கலங்கள் தொடரட்டும் ….


”சாதிவெறியர்களின் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கலகம் துவங்கியிருக்கும் காலம் இது.”

மதுரையின் உத்தபுரத்தில் தகர்க்கப்பட்ட தீண்டாமைச் சுவர், பலரிடமும் ஒரு அசைவை ஏற்படுத்தியது. தமிழ்ச் சமூகம் முன்னேறிவிட்டதாக பலரும் பொய்த்தம்பட்டம் அடித்துவந்த நிலையில், மாயத் திரையை கிழித்துத்துப்போட்டது அந்த ஆதிக்கச் சுவர்.
அடுத்ததாக செட்டிபுலத்தின் நடைபெற்ற ஆலைய நுழைவுப் போராட்டங்கள், தொடர்ந்து நடைபெற்ற கைது நடவடிக்கைகளும், தடியடி சம்பவங்களும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே கடுமையான தாக்குதலுக்கு உள்ளான சம்பவமும் ஊடகங்களால் மறைக்கபட்டாலும். அரசு யந்திரத்துள்ளும் புறையோடியிருக்கும் சாதி ஆதிக்கத்தை பொதுத் தளத்தில் வெளிச்சமாக்கியது. பச்சிளம் பிஞ்சென்றும், தாடி நரைத்த கிழவனென்றும் இந்த சாதிவெறி எந்த வரையரையும் வைத்திருப்பதில்லை.

தீண்டாமை போகிறபோக்கில் ஏற்பட்டதில்லை, எனவே போகிறபோக்கில் முடியப் போவதுமில்லை. அதற்கு எதிரான கலகங்கள் வெடிக்கும்போது, சாதி ஆதிக்க நடைமுறைகள் ஒருபுறமும். சாதி அடிமைத்தனம் (இந்தப் பதம் சரியெனே நினைக்கிறேன்.) தலித் மக்களின் மீது காலகாலமாய்ச் செலுத்தப்பட்டுவரும் அடக்குமுறைகளின் காரணமாக அவர்கள் எண்ணத் தளத்திலேயே திணிக்கப்பட்டிருக்கும் இந்த அடிமைத்தனம். அடங்கிவாழ அவர்களை பழக்கிய தன்மை. மற்றொருபுறமும். நம்மைத் தாக்கத் துவங்குகின்றன.

அப்போதெல்லாம், ஆதிக்கத் திமிருக்கு தக்க பதிலடி கொடுப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவு முக்கியத்துவம் தலித் இளைஞர்களிடமும், சாதி எதிர்ப்புணர்வு கொண்ட மற்றவர்களிடமும் விழிப்புணர்வை பரப்புவதிலும், போராட்டக் களத்திற்குள் இழுத்துவருவதும் மிக அவசியம். இதை நேரடி அனுபவம் உணர்த்தியது.

நேற்று திருப்பூரில் நடந்தது மேம்போக்காக சாதாரண பிரச்சனைதான், (செய்தி) தலித் இளைஞனுக்கு முடி திருத்துவதற்கு மறுத்தார் ஒரு கடைக்காரர். (கொடுவாய், ராகம் சலூன்) கடையில் முன்பாக 10 நிமிடம் நின்று பேசிப்பார்த்தார்கள். (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்) முடி வெட்ட மறுப்பது தவறு, பேதம் பார்க்காதீர்கள். தீண்டாமை செய்வது தவறு” இதுதான் அவர்கள் சொன்னது.

பதிலுக்கு கடைக்காரர் தரப்பிலும், ஊர்ச் சமூகத்திலிருந்தும், “எங்களை துன்புருத்தாதீர்கள்”, “நான் வெட்ட மாட்டேன் என்று சொல்லவில்லை, ஆனால் நேரமில்லை”, ”அந்தந்தச் சாதி அந்தந்த வேலையையா பார்க்கிறது?”, “அமைதியாக இருக்கும் ஊரில் கலகம் செய்யாதீர்கள்”, “மறுத்தால் வேறு கடைக்கு போகவேண்டியதுதானே?” இவ்வாறு அலறல் எழுந்தது.

தலித் இளைஞனுக்கு, முடி வெட்டுவதில் கூட சமத்துவம் கொடுக்காத இந்த சமுதாயத்தின் ஒரு பகுதியினரின் ஆதிக்க வெறி அந்த வார்த்தைகளின், பின் புலத்தில் குரூரமாய்ச் சிரித்தது.

அழுகிக் கெட்ட புண் மீது விழுந்த சிறு அடி, சீழ்ப்பிடித்த கொப்புளத்தை உடைத்துவிட்டது. மாநில முழுக்க நாற்றமெடுத்தது. சன் தொலைக்காட்சியில் இப்படி எழுதினார்கள் “முடிவெட்டச் சொல்லி வாலிபர் சங்கம் மிரட்டல், பல்லடத்தில் 300க்கும் அதிகமான சலூன் கடைகள் அடைப்பு”. மறியல், பதட்டம். வாலிபர்கள் அமைதியைக் கெடுத்ததாக சில பத்திரிக்கைகள் எழுதின.

அமைதியாக இருக்கும் பகுதியில், கலகமூட்டுவதாக பலர் அலறினார்கள். தலித் கிராமத்தின் பெரியவர்கள் ஒருவிதம் பயத்தை முகத்தில் காட்டினார்கள். ஆனால் இது இளையவர்கள் மத்தியில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

மேலே நிற்பவன்
மேலேயே நிற்க
விழுந்துகிடப்பவன்
விழுந்தே கிடக்க

குரள்வளையின் மீது
பாதங்கள் அழுந்துகையில்
சத்தம் வருவதில்லை
எல்லாம் அமைதியாக இருக்கிறது.

யாருக்கு வேண்டும் அந்த அமைதி? சாதி இல்லை, பேதம் இல்லை என்று சொல்லும் ஒவ்வொருவருக்கும் அந்த ”அமைதியை(!)” கலைக்கவேண்டிய கடமை முன் நிற்கிறது. இந்த நிலை மாறவேண்டுமானால், அது உடனே சாத்தியமில்லை, (நல்ல மனிதர்கள், வெறும் நல்ல மனிதர்களாக மட்டும் இருந்தால் அது எப்போதும் சாத்தியம் இல்லை) களத்தில் இறங்கினால்தானே .. களை பறிக்க முடியும்!

கரங்கள் இணையட்டும் … கலகங்கள் தொடரட்டும் ….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: