தோழர் சீமான் அவர்களுக்கு…


தமிழ்நாட்டில் காங்கிரஸ்கட்சிக்கு எவன் தலைவனாக அறிவிக்கப்பட்டாலும் அவனது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அந்தத் தலைவன் அறிவிக் கும் முதல் செய்தி “தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளை ஒழித்து காமராசர் ஆட்சியை மலரச்செய்வோம்” என்பதாகத்தான் இருக்கும். அதேபோல தமிழ்நாட்டில் புதிதாக யார் அமைப்பு தொடங்கினாலும், அல்லது தமது அமைப்பை விளம்பரப்படுத்த வேண்டும் என்று எண்ணினாலும் அவர்கள் அவசியம் சொல்லும் முக்கிய வசனம் “திராவிடம் திராவிடம் என்று சொல்லி தமிழ்நாடு முன்னேறாமல் போய்விட்டது, திராவிடக் கட்சிகளை ஒழிப்போம்” என்பதாகத்தான் இருக்கும்.

இப்படி திராவிட எதிர்ப்புச் சவடால் அடிக்கும் அனைவருமே அதுவரை திராவிடக் கட்சிகள் என்று இவர்கள் சொல்லிக்கொள்ளும் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்தவர்களாகத்தான் இருப்பார்கள். திராவிடர் இயக்கங்களால் முகவரி பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வரிசையில் மிக அண்மைக் காலத் தில் அறிந்தோ அறியாமலோ இணைந்திருக்கிறார் தோழர் சீமான்.

கடந்த 29.08.2009 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கப் பொதுக்கூட்டத்தில் எதற்காக நாம் தமிழர் இயக்கம்? என்ற கேள்வியைக் கேட்டு அதற்கு அவரே ஆவேசமாகப் பதிலைத் தருகிறார்,

“ இல்லாத திராவிட இனத்திற்கு உழைக்க பல கட்சிகள் இருக்கும்போது இருக்கிற தமிழினத்திற்கு உழைக்க ஒரு இயக்கம் கூட இல்லாத நிலை யில் நாம் தமிழர் இயக்கம் உருவாகிறது”

என்று முழங்கியுள்ளார். அந்த 30 நிமிடஉரையில் 15 நிமிடங்கள் திராவிடம் என்ற கருத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முக்கியமாக

“இல்லாத திராவிட இன உணர்வை நமக்குக்காட்டி அதற்காக அரசியல் செய்ய பல்வேறு இயக்கங்கள் இங்கே இருக்கின்றது. ஆனால் உண்மையிலேயே நீயும் நானும் திராவிடனா?”

“காவிரியில் நான் தண்ணி கேட்கும்போது விரட்டி விரட்டி அடிக்கிறானே எடியூரப்பா அவன் திராவிடனா? மலையாளி அச்சுதானந்தன் திராவிடனா?”

“என் தங்கையும் அக்காளும் அம்மணமாக நின்றபோது ஒரு திராவிடனும் ஆத்திரப்படவில்லையே ஏன்?

“தமிழன் அல்லாதவர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம் அவர்களுக்கு திராவிடம் தேவைப்படுகிறது”

இப்படிப்பல குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். அதன் பிறகு இந்தியன் ரிப்போர்ட் டர் செப்டம்பர் 2009 இதழில்

“ திராவிடம் என்பது இப்போது திராவகம் ஆகிவிட்டது”

என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் மட்டுமல்ல. பெ தி க வின் மேடைகளிலிலேயே பலமுறை பெரியாரியலுக்கு எதிராகப் பேசியுள்ளார். இதுவரை யாரும் அவருக்கு மறுப்புக்கூறவில்லை. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பெ தி க வின் மிக முக்கியத் தோழர் ஒருவரிடம் தொலைபேசியில் இதே கருத்தை தோழர் சீமான் பேசியிருக்கிறார். அந்தப் பேச்சு பதிவு செய்யப்பட்டு சென்ற ஆண்டே என்னிடமும் மேட்டூர் தோழர்கள் சிலரிடமும் ஒலிபரப்பப்பட்டது.ஏதோ அறியமையில் பேசிவிட்டார், இதைப் பெரிது படுத்த வேண்டாம் என விட்டுவிட்டோம். அதன் பிறகு மதுரையில் நாம் தமிழர் இயக்கத்தின் முதல் கூட்டத்தின் முடிவில் இதே கருத்தை தோழர் சீமானின் நெருங்கிய மதுரைத் தோழர் ஒருவர் பேசியிருக்கிறார். உடனே அந்த இடத்திலேயே அவரிடத்திலேயே பெ தி க வின் மதுரைப் பொறுப்பாளர்கள் திருத்தம் சொல்லி இருக்கிறார்கள். உடனே பெ தி க வின் மதுரைத் தோழரை நாம் தமிழர் இயக்க மாநிலப்பொறுப்பாளர் சட்டையைப் பிடித்து உன் சங்கை அறுப்பேன் என மிரட்டியுள்ளார். ( இச்சம்பவம் தோழர் சீமானின் கவனத்துக்குப் போனதா எனத் தெரியவில்லை)

பெ தி க வின் முதல் மாநாட்டிலேயே பார்ப்பன ஜெயலலிதாவைப் பற்றி பெ தி க தோழர் ஒருவர் ஒருமையில் பேசியதற்கு அந்த மேடையிலேயே அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. தோழர் அறிவுமதி அவர்கள் “அலகு குத்துவது தமிழர்களின் பண்பாடு அதை மூடநம்பிக்கையாகப் பார்க்கக்கூடாது” என்று பேசியபோது என்னதான் அவர் நமக்கு நண்பராக இருந்த போதிலும் பெரியார் முழக்கத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பொடா எதிர்ப்புக் கூட்டங்களில் துணிச்சலுடன் பங்கேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து பெ தி க வின் மாநாடுகளை அலங்கரித்து வந்தார். அவரே ஈழம் பற்றி முரண்பட்ட போது விரட்டப்பட்டு ஓடி ஓடித் தலைமறைவாக வைத்தனர் கோபி பெ தி க தோழர்கள். பெ தி க வின் பன்முகப்பட்ட பணிகளில் பல்வேறு கருத்துநிலையில் உள்ள தோழர்கள் கரம் கோர்க்கின்றனர். யாராக இருந்தாலும் பிரச்சனையின் அடிப்படையில் ஆதரவையும் எதிர்ப்பையும் தோழர்கள் அவசியம் காட்டியிருக்கிறார்கள். அதுபோலத்தான் தோழர் சீமான் அவர்கள் ஈழம், பகுத்தறிவு குறித்த களங்களில் பெ தி க வுக்கு உடுக்கை இழந்தவன் கைபோன்ற தோழமையான கரங்களுக்குச் சொந்தக்காரர். மாற்றுக் கருத்து இல்லை. அதனால் தான் புதுவைத் தோழர்கள் பெ தி க மேடையிலேயே சீமான் படத்தை வைத்திருந்தனர். பெ தி க தொடங்கியபோது வாழும் தலைவர்கள் யார் படத்தையும் பெயரையும் அமைப்புக் கூட்டங்களில் முன்னிலைப்படுத்தக்கூடாது என உறுதி எடுத்திருந்த போதிலும் அது தவறு எனத் தெரிந்திருந்த போதிலும் அதைச் செய்தனர். பாராட்ட வேண்டி வந்தால் இப்படித்தான் எல்லைகடந்து பாராட்டுவோம். அதே சமயம் எமது அடிப்படைக் கொள்கைக்கு விரோதமாக வந்தால் எதிர்ப்பும் எல்லைகடந்துதான் இருக்கும்.

திராவிடர் என்ற கருத்தியல் ஆரியப் பார்ப்பனர்களுக்கும் ஆரியக் கைக்கூலிகளுக்கும் எட்டிக்காயாகக் கசக்கும் இது வரலாறு,

செத்துப்போன காஞ்சி சங்கராச்சாரி ‘திராவிடர்’ என்ற சொல்லைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

“ மேனாட்டு வரலாற்று ஆசிரியர்கள் ஆரியர் என்ற சொல்லால் இந்தியாவிலுள்ள பிராமணர்களைக் குறிக்கிறார்கள். திராவிடர் என்ற சொல்லால் பிராமணரல்லாத வரைக் குறிக்கிறார்கள். இப்படி ஆரியர் – திராவிடர் என்ற பேதத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பிராமணர் – பிராமணரல்லாதார் என்ற வேற்றுமையை வளர்த்து அதன் மூலம் இந்து மதத்தினுடைய ஒற்றுமைக்கே உலைவைக்க முயற்சி செய்கிறார்கள்”.

( இந்து தர்மங்கள் நூல் வானதி பதிப்பகம், 6 ஆம் பதிப்பு பக்கம் 94 )

பார்ப்பனர்களையும், இந்து மதத்தையும் காப்பாற்றத் துடித்த சங்கராச்சாரிக்கு திராவிடம் என்ற சொல் திராவகமாகத் தான் தெரியும். ஆனால் தமிழர்களுக்கு உழைக்க நினைக்கும் சீமானுக்கும் அது திராவகமாகத் தெரிகிறதென்றால் அவர் பார்ப்பன தாசனாக ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீமான் சீமானாக அவதாரம் எடுக்கிறார் என்றுதான் புரிகிறது.

முதலில் திராவிடம் என்பதை சீமான் எப்படிப் புரிந்துள்ளார் என்று தெரிய வில்லை. திராவிடம் என்பது தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களைக் குறிக்கும் சொல் அல்ல. அப்படி இந்த நான்கு மாநில மக்களுக்காவும் பாடுபடுவதாகச் சொல்லும் அரசியல் கட்சிகள் எவையும் இங்கு இல்லை. ஒட்டு மொத்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில மக்களுக்காக உழைக்கும் கட்சிகள் இயக்கங்கள் எவையும் இங்கு இல்லை. திராவிடம் என்ற சொல்லை தமிழ் சமூக மாற்றத்திற்காகப் பயன்படுத்திய பெரியாரின் இயக்கங்களைத் தவிர வேறு எவரும் பயன்படுத்துவதில்லை. பெரியார் திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள்தான் திராவிடம் என்ற சொல்லை இன்னும் பெரியார் சொன்ன பொருளில் பயன்படுத்தி வருகின்றனர். பெ தி க வின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 19.04.2005 அன்று சுப வீ அவர்களின் இடது சாரித்தமிழ்தேசியம் நூல் வெளியீட்டுவிழாவில் பேசியுள்ளதைப் படியுங்கள்.

….பெரியாருடைய தமிழன், திராவிடன் என்பவை பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பெரியார் தமிழ்த் தேசியத்திற்கு எதிரி என்றுதான் பெரும்பாலும் பேசப்பட்டு வந்தது. பெரியார் திராவிடன் என்று சொன்ன காரணத்தால், திராவிடர் கழகம் என்று பெயர் வைத்த காரணத்தால், அவர் தமிழினத்திற்கு எதிரி; மற்ற திராவிட இனத்தைச் சார்ந்த மற்ற தேசீய இனங்கள் நம்மைச் சுரண்டுவதற்கும், அழுத்துவதற்கும் நாம் மானங்கெட்டு இருப்பதற்கும் பெரியார் சொன்ன திராவிடம் தான் காரணமாக இருந்தது என்றெல்லாம் சொன்னார்கள்….

….பெரியார் நான்கு மாநிலத்தையும் ஒன்றாக இணைக்கிற தேசியத்தை தான் கொண்டிருந்தார் என்பது சரியான கருத்து அல்ல. 1938ல் கடற்கரையில் நடந்த இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில், செப்11-ல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை வைக்கிறார். ஆனால், அப்போது சென்னை ராஜதானியத்திலுள்ள மலையாளிகளும், கன்னடியர்களும், தெலுங்கர்களும் ஆகிய எங்கள் நிலை என்னாவது? என்று கேட்ட போது யார் யார் கேட்கின்றார்கள் என்றால், அண்டைய மாநிலத்தில் வாழுகிற எல்லா மலையாளிகளும், எல்லா தெலுங்கர்களும், எல்லா கன்னடியர்களும் அல்ல – சென்னை ராஜதானியிலுள்ள மலையாளிகளும், கன்னடியர்களும், தெலுங்கர்களு மாகிய எங்கள் நிலை என்னாவது என்று சொன்னபோது நான் திராவிட நாடு திராவிடருக்கே என்று முழக்கத்தை மாற்றிக் கொண்டேன் என்று சொல்கிறார். ஆனால் இப்படி மாற்றிக் கொண்ட காலத்திலெல்லாம் கூட அவர் திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை 1939லிருந்து 55 வரையிலும் சொல்லுகிறார். ஆனால் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்னால் இன்னும் ஏன் அதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் வைக்கிறார். அதுவும் சொல்கிறார் இந்த தெலுங்கனுக்கும், கன்னடனுக்கும் மலையாளிக்கும், ஆரிய எதிர்ப்புணர்வோ, வடநாட்டு எதிர்ப்புணர்வோ சிறிதும் இல்லை. அவர்கள் எல்லாம் நல்ல வேளையாகத் ஒழிந்து விட்டார்கள். எனவே மீண்டும் முழக்கமிடுவோம் தமிழ்நாடு தமிழருக்கே என்று சொல்லு கிறார். அதற்கு முன்பு அவர் சொல்லுகிற போது கூட ஒவ்வொரு இடத்திலும் அவர் தமிழ்நாடு, தமிழ்நாடு என்று தான் சொல்லுகிறார். தன்னுடைய எல்லா அறிக்கைகளிலும் – அதுவும் திராவிட நாடு என்று பேசிக் கொண்டிருகிற காலத்தில் கூட, சொல்லுகிறேன், அவர் பேசிய திராவிடநாடு என்பதன் உள்ளடக்கம் தமிழ் நாடாகவே இருந்தது…

….இதுவரை எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தும் ஒன்றும் முடியாததால்தான் இன்று, தமிழ்நாடு தமிழருக்கே (அடைப்புக் குறிக்குள் திராவிட நாடு திராவிடருக்கே) ஆக வேண்டும் என் கின்ற கிளர்ச்சி செய்கின் றோம். திராவிடநாடு என்பதை அடைப்புக் குறிக்குள் போட்டுத் தான் எழுதுகிறார்.
எனவே ஒட்டு மொத்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில மக்களுக்காக திராவிடம் என்ற பெயரை முன் வைத்து எந்தக் கட்சியும் எந்த இயக்கமும் இங்கு இயங்கவில்லை என்பதையும் பெரியாரும் அந்தப் பொருளில் அரசியல் நடத்தவில்லை என்பதையும் முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அப்படியானால் எதற்காக திராவிடம் என்ற கருத்தைப் பெரியார் பேசினார்? அவரது உரையையே பாருங்கள்.

“தமிழ்நாடு என்பது திராவிடநாடு என்றும், திராவிடநாடு என்பதானது இன்னது என்றும் வெகு காலமாகவே அய்ரோப்பிய அறிஞர் முதல் பல உலக ஆராய்ச்சிக்காரர்களாலும், இந்திய சரித்திர ஆராய்ச் சியாளராலும் எல்லை காட்டி வகுக்கப்பட்டி ருக்கிறது என்றும் நான் இது விஷயமாய்ப் பேசுகிற இடங்களில் எல்லாம் இதைப் பற்றி விளக் கிப் பேசியே வந்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலாகிய மொழிகளைத் தாய் மொழியாகப் பேசிவந்த மக்களையே மிகுதியாகக்கொண்ட நாடுகள் இன்று திராவிடம் என்று சொல்லப்படுவது யாவரும் அறிந்ததேயாகும். அந்தத் திராவிடம் என்பது பெரிதும் சென்னை மாகாணமாகவே இருக்கிறதுடன் மற்றும் சிறிது சென்னை மாகாணத்தைத் தொட்ட சுற்றுப்புறநாடாகவும் இருக்கிறது

இந்த விஸ்தீரணத்திற்குட்பட்ட முஸ்லீம்களும் கிறிஸ்துவர் களும். தாழ்த்தப்பட்ட மக்களும், தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் அல்லாத மற்ற இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களும் ஆகிய எல்லோரும் திராவிடர்கள் என்ற தலைப் பின் கீழ் வருவார்கள்”.

(பெரியார் ஈ.வெ.ரா.சி.-2-பக்-655)

“தமிழும், தமிழ்நாடும், தமிழ்மக்களும் இப்படி பிரிந்து கிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிடநாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிட கலாச் சாரம் என்றும் எடுத்துக் காட்டிப் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம்.

‘தமிழ்’ என்பதும் ‘தமிழர் கழகம்’ என்பதும் மொழிப் போராட்டத்திற்குத் தான் பயன்படுமேயொழிய இனப்போராட் டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன் படாது. சரி, ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்தித் தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச்சாரத்தைத் தடுத்துத்தான் நம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும் நம் கலாச்சாரத்தை மறந்து ஆரிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களுக்குக் கீழான மக்களாக- அவர்களுடைய வைப்பாட்டி மக்களாக சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம்.

எனவே, அக் கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டு மென்றால், மொழிப் போராட்டம் ஒன்றினால் மட்டும் வெற்றி பெற்று விடமுடியாது. கலாச்சாரத்தின் பேரால்- இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் நாம் விடுதலை பெற்றவராவோம்.

மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதி தானேயொழிய முழுப் போராட்டமாகவே ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்கவழக்கங்கள், புராணங்கள், இதி காசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றி லிருந்து மே நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்து விடமாட்டா”-

(மேற்கண்ட நூல்-பக்-682-683.)

“பிராமணர், பிராமண மகாசபை வைத்துக் கொள்ளுகிறார்கள். அதனால் அவர்களுக்குப் பெருமையும் உரிமையும் கிடைக் கின்றன. நாம் நம்மைச் சூத்திரன் என்று கூறிக் கொண்டால் உயர் சாதியானுக்கு அடிமையாயிருக்கும் உரிமை தான் கிடைக்கும். பார்ப்பானின் தாசிமக்கள் என்ற பட்டம் தான் கிடைக்கும். அந்தச் சூத்திரத் தன்மையை ஒழிப்பதையே நமது முக்கிய வேலையாகக் கொண்டிருப்பதால் தான். அப் பெயரால் எவ்விதச் சலுகையோ உரிமையோ கிடைக்காததால் தான். அப் பெயரிலுள்ள இழிவு காரணமாகத்தான், அத்தலைப்பில் அதே இழிதன்மையுள்ள திராவிடராகிய முஸ்லீம்கள், கிறிஸ்து வர்கள், வைசியர்கள், சத்திரியர்கள், வேளாளர்கள், நாயுடு, கம்மவார், ஆந்திரர், கன்னடியர், மலையாளிகள் ஆகியவர்களெல்லாம் ஒன்று சேர மறுத்து விடு வார்கள், ஆதலால் தான், நம்மை சூத்திரர் என்று கூறிக் கொள்ளாமல் திராவிடர் என்று கூறிக் கொள்ளுகிறோம். சூத்திரர் என்பவர்களுக்குத் ‘திராவிடர்’ என்பது தவிர்த்து வேறு பொருத்த மான பெயர் யாராவது கூறுவார்களானால், அதை நன்றியறிதலு டன் ஏற்றுக் கொண்டு எனது அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் பெயரில் நான் மேலே கூறிய அத்தனை பேரும் ஒன்று சேர வசதியிருக்க வேண்டும். அதில். சூத்திரனல்லாத ஒரு தூசி கூடப் புகுந்து கொள்ள வசதியிருக்கக் கூடாது. அயலார் புகுந்து கொள்ளா மல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டும். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்து கொள்ள முடியாது”.

(மேற்கண்ட நூல்-பக்-549)

சீமான் அவர்களே நீங்களும் நாங்களும் திராவிடர்கள் தான். இல்லை இல்லை நான் தமிழன் என்று தான் சொல்கிறீர்களா? பெரியாரின் அடுத்த வரிகளையும் படியுங்கள்.

“திராவிடர் என்பதற்கு பதிலாக ‘தமிழர்கள்’ என்று ஏன் வழங்கக் கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே- பார்ப்பனர்கள், தாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். ‘நாங்களும் தமிழ் நாட்டில் பிறக்கிறோம். வளர்கிறோம், தமிழே பேசுகிறோம். தமிழ் நாட்டி லேயே இருக்கிறோம். அப்படி இருக்கும் போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூறமுடியும்? என்று கேட்கிறார்கள். ஒருகாலத்தில் தமிழர் என்பது ‘தமிழ் (திராவிட) பண்பு உள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடு மானாலும்- இன்று அது மொழிப் பெயராக மாறி விட்டிருப் பதால், அம்மொழி பேசும் ‘ஆரியப் பண்புடைய’ மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன் வந்து விடுகிறார்கள். அதோடு ஆரியர் பண்பை நம்மீது சுமத்த, அந்தச் சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள்.

அவர்களும் நாமும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தால் தான் நாம் சூத்திரர்களாகிறோம். ஆகவே, நம் கூட்டத் திலிருந்து அவர்களை விலக்கிப் பேசித்தான் நம்மைத் திராவிடர் கள் என்று அழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மில் தமிழன் என்று சொல்லும் ஏமாளிகளைத்தான் பார்ப்பனர்களால் ஏமாற்ற முடியுமேயொழிய ‘திராவிடர்’ என்றால் அவர்களால் ஏமாற்ற முடியாது.“

(மேற்கண்ட நூல்-பக்-556)

“திராவிட – தமிழக என்ற பேரைக் கண்டு எவனாவது முகம் சுளித்தால் அவன் முகத்தில் காரித்துப்புங்கள்! தனது தாய் நாட்டின்- தனது இனத்தின் பேரைக்கேட்டு முகம் சுளிக்கும் துரோகியின் கூட்டுறவில் நமக்கு என்ன நன்மை விளைய முடியும்?”

(-மேற்கண்ட நூல்-பக்-616)

இதற்கு மேலும் இதைப் படித்து புரிந்து கொண்ட பிறகும் திராவிடம் என்பது பற்றி எதிராகப் பேசமாட்டீர்கள் என நம்புகிறோம்.

“காவிரியில் நான் தண்ணி கேட்கும்போது விரட்டி விரட்டி அடிக்கிறானே எடியூரப்பா அவன் திராவிடனா? மலையாளி அச்சுதானந்தன் திராவிடனா?” என்று பேசியிருக்கிறீர்கள்

தம்பியில் கன்னடநாட்டு பூஜாவை கதாநாயகியாக்கினீர்களே? வில்லனாக ஒரு மலையாளியை அறிமுகப்படுத்தினீர்களே? வாழ்த்துக்களில் மலையாள பாவனாவைக் கதாநாயகியாக்கினீர்களே? மலையாள நடிகர் பிருதிவிராஜின் தாயாரை அறிமுகப்படுத்தினீர்களே? இனியவளே யில் ஆந்திர கவுதமியை கதாநாயகியாக்கி னீர்களே? கர்நாடகாக்காரன் காவிரியில் தண்ணீர் தரவில்லை என்பதும் கேரளாக்காரன் முல்லைப் பெரியாறில் தடைபோடுகிறான் என்பதும் ஆந்திராக்காரன் பாலாற்றில் தகறாறு செய்கிறான் என்பதும் அப்போதெல்லாம் தெரியவில்லையா?

“இல்லாத திராவிட இன உணர்வை நமக்குக்காட்டி அதற்காக அரசியல் செய்ய பல்வேறு இயக்கங்கள் இங்கே இருக்கின்றது. ஆனால் உண்மை யிலேயே நீயும் நானும் திராவிடனா?”

இந்தியன் ரிப்போர்ட்டர் இதழில்

“திராவிடம் இப்போது திராவகமாகி விட்டது”

என்றும் கூறியிருக்கிறீர்கள். உண்மையில் திராவிடன் என்பதை விட தமிழன் என்பதுதான் மிகவும் கேவலப்பட்டு நிற்கிறது என்பதை கொஞ்சம் விளக்கமாக உங்கள் பாணியிலேயே பார்ப்போம்.

இன்றைய மலையாளி அன்று சேரனாகத்தானே இருந்தான். கருர் சேரர்களின் தலைநகராக இருந்திருக் கிறது. உங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள தொண்டி கூட சேரர்களின் தலைநகராக இருந்திருக்கிறது. நியாயமாக முல்லைப் பெரியாறில் தகராறு செய்யும் அச்சுதானந்தன் சேரநாட்டுத் தமிழனின் வாரிசு தானே? தமிழன் தானே?

தென்னிந்தியா முழுமைக்கும் ஆண்ட தமிழன் இராஜராஜசோழனின் தாயாரும் சுந்தரசோழனின் மனைவியுமான வானவன் மாதேவி எந்த நாட்டைச் சேர்ந்தவள்? சேர நாட்டுப் பெண். 9 ஆம் நூற்றாண்டிலேயே கலந்துவிட்டது. இராஜஇராஜ சோழனே மலையாளப் பெண்ணுக்கும் தமிழ்நாட்டு ஆணுக்கும் பிறந்தவன்தான்.

அதே இராஜராஜனின் மகள் குந்தவை (அக்காள் அல்ல) சாளுக்கிய ( கன்னட ) நாட்டு விமலாதித்தனை திருமணம் செய்துள்ளார். இராஜராஜனுக்கு மகனான இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்காதேவி நரேந்திரன் என்ற கீழைச்சாளுக்கியனை அரசனைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் முதலாம் குலோத்துங்கன்.

சோழ நாட்டு கண்ணகிக்கு சேரன்தானே கோவில் கட்டி வைத்துள்ளான். அந்தக் கோவிலுக்கு சோழனும் பாண்டியனும் பல்லவனும் வரக்கூடாது என தடுக்கிறான். பாண்டிய நாட்டுக்கு முல்லைப்பெரியாறில் தண்ணீர் தேக்க மறுக்கிறான்.

சாளுக்கியன் காவிரி நீரை சோழ நாட்டுக்குத் தர மறுக்கிறான். உங்கள் பரம்பரைச் சண்டைதானே?

சங்க காலத்திலிருந்து பாண்டியர், சேரர், சோழர், அதியமான்கள், தொண்டைமான்கள், பதினெண்கீழ்குடி வேளிர்கள் என இவர்களுக்குள் தொடங்கிய சண்டையின் நீட்சிதானே இவை. கி.பி 600 லிருந்து கி.பி 900 வரை மட்டும் சுமார் 65 போர்கள் இப்படித்தானே நடந்துள்ளது.

பல்லவர்களின் வழித்தோன்றல்கள் நாங்கள் என வன்னியர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் யார்? பல்லவர்கள் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் தானே? அப்படியானால் வன்னியர்கள் தெலுங்கர்கள் தானே?

களப்பிரர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள். இப்போதைய முத்தரையர்கள் தான் களப்பிரர்கள் என ஒரு வரலாற்று ஆய்வு உள்ளது. அப்படியானால் முத்தரையர்கள் தமிழர்கள் இல்லையே?

தமிழர் வரலாற்றை ஊன்றிப்படித்தால் இங்கு தமிழன் என்று எவனும் இல்லை என்பதுதான் உறுதியாகும். கன்னடனும் மலையாளியும் தெலுங்கனும் தமிழனும் பிரிக்க இயலாதபடி கலந்துள்ளார்கள். இரத்த சம்பந்தமே நடந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக இனக்கலப்பு நடந்துள்ளது. எந்த மாநிலத்தோடு சண்டை என்றாலும் அது தமிழர்களுக்குள் நடக்கும் சண்டையே ஒழிய இங்கு திராவிடம் என்ற கருத்தைக் குறைகூற முடியாது.

வரலாற்றுப்படி மட்டுமல்ல, அறிவியல்படியும் இங்கு தமிழன் இல்லை. நடைமுறையிலும் தமிழன் இல்லை. இங்கு தேவர் இருக்கிறார், செட்டியார் இருக்கிறார், வன்னியர், நாடார், பள்ளர், பறையர், முத்தரையர், கவுண்டர் என ஆயிரக்கணக்கான சாதியினர் இருக்கிறார்கள். திருமணச்சடங்குகளிலிருந்து கருமாதிச்சடங்கு வரை ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. பார்ப்பான் விதித்த அடையாளம். அந்த அடையாளங்களில் தான் தமிழ்நாட்டுத் தமிழனும் மலையாளியும் ஆந்திரனும் வாழ்கிறானே தவிர தமிழன் என்ற அடையாளத்தில் எவனும் இல்லை, அப்படி தமிழன் என்று பிரித்துக்காட்ட எந்த வரையறையும் இதுவரை இல்லை. எனவே நாம் தமிழர் என்பதே இந்த நூற்றாண்டின் மாபெரும் கேலிக்கூத்து. அதுதான் என்றும் இல்லாதது. அப்படி இல்லாத தமிழினத்துக்குத்தான் தோழர் சீமான் கட்சி நடத்தப்போகிறாராம்.

காவிரி நீரை தமிழ்நாட்டுக்குத் தர மறுப்பதை மட்டும் வைத்து கேள்வி கேட்கும் தோழரே, காவிரியில் இருந்து மைசூருக்கு மைசூரில் வாழும் கன்னடர்களுக்கே குடிதண்ணீர் கூட தரக்கூடாது என அந்தக் மைசூர் குடிநீர் திட்டத்துக்கே கன்னடர்களின் கடுமையான எதிர்ப்பு இருந்ததையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டின் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட அமைப்புகள் நடத்திய முழுஅடைப்புக்கு பெங்களுர் தமிழ்ச்சங்கம் முழு ஆதரவு அளிக்கும் என கர்நாடகத் தமிழர்களின் முக்கியத் தலைவரான திரு.சண்முகசுந்தரம் அவர்கள் அறிவித்ததையும் ஞாபகப்படுத்திப்பாருங்கள். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக்கூடாது என கல்லூரி மாணவிகள் தமிழில் முழக்கம் போட்டு வந்த காட்சியை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக்கூடாது என தமிழனே அங்கு போராடுகிறான். எனவே நாம் தமிழர்களே இல்லை என ஒரு வாதத்தை வைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பெங்களுருக்குப் போகவேண்டாம், அதுகூட கன்னட நாடு. கன்னடர்களின் ஆதிக்கப்பகுதி.

ஒட்டன்சத்திரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு குடி நீர் செல்லும் குழாயை தொடர்ந்து உடைத்து நீரை தெருவில் வீணாக்கி வருகிறானே அதே ஊரைச் சேர்ந்த உயர்சாதித்தமிழன். நான் எப்படித் தமிழனாவேன்?

வீராணம் ஏரியிலிருந்து சென்னையில் வாழும் தமிழனுக்கு தண்ணீர் தரக்கூடாது என வீராணம் பகுதித் தமிழன் போராடினானே. நான் எப்படித் தமிழனாவேன்?

உங்கள் ஊருக்குப் பக்கத்தில் தேவகோட்டையில் கண்டதேவியில் நாட்டார்கள் (தமிழன்) அப்பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட சமுதாயத் தோழனை ( தமிழன் ) கோயிலின் தேரின் வடக்கயிற்றைப் பிடித்து இழுக்க அனுமதிக்க மறுக்கிறார்கள். அரசாங்கமே ஒன்றாக தேரை இழுங்கள் என உத்தரவு போட்டும் இன்றுவரை அது நடக்கவில்லை. தமிழனே தமிழனை பக்கத்தில் நிற்க அனுமதிக்க மறுக்கிறான். எப்படி நான் தமிழனாவேன்?

தாழ்த்தப்பட்ட சமுதாய ஊராட்சிமன்றத்தலைவர்களை இன்னும் அந்த அலுவலகத்திற்குள்ளேயே நுழைய விடாமல் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதை எவிடன்ஸ் என்ற அமைப்பு தென் தமிழ்நாட்டில் புள்ளிவிபரங்களோடு பட்டியிலிட்டுள்ளது.

மேலவளவில் வெட்டப்பட்டவரும் வெட்டியவனும் தமிழர்கள் தானே?

ஈழத்தில் தமிழினம் அழியும்போது மலையாளிகளும், ஆந்திராக்காரர்களும் கண்டிக்கவில்லை எனவே நான் திராவிடன் இல்லை என்கிறீர்கள்.

கடந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசை அமோக வெற்றிபெற வைத்தானே அவனெல்லாம் தமிழன்தானே? மலையாளியாவது கண்டிக்கவில்லை அவ்வளவுதான். ஆனால் தமிழன் தன் இனத்தை அழித்தவனிடம் வெறும் 50 ருபாய்க்கும் 100 ருபாய்க்கும் விலைபோனானே? எனவே நாம் தமிழரே இல்லை என்று கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

மலையாளியும் கன்னடனும் தமிழினம் அழியும்போது வேடிக்கை பர்த்தார்கள். இன அழிப்புக்கு மலையாளப் பார்ப்பனர்கள் துணை நின்றார்கள். உண்மைதான். ஆனால் தன் சொந்த இனத்தை அழித்த கொலைவெறிக் கூட்டத்தோடு கூட்டு வைத்து திரைப்படம் எடுக்கிறானே தமிழன்?

விளக்கமாகச் சொல்கிறேன். இலங்கையில் வாழ்த்துக்கள் படப்படிப்பு நடந்தபோது அதன் கதாநாயகன் பார்ப்பன மாதவன் இடையில் ஒருநாள் விடுமுறை போட்டு அவசர அவசரமாக சென்னை வந்தான். சென்னையில் அப்போதைய இலங்கைத் துணைத்தூதர் அம்சா ஏற்பாடுசெய்த சிங்களத்திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சென்றான். தமிழ்நாட்டில் மீடியாத் துறையை தமிழின அழிப்புக்கு ஆதரவாக மாற்றியன் அம்சா. அவன் நடத்திய சிங்களத்திரைப்பட விழாவில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்ட ஒரே நடிகன் மாதவன் மட்டுமே. வடக்கின் வசந்தம் திட்டத்தில் எம்.எஸ்.சாமிநாதனின் குழு கலந்துகொள்ளக்கூடாது என போராட்டம் நடத்தும் சீமான் அவர்களே, மீண்டும் உங்கள் “சீமானின் கோபம்” படத்தில் அந்த அம்சாவின் நண்பன் பார்ப்பன மாதவனை நடிக்கவைக்கிறீர்களே! எந்த மலையாளியும், எந்த ஆந்திராக்காரனும் தன் இனத்துக்கு இவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்வானா? தமிழனை அழித்தவன்கூட தமிழனே கூட்டு வைக்கிறான். எனவே தமிழன் என்பது இல்லாதஇனம் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?

“என் தங்கையும் அக்காளும் அம்மணமாக நின்றபோது ஒரு திராவிட னும்ஆத்திரப்படவில்லையே ஏன்?

அக்காளும் தங்கையும் அம்மணமாக நின்றபோது திராவிடனைத் தவிர வேறு எவனும் ஆத்திரப்படவில்லை என்பதே உண்மை. ஈழத்தமிழினம் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கிய நாளிலிருந்து கடந்த 26 வருடங்களாக பெரியார் கருத்துக்களைப் பரப்பும் பணிகளைக்கூடத் தள்ளிவைத்துவிட்டு ஈழச்சிக்கலுக்கு முதலிடம் கொடுத்து கடமையாற்றியவர்கள் திராவிடர்களே!

கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன் ஆகிய திராவிடர்களைவிட ஈழத்திற்காக அதிகமாக உழைத்த தமிழ்த்தலைவர்களைக் காட்டுங்கள். நீங்கள் விரும்பியபடி நாங்கள் பெ தி கவை விட்டு நாம் தமிழராக இணைகிறோம்.

“தமிழன் அல்லாதவர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம் அவர்களுக்கு திராவிடம் தேவைப்படுகிறது”

என முழங்கிய சீமான் அவர்களே உங்களுக்கு பெரியாரே பதில் தருகிறார்.

தமிழர்களே அட மானங்கெட்ட தமிழர்களே முதன்முதலில் தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று குரல் கொடுத்துப் போராடியவன் ஒரு மலையாளி டி.எம். நாயர்

அதற்காக ஒரு இயக்கத்தையே உண்டாக்கித் தன் பொருளை எல்லாம் இழந்தவன் ஒரு தெலுங்கன் சர்.பி.டி. தியாகராய செட்டியார்

தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காகப் போராடியவன் கன்னடியனாகிய நான். உங்கள் தமிழர் தலைவர்களெல்லாம் அப்போது எங்கே போயிருந்தார்கள்?

பெரியார் 1927 ஆம் ஆண்டிலேயே அதாவது திராவிடர் கழகம் தொடங்குவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு திராவிட சங்கத்தின் 18 ஆம் ஆண்டு விழாவில் வ.உ.சிதம்பரத்துடன் கலந்து கொண்டு பேசியுள்ளார். அந்த திராவிட சங்கத்தைத் தொடங்கியவர் சீமான் பார்வையில் தமிழர்தான். அந்த உரையில்

…இத்திராவிட சங்கம் 18-வது ஆண்டுவிழா என்று சொல்லப் படுவதால் இதற்கு 18 ஆண்டு முடிந்திருக்கிறது. நமது நாட்டில் திராவிடர் முன்னேற்ற சம்பந்தமாய் ஏதாவது இயக்கங்களின் மூலம் பேசுவதாயிருந்தால் நமது எதிரிகள் உத்தியோகத்திற்கு ஆசைப்பட்ட யாரோ சில பார்ப்பனரல்லாதாரால் சமீபத்தில் திராவிடர்கள் பெயரை சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சுயநல இயக்கமென்று சொல்லி வருவது உங்களுக்குத் தெரியும். ஆனால் இக்கழகம் அப்பேர்ப்பட்டவர்களால் ஆக்கப்பட்டதா என்பதும் சுவாமி சிவஞான யோகிகள் ஏதாவது உத்தியோகம் ஆக்கப்பட்டு கிடைக்காமல் போனதற்காக ஆரம்பித்தாரா என்பதையும் அவருக்கு ஏதாவது உத்தியோகம் வேண்டியிருக்கிறதா என்பதையும் திருவள்ளுவருக்கு உத்தியோகம் வேண்டியிருந்ததா, புத்தருக்கு உத்தியோகம் வேண்டியிருந் ததா, கபிலருக்கு உத்தியோகம் வேண்டியிருந்ததா, அவ்வைக்கு உத்தியோகம் வேண்டியிருந்ததா என்பதையும் யோசித்துப் பாருங்கள். அன்றியும் சுவாமி சிவஞ்ஞான யோகிகள் காலத்தில் மாத்திரம், இம்மாதிரி முயற்சிகள் தோன்றிற்று என்பதாக நினைக்கிறீர்களா? என்று இந்த நாட்டில் ஆரியர்கள் கால் வைத்தார்களோ அன்று முதலே ஆரியர், திராவிடர் என்கிற வேற்றுமையும் ஆரியர் சங்கம், திராவிடர் சங்கம் என்கிற இயக்கங்களும் சுயமரியாதைக் கிளர்ச்சி களும் நாட்டில் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இதுகளை எவ்வளவோ பாடுபட்டு நமது எதிரிகள் மறைக்க முயன்றாலும் இயற்கைத் தத்துவம் மறைக்க முடியாமல் செய்து வருகிறது. எதுவரையில் ஆரியர் வேதம் என்பது நமது நாட்டில் இருக்குமோ எதுவரை ஆரியர் ஆதிக்கம், ஆரிய தர்ம பிரசாரச் சபை, வருணாஸ்ரம தர்ம பிரசார சபை நமது நாட்டில் இருக்குமோ அதுவரை நமது இயக்கம் அதாவது திராவிடர் முன்னேற்ற இயக்கம், சுயமரியாதை இயக்கம், சமரச இயக்கம் இருந்து தீர வேண்டியது தான். ..

குடி அரசு – 26.06.1927

இப்படித் திராவிடர்கள் தமிழ்நாட்டவரின் முன்னேற்றத்துக்கு உழைத்த காலங் களில் தமிழ்த்தலைவரான, சீமான் பார்வையில் தனித்தமிழரான ம.பொ.சிவ ஞானம் அவர்கள் தமிழரசுக்கழகம் என்ற அமைப்பை நடத்தினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் போராட்டத்தை பெரியார் அறிவித்து நடத்திய போது இந்த தமிழ்தலைவர் ம.பொ.சி அவர்கள் இந்தியை அழிக்கவிடமாட்டேன் என்றகூறி தாரின்யீமது மண்ணெண்ணெயைப் பூசி இந்தி எழுத்துக்களை ஒளிரச்செய்தார்.

அதோடு ம.பொ.சி அவர்கள் தமது தமிழர் திருமணம் என்ற நூலில்

…இந்துக்களிலே தமிழரானோர்க்கு வேதமொழி சமஸ்கிருதந்தான். குருமார், புரோகிதர்கள் தான். ஆகவே, இஸ்லாமியத்தமிழர் அரபு மொழியில் மந்திரமோதி திருமணஞ்செய்து கொண்ட பின்னும் தமிழராக வாழலாம், வாழ்கிறார் என்றால், அவரைத் தமிழர் அல்லர் என்று சொல்வது சட்டவிரோதமானது என்றால், இந்துவாக உள்ள தமிழரானோரும் தங்களது வேத மொழியான சமஸ்கிருத மொழியில் திருமணம் செய்து கொள்வதோ, அதற்காக சமஸ்கிருதம் அறிந்த புரோகிதரை வைத்து சடங்குகள் நிகழ்த்துவதோ தமிழராக வாழ்வதற்கு தடையாகுமா?…

என்று இந்து மதத்திற்கும், சமஸ்கிருதத்திற்கும், இந்துப்பண்பாட்டிற்கும் வக்காலத்து வாங்கிப் பேசி எழுதியுள்ளார். இது தான் தமிழர்களுக்காக தமிழர்களே நடத்திய கட்சிகளின் யோக்கியதை.

தெலுங்கு பேசும் விஜயகாந்த்துடன் நேரடியாக மோத முடியாத நிலையில் தமிழம் பேசுகிறார்கள், தமிழியம் பேசுகிறார்கள். விஜயகாந்த் பெரிய அளவில் வளரவேண்டுமானாலும் இங்குள்ள பார்ப்பன சக்திகளை அனுசரித்துதான் ஆக வேண்டும். என்னதான் செந்தமிழன் பொள்ளாச்சி மகாலிங்கம் இந்திய அளவில் வளர்ந்திருந்தாலும் அவர் தனது சக்தி மாத இதழில்

“ஆதிசங்கரர் ஒரு தமிழர். எப்படி? ஆதிசங்கரர் காலத்தில் இவர் பிறந்து வளர்ந்த மலையாள நாட்டில் மலையாள மொழி இல்லை. தமிழ்தான் இருந்தது. தமிழ்தான் பேசினார். ஆகவே அவர் தமிழர். அத்வைத சித்தாந்தத்தையம் வேறு நூல்களையும் சமஸ்கிருதத்தில் எழுதினார்”

என்றும்

“சமஸ்கிருதத்தை ஆரிய பாசை எனச்சிலர் பேசிவருகின்றனர். உண்மையில் சமஸ்கிருதம் தமிழனுடைய மொழி”

என்று எழுதியுள்ளார். இப்படி எழுதினால்தான் பேசினால்தான், ஆர்.எஸ்.எஸ். கும்பல்களுக்கு உதவினால்தான் தமிழனோ, தெலுங்கனோ, மலையாளியோ எவனாக இருந்தாலும் உயரமுடியும் என்ற நிலைதான் இந்தியாவில் உள்ளது. எனவே தோழர் சீமான் முதல் எதிரியாகக் காட்டிப் பேசவேண்டியது பார்ப்பனர் களைத்தானே தவிர இந்தியதேசிய – பார்ப்பன – பன்னாட்டுக்கூட்டுச்சக்திகளால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிற சக தேசிய இனத்தை அல்ல.

சாதி மதங்களைக் கடந்து கட்சிகளைக்கடந்து நாம் தமிழராக இணைவோம் வாருங்கள் என எமது தோழர்களிடமே, அதாவது தீட்டிய மரத்திலேயே வெட்டிப்பாக்கிறீர்களே? பரவாயில்லை. எங்களுக்கும் இது தேவைதான். அரங்கக் கூட்டங்களிலும் கலந்துரையாடல் கூட்டங்களிலும் உங்கள் தோழர்களிடம் இந்த நாம் தமிழர் இயக்கம் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் ஆலோசனை யில்தான் நடக்கிறது. இரு அமைப்புகளும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள், இரு கண்கள், இரண்டும் ஒரே திசையைத்தான் பார்க்கும் என்றெல்லாம் கூறி வருகிறீர்களாம். பெரியார் திக மேடையைத் தவிர பிற அமைப்புகளின் மேடைகளில் பேசுவதில்லை எனவும் கூறுகிறீர்களாம். இதை உங்கள் அமைப்பின் தோழர்கள் பலர் எம்மிடம் மகிழ்வுடன் தெரிவித்தார்கள். மகிழ்ச்சி யாகத்தான் இருக்கிறது. அதே சமயம் உங்களது அண்மைக்கால நேர்காணல்கள், பேச்சுக்கள் பெ தி க வின் கருத்துக்களுக்கு நேர் எதிராகச் செல்கிறது.

நாம் தமிழர் இயக்கத்தில் தெலுங்கு பேசுபவர்களைச் சேர்க்கமாட்டோம். அப்படியே சேர்த்தாலும் முக்கியப் பொறுப்புகளுக்கு அனுமதிக்கமாட்டோம்.

இஸ்லாமியர்களைச் சேர்க்கமாட்டோம். சேர்த்தாலும் முக்கியப் பொறுப்புக்கு அனுமதிக்க மாட்டோம்.

பார்ப்பனர்களைப் புறக்கணிக்க மாட்டோம். அவர்களும் தமிழர்கள் தான் .

என்று சில முடிவுகளை எடுத்திருப்பதாக அறிகிறோம். இவை பெரியார் பார்வை யில் மிகப் பெரிய கோளாறுகள் என்பதை அவரது மேற்கோள்களிலிருந்து உணர்ந் திருப்பீர்கள். இந்த கருத்துக்களில் உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப் படையாக அறிவிக்க வேண்டும். கொளத்தூர் மணி ஆலோசனையில்தான் இயக்கம் நடத்துகிறோம் என நீங்கள் சொல்லிவருவதால்தான் இதைக் கேட் கிறோம்.

தமிழீழம் மலர நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் உறுதியாகத் துணை நிற்போம். நீங்கள் அல்ல. யார் முன்னெடுத்தாலும் துணை நிற்போம். தோள் கொடுப்போம். ஆனால் அதையே எங்கள் பலவீனமாகக் கருதி தமிழ்நாட்டுத்தமிழனுக்கு எதிரான வேலையைத் தொடங்க நினைக்க வேண்டாம்.

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வெளியிடப்பட்ட பல்வேறு குறும்படங்கள் திராவிடம் என்ற கருத்தியலைக் கொச்சைப்படுத்தியே வெளிவந்தன. “திராவிடம் எனும் பெயரால் திராவகம் வீசினார்” என்ற வரிகள் பல குறும்படங்களில் ஒலித்தன. ஈழத்திற்காக உழைக்கும் அமைப்புகள் ஒன்றாக நிற்கவேண்டும். கருத்துவேறுபாடுகளை மறந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் கண்டும் காணாமல் போய்க்கொண்டு இருந்தோம். ஆனால் தொடர்ந்து அப்படி விசமத்தனமான கருத்துக்களை அனைத்து தமிழ் தேசியர்களும் பேசியே வருகின்றனர். அந்த வரிசையில் தூத்துக்குடியில் சீமானும் பேசியுள்ளார். ஒருங்கிணைப்பு, ஒற்றுமை உங்களுக்குத் தேவை இல்லை என்ற தோரணையில் நீங்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது நாங்கள் மட்டும் ரொம்….ப நல்லவர்களாக இருக்க விரும்பவில்லை.

ஈழத்தின் சமுதாய சூழல் இங்கு இல்லை, இங்கு சமுதாயத்தில் பார்ப்பன ஆதிக்கம் உள்ளதால் பார்ப்பனர்களைப் புறக்கணித்து, ஒதுக்கி இயக்கம் கட்டுகிறோம். ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கியப் பொறுப்புகளில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என அறிகிறோம். அது அவர்கள் நாட்டைப் பொறுத்த வரை அவர்களுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான அமைப்பு எனும் போது ஈழத்தில் உள்ள அமைப்புகளின் நடைமுறையை இங்கே வைக்கக் கூடாது.

ஈழத்துப் பாட்டாளியும் சிங்களப் பாட்டாளியும் ஒன்றாகப் போராட வேண்டும் என இன்று ஈழத்திற்கு அறிவுரை சொல்வது எவ்வளவு தவறோ அதுபோலவே தமிழ்நாட்டில் பார்ப்பானை தோழமைசக்தியாக இணைத்துக்கொண்டு அண்டை தேசிய இனங்களைப் பகை சக்தியாகக் காட்டிக்கொண்டு இயக்கம் கட்டுவதும் தவறு.

ஊசிஇலைக்காடுகளின் மரங்களை தமிழ்நாட்டில் நட்டால் வளராது. இராமநாதபுரத்து கருவேல மரங்களை நார்வேயில் நட்டால் வளராது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: