மக்கள் தொகை கணக்கெடுப்பு எதற்காக?


மக்கள் என்போர்
வெறும்
எண்ணிக்கை அல்ல

உலகில் மனிதர்கள் தோன்றாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? விரக்தி வேதாந்தத்தில் சிக்கியவர்கள் “அந்த உலகம் அமைதியானதாக, அழகானதாக இருக்கும்” என்று பதில் கூறலாம். ஆனால், மனிதர்கள் இல்லை என்றால் இந்த உலகத்தைப் பற்றி வேறு யார்தான் அக்கறைகொள்வார்கள்? இப்படிப்பட்ட சிந்தனைகள் இருப்பவர்களும், இதைப்பற்றியெல்லாம் யோசிக்காதவர்களுமாக இந்த உலகில் இன்று சுமார் 670 கோடி மக்கள் வாழ்கிறார்கள். மிகச் சரியாக இந்த 2010ம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை எவ்வளவு? ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு? இந்தியாவில் எவ்வளவு?

இதை மதிப்பிடுவதற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று (ஏப்ரல்-1) உலகின் அனைத்து நாடுகளிலும் தொடங்கியிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியாவில் குடியரசுத் தலைவர் நேற்று முறைப்படி தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.

மிக பழங்காலத்து மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி சீனாவில் ஹான்ஸ் பரம்பரையினர் ஆட்சிக்காலத்தில் (கி.மு. 200) நடந்ததாக பதிவாகியுள்ளது. அதற்கும் முன்னதாக, இந்தியாவில் கி.மு 800-600 ஆண்டுகளிலேயே ஒருவகையான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கிவிட்டதாக இலக்கியச் சான்றுகள் கூறுகின்றன. அப்போது இந்தியா என்கிற ஒரே நாடாக இருந்ததில்லை என்றாலும் அப்போதிருந்த சிறுசிறு நாடுகளின் மன்னர்கள் பல்வேறு தேவைகளுக்காக, குறிப்பாக வரிவிதிப்புக்காக, இந்த முயற்சியைச் செய்திருக்கிறார்கள். அக்பர் ஆட்சிக் காலத்தில் (1556-1605) மக்களின் தொழில்கள், அவர்களது செல்வநிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் திரட்டப்பட்டனவாம். இன்றைய நடைமுறைக்கு முன்னோடியாக அமைந்தது, பிரிட்டிஷ் ஆட்சியின்போது பல்வேறு பகுதிகளில் 1865 – 1872 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புதான். இந்திய மாநிலங்களில் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு என்பது 1881ல் தொடங்கியது. அதன் பின் பத்தாண்டுகளுக்கு ஒருமுறைகூட இடையில் நிறுத்தப்படாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை உலக அளவில் எப்போது தொடங்கியது? இங்கிலாந்தில் விக்டோரியா ஆட்சி காலத்தில் 1841ல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. எனினும் அதற்கும் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே, 1801ல் அங்கே இப்படிப்பட்ட கணக்கெடுப்புப் பணி தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. சில உயிர்க்கொல்லி தொற்றுநோய்கள் பரவியதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட காலகட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காகவும், தப்பியவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காகவும் அந்தத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்காவில் 1790ம் ஆண்டில் குடிமக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது என அரசாங்கம் முடிவு செய்தது. எதற்காகத் தெரியுமா? போர்க்களங்களில் இறக்கிவிடுவதற்காக! ராணுவத்திற்கு எத்தனை இளைஞர்கள் கிடைப்பார்கள் என்பதைக் கணக்கிடுவதற்காக! பிற்காலத்தில் அரசின் பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படும் வகையில் அங்கேயும் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு ரூ.2,209 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைச் சார்ந்த நடைமுறைகளுக்காக மொத்தம் 25 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேருக்கு நேர் வீடுகளுக்குச் சென்று தகவல்களைத் திரட்டும் பணியில் குறிப்பாக ஆசிரியர்கள், பல்வேறு அரசுத்துறையினர் இதற்கென தனி ஊதியத்துடன் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களை வழக்கமான பணிகளிலிருந்து திசைதிருப்பாமல், வேலையின்றி இருக்கும் இளைஞர்களை இப்பணியில் ஈடுபடுத்தலாமே என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசு அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என்ற நெடுந்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்தக் கணக்கெடுப்பு உதவும். அதற்காக ‘தேசிய மக்கள் தொகை பதிவேடு’ (என்பிஆர்) முதல்முறையாக ஏற்படுத்தப்படுகிறது.

இதுவரை நடந்த கணக்கெடுப்புகளிலிருந்து மாறுபட்டதாக இதில் உயிரியல் சார்ந்த (பயோமெட்ரிக்) தகவல்களும் பதிவு செய்யப்படவுள்ளன. அதாவது கணக்கெடுக்கப்படுபவரின் கைவிரல் ரேகை, முக்கிய அங்க அடையாளங்கள் போன்றவற்றுடன் அவர்களுடைய புகைப்படங்களும் பதிவு செய்யப்படும். அத்துடன், அவர்களிடம் செல்பேசி இருக்கிறதா, கணினி இருக்கிறதா, இணையவலை இணைப்பு இருக்கிறதா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டிருக்கிறதா என்பன போன்ற கேள்விகளும் கேட்கப்படவுள்ளன.

முதல் கட்டமாக மக்கள் குடியிருக்கும் வீடுகள் தொடர்பான கணக்கெடுப்பு இவ்வாண்டு ஏப்ரல்-ஜூலை மாதங்களுக்கிடையே மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் கட்டமாக ஒவ்வொரு தனிமனிதர் பற்றிய தகவல்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 28 வரை நாடு முழுவதும் நாடு முழுவதும் 35 மாநிலங்கள் – யூனியன் பிரதேசங்களில், 640 மாவட்டங்களில், 7,742 நகரங்களில், 6 லட்சம் கிராமங்களில் ஒரே நேரத்தில் திரட்டப்படவுள்ளன.

இந்த கணக்கெடுப்பின் வேறு சில ஏற்பாடுகளும் சுவையானவை. சேர்ந்து வாழ்கிற இருவர் தங்களை மணமானவர்கள் என்று குறிப்பிட விரும்பினால் அவ்வாறு குறிப்பிடலாம். பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்கால மதிப்பீடுகளுக்காக ஒருவரிடம் அவரது வங்கிக் கணக்குகள், செல்பேசி பயன்பாடு, மடிகணினி பயன்பாடு போன்ற தகவல்களும் விசாரிக்கப்படும். உங்கள் வீட்டின் சமையலறை எந்த இடத்தில் – வீட்டிற்கு உள்ளேயா, வெளியேயா – அமைந்திருக்கிறது என்பதும் கேட்கப்படும். இரண்டாவது கட்ட கணக்கெடுப்பில் கல்வித் தகுதிகள் கேட்டறியப்படும்.

இவ்வாறு திரட்டப்படும் தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தனிப்பட்ட குடிமக்களின் இத்தகவல்களை யாரும் பெற முடியாது. உயர்நீதிமன்றங்கள் கூட இத்தகவல்களை அளிக்குமாறு ஆணையிட முடியாது. அதே போல், ஒருவர் தன்னைப் பற்றிய தகவல்களைத் தர மறுக்கவும் கூடாது.

எதிர்காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் மேலும் பல தகவல்கள் திரட்டப்படலாம். அப்படிப்பட்ட கணக்கெடுப்புகள் வெறும் புள்ளி விவர பட்டியல்களுக்காக அல்லாமல், மக்களின் வாழ்க்கையை முன்னேற்றத் திசையில் செலுத்துவதற்குப் பயன்பட வேண்டும். மேடு பள்ளங்களைக் கண்டறிந்து, சமத்துவப் பாதையை உருவாக்க உதவ வேண்டும். ஏனெனில் மக்கள் என்போர் எண்ணிக்கை சார்ந்தவர்கள் அல்ல… சமுதாய எண்ணம் சார்ந்தவர்கள்.

Advertisements

One Response to “மக்கள் தொகை கணக்கெடுப்பு எதற்காக?”

  1. reverse phone lookup Says:

    Hello I found that the Free Trouble-free Shopping Icons Download Design, Tech and Internet post very interesting therefore I’ve included our track-back for it on
    my own webpage, continue the great job:)


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: