பிறை பார்த்தல் என்னும் பிற்போக்குத்தனம்


இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ அல்லது அடுத்த வாரமோ, இஸ்லாமியர்கள் புனித மாதமாகக் கருதும் ரமலான் தொடங்கி விடும். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து, பூமியில் மோதவிருக்கும் ஒரு விண்கல், மோதும் நேரத்தினை மிகத் துல்லியமாக (வினாடிகள் உட்பட) அறிவிக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துள்ளது. ஆனால், ஒரு மாதத்தின் தொடக்கத்தைத் தீர்மானிப்பதில் இஸ்லாமியர்களுக்கிடையே பெரும் குழப்பம்.

ஒவ்வொரு ஊரிலும் டவுன் காஜி என்று ஒருவரும், சென்னையில் தமிழகத் தலைமை காஜி என்று ஒருவரும் இருப்பார்கள். அவர்கள்தான், பிறை பார்த்து, மாதத்தின் தொடக்கத்தை அறிவிப்பார்கள். இவர்களைத் தவிர ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பின் தலைமையும், அவர்கள் தனியாக பிறை பார்த்து, மாதத் தொடக்கத்தை அறிவிப்பார்கள். இங்கே ஏற்படும் குழப்பம்தான், ஒரே ஊரில் ஒரு பகுதியில் நோன்பு தொடங்கியும், இன்னொரு பகுதியில் நோன்பு தொடங்காமலும் இருக்கும் காரணம்.

தலைப்பிறையை கண்ணால் பார்த்தால் மட்டுமே, அதனை மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளவேண்டும் என்று சில ஹதீஸ்கள் இருப்பதாக சொல்வார்கள். முகம்மது வாழ்ந்த காலத்தில், அறிவியல் வளர்ச்சி இல்லாத நிலையில், இந்த நடைமுறைப் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இன்று அறிவியலின் வளர்ச்சியின் மூலம் தலைப்பிறையை மிக எளிதாகக் கணிக்க முடியும். கணிக்க முடியும், ஆனால் கணிக்கக் கூடாது என்று இவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது “வரூஊம், ஆனா வராது” காமெடிதான் நினைவுக்கு வருகின்றது.

கணிக்கக் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் முக்கியமான காரணம், முகம்மது ‘கண்ணால் பார்த்தே முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்; அதனை மீறக்கூடாது என்பதாகும். முகம்மது சொன்ன பல விஷயங்களை இன்றைய சூழலுக்கு ஒத்துவராது என்று கூறிவிட்டு, தற்போதைய சூழலுக்கு தகுந்தவாறு செய்துவருகின்றனர். உதாரணத்திற்கு, தனியாகவோ, இருவர் மட்டுமோ பயணிக்க முகம்மது தடை விதித்துள்ளார்; பயணம் செய்யும்போது மூன்று நபர்கள் பயணிக்க அனுமதி கொடுத்துள்ளார். ஆனால், இன்றைய சூழலில் பயணத்தின் போது, இத்தகைய தடையை யாரும் பொருட்படுத்துவதேயில்லை.

முகம்மதின் வாழ்க்கை நெறிமுறைகளை, அப்படியே பின்பற்ற வேண்டுமானால், இன்றும் வெளியில் செல்லவேண்டுமானால், கூட இருவரை அழைத்துச் செல்லவேண்டும்.அது அன்றைய சூழல், இன்றைய சூழலுக்கு அது பொருந்தாது என்று கூறிவிட்டு செல்ல முடிகின்றது. ஆனால் பிறை விஷயத்தில், அறிவியல் வளர்ச்சியை புறம்தள்ளி, ஹதீஸை முன்னிலைப்படுத்தி தங்களது பிற்போக்குத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர்.

அடுத்தது, உலகம் முழுதும் ஒரே நேரத்தில் மாதம் தொடங்காது; உலகின் ஒரு பாதி பகலாக இருக்கும்போது; இன்னொரு பாதி இரவாக இருக்கும். அதனால், ஒரே நேரத்தில் நோன்பு வைப்பதோ, தொழுவதோ சாத்தியமில்லை என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் ‘beating around the bush’ என்று சொல்லுவார்கள், அதற்கு மிகச்சரியான உதாரணம், இவர்களது இந்த உதாரணம்தான். அனைவரும் கேட்பது, ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு நாட்களில் மாதம் தொடங்குகின்றதே; இவர்கள் சொல்லுவது, ஒரே நேரத்தில் மாதம் தொடங்காது.

கிருத்துவர்கள் உலகம் முழுவதும் டிசம்பர் 25 அன்று கிருஸ்துமஸ் கொண்டாடுவார்கள். சர்வதேச தேதிக் கோட்டினை (International Date Line), அளவீடாகக் கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் கிருத்துவர்கள், தங்கள் நாட்டு நேரப்படி (Local Time Zone), கிருஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.

அதுபோல், இஸ்லாமியர்களும் தங்கள் மாதங்களின் தொடக்கத்தை, சர்வேதச தேதிக் கோட்டின் அடிப்படையில், உள்ளூர் நேரப்படி கணக்கிட்டுக்கொள்ளலாம். ஆனால், சர்வேதச தேதிக் கோடு ஒன்று இருப்பதையே மறைத்துவிட்டு, சவூதியை அளவீடாகக் கொண்டு கணக்கிடும்போது பல குழப்பங்கள் வரும் என்று கூறி குழம்பிக்கொள்வார்கள்.

துருவப் பிரதேசங்களில் அமைந்திருக்கும் நாடுகளான நார்வே, பின்லாந்து முதலியவற்றில், ஆறு மாதங்கள் பகலாகவும், ஆறு மாதங்கள் இரவாகவும் இருக்கும். அத்தகையப் பகுதிகளில், பிறை பார்த்து மாதத் தொடக்கத்தைக் கணக்கிட முடியாது. அப்பொழுது, வேறு நாடுகளில் பிறை தெரிந்தால், நார்வேயில் ரமலான் தொடக்கத்தை கணக்கிடலாம் என்பார்கள்.

வருடத்திற்கு 12 மாதங்கள் என்ற “அதிசயத்தை”, குர் ஆன் மூலம் உரைத்த அல்லாஹ்விற்குத் தெரியாதா, தான் படைத்த பூமியில் நார்வே போன்ற நாடுகளும் இருக்கும், அவற்றிற்கு இத்தகைய விதிகள் எல்லாம் பொருந்தாது என்று? அரேபியா என்னும் சிறு நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு, அவர்கள் வாழ்வியலுக்குப் பொருந்தும் அளவிற்கு கூறப்பட்ட சில விஷயங்கள், உலகம் முழுமைக்கும் என்று கூறுவது இங்கே பல்லைக் காட்டிக் கொண்டிருக்கின்றது. இதனை சரி செய்வதற்காகவேணும், அறிவியல் கணிப்புகளை பின்பற்றுகிறார்களா என்று பார்ப்போம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: