மரபணுத் தொழில் நுட்ப ஒழுங்கு முறை ஆணையம் – தொடரும் சட்ட பயங்கரவாதம் !


மரபணு மாற்று கத்தரிக்காய் விவகாரத்தில் நடந்த விவகாரங்கள் அனைவருக்கும் தெரியும். பன்னாட்டு நிறுவனங்களும், அவற்றின் உதவி பெறும் அறிவியலாளர்களும் மரபணுத் தொழில்நுட்பம் இல்லாவிட்டால் இந்தியாவே பட்டினியால் மூழ்கிவிடும் என்ற தவறான கருத்தைப் பரப்பினர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயற்கை விவசாயிகளும் மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் காரணமாக, சுற்றுச்சூழல் – பொதுச் சுகாதாரம் – அரசியல் – சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாட்டுக்கும் மக்களுக்கும் பலத்த பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தனர். தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகள், மரபணு தொழில்நுட்பம் குறித்து உரிய பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் தமது மாநிலத்திற்குள் மரபணுமாற்று உணவுப்பொருட்களை அனுமதிக்க முடியாது என்று கருத்து தெரிவித்தன. இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இந்த விவகாரம் குறித்து நாட்டின் சில நகரங்களில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்டறிந்து மரபணு மாற்று கத்தரிக்கு தற்காலிக தடை விதித்தார்.

இந்தியாவில் மரபணுத் தொழில்நுட்பத்தை ஒழுங்கு படுத்துவதற்காக மரபணுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகார வரம்புக்குள் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலர் மீதும் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் பல்வேறு ஆய்வுகளை செய்த அறிவியலாளர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக செயல்பட்டு, மரபணு மாற்றுக் கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே இந்தக்குழுவை “மரபணு மாற்றுத் தொழில்நுட்ப நெறிப்படுத்துதல் மற்றும் உயிரிப்பாதுகாப்பு அமைப்பு” என்று சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் ”மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம்” என்ற புதிய அமைப்பை நிறுவுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

(இந்திய நாடாளுமன்றம் – ஏரியல் வியூ)

இதற்காக The Bio-Technology Regulatory Authority of India Bill, 2009 என்ற சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்துகிறது. வேளாண்மை, சுற்றுச்சூழல், நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய மரபணு மாற்றுத்தொழில்நுட்பத்தை நெறிப்படுத்துவதற்கான இந்த அமைப்பு, அறிவியல் – தொழில்நுட்ப அமைச்சரவையின் ஆளுகையின் கீழ் செயல்படும் விதத்தில் உருவாக்கப்படுகிறது.

ஏன் இந்த சட்டம்?

இந்த சட்ட முன்வடிவானது இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது இந்தியர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட அலுவல் ரகசியங்கள் சட்ட (Official Secrets Act) த்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த சட்ட முன்வடிவு குறித்து விவாதங்கள் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காகவே தகவல் உரிமைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் இந்தக் காலத்திலும் கருப்புச்சட்டமான அலுவல் ரகசிய சட்ட வரம்புக்குள் இந்த “மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு” உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் பல வட இந்திய ஊடகங்கள் இந்த சர்ச்சைக்குரிய சட்ட முன்வடிவு குறித்து ஏராளமான சர்ச்சைகளை எழுப்பியுள்ளன.

சுற்றுச்சூழல் சட்டவியலில் முக்கியமான இரு அம்சங்களாக இருப்பவை: 1. வருமுன் காக்கும் கோட்பாடு, 2. சீரழிப்பவரே இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆனால் இந்த “மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு”-இல் இந்த முக்கிய அம்சங்கள் இல்லை என்பதோடு, இதற்கு எதிரான அம்சங்களும் ஏராளமாக உள்ளன. இந்தியாவின் குடிமக்களை பாதுகாப்பதைவிட, மரபணு மாற்று உணவுப்பொருட்களை தயாரிக்கும் மான்சான்டோ, சின்ஜென்டா, டோவ் கெமிக்கல்ஸ், பேயர், டூ பான்ட் போன்ற நிறுவனங்களின் நலன்களை பாதுகாப்பதே முக்கியமானது என்று மத்திய ஆட்சியாளர்கள் முடிவெடுத்து செயல்படுவதாக தோன்றுகிறது.

குறிப்பாக மரபணு மாற்றுப்பயிரை அறிமுகப்படுத்தும், சந்தைப்படுத்தும், ஆய்வு செய்யும் நிறுவனங்களுக்கான கடப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த மரபணு மாற்றுப்பயிர்கள் விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும், கால்நடை உள்ளிட்ட ஏனைய உயிர்களுக்கும் எந்தவிதமான ஆபத்துகளையும் ஏற்படுத்தாது என்ற உத்தரவாதத்தை வழங்க வழிவகை செய்யவில்லை. மேலும், இந்த பயிர்கள் சூழலியல் ரீதியாகவோ, மருத்துவ ரீதியாகவோ ஏதேனும் ஆபத்துகளை கொண்டுவந்தால் அந்த விவகாரங்களை எதிர்கொள்வது குறித்து ஏதுமில்லை.

மரபணு மாற்றுப்பயிர்களை அறிமுகப்படுத்தும் நிறுவனங்கள், அந்தப் பயிர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கோ, நுகர்வோர்களுக்கோ இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யும் எந்த அம்சங்களும் இல்லை. இதுபோன்ற விவகாரங்களில் அரசுத்துறையினரின் கடமை என்ன? தனியார் நிறுவனங்களின் பொறுப்பு என்ன? என்பது போன்ற எந்த சிந்தனைகளும் இல்லை.

இவற்றிற்கு பதிலாக பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கிலும், பன்னாட்டு நிறுவனங்களை கேள்விகேட்கும் சூழல் ஆர்வலர்களை தண்டிக்கும் அம்சங்களை மட்டுமே இந்த “மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு” கொண்டுள்ளது.

நவீன வாய்ப்பூட்டு சட்டம்!

மரபணுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்யவேண்டும் என்று வணிக நிறுவனங்களை நிர்பந்தப்படுத்த முடியாத அரசு, மரபணுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவோரை சிறையில் அடைக்கவும், அபராதம் விதிக்கவும் துடிக்கிறது.

இந்த “மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு”-இன் பிரிவு 63ன்படி மரபணுத் தொழில்நுட்பம் குறித்து உரிய ஆதாரங்களோ, சான்றுகளோ, அறிவியல்ரீதியான ஆய்வறிக்கைகளோ இல்லாமல், மரபணு மாற்று உணவின் ஆபத்து குறித்து எச்சரித்தால் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஒரு வருட சிறைத்தண்டனை, அல்லது இரண்டு லட்ச ரூபாய் வரையிலான அபராதம், அல்லது ஒரு வருட சிறைத்தண்டனையோடு கூடிய இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்க இந்த சட்ட முன்வடிவு வழிவகுக்கிறது.

வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது சுதந்தர வேட்கையை தணிக்க வாய்ப்பூட்டு சட்டங்கள் அமலில் இருந்ததாக நம்மில் பலரும் வரலாற்றுப் பாடங்களில் படித்திருப்போம். ஆனால் அந்த நிலையை நாம் கற்பனையில் கூட சிந்திருக்க மாட்டோம். அந்த கருப்புச் சட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது. இந்த புதிய “மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு” அமலுக்கு வந்தால், மரபணுத் தொழில்நுட்பத்தை கேள்விகேட்கும் சூழல் ஆர்வலர்கள், அறிவியலாளர்கள், ஊடகத்துறையினர் ஆகிய அனைவரையும் ஒருசேர முடக்கிவிட முடியும்.

சரி! ஆதாரம் இல்லாமல் கேள்வி எழுப்பினால்தானே சிறையில் அடைப்பார்கள்! ஆதாரங்களை சேகரிக்கலாம் என்று யாரும் முயற்சிக்க முடியாது. ஏனெனில் இந்த மரபணுமாற்று தொழில்நுட்ப ஆய்வுகளின் அனைத்து தகவல்களும் அறிவுச் சொத்துரிமை சட்டங்களின் அடிப்படையில் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் “ரகசிய வணிக தகவல்”களாக வரையறை செய்யப்படும். இந்த தகவல்களை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் யாரும் கோர முடியாது. எனவே மரபணு மாற்று உணவுப் பொருட்கள் குறித்து, அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் கூறும் தகவல்களே இறுதியானவை. இவற்றை யாரும் சரிபார்க்க முடியாது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானது!

இதுவரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 246வது பிரிவின் ஏழாவது அட்டவணையின் இரண்டாவது பட்டியல் மாநில அரசின் அதிகார வரம்பின்கீழ் வரும் துறைகளை கூறுகிறது. இந்த பட்டியலின் 14வது அம்சம், வேளாண்மை, வேளாண்மை கல்வி, ஆய்வு, பூச்சிகள் மற்றும் பயிர்களை தாக்கும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றை குறிக்கிறது. அதாவது வேளாண்மை, வேளாண் கல்வி – ஆய்வு, பூச்சிகள் மற்றும் பயிர்நோய்கள் குறித்த அனைத்து பிரசினைகளுக்கும் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருந்தது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே மரபணு மாற்றப்பட்ட உணவுப்பயிரை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகள் முடிவுகளை மேற்கொண்டன. ஆனால் இந்த புதிய “மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு” மாநிலங்களுக்கான இந்த அதிகாரத்தை சத்தமின்றி ரத்து செய்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அதன் இந்திய தொழில்-வணிக-அரசியல் பங்காளிகளுக்கும் லாபத்தையும் – இந்திய விவசாயிகளுக்கும், இந்தியாவின் இறையாண்மைக்கும்கூட கேடு விளைவிக்கக்கூடிய இந்த மரபணுத்தொழில் நுட்பம் இந்தியாவிற்கு ஏன் தேவை என்ற சாதாரண கேள்விக்கு பதில் கூறுவதற்கு யாருமில்லை.

சுதந்திரமான நாட்டின் சட்டம் என்பது மக்களுக்கு தரமான வாழ்க்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் நவீனகால இந்தியாவின் சட்டங்கள் இந்தியர்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் ஒப்படைப்பதாகவே உள்ளது.

சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த சட்டக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய சென்ன உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்கள், “கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற நாம் தற்போது வேறு கம்பெனிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடக்கூடாது!” என்று எச்சரித்தார். ஆனால் நடக்கும் சம்பவங்களும், உருவாகும் புதிய சட்டங்களும் நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்களின் எச்சரிக்கையை உதாசீனம் செய்வதாகவே உள்ளன.

சட்டம் என்பது சட்டத்தை உருவாக்கும் அரசியல்வாதிகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும், சட்டத்தை விவாதிக்கும் சட்டத் துறையினருக்கும் மட்டுமே உரியது என்ற தவறான கருத்தை உடைத்தெறிய வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் இந்த சட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைவரது வாழ்க்கையையும் பாதிக்கிறது.

மேலும், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தியே இந்த சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. எனவே தேர்தலில் பங்கெடுத்து வாக்களிக்கும் அனைத்து குடிமக்களும் இந்த சட்டங்களை உருவாக்குவதில் பங்கெடுப்பதாகவே பொருள் கொள்ளப்படுகிறது. எனவே இது போன்ற மக்கள் விரோத சட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்போது, உரிய முறையில் எதிர்ப்புகளை பதிவு செய்யவேண்டியது குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: