தேச துரோகி யார்?


பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பை மிகத் தெளிவாக, தீவிரமாக 1917லேயே பேசியிருக்கிறார் நாயர். சுயஜாதி நிலையிலிருந்து அல்லாமல், ஜாதி ஒழிப்பு நிலையிலிருந்தே பார்ப்பன எதிர்ப்பை கடைப்பிடித்திருக்கிறார்.

பார்ப்பன மோகியாய், இந்துமத வெறியனாய், கைதேர்ந்த சந்தர்ப்பவாதியாய் இருந்தாலும் ‘தன் ஜாதிக்காரர்’ என்ற பெருமையோடு ‘பிரபலமானவரை’ விமர்சிக்காமல், அவரோடு உறவாடுகிற, அவரின் அந்தஸ்தை நினைத்து பெருமைப் படுகிற, அவர் மூலமாக தனிப்பட்ட முறையில் காரியம் சாதிக்கிற, முற்போக்காளர்களிடம் சவடாலாக பேசிவிட்டு தன்னுடைய மத அடையாளத்தை கிறித்துவ அல்லது இஸ்லாமிய மதவாதிகளிடம் அடையளாப்படுத்திக்கொண்டு மதவாதிகளின் மூலமாக ‘பிழைக்கிற’ இன்றைய ‘முற்போகாளர்களை’விட நேர்மையானவராக இருந்திருக்கிறார் டி.எம். நாயர். அதற்கு அவரின் இந்த பேச்சு ஒரு உதாரணம்:

“உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற சர் சங்கரன் நாயர், ஒரு சமயம் கேரளாவிலுள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, ஒரு நம்பூதிப் பார்ப்பான், சர் சங்கரன் நாயர் வீட்டு வாசலிலேயே வந்து நின்றபடி, “எடா! சங்கரா! நீ உயர்நீதிமன்ற நீதிபதியாமேடா” என்று கேட்டானாம். “ஆமாம் சாமி எல்லாம் உங்கள் கடாட்சந்தான்!” எனறு கூறியவாறே, வெளியே ஓடோடியும் வந்து, நம்பூதிரிப் பார்ப்பானின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக், கைட்டி வாய் பொத்தி நின்றாராம், அவர்.

கேரளாவில் மரியாதைகளும், அவமரியாதைகளும் எப்படிப் படாத பாடுபடுகின்றன. பார்த்தீர்களா? (வெட்கம்! வெட்கம்! என்ற பெருத்த ஆரவாரம்).”

இப்படி போர்க்குணத்தோடு இயங்கிய, பேசிய நாயரின் கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் அன்னிபெசன்டின் ஹோம்ரூல் இயக்கத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களும், பார்ப்பன கை கூலிகளும் நாயர் பேசிக் கொண்டிருக்கும் போதே, உள்ளே புகுந்து சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்பது, நீதிக்கட்சியை விமர்சித்து அவர்கள் கூட்டத்திலேயே துண்டுபிரசுரம் வினியோகிப்பது, போன்ற காரியங்களைச் செய்தனர்.

‘இதை செய்வதே தனது தலையாயப் பணியாக’ தன் மேல் போட்டுக் கொண்டு செய்வதவர்தான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார். அப்படி ஒரு முறை சென்னை டவுன் ஹாலில் நாயர் பேசிய கூட்டத்தில், புகுந்து நாயர் பேசிக்கொண்டிருக்கும்போது கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு நாயர் உரிய பதிலையும் தந்திருக்கிறார்.

இது குறித்து திரு.வி.க.வே தன் வாழ்க்கை குறிப்பு நூலில் குறிப்பிட்டிருக்கிறார்:
‘ஒரு நாள் சென்னை டவுன்ஹாலில் ஜஸ்டிஸ் கட்சிக் சார்பில் ஒரு பொதுக்கூட்டங் கூடியது. அதில் டாக்டர் நாயர் பேசினர். அவர்க்குச் சில கேள்விகள் விடுத்தேன். கேள்வி பதில்களின் கருத்தை நினைவிலுள்ளபடி இங்கே திரட்டித் தருகிறேன்.

கேள்வி (திரு.வி.க.) : “நீங்கள் ஏன் காங்கிரசை விடுத்து வகுப்பு வாதக் கட்சியில் சேர்ந்தீர்கள்? வகுப்பு வாதத்தால் நாடு சுயராஜ்யம் பெறுமா? அப்படி யாண்டாயினும் நிகழ்ந்திருக்கிறதா? சரித்திரச் சான்று உண்டா?”

பதில் (நாயர்) : “யான் காங்கிரஸில் தொண்டு செய்தவனே, அது பார்ப்பனர் உடைமையாகியதை யான் உணர்ந்தேன்.

காங்கிரசால் தென்னாட்டுப் பெருமக்களுக்குத் தீமைவிளைதல் கண்டு, அதை விடுத்து, நண்பர் தியாகராயருடன் கலந்து ஜஸ்டிஸ் கட்சியை அமைக்கலானேன். வகுப்பு வாதத்தால் சுயராஜ்யம் வரும் என்று எவருங் கூறார்.

வகுப்பு வேற்றுமை உணர்வு தடிதது நிற்கும்வரை சுயராஜ்ம் என்பது வெறுங்கனவே யாகும். வகுப்பு வேற்றுமையுணர்வின் தடிப்பை வகுப்பு வாதத்தால் போக்கிய பின்னரே சுயராஜ்யத் தொண்டில் இறங்க வேண்டுமென்பது எனது கருத்து. காலத்துக் கேற்ற தொண்டு செய்வது நல்லது. வகுபபு வேற்றுமை இல்லாத நாடுகளைப் பற்றிய சரித்திரங்களை இங்கே ஏன் வலித்தல் வேண்டும்? இந்தியா ஒரு விபரீத நாடு. பிறப்பால் உயர்வு தாழ்வு கருதும் நாடு.”

இப் பதிலைக் கேட்டதும் யான் வகுப்புவாதக்கட்சி வகுப்புகளின் நினைவையன்றோ உண்டுபண்ணும்? அதனால் வகுப்பு வேற்றுமை வளருமா? தேயுமா? உங்கள் கட்சி பிராமணர்க்குள் ஒற்றுமையையும் பிராமணரல்லாதாருக்குள் வேற்றுமையையும் வளர்ப்பதாகும்’ என்று மொழிந்துகொண்டிருந்தபோது, நானா பக்கமும் கூக்குரல் கிளம்பியது. கூட்டங்கலைந்து, டாக்டர் நாயர், நாளை ஜஸ்டிஸில் விளக்கமான பதில் வரும்’ என்று சொல்லிச் சென்றார். அடுத்த நாள் திராவிடன் என்னை வசையால் வாழ்த்தினான். ஜஸ்டிஸில் டாக்டர் நாயர் கூட்டத்தில் கூறிய பதிலே விரிந்த முறையில் வந்தது.

ஜஸ்டிஸ் கூட்டங்கட்கு நேரே போய்க் கேள்வி கேட்பதை நிறுத்திக்கொண்டேன், துண்டு அறிக்கைகளை எழுதி விடுக்கலானேன்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார் திரு.வி.க. (நயாரின் பதில்களில் உள்ள சில வரிகளுக்கு கீழ் கோடிட்டது திரு.வி.க அல்ல. யான். அந்த வரிகளுக்கு அழுத்தம் தருவதற்காகவே யான் அவ்வாறு செய்தோம்-மதிமாறன்)

அதுமட்டுமல்லாமல், தொழிற்சங்கங்களில் செல்வாக்கு பெற்ற திரு.வி.க தொழிற்சங்களை நீதிக்கட்சிக்கு எதிராகவும் திருப்பியிருக்கிறார்.

திருவிகவைபோல் பாரதியாரும் நீதிக்கட்சியை பார்ப்பன பத்திரிகைகளில், பிராமண சங்க கூட்டங்களில் தாக்கியிருக்கிறார். திரு.வி.க, பாரதியார் போன்ற போலி தேசப்பக்தர்கள், நாயரை, தியாகராயரை தொடர்ந்து கேவலப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.

ஆனால், தன் வாழ்க்கையையே சுதந்திர போராட்ட நடவடிக்கைகளுக்காக அர்பணித்த வ.உ.சி போன்ற உண்மையான தேசபக்தர்கள், நீதிக்கட்சி தலைவர்களை தேச துரோகிகள் என்று சொல்லவில்லை. மாறாக அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். காரணம், காங்கிரசுக்குள் இருந்த பார்ப்பன கும்பலின் சதியை, துரோகத்தை நேரடியாக அனுபவித்தவர் வ.உ.சி. அதுமட்டுமல்ல, காங்கிரஸ் பார்ப்பனர்களின் தேசவிரோத செய்கையையும் நன்கு அறிந்தவர். அன்னிபெசன்ட் போன்ற அன்னிய நாட்டுக்காரர்கள் இந்திய சுந்திர போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்பது வ.உ.சியின் முடிவு.

ஆகையால், அன்னிபெசன்டோடு இணைந்து திரு.வி.க தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கடுமையாக கண்டித்தார். அவரை ஆதரிப்பது தாய்நாட்டுக்கு செய்கிற பச்சைத் துரோகம் என்று திரு.வி.கவை எச்சரித்தார் வ.உ.சி.

“மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” என்று தொழிலாளர்களிடம் பேசினார் வ.உ.சி. அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும், தனது நண்பர் திரு.வி.க. வையும் கண்டித்தார் வ.உ.சி.

சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி, வெள்ளைக்காரனுக்கு எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதத்திற்கு உண்மையாக நடந்தகொண்ட பாரதி, நீதிக்கட்சியை சபிப்பதற்காகவே தேசப் பற்றாளனைபோல் நடித்தார்.அப்போதுகூட மறந்தும் வெள்ளைக்காரனை விமர்சிக்கவில்லை.

நீதிக்கட்சியின் பார்ப்பன எதிர்ப்பை, சுதந்திரபோராட்ட நிலையில் இருந்தல்ல, ஒரு பார்ப்பானி்ன் நிலையில் இருந்தே கண்டித்தார். அதற்கு அவரின் இந்த வரிகளே சாட்சி.

“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்வும் வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!”

“சென்னைப் பட்டணத்தில் நாயர்கக்ஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான கொள்கைகளில் அபிப்பிராய பேதமிருந்தால், இதை ஜாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப்போட்டு அடிபிடிவரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் ஹிந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள்”

பிராமண சங்க கூட்டங்களில் கலந்து கொண்டு நீதிகட்சியின் கொள்கைகளை நீர் துளி ஆக்கினார் என்று அன்றைய விஜயா பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறது.

வ.உ.சியும் பாரதியும் சுதந்திர போராட்ட காலங்களில் குறிப்பாக வ.உ.சி சிறைக்கு போவதற்கு முன், கருத்து வேறுபாடுகள் அற்ற, நெருங்கிய நண்பர்களாக விளங்கினர். பின் நாட்களிலும் நண்பர்களாக இருந்தாலும் பல கருத்துக்களில் முரண்பாடு கொண்டார்கள்.
‘தமிழில் எழுத்துக்குறை’ என்ற தலைப்பில் ‘சமஸ்கிருத்தைப்போல் தமிழில் உச்சரிப்பு இல்லை. தமிழை சீர் திருத்தவேண்டும். புதியதாக பல புது சொற்களை சேர்க்க வேண்டும்’ என்று ஞானபானு பத்திரிகையில் பாரதி எழுதியதை கண்டித்து வ.உ.சியும் அதே ஞானபானுவில் ‘சில அறிவாளிகள் தமிழை சீர்திருத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் இலக்கணத்தில் முறையான அறிவும் இல்லை. ழ என்ற சொல் தமிழில் மட்டும்தான் இருக்கிறது. அதற்கேற்றார்போல், சமஸ்கிருதத்தை சீர் திருத்துவார்களா?’ என்ற பொருள் படும்படி எழுதினார்.

பாரதி சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் இருந்து விலகி, பிராமண சங்கத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டு பிராமண சங்க மேடைகளில் பேசினார் .

வ.உ.சி. சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டே, நீதிக்கட்சியோடு, பார்பபனரல்லாத இயக்கங்களோடு தொடர்பு வைத்துக் கொண்டார். அவர்களின் மேடைகளில் பேசினார்.

டி.எம்.நாயரின் வீச்சு, தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகளான வ.உ.சியிடமும்., பாரதியிடமும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

1917 லேயே நாயர் இவ்வளவு கறாராக பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு குறித்து பேசியிருக்கிறார். அதே காலகட்டத்தில் வாழ்ந்த பாரதி பார்ப்பன, இந்து மனநிலையோடு வாழ்ந்திருக்கிறார். இத்தனைக்கும் 1919 ல் நாயர் இறந்துவிட்டார். பாரதி 1921 ல் மரணமடைந்தார்.

நமது பாரதி அபிமானிகள், கொஞ்சமும் வெட்கமில்லாமல் இன்னமும் ‘பாரதியின் காலகட்டம் அப்படி’ என்று நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

***

1919 ஆம் ஆண்டு லண்டனில் பார்லிமெண்ட் கூட்டுக் கமிட்டியிடும் சாட்சியங்கள் கூறி தங்கள் கட்சிகளுக்கு ஆதரவு பெற காங்கிரஸ் சார்பில் பாலகங்காதர திலகர் சென்றார். வைசிராய் கவுன்சில் அங்கத்தினராக இருந்த வி.ஜே. பட்டேல், சென்னை சட்டசபை அங்கத்தினர் யாகூப்ஹாசன், ரங்கசாமி அய்யங்கார் மற்றும் பத்திரிகையாளர்களும் சென்றனர். ‘இந்து’ பத்திரிகையின் ஆசிரியர் கஸ்தூரிரங்க அய்யங்கார் என பலர் அங்கு சென்று பேசியும் எழுதியும் வந்தனர்.

நாயர் ஒருவர்தான் பார்ப்பனரல்லாத கட்சிக்காக லண்டனில் சென்று வேலை பார்த்தார். சர்க்கரை வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாயர் படுத்த படுக்கையாகிவிடுகிறார். கூட்டுக் கமிட்டியிடம் சாட்சியம் அளிப்பதற்கு முன் நீதிக்கட்சியின் சில தலைவர்கள் லண்டன் போய் சேர்ந்தார்கள்.

ஆனால், கூட்டுக் கமிட்டியிடம் சாட்சியம் அளிப்பதற்கு ஒருநாள் முன்பு (17-7-1919) நோய்வாய்பட்டு லண்டனிலேயே இறந்துவிட்டார் நாயர். இறுதி ஊர்வலம் லண்டன் நகரில் கோல்டன் கிரீன் என்ற இடத்தில் நடந்தது. இங்கிலாந்து மற்றும் பிரான்சில் இருந்து வந்திருந்த நாயருடைய வெள்ளைக்கார நண்பர்களும் நீதிக்கட்சி தலைவர்களும் சில காங்கிரஸ் பிரமுகர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். நாயரின் நெருங்கிய நண்பரான ‘இந்து’ கஸ்தூரிரங்க அய்யாங்கார் லண்டனில் இருந்தும் கலந்து கொள்ளவில்லை என்பது எல்லோராலும் வருத்ததோடு பகிர்ந்துகொள்ளப்பட்டது.

லண்டனில் நாயர் நோய்வாய்பட்டிருந்தபோது, சென்னையில் ‘நாயர் இறந்து விடவேண்டும்’ என்று சிறப்பு யாகங்களை பார்ப்பனர்கள் நடந்தி இருக்கிறார்கள்.

பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு அரசியலின் சரியான, துல்லியமான, வீரியமிக்க வடிவம் நாயரிடம் இருந்துதான் தொடங்குகிறது. நாயரை புறக்கணித்து இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு அரசியலை பேச முடியாது. தமிழர்களின் வரலாற்றை எழுதவும் முடியாது.

Advertisements

One Response to “தேச துரோகி யார்?”

  1. what is raspberry ketone Says:

    Keep up that the fantastic piece of work, I read few posts on this internet
    site and I think that your web blog is actually interesting and contains lots of superb info.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: