காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க!


காஷ்மீரில் ஜூன் 11லிருந்து ஆகஸ்ட் 8க்குள் மட்டும் 51 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. மக்கள் வீதியில் இறங்கி, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரை நோக்கிக் கல்லெறிவது என்பது பாகிஸ்தானின் தூண்டுதலால் நடப்பது என்று இந்திய அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மைகளை அறியும் நோக்கத்தோடு ‘காஷ்மீரில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 14 ஆம் நாள் லயோலா கல்லூரியில் பி.எட் அரங்கில் அரங்கக் கூட்டம் ஒன்றினை தகவல் தொழிற்நுட்பத் துறையினர் மற்றும் இளைஞர்கள் இணைந்து செயல்படும் Save Tamils Movement ஏற்பாடு செய்திருந்தது. சிறீநகரிலிருந்து வந்திருந்த “ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பு” என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குர்ரம் பர்வேஸ் (Khurram Parvez, Program Coordinator of ‘Jammu and Kashmir Coalition of Civil Society’) அவர்களது உரை இது.

காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க!

காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றக் கோரி நேற்று (ஆகஸ்ட் 13, 2010) இங்கே (சென்னை) உள்நாட்டு அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதாகிய 52 தோழர்களுக்கு காஷ்மீர் மக்களின் சார்பாக நன்றியையும், வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையில் நடக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காஷ்மீர் மக்களாகிய நாங்கள் மிக நுட்பமாகக் கவனித்து வருகின்றோம். எங்களுக்கு எழுச்சியூட்டிய போராட்டங்களுள் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஒன்று. கடந்த ஆண்டு தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட துயரங்களுக்காக நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். இலங்கை அரசு ஒரு பிரபாகரனைக் கொன்று விடலாம். ஏன், இன்னும் பல பிரபாகரன்களைகூடக் கொன்று குவிக்கலாம். ஆனால் தமிழர்தம் விடுதலை வேட்கையைக் கொல்ல முடியாது. இது காஷ்மீரிகளுக்கும் பொருந்தும். இந்திய படையினர் காஷ்மீர் மக்களைக் கொன்று குவிக்கலாம். ஆனால், காஷ்மீர் மக்களின் விடுதலை வேட்கையைக் கொல்ல முடியாது.

அடிப்படையில் காஷ்மீர் மக்களின் போராட்டம் என்பது இருத்தலின் வெளிப்பாடு. காஷ்மீரிகளோ, தமிழர்களோ இம்மண்ணில் இருக்கும்வரை அவர்தம் விடுதலை வேட்கையும் உயிர் கொண்டிருக்கும். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை தாகத்தை அழிப்பதற்கான வெடிகுண்டையோ துப்பாக்கி ரவையையோ ஒடுக்குமுறையாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க!

ஜம்மு காஷ்மீரில் 1990க‌ளிலிருந்து, 70,000க்கும் அ‌திக‌மான‌ பொதும‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர், 8,000 பேர் காணாமல் போயுள்ள‌ன‌ர். காஷ்மீரில் உள்ள‌ 6,71,000 இராணுவ‌, துணை இராணுவ‌, காவ‌ல் துறையின‌ரின் பெரும் ப‌குதி காஷ்மீரின் ப‌ள்ள‌தாக்கு ப‌குதியில் உள்ள‌ பொதும‌க்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்துவ‌தில் தான் உள்ள‌தே த‌விர‌ எல்லை பாதுகாப்பில் அல்ல‌. மேலும் இராணுவ‌ம் இன்று க‌ல்வி நிலைய‌ங்க‌ள், ம‌ருத்துவ‌ம‌னைக‌ள், வ‌ணிக‌ வ‌ளாக‌ங்க‌ள், உண‌வ‌க‌ங்க‌ள், விளையாட்டு மைதான‌ங்க‌ள், க‌டைவீதிக‌ள் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் நீக்க‌ம‌ற‌ நிறைந்துள்ள‌து.

த‌ற்போதைய‌ நிலையில் இராணுவ‌ம் ம‌ற்றும் துணை இராணுவ‌க் குழுக்க‌ள் எல்லாவ‌கையான‌ வ‌ன்முறைக‌ளையும் காஷ்மீர் ம‌க்க‌ள் மீது ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌து. பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, அடித்து துன்புறுத்தி சித்த‌ர‌வ‌தை செய்வது, க‌ண்ணிவெடி வைப்பது, காரணமேயின்றி கைது செய்வது, ம‌னித‌க் கேட‌ய‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவது, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது, க‌ட்டாயப்‌ப‌டுத்தி வேலை வாங்குவது, காணாம‌ல் போக‌ச் செய்வது, கொலை செய்வது என அனைத்துவகையான வ‌ன்முறைக‌ளையும் இந்திய இராணுவ‌மும் துணை இராணுவ‌க் குழுக்க‌ளும் ம‌க்க‌ள் மீது ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌து. இது போன்ற‌ கொடுமைக‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌ல் மிக‌ நீண்ட‌ ஒன்று.

ச‌ன‌வ‌ரி 2004லிருந்து ந‌வ‌ம்ப‌ர் 2008 வ‌ரையிலான‌ கால‌த்தில் ம‌ட்டும் (மும்பை தாக்குத‌லுக்கு முன்ன‌ர் வ‌ரை) 6588 பொதும‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இந்த‌ கால‌க‌ட்ட‌த்தைத்தான் இந்தியாவும், பாகிசுதானும் அமைதிக் காலம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டன. அமைதிக் காலம் தவிர்த்த போர்க் காலங்களில்தான் கொலைகளின் எண்ணிக்கை பெருமளவாக இருக்கும். துரதிஷ்டவசமாக, ஜம்மு காஷ்மீரில் அமைதிப் பேச்சுவார்த்தை என்பது தண்டனை பயமில்லாமல் பொதுமக்களை கொலைசெய்யும் நடைமுறையை மறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. மக்கள் போராட்டங்களுக்கு எதிர்வினையாக அவர்களைக் கொலை செய்வது என்பது போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறையாமல் தொடர்கின்றது.

ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்கள் உலக அரசியல்களையும், தங்களைச் சுற்றி நடக்கும் பிராந்திய புவிசார் அரசியலையும் கருத்தில் கொண்டே தங்களது போராட்ட முறைகளைத் தீர்மானிக்கின்றனர். மாறி வரும் உலகச் சூழலில் பெரும் திரளான பொதுமக்கள் ஒன்று கூடி தங்களை ஒடுக்குகின்ற இந்திய அரசை எதிர்த்து அமைதியான ஆயுதமற்ற போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் அவர்களின் இந்த அமைதிவழிப் போராட்டத்திற்கு இந்திய அரசு ஆயுதப்படைகளைக் கொண்டு பதிலளிப்பதால், பொதுமக்கள் படுகாயங்கள் அடைவதும், உயிரிழப்பதுவும் மக்களின் வலியை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகின்றன.

kashmir-protest

வன்முறை, அமைதிவழிப் போராட்டம் என்ற எந்த வகையில் மக்கள் போராடினாலும் இந்திய அரசு அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றது. இதனால் மக்கள் தங்களது அதிருப்தியைக் காட்டுவதற்கான எல்லாக் கதவுகளும் அடைக்கப்படுகின்றன. ஆயுதம் தாங்கிய போராட்ட வழிகளிலிருந்து பெரும் திரளான மக்கள் ஒன்று கூடி ஆயுதம் இல்லாமல் போராடுவதை அரசு அங்கீகரிக்க மறுப்பதுடன் கொடூரமாக ஒடுக்குவது என்பது இந்திய அரசு இந்தப் பிரச்சனையை எவ்வாறு கையாளுகின்றது என்பதையும் காட்டுகின்றது.

தற்பொழுது நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் இன்றைய அரசின் மீதான கோபம் மட்டுமல்ல, 1989லிருந்து காஷ்மீர் மக்களை இராணுவம் மற்றும் துணை இராணுவம் மூலம் சிறைபடுத்தி வைத்திருப்பதையும், அதற்கு துணை செய்யும் தொடர்ச்சியான வன்முறையையும்,1947 ஆம் ஆண்டிலிருந்து காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டத்தை நசுக்குவதையும் எதிர்ப்பதும் தான். இந்திய அரசு காஷ்மீர் பிரச்சனைக்கு புதுமையான தீர்வைத் தருவதாகக் கூறியுள்ளது. ஆனால் கடந்த கால சம்பவங்களை உற்று நோக்கினால், இந்தியாவின் அணுகுமுறை என்பது மேன்மேலும் இராணுவமயமாக்கல் என்பதாகவே இருந்துள்ளது. அரசியல் ரீதியாக மக்களையோ அல்லது சுதந்திரத்திற்காக போராடும் தலைமையையோ அரசு அணுகியதேயில்லை. காஷ்மீர் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சுயநிர்ணய உரிமை குறித்து அரசு இது வரை பரிசீலித்தது கூட இல்லை.

இந்திய அரசு எல்லா பிரச்சனைகளைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறுகின்றது. ஆனால் மக்களின் விருப்பமான சுய நிர்ணய உரிமையைப் பற்றி மட்டும் பேசுவதே இல்லை. இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் ஒரு பிரச்சனை (problem) அல்ல, இது ஒரு சச்சரவான(conflict zone) பகுதி. இந்தியா காஷ்மீரை இராணுவமயப்படுத்துவதன் மூலம் காஷ்மீர் நிலத்தையும், காஷ்மீரில் உள்ள முக்கியப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வளங்களைத் தனது கட்டுக்குள் வைத்துள்ளது; நீதித் துறை, கல்வி நிலையங்கள், ஊடகம் போன்ற ஜனநாயகத் தூண்கள் செயலிழக்க வைத்துள்ளது. இதில் இந்தியாவின் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே சிறப்பாக பணியாற்றுவதைக் கண்டு இந்தியா பெருமை கொள்ளலாம். அது தான் இந்திய இராணுவம்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல் தலைவர்களின் கட்டுப்பாட்டின்படி செயல்படும் இந்திய இராணுவத்தால்தான் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக நீடிக்கின்றது. இந்தியப் படையினர் இந்துத்துவ தேசியவாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, கடந்த மே மாதத்தில் 100 கிராமப் பாதுகாப்பு குழுக்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. இந்துக்களின் தற்காப்புக்காக ஆயுதக் குழுக்கள் அமைக்கிறோம் என்ற பிரச்சாரங்களின் முலம் இந்தப் பிரச்சினைக்கு மதச்சாயம் பூசுகிறது இந்திய இராணுவம்.

குடிமை மற்றும் அரசியல் உரிமைகளைச் சகித்துக்கொள்ளாமை:

காஷ்மீரில் இராணுவ நிர்வாகத்தை உறுதிப்படுத்த ஒரு வழியாகவே மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுகின்றன. மனித உரிமை மீறல்களைக் கிஞ்சித்தும் சகித்துக் கொள்ளமாட்டோம் என்று இந்திய அரசு திரும்பத் திரும்ப உறுதியளித்துள்ளது. ஆனால், ‘இந்தியாவே வெளியேறு, திரும்பிப் போ’ என்றும் ’இந்தியாவே, காஷ்மீரைவிட்டு வெளியேறு’ என்று வீதிகளில் முழங்கும் மக்களை இந்தியப் படைகள் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவதன் மூலம் அவர்கள் வன்முறையின்றி அமைதிவழியில் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவதைக் கிஞ்சித்தும் தாங்க முடியாதவர்களாக இருக்கின்றனர் என்பதைப் பார்க்க முடிகின்றது.

காஷ்மீர் விடுதலையைக் கோரும் தலைவர்கள் இளைஞர்களிடம் வன்முறையைத் தூண்டுகிறார்கள் என்று உமர் அப்துல்லா ஜூன் 24, 2010 அன்று சொன்னார். அதைத் தொடர்ந்து, அமைதியான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த தலைவர்கள் மீது இந்தியப் படைகள் அடக்குமுறையை ஏவினார்கள். துணை இராணுவப் படையால் கொல்லப்பட்டவர்களுக்காக அழுது கொண்டு, கோபத்தோடு வீதிகளில் பேரணியாகச் செல்லும் மக்கள் எப்போதும் ஆயுதமேந்தியப் படைகளைக் கொண்டே ஒடுக்கப்படுகின்றார்கள். ஊரடங்கு உத்தரவை மீறியதற்காகவும், காவல்துறையின் சோதனைச் சாவடிகளைத் தாக்கியதற்காகவும் தண்டிக்கப்பட வேண்டியவர்களைத்தான் பாதுகாப்பு படையினர் சுட்டனர் என்று சொல்கிறார் இந்தியாவின் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை. இதன்மூலம் சி.ஆர்.பி.எப் மற்றும் காவல்துறையின் கொடூரமான செயல்களை நியாயப்படுத்துகிறார். இது, இந்தியப் படைகள் இந்திய அரசின் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்றிருப்பதையே காட்டுகின்றது. மேலும், இராணுவ ஆட்சியை மக்கள் எதிர்ப்பதைக் குற்ற நடவடிக்கையாகப் பார்க்கும் இந்திய அரசின் போக்கைச் சுட்டிக்காட்டுகின்றது.

kashmir_police_harassment

ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் இந்தியப் படையினரின் சொல்லும், செயலும் மக்களின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பயங்கரவாதத்திற்கு இணையான தேசத்துரோகமாக சித்தரிக்க முயல்வதாகத் தோன்றுகின்றது. அமைதியான போரட்டங்களில் பங்குபெறும் ஆண்களையும், பெண்களையும் துப்பாக்கியால் சுடுவதன் மூலம் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை மேற்கொள்கின்றனர். காஷ்மீரில் கல்லெறிவதென்பது கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு செயல். அதை வன்முறையென்று சொல்கின்றார்கள். அரசியல் ரீதியாகக் கோரிக்கைகளை எழுப்புவதற்கான வழிகள் திட்டமிட்ட முறையில் அடைக்கப்பட்டதால், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆத்திரத்தின் வெளிப்பாடே கல்லெறிதல். ஆதிக்கம் செலுத்துவதற்காக அரசு பயன்படுத்தும் கொடூரமான வழிமுறைகளை கல்லெறிவதோடு ஒப்பிட முடியாது.

விடுதலையைக் கோரும் எண்ணற்ற தலைவர்கள் வீட்டுக் காவலிலும், தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்கூட போராட்டங்கள் எதுவும் நடத்தமுடியாதவாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சிறீநகர் வந்து, மனித உரிமை மீறல்களைக் கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மீண்டும் உறுதி அளித்துக் கொண்டிருந்தபோது சுமார் நூறு தோழர்களுடன் போராட்டம் நடத்த முனைந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதே இந்தியப் பிரதமர்தான் 2008ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஒரு கருத்தை சொன்னார், ‘தேர்தலுக்குப் பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகப் பேசுவார்கள்; அதன் பிறகு, பிரிவினைவாதத் தலைவர்களெல்லாம் தேவையற்றவர்களாகிவிடுவார்கள்’ என்று.

இராணுவம் மற்றும் துணை இராணுவத்தின் செயல்கள் குறித்து கவனிப்பதும், அதற்கு பொறுப்பேற்கவும் அரசுக்கு அக்கறை இருப்பது போல் தோன்றவில்லை. போராட்டங்களில் பங்கேற்கும் சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களையும், அரசியல் தலைவர்களையும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் (Public Safety Act – PSA) கைது செய்கின்றார்கள். அறிவிக்கப்படாத ஊரடங்குநிலை நிலவுகின்ற காஷ்மீரில், முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் கொடுக்காமல், பின்விளைவுகள் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் பாதுகாப்புப் படையினர் செயல்படுகின்றனர். அரசியல் தலைவர்களின் அழைப்பை ஏற்று மக்கள் மேற்கொண்ட ஒத்துழையாமை இயக்கத்தை பயங்கரவாதிகளால் தூண்டிவிடப்பட்ட பயங்கரவாத எழுச்சி என்று நவம்பர் 2009 இல் சித்தரித்துப் பேசினார் லெப். ஜெனரல் பி.எஸ். அகர்வால். 2008 மற்றும் 2009 இல் நடந்த அமைதியான போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினர் மக்கள்திரளை நோக்கிச் சுட்டதால் போராட்டங்கள் மரணத்தை ஏற்படுத்துவதாக மாறிப் போயின. வலைத்தளங்களில் பதிவு செய்யப்படுகிற எதிர்ப்புகளை ’வலைதளப் பயங்கரவாதம்’ என்று முத்திரைக் குத்தி கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

தடுப்புக் காவலிலும், கைது செய்யப்பட்டும் இருக்கும் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள், காஷ்மீர் விடுதலையைக் கோரும் தலைவர்கள் மற்றும் சிறுவர்களின் முழு எண்ணிக்கை யாரிடமும் இல்லை. காவல்துறையினர் சிறைக்காவலில் இருப்பவர்களிடமும், கைது செய்யப்பட்டிருப்பவர்களின் விடுதலையை வேண்டுபவர்களிடமும் லஞ்சம் கேட்பது மற்றும் பலவந்தமாகப் பணம் பறிப்பது முதலிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசுடைய இராணுவம், துணை இராணுவம் மற்றும் காவல் துறையின் அடக்குமுறையை எதிர்க்கும் குடிமைச் சமூகத்தின் ஒரு சாராரை மிரட்டுவதற்கும், பயமுறுத்துவதற்கும், அடக்குவதற்கும் உறுதி செய்யப்படாத சந்தேகத்தின் அடிப்படையில் தடுப்புக் காவல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுகின்றன.

சூலை 7, 2010 அன்று ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும், மனித உரிமைப் பாதுகாவலருமான வழக்கறிஞர் மியான் குயோம் (Mian Qayoom) பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்பதன்மூலம் எந்தவித ஆதாரமும் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து இரண்டு வருடம் வரை தடுப்பு காவலில் வைக்கமுடியும். ஒருநபரால் அமைதி மற்றும் ஒழுங்கு குறையும் என்று அரசு கருதினால், இந்த சட்டத்தின் மூலம் அவரைக் கைது செய்து இரண்டு வருடம் தடுப்புக்காவலில் வைக்க முடியும். தனது மனித உரிமை செயல்களுக்காகவும், அதிலும் குறிப்பாகத் தடுப்புக் காவலிலும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும் சட்டரீதியான ஆலோசனைகள் வழங்கியதாலும், இந்திய அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்காக வாதிடுவதாலும், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து வாதிடுவதாலும், இந்திய இராணுவ, துணை இராணுவத்தின் குற்றங்களை விசாரிப்பதனாலும், சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு தெரிவித்ததாலும், காஷ்மீர் ஒரு “சச்சரவான நிலப்பகுதி”(disputed territory) என அறிவித்ததாலுமே குயோமை கைது செய்துள்ளார்கள். சூலை 18, 2010 அன்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், மனித உரிமை பாதுகாவலருமான வழக்கறிஞர் குலாம் நபி சகாகீனும் (Ghulam Nabi Shaheen) பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறைவில்லாமல் கொல்லப்படும் பொதுமக்கள்:

2010 ச‌ன‌வ‌ரியிலிருந்து ஆக‌ஸ்ட் வ‌ரையிலான‌ கால‌க‌ட்ட‌த்தில் ம‌ட்டும் 89 பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இதில் 71 பேர் இந்திய‌ ஆயுத‌ப்ப‌டையினால் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனால் இன்ன‌மும் எங்க‌ளை (பொது ம‌க்க‌ளை) வ‌ன்முறை செய்வ‌தாக‌வும், இந்திய‌ இராணுவ‌ம் அமைதியின் வ‌டிவ‌ம் என்றும் கூறி வ‌ருகின்ற‌ன‌ர்.

இராணுவ‌ ஆட்சி?

இந்திய‌ அர‌சு த‌ற்பொழுது ந‌டைபெற்று வ‌ரும் போராட்ட‌ங்க‌ளை காஷ்மீருக்குள் காஷ்மீரிகள் நடத்தும் போராட்டம் என்பதனை மறைக்க முயல்கின்றனர். அதே ச‌ம‌ய‌த்தில் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் இராணுவ‌ம் த‌ன‌து ப‌டைக‌ளை அதிக‌ரித்தும், ப‌ல‌மாக‌ வேரூன்றியும் வ‌ருகின்ற‌து. இந்திய அரசு, இராணுவம் மற்றும் துணை இராணுவத்தின் அடக்குமுறை செயல்களைக் கண்டு கொள்ளாமலும் அல்லது கட்டுப்படுத்த முடியாமாலும் உள்ளது. ஒருபுறம் “காஷ்மீர் மக்களைப் பாதுகாப்பதற்கே இந்திய இராணுவப்படை” என்று கூறிக் கொண்டே மறுபுறம் இந்திய அரசின் பாதுகாப்பு நலன்களுக்காகப் பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டு கொல்லப்படுவதை நியாயப்படுத்துகிறது. எமது “பாதுகாவலர்கள்” விநோதமானவர்கள். அவர்கள் எப்பொழுதும் எங்களை துப்பாக்கி இல்லாத பயங்கரவாதிகளாகவும் எதிர்கால விரோதிகளாகவுமே பார்க்கின்றனர். மொத்தத்தில் இந்தியாவைப் பாதுகாப்பதற்கு காஷ்மீரில் இராணுவ அடக்குமுறை தேவை என்பதாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது.

காஷ்மீரில் நிலவும் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (PSA) , சச்சரவுப் பகுதி சட்டம் (Disturbed Areas Act), ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces Special Powers Act – AFSPA) போன்றவை எல்லாம் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு முரணானவை. இந்த சட்டங்களெல்லாம் இந்திய இராணுவத்தையும், துணை இராணுவக் குழுக்களையும் சர்வதேச மனித உரிமை சட்டங்களிடமிருந்து பாதுகாக்கின்றன. 2009 பிப்ரவரி 26 அன்று முதலமைச்சராகப் பதவியேற்ற பின் ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ நீக்கப்படும் என அறிவித்தார் உமர் அப்துல்லா. இதை ஆயுதப்படைத் தரப்பு கடுமையாக எதிர்த்தது. இந்த சட்டத்தை நீக்குவது ‘பிற்போக்குத்தனமானது’ எனவும், ‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களின் பாதுகாப்பு இதனால் பாதிக்கப்படும்’ எனவும், இது பயங்கரவாதத்தை மேலும் ஊக்குவிக்கும் எனவும் கூறியது.

விடுதலையை விரும்பும் தலைவர்களுடன் சுயாட்சி பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ நீக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தார் உமர் அப்துல்லா. ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை’ நீக்குவது சட்டரீதியாக மட்டுமல்லாமல் அரசியல்ரீதியாகவும் மக்களுக்கு சுதந்திரமாக செயல்பட அவசியமாகும். ஆனால் இப்போது, அந்த சட்டத்தை நீக்குவதைவிட, அதில் சில மாற்றங்களை மட்டும் கொண்டுவருவது மக்களுக்குப் பாதுகாப்பானது என்று காஷ்மீரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இறுதியாக…

இந்திய அரசு நிர்வாகத்தாலும், இராணுவத்தினாலும் வன்முறைச் சோதனைகளை மேற்கொள்ளும் பரிசோதனைக் கூடமாக காஷ்மீர் உள்ளது. காஷ்மீரில் இராணுவ ஆட்சி நடக்கின்றது என்பதனை இந்திய அரசும், சர்வதேச சமூகமும் எங்கும் சொல்வதேயில்லை. ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் இராணுவமயமாக்கல் ‘உள்நாட்டுப் பிரச்சனை’ என்று கூறப்படுகின்றது. ஆனால், இந்தப் பகுதி சர்வதேச சச்சரவு மற்றும் போர் பகுதியின் விதிகளுக்குள் வரவேண்டிய பகுதி. இந்திய அரசின் திட்டமிட்ட மனித உரிமை மீறல்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் சர்வதேச சமூகமும் கண்டிக்காமல் மௌனியாக இருந்து வருகின்ற‌து. காஷ்மீர் பிரச்சனையும் மற்ற சர்வதேசப் பிரச்சனைகளைப் போன்றதே. இதில் சர்வதேச சமூகத்தின் அவசரமான கவனமும், ஒரு முடிவும் தேவை. தற்பொழுது இங்கு ஒரு சர்வதேச மேற்பார்வையாளர்களும் இல்லை. சமூக நீதியின்படி ஒரு சரியான முடிவுக்கு வருவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.

சர்வதேச சமூகத்தின் கவனத்திலும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் பேச்சுவார்த்தையிலும், காஷ்மீர் குறித்த எந்த உடன்படிக்கையிலும் காஷ்மீரி மக்கள் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ளப்படுவதேயில்லை. தற்பொழுது உள்ள நிலை தொடர்ந்து இந்திய அரசு அமைதி வழியில் போராடி வருபவர்களைத் திட்டமிட்டு கடுமையாக அடக்குமானால், அதே பொதுமக்களை மீண்டும் ஆயுதங்களை கையிலெடுக்க நிர்ப்பந்திக்கின்றது என்றே பொருள். இதனால் மீண்டும் வன்முறை சக்கரம் சுழலும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: