக்கிறார், உள்துறை அமைச்சகச் செயலர். இப்படி வக்கிரமும், காலனியாதிக்க ஆணவமும் நிறைந்த இந்திய அரசை வெளியேறக் கோருவது எந்த விதத்தில் தவறாகிவிடும்?

பதாமாலூ என்ற ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள், துப்பாக்கியை நீட்டியபடியே அவனை நோக்கிப் பாய்ந்து வந்து, “உன்னைக் கொன்று விடுவோம்” என மிரட்டியுள்ளனர். அரண்டு போய் வீட்டுக்குள் ஓடிப்போன அந்தச் சிறுவன் பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகிப் போனான். ஐந்து வயதுச் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டும் இந்திய இராணுவம் காஷ்மீரில் யாரைக் காப்பாற்ற நிற்கிறது?

இந்தக் கேள்வியை காஷ்மீருக்கு வெளியேயுள்ள பெரும்பாலான “இந்தியர்கள்” எழுப்ப மறுக்கிறார்கள். “அவர்கள் காஷ்மீர் பற்றி பொய் சொல்கிறார்கள்; தங்களின் சொந்தப் பொய்யைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்” என இத்தகைய இந்தியர்களைப் பற்றிக் கூறுகிறார், டெல்லியில் வாழும் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்.
காஷ்மீர்

காஷ்மீர் பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரியக்கூடாது என்ற நோக்கில், இந்திய இராணுவம் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாட்டுகளைக் கண்டித்து பத்திரிக்கையாளகர் நடத்தும் ஆர்பாட்டம்

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 800-க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தி வரும் இண்டிஃபதா போராட்டத்தைத்தான் இது நமக்கு நினைவூட்டுகிறது. சமூகம் தழுவிய ஆதரவோடு நடைபெற்று வரும் இப்போராட்டங்களை, இராணுவ அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஒடுக்கிவிட முடியும் என ஆளுங்கட்சி காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.-வும் ஒரேவிதமாக எண்ணுகின்றன.

ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தங்களைத் தற்காத்துக் கொள்ள இராணுவம்-துணை இராணுவப் படைகள் மீது கற்களை வீசியெறியும் இளைஞர்கள், மரண தண்டனைகூட விதிக்கப்படும் சாத்தியமுள்ள, “அரசின் மீது போர் தொடுத்த” குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இந்த அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தையும் தியாக உணர்வையும் 200 ரூபாய் கூலிப் பணத்தால் ஊட்டிவிட முடியுமா? விடுதலை உணர்வால் உந்தித் தள்ளப்படும் அந்த இளைஞர்கள் தமது மனங்களிலிருந்து பயம் என்பதையே அகற்றி விட்டார்கள் என்கிறார், ஹுரியத் மாநாட்டு கூட்டணியைச் சேர்ந்த தலைவரான சையத் ஷா கீலானி.

காஷ்மீரில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால்கூட, “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதோடு, காஷ்மீர் போலீசு துறையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குழுவைக் கலைப்பது; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது” ஆகிய குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மைய அரசு முன்வர வேண்டும்.

ஆனால், மைய அரசோ, இந்த குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது. இதற்குப் பதிலாக, பொருளாதார சலுகை என்ற பெயரில் அஞ்சையும் பத்தையும் தூக்கியெறிந்து, இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என இந்திய ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கின்றனர். விடுதலை உணர்வை பணத்தால் விலை பேசும் இந்திய அரசின் முட்டாள்தனமான ஆணவம் காஷ்மீரில் பலமுறை தோல்வி கண்டிருக்கிறது.

‘‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை. இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.

இந்து தேசியவெறி கொண்ட ஓட்டுக்கட்சிகள், அவர்களை நத்திப் பிழைக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற துரோகிகள், போலி மோதல் கொலைகள் மூலம் பணத்தையும் பதவியையும் அள்ளிக் கொள்ளத் துடிக்கும் காக்கிச் சட்டை கிரிமினல்கள் – ஆகியோர்தான் காஷ்மீர் இந்திய அரசின் காலனியாக நீடிப்பதால் இலாபமடையப்போகும் பிரிவினர். போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Advertisements

2 Responses to “இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்”

 1. reverse phone lookup Says:

  I love your wp format, where did you get a hold of it?

 2. raspberry ketone made in us Says:

  I actually along the lines of your blog.. very nice colors
  & theme. Did you design this website yourself or did you hire you to do it for you?
  Plz response back as I’m searching to construct my own blog and would
  for example to discover out where u got this from. thanks


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: