போப் கேட்கும் மன்னிப்பு!


மதத்தின் கொள்கைகள் காலத்தால், தோல்வியைத் தழுவி வருவதை ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் உறுதிப்படுத்தி வருகின்றன. இப்போது உலக கத்தோலிக்கர்களின் தலைவராக விளங்கும் போப்,மன்னிப்புக் கேட்டுள்ள செய்தி ஒன்று வெளி வந்துள்ளது. இந்த மன்னிப்பு – கத்தோலிக்க பாதிரியார்களுக்காக கேட்கப்பட்டதாகும். பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கும் பாதிரியார்களே, ‘பாவங்களின்’ தந்தையாகி விட்டனர்.

ஜெர்மனி, அயர்லாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து,அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக அயர்லாந்து நாட்டிலிருந்து அதிகமான புகார்கள்,இது பற்றி போப்புக்கு வந்தன. அயர்லாந்து அரசே இது பற்றி விசாரிக்க ஆணையம் ஒன்றை அமைத்தது. விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன. பல பாதிரியார்கள் சிறுவர்களுடன் உடல் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

ஜெர்மன் நாடாளுமன்றத்தின் கீழ்சபை துணைத் தலைவர், உல்ப் கேங்தியர்ஸ், போப் பெனடிக்டை சந்தித்து, குற்றமிழைத்த பாதிரியார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். போப் – வாடிகனில் உயர்மட்ட அதிகாரிகளைக் கூட்டி, ஆலோசனை நடத்தி, இந்த முறைகேடான உறவுகளால் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்புக் கேட்டு கடிதங்களை எழுதியுள்ளார். ஆனால், போப்பின் மன்னிப்பு கடிதம், அயர்லாந்து நாட்டில் நடந்த சம்பவத்துக்கு மட்டும்தான். இதனால் மற்ற நாட்டு கத்தோலிக்கர்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள தவறிழைத்த பாதிரியார்களை ஏன் கண்டிக்கவில்லை என்று, போப் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். அயர்லாந்து நாட்டின் கத்தோலிக்கர்களின் தலைமை பாதிரியார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை கத்தோலிக்கர்களிடம் வலிமையடைந்து வருவதால், அவரும் மன்னிப்புக் கோரியுள்ளார். கடந்த காலங்களில் பல கத்தோலிக்க பாதிரியார்கள், இதுபோல் செய்த தவறுகளை மூடி மறைத்துவிட்டார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு.

பிரேசில் நாட்டின் ‘எஸ்பிடி’ தொலைக்காட்சி நிறுவனம், 82 வயது பாதிரியார் 19 வயது இளைஞருடன் உறவு கொண்ட காட்சியை ரகசியக் காமிராவில் படம் பிடித்து கடந்த வாரம் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து மூன்று பாதிரியார்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

‘நித்யானந்தாக்கள்’, ‘ஜெயேந்திரர்கள்’ இங்கு மட்டுமல்ல, உலகம் முழுதும் பரவியே இருக்கிறார்கள். சிறுவர்கள் இப்படி தவறான பாலுறவுக்கு பயன்படுத்தப்படுவதற்குக் காரணமே , ஊறிப் போயிருக்கும் மத உணர்வுகள் தான் என்று மிகச்சிறந்த நாத்திகர், சிந்தனையாளர் ரிச்சர்ட்டு டாக்கின்ஸ் கூறுகிறார்.

முதலில், பாதிரியார்கள், தங்களின் பிரசாரத்தில் பெரும் பகுதியை பாவங்கள் பற்றியும், அதைச் செய்யாமல் இருப்பது பற்றியும்,அதனால் கிடைக்கும் தண்டனை பற்றியுமே பேசுகிறார்கள். இது நேர்மையற்ற பிரச்சாரம். மற்றொன்று அதிகாரத்திலுள்ள மதத் தலைவருக்கு அடிபணிவதே நல்லொழுக்கம் என்ற கருத்தை குழந்தைப் பருவத்திலே விதைத்து விடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களினால் தான் பாதிரியார்கள், தங்கள் விருப்பத்துக்கு சிறுவர்களைப் பயன்படுத்த முடிகிறது. முடிவாக அவர் முன் வைக்கும் கருத்துதான், மிகவும் ஆழமானது. பாதிரியார்களின் பாலியல் தவறுகள் கண்டிக்கத்தக்கதுதான். ஆனாலும், அதைவிட, கடுமையான குற்றம், ஒரு குழந்தையை கத்தோலிக்க நம்பிக்கையில் வளர்த்து, அதனால் நீண்டகாலம், உளவியல் சிதைவுக்கு அவர்களை உள்ளாக்குவதுதான் என்று டாக்கின்ஸ் கூறுகிறார்.

எனவே – மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகளின் முறைகேடுகளுக்கு அவர்களின் அந்த செயல்பாடுகளில் குற்றங்களை தேடுவதைவிட, அந்தக் குற்றங்களை செய்வதற்கேற்ற உளவியலை உருவாக்கித்தரும், மதங்களின் கருத்தியல்களைத்தான் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. ‘பாவிகள் நரகத்தில் எரித்துத் துன்பத்துக்குள்ளாக்கப்படுவார்கள்’ என்றும், பெண்கள் எப்போதுமே ஆண்களுக்கு உடைமையானவர்கள் என்றும் கூறப்படும் வாசகங்களும், அதன் மீதாக பதிந்துள்ள நம்பிக்கை யுமே மிக மோசமான விளைவுகளை உண்டாக்கக் கூடியவை.

நித்யானந்தாவின் ‘காதல்-காம காட்சிகளை’ பக்கம்பக்கமாக வெளியிடும் ஊடகங்கள், அதற்கேற்ப பாதிக்கப்பட்டவர்களை பணிந்து போக வைக்கும், மத நம்பிக்கைகளையும், ஆன்மிகவாதிகளை மிகவும் உயர்ந்த ‘புனிதவான்கள்’ என்று மனத்தளவில் பதியச் செய்துவிட்ட மதக் கோட்பாடுகளையும் தகர்த்து எறியத் தயாராக இல்லை! இத்தகைய ‘பாலியல்’ வக்கிரங்கள் தொடருவதையே விரும்புகிறார்கள்; அப்போதுதானே அவர்களின் வர்த்தகம் செழிக்கும்.

எனவே சமூக நாகரிகத்தை சீர்குலைப்பதற்கு ஒத்திசைவான உளவியலைக் கட்டமைக்கும் மதக் கருத்தியல்களுக்கு எதிரான பிரச்சாரங்களும், மதப்பிடியிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் செயல்பாடுகளுமே, இன்றையத் தேவையாக இருக்கிறது. கடவுளைவிட மதங்கள் ஆபத்தானவை என்று பெரியார் கூறுகிறார். ‘எல்லா கடவுளும் ஒன்றுதான்’ என்று கூறினால், மதவாதிகள் அவ்வளவாக எதிர்க்க மாட்டார்கள். ஆனால் எல்லா மதங்களும் ஒன்றுதான். தனித்தனி மதங்கள் கிடையாது என்று கூறினால், மதக் கலவரமே, வெடிக்கத் தொடங்கிவிடும்! என்று பெரியார் அதற்கு விளக்கமளித்தார். போப்புகள் மன்னிப்புக் கேட்பது மதங்களின் தோல்வியை ஒப்புக் கொள்வதேயாகும்.

Advertisements

One Response to “போப் கேட்கும் மன்னிப்பு!”

  1. Anonymous Says:

    i understand this!!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: