அரசு ஊழியன் என்னும் சில அல்சஷியன் நாய்கள் …


பத்திரிக்கை செய்தி…

ராமநாதபுரம் : “இலவச பஸ் பாஸ்’ எடுத்து வர மறந்த மாணவியை கதறவிட்டு, அபராதம் விதித்த அதிகாரிகளின் செயல், பொதுமக்களை வேதனையடைய செய்தது.

கிராமத்து மாணவர்கள் கல்வியை பெற வேண்டும் என்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் “பஸ் பாஸ்’. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் பஸ் வசதியே இல்லை, வரக்கூடிய பஸ்சில் இடம் கிடைப்பதும் அரிது. இத்தனை தொல்லைகளுக்கு மத்தியில்தான், கிராம மாணவர்கள் உயர் கல்வி தேடி நகர் பகுதிக்கு வருகின்றனர். இந்த பரபரப்பில் மறதி என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இதனால், பால்கரை கிராமத்தை சேர்ந்த மாணவி சாரதா பிரீத்தா, அவமானத்திற்கு ஆளாகி உள்ளார்.

ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் இவர், 23ம் எண் டவுன் பஸ்சில் இடம் பிடிக்க வேண்டுமே, என்ற பதட்டத்தில் தனது பஸ் பாசை எடுக்காமல் மறந்து வந்து விட்டார். ராமநாதபுரத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்த போது, மாணவியிடம் பஸ் பாஸ் இல்லை. “மறதியில் வைத்து விட்டு வந்ததாகவும், பள்ளிக்கு நேரமாகி விட்டதாகவும்,’ மாணவி அதிகாரிகளிடம் கெஞ்சினார். அவர்களோ, அதை ஏற்க மறுத்து, அபராதம் செலுத்துமாறு கறாராக பேசினர்.

எட்டாம் வகுப்பு பள்ளி மாணவியிடம் அபராதம் செலுத்தும் அளவுக்கு பணமிருக்குமா, என்பதை கூட யோசிக்காமல், அதிகாரிகள் தனது நிலைப் பாட்டில் உறுதியாக இருந்தனர். மாணவி கதறி அழுதும் எந்த பயனும் இல்லை. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த பொதுமக்கள், ஒத்த குரலில் எதிர்ப்பை தெரிவிக்க, அபராதம் நூற்றுக்கணக்கிலிருந்து 50 ரூபாயாக குறைக்கப்பட்டது. அதையும் பொதுமக்கள் சிலரே செலுத்திய பின் தான், மாணவியை விடுவித்தனர். “கூடுதலாக பஸ் இயக்க கூறினால், அதை கண்டுகொள்வதில்லை, சிறு குழந்தையை மட்டும் இப்படியா பாடாய்படுத்துவது,’ என முணுமுணுக்காதவர்களே இல்லைபிஞ்சு உள்ளங்களை நோகடிக்கும் இது போன்ற செயல்களை இனியாவது தவிர்க்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.
——————————————————————————————————–

அப்பாவிகளிடம் ‘ரூல்ஸ்’ பேசுவதில் அரசு ஊழியகர்கள் காட்டும் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை, ஆனால் அவன் தனக்கு மேல் இருக்கும் உயர் அலுவர்களிடம் கூழைக் கும்பிடு போடும் போது கடமையும், தன் மானத்தை இழக்கிறோம் என்பதை துளியும் நினைப்பதில்லை, காரணம் தன்னலம், எப்படியாவது பதவி உயர்வு பெறுவதற்கு உயர் அலுவலர்களின் கழிவறையைக் கூட நாக்கால் தூய்மை செய்ய முயற்சிப்பார்கள்.

ஒரு கோடி அரசு திட்டம் அறிவித்துவிட்டு அதற்கு இரண்டு கோடியில் பாராட்டு விழா நடத்துவதையெல்லாம் எந்த அரசு ஊழியனும் மக்களின் வரிப்பணத்தில் நடை பெறும் முறைகேடு என்று வாய்திறந்து பேசமாட்டான், அங்கெல்லாம் கடமை என்று எதையும் நினைக்காமல் சலாம் போடுவது முதல் விழா முடியும் வரை நன்றி உள்ள நான்கு கால் விலங்கைவிட கூடுதலாகவே நன்றி வெளிப்படையாக தெரியும் படி நடந்து கொள்வான். இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால்,

மாணவி செய்தது தவறு தான் என்றாலும் சீருடையில் பள்ளிக்கு வரும் மாணவிகள் ‘பஸ் பாஸ்’ எனப்படும் அடையாள அட்டைச் சோதனை கூட தேவையற்றது தான். பள்ளி நாட்கள் தவிர்த்து மற்ற நாட்கள் என்றால் கூட சோதனையாளர்களின் செயலை சரி என்று சொல்லலாம். ஏழை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே இலவச கல்வி, இலவச பேருந்து சேவைகளை தரவேண்டும் என்று பல்வேறு தரப்புகள் கோரிக்கையுடன் தான் இலவச திட்டங்களே நடைபெறுகின்றன. பள்ளிக்க்குச் செல்லும் ஒரு மாணவியிடம் ‘ரூல்ஸ்’ பேசுபவர்கள் ஏழை எளியவர்களின் நலன்களின் ஏதும் அக்கரை அற்றவர்கள் என்பதைத் தான் இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. ஒரு சோதனையாளர் மாணவியை அனுமதித்திருந்தால் அதை வேறொரு சோதனையாளர் அதே தடத்தில் கண்டுபிடிக்க ஏதுவும் வாய்ப்பு கிடையாது, இருந்தும் அவர்களை தடுப்பது யார் ?

ரூல்ஸ் பேசும் சோதனையாளர்கள் என்றாவது நடத்துனரின் பணப் பையை இதுவரை சோதனை போட்டு பொதுமக்களிடம் சில்லரை இல்லை என்று கூறி உபரியாக நிரப்பிக் கொண்டதைப் பற்றி அறிவித்திருக்கிறார்களா ? அது எங்கள் வேலை இல்லை என்று மறுபடியும் தங்களுக்கு சாதகமான ரூல்ஸ் பேசுவார்கள்.

வசதி குறைந்த மாணவர்கள் பள்ளி தொலைவில் இருந்தால் பேருந்தில் பயணிக்க அரசு இலவச பாஸ்களை வழங்குகிறது, ஆனால் சோதனைகள் என்ற பெயரில் சீருடை போட்டிருக்கும் மாணவர்களையும் இறக்கிவிடுவது அல்லது அபராதம் போடுவது எந்த விதத்திலும் ஞாயமே இல்லை. ஒரு ஊரில் ஒரு மாணவி தவறுதலாக மறந்து வந்திருந்தால் அரசு பேருந்து நட்டத்தில் இயங்கிவிடுமா ? அப்படி என்றால் இவர்கள் தொழிற்சங்கம் என்ற பெயரில் அவ்வப்போது வேலை நிறுத்தம் என்ற பெயரில் பேருந்துகளை இயக்காமல் இருப்பதால் நட்டம் அடைவது யார் ? அதை ஈடுகட்ட இவர்களின் ஊதியத்தைக் கொடுக்கிறார்களா ? இவர்களைப் பற்றி நினைத்தாலே டென்சன் தான் ஆகுது.

எனக்கு 15 வயது இருக்கும் போது 10 வயது தம்பியை அழைத்துக் கொண்டு வேளாங்கன்னி வரை உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. எனக்கு பேருந்து பயணச் சீட்டு முறைகள் பற்றி அவ்வளவாக விபரம் தெரியாது, தம்பியின் வயதை வைத்து எனக்கு முழு டிக்கெட்டுகான பணத்தைக் கொடுத்து ஒரு டிக்கெட்டும், தம்பிக்கு அரைடிக்கெட்டுகான பணத்தைக் கொடுத்து (2ரூபாய் டிக்கெட் ஒண்ணு , 1 ரூபாய் டிக்கெட் ஒண்ணு வாங்கியது போக என்னிடம் இருந்தது மீதம் 1 ரூபாய் ) இன்னொரு டிக்கெட்டும் வாங்கி பேருந்துனுள் பயணம் செய்தேன், பேருந்து பாதி தொலைவு சென்றவுடன் நடத்துனர் ஒவ்வொரு பயணியிடமும் பயணச் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார், இரண்டையும் கொடுத்தேன், ‘என்னது 1 ரூபாய் டிக்கெட் வாங்கிட்டு இவ்வளவு தூரம் வருகிறே ?’ என்று கூறி, வேறு காசு இருக்கா என்று கேட்டார், இல்லை என்றேன், இறங்கிப் போ…..என்றார், எனக்கு ஒண்ணும் புரியல, தம்பி சின்னப் பையன் 10 வயது தான் ஆகுது அதனால் அவனுக்கு அரை டிக்கெட் தான் எடுத்தேன், இப்ப இறங்க சொல்றிங்களே’ என்றேன். ‘இது டவுன் பஸ்…..இதுல அரை டிக்கெட்டெல்லாம் கிடையாது, காசு இல்லாவிட்டால் இறங்கிப் போ’ என்றார். என்னிடம் மீதம் இருந்த காசுக்கு அங்கிருந்து இன்னொரு முழு டிக்கெட் வாங்க முடியாது…..கையில் இருந்ததைக் காட்டினேன். இரண்டு பேரும் இறங்குங்க என்று கடுமையாகவே சொன்னார். வேறு வழியே இல்லாமல் தம்பியை மட்டும் பத்திரமாக சரியான இடத்தில் இறங்கச் சொல்லிவிட்டு, நான் பேருந்தைவிட்டு பாப்பா கோவில் என்னும் இடத்தில் இருந்து இறங்கி, கடுமையான வெயிலில் 5 கிலோ மீட்டர் நடந்தே வீட்டுக்கு வந்து மறுபடியும் பணம் எடுத்துக் கொண்டு வேறொரு பேருந்தில் சென்றேன். இதில் என்னுடைய தவறு டவுன் பஸ்ஸுக்கு அரை டிக்கெட் இல்லை என்று தெரியாதது மட்டுமே.

எவ்வளவோ உறவினர்களை, நண்பர்களை வித் அவுட்டில் அழைத்துச் செல்லும் நடத்துனர்கள், ஒரு 15 வயது பையனை நடுக்காட்டில் இறக்கிவிட்டு செல்வது என்பதை இப்போது நினைத்தாலும் வெறுப்பாகத்தான் இருக்கிறது.

அரசு ஊழியகர்கள் பொதுமக்களை மதிக்காவிட்டால் அல்லது கண்டிபான விதிமுறை பேசும் போது அவர்களை பொதுமக்களும் உதாசீனப்படுத்தனும், அவனும் சம்பளத்துக்கு வேலைப் பார்க்கும் ஒரு ஊழியன் தான் அதைவிட அவனுக்கு தனிப்பட்ட மரியாதைகள், ‘சார்….சார்’ என்ற விழிப்பு என்னைப் பொருத்த அளவில் தேவை அற்றது.

விதிமுறைகள் என்பது ஒழுங்குக்கான பரிந்துரைகள் மட்டுமே, மனிதாபிமானத்திற்கு முன்பு விதிமுறை பேசினால் மனிதனுக்கு சொல்லித்தரும் படி இயங்கும் இயந்திரங்களும் வேறுபாடுகள் இல்லை. பயண அனுமதிச் சீட்டை வைத்துவிட்டு வந்து சோதனையாளர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி அப்போது எவ்வளவு கதறி இருப்பாள், அவமானம் அடைந்திருப்பாள் என்று நினைத்தால் ஏற்கனவே அவமானம் அடைந்த அனுபவம் இருப்பதால் எனக்கு மனது பதைக்கிறது.
Read more…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: