காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா அரிவாளா?


விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் காதலுக்குத் தேவை தோற்றமா, அணுகுமுறையா (அப்பியரன்சா, அப்ரோச்சா) என்ற தலைப்பில் காதலர்கள், காதலித்து மணந்தவர்கள், காதலிக்கக் காத்திருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் எல்லோரும் மனம் திறந்து ஒரு மாதிரியாக விவாதித்தார்கள்.

காதலின் ஆன்மாவை மறுத்து அலங்காரங்களை மட்டும் விவாதிக்கும் விஜய் டி.வி.
தோற்றத்தில் என்ன பிடிக்கும், பிடிக்காது வகையறாக்களை பட்டியலிட்டவர்கள் அழகு, தலைமுடி, சீரான பல், நடுத்தர உயரம், உடை நிறம், உடல் வண்ணம், உடை வகைகள், முதலானவற்றை அலசினார்கள். அடுத்து அணுகுமுறையைப் பட்டியலிட்டவர்கள் அசடு வழியாமை, எதிர் பாலை ஆதிக்கம் செய்யாமை, எதிர் பாலை உரிமை எடுத்துக் கொள்வது-கொள்ளாமை, என என்னவோ பேசினார்கள். பெண் சுதந்திரம் குறித்து தனது விருப்பப்படி உடை அணிவது, பேருந்தில் செல்வது, நண்பர்களிடம் பேசுவது, கேட்டதை வாங்கிக் கொடுப்பது, தன்னை அன்புடன் கவனிப்பது, இன்ன பிறவற்றை அடுக்கினார்கள். இப்படி ஒரு மணிநேரத்தில் காதலை அலசிவிட்டு காதலைப் பெண்களிடம் எப்படித் தெரிவிப்பது என்று பார்வையாளர்களை வைத்தே நடித்துக் காட்டினார்கள். மொத்தத்தில் காதலும், பெண்ணுரிமையும் ஒரு மணிநேரமாகப் படாதபாடு பட்டது என்றால் மிகையல்ல.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர் காதலிப்பது இவ்வளவு சுலபமா என்று ஆச்சரியப்பட்டு உடனே ஒரு பெண்ணைத் தெரிவு செய்து கணக்கு பண்ணுவதற்குத் திட்டமிடும் சாத்தியமும் உண்டு. இந்த ஜிகினாக் காதலைத்தான் பத்திரிகைகளும், காதலர் தினக் கொண்டாட்டங்களும் வருடா வருடம் போதித்து வருகின்றன. இந்திய நடைமுறையில் இந்த சரிகை வேலைப்பாடுகள் எவையும் செல்லுபடியாவதில்லை. உண்மையில் காதலிக்க வேண்டுமென்றால் பல தடைக்கற்களைக் கடக்கவேண்டும். காதலின் உயிராதாரமான இந்தப் பிரச்சினைகளின் பால் சினிமாவும், ஊடகங்களும் கவலை கொள்வதில்லை. காதல் டூயட்டுக்காக வெளிநாடு செல்லும் இயக்குநர்கள் எவரும் இந்த மண்ணின் உண்மைக் காதலை அதன் வலியை அறிந்து கொள்வதில்லை.

சாதி மதம் மாறி, ஜாதகம் பார்க்காமல், பெற்றோர்-உற்றோரை எதிர்த்துக்கொண்டு, மணம் செய்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. இதில் சமரசம் செய்து கொண்டு பெற்றொர் வழி திருமணம் செய்தவர்களே இங்கு அதிகம். அவர்களுக்கெல்லாம் காதல் விருப்பமற்றது என்பதல்ல, காதல் நடைமுறையில் சாத்தியமல்ல என்ற சமூக நிர்ப்பந்தமே காரணம். காதலிப்பவர்களும் கூட இந்த தடைக்கற்களைத் தாண்டுவதை விட சமரசம் செய்து கொண்டு குறுக்கு வழியைத் தேடுகிறார்கள். சாதி, மதம் மாறாமல் காதலிப்பது, தனது சாதியின் தரத்தினையொத்த சாதியில் காதலிப்பது, கீழ் சாதியைத் தவிர்ப்பது, தனது வர்க்க நிலைக்கேற்ப காதலிப்பது, காதலித்தாலும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, பெற்றோருக்காக வரதட்சணை கேட்டு காதலியை நிர்ப்பந்திப்பது, தாய் தந்தை விருப்பத்திற்காகக் காதலியை வேலையை விடச் செய்து வீட்டு விலங்காக நடத்துவது, பிறக்கும் குழந்தைகளை தந்தையின் சாதி அடையாளத்துடன் வளர்ப்பது, இருவரில் யார் மேல்சாதியோ அவர்களது சாதியப் பண்பாட்டைக் கடைபிடிப்பது….. இங்கே காதல் எங்கே இருக்கிறது?

இவ்வளவு பிற்போக்கு அழுக்குகளை அகற்றாமல், இதைப் பற்றி பேசாமல் காதலுக்கு தேவை தோற்றமா, அணுகுமுறையா என்று விவாதிப்பது அயோக்கியத்தனமில்லையா? தான் விரும்பிய உடைகளை அணிவதுதான் பெண்ணுக்கு சுதந்திரம் என்று பிதற்றுவது அக்கிரமில்லையா? இந்தியாவில் காதலுக்குத் தேவைப்படுவது போராட்டமும், கலகமும்தான். இந்த உண்மையை ரத்து செய்யும் ஊடகங்கள் காதலை மின்மினிப் பூச்சி போல உணர்த்துகின்றன. இருண்டு கிடக்கும் சமூக இருட்டை இச்சிறிய ஒளி அகற்றுவதில்லை.

காதலிப்பது ஜாலிக்காக, கல்யாணம் செய்வது பெற்றோருக்காக!
மேம்போக்கான காதல் நடவடிக்கைகள் பெருநகரங்களில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இதிலும் ஜாலிக்காகக் காதல், செட்டிலாவதற்கு பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் என்பதே வழக்கமாக நடக்கிறது. ஆனால் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் காதல் என்பது இன்னமும் அபாயகரமாகவே உள்ளது. டெக்கான் குரோனிக்கிள் செய்தித் தாளில் 10.9.08 அன்று வந்த ஒரு துயரக்காதல் சம்பவம் இதைக் கண்ணீருடன் தெரிவிக்கிறது.

தஞ்சை மாவட்டம் அரித்துவார் மங்கலத்ததைச் சேர்ந்த சிவாஜி எனும் 32 வயது தலித் இளைஞரும், அம்மாபேட்டைக்கு அருகில் வாழும் கள்ளர் சாதியைச் சேர்ந்த 29 வயது லட்சுமியும் காதலிக்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தின் அரசியல், சமூக வாழ்க்கையில் கோலேச்சும் கள்ளர் சாதி அவ்வட்டாரத்தில் பிரபலமான ஆதிக்க சாதியாகும். ஒரு கள்ளர் சாதிப் பெண்ணை அதுவும் ஒரு தலித் இளைஞன் திருமணம் செய்வது என்பது அங்கே நிலநடுக்கத்திற்கு ஒப்பானது. விசயம் வெளியே தெரிந்தால் தஞ்சையே சாதி வெறியால் கொந்தளித்துக் குமுறும். இச்சூழ்நிலையில் இக்காதலர்கள் எவ்வளவு சிரமங்களோடும், அச்சத்தோடும், இரகசியமாகவும் காதலித்திருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காதலிப்பதற்கே இவ்வளவு சாகசம் தேவைப்படும் போது திருமணம் என்பதை அங்கே கற்பனை கூடச் செய்யமுடியாது.

இந்நிலையில் காதலர்கள் வேறுவழியின்றி தமது பெற்றோர், உறவினர் அறியாமல் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்கின்றனர். சிவாஜி ஆட்டோ ஓட்டுநராக பிழைப்பு நடத்தி இல்லறத்தை நடத்துகிறார். தஞ்சைக்கும், திண்டுக்கல்லுக்கும் தூரம் சற்றே அதிகமென்பதால் கள்ளர் சாதி வெறியின் கொடுக்குகள் தம்மைத் தீண்டாது என்றே அந்த அப்பாவிக் காதலர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் வன்மத்திலும், வெறியிலும் மையம் கொண்டிருக்கும் இச்சாதி வெறிக்கு இந்த தூரமெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல.

லட்சுமியின் சகோதரர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், மீனாட்சி சுந்தரம், மூவரும் காதலர்கள் திண்டுக்கல்லுக்கு புலம் பெயர்ந்ததைக் கண்டுபிடித்து சில ரவுடிகளுடன் ஒரு டாடா சுமோவில் செல்கிறார்கள். செப்டம்பர் 7 ஆம் தேதி இருப்பிடத்தை தெரிந்து கொண்டு சிவாஜியை அடித்து வண்டியில் ஏற்றுகிறார்கள். அதைத் தடுக்க முயற்சித்த லட்சுமி அடிபட்டவாறு செய்வதறியாமல் கதறுகிறார். எப்படியாவது தனது காதல் கணவனைக் காப்பாற்றவேண்டுமென போலீசில் புகார் கொடுக்கிறார். அடுத்த நாளே ஆனைமலைப் பகுதியில் சித்ரவதையுடன் கொலை செய்யப்பட்ட சிவாஜியின் உடலைப் போலீசார் கண்டுபிடிக்கிறார்கள். கோபத்தில் வந்த சகோதரர்கள் சிறிது அடித்துவிட்டு தனது கணவனை விட்டுவிடுவார்கள் என்று நினைத்தேன் இப்போது என்ன செய்வேன் என்று மனமுடைந்து கதறுகிறார் லட்சுமி.
உடன் பிறந்த தங்கை தாலியறுத்தாலும் பரவாயில்லை, ஒரு தலித் ஒரு கள்ளர் பெண்ணை தொடக்கூடாது என்று பித்தம் தலைக்கேறிய இந்த சாதிவெறிக் கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் யாரும் வயதானவர்கள் அல்ல. செல்பேசியும், இருசக்கர வாகனங்களும் இன்னபிற நவநாகரீகங்களைப் பயன்படுத்தியும், விஜய் டி.வியைப் பார்ப்பவர்களாவும் உள்ள இளைஞர்கள்தான். தமது தங்கைக்கு அவளது கணவனது பிணத்தையே திருமணப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள், அந்தப் பாசமிகு அண்ணன்மார்கள். தஞ்சையில் இனி ஒரு கள்ளர் பெண்ணை ஒரு தலித் கை வைக்க நினைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு பாடம் என்று தஞ்சை வாழ் கள்ளர் குலக் கூட்டங்கள் வீரக்கதையாக பெருமை பேசும். கல்லூரிக்கு செல்லும் கள்ளர் மாணவிகளும் இந்தக்கதை மட்டுமல்ல இதற்கு முன்னால் நடந்த பல கதைகளையும் மனதில் கொண்டு காதலைக் கற்பனையில் கூட அரங்கேற்றாத மனநிலையை வளர்த்துக்கொள்வார்கள். காதலின் முன்னுதாரணங்களை இலக்கியத்தின் வழியாக ஷாஜகான் – மும்தாஜ், அனார்கலி – சலீம், ரோமியோ – ஜூலியட் போன்ற காதலர்களை வைத்து யாரும் சிந்திக்க முடியாது. இங்கே கொலை செய்யப்பட்ட காதலர்களின் கதைதான் காதலின் யதார்த்த இலக்கியமாகக் கட்டியம் கூறுகின்றன.

காதலர்களை எரிப்பது காலம் காலமாக நடக்கும் ஒரு இந்தியச் சடங்கு!
இது இந்தியக் காதலின் உண்மை முகம். கலப்பு மணம் செய்த காதலர்கள் கட்டி வைத்து எரிப்பது இங்கு நெடுநாள் இருக்கும் ஒரு சடங்கு. சில ஆண்டுகளுக்கு முன்னர் விருத்தாசலம் அருகே ஒரு கிராமத்தில் ஒரு தலித் இளைஞனும், ஒரு வன்னியப் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதையறிந்து ஆத்திரமடைந்த மணமகள் தரப்பு இருவரையும் பிடித்து ஊர்கூடி ஆதரிக்க எரித்துக் கொன்றார்கள். ஒரு காதல் ஜோடி எரிந்து சாவதை ஊரின் வன்னியர்கள் திரண்டு வந்து வாழ்த்தும் போது அந்த சாதி வெறியின் வன்மத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பல சமூக ஆர்வலர்களின் முயற்சிக்குப் பிறகு இப்போதுதான் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. வழக்கு முடிவடையவில்லை என்பதால் குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருவதோடு எப்படியும் விடுதலை ஆவோம் என்று திமிராகவும் பேசிவருகிறார்கள். ஊரே இந்த எரிப்பில் பங்கெடுத்திருக்கும் போது சட்டம் மட்டும் என்ன செய்யும்?

சட்டமும், போலீசும், மொத்தத்தில் இந்த சமூக அமைப்பும் காதலர்களுக்கு எதிராகத்தான் அணிவகுக்கிறது. சாதி மாறி காதலிப்பதில் அதுவும் ஒரு தலித்தாக இருந்துவிட்டால் தண்டனை நிச்சயம் என்பதுதான் யதார்த்தம். ஆதிக்க சாதியின் பெண்ண ஒரு தலித் தொடுவதை சாதியின் புனிதம் கெட்டுப்போவதாக சாதிவெறி இயல்பாக சிந்திக்கிறது. இத்தகைய அடக்குமுறைகளுக்குள்ளே வாழும் ஒரு பெண்ணுக்கு காதலிக்கும் சுதந்திரம் எங்கே இருக்கிறது?

காதலில் மட்டுமல்லா கடவுளிலும் இதே சாதிவெறி அடங்காமல் நர்த்தனமாடுகிறது. சேலம் கந்தம் பட்டி கிராமத்தில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவிலில் வழிபடுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை. வன்னியர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தக் கோவிலில் வழிபடும் உரிமைக்காக தலித் மக்கள் நெடுங்காலமாக போராடி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றம் வழிபடும் உரிமையை அமல்படுத்துமாறு உத்தரவிட்டதும் இம்மாதம் 8ஆம் தேதி போலீசார் பாதுகாப்புடன் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து அம்மனை வழிபட்டனர். இதை எதிர்த்த வன்னியர் தரப்பின் 200 குடும்பங்கள் மதுரை உத்தப்பரம் பிள்ளைமார்கள் செய்தது போல ஊரைக் காலி செய்து விட்டு அருகாமை மலையில் தங்கி போராட்டம் செய்கிறார்கள். அதிலும் சில வன்னிய சாதி வெறியர்கள் கோவில் இருந்தால்தானே கும்பிட வருவாய், கோவிலையே இடித்துவிடுகிறோம் என்று பேசி வருகிறார்கள். கோவிலின் புனிதம் கூட சாதிவெறிக்கு தப்பவில்லை.

காதலித்தால் எரிப்பார்கள்: கும்பிட்டால் கோவிலையே இடிப்பார்கள். இப்போது சொல்லுங்கள் எது காதல்? காதலுக்குத் தேவைப்படுவது என்ன?

Advertisements

One Response to “காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா அரிவாளா?”

  1. Anonymous Says:

    காதலை ஊடகங்கள் சரியான பார்வையில் காட்ட வேண்டும். இல்லையெனில் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கும்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: