சாதி வாரியான கணக்கெடுப்பு இந்திய தேசத்தில் பிளவுகளை நிரந்தரமாக்கப் போகிறது


– இது இந்தியா டுடேயின் அலறல், சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராகத் திரள்வீர் இது rediff.com இன் முறைப்பாடு, இன்னும் இந்திய முதலாளித்துவ முட்டுக் கொடுப்பு ஊடகங்கள் பலவற்றில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிரான கூச்சல், மற்றொரு பக்கம், ஆளும் கட்சியிலேயே வேறுபாடுகள், சாதி வாரியான கணக்கெடுப்பு இன்றைய தேவை, அத்தகைய ஒரு கணக்கெடுப்பே இன்றைய தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட சமூகங்களின் எண்ணிக்கையை அல்லது விழுக்காட்டை நமக்குக் காட்டும், சமூக நீதியை உரிமைகளைப் பகிர்ந்தளிக்க உதவும் என்று ஒரு பிரிவும், தொடர்ச்சியாக சாதிய மனநிலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவே இத்தகைய கணக்கெடுப்புப் பயன்படும் என்று மற்றொரு பிரிவும் குமுறிக் கொண்டிருக்கிறது. (கணக்கு எடுக்கலைன்னா சாதியை அப்படியே விட்டுருவீங்களா தோழர்களே?)

இவற்றில் எது உண்மை, சாதி வாரியான கணக்கெடுப்பு உண்மையில் சமூகத்திற்குப் பயன்களை வழங்குமா? அல்லது எதிர்மறை விளைவுகளை உருவாக்குமா என்கிற ஒரு கேள்வி நமக்கு முன்னால் நிற்கிறது. இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர் நாம் ஒரு பின்னோக்கிய பயணம் செய்தாக வேண்டும், அது ஒரு மிகக் கொடுமையான, அவலமான சமூகப் பயணம். அந்தப் பயணத்தின் போது எறியப்பட்ட குப்பை மேடுகளில் தான் இன்றைய கார்ப்பரேட் இந்தியாவின் அலங்கரிக்கப்பட்ட முதலாளித்துவ முகம் போலியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது, கோரமான கற்பனைகளால் எழுதி உருவாக்கப்பட்ட வேதங்களாலும், மந்திரங்களாலும் அடித்து நொறுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கை மீண்டும் கட்டி எழுப்ப முடியாத நிலையில் சிதைந்து கிடக்கிறது. சமூக நீதியும், விடுதலையும் பெற்று விளங்கிய மனிதர்களை வேதங்கள் தமது வர்ணக் கட்டுமானங்களால் வீழ்த்திய வரலாற்றுப் பயணம் அது. உளவியல் வழியாக மீட்சி பெற இயலாத அளவுக்கு இந்தச் சமூகத்தைப் பீடித்திருக்கும் சாக்காட்டு நோயான சாதிக்கு முகவுரை எழுதிய வேதங்களும், உபநிதங்களும் இன்றும் கார்ப்பொரேட் இந்தியாவின் அரசியல் மந்திரமாக இருப்பது தான் முதலாளித்துவத்தின் மற்றொரு வடிவமான பார்ப்பனீயத்தின் வெற்றி.

1223726898292_caste_t அரச ஆட்சிக் காலங்களின் தனது உடல் உழைப்பற்ற இருப்பை உறுதி செய்யவும், வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்ளவும் குறிப்பிட்ட சமூகங்களால் வரைவு செய்யப்பட்ட மதங்களின் கடவுளரின், பெயரிலான அடுக்கு முறைத் தேர்வும், தொடர்ச்சியான பரப்புரையும் மனிதர்களின் வாழ்க்கை முறையை, சமூகத்தின் பிரிவுகளை ஒரே இடத்தில் தக்க வைத்திருக்கத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து முடித்தது, உடல் உழைப்பை நம்பிப் பயிர் செய்தும், கால்நடைகளைப் பராமரித்தும் காடு கழனியில் அலைந்து திரிந்தவன் சமூகத்தின் கடை நிலைக்குத் தள்ளப்பட்டது அப்படித்தான். அப்படியான மனிதர்களின் உழைப்பைக் கொள்ளையடித்து உண்டு கொழுத்துத் தன்னை உயர்ந்தவன் என்று சொன்னவன் முதல் நிலைக்கு வந்ததும் அப்படித்தான்.

பல ஆயிரம் ஆண்டுகளாய் மனிதனைப் பார்ப்பனனாகவும், பள்ளனாகவும், பறையனாகவும் மாற்றுவதற்குக் கடவுளரும் பாவம் கூடவே இவர்களோடு உழைக்க வேண்டியதாயிற்று, “மாற்றம் ஒன்றே மாறாதது” என்று சொன்ன மார்க்ஸ் கூட இங்கு பிறந்திருந்தால், பாவம், “ஒரு அடுக்கில் இருந்து இன்னொரு அடுக்குக்குப் போக இயலாது” என்று கடைசியில் ஒப்புக் கொண்டே செத்திருப்பார். அத்தனை கடினமான ஒரு சமூகப் பயணம் வரலாற்றில் நிகழ்ந்தது.

dalitwomen போராட்டங்கள் தான் உலக இயங்கியலில் உழைக்கும் மக்களின் கைகளில் இருந்த ஒரே மூலதனமானது, சிறிதும் பெரிதுமாய்ப் போராடிய மக்களை வழி நடத்த சில கலகக்காரர்கள் வந்தார்கள், சில அறிவாளிகள் வாழ்நாள் முழுதும் உழைத்தார்கள், போராடினார்கள், இவ்வுலகில் இன்னொரு மனிதனுக்குக் கிடைக்கிற அத்தனை வாய்ப்புகளையும், வசதிகளையும் பயன்படுத்தி மேம்பட்ட வாழ்வு வாழ நானும் நீயும் தகுதி பெற்றவன் தான் என்று சொன்னார்கள், நம்ப மறுத்தார்கள் மக்கள், இல்லை நாங்கள் அடிமைகள் என்றார்கள், வேதங்களில் எழுதி இருப்பதாய் அழுது புரண்டார்கள், வேதங்கள் ஏமாற்றுக்காரர்களின் ஓய்வறையில் எழுதப்பட்டதால் உண்மையின் பக்கங்களில் பொய் குடியிருந்தது.

கணக்கெடுப்புப் பிளவுகளை உருவாக்கி விடும் என்பவர்களே, நீங்கள் சொல்வது சரியென்றால் இந்த மேன்மையான சமூகத்தில் பிளவுகளே இல்லை என்றல்லவா ஆகி விடும், உண்மையில் நமது சமூகத்தில் பிளவுகள் இல்லையா? ஏறத்தாழ வர்ணத்தின் உற்பத்திப் பொருளாகிப் போன இருபத்து ஓராயிரம் பிளவுகள் இந்திய நிலப்பரப்பில் இருப்பதாக கணக்கு எடுக்காமலா கண்டறிந்தீர்கள் என் அன்புக்குரிய கார்ப்பரேட் கனவான்களே, ஊடக அறிவாளிகளே, உங்கள் வியாபாரத்துக்கு எடுத்தால் உண்மையாகவும், நியாயமாகவும் இருக்கும் சாதியை அரசு எடுத்தால் அநியாயமா? இருபத்து ஓராயிரம் உயிர்ப் பிரிவா இந்தியாவில் இருக்கிறது என்றால் இல்லை, ஒரே உயிர்ப் பிரிவு ” ஹோமோ செப்பியன்ஸ்” என்று தான் அறிவியல் சொல்கிறது. இருபத்து ஓராயிரம் பிளவுகள் இருப்பதாகச் சொல்லும் வேதங்களின் மீது தான் இந்த தேசத்தின் நீதி பிரமாணம் செய்யப்படுகிறது, ஏழுமலையானின் காலடிகளில் அடகு வைக்கப்பட்டுத் தான் இந்த தேசத்தின் அறிவியல் செயற்கைக் கோள்கள் வழியாக விண்ணில் செலுத்தப்படுகிறது. இவற்றை எல்லாம் நீங்கள் ஒரு போதும் கேள்வி கேட்கவில்லையே.

women-empowerment உலகத்தில் புனைவு செய்யப்பட்ட அல்லது பழக்கப்படுத்தப்பட்ட கற்பனைகளில் மிகக் கொடிய ஒரு கற்பனை பிறப்பால் மனிதனை எடை போடுதல் அல்லது தகுதி வழங்குதல், அத்தகைய கற்பனையின் கட்டுமானத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்கிற நோக்கில் ஒரு போதும் அந்தக் கற்பனையை உருவாக்கியவர்களாலும், பயன் அடைபவர்களாலும் உணரவோ, எதிராகச் செயல்படவோ இயலாது, இது வருணத்தின் கட்டமைப்பால் கற்பனையால் முற்றிலும் ஒடுக்கப்பட்டுச் சிதைந்து போன மனிதர்களின் கைகளில் மட்டுமே இருக்கிறது. சாதி இந்தியாவில் அறிவியல் கண்டுபிடிப்புக்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை போடுகிறது, தாங்கள் வசிக்கும் வீதிகளில் காலணிகளைத் தலையில் போடா வேண்டும் என்று சொல்கிறது, சுவர்களைக் கட்டி மறைத்துக் கொள்கிறது, கல்வி என்று அவர்களின் இருக்கக் கூடிய ஒரே வாய்ப்பைக் கடைசி வரிசைக்குத் துரத்துகிறது,உயிரோடு எரிக்கிறது, மலம் தின்ன வைக்கிறது, விரட்டி விரட்டிக் கொல்கிறது.

இப்படியான ஒரு நேரத்தில் சமூகம் முரண்பாடுகளையும், போராட்டங்களையும் கொண்ட ஒரு அமைதியற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது, இவற்றை எல்லாம் வென்று மீண்டும் மனிதனாக வேண்டும் என்கிற முதன்மையான நோக்கத்தைக் கணக்கில் வைத்த சிந்தனையாளர் பலர் இட ஒதுக்கீடு என்கிற மருந்தை வருணக் கிருமிகளால் முற்றிலும் நோய்வாய்ப்பட்ட ஒரு சமூகத்தை நோக்கி வழங்கிய போது கிடைத்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு மேலேறினார்கள் காலம் காலமாய்க் கீழே கிடந்த மனிதர்கள், தகுதி, திறமை என்று கூச்சலிட்டது. தகுதியையும், திறமையையும் முடிவு செய்வது தொடர்ச்சியாக வழங்கப்படும் வாய்ப்பு என்கிற உண்மையை அவர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற் போல மறந்து போனது விபத்தாக இருக்க முடியாது. ஆகவே அது திட்டமிடுதலின் முதல் படி என்று தான் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

dalit-boy-by-ritesh-uttamchandani

இட ஒதுக்கீடு முற்று முதலான பொருளாதாரக் காரணி இல்லை, அது சமூகக் காரணி, அது உளவியல் காரணி. காலம் காலமாக உளவியல் வழியாக குறிப்பிட்ட சமூகங்களை அல்லது மனிதர்களை நீ கடை நிலையானவன் என்று மடத் தனமாகக் கட்டி அமைத்த உளவியலை உடைக்கப் பயன்படும் காரணி. இத்தகைய உளவியல் எத்தனை கொடுமையானது என்பதை அதனால் பாதிப்புகளை அடைந்தவர்களால் மட்டும் தான் உணர முடியும்.இட ஒதுக்கீடு இலவசமாக வழங்கப்படும் சலுகை அல்ல, மறுக்கப்பட்ட வாய்ப்பினை வழங்குகிற சமூக நீதி, பறித்தவரும், இழந்தவரும் கூடிப் பேசி இழந்தவரின் சார்பாக குறைந்த அளவில் முடிவு செய்த திட்டம், கல்வி ஒன்றுதான், தேர்வு ஒன்றுதான், வாய்ப்பு மட்டும் தான் இட ஒதுக்கீடு, அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கப்பட்ட இப்போது வழங்கப்படும் வாய்ப்பு. அந்த வாய்ப்பை திறமையற்றவர்களுக்கான சான்றிதழாகச் சித்தரிக்கும் ஊடகங்கள் குற்றவாளிகள், சமூகக் குற்றவாளிகள்.

dalit_clip_image002

நோயைக் கண்டறிந்து குணப்படுத்த வேண்டுமென்றால் உடலை அறுத்துத் தான் ஆக வேண்டும், வெளிப் பூச்சுகளால் சாதி நோய் இல்லாத கார்ப்பரேட் இந்தியாவை உருவாக்கிய முதலாளித்துவத்தின் கொடுங்கரங்களுக்கும் அவற்றின் கனவு விளம்பரங்களுக்கும் கணக்கெடுப்பு பெரும் பின்னடைவைக் கொடுக்கலாம், உண்மையின் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாத ஒரு இக்கட்டான நிலையை சாதிக் கணக்கெடுப்பு வழங்கும் போது வல்லரசுக் கனவுகளில் இருக்கும் இந்தியாவால் உண்டு கொழுக்க இயலாது தான். நான் பிறந்த போதினில் என் கூடவே பிறந்தது சாதி, நான் போகிற பாதையில் எல்லாம் என்னைத் துரத்தித் துரத்தி வந்தது சாதி, சமூகம், திருமணம், கல்வி, வேலை, வீடு, வாசல், இறப்பு என்று எல்லா இடங்களிலும் நீக்கமுற நிறைந்து இருக்கும் சாதியைக் கணக்கில் மட்டும் வைக்காதே என்று சொல்வது எந்த வகையில் நியாயம், எத்தனை மூடிகள் போட்டு மறைத்து வைத்துக் கொண்டு நடமாடினாலும் உங்களைத் தேடிக் கண்டுபிடித்து உங்கள் சாதி இன்னதென்று சொல்லி விடும் தேசத்தில் கணக்கெடுப்பு சாதிய மனநிலையைத் தொடர உதவும் என்கிற வாதம் அத்தனை வலிமையானதாகத் தெரியவில்லை.

know-your-rights

இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த தேசத்தைத் தனது உழைப்பால் பட்டை தீட்டி வளர்த்த உழைக்கும் மனிதனின் உரிமையும், பொருளாதார சமூக விடுதலை பெற்ற வாழ்க்கையும் இந்தக் கணக்கெடுப்பில் ஒளிந்து கிடக்கிறது என்று பேரறிஞர் அம்பேத்கர் கண்டறிந்தார், சட்டமாக்கினார், முதலாளித்துவ நச்சுப் பாம்புகளின் புகலிடமான பார்ப்பனீயம் அதைத் தொடர்ந்து ஒளிக்கப் பார்க்கிறது, குறுகிய காலத்தில் வழங்கப்பட்ட வாய்ப்புகளில் அறிவு வெள்ளம் ஒளியாய்ப் புகுந்து உழைக்கும் மக்களின் ஒரு புதிய தலைமுறையை வீரியம் மிகுந்த அறிவுப் புரட்சியின் பக்கம் தள்ளி இருக்கிறது, அவர்களை மீறி பார்ப்பனீயத்தால் அந்த உரிமைகளையும், பங்கையும் நீண்ட காலத்திற்கு ஒளிக்க முடியாது.ஏனெனில் இது சாதி வாரிக் கணக்கெடுப்பு இல்லை, வருணக் கிருமியால் விளைந்த நோய்களின் கணக்கெடுப்பு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: