கம்யூனிச பூதம் …


உலகம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்… அது இன்று பல்லாயிரம் அமெரிக்கர்கள் உள்ளிட்ட உலக மக்களின் வேலை வாய்ப்பைக் காலி செய்திருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையைச் சிதைத்திருக்கிறது.

இப்படிச் சொல்வதால் இதற்கு முந்தைய காலகட்டத்தில் உலகம் சொர்கபுரியாக இருந்தது என்பதில்லை. கடந்த காலங்களில் பேராசையால் உலகைப் பீடித்த உலகமயச் சூறாவளி, தினமும் பல்லாயிரக் கணக்கான எளிய மக்களின் வாழ்க்கையை சிதைத்தே வந்தது. அதுபோலவே இந்தியாவிலும் வாழ்க்கை மிகப் பிரகாசமாக அமைந்திருப்பதாகச் சொல்ல முடியாது. ஏழைகள் சாவை நோக்கி அனுதினமும் தள்ளப்படுகிறார்கள்.

இதனை உணர, நாம் எங்கேயோ இருந்து உதாரணம் தேடத் தேவையில்லை. உலகமயம் தீவிரமடைந்ததற்கு பின்னர், நம் இந்தியாவில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள், இதனை அரசின் புள்ளிவிபரங்களே காட்டுகின்றன.

எந்த ஒரு சூழலிலும், முதலாளியச் சமூகம், லாபம் … அதிக லாபம்… என்பதை நோக்கியே செல்கிறது. பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையே தொலையும்போதும் கூட அதற்கு லாபம் குவிப்பதில் தான் ஈடுபாடு.

“புவி வெப்பமடைதல்” பிரச்சனை தலைமேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது. என்றபோதிலும், எந்த முன்னேறிய நாடும் அதுகுறித்து அக்கறை காட்டவில்லை. காரணம்? இப்போதைக்கு அவர்கள் பத்திரமாக வாழ்கிறார்கள்.

இவையெல்லாம் பார்க்கும் மக்களுக்கு… பேராசையும் சுயநலமும் தவிர்த்த சமூக அமைப்பு சாத்தியமே இல்லையா என்ற கேள்வி எழுவது இயல்புதான்..

சோசலிச மாற்று:
இந்த சூழலில்தான், சோசலிச நாடான சீனாவின் செயல்பாடுகள் அங்கு வியத்தகு வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உலகின் பெரும் பணக்காரர்களில் அங்கே ஒருத்தர் தான் வாழ்கிறார். ஆனால் மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. அதேசமயம் முதல் பத்து இடங்களுக்குள் 2 பணக்காரர்களையும், 40 க்கும் மேற்பட்ட பன்னாட்டு முதலாளிகளையும் தன்னிடம் கொண்டு இந்தியா பணக்காரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. மக்கள் நலவாழ்வைப் பொருத்தமடில் அதல பாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருக்கிறது. நல்ல வாழ்க்கையை அளிப்பதில் சோசலிச நாடுகள் முன்னணியில் நிற்கின்றன. கியூபா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் நலம் சார்ந்த செயல்பாடுகள் அனைவரையும் சிந்திக்க வைக்கின்றன.

கம்யூனிச பூதம்:
19 ஆம் நூற்றாண்டி முதல் பாதியில், ஆளும் சக்திகளை ஒரு பூதம் ஆட்டி வைத்தது. அது குறித்த கனவு கூட அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. “கம்யூனிசம்” எனும் அந்தப் பூதம் இப்போது மீண்டும் உயிர்த்தெழத் துவங்கியுள்ளது. பலநாடுகளில் உருவாகியுள்ள தொழிலாளி வர்கம் வீருகொண்டு எழும், அநீதிகளுக்கு எதிராக தன் போரினை மீண்டும் துவக்கும் என்றே தோன்றுகிறது. இந்த நேரத்தில் தொழிலாளி வர்கத்தின் வேதப் புத்தகமாக அறியப்படும் ”கார்ல் மார்க்ஸ் -ன் மூலதனம்” அறிவித்ததெல்லாம் உண்மை தானோ என்று சகலரும் யோசிக்கத்துவங்கியுள்ளனர்.

அதில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறது?

1859 இல் கார்ல்மார்க்ஸ் ஒரு புத்தகம் எழுதினார், அதன் பெயர் ”அரசிய பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு”, அந்த நூலின் தொடர்ச்சியாக அவரே எழுதிய ”மூலதனம்” புத்தகம் 1867 இல் வெளியானது. இரண்டு புத்தகங்களுக்கும் இடையிலான கால இடைவெளி அதிகமாக இருப்பதால் முதல் புத்தகத்தின் சுருக்கத்தையும் இணைத்தே மூலதனத்தை மார்க்ஸ் எழுதிவிட்டார். அதன் முதல் பாகத்தில், இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் பொருளுற்பத்தி முறையின் மீதான பகுப்பாய்வும், இரண்டாம் பாகத்தில் மூலதனத்தின் சுற்றோட்ட நிகழ்முறையையும், வளர்ச்சிப் போக்கில் அது மேற்கொள்ளும் பலதரப்பட்ட வடிவங்களும், கடைசி பாகத்தில் தத்துவத்தின் வரலாற்று வளர்ச்சி குறித்த ஆய்வும் அடங்கியுள்ளது.

இன்றைய சமூகத்தை ஒவ்வொரு அங்குலமாக ஆராயும் மார்க்ஸ், அது குறித்த தீர்க்கமான பார்வையை நமக்குள் விதைக்கிறார். இருக்கும் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கு குறித்து தெரியும்போதுதான், அதனை மாற்றும் வழிமுறையும், மாற்றத்திற்கான தேவையும் புரிபடுகிறது.

இந்த முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சிப்போக்கு எவ்வாறு வெளிப்படும்? , மனித சமூகத்தின் முன்புள்ள ஒரே வாய்ப்பு முதலாளித்துவம் தானா?, வலுத்தவன் வாழ்வான் என்பதே நியதியா?, இது எப்போது மாறூம்?. மாறி வரும் புதிய சமூக அமைப்பும் மாற்றத்திற்கு உட்படுமா? .. என பல்வேறு கேள்விகளுக்கும் விடை கிட்டும் என்ற நம்பிக்கையிலேயே இந்தப் புத்தகத்தின் வாசிப்பு துவங்குகிறது.

அதன் முன்னுரையில் மார்க்ஸ் குறிப்பிடுவதைப் போல, தொடக்கம் என்பது எப்போது கடினமானதுதான், எந்த வகையான விஞ்னான ஆராய்ச்சிக்கும் இது பொருந்தும்.

உடலை மேலோட்டமாகப் பார்ப்பது எளிது, ஆனால் அதனை புரிந்து கொள்ள முயலும் போது ஒவ்வொரு செல்லாக நுண்ணோக்கியில் வைத்தல்லவா தெரிந்துகொள்ள முடியும்?.
பொருளாதாரத்திர்கென எந்த நுண்ணோக்கியும் இல்லை, இதன் உட்பொருள்கள் வேறுமாதிரியானவை. எனவே, கார்ல்மார்க்ஸ் தனது நுண்ணோக்கியாக தர்க்கங்களைப் பயன்படுத்துகிறார்.

விற்பனை பண்டம் (சரக்கு) என்பதுதான் இந்த உலகை ஆட்டிப்படைக்கும் முதலாளித்துவத்தின் அடிப்படை அலகு என்பதால், சரக்கு என்பது என்ன?. என்ற கேள்வியிலிருந்தே இந்தப் புத்தகம் துவங்குகிறது.

துவக்கமே பொருளாதார ஆய்வாக இருப்பதால், படிக்கத் துவங்கும்போது கொஞ்சம் பிரம்மிப்பு ஏற்படுவதை தவிற்கமுடியவில்லை. இது அறிவு ஜீவிகள் மட்டுமே வாசிக்கத்தகுந்த புத்தகமோ என்றும் தோன்றுகிறது. ஆனால், மிக எளிதான ஆய்வு முறை அந்த பிரம்மிப்பை வெகு சீக்கிரமே போக்கிவிடுகிறது.

மொழிபெயர்ப்புப் புத்தகங்களுக்கேயான கடினத் தன்மையும், மொழியாக்கம் செய்த ஆசிரியர், மார்க்ஸ் இன் வார்த்தைகளை சிதைத்துவிடக் கூடாதே என்பதில் காட்டியுள்ள அக்கரையும் சாதாரண வாசகர்களுக்கு வாசிப்பின் தடங்கல்களாக அமைந்துவிடுகின்றன. ஆனால் இவற்றைக் குறைகளாகப் பார்க்கத் தேவையில்லை.

மலை உச்சியை அடைய முயல்பவர்கள், கரடு முரடான பாறையைக் கடந்துதான் ஆகவேண்டும். மனித சமூகத்திற்கான விடியலை நோக்கிய பயணமும் அப்படியானதுதான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: