மகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்கள்! …


அடித்தளத்தில் வாழ்கிறவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வாழ்வு மறுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் குரல் இந்திய சமுதாயத்தில் செவிசாய்க்கப்படாது; வெற்றிபெறாது என்பது மகளிர் மசோதா மூலம் மீண்டுமொரு முறை நிரூபிக்கப்படவிருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளாக என்ன காரணத்துக்காக பலராலும் எதிர்க்கப்பட்டதோ, அந்த எதிர்ப்புக்கு கிஞ்சித்தும் சுணங்காத பெரும்பான்மை அதிகாரச் சமூகம் அதே நிலையில் மகளிர் மசோதாவை செயல்படுத்தவிருப்பது வேதனையானது.

2009 ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற்ற அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்ற போது பேசிய ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், ‘மகளிர் மசோதாவை இதே வடிவில் கொண்டுவந்தால் இதை எதிர்க்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எங்கள் கட்சிக்கு இல்லாமல் இருக்கலாம்; ஆனால், இந்த அவையிலேயே நான் விஷம் குடித்து இறப்பேன், மசோதாவை நிறைவேற்ற விடமாட்டேன்’ என்றார். அதோடு நில்லாமல், காங்கிரஸ் கட்சி எதையுமே உளப்பூர்வமாகச் செய்வதில்லை என்றும் வெறும் சம்பிரதாயத்துக்கு மட்டும் செய்கிறது என்று கூறிய சரத் யாதவ், ”குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு பெண், மக்களவைத் தலைவர் பதவிக்கு ஒரு பெண் என்று நியமித்துவிட்டு மகளிர் நலனுக்கான நடவடிக்கைகளை எடுத்து சாதித்துவிட்டதாக விளம்பரப்படுத்திக் கொள்கிறது. எத்தனையோ விதமான சமூகத் தளைகளிலிருந்து இந்த நாட்டுப் பெண்கள் இன்னமும் விடுபட வேண்டியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்” என்றும் குறிப்பிட்டார்.

ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது
இப்படியாக மகளிர் மசோதாவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் நிறைவேற்றப்படாமலே இருந்தது. இனியாவது நிறைவேற்றப்படுவதற்கு அனைவரும் கருத்தொற்றுமை காண்பது அவசியம். இந்த மசோதாவில் சில திருத்தங்களை செய்து பின்னர் அமல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது மகளிர் உரிமை நாளாக மார்ச் 8 அன்று இந்திய பெண்களுக்கான பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. இந்த சட்ட மசோதாவை மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர்களால் நிர்வகிக்கப்படுகிற பாஜக, இடதுசாரிகள் கட்சிகள் ஆதரிக்கின்றன. அதேசமயம், லாலு பிரசாத், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோரின் கட்சிகள் எதிர்க்கின்றன. அவர்கள் எதிர்த்தாலும் மசோதா நிறைவேறப் போவது உறுதி. ஆனால், இந்த நிலை தொடரக் கூடாது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எண்ணம். சிற்றூர்ப்புறங்களில் சொல்லப்படும் ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது என்ற சொலவடை உறுதியாகியிருப்பது வருந்தத்தக்கது.

இந்நிலையில் மகளிர் மசோதவை தடுத்து நிறுத்துபவர்கள் அனைவரும் ஆணாதிக்கவாதிகள் – சமூகநலனுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை பெண்ணியவாதிகளும், மசோதாவை ஆதரிப்பவர்களும் பரப்பிவருகின்றனர்.

ஜூன் 16, 2009 அன்று தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவும், யுஎன்டிஇஎப் நிறுவனமும் இணைந்து ‘ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் பெண்களின் பங்கை அதிகரித்தல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கை திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி துவக்கி வைத்துப் பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் பெண்கள் மசோதாவை நிறைவேற்றினால் சிலர் விஷம் குடிப்பேன் என்கிறார்கள். இந்த சமுதாயத்தில் அந்தளவுக்கு ஆணாதிக்கம் இருக்கிறது. அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்குப் போக மீதியுள்ள இடங்களை பெண்களுக்கு தரலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அரசியல் ஆண்களின் வசதிகளுக்காக உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. அதில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை போராடி பெற வேண்டும். அனைத்து பெண்களும் கட்சி வேறுபாடில்லாமல் ஒன்றிணைந்து போராட வேண்டும். பெண்கள் மசோதாவை எதிர்க்கும் கட்சிகளுக்கு ஓட்டுப்போட கூடாது என உறுதியாக சொல்ல வேண்டும். அப்போது தான் இந்த மசோதா கண்டிப்பாக நிறைவேறும்” என்று அரைவேக்காட்டுத்தனமாக சொல்லியிருக்கிறார்.

இப்படியான கருத்தை பரப்பியதும் பரப்பி வருவதும் கேடுகெட்ட அரசியல் வித்தை என்ற நிலையில் மகளிர் மசோதா குறித்தும், எதிர் – ஆதரவு கருத்து குறித்தும் விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒரு அரசியல் தலைவரின் மகளாகப் பிறந்து, முதலமைச்சரின் குமரியாக வளர்ந்து, வசதியான மாப்பிளைக்கு மனைவியாகி சுகபோக வாழ்க்கை நடத்திய பின்னர் திடீரென்று எம்.பியாக அவதாரமெடுத்து நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைந்த அரசிளங்குமரி கனிமொழி சரத் யாதவை ஆணாதிக்கவாதி என்று திட்டியதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பாவம், அவர் வளர்ந்த சூழல் அப்படி. சரத் யாதவின் கருத்தில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்ளும் திராணியற்றவர் கனிமொழி என்பதுதான் உண்மை.

இத்தருணத்தில் மகளிர் மசோதா பற்றி அரைவேக்காட்டுத்தனமாக பேசாமல் ஒரு கருத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மசோதாவை எதிர்ப்பவர்கள் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்ற கேடுகெட்ட எண்ணத்தால் எதிர்க்கவில்லை. மாறாக, ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை அளிக்க வகை செய்துவிட்டு, அந்த மசோதாவை நிறைவேற்றுங்கள் என்றுதான் வலியுறுத்துகிறார்கள். அவர்கள் எண்ணமும், செயல்பாடும் தவறா? அதை தவறென்று நினைப்பவர்கள் அனைவரும் அடித்தளத்தில் வாழ்பவர்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத ஆதிக்கவாதிகள் என்ற பழியை சுமக்க வேண்டியவர்கள். சமூகத்தை முழுவதுமாக அறியாத பலரும் மகளிர் மசோதா பற்றி பேசுவது வேதனையானது.

உள் இட ஒதுக்கீடு ஏன் தேவை?

சாதிகளாலும், பொருளாதார படிநிலையாலும் பிரிந்து கிடக்கிற இந்திய சமூகத்தில் வாழ்கிற பெண்கள் எல்லோரும் ஒரே நிலையில் வாழ்கிறார்களா என்ற கேள்விக்கு இல்லைவே இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், எத்தனையோ இலட்சம் பெண்கள் இந்தியாவில் அரவமற்று வாழ்க்கை தேடிக்கொண்டே கிடக்கிறார்கள்.

சாதி, பணம், மதம், சடங்கு, ஆண் உள்ளிட்ட கருத்தியல்களின் கீழ் பெண்கள் மண்டியிட்டுக் கிடக்கும் அளவுக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் எல்லா பெண்களையும், ஒரே அளவுகோலில் வைத்துப் பார்க்கலாமா? அப்படிப் பார்க்கும் பார்வை சரியானதா என்றால், அது நிச்சயமாக சிறந்த பார்வையாக இருக்க முடியாது.

ஆதிக்கசாதிகளின் தெருவில்கூட தலித் நடக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஊர்களும், அன்றாடங்காய்ச்சி கூலி தலித்துகள் சாதிகளின் நெருக்குதல்களில் சிக்குண்டு மூச்சுதிணற முழிபிதுங்கி கிடக்கிற ஊர்களும் இந்தியாவில் ஏராளமாக காணப்படுகின்றன. இப்படிப்பட்ட நம் சமூகத்தில் வாழ்கிற பெண்களை (1) கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, அடித்தள பெண்கள்; (2) பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள்; (3)சாதியால் ஒடுக்கப்பட்ட இன பெண்கள் என்று மூன்று வகையாகப் பகுக்கலாம். உயர்குடியில் பிறந்த பெண்களுக்கு, இந்த சமூகத்தில் விரவிக்கிடக்கிற வாய்ப்பும் வசதிகளும் கிராமப்புறத்தில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு கிடைத்ததில்லை. அந்த கிராமப்புற பிற்படுத்தப்பட்ட பெண்களைக் காட்டிலும், சாதியால் காலம்காலமாக வஞ்சிக்கப்பட்ட தலித் பெண்களின் இருப்பு ஒவ்வொரு நாளும் அச்சத்திலும் வேதனையிலும் உறைந்து கிடக்கிறது.

தலித் பெண்கள் ஓலைக்குடிசையில் சாணித் தரையில் பிறந்து, செங்காட்டு மண்ணில் புரண்டு, ஆசிரியர்கள் இல்லாத பள்ளியில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு வந்து, ஒரு பண்ணையாரிடம் அடிமை ஆளாக இருக்கிற ஆணுக்கு வாக்கப்பட்டு, புள்ளக்குட்டிகளோடு, வானம்பார்த்த நிலத்தை மொட்ட களைவெட்டியால் கொத்திக்கொண்டும், மொன்ன அரிவாளால் அறுப்பு அறுத்துக் கொண்டும் அரை வயிறு கஞ்ச குடித்து வாழ்நாளை கழித்து மடிந்துபோகிறார்கள்.

தலித் அல்லாத பெண்கள், ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பை உறிஞ்சி காசுகளாகவும், நகைகளாகவும் குவித்துள்ள வீட்டில் பிறந்து கான்கிரீட் தரையிலும், தொட்டிலிலும் வளர்ந்து, பொம்மைகளோடு விளையாடி, பத்து ஊரைக் கடந்து சென்றாவது நல்ல பள்ளியில் படித்துவிட்டு, அப்பா – அண்ணன்கள் கடைக்கண் கருணையோடு பணம் படைத்தவனுக்கு வாக்கப்பட்டு, வேலையாட்களை மேய்க்கும் பொறுப்பை ஏற்று, பஞ்சு மெத்தையில் தூங்கி பாலும் சோறும் தின்று, உழைக்காமலே உடலை வளர்த்து, பணத்தால் இறப்பு நாளை தள்ளிப் போட்டு வாழ்கிறவர்கள்.

வசதிபடைத்த குடும்ப பெண்கள், சுகத்தில் வளர்ந்து, பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்வதற்காக மட்டுமே பணம் கட்டியாவது பட்டப் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் உறங்கும் நேரம், தொலைக்காட்சி பார்க்கும் நேரம் போக, மீதிப் பொழுதை போக்க உதட்டுச் சாயத்துடன் மகளிர் மன்றங்களிலும், கட்சிகளிலும் வலம் வந்து வாழ்கிறவர்கள்.

இம்மூன்று தரப்பினரையும் ஒருசேரப் பார்ப்பவர்கள் மனநோயாளிகளாகத்தான் இருப்பார்கள்.

ஆதிக்கசாதி குடியில் பிறந்த பெண்களுக்கு அவர்களின் அப்பா, அண்ணன்கள் உறுதுணையாக இருந்து பலரது உழைப்பை சுரண்டியாவது வாழ்நாள் முழுவதும் வசதியாகவே வாழ வகை செய்வார்கள். ஆனால், உழைத்தும் அதற்கேற்ப கூலி வழங்கப்படாத இந்த சாதிய – முதலாளிய சமுதாயத்தில் அடிமைகளாக வாழ்க்கை நடத்துகிற அப்பா, அண்ணண்கள் இருக்கும்போதும், தான் வாழ்வதற்கான வகையை தானே தேடி நிலக்கிழார்களின் கொல்லைகளில் வயிறுகூட நிரப்ப போதாத கூலிக்கு வாழ்நாளை ஒப்புக்கொடுத்துவிட்டு, பிள்ளை, குட்டிகளோடும், உறவுகளோடும் இழுபடுகிற தலித் பெண்களுக்கு யாரும் துணை வருவதில்லை.

”ஊர்க் குருவி ஒசர பறந்தாலும், பருந்தாகாது” என்று சாதியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட மொழியைப் போல, இத்தடைகளையெல்லாம் மீறி அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தின் பயனால் வாழ்வின் பற்றுக்கோடென படிப்பை எண்ணி படித்துவிட்டு வெளியே வரும் தலித் பெண்கள், வேலை செய்கிற இடங்களில் சாதிய மனநோயாளிகளிடம் சிக்குண்டு மன உளைச்சலில் கிடக்கிறார்கள். வேலை செய்கிற இடங்களில் தலித் பெண்களை உளைச்சலில் ஆழ்த்துகிற ஆதிக்கசாதி ஆண்களுக்கு சளைக்காதவர்களாக ஆதிக்கச்சாதிப் பெண்களும் இருந்து வருகின்றனர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

ஆதிக்கசாதி இனத்திலும், பொருளாதார வசதிபடைத்த இனத்திலும் பிறந்த பெண்களுக்கு ஆணாதிக்க சமுதாயத்தில் பல கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. அதை எதிர்க்கிற முற்போக்காளர்களில் பலர் அதனினும் கீழாக வாழ்கிற தலித் பெண்களை, ஆதிக்க சாதிப் பெண்கள் நடத்துகிற விதத்தை கண்டிப்பதே இல்லை.

இந்நிலையில், ஒரு தலித் பெண்ணையும், ஒரு பிற்படுத்தப்பட்ட பெண்ணையும், ஒரு மேட்டுக்குடிப் பெண்ணையும் ஒரு தளத்தில் வைத்து பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனத்தை பணம் படைத்தவர்களும், மேட்டுக்குடிகளும் நிரம்பிக்கிடக்கிற நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவை நிறைவேற்றி செய்யவிருக்கிறார்கள்.

கருணாநிதியின் கருத்து

இதனை எதிர்க்க வேண்டிய இடத்தில் இருக்கிற முதலமைச்சர் கருணாநிதி, இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, பெரும்பான்மையோர் கருத்து எதுவோ அதைத்தான் பொதுக்கருத்தென ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி, “மகளிர் மசோதா சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பெரும்பான்மையோரின் கருத்தை பொதுக்கருத்தாக ஏற்றுக்கொள்ளச் சொல்கிற கருணாநிதியின் கருத்து பெரும் ஆபத்தானது. இதே நிலைப்பாட்டை சாதியிலும், ஆன்மீகத்திலும் பொருத்திப் பார்த்து பெரும்பான்மையோரின் கருத்தை பொதுக்கருத்தை ஏற்றுக்கொள்ளலாமா என்பதையும் அவர் விளக்கினால் குழப்பம் விலகும். பதவியையும் சொத்துக்களையும் நிலைநிறுத்திக்கொள்ள எதை வேண்டுமானாலும் பேசும் நிலைக்கு திராவிடத் தலைவர் கலைஞர் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

மகளிருக்கு இடங்களை ஒதுக்குவதற்காக மசோதாவைக் கொண்டு வருகிறபோது, அந்த இடங்களை யாரெல்லாம் கைப்பற்றுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கும், உதட்டுச்சாயம் பூசிக் கொண்டு கிளப்புகளில் வலம் வருகிற மேட்டுக்குடி பெண்களுக்கும், வசதியான குடும்பப் பெண்களுக்கும் 33% இட ஒதுக்கீடு பயன்படப் போகிறது. இவர்களைக் கடந்து, கிராமப்புறத்தில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட பெண்களோ, அதனினும் கீழாக வாழ்கிற தலித் பெண்களோ ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கேற்கவே முடியாது என்பதுதான் உண்மை.

இந்த நிலை ஏற்பட்டுவிட கூடாது என்பதால்தான் தலித் பெண்களுக்கும், பிற்படுத்தப்பட்டப் பெண்களுக்கும், சிறுபான்மையினப் பெண்களுக்கும், கிராமப்புறப் பெண்களுக்கும் தனித் தனி உள் இட ஒதுக்கீட்டை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அடித்தள பெண்கள் மீது மேட்டுக்குடி சமூகம் கட்டவிழ்த்துவிடும் வன்முறையின் வடிவமாக மகளிர் மசோதாவைப் பார்க்கலாம்.

எதிர்காலத்திலாவது அடித்தளத்தில் வாழ்கிற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகார வர்க்கத்தினர் முன்வரும் வரை தொடர்ந்து இது குறித்து விவாதிப்பது தேவையாகிறது.

Advertisements

One Response to “மகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்கள்! …”

 1. reverse phone lookup Says:

  I liked up to you’ll receive carried out proper here. That the sketch is attractive, your authored
  material stylish. nonetheless, you command figure out
  bought an nervousness over someone to would for instance be handing over that the following.
  in poor health no doubt come more formerly once more as exactly that the similar nearly very often inside case
  you shield this increase.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: