அடங்கமாட்டியா நித்தி…?


நித்தியானந்தா மீண்டும் தனது கிரமமான சிரமமில்லாத சாமியார் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். இன்று தமிழ் நாளிதழ்கள் அனைத்தும் நித்தி பக்தர்களிடம் ஆற்றிய சொற்பொழிவை வெளியிட்டிருக்கின்றன.

பெங்களூடர் பிடுதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் ஞாயிற்றுக் கிழமை குரு பூர்ணிமா விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாம். இதற்காக காலை ஆறு மணிக்கு அக்னி வளையத்துக்குள் பஞ்ச தபதி யாகத்தை நித்தி நடத்தினாராம். குளத்திலுள்ள 21 அடி லிங்கத்திற்கு அபிஷோகம், நித்தியாவை பக்தர்கள் பல்லக்கில் தூக்கிவந்தது என எல்லா எழவுகளும் திவ்யமாக நடந்தனவாம்.

அப்போது பக்தர்கள் நடனமாட, நித்தி ஆசிர்வாதம் வழங்க, போன்ற கூத்துக்களெல்லாம் முடிந்து, நித்தி பேசியதில் சில ஹைலைட்ஸ்:

“என் மீதான பாலியல் புகாரைத் தொடர்ந்து என்னை காமசாமி, செக்ஸ் சாமியார் என விமரிசிக்கிறார்கள். இந்த விமரிசனங்களால் நான் மனம் நொந்து போக மாட்டேன். அதற்காக கவலைப்படமாட்டேன். மகான் ராமகிருஷ்ண பரமஹம்சரையே பலர் பலவாறு விமரிசனம் செய்தார்கள். குற்றம் சாட்டினார்கள். அதற்கெல்லாம் அவர் கவலைப்படவில்லை. நானும் கவலைப்படப்போவதில்லை.”

“நான் ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது, கைதிகள் என்னிடம் ஆசிர்வாதம் பெற்றனர். ஒரு கைதிஎன்னிடம் சாமி எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்று கேட்டார். விரைவில் கிடைக்குமென்றேன். அதன்படி எனக்கு முன்பாக அவருக்க ஜாமின் கிடைத்து விடுதலையானார்.”

தப்பு செய்து மாட்டிக் கொண்டவர்கள் யாருக்கும் இத்தனை திமிர், தெனாவெட்டு இருக்குமா என்பது சந்தேகம். ஜெயலலிதா கூட வளர்ப்பு மகன் ஆடம்பர திருமணத்திற்கு பின்னர் அவர் வீட்டில் கோடிக்கணக்கில் நகைகள் கைப்பற்றப்பட்ட பின்னர் இனி சாகும் வரை நகை அணியமாட்டேன் என்று டிராமாவாவது போடுகிறார். ஆனால் இந்த நித்தியோ எந்த சுவடும் இல்லாமல் சகஜமாக இயங்க ஆரம்பித்து விட்டார்.

நித்தியானந்தா விவகாரம் வெளிவந்த உடன் அண்ணன் தமிழ்ச்செல்வன் போன்ற நல்லெண்ண மனிதாபிமானிகள் நித்தியை பாலியல் தேவைகளுக்காக தவிக்கும் இளைஞனாய், மகனாய் பார்த்தார்கள். வேறு சிலரும் அதே கோணத்தில் பரிசீலித்தார்கள். இளவயதில் பிரபலம், எல்லா டைப் பிரபலங்களும் காலில் விழுவது, ஆயிரக்கணக்கான கோடி சொத்து, ஆடம்பர வாழ்க்கை என்று வாழும் ஒருவன் வர்க்கமென்ற வகையில் மேட்டுக்குடி பொறுக்கியாகத்தான் இருப்பான். இதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அண்ணன் தமிழ்ச்செல்வன் வர்க்க ஆய்வில் ரொம்பவும் வீக் என்று தெரிகிறது.

அப்போது ஒரு வெளிநாட்டு நண்பர் ஒருவர் ஒரு ஆலோசனையை போராட்ட முறையாகச் சொன்னார். அதன்படி நடிகை ரஞ்சிதாவை மணம் செய்ய வேண்டுமென நித்தியை வற்புறுத்தி போராட வேண்டுமாம். அவரிடம் சொன்னோம், “ நண்பரே இந்தப் பட்டியிலில் ரஞ்சிதா மட்டும் சிக்கியிருக்கிறார், இன்னும் பலர் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரையும் மணம் செய்து கொள்வது சாத்தியமில்லையே?”. அத்துடன் நண்பர் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அமைதியானார்.

பாலியில் பிரச்சினையில் சாதாரணமானவன் தவறு செய்வதைப் போன்று நித்தியும் இருப்பார் என்பதுதான் இத்தகைய மனிதாபிமானத்தின் ஊற்று மூலமாக இருக்கிறது. பாலியல் விசயங்களை நாம் அணுகுவது போல மேட்டுக்குடியினர், சாமியார்கள், திரையுலகினர் அணுகமாட்டார்கள். அதனால் நித்தியை வெறுமனே இச்சைக்காக தவிக்கும் அப்பாவி இளைஞனாக கருத முடியாது. அதனால்தான் இப்போது நித்தி தெனாவெட்டாக பேசுகிறார்.

வெட்கம், மானம், சூடு, சொரணை முதலியவைகள் இருந்திருந்தால் நித்தி தனது தவறை நினைத்து மனம் வருந்தியிருப்பார். சாமியார் வாழ்வை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பார். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதோடு சாமியார் முன்னை விட மும்மூரமாக வேலைகளை ஆரம்பித்துவிட்டார். ரஞ்சிதாவும் வெளியான வீடியோ பொய்யானது என்று கூறிவிட்டார்.

எடியூரப்பா மற்றும் பா.ஜ.கவின் இந்துத்வ ஆதரவோடு, மிகுந்த பணபலத்தோடும் நித்தி இந்த பாலியல் ஊழல் முறைகேட்டை பத்தோடு ஒன்றாக கருதிவிட்டு ஆசிர்வாத லீலைகளை ஆரம்பித்து விட்டார். ஆக செய்த தவறு இம்மியளவும் இந்த மனிதனிடம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கும் அவர் மேட்டுக்குடி பொறுக்கி சாமியார் என்ற பௌதீக நிலைதான் காரணம். இதை இனியாவது அண்ணன் தமிழ்ச்செல்வன் புரிந்து கொள்வாரா?

நித்தியை விடுங்கள், இந்த பக்தர்களை எதைக் கொண்டு அடிப்பது? இந்தக் கண்றாவி சாமியாரை பல்லக்கில் சுமந்து வருகிறார்கள் என்றால் யாரிடம் சொல்லி அழ? சாமியார் யாகம் செய்வாராம், பக்தர்கள் நடனம் ஆடுவார்களாம், சாமியாரின் காலில் விழுவார்களாம், இறுதியாக நித்தி சொற்பொழிவு ஆற்றுவராம். எதுவும் நடக்காதது போல பக்தர்கள் இப்படி அடி முட்டாள்களாக இருப்பதுதானே நித்தி இப்படி கூச்ச நாச்சமில்லாமல் ஆட்டம் போட வைக்கிறது?

இவர்களை அடிமுட்டாள்கள் என்பதை விட ஊழலெல்லாம் வாழ்வில் சகஜம்தான் என்று ஊழல்படுத்தப்பட்ட சிந்தனைக்கு அடிமையானவர்கள் என்றும் சொல்லலாம். இவர்கள் கொடுக்கும் தைரியத்தில்தான் நித்தி தன்னை காமசாமியார் என்று அழைப்பதைப் பொருட்படுத்தவில்லை என்கிறார். இதில் ராமகிருஷ்ணரை எதற்கு ஒப்பிடுகிறார்? அவருக்கு சாரதா தேவி என்ற மனைவியும், அந்த மனைவியை காளியின் அவதாரமாய் அவர் பூஜை செய்வதும், ரஞ்சிதாவை பூஜை செய்த நித்திக்கு பொருத்தமாக இருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை.

மேலும் விவேகானந்தர் ஆரம்பித்த ராமகிருஷ்ண மடம் துவங்கி எல்லா மடத்திலும் செக்ஸ் முறைகேடுகள் வழமையாக மாறிக் கொண்டிருக்கும் போது அந்த மடத்து சீடர்களும் நித்தி இப்படி ஒப்பீடு செய்வதை எதிர்க்க முடியாது. ஆனாலும் ராமகிருஷ்ணரோடு ஒரு மூன்றாந்தர சாமியார் தன்னை ஒப்பிட்டுக் கூறுவதை நம்மைப் போன்ற நாத்திகர்களாலேயே சகிக்க முடியவில்லை.

இதில் நித்திக்கு இன்னும் ஆன்மீக பவர் போகவில்லையாம். அவர் சொன்னபடி ஒரு கைதிக்கு ஜாமீன் கிடைத்து விட்டதாம். ஜெயலலிதா கூட தனது வழக்குகளிலிருந்து விடுதலை அடைவதற்கு நித்தியைப் பார்க்கலாமே? எடியூரப்பாவிடம் சொன்னால் ஒரு அப்பாயிண்ட்மெண்ட வாங்கிக் கொடுத்து விடுவார். ஒரு வேளை இந்த சாமியாரைப் பற்றி கேள்விப்படாததினால்தான் சதாம் ஹூசேன் கூட தூக்கில் தொங்க வேண்டியிருந்ததோ?

நித்தி செக்ஸ் ஊழலில் சிக்கினாலும் அவரது ஆன்மீன ஃபவர் வலிமையானது என்று பிடதியின் கொ.ப.செ சாரு நிவேதிதா கூட குறிப்பிடுகிறார். அந்த ஆன்மீக பவரை இப்படி காமத்திற்கும் பயன்படுத்திவிட்டார் என்பதைத் தவிர இன்னும் நித்தி எதையும் குணமாக்கும் வல்லமை கொண்டவர் என்பது சாருவின் கருத்து. பொதுவில் சாரு பொய் சொல்வதற்கெல்லாம் கோழைகள் போல அஞ்சாமாட்டார் என்றாலும் உலக இளக்கியம் படித்த உத்தமரே இப்படி கொண்டாடும் போது உள்ளூர் பக்தர்கள் நித்தியை கொண்டாடுவதில் வியப்பில்லையே?

இப்போது நித்தி கூட பிரச்சினையில்லை. ஆனால் ஊரறிந்த சாமியார் அதே ஊரறிய ஒரு செக்ஸ் மோசடியில் சிக்கிய பிறகும் அவரது ஆன்மீக சாம்ராஜ்ஜியம் எந்தத் தடையுமில்லாமல் நடைபெறுகிறதே அதுதான் பிரச்சினை. இலவச டி.வியும், பணமும் வாங்கிக் கொண்டு ஏழைகள் தி.மு.கவுக்கு வாக்களிப்பதாக சலித்துக் கொள்ளும் புண்ணியவான்கள் இந்த பணக்கார பக்தர்களின் நடத்தைக்கு என்ன சொல்வார்கள்?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: